சொன்னால் நம்பமாட்டீர்கள்/சென்னைக்கு வந்தேன்

சென்னைக்கு வந்தேன்

சிறு வயதிலிருந்தே கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்தைப் படித்தே வளர்ந்தவன் நான் கல்கி அவர்கள் ராஜாஜி அவர்களைப் பற்றி எழுதியவை அனைத்தும் என் மனதில் பதிந்துவிட்டது. ராஜாஜி அவர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஒரு விதமான தெய்வீக உணர்ச்சி உண்டாகும்.

அவருடைய தூய்மையும் நேர்மையும் அவர் பாதத்தைத் தொட்டு, பலமுறை என்னை வணங்கும்படி செய்திருக்கிறது. அவரை ஒரு அரசியல் தலைவர் என்று சொல்வதைவிட அரசியலில் ஒரு ‘ரிஷி’ என்று கூறலாம். புராணங்களில் வரும் வசிஷ்டர் போன்ற மகாஞானி அவர்.

1942 ஆகஸ்ட் புரட்சியை ராஜாஜி ஆதரிக்கவில்லை. ‘வன்முறை, காந்தீயம் அல்ல’ என்று அந்தப் புரட்சியைப் எதிர்த்தார். ஆயினும் மேற்படி புரட்சி தானாக உருவானது. மக்கள் மனதில் ஆங்கிலேய ஆட்சிமீது இருந்த வெறுப்பால் அந்தப் புரட்சி வெடித்தது. ராஜாஜி மீது பற்றும் பாசமும் கொண்டி ருந்தாலும் என் போன்ற இளைஞர்கள் அந்த நேரத்தில் வாளாயிருக்க இயலவில்லை.

செய் அல்லது செத்து மடி என்ற காந்தியடிகளின் வாக்கே வேதவாக்காக இருந்தது. ‘வெள்ளையனே வெளியேறு’ என்பதே தாரக மந்திரமாக இருந்தது. ஆகவே ராஜாஜியையும் மீறி நான் ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டேன். அரசாங்கம் என்னைக் கைது செய்தது.

மக்கள் கோபம் கொண்டு அரசாங்கக் கட்டிடங்களைத் தீக்கின்ரயாக்கினர். சிறைக் கதவை உடைத்து என்னை விடுதலைசெய்தனர். பலர் உயிர்த்தியாகம் செய்தனர். தலைமறைவாக இருந்தேன். தாய் தந்தையரை விடுவிக்க போலீசில் நான் சரணடைந்தேன்.

144 உத்தரவை மீறியது, மக்களை வன்முறைக்குத் தூண்டியது, போலீசாரை கடமையைச் செய்யவிடாமல் தடுத்தது, பஸ்ஸுக்கு தீ வைத்து சப்-கோர்ட்டைக் கொளுத்தியது, திருவாடானை மாஜிஸ்ட்ரேட் கோர்ட், தாசில்தார் ஆபீஸ், கெஜானா, போலீஸ் ஸ்டேஷன் சப்ஜெயில் இவைகளைக் கொளுத்தியது.

ஜெயிலிலிருந்து தப்பி ஓடியது. ஆயுதம் தாங்கிய சட்ட விரோதமான கூட்டத்தைக் கூட்டி வன்முறையில் இறங்கியது. துப்பாக்கி பிரயோகத்தில் பல பேர் சாவதற்குக் காரணமாக இருந்தது.

இப்படியாகப் பல குற்றச்சாட்டுகளை அடுக்கி விசாரணை என்ற பேரில் பலநாள் இழுத்தடித்து கடைசியாக எனக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுக்கப்பட்டது.

இதை அறிந்த ராஜாஜி உடனே என் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பற்றி ஆராய்ந்து எனக்காக அப்பீல் செய்தார்கள். பெரிய வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நடத்தும்படி ஏற்பாடு செய்தார். வக்கீல்கள் பேசுவதற்குரிய ‘பாயிண்ட்களை’ ராஜாஜி, தன் கைப்பட எழுதிக் கொடுத்தார்.

அதில் அவர் சொல்லியிருந்தார். “144 தடை உத்தரவை மீறியதற்காகக் கைது செய்தார்கள். கைது செய்து தேவகோட்டையிலிருந்து 25 மைல் தூரத்திலுள்ள சப்-ஜெயிலில் அடைத்துவிட்டார்கள். அதன் பின்னர் வெளியில் நடைபெற்ற தீ வைத்தல், கலவரம் இவைகளுக்கெல்லாம் சிறைக்குள் இருப்பவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?

ஒரு கைதியைச் சிறைச்சாலையில் வைத்துப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் எதற்கும் லாயக்கில்லாத அரசாங்கம் ஆகும். சிறையைவிட்டுத்தப்பாவிட்டால் தீயில் வெந்து சாவதா? ஆகவே 144ஐ மீறியதற்கு மட்டுமே தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு அதிகபட்சம் தண்டனை என்ன உண்டோ, அதற்கு மேல் தண்டனை அனுபவித்தாயிற்று. ஆகவே விடுதலை தான் செய்யவேண்டும்.”

இதுதான் ராஜாஜி கொடுத்த குறிப்பு. இதன்படிதான் வக்கீல்கள் விவாதம் செய்தார்கள். நான் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டேன். விடுதலையாகி வெளியில் வந்ததும் காந்தியடிகள் உண்ணாவிரதம் இருப்பதாகச் செய்தி வந்தது.

போலீஸ் வண்டியும் என் வீட்டு வாசலில் வந்து நின்றது. மீண்டும் நான் கைது செய்யப்பட்டேன். கையில் விலங்கு பூட்டப்பட்டது. என்னை திருப்பத்துர் (இராமநாதபுரம் மாவட்டம்) சப்-ஜெயிலுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு திரு. சா. கணேசன் அவர்கள் கைதியாக சிறையிலிருந்தார். அவருடன் சேர்ந்துகொண்டேன். திருப்பத்தூர் சப்-ஜெயில் ஒரு நரகம் என்றால் மிகையாகாது. சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்தோம்.

காந்தியடிகள் உண்ணாவிரதம் நின்றதும் என்னை விடுதலை செய்தார்கள். மீண்டும் வீட்டிற்கு வந்தேன். சிறிதும் நிம்மதி இல்லை. அடிக்கடி போலீஸார் வருவதும் விசாரிப்பதும் இரவில் கதவைத் தட்டி நான் வீட்டில் இருக்கிறேனா என்று சோதிப்பதும் பெரிய தொல்லையாகப் போய்விட்டது.

இந்நிலையில் என் தந்தையார் நான் எவ்விதத் தொழிலும் செய்யாமல் அரசியலில் இப்படி மாட்டிக்கொண்டது குறித்து சண்டை பிடிக்க ஆரம்பித்தார்கள்.

‘காலணாசம்பாதிக்க யோக்யதை இல்லை, என்ன அரசியல் வேண்டிக் கிடக்கு?’ என்று பலவாறு பேசி விட்டார்கள். அதனால் ரோஷப்பட்டு நானும் என் தந்தையாரிடம் கோபமாக, ‘இனி தங்களிடம் காலணா கூட வாங்க மாட்டேன்; எனக்கு வேண்டியதை நானே சம்பாதித்துக்கொள்கிறேன்’ என்று கூறி வீட்டை விட்டுப் புறப்பட்டேன். கையில் காலணா காசில்லை. எங்கே போவது என்று யோசித்தேன்.

ராஜாஜி, கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலியவர்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் உள்ளத்தில் இருந்து வந்தது.

என்னைப் பெரிய வழக்கிலிருந்து விடுதலைசெய்து வைத்த ராஜாஜியைப் பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்று ஏற்கனவே நினைத்து இருந்தேன்.

ஆகவே எதைப் பற்றியும் யோசிக்காமல் தேவகோட்டை ரஸ்தாவில் ரயில்வேஸ்டேஷனை அடைந்து சென்னை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்தேன். டிக்கெட் இல்லாமல்தான்! ரயில் செட்டி நாடு ஸ்டேஷன் வந்தது. ஸ்டேஷன் ஒரு மள மளப்பாக இருந்தது. என்ன என்று பார்க்க பிளாட்பாரத்தில் இறங்கினேன். குமார ராஜா முத்தையா செட்டியார் அவர்கள் (இப்போதைய ராஜா சர்) இரயிலில் ஏறவந்தார்கள். என்னைப் பார்த்ததும் அன்போடு தன் அருகில் கூப்பிட்டார்கள்,

என் தோள்மீது கை போட்டுக் கொண்டு “எல்லாம் கேள்விப் பட்டேன். இந்த மட்டில் நீங்கள் விடுதலை அடைந்தது எனக்கு சந்தோஷம். நான் கும்பகோணத்தில் நடைபெறும் தமிழிசை மாநாட்டிற்குச் செல்கிறேன். நீங்களும் வருகிறீர்களா? ‘சரிவருகிறேன்’ என்று கூறினேன். உடனே எனக்கு முதல் வகுப்பு டிக்கெட் வாங்கப்பட்டது. ‘நல்ல வேளை’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

கும்பகோணத்தில் பெரிய வரவேற்பு நடைபெற்றது. தமிழிசை மாநாட்டிற்கு டாக்டர் சுப்பராயன் அவர்கள் தலைமை வகித்தார்கள். ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்கள் மாநாட்டைத் துவக்கிவைத்தார்கள்.

டாக்டர் கப்பராயன் அவர்கள் பேசும்போது ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சுதான்; அதற்காகக் காக்கை குயிலாகி விடாது. அதுபோல தமிழ் நமக்குச் சிறந்ததாகாது’ என்று பேசிவிட்டார்.

நான் பேசும்போது டாக்டர் சுப்பராயன் அவர்களை மிகவும் தாக்கிப் பேசி, மேலே சொன்ன கருத்தை அவர் வாபஸ் வாங்க வேண்டுமென்று அங்கேயே ஒரு போராட்டத்தை ஆரம்பித்தேன். மக்கள் என் பக்கம் திரண்டதைப் பார்த்த டாக்டர் சுப்பராயன் அவர்கள் தமிழை இழித்துரைத்ததற்கு வருத்தம் தெரிவித்த பின்னர் மக்கள் என் பேச்சுக்குப் பெருத்த ஆரவாரம் செய்து பாராட்டு தெரிவித்தனர்.

ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் அவர்கள் நான் சென்னைக்கு வரவேண்டும் என்றும் தன்னுடன் ஒரு மாத காலமாவது தங்க வேண்டுமென்றும் சொன்னார்கள். பழம் நழுவி பாலில் விழுந்ததுடன் அதுவும் நழுவி வாயில் விழுந்தால் எப்படி? அப்படித்தான் என் நிலையுமிருந்தது. ‘சரி’ என்று சொல்லி ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களுடன் சென்னை வந்து சேர்ந்தேன்.

நான் சென்னை வந்ததும் அந்த வாரக் ‘கல்கி’ பத்திரிக்கையை என்னிடம் சிலர் கொடுத்து என்னைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். ஆவலுடன் பத்திரிகையைப் பிரித்துப்பார்த்தேன்.

கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டைப் பற்றி பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ‘நாடோடி’ அவர்கள் எழுதியதில் என்னை மிகவும் புகழ்ந்து எழுதி என்னைக் ‘குஷி பேர்வழி’ என்று அடைமொழியும் கொடுத்து பிரபல கார்ட்டூனிஸ்ட் சாமா அவர்கள் எழுதிய என் போன்ற கேலிச்சித்திரம் ஒன்றையும் பிரசுரித்திருந்தார்.

அதுதான் முதன் முதலில் என்னைப்பற்றி அம்மாதிரி பத்திரிகையில் வந்தது.

சென்னை ‘நாலு பேருக்கு’ என்னைத் தெரியும்படி முதலில் செய்தவர் நாடோடிதான். சொன்னால் நம்பமாட்டிர்கள். அதே நாடோடி அவர்கள் நான் தமிழ்ப் பண்ணைப் புத்தகப் பதிப்பகம் வைத்து நடத்துவதைப் பார்த்துவிட்டு, “எனக்கு ஏதாவது பிழைக்கும் வழி சொல்லித்தரக் கூடாதா?” என்று கேட்டார்.

“பிழைக்கும் வழி” என்று ஒரு நகைச்சுவைப் புத்தகம் எழுதுங்கள், அதுதான் நீங்கள் பிழைக்கும் வழி என்றேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் நாடோடி முதலில் எழுதி வெளிவந்த புத்தகத்தின் பெயர் “பிழைக்கும் வழி” என்பதாகும். அதை ‘நாலுபேர்’ புத்தகமாகப் படிக்கும்படி வெளியிட்டவனும் அடியேன்தான்!