சைவ சமய சாரம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

சிவமயம்

சைவ சமய சாரம்

ஆக்கியோர்:

திரு.வி.கலியாணசுந்தரனார்

மூன்றாம் பதிப்பு

சாது அச்சுக்கூடம்,

இராயப்பேட்டை, சென்னை

உரிமை

விலை அணா 4

ஆக்கியோருடையது

1944

சைவ சமய சாரம்


திருச்சிற்றம்பலம்

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச்
செம்மையுள் நிற்ப ராகிற்
சிவகதி விளையு மன்றே–அப்பர்

திருச்சிற்றம்பலம்

காலம்

லகத்திலே பல சமயங்கள் நிலவுகின்றன. அவைகளுள் பெரும்பான்மையன கால தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுக் கிடப்பன. கிறிஸ்துவம், பௌத்தம் முதலிய பல சமயங்கள் தோன்றிய காலங்களைச் சரித்திரங்கள் கிளந்து கூறுகின்றன. சைவ சமயம் சரித்திரக் காலத்தைக் கடந்து நிற்பது. சைவ சமயம் இன்ன காலத்தில் இன்னவரால் உண்டாக்கப்பட்டதென்று எவராலும் எந்நூலாலும் அளந்து கூறல் முடியாது. அஃதொரு காலத்தில் மன்பதைக்குரிய சமயமாகவும் பயன்பட்டு வந்தது.

பழமையிற் சிறந்த இருக்கு வேதத்திலும், தமிழ்நாட்டுப் பழைய நூல்களிலுஞ் சிவமென்னுஞ் செம்பொருள் காணப்படுகிறது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும், பின்னைப் புதுமைக்குப் புதுமையாயும் இலங்குஞ் சிவமென்னுஞ்செம் பொருளின் தொடர்புடையது சைவம். அத்தகைச் சமயத்தின் காலவரை அளவிடற்பாலதன்று.

சமரச நிலை

சைவ சமயம் தொன்மையிற் சிறந்து விளங்கு தலைமட்டுங் கொண்டு, அதனைப் போற்றவேண்டுமென்று வலியுறுத்துவது அறிவுடைமையாகாது. மேன்மக்கள் தொன்மை கருதி ஒன்றைக்கொள்ளவும் மாட்டார்கள்; புதுமை கருதி ஒன்றைத் தள்ளவும் மாட்டார்கள். அவர்கள், ஒன்றை அறிவால் அளந்து ஆராய்ந்து, அதன் உண்மை காணவே முயல்வார்கள். ஆராய்ச்சிக்குக் கருவியாக நிற்பது தொன்மையதாயினுமாக; புதுமையதாயினுமாக வேண்டற்பாலது ஒன்றே. அது பொருளுண்மை. இதனைச் சைவ சமய சந்தானாசாரியருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள் தமது சிவப்பிரகாசமென்னும் அரிய நூலில்,

தொன்மையவா மெனுமெவையு நன்றாகா இன்று
தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியுமதன் களங்கம்
நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந்

தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந் தறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவர்எ திலருற்[ரே
றிகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்கெனவொன் றில

என்று ஓதியிருத்தல் காண்க.

தொன்மையுடன் பொருளுண்மையும், சமரசமும்; அன்பும், ஜீவகாருண்யமும் விளங்கும் ஒரு சமயம் நிலவுமேல், அஃது அறிஞர் உடைமையாகும். தொன்மையின்றிச் சமரசம் முதலியன ஒளிரும் சமயமொன்றுளதாயின், அஃதும் அறிஞர்க்குரியதே. தொன்மையோடு பிற பொருள் பொலிதல் பொன் மலரில் நறுமணங் கமழ்வது போலாம். சைவ சமயத்தில் தொன்மையோடு- பொருளுண்மை - சமரசநிலை - முதலியன காணப்படின், அதைப் போற்றவேண்டுவது அறிஞர் கடமை.

எந்தச் சமயம் பிற சமயங்களைப் 'பொய்' என்று தள்ளுகிறதோ அந்தச் சமயம் சிறந்த ஒன்றாகாது. உலகத்தில் தோன்றியுள்ள சமயங்கள் யாவும் மெய்ப்பொருளாகிய கடவுளொன்றையே போற்றுகின்றன. ஒரு கடவுளைப் போற்றுஞ் சமயங்களுள் பொய்ச் சமயம் மெய்ச் சமயம் என்னும் பிரிவு நிகழ்தற்கே இடமில்லை. சைவ சமயம், 'இச்சமயமாகும்; இச்சமயமாகாது' என்று பிரித்துரைப்பதில்லை. இவ்வுண்மையைச் சைவ சமய சாத்திரமாகிய சிவஞான சித்தியார் நன்கு அறிவுறுத்துகிறது. அது வருமாறு:–

ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள்
ஒன்றோடொன் றொவ்வாம லுளபலவும் இவற்றுள்
யாது சமயம் பொருள்நூ லியாதிங் கென்னில்
இதுவாகும் அதுவல்ல வெனும்பிணக்க தின்றி
நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண
நிற்பதுயா தொருசமயம் அதுசமயம் பொருள் நூல்
ஆதலினால் இவையெல்லாம் அருமறையா கமத்தே
அவையிரண்டும் அரனடிக்கீ ழடங்கும் [அடங்கியிடும்

சைவ சமயத்திற் போந்துள்ள சமரசப்பான்மை கண்டே, எவரும் போற்றுந் தாயுமான சுவாமிகளும் அச்சமயத்தை, இராஜாங்கத்திலமர்ந்தது என்றும், அதுவே 'சமயம்' என்றும், அதில் செகத்தவர் அனைவரும் சேரவேண்டும் என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அத்திருப்பாடல்கள் வருமாறு:–

விண்ணவரிந் திரன் முதலோர் நார தாதி
விளங்கு சப்த ருஷிகள்கன வீணை வல்லோர்
எண்ணரிய சித்தர்மநு வாதி வேந்தர்
இருக்காதி மறைமுனிவ ரெல்லா மிந்தக்
கண்ணகன்ஞா லம்மதிக்கத் தானே யுள்ளங்
கையினெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்
திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ
செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும்.

செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான
அப்பரிசா ளருமஃதே பிடித்தா விப்பால்
அடுத்த அந்நூல் களும்விரித்தே யனுமா னாதி
ஒப்பவிரித் துரைப்ப ரிங்ஙன் பொய்மெய் யென்ன
ஒன்றிலையொன்றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கும்
இப்பரிசாஞ் சமயழமாய் அல்ல வாகி
யாதுசம யழம்வணங்கு மியல்ப தாகி.

இயல்பென்றுந் திரியாம லியம மாதி
எண்குணமுங் காட்டியன்பா லின்ப மாகிப்
பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப்
பண்புறவுஞ் சௌபான பட்சங் காட்டி
மயலறுமந் திரஞ்சிட்சை சோதி டாதி
மற்றங்க நூல்வணங்க மௌன மோலி
அயர்வறச்சென் னீயில்வைத்து ராசாங் கத்தில்
அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ

அந்தோஈ ததிசயமிச் சமயம் போலின்
றறிஞரெலாம் நடுவறிய அணிமா வாதி
வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கும் மற்று மற்றும்
இந்த்ராதி போகநலம் பெற்ற பேர்க்கும்
இதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை
சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத்
தக்கநெறி இந்நெறியே தான்சன் மார்க்கம்.


சைவ சமய மேசமயம்
சமயா தீதப் பழம்பொருளைக்
கைவந் திடவே மன்றுள்வெளி
காட்டு மிந்தக் கருத்தைவிட்டுப்

பொய்வந் துழலும் சமயநெறி
புகுத வேண்டா முத்திதருந்
தெய்வ சபையைக் காண்பதற்குச்
சோ வாருஞ் செகத்தீரே.

எல்லாச் சமயங்கட்குந் தாயகமாயுள்ள சைவ சமயத்தை நிலை நிறுத்த இத்தமிழ் நாட்டிற்றோன்றிய சமயாசாரியராகிய நால்வரும் சமரச உண்மை யையே உலகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். அப்பெருமக்கள் அருளிச்செய்துள்ள தமிழ் வேதத்தை முறையாகப் பொருளுணர்ந்து ஒது வோர்க்குச் சமரச உண்மையே புலனாகும். தமிழ் வேதத்தில் சமரச உரைகள் பலபடக் கிடக்கின் றன. அவைகளுள் சில வருமாறு :–

வாது செய்து மயங்கு மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வனலால் தேவர்மற் றீல்லையே.

விரிவிலா அறிவி னார்கள் வேறெரு சமயஞ் செய்தே
எரிவினுற் சொன்னு ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோரேத்தும் பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்திஉய்யும் வகைய துவினைக்கின்றேனே.

ஆறென் றீயசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள்
வேறென் றிலாதன விண்ணோர் மதிப்பன மிக்குமவன்
மாறொன் றிலாதன மண்ணொடுவிண்ணக மாய்ந்திடினும்
ஈறொன் றிலாதன இன்னம்ப ரான்தன் இணையடியே,

போற்றுந்தகையனபொல்லா முயலகன் கோபப்புன்மைகே
ஆற்றுந் தகையன ஆறு சமயத் தவரவரைத்
தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்
ஏற்றுந் தகையன இன்னம்ப ரான்றன் இணையடியே

-அப்பர்

அன்பு

சைவத்தை அன்பு சமயம் என்றுங் கூறலாம். சமரச சமயத்தில் அன்பே ஒழுகுதல்வேண்டும். சைவம், சமரச சமயம் என்பதற்கு அறிகுறி, அஃது அன்புமயமாகப் பொலிவதுமாகும். சைவம் - சிவசம்பந்தம். சிவம் - அன்பு. சிவ சம்பந்தம் - அன்பு சம்பந்தம். 'அன்பே சிவம்' என்பதற்கு ஆன்றோர் உரைகள் வருமாறு:–

அன்புஞ் சிவமுமிரண் டென்ப ரறிவிலார்
அன்பே சிவமான தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே

திருழலர்

மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊன் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
இன்பமே என்னுடை அன்பே

–மாணிக்கவாசகர்

சைவம் அன்பை அறிவுறுத்தலால், அச்சமயத்தை அவலம்பித்து ஒழுகுவோர், சாதி பேதம் முதலியன பாராட்டாது, எவ்வுயிரிடத்தும் அன்பு செலுத்தல் வேண்டும். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோரே சைவர் எனப்படுவர்.

சைவர் இன்னார் என்பதைப் புலப்படுத்தும் பொருட்டு அவர்க்கு விபூதி ருத்திராட்சதாரணம் ஏற்படுத்தப்பட்டது. விபூதி தூய்மையைக் காட்டுவது. பூசுநீறுபோல் 'பூசுநீறுபோல் உள்ளும் புனிதர்கள்' என்றார் சேக்கிழாரும். உருத்திராட்சம், சிவபெருமான் திருவருட் கண்களினின்றும் பிறந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 'கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்' என்பது திரிகடுகம். ஆகவே, உருத்திராட்சம் இரக்கத்துக்கு அறிகுறி என்றுணர்க.

எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாத கூட்டத்தார் இன்னார் என்பதை விளக்கும் புறச்சின்னங்கள் நீறுங் கண்டிகையுமாம். இதுகாலை,சில குடியருங் கொலைஞரும் விபூதி ருத்திராட்சந் தரித்து, அச்சின்னங்களின் மாண்பைக் கெடுத்து வருகிறார். மடங்களிலும் சிவசின்னங்களின் மாண்பு இறந்துபட்டது.ஊரை வஞ்சிப்பதன்பொருட்டே சில சகோதரர் சிவ வேடம் பூண்கிறார். என் செய்வது! ஈண்டுக் கருதற்பாலது ஒன்றே. அஃது, அன்பு நெறிக்கு அடையாளமாகவே விபூதி ருத்திராட்சதாரணம் தொடக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட தென்பது.

சைவ சமயத்தின் அடிப்படை அன்பேயரகும். அவ்வன்பைத் தாங்காது, சிவ சின்னங்களை மட்டுந் தாங்கி, உயிர்களுக்குத் தீங்கு நினைப்பவர் சைவராகார். 'எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்' என்னுங் கொள்கையில் தலைகிறந்து விளங்கும் மக்கள், எத்தேசத்தவர்களாயினும், எக்குலத்தவர்களாயினும், எச்சமயத்தவர்களாயினும், எவ்வேடத்தவர்களாயினும் அலானைவரும் - சைவரேயாவர். சுருங்கக்கூறின் அன்புநெறி நிற்போர் அனைவருஞ் சைவரேயாவர் என்னலாம்.

வழிபாடு

சைவ சமயத்தில் இருவித வழிபாடுகள் வகுக் கப்பட்டிருக்கின்றன. ஒன்று ஆலய வழிபாடு; மற்றொன்று உயிர் வழிபாடு. ஆலயமும் உயி ரும் முறையே படமாடுங்கோயில் நடமாடுங் கோயில் எனப்படும். இவ்விரண்டனுள் நடமாடுங் கோயில் வழிபாடே சிறப்புடையது என்று சைல சமய நூல்கள் கூறுகின்றன.

படமாடக் கோயில் பகவற் கொன்றீயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின்
படமாடக் கோயில் பகவற்கங்காமே–திருமந்திரம்

எவ்வுயிரும் நீங்கா துறையும் இறைசிவனென்று
எவ்வுயிர்க்கும் அன்பா யிரு–சைவசமயநெறி

உயிர்களை வழிபடுங் காலத்துச் சாதிபேதம்

முதலியன பாராட்டலாகாதென்று சைவ சமயங் கூறுவதை விரிக்கிற் பெருகும். பெரிய புராணத்துட் போந்துள்ள நாயன்மார் வரலாறுகளால் சைவ சமயம் சாதிபேதம் முதலியவற்றைப் பாராட்டுவதில்லை என்பது நன்கு விளங்கும். சமயாசாரியர்களும் சாதி பேதத்தை மறுத்திருக்கிறார்கள்.

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோகிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே
–மாணிக்கவாசகர்

சாத்தி ரம்பல பேசும் கழக்கர்காள்
கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வாளைத் தருவ ரேனும்
மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேசாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயரால்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே
-அப்பர்

உயிர்கள் வழிபாடு என்பதில் மக்கள் முதலிய

எல்லா உயிர்கள் வழிபாடும் அடங்கும். சைவ சமயிகள் எந்த உயிர்கட்குந் தீங்குசெய்தலாகாது. சிலர் விபூதி ருத்திராட்சந் தரித்து முறையாகச் சிவாலய வழிபாடு செய்கிறார்; அடியார் பூசை செய்கிறார்; கொடிகட்டி அன்னதானஞ் செய்கிறார். இந்நல்வினைகள் செய்யும் மனிதர், ஆடு கோழி முதலிய உயிர்களைக் கொன்று, அவைகளின் புலாலை உண்பாராயின், அன்னவர் சைவராகார்; சிவனடியாரானார். ஆடு கோழி முதலிய உயிர்கள் தாங்கியுள்ள உடலங்களும் சிவாலயங்களேயாகும். அச்சிவாலயங்களுக்கு ஊறு செய்பவர்களைச் சைவர் - சிவனடியார் - என்று எவ்வாறழைப்பது?

'படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோயில்' என்பது தமிழ்நாட்டுப் பழமொழிகளில் ஒன்று. திருவாசகம் முதலிய சைவ நூல்களை ஓதி, உயிர்களின் உடலங்களை அழிக்கும் மாக்களைக் கண்டே இப்பழமொழி எழுந்தது போலும்! சைவம் ஜீவகாருண்ணிய சமயம். ஆதலால் கொல்லா விரதங் கொண்டவரே சைவர். மற்றவர் எவரோ!

மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற்
கண்விழித்து வயங்கு மப்பெண்
உருவாணை யுருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற வருவ னேனுங்

கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக்
கடிந்துண்ணுங் கருத்த னேலெங்
குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை
ஞானியெனக் கூறொ ணாதே
–இராமலிங்க சுவாமிகள்

விண்ணப்பம்

எல்லாச் சமயங்கட்குந் தாயகமாயுள்ள சைவ சமயத்தைக் கடைப்பிடித் தொழுகுவோர், தாம் மாத்திரஞ் சமய நூல்களை ஓதி உணர்ந்து, சிவாலயங்களையும் உயிர்களையும் வழிபட்டு, கொல்லாமை முதலிய நோன்புகளைக்கடைப்பிடிக்கும் அளவோடு நிற்றலாகாது. அவர், மற்றவரையும் தம் வழியில் நிறுத்த முயலல்வேண்டும். பிறருடைய அறியாமையைக் கண்டு, இரக்கமுற்று, அவர்தம் அறியாமையை ஒழிக்க முயல்வதும் ஜீவகாருண்ணியத் தின் பாற்பட்டதாகும். சமயாசாரியர் முதலிய பெரியோர் தேவார திருவாசக முதலிய நூல்களை ஏன் அருளிச் செய்தனர்? மெய்கண்டார் முதலியோர் ஞான நூல்களை எவர் பொருட்டுத் திருவாய்மலர்ந்தருளினார்? பின் வருவோர் உய்ய வேண்டுமென்னுங் கருணையாலன்றோ அவர் தொண்டாற்றினார்? 'நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்றன்றே திருமூலர் ஓதியிருக்கிறார்? இவ்வளவு பரந்த கொள்கையைத் தாங்கியுள்ள சைவ சமய நூல்களை, எல்லாரும் ஓதியுணரச் சைவ சமயிகள் உழைத்தல்வேண்டும். சைவ மடங்களில் ஒரு வகுப்பார்க்கே ஞான் நூல்கள் போதிக்கப்பட்டு வருவதைச் சைவ சமயிகள் கவனித்து மடங்களைத் திருத்த முயலல் வேண்டும். தாகமுடையார்க்குத் தண்ணீர் உதவ வேண்டுவது அன்பர் கடமை. அதுபோல ஞான தாகமுடையோர் எவராயினும் அவர்க்கு ஞான நூலைப் போதிக்கவேண்டுவது சைவக் குரவன்மார் கடமை, ஞானவேட்கைகொண்டு ஓடி வருவோர்க்கு ஞான நூலைப் போதிக்க மறுப்பது அறமாகாது. இவர்க்கும் கொலைஞர்க்கும் வேற்றுமையுண்டோ?

சமரசத்தையும், அன்பையும், ஜீவகாருண்ணியத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள சைவ சமயக் கொள்கையைப் பரப்ப முயலவேண்டுவது ஒவ்வோர் உண்மைச் சைவர்தங் கடமை என்பதை அறிவுறுத்த வேண்டுவதில்லை. பௌராணிக சைவம் ஒன்று இடையில் தோன்றி ஞான சமயத்தை இடர்ப்படுத்துகிறது. சைவம் எல்லாச் சமயங்களுக்குந் தாயகமா யிருப்பதைக் கருதியே தாயுமானார் 'சேரவாருஞ் செசுத்தீரே' என்று கூவி உலகத்தையே அழைக்கிறார். அவர் திருவடி போற்றுஞ் சைவ உலகம் அவரைப்போல உலகத்தை நோக்கி ஏன் அழைத்தலாகாது? உலகம், சைவ சமய உண்மையைக் கண்டு, அதைக் கடைப் பிடிக்குமாறு, சைவ சமயிகள், சைவ ராஜாங்கத்தை ஒழுங்கு படுத்துவார்களாக.

சைவ சமயிகளே ! அன்பர்களே! உங்கள் சமயம் காலங்கடந்தது; சமாசத்தைப் போதிப்பது; அன்பு நெறியை விளக்குவது; உயிர்கள் வழிபாட்டை அறிவுறுத்துவது; எவருங் கொள்வதாயிருப்பது. கொலையைப் போதிக்குஞ் சமயங்களெல்லாம் வளம்பெற்று வளர்கின்றன. கொல்லாமையைப் போதிக்கும் உங்கள் சமயம் என்ன நிலையை அடைந்திருக்கிறது? மெய்கண்ட சாத்திரத்தை வாசிப்போர் எத்தனை பேர்? விபூதி ருத்தி ராட்சம் அணிந்தவருள் எத்துணைப் பேருக்கு அந்நூற்பெயர் தெரியும்? ஜீவகாருண்ணியமன்றோ உங்கள் சமயக் கொள்கை ? அருட்குறிகளாகிய சிவ சின்னங்களைப் பூண்டு, சிவனடியார் என்று நடித்துக் கொலை செய்கிறார் பலர்; புலாலுண்கிறார் பலர். அந்தோ ! கொடுமை !! கொடுமை !!! ஆங்காங்கே சிவனடியார் திருக்கூட்டங்களை ஏற்படுத்துங்கள்; பாடசாலை வைத்தியசாலை முதலிய அறச்சாலைகளை அமையுங்கள்; ஆங்கே ஞான சாத்திர போதனை செய்ய முற்படுங்கள்: ஜீவ காருண்ணிய நெறியை ஓம்புங்கள் : சைவ சமயக் கொள்கையை - அன்பு நெறியை அன்பு நெறியை - ஜீவகாருண்ணி யத்தைப் பரப்புங்கள்; அதற்கு வேண்டிய உதவி புரியுங்கள்.

திருச்சிற்றம்பலம்

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாம்அர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

திருச்சிற்றம்பலம்


"https://ta.wikisource.org/w/index.php?title=சைவ_சமய_சாரம்&oldid=1628842" இலிருந்து மீள்விக்கப்பட்டது