தஞ்சைச் சிறுகதைகள்/இரத்தசுவை
கரிச்சான் குஞ்சு
தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டம் சேதின்புரத்தில் பிறந்த நாராயணசாமி, தன் உயிர் நண்பர் கு.ப.ரா.வின் நினைவாக தன் பெயரை கரிச்சான் குஞ்சு என்று இட்டுக் கொண்டவர். (கு.ப.ரா கரிச்சான் என்ற பெயரில் சிறுகதை தவிரப் பிறவற்றை எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
இவர் எழுதிய கதைகளில் மனித பலவீனங்களைப் பற்றிய எள்ளலும் போலித்தன்மைகளைச் சாடும் சினமும் வெளிப்பட்டதோடு, கலைஞானம் மிகுந்த மாந்தர்கள் தமது திறமையை முழுமையாகப் பிரதிபலிக்கும் போக்கும் தலைதுாக்கி நிற்கக் காணலாம்.
நீண்டகாலம் மன்னார்குடியில் ஆசிரியராக வாழ்ந்த கரிச்சான் குஞ்சு அசல் தஞ்சாவூர் பாரம்பரியத்தில் வளந்தவர். சமஸ்கிருதத்திலும், இசை முதலிய கலைகளிலும் ஈடுபாடு கொண்டவர். வடமொழியில் வேதம் வியாகரணம் படித்து தமிழிலும் சங்க இலக்கியங்களைக் கற்றார். கு.ப.ராவின் சீடர்களில் குறிப்பிடத்தக்கவர்.
சொற்சிக்களத்துடன் எழுதப்பட்டிருக்கும், ‘ரத்தசுவை’ சிறுகதை கரிச்சான் குஞ்சுவின் இலக்கிய உணர்வையும், சிறுகதைக் கொள்கையையும் விளக்குகிறது.
ரத்தசுவை
ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள் எல்லோரும். நானும் அவனை கவனித்தேன். அவன் சரியாயில்லை. நான் ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ராமுவை அழைத்துவரச் சொல்லிப் பலரை அனுப்பினேன். அவன் வரவில்லை. நான் போய்க்கூப்பிட்டேன். அவன் பேசவில்லை; ஆனால் என்னைப் பார்த்துச் சிரித்தான். ‘வீட்டுக்குப் போ வருகிறேன்’ என்று ஜாடை காண்பித்தான். உடனே திரும்பிக் குரங்கைப் பார்க்கப் போய்விட்டான். ராமு அந்தக் குரங்கினிடம் என்ன கண்டானோ, அதையே கவனித்துக் கொண்டும் அது போகுமிடங்களுக்கெல்லாம் தானும் போய்க் கொண்டும் இருந்தான். வீட்டுக்கு வந்தேன். என் வீட்டாரிடமும் ராமு வீட்டாரிடமும் விசாரித்தேன்.
அவனுடைய குடும்பம் நொடித்துவிட்டது. ஒரு கல்யாணத்துக்கு வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காமலேயே பல வருவடங்கள் கழிந்துவிட்டன. கடன் கொடுத்திருந்த கோபாலய்யர் வியாஜ்யம் நடத்தி ராமுவின் சொத்து முழுவதையும் கட்டிக்கொண்டு விட்டார். வீடு உள்படப் போய்விட்டது. ஆறு மாதத்தில் வீட்டைக் காலி செய்து தரவேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு ஆகியிருந்தது. அந்த கெடுவில் இன்னும் இரண்டே மாதங்கள் பாக்கி. மனுஷன் என்ன பண்ணுவான்? கலங்கிப் போய்விட்டான். பேச்சிலோ செய்கையிலோ வேறு ஒரு விபரீதமும் கிடையாதாம். பிரமை பிடித்ததுபோல் அந்தக் குரங்கைச் சுற்றிக்கொண்டு அலைகிறானாம் அதுவோ இவனைப் பாய்ந்து கடிக்க வருகிறதாம்.
குரங்கோ ஒற்றைக் குரங்கு. நானும் பார்த்தேன். அதன் பரிமாணம், நீளமும் சரி. பருமனும் சரி அசாதாரணமானதுதான். கொழுத்து விறாந்து கிடந்தது அது. ஊரில் அதன் ரகளை இல்லாத நாளே கிடையாதாம். எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கி எதையும் எடுத்துத் தின்று கொண்டு திமிர்பிடித்து அலைந்து கொண்ருக்கிறது அது. எல்லோரும் அதைக்கண்டு பயப்பட்டார்களே தவிர அது யாரைக் கண்டும் எதைக் கண்டும் பயப்படவில்லையாம். நாய்களையெல்லாம் அது பலபடித் துன்புறுத்திற்று. நாய்க்குட்டிகளைக் கொன்று போடுகிறதாம். ‘ஒற்றைக் குரங்கு ஊரை அழிக்கும்’ என்பது ஹனுமானைப் பற்றிய பழமொழியாம். அவர் லங்கையை அப்படி அழித்ததால்தான், நம்முடைய தெய்வமானார். ஆனால் இந்த குரங்கு எங்கள் ஊரில் இப்படி அட்டுழியம் செய்து வருகிறது. ஊரில் எல்லோரும் புராதனக் குடிகள். உலகத்தின் அணுவணுவிலும் தெய்வத்தைக் கண்டு போற்றும் புராதனக் கொள்கைகளை உடையவர்களின் வம்சபரம்பரை. ஆகவேதான் அந்தக் குரங்கைப் பிடிக்கவோ, அடிக்கவோ, அன்றிச் சுடவோ அவர்கள் அனுமதிப்பதே இல்லை. “நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமே ஒழிய ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்யலாமோ” என்கிறார்கள். இப்படியெல்லாம் விவரங்கள் தெரிந்தன.
ராமு கடன்பட்டுப் புண்பட்டதற்கும் இந்த வானர லீலைக்கும் என்ன சம்பந்தம்? இது யாரும் சொல்லவில்லை. எனக்கும் புரியவில்லை.
“ராமு சில சமயமாவது நல்லபடி ஒழுங்காய்த் தொடர்ச்சியாய் பேசுகிறான் அல்லவா?” என்றேன்.
“அதெல்லாம் ஒன்றும் குறைவில்லை. குரங்கைக் கண்டுவிட்டால் இந்தப் பிரமை வந்து விடுகிறது. அதிசயம்தான் இது...” என்றனர்.
‘பாவம். ராமு. அவனை எப்படியாவது என்னுடன் வடக்கே அழைத்துக்கொண்டு போய் ஒரு உத்தியோகம் தேடிக் கொடுத்துவிடவேண்டும். அப்புறம் இந்த ஊரையே மறந்துவிடட்டுமே அவன்’ என்று தீர்மானித்துக் கொண்டேன்.
நானே போய் ராமுவை அழைத்து வந்தேன். பார்வையில் பைத்தியத்தின் கோணல் இருக்கிறதா என்று ஆராய்ந்தேன். சற்றும் இல்லை. நடை, உடை, தோற்றம் எதிலும் கோளாறு இல்லை; ஆனால், அவன் மனதில் ஒரே விதமான போக்கு, ஒன்றை பற்றியே ஒரே எண்ணம் தொடர்ந்து இருப்பதுபோல் இருந்தது அவன் பாவனை. இதை யூகித்தேன். அதாவது அவன் மனம் அதிர்ச்சியில் அயர்ந்து குறிப்பிட்ட ஒரே துடிப்பை மட்டும் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கவேண்டும் என்ற தோன்றிற்று.
அவன் போக்கிலேயே ஆரம்பித்தேன் பேச்சை; “ஏண்டா ராமு, இப்ப எப்படி இருக்கு குரங்கு? ஆமாம். பிராணி விஞ்ஞானத்தில் எப்போதிருந்து உனக்கு இவ்வளவு ஈடுபாடு?”
“அந்த ஒரு விஞ்ஞானம் மட்டும் அல்ல; இன்னும் பல விஞ்ஞானங்களும் இதில் தெரிகின்றன...”
“எதில்? ஊரில் தனியரசு செலுத்தும் இந்த ஒற்றைக் குரங்கினிடமா...?”
“இந்தக் குரங்கு மட்டுமா? நம்மூரில் இதேமாதிரி தனியரசு செலுத்தி அட்டுழியம் செய்யும் பல பிராணிகள் இருக்கின்றன. நான் இந்தக் குரங்கைப் புரிந்து கொண்டு விட்டதால் எனக்கு இந் ஊர்ப் புண்யவான்களை விபூதி ருத்ராக்ஷப் பிராணிகள் எல்லோரையும் பற்றிப் புலப்பட்டு வருகிறது. நானா, இவனுகள் எல்லோரும் இப்டியே இருந்தால் இன்னும் இரண்டொரு தலைமுறையில் இந்த ஊரில் பாழ்மனைகள் பலவும், மூணோ நாலோ மாடிவிடும் தான் இருக்கும்..”
“ராமு, அந்த கோபாலய்யர்...”
“அவன்மேலே குற்றமில்லை. இருக்கிற சம்பிரதாயம், சட்டத்திட்டம்...”
“கோபாலய்யர் உனக்கு ரொம்ப வேண்டியவர். நெருங்கிய உறவினர்கூட. இல்லையா?”
“அதனால் தான் என்னை இப்படி உறிஞ்சிக் கொன்றார்.”
“கடைசியில் அவருக்குக் கொடுக்க வேண்டிய கடன் போக என்ன மிச்சம் உனக்கு?”
“பச்சை காய்ந்து வரட்சி குத்தும் இந்த மனமும், வாழ்ந்த ஊரில் ஓட எடுக்க ஆன இந்த தினதசையும் தான் மிச்சம்.”
“வட்டியையாவது வருஷா வருஷம் கட்டியிருக்கலாம் நீ”
“அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? முதலிலேயே ஒரு பகுதியை அடைத்திருப்பேனே? இவர்பண்ணின யுக்தியால்...”
“என்ன யுக்தி...?”
“வட்டி அதிகமாய் எழுதுவதற்கென்றே தன் தங்கையின் பெயரால் பந்தகம் எழுதினார். அவள் எங்கேயோ பம்பாயில் இருக்கிறாள் பெண்ணோடு, வரவு வைக்க வழியே இல்லை. பத்திரம் அவளிடம் இருக்கிறதென்று தள்ளிக் கொண்டே வந்துவிட்டார் அவர். நம்ம செய்திதான் தெரியுமே உனக்கு, மூணு முழமும் ஒரு சுற்று. முப்பது முழமும் ஒரு சுற்று.”
“உண்மையில் பணம் யாருடையது?”
“இவரதுதான்”
“பின்னே ஏன்?”
“அதுதான் அதிக வட்டிக்கும், ஆளை ஒழித்து அஸ்தியை அப்படியே கட்டிவைக்கவும் யுக்தி. இது இந்த ஊரான்களுடைய வெகு நாளைய சம்பிரதாயம்.”
“சரிதான், பஞ்சாபிகள் எல்லாம் தவணைக்கடை...”
“அதாவது நேரடியாகத் தெரியும். கத்தியைப் பார்த்துக் கொண்டே கழுத்தை நீட்டுகிறார்கள். இங்கே, அப்படியே வெளியிலே குளுமைப் பேச்சைப் பூசிப்பூசி உபசாரம் பண்ணியே பணத்தைக் கொடுத்துவிட்டு நோகாமல் கழுத்தை அறுத்து விடுவானுக. பின்னே ஏது இந்த சொத்தெல்லாம்? கலெக்டர், திவான் உத்தியோகம் பார்த்தானுகளா, இல்லே பெரிய வியாபாரம் பண்ணினானுகளா? தொன்றுதொட்டு இது தானே அவர்களுடைய குல தர்மம்.”
“கோபாலய்யர் ஏதோ உத்தியோகம் பார்த்து ‘ரிடையர்’ ஆனவர்தானே?”
“அது தான் சொல்லனும், வந்த புதிதில் அவர் வட்டி வாங்காமல் ஏழைகளுக்குக் கைம்மாறு கொடுத்துக் கொண்டிருந்தார். வரவர, இந்த ஊர் ராட்சஸனுகளைவிட ரொம்ப மேலே போய்விட்டார். என்னோடு சேர்த்து மொத்தம் ஐந்து குடும்பங்களை நிர்மூலமாக்கியிருக்கிறார் இதுவரை. இன்னும் அவரிடம் கடன்பட்டு வரவே வைக்காத இரண்டு ஜீவன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. சூழ்நிலையும் சுற்று வாடையும் அவரை...”
“கோபாலய்யரா? அவர் ரொம்ப நல்லவர். ஆசார அனுஷ்டானம் தவறாதவர். நல்ல வம்சத்தில் பிறந்தவர்...”
“வம்சமும் இனமும் என்னப்பா செய்யும்? நான் குரங்கோடு சுற்றுகிறேன். ஏன் தெரியுமா? எல்லோரும்.”
“எல்லோரும் உன்னைப் பைத்தியம் என்று சொல்லத்தான்.”
“அதை நான் லக்ஷ்யமே பண்ணவில்லை. இதை கேள், குரங்கு இனம் சாக பக்ஷி”
“யார் இல்லையென்றது? ஈச்வர சிருட்டியே அப்படி,”
“அதுதான் தப்பு; சிருட்டியில் குணம் கிடையாது. குரங்கும் மாம்ஸி பக்ஷி ஆய்விடும். சூழ்நிலை, திரும்பத் திரும்பச் செய்தல், வெறி இவை போன்ற காரணங்களால்...”
“இது தான் நீ பைத்தியம் பட்டம் வாங்கிக்கொள்ள நடத்திய ஆராய்ச்சியோ?”
“இது ஸத்யம் நாணா, ஊராரைக் கேள், சொல்லுவார்கள்...”
“...இந்தக் குரங்கு எத்தனை நாய்க்குட்டிகளைத் தூக்கிச்சென்று கொன்றிருக்கிறது தெரியுமா? ஆரம்பத்திலே தாய் நாய்கள் குரைத்துத் துரத்தியதால் இதற்கு ஏற்பட்ட கோபவெறியில் குட்டிகளைத் தூக்கிச் சென்றது; கொன்றது; இவ்வளவுதான் ஊராருக்குத் தெரியும். எனக்கு அதுக்கு மேலே தெரியும். குட்டிகளின் கழுத்தை நெறித்துக் கிழித்துக் கையால் குதறி எறியும். கையெல்லாம் ரத்தமாய் விடும். துடைக்கத் தெரியாமல் நக்கும். ரத்தம்-நாக்கில் படும். தணிந்த வெறிக்கும் இந்தச் சுவைக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு இது அடிக்கடி ஏற்படுவதால் நினைவில் அழுந்தும். பிறகு அதே செய்கைக்குத் தூண்டும். வெறி வந்தவுடன் நாக்குச் சுவையும் நினைவுக்கு வரும். வெறியும் தணியும். சுவையும் கிடைக்கும். இப்படியே வழக்கமாகி இன்று இந்தக் குரங்கு ரத்த வெறி மிகுந்து கிடக்கிறது. நேற்று ஒரு ஆட்டைக் கிழித்துக் காய்ப்படுத்திவிட்டது. கதையெல்லாம் எதற்கு? இன்று இந்தக் குரங்கு பரிபூர்ண ரத்தவெறி பிடித்து பக்கா மாம்ஸ் பக்ஷியாய் மாறிவிட்டிருக்கிறது. அந்தக் குரங்கை அப்படியே செய்ய அனுமதிப்பதைத் தான் தர்மமென்று கூறுகிறது. சமூகம். இதேதான் கோபாலய்யர் கதையும். ஆரம்பத்தில் வட்டி இல்லாமல் உபகார நோக்கத்தோடு, உதாரச் சிந்தையோடு ஏழைகளுக்குக் கடன் கொடுக்க ஆரம்பித்தவர், இப்போ குடும்பங் குடும்பமாய் அழித்துத் துடைத்துக் கொண்டு வருகிறார். அதையும் கடமையைப் போல் செய்கிறார். வழக்கமும் சட்டமும் அதை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றன. ஸ்வாமி தரிசனம் செய்வது அவ்வளவு அநுஷ்டானப் பொருத்தத்தோடுதான் இதைச் செய்கிறார். சமூகம் தான் நலமுற்று வரத் தானே செய்துகொண்ட கடன் கொடுக்கும் ஓர் உதவிமுறை இன்று இப்படிப் பரிணமித்திருக்கிறது. வளர்கிறது. ரத்தவெறி கொண்டு திரியும் குரங்கை ஒடுக்குவது ஆஞ்சனேய ஸ்வாமிக்கு அபசாரமென்று கருதப்படுகிறதே, அந்த மனோபாவத்திற்கும் சமூகப் போக்குக்கும் ஒரு தொடர்பை உணர்கிறேன். வெற்றி அந்தப் போக்கிற்குத்தானா என்று அறிவதில் ஆர்வத்தோடு இருக்கிறேன். நான் போகிறேன் நானா, குரங்கின் கதையில் இன்று விசேட கட்டம்.”
“என்னடா ராமு, நான் வெகு தூரத்திலிருந்து வெகு நாள் கழித்து வந்திருக்கிறேன்.”
“எனக்குத் தெரியவில்லையா, இருந்தாலும் உன்னைவிட எனக்கு நானா என் மனம் என் வசத்தில் இல்லை. அதோ ஒடுகிறது. காலையில் நம்முருக்கு ஒரு குரங்காட்டி வந்தான். அவனுடைய குரங்கை நம்மூர் தடிக்குரங்கு இழுத்துக் கொண்டு ஓடிவிட்டது. பாவம், அந்தப் பிச்சைக்காரனுடைய பிழைப்புக்கு ஆதாரமாயிருந்தது போய்விட்டது. ரொம்ப பாடுபட்டான். ஒன்றும் முடியவில்லை. மகா ஆத்திரம் அவனுக்கு. எப்படியாவது அதைப் பிடித்துவிட வேண்டும் அல்லது தடிக்குரங்கைக் கொன்றுவிட வேண்டும் என்று இருக்கிறான். போய் என்ன ஆகிறதென்று பார்க்க வேண்டும்...?”
ராமு கிளம்பினான். இதற்குள் தெருவில் ஒரே சத்தம். பெரியவாள் எல்லோரும் இரைந்து கத்தினார்கள்.
“பிச்சைக்காரப் பயலைக் கட்டிப் பிடியுங்கடா, பந்தக்காலில் கட்டிப் போடுங்கள் படவாவை. குரங்கைப் பிடிக்கவாவது இவன்...” என்றார் ரொம்பப் பெரியவர் ஒருவர்.
ராமு வேகமாய்ப் போனான். நானும் பின்னே சென்றேன். பிச்சைக்காரன் கையிலிருந்த கயிற்றுச் சுருக்கில் தடிக்குரங்கு மாட்டிக்கொண்டு படாத பாடுபடுத்திற்று. பிச்சைக்காரனைப் பிராண்டிற்று கடித்தது. அவனும் அதை அடித்து இரத்தம் பீறிப் பிய்த்துவிட்டிருந்தான். இதற்குள் ஊர்ப் பெரியவாள் எல்லோரும் பல ஆட்களைக் கூட அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார்கள். குரங்கை விடுதலை செய்யப் பிச்சைக்காரன் இசையவில்லை. அடிக்கக் கட்டளையிட்டார்கள் ஊரார்கள்.
அவன் அடிப்பட்டுக் கொண்டே கதறினான், சொன்னான்;
“சாமி. அழகான பெண் குரங்குங்க என் குரங்கு, ரொம்ப சாதுங்க. என் குரங்கின் கழுத்தை நெறிச்சுப்போட்டு, இரத்தம் உறிஞ்சிடுச்சங்க இது! அந்த ஜாதியிலே வந்துட்ட ஏதோ பிசாசுங்க இது...” என்று சத்தியத்தைச் சொன்னான்.
சத்தியம் யாருக்கு வேண்டும் அதையும் இந்தப் பிச்சக்காரப் பயலா சொல்வது?
“சீச்சீ நாயே, வாயை மூடு ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் பண்ணிவிட்டு பேசறையேடா...” என்றார் ஒருவர்.
“ஏண்டா நிற்கிறீர்கள்? அவனை உதையுங்களடா, கயிற்றை அறுத்துக் குரங்கை விடுவியுங்கள், உம்” என்று ஆட்களுக்கு உத்திரவு பிறந்தது.
“சாமி சாமி, இந்தக் குரங்கு இருப்பது ஊருக்குக் கெடுதல்.” என்று பிச்சைக்காரன் முடிப்பதற்குள் அவனுக்கு அடி விழுந்தது. ராக்ஷஸக் குரங்கு யதேச்சையாய்த் தன்னரசு செலுத்த ஆரம்பித்தது.
பழையபடியே ஐயமாரும் தன்னரசு செலுத்த ஆரம்பித்தார்கள்.
பிச்சைக்காரனுடைய பிழைப்புக்கு ஆதாரமாய் இருந்தது போய்விட்டதுடன் அவனும் ரத்தம் சிந்தினான் அடிபட்டு. எல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அபசாரம் செய்ததன் பலன்.
ஸ்வாமியும் தர்மமும்தான் எல்லாம்.
பல ராமுக்களுடைய சொத்துக்கள் போயின. இன்னும் பலர் ராமுகள் ஆக இருக்கிறார்கள்.
ஊரில் ஸ்னான, ஸந்தியா, ஜபதப ஹோமங்களுக்குக் குறைவே இல்லை.
ஊரார்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டுக் குரங்கைப் பார்த்துக்கொண்டு இருப்பதை ராமு நிறுத்தவில்லை. ஊரில் இருந்தவரைக்கும் நானும் ராமுவை அதிகம் விட்டுப் பிரியவில்லை. ராமுவுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்றார்கள் எல்லோரும்...