சேக்கிழார் புராணம்
சேக்கிழார் புராணம்
தொகுஆசிரியர்: கொற்றவன்குடி உமாபதி சிவம்
தொகுநூல்
தொகு- கொற்றவன்குடி
உமாபதி சிவாசாரியார்
தொகு- அருளிச்செய்த
திருத்தொண்டர் புராண வரலாறு
தொகு- என்னும்
சேக்கிழார் சுவாமிகள் புராணம்
தொகு- பாயிரம்
- விநாயகர்
- வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழ
- பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
- ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
- ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம். 1
- சபாநாதர்
- சீராருஞ் சதுமறையும் தில்லைவா ழந்தணரும்
- பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
- வாராருங் கடல்புடைசூழ் வையமெலாம் ஈடேற
- ஏராரு மணமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி 2
- சிவகாமசுந்தரி
- பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
- சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
- அரந்தைகெடப் புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
- சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி 3
- கற்பகவிநாயகர்
- மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
- புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
- குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக்கோ புரவாயில்
- நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி 4
- சுப்பிரமணியர்
- பாறுமுகமும் பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
- நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
- மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
- ஆறுமுகன் திருவடித்தா மரையிணைக ளவைபோற்றி 5
- சைவ சமயாசாரியர்
- பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
- ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
- வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி
- ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி 6
- திருத்தொண்டர் – சேக்கிழார்
- தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
- தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம்போற்றி
- ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
- செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழா ரடிபோற்றி 7
- நூற்பெயர்
- தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
- நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
- தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
- வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம் 8
- அவையடக்கம்
- ஊர்க்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
- நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
- பாற்கடலைச் சிற்றெறும்பு பருகநினைப் பதுபோலும்
- நீர்க்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும் 9
- தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
- பாவுடனே கூடியஎன் பருப்பொருளும் விழுப்பொருளாம்
- கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
- பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால் 10
நூல்
தொகு- (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
- பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணங்கமழ்பூஞ் சோலை தோறும்
- காலாறு கோலிஇசை பாட நீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டுள்
- நாலாறு கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
- சேலாறு கின்றவயற் குன்றத் தூரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே (11)
- நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும் நற்குடிநாற் பத்தெண் ணாயிரத் துவந்த
- கூடல்கிழான் புரிசைகிழான் குலவு சீர்வெண் குளப்பாக் கிழான்வரிசைக் குளத்து ழான்முன்
- தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச் சேக்கிழார் குடியிலிந்தத் தேச முய்யப்
- பாடல்புரி அருண்மொழித்தே வரும்பி னந்தம் பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார் (12)
- இமயமலை யரையன்மகள் தழுவக் கச்சி ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
- சமயமவை ஆறினுக்குந் தலைவிக் கீசர் தந்தபடி எட்டுழக்கீ ராழி நெல்லும்
- உமைதிருச்சூ டகக்கையால் கொடுக்க வாங்கி உழவுதொழி லாற்பெருக்கி உலக மெல்லாம்
- தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளாண் தலைவர்பெரும் புகழ்உலகில் தழைத்த தன்றே (13)
- விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரைநீர்க் கடல்வருணன் கம்பு கட்டி
- கிளர்கலப்பை தருசுமையாள் சுவேத ராமன் கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்கு
- அளவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப் பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
- ஒளிபெருகு கொழுமிகுதி எறும்பீ றான உயிரனைத்துந் தேவரும்உண் டுவப்ப தன்றே (14)
- மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிர்இழப்பத் தாங்கள்
- கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக் குழியிலெழு பதுபேரும் முழுகிக் கங்கை
- ஆறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்பர் அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப்
- பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ (15)
- காராளர் அணிவயலில் உழுது தங்கள் கையார நட்டமுடி திருந்தில் இந்தத்
- பாராளுந் திறல்அரசர் கவித்த வெற்றிப் பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பை பூண்ட
- ஏராலெண் டிசைவளர்க்கும் புகழ்வே ளாளர் ஏரடிக்கஞ் சிறுகோலால் தரணி யாளச்
- சீராரு முடியரசர் இருந்து செங்கோல் செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்ப லாமோ (16)
- வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
- ஏயர்கோன் கலிக்காமர் முளைவித் தாக்கும் இளையான்றன் குடிமாறர் மூர்க்கர் செங்கைத்
- தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர் சாதித்த முனையடுவார் ஆக நம்பி
- பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங் காலே (17)
- அத்தகைய புகழ்வேளாண் மரபில் சேக்கி ழார்#குடியில் வந்தஅருண் மொழித்தே வர்க்குத்
- தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுந் தலைமைஅளித் தவர்தமக்குத் தனது பேரும்
- உத்தமசோ ழப்பல்ல வன்தான் என்றும் உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர் நாட்டு
- நித்தனுறை திருநாகேச் சுரத்தில் அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார் (18)
- (# சேவூர்க்கிழார் என்பதன் மரூஉமொழி சேக்கிழார் என்று கூறுவாருமுளர். சேவூர் வடஆர்க்காடு மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள ஒருசிற்றூராகும்.
- வைகாசிப்பூசம் சேக்கிழாரது திருநட்சத்திரமாகும்).
- தம்பதிகுன் றத்தூரில் மடவ ளாகந் தானாக்கித் திருக்கோயில் தாபித் தாங்கண்
- செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போ லீதுந் திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
- அம்புவியில் அங்காங்க வைபவங் கட்கானபரிகலந் திருநாள் பூசை கற்பித்து
- இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச் செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில் (19)
- கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே கட்டிநடத் தியசிந் தாமணியை மெய்யென்று
- உலகிலுளோர் சிலர்கற்று நெற்குத் துண்ணா துமிக்குத்திக் கைவருந்திக் கறவை நிற்க
- மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ் சோலை வழியிருக்கக் குழியில்விழுந் தளறு பாய்ந்து
- விலைதருமென் கரும்பிருக்க இரும்பை மென்று விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்து நொந்தார் (20)
- வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச் சிந்தா மணிக்கதையை மெய்யென்று வரிசை கூர
- உளமகிழ்ந்து பலபடப்பா ராட்டிக் கேட்க உபயகுல மணிவிளக்காஞ் சேக்கி ழார்கண்டு
- இளஅரசன் தனைநோக்கிச் சமணர் பொய்ந்நூல்இது மறுமைக் காகாது இம்மைக்கு மற்றே
- வளமருவு கின்ற சிவகதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதிஎன வளவன் கேட்டு 21
- அவகதையாய்ப் பயனற்ற கதையீ தாகில் அம்மையும்இம் மையும்உறுதி பயக்கத் தக்க
- சிவகதையே ததுகற்ற திறமைப் பேரார் சீவகசிந் தாமணிபோல் இடையில் வந்த
- நவகதையோ புராதனமோ முன்னூ லுண்டோ நானிலத்துச் சொன்னவரார் கேட்ட பேரார்
- தவகதையோ தவம்பண்ணிப் பேறு பெற்ற தனிக்கதையோ அடைவுபடச் சாற்றும் என்றான் 22
- செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக் கேட்கச் சேக்கிழார் குரிசில்உரை செய்வார் ஞாலத்து
- அம்பலவர் திருத்தொண்டர் பெருமை ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்
- நம்பிபதி னொருதிருப்பாட் டாகச் செய்த் நலமலிதொண் டத்தொகைக்கு நாரை யூரில்
- தும்பிமுகன் பொருளுரைக்க நம்பி யாண்டார் சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதி செய்தார் 23
- ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி அருள்செய்த கலித்துறைஅந் தாதி தன்னைச்
- சேயதிரு முறைகண்ட ராச ராச தேவர்சிவா லயதேவர் முதலா யுள்ள
- ஏயகருங் கடல்புடைசூழ் உலக மெல்லாம் எடுத்தினிது பாராட்டிற்று என்ன அந்தத்
- தூயகதை அடைவுபடச் சொல்வீர் என்று சோழன்உரை செயக்கேட்டுக் குன்றை வேந்தர் 24
- தில்லைவாழ் அந்தணரே முதற்பண் பாடு திருநீல கண்டத்துப் பாணர் ஈறாச்
- சொல்லியதொண் டத்தொகைநூல் வகைஅந் தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன் கேட்டு
- மெல்லியலாள் பங்கர்திரு வருளை நோக்கி வியந்தடியார் தொண்டு செய்து பேறுபெற்ற
- செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான் சேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான் 25
- அவரவர்கள் நாடவர்கள் இருந்த ஊர்வந்து அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த
- சிவசமயத் திருத்தொண்டு முற்பிற் பாடு சிவனடிக்கீழ் உயர்பரம முத்தி பெற்றோர்
- எவரும்அறி யச்சீவன் முத்த ராய்இங் கிருப்பவர்கள் இனிமேலும் பிறப்போர் மண்மேல்
- அவர்களைச்சேர்ந் தருள்பெற்றோர் பகைத்துப் பெற்றோர் அவர்கள்பகை யாய்நரகில் அடைந்த பேர்கள் 26
- இல்லறத்தில் இருந்து நனிமுத்தி பெற்றோர் இல்லறத்தில் சிற்றின்ப இயல்பை நீக்கி
- நல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர் நற்பிரம சாரிகளாய் அருள்பெற் றுய்ந்தோர்
- செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர் சிவபூசை செய்துபர முத்தி பெற்றோர்
- புல்லறிவு தவிர்ந்து திருவேட மேமெய்ப் பொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்தப் புக்கோர் 27
- இப்படியே அடைவுபடப் பிரித்துக் கேட்டால் யாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்ட
- ஒப்பரிய பொருள்தெரிந்து விளங்கித் தோன்ற உவமையுடைத் தாயகதை கற்க நிற்கத்
- தப்பில்பெருங் காவியமாய் விரித்துச் செய்து தருவீர்என் றவர்க்கு விடைகொடுத்து வேண்டும்
- செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச் சேக்கிழார் குரிசில்திருத் தில்லை சேர்ந்தார் 28
- (வேறு)
- அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- தில்லை எல்லையில் வந்துவந் தெதிர்தெண்ட னாகவி ழுந்தெழுந்து
- அல்லி சேர்கமலத் தடத்தினில் மூழ்கிஅம்பல வாணர்முன்
- ஒல்லை சென்று பணிந்துகைத் தலம்உச்சி வைத்துளம் உருகிநைந்
- தெல்லைகா ணரிதாய பேரொளி இன்ப வாரியில் மூழ்கியே 29
- அடைய லார்புரம் நீறெழத் திருநகைசெய் தன்றொரு மூவரைப்
- படியின் மேல்அடிமைக் கொளும் பதபங்க யங்கள் பணிந்துநின்
- றடிகளே உனதடியர் சீர்அடி யேன்உரைத் திடஅடி எடுத்து
- இடர்கெடத் தருவாய் எனத்திரு வருளை எண்ணிஇ றைஞ்சினார் 30
- அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாடநின்று
- இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு
- உலகெ லாம்என அடிஎடுத் துரைசெய்த பேரொலி யோசைமிக்
- கிலகு சீரடியார் செவிப்புலத் தெங்கு மாகி நிரைந்ததால் 31
- தில்லை மாநகர் வாழ வாழ்தவ சிந்தைஅந்தணர் ஆறைஞ்ஞூறு
- அல்லதும் பலமட பதித்தவ ராச ரிக்கையி லுள்ளபேர்
- எல்லை யில்லவர் யாவருங்களி கொளவிளங்(கு) அசரீ ரிவாக்கு
- ஒல்லை வந்தெழ அனைவருங் கரம்உச்சி வைத்துளம் உருகினார் 32
- உள்ளலார் புரம்நீ றெழக்கணை ஒன்றுதொட் டுயர்மன் றில்வாழ்
- வள்ளலார் திருமா லையுந்திரு நீறு மெய்ப்பரி வட்டமும்
- எள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க் கிவைஇனி தளித்து
- அள்ளலார் வயல்நீடு தில்லை யில்அனை வருங்களி கொண்டபின் 33
- சேவை காவலர் தொண்டர்சீர் உரைசெய் வதற்குயர் செய்யுள்முன்
- மூவ ரோதிய திருநெறித் தமிழ்ஆத லால்வரன் முறையால்
- யாவரும் புகழ்திரு நெறித்தலை வரைவணங்கி யிணங்கிமெய்த்
- தாவ ரும்சிவ சாதனங்கள் தரித்து நீறு பரித்தரோ 34
(சேவை- சேவூர், ஆரணி அருகிலுள்ள ஓரூர். அவ்வூரில் அவதரித்தவர்?)
- வந்து சூழ நிரைத்த ஐயிரு நூறுகால் மணிமண்டபத்(து)
- எந்தையார் திருவருளை யுன்னி யிருந்து சேவையர் காவலர்
- செந்தமிழ்த் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்
- தந்த சொன்முத லாஎடுத் தனர்தாணு வானபு ராணநூல் 35
- (வேறு)
- (எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
- திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே தியர்அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
- குரைகழல்மா மாத்திர ரொன்று அறுவர்முடி மன்னர்குறு நிலமன்னவர் ஐவர்வணிகர் குலத்தைவர்
- இருமைநெறி வேளாளர் பதின் மூவரிடையரிருவர் இருவர்சா லியர்குயவர் தயிலவினை யாளர்
- பரதவர்சான் றார்வண்ணார் சிலைமறவர் நீசர் பாணரிவர் ஓரொருவ ராம்பகருங் காலே 36
- அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப் பராணம் அவைகள்ஒரு பதின்மூன்று திருக்கூட்டந் தன்னில்
- மறுவிலவர் பதியறிந்த கதைஇரண்டு வந்த மரபறிந்த கதைஇரண்டு பேரறிந்த கதையொன்று
- உறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ் ஊரறியாக் கதைஏழு பேரறியாக் கதைஎட்டு
- இறுதியிலக் கங்கண்ட திருக்கூட்ட மொன்றெண் ணித்தனைஎன் றறியாத திருக்கூட்டம் எட்டே. 37
- தில்லைமறை யோர்கலயர் முருகர்பசு பதியார் சிறப்புலியார் கணநாதர் பூசலைசண் டேசர்
- கல்விநிரை சோமாசி மாறர்நமி நந்தி கவுணியனார் அப்பூதி நீலநக்க ராகச்
- செல்வமறை யோர்காதை பதின்மூன்று சிவவே தியர்காதை இரண்டுபுகழ்த் துணையார்முப் போதும்
- வல்லபடி சிவனைஅருச் சிப்பார்கள் மாமாத் திரர்மரபில் சிறுத்தொண்டர் ஒருவர்முடி மன்னர் 38
- அறுவரெவ ரவர்செங்கட் சோழர்புகழ்ச் சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்
- குறுநிலமன் னவர்ஐவர் நரசிங்க முனையர் கூற்றுவனார் கழற்சிங்கர் மெய்ப்பொருள்ஐ யடிகள்
- முறைமைவணி கரில்ஐவர் காரைக்கா லம்மை மூர்த்திகலிக் கம்பர்அமர் நீதிஇயற் பகையார்
- திறமைவிரி வேளாளர் பதின்மூவர் மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி 39
- தாயனார் இளையான்றன் குடிமாறர் அரசு சாக்கியர்கஞ் சாறர்விறன் மிண்டர்முனை யடுவார்
- ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர் மரபில் இருவர்திரு மூலனார் ஆனாயர் குயவர்
- சேயபுகழ்த் திருநீல கண்டனார் பாணர் திருமரபில் திருநீல கண்டத்துப் பாணர்
- மேயதிறல் அதிபத்தர் பரதவர்கண் ணப்பர் வேடர்மர பினில்சான்றார் ஏனாதி நாதர் 40
- நேசனார் சாலியரில் திருநாளைப் போவார் நீசர்மர பினில்எங்கள் திருக்குறிப்புத் தொண்டர்
- தூசொலிக்கும் ஏகாலி மரபுதில தயிலத் தொழில்மரபில் கலியனார் மரபுகுறித் துரையாக்
- காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்
- தேசுடைய பத்தர்பர மனைப்பாடு வார்கள் சித்தத்தைச் சிவன்பால்வைத் தார்ஆரூர்ப் பிறந்தார் 41
- செப்பரிய பொய்யடிமை இல்லாதார் மெய்யில் திருநீறு பூசுமுனி வர்களுலகு தன்னில்
- அப்பாலும் அடிச்சார்ந்தார் இவர்கள்தமிற் சிலபேர் ஆய்ந்ததமிழ்ப் பேர்சிலபேர் மலையாளர் சிலபேர்
- தப்பாத தெலுங்கர்சிலர் மற்றுளதே சத்தோர் தவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்
- இப்போதும் இருந்தரனை வழிபடுவோர் சிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே 42
- திருஞான சம்பந்தர் திருநாவுக் கரையர் திருமூலர் நெடுமாறர் மங்கையர்க் கரசி
- கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர்கணநாதர் அப்பூதி சோமாசி மாறர்
- உரைசேரும் இவர்கள்பதி னொருவர்குரு வருளால் உயர்முத்தி யடைந்தவர்கள், எறிபத்தர் கலயர்
- முருகர் கண்ணப்பர் ஆனாயர் தாயர் மூர்த்தியார் சண்டேசர் திருநாளைப் போவார் 43
- சேரனார் சாக்கியனார் கூற்றுவனார் தண்டி சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
- காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல் கணம்புல்லர் கோட்புலியார் நமிநந்தி யடிகள்
- சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய செருத்துணையார் புகழ்த்துணையார் காடவர்ஐ யடிகள்
- மூரிநெடு வேற்செங்கட் சோழனா ராக முப்பதுபேர் சிவலிங்கத் தால்முத்தி யடைந்தோர் 44
- திருநீல கணடனார் இயற்பகையார் மூர்க்கர் சிறுத்தொண்டர் திருக்குறிப்புத் தொண்டர்விறன் மிண்டர்
- அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார் சத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்
- கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர் காரைக்கா லம்மைநர சிங்கர்கலிக் கம்பர்
- வருநேச ராகஒரு பத்தொன்ப தடியார் மணிவேடத் தாரைவழி பட்டரனை யடைந்தோர் 45
- கவுணியர்நா வுக்கரசர் பேயார்இம் மூவர் கற்கும்இயல் இசைவல்லோர் இசைத்தமிழ்நூல் வல்லோர்
- பவமணுகாத் திருநாளைப் போவார்ஆ னாயர் பாணர்பர மனைப்பாடு வாராக நால்வர்
- புவனிபுகழ் ஐயடிகள் திருமூலர் காரி பொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்
- நவமுடைய இவரைவர் இயல்வல்லோர் நின்ற நாயன்மார் தவம்புரிந்து நற்கதியை அடைந்தோர் 46
- இல்லறத்தில் நின்றவர்கள் திருநீல கண்டர் இயற்பகையார் உள்ளிட்டார் மூர்த்தியார் அப்பர்
- நல்லதுற வறம்பிரம சாரிகள்சண் டேசர் நானிலத்தில் அரனடியார் தங்களுடன் சேர்ந்து
- செல்கதிபெற் றவர்ஞான சம்பந்த ருடனே திருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அநேகர்
- பல்வளஞ்சேர் ஆரூர ருடன்சேரர் கையில் பரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண் ணிறந்தோர் 47
- சிவனடியா ருடன்பகையாய் முத்தியடைந் தவர்கள் சேய்ஞ்ஞலூர்ச் சண்டேசர் பிதாஎச்ச தத்தன்
- கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்ததிரு விரையாக் கலிபிழைத்த கிளைபகைத்து நரகினைச்சென் றடைந்தோர்
- தவரான மூர்த்தியார் இறைவனுக்குச் சாத்துஞ் சந்தனக்காப் பினைவிலக்கி அமண்சமயச் சார்வாய்ப்
- புவிபுரந்த கருநடமன் னவன்முத லனேகர் புராணகதை யினைப்பிரித்துப் புகலஎளி தளவே 48
- ஆரூரர் திருத்தொண்டத் தொகையுரைத்த நாளில் அடித்தொண்டு செய்தொண்டர் சிலர்அவர்க்கு முன்னே
- பேரூர்மெய்த் தொண்டுசெய்த பேர்சிலபேர் அவர்க்குப் பிறகுதிருத் தொண்டுசெயும் பேர்சிலபே ராகச்
- சீரூருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துச் சேவையர்கோன் சேர்வைசெயுந் தொண்டாள விறந்தோர்
- காரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த கைத்தொண்டின் நிலைகரைகண் டுரைக்கஎளி தலவே 49
- ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மில் ஒருமரபோ ஒருபெயரோ ஒருகாலந் தானோ
- பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ பன்மைப் பெருங்கதையோ பேர்ஒன்றோ அல்லவே இதனை
- ஏர்உலகெ லாம்உணர்ந்தோ தற்கரிய வன்என் றிறைவன்முதல் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
- பாருலகில் நாமகள்நின் றெடுத்துக்கை நீட்டப் பாடிமுடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார் 50
- கருங்கடலைக் கைநீத்துக் கொளஎளிது முந்நீர்க் கடற்கரையின் நொய்மணலை எண்ணிஅள விடலாம்
- பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதிக் கடைஇலக்கம் பிரித்துவிட லாகும்
- தருங்கடலின் மீனைஅள விடலாகும் வானத் தாரகையை அளவிடலாம் சங்கரன்தாள் தமது
- சிரங்கொள்திருத் தொண்டர்புரா ணத்தைஅள விடநஞ் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே 51
2010-10-30
அறுபதுபேர் தனித்திருப்பேர் திருக்கூட்டம் ஒன்ப
தாகஅறு பத்தொன்பது அரனடியார் கதையை
மறுவில்திரு நாவலூர்ச் சிவமறையோர் குலத்து
வருசடைய னார்மனைவி இசைஞானி வயிற்றில்
உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள்
உரைசெய்த திருத்தொண்டத் தொகைப்பதிகத் தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரை யூரில்
நம்பியாண் டார்திருவந் தாதிகடைப் பிடித்து 52
காண்டம்இரண் டாவகுத்துக் கதைப்பரப்பைத் தொகுத்துக்
கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்டு
ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் நாலாயிரத்
திருநூற் றைம்பத்து மூன்றாக அமைத்துச்
சேண்டகைய திருத்தொண்டர் புராணமெனப் புராணத்
திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்
டாண்டகைமை பெறஎழுதி மைக்காப்புச் சாத்தி
அழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததன்பின் 53
- சேவை காவலர் புராண காதைதொகை செயநி னைந்தெமை அகன்றபின்
- யாவர் தாம்அரு கிருந்த பேர்கள்கதை சென்ற தெவ்வளவி ருந்ததெங்கு
- ஆவ தென்னிவைகள் அறிய வேண்டும தறிந்து வாரும்என வளவர்கோன்
- ஏவி னானுரிய தூதர் தூதரறி யாமல் ஒற்றரையு மேவினான் 54
- (வேறு)
- வென்றி வேல்வளவன் அளவ றிந்துவர விட்ட காளையர் புராணநூல்
- ஒன்று பாதிகதை சென்றது என்றுசிலர் ஓடி னார்சிலர் உவந்துசென்று
- இன்று நாளைமுடி யும்பு ராணம் இனிஎன்று ரைத்திடஇ றைஞ்சினான்
- சென்று நற்கதை முடிந்தது என்றுசிலர் செம்பியற் குறுதி செப்பினார் 55
- வந்து சொன்னவர்கள் அனைவ ருக்குநவ மணிக ளுந்துகிலு மம்பொனும்
- சிந்தி அள்ளியும் உவந்து வீசிஉயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்
- அந்தி வண்ணர்நட மும்பணிந் துமுதல் அடிஎ டுத்தவர் கொடுத்திடப்
- புந்தி செய்துமகிழ் சேவை காவலர் புராண முந்தொழு வன்நான்எனா 56
- வீதி வீதிகள்தொ றுந்தொறும் பயணம் என்று வென்றிமணி முரசறைந்
- தோதி வேதியர்கள் எண்ணி இட்டஉயர் நாளும் ஓரையும் முகூர்த்தமும்
- போத நாடிவரை புரைகடக் களிறு புரவி தேர்கருவி யாள்தரச்
- சாது ரங்கமுட னேசெலப் பிளிறு தந்தி மேல்கொடு நடந்தனன் 57
- தேர்மு ழக்கொலி மழைக்க டக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்
- ஆர்மு ழக்கொலி பரிச்செ ருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்
- போர்மு ழக்கொலி சழக்கி லாதுயர் படைக்க லன்புணரும் ஓசைஏழ்
- கார்மு ழக்கொலியின் எட்டி ரட்டிநிறை கடல்மு ழக்கென முழக்கெழ 58
- வளவர் கோன்வர வறிந்த தில்லைமறை யோரும்வண் மைமட பதிகளும்
- பிளவு கொண்டமதி நுதல்ம டந்தையரும் மற்று முள்ளபெரி யோர்களும்
- களவி லாதமொழி கொடுபு ராணகதை செய்த கங்கைகுல திலகரும்
- தளவ மாலைஅப யனைஎதிர்ந் தினிய சார ஆசிபல சாற்றினார் 59
- முண்ட மானதிரு முடியும் இட்டதிரு முண்ட முங்கவச முந்துணைக்
- குண்ட லங்களும் இரண்டு காதினும் வடிந்த லைந்தகுழை யுந்திருக்
- கண்ட மாலைகர மாலை யுஞ்சிரசு மாலை யுங்கவின் விளங்கவே
- தொண்டர் சீர்பரவு வான்அ ணைந்தசுப சரிதை சோழனெதிர் கண்டனன் 60
- கண்ட போதுள மகிழ்ந்து தன்னைஅறி யாது கைகள்தலை மீதுறக்
- கொண்ட வேடம்அர னடியர் வேடம்இது குறைவி லாததவ வேடம்என்
- றண்ட வாணர்திரு வருளை யுன்னி அவர்அடிமை கொண்டபெரு மையைநினைந்து
- எண்ட யங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான் 61
- இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணிவரன் முறைமையால்
- அறஞ்சி றந்தமுனி சேவை காவலரும் ஆறைஞ் ஞூறுமறை யோர்களும்
- துறஞ்சி றந்தமட பதிகளுந் தொடர வந்து மன்னன்அரி பிரமர்பால்
- மறைஞ்சு நின்றபொருள் வெளிப்படக் கனக மன்றில் நின்றபடி கண்டனன் 62
- கண்ட கண்ணருவி தாரை கொள்ளஇரு கைகள் அஞ்சலி கொளக்கசிந்து
- எண்ட ரும்புளக ரோம கூபம்எழ இன்பம் வாரிகரை புரளவாய்
- விண்ட தூமொழிகள் குழற அன்பினொடு விம்மி விம்மிஅருள் மேலிடத்
- தெண்ட னாகமுன் விழுந்தெ ழுந்துநனி செம்பியன் பரவ எம்பிரான் 63
- சேக்கிழான் நமது நொண்டர் சார்பரவ நாம்மகிழ்ந்து உலகம் என்றுநம்
- வாக்கினால் அடி டுத்து ரைத்திட வரைந்து நூல்செய்து முடித்தன்ன்
- காக்கமு வேல்வளவ நிடைக் கடிதுகேள் எனக்கனக வெளியிலே
- ஊக்கமான திருவாக்கெழுந்த்து திருச்சிலம் பொலியும் உடனெழ 64
- மன்று ளாடிதிரு வாய்ம லர்ந்தமொழி யுஞ்சிலம் பொலியும் மன்றிலே
- நின்ற மானிடர்செ விப்பு லன்புக நிறைந்த தன்றியும் நிலத்தின்மேல்
- ஒன்றி நின்றுயர் சராசரங் கள்அடை யக்கசிந் துருகி ஓலிடக்
- குன்றி லங்குதிரள் தோள்நரேந் திரபதி குதுகு லித்துளம் மகிழ்ந்தனன் 65.
- தொண்டர் தொண்டுசெய் புராண காதைமதி சூடு நாதர்திரு வருளினால்
- விண்ட நீதிபுனை சேக்கி ழார்முனி விரித்து ரைத்தகதை கேட்பதற்கு
- அண்ட வாணர்அடி யாரெலாங் கடுக வருக என்றுதிசை திசைதொறு
- எண்ட யங்கரசன் ஏடேடுத் தெழுதி ஆளும் ஓலைகளும் ஏவினான் 66
- கவச மணிந்த சனங்களு மிங்கித முங்கம்பித்
- தவச முறுஞ்சிவ சிந்தையும் அமன்பக லாமேன்மைத்
- தவச ரிதத்தொழி லுஞ்சிவ ஞாதன முஞ்சாரச்
- சிவச மயத்தவர் யாவரும் வந்து திரண்டார்கள் 67
- வேதியர் வேத முழக்கொலி வேதத் தைத்தமிழால்
- ஓதிய மூவர் திருப்பதி கத்தொலி ஓவாமல்
- பூதி அணிந்தர கரஎன அன்பர் புகழ்ந்தோதும்
- காதியல் பேரோலி காரோலி போலொலி கைத்தேற 68
- பூசிப் பவர்சிலர் பூசித் தன்பொடு புனிதன்தாள்
- நேசிப் பவர்சிலர் பிறவா வரம்அருள் நிமலாஎன்
- றியாசிப் பவர்சிலர் திருமுறை எழுதிக் களிகூர
- வாசிப் பவர்சில ராக இருந்து மகிழ்ந்தார்கள் 69
- தெள்ளு திரைக்கடல் மீது மிதந்த திருத்தோணி
- வள்ளலை அன்புசெய் அன்பர் மடங்கள் தொறும்பாலர்
- மெள்ள இருந்து மிழற்று புராண விருத்தத்தைக்
- கிள்ளைகள் பாடி உரைப்பன கேட்பன மெய்ப்பூவை 70
- மற்றது கண்டு களித்த நலத்த மனத்தோடு
- சுற்றிய மந்திரி மாரோடு தந்திரி மார்சூழத்
- தெற்றென வந்து திரண்டு முரண்தரு சீர்நாடு
- பெற்றது செல்வ மெனத்தனி யோகை பெருத்தார்கள் 71
- பாடினர் தும்புரு நாரதர் நீடிசை பாடாநின்று
- ஆடினர் வானில் அரம்பையர் அஞ்சலி எஞ்சாமல்
- சூடினர் மண்ணின் மடந்தையர் எந்தை துணைப்பாதம்
- தேடினர் மாலயன் அன்பர் நடந்தரி சித்தார்கள் 72
- சங்கொடு பேரி கறங்கிசை வீணை தனித்தாளம்
- வாங்கிய காள மிடக்கை கடக்கை மணிக்காளம்
- பொங்கிய பம்பை வலம்புரி கண்டை முதற்பொற்பார்
- மங்கல தூரியம் எங்கும் முழங்கி வனப்பெய்த 73
- வேதியர் வேள்வி நெடும்புகை ஆலயம் எங்கெங்கும்
- காதிய குங்குலி யப்புகை நீடு கருப்பாலைச்
- சோதி நெடும்புகை தோரண வீதி தொறுந்தோறும்
- மாதர் புகைக்கும் அகிற்புகை எங்கும் வனப்பெய்த 74
- ஆடக நாடக சாலைகள் முத்தணி அத்தாணி
- மேடை அரங்குக ளங்க மிலாத வெளிக்கூடம்
- மாட மதிட்கள மாளிகை சூளிகை எங்கெங்கும்
- தோடவிழ் மாலைகள் பொன்னரி மாலைகள் சூழ்வித்தார் 75
- பழுதக லத்திரு வுலகு விருப்பொடு பணிமாறிக்
- குழைவு பெறத்திகழ் கோமய நீர்குளி ரச்செய்து
- தழைபொதி தோரண முங்கொடி யுந்துகி லுஞ்சார்வித்து
- அழகு பெறத்திரு வீதி புதுக்கி யதன்பின்பு 76
- திருநெ றித்தமிழ் வல்ல பேர்கள் சிவாக மங்கள் படித்தபேர்
- கருநெ றிப்பகை ஞான நூல்பல கற்ற பேர்மறை கற்றபேர்
- குருநெ றிக்குரி யோரி லக்கண லக்கி யங்கள்கு றித்தபேர்
- பெருநெ றிப்பல காவி யங்கதை பேச வல்லவர் அனைவரும் 77
- (வேறு)
- வள்ளலார் திருநடஞ்செய் மன்றின் முன்றில்
- மறையவர்கோ மயசலத்தால் மெழுகித் தாபித்
- தெள்ளரும்வெண் சுதையொழுக்கி அறுகாற் பீடம்
- இட்டதன்மேல் பசும்பட்டு விரித்து மீதே
- வெள்ளைமடித் திட்டுமது மலருந் தூவி
- விரை நறுந்தூ பங்கொடுத்தா தனங்கற் பித்துத்
- தெள்ளுதமிழ்ச் சேக்கிழார் புராணஞ் செய்த
- திருமுறையை அதன்மேல்வைத் திறைஞ்சிப் போற்றி 78
- வாழிதிருத் தொண்டர்புரா ணத்தை நீரே வாசித்துப் பொருள்அருளிச் செய்வீர் என்று
- சோழர்பெரு மான்முதலாம் அடிய ரெல்லாஞ் சொலக்கேட்டுக் குன்றைமுனி மன்று ளாடும்
- தாழ்சடையான் அடிஎடுத்துத் தரத்தாஞ் செய்த சைவகதை யினைவிளங்க விரித்துச் சொல்லச்
- சூழஇருந் தம்பலவர் அடியா ரெல்லாம் சுருதிமொழி இதுஎனக்கை தொழுது கேட்டார் 79
- தாளுடைய திருச்சிலம்பு புலம்பநடம் புரியுந் தன்மைஅர சனுக்கிசைந்த பேர்வழியி னாளும்
- ஆளுடைய பிள்ளையார் அவதரித்த நாளும் அவரழுது திருஞானம் அமுதுசெய்த நாளும்
- சூளுடைஆ திரைநாளாம் சித்திரைஆ திரைநாள் தொடங்கிஎதி ராமாண்டு சித்திரைஆ திரையின்
- நாளுடைய கதைமுடிப்பம் எனக்குன்றை வேந்தர் நடத்தஅனைவருமிருந்து கேட்டனர்நாள் தோறும் 80
- சிறப்புடைய மூவர்முத லிகள்திருவாய் மலர்ந்த திருநெறிய தமிழ்மூலர் திருமந் திரமாலை
- அறப்பயனாங் காரைக்கால் பேயிரட்டை மாலை அந்தாதி மூத்தபதி கங்கழறிற் றறிவார்
- மறப்பரிய பொன்வண்ணத் தந்தாதி திருமும் மணிக்கோவை தெய்வஉலா ஐயடிகள் வெண்பா
- உறுப்பாகத் திருவிருத்தம் உடலாகப் பொருட்கோள் உயிராக நாலடியால் நடந்த்துல கெல்லாம் 81
- அன்றுமுதல் நாடோறும் நாடோறும் அண்ணல் அடியர்அள விறந்தபெயர் வந்தவர்க ளெல்லாம்
- சென்றுறையத் திருமடங்கள் திருமடங்கள் தோறும் திருவிளக்கங் கவர்சாத்த உள்ளுடைமேற் போர்வை
- துன்றியசெந் நெலின்அடிசில் கன்னல்நறுங் கனிகள் தூயஅறு சுவைக்கறிநெய் தயிர்திரண்ட பால்தேன்
- நன்றுதிருப் பண்ணியந்தண் ணீர்அமுதம் அடைக்காய் நரபதிஏ வலின்அமைச்சர் நாடோறும் நடத்த 82
- நலமலியுந் திருத்தில்லை மன்றினில்நின் றாடும் நடராசற் கன்றுமுதல் மகபூசை நடத்தி
- அலகில்புகழ்த் தில்லைவாழ் அந்தணர்க்கும் வெவ்வே றமுதுபடி கறியமுது முதலான எல்லாம்
- நலமலிசெங் கோல்வளவன் தப்பாமே நாளும் நடத்திவர அரனடியார் நிறைந்துபதஞ் சலியும்
- புலிமுனியும் தவஞ்செய்த பெரும்பற்றப் புலியூர் பூலோக சிவலோக மெனப்பொலிந்து தோன்ற 83
- மருவுதிரு முறைசேர்ப்பார் எழுதுவார் இருந்து வாசிப்பார் பொருளுரைப்பார் கேட்டிருப்பார் மகிழ்ந்து
- சிரமசைத்துக் கொண்டாடி குதுகுலிப்பார் சிரிப்பார் தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த
- அரியதவத் தினைநினைப்பார் அம்பலவர் முன்னாள் அடிஎடுத்துக் கொடுக்கஇவர் பாடினர்என் றுரைப்பார்
- பெரியபுரா ணங்கேட்ட வளவர்பிரான் செவிக்குப் பிடிக்குமோ இனிச்சிந்தா மணிப்புரட்டுஎன் றுரைப்பார் 84
- இத்தகைய சிறப்புடனே திருத்தொண்டர் புராணம் இருந்தன்பர் பாராட்ட நடந்தெதிராம் ஆண்டு
- சித்திரைஆ திரைநாளின் முடியஅது கண்டு திருத்தொண்டர் அரஎனும்பே ரொலிஎழுந்து பொங்கச்
- கத்துகரைக் கடலொலியை விழுங்கிமுழங் கோரேழ் ஒலியைக் கீழ்ப்படுத்திப் பிரமாண்ட வெளியை ?
- பொத்திஇமை யவர்செவியை நிறைத்துயரப் பொங்கிப் பொன்னுலகுக் கப்பாலும் புகழ்பொலிந்த தன்றே 85
- திருத்தொண்டர் புராணம்எழு தியமுறையை மறையோர் சிவமூல மந்திரத்தால் அருச்சனைசெய் திறைஞ்சி
- இருக்குமுதல் மறைநான்கில் இன்றுமுத லாக இதுவும்ஒரு தமிழ்வேதம் ஐந்தாவ தென்று
- கருத்திருத்தி அமுதடைக்காய் நறுந்தூப தீபம் கவரிகுடை கண்ணாடி ஆலத்தி நீறு
- பரித்தளவு செயக்கண்டு வளவர்பிரான் முறையைப் பசும்பட்டி னாற்சூழ்ந்து பொற்கலத்தில் இருத்தி 86
- செறிமதயா னைச்சிரத்தில் பொற்கலத்தோ டெடுத்துத் திருமுறையை இருத்தியபின் சேவையர் காவலரை
- முறைமைபெற ஏற்றிஅர சனுங்கூட ஏறி முறைமையினால் இணைக்கவரி துணைக்கரத் தால்வீச
- மறைமுழங்க விண்ணவர்கள் கற்பகப்பூ மாரி மழைபொழியத் திருவீதி வலமாக வரும்போது
- இறைவர்திரு வருளைநினைந் தடலரசர் கோமான் இதுவன்றோ நான்செய்த தவப்பயன்என் றிசைத்தான் 87
- வாரணத்தில் இவரைவரக் கண்டதிரு வீதி மறுகுதொறுந் தூய்மைசெய்து வாழைகளும் நாட்டிப்
- பூரணகும் பமும்அமைத்துப் பொரியும்மிகத் தூவிப் பொன்னரிமா லையும்நறும்பூ மாலைகளுந் தூக்கித்
- தோரணங்கள் நிரைத்துவிரை நறுந்தூபம் ஏத்திச் சுடர்விளக்கும் ஏற்றிஅணி மணிவிளக்கும் ஏந்தி
- ஆரணங்கள் விரித்தோதி மாமறையோ ரெதிர்கொண் டறுகெடுப்ப வாழ்த்தெடுத்தார் அரம்பையர்க ளெல்லாம் 88
- (வேறு)
- காவல னாரிவர் தவரிவர் காவலர் கவரிஇடத் தகுமோ என்பார்
- சேவையர் காவல னார்சிவ மான சிறப்பிது நல்ல சிறப்பென்பார்
- தேவரு மெழுதவொ ணாமறை யைத்தமிழ் செய்து திருப்பதி கம்பாடும்
- மூவரும் ஒருமுத லாயுல கத்து முளைத்த முதற்பொருள் தான்என்பார் 89
- மின்மழை பெய்தது மேக ஒழுங்குகள் விண்ணவரு கற்பக விரைசேர்பூ
- நன்மழை பெய்தனர் சேவையர் காவலர் நாவல ரின்புற நாவாரச்
- சொன்மழை பெய்தனர் இரவலர் மிடிகெட அள்ளி முகந்தெதிர் சோழேசன்
- பொன்மழை பெய்தனன் உருகிய நெஞ்சொடு கண்மழை அன்பர் பொழிந்தார்கள் 90
- மதுரஇ ராமா யணகதை உரைசெய்த வான்மிக பகவனும் ஒப்பல்ல
- விதிவழி பாரதம் உரைசெய்து கரைசெய்த வேதவி யாதனும் ஒப்பல்ல
- சிதைவற ஆயிர நாவுடன் அறிவுள சேட விசேடனும் ஒப்பல்ல
- பொதிய மலைக்குறு முனிவனும் ஒப்பல புகழ்புனை குன்றை முனிக்குஎன்பார் 91
- மெய்யுள சிவசா தனமும் வெளிப்பட வெண்ணீ றெழுதிய கண்ணேறும்
- கையுந் திகழ்மணி கண்டமும் ஒளிதரு கவளிகை யும்புத் தகஏடும்
- நையுந் திருவுள மழியுந் தொறுமர கரவெனு நாமமும் நாமெல்லாம்
- உய்யும் படியருள் கருணையும் அழகிதெ னத்தொழு தனருல கவரெல்லாம் 92
- பூவை மறந்தனள் வெண்டா மரைமயில் புகல்தரு சங்கப் புலவோர்சொல்
- பாவை மறந்தனள் தேச சுபாடித பயனை மறந்தனள், பதுமத்தோன்
- நாவை மறந்தனள் பொதிய மலைத்தலை நண்ணிய புண்ணிய முனிவனெனும்
- கோவை மறந்தனள் சேவையர் காவல னார்திரு நாவிற் குடிகொண்டாள் 93
- இப்படி இப்படி தன்னில் விதிப்படி இம்பரும் உம்பரும் ஏனோரும்
- அப்படி சூழ அரத்திரு வீதி வலஞ்செய் தணைந்தம் பலமுன்றில்
- தப்பற யானையி னின்றும் இழிந்தர சனும்உரை செறிசே வையர்கோவும்
- முப்புரி நூல்மறை யோரொ டணைந்தெழு தியமுறை யைத்திரு முன்வைத்தார் 94
- அண்ட வாணரெதிர் தெண்ட னாகஅனை வரும்வி ழுந்துபின் எழுந்துசீர்
- கொண்ட சேவைகுல திலக ருக்கனைவ ருங்கு றித்தெதிர் கொடுத்தபேர்
- தொண்டர் சீர்பரவு வாரெ னப்பெயர் சுமத்தி ஞானமுடி சூட்டிமுன்
- மண்ட பத்தினி லிருத்தி மற்றவரை வளவர் பூபதி வணங்கினான் 95
- மூவ ரோதுதிரு முறைக ளேழுதிரு வாத வூரர்முறை ஒன்றிசைப்
- பாவ ரைந்தமுறை ஒன்று மூலர்முறை ஒன்று பாசுரம தாதியாக்
- கோவை செய்தமுறை ஒன்று சேவையர் குலாதி நீதிமுறை ஒன்றுடன்
- பாவை பாகர்திரு வருள்சி றந்துமுறை பன்னி ரண்டென வகுத்தபின் 96
- தோடு செய்ததிரு நெறிய செந்தமிழொ டொக்கும் என்றுரை தொடர்ந்துசெப்
- பேடு செய்துநட ராசர் சந்நிதியில் ஏற்றி னார்களிது பாலிசூழ்
- நாடு செய்ததவ நீடு குன்றைவள நகரி செய்ததவ நிகரிலாப்
- பீடு செய்தபகி ராதிகு லத்திலகர் சேக்கிழார் செய்த பெருந்தவம் 97
- ஆய வேலைஅன பாயன் இந்நிலைமை யாதலால் அனுசர் பாலறா
- வாயர் எங்குளர் எனப்ப ணிந்திரு மருங்கு நின்றவர் விளம்புவார்
- தூய குன்றைநகர் மீது தம்பெயர் துலங்க ஓர்குளம் அமைத்தபின்
- ஏய நாகைஅர னார்தி ருப்பணி இயற்றி அவ்விடை இருந்தனர் 98
- என்று சொல்லஅவர் தமைஅழைத் தரசன் இவரமைச் சரிவர் பட்டமும்
- மன்றல் மாலைபுனை தொண்டை மான்என வகுத்தபின் தமது மண்டலம்
- அன்று வற்பரம்வர வந்தடைந்த வரைஆற்றல் செய்து தொண்டை மண்டல
- நின்று காத்த பெருமான்எனத் தமது பெயரை எங்கணும் நிறுத்தினார் 99
- தொண்டர் சீர்பரவு சேக்கி ழார்குரிசில் தூய தில்லைநகர் தன்னிலே
- பண்டு மூவர்பதி கத்து வந்தஅறு பத்து மூவர்கதை தனையுணர்ந்து
- அண்ட வாணர்அடி யார்கள் தம்முடன் அருந்த வந்தனில் இருந்துபின்
- இண்டை வைத்தசடை அம்ப லத்தவர் எடுத்த பாதநிழல் எய்தினார் 100
- வாழி தில்லைமணி மன்று ளென்றும்நட மாடும் அங்கணர் மலர்ப்பதம்
- வாழி காழிநகர் வாழ வந்ததிரு நெறிய ராதிபதி வள்ளல்தான்
- வாழி அன்பர்திரு நீறு மிட்டதிரு முண்ட முந்துவய கவசமும்
- வாழி குன்றைமுனி சேவை யாதிபதி வாய்ம லர்ந்தருள் புராணமே 101
- தேசி லங்குமுகில் குன்றை யாதிபதி தொண்டர் சீர்பரவு சேக்கிழார்
- வாசல் அன்றுமுதல் இன்று காறும்இனி மேலும் வாழையடி வாழையாய்
- வீசு தென்றல்மணி மண்ட பத்தரசு வீற்றி ருக்குமுடி மன்னருக்கு
- ஈச னன்பர்கள் புராண முஞ்சொலி அமைச்சு மாகிநலம் எய்துமால் 102
- அண்ட வாணர்தொழு தில்லை யம்பலவர் அடிஎடுத்து உலகெ லாம்எனத்
- தொண்டர் சீர்பரவு சேக்கிழான் வரிசை துன்று குன்றநக ராதிபன்
- தண்ட காதிபதி திருநெறித் தலைமை தங்கு செங்கைமுகில் பைங்கழல்
- புண்ட ரீகமலர் தெண்ட னிட்டுவினை போக்கு வார்பிறவி நீக்குவார் 103
- ஆகத் திருவிருத்தம் 103
சிறப்புப்பாயிரம்
தொகு- திருக்கிளருங் கயிலைமலைக் காவல் பூண்ட செல்வமலி திருநந்தி மரபில் வந்து
- கருக்குழியில் எமைவீழா தெடுத்தாட் கொள்ளுங் கருணைமிகு மெய்கண்ட தேவர் தூய
- மருக்கிளர்தாள் பரவும்அரு ணந்தி தேவர் மகிழும்மறை ஞான தேவருக் கன்பாகி
- இருக்கும்உமா பதிதேவர் சேக்கி ழார்தம் இசைப்புரா ணம்உரைத்தார் என்ப மாதோ.
----------------------------------------------------------------
(இச்சிறப்புப்பாயிரம் சிலபிரதிகளில்லை)
- 'சேக்கிழார் புராணம்' முற்றியது