தஞ்சைச் சிறுகதைகள்/ஆறுமுகசாமியின் ஆடுகள்



சா.கந்தசாமி

ன்றைய மயிலாடுதுறை மண்பெருமை கொள்வது போல ‘சாயாவனம்’ என்ற நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு இடத்தை கைப்பற்றிக் கொண்டவர், சா. கந்தசாமி.

இலக்கிய சங்கம் தோற்றுவித்த இளைஞர்களில் சிலர்தான் திட்டமிட்டு மெளனியின் உத்தியைப் பின்பற்ற முனைந்தார்கள். அன்றுவரை சிறுகதை எழுத்தாளர்களிடையே அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாத மெளனி இவர்களுக்கு வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு முக்கிய அம்சமாகும். சா. கந்தசாமி, ந. முத்துசாமி ஆகியோர் இந்த வழியில் வந்தவர்கள். முக்கியமாக சா. கந்தசாமி எழுதிய ‘சாயாவனம் என்ற நாவல் இலக்கிய ரசிகர்களின் கவனத்தைப் பெற்றபின் இவருடைய சிறுகதைகளும் விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றன. சிலவற்றில் வடிவ உணர்வு ஓரளவு தெளிவாகத் தெரிந்தாலும் வித்தியாசமான கருப்பொருள்களை, பாலுணர்வு, மனோவிகாரம் போன்ற அம்சங்களைச் சற்று வெளிப்படையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சோதனை முயற்சி அதிகமாகப் புலப்படுகிறது...’ என்று சிட்டி-சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

‘சா. கந்தசாமியின் கதைகளும், நாவல்களும் அற்புதமாக அமைந்துவிட்டன என்று காணும்போது தமிழர்கள் எத்தனைதான் குப்பைப் பத்திரிக்கைகளுக்கு அடிமைப்பட்டிருந்தாலும் இலக்கிய ரீதியாக அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லவேண்டி இருக்கிறது’ என்றார், க.நா.ச.

‘ஆறுமுகசாமியின் ஆடுகள்’ என்ற கதை இப்படித் தொடங்குகிறது. “ஆறுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவி பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான்...” அவர் அனுபவம் தெறிக்கிற கதைகள் அமைவதை அவரே, “பூம்புகார் என் தாயார் வீடு. அந்தக் காலங்களில் சீர்காழி பூம்புகார் போன்ற இடங்களைச் சுற்றியிருக்கிறேன். எங்கம்மா கூட பூம்புகாருக்கு காவேரிக்கரையோரமா நடந்தே போகிற பழக்கம் உண்டு. அங்கு கண்ட இளமைக்கால நினைவுகள். தான் என் கதைகளில் வருகிறது.” இப்படியாப்பட்ட சா. கந்தசாமி இன்று அம்மண்ணில் நிலவும் சமூகத்தை பிரதிபலிக்க முடியாது போனது... இவருக்கும் இலக்கியத்திற்கும் இழப்பே...

ஆறுமுகசாமியின் ஆடுகள்

றுமுகசாமி புங்கமரத்துக் கிளையைத் தாவிப் பிடித்து வளைத்து ஒரு சின்ன கிளையை முறித்தான். ஆனால் கிளை முறியவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு கிளையை திருகி முறுக்கினான். முறுக்க முறுக்க கிளை மெதுவாக முறிந்து கையோடு வந்தது இடது கையால் தழைகளை உருவி போட்டுக்கொண்டு அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். ஆடுகள் வாய்க்கால் மேட்டிலிருந்து இறங்கி சின்னபண்ணையை நோக்கிச் சென்றன.

“தோ...தோ...” ஆறுமுகசாமி ஆடுகளைப் பார்த்துக் கத்தினான். அவன் குரல் சின்னபண்ணை தோட்டத்தை நோக்கிச்சென்ற ஆடுகளுக்குக் கேட்டதுபோலும். இரண்டு பெரிய ஆடுகள் தலையைத் திருப்பிப் பார்த்தன.

அவன் மறுபடியும், “தோ...தோ...” என்று கத்தினான். ஆனால் தலையைத் தூக்கிப் பார்த்த இரண்டு ஆடுகளும் மற்ற ஆடுகளோடு சேர்ந்து கொண்டு சின்ன பண்ணை தோட்டத்தையொட்டி சென்றன.

அவன் கால்சட்டையை மேலே தூக்கிவிட்டுக் கொண்டு முன்னே ஓடினான். நேற்று கருப்பு ஆடு தன் இரண்டு வெள்ளைக்குட்டிகளோடு சின்னபண்ணை கத்தரி தோட்டத்திற்குள் புகுந்துவிட்டது. சின்னபண்ணை காவல் முனியாண்டித்தேவர் ஒரு வெள்ளை குட்டியைப் பிடித்துக் கட்டிவிட்டார். கருப்பு ஆடு கத்திக் கொண்டு மிரண்டு ஓடிவந்தது. அதன் பின்னால் ஒரு வெள்ளைக்குட்டி நொண்டிக் கொண்டு வந்தது.

புளியமரத்தடியில் கால்களை நீட்டி உட்கார்ந்து சரித்திரம் படித்துக் கொண்டிருந்த அவன் திரும்பிப் பார்த்தான். கருப்பாடு சின்னபண்ணைத் தோட்டத்தைப் பார்த்துப் பார்த்துக் கத்தியது. அவன் எழுந்து தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டுக்கொண்டு வாய்க்கால் ஓரமாக நடந்தான். காலில் ஒரு நெருஞ்சிமுள் குத்தியது. குனிந்து காலை மேலே தூக்கிப் பிடுங்கிப் போட்டுவிட்டு நொண்டிக்கொண்டு சின்னபண்ணைத் தோட்டத்துப் பக்கம் சென்றான்.

சின்னபண்ணைத் தோட்டத்துக் காவல் முனியாண்டித்தேவர் பம்பு சுவர் மீது சாய்ந்து உட்கார்ந்து தண்ணிருக்குள் காலைவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தார். பம்பில் இருந்து பாய்ந்த தண்ணீர் அவர் காலை அலம்பிக் கொண்டு சென்றது. அவர் குனிந்து பச்சை பெல்டில் இருந்து சுருட்டை எடுத்து வாயில் வைத்து பற்றவைத்துக் கொண்டார்.

ஆறுமுகசாமி வாய்க்கால் கரையேறி மூங்கில் படலைத் திறந்துகொண்டு கத்தரித் தோட்டத்து வரப்பு மேலேயே ஓடிவந்தான். சுருட்டை கையில எடுத்துக்கொண்டு முனியாண்டித்தேவர் திரும்பிப் பார்த்தார். அவன் தயங்கி நின்றான். ஒதிய மரத்தடியில் கட்டியிருந்த வெள்ளை ஆடடுக்குட்டி கத்தியது. அவன் சலசலத்தோடும் தண்ணீரில் இடது காலை வைத்து துவரைச் செடியை விலக்கிக்கொண்டு ஓடி முனியாண்டித்தேவர் முன்னேபோய் நின்றான். அவர் இவனை கவனிக்காதது மாதிரி லேசாகக் கண்களை மூடி சுருட்டை வாயில் வைத்து இழுத்துக் கொண்டிருந்தார்.

அவர் முன்னே ஓரடியெடுத்து வைத்தான்.

முனியாண்டித்தேவர் திரும்பி உட்கார்ந்து கொண்டார்.

“மாமா” என்றான் ஆறுமுகசாமி.

அவர் வாயில் இருந்த சுருட்டை கையில் எடுத்துக் கொண்டு புகையை வேகமாக ஊதினார். தலை மட்டும் என்னவென்று கேட்பது மாதிரி அசைந்தது.

“மாமா... அது வந்துங்க மாமா”

“அது என்னடா வந்து போயி... என்னென்னு சொல்லு-”

அவன் லேசாக ஒரு சிரிப்புச் சிரித்தான். முனியாண்டித்தேவர் சுருட்டை வாயில் வைத்து ஒரு இழுப்பு இழுத்தார். இரண்டு கன்னமும் ஒட்டிக்கொள்ள காற்றெல்லாம் வாய்க்குள் புகுந்தது. அவன் மெதுவாக ஒரடிமுன்னே எடுத்து வைத்தான்.

“உம்”

“மாமா”

“என்னடா”

“ஆட்டுக்குட்டி மாமா” ஒதியமரத்தில் கட்டிப் போட்டிருந்த ஆட்டுக்குட்டியை சுட்டிக்காட்டினான்.

“நாலஞ்சு ஆடும், ஐஞ்சாறு குட்டியுமா தோட்டத்துல புகுந்து ஒரே அதம். புடிச்சிக்கட்டி பட்டியில் கொண்டுபோய் தள்ளலாமென்னா போரை துள்ளிப் பாய்ஞ்சி போயிடுச்சி. கடைசியில இந்தக் குட்டிதான் மாட்டுச்சி... எங்கே போயிட போவுது...”

“நம்ம ஆடுங்க மாமா”

“அடிசக்க. நம்ப, தோட்டமென்னுதான் கத்தரிச் செடியா பார்த்துக் கொண்டாந்து விடுறீயா?”

“இல்ல மாமா... அதெல்லாம் இல்லிங்க மாமா”

“ஆட்டயெல்லாம் விட்டுட்டு எங்க போற”

“அடுத்தவாரம் பரிட்சைங்க மாமா. செத்த படுச்சிக்கிட்டு இருந்தேன்...”

“இந்த ஆட்டுக்குட்டி புடிச்சிக் கட்ட என்ன பாடுபட்டேன் தெரியுமா?” அவர் பச்சை பெல்ட்டை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டார்.

அவன் பதிலொன்றும் சொல்லாம் ஆட்டுக்குட்டியையே பார்த்தபடி இருந்தான். ஆட்டுக்குட்டி கயிற்றை இழுத்துக்கொண்டு ஒருமுறை கத்தியது.

முனியாண்டித்தேவர் சுருட்டை அணைத்துக் கீழே போட்டுவிட்டு, “இந்த ஒருவாட்டிதான்... இன்னம இஞ்ச வராம பாத்துக்க... இன்னம இஞ்ச வந்துச்சி நேரா பட்டிக்குத்தான்...” என்றார். -

அவன் தலையசைத்து தண்ணீர் ஓடும் வாய்க்காலைத் தாண்டி ஒதியமரத்துப் பக்கம் ஒடினான். ஆட்டுக்குட்டி இவனைப் பார்த்ததும் கொடியை இழுத்துக்கொண்டு இரண்டுமுறை கத்தியது. அவன் ஆட்டுக்குட்டியைக் கட்டி இருந்த ஓணான் கொடியை அறுத்துவிட்டான். ஆட்டுக்குட்டி துள்ளிப் பாய்ந்து கத்தரித்தோடிடத்திற்குள் ஓடியது.

“பாத்துப்பாத்து... கத்தரியெல்லாம் கடிக்காம புடிச்சிக்கிட்டு போ” என்றார் முனியாண்டித்தேவர்.

அவன் அவசர அவசரமாகக் கத்திரி செடிகளுக்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு வெளியில் வந்தான்.

“அம்மாவை நான் கேட்டென்னு சொல்லு”

“சரிங்க மாமா அவன் ஆட்டுக்குட்டியை ஓட்டிக்கொண்டு சின்ன்பண்ணை கத்திரி தோட்டத்தை விட்டு வெளியில் வந்தான்.

ஆறுமுகசாமி ஏழாவது படிக்கும்போது அவன் அப்பா செத்துப் போய்விட்டார். செத்துப் போனார் என்றால் திடீரென்றுதான் நடந்தது. சென்னைக்கு அறிவாலயம் திறப்புக்குச் சென்ற காத்தமுத்து குழுவுக்கு வேன் ஓட்டிக்கொண்டு சென்றார். திறப்புவிழா முடிந்ததும் சாலைமறிப்புப் போராட்டம் இருக்கிறது என்ற படியால் அவசர அவசரமாகத் திரும்பினார்கள். ஆனால் செங்கல்பட்டுப் பக்கத்தில் ஒரு டயர் பஞ்சாராகிவிட்டது. பஞ்சர் போட்டு டயர் மாற்றிக்கொண்டு திண்டிவனம் வரும்போது பொழுது புல புல வென்று புலர்ந்து கொண்டிருந்தது.

சாலையில் நூறு நூற்றியம்பதுக்கு மேலாக ஆட்கள் கையில் அரிவாள், தடிகளை வைத்துக்கொண்டு போக்குவரத்தை மறித்துக் கொண்டிருந்தார்கள். அவன் அப்பா கலியபெருமாள் வேனை மெதுவாக ஒட்டிக்கொண்டு வந்தார். ஒரு பையன் பதினாறு பதினேழு வயதிருக்கும். சாலையின் நடுவில் நின்று வேனை மறித்தான். வேன் நின்றது. ஐந்நூறு ஆட்கள் ஓடிவந்து வேனைச் சூழ்ந்து கொண்டார்கள். வேன் பின்னால் தடியாலும் கல்லாலும் அடிப்பது மாதிரி சப்தம் கேட்டது. கலியபெருமாள் வேனில் இருந்து இறங்கி பின்னால் சென்றார். சாலையோரத்து தூங்கு மூஞ்சிமரம் சட சடவென்று சாய்ந்தது. அவர் கிளைகளுக்கு இடையில் சிக்கிச் செத்துப்போனார். செத்து இரண்டு நாட்கள் கழித்துதான் பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது ஆட்கள் வந்து சொன்னார்கள்.

அவனும், அத்தானும் திண்டிவனத்திற்கு வந்து அப்பா உடலை அடிபட்டு நொறுங்கிப்போன வேனில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தார்கள். உடல் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் முன்னே பெரிய கூட்டம் கூடிவிட்டது. வட்டச் செயலாளர் மதிவாணன் பெரிய கொடியை அப்பா மீது கோத்தினார். பொருளாளர் சண்முகசுந்தரம் அத்தானிடம் ஒரு கவர் கொடுத்தார். அத்தான் இவன் பையில் திணித்தார். இரண்டு நாட்கள் கழித்து கவரைத் திறந்தபோது ஐயாயிரம் ரூபாய் இருந்தது. அத்தான் எண்ணிப்பார்த்துவிட்டு, “அம்மா கிட்டக்கொடு” என்று இவனிடம் கொடுத்தார்.

அப்பா காரியமெல்லாம் முடிந்த பத்து நாட்கள் கழித்து அத்தான் ஒருநாள் வீட்டிற்கு வந்தார். அம்மா கதவுக்குப் பின்னால் மறைந்து கொண்டாள்.

அத்தான் இவனைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, ‘என்ன இப்பப் பண்ணலாம் சொல்லு சாந்தி” என்றார். சாந்தி என்பது இவன் அக்கா.

“நீங்கதானே சொல்லணும்”

அத்தான் இப்படியும், அப்படியும் ஒரு பார்வை பார்த்தார். மடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். ஆறுமுகசாமி கொஞ்சம் பின்னால் நகர்ந்தான்.

“உம். என்ன பண்ணலாம். நீ சொல்லு” அத்தான் அவள் கையைப் பிடித்து இழுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அவன் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்தான் பாதிமுகம் தான் கதவு மறைப்பில் தெரிந்தது.

“ஒரு கறவமாடு வாங்கலாம்” என்றாள் சாந்தி.

“மாடா”

“பின்ன... நீங்கதான் சொல்லுங்க”

“ஆடு வாங்கலாம் சாந்தி. அரசாங்கத்துல மானியம் தர்றாங்க... பேங்கில லோன் வேற கிடைக்கும்.

“ஆடா”

“தென்னந்தோப்பு பசுபதி படையாச்சி ஆடு வாங்கி வளர்த்து பெரிய ஆளா ஆகிட்டான். ஆடுன்னா கறி ஐம்பது ரூபாக்குப் போகுது. இதெல்லாம் பாக்கறப்ப ஆடு வளர்க்கறது தான் சரின்னு படுது”

“அப்ப ஆடே வளர்க்கலாங்க”

“பள்ளிக்கூடம் போயிட்டு வந்து தம்பிகூட பாத்துக் கொள்ளுவான்.”

‘இல்ல... இல்ல...அவன் படிக்கட்டும்... நான் பாத்துக்கறேன்” என்றாள் அம்மா கதவு மறைப்பில் இருந்து கொஞ்சம் வெளியில் வந்தபடி.

“அத்த சொல்லுறதுதான் சரி”

“என்னா?”

“தம்பி படிக்கட்டும்”

“ஆடு மேய்க்கறது கட்டுறது எல்லாம் கஷ்டம் இல்லையா?” என்றாள் சாந்தி. -

“கஷ்டமென்று பாத்தா சாப்பிட முடியுமா?” என்றாள் அம்மா.

“சாந்தி, நீ கொஞ்சம் வாய மூடிக்கிட்டு சும்மா இரு.”

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்.”

“நீ ஒண்ணும் சொல்லுல. சும்மா இரு”

“எதுக்கு உங்களுக்கு இப்ப கோபம் வருது”

“எனக்கென்னா கோபம்.”

“சாந்தி. நீ இங்கவா” அம்மா உள்ளே இருந்து வெளியில் வந்தாள்.

அத்தான் திரும்பி சாந்தியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து வாசல் பக்கம் வந்தார். அவர் கூடவே இவனும் எழுந்து வந்தான். வாசல் பூவரசு மரத்தில் இருந்து ஒரு காக்கைக் கத்திக்கொண்டே இருந்தது. இவன் குனிந்து ஒரு கல்லை எடுத்து காக்கையை நோக்கி வீசினான். அது பறந்துபோய் கல்யாண முருங்கை மரத்தில் உட்கார்ந்தது.

“நீ இங்க வா” என்று அத்தான் அவனை அழைத்துக் கொண்டு பேங்கிற்குள் சென்றார். பேங்கில் மானேஜர் இல்லை. வெளியில் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

“நாளைக்கு உனக்குப் பள்ளிக்கூடமா”

“ஆமாங்க அத்தான்.”

“நீ பள்ளிக்கூடம் போ.”

இரண்டு மாதங்கள் கழித்து பேங்கில் அம்மாவுக்கு லோன் சாங்ஷன் ஆனது. அதற்கு கஷ்டப்பட வேண்டியதிருந்தது என்று அக்கா சொன்னாள். ஆனால் அத்தான் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அம்மாவை அழைத்துக் கொண்டு பேங்கிற்குச் சென்றான். பேங்கு வாசலில் ஒரு பெரிய கூட்டம்.

தெரிந்த முகம், தெரியாத முகம் எல்லாம் கூடியிருந்தது. வண்டிக்காரத்தெரு அன்னம்மா அம்மா பக்கமாக வந்து, “நல்லா இருக்கிறியா அண்ணி என்றாள். அம்மா தலையசைத்தாள். கண்களில் கண்ணீர் திரண்டு வருவது மாதிரி இருந்தது. அம்மா திரும்பி இவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அத்தான் அவன் பக்கமாக வந்து ஜாடை காட்டினார். அவன் அம்மாவை அழைத்துக்கொண்டு பேங்கு உள்ளே சென்றான். மானேஜர் உட்காரச் சொன்னார். அம்மா தயங்கி நின்றாள்.

“உட்காருங்க அம்மா.”

அம்மா உட்கார்ந்தாள்.

“கையெழுத்து போடுவிங்க இல்ல”

அம்மா தலையசைத்தாள்.

லேசான பச்சைக் காகிதத்தில் ஐந்தாறு இடத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார். அம்மா கோணல் மாணலாக பெரியநாயகி என்று கையெழுத்துப் போட்டாள். அப்பறம் அத்தான் கையெழுத்து. பேங்கு மானேஜர் செக்கைக் கொடுத்தார். அம்மா வாங்கிக் கொண்டு கையெடுத்துக் கும்பிட்டாள்.

“இந்தக் கடன கட்டிக்கிட்டே வந்தா அப்பறம்கூட கடன் கொடுப்பாங்க அம்மா.”

“அதெல்லாம் கட்டிடுவோம் சார்” என்றார் அத்தான்.

பேங்கு மானேஜர் பார்வை இவன் மேல் விழுந்தது.

“தம்பி என்ன பண்ணுறான்.”

“படிச்சிக்கிட்டு இருக்கிறான் சார்”

“நல்லா படிக்க வையுங்க...நாளைக்கு பேங்குக்குயெல்லாம் வேலைக்கு வர்லாம்.”

“பள்ளிக்கூடத்திலேயே இவன்தான் சார் பஸ்ட்... நெறையா பரிசு எல்லாம் வாங்கி இருக்கான் சார்.”

கூட்டமாக ஐந்தாறு ஆட்கள் உள்ளே வந்தார்கள்.

“அப்ப நாங்க வர்றோம் சார்”

“வாங்க”

அம்மா எழுந்து அவன் பின்னாலேயே வந்தாள். வெளியில் வந்ததும் அத்தான் அம்மா பக்கம் திரும்பி “நம்ப தியாகராஜ வாண்டையார் பையன். அது வந்ததுல இருந்துதான் கடன் எல்லாம்; ஒழுங்கா கொடுத்துக்கிட்டு வருது” என்றார்.

அம்மா பதிலொன்றும் சொல்லாமல் வெளியில் கடன் வாங்குவதற்கு நிற்கும் கூட்டத்தையே பார்த்தபடி இருந்தாள்.

ஆறுமுகசாமி பள்ளிக்கூடம் விட்டு வீட்டிற்கு வந்தபோது பூவரசு மரத்தைச் சுற்றிலும் ஆடுகள். கருப்பு, பழுப்பு, வெள்ளையும் கருப்புமாக— என்று பல்வேறு நிறத்தில். அப்புறம் பெரிய ஆடு... குட்டிகள். அவன் எண்ணிப் பார்த்தான். இருபத்தோரு ஆடுகள். கையைச் சுழற்றியபடி உள்ளே ஓடினான். அரிசி புடைத்துக் கொண்டிருந்த அம்மா திரும்பிப் பார்த்தாள்.

“அம்மா.ஆடு அம்மா”

“நம்ப ஆடுதான். இருபத்தோரு ஆடு. அத்தான் மத்தியானமா பசுபதி படையாச்சிக்கிட்ட இருந்து வாங்கிக்கிட்டு வந்தாங்க.”

“பெரிசு பெரிசா இருக்கு அம்மா.”

“தழையெல்லாம் ஒடிச்சாந்து போட்டு பத்தரமா பாத்துக்கணும்.”

“சரி அம்மா.”

“கல்லுக்கார மாமா வீட்டுல அலக்குக் கேட்டிருக்கேன். அதெ வாங்கிக்கிட்டு வா... அப்படியே இஞ்சித் தோப்புல கொஞ்சம் பூவரசு இல ஒடிச்சிக்கிட்டு வா.” -

அவன் குதித்து வெளியில் ஓடிவந்தான். பூவரசு மரத்தடியில் கட்டப்பட்டிருந்த ஆடுகளில் சில கத்தின. அவன் தரையில் இருந்து மேலே எம்பி கைக்கு எட்டிய பூவரசு கிளையைப் பிடித்து ஒடித்து ஆடுகளுக்கு மத்தியில் போட்டுவிட்டு கல்லுக்கார மாமா வீட்டை நோக்கி நடந்தான்.

மூன்றாவது மாதம் கொம்பாடு இரண்டு குட்டிப் போட்டது. அவன் ஈச்ச மட்டையெல்லாம் வெட்டி வந்து போட்டான். ஒரு குட்டியைத் தூக்கினான். கொம்பாடு தலையைச் சாய்த்துக் கொண்டு முட்ட வந்தது. அவன் கொஞ்சம் போல பின்னுக்கு நகர்ந்து கொண்டான்.

“ஆட்டுக்கிட்ட என்ன விளையாட்டு” என்றாள் அம்மா.

“அது முட்ட வருது அம்மா.”

“குட்டிபோட்ட ஆடு. அதெ விட்டுட்டு மத்த ஆட்டயெல்லாம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு போ.”

ஆறுமுகசாமி கொல்லைப்பக்கம் போய் சின்ன அலக்கைத் தூக்கிக் கொண்டு வந்தான். அம்மா கட்டியிருந்த ஆட்டையெல்லாம் அவிழ்த்துவிட்டான். பின்னால் சென்ற ஆட்டை முன்னே துரத்திவிட்டான்.

‘பராக்குப் பார்த்துக்கிட்டு அங்க இங்க நிக்காம பத்தரமா ஆட்டையெல்லாம் மேய்ச்சிக்கிட்டு வா”

அவன் தலையசைத்தான்.

“என்ன பண்ணைத் தோட்டத்துப் பக்கம் ஆட்ட விட்டுடாதே முனியாண்டி அண்ணன் ரொம்ப கோவிச்சிக்குது.”

“இல்லம்மா” அலக்கை இடது தோளில் சாய்த்துக் கொண்டு, பையை வலது கையில் எடுத்துக்கொண்டு நடந்தான்.

“அத என்ன பை”

“புஸ்தகம் அம்மா, படிக்க”

அம்மா அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தான்.

“அடுத்த வாரம் பரிட்சை அம்மா”

“படிக்கறேன்னு ஆட்ட விட்டுடாதே. அப்ப அப்ப ஆட்டையும் பாத்துக்க”

“சரி அம்மா” பின்னால் நின்ற ஆட்டை எல்லாம் முன்னே ஓட்டிக் கொண்டு சென்றான்.

ஆற்றில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீரைக் கண்டதும் ஆடுகள் பயந்தது மாதிரி நின்றுவிட்டன. அவன் ச்சூ என்று கத்தி, அலக்கை முன்னே சுழற்றி ஆடுகளை விரட்டினான். ஆடுகள் அடிக்குப் பயந்து தண்ணீரில் இறங்கி அக்கரைக்கு சென்றன. அவன் எல்லா ஆட்டையும் ஒன்று சேர்த்து பாப்பான் சாவடி பக்கம் ஓட்டிச் சென்றான். அதுதான் பெரிய மேய்ச்சல் புறம்போக்கு. அதற்கு அப்பால் சுடுகாடு. சுடுகாட்டை ஒட்டி பெரிய பெரிய பூவரசு மரங்கள். பூவரசு மரத்தில் ஏறி நான்கைந்து கிளைகளை வெட்டி கீழே போட்டான். முன்னே சென்ற ஆடுகள் கத்தியபடி ஓடிவந்தன. அவன் அலக்கை பூவரசு மரத்தில் சாத்திவிட்டு இலுப்பை மரத்தடியில் உட்கார்ந்து இங்கிலீஷ் புத்தகத்தை எடுத்தான், அரை பரிட்சையில் அதில்தான் மார்க்குக் குறைவு.

“கொஞ்சம் கஷ்டப்பட்டு படி. நல்ல மார்க்கு வாங்கலாம்” என்று பேப்பர் கொடுக்கும்போது கனகசபை சார் சொன்னார். இரண்டு பாடங்களைத் தள்ளினான், செய்யுள் படிக்கலாம் போல இருந்தது. முதல் செய்யுளை எடுத்து வைத்துக்கொண்டு படித்தான். வெய்யில் மூஞ்சியில் அடித்தது. புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு முந்திரி மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டான். அப்பறம் நோட்டை எடுத்து வைத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தான். படிப்பதை விட எழுதுவது சுலபம் மாதிரி இருந்தது. கொஞ்சம் பின்னால் சாய்ந்து முந்திரி மரத்துக்கிளையில் நன்றாகச் சாய்ந்துகொண்டு எழுத ஆரம்பித்தான். அவன் பால்பாயிண்ட் பேனாவால் அழுத்தி அழுத்தி எழுதிக் கொண்டிருந்தான்.

பெரியஆடு சின்ன கிளையை இழுத்துக்கொண்டு கூந்தல் பனை மரத்துப் பக்கம் சென்றது. அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று ஆடுகள் சென்றன. அப்டியே ஆடுகள் கூந்தல் பனையைத் தாண்டி ஐயனார் கோவில் பக்கம் சென்றன.

மோட்டார் சைக்கிளில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படியும், அப்படியும் பார்த்தபடியே வந்தார். மோட்டார் சைக்கிள் சப்தத்தைக் கேட்டதும் ஆடுகள் மிரண்டு தலையைத் தூக்கிப் பார்த்தன. ஆட்டைத் தாண்டிப்போன சப்-இனஸ்பெக்டர் சரக்கென்று மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கீழே இறங்கி எச்சிலைத் துப்பிவிட்டு ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொண்டார்.

ஐந்தாறு ஆடுகள் குறுக்காகச் சாலையைத் தாண்டச் சென்றன. சப்-இன்ஸ்பெக்டர் வாயில் இருந்து சிகரெட்டை கையில் எடுத்துக்கொண்டு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

எதிர்ப்பக்கத்தில் இருந்து ஒரு லாரி வேகமாக வந்தது. சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் டிரைவர் வேகத்தைக் குறைத்தான். கிளினர் அவசர அவசரமாகக் கிழே குதித்து முன்னே ஓடிவந்து, “வெறும் வண்டி சார். ஒண்ணும் இல்ல சார்-” என்றான்.

“எங்க போவுது”

“மொகதீன் பாய் மெட்ராஸூக்கு ஆடு புடிச்சித் தர்றேன்னார் சார். அதுக்குத்தான் போகுது சார்”

“பணம் எல்லாம் கொடுத்தாச்சா”

“இல்ல சார்...இன்னமதான் சார்”

“ஒத்த பனமரத்துக்கிட்டே மேயுது பாரு... அதுல பத்து ஆட்டைப் புடிச்சிகிட்டு ஐயாயிரம் கொடு”

“நம்ப ஆடா சார்”

“அடி செருப்பால்” ராஜேந்திரன் அவசரஅவசரமாக மோட்டார் கைக்கிளில் இருந்து கீழே இறங்கினான்.

“ஏண்டா... ஊரான் வீட்டு ஆட எல்லாம் புடிச்சி விக்கற பொறுக்கின்னு என்ன நெனைச்சிக்கிட்டீயா?

டிரைவர் சக்ரபாணி லாரியில் இருந்து இறங்கி வந்தான்.

“பாரு... இவன் நம்பள நக்கல் பண்ணுறான்”

“புது பையன் சார். உங்கள பத்தி தெரியாது சார். என்னா சார். நீங்க சொல்லுங்க சார்”

“கூந்தல் பனை கிட்ட மேயறது எல்லாம் நம்ம ஆடு... உத்தியோகத்துல இருக்கறதால நம்ப பேர்ல வேணாமென்னு மச்சினன் பேர்ல வாங்கிவிட்டு இருக்கேன். அதுல ஒரு பத்து ஆட்ட புடிச்சிக்கிட்டு பணம் கொடுடான்னா உங்க ஆடான்னு கேட்கறான். இவன செருப்பாலே அடிச்சி பல்ல உடைக்க வேணாம்”

“மொகைதீன் பாய் கிட்ட பேசி இருக்கு சார்”

“என்னய்யா மொகைதீன்... பெரிய... இது... அவன் கிட்டதான் ஆடு வாங்குவீங்களா சரி. போங்க... நீங்க போங்க...”

“அது இல்ல சார். அப்டியெல்லாம் ஒண்னும் இல்ல சார்”

“வேணாம். வேணாம். நீ போய் மொகைதீன் பாய்கிட்டேயே வாங்கிக்கிட்டுப் போ—”

“கோவிச்சிக் கொள்ளாதீங்க சார். இப்ப ஒரு பத்து ஆடு தான் சார் வேணும். டேய்... சுப்பு. நீ போய் ஆட்ட இப்படி ஓட்டிக்கிட்டுவா... நான் லாரிய முன்னால எடுத்துக்கிட்டு வர்றேன்.”

“இல்ல... இல்ல... நீங்க போய் மொகைதீன்பாய் கிட்டயே புடிச்சிக்கிட்டுப் போங்க” என்று ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

“அவன் சின்ன பய சார். அத விடுங்க சார்-” என்று பின்னால் போய் ஆடுகளை முன்னால் விரட்டிக் கொண்டு வந்தான்.

ஆடுகள் லாரி பக்கம் வந்ததும் கிளினர் சுப்பு பெரிதாக இருந்த ஓர் ஆட்டை எட்டிப்பிடித்தான் டிரைவர் அதைத் தூக்கி லாரி உள்ளே போட்டான். இன்னொரு ஆட்டைப் பிடிக்கும்போது, ‘அண்ணே நிஜமாவே ஆடுயெல்லாம் இன்ஸ்பெக்டர் ஆடா இருக்குமா அண்ணே’ என்று கேட்டான்.

“இருக்குண்டா, இப்பதான் இன்ஸ்பெக்டர் போலீஸ்காரன் எல்லாம் கண்டதையும் வாங்கிப் போட்டு காக பண்ணுறாங்களே”

“எனக்கு என்னமோ பயமா இருக்கு அண்ணே”

“ஊரான் வீட்டு ஆட எவண்டா புடிச்சி விற்பான்”

சப்-இன்ஸ்பெக்டர் லாரியை நோக்கி வந்தான்.

“அண்ணே ஆளு”

டிரைவர் சக்கரபாணி லுங்கியை மேலே தூக்கி கால்சட்டை பையில் கைவிட்டு பணத்தை எடுத்து எண்ணி ராஜேந்திரன் பக்கம் நீட்டினான்.

“எவ்வளவு இருக்கு?”

“எண்ணி பாருங்க சார்”

“சொல்லுப்பா”

“இல்ல... இல்ல நீ சொல்லு”

“ரெண்டாயிரத்து ஐநூறு சார்”

“பத்து ஆட்டுக்கா. திருட்டு ஆடுகூட கிடைக்காது. நேத்தி இப்ராகிம் ராவுத்தர் நாலாயிரத்து ஐநூறுக்குக் கேட்டான். நான்தான் தர்லே”

“இல்ல சார் சின்ன குட்டிங்க சார். அதுவேற மெட்ராஸ் வரைக்கும் போகுனும் சார். லாரி கூலியெல்லாம் வேற இருக்கு.”

“இல்ல... இல்ல... இன்னும் ஐநூறு எடு-”

சப்-இன்ஸ்பெக்டர் பணத்தை பையில் திணித்துக்கொண்டு டிரைவர் முன்னே கையை நீட்டினான்.

“இருநூறுதான் சார். இருக்கு. டீசல் வேற போடணும்”

“நூறு எடு”

டிரைவர் ஒரு பழைய நூறுருபாய் நோட்டை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தான். அதை வாங்கி மேல்பையில் வைத்துக் கொண்டு “நம்ப ஆளா இருக்கே. எங்க போயிடபோற” என்றான்.

“எப்பவும் உங்க ஆளுதான் சார்”

“சார் வழியில ஒன்னும் பிரச்சினை வராதே” என்றான் கிளீனர் சுப்பு

‘அடி செருப்பால’ என்று காலைத் தூக்கிக் கொண்டு அவனை உதைக்கப் போனான். கிளினர் லாரிக்கு முன்னே ஓடி மறைந்து கொண்டான்.

"அவன விடுங்க சார். எதிலையும் சந்தேகம் பிடிச்ச பய சார்"

“அவன ஒரு நாளைக்கு நல்லா கொடுக்கப்போறேன். நீ பார்த்துக்கிட்டே இரு”

“நான் சார்-”

“நீ கிளம்பு”

“சரி சார்”

“வழியில் ஏதாவது பிராபளமென்னா என் பெயர சொல்லு”

“அது போதும் சார் வண்டி நேரா மெட்ராஸ்தான் சார்” என்று சக்ரபாணி லாரியில் போய் உட்கார்ந்தான். லாரி கிளம்பி மெதுவாக உருண்டது. நாவல் மரத்துக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த கிளீனர் சுப்பு ஓடி வந்து லாரியில் ஏறிக் கொண்டான். லாரி புழுதியைக் கிளப்பிக்கொண்டு பனைமரங்கள் நிறைந்த சாலையில் ஓட ஆரம்பித்தது.

சப்-இன்ஸ்பெக்டர் லாரியையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். லாரி பார்வையில் இருந்து மறைந்ததும், மோட்டார் சைக்கிளில் ஏறி எதிர்ப் பக்கமாகச் சென்றான்.

ஆறுமுகசாமிக்குத் தாகம் எடுப்பது மாதிரி இருந்தது. படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி பையில் வைத்துக்கொண்டு முந்திரி மரத்தடியில் இருந்து வெளியில் வந்தான். சூரியன் கீழே இறங்க எங்கும் நிழல் பரவி இருந்தது. ஆற்றுப்பக்கம் ஓடி இரண்டு கையாலும் தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு கையைத் துடைத்தபடி ஐயனார் கோயில் பக்கம் சென்றான். வெள்ளாடும் ஐந்தாறு குட்டிகளும் மேய்ந்துகொண்டு இருந்தன. ஐயனார் கோயில் குதிரைகள் பக்கம் ஓடினான். கருப்பு ஆட்டையும் அதனோடு இருக்கும் ஏழெட்டு ஆடுகளையும் காணோம். அவன் அவசர அவசரமாகக் கோயில் பின்னால் ஓடி மேட்டில் ஏறி நின்று, “ம்மா என்று கத்தினான்.

அவன் கத்தினால் முதலில் கருப்பு ஆடுதான் பதில் கொடுக்கும். ஆனால் பதில் இல்லை. ஈச்சமரங்கள் பக்கமாக ஓடிப் பார்த்தான். கருப்பு ஆட்டைக் காணோம்.

அவன் மேட்டில் இருந்து கீழே இறங்கி சின்னப் பண்ணை

கத்தரித் தோட்டத்தை நோக்கி ஓடினான். கத்தரி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, சுருட்டை இழுத்துக்கொண்டு முனியாண்டி தேவர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்ததும் கொஞ்சம் ஒதுங்கி நின்றான்.

எங்க ஓடுற”

“கருப்பாட்டக் காணோம் மாமா”

“தோட்டத்துப் பக்கம் ஆட்ட எல்லாம் விரட்டி விட்டுட்டு ஆட்டமா போட்டுக்கிட்டு இருக்க... இரு... இரு... இன்னிக்கு எல்லாத்தையும் பட்டியில் கொண்டு போய்த் தள்ளிடுறேன்” என்று திரும்பினார்.

அவன் அவரைத்தாண்டி மூங்கில் படலைத் திறந்து கொண்டு கத்தரித் தோட்டத்திற்குள் வேகமாக ஓடினான்.