சோழர் கால அரசியல் தலைவர்கள்/ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராசன்

சயங்கொண்டசோழப் பிரமாதிராசன்

மணிமங்கலம்

இது செங்கற்பட்டு மாவட்டம் சைதாப்பேட்டை வட்டத்தில் பல்லாவரத்துக்கு அருகில் இருக்கும் ஓர் ஊர். இவ்வூர் வரலாற்றுச் சிறப்புடையது ; பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடுகளிலேயும் பல்லவ மல்லனாகிய இரண்டாம் நந்திவர்மன் காலத்திய உதயேந்திரச் செப்பேடுகளிலேயும் குறிக்கப்பட்டுள்ளது. சளுக்கிய அரசனாகிய இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்மவர்மன் தோல்வியுறச் செய்த போர்க்களங்களுள் இஃதொன்று. இவ்வூரில் மூன்று திருமால் கோட்டங்களும் இரண்டு சிவன் திருக்கோயில்களும் உள்ளன. திருமால் கோயில்கள் ஸ்ரீ இராச கோபாலப் பெருமாள், வைகுண்டப் பெருமாள், கிருஷ்ணசாமி ஆகியோர்க்கும், சிவபெருமான் கோயில்கள் ஸ்ரீ தர்மேசுவரர், கயிலாச நாதர் ஆகியோர்க்கும் உரியவை. இராச கோபாலப் பெருமாள் கோயிலில் ஏறத்தாழப் பதினான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. அவையாவும் சோழர் காலத்தவை.

இம் மணிமங்கலம் வட மொழியில் ரத்நாக்ரஹாரா என்றும் ’ரத்நக் கிராமா’ என்றும் குறிக்கப் பெற்றுளது. இராசகேசரி வர்மனுடைய கல்வெட்டில் இவ்வூர் ’லோக மாதேவிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் இராசாதி ராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களில் ’ராச சூளாமணிச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், முதலாம் குலோத்துங்கசோழன் காலமுதற் கொண்டு மூன்றாம் குலோத்துங்கன் காலம் முடியப் ’பாண்டியனை இருமடி வெங்கொண்ட சோழச் சதுர்வேதி மங்கலம்’ என்றும், மூன்றம் இராச ராசனுடைய 18-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுக்களில் கிராம சிகாமணிச் சதுர்வேதி மங்கலம் என்றும் குறிக்கப் பெற்றுளது. வீர ராசேந்திர சோழன் காலம் வரையில் இது செயங்கொண்ட சோழ மண்டலத்துச் செங்காட்டுக் கோட்டத்து மாகனூர் நாட்டு மணிமங்கலம் என்றும், குலோத்துங்க சோழன் காலத்திலிருந்து செயங் கொண்ட சோழ மண்டலத்துக் குலோத்துங்க சோழ வளநாட்டுக் குன்றத்தூர் நாட்டு மணிமங்கலம் என்றும், மூன்றாம் இராசராச சோழனுடைய கல்வெட்டில் புலியூர்க் கோட்டம் குலோத்துங்க சோழவளநாடு என்ற பெயருடையது என்றும் அறிய வருகிறது. இந்நாளைய இராச கோபாலப் பெருமாள், முன்னாளில் ஸ்ரீமத் துவராபதி என்றும், ஸ்ரீமத் துவராபுரி தேவர் என்றும், வண் துவராபதி என்றும் ஸ்ரீ காமக்கோடி விண்ணக ராழ்வார் என்றும், கல் வெட்டுக்களில் கூறப்பெற்றுள்ளார்.

பெற்றாேர்

இம்மணிமங்கலத்தில் செயங்கொண்ட சோழப் பிரமாதிராசன் என்ற பெயருடைய சேனைத்தலைவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். இவன் இரண்டாம் இராசேந்திரனுடைய நான்காம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டிலும் (கி. பி. 1054), வீர ராசேந்திர சோழனுடைய ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் (கி. பி. 1068) குறிக்கப் பெற்றிருக்கிறான் . இவனுடைய தந்தை மஞ்சிப் பயனாரான ஜெயசிம்ம குலாந்தகப் பிரம்ம மாராயர் என்று சொல்லப்பட்டார் (S. I. I. Vol III Part I No. 30.) இவனுடைய தாய் காமக்கவ்வையள் என்ற பெயருடையவர் (s. 1. I. Vol III Part 1 No. 29).

சேனாபதி

வீர ராசேந்திரனுடைய கல்வெட்டில், ”இவ்வூர் ஜிவிதமுடைய சேனாபதிகள் ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராஜர்” என்று இவன் குறிக்கப்பட்டுள்ளான். சயங்கொண்ட சோழன்[1] என்பது முதலாம் இராசாதிராசனுடைய சிறப்புப் பெயர்களுள்ளும் ஒன்று. இதனை - மனு நெறி நின்று அசுவமேதம் செய்து அரசு வீற்றிருந்த ஜெயங்கொண்ட சோழன் உயர்ந்த பெரும்புகழ்க் கோவிராச கேசரிபன் மரான உடையார் ஸ்ரீ ராஜாதி ராஜ தேவர் ’’ (s. I. I. Vol III Part I No. 28) என்ற இரண்டாம் இராசாதி ராச சோழனுடைய 29-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டினின்று அறியலாம் (கி. பி. 10.46). எனவே இப்பிரம்மாதி ராசன் செயங்கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயர் பெற்ற இராசாதி ராசனுடைய சேனைத்தலைவர்களுள் ஒருவன் என்பதும், இராசா திராச சோழனுடைய போர்கள் சிலவற்றில் கலந்து கொண்டு சோழ வரசனுக்கு வாகை சூட்டியிருத்தல் வேண்டுமென்பதும், இவனுடைய பேராற்றலை மதித்து இவனுக்குச் செயங் கொண்ட சோழப் பிரம்மாதி ராசர் என்ற பட்டப் பெயரை இராசாதிராசன் அளித்திருத்தல் கூடும் என்பதும் அறிதற் பாலன. இவனுடைய தந்தையும் ”ஜெயசிம்ம குலாந்தகப் பிரம்ம மாராயர்” எனப்படுதலின், அவரும் மேலைச் சளுக்கியர்களோடு போர் செய்து சோழர்களுக்கு வெற்றிதந்த சேனாபதிகள் ஆவர். ஜெயசிம்ம குலாந்தக னென்பது ’மேலைச் சளுக்கியர் குலத்துக்குக் காலன் போன்றவன்’ என்று பொருள்படும். எனவே மேலேச்சளுக்கியர்களோடு இடையீடின்றிப் போருடற்றிய இராசாதிராசனுக்கு இச்சிறப்புப் பெயர் இருந்திருத்தல் கூடும். ஆகவே தந்தையும் மகனும் இராசாதிராசன் I காலத்துப் போர்களிலே படைத் தலைமை பூண்டு சோழர்களுக்கு வெற்றியளித்தவராவர். பிரம்மாதிராஜர் என்ற பட்டம் அளிக்கப் பெற்றமையின் இவர்கள் பிராமணர்கள் என்பது தெளிவு.

சீவிதம்

வீர ராரேந்திரனுடைய 5-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில், இவ்வூர் ஜீவிதமுடைய சேனாபதிகள் ஜெயங்கொண்ட சோழப் பிரம்மாதிராஜர் தகப்பனார் மஞ்சிப் பயனரான ஜெயசிங்க குலாந்தகப் பிரம மாராயர் பக்கல் ஸ்வம் கொண்டு முன்பு இவர்க்கு இறையிலியாகக் கொடுத்து இவர் அனுபவித்து வருகிற நிலமாவது என்ற பகுதியினின்று சில செய்திகளை நாம் அறிகிறோம். அரசியல் அதிகாரிகளுக்கு அரசாங்கப் பொருள் நிலையத்திலிருந்து சம்பளம் கொடுக்கும் பழக்கம் முன்னாளில் இல்லை. அவரவர் தகுதிக்கேற்ப அன்னேர் வானாள் முழுதும் அனுபவித்துக் கொள்ளுமாறு சோழ மன்னர்களால் நிலம் அளிக்கப்பெற்றது. அங்ஙனம் அளிக்கப் பெற்ற நிலம் ஜீவிதம் எனப்படும். அன்னோர் மக்களுக்கு இதில் சிறிதும் உரிமையில்லை. அவர்கள் குறிப்பிடத்தக்க பெருந்தொண்டுகள் புரிந்து மிகு புகழ் பெற்றால் அன்னோர் நாளிலேயே ஜீவித வகையிலிருந்து மாற்றி அவர்கள் வழித்தோன்றல்களும் அனுபவித்துக் கொள்ளுமாறு கொடுத்து விடுவதுண்டு (திரு. பண்டாரத்தார்-சோழர் வரலாறு, பாகம் 111). எனவே, செயங் கொண்ட சோழப் பிரமாதி ராசனுக்கு அவன் செய்த பெருந்தொண்டுகளைப் பாராட்டி முதலாம் இராசாதி ராச சோழன் ஜீவிதமாக மணிமங்கலத்தில் நிலமளித்தனன்.

பிரமாதிராசன் தருமம்

மேலே குறித்த கல்வெட்டுப் பகுதியினின்று மஞ்சிப் பயனாருக்கு மணிமங்கலத்தில் 4450 குழி நிலம் இருந்தது என்றும், மணிமங்கலம் சபையார் ஸ்வம் (பொருள்) கொண்டு இறையிலியாக்கினர் என்றும் அறிய வருகின்றது. வீர ராசேந்திரனின் 5-ஆம் ஆட்சியாண்டில் மனிமங்கல சபையார், சேனாபதிகள் ஜெயங் கொண்ட சோழப் பிரமாதிராஜர் ஸ்ரீமத்துவராபதி ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்கு அந்நிலத்தை அர்ச்சனாமாக[2]மாகக் கொடுத்தனர். இதில் கமுகம் தோட்டம் 250 குழி என்றும், இதனை இவன் முன்னதாகவே விலைக்கு வாங்கி யிருந்தான் என்றும் தெரிய வருகிறது.

காமக்கவ்வையள் தருமம்

இவ்வம்மையார் செயங்கொண்ட சோழப் பிரமாதி ராசனின் தாயார். இவ்வம்மையாரிடம் இராச சூளா மணிச்சதுர்வேதி மங்கலத்தார் ஸ்வம் கொண்டு மணிமங்கலத்துத் தென்பிடாகை அமண்பாக்கத்து நிலத்தை இறையிலியாக்கி ஸ்ரீமத் துவராபதியான ஸ்ரீ காமக்கோடி விண்ணகராழ்வார்க்குக் கொடுத்தனர். இச்செய்தி இரண்டாம் இராசேந்திரனுடைய 4-ஆம் ஆட்சியாண்டுக்குரிய மணி மங்கலத்துச் சாசனத்தினின்று அறியப்பெறும். அமண்பாக்க மென்பது மணிமங்கலமாகிய இராசசூளாமணிச் சதுர்வேதி மங்கலத்துத் தென்பிடாகை; அதாவது அச்சதுர்வேதி மங்கலத்துத் தெற்குப்பகுதியிலிருந்த உட்கிடையூர் (Hamlet). அமண் பாக்கம் என்பது இந்நாளைய மணிமங்கலத்துக் கோயிலுக்குத் தெற்கிலுள்ள அம்மணம் பாக்கம் ஆகும். ஸ்வம் என்பது பொருள் என்று பொருள்படும். இது சொம்மு என்ற தெலுங்கச் சொல்லோடு தொடர்புடையதாகக் காணப் பெறும். (சொம்மு அணிகலன்). இச் சொல் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளால் சொம் என்ற உருவில் இரண்டிடங்களில் எடுத்தாளப் படுகிறது. முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம், செய்யுள் 2 “கும்பாதி“ என்று துவங்கும் பாடலிலும், காசிக் கலம்பகம் செய்யுள் -35 “அம்மனே” என்ற முதற் குறிப்புடைய பாடலிலும் இச் சொல் பயின்றுள்ளது.

தெலுங்கரா ?

முதல் இராசராச சோழன் காலமுதற் கொண்டு கீழைச் சளுக்கியரோடு சோழர்கள் மணமுறையால் பிணிக்கப்பட்டிருந்தனர் என்பது தெரிந்ததே. ஆகவே தெலுங்க நாட்டிலிருந்து போந்தவருட் சிலர் சோழர்களுக்குத் தானைத் தலைவர்களாகவும், மண்டலத் தலைவர்களாகவும் இருந்துள்ளனர். மஞ்சிப்பயன் என்ற ஒருவன் வீர ராசேந்திரனுடைய மேலைச் சளுக்கியப் போர்களில் 1065ல் நடந்த 4-ஆவது போரில் கலந்துகொண்ட சளுக்கிய தண்ட நாயகரில் ஒருவனாகக் காணப்படுகிறான். எனவே மஞ்சிப் பயன் என்ற பெயர் ஆந்திரர்களுக்குரிய பெயராகக் காணப்படுகிறது. மஞ்சிப் பயனாருடைய மனைவியின் பெயரில் கண்ட ‘அக்க’ என்ற பகுதியும் தெலுங்கில் தமக்கை என்ற பொருளது. மஞ்சிப் பயனாரும் தொண்டை மண்டலத்தில் நிலையாக வாழ்ந்தவர். இந் நாளிலும் மணிமங்கலத்தைச் சார்ந்த சிற்றூர்கள் பலவற்றிலும் தெலுங்க மொழி பேசும் அந்தணர் குடும்பங்கள் பல (இக்கட்டுரையாசிரியர் குடும்பம் உட்பட) இருக்கின்றன. எனவே மஞ்சிப் பயனார் தெலுங்க நாட்டினின்று போந்து தொண்டை நாட்டில் வாழ்ந்தவர் என்பது தெளிவு.

முடிப்புரை

முதலாம் இராசாதிராசன் கொப்பத்துப் போர்க்களத்தில் கி. பி. 1051-இல் இறந்து போனான். இரண்டாம் இராசேந்திர சோழன் அக்கொப்பத்துப் போரில் வாகை சூடினான். அவன் தம்பியாகிப வீரராசேந்திரனும் மேலைச் சளுக்கியர்களை ’’ஐம்மடி வெந் கொண்டவனுக’’க் கூறப்படுகிறான். இவ்வாறு 11-ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் நடைபெற்ற மேலைச் சளுக்கியப் போர்களில் செயங்கொண்ட சோழப் பிரமாதி ராசனும் அவன் தந்தை மஞ்சிப்பயனரான ஜெயசிம்ம குலாந்தகப்பிரம மாராயரும் பெரும் பங்கு கொண்டு வெற்றி பெற்றுச் சோழ அரசர்களது அன்புக்குரியராகிப் பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்து கொடைக் குணம் மிக்குடையராய்த் திருமால் பக்தியில் சிறந்தவராய் வாழ்ந்தனர் என்பது கண் கூடு.


  1. முதலாம் இராசராச சோழனுக்கும் இச்சிறப்புப் பெயர் உண்டு
  2. அர்ச்சனாபோகம் : கோயிலுக்கு அர்ச்சனே முதலியவற்றிற்காகக் கொடுக்கப்படும் இறை (வரி)யிலி நிலம்.