சொன்னால் நம்பமாட்டீர்கள்/சிவாஜிக்கு என்ன தொழில்?
கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை அவர்கள் தமிழகத்தின் தவப்பயனால் அவதரித்தவர். நாஞ்சில் நாட்டில் (கன்யாகுமரி மாவட்டம்) தோன்றிய அந்த மாபெரும் கவிஞர். குழந்தை உள்ளம் கொண்டவர்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டினுள்ளே இருந்து வந்தார். நான் குமரி மாவட்டம் செல்லும்போதெல்லாம் ‘பாட்டாவை’ பார்க்கத் தவறுவதில்லை. நாஞ்சில் நாடுமுழுவதும் கவிமணியைப் ‘பாட்டா’ என்றே அன்புடன் அழைப்பார்கள்.
கவிமணி வெளி உலகம் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. தமிழ் இலக்கியத்திலே ஊறித் திளைத்துக் கொண்டிருப்பவர். தமிழ் உண்டு; கவிதாதேவி அருள் உண்டு: இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை.
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நானும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களும் இன்னும் சில நண்பர்களும் கன்யாகுமரி சென்றபோது கவிமணி அவர்களைப் பார்க்கச் சென்றோம்.
எல்லோரையும் கவிமணி அன்புடன் வரவேற்றார்கள். ‘இவர்தான் சிவாஜிகணேசன்’ என்று அறிமுகப்படுத்தினேன், உடனே கவிமணி மிக்க மகிழ்ச்சி அடைந்து “அப்படியா, தம்பிக்கு எந்த ஊரு என்ன தொழில் செய்கிறார்?” என்றாரே பார்க்கலாம். வந்தவர்கள் அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை.
நான் உடனே சமாளித்துக் கொண்டு “பாட்டா” அவர்கள் சினிமா பார்ப்பதில்லை. அதனால் அப்படிக் கேட்டுவிட்டார்கள்” என்று சமqளித்து கவிமணி அவர்களைப் பார்த்து ‘பாட்டா’ இவர் உலகிலே சிறந்த நடிகர், தமிழ்நாட்டின் தவப்புதல்வர், சினிமாவில் இவர்தான் “இமயம்” என்றேன்.
“ஓ அப்படியா மகிழ்ச்சி என்று சொல்லி நடிகர் திலகத்தை வாழ்த்தினார். நாங்கள் கவிமணியிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியில் வந்ததும் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், “இன்னும் பெரிய அறிஞர்கள் நம்மைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை.”
நாம் அதிகமாக உழைத்து அறிஞர்களின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். நாம் அதிகமாக புகழடைந்து விட்டோம் என்ற கர்வத்திற்கு இன்று சரியான சாட்டையடி கிடைத்தது” என்று கூறினார்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் அதற்குப்பின் ஒரு மாதத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் நடித்த சினிமா ஒன்றைப் பார்த்தார்கள். அந்தப் படத்தின் பெயர் “கப்பலோட்டிய தமிழன்.”
படத்தைப் பார்த்து பரவசமடைந்து சிவாஜி அவர்களை வாழ்த்தி ஒரு அருமையான கடிதம் ஒன்று பாராட்டி எழுதியிருந்தார்கள்.