தந்தை பெரியார், கருணானந்தம்/006-021

4. துறந்தார்
உறவை முறித்துத் துறவு - ஊர் சுற்றிச் சீர்பெற்றுப் பயணம் தொடங்கிய இடங்காண மடங்கி வந்தது - வணிகத் துறையில் மீண்டும் புகுதல் -1905 முதல் 1907 - ஆம் ஆண்டுவரை.


திரளான செல்வம், தெருவுக்கொரு மாளிகை, வளங்குன்றா வாணிபம், நன்செய் புன்செய் வேளாண்மை, இன்சொல் வாக்கினால் எழும்பிய செல்வாக்கு, ஆணை எதிர்நோக்கும் ஆள் அம்பு, நண்பர் குழாம், எந்நேரம் வந்தாலும் ஏன் தாமதம் எனக்கேளாமல் முன்னே ஓடி நின்று, முறுவலித்து, முகம் பார்த்து அகமகிழும், அன்பு தவழும் இல்லக் கிழத்தி - இந்த இராமசாமிக்கு என்ன குறை என்றுதான் எல்லாரும் பொறாமை மீதுறப் பார்த்து வந்தனர். ஆனால் எங்கோ எதிலோ குறை கண்டார் போலும்! தாயார் கடிந்துரைத்தனரோ, அல்லது தந்தையார் தட்டிக் கேட்டனரோ தெரியவில்லை.

இராமசாமியார் ஓர் நாள் ஊரைவிட்டு யாருக்கும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். நேரே சென்னை மாநகரம் வந்து சேர்ந்தார். தம்முடன் துணைக்கு இரண்டு மூன்று நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். அவர்களில் ஒருவர் பெயர் இராமசாமி நாயக்கர் என்னும் மாப்பிள்ளை நாயக்கர்.

ஆம்! இவர் எஸ். இராமசாமிநாயக்கர். வெங்கட்ட நாயக்கரின் மகள் கண்ணம்மாளின் கணவர். இவருக்கு மஞ்சள் மண்டி வணிகம். முதல் மனைவி கண்ணம்மாளுக்குக் குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி பொன்னம்மாள் மூலமாக ராஜாத்தி என்கிற சுப்புலட்சுமி. காந்தி, சரோஜினி ஆகிய மூன்று பெண் மக்கள். சந்தானம், சாமி இரு ஆண்மக்கள். இவர்களைக் கண்ணம்மாளின் மக்கள் என்றே அனைவரும் கருதுவர். எஸ்.இராமசாமி நாயக்கர் 1951 ஆகஸ்ட் 5-ஆம் நாளும் எஸ்.ஆர் கண்ணம்மாள் 1971 பிப்ரவரி 23-ஆம் நாளும் மறைந்தனர். இந்த இராமசாமி நாயக்கரின் மக்கள் எஸ்.ஆர். சந்தானம், எஸ்.ஆர்.சாமி ஆகியோர் இன்று ஈரோட்டில் பிரமுகர்கள். மாப்பிள்ளை நாயக்கரின் மக்கள் என்று இவர்கள் அன்புடன் அழைக்கப்படுவார்கள்.
கண்ணம்மாளின் அக்காள் பொன்னுத்தாய் அம்மாளை எஸ். இராமசாமி நாயக்கரின் அண்ணன், கல்யாணசுந்தர நாயக்கருக்கு மணம், முடிக்கப்பட்டது. இந்த அம்மாளுக்கு, அம்மாயி அம்மாள், அப்பய்யன் என இருமக்கள் பிறந்ததும், தமது 25 வயதிலேயே, இறந்து போனார். இந்த அம்மாயி அம்மாளுக்குப், பிற்காலத்தில் பெரியார் விதவைத் திருமணம் நடத்தித், தம் குடும்பத்தில் புரட்சி செய்தார். அம்மாயி, அய்யப்பன் இருவருமே இப்போது இல்லை.

சென்னை வரையில் வருவதற்குத்தான் மற்ற நண்பர்களுக்குத் தென்பும் திராணியும் இருந்தது. சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருக்குங்கால், யாரோ ஈரோட்டுக்காரர் அவ்வழியே செல்லக்கண்ட மாப்பிள்ளை நாயக்கர், தங்களைத்தான் தேடச்சொல்லி மாமனார் வெங்கட்ட நாயக்கர் அவர்களை அனுப்பியிருப்பதாக அஞ்சி, இராமசாமியை விட்டு அகன்று, உடன் வந்த மற்றவர்களுடன் ஈரோட்டுக்கே திரும்பிவிட்டார். இராமசாமி துறவு மேற்கொண்டு, சென்னையை விட்டு எங்கோ வடக்கே சென்றுவிட்டதாகவும் ஊரில் அவர் கூறினார்.

கவுதம புத்தருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தையும் தோன்றிய பின்னர், இல்லறத்தில் பற்று நீங்கித் துறவறத்தில் ஆர்வம் பிறந்ததுபோல், இராமசாமியாருக்கு 25 வயது பிறந்த பின்னர் குடும்ப பாசம் குறைந்தது. உறுதியாகத் துறவு நிலை பூணுவது என்று முடிவு செய்து கொண்டு சென்னையை விட்டுத் தனியே புறப்பட்டுப் போனார். ஆந்திரப் பகுதியிலுள்ள பெஜவாடாவை அடைந்தார். ஆங்கோர் சத்திரத்தில் தங்கியிருந்தார். இவரைப்போலவே ஏதோ மனக்குறையால், வீட்டாரிடம் வெறுப்புற்ற இருவர், இவருக்கு அங்கே உற்ற துணைவராயினர். ஒருவர், தஞ்சாவூரைச் சார்ந்த வட மொழிப் புலமை வாய்ந்த வெங்கட் ரமண அய்யர். இன்னொருவர், கோயமுத்தூரைச் சார்ந்த கிராம அதிகாரி கணபதி அய்யர்.

இந்த மூன்று இல்லற சந்நியாசிகளும் கூட்டுச் சேர்ந்துகொண்டு பெஜவாடாவை விட்டு, நிஜாம் மன்னரின் தலைநகரமான அய்தராபாத் போய்ச் சேர்ந்தார்கள். அங்கேயும் ஒரு சத்திரத்தில் தங்கிக்கொண்டு, காலையில் வெளியே கிளம்பி, உஞ்சவிருத்தி செய்து, கிடைக்கும் அரிசியை உணவாகத் தாமே சமைத்து உண்டு, சத்திரத்துத் திண்ணையில் அமர்ந்து தத்துவ விசாரணையில் ஈடுபடுவார்கள். அய்யர்கள் இருவரும் புராண இதிகாசக் கருத்துகளை எடுத்துப்பேச, இராமசாமியார் தமது இயல்பான தர்க்க வாதத்திறமையால், அவர்களை மறுத்தும் எதிர்த்தும் பேச, வீதியில் போவோர் வருவோர் பெருங்கூட்டமாய்த் திரள்வர்.

இராமசாமியாரின் அதுவரை கேட்டிராத அறிவுக் கூர்மை அனைவரையும் கவர்ந்தது. புதுமைக் கருத்துகள், புராணங்களையே பொய்யாக்கும் அளவுக்கு அவரால் விவாதிக்கப்படுவது கண்டு எல்லாரும் வியந்து, பாராட்டினர். குறிப்பாகக் காஞ்சி முருகேசனார் என்ற அரசு அலுவலர் ஒருவர், இவர்களது விவாத மேடை முன், இரசிகராயிருந்து கவனித்து வந்ததில், இம் மூவர்மீதும் மிக்க அன்பு பூண்டு இவர்களைத் தம் இல்லத்திற்கே அழைத்தேகினார். வீட்டரசியார் வெளியூர் சென்றிருந்தமையால், தமக்கும் சேர்த்துச் சமைக்குமாறு பணித்தார். நால்வரும் உண்டபின், நல்ல உரைக் கோவை தொடங்கும். தொடர்ந்து நடக்கும். முருகேச முதலியார் அலுவலகம் சென்ற பின், சந்நியாசிகள் மூவரும், பழைய தொழிலான அரிசிப்பிச்சை ஏற்க வெளியே கிளம்பி விடுவார்கள். சில நாள் திருடர்கள் ஒருநாள் முருகேசனாரிடம் சிக்கிக் கொண்டார்கள். அவர் மனம் வருந்தவே, இவர்கள் மனம் திருந்தினர். அங்கிருந்த ஏனைய தமிழர்களும் சேர்ந்து, பொருள்திரட்டி இவர்களைக் காப்பாற்ற முன்வந்தனர். பலரும் இவர்களுக்குத் தனித்தனியே அழைப்பு விடுத்துத், தத்தம் வீடுகளில் கதாகாலட்சேபம் நிகழ்த்திட வேண்டினர். வடமொழிப் பண்டிதர் இராமாயண பாரதக் கதைகளை வடமொழி சுலோகங்களால் சொல்லித், தமிழிலும் விளக்கம் தருவார். தெலுங்கர் மிகுந்த ஊராகையால், அவற்றைத் தெலுங்கில் மொழி பெயர்த்து உரைக்கும்பணி, இராமசாமியிடம் வந்தது. இவர் தமது சுயமான கற்பனைகள், உவமைகள், சிறு கதைகள், விளக்கமொழிகள் ஆகியவற்றையும் இடையிடையே கலந்து, நகைச்சுவையும், கேலியும் கிண்டலும் விரவிட, ஒரு தனிச் சொற்பொழிவே நிகழ்த்தி விடுவார். மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி, மூவரையும் மிகவும் நேசித்தனர். அவர்களில் இராமசாமியாருக்கு ஏராள ரசிகசிகாமணிகள்!

கட்டை கடைத்தேறக் காசிக்குச் சென்று தீரவேண்டுமென்று, மூன்று சந்நியாசிகளும் முடிவு செய்தனர். மக்களும் பிரியாவிடை தந்தனர்; தடுத்துப் பார்த்துப் பயனின்றிப் போனதால்! செல்வச் செருக்கின் சின்னமாக அதுவரை இராமசாமியார் அணிந்திருந்த தங்க நகைகளான அரைஞாண், மோதிரம், காப்பு, கொலுசு, கடுக்கண், சங்கிலி ஆகியவற்றைத், தம்மிடம் பாதுகாப்பாக விட்டுச் செல்லுமாறு, முருகேசனார் அறிவுரை கூறினார். அவரை நம்பலாமோ என்று முதலில் தயங்கினாலும் பிறகு தெளிந்து எல்லா நகைகளையும் ஒரு சிறு பெட்டியிலிட்டு, ஒரு பட்டியலும் உள்ளிட்டுத், தந்து விட்டார்! அவருக்குத் தெரியாமல், ஒரு மோதிரத்தை மட்டும் மறைவாகத் தம்மிடம் இருத்திக்கொண்டார். இவர் இன்னார் என்பது அவர்களில் யாருக்குமே தெரியாது!

மூவருக்கும் கம்பளிப்போர்வை, கை நிறையப் பணம், கல்கத்தாவுக்கு ரயில் பயணச் சீட்டு இவை வழங்கி, அய்தராபாத் மக்கள் நன்றி பாராட்டினர். பொருள் தீருமட்டும் கல்கத்தா வாசம்; பின்னர் அங்கிருந்த சில நகரத்தார் தமிழ்ப் பெருமக்களின் தயவால், மூன்று பேரும் காசி மாநகர் சென்றடைந்தனர்.

புனித கங்கையில் நீராடிப், புண்ணியத்தலமாம் காசியில் அடி வைத்தால், பண்ணிய பாவங்கள் நண்ணிடாது ஒழியும் என எண்ணிய இராமசாமிக்கு அங்கு ஏமாற்றமே எதிர் கொண்டழைத்தது! காசியில் அன்ன சத்திரங்கள் ஆயிரம் நாட்டி, வருவோர் போவோருக்கெல்லாம் தர்மச் சாப்பாடு படைப்பார்கள் என நம்பியன்றோ சென்றார்! சோறு கிடைத்தது; ஆனால் யாருக்கு? மார்புப் பூணூல் துலங்க, மடி சஞ்சியணிந்து, பிறப்பினால் பூதேவர் எனக், கண்டதும் புரிய வைத்த, அந்தப் புண்ணியாத்மா இருவருக்கு மட்டும்! இனி, அவர்களுக்கு ஏன் இராமசாமியின் துணை? சோறுகண்ட இடம் சொர்க்கலோகம் என, வேறு பாட்டையில் விலகிச் சென்றனர்.

சித்தம் குழம்பினார்; ஏமாற்றம், பசி, பட்டினி; சிறு குடலைப் பெருங்குடல் கவ்விடக், கண்கள் காண மறுக்கக், காதுகள் கேட்க மறுக்கக், கால்கள் நடக்க மறுக்கக், கைகள் சோறு பிசையத் துடிக்கவே - ஒரு சத்திரத்தில் நுழைய முயன்றார். இவர் பார்ப்பனரல்லர் என உணர்ந்த வாயிற் காவலன், அனுமதி மறுத்தான். உள்ளே பந்தி போசனம் நடந்து, பூசுரர் உண்ட மிகுதி எச்சிற் பண்டங்களும், இலையோடு சேர்த்து வெளியே எறியப்பட்டன. எச்சிலிலை தன்னிலே மிச்சமாய் எறிந்த சோற்றுக்கும், பிச்சைக்காரர் சண்டை தெருவிலே! தானும், கொதிக்கும் கும்பியினை அடக்கிட, அவ்வழி நாடிட ஒருக்கணம் எண்ணினார். கோபம், கொந்தளிப்பு, குமுறல், ஆத்திரம்! வீட்டைவிட்டு வெளியேறிய தவற்றை நினைத்து வருந்தினார். அங்கே தமது தந்தையார் இயற்றி வரும் தான தருமங்கள் எவ்வளவு? இங்கே தனயனுக்கு ஒரு பிடி அன்னம் கிடைக்காத அவலமா? ஏன் இந்த ஏற்றத் தாழ்வு நிலை? யார் இதற்குக் காரணம்? இவ்வளவு கொடுமையான நிலையிலும், இடுப்பில் மோதிரம் பத்திரமாக உள்ளதா எனத் தடவிப் பார்த்துக் கொண்டே புறப்பட்டார்!

உண்மையான துறவுக்கோலம் பூண்டார். முகத்தினை மழித்தார். தலை முடி இறக்கினார். ஆடைகளைக் களைந்தெறிந்து கோவணந் தரித்தார். வந்துவிட்டது பரதேசிக் கோலம்! இனி இந்த வேடத்தில் பிழைப்பு நடத்திட இயலும் என்ற நம்பிக்கை பிறந்தது! வேலை தேடி ஒவ்வொரு இடமாகச் சென்றார். மடம் ஒன்றில், சிறு அலுவல் கிடைத்தது. ஒரு வேளை சாப்பாடு. அதிகாலை எழுந்து, குளித்து முழுகித், திருநீறு அணிந்து, அருச்சனைக்கான மலர்கள் பறித்துத் தரவேண்டும். மாலையில் மீண்டும் மூழ்கி வந்து, திருவிளக்கு ஏற்ற வேண்டும்.

கடுமையான நிபந்தனைகள் இராமசாமியாருக்கு இவை. கண் முன் நாகம்மையார் தோன்றினார். அன்றாடம் பல்விளக்குவதும், குளிப்பதும் அவசியமானவை அல்ல, என்ற பிடிவாதக் கொள்கையுடைய தம் கணவரைப், பலவந்தமாய் இழுத்துச் சென்று, பல் துலக்கிக், குளிப்பாட்டி விடும் அம்மையாரின் அன்புப் பணியினை இங்கே யார் செய்ய முன் வருவார்? நடுக்கும் குளிரில் நாள் தவறாமல் நீராடுவதா? மடத்துச் சாமியார் விழித்துக்கொள்ளுமுன் எழுந்து, பட்டை பட்டையாக விபூதியினைக் குழைத்து மேனி எங்கும் தீட்டிக், குளித்துவிட்ட பாவனையில் மலர் பறித்து வருவார். இந்தக் கள்ளத்தனமும் ஒரு நாள் கண்டு பிடிக்கப்பட்டது. கையில் கிடைத்த வேலை கை நழுவிப் போயிற்று! கங்கைக் கரையில் கையேந்திச் சிலநாள் காலங் கழித்தார்! அங்கு கண்ட அநாச்சார, அவலக் காட்சிகள், பிண்டம் போட்டு இறந்தவர்க்குச் சிரார்த்தம் நடத்தும் பண்டாக்களின் ஈனத்தனமான எத்து வேலை மோசடிகள், ஒழுக்கக் கேடும், விபச்சாரமும், வழுக்கி விழுதலும், ஒரு பொருட்டாக மதியாமல், பார்ப்பன மாந்தர் -பெண்டிர் உட்பட, மது மாமிசம் அருந்தும் அயோக்கியத்தனங்கள் - இவை யாவும் காசி நகர் மீதே வெறுப்பினை உண்டாக்கிவிட்டன. இராமசாமி, அங்கிருந்து வேற்றூர் செல்ல விழைந்தார்!

செப்பாலடித்த சிறுகாசும் கைவசமில்லை; அப்பால் செல்வது எப்படியோ எனச் சிந்தித்த வண்ணம், இடுப்பில் கை வைத்தபோது, என்றோ மறைத்து எடுத்து வந்திருந்த மோதிரம் தட்டுப்பட்டது. அதனை விற்றுப் பணமாக்கிக் கொண்டு கிளம்பினார். எதிர்ப்பட்ட ஊர்களில் சிற்சில நாள் தங்கிச், சுற்றிப் பார்த்துக்கொண்டே, ஆந்திராவைச் சார்ந்த ஏலூரு என்னும் ஊரை வந்தடைந்தார். முன்னர் ஈரோட்டில் அலுவல் பார்த்த சுப்பிரமணிய பிள்ளை என்பார், ஏலூரில் இருந்து வந்தது இராமசாமியின் நினைவில் நின்றபடியால், அன்னாரின் இல்லத்தைத் தேடிக் கண்டுபிடித்து, நள்ளிரவில் அங்கு போய்ச் சேர்ந்தார். கவுபீன தாரியான சின்ன நாயக்கரை, அவர் அடையாளம் கண்டுகொள்ள அதிக நேரம் ஆயிற்று. குரல்தான் காட்டிக் கொடுத்தது; சான்று தந்தது. உள்ளம் நெகிழ்ந்த பிள்ளை அவர்கள், இராமசாமிக்கு வேட்டி சட்டை அணிவித்து, வேடத்தைக் களையச் செய்து, தம் இல்லத்திலேயே அன்புடன் இருத்திக் கொண்டார். இதற்கிடையில், இராமசாமியைக் காணாத பெற்றோர் என்ன பாடுபட்டனர்? எண்ணற்ற பொருட் செலவு; எங்கெங்கோ தேடி வர ஆள் செலவு; தந்திகள் கடிதங்கள் பறந்த வண்ணம் இருந்தன! நாயக்கர் குடும்பத்தில் இப்படியொரு நலிவா! வெங்கட்ட நாயக்கரும் கிருஷ்ணசாமியும் வெகு தூரம் தேடி நொந்து, அந்தோ இளவலை இழந்தோம் என வருந்தி வாடினர். இராமசாமிக்கு எல்லாவற்றிலும் நெருங்கிய நண்பரான - பொறியாளரும் தமிழறிஞருமான பா.வே. மாணிக்க நாயகரும் பல் வகையானும் தேடி அலைந்தார்.

சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிறந்த பா.வே. மாணிக்க நாயகர், 12 வயதில் பள்ளி சென்று, 25 வயதில் பி.இ. தேர்ந்து, மேற்பார்வைப் பொறியாளர்வரை உயர்ந்தவர். மேட்டூர் அணை இவர் திட்டமிட்டுக் கட்டியதென்பது, மறைக்கப்பட்ட வரலாறு. பெரியாரினும் 7, 8 ஆண்டு மூத்தவர். இரண்டறப் பழகிய இனிய நண்பர். பல்கலை வல்லுநர்; ஆங்கிலம், வடமொழி, தனித்தமிழ் மூன்றிலும் மறைமலையடிகளை ஒத்தவர். இங்கிலாந்து சென்று பாரிஸ்டரும் ஆனார். காங்கிரீட் ஆராய்ச்சியும் செய்தவர். கம்பன் புளுகும், வால்மீகி வாய்மையும் என்ற நூலின் ஆசிரியர். வான்மீகரின் இராமாயணம் இயல்பானது, உண்மையானது; கம்பராமாயணம் வெறும் புளுகு என இவர் நிலை நாட்டினார். 60 வயதில் மரணமடைந்துவிட்டார்.

ஏலூரில் தங்கியிருந்த இராமசாமி, தமது ஆதரவாளரான பிள்ளையவர்களிடம் உள்ளதை உள்ளவாறு உரைத்துத், தம் பெற்றோருக்குத் தமது இருப்பிடத்தை அறிவிக்க வேண்டாம் என வேண்டிக் கொண்டார். ஒரு நாள் பிள்ளையவர்களுடன் கடைவீதி வழியே செல்லும்போது, எள் மண்டி சீராமுலு என்பாரின் கடை கண்ணிற்பட்டது. இரத்தத்தோடு ஊறிய வணிக உணர்வு உந்தித் தள்ளிட, இராமசாமி சிறிது எள்ளை எடுத்து, அகங்கையில் வைத்துத் தேய்த்து, மோந்து, பின்னர் அங்கேயே போட்டுவிட்டு, அப்பால் சென்று விட்டார்.

மண்டிக்கடை சீராமுலுவுக்கு மிக்க மனவருத்தம் எள்ளைப் பார்த்து விட்டுக் கொள்முதல் செய்யாமல், ஒன்றுமே பேசாமல் போகிறாரே, இவர் யாரெனச் சுப்பிரமணிய பிள்ளையின் பின்னால் வந்த சேவகனைக் கேட்டறிந்து கொண்டு, தமக்கு அறிமுகமான பெரு வணிகரான வெங்கட்ட நாயக்கருக்கு ஒரு கடிதம் எழுதி, “உங்கள் சின்னக்கொடுக்கு இராமசாமி, எள் வாங்காமல் போய்விட்ட காரணம் என்ன? என்னிடம் என்ன கோபம்?” என்று கேட்டார்.

துப்புத் துலங்கிவிட்டது! பொங்கும் மகிழ்ச்சியில் பூரித்துப் போனார் வெங்கட்ட நாயக்கர்! பிள்ளைப் பாசத்தால் உள்ளம் மெலிந்தவரன்றோ? உடனே புறப்பட்டார் ஏலூரு நோக்கி! மண்டி சீராமுலுவைக் கண்டு, எல்லாம் விசாரித்தறிந்து, அலுவலர் சுப்பிரமணிய பிள்ளையின் இல்லத்தைத் தெரிந்து கொண்டார். நள்ளிரவு ஆகிவிட்டது, ஆர்வ மிகுதியினால் கதவைத் தடதடவெனத் தட்டினார், முன்புறம் படுத்திருந்த இராமசாமிதான் கதவைத் திறந்தார். தந்தையைக் கண்டதும் ‘திருதிரு’வென விழித்துத், தலை கவிழ்ந்து நின்றார். தந்தையோ மகனைப் புரிந்துகொள்ளாமல், பிள்ளைவாள் எங்கே என்று தேடினார். சுப்பிரமணிய பிள்ளைக்கோ எல்லாம் மர்மமாயிருந்தது! நாயக்கர் எப்படி இங்கே வந்தார் என்ற மாயம் புரியவில்லை. திகைத்துக் குழம்பித், தடுமாறி, ‘வாருங்கள்’ என வரவேற்று, அமர்த்தினார். “முதலில் என் மகன் எங்கே யிருக்கிறான்? சொல்லுங்கள்!” எனத் துடித்தார் நாயக்கர்.

மகனே முன்வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை. பிரிந்தவர் கூடினர். பேச்சு எழவில்லை. ஒருவாறு இருவரும் மனந்தெளிந்த பின்னர், விசாரணை தொடங்கிற்று. மகன் ஊரூராய்ப் பயணம் மேற்கொண்ட கதையெல்லாம் கேட்டு வருந்திய தந்தை, அவரைத் தேடித், தாமும் போகாத ஊரெல்லாம் போய், அலைந்து திரிந்து வருந்திய கதைகளையும் கூறினார். பின்னர், தந்தையை இரண்டொரு நாள் அங்கேயே தங்கியிருக்குமாறு வேண்டிக்கொண்ட இராமசாமி, அய்தராபாத் முருகேச முதலியாருக்குத் தந்தி கொடுத்துத், தாம் ஒப்படைத்த நகைகளை அனுப்பச் செய்தார். பெட்டியும் எல்லா நகைகளோடு வந்து சேர்ந்தது. நகைகளையெல்லாம் தன் பிள்ளை விற்றுச் சாப்பிட்டுத் தீர்த்திருப்பானோ என்று அய்யுறவு கொண்டிருந்தார் நாயக்கர். “இவ்வளவு நாளும் சாப்பாட்டுக்கு என்ன செய்தாய் மகனே?” எனத் தந்தை ஆதங்கத்தோடு கேட்க, “நீங்கள் ஈரோட்டில் எவ்வளவோ காலமாய்ச் செய்துவரும் அன்னதானத்தை வெளியூர்களில் வசூலித்து விட்டேன்” எனச் சமத்காரமாய்ப் பதிலுரைத்தார் இராமசாமி. அழுவதா சிரிப்பதா எனப் புரியா விட்டாலும், மகனது சாமர்த்தியத்தைக் கண்டும், அவரது வணிக மனப்பாங்கு குன்றாதிருந்ததைப் பார்த்தும், அளவிட இயலா மகிழ்வுற்றார். ஈரோட்டில் உள்ள மக்கள் தம் இளைய குமாரரைப் பற்றித் தவறாக எண்ணாதிருக்கும் பொருட்டு, எல்லா நகைகளையும் மீண்டும் அணிந்துகொள்ளச் செய்து, இருவரும் புறப்பட்டனர், பிள்ளையவர்களுக்கு உள்ளம் நிரம்பிய நன்றி தெரிவித்து!

ஏலூரிலிருந்து ஈரோடு மீண்டதுமே, தம் பிள்ளைக்குக் குடும்பப் பொறுப்பு வேண்டிய அளவு தொடர்ந்து ஏற்பட ஏதுவாகத், தமது வெங்கட்ட நாயக்கர் மண்டி என்ற மண்டிக் கடை விலாசத்தை, “ஈ.வெ. இராமசாமி நாயக்கர் மண்டி” என்று மாற்றிவிட்டார் வெங்கட்ட நாயக்கர். தாயாருக்கு இராமசாமி மீதுதான் அன்பு அதிகமாம் பெரியபிள்ளை கிருஷ்ணசாமியைவிட! இதை அவர் உரையிலேயே காணலாம்: “எங்கம்மாவுக்கு நானும் எங்கண்ணனுமாக இரண்டு ஆண்பிள்ளைகள். எங்கம்மாவுக்கு என்மேல்தான் அதிக ஆசை. ஆனால் என்னைத் தொடமாட்டார்கள். தொட்டுவிட்டால் குளிப்பார்கள். காரணம், நான் கண்ட இடத்தில் சாப்பிடுகிறேன் என்பதால். என் அண்ணனைக் கண்டால் பிடிக்காது. அண்ணனும் அதை லட்சியம் பண்ணுவதில்லை. அம்மாவுக்குக் காசுமேல் நிரம்பக் குறி. சாப்பிடாமல் கூடச் சேர்த்து வைப்பார்கள். வருடம் எப்படியும் ஆயிரம் ரூபாயாவது மீதமிருக்கும். அண்ணனுக்குப் பணம் தேவையாயிருக்கும். அம்மாவிடம் போய் உட்கார்ந்துகொண்டு பணம் கேட்பார். அம்மாவோ ‘என்னிடம் ஏது பணம்?’ என்பார்கள். என்னவெல்லாமோ கூறிப்பார்ப்பார். பணம் தரமாட்டார்கள். கடைசியில், ‘இந்தாம்மா? நீ செத்தால் நான்தான் கருமம் செய்யணும். அவன் கொள்ளிகூட வைக்க மாட்டான். நீ பணம் கொடுத்தால்தான் செய்வேன், இல்லாவிட்டால் நீ செத்தவுடன் நான் எங்கேயாவது ஊருக்குப் போய்விடுவேன்’ என்பார்.

உடனே எங்கம்மா, ‘ஏதோ ஒரு பிள்ளைதான் அப்படிப் பிறந்து விட்டது. நீ அப்படியெல்லாம் செய்துவிடாதே. இந்தா’ என்று கூறிப் பணம் கொடுத்து விடுவார்கள்.”