தந்தை பெரியார், கருணானந்தம்/003-021
பெரியார் என்ற சொல்லுக்கு உரியார் உலகில் ஒரே ஒருவர்தாம் இருந்து வந்தார்; இன்றும் இருந்து வருகிறார்; இனி என்றுமே இருந்து வருவார். செயற்கரிய செயல்களைத் தொடர்ந்து செய்து முடித்துக் காட்டிய, ஈடற்ற வெற்றி கண்ட, இராமசாமி என்னும் அந்தப் பெருமகனை உலகம் பெரியார் இராமசாமி என்று போற்றிப் புகழ்ந்து, ஏற்றிப் பாராட்டியது. மனிதகுலம் அனைத்தையுமே தம் மக்கள் என்று கருதிச் சொந்தம் பாராட்டி, பந்தம் பாசம் பரிவு காட்டிய, அந்தச் சிந்தனைச் செல்வரை உலகம் தந்தை பெரியார் என்று சிந்தை மகிழ்வுறக் கொண்டாடுகின்றது.
விந்தைசூழ் மனிதரான அந்தப் பெரியார் இராமசாமி, இந்தச் செந்தமிழ் நாட்டில்தான் பிறந்தார், வளர்ந்தார், வாழ்ந்தார். தமிழ்ப் பெருங்குடியினரின் மூச்சுக் காற்றாகி உயிர்ப்பில் புகுந்து, ஊனில் கலந்து, உணர்வில் நிறைந்து இரண்டறத் தோய்ந்து, நிரந்தரமாய்ப் படிந்து போனார்.
அன்னார் பிறப்பதற்கு முன்னால், நமது தமிழ்நாட்டின் நிலை என்ன? தமிழ் மொழியின் கதி என்ன? தமிழ் மக்களின் தரம் என்ன?
உலகத்தில் முதன் முதலில் மனித இனம் தோன்றிய இடமே தமிழ்நாடுதான் - எனவே முதன் முதலில் தோன்றிய மொழியும் தமிழ் மொழிதான் - எனவே தொன்மை வாய்ந்த தமிழகத்தில் தோன்றிய மனித இனமாகிய தமிழினமே மக்கள் குலத்தின் முதன்மை இனம் - என ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டு நிறுவியுள்ளனர். தமிழ் மக்கள் விந்திய மலையினைத் தாண்டி வடபுலத்திலும், கடலைக் கலங்களால் கடந்து ரோம கிரேக்க நாடுகளோடும் பர்மா, மலேயா, சீனம் போன்ற நாடுகளோடும் மேற்றிசையிலும் கீழ்த்திசையிலும் வணிகம் நடத்தினர்; சில நேரங்களில் ஆட்சியினைக் கைப்பற்றி அரசும் நடத்தினர்.
உலகில் மிகச் சிறப்புடன் விளங்கிடும் உயர் தனிச் செம்மொழி தமிழ் மொழியே ஆகும். பழைய மொழிகளான இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியவை சிதைந்தும் தேய்ந்தும் உலக வழக்கொழிந்தும் மறைந்தும் போயின. என்றுங் குன்றாத வளத்துடன் பழைமைக்கும் பழைமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய், உலகவழக்கும், செய்யுள் வழக்கும் ஒருசேரப் பெற்று, நிலவி வருவது நம் தமிழ் மொழியே ஆகும்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்வரையில் தமிழ் மொழி ஒன்றே இங்கு வழக்கில் இருந்து வந்தது. வடமொழியின் ஆதிக்கத் தாக்குதலாலும், போக்குவரத்து வசதிக் குறைவுகளாலும், தமிழ்மொழி உருமாறித் தெலுங்கு என்று ஒரு பகுதியில் வழங்கப்பட்டது. இதனைப் பேசிய மக்கள் தமிழகத்தின் வடபகுதியில் நிறைந்தனர். வடமேற்குப் பகுதியில் வாழ்ந்தோர், சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் கன்னடம் பேசத் தொடங்கினர். எழுநூறு ஆண்டுகட்கு முன், மேற்குப் புறத்து மக்கள் மலையாளம் மொழியத் தலைப்பட்டனர். எனவே பழந்தமிழ் மொழியின் பண்பு கெடாமல், வழங்கப்பட்டு வந்த தமிழ் நாட்டின் எல்லையின் அளவு மட்டுமே சுருங்கியது.
(தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை பிறந்தன என்பது சரியல்ல; தமிழ்தான் திரித்து வழங்கப்படுகிறது எனப் பெரியார் ஈ.வெ.ராமசாமி சான்றுகளுடன் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.)
தமிழ் நாட்டில் சங்ககாலம் என்றழைக்கப்படும் பொற்காலம் ஒன்று, என்றோ இருந்தது! அது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எனலாம். பரந்த விரிந்த அப்பண்டைத் தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டியர் எனும் மூவேந்தர் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தனர். தமிழ்மொழி செங்கோலோச்சி மிக உன்னத நிலையில் மேலோங்கி நின்றது. தமிழ் பயின்ற புலமைச் சான்றோர் அரசர்க்கே அறிவுரை பகரும் திண்மையும், வன்மையும் உடையோராயிருந்தனர். தமிழ்நாட்டில் அப்போது சாதி சமயங்கள் இல்லை. மதபேதங்கள் இல்லை. குலம்கோத்திரம் கிடையாது. ஆண்டான் அடிமைப் பிளவுகள் இல்லை. கடவுள்கள் பல இல்லை. காதலும் வீரமும் வாழ்வோடு பிணைந்திட்ட, இயற்கையோடு இணைந்திட்ட இன்ப வாழ்வு நிறைந்திட மக்கள் களிப்போடு உலாவந்தனர்.
உலக அரங்கில் மிகவும் மேலாக மதித்துப் போற்றப்படும் நிலையிலிருந்த தமிழகத்தில் கிறித்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஊறு நேரத் தொடங்கிற்று. தமிழ் நாட்டின் அகமும் முகமும் மாறிட அயலவர் நாகரிகம் அடிவைக்கத் துணிந்தது. களப்பிரர் என்னும் அந்நியர் படையெடுத்து, ஆட்சியினைக் கைப்பற்றித் தமிழ்ப் பண்பாட்டினை அழித்ததால் வடமொழி ஆதிக்கமும் படையெடுத்தது; சமண பௌத்த மதங்களும் நுழைந்தன. மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. புராணக் கற்பனைகள் மக்கள் வாழ்க்கையில் ஊடுருவிப் புகுந்தன.
கிரேக்கக் கடவுள்களைப் போலவே உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரங்களைக் கடவுளாக வணங்கும் இழிவான நிலைக்கு இறங்கினர் மக்கள்.
வைதிக மதங்களான சைவம், வைணவம் இரண்டின் செல்வாக்கினால் உந்தப்பட்ட பல்லவ அரசர்கள் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தனர்: இவர்கள் ஆளுகையில் சிற்பக்கலை வளர்ந்தது; கோயில்கள் பெருகின; சமண பவுத்த மதங்களை அடியோடு அழித்திட இவர்கள், தமிழ் மூவேந்தர்களின் ஒத்துழைப்பும் பெற்றனர்; பாமர மக்களிடையே பக்தி மார்க்கத்தைப் பரப்ப இசைத் தமிழ் பெரிதும் உதவியது! (பவுத்தமும் சமணமும் மதங்களல்ல; கொள்கைகளே என்பது பெரியார் கருத்து).
புராணக் கருத்துக்கள் தடையின்றிப் புகுத்தப்பட்டன; வடமொழிச் சொற்கள் தமிழில் ஏராளம் கலந்தன. தனித்தமிழின் திண்மை சிதைந்தது; நெகிழ்ச்சியும் தளர்ச்சியும் ஏற்பட்டு, எளிமை இனிமை என்ற முலாம் பூசப்பட்டது. இசையோடு குழைத்து, ஆகா நெறிகளை நுழையவிட்டனர். தமிழ் மக்களிடையே மத நம்பிக்கைகள் வெறிகளாய் மாறின. சாதிச் சழக்குகள் தோன்றின. மனுதர்மம் மர்மப் புன்னகை பூத்தது. மூடக் கருத்துகள் முளைவிட்டன. மவுடிகம் காரிருளாய்க் கவிந்தது.
தமிழகத்தில் மீண்டும் சோழப் பேரரசு தலை தூக்கியது. அரசர்கள் மதச் சார்புடையவர்களாக விளங்கியதால் பெருங் கோயில்களை எழுப்பினர். கோயில்களைச் சார்ந்து வாழும் புரோகிதர், அருச்சகர், இசைவாணர், தேவதாசியர் முதலிய சாதிகள் தோன்றிப் பரவிப் பெருகி வந்தன. மானியங்கள், தானதருமங்கள் வரையின்றி வழங்கப்பட்டன. தமிழ் நாட்டில் வடமொழியின் ஆதிக்கம் தலை விரித்து ஆடியது. பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் பக்குவமாய் ஊடுருவி மக்களின் அறிவுப் பெருக்கத்துக்கு அணை போட்டுவிட்டன. சிந்தனா சக்தியும், தர்க்கத் திறமையும் அற்றவர்களாய்த் தமிழ் மக்கள் ஆக்கப்பட்டனர்.
இதுவரையில் ஆண்டுவந்த தமிழ்மரபு மன்னர்களின ஆட்சிக்கும் தமிழகத்தில் முடிவு நேரிட்டது. நாயக்கர்களும், மராட்டியர்களும், முஸ்லிம்களும், வெள்ளைக்காரர்களும் தொடர்ந்து ஆட்சிபீடத்தில் அமர்ந்தனர். இவர்களுக்கு நாடு-மொழி-மக்கள்-மீது உண்மையான பற்றுதல் ஏற்பட வழியில்லாமல் போயிற்று. மக்கள் போகும் போக்கிலேயே விட்டு, அவர்களது மத சுதந்திரங்களில் தலையிடாததுபோல் நடித்து - ஆனால் உண்மையில் மதமாற்றங்களிலும் ஈடுபட்டுக், குழப்ப நிலையில் தமிழகத்தை ஆழ்த்தினர். சைவ, வைணவர்கள் கலை இலக்கியங்களின் வழியே மத நம்பிக்கைகளைப் புகட்டியது போன்றே, இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் தமிழர்களிடையே தத்தம் மதக் கருத்துகளைப் புகட்டிடத் துவங்கினர். வந்தாரையெல்லாம் வாழவைத்தும், மதம் தந்தாரையெல்லாம் வழிகாட்டிகளாய் மதித்தும் தமிழகத்து மக்கள் தமக்குள் ஆயிரம் சாதிகளாய்ப் பிளவுபட்டுக் கட்டுக்குலைந்தனர். தமிழ்மொழியில் தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளின் பல சொற்கள் விரவி, ஏற்கனவே வடமொழியின் இடைச் செருகலால் தனித்தன்மை குன்றியிருந்த தமிழ்மொழியை மேலும் நோயாளி ஆக்கின.
பிரிட்டிஷ் ஆட்சி இரண்டு நூற்றாண்டுகள் நிலவியிருந்தது. சிதறுண்டு கிடந்த இந்தியாவை ஆங்கிலேயர்கள்தான் ஒரே நாடு எனப் பிரகடனப்படுத்தினர். மொழி, கலாச்சார வேற்றுமைகளால், மாறுப்பட்ட பண்பாடுகளால், பல்லாண்டுகளாய்த் தனித்தனி நாடுகளாய் விளங்கியவற்றையெல்லாம் வெள்ளையர், தம் துப்பாக்கி முனையால் ஒன்றுபடுத்திய பாவனையை உண்டாக்கினர். ஆங்கிலம் ஆட்சி மொழியாகியது. கல்விக் கூடங்கள், நீதி மன்றங்களில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியது. இந்தியரின் மதச் சுதந்திரங்களில் தலையிடுவதில்லையென பிரிட்டிஷ் அரசு உறுதி கூறிவிட்டது.
பாமர மக்கள் நலனுக்கென ஆங்கில அரசு பல புதிய திட்டங்களை விஞ்ஞான அடிப்படையில் புகுத்தியும் அவற்றை அனைவரும் அனுபவிக்க இயலவில்லை. சாதி மதங்களின் பேராலும், கடவுள் சம்பிரதாயங்களின் பேராலும், பாமரனின் வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வந்தன. மனுதர்மம் போன்ற ஸ்மிருதிகளின் அடிப்படையில் அமைந்த இந்துச் சட்டம் ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கிற்று. யாரால் எப்போது உண்டாக்கப்பட்டது? மதமா - அல்லது பல மதங்களின் கூட்டா? இது ஒரே மதமானால் ஏன் முரண்பட்ட பல்வேறு உட்கிளைகள்? சைவ, வைணவப் பெரும் பிரிவும்; பல்வேறு உபபிரிவுகளும்; அவற்றுக்கிடையே ஓயாத போரும் எதனால்? கோடிக் கணக்கில் கடவுளரும் கதைகளும் கற்பனைகளும் மலிந்து காணப்படுவது எவ்வாறு? - என்று விடை காண ஒண்ணாத பல்நூறு வினாக்கள் தொடுக்கக் காரணமாயுள்ள இந்துமதம், தமிழர்களின் வாழ்க்கையினூடே புகுந்து ஒற்றுமை குலைத்துச் சின்னாபின்னமாகச் சிதறடித்தது!
அடிமை வாழ்வில் சுகங்காண ஆரம்பித்தனர் தமிழ் மக்கள். அரசியலில் ஆங்கிலேயனுக்கு அடிமை; பொருளாதாரத்தில் ஜமீன் மிட்டா மிராசு வணிகர்க்கு அடிமை; சமுதாயத்தில் புரோகிதர்க்கு அடிமை! மொழித்துறையில் ஆங்கிலத்துக்கும் வடமொழிக்கும் அடிமை! கலைத்துறையில் புராண இதிகாசங்களுக்கு அடிமை! சாதி அமைப்பில் வர்ணாசிரமத்துக்கு அடிமை!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்து நிலைமை இதுதான்! தாழ்ந்து வீழ்ந்து கிடக்கும் மக்கள் தலைநிமிர, அவர்களைக் கைதூக்கி விட்டுக் கண்ணீரைத் துடைத்துக் கவலைகளைக் களைந்திடத் தனிப்பட்டவர்களோ அமைப்புகளோ இல்லவேயில்லை. சமரச சன்மார்க்கம் காண முயன்ற வடலூர் இராமலிங்க அடிகளார்க்குத் தமிழகத்திலேயே போதிய வரவேற்புக் கிட்டிடவில்லை. கண்மூடி வழக்கமெலாம் மண் மூடிப்போக; நால்வருணம் ஆசிரமம் ஆசார முதலா நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே, சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பே, என்ற அடிகளின் புதிய கருத்துகளை, ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தமிழ் மக்களிடம் வளரவில்லை. மாறாக, அரைத்த மாவையே அரைத்திடும் போக்கில், வழக்கத்தால் செக்கைச் சுற்றிவரும் மாடுகள் போல், பழைய கருத்துகளையே, தத்தம் மொழியில், புதியனபோல் புகுத்திய பலரைத், தமிழகத்தார் விரும்பி விரைந்து ஏற்றனர்! இராமலிங்கருக்குக் கிடைக்காத ஆதரவு அவர் காலத்தில் வாழ்ந்த வடநாட்டு இராமகிருஷ்ணருக்கு இங்கே கிடைத்தது, என்ற வரலாறு இதற்கு உரிய மிகச் சரியான எடுத்துக் காட்டாகும்!
தண்டமிழ் இனத்தார், தம் பண்டைப் பெருமையெல்லாம் மறந்தும் துறந்தும், நிரந்தரமாய் அடிமைப்பட்டுச் சுதந்திரத்தைப் பெறவும் முனையமாட்டார்களோ என்ற மிகப் பெரிய வினாக்குறியாய் வெடித்தெழுந்து தமிழர் நிலை அறைகூவல் எழுப்பிக் கொண்டிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் - தமிழகத்தின் எழுஞாயிறாய், இருள் துடைக்க அருள் சுரந்து, பிறந்தார் நம் தந்தை பெரியார்!
பழந்தமிழ் மக்களால் கொங்கு நாடு என்று அழைக்கப்பட்டுத் தமிழகத்தின் மேற்புறத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்துள்ள நாட்டின் ஒரு பகுதியே இன்றையக் கோயமுத்தூர் மாவட்டம். அங்குள்ள ஈரோடு பெருநகரம் வணிகச் சிறப்புடையதாகும். பெரிய தொடர் வண்டிச் சந்திப்பும் ஆகும். வீட்டில் கன்னட மொழி பேசும் பலிஜ நாயக்கர் வகுப்பினைச் சார்ந்த வெங்கட்ட நாயக்கர், தம் மனைவி சின்னத்தாயம்மாளுடன், அன்றாடம் கூலி வேலை செய்து, பிழைப்பினை நடத்தி வந்தார். உழைப்பின் மேன்மையினை உணர்ந்திருந்த காரணத்தால், பின்னர், வண்டி, மாடுகள் வாங்கி, அவற்றின் வாயிலாக வருவாய்ப் பெருக்கம் தேடினார். நாள்தோறும், ஓய்வின்றி, அரிதின் முயன்று, தம் மனையாளின் அருந்துணையுடன், சிறு மளிகைக்கடை ஒன்றினை வண்டிப்பேட்டையில் துவக்கிய வெங்கட்ட நாயக்கர், தமது நாணயத்தாலும் நாநயத்தாலும், பெரும் மண்டிக்கடையின் உரிமையாளராக, விரைவில் மாறினார். பொருட்களை மொத்தமாகக் கொள்முதலும் விற்பனையும் செய்வதில் ஈடுபட்டு மிகத் தேர்ந்த வணிகரானார். ஈரோட்டில் நாயக்கர் என்றால் அவர்தாம்; நாயக்கர் மண்டி என்றால் வெங்கட்ட நாயக்கரின் மண்டிக் கடைதான்; நாயக்கம்மாள் என்றால் சின்னத்தாயம்மாள்தான் என்று நாடெங்கும் அறிமுகம் கிடைத்தது.
கூலிக்காரராய் வாழ்வு தொடங்கிய நாயக்கர் ஊழையும் உப்பக்கம் காண்பவராய், உலைவின்றித் தாழாது உஞற்றிக், குன்றெனச் செல்வந் திரட்டி, வணிக வேந்தராய் விளங்கினார். பொருள் குளிர் திட்டால் புகழ் பெருகும்; தான தர்மங்கள் பெருகும்; நட்பும் சுற்றமும் நயந்து சூழும்; வீடு மாளிகையாகும்; மாளிகை சத்திரமாகும்; சத்திரத்தில் சாப்பாடு பெருகும்; அந்தஸ்து வளரும்; ஆதரவு நாடுவோர் அலை அலையாய் வருவர்; பக்தி, பெருகும்; பாகவதர்கள் வருவர்; வீடே பஜனை மடமாய் மாறும்! இதெல்லாம் நாட்டு வழக்கந்தானே? நாயக்கர் மட்டும் விதி விலக்கா? பரம பாகவத சிரோமணியானார்; வைணவ சித்தாந்த வள்ளலும் ஆனார் வெங்கட்ட நாயக்கர். அறப்பணியும் திருப்பணியும் அளவு கடந்து செய்தும் தேவைப்பட்ட சிறப்புக் கிடைக்கவில்லை நாயக்கருக்கு! காரணம், திருமணமாகிப் பத்தாண்டுகள் கழிந்தும், சின்னத்தாயம்மாள் இன்னும் தாயாகவில்லையே! பக்தியும் விரதமும் நோன்பும் சிரத்தையும் பெருகின! தொடர்ந்தன!
வைணவ குலதிலகமாம் நாயக்கர் மனம் மகிழ (இரண்டு மூன்று பிள்ளைகள், பிறந்தவுடன் இறந்து போயினும்) கடைசியில், 1877- செப்டம்பர் 28-ஆம் நாளில் கிருஷ்ணசாமியும் 1879- செப்டம்பர் 17-ஆம் நாளில் இராமசாமியும் 1881-ல் பொன்னுத்தாயம்மாளும் 1891-ல் கண்ணம்மாளும் மக்களாய்ப் பிறந்தனர். நாயக்கர் மக்கள், நாடுபோற்றும் நன்மக்களாய்த் திகழ்ந்து, மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனுஞ் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தனர். ஆளுக்கொரு துறையில் புகழீட்டினர். எனினும், ஈரோடு வெங்கட்ட நாயக்கரின் இளைய புதல்வன் இராமசாமி, உலகமே கண்டறியாத ஒப்புயர்வற்ற சிந்தனைச் சுரங்கமாய், அறிவுச் சிகரமாய்க், கருத்துக் கருவூலமாய், எண்ணப் பெருங்கடலாய் எழுந்து நிமிர்ந்து உயர்ந்து ஓங்கிநின்ற பேருண்மை வரலாற்றினை, முறையோடு காண்போம்.
பெரியார் பிறந்தார், 1879-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் அன்று! ஆம்!