டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்

வேதகிரி முதலியார் தபால் பார்த்து வருவதற்காக பஸ்ஸை எதிர்நோக்கிப் போகிறார். காலை வெயில் சுரீர் என்று அடிக்கிறது. வீதியில் ஒரு நிழல் இல்லை. இன்னும் கொஞ்ச நாழியில் தெரு மண் பழுக்கிற மாதிரி காய ஆரம்பித்துவிடும். இது ஒன்றும் கோடை இல்லை. என்றாலும் அப்படி ஒரு வெயில். தெருவில் ஒரு பக்கம் மட்டும் ஓர் ஆள் ஒண்டி நடக்கிற அகலத்துக்கு நிழல். சில உயரமான வீடுகளின் ஓரத்தில் கொஞ்சம் நின்று இன்னொருவரோடு பேசுவதற்கு ஏற்ற அகலமான நிழல். சில வீட்டின் முன்னால் எச்சில் இலை கிடக்கிறது. தெருவில் நடமாட்டமே இல்லை. பகலிலேயே இந்த அமைதி. தூரத்தில் செக்கு ஆடுகிற சத்தம் 'ஙொய்' யென்று ரீங்காரம் செய்தாலும் கிராமத்து அமைதிக்கு அது சுருதியே தவிர பங்கம் இல்லை. அதே மாதிரி குடியானத் தெருவில் 'மாக்கு மாக்' கென்று நெல்லோ மாவோ இடிக்கிற சத்தம் பூமி அதிர்கிற மாதிரிக் கேட்கிறது.

அதிலும் அமைதி கெடவில்லை. எதிரே ஆள் வராவிட்டாலும் இந்த நிழலில் போட்டிக்கு ஒரு நாய் வருகிறது. சாதாரண கிராமத்து நாட்டு நாய்தான். ஊர் வழக்கப்படி அதைச் சொன்னால் இப்போதெல்லாம் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். 'பறை, பள்ளூ' என்கிற வார்த்தைகள் மனசால் கூடத் தீண்டப்படாததாக மாறிவிட்ட பிறகு நாயைக்கூட அப்படிப் பட்டம் கட்டி அழைக்க முடிவதில்லை. ஆனால் இது சரியான ஹரிஜனப் பகுதி நாய்தான். நிழலை மறித்துக்கொண்டு அது நிற்கிறது. அது நிச்சயம் வழிவிட்டு விலகாது. விலகப் போவதில்லை என்கிற தீர்மானம் அதன் திடீரென உயர்ந்த காதுகளிலும் 'உம்'மென்று வயிற்றுக்குள் அடங்கி ஒலிக்கும் பொருமலிலும் தெரிகிறது. காரணம், நடுவில் இலை கிடப்பதுதான்.

அப்போதுதான் நினைத்தார் வேதகிரி முதலியார்: பொறப்படும் போதே அந்தக் கெழம் - அம்மாதான் - சொல்லிச்சு, 'குடையை எடுத்துக்கிட்டுப் போடா, வெயில் கொளுத்துது'ன்னு...

பட்டணத்திலிருந்து கிராமத்துக்கு வந்திருக்கும் இந்த மூன்று மாத காலமாக வேதகிரி முதலியார் வெளியே போவதற்குப் புறப்படுகிற போதெல்லாம் அவரது தாயார் செல்லத்தம்மாள் குடை எடுத்துச் செல்லுமாறும் வெயிலின் கொடுமை குறித்தும் ஒரு பாட்டுப் பாடாமலிருப்பதே இல்லை. சில சமயங்களில் அவளே கொண்டு வந்து அவரிடம் கொடுப்பாள். இருப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்பு திருக்கோவிலூருக்கு திருவிழாவுக்குப் போனபோது ஆறு ரூபாய்க்குத் தான் அந்தக் குடையை வாங்கினதையும், அதற்குப் பிறகு ஐந்து வருஷத்துக்கு முன்னால் ஒரு கம்பியும் புதிசாக மேலே வெள்ளைத் துணியும் போட்டுத் தைப்பதற்குத் தான் மூணு ரூபாய் செலவழித்ததையும் குறைந்தது ஒரு பத்துத் தடவையாவது இதுவரை சொல்லி இருப்பாள்.

சரி, நாய்க்குப் பயந்து எத்தனை நாழி இப்படியே நிற்பது? ஒன்று இவர் வெயிலைப் பொருட்படுத்தாமல் ஒதுங்கிப் போக வேண்டும், அல்லது அதை விரட்டி விட்டு இவர் தன் வழியே தொடர்ந்து நடக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் இவர் நின்றிருந்தால் அதுவும் நின்றிருக்குமா என்ன? அதுவோ நாய், அதுவும் காய்ந்து வரண்ட சேரி நாய். எதிரே இலை, இவர் விரட்டமாட்டார், தயங்குகிறார், பயப்படுகிறார் - என்று தெரிந்ததும் அது இவரை விரட்டுகிற தோரணையில் கொஞ்சம் குரலெடுத்து லேசாகப் பற்களை வெளிக்காட்டி 'உர்'ரென்கிறது.

வேதகிரி முதலியாருக்கு நிஜமாகவே உதறல். மிகுந்த மரியாதையோடு பத்து அடி நிழலிருந்து விலகி வீதியின் நடுவே வெயிலில் வந்து அரைவட்டமாக ஒதுங்கி நாயைக் கடந்து மீண்டும் நிழலில் ஏறி நடந்தார். தான் நாய்க்குப் பயந்து இப்படி வந்ததை யாரும் பார்த்திருப்பார்களோ என்று திரும்பிப் பார்த்தார். ம்ஹீம் யாருமில்லை. அந்த நாய்கூடப் பார்க்கவில்லை. பார்த்தால் என்ன? 'பட்டணத்துக்காரன் நாயைக் கண்டு பயப்படறான்' என்று பரிகாசம் பண்ணுவார்களே என்கிற பயம் வேதகிரி முதலியாருக்கு.

அதிலும் அந்த சுப்பராம ஐயர் இருக்கிறாரே, சமயத்தில் அவர் பண்ணுகிற பரிகாசத்தில் முதலியாருக்குக் கோபம் கூட வந்துவிடுகிறது. கோபத்தைக் காட்டிக் கொண்டால் இன்னும் மானக்கேடாகப் போகும். அவரோடு சேர்ந்து கொண்டு முதலியாரின் தாயாரும் சிரிக்கிறாள்.

யோசித்துப் பார்த்தால் கிராமத்து மனிதர்கள் பார்த்துச் சிரிக்கிற மாதிரிதான் இருக்கிறது பட்டணத்துப் பழக்கங்கள் என்று முதலியாரின் மனசுக்குப் புரிகிறது. இருந்தாலும், பழக்கம் எளிதில் போகிறதா?

கிராமத்துக்கு வந்து இந்த மூன்று மாதமாக முதலியார் சட்டையே போடவில்லை. அவருடைய 'புஷ்' ஷர்ட்டுகளூம், ஸ்லாக்குகளூம் கிராமத்துப் பெரிய மனிதர்கள் - கொஞ்சம் மரியாதையை எதிர்பார்க்கிற வயதுடையவர்கள் - போடுகிற பாஷனாக இல்லை. அதுமட்டுமில்லாமல் ஷர்ட் போட வேண்டிய அவசியமும் அவருக்கு இங்கே நேரவில்லை.

காலையில் எழுந்து குளத்திலோ, கிணற்றடியிலோ குளிக்கிற போது, இவர் பிரஷால் பல் விளக்குவதையேப் பக்கத்து வீட்டு வேலியோரமாய் நின்று குழந்தைகள் வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த ஒரு பழக்கத்தை மட்டும் இவரால் விட முடியவில்லை. ஒருநாள் பல்பொடி போட்டு விரலால் தேய்த்து ஏற்பட்ட கொப்புளம் ஆறித் தோல் உறிந்த வடு இப்போதும் தெரிகிறது. வெட்கக்கேட்டை எங்கே போய்ச் சொல்வது?

வந்த நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் பட்டணத்திலிருந்து அவர் வருகையைக் கோரி வரும் தனது மகனின் கடிதத்துக்காகத்தான் தினசரி வீட்டிலிருந்து ஒரு மைல் தூரத்தில் கிராமத்துக்கு வடக்கே உள்ள டிரங்க்ரோடு வரை நடந்து வந்து காத்திருக்கிறார் முதலியார். அங்கே தான் பஸ் வரும். ஒரு டீக்கடை இருக்கிறது. பெரிய திண்ணை. பஸ்ஸில் தபாலும் பத்திரிகையும் வரும். நாள்தோறும் முதலியாருக்கு ஆங்கிலத் தினசரியும் மகனிடமிருந்து ஒரு கடிதமும் வரும்.

அவருக்கு தினசரி கடிதம் வருவதை டீக்கடைச் சாமியாரும், தபால் ரங்கசாமியும் கேலியாகப் புகழ்வார்கள். நல்லவேளை, கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்படுவதால் இவர் இங்கே வந்து சிக்கிக் கொண்டிருப்பதற்கான ரகசியம் இன்றுவரை அவர்கள் அறியாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் இன்னொருவருக்கு வருகிற கடிதமாயிற்றே அதை நாம் படிக்கலாகாது, 'என்ன எழுதியிருக்கிறது கடிதத்தில்?' என்று அநாவசியமாக துளைக்கக் கூடாது என்கிற 'பட்டணத்து மிதப்பு' எல்லாம் இவர்களுக்குத் தெரியாது.

ஒவ்வொரு நாளும் ஏதாவது கற்பனையான சமாசாரங்களைக் கடிதத்திலிருந்து 'மொழி பெயர்த்து' அவர்களை ஏமாற்றுவதற்குள் முதலியாருக்குப் போதும் போதும் என்றாகிவிடும்.

அவரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். 'ஒண்ணும் முக்கியமான சமாசாரம் இல்லீங்க. நான் வரும்போது பையன்கிட்டே சொல்லிட்டு வந்தேன், தினம் எனக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டுக்கிட்டு இருன்னு. அதான் வேற ஒண்ணும் இல்லீங்க."

ஆனால், அவர்கள் இவரை அவ்வளவு சுளுவில் விடுவதில்லை. "இருக்கட்டும் முதலியாரே - முக்கியமான விஷயமா இருந்துதான் தெரிஞ்சி நாங்க என்ன செய்யப் போகிறோம். என்ன தான் எழுதி இருக்குதுன்னு சொல்லுங்க."

அதிலும் டீக்கடைச் சாமியார் இருக்கிறாரே - அவர் தான் மட்டுமில்லாமல் போகிற வருகிற ஆட்களையெல்லாம் கூப்பிட்டுக் கூட்டமும் சேர்த்துக் கொள்ளுவார். சாமியார் தஞ்சாவூர்ப் பக்கம். அவர் பேசுவதே பரிகாசம் போல் இருக்கும். "ஏலே, நின்னு கேட்டுட்டுப் போலே... பட்டணத்துச் சமாசாரம்... நீங்க படிங்க மொதலியாரே... அவுங்க அப்படித்தான்... பேசிக்கிறதே இங்கிலீசுதான்... ஏங்க - தம்பி பி.ஏ. வா? எம்.ஏ. வா?"

அப்போது மட்டும் வேதகிரி முதலியாருக்கு ஏகப் பெருமையா இருக்கும்.

"பி.ஏ.!" என்பார்.

சாமியார் குரலை அடக்கிக் கேட்பார்:

"மொதலியாரே எது பெரிசு? எம்.ஏ. வா? பி.ஏ. வா?"

"பெரிசு என்ன, பெரிசு! எல்லாம் ஒரு கழுதைதான். வேலை கெடச்சா மதிப்பு, இந்த படிப்புக்கு... நான் அந்தக் காலத்து இன்டர்தான். இப்ப பி.ஏ. படிச்சுட்டு எத்தினி பேர் நம்மகிட்ட கிளார்க்காயிருக்கான்! அதுகூடக் கிடைக்காமல் பாவம், எத்தினி புள்ளைங்க கண்டக்டர் வேலை செய்யுதுங்க..." என்பார் முதலியார்.

"மொதலியாருக்குப் பட்டணத்திலே என்னாங்க உத்தியோகம்?"

"ஒரு வெள்ளைக்கார கம்பெனியிலே மானேஜர் உத்தியோகம்."

"இப்பவும் வெள்ளைக்காரங்க இருக்கிறாங்களா?"

"கம்பெனிங்க இருக்குது."

"என்னா சம்பளங்க?"

இதெல்லாம் கேட்பது நாகரிகக் குறைச்சல் என்று அவர்களுக்குத் தெரியாது. டீக்கடைச் சாமியாருக்குக் கொஞ்சம்கூடத் தெரியாது.

"எல்லாம் சேத்து ஆயிரத்து இருநூறு ரூபா..."

"அடி சக்கைன்னானாம்" என்று சாமியார் நாக்கைக் கடித்துத் துள்ளிக் குதிப்பார்.

அதன் பிறகு, முதலியார் இல்லாத சமயத்திலும் மற்றவர்களிடமும் பெருமையாகச் சொல்லுவார்: "இங்க வந்து நம்ம கடைத் திண்ணையிலே உக்காந்து டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிக்கிட்டு இருந்தாரே, மொதலியாரு... சாதாரண ஆளுன்னு நெனச்சிக்காதே; பட்டணத்திலே பெரிய ஆபிசரு. பங்களா என்னா, காரு என்னா... பையன்களும் அதே மாதிரிப் பெரிய பெரிய படிப்புப் படிச்சவங்க. வீடே வெள்ளைக்காரங்க பாஷன்லேதான். சும்மா - சொந்த கிராமங்கிற பாசம் - இப்படி வந்து சொக்காக்கூட போட்டுக்காம நம்ம டீக்கடையிலே உக்காந்து இருக்கறதிலே ஒரு சந்தோஷம் மொதலியாருக்கு. அவருக்கு எம்மாம் சம்பளம் தெரியுமா? சொல்லேன் பாப்பம்" என்று தாடியை நிமிண்டிக் கொள்வார்.

"ஐந்நூறு ரூபா இருக்குங்குளா - சாமி?" என்று பெருந்தொகையாகக் கேட்பான் ஒருவன்.

சாமியார் 'ஓ'வென்று சிரித்து அவனை முட்டாளாக்குவார்! "அடபோடா, அறிவு கெட்ட இவனே... ஆயிரம் ரூபாடா... ஆயிரம் ரூபா மாசம் மாசம் - கால் காணி நெலம் வாங்கலாம். என்னலே, வாயைப் பொளக்கறே; ஆயிர ரூபா பார்த்திருக்கியா, நீ? கலப்பெதான் பாத்திருப்பே. கலப்பே!" என்று சம்பந்தமில்லாமல் யாரையாவது சாக்கு வைத்துத் தன்னைத்தானே திட்டிக் கொள்வார் சாமியார்.

"உத்தியோகத்துக்கும் சம்பாதனைக்கும்தான் சாமியார் கிட்டேகூட மதிப்புபோல இருக்கு" என்பார் முதலியார்.

"பின்ன என்னங்க? இந்த சாமியார் பொழப்பு ஒரு பொழப்பா? உத்தியோகம் சம்பாதனை எதுவுமில்லாததனாலேதான் ஊருக்குக் கெவுருவமா இந்தத் தாடி, நம்ம மூஞ்சியெக் காப்பாத்துது. தாடி வெச்சவனுக்கு உங்க பட்டணக் கரையிலே பிச்சைக்காரன்னு பேரு. இங்கே சாமியாருன்னு பேரு. வவுறுன்னு ஒண்ணு இருக்குதுங்குளே. சாமியார்னு பேரு வெச்சிக்கினு காட்டுக்கா பூட்டோ ம்? நமக்கும் அஸ்கா போட்ட டீ வேணும்னுதே! டீ சாப்பிடுங்க" என்று பேசிக்கொண்டே கண்ணாடி கிளாஸ்களில் டீயை ஊற்றி எல்லோருக்கும் தந்து - முதலியாருக்கு மட்டும் 'தகதக'வென்று விளக்கிய வட்டா செட்டில் டீ கொண்டு வந்து வைப்பார்.

"ஆமா, மொதலியாரே, ஆயிரமும் இரண்டாயிரமுமா சம்பாதிச்சுக்கிட்டு மகன் நீங்க இருக்கிறீங்க... வயசான காலத்திலே உங்கள் தாயார் மட்டும் ஏன் இங்கே கெடந்து அவதிப்படணும்? இப்ப பாத்துக்கற சுப்பராம ஐயரு - அப்ப மட்டும் வெவசாயத்தைப் பாத்துக்க மாட்டாரா?" - இதுமாதிரி சில நாட்களுக்கு முன் சாமியார் ஏதோ சொல்லும் போது பக்கத்தில் நின்றிருந்த சுப்பராம ஐயர் திடீர் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

"ஓய் சாமியாரே! நான் மட்டும் எவ்வளவு நாளைக்கு ஐயா காட்டையும் மேட்டையும் கட்டிண்டு நிப்பேன். என் பையன், அவளையும் அழைச்சுண்டு டில்லிக்கே வந்துடச் சொல்லி ஒவ்வொரு தடவையும் எழுதறான். நம்ப கோரை வாய்க்கால் கரை நஞ்சைக்கும் - நல்லாந்தோப்புக்கும் யாராவது நல்ல விலை குடுத்தா நாளை ரயிலுக்கே ஏறிடுவேன்... நீர்தான் பாருமே - இருபதினாயிர ரூபா - ஜாடா எல்லா அய்ட்டத்தையும் இப்பவே குடுத்துடறேன்."

"இந்தாங்க ஐயரே, யாரும் ஆளு இல்லேன்னு நீங்க பாட்டுக்குப் பேசிக்கிட்டே போறீங்களே... நானே இருபதினாயிரத்துக்கு உங்க சொத்துக்களையும் வாங்கிட்டுப் பேசாம கிராமத்திலேயே 'டிக்கானா' போட்டாலும் போட்டுடுவேன்..." என்று சொல்லி வைத்தார் முதலியார்.

"நான் இப்பவே ரெடி! சாமியாரே நீர் சாட்சி" என்று கையடித்துச் சொன்னார் சுப்புராம ஐயர்.

"என்னாங்க மொதலியாரே... எதாவது நடக்கிற காரியமா பேசுங்க. ஐயரு வேற யாருக்காவது தன் நிலத்தைக் குடுத்துட்டுப் போனாவே, உங்க நிலத்தெப் பாத்துக்க ஆள் வேணும்... இந்த லெச்சணத்திலே அவுரோட நிலத்தெயும் நீங்களே வாங்கிக்கினு ஆயிரரூபா உத்தியோகத்தையும் உட்டுட்டு இந்தக் கிராமத்திலே நெரந்தரமா நீங்க இருக்கப் போறீங்களாக்கும்?" என்று சிரித்தார் சாமியார்.

தான் கிராமத்துக்கு வந்து இந்த மூன்று மாதமாய் அடைந்து கிடக்கிற ரகசியம் தெரியாத சாமியாரை நினைத்து முதலியார் சிரித்துக் கொண்டார்.

விஷயத்தை சொன்னால் சாமியார் மூச்சடைத்துச் செத்துப் போகமாட்டாரோ?

வேதகிரி முதலியாருக்கு வேலை போய்விட்டது. இப்போது உத்தியோகம் இல்லை. ஆறு மாசமாயிற்று. மேலிடத்தில் என்னமோ காரணம் கூறித் திடீரென இவருக்குச் சேரவேண்டிய தொகை இருபதினாயிரம் ரூபாயைக் கையிலே கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

முதலில் இந்தச் செய்தியை முதலியார் தன் மனைவியின் காதில் மட்டும் தான் போட்டு வைத்தார். அவள் அப்படியே இடிந்து போனாள். பிறகுதான் முதலியாருக்கு அவள் சமாதானம் கூறினாள்.

"இப்ப என்ன கெட்டுப் போச்சு! விடுங்க. இதுவே பத்து வருஷத்துக்கு முன்னேன்னா ரொம்ப கஷ்டப்பட்டுப் போயிருப்போம். இப்பதான் பெரியவனும் சம்பாதிக்கிறான். பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணியாச்சு. சின்னவங்க ரெண்டு பேருக்கும் இந்த வருஷம் காலேஜ் படிப்பைப் பல்லைக் கடிச்சிக்கிட்டு முடிச்சுட்டோ ம்னா நம்ப கவலை விட்டது..." என்று எவ்வளவோ கூறினாள் அவர் மனைவி மங்களம்.

"எத்தனை பிள்ளைகள் சம்பாதிச்சாலும் அவனவன் சம்பாதிக்கிற வரைக்கும் தான் அவனுக்கும் அவன் பெண்டாட்டிக்கும் மதிப்பு இருக்கும்" என்று அவர் மனமொடிந்து போனார்.

தனக்கு வேலை போய்விட்ட செய்தியையும் அதனால் ஏற்பட்ட வருத்தத்தையும் அவர் மனைவியிடம் மட்டும் ஒரு ரகசியம் போல் சொல்லி வைத்திருந்தார்.

ஆனாலும் மறுநாளிலிருந்து முதலியாரைப் போனிலும் நேரிலும் துக்கம் விசாரிக்கும் நண்பர்களின் தொல்லையால் அவரது பிள்ளைகளூக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. சில பேர் வீட்டுக்கு வந்து - ஏதோ வேதகிரி முதலியாரை வேலை நீக்கம் செய்த அந்த முதலாளிமார்களே இந்த வீட்டில் இருப்பதாக பாவித்துக் கொண்டு, 'ஓ' வென்று கூக்குரலிட்டனர்.

"இது என்னங்க நியாயம்! கேள்வி முறை கிடையாதா? இதை நீங்க சும்மா விடக்கூடாது, இது சட்டவிரோதமானது - நோட்டீஸ் விடுங்க" என்றெல்லாம் யோசனை கூறினார்கள்.

"ஆமாம்பா - அதெச் செய்யலாம் - சும்மா விடக் கூடாது" என்று முதலியாரின் பெரிய மகனும் அப்பாவுக்கு அனுசரணையாகப் பேசினான்.

வீட்டில் எல்லோருமே அவரவர்கள் சந்தோஷங்களைக் கூட அப்பாவுக்கு வேலை இல்லை என்ற காரணத்தை நினைத்து விலக்கி வைத்தனர்.

வீட்டில் நல்ல சாப்பாடுகூட சமைப்பதற்கு மங்களத்துக்கு நாட்டமில்லை: "என்ன வேண்டிக் கிடக்கு? அவருக்கோ வேலை இல்லை!"

ரேடியோவைச் சின்னவன் திருப்பினால், பெரியவன் வந்து நிறுத்திவிட்டு ரகசியமாய்ச் சொல்லுவான்: "ஸ்!... போடா அப்பா பாவம், வேலை போச்சேன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருக்கிறார். மியூசிக் என்ன மியூசிக்?"

உள்ளூரிலேயே இருக்கிற பெண்ணை வீட்டுக்கு அழைப்பதற்குக்கூட 'அப்பாவுக்கு வேலை இல்லை' என்கிற காரணம் தடுத்துவிட்டது.

நூறு ரூபாய் சம்பளத்துக்குப் பத்து வருஷமாய் இவர்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்த டிரைவர் லோகநாதனையும் நிறுத்தியாகி விட்டது.

நோயில் படுத்து விட்டவனை வந்து பார்த்துச் செல்வது மாதிரி தினசரி மாலை நேரங்களில் ஆபீஸ் ஊழியர்கள் கோஷ்டி கோஷ்டியாக வந்து பார்க்கலாயினர்.

வீட்டில் சும்மா இருக்க முடியாமலும், தேக ஆரோக்கியம் கருதியும் அவர் தோட்ட வேலை செய்ய ஆரம்பித்தார். இரண்டு நாட்களில் தோட்டக்காரனும் நின்று விட்டான். காம்பவுண்டுக்குள் காய்கறிகளும், பூச்செடிகளும் காய்த்துப் பூக்கிற சீஸன் ஆனபடியால் அக்கம்பக்கத்திலுள்ள பெண்கள் வழக்கமாக எட்டணா பத்தணாவுக்குத் தோட்டக்காரனிடம் பேரம் பேசி பூ வாங்கிச் செல்கிற மாதிரி இப்போதும் வந்தனர். அவர்களிடம் தமாஷாகவும் பொழுது போக்காகவும் பேரம் பேசி பூ விற்க ஆரம்பித்த முதலியாரை தாங்கொணா வறுமையின் கொடுமையாக பார்ப்பவர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர். அவர் மனைவி 'தலை குனிவாகப் போகிறது. உங்களுக்கு என்ன இப்படி புத்தி?" என்று ஒரு நாள் அழுதாள். 'அப்பாவுக்கு வேலை போனதிலிருந்து தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது, புத்தியே கெட்டுப் போய்விட்டது' என்று பிள்ளைகள் தலையிலடித்துக் கொண்டு பின்னால் வருத்தமாகவும் கேலியாகவும் பேச ஆரம்பித்தனர்.

வேதகிரி முதலியாருக்கு இந்தச் சூழ்நிலையில்தான் பயித்தியம் பிடித்துவிடும்போல் வேதனைகள் பிடுங்கின.

கடைசியில்தான் முடிவு செய்தார்: "பேசாமல் கிராமத்துக்குப் போய் அம்மாவோடு கொஞ்சநாள் இருந்து விட்டு வருவது என்று. அதற்குள் ஏதாவது செய்து அப்பாவுக்கு அந்த வேலையையே மீண்டும் வாங்கித் தருவதோ, அல்லது வேறு வேலை பார்ப்பதோ தன் பொறுப்பு என்று பெரிய மகன் வாக்குறுதி தந்தான். அவர் கிராமத்துக்கு வந்து சேர்ந்தார். வருஷத்துக்கு ஒருமுறை எப்போதாவது காரில் குடும்ப சகிதமாகக் காலையில் வந்து தாயாரைப் பார்த்து மாலையில் போனதைத் தவிர சென்னைக்குப் போன இந்த முப்பது ஆண்டுகளில் ஒரு தடவை கூட இங்கு வந்து இராத் தங்கியதில்லை அவர். அதற்குள்ளாக அவர் மனைவி மங்களம் "கிராமம் 'போர'டிக்கிறது" என்று முணுமுணுக்க ஆரம்பித்து விடுவாள்.

செல்லத்தம்மாள் கிராமத்தின் எல்லையைத் தாண்டி காலடி வைப்பதே அபூர்வம்.

பட்டணத்துக்கு வந்து ஒரு பத்து நாளைக்கி இருக்க அழைத்தால் கூட அவள் சம்மதிக்க மாட்டாள். இந்த எண்பது வயதில் ஒற்றைத் தனி மனுஷியாக அந்த வீட்டில் வாழ்ந்து எல்லாக் காரியங்களையும் நிர்வகித்து வருகிற அம்மாவை, உடன் இருந்து பார்க்கப் பார்க்க வேதகிரிக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவள் பொழுது விடியுமுன் எழுந்திருக்கிறாள். பச்சைத் தண்ணீரில் குளிக்கிறாள். பழையதும் தயிரும் சாப்பிடுகிறாள். கண்ணாடியில்லாமல் அரிசியில் கல் பொறுக்குகிறாள். நாள் முழுவதும் வேலை செய்கிறாள். அவளைப் பார்த்துத் தன் மனைவியையும் நினைப்பார். அவளுக்கு ஆஸ்த்துமா. பச்சைத் தண்ணீரை நினைத்தாலே உதறல். உட்கார்ந்த இடத்தில் காய்கறி நறுக்கிச் சமையல்காரிக்குக் கொடுப்பதற்குள் இடுப்பு போய்விடுகிறதாம். மாதத்துக்கு இரண்டு தடவை டாக்டர் வர வேண்டும்; மூன்று வேளையும் மருந்து, டானிக், கண்ணாடி இல்லாமல் பூசணிக்காய் கூடத் தெரியாது. மன நிம்மதிக்காகச் சினிமா, சங்கீதம் எல்லாம் வேண்டும். தாயோடு மனைவியை ஒத்திட்டுப் பார்த்தால், தன் மனைவிக்குப் பிறகுகூட இவள் இருப்பாள் போல் தோன்றுகிறது அவருக்கு.

தனக்கு வேலை போய்விட்ட சமாசாரத்தை அவர் தாயிடம் கூடச் சொல்லவில்லை. சும்மா ரெண்டு மாசம் லீவு போட்டு விட்டுக் கிராமத்தில் தங்க வேண்டும் என்கிற விருப்பத்தில் வந்திருப்பதாகத்தான் கூறினார்... அதைக் கேட்டுக் கிழவிக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் மகன் வந்து தன்னோடு தங்கியிருக்கிற செய்தியை ஊர் முழுதும் தமுக்கடித்து விட்டாள். டவுனுக்குப் போய் காப்பிக் கொட்டை வாங்கி வரச் சொல்லித் தினசரி மகனுக்காகக் காப்பி வேறு போடுகிறாள். மத்தியானத்தில் வகை வகையான டிபன் செய்கிறாள்.

வேதகிரி முதலியாருக்குத்தான் பொழுதே போகவில்லை. காலையில் காப்பி சாப்பிட்டபின் தபால் பார்க்கிற சாக்கில் புறப்பட்டுச் சாமியார் டீக்கடைக்கு வந்து மத்தியானம் வரைக்கும் பேப்பர் படித்துக் கொண்டு இருப்பார். மத்தியானம் சாப்பாட்டுக்குப் பின் தூங்கி எழுந்து கடிதம் எழுதுவார். சாயங்காலம் சுப்பராம ஐயருடன் தோப்பு துரவு சுற்றுவார். மாலையில் தாயாருடன் உட்கார்ந்து கொண்டு, பழைய கதைகளைப் பேசுவார். தப்பித் தவறிக் கூட வேலை போய்விட்ட சமாச்சாரம் வாயில் வந்துவிடாதபடி ஜாக்கிரதையாக இருப்பார்.

அவர் வந்திருக்கும் இந்த சீஸனில் கிராமத்திலேயே வேலை இல்லை. அடுத்த மாதம் தான் உழவு தொடங்கும். அதற்குப் பிறகு சில மாதங்கள் நல்ல வேலை இருக்குமாம். இப்போதும் கூடச் சில நாட்களில் தென்னந்தோப்பில் காய் பறிப்பும், வாழைத்தார் விலை பேசலும் - வேலைகள் நடக்கிறது. முதலியாருக்கு அதுபற்றிய விவரங்கள் தெரியாததால் சுப்பராம ஐயருடன் 'அப்பரண்டிஸ்' மாதிரி வந்து நின்று கவனிப்பார்.

முதலியாருக்கு சில சமயங்களில் வாழ்க்கை ரொம்ப நிறைவாக இருக்கிறது. தன் வீட்டில் நிலத்தில் விளைந்த அரிசியும், தோட்டத்துக் காயைச் சாப்பிடுவதும், சுத்தமான காற்றைச் சுவாசிப்பதும் சுதந்திரமாக இருக்கிறது. இந்த நிறைவில் தான் தன் தாய் கவலையற்று எண்பது வருஷச் சுமையோடு இவ்வளவு நிறைவுடன் இங்கே இருக்கிறாள் என்றும் தோன்றுகிறது.

முப்பது வருஷத்தில் ஊர் கொஞ்சம் மாறி இருப்பது உண்மைதான். 'எலெக்ட்ரிஸிடி' வந்திருக்கிறது. சில வீடுகளில் ரேடியோ பாடுகிறது. பம்ப்செட் தண்ணீர் இறைக்கிறது. பண்ணை வேலை செய்கிற சில பேர் சட்டை போட்டுக்கொண்டு கண்ணில் தென்படுகிறார்கள். ஊரில் ஒரு ஹைஸ்கூல் ஏற்பட்டு இருக்கிறது. பெண் குழந்தைகள் அதிகம் படிக்கின்றன. பட்டணத்து நாகரிகம் சில வாத்திமார் உருவில் பஸ்ஸில் வந்து இறங்கி ஏறிச் செல்கிறது.

ஆனாலும் உலகம் ஓடுகிற வேகத்தில் அதன் கையைப் பிடித்துக் கொள்ளத் தவறி, அநாதையாய் நின்றுவிட்ட மாதிரிதான் இந்தக் கிராமம் இன்னமும் இருக்கிறது.

அதோ தபால் வருகிற பஸ் வந்துவிட்டது. வேதகிரி முதலியார் கொஞ்சம் நடையை எட்டிப் போட்டு தார் ரோட்டில் ஏறினார். செருப்பில் மண்டியிருந்த புழுதியைப் போக்குவதற்காகப் பாதங்களை 'தட் தட்'டென்று இரண்டு முறை தார் ரோட்டில் மிதித்தார். புழுதி பறந்தது.

"முதலியார் ஐயா, நமஸ்காரம்" என்று டீக்கடைச் சாமியாரின் குரல் ஒலித்தது.

ரங்கசாமி தபால்களைச் சரிபார்த்து அடுக்கிக் கொண்டே திரும்பி "ஐயா வாங்க" என்று வரவேற்றான்.

பஸ், பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு போயிற்று.

பஸ்ஸில் இருந்து இறங்கியவர்கள் அஞ்சாறு பேர். அதில் மூணு பேர் - இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமான ஹைஸ்கூல் டீச்சர்கள். ஊருக்குள் போகிற மண்சாலையில் இறங்கி நடந்தனர்.

ரங்கசாமி தந்த கடிதத்தையும் பத்திரிகையையும் வாங்கி முதலில் கடிதத்தைப் பிரித்தார் முதலியார்.

"பிள்ளை இன்னிக்கு என்ன எழுதியிருக்கார் - படியுங்க" என்று பாய்லரிலிருந்து டிக்காஷனுக்காக கொதிக்கிற தண்ணீரைத் திறந்து பிடித்த சாமியார் -

"இருங்க. அதோ ஐயர் வராரு. வாங்க ஐயிரே - நமஸ்காரம்" என்று மீண்டும் கூவினார்.

முதலியார் கடிதத்தை ஒருமுறை மனசுக்குள் தாம் மட்டும் படித்துக் கொண்டார். அப்போதுதானே கற்பனை மொழி பெயர்ப்புக்கு வசதி.

கடிதத்தைப் படிக்கும்போது முதலியாரின் முகத்தில் ஏற்படுகிற மாற்றத்தை மூவரும் கவனித்தனர்.

"என்னமோ முக்கிய சமாசாரம்போல எனக்குத் தோணுது" என்றார் சாமியார்.

"ஒண்ணும் முக்கியம் இல்லே... நாளைக்கி எல்லோருமாய் பொறப்பட்டுக் காரிலேயே வராங்களாம்... உடனே நானும் அவங்களோட பொறப்படணுமாம். வேலை கெடச்சுட்டுதாம்." என்று உளறிய பின், அதற்காக நாக்கைக் கடிந்து கொண்டார் முதலியார்.

"வேலை கெடச்சிருக்கா? யாருக்கு?" என்று பிடித்துக் கொண்டார் சாமியார். முதலியார் பாவம், ஒரு விநாடி திக்குமுக்காடிப் போனார். கடைசியில் ஒருவாறாகச் சமாளித்தார்.

"நம்ப கடைசிப் பயல் - ஒரு இடத்தில் ஏதோ மனு எழுதிப் போட்டான். அது கெடச்சிருக்கும் போல இருக்கு."

"அப்படியா! சந்தோஷம் - அந்தத் தம்பியும் வருதுங்களா?" என்றார் சாமியார்.

"அவன் எப்படிங்காணும் வருவான்? அவனுக்குத்தான் வேலை கெடைச்சிருக்கு இல்லே" என்று அகாரணமாய் அவர்மீது எரிந்து விழுந்தார் சுப்பராம ஐயர்.

"மொதலியாரே, வாரும் போகலாம். போயி, பெரியம்மா கிட்டே, விஷயத்தைச் சொன்னாத்தான் நாளைக்கே பொறப்படறதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க" என்று முதலியாரை இழுத்தார் ஐயர்.

"அவங்க என்ன ஏற்பாடு பண்ண இருக்கு?" என்று தயங்கினார் முதலியார்.

"உமக்கு ஒண்ணும் தெரியாது - சரியான பட்டணம் நீர்! - மூணு மாசம் வந்து தங்கி இருக்கீர். நாளைக்கு வீட்லே எல்லாரும் வரா. உங்களை எல்லாரையும் பெரியம்மா வெறுங் கையோட அனுப்பிச்சுடுவாளா? ரெண்டு முறுக்குப் பிழிஞ்சு குடுத்தனுப்புவா... இப்பவே போய்ச் சொன்னாதான் நனைச்சு வைப்பா. வாரும் வாரும்..."

"மொதலியார் ஐயா, இப்பவே சொல்லிட்டேன். பட்டணத்துக்குப் போயி எனக்கு ஏதாவது ஒரு பியூன் வேலை பார்த்துக் குடுங்கோ - தாடியெ எடுத்திட்டு ஓடி வந்துடறேன்" என்று சிரிப்பிடையே கூவிச் சொன்னார் சாமியார்.

          • டிடிடிடிடிடி*****டிடிடிடிடிடி*****

காலையிலே இருந்து வேதகிரி முதலியார் வீட்டின் முன் அந்தக் கறுப்புக் கார் நின்றிருந்தது. கால் சராயும் ஷர்ட்டும் அணிந்து கண்ணாடியுடன் நின்றிருக்கும் முதலியாரின் மூத்த மகனைத் தெருச் சிறுவர்கள் வேடிக்கையாகப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

உள்ளே கூடத்தில் மாமியாருக்காக வாங்கி வந்திருக்கும் புடவையையும் ஒரு கம்பளிப் போர்வையையும் எடுத்துப் பிரித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறாள் முதலியாரின் மனைவி மங்களம்.

"இரு, இதோ வந்துட்டேன். உலை கொதிச்சிருக்கும்" என்று கிழவி எழுந்தபோது மங்களம் இடைமறிக்கிறாள்.

"இன்னிக்கு ஒரு நாள் நீங்க இருங்க, நான் பாத்துக்கறேன்."

கிழவி சிரிக்கிறாள்: "ஐய, என் அருமை மருமகளே - போதும் போதும்! 'இன்னிக்கு ஒரு நாளு'ன்னு ஜாக்கிரதையாச் சொல்லிக்கறியே! ஒரு நாளைக்கு நீ செய்தால் போதுமா? மீதி நாளைக்கு யார் செய்யறதாம்? நீயே இருந்து எப்பவும் பார்த்துக்கறதானா உன் அதிகாரத்தை நான் பறிக்கல்லே. ஒரு நாளுன்னா வேண்டாண்டி அம்மா! நான் பாத்துக்கறேன்..." என்று விளையாட்டாகவும் காரியமாகவும் சொல்லிக் கொண்டே எழுந்து போகிறாள் செல்லத்தம்மாள்.

"என்ன, அம்மா சொல்றமாதிரி இங்கேயே இருந்துடலாமா?" என்று கண்களைச் சிமிட்டியவாறு மங்களத்தைக் கேட்கிறார் வேதகிரி.

"ஐயோடி, என்னாலே ஆகாதம்மா" என்கிறாள் மங்களம்.

வேதகிரி விஷமமாய்ச் சிரித்துக் கொள்கிறார்.

அப்போது உள்ளே வந்த அவரது மகன் சொன்னான்:

"ரெண்டு மணி நேரத்துக்கு மேலே தொரைகிட்டே நான் விவாதம் பண்ணினேன். கொஞ்சத்திலே அவன் மசியல்லே அப்பா... என்னென்னமோ சொன்னான். ஒரு மாசத்துக்கு மேலே இழுத்தடிச்சான். ஆனா, எனக்குத் தெரியும், 'ஹி வில் ரீகன்ஸிடர்'னு"

வேதகிரி மெளனமாகப் பெருமூச்செறிந்தார்.

அப்போது சுப்பராம ஐயர் வந்தார். "நமஸ்காரம் அம்மா! செளக்கியமா?" என்று மங்களத்தம்மாளை விசாரித்தவாறே அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார். மங்களத்தம்மாள் எழுந்து நின்று கொண்டாள்.

"உடனே பொறப்படணும்னு எழுதி இருந்தேள். எப்பவோ வர்றவா ரெண்டு நாளு இருந்துட்டுப் போகப் படாதோ?"

"இல்லே, அப்பாவுக்கு வேலை இருக்கு" என்றான் பையன்.

"ஆமா, பட்டணத்திலே இருக்கிறவங்க எல்லாரும் வேலை இருக்கறவங்க. இங்கே கிராமத்திலே இருக்கறவங்க எல்லாம் சும்மா வேலையத்து இருக்கிறவங்க. என்ன ஐயரே அப்படித்தானே? அதனாலே தான் நீங்களும் போகப் போறீங்க, இல்லே?"

எல்லாரும் முதலியாரைப் பார்த்தனர். முதலியார் சொன்னார்:

"நான் இனிமே இங்கேதான் இருக்கப் போறேன். கண்டவன் காலிலேயும் விழற மாதிரி பல்லிளிச்சி நிக்கிற உத்யோகப் பெருமை போதும் - எனக்கு அது வேணாம். அந்த ஆயிரம் ரூபாய்க்கு இங்கே சம்பாதிக்கிற நூறு ரூபாய் சமம். ஐயரே, இன்னிக்கே ரூபாய் இருபதினாயிரம் தர்றேன்... உம்ம கோரை வாய்க்கால்கரை நஞ்சையையும் நல்லாந்தோப்பையும் என் பேருக்குக் கிரயம் பண்ணி வச்சிடும்... இனிமே எனக்கு இங்கே நிறைய வேலை இருக்கு."

"அது முதலியாரே..." என்று இழுத்தார் ஐயர்.

"அதெல்லாம் சொல்லப்படாது - சாமியார் சாட்சி" என்று முதலியார் சொல்லிக் கொண்டிருக்கும்போது, "அம்மா, நமஸ்காரம் - செளக்கியமா" என்று கேட்டவாறே படியேறிக் கொண்டிருந்தார் டீக்கடைச் சாமியார். அவர் கையில் ஒரு சீப்பு பேயன் பழம் இருந்தது.

"சாமியாரே, நீர் சாட்சி" என்று முதலியார் சொன்னதும், சாமியார் சிரித்தார். பிறகு முதலியாரே சொன்னார்:

"நிச்சயம் சுப்பராம ஐயர் வாக்குத் தவற மாட்டார். அவர் இன்னும் பட்டணவாசி ஆகலியே!"

இப்போதெல்லாம் டீக்கடைச் சாமியார் - ஆயிரம் ரூபாய் தருகிற உத்தியோகத்தையும் பெண்டாட்டி பிள்ளைகளையும் பட்டணவாசத்தையும் உதறிவிட்டுத் தாய்க்கு உதவியாக கிராம வாசத்தைத் தேர்ந்தெடுத்து, சட்டை கூட அணியாமல் டிராக்டர் வைத்து உழுது விவசாயம் பார்க்கிற வேதகிரி முதலியாரை 'டிராக்டர் சாமியார்' என்று அழைத்துச் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

முற்றும்