சோழர் கால அரசியல் தலைவர்கள்/மதுராந்தகன் கண்டராதித்தன்

மதுராந்தகன் கண்டராதித்தன்

பன்னிரு திருமுறைகள்

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் அருளிய திருநெறிய தமிழ் ; 4, 5, 6 திருமுறைகள் அப்பர் அருளிய அருந்தமிழ் ஏழாம் திருமுறை சுந்தரர் செந்தமிழ் ; எட்டாம் திருமுறை மணிவாசகர் திருவாசகம் ; ஒன்பதாம் திருமுறை கருவூர்த்தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய திருவிசைப் பாவும் திருப்பல்லாண்டும் ; பத்தாம் திருமுறை திருமூலர் திருமந்திரம் : பதினோராந் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் முதலிய பன்னிருவர் அருளிய பைந்தமிழ் ; பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் ஆகும்.

முதற் கண்டராதித்தன்

இப்பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப் பாவில் கோயில் எனப்பெறும் சிதம்பரத்தின்மேல் பாடிய திருவிசைப்பாப் பதிகங்களில் ஒன்று, கண்டராதித்தர் என்பவரால் பாடப்பட்டது. இக் கண்டராதித்தர் பிற்காலச் சோழர் பேரரசில் கி. பி. 907-953 வரை பேரரசனாக வீற்றிருந்த முதற் பராந்தக சோழனின் இரண்டாவது மகனாவர். இவர் சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர் ; கி. பி. 950 முதல் 957 வரை சோழவரசனாக வீற்றிருந்தவர். இவரது மனைவியார் எல்லையற்ற சிவபக்தியுடையராய் மாதேவடிகள் என்று சிறப்பிக்கப் பெற்ற செம்பியன் மாதேவியார் ஆவர். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் மதுராந்தக தேவரான உத்தம சோழன் என்ற பெயருடையவன் ; கி. பி. 970 முதல் 985 வரை அரசாண்டவன். இவ்வுத்தம சோழனது மகனே மதுராந்தகன் கண்ட ராதித்தன் ஆவான்.

அரசியல் அலுவலன்

முதற் கண்டராதித்தர் கி. பி. 957-ல் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார். அந்நாளில் உத்தம சோழன் சிறு குழந்தையாய் இருந்தான். ஆகவே கண்டராதித்தர் தன் தம்பி அரிஞ்சனை அரசனாக ஆக்கினார். அரிஞ்சயனும் தில திங்களே அரசாண்டு இறந்து போனான். பின்னர் அரிஞ்சயன் மகன் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் என்பான் கி. பி. 957-ல் சோழப் பேரரசனாகி கி. பி. 970 வரை அரசாண்டான். சுந்தர சோழனுக்குப் பின் அவன் மகன் (முதலாம்) இராசராசன் அரசனாக வரவில்லை ; தன் பெரிய பாட்டனாகிய முதலாம் கண்டராதித்தர் புதல்வனும் தனக்குச் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழனுக்கு அரசாளவேண்டும் என்ற விருப்பம் இருந்தமை அறிந்து, உத்தமசோழன் சோனாட்டரசனாக இருக்க விட்டுக்கொடுத்தான். உத்தம சோழனும் கி. பி. 970-985 வரை அரசாண்ட பின்னர், முதலாம் இராசராசசோழன் அரசனான். எனவே உத்தம சோழனுடைய மகனாகிய மதுராந்தகன் கண்டராதித்தனுக்கு அரசுரிமை கிடைக்கவில்லை. முதல் இராசராச சோழனாட்சியில் இவன் கோயில் காரியங்களும் அறநிலையங்களும் நன்கு நடைபெறுமாறு கண்காணிக்கும் அலுவலில் இருந்தான்.

திருமாற்பேற்றில்

தொண்டை நாட்டுப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்றாகத் திகழ்வது திருமாற்பேறு. அவ்வூரில் கண்ட சில கல்லெழுத்துக்களில் மதுராந்தகன் கண்டராதித்தன் குறிக்கப் பெறுகிறான். பரகேசரி வரமனது[1] 14-ஆம் ஆட்சி யாண்டுக் கல்வெட்டில் (280 of 1906) திருமாற்பேற்று இறைவனுக்குத் திங்கள்தோறும் நூற்றெட்டுக் குடங்கள் தேன் நெய் தயிர் அபிடேகம் செய்ய மதுராந்தகன் கண்டராதித்தனால் நிபந்தம் அளிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

இவனே இவ்வூர்க் கோயிலில் இராச கேசரிவர்மனது[2] மூன்றாவது ஆட்சியாண்டில் ஒரு விளக்கு வைக்கப் பதினைந்து கழஞ்சு (பொன்) அளித்திருக்கிறான் (285 of 1906).

இராசகேசரி வர்மனது மூன்றாவது ஆட்சியாண்டில் ஒரு நில விற்பனைச் செய்தி கூறுமிடத்தும் இவன் குறிக்கப் பெறுகிறான் (294 of 1906).

அதுவே ஆட்சி யாண்டில் இவன் ஒரு விளக்கு எரிக்கப் பதினைந்து கழஞ்சுபொன் அளித்ததாகக் குறிக்கப் பெற்றுள்ளான் (296 of 1906).

முதலாம் இராசராச சோழனுடைய நான்காம் ஆட்சியாண்டில் இவன் திருமாற்பேறு அக்னிசுவரர் கோயில் நடைமுறைச் செய்திகளை ஆய்ந்தான் ; கோயில் நிலங்கள் பிறரால் கைக்கொள்ளப்பட்டமையையும், இறைவனுக்குரிய நிவேதனம் இரண்டு நாழி அரிசியாகக் குறைக்கப் பட்டமையையும் கண்டு பிடித்தான் ; ஐவர் அடங்கிய ஒரு குழுவுடன் இவற்றை ஆராய்ந்தான் ; மடைப் பள்ளிக்குப் பொறுப்புடையவர்களிடம் குற்றம் கண்டு தண்டம் விதித்தான் (283 of 1906) ; இச்செய்தி முதலாம் இராசராசனுடைய 12-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் குறிக்கப் பெற்றுள்ளது (282 of 1906).

திருவல்லத்தில்

கோ இராசகேசரிவர்மனுடைய ஏழாவது ஆட்சியாண்டில் இவன் திருத் தீக்காலி வல்லத்தில் இருந்துள்ளான். பேராசிரியர் கீல் ஹார்ன் அவர்கள் கணக்குப்படி 26-9-991-ல் ஐப்பசித் திங்கள் முழுமதி ரேவதி விண் மீன் கூடிய சந்திர கிரகணத்தன்று திருத் தீக்காலி வல்லத்துப் பெருமாளுக்குச் சகஸ்ர கடாபிஷேகம் செய்வித்து வழிபாடாற்றினான். அப்பொழுது இறைவனுக்குப் படைக்கப்பெறும் திவேதனம் இரண்டு நாழி அரிசியாக இருத்தலையும், கறியமுது நெய்யமுது தயிரமுது படைக்கப் பெறாமல் இருந்தமையையும், திருநுந்தா விளக்கு ஏற்றப் படாமையையும் கண்டான். அத்திருக்கோயில் சிவப் பிராமணரையும் தீக்காலி வல்லத்து அவையாரையும் அழைத்து, ’’இக்கோயில் பெருமானுடைய வரவும் செலவும், அரசன் ஆணைக்கும் திருவோலைக்கும் உரிய வண்ணம் சொல்லுக ’’ என்று வினவச், சிவப்பிராமணரும், தீக்காலி வல்லத்து அவையாரும் (சொன்னார்கள்). எஞ்சிய செய்தியுள்ள கல்வெட்டுப் பகுதி கட்டப் பட்டு இருக்கின்றமையின் மேற்கொண்டு மதுராந்தகன் கண்டராதித்தன் எடுத்துக் கொண்ட நடவடிக்கை தெரிய கிற்றிலது. எனினும் இக்கல்வெட்டாலும், இம்மதுராந்தகன் கண்டராதித்தன் கோயில் கணக்குகளையெல்லாம் ஆராயும் படியான செல்வாக்கோ அல்லது அலுவலோ உடையனாயிருந்தான் என்பது உறுதிப் படுகிறது ( 1O of 1890; S. I. I. Volume III No 49.)

இவன் மேற்குறித்த ஆண்டிலேயே திருவல்லம் கோயில் கணக்குகளை ஆய்ந்தான் ; அக்கோயிலுக்கு நாள்வழிபாடு நன்கு நடைபெற அவ்வருவாய் குறைவாயிருத்தலைக் கண்டு, தான் ஏழு கழஞ்சு நான்கு மஞ்சாடி பொன் அளித்தான் ; கோயில் நிலங்களைச் சிவப் பிராமணர்கள் தமக்குரியதாக ஆக்கிக் கொண்டமையைக் கண்டு பிடித்து, அங்ஙனம் செய்தவர்களுக்கு 74 கழஞ்சு பொன் அபராதம் விதித்தான் ; இவற்றிற்கு ஒரு திட்டமும் வகுத்தான் ; அத்திட்டங்களை யார் யார் கண்காணிக்கவேண்டுமென்பதையும் ஏற்பாடு செய்தான் (218 of 1921).

குடிமல்லத்தில்

இராசகேசரி வர்மனுடைய நான்காம் ஆட்சியாண்டில் கண்டராதித்தன் குடிமல்லத்தில் இருந்தான் ; அங்கு இறைவன் திருமேனி ஒன்றை எழுந்தருளுவித்து நாள் வழிபாட்டிற்கு நிலதானம் அளித்துள்ளான். இதனை அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது (222 of 1903).

முடிப்புரை

இதுகாறுங் கூறியவாற்றால் மதுராந்தகன் கண்டராதித்தன் தொண்டை நாட்டிலே கோயில்களைக் கண்காணிக்கும் அரசியல் தலைவனாக இருந்தமை பெறப்படும்: இந்நாளில் கோயில் முதலாய அறநிலையங்களையெல்லாம் பாதுகாத்தற்கு அறநிலையப் பாதுகாப்பு ஆணையர் இருத்தலை நாமறிவோம். அத்தகைய பெருந்தர அதிகாரியாக மதுராந்தகன் கண்டராதித்தன் விளங்கினானென்று கொள்ளலாம். கி. பி. 1001 வரையிலேயும் இவனது பாட்டியார் செம்பியன் மாதேவியார் சோனடு முழுவதும் பல திருக்கோயில்களைப் புதுப்பித்தும், அணிகலன்கள் முதலியன அளித்தும், பல நிபந்தங்கள் நல்கியும் சிவப்பணிகள் பல ஆற்றிய காலங்களில், இம்மதுராந்தகன் கண்டராதித்தன் தொண்டை நாட்டில் அதே போன்ற தொண்டிலேயே ஈடுபட்டிருந்தனன்.

முதற் கண்டராதித்த சோழரும், அவர் மனைவியாகிய செம்பியன் மாதேவியாரும், பேரனுகிய மதுராந்தகன் கண்டராதித்தனும், அந்நாளைய பேரரசனாகிய இராசராச சோழனும் தென்னாட்டைப் பூலோக சிவலோகமாக ஆக்கியமை அறிந்து மகிழ்வோமாக !


  1. உத்தம சோழனாக இருத்தல் கூடும்.
  2. இராசகேசரிமர்மன் இராசராசன் (985-1014)