சேக்கிழார்/சேக்கிழார்-முதல் அமைச்சர்
அநபாயன் அரச சபை
அநபாயச் சோழன் சிறந்த தமிழ்ப் புலவன் என்று முன் சொன்னோம் அல்லவா?. அவன் சபையில் ஒட்டக்கூத்தர் முதலிய புலவர் எப்பொழுதும் கூடியிருப்பார்கள். அரசன் அவர்களோடு இலக்கியத் தொடர்பான பல விஷயங்களைப் பேசுவான். பல கேள்விகள் கேட்பான். புலவர்கள் விடையைக் கேட்டு மகிழ்வான். தமிழ்நாடு எங்கணும் இருந்த புலவர்கள் அவனைத் தேடி வருவர். தாம் தாம் பாடிய நூல்களையும் பாக்களையும் அவன் முன் பாடிக் காட்டுவர். அவன் கேட்டு, அவற்றில் தனக்குத் தோன்றிய ஐயங்களைக் கேட்பான்; அவரவர் தகுதிக்குத் தக்கவாறு பரிசில் தந்து அனுப்புவான். இவ்வாறு புலவர்களோடு அளவளாவித் தமிழ்ப் புலவர்களை ஆதரித்த புலமை மிகுந்த சோழர் சிலரே ஆவர்.
அரசன் கேள்விகள்
ஒரு நாள் அநபாயன் தனது சபையில் இருந்தான். அவனைச் சுற்றிலும் புலவர் பலர் கூடியிருந்தனர். அவர்கள் பல நாட்டு விஷயங்களைப் பற்றி அவனிடம் தெரிவித்துக் கொண்டு இருந்தனர். அரசன் ஒவ்வொரு புலவருடைய ஊரைப் பற்றியும் நுணுக்கமாக விசாரிப்பது வழக்கம். அவர் ஊர் - நாடு - அரசன் பற்றிப் பல கேள்விகள் கேட்டு விஷயங்களை ஆவலோடு தெரிந்து கொள்வது அவனது இயல்பு. இவ்வாறு பேசிக் கொண்டிருந்த பொழுது, அவன் புன்னகையுடன் சபையோரைப் பார்த்து-
“புலவர் பெருமக்களே, நான் மூன்று கேள்வி களைக் கேட்கின்றேன். அவை நெடுநாட்களாக என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டு இருக் கின்றன. நீங்கள் அவற்றுக்கு விடை கூற விரும்புகிறேன். உங்களால் முடியவில்லை ஆயின், உங்கள் ஊர்களில் உள்ள பிற புலவர்களைக் கொண்டேனும் விடைகளை விசாரித்து, அனுப்புங்கள்,” என்றான்.
அரசன் இவ்வளவு அடிப்படை போட்டுப் பேசியது கேட்ட புலவர். பயந்தனர் ; அவன் என்ன கேள்விகளை வெளியிடுவானோ என்று எண்ணினர்; அவற்றுக்கு ஏற்ற விடை கூறாவிடில் அவன் தங்களை இழிவாக எண்ணுவானோ என்று அஞ்சினர். ‘இவன் வெளியிடும் கேள்விகளைக் கேட்போம்’, என்று அவனை நோக்கினர்.
புலவர்களின் மனத் தடுமாற்றத்தை அவர்கள் முகக் குறிகளால் உணர்ந்த வேந்தன் புன்னகை காட்டி, “புலவர்களே, அம் மூன்று கேள்விகள் இவை,” என்று கூறினான். அவை கீழ் வருவன :
1. மலையிற் பெரியது எது?
2. கடலிற் பெரியது எது?
3. உலகிற் பெரியது எது?
புலவர் கலக்கம்
இக் கேள்விகள் தமிழ் நூல்களைப் பற்றியவை என்பதைப் புலவர்கள் எண்ணவில்லை. இவை தம்மைத் திடுக்கிடச் செய்ய அரசன் கேட்ட கேள்விகள் என அவர்கள் எண்ணினார்கள் "மலையிற் பெரியது எது? கடலை விடப் பெரியது எது? உலகத்தை விடப் பெரியது எது? இக் கேள்விகட்கு யாரே பதில் சொல்ல முடியும்: முடியாது! முடியாது!” என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.
சேக்கிழார் விடை
அநபாயன் கேள்விகள் தொண்டை நாட்டிற் பரவின. தொண்டை நாட்டுப் புலவர்கள் யோசித்து விடை காண முயன்ற்னர்; முடியவில்லை. இக்கேள்விகளை ஒர் உத்தியோகஸ்தன் மூலமாகச் சேக்கிழார் கேள்விப்பட்டார்; நகைத்தார். "திருக்குறளைப் படித்துப் பாக்களை நினைவிற் கொண்டவரே இவற்றுக்கு விடை கூற வல்லவா!' என்று தமக்குள் கூறிக் கொண்டார். பின்னர் அவர் ஒவ்வொரு கேள்வியையும் எழுதி, அதன் கீழ், அதற்குரிய பதிலையும் எழுதித் தக்கவ்ர் மூலமாக அரசனுக்கு அனுப்பினார். அக்கேள்விகளும் விடைகளும் பின் வருவனவாகும் :-
- 1. மலையிற் பெரியது எது?
விடை : நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
- மலையினும் மாணப் பெரிது.
- 2. கடலிற் பெரியது எது?
விடை : பயன் தூக்கார் செய்தஉதவி நயன்துக்கின்
- நன்மை கடலிற் பெரிது.
- 3. உலகிற் பெரியது எது?
விடை : காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
- ஞாலத்தின் மாணப் பெரிது.
இம்முன்றின் பொருள்
1. தனக்கு உரிய வாழ்க்கையில் இருந்து கொண்டு, அடக்கமும் ஒழுக்கமும் உடையவனது உயர்ச்சி மலை உயர்ச்சியை விடப் பெரியதாகும்.
2. ஒரு பயனையும் கருதாமல் செய்யப்படும் உதவியினது சிறப்பு, யோசிக்கும் பொழுது, கடலினும் பெரியதாகும்.
3. தக்க காலத்தில் செய்யப்படும் உதவி, மிகச் சிறியதாக இருந்தாலும், அது செய்யப்படும் சந்தர்ப்பத்தை நோக்க, உலகத்தை விடப் பெரியதாகும்.
அநபாயன் மகிழ்ச்சி
அரசன் இந்த மூன்று விடைகளையும் படித் தான். அவன் சிறந்த புலவன் அல்லவா? அதனால் சேக்கிழாரது. நுண்ணறிவினை வியந்தான் ; உடனே அவரைப் பார்த்து அளவளாவ ஆவல் கொண்டான். “உடனே வந்தருள்க!” என்று தொண்டை நாட்டுப் புலவர்க்கு ஒலை போக்கினான்.
சேக்கிழார் வருகை
அரசர் பெருமானது ஒலையைக் கண்ட சேக்கிழார் மகிழ்ந்தார். அவர் அநபாயனுடைய தமிழ்ப் புலமையையும் அழுத்தமான சைவப் பற்றையும் கேள்விப் பட்டிருந்தார்; தமக்கு ஏற்ற மனப்பான்மையை உடைய அவனைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ந்தார். அவன் ஆதரவைப் பெற்றுச் சைவத்தையும் தமிழையும் வளர்க்க எண்ணினார்; அதனால் அப் பெருமானைக் காணப் புறப்பட்டார்.
அக்காலத்தில் மாட்டு வண்டிகளே மலிந்திருந்தன. அதனால் சேக்கிழார் பல நாள் பிரயாணம் செய்ய வேண்டியவர் ஆனார்; வழி நெடுக இருந்த ஊர்களில் தங்கினார்; ஆங்காங்கு இருந்த சிவன் கோவில்களில் நுழைந்து தரிசித்தார்; அங்கு இருந்த உருவச் சிலைகளையும் கல் வெட்டுகளையும் கவனித்தார். இவ்வாறு அவர் பல நாள் பிரயாணம் செய்து, அரசன் தலை நகரமாகிய கங்கை கொண்ட சோழபுரத்தை அடைந்தார்.
சேக்கிழார் - முதல் அமைச்சர்
அநபாயன் சேக்கிழாரது சைவப் பொலிவைக் கண்டான்; அவருடைய உடற்கட்டு, அழகியதோற்றம், திருநீற்று ஒளி, பரந்த பார்வை முதலியன அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. அரசன் அவரை வரவேற்று உபசரித்தான்; சிறிது நேரம் தமிழைப் பற்றியும் சைவ சமயம் பற்றியும் அவரிடம் பேசினான். தொண்டை நாட்டு அரசியல் சம்பந்தமான பல விஷயங்களைப் பற்றி அவரை விசாரித்தான்: முடிவில் அவர் அரசியல்-சமயம்-இலக்கியம் இவற்றில் சிறந்த அறிவுடையவர் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டான். அப்பொழுது அப் பெருமகன். அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவன் தனது பேரவையில் இருந்த எல்லோரையும் பார்த்து “தொண்டை நாட்டுப் பெரும் புலவராகிய அருள்மொழித் தேவர் இன்று முதல் நமது சோழப் பெருநாட்டு முதல் அமைச்சராக இருப்பார். நான் அவருக்கு உத்தம சோழப் பல்லவராயர் என்னும் பட்டத்தை மனமுவந்து அளிக்கிறேன்!”
என்று கூறி அவர் கழுத்தில் மலர் மாலை அணிவித்தான். அவையோர் அனைவரும் அரசன் பேச்சை வரவேற்று மகிழ்ந்தனர்.