சொன்னால் நம்பமாட்டீர்கள்/விடுதலை ஆவேசம்
1942 ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்தே பாரத நாட்டு மக்கள் ‘விடுதலைப்புரட்சி’க்குத் தயாரான நிலையில் பரபரப்புடன் இருந்தனர்.
என்னைப் போன்றவர்கள் மக்களிடையே நெருப்புப் பொறி பறக்கப் பேசிய பேச்சுக்கள் புரட்சி எந்த நேரமும் வெடிக்கலாம் என்பதற்கு அறிகுறிகளாய்த் தென்பட்டன.
நான் ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் மூலை முடுக்கெல்லாம் சென்று மக்களைத் தட்டி எழுப்பும் விதத்தில் சுதந்திர வேட்கையை உண்டாக்கினேன் ஆங்கில ஆட்சியை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டுமென்றும் அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்யலாம் என்றும் மக்களை பக்குவப்படுத்தினேன். எங்கள் ஊரில் நான் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் ஆயிரக் கணக்கில் வருவதும், இளைஞர்கள் அங்கும் இங்கும் பரபரப்புடன் திரிவதும், அரசாங்கத்தை எதிர்த்துப் பல துண்டுப் பிரசுரங்களை ரகசியமாக மக்களிடம் விநியோகிக்கப்படுவதும் போலீசாருக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது.
போலீசார் எந்த இடத்திலும் தனியாக வர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு எந்தப் போலீஸ்காரரும் போக முடியவில்லை. போலீசார் அனைவரும் போலீஸ் ஸ்டேஷனிலேயே தங்க, தூங்க, சாப்பிட வேண்டிய நிலையை ஊரில் உண்டாக்கிவிட்டோம். தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டுவிட்டன. டெலிபோன்கள் துண்டிக்கப்பட்டுவிட்டன
என்னைப் பலமுறை போலீசார் கைது செய்ய முயன்றும் முடியவில்லை. காரணம், எப்போதும் என்னைச் சுற்றி நானூறு, ஐநூறு இளைஞர்கள் இருந்துகொண்டேயிருந்தனர். அதனால் என்னைக் கைது செய்தால் நிச்சயம் கலகம் ஏற்படும் என்று போலீசார் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
1942 ஆகஸ்ட் 8ந் தேதி காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். இச் செய்தி காட்டுத்தீ போல நாடெங்கும் பரவியது. எங்கள் ஊரில் பெரும் புயலுடன் இடியும் மின்னலும் சேர்ந்ததுபோல் மக்கள் மனதில் குமுறல் ஏற்பட்டது. ஊரெங்கும் இதைப்பற்றியே பேச்சு.
“வெள்ளையனே வெளியே போ” என்ற முழக்கம், தெருவில் அகப்பட்ட ஒரு அப்பாவிப் போலீஸ்காரர் ஒருவரை மக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கி அவரது காக்கி உடை சிகப்புத் தொப்பி இவைகளைப் பறித்து தீ வைத்துக் கொளுத்திவிட்டனர்.
தேவகோட்டையிலும் அதன் சுற்றுப் புறத்திலும் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்று மாலை ஜவஹர் மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் கூடியிருந்தது. தடை உத்தரவை நான் மீறப்போவதாக அறிவித்திருந்தபடியால் ஊரெல்லாம் ஒரே பரபரப்புடன் கூடியிருந்தது.
போலீசாருக்கு எதிராகக் கொரில்லா போர் செய்வதற்கு மக்கள் தயாராக வந்திருந்தனர். சிலர் அரிவாள் வைத்திருந்தனர். பலர் சுலபமாகக் கொண்டு வரக் கூடிய கற்களை கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலர் நல்ல வகையான நெற்றி மட்டக் கம்புகளில் காங்கிரஸ் கொடிகளை மாட்டிக் கொண்டு வந்திருந்தனர்.
கொடி சொருகி இருக்கும் இடம் “ஈட்டி முனை” என்றும் ரகசியமாகச் சொல்லிக் கொண்டார்கள். இப்படி மக்கள் போலீசைத் தாக்க தயாராக இருப்பதை அறிந்து நான் வேதனை அடைந்தேன். காந்தீயம் அதுவல்ல. எனக்குத் தெரியும். எனினும் அந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். எனக்கு இள வயது.
ஆகவே 144 உத்தரவை மீறாமல் கூட்டத்தைக் கலைத்தால் மக்கள் என்னைக் கோழை என்றும் துரோகி என்றும் காரி உமிழ்வார்கள். இப்படி நான் நிலை தடுமாறிக் கொண்டு மேடையில் நிற்கையில் ஜே ஜே என்ற மக்கள் ஆரவாரத்தின் மத்தியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு வீராசாமி ஒரு போலீஸ் படையுடன் வந்து மேடைக்கு முன் அணிவகுத்து நின்றார்.
மக்கள் அவரைச் சுட்டெரித்து விடுவது போல் பார்த்தார்கள். சிலர் ‘போலீஸ் ஒழிக’ என்றும் ‘காட்டிக் கொடுக்கும் கங்காணிகள் ஒழிக’ என்றும் ‘துரோகிகள் ஒழிக’ என்றும் முழக்கம் செய்தார்கள்.
நான் மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். மக்களோ ஒரே குரலாக, “தலைவர்களை விடுதலை செய்”, “போலீசே திரும்பிப் போ” என்று கர்ஜனை செய்தார்கள். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் திரு. வீராசாமி அவர்கள் மேடைமீது வந்து என்னிடம் 144 தடை உத்தரவை நீட்டினார்.
மக்கள் முழக்கத்தில் நான் ஆவேசத்துடனிருந்தேன். நீட்டிய 144 தடை உத்தரவை இன்ஸ்பெக்டர் கையிலிருந்து பிடுங்கி, “ஆங்கில அரசாங்கத்தின் 144 தடை உத்தரவுக்கு இந்திய மக்களாகிய நாங்கள் கொடுக்கும் மரியாதை இதுதான்” என்று கூறி சுக்கு நூறாகக் கிழித்து என் காலில் போட்டு மிதித்தேன்.
உடனே மக்கள் கொதித்தெழுந்து நாற்புறமிருந்து கற்களை வீசத் தொடங்கினர். நான் மைக் முன்வந்து, “மகாத்மா காந்தி மீது ஆணை, யாரும் போலீசாரைத் தாக்கக் கூடாது” என்றேன்.
கூட்டத்தினர் சிறிது அடங்கினர். அச்சமயம் பார்த்து இன்ஸ்பெக்டர் வீராசாமி பின்வாங்கி, தன் ஜவான்களுடன் வண்டியில் ஏறி ஓடிவிட்டார், மக்கள் வண்டியை விரட்டிக் கொண்டே சென்றார்கள்.
அக்காட்சி எனக்கு மக்கள் வெள்ளைக்காரன் ஆட்சியை விரட்டிக் கொண்டு ஓடுவதுபோல் தோன்றியது.