சொன்னால் நம்பமாட்டீர்கள்/கல்கியைக் கண்டேன்!
தேவகோட்டைக்கு ஒரு சமயம் ராஜாஜி வந்திருந்தார். ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது கூட்டங்களில் பேச வேண்டுமென்ற மோகம் எனக்கு அதிகமாக இருந்த நேரம். ஹரிஜன ரங்கண்ணாவைக் கெஞ்சி ராஜாஜி வரும் கூட்டத்தில் பேச அனுமதி வாங்கிக் கொண்டேன். ஆனால் ராஜாஜி கூட்டத்திற்குவருவதற்கு முன்பே என்னைப் பேசச் சொல்லி விட்டார்கள்.
நான் ராஜாஜியைப் பற்றி ஆனந்தவிகடனில் வந்த கட்டுரையை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். நான் பேச ஆரம்பித்ததும் நல்ல வேளையாக ராஜாஜி வந்துவிட்டார். ஒரே கரகோஷம். எனக்கு உதறல் எடுத்தது. ஆனால் ராஜாஜி அன்புடன் என்னைத் தட்டிக் கொடுத்து “தைரியமாகப் பேசு” என்றார்.
நான் மளமளவென்று ராஜாஜியைப் பற்றி மனப்பாடம் செய்து வைத்திருந்ததைப் பேசினேன். சபையோர்கள் ஒவ்வொரு கருத்துக்கும் கரகோஷம் செய்து உற்சாக ஒலி எழுப்பினார்கள். பேசி முடிந்ததும் ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு, வணங்கினேன்.
ராஜாஜி என் தலையைத் தொட்டு “நன்றாக மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்று சொல்லி ஆசி கூறினார். ராஜாஜி மிக புத்தி கூர்மையுள்ளவரல்லவா? அதனால் நான் மனப்பாடம் செய்ததைக் கண்டு பிடித்து விட்டார்.
நான் கலக்கத்துடன் அவருக்குப் பின்புறம் போய் அமர்ந்தேன். எனக்கு அருகிலிருந்த ஒருவர் என்னைப் பார்த்து, ரொம்ப நன்றாகப் பேசினீர்கள், இதையெல்லாம் எதில் படித்தீர்கள்? என்று கேட்டாரே ஒரு கேள்வி. எனக்கு வெல வெலத்து விட்டது “ஏன்?” என்று கேட்டேன்.
“இல்லை. இதை நானும் எதிலோ படித்த மாதிரி இருக்கிறது” என்றார். சரிஇனி இவரிடம் மறைக்கக்கூடாதென்று, ஆனந்த விகடனில் இருந்து என்றேன்.
"யார் எழுதியது தெரியுமா?” என்றார்.
“கல்கி” எழுதியது என்றேன் நான். “கல்கியைத் தெரியுமா?” என்றார் அவர். “தெரியாது நான் பாத்ததில்லை என்றேன்.”
“பார்த்தால் என்ன செய்வீர்கள்?” என்றார் அவர்.
‘பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யவேண்டுமென்று இருக்கிறேன்” என்றேன்.
“சரி அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க” என்றார்.
ஏன் என்றேன்.
நான்தான் அந்தக் ‘கல்கி’ என்றாரே பார்க்கலாம்.
எனக்கு சந்தோச மிகுதியால் மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. அவர் கைகளைப் பற்றி-பிடித்து என் கண்களில் ஒற்றிக்கொண்டேன். என் ஆனந்தக் கண்ணீர் அவர் திருக்கரங்களை நனைத்தது. நான் அவர்மீது வைத்திருந்த அன்பைக் கண்டு அவர் உருகிவிட்டார். அன்று தொடர்ந்த எங்கள் அன்பு இன்றளவும் என் இதயத்தில் பசுமையாக இருந்து வருகிறது.