ஜெபமாலை முதலிய 5 சிறு கதைகள்/ஜெபமாலை


ஜெபமாலை


"எங்கே என் ஜெபமாலை? ஐயோ! ஜெபமாலையின்றி நான் ஒரு கணமும் உயிர் தரியேனே. என் உயிருக்கு உயிர், ஜெபமாலையல்லவா? என் வாழ்வுக்கு வழிகாட்டி, இருதயத்துக்கு இன்பம், துயர் நீக்கும் துணை, கதியளிக்கும் காவல், ஜெபமாலையாயிற்றே, ஜெபமாலையின்றி நான் எப்படி இருக்கமுடியும்?

என் எதிரே,முத்து, ரத்னம்,தங்கம்,பட்டு, எல்லாம் இருந்தும் என் மனம், ஜெபமாலையையே நாடுகிறது. ஜெபமாலை என்னை ஆட்கொண்டபிறகு, வேறு எதற்கும் நான் அடிபணியமாட்டேன். ஜெபமாலை வேண்டும்! இப்போதும், எப்போதும்! என்னுடனேயே இருந்தாகவேண்டும். கொண்டு வா ஜெபமாலையை."

ஜெபமாலை ஒளிந்திருந்த இடத்திலிருந்தே 'களுக்'கெனச் சிரித்தாள். எவ்வளவு பசுப்புகிறான், என்னென்ன புரட்டுப் பேசுகிறான்; உண்மையா அவனுடைய உரை? இல்லை! உள்ளத்திலிருந்தா வந்தன? கிடையாது; உதட்டளவுதான்! ஏன் ஜெபமாலை ஜெபமாலை என்று உருகுபவன் போல நடிக்கிறான்? இலாபமிருப்பதால்!

ஜெபமாலை, கோபுரநாதன் மகள், ஊரெங்கும் கோபுரநாதனுக்கு மதிப்பு, ஜெபமாலையை மணந்ததால், அந்தக் குடும்பச் செல்வாக்கு, ஆண்டிக்குக் கிடைத்தது. ஆண்டி, வேலை வெட்டி செய்யாமல், பரிமளமாக வாழ்ந்ததே ஜெபமாலையின் தயவினால்தான். ஜெபமாலையுடன் ஆண்டி வாழ்ந்ததால்தான், ஆண்டிக்கு, ஊரிலே, செல்வம், செல்வாக்கு எல்லாம். கண்ணியமும் காணிக்கையும் கிடைக்கும்படி செய்ததாலேயே ஜெபமாலைமீது, ஆண்டி தனக்கு அமோகமான காதல் இருப்பதாகக் கூறினான். ஆண்டியின் மனதுக்குச் சந்தோஷமூட்டுவது, ஜெபமாலையின் 'சிபாரிசு' பெற உதவும்; அந்தச் சிபார்சு, கோபுரநாதனின் உதவியைத் தமக்கு வாங்கித் தரும். ஊரார் ஆண்டியை ஆதரித்ததன் மர்மம் அதுவே. ஆண்டிக்குத் தெரியும் ஜெபமாலையின் அருமை பெருமை, ஆண்டியின் அன்பு' வெறும் வேஷமே தவிர, உண்மையல்ல. ஜெபமாலையின் தயவால் செல்வாக்குப் பெற்றதும், ஆண்டியின் மனம், தங்கத்திடம் தாவும். முத்து, ரத்னம்,பட்டு என்று கண்ட கண்டபுடி இருக்கும், ஆண்டி தேடும் காதல். ஜெபமாலை இதை அறிந்தே நகைத்தாள். ஊராரோ, ஆண்டிக்கு ஜெபமாலையிடம் உள்ள அன்பே அன்பு. தங்கம், முத்து, ரத்னம்,பட்டு, எங்கும் மனதை அலையவிடவில்லை பார், எவ்வளவு உறுதி, உள்ளன்பு என்று பகழ்ந்தனர், பைத்தியக்காரர்கள்! ஜெபமாலையைப் பெற்றுவிட்டால்,பிறகு, ரத்னமும் முத்தும், பட்டும் தங்கமும், ஆண்டியின் அடிதொழ வருகிறார்கள் என்ற தைரியமல்லவா அவனுக்கு. "உங்கள் எதிரே சொல்கிறான், ஜெபமாலையே உயிர் என்று; நீங்கள் போய்விட்டதும், என்னை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். தங்கத்தின் தளுக்கு, முத்துவின் மோகனப் பார்வை, பட்டுவின் பளபளப்பு-- இவைகளிலே சொக்கிவிடுவான். நான் கிடப்பேன் ஒரு மூலையில், கவனிப்பாரற்று, இதை அறியாமல், என்னையே அவன் உள்ளன்போடு நேசிக்கிறான் என்று எண்ணி ஏமாறுகிறீர்களே!" என்று ஜெபமாலை எண்ணச் சிரித்தாள்.

ஆண்டி, உள்ளே சென்றான், சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு.

"ஜெபமாலை! வா! ஏன் தயக்கம்?"

"ஏன் வரவேண்டும்? நயவஞ்சராகிய தங்களிடம்"

"நமக்குள் இருக்கும் தகறாரு பிறகு பார்த்துக்கொள்வோம். நாலுபேர் எதிரே, என்னை அவமானப்படுத்தி விடாதே, வா."

"முடியாது. உன் மோசடிக்கு, நான் எத்தனை காலம் உடந்தையாக இருப்பது? நீ ஊரை ஏய்க்கிறாய், என்மீது அமோகமான அன்பு இருப்பதாகக் கூறி. அவர்களும் நம்பி, உன் அடிபணிகிறார்கள். இந்த நயவஞ்சக நாடகத்துக்குத்தானே நான் பயன்படுகிறேன். என்னிடமா உனக்கு உண்மையிலே அன்பு? ஊரை நீ ஏய்க்கலாம், என்னை ஏமாற்றமுடியுமா?"

"ஜெபமாலை! உன்னால் நான் உயர்வு அடைந்தேன்; உன்னை நம்பித்தான் வாழுகிறேன். உன் அருள் இல்லாவிட்டால், நான் ஊராரால் ஒரு காசுக்கும் மதிக்கப்படத்தான்மாட்டேன், உத்தமகுண ஜெபமாலை! என்னை இந்தச் சமயம், கைவிடலாமா?"

"இப்படிப் பசப்பிக்கொண்டே இருப்பானேன்?"

"பழகிவிட்டேன் அப்படி! என்ன செய்வது?"

"இந்த ‘மோசடி’க்கு நான் உடந்தையாக இருந்தால் கூட இன்னும் நெடு நாளைக்கு உன் காலம் இப்போது உள்ளது போலவே இருக்குமென்று நினைக்காதே!'

"ஜெபமாலை! ஏன் உனக்கே உன் சக்தியிலே, சந்தேகம்? வேண்டாம். நீ இருக்குமட்டும் எனக்கு ஒருகுறைவுமில்லை,"

"அதுதான் தவறு என்று சொல்கிறேன். காலம் இப்படியே இராது. ஜெபமாலையிடம் காட்டும் அன்பு வெறும் வேஷம், உண்மையான அன்பு தங்கத்திடம் என்று ஊரார் தெரிந்துகொள்வார்கள். இப்போதே அந்தத் தெளிவு ஏற்பட்டுக்கொண்டுதான் வருகிறது!"

"ஜெபமாலை! நீயா இப்படிப் பேசுகிறாய்? நீ யாருடைய மகள்? எப்படிப்பட்ட குடும்பம்?"

"கோபுரநாதருக்கேகூடத்தான், இப்போது குறைந்து வருகிறது செல்வாக்கு."

"ஏன்?"

"ஏன்! ஜெபமாலை போன்ற மகளை, உன்போன்றவர்ளுக்குத் தந்துவிட, அந்தச் சம்பந்தத்தை துணையாக வைத்துக்கொண்டு, நீ ஊரை ஏமாற்றுவைத்தால்தான்"

"நான் என்ன ஏமாற்றினேன், ஜெபமாலை?"

"விரிவாகக் கூறவா? வயிறு எரிகிறது. ஊராரின் உபத்திரவம் அத்தனையையும், கோபுரநாதரிடம் எடுத்துக் கூறித் தீர்த்துவிடுவதாகக் கூறுகிறாயல்லவா?"

"ஆமாம்."

"ஊரார், ஏன் நம்புகிறார்கள்? உன் திறமையை மதித்தா?"

"இல்லை! என்னுடன் நீ இருப்பதால்,"

"ஊராரின் தொல்லை தீருகிறதோ?"

"இல்லையென்று தான் சொல்லவேண்டி இருக்கிறது."

"நீ உண்மையிலே கோபுரநாதரிடம் முறையிட்டுக் கொள்வது, மக்களின் கஷ்டத்தைப் போக்குங்கள் என்றா?"

"போ, ஜெபமாலை! என் மானத்தையே வாங்குகிறாய்."

"நான் அறிந்துகொண்ட இந்த உண்மைகளை, ஊரார் தெரிந்துகொண்டால், பிறகு தெரியும் உன் செல்வாக்கு!"

"பயம் காட்டாதே, ஜெபமாலை!"

"பயம் காட்டவில்லை; நானே பயப்படுகிறேன். நீயும் கூடச் சேர்ந்துதானே எங்களை எய்த்தாய் என்று ஊரார் என்னையும் துன்புறுத்துவார்கள் என்று எண்ணிப் பயப்படுகிறேன்."

"போதும் உன்னுடைய வாதம்! வா, ஜெபமாலை! உன்னைப்பெற்ற பிறகு நான் இழக்கத் துளியும் சம்மதியேன், நீ இல்லாவிட்டால், என் கதி என்ன ஆகும்? எனக்கு இப்போதுள்ள உயர்நிலை இருக்குமா பிறகு? ஜெபமாலை! ஜெபமாலை!வா, வா! என்னோடு இரு கைவிடாதே! ஜெபமாலை,வா,வா!"

"ஏ புதுமடத்தாண்டி, என்ன இது, குளறிக்கொட்டறே! ஜெபமாலை ஜெபமாலைன்னு கூச்சலிட்டு எங்க தூக்கத்தையும் பாழ் செய்யறே, என்ன இழவு, கனவு கண்டு கூவினே?"

பக்கத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த பண்டாரங்கள், புது மடத்தாண்டி, தூக்கக் கலக்கத்திலே ஜெபமாலை ஜெபமாலை என்று உளறியது கேட்டு, தட்டி எழுப்பி, என்ன விஷயம் என்று கேட்டனர்.

திடுக்கிட்டு எழுந்த புதுமடத்தாண்டி, முதலிலே தன் திருவோட்டைத் தேடினான். அதிலே, தன் ஜெபமாலை இருக்கக்கண்டு, "அப்பா! இருக்கு!" என்றான். பிறகு சொன்னான், கனவிலே ஜெபமாலை ஒரு பெண்ணாகத் தோன்றித் தன்னிடம் வாதுபுரிந்ததையும், வம்புக்கு நின்றதையும் அதுதான் மேலே இருப்பது.

புது மடத்தாண்டினய மற்றவர் கேலி செய்தனர், பித்தமா உனக்கு, என்று, அவன் மட்டும் கோபத்தோடேயே "கண்டது கனவுதான். ஆனால் ஜெபமாலை பேசமுடியுமானால், என்னைமட்டுமா உங்களை எல்லாம்கூடத்தான், அதே கேள்விகளைக் கேட்டுத் திணறவைக்கும்" என்று சொன்னான். மேலும் சற்று உரத்த குரலிலே சிரித்தனர் பண்டாரங்கள். "டே!புதுமடத்தாண்டி! திருவாவடுதுறை, தருமபுரி, சிருங்கேரி, முதலிய இடங்களிலே கேள்வி கேட்கத் துணிவில்லாத ஜெபமாலை, போயும் போயும், போக்கிடமற்ற நம்மிடமா கேள்வி கேட்கும்? அங்கே அல்லவா, உன் கனவிலே நடந்த காட்சி நடக்கவேண்டும்!" என்றனர்.

"அது சரி! ஆமாம்." என்று கூறிவிட்டுப் படுத்தான் புதுமடத்தாண்டி. ஒரு புதிய பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. ஜெபமாலை ஒருநாளும் பேசப்போவதில்லை. ஆனால்,ஜனங்களே அதுபோலப் பேச ஆரம்பித்தால், கேள்வி கேட்கத் தொடங்கினால், ஆபத்தாக முடியுமே என்று நினைத்தான். பயம் கொஞ்சநோம்தான் இருந்தது, பிறகு அவனும் மற்றவர்கள் போலவே ஆனால், மனதிற்குள் சொல்லிக் கொண்டான், "அந்தப் பெரிய இடங்களை'க் கேள்விகேட்டு, என்னென்ன செய்யவேண்டுமோ அவைகளைச் செய்து விட்டுிப் பிறகுதானே நம்மைப்போன்றவர்களைக் கேட்க வருவார்கள்; பார்த்துக்கொள்வோம் அப்போது" என்று தூங்கினான் நிம்மதியாக.