சொன்னால் நம்பமாட்டீர்கள்/பார்க்கர் பேனா

பார்க்கர் பேனா

1937 அக்டோபர் மாதம் முதல் தேதியன்று தமிழகத்தில் கள்ளுக்கடைகளை மூடும் திருப்பணியை அன்றைய ராஜாஜி துவக்கினார்.

“விட்டது சனியன் விட்டது சனியன்
விட்டது நம்மை விட்டதடா
கொட்டுக முரசு கொம்பெடுத்துது
கொடும்பாவி கள்ளைக் கொளுத்தி விட்டோம்”

என்று ஊர் ஊராகத் தெருத் தெருவாக நாமக்கல் கவிஞரின் பாடலைப் பாடிக் கொண்டிருந்தேன்.

உயர்நிலைப் பள்ளியிலும் ஸ்ட்ரைக் செய்ததால் என்னை “ஸ்கூல் பைனல்” எழுத முடியாமல் டிஸ்மிஸ்செய்து விட்டார்கள். அதனால் முழு நேரமும் அரசியல், அரசியல்தான்.

என் தந்தையார் எனது செயல்களை கவலையோடு கவனித்து வந்தார்கள். கடைசியாக என்னைப் பினாங்குக்குப் போகும்படி பணித்தார்கள். பினாங்கில் (மலேயா) எங்களுக்கு ஒரு வட்டிக்கடையும் கொஞ்சம் ரப்பர் எஸ்டேட்டும் இருந்தது. எங்கள் ஏஜெண்டு ஒருவர் இவைகளைக் கவனித்துத் கொண்டிருந்தார்.

நாகப்பட்டினத்தில் கப்பல் ஏறி ஐந்து நாட்கள் பிரயாணம் செய்து பினாங்கு போய்ச்சேர்ந்தேன். ஏற்கனவே ஒரு முறை நான் போய் வந்தவனாகையால் எனக்கு எல்லாம் அத்துபடிதான்!

கொஞ்சநாட்கள் எங்கள் கடையில் சிரத்தையுடன் வேலை செய்தேன். வட்டித் தொழிலில் ஈடுபாடு உண்டாகவில்லை. தினமும் பத்திரிகை படிப்பதிலும் அரசியலிலும் தான் நாட்டம் உண்டாயிற்று. கொஞ்சம் கொஞ்சமாகப் பொது ஸ்தாபனங்களில் தொடர்பு கொள்ள ஆரம்பித்தேன். பல இடங்களில் கொற்பொழிவு செய்யும் வாய்ப்பும் ஏற்பட்டது. கொஞ்சம் பிரபல்யம் உண்டாயிற்று.

ஒருநாள் என் மாமாவின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் போயிருந்தேன். அங்கிருந்த கள்ளுக்கடை என் கண்னை உறுத்தியது. தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் பெண் மக்கள் பலர் கள்ளுக் கடையை வெறுத்துப் பேசினார்கள்.

ஆண்களும் “கடை இருப்பதினால்தான் குடிக்கிறோம். கடையை மூடிவிட்டால் மறந்து விடுவோம்” என்று கூறினார்கள். கள்ளுக்கடை காண்ட்ராக்டர் கடையை மூட ஒப்புக் கொள்ளவில்லை.

அங்குள்ள தொழிலாளிகள் அனைவரும் தமிழர்களே! கள்ளுக்கடை காண்ட்ராக்டரும் தமிழரே. ஆகவே எனது பிரசாரத்தைத் துவக்கினேன். சுமார் மூன்று மாத காலம் பல எஸ்டேட்டுகளுக்குச் சென்று பிரசாரம் செய்தேன். அமோக ஆதரவு கிடைத்தது. பின்னர் மறியல்-அடிதடி-போராட்டம் இவைகள் நடந்தன.

கடைசியில் ஒரு எஸ்டேட்டில் பெண்கள் எல்லாம் கூடி, கள்ளுக்கடைக்கு நெருப்பு வைத்து விட்டனர். உடனே சங்கிலித் தொடர்பாகப் பல கள்ளுக்கடைகள் கொளுத்தப்பட்டன. இதற்குக் காரணம் நான்தான் என்று காண்டராக்டர்கள் அரசாங்கத்திற்குப் புகார்செய்தனர். உடனே என்மீது ‘வாரண்ட்’ பிறப்பிக்கப்பட்டது.

போலீசார் நான் தங்கி இருந்த எஸ்டேட்டுக்குப் படையெடுத்து வந்தனர். போலீசாரைத் தொழிலாளர்கள் எஸ்டேட்டுக்குள் நுழைய விடாமல் பலாத்காரத்தில் இறங்கினர். நிலைமை முற்றும்போல் இருந்ததால் நானே வெளிவந்து கைதானேன். என்னைக் கைது செய்து நேராக பினாங்கு கவர்னரிடம் கொண்டு போனார்கள்.

“Where is that man?” (எங்கே அந்த ஆள்) என்று கர்ஜனை செய்து கொண்டு வெள்ளைக்கார கவர்னர் தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தார். என்னைப் பார்த்ததும் “Oh you are a boy” (ஓ நீ ஒரு பையன்) என்று வியந்தார்.

நான் உடனே,"Sir, I am not a boy, I am father of a boy” (ஐயா நான் பையன் அல்ல, ஒரு பையனுக்குத் தந்தை) என்றேன்.

கவர்னர் கட்டிடம் அதிரச் சிரித்துவிட்டுத் தன் மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டார். என்னவோ ஏதோ வென்று அந்த அம்மையார் ஓடி வந்தார், கவர்னர் தன் மனைவியைப் பார்த்து, Darling. see the fun. This boy is saying that he is a father of a boy (இந்த வேடிக்கையைப் பாரு இந்த பையன் ஒரு பையனுக்குத் தந்தை என்று சொல்லுகிறான்) எனறார்.

உடனே அந்த அம்மையார் என்னைக் கனிவுடன் தன் பக்கத்தில் கூப்பிட்டு,"What is your age?” (உன் வயதென்ன?) என்று கேட்டார்.

Seventeen (பனினேழு) as Goa.

“பதினேழு வயதில் உனக்கு ஒரு பையனா? உனக்கு எப்போது கல்யாணமாயிற்று?” என்றார்.

“பதிமூன்று வயதில்” என்றேன்.

அந்த அம்மையாருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய் விட்டது. “பதிமூன்று வயதில் கல்யாணம் செய்து என்ன செய்வது?” என்றாரே பார்க்கலாம்.

நான் உடனே “பிள்ளை பெறுவது” என்றதும் கவர்னரும் அவர் மனைவியும் வெகு நேரம் சிரித்தார்கள். சிரித்துச் சிரித்து அவர்கள் கண்ணில் நீர் வழிந்தது. பிறகு கவர்னர் உன் பையன் பெயர் என்ன? என்றார்.

“இன்னும் பெயர்வைக்கவில்லை. இப்போது அவன் பேபி தானே. நான் ஊருக்குப் போய்தான் அவனுக்குப் பெயர் வைப்பேன்” என்றேன்.

“உன் குழந்தை உன் மாதிரி சிவப்பாக இருப்பானா?” என்று கவர்னர் மனைவி கேட்டார்.

என் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது நான் இங்கு வந்து விட்டேன். அதனால் குழந்தையை இன்னும் பார்க்க வில்லை. ஆனால் குழந்தை அழகாக சிவப்பாக இருக்கிறது என்று என் மனைவி கடிதம் எழுதியிருக்கிறாள் என்று கூறினேன்.

“உன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உனக்கில்லையா?” என்று அந்த அம்மையார் கேட்டார். மிகவும் ஆவலாக இருக்கிறது என்றேன்.

“பின்னர் ஏன் இம்மாதிரி எல்லாம் தப்பு செய்கிறாய்?” என்று கவர்னர் கேட்டார்.

“நான் ஒரு தவறும் செய்யவில்லை, என்நாட்டு மக்கள்கள் குடித்துச் சீரழிவதைத் தடுத்து அவர்களுக்கு நல்வாழ்வு அளிக்க வேண்டமென்பதே என் எண்ணம்” என்றேன்.

“அதற்காகக் கள்ளுக்கடைகளைக் கொளுத்தலாமா?” என்றார். “நான் கொளுத்தவில்லை கொளுத்தச் சொல்லித் தூண்டவுமில்லை. நான் காந்தீயவாதி. பலாத்காரத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் மக்கள் கள்ளுக்கடையை கொளுத்தியது அவர்களது வெறுப்புணர்ச்சியைக் காட்டு கிறதல்லவா?” என்றேன்.

இதற்கு என்ன தண்டனை தெரியுமல்லவா என்று அதட்டினார் கவர்னர்.

“தெரியாது, ஆனால் குற்றம் செய்யாதவனுக்குத் தண்டனை கொடுப்பது நீதியா? என்பதை மேன்மை தங்கிய சீமாட்டியாரிடம் கேட்க விரும்புகிறேன்” என்று கூறி அந்த அம்மையாரைப் பார்த்தேன்.

உடனே அந்த அம்மையார் ஏதோ கவர்னரிடம் கூறினார். கவர்னர் புன்முறுவல் செய்து “சரி உனக்கு வயது பதினேழுதான் ஆகிறது. ஆகவே உன்னை விடுதலை செய்கிறேன். ஆனால் நீ இன்னும் ஒரு மாதத்தில் மலேயாவை விட்டு இந்தியாவுக்குப் போய்விடவேண்டும். அப்படி நீ புறப்படவில்லை என்றால் அதிகாரிகள் உன்னை பலவந்தமாகக் கப்பலில் ஏற்றி விடுவார்கள்” என்று தீர்ப்புக்கூறினார்.

“உன் மகனைப் பார்க்க சீக்கிரம் இந்தியா போய்ச்சேர்” என்று கவர்னரின் மனைவி சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் விடைபெற்றுக் கொண்டு வந்தேன். அந்த ஒரு மாதமும் அதிகாரிகள் என்னைக் கண்காணித்தார்கள்.

கவர்னர் உத்தரவை அறிந்த, அங்கிருந்த லேவாதேவிக் கடைக்காரர்கள் அனைவரும் அதிகாரிகளைவிட அதிகக் கண்காணிப்பாக இருந்து என்னைக்கப்பலேற்றி விட்டுத்தான் மறு ஜோலி பார்த்தார்கள்.

நான் கப்பலில் நாகப்பட்டினம் வந்து இறங்கிய அன்று. ஹிட்லர் யுத்த பிரகடனம் செய்து குண்டு மாறி பொழிய ஆரம்பித்தான். என் தந்தையார் நான் நாடு கடத்தப்பட்டு வந்தது குறித்து வருத்தப்பட்டாலும், யுத்தகாலத்தில் வெளி நாட்டில் அகப்பட்டுக் கொள்ளாமல் ஊர் வந்து சேர்ந்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதற்கடுத்து பத்தாண்டு கழித்து மேற்படி கவர்னர் தம்பதிகளை சென்னை அடையாறு எலியட்ஸ் பீச்சில் சந்தித்தேன். நான் அடையாளம் கண்டு கொண்டேன். அவர்களுக்கு முதலில் என்னை அடையாளம் தெரியவில்லை. பின்னர் நான் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தியதும் ஒரு அலாதியான அன்பு காட்டினார்கள்.

அந்த அம்மையார் மறக்காமல் என் மகனைப் பற்றி விசாரித்துக் கொண்டார்கள். நான் அவ்விருவரையும் என் இல்லத்திற்குக் கூட்டி வந்து காபி கொடுத்து உபசாரம் செய்தேன் என் மகனையும் காண்பித்தேன்.

இரண்டு மூன்று நாட்கள் அவர்களை மகாபலிபுரம் முதலிய இடங்களுக்குக் கூட்டிபோய் காண்பித்தேன். அவர்கள் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். ஒய்வு பெற்றதும் கொஞ்ச காலம் லண்டனில் இருந்துவிட்டு உலகம் சுற்றி வருகிறார்களாம்.

அவர்கள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் என்னை விட்டுப் பிரியும்போது அந்த சீமாட்டி எனக்கு ஒரு பார்க்கர் பேனா பரிசளித்தார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் இப்போது நான் இதை எழுதிக் கொண்டிருப்பது அந்தப் பேனாவால்தான்!