தடிவீரசாமி கதை

திருச்செந்தூரில் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன் ஆகியோர். இவர்கள் மூன்று பேரும் பள்ளர் சாதியினர் வாழ்ந்த ஏழு ஊர்களிலும் (ஏழு ஊர்கள் முருகன்குறிச்சி, முனிக்குளம், வெள்ளக்கோயில், தெப்பக்குளம், பாளையன்கோட்டை, திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை எனக் கூறுவர்) உள்ள நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்தனர். இந்த நிலங்கள் அரசுக்குச் சொந்தமானவை. இந்த மூன்று பேர்களில் தலைவராகக் கருதப்பட்டவர் செம்பாரக் குடும்பன் . இவர்தான் பயிர் செய்த நிலங்களின் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பங்கை வரியாக அரண்மனைக்குக் கொடுத்து வந்ததார்.


ஏழு ஊர்களிலும் உள்ள குடும்பன்மார்களுக்குத் துணி வெளுக்கும் பொறுப்பை நீலவண்ணான் என்பவன் கவனித்து வந்தான். இவன் சாதியில் புரத வண்ணான். இவனது மனைவி புரதமங்கை என்ற மாட வண்ணாத்தி. இவர்கள் இரண்டு பேரும் ஏழு ஊர்களில் வாழ்ந்த பள்ளர்களின் வீட்டில் அழுக்கை வெளுத்து வாழ்ந்து வந்தனர்.


நீலவண்ணாளுக்கு முப்பத்திரண்டு வயதானது. குழந்தை பிறக்கவில்லை. ஆகவே அவள் மனம் நொந்து இருந்தாள். குழந்தைககாக நேர்ச்சை செய்தாள். தண்ணீர் பந்தல் சுமைதாங்கி எனப் பலவும் செய்து வைத்தாள். தான தருமங்கள் செய்தாள். பரதேசிகளுக்கும் பிராமணர்களுக்கம் தானம் செய்தாள். பசுவையும் பூமியையும் தானமாகக் கொடுத்தாள். குருடர்களுக்குத் தானம் செய்தாள். இப்படிப் பலவகையான தான தர்மங்கள் செய்தாள். ஆனால் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. இதனால் மிகவும் மனம் நொந்த புரதவண்ணாத்தி பிள்ளை இல்லாதவர்கள் வீட்டில் பெரியவர்கள் சாப்பிடமாட்டார்களே என்ன செய்வேன் என நொந்தாள்.


அவள் கணவனிடம் இரந்து கேட்டாள். "கணவனே என் கணவனே நான் சொல்வதைக் கேட்பாய். எனக்கு சங்கரநயினார் கோவிலுக்குப் போகவேண்டும். மாதம் ஒருமுறை சென்று தவம் இருக்கவேண்டும்" என்றாள். அவனும் அதற்கு இணங்கினான். அவள் நேர்ச்சைக்குரிய மாப்பலகாரம் பொரிவிளங்காய் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அந்தக்கோவிலுக்குப் பயணமானாள்.


அவள் ஏறாங்குடிப் பட்டணம், பண்டாரகுளம், தாழவூத்து, நஞ்சான்குளம், மாவிடி, மானூரு, தேவகுளம், பனைவிடலி போன்ற இடங்களக் கடந்து விடைப் பொய்கையில் தீர்த்தமாடினாள். பின் சங்கரன்கோவில் வந்தாள். அங்கு 41 நாட்கள் தவமிருந்தாள். அப்போது அக்கோவிலில் இருந்த இறைவன் சங்கரலிங்கம் கயிலைக்குச் சென்றார். சிவனைத் தரிசித்து "புரதமங்கைக்கு குழந்தை வரம் கொடுக்கவேண்டும்" என்றார். சிவனோ "அவளுக்கு இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை. அதனால் அவள் வயிற்றில் நீயே குழந்தையாகப் பிறப்பாய். நீ 18 ஆண்டுகள் உயிரோடு இருப்பாய்" என வரமளித்தார்.


பின்னர் சங்கரலிங்க பகவான் சங்கரன்கோவில் வந்தார். தவமிருந்த மங்கையிடம் "உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும். அதற்கு 18 ம் வயதில் ஒரு தத்து உண்டு" என்றார். அவளும் மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குச் சென்றாள். சங்கரலிங்க பகவான் வரம் கொடுத்த பத்தாம் மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பெற்றாள். அதற்கு மந்திரமூர்த்தி எனப் பெயர் கொடுத்தாள்.


மந்திரமூர்த்தி சிறுவயதில் மந்திரங்கள் படித்தான். கூடு விட்டுக்கூடு பாயும் வித்தை கற்றான். அவனுக்கு 12 வயது ஆனது. பூதப்பாண்டியில் உள்ள சாத்தப்பிள்ளை என்னும் பெண்ணை மணந்தான். அவள் தாமிரபரணிக் கரையில் குடில் அமைத்து, வெள்ளாவிப் பானை வைத்து வெளுப்புத் தொழிலை ஒழுங்காக நடத்தி வந்தாள்.


இப்படி இருக்கும்போது நாடார் குலத்தில் பிறந்த புதியவன் என்பவன் மந்திரமூர்த்தியிடம் மந்திர வித்தைகள் படிக்க வந்தான். மந்திரமூர்த்தியும் முறைப்படியான வித்தைகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்தான். அவனும் வித்தைகளைக் கவனமாகக் கற்றான். ஒருமுறை புதியவன் மந்திரமூர்த்தியைப் பார்த்து "என்ன இருந்தாலும் நீ ஈன சாதியினன் அல்லவா" எனக் கேட்டுவிட்டான். அதனால் கோபமுற்ற மந்திரமூர்த்தி "என்னை அவமானப்படுத்திய உன்னைப் பழி வாங்குவேன்" என்று கூறிச் சென்றான்.


திருச்செந்தூர் நகரில் செம்பாரக் குடும்பனுக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு இளையவளாக சோணமுத்து என்ற பெண் பிறந்தாள். அவள் பத்து வயதில் பெரிய பெண் ஆனாள். அவள் தோழிமார்களுடன் தாமிரபரணியாற்றில் நீராடப் புறப்பட்டாள். நீராடிவிட்டுப் புதிய சேலையை உடுக்க விரும்பினாள். அதற்கு மாற்றுச் சேலை வேண்டி வண்ணாரத் துறைக்கு வந்தாள். மந்திரமூர்த்தியைக் கண்டு சேலை வேண்டும் எனக் கேட்டாள்.


மந்திரமூர்த்தி சோணமுத்துவைக் கண்டான். இவள் சுந்தரியோ இந்தரியோ என மயங்கினான். அவள் பேரில் மையல் கொண்டான். எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினான். அவளுக்கு நல்ல சேலை தருவேன் என்றான். மந்திரம் படித்த அவன் சோணமுத்துவின் உருவையும் அவன் உருவையும் சேலையில் வரைந்து மந்திரம் உரு ஏற்றி அவளிடம் கொடுத்தான்.


சோணமுத்து சேலையை உடுத்ததும் மந்திரமூர்த்தியன் பேரில் ஆசைப்பட்டாள். அன்று இரவு யாருக்கும் தெரியாமல் வகைவகையாய் சமைத்தாள். சம்பா அரிசி எடுத்து சோறு பொங்கினாள். ஆட்டுக்கறி, கோழிக்கறி வைத்தாள். கருவாட்டுக் குழம்பு வைத்து ஏழடுக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு மோகினி ஒருத்தி பின்தொடர மந்திரமூர்த்தியின் குடிசைக்கு வந்தாள். வகைவகையாய் அவனுக்கு உணவு பரிமாறினாள். அவன் உண்ட மிச்சத்தை அவள் உண்டாள். பின்னர் இருவரும் வெற்றிலை பாக்கு பரிமாறிக் கொண்டார்கள். மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டார்கள். இருவரும் கட்டிலில் ஒன்றாகப் படுத்தார்கள். அவளை இறுக்கமுடன் கட்டித் தழுவினான் மந்திரமூர்த்தி.


இப்படியாக யாருக்கும் தெரியாமல் மந்திரமூர்த்தியைப் பலமுறை சந்திக்க வந்தாள் சோணமுத்து. ஒருநாள் புதியவன் நாடான் மந்திரமூர்த்தியின் குடிசையை அடுத்த பனையில் ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவும் மந்திரமூர்த்தியும் சேர்ந்திருப்பதைப் பார்த்தான். "ஆகா மந்திரமூர்த்தியைப் பழிவாங்க இதுதான் சமயம்" என்று கருதினான்.


அடுத்தநாள் புதியவன் பனை ஏறிக்கொண்டிருந்தபோது சோணமுத்துவின் சகோதரர்கள் கள் குடிக்க வந்தார்கள். அப்போது புதியவன் "அண்ணே உங்கள் தங்கயை¨ வண்ணான் மந்திரமூர்த்தி வைப்பாக வைத்திருக்கிறான் தெரியாதா?" என்றான்.


சகோதரர்களுக்கு ஆவேசம் வந்தது. புதியன் சொன்னான். "நாளை உன் தங்கை சோணமுத்து சந்திக்கும்போது கையும் களவுமாகப் பிடித்துக்கொள்" என்றான். குடும்பர்களும் அவன் சொன்னபடியே மந்திரமூர்த்தியின் வீட்டின் அருகே மரத்தில் மறைந்து இருந்தான். சோணமுத்து அடுக்குபானையுடன் வந்தாள். மந்திரமூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்தாள். இதைக்கண்ட சகோதரர்கள் அவன் வீட்டை வளைத்தனர்.


தனக்கு ஆபத்து வருவதைஉணர்ந்தான் மந்திரமூர்த்தி. மாரண மையை சோணமுத்துவின் நெற்றியில் தடவினான். அவள் மாயமாய் மறைந்தாள். மந்திர மூர்த்தி பூனையாக மாறினான். குடும்பர்கள் இருவரையும் காணாமல் திகைத்தார்கள். புதியவன் மந்திர மையைப் போட்டுப் பார்த்தான். "அந்தப் பூனையைத் துரத்திக் கொல்லுங்கள்" என்றான். குடும்பர்களும் பூனையைத் துரத்தினர். பூனை பாம்பு அரணையாக மாறியது. அதையும் துரத்தினர் குடும்பர்கள். பாம்பு அரணை பல்லியாக மாறியது. பின் பல்லி எலியாகவும் மாறி ஒரு வைக்கோல் படைப்பில் நுழைந்தான். குடும்பர் படைப்பில் தீ வைத்தனர். எலி வெள்ளெலியாக மாறி ஒரு மடைக்குள் நுழைந்தது. குடும்பர்கள் மிளகு வைத்து கொளுத்தினர். வெள்ளெலியோ புகையாக மாறி மறைந்தது. குடும்பர்கள் அவன் இறந்துபோனான் என்று கருதி வீட்டிற்குச் சென்றனர்.


மந்திரமூர்த்தி மாயமாக வீட்டிற்கு வந்ததும் வசிய மருந்து மூலம் சோணமுத்துவைத் தன் மீண்டும் வீட்டிற்கு வரவழைத்தான். அவர்கள் சேர்ந்திருந்தார்கள். அப்போது நடுநிசி. அந்த வேளையில் கொண்டையன் கோட்டை மறவர்கள் அங்கே வந்தனர். மந்திரமூர்த்தியின் வீட்டில் விளக்கு எரிவதைப் பார்த்தனர் வீட்டினுள் எட்டிப் பார்த்தனர். அங்கே மந்திரமூர்த்தியும் சோணமுத்துவும் சேர்ந்திருப்பதைக் கண்டனர்.


கொண்டையன் கோட்டை வீரர்கள் இந்தச் செய்தியைக் குடும்பர்களிடம் கூறினர். அவர்கள் ஊர்க்காரர்களையும் திரட்டிக்கொண்டு வந்தனர். சட்டென்று உள்ளே புகுந்து மந்திரமூர்த்தியைப் பிடித்துக் கட்டினர். ஊர்த்தலைவர் வடமலையப்ப பிள்ளையிடம் கொண்டு சென்றனர். அவர் நடந்த நிகழ்ச்சிகளை விசாரித்துவிட்டு அவனை வெட்டிவிட ஆணையிட்டார். காவலர்கள் மந்திரமூர்த்தியைக் காட்டுக்கு அழைத்துச் சென்று வடதிசை நோக்கி நிறுத்தினர். வாளால் வெட்டினர். ஆனால் அவன் சாகவில்லை. அப்போது மந்திரமூர்த்தி என் உடலில் ஒரு மந்திரக்குளிகை உள்ளது. அது இருக்கும்மட்டும் நான் சாகமாட்டேன். நானே அதை எடுத்துத் தருகிறேன் என்று கூறியபடி அந்த குளிகையை எடுத்துத் தந்தான்.


இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு சாத்தப்பிள்ளையும் சோணமுத்துவும் அழுதபடி ஓடி வந்தனர். அவன் உடல் கிடந்த இடத்தில் தங்களை மாய்த்துக்கொண்டனர். இறந்துபோன மந்திரமூர்த்தி நடுநிசியில் ஆவியாக புதியவனின் வீட்டிற்கு வந்து அவனைக் கொன்றான். பின் ஏழு ஊரிலும் ஆரவாரம் செய்தான். குடும்பர்கள் மந்திரமூர்த்திக்கு கோவில் எடுத்து தடிவீரய்யன் எனப் பெயர்கொடுத்து வழிபட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தடிவீரசாமி_கதை&oldid=1392514" இலிருந்து மீள்விக்கப்பட்டது