சேக்கிழார்/தொண்டை நாடு

சேக்கிழார்
1. தொண்டை நாடு

தமிழகம்

தொண்டை நாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி. அதன் பிற பகுதிகள் சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, கொங்கு நாடு என்பன. இந்த எல்லா நாடுகளும் வடக்கே வேங்கட மலைக்கும் தெற்கே குமரி முனைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியில் இருப்பவை.

சேர நாடு

சேர நாடு என்பது மலையாள மாவட்டங்கள், கொச்சி சமஸ்தானம், திருவாங்கூர் சமஸ்தானம் என்னும் மூன்றும் சேர்ந்த நிலப் பகுதி ஆகும். இது மலை வளம் மிகுதியாக உடையது. இதன் பழைய தலை நகரம் வஞ்சி என்பது. முசிறி, தொண்டி என்பன இதன் துறைமுகப் பட்டினங்கள். இந்த நாடு பல நூற்றாண்டுகளாக அகில், சந்தனம், தேக்கு முதலிய மர வகைகளையும், யானைத் தந்தம், மிளகு முதலிய பொருள்களையும் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. இச் சேர நாட்டைச் சேரர் என்பவர் ஆண்டு வந்தனர். பாண்டிய நாடு

மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மூன்று மாவட்டங்களையும் கொண்ட நிலப் பகுதியே பாண்டிய நாடு. இதனில் மலைகள் ஒரளவு உண்டு. இதனில் வையை, தாமிரபரணி என்னும் ஆறுகள் பாய்கின்றன. கொற்கை என்பது சிறந்த துறைமுகப் பட்டினம். அது பல நூற்றாண்டுகளாக முத்து வியாபாரத்திற்குப் பெயர் பெற்ற இடம் ஆகும். மதுரை பாண்டிய நாட்டின் தலை நகரம் ஆகும். இந்நாட்டு அரசர் பாண்டியர் எனப்பட்டனர்.

சோழ நாடு

இது தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களையும், தென் ஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியையும் கொண்டது. இது மிகச் சிறந்த சமவெளி, காவிரியாறு தன் கிளையாறுகளுடன் பாய்ந்து, இந்நாட்டைச் செழிப்பாக்கி வருகிறது. தமிழ் நாட்டுப் பகுதிகள் எல்லாவற்றிலும் மிக்க வளமுடைய நாடு இஃது ஒன்றே. எங்குப் பார்ப்பினும் பசிய வயல்களையும், வாழை, தென்னை, மா, பலா முதலிய மரங்களைக் கொண்ட தோட்டங் களையும், தோப்புகளையும் இங்குக் காணலாம் இந் நாடு சோற்றுப் பஞ்சம் இல்லாதது. அதனால் இது, சோழ வளநாடு சோறுடைத்து என்று பாராட்டப்பட்ட நாடாகும். இதன் பழைய தலை நகரங்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் என்பன. நமது சேக்கிழார் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்பது இதன் தலைநகராக இருந்தது. இந் நாட்டை ஆண்டவர் சோழர் எனப்பட்டனர்.

கொங்கு நாடு

சேலம், கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்கள் சேர்ந்த நிலப் பகுதி பழைய காலத்தில் கொங்கு நாடு எனப் பெயர் பெற்றது. கொங்கு என்பது ‘பொன்’ என்றும், ‘தேன்’ என்றும் பெயர் பெறும். இந்த நாட்டில் பொன் மிகுதியாகக் கிடைத்தது. இங்கு மலைகள் மிகுதி. ஆதலால் தேனும் மிகுதி உண்டு. கொங்கு நாடு என்பது ‘பொன்னாடு’ எனவும், ‘தேன் நாடு’ எனவும் பொருள் கொள்ளலாம். இந்நாடு சில காலங்களில் சேரர் கைப்படும்; சில சமயங்களில் சோழர் கைப்படும். ஆயினும் இந்த நாட்டைச் சிற்றரசர் பலர் ஆண்டு வந்தனர்.

நடு நாடு

நடு நாடு என்பது தென் பெண்ணைக்கும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது. இதில் பொதுசா (புதுச்சேரியின் பழைய பெயர்), மரக்காணம் என்பன துறைமுகப் பட்டினங்களாக இருந்தன. இந்நாட்டில் திருக்கோவலூரைச் சுற்றியுள்ள பகுதியை மலையமான்கள் என்பவர் அரசாண்டு. வந்தனர். திருநாவலூரைச் சுற்றியுள்ள பகுதியை ‘முனையரசர்’ என்ற மரபினர் ஆண்டு வந்தனர். தொண்டை நாடு

சேக்கிழார் பிறந்த தொண்டை நாடு, வடக்கே வேங்கடம் முதல் தெற்கே தென் பெண்ணையாறு வரை உள்ள நிலப் பரப்பு ஆகும். இதனில் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு மாவட்டங்களும், தற்போது, ஆந்திரத்திலுள்ள நெல்லூர், சித்துார் மாவட்டங்களின் பகுதிகளும் அடங்கும்.

இந்த நாட்டில் மலைகள் உண்டு. அவை காளத்தி, திருப்பதி, திருத்தணிகை, வேலூர், செங்கற்பட்டு முதலிய இடங்களில் இருக்கின்றன. இந்த நாட்டில் ஒரு காலத்தில் காடுகள் பல இருந்தன. இந்த உண்மையை ஆர்க்காடு, வேற்காடு, ஆலங்காடு, மாங்காடு முதலிய இக்கால ஊர்ப் பெயர்களைக் கொண்டும் உணரலாம்.

இந்த நாட்டில் பொன் முகலி, பாலாறு, தென் பெண்ணை என்னும் ஆறுகள் பாய்கின்றன. எனினும் பெரும்பாலான நிலப் பகுதிக்கு இந்த ஆறுகள் பயன் தருவது இல்லை. அதனால் ஏரிகளே இங்கு மிகுதி. நிலம் மிக்க வளமுடையது அன்று. தொண்டை நாட்டில் மலைகளையும் சில காடுகளையும் ஒன்றுமே விளையாத பாலை நிலங்களையும் ஆங்காங்குப் பசிய வயல்களையும் காணலாம்.

பெயர்க் காரணங்கள்

இந்த நாட்டிற்குத் தொண்டை மண்டலம் அல்லது தொண்டை நாடு என்னும் பெயர் எப்படி வந்தது? இதைப் பற்றி அறிஞர் பல விதமாகக் கூறுகின்றனர்.

1. இந்த நாட்டில் முதலில் இருந்தவர் குறும்பர் என்பவர். அவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து வந்தவர்கள். அவர்கள் இந்த நாட்டை இருபத்து நான்கு கோட்டங்களாக (மாவட்டங்களாக)ப் பிரித்துக் கொண்டு சுகமாக இருந்தனர். ஆ தொண்ட சக்கரவர்த்தி என்பவன் அவர்களை வென்று இந் நாட்டைக் கைக்கொண்டான். அது முதல் இந்த நாடு அவன் பெயரால் தொண்டை நாடு எனப் பட்டது என்பது ஒரு கொள்கை.

2. தொண்டை என்பது ஒரு வகைக் கொடி. சோழ அரசனுக்கு நாகர் மகள் ஒருத்தி மனைவி. அவள் ஒரு தீவில் இருந்தாள். அவள் தான் பெற்ற ஆண் குழந்தையைத் தொண்டைக் கொடியால் சுற்றிக் கப்பல் மூலமாகச் சோழனுக்கு அனுப்பினாள். தொண்டைக் கொடியால் சுற்றப்பட்ட அம் மகன் தொண்டைமான் எனப் பெயர் பெற்றான். அவன் சோழப் பிரதிநிதியாக இருந்து இந்த நாட்டை ஆண்டான். அதனால் இந்த நாடு தொண்டை நாடு எனப்பட்டது என்பது மற்றொரு கொள்கை.

கரிகாலன்

ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகட்கு முற்பட்ட சோழ அரசருள் மிகச் சிறந்தவன் கரிகாலன். இவன் பல நாடுகளை வென்றவன். இவன் குறும்பரை வென்று தொண்டை நாட்டைக் கைப் பற்றிய முதல் சோழன் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவன் தொண்டை நாட்டுக் காடுகளை அழித்து நாடாக்கினான்; வேளாண்மையை வளர்ப்பதற்காக நாற்பத்து எண்ணாயிரம் வேளாளரைத் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்து குடியேற்றினான்.

கரிகாலனுக்குப் பின் அவன் மரபில் வந்த சோழர் சிலர் தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். அப்பொழுது காஞ்சிபுரம் தொண்டை நாட்டுத் தலை நகரமாக இருந்தது. மணிமேகலை என்ற பெண் கோவலன் மகள். அவள் பெளத்த பிக்ஷானி ஆகிக் காஞ்சியில் கோவிலும் மடமும் கட்டினாள். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தாள்.

பிறகு இந்த நாடு பல்லவர் என்ற புதிய அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. பல்லவர் ஆட்சி ஏறக்குறைய அறுநூறு வருட காலம் இருந்தது.[குறிப்பு 1] அந்தக் காலத்தில் மாமல்லபுரம் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது. காஞ்சியிலிருந்து மாமல்லபுரம் செல்லச் சிறந்த அகன்ற பாதை ஒன்று இருந்தது. அயல் நாட்டுக் கப்பல்கள் வந்து அங்குத் தங்கிச் சரக்குகளை இறக்குமதி செய்தன. உள்நாட்டுப் பொருள்களை ஏற்றுமதி செய்தன. மாமல்லபுரம் சிறந்த பெரியபட்டினமாக இருந்தது. அது ‘மாமல்லன்’ என்ற பல்லவ அரசனால் அழகு செய்யப்பட்டதால் “மாமல்லபுரம்” எனப் பெயர் பெற்றது. அப்பெயரே நாளடைவில் சிதைந்து, ‘மகாபலிபுரம் எனப்பட்ட்து.

காஞ்சி

இந்த நகரம் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களாகவே சிறப்புப் பெற்ற நகரம் ஆகும். அசோகர் ஒரு பெளத்த ஸ்தூபியை இங்கு எழுப்பினார்; பெளத்த மத போதகரை இங்கு அனுப்பினார். அவர் காலத்தில் இங்கு ஒரு பெளத்த மடம் கட்டப் பட்டது. இங்கு இருந்து சீனம், வட இந்தியா முதலிய இடங்களுக்குப் பெளத்த அறிஞர் பலர் சென்று பெரும் புகழ் பெற்றனர்.

காஞ்சி பழைய காலத்தில் நான்கு சமயங்களுக்குப் பெயர் பெற்ற நகரமாக இருந்தது. அவை சைவம், வைணவம், பெளத்தம், சமணம் என்பன. காஞ்சியில் சிறந்த வடமொழிக் கல்லூரி ஒன்று இருந்தது. அக் கல்லூரியிற் படிப்பதற்காக வட நாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தனர். அக் கல்லூரியில் வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாத்திரங்கள், இலக்கண நூல்கள், தர்க்க நூல்கள் முதலியன போதிக்கப்பட்டன.

பல்லவ மன்னர்

பல்லவ அரசர்கள் தொண்டை நாட்டை நன்னாடு ஆக்கினர்; ஆங்காங்கு இருந்த காடுகளை அழித்துக் ‘காடு வெட்டிகள்’ என்று பெயர் பெற்றனர். கற்களைக் கோவில்களாகக் குடைந்தனர். கற்களைப் பாறைகளாக உடைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில்களைக் கட்டினர். அவர்கள் தமிழ் - வடமொழி என்னும் இரண்டு மொழிகளையும் வளர்த்தனர். சைவப் பெரியார்களான திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் முதலியவர் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமங்கை ஆழ்வார், தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் முதலிய வைணவப் பெரியார் வாழ்ந்த காலமும் பல்லவர் காலமே ஆகும்.

சோழ அரசர்

பல்லவர்க்குப் பிறகு சோழர் மீண்டும் தொண்டை நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர்; காஞ்சியில் பெரிய அரண்மனையைக் கட்டினர்; தொண்டை நாட்டில் பல புதிய கோவில்களை எழுப்பினர்; பழையவற்றைப் புதுப்பித்தனர்; தமிழையும் வடமொழியையும் வளர்த்தனர்; வைத்திய சாலைகளை அமைத்தனர். தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய இராஜராஜ சோழன், அவன் மகன் இராஜேந்திர சோழன் முதலியவர் காலங்களில் தொண்டை நாட்டில் சைவமும் வைணவமும் செழித்து வளர்ந்தன. குடிகள் வாழ்வும் சிறந்து இருந்தது.


  1. கி.பி. - 300 - 900
"https://ta.wikisource.org/w/index.php?title=சேக்கிழார்/தொண்டை_நாடு&oldid=490801" இலிருந்து மீள்விக்கப்பட்டது