ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு/பூர்வபீடிகை
வட ஆற்காடு ஜில்லா
பூர்வ பீடிகை
(அமைப்பு முதலிய விவரங்கள்)
சென்னை ராஜதானியின் ஜில்லாக்களுள் ஒன்றாகிய ஆற்காடு ஜில்லா (படம் 1) 4,954-சதுர மைல் விஸ்தீரணம் வாய்ந்துள்ளது. இதற்கு வடக்கில் சித்தூர் ஜில்லாவும் மைசூர் ராஜ்யமும் எல்லையாக ஏற்பட்டிருக்கின்றன. கிழக்கிலுள்ளது செங்கற்பட்டு ஜில்லா. இதன் தென் பக்கத்திய எல்லைகள் தென் ஆற்காடு ஜில்லாவும், சேலம் ஜில்லாவின் ஒரு பாகமும். மேற்கிலுள்ள எல்லை சேலம் ஜில்லாவும், மைசூர் ராச்சியமும், இதன் எல்லைக்கரை ஓரம் நன்கு ஒழுங்கு வாய்ந்திருக்கவில்லை. மேற்கில் மைசூர்ப் பூமியின் ஒரு பாகம் அடங்கியுள்ளதாக விருக்கிறது. இப்பொழுது இந்த ஜில்லா ஒன்பது தாலூகாக்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவையாவன :—
- (1) வேலூர்
- (2) திருப்பத்தூர்
- (3) குடியாத்தம்
- (4) வாலாஜாபேட்டை
- (5) அரக்கோணம்
- (6) செய்யாறு
- (7) வந்தவாசி
- (8) போளூர்
- (9) திருவண்ணாமலை
இந்த ஜில்லாவில் 2,397-கிராமங்கள் இருப்பதுடன் 20,55,594 ஜனங்க ளிருந்து வருகிறார்கள்.
பெரும்பாலும் இது மலைப் பிராந்தியங்களுள்ள ஜில்லாவே. இதில் அனேக அழகிய காட்சிகளும் உண்டு. மேற்கு வடக்கு பாகங்கள் குன்றடர்ந்த அழகிய பிராந்தியங்கள். கிழற்குத் தெற்கு பாகங்களோ கட்டையாயும் அழகின்றியும் இருக்கக் காணலாம். பூமி ஸார முள்ளது. நன்கு பயிர் செய்யப்பட்டும் வருகிறது. பெரும்பாகம் வெறும் குன்றுகளடர்ந்திருப்பினும், இயற்கை யமைப்புப் பள்ளத் தாக்குகள் அனேக விடங்களில் அணைகள் கட்டி ஜலத்தைத் தேங்கச் செய்து ஏரி குளங்கள் உண்டுபண்ணிக் கொள்ள அனுகூல முள்ளதாக ஏற்பட்டிருக்கிறது. குன்றுகளில் பொழியும் மழை விழுந்த விடங்களில் பூமியில் சுவறிப் போகாமல் அருவிகளாக ஓடி ஏரி, குளங்களில் விழுந்து அவைகளை நிரப்புகின்றது. ஆதலால் இந்த ஜில்லாவின் சமவெளிப் பிராந்தியங்கள் நீர் வளம் பொருந்தியவை. சென்னை ராஜதானி ஜில்லாக்களுள் ஏரிகள் அதிகம் வாய்ந்துள்ள ஜில்லாக்களுள் ஒன்று வட ஆற்காடு ஜில்லா இந்த ஜலத் தேக்கங்கள் ஏரிகளென்றும் சில விடங்களில் குளங்கள் என்றும் கூறப்படுகின்றன. காவேரிப்பாக்கம், மாமண்டூர் இவ்விடங்களிலுள்ள ஏரிகளில் எப்பொழுதும் ஜலம் இருந்து கொண்டே யிருக்கும். விஸ்தீரணத்தில் அவைகள் ஏழெட்டுச் சதுர மைலுள்ளவை.
கர்நாடக நவாப்புக்கள் அதிகாரம் நடத்திய ஊர் இப்பொழுது ஆற்காடு என் றழைக்கப்பட்டு வருகிறது முதல் முதல் ஆற்காடு என்ற பெயர் பாலாற்றிற்கு பக்கங்களிலுள்ள விசாலமான பிராந்தியங்களுக்கே அளிக்கப்பட்டிருந்ததாம். ஆற்காடு என்ற பதம் வடமொழியில் "ஷடாரணியம்" எனப்படும். ஆறுகாடு ஆற்காடாய்விட்டது. பண்டைக்காலத்தில் பாலாற்றின் இருபக்கங்களிலுமுள்ள பிராந்தியங்கள் ஆறு காடுகள் அடங்கியுள்ளவைகளாக இருந்ததாகவும் அவைகளில் ஆறு ரிஷிகள் தவம் செய்து கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டுளது.
இந்த ஜில்லாவின் எந்த கிராமத்தை எடுத்துக்கொண்டாலும், எந்த நதியை எடுத்துக்கொண்டாலும், அதைப்பற்றிய புராண சம்பந்தமான கதை ஏற்பட்டிராமலிராது. ஒன்றின் அருகிலிருந்த ஒரு ரிஷியின் பிரதாபமானது கூறப்பட்டிருக்கும், அல்லது பாண்டவர்களது சம்பந்தமாவது அவ்விடங்களுக்கு ஏற்பட்டிருக்கும். ராம, லக்ஷ்மணர்கள் சீதா பிராட்டியைத் தேடித்திரிகையில் வந்து சேர்ந்துள்ளவிடங்களெனச் சில உண்டு. ஒரே விதமான ஸம்பவம் வெவ்வேறிடங்களில் நேர்ந்திருந்ததெப்படியென நிர்ணயிக்க முடியவில்லை. ஆனால் புராணக் கதைகளிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாய் நிர்ணயிக்கப்படுவது ஒவ்வொரு கதையுமே. இப்பொழுது இந்த ஜில்லா ஏற்பட்டிருக்கும் பிராந்தியம் அப்பொழுது காடடர்ந்து ராக்ஷஸர்கள் முதலானோர்கள் வசித்துவந்த விஷயத்தை ஒத்துக்கொண்டு எடுத்துக்கூறியிருக்கிறதுபோலும். அக்காலத்திய காட்டுவாசிகளான அரக்கர்களை தேவர்கள் நாசப்படுத்தினார்கள் என்றதும் ஏற்பட்டிருக்கக் காணலாம்.
ஆதொண்டை மன்னன் குரும்பர்களை ஜெயித்ததும் இவ்வனப் பிராந்தியங்களில் ரிஷிகள் வசித்துவந்ததை யறிந்து காஞ்சீபுரம் முதலான இடங்களில் அனேகக் கோவில்களைக் கட்டி வைத்தானாம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அக்காடுகளில் பெரும்பாகம் அழித்துப் பயிரிட யோக்கியமானதாகச் செய்யப்பட்டது. இறுதியில் ஷடாரணியம் அல்லது ஆறுகாடென்ற அவ்வனப் பிராந்தியத்தின் பெயர் கர்நாடகத்தின் ராஜதானி நகருக் கிடப்பட்டது.
ஜில்லாவின் வடக்கு பாகம் வட ஆற்காடென்று கூறப்பட்டது. 1810-வது வருஷத்தில் கர்னாடகத்துடன் கம்பெனியாருக்குக் கொடுக்கப்பட்ட பாகம் பாலாற்றிற்கு வடக்கிலிருந்த பாகம் மாத்திரமே. அப்பாகம் “வடசுபா“ எனப்பட்டு வந்தது. பாலாற்றிற்குத் தெற்கிலுள்ள சுபாவின் பாகம் முதலில் ஆற்காட்டின் தென் பாகமென்று ஏற்பட்டது. இந்த ஜில்லாவின் பாகங்கள் அடிக்கடி மாறுபட்டுக் கொண்டு வந்தனவாம். இங்கிலீஷ் கம்பெனியார்களுக்குக் கொடுக்கப்பட்ட பிறகு வட பாகத்துடன் காளஹஸ்தி, கார்வேட்நகரம், வெங்கடகிரி, செய்தாபூர், கங்குந்தி முதலிய ஜமீன்தாரிகளும், பாரமஹாலிலிருந்து கிருஷ்ணகிரி என்ற பாகமும் மலைத் தொடர்ச்சிக்கு மேலாகவுள்ள ஹோசூரும் சேர்த்துக்கொள்ளப்பட்டன. 1808-வது வருஷத்தில் வெங்கடகிரி, சைதாப்பூர் முதலிய இடங்களும் காளஹஸ்தியின் ஒரு பாகமும் நெல்லூருக்கு மாற்றிக்கொள்ளப்பட்டுக் கங்குந்தி ஜமீன்தாரி, தற்காலத்திய பழமானேரி தாலூகா இவை நீங்கலாகக் கிருஷ்னகிரிப் பிரிவுகள் சேலத்துடன் சேர்த்துக்கொண்டு விடப்பட்டன. பாலாற்றிற்குத் தெற்காகவுள்ள ஐந்து தாலூகாக்களும், ஆரணி ஜாகீரும் ஆற்காட்டின் தெற்கிலிருந்து வட பகுதிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சத்தியவேடு தாலுகாவும் பழவேற்காடு பகுதியும் செங்கற்பட்டிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டன. பிறகு இந்த ஜில்லா (1) சித்தூர் (2) திருப்பதி (3) கடப்பநத்தம் (4) சாத்கூர் (5) திருவலம் (6) காவேரிப்பாக்கம் (7) சோளிங்கபுரம் (8) ஆற்காடு (9)வேலூர் (10) திருப்பத்தூர் (11) போளூர் (12) வந்தவாசி (13) ஸத்தியவேடு (14) சித்தூர் பாளையம் (15) மாமண்டூர் (16) கிருஷ்ணாபுரம் (17) கரகம்பாடி, (18) ஆரணி, ஆவல்கொண்டா, தேசூர் ஜமீன்தாரிகள் (19) காளஹஸ்தி, கார்வேட்நகரம், கங்குந்தி ஜமீன்தாரிகளென பிரிக்கப்பட்டிருந்தன. பின்னர் 1911-ஆம் வருஷத்தில் இவை சித்தூர், வட ஆற்காடு இரண்டு ஜில்லாக்களாகப் பிரிக்கப்பட்டன.
பழவேற்காடு 1818-ஆவது வருஷத்தில் கம்பெனிக்காரர்களால் டச்சுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டபோதிலும் மறுபடியும் அவர்களுக்கே திருப்பித் தரப்பட்டுப் பின்னர் செங்கற்பட்டு ஜில்லாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1824-ஆவது வருஷத்தில் வட ஆற்காட்டுக்குத் திருப்பப்பட்டு 1850-ஆவது வருஷத்தில் சத்தியவேடு தாலுகாவின் ஒரு பாகத்துடன் திரும்பவும் செங்கற்பட்டுக்கே மாற்றி விடப்பட்டது. சத்தியவேட்டின் பாகமும் அதே ஜில்லாவுக்கு 1860-ஆவது வருஷத்தில் தாலுகாக்கள் ஒழுங்கு செய்யப்பட்டபொழுது சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதற்கு முன் புங்கனூர் ஜமீன்தாரியும் 1856-ஆவது வருஷத்தில் கடப்பையி லிருந்து வட ஆற்காட்டுக்கு மாற்றப் பட்டது. ஆவல்கொண்டா, தேசூர் ஜமீன்தாரிகள் முறையே 1848, 1826 இவ்வருஷங்களில் திரும்பவும் நிர்ணயித்துச் கொள்ளப்பட்டன. மாமண்டூர், கிருஷ்ணாபுரம் பாளையங்கள் மறுபடியும் ஏற்பட்டது சுமார் 1826-ல். தற்காலத்திலுள்ள வட ஆற்காடு ஜில்லாவிலுள்ளது கங்குந்தி ஜமீனும் ஆரணி ஜாகீருமே, மற்றவைகள் சித்தூர் ஜில்லாவுடன் சேர்ந்து விட்டன.
1860-வது வருஷத்தில் இந்த ஜில்லாவின் தாலூகாக்கள் ஒன்பதாக வரையறுத்து ஏற்படுத்தப் பட்டன. அத்தாலூகாக்கள்: (1) சந்திரகிரி (2) சித்தூர் (3) பழமானேரி (4) வாலாஜா (5) குடியாத்தம் (6) வேலூர் (7) போளூர் (8) வந்தவாசி (9) ஆற்காடு.
இந்த ஜில்லாவிலுள்ள மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகளே. இவைகள் இந்த ஜில்லாவின் தென்மேற்கிலுள்ள கங்குந்தி ஜமீன்தாரியில் பிரவேசித்து வடக்கு நோக்கிச்சென்று கொஞ்ச கொஞ்சமாய்ச் சித்தூர் ஜில்லாவைச்சேர்ந்த திருப்பதிக் குன்றுகள் வரை கிழக்கு நோக்கி சென்றிருக்கின்றன. இங்கு இம்மலைத் தொடர்ச்சி கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கிக் கடப்பை ஜில்லாவில் போகும் ஒரு நீண்ட பள்ளத் தாக்கினால் பிளக்கப்பட் டிருப்பது காணப்படும். இந்த மலைத் தொடரில் ஏற்பட்டுள்ள இடைவெளியின் வழியாகத்தான் கடப்பை ஜில்லாவிற்குள் சென்னை இருப்புப் பாதையின் வடமேற்குக் கிளை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாமண்டூர் பள்ளத் தாக்கின் கிழக்கில் மலைத்தொடர்ச்சி மறுபடியும் கிளம்பிர் சித்தூர் ஜில்லா காளஹஸ்தி ஜமீன்தாரியிலிருந்து நெல்லூரில் பிரவேசிக்கும் வரை வட கிழக்காகச் செல்கிறது. இத்தொடர்ச்சி தான் இரு கர்நாடகங்க ளெனப்படும். "பாலாகாட்" அல்லது மைசூர் பீடபூமி என்ற பாகத்தையும் "பயன்சாட்" அல்லது சுத்த நாடு என்ற பாகத்தையும் பிரிக்கிறதாம். இந்த வட ஆற்காடு ஜில்லாவின் இந்த பாகம் சமுத்திர மட்டத்திற்கு 2,500-அடி உயரமுள்ளது. பூமி இங்கு செழுமையான தெனினும் காயலா ஸ்தலமென்று ஏற்படுவதால அதிக ஜன நெருக்கம் இல்லை. கீழே உள்ள தாலூகாக்களிலிருந்து மேலாக உள்ள தாலூகாகளுக்குப் போக அனேகம் மலைக் கண் வாய்களிருந்தாலும் வண்டிகள் போகக்கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா இந்த மூன்று கணவாய்களே.
சந்திரகிரி தாலூக்காவி லுள்ள கல்லூர் கணவாய் கல்லூர் பாளையத்தின் வழியாகக் கடப்பைப் பியலூர்த் தாலூகாவிற்கு தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் சென்றிருக்கிறது. அதன் வழியாகச் சென்னையிலிருந்து கடப்பைக்குப் போகும் பிரதான ரஸ்தா செல்கிறது. இதன் வழியாகப் போக்கு வரவு மிக அதிகம். ஆயினும் பக்கத்திய ஜில்லாக்களுள் சாமான்கள் கொண்டு போக இருப்புப்பாதை ஏற்படுமுன் ஏற்பட்டிருந்த போக்கு வரவு இப்பொழு தில்லை. செய்னகுந்தாக் கணவாய் குடியாத்தம் தாலூகாவிலிருந்து பழமானேரிக்குச் செல்கிறது. அங்கு அது மொகிலியிலிருந்து வரும் ரஸ்தாவுடன் சேர்கிறது. பாதை செங்குத்தானதே யெனினும் அழகிய காட்சி வாய்ந்துள்ளது.வட ஆற்காடு ஜில்லாவில் மிகவும் விசாலமானது கிழக்குத் தொடர்ச்சிமலையே யெனினும் மிகவும் உன்னதமானது ஜவ்வாதுக் குன்றுகளே. அவைகளின் சிகரங்களில் சில 3000-அடி உயரம்கூட உயர்ந்துள்ளன. இக்குன்றுகள் இந்த ஜில்லாவின் தென் மேற்கி லிருக்கின்றன. இவைகள் கிழக்கு மலைத் தொடர்ச்சியிலிருந்து அகன்ற கணியம்பாடிப் பள்ளத்தாக்கினால் பிரிக்கப்பட் டிருக்கின்றன. இந்த வாணியம்பாடிப் பள்ளத்தாக்கு ஆம்பூருக்கருகில் குறுகிப் போகிறது. அங்கு ஜவ்வாது மலைத் தொடரும் அனேகமாய் ஒன்று சேர்ந்தது போல் ஏற்பட்டு விடுகின்றன. பிறகு அது ஜில்லாவை விடுகையில் பெரிதாகி சேலம் ஜில்லாவிற்குட் செல்கிறது. முன் சேலம் ஜில்லாவிற்குச் சேர்ந்திருந்த ஜவ்வாதுத் தொடரின் ஒரு பாகம் 1885-வது வருஷத்தில் வட ஆற்காடு ஜில்லாவுக்கு மாற்றிவிடப் பட்டது. இந்த ஜவ்வாதுக் குன்றுகள் தேக ஆரோக்கியம் வாய்ந்துள்ளவைகள் அல்ல. இவைகளின் தொடர்ச்சி வட கிழக்காக வேலூர் வரைக்கும் சென்றிருக்கிறது. இங்குள்ள 2,743-அடி உயரம் வாய்ந்துள்ள "கைலாஸ துர்க்கம்" என்ற இடம் ஒரு பிரிந்துள்ள சிகரம் இது வேலூருக்கு ஆறுமைல் தூரத்தில் உள்ளது. இதன் உச்சியில் ஒரு சிறிய பங்களா அமைக்கப்பட் டிருக்கிறது. கோடைகாலங்களில் அங்கு சென்றிருந்தால் இன்பமாகவிருக்கும்.
இந்த ஜவ்வாது மலைகளில் நேர்த்தியான காடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் தென் மேற்கு இருப்புப்பாதை போடப்பட்ட காலத்தில் உபயோகப்படுத்திக் கொள்ள ஏராளமான மரங்கள் வெட்டி விடப்பட்டதால் அக்காடுகளெல்லாம் முற்றிலும் அழிந்து போயின, இப்பொழுது உள்ள மரங்கள் மிக்க ஜாக்கிரதையுடன் காப்பாற்றி வரப்பட்டு வருகின்றன.
தென் கிழக்குத் தாலூகாக்களின் சம வெளியான அமைப்பு பாலாற்றிற்கு வடக்கில் கொஞ்சதூரம் வரை சென்றிருக்கக் காணலாம். கிழக்குத் தொடர்ச்சிமலையின் பக்கத்துச் சிறுமலைத் தொடர்கள் சித்தூர் ஜில்லாவின் வழியாக வாலாஜாவுக்கு வடக்கிலும் கார்வேட்நகர ஜமீன்தாருக்கு மேற்கிலும் சென்றிருக்கின்றன. இந்தக் கார்வேட்நகர ஜமீன்தாரியின் வழியாக ஒரு விசாலமான செழுமை பொருந்திய பள்ளத்தாக்கு சென்றிருக்கிறது. இது கிழக்குப் பக்கத்தில் காளஹஸ்தி ஜமீன்தாரிக்குள் வடக்கு நோக்கி சுமார் நாற்பது மைல்கள் சென்றிருக்கும் நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட் டிருக்கிகிறது. மூங்கில் காடுகள் முதலானவைகளுடன் பசுமையாகக் காணப்படும் சரிவுகளுடன் கூடிய இத்தொடர்ச்சியே இந்த ஜில்லாவிலேயே அழகிய தோற்றம் வாய்ந்துள்ளது. மேலும், மற்றைய குன்றுகளுக்குள் முக்கியமானது 2,000 அடி- உயரமுள்ள திருவண்ணாமலைக் குன்றே. இது இந்த ஜில்லாவின் தெற்கு பாகத்திலுள்ளது.
இந்த வட ஆற்காடு ஜில்லாவின் நதிகள் உற்பத்தியாகி ஓடும் மாதிரி ஒழுங்கற் றிருத்தலுக்குக் காரணம் இது குன்றடர்ந்திருப்பதே.வட பாகம் மேற்கிலும் வடக்கிலும் கிழக்குத்தொடர்ச்சி மலையாலும் கிழக்கில் கார்வேட்நகரக் குன்றுகளாலும் தடைகள் ஏற்பட்டிருக்கும் காரணம்பற்றி நீர்ஓட்டம் தெற்குப் பக்கமாக ஏற்பட்டிருப்பதுடன் அது பாலாற்றில் வந்து கலக்கிறது. மேற்கு பீடபூமியின் ஜலமும் தெற்குப் பக்கத்தில் தான் செல்கிறது. தெற்குத் தாலூகாக்கள் சிறுகச் சிறுக சமுத்திரத்தின் பக்கம் சரிந்து சென்றிருப்பதால் அதிலுள்ள நதிகள் அப்பக்கமே ஓடி சமுத்திரத்தில் விழுகின்றன.
இந்த ஜில்லாவின் முக்கியமான நதிகள் (1) பாலாறு (2) செய்யாறு (3) கோட்டாறு (4) கௌண்டின்ய நதி (5) புண்ணியதீர்த்த நதி முதலியன.
இந்நதிகளுள் முக்கியமானது பாலாறு. அது இந்த ஜில்லாவை அனேகமாய் இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கிறது. அது மைசூரில் நந்திதுர்க்கத்திற்கருகில் பெண்ணாறு உற்பத்தியாகு மிடத்திற்குப் பக்கத்திலேயே உற்பத்தியாகிறது. உற்பத்தியான இடத்திற்கு ஐம்பது மைல் தூரத்தில் இந்நதி கங்குந்தி ஜமீன்தாரியில் இந்த வட ஆற்காடு ஜில்லாவில் பிரவேசிக்கிறது. இன்னும் முப்பது மைல் சென்றதும் கிழக்குத் தொடர்ச்சியிலுள்ள இடை வெளிககளின் வழியாக வாணியம்பாடி பள்ளத்தாக்கில் விழுகிறது.
வசிட்ட மகரிஷி நந்தி மலையில் தவம் செய்துகொண்டிருக்கையில் அவருக்கு உதவிசெய்து கொண்டிருந்த காமதேனுவின் விருப்பத்தைப் பூர்த்திசெய்து வைக்கவேண்டி ஒரு தருப்பையை மந்திரித்துவிட அது இளங்கன்றாக மாறி விட உடனே காமதேனு அவ்விளங்கன்றினுக்குப் பால் கொடுக்க வேண்டித் தனது மூலைப்பாலை அம் மலையில் சொரிய அது ஒரு புண்ணிய நதியாய்ப் பெருகிப் பாலாறு என்னும் பெயரோடு சென்றதையும், பின்னர் இப்பாலாறு கோடை காலத்திலும் பயிர் உழவர்களுக்கு ஊற்று நீர் மிகுதியால் உதவிபுரிவதையும் பெரியபுராணம் கூறுகிறது.
- துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
- பொங்கு தீர்த்தமாய் நந்திமால்வரை மிசைப் போந்தே
- அங்கணித்திலஞ்சந்தன மகிலொடு மணிகள்
- பங்கயத்தட நிரைப்பவக் கிழிவது பாலி
★
★
★
- பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
- மள்ளர் வேனிலின் மணிற்றிடர் பிசைந்து கைவருட
- வெள்ள நீரிரு மருங்குகால் வழி மிதந்தேறிப்
- பள்ள நீள்வயற் பருமடை யுடைப்பது பாலி.
இந்தப் பாலி எனப்படும் பாலாற்றைப்பற்றி கந்த புராணத்தில்-
- வாலிதாகிய குணத்தினன் வசிட்ட னென்றுரைக்குஞ்
- சீலமாமுனி படைத்ததோர் தேனுவின் றீம்பால்
- சால நீடியே தொல்லைநாட் படர்த்திடு தன்மைப்
- பாலி மாநதிப் பெருமையான் பகர்வதற் கெளிதோ?
என்றும், காஞ்சிபுராணத்தில்:-
- மழையெலாங்கொழுமிச் சொரிமான் பெண்வோகையாற்
- கழிய நீண்முலைத் தாரைகள் கான்றன கான்றபான்
- முழுதுமோர் நதியாய வணின்று முந்நீர் புகுந்
- தழுவிலும் பருமாட்டயர் தீர்த்த மாயதே.
என்றும் பாடப்பட்டிருக்கிறது.
பாலாற்றின் இன்னொரு முக்கியமான உபகுதி பெண்ணை என்ற நதி. அது சந்திரகிரியின் மேற்கிலுள்ள பாறைக் குன்றுகளில் உற்பத்தியாகிறது. அதன் ஓட்டம் அனேகமாய் நேர் கிழக்கே, கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து வரும் அனேக சிற்றாறுகளின் ஜலத்தைப்பெற்றுக் கொண்டு ஆற்காட்டிற் கருகில் அது பாலாற்றில் வந்து கலக்கிறது. இதைத்தவிர்த்துப் பாலாற்றிற்குக் கோட்டாறு, கௌண்டின்னிய நதி என்ற சிறு உபநதிகளுமிருக்கின்றன. இவைகளும் பெண்ணை நதியைப் போலவே ஓடிச் சென்று முறையே ஆம்பூர், குடியாத்தம் என்ற இடங்களில் பாலாற்றுடன் கலக்கின்றன.
பாலாற்றிற்கு அடுத்த முக்கியமான நதி செய்யாறு. இது ஜவ்வாது மலையில் உற்பத்தியாகி முதலில் தெற்குப் பக்கமாகத் தென் ஆற்காடு ஜில்லாவிற்குள் ஓடுகிறது. மேட்டுப் பிராந்தியங்களைக் கடந்ததும் கிழக்கு நோக்கி வளைந்து ஜில்லாவின் தெற்குத் காலூகாக்களின் வழியாக ஓடிச் செங்கற்பட்டு ஜில்லாவில் வாலாஜாபாத்திற் கருகில் பாலாறுடன் கலக்கிறது.
பாலாறு, செய்யாறு, பெண்ணை இந்த நதிகளுக்கு நல்ல பாலம், கலுங்குகள் ஏற்பட்டு அனேக ஏரி குளங்கள் ஜலம் நிரப்பப்பட்டு வருகின்றன. மற்றச் சிற்றாறுகளில் ஏற்பட்டுள்ள சிறிய கலுங்குகள் முதலியன பழைய காலத்திய வேலைகளே. இந்த ஜில்லாவின் கிழக்கு பாகத்திய ஜலம் நாராயணவனம், கொறட்டையாறு இந்நதிகளில் வந்து விழுகிறது. நாராயணவனம் என்ற நதி நகரிக்குன்றுகளுக்கு மேற்கிலுள்ள வண்டல் மண் பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி மலைத்தொடர்ச்சியிலுள்ள ஒரு இடை வெளி வழியாக ஓடி, அதைக்கடந்து சென்று கிழக்குத் திசையை நோக்கிப் பழைய நாராயணவனம் என்ற ஊரைத்தாண்டிப் போகிறது. கொறட்டையாறு பாலாற்றிற் கருகில் ஆற்காட்டிற்குக் கிழக்கில் ஆறு மைல் தூரத்தில் உற்பத்தியாகிப் பாலாற்றிலிருந்தும் ஜலத்தைப்பெறும் காவேரிப்பாக்கத்தின் குளத்தின் அதிகமான ஜலத்தைக்கொண்டு ஆரம்பித்து ஓடுகிறது. வட கிழக்காக ஓடித் திருத்தணி நகரி நதிகளின் ஜலத்தைப் பெற்றுக்கொண்டு என்னூருக் கருகில் சமூத்திர சங்கம மாகிறது.
இந்த நதிகள் ஆதியில் ஓடிக்கொண்டிருந்த மார்க்கம் மாறியிருத்தல் வேண்டும். பாலாறோ அல்லது அதன் ஒரு பெரிய கிளை நதியோ முன் கொறட்டையாற்றுப் பள்ளத்தாக்கின் வழியாகச்சென்றிருக்கவேண்டும். இப்பொழுதும் பாலாறு, கொறட்டையாறு இந்த நதிகளை விருத்தக்ஷிர நதி யென்ற சிறிய நதி சேர்த்திருப்பது காணப்படும். இதேமாதிரியே நகரி நதியும் முந்தி நாகலாபுரத்திற் கருகில் நாராயணவனத்துடன் கலந்திருந்தது. அரை மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டித் திருப்பப்பட்டிருக்கும் அடையாளம் ஏற்பட்டிருக்கிறது. இது இந்நகரிநதி கொறட்டையாறுடன் கலக்கும் திருத்தணி நதியில் வந்து கலக்கும்படிச் செய்த ஏற்பாடு போலும். பாலாறும் மனித யத்தனத்தினால் அது ஓடின மார்க்கம் திருப்பப் பட்டதாகக் கூறப்பட்டுளது. காஞ்சீபுரத் தரசர்களுள் ஒருவரது ஊழியராகிய குண்ட கோபால ராவ் என்ற ஒருவர் இந்த நதி முழுவதும் அந்த ராஜதானிக்கருகில் ஓடும்படி செய்ய அணை கட்டித் திருப்பினாராம். காவேரிப்பாக்கத்திற் கருகிலுள்ள கொண்டாபுரத்தில் கோவில் சுவரின் சிலாலிகிதத்தில் அது இருப்பது பாலாற்றிற்குத் தெற்கி லென்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது அது இருப்பது அந்நதிக்கு வடக்கிலேயே.அனேகமாய் வருஷத்தில் பெரும்பாகம் இந்நதிகள் வரண்டு கிடக்கக் காணலாம். மழை காலங்களில் பெரிய வெள்ளம் ஏற்பட்டு இவைகள் அதிவேகத்துடன் ஓடும் பொழுது இவைகளைக் கடக்கமுடியாத காட்டாறுகளாகவே காணலாம். ஆனால் இந்த வெள்ளம் நீடித்திராமல் இரண்டொரு தினங்களில் வடிந்துபோகும். எவ்வளவு சீக்கிரத்தில் பெருகுகின்றனவோ அவ்வளவு சீக்கிரமாகவே இவை வடிந்தும் விடுகின்றன. இந்த நதிகளில் ஒரு விசேஷம். இவைகள் அந்தர்வாகினிகள். கீழே நீர் ஓட்டம் வாய்ந்துள்ள நதிகளானதால் 'கஸம்' எனப்படும் கால்வாய்கள் இந்த வரண்ட நதிகளிலிருந்து வெட்டி அவைகளில் ஓடும் ஜலத்தைக்கொண்டு பக்கத்திய நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
சீதோஷ்ண நிலைமையில் இந்த ஜில்லா வரட்சி பொருந்தித் தேக ஆரோக்கியம் வாய்ந்தது. சமவெளிகளில் உஷ்ணம் அதிகமே யெனினும் சசிக்க முடியாத உஷ்ணமல்ல. உயர்ந்த மேற்குப் பிராந்தியங்களில் சீதோஷ்ண நிலைமை ஆரோக்கியமானதாயும் இன்பமான தாயுமிருக்கிறது.
ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பகலில் காற்று தென்மேற்காகவும், இராக் காலங்களில் கிழக்குத் தென்கிழக்காகவும் வீசும். அக்டோபர் மாதம் தொடங்கிக் காற்று வட கிழக்குக்காற்றாக மாறி அங்கிருந்து பருவக்காற்று வீசுவதாக ஏற்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் இங்கு அதிக மழை பொழிகிறது. சிற்சில சமயங்களில் புயல் காற்றும் அடிப்பதுண்டு.கட்டடங்களுக்கு யோக்கியமான கற்கள் வெட்டி யெடுக்கக்கூடிய இடங்களில் முக்கியமானவை :-(1) பள்ளிகொண்டைக் குன்றுகள் (2) வேலூர் (3) வந்தவாசி (4) சேத்துப்பட்டு (5) ராணிப்பேட்டை (6) சோளிங்கபுரம் (7) திருத்தணி முதலான இடங்கள்.
கால் நடைகளைப்பற்றி விசேஷமாகக் கூற இடமில்லை. பல இடங்களில் அனேகம் நெல்லூர் மாடுகள் இருக்கக் காணலாம். ஆனால் அவைகளைக்கொண்டு குடியானவர்கள் கால்நடைகள் விருத்தி செய்வதாக ஏற்படவில்லை. மலைத்தொடர்ச்சிக்கு மேல் நல்ல எருதுகளும் பசுக்களும் உண்டு. எருதுகள் மைசூர் நாட்டைச் சேர்ந்தவை. முக்கியமாய்க் கங்குந்தி என்ற விடத்தில் விர்த்தியாகும் எருதுகளே அவை. பசுக்கள் பால் கறப்பதில் பேர்பெற்ற புங்கனூரி லிருந்து மிகுதியாக விருத்தி செய்யப்படும் சித்தூர் ஜில்லா புங்கனூர்ப் பசுக்களே இந்த ஜில்லாவில் அதிகம். ஆனால் இப்பொழுது அசல் புங்கனூர் மாடுகள் கிடைப்பது அரிது. சாதாரண ஆடுகளும், குரும்பாடுகளும் உண்டு காடுகளில் காட்டுக்கோழியும் ஆறுகளிலும் குளங்களிலும் அனேக விதமான மீன்களும் உண்டு.
இந்த ஜில்லாவில் தமிழ் தெலுங்கு இந்த இரண்டு பாஷைகளும் சமமாகவே பேசப்படுகின்றன. தெற்குத் தாலூகாக்களில் வழங்கப்படும் பாஷை தமிழ் வடக்குத் தாலூகாக்களில் பேசப்படும் பாஷை தெலுங்கு. பாலாறு இவ்வி வகை பாஷைகளைப் பேசும்படி ஜனங்களைப் பிரிக்கிறது. ஆயினும் தெலுங்கர்களுக்குள் தமிழ் கிராமங்களும், தமிழர்களுக்குள் தெலுங்கு கிராமங்களும் காணப்படுகிறது. பெருன்பான்மையான ஜனங்கள் ஹிந்துக்களே. விஷ்ணு, சிவனைப் பூசிப்பதுடன் சாஸ்கா, மாரியம்மன் இந்த தேவதைக ளிடமும் எல்லோருக்கும் பய பக்தி உண்டு. ஹிந்துக்களைத் தவிர இந்த ஜில்லாவில் முகம்மதியர்களும், ஜெயினர்களும், கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள். முக்கால் பங்கு ஜனங்கள் அரிசியை உபயோகியாது கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய விலை சரசமான தானியங்களையே சமைத்து உண்பார்கள்.
இந்த ஜில்லாவிலுள்ள ஜனங்களாவன:--(1) பிராமணர்கள், இவர்களிலும் அனேகம் வகுப்பினர்கள் உண்டு. (2) ஜங்கமலிங்காயத்துக்கள். அதாவது ஓரிடமிருந்து மற்றோரிடம் கொண்டு போகக்கூடிய லிங்கத்தைப் பூசிப்பவர்கள் (3) பண்டாரங்கள் (4) பூசாரிகள் (5) வள்ளுவர்கள் (6) சாத்தானிகள் (7) தாசிகள் (8) பலிஜர்கள் இவர்கள் தெலுங்கு வர்த்தகர்கள் (9) கவரையர்கள் (10) லிங்கபலிஜயர்கள் (11) கோமுட்டிகள் (12) பேரி செட்டிகள் (13) லப்பைகள் (14) ரஜபுத்திரர்கள் இவர்கள் ஸ்வல்பம் வேலூரில் விசேஷமாய் வசிக்கிறார்கள் (15) வேளாளர்கள் (16) அகமுடியர்கள் (17) மலையாளிகள் முதலானோர்கள்.
ரெட்டிகளும் ஏகாரி முதலான விவசாயம் செய்யும் ஜாதியார்களும் நீர் பாய்ச்சியும், கவலை கொண்டிரைத்தும் நெல், கரும்பு, வெற்றிலை, வாழை, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, மக்காச்சோளம், சாமை, துவரை, அவரை, உளுந்து, பச்சைப்பயறு, காராமணி, கொள்ளு, கடலை, எள்ளு, முத்துக்கொட்டை, வேர்க்கடலை, பருத்தி, அவுரி, கஞ்சா, சணல், புகையிலை, மிளகாய், மஞ்சள் முதலியன பயிர் செய்கிறார்கள்.மலையாளிகள் என்ற வகுப்பினர்கள் தமிழ் பேசும் மலைவாசிகள். ஜவ்வாது மலையின் மீதுள்ள கிராமங்களிலும், வேலூர், போளூர் தாலூகாக்களிலும் காணப்படுவார்கள். இவர்களைப்பற்றிய விவரம் விசித்திரமானது. கங்குந்தி வேடர்களில் சிலர் காஞ்சீபுரம் காரைக்காட்டு வேளாளர்களுடைய பெண்களைத் தங்களுக்குக் கலியாணம் செய்து கொடுக்கும்படி கேட்டார்களாம். அவ்வேளாளர்கள் அவமதித்துப் பேசித் தங்களது கன்னிகைகளைத் தரமாட்டோம் என்றதால் கோபம் கொண்ட அக்கங்குந்தி வேடர்கள் ஏழு வேளாளப் பெண்களை அபகரித்துக் கொண்டு கங்குந்தி சேர்ந்தார்களாம். அப்படிக் கொண்டு போன பெண்களை விடுவித்துக்கொண்டு வர ஏழு வேளாளர்கள் ஏழு நாய்களுடன் புறப்பட்டார்கள். புறப்படுகையில் அவர்கள் தங்கள் தங்களது மனைவிகளிடம் அவர்களது நாய்கள் தனியாகத் திரும்பி வரக்கண்டால் அவர்கள் கொல்லுண்டார்களெனக் கொண்டு அவர்களது அபரக்கிரியைகளை நிறைவேற்றலாமென்று கூறிவிட்டுச் சென்றார்கள். பாலாற்றண்டை வந்ததும் அதில் வெள்ளம் அதிகரித்திருக்கக் கண்டு அதைக்கடக்க முயலுகையில் நாய்கள் அவர்களை விட்டுப் பிரிந்து கரையேறிக் காஞ்சீபுரத்திற்குத் திரும்பி வந்ததைக்கண்டு அவர்களது மனைவிகள் அவர்களது அபரக்கிரியைகளைச் செய்து முடித்து அவர்களது கைம்பெண்ணாக ஏற்பட்டு விட்டார்கள். பிறகு கன்னிகைகளைக் கவர்ந்து சென்ற வேடர்களைக் கொன்று திரும்பி வந்த வேளாளர்கள் அவர்களது மனைவிகளின் செய்கையால் ஜாதியினின்றும் அகற்றப்பட நேர்ந்து அவ்விடத்தி லிருந்தகன்று சில வேடஜாதிப்பெண்களை மணந்து கொண்டு ஜவ்வாது மலைக்குச் சென்று பயிர் செய்பவர்களாகி இந்த மலையாளிகளுக்கு முன்னோர்க ளானார்களாம்.
கம்மர்களைப்பற்றியும் ஒரு கதை உளது. ராக்ஷஸர்களது ஹிம்சையைச் சகியாது ரிஷிகள் விஷ்ணுவினிடம் சென்று முறையிட அவர் அவர்களை லக்ஷ்மியைப் போய்க் கேட்கச்சொன்னார். லக்ஷ்மி தேவியும் அந்த ரிஷிகளுக்குத் தனது கம்மல் ஒன்றைக்கொடுத்து அதை ஒரு பெட்டியில் வைத்து நூறு வருஷம் பூஜிக்கும்படி கூறினாளாம். ரிஷிகளும் அவ்வாறு செய்ய நூறு வருஷங்களானதும் அக் கம்மல் வைத்திருந்த பெட்டியிலிருந்து ஐநூறு வீரர்கள் உற்பத்தியாகி அரக்கர்களை நாசமாக்கிய பின் விவசாயிகளாக ஏற்பட்டார்களாம்! அ ம்மரபினர்களே கம்மர்கள் என்ற ஜாதியார்களாம்!!
கொல்லர்கள் என்ற தெலுங்கு ஜாதியார்கள் கால் நடை பாதுகாக்கும் இடையர்கள். ஆதியில் இவர்கள் ஆடு மாடு மேய்த்துப் பால்விற்று ஜீவனம் செய்து வந்தபோதிலும், இப்பொழுது நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகிக் குடியானவர்களது தொழிலை அனுசரித்தும் வருகிறார்கள். கால் நடைகள் மேய்க்கும் தமிழர்கள் இடையர்களெனப்படுவார்கள்.
குரும்பர்கள் ஆட்டிடையர்கள், முந்திய தென்னிந்தியாவில் பராக்கிரமம் பொருந்தியிருந்த பல்லவர்கள் மரபினர்கள். இவர்கள் இருப்பது இந்த ஜில்லாவின் உன்னதப் பிரதேசங்களிலும் சித்தூர், குடியாத்தம் இவ்விடங்களிலும். தெற்குத் தாலூகாக்களில் கொஞ்சம் கன்னடியர்களது முன்னோர்கள் ராணுவப் பயிற்சி வாய்ந்திருந்தவர்களெனினும் இப்பொழுது கால்நடை மேய்ப்பவர்கள். தவிரவும் இந்த ஜில்லாவில் கம்மாளர்கள், நெசவு நெய்யும் சாலியர்கள், சேணியர்கள், தேவாங்கர்கள், கைக்கோளர்கள், பட்டுநூல்காரர்கள், சாயம் போடும் ரங்காரிகள் முதலியவர்களும், வாணியர்களும், குசவர்களும், செம்படவர்களும், வண்ணார், அம்பட்டர், சக்கிலிகள், போயர்கள் என்ற வேடர்கள், பறையர்கள், தமிழர்கள் முதலானோர்களும் உண்டு.