ஜம்புத் தீவு பிரகடனம்

இந்தச் சுவரொட்டியைக் காண்போர் யாராயினும் கவனமாகப் படியுங்கள்

ஜம்புத்தீபா நாட்டிலும் அதன் தீபகற்பத்திலும் வாழுகின்ற அனைத்து இனத்தவருக்கும், உள்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர சாதிகளாகப் பிளவுபட்டிருக்கும் மக்களுக்கும் முகமதியருக்கும், பொதுவான நலன்களைக் கருத்திற்கொண்டு இந்தப் போர் முழக்கம் வெளியிடப்படுகிறது.

மாட்சிமைப்பட்ட நவாப் முகமது அலி முட்டாள்தனமாக உங்களுக்கு மத்தியில் ஆங்கிலேயருக்கு இம்மண்ணில் இடமளித்ததால் இம்மண்ணில் கைம்மை நிலை உருவாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் நேர்மைக்குப் புறம்பாக நவாப்பினுடைய ஆட்சியுரிமையைக் கைப்பற்றிக் கொண்டனர். உள்நாட்டு மக்களை நாய்களாகக் கருதி அவ்வாறே நடத்துகின்றனர். மேலே சொல்லப்பட்டபடி பல்வேறு அடிப்படையில் பிரிந்திருக்கக்கூடிய நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையையும் நட்பையும் வளர்த்துக் கொள்ளாமல் ஆங்கிலேயர்கள் உங்கள் மத்தியில் ஆடுகின்ற இரட்டை நாடகத்தையும் புரிந்துகொள்ளாமல் உமக்குள் தீராப் பகைமையைப் பெருக்கிக் கொண்டதுடன் ஆட்சியையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.

அத்தகைய இழி பிறவிகளுடைய கைகளில் சிக்கிக்கொண்ட பகுதிகளில் மக்களுடைய வாழ்க்கை ஏழ்மையடைந்து உண்ணும் உணவுகூட அரிதாகிப் போய்விட்டது. மக்கள் பலவாறான துன்ப, துயரங்களுக்கு ஆட்பட்டபோதிலும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளையும் அறியாதவர்களாக இருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட மனிதன் ஒருநாள் மடியப் போவது உறுதி. அவர்கள் ஈட்டக்கூடிய புகழ், சந்திர சூரியர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும்.

ஆகவே இழந்துவிட்ட மரபு உரிமைகளை மீட்டெடுக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. அதாவது மாட்சிமைப்பட்ட நவாப்பிற்கும் விஜய ராமநாத திருமலை நாயக்கருக்கும் தஞ்சாவூர் ராஜாவுக்கும் ஏனைய மன்னர்களுக்கும் அவரவர்களுடைய அரசுரிமை முழுமையாக ஒப்படைக்கப்படும். அனைவருக்கும் அவரவர்களுக்கும் உரிய உரிமைகள் சமய நம்பிக்கைக்கும் மரபு வழிப்பட்ட பழக்கவழக்கங்களுக்கும் முரணற்ற விதத்தில் முறையாக ஒப்படைக்கப்படவுள்ளன. நவாப்பைச் சார்ந்து சேவையாற்றுவதுடன் ஆங்கிலேயர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு அதன்மூலம் அவர்களுடைய நிரந்தர மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழலாம்.

ஆங்கிலேயருடைய ஆட்சி முற்றாக அழித்தொழிக்கப்பட்டு விடுவதால் நவாப்பினுடைய ஆட்சியின் கீழ் நாமும் துயரங்களற்று நிம்மதியாக வாழலாம்.

ஆகவே இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் தாம் வாழுகின்ற ஊர்களிலும் பாளையங்களிலும் ஆயுதங்களை இறுகப் பற்றிக்கொண்டு ஒன்றிணைந்து அந்த இழிபிறவிகளுடைய பெயரைக்கூட இம்மண்ணில் இல்லாதபடி செய்ய உறுதி பூண வேண்டும். அப்போதுதான் ஏழை எளியவர்கள் உயிர் வாழவே முடியும். எச்சில் வாழ்க்கை வாழுகின்ற நாய்களைப் போல அத்தகைய இழிபிறவிகளுக்குக் கீழ்படிந்து உயிர் சுமந்து திரிய யாரேனும் ஆசைப்படுவார்களேயானால் அவர்களைக் கருவறுக்க வேண்டும். அந்த இழிபிறவிகள் எத்தகைய சூழ்ச்சிகளால் இங்குள்ளவர்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு இந்த மண்ணை அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆகவே பிராமணர்கள், சத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள், முகமதியர்கள் என்றெல்லாம் பிளவுண்டு கிடக்கின்ற எம்மக்களே! திசை தவறிப் போய் இந்த இழி பிறவிகளுடைய படையில் சுபேதார்கள், ஹவில்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் என்று பட்டங்களைச் சுமந்தலுத்த, ஆயுதமேந்த வல்லவர்களே உங்களுடைய வீரத்தையும் தீரத்தையும் இப்படி வெளிப்படுத்துங்கள்.

அந்த இழிபிறவி இனத்தவரில் யாரையேனும் எங்கேனும் கண்டால் உடனே வெட்டி வீழ்த்துங்கள்; அவர்களுள் கடைசி ஆள் இருக்கும்வரை தொடருங்கள் அந்தத் திருப்பலியை. அந்த இழிபிறவிகளுக்குச் சேவை புரியக்கூடிய எவனும் செத்தால் சொர்க்கத்திற்குச் செல்லப் போவதில்லை என்பதை நானறிவேன். அதனைச் சிந்தித்து செயல்படுத்துங்கள். இதனைக் கருத்திற் கொள்ளாதவர்கள் தமது தோள்களிலும் மார்புகளிலும் மாட்டிக்கொண்டு திரிகின்ற பட்டங்களும் பதக்கங்களும் எனது மறைவிட மயிருக்குச் சமம். அவன் உண்ணும் உணவு கழிக்கப்பட்ட பொருள்; அவனுடைய பெண்டும் பிள்ளைகளும் அவனுக்குரியவர்கள் அல்லர். அவன் கூட்டிக் கொடுத்த அந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். ஆகையால், நமது நாளங்களில் ஆங்கிலேயருடைய ரத்தத்தால் மாசு படாதோரெல்லாம் ஒன்றிணையுங்கள்.

இந்தச் சுவரொட்டியைப் படிப்போரும் கேட்போரும் தமது நண்பர்களுக்கும் ஏனையோருக்கும் பரப்புங்கள். இதே போன்ற சுவரொட்டிகளைத் தயாரித்துப் பரப்புரை செய்யுங்கள். அவ்வாறு இதில் கண்ட செய்திகளைப் பரப்புரை செய்யாதவன் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகி நரகத்தின் அத்தனை சித்திரவதைகளுக்கும் ஆட்படுவான். இந்தப் பணியை மேற்கொள்ளாத முஸ்லீம் பன்றியின் ரத்தத்தைக் குடித்த பாவத்திற்கு ஆளாவான்.

இந்தச் சுவரொட்டியை இந்தச் சுவரிலிருந்து நீக்க முற்படுபவன் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த பாவத்திற்கு ஆளாவான். ஒவ்வொருவரும் இதனைப் படித்து நகலெடுத்துக் கொள்ளுங்கள்

இப்படிக்கு

மருதுபாண்டியன்

பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய இழிபிறவிகளுக்குச் சென்ம எதிரி.

ஸ்ரீரங்கத்தில் வாழும் சமயகுருக்களுக்கும் பெரியோர்களுக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மருதுபாண்டியன் பாதம் பணிந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன். மகாராஜாக்கள் கோட்டைகளைக் கட்டியெழுப்பிப் பாதுகாத்தார்கள்; களிமண்ணால் முன் முகப்புகளை வடிவமைத்தனர். கோட்டைக் கோவில்களையும் தேவாலயங்களையும் மசூதிகளையும் எழுப்பினர். அத்தகைய மகாராஜாக்களும் மக்களும் இந்த இழிபிறவிகளுடைய ஆட்சியில் வறுமையில் வாடுகிறார்கள். எப்படியெல்லாமோ வாழ்ந்த நீங்கள் இந்த இழிநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டீர்கள். எனக்கு உங்களுடைய நல்லாசிகளை வழங்குங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஜம்புத்_தீவு_பிரகடனம்&oldid=1526506" இலிருந்து மீள்விக்கப்பட்டது