சோழர் கால அரசியல் தலைவர்கள்/மணவாளப் பெருமாள்

மணவாளப் பெருமாள்

காடவராயர்கள்

காடவராயர்கள் பல்லவர் வழியில் ஒரு கிளையினர் : திருமுனைப்பாடி நாட்டுக் கூடலூரையும் சேந்த மங்கலத்தையும் தலை நகராகக் கொண்டு சோழர்களின் கீழ் அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் சோழ அரசர்களிடம் பேரன்பு உடையவர்களாய் உற்றுழி உதவியும் வந்துள்ளனர். சிம்ம விஷ்ணுவை முதலாகக் கொண்ட பல்லவமரபினர் தம்மைக் காடவர் என்று கூறிக் கொள்ளவில்லை எனினும், இரண்டாம் நந்திவர்மனது முன்னோர்கள் காடவர்குலத் தோன்றல்கள் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்கள் என்பது இங்கு அறியத் தகும்.

வீரசேகரக் காடவராயன்

இவன் மேற்குறித்த காடவர் மரபில் தோன்றியவன்; கூடலூர் என்ற நகரில் வாழ்ந்தவன். இவன் அரச நாராயணன் ஆளப்பிறந்தானான வீரசேகரக் காடவராயன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவன் மூன்றாம் குலோத்துங்கனுடைய 9-ஆம் ஆட்சி யாண்டில் திருநறுங்கொண்டை நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளித் தேவர்க்குத் திருநாமத்துக் காணியாக நிலமளித்துள்ளான் (381 of 1902); அக்குலோத்துங்கனுடைய 13-ஆம் ஆட்சி யாண்டில் திருவண்ணாமலை யுடைய நாயனார்க்குச் சாத்தியருள ஏகாவலி வடம் ஒன்று அளித்துள்ளான் (531 of 1902). மேற்படி குலோத்துங்கனின் 25-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1203)க்குரிய திரு வெண்ணெய் நல்லூர்க் கல்வெட்டில் (312 of 1902 s.I.I.VI.1941) இவன் கூடலூருடையான் வீரசேகர அதிகைமான் என்று குறிப்பிடப்பெறுகிறான்- னால் இவன் அதிகைமானை வென்றிருத்தல் கூடும் என்று அறியப்பெறும். சகரயாண்டு 1108-க்குரிய (கி.பி. 1186) விருத்தாசலம் கோயிலில் கண்ட பாடல் சாசனத்தில் (74 of 1918; S. 1. . Vol XII No 263) இவன் முன்னேர்கள் சிலருடைய வரலாறுகள் கூறப்படுவதோடு, இவன் அதிகைமானை வென்றமையும் கூறப்ட்டுள்ளது.

'கண்டராதித்தன் வாசலுக்கு மேற்கே புறப்பட்டுக்டக மாராயன் கூடலும் அதிகைமானாடும் அழித்து வெற்றிக்கொடி யுயர்த்தி அனுமனும் பொறித்தான்' என்ற கல்வெட்டுப் பகுதி. இதில் கண்டராதித்த வாசல் என்பது இந்தக் கல்வெட்டிருக்கும் கோபுரமாகக் கருதப்படுகிறது. இதில் கண்ட கூடல் என்பது சேலம் மாவட்த்திலுள்ள தீர்த்தாமலை என்னும் ஊர் என்பர். இந்தக் கல்வெட்டின்படி ஒன்று திருவெண்ணெய் நல்லூர்க் புரீஸ்வரர் கோயிலிலேயும் காணப்படுகிறது. (464 21: S I Vol xi No 264). இவ்விரு கல்வெட்டுக்களிலிருந்து இவன் ஆளப்பிறந்தான் என்ற சிறப்புப் பெயரை உடையவன் என்றும், அதிகைமானை வென்றவன் என்பதும், கூடல் என்பது கற்கடக மாராயனுக்கு உரிது என்றும், இவனுடைய கொடி அனுமக்கொடி என்றும் அறியலாம்.

இவ்வீர சேகரக் காடவராயனின் மகனாகக் கருதப்படுபவன் கூடல் ஏழிசைமோகன் மணவாளப்பெரு வாணிலை கண்ட பெருமாளாகிய இராஜராஜக் காடவராயன்.

சமோகன் இராஜராஜக் காடவராயன்

ஏழிசை மோகன் என்பது இவன் முன்னோர்களும் கொண்டிருந்த சிறப்புப் பெயர்களுள் ஒன்று. ஏழிசை மோகன் திருமண்டபம்என்று ஒருமண்டபம் இரண்டாம் குலோத்துங்க சோழனது 15-ஆம் ஆட்சியாண்டில் கட்டப்பட்டதாக ஒரு கல்வெட்டு விருத்தாசலத்தில் கானப்படுகிறது. எனவே ஏழிசைமோகன் என்பது இவன் குலத்தோருக்குரியசிறப்புப்பெயர் என அறியலாம். இராஜராஜக் காடவராயன் என்பது இவனது இயற்பெயராகும்.

வாணிலை கண்ட பெருமாள்

வானிலை என்பது புறப்பொருள் துறைகளில் ஒன்று. ’செற்றார்மேல் செலவமர்ந்து, கொற்றவாணாட் கொண்டன்று’ என்பது கொளு. இக் கொளுவிற் கண்டவண்ணம் வாளைப் புறவீடு செய்வித்துப் பகைவர்மேற் சென்று வாள்கொண்டு வெற்றி யெய்தியமையின் இவனுக்கு வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர் வந்திருக்க வேண்டும். அதுவும் மூன்றாம் குலோத்துங்கன் நிகழ்த்திய போர்களில் செற்றார் மேல் சென்று வென்றமையின் இவன் இங்ஙனம் பாராட்டப் பெற்றான். இவனுக்குரிய இச்சிறப்புப்பெயர் மூன்றாம் குலோத்துங்கனின் 17-ஆம் ஆட்சியாண்டிற் குரிய (கி.பி. 1195) திரு வெண்ணெய் நல்லூர்க்கல்லெழுத்திலும் (313 of 1902), இச்சோழனுடைய 28-ஆம் ஆட்சியாண்டிற்குரிய விருத்தாசலம் கல்வெட்டிலும் (133 of 1900) குறிக்கப்பெற்றுள்ளன.

மணவாளப் பெருமாள்

மேலே கூறிய விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர்க் கல்லெழுத்துக்களினின்று இவனுக்கு மணவாளப் பெருமாள் என்ற சிறப்புப் பெயர் இருந்தது என்று தெரியவருகிறது. இவனுடைய போர் வீரத்தையும் பேராற்றலையும் கண்ட மூன்றாம் குலோத்துங்கசோழன் இவனுக்கு மகள் ஒருத்தியைத்திருமணம் செய்வித்துச் சிறப்புச் செய்தான். அந்நாள் முதல் இவன் மணவாளப்பெருமாள் என்று வழங்கப் பெற்றனன் என்று ஆய்வாளர் பகர்வர் (திரு. பண்டாரத்தார், சோழர் வரலாறு பாகம் 2, பக்கம் 179-180). வாணிலை கண்ட பெருமாள் என்ற சிறப்பு எய்துவதற்கு முன்னதாகவே மணவாளப் பெருமாள் என்ற சிறப்பை இவன் எய்தியிருத்மல் கூடும். இதனை 'மணவாளப் பெருமாளான ரிலே கொண்ட பெருமாளான ராஜராஜக்காடவராயர்’’ என்ற கல்வெட்டுத் தொடரில் கண்ட முறை யினின்று கூர்ந்து அறியலாம். இவனை முதற் கோப்பெருஞ் சிங்கன் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

சோழனோடு முரண்பட்டமை

மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் குறுநில மன்னர்கள் தத்தம் நாட்டுப் பகுதிகளைச் சுதந்திரம் பெற்றே ஆண்டு வந்தார்கள். ஒரோவழித் தங்களுக்குள் முரண்பட்டுப் பேரரசுக்கு இடையூறு விளைவித்தவரும் உண்டு. அவ்வமயங்களில் சோழப் பேரரசின் நன்மையின் பொருட்டும் சோழப் பேரரசின் பெருமைக்கு இழுக்கு வாரா திருத்தற் பொருட்டும், பலரும் ஒருங்கு சோழ அரசனுக்கு அடங்கியிருப்பதாக உடன்படிக்கை செய்து கொள்வதுண்டு. அரசனது ஆணையை மீறி நடந்தால் அரசனிடம் அன்புடையவர்கள் எல்லோரும் ஓருங்கு சேர்ந்து பேரரசனைப் பகைத்த குறுநில மன்னன் இடம் தாமும் பகைமை பூண்டு உடன்படிக்கை செய்து கொள்வதுமுண்டு.

அங்ஙனம் செய்த உடன்படிக்கைகளில் மூன்றாம் குலாத்துங்கனுடைய 27-ஆம் ஆட்சியாண்டுக்குரிய திருவண்ணாமலைக் கல்வெட்டில் பதின்மர் தலைவர்கள் ஒருங்கு சேர்ந்து அரசியலுக்குக் கேடு சூழ்ந்த சிலருடன் பகைமை கொள்ள உடன்படிக்கை செய்து கொண்டது ஒன்று. கேடு சூழத் தொடங்கியவர்கள் குலோத்துங்க சோழ வாணகோவரையன், மகதை நாடாழ்வானான வாணகோவரையன் என்பவர்களோடு, இராஜராஜக் காடவராயனும் காணப்படுகின்றான். மேற்படி உடன்படிக்கையின் சில பகுதிகள் வருமாறு:-

“நாங்கள் ஒரு காலமும் இராஜ காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்துக் குலோத்துங்க சோழ வாணகோவரையனும், மகதை நாடாழ்வானான வாணகோவரையனும், இவர்கள் பக்கல் ஆளாதல் ஒலையாதல் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும்... ... ... எங்களிலே ஒருவுரை வாணகோ வரையராதல், இராஜ ராஜக் காடவராயராதல் வினை செய்தாருண்டாகில் படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்த கடவோமாகவும் (S. I. I. Vol VIII No. 106).

இப்பகுதியினின்று, இராஜராஜக் காடவராயன் தன்னலம் கருதி அரசனுக்கு முரண்பட்டவனுகக் கருதப்பட்டானென அறிய வருகிறது. இவன் செய்த அடாத செயல்களே பின்னர்ச் சோழப் பேரரசின் அழிவுக்கு வழி கோலியன. தன்னலங் கருதிச் செய்த செயலானது ஒரு பேரரசுக்கே முடிவு கோலியதாயிற்று!

ஏழிசை மோகன் சந்தி

சேந்த மங்கலத்துள் “சகலபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார்க்கு யாண்டு அஞ்சாவது“ என்று தொடங்கி ஒரு கல்வெட்டுள்ளது (S. I. I. Vol VIII No. 850). ஸ்ரீ மணவாளன் பெருமாளுடையார் என்பது இங்கு எடுத்துக்கொண்ட தலைவனாகவே கருதல் தகும். இம் மணவாளன் பெருமாள் சேந்த மங்கலத்துள் ஊரும் படைவீடும் செய்து, வாணிலை கண்டீசுரமுடைய நாயனாரை எழுந்தருளப் பண்ணி அப் பெருமானுக்கு ஏழிசை மோகன் சந்தி என்ற நாள் வழிபாட்டையும் தொடங்கி நிபந்தம் விட்டான் என்று அக் கல்வெட்டில் உள்ளது. ’ஊரும் படை விடும் செய்து’ என்றதால் இவனே சேந்த மங்கலத்தை அரண் பொருந்திய ஊராக அமைத்தான் என்றும், ’வாணிலை கண்டீசுவர நாயனாரை எழுந்தருளப்பண்ணி’ என்றமையான் இவனே தன் சிறப்புப் பெயரால் கோயில் அமைத்து இறைவனை எழுந்தருள்வித்தான் என்றும், “இந்நாயனார்க்கு நாம் கண்ட ஏழிசைமோகன்சந்தி’ என்ற பகுதியால் இவன் தன் குலப்பெயராகிய ’ஏழிசை மோகன்’ என்ற பெயரால் நாள் வழிபாட்டை நியமித்து நிபந்தம் விட்டான் என்றும் அறிய வருகிறது.

முடிப்புரை

இதுகாறும் கூறியவற்றால் இவனும் இவன் முன்னோரும் சிறந்த சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்கள் என்பதும், மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனுக்கடுத்து வந்த மூன்றாம் இராசராச சோழன் காலத்திலும் இவன் திகழ்ந்தவன் என்பதும், முதலில் மூன்றாம் குலோத்துங்க சோழனாலே அபிமானிக்கப் பெற்று அவனால் சிறப்பிக்கப் பெற்றவனென்பதும், இவனே பின்னர்ச் சகல புவனச் சக்ரவர்த்திகள் முதற் கோப்பெருஞ் சிங்கனாக விளங்கினானென்பதும் அறியலாம்.