தந்தை பெரியார், கருணானந்தம்/019-021



 17. பிணைந்தார் 
காங்கிரஸ் தோல்வி தம் தோல்வி. அண்ணா சந்திப்பும் பெரியார் ஆதரவும்-கடவுள் மறுப்பு வாசகங்கள் அறிவிப்பு-டெல்லி ஆதிக்கக் கண்டன நாள் லக்னோ பயணம்-கோயில் கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. ஒத்திவைப்பு-சிந்தனையாளர், பகுத்தறிவாளர் கழகங்கள் தோற்றம்-பிராமணாள் பெயர் அழிப்புக் கிளர்ச்சி-அனைத்துச் சாதியும் அர்ச்சராகச் சட்டம்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் கண்டனமும் - சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு-1967 முதல் 1972 முடிய.

1967 ஜனவரித் திங்களில் தேர்தல் வேலைகள் மிகுந்த முனைப்புடன் நடைபெற்றன. பெரியாரின் பிரச்சாரப் பணி தொய்வின்றி நடந்து வந்தது. முழுநம்பிக்கையோடு காங்கிரஸ், மீண்டும் தமிழக ஆட்சிப்பொறுப்பில் அமரலாம் என்று எண்ணி, வேலை செய்தது. எதிர்க்கட்சிகளுக்கு எல்லாவகையான தொல்லைகளும் தரப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது விருகம்பாக்கம் மாநாட்டை வரலாற்றுச் சிறப்புடையதாக நடத்தி முடிந்திருந்தது. “காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்கிறார். படுப்பது நிச்சயம். ஆனால் ஜெயிப்பது சந்தேகம்” என்று அந்த மாநாட்டில் பேசினார் ராஜாஜி. “சைதாப்பேட்டைத் தொகுதியில் திருவாளர் பதினொருலட்சம் போட்டியிடுவார்” என்று அண்ணா, கலைஞரின் பெயரை அறிவித்தார். ம.பொ.சி. உதயசூரியன் சின்னத்திலேயே தியாகராய நகர் தொகுதியில் போட்டியிட்டார். அண்ணா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்ததால், தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணமோ நம்பிக்கையோ இல்லாமல்தான் போட்டியிடுவதாக, மாற்றாரை நினைக்கத் தூண்டிற்று அண்மையில் பக்தவத்சலம் ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் போதாது என்று, புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனை நடிகவேள் எம்.ஆர். ராதா கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டதாகச் செய்தி பரவியது. எம்.ஜி.ஆர், பரங்கிமலைத் தொகுதிக்கே செல்ல முடியாமல், மருத்துவமனையில் படுக்கையில் இருக்க நேர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிகளில் இந்தத் தடவை மாணவச் சமுதாயத்தின் பங்கு அதிகமாயிருந்தது. போலிசார் ஆளுங்கட்சிக்கே அனுசரணையாகவும், எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவது கண்டு, கலைஞர் மு. கருணாநிதி மனம் வெதும்பி, மயிலைப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது ’தேர்தல் முடிய இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. ஆறே நாளில் ஆட்சி மாறும். அட்டகாசம் வேண்டாம்‘ என்று எச்சரித்தார். ’என்ன, மிரட்டுகிறாரோ?' என்று பக்தவத்சலம் அலட்சியமாய்ப் பேசினார். தேர்தலுக்கு முதல் நாளிரவு கலைஞரையே தீர்த்துக்கட்டக் காலிகள் முனைந்தனர்.

எப்படியோ? எல்லாருடைய கணிப்புக்கும், எதிர்பார்த்த முடிவுக்கும் முரண்பாடாகத், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின! ‘அய்யோ இவர் தோற்றிருக்கக் கூடாதே!’ என்று அண்ணாவே மனம் வருந்தக், காமராசர் விருது நகரில் தோற்றார். “தமிழர்களுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் போயிற்றே!” என்று: சி.சுப்ரமணியமும், ஆர்.வெங்கட்ராமனும் தோற்றபோது, அண்ணா ஆதங்கம் தெரிவித்தார். கூட்டணி மந்திரிசபை அமையுமோ எனப் பலர் அஞ்சிக் கொண்டிருந்ததும் நடைபெறாமல், தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்றது. காங்கிரஸ் மிக மிக மோசமாகத் தோற்றது. தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 137, காங்கிரஸ் 49, சுதந்திரா 20, இடதுசாரிக் கம்யூனிஸ்ட் 11, வலது சாரிக் கம்யூனிஸ்ட் 2, முஸ்லீம் லீக் 3 என்ற முறையில் வெற்றிகள் பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. 25, காங்கிரஸ் 3, சுதந்திரா 6, இடது சாரிக் கம்யூனிஸ்ட் 4, முஸ்லீம் லீக் 1 என்பதாக வெற்றிகள் கிடைத்தன.

பெரியாரின் ஏமாற்றத்திற்கும், வருத்தத்திற்கும் ஈடு சொல்லவே முடியாது. காங்கிரஸ் தோற்றதில் ஏமாற்றமும், ஆச்சாரியார் கூட்டணி வென்றதில் வருத்தமும் மிகுந்தன! பெரியார்.

"பார்ப்பனர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்; பார்ப்பனர் ஆதரவில் பணக்காரரும் வெற்றி பெற்று விட்டனர்.

சோஷலிசம் சமதர்மம் பற்றி நம்மக்கள் கவலையற்றவர்களாக நடந்து கொண்டார்கள்.

எதிரிகளும் பொய்யும் புரட்டையும் ஆயுதமாகக் கொண்டு போராடினார்கள்.

இவைகளுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் ஆட்சி தெரிந்தோ தெரியாமலோ நல்ல ஆதரவளித்து வந்திருக்கின்றது. தங்கள் தங்களை முக்கியப் படுத்திக்கொண்டு, காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும் என்பது பற்றிக் கவலைப்படாததால் காங்கிரஸ்காரர்களிலேயே மிகப் பெரும்பாலானவர்களுக்கு வேலையில்லாமலேயே இருந்து வந்தது. பொதுவாகக் காமராசர் தோல்வியைத் தவிர, மற்ற தோல்வி எதுவும் எனக்கு அவ்வளவாகக் கவலை தரவில்லை . நமது மக்கள் ஜனநாயக உரிமைக்குத் தகுதியற்றவர்கள் என்பது எனது வெகு நாளைய கருத்து. இப்போதைய வெற்றியை மாற்ற வேண்டும் என்பதில், இந்த வெற்றியை அளித்த மக்களின் யோக்கியதையைச் சரிவர நிர்ணயிப்போமானால், நாம் ஒன்றும் தனி முயற்சி எடுத்துப் பாடுபட வேண்டியதில்லை.

மற்றும், நம் உயிர்போன்ற கொள்கைகளுக்கு இந்த ஆட்சியில் கேடு நேராதவரை, ஆட்சியின் போக்கைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை என்றே கருதுகிறோம். பொதுவாக, இதுபோன்ற பார்ப்பனர் வெற்றி (பார்ப்பனரல்லாதார் தோல்வி) பற்றி எனக்கு இதற்கு முன் மூன்று அனுபவங்கள் உண்டு. மூன்றிலும் பார்ப்பனர் வெற்றி நிலைத்த பாடில்லை. ஆதலால் இன்றைய “பார்ப்பனர் வெற் பற்றியும் ஒன்றும் மூழ்கிப் போய் விடவில்லை என்றே நம் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நானும் அதிகக் கவலைப்படவில்லை .

பொதுவாக நம்நாட்டுக்கு இப்படி ஓர் நிலை வரக்கூடும் என்று கருதியே, 1963-ல், காமராசர் தமிழ்நாட்டு முதல் மந்திரி பதவியை விட்டு அகில இந்தியக் கட்சிப்பணிக்குச் சென்றபோதே, நான் கூடாது என்று பத்திரிகையில் எழுதியதோடு, ‘தங்கள் ராஜினாமா தமிழர்களுக்கும், தமிழ் நாட்டிற்கும், தங்களுக்கும் தற்கொலைக்கு ஒப்பாகும்’ என்று தந்தியும் அனுப்பினேன்.

அவர் விலகியதன் பயனாகத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமான ஆட்சி ஏற்படுவதுடன், பொறுப்புள்ள ஆட்சி அமைவதற்கில்லாமலே போய்விட்டது. வடநாட்டிலும் பொறாமை, துவேஷம், கோஷ்டி, ஏற்பட இடம் ஏற்பட்டுவிட்டது!

காமராசர் தோல்வியைப்பற்றி, பலர் என்னிடம் வந்து, துக்கம் விசாரிக்கும் தன்மைபோல், தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு நான் அளித்த ஆறுதல் - 1967 பிப்ரவரி 23ந் தேதி தோல்வியைப் பற்றிக் கவலைப்படுவதைவிட, 1966 நவம்பர் 7-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற கொலை முயற்சியில், அவர் உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள், என்று சொல்லி அனுப்பினேன். நானும் அப்படியே நினைத்துத்தான் சரிப்படுத்திக் கொண்டேன்!

இனி, நமது வேலை, நமது கொள்கைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும், அதனால் ஏற்படும் பலாபலன்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டியதுமே நமது கடமையாகும்” என்று 27.2.1967 “விடுதலை”யின் தலையங்கப் பகுதியில் கையெழுத்திட்டு எழுதினார்.

காங்கிரஸ் தோல்வியைத் தம் தோல்வியாகக் கருதும் பரந்த பெரிய உள்ளம், பிறர் நோயைத் தம் நோயாய்க் கருதும் பேராண்மை, ஈர நெஞ்சம் பெரியாருடையதாகும். இடைக்காலத்தில் பதவியிலிருந்த பக்தவத்சலம், நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன என்றார். அடுத்துவரும் அரசு, பழிவாங்கக்கூடும், என்று பயந்து, கோட்டைக்குச் சென்று சில முக்கியமான இரகசிய ஃபைல்களைக் கொளுத்தி விட்டார் என்றும் அவர்மீது குற்றம் கூறப்பட்டது. சுதந்திராவில் 20 சட்டமன்ற உறுப்பினர் வென்றதாலும், தி.மு.க. ஆட்சிப்பொறுப்பு அனுபவம் பெறாத கட்சி என்பதாலும் ராஜாஜி அன்பர்கள், ராஜாஜி முதல்வராக வரவேண்டுமென அவரிடம் விருப்பம் கேட்டபோது, “அதை அவாள் சொல்ல வேண்டாமோ" என்றாராம். கே. ராஜாராம் வழியாக, இது அண்ணா காதுக்குப் போயிற்று. 6.3.67 அன்று அறிஞர் சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சரவை, சென்னை ராஜாஜி மண்டபத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது. நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, கே.ஏ.மதியழகன், சத்தியவாணிமுத்து, ஏ.கோவிந்தசாமி, எஸ். மாதவன், எஸ்.ஜே.சாதிக்பாஷா, மா.முத்துசாமி ஆகியோர் அமைச்சர்கள். 'இந்தி எதிர்ப்பு நீடிக்கும்; கோயில்கள் முதலிய அறநிலையங்கள் பாதுகாக்கப்படும், குடிசை வாழ்வோர் நிலை மேம்படுத்தப்படும். மது விலக்கும் நீடிக்கும்; மொத்தத்தில் நல்ல ஆட்சி நடைபெறும் என அறிவித்தார் புதிய முதலமைச்சர்! பல லட்சம் மக்கள் ராஜாஜி மண்டபத்தருகே குழுமி வாழ்த்து முழக்கினர்.

மதுவிலக்கு நீடிக்கும் என்று பத்திரிகையாளர்களிடையே அண்ணா கருத்தறிவித்ததும், பெரியார் தமது நீண்டகால வலியுறுத் தலான கொள்கையை நினைவு படுத்தலானார், 4.3.1967 “விடுதலை” தலையங்க மூலமாய். “நான் காங்கிரசை விட்டு வந்த பிறகு, சுமார் 30 ஆண்டுகளாகவே, இன்று உள்ள மதுவிலக்குக் கொள்கைக்கு எதிரி! இதற்காக, நான் மதுக்குடங்களைக் காவடி கட்டிச் சுமந்து போகிற மாதிரி, என்னைக் கேலிச் சித்திரம் போட்டுப் பத்திரிகைகளில் கண்டித்து எழுதியுள்ளார்கள். நான் காங்கிரஸ் மது விலக்குக்கு, உள் எண்ணம் கண்டுபிடித்து, “குடி அரசு” இதழில் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதியிருக்கிறேன், நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன்!

1938-ல் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் பதவிக்கு வந்த போது, நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக் கட்டுவதற்கு ஓர் ஆதாரம் தேடப்பட்டது. அதாவது 100க்கு 5வீதமே படித்த மக்களாயிருந்த நாம், ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, 100க்கு 7 பேர் படித்த மக்களானோம். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ராஜாஜி, கல்வியை இன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை. அதனால் வரவு செலவைச் சரிக்கட்ட 2.600 பள்ளிகளை (அதுவும் கிராமப் புறங்களில்) மூடவேண்டியுள்ளது அவசியமாகிறது என்று சொல்லியே, மதுவிலக்கினால் ஏற்பட்ட நட்டத்தைச் சரிக்கட்டினேன் என்று சாக்கு கண்டு பிடித்துக் கொண்டார். ஆனால் அந்த மதுவிலக்கு அமலுக்கு வந்த நாள் முதல் நாளதுவரைக்கும், அந்த மதுவிலக்குக் காரணமாக, அது ஒரு குடிசைத் தொழிலாக மாறி. இன்று குடிப்பது ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவியிருக்கிறது!

இந்த மதுவிலக்கினால் குடியர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்தபாடில்லை என்பதோடு, இதற்காகக் குடிகாரர்கள் செலவிடும் பணமும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்ததேயல்லாமல் குறையவில்லை என்பதோடு, முன்பு மதுக்கடைக்குச் சென்று வாங்கிக் குடித்தவர்களுக்கு, இன்று வீடு தேடி வந்து விநியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மது உற்பத்தித் தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள், நாணயமில்லாதவர்கள் பெருகி இருக்கிறார்கள். அவர்கள் போலீசுக்கு நண்பர்களாக ஆகிவிடுகிறார்கள். குடியர்கள் உடல் நிலையோ மிகமிகக் கேடடைந்தும் விடுகிறது.

இன்று ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு’ ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சியார், ராஜாஜியைத் திருப்திப்படுத்த, அவருக்குப் பயந்து, மதுவிலக்கைத் தீவிரப்படுத்துவோம் என்று கூறி இருப்பதாகக் கருத வேண்டியிருக்கிறது. நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து, கெட்டு உழல வேண்டும் என்பதுதான் பார்ப்பன தர்மம். எந்த நிலையிலும் பார்ப்பனர் யாருக்குமே நல்லவழி காட்டமாட்டார்கள்!

இந்த மது விலக்குத் துறையில், தேவைப்பட்டவர்களுக்கு எல்லாம் மது கிடைக்கும்படியும், மதுவினால் உடலும் புத்தியும், கெடாதபடியும் இருக்கத் தக்க வண்ணம், அது அனுமதிப்பு ஏற்படுத்தினால், சர்க்காருக்கு நல்ல நிதி வரும்படி ஏற்படுவதுடன், பார்ப்பனர் தவிர்த்த மற்ற சகல துறையிலும் உள்ள மக்களில், நல்ல அளவுக்கு, இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைப்பது உறுதியான வுடனேயே, கழகத் தோழர்களுக்குப் பெரியாரின் நிலை இப்போது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும், ஐயமும் ஏற்பட்டது இயற்கைதானே?-“நான் வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன். அதாவது இவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டேன்” என்றார் பெரியார். ஏன்? காமராஜை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பெரியாருக்குக் காங்கிரஸ்காரர்களைவிட வேண்டியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில்தானே இருக்கிறார்கள்? பெரியார் அவர்கள் எல்லாரையும் எவ்வளவோ (ரிசர்வேஷன் இல்லாதபடி) திட்டியும், அவர்களில் யாரும் பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசியதில்லை ஒரு சிலர் சந்திக்க நேர்ந்த போதும் மிகப் பணிவுடனும், பண்புடனும் நடத்திருப்பார்கள். இப்போது மந்திரியாகியிருப்பவர்கள் யாருமே பக்தவத்சலத்தைவிட மோசமாக நடந்து விடமாட்டார்கள் என்று திடமாக நம்பினார் பெரியார்

பெரியாரின் கொள்கையான பகுத்தறிவு, ஜாதி ஒழிப்பு, வகுப்புவாரி உரிமை இவைகளில் எதுவுமே காங்கிரஸ்காரர்களுக்கு உடன்பாடல்ல! ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு உடன்பாடு உண்டு! எதிர்த்துப் பேசியதே இல்லை என்பதும் உண்மை தி.மு.க. தலைவர்கள் பகுத்தறிவுவாதிகள்; மந்திரிகளில் பார்ப்பனர் யாருமில்லை ; பாதிப் பேருக்குமேல் முன்பே திராவிடர் கழகம் - சுய மரியாதை இயக்கங்களில் இருந்தவர்கள்.

தி.மு.க. சோஷலிசத்துக்கு விரோதமாக இருக்காது என்பதால், இப்போத பார்ப்பனருக்குத்தான் இது நெருக்கடியான காலம்; சோதனைக்காலம் எனவே, இந்த மந்திரி சபைக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என்று பெரியார் உறுதியாகக் கருத்துக் கொண்டார். பெரியார் எப்படி எண்ணுவார் என்பது அண்ணாவுக்குத் தெரியாதா?

அரசியலில் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கற்பித்து நாட்டில் வேரூன்றச் செய்த அண்ணா பதவி ஏற்றவுடன், சென்னையில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களை எல்லாம் சென்று சந்தித்தார்; காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இல்லங்களுக்கும் சென்று சந்தித்தார் அவர் மனம் அமைதி பெறவில்லை ! ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்தபோது, யாரை உளமார எண்ணி உணர்ச்சி வயப்பட்டாரோ, அவர் சென்னையில் இல்லை! திருச்சியிலிருக்கிறார் தந்தை பெரியார் என்று தெரிந்ததும், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி ஆகிய அமைச்சர்களோடும், வெற்றி வாய்பிழந்த அன்பில் தர்மலிங்கத்தோடும், இரவோடிரவாகப் புறப்பட்டுத் திருச்சி சேர்ந்தார்.

செழியன் போன்றார் தடுத்த போது, என்னை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. முதலமைச்சராகியும் நான் அவரைப் பார்க்காவிட்டால், மனிதப் பண்பே ஆகாது என்று கூறினார் அண்ணா.

பெரியாரின் வரலாற்றில் இதுதானே பெரிய வெற்றி அவர் வளர்த்த பிள்ளைகள், அவரிடம் நேரிடையாகப் பயிற்சி பெற்ற தொண்டர்கள், இன்று தமிழகத்தின் முதலமைச்சராக - அமைச்சர்களாக" வீற்றிருக்கிறார்கள். பதினெட்டு ஆண்டுகள் தம்மை விட்டுப்பிரிந்து, விலகிச்சென்று வாழ்ந்தவர்கள், தாம் கண்ணீர்த் துளிகள் என்று தாக்கியதையும், கேலியாகப் பேசியதையும், தேர்தல்களில் எதிர்த்தே பிரச்சாரம் புரிந்ததையும் பொருட்படுத்தாமல், தந்தை மகற்காற்றும் நன்றியாக, நம்மை அவையத்தில் முந்தியிருக்கச் செய்து விட்டார்; இனி மகன் தந்தைக்காற்றும் உதவிதான் பாக்கி பதவியைப் பெரிதாக மதிக்காமல் உடனே நாமே சென்று அவரைப் பார்க்க வேண்டுமென்று போளார்களே இந்த நிகழ்ச்சிக்கு ஈடான சரித்திர நிகழ்ச்சி உலக வரலாற்றிலேயே கிடையாதல்லவா?

தம்மைத் தேடி வந்து விட்டவர்களைக் கண்டதும், தமது கண்களையே நம்பாமல், பெரியார் கூச்சம் மேலிட்டுக் கூனிக் குறுகினாலும், தாங்கொணா மகிழ்வுப் பெருங்கடலில் மூழ்கிச், சிக்கித், தத்தளித்துப் போய்விட்டார் அண்ணாவும் முதலில் தந்தையின் உடல் நலம், மணியம்மையாரின் உடல் நலம், ஈரோட்டு வீடு, இப்படி எதை எதையோ விசாரித்து விட்டுப், புறப்படும்போதுதான், “அய்யா! நாங்கள் அவ்வப்போது எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்லி வரவேண்டும்“ என்றார் . பெரியாரும் “அப்படியே ஆகட்டுங்க” என்று சொல்லவேண்டி வந்தது.

அண்ணாவும் அமைச்சர்களும் சென்றார்கள், கண்டார்கள், பெரியாரின் இதயத்தை வென்றார்கள், மீண்டார்கள்! ஆனால் பெரியாருக்குத் தலைவலி ஒன்றை உண்டாக்கி விட்டார்களே? கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழச்சொன்னாலும் பெரியாரின் ஆணையைச் சிரமேற்கொள்ளும் இலட்சிய வீரர்களின் கூடாரமல்லவா திராவிடர் கழகம்? அதிலுள்ள சிலர் (அணுக்கமான சிலர்) பெரியார் தவறு இழைத்து விட்டார் என்றே கருதினார்கள்; பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளாகப் பின்பற்றி வந்த கோட்பாட்டிலிருந்து பெரியார் விலகி விட்டதாக நம்பினார்கள்! வருத்தத்தோடு சிலரும், கோபத்தோடு பலரும் சடிதம் எழுதினார்கள். பெரியார், அவர்களைச் சமாதானப் படுத்தி, விளக்கமாக ஒரு தலையங்கம் 9.3.67 “விடுதலை" ஏட்டில் எழுதினார்.

“தேர்தல் முடிவுக்குப் பின்னிட்டு நான் தெரிவித்த எனது கருத்தாகிய அறிக்கைகளைப் பற்றி எனது தோழர்களிடையிலும், காங்கிரஸ்காரர்களிடையிலும், பொது மக்களிடையிலும் ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

சிலரை நேரில் பார்த்த அளவிலும், சிலரால், எனக்கு எழுதப் பிட்ட கடிதங்களைப் பார்த்த அளவிலும் எதிர்க் கட்சித் தலைவர்கள் என்னைக் கண்டு பேசிய பிறகு, எனது கருத்து மாறிவிட்டதாகவும், எனது எதிர்ப்பு உணர்ச்சியை நான் கைவிட்டு விட்டதாகவும், எதிரிகளுக்கு ஆதரவாகப் போவதாகவும். இதனால் எதிர்காலம் மிகவும் மோசமாய்ப் போய் விடுமென்றும், தாம் ஆதரிக்க ஆரம்பித்து விட்டால் எதிரிகள் தலைகால் தெரியாமல் ஆடுவார்கள் என்றும், இதனால் சாதாரண மக்களும், தம் கழகத் தோழர்களும் பழி வாங்கப்படுவார்கள் என்றும், என்னை நம்பியவர்களை நான் காட்டிக் கொடுத்து விட்டதாக ஆகுமென்றும், முடிவாக நானும் எதிரிகளைக் கண்டு பயந்து போய் வளைந்து கொடுத்து விட்டேன் என்றும், ‘பிளேட்டைத் திருப்பிப் போட்டு விட்டேன்’ என்றும், இந்த நிலைமையை யாருமே எதிர்பார்க்கவில்லையென்றும் தெரிவித் திருப்பதோடு, சிலகடுமையான ‘பதங்களைப் பிரயோகப்படுத்திக் கீழ்த்தரமான தன்மையில், கையெழுத்தில்லாத கடிதங்கள் மூலமும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.’

இவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை என் மனத்திலும் இதைப்பற்றி எவ்விதக் கலக்கமும் கொள்ளவில்லை ஏனென்றால், இப்படிப்பட்ட சமயத்தில், நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில், யாருடைய யோசனையையும் நான் கேட்க வேண்டு மென்று கருதி இருந்தவனல்ல; அன்றியும், பிறர் என்ன நினைப்பார்கள் என்பது பற்றிச் சிந்தித்து நடக்க வேண்டும் என்ற கவலை கொண்டவனும் அல்ல. மற்றென்னவென்றால், இப்படிப்பட்ட சமயத்தில், மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்பதைத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவனென்றும், அதற்கு நான் ஒருவன்தான் நடுநிலைமையாய் இருப்பவன் இருக்க வேண்டியவன் - என்றும் கருதிக் கொண்டு இருப்பவன்! ஆனதால், எனது கருத்தைத் தெரிவித்துக் கொண்டதற்கு ஆக மற்றவர்கள் என்மீது ஆத்திரப்பட்டார்களானால், அதற்காக வருத்தப்படுவதோ, அல்லது என் கருத்தைத் திருத்திக் கொள்ளுவதோ மாற்றிக் கொள்ளுவதோ என்றால், அது எனது பதவிக்கு அழகல்ல என்றுதான் நான் கருதிக் கொள்ள வேண்டும்!

இன்றைய நிலைமை மிகமிக அதிசயமானதும், நெருக்கடியானதும் ஆகும். இராஜாஜி இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும்போது என்ன சொன்னார்? இராமன் குரங்குகளைப் பயன்படுத்திக் கொண்டது போல், நான் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறேன். இவர்கள் கைக்கு ஆட்சி வரும்படியாகக் காங்கிரசைத் தோற்கடித்தால்தான், காங்கிரசுக்கும் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் வெட்கம் வரும். காங்கிரசுக்குச் செருப்பால் அடித்தது போன்ற அடி கொடுக்க வேண்டுமானால் இவர்களைக் கொண்டு காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதாக ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சொன்னார். அந்தப்படியே காங்கிரசைத் தோற்கடித்து, இவர்களைக் கொண்டு வந்து பதவியில் வைத்துவிட்டார். பதவிக்கு வந்தவர்களும் இராஜாஜியால்தான் பதவிக்கு வந்தோம் என்று கருதி நன்றிமேல் நன்றி தெரிவித்து, ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!

இந்த நிலையில் நமது கடமை என்ன? உட்கார்ந்து கொண்டு, அவமானப்பட்டதாகக் காட்டிக்கொண்டு, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, நாமாக அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதா? கூடுமானவரை தொல்லை கொடுக்க வேண்டிய அவசியம் நேரிடாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியையாவது செய்து பார்த்து விடுவதா? நாம் தொல்லை கொடுப்பதென்று ஆரம்பித்து விட்டால், குதூகலமாய்ப் பின் விளைவுகளைப் பற்றிக்கூட எண்ணாமல், நமக்கு ஆதரவு கொடுக்க மக்கள் முன்வருவார்கள் என்பது எனக்குத் தெரியும் இதனால் பதவியிலிருப்பவர்கள் தொல்லைப்படலாமே தவிர, மாறுதலடைந்துவிட முடியுமா? அவர்களைப் பாதுகாப்பதற்கென்று பார்ப்பனர், பத்திரிகைக்காரர், பணக்காரர் முன்வருவார்கள்! நாம் இந்த நான்கு தரப்பாரையும் சமாளிக்க வேண்டும்! நம்மால் சமாளிக்க முடியும்; ஆனால் பொதுமக்கள் மீது இப்போது, அவ்வளவு சுமை ஏற்ற வேண்டுமா? அவ்வளவு அவசியம் நமக்கு இருக்கிறதா?

ஏனென்றால் திரு அண்ணாதுரை தீர்க்கதரிசி அல்லவானாலும், கெட்டிக்காரர்! எவ்வளவு சீக்கிரம் அவர்களை விட்டு, வெளியேற முடியுமோ வெளியேறி, நமது மந்திரியாக ஆனாலும் ஆகக்கூடும். நமக்கே, அண்ணாதுரை மந்திரிசபையை ஆதரித்து, மறுபடியும் அவரே வந்தால் தேவலாம் என்று கருதும்படியான நிலைமை வந்தாலும் வரலாம்!

நாம் காமராஜர் கையைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற கொள்கையில் இருந்தோம்; இருக்கிறோமே தவிர காங்கிரசின் அடிமை அல்லவே! அதுவும் நிபந்தனையற்ற அடிமை அல்லவே! அப்படி யிருந்தால் பக்தவத்சலம் கண்டன தாள் கொண்டாடி இருப்போமா? இன்றுதான் ஆகட்டும்; நாம் எந்த அளவில் இந்த மந்திரி சபையை ஆதரிப்பவர்களாக ஆகிவிட்டோம்? கொஞ்ச நாளைக்கு எதிர்ப்புக் காட்டவேண்டாம் என்கின்ற நிலையில்தானே இருக்கிறோம்?

காங்கிரஸ்காரரை நினைத்துக்கொண்டு நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. பக்தவத்சலமே இவர்களுக்கு 6 மாத வாய்தா கொடுத்திருக்கிறாரே; நான் அப்படி வாய்தா கூடக் கொடுக்கவில்லையே? சமயம் எதிர்பாருங்கள் என்பதாகத்தானே சொல்கிறேன்? இதனால் நான் பயந்துவிட்டேன் என்று சொல்லப்படுவதானால், எனக்கு உள்ள மரியாதை எவ்வளவு? தோழர்களே! மனதை விட்டுவிடாமல், உறுதியான மனத்தைக்கொண்டு எதையும் சிந்தியுங்கள்!‘’

அடுத்த நாளே, அதிகநாள் தாமதிக்க மனம் பொறுக்காமல், பெரியார், மந்திரிகளுக்குச் சில அறிவுரைகள், உடனடித் தேவையாகத் தர ஆரம்பித்துவிட்டார்! “தேர்தல் காலத்தில் எப்படி எப்படியோ வாக்குறுதிகள் தரலாம். அதற்காக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், அவசரமாக எதையும் சொல்லிவிடக் கூடாது. அரிசிப் பஞ்சமும் ஒரு காரணமாகி, இவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அது ஒரு பலமான காரணமல்ல. அதற்கு இவர்களால் என்ன பரிகாரம் காண முடியும்? தலையை மொட்டையடிப்பதால் ஆள்பாரம் குறைந்து விடுமா?” என்று கேட்டார் பெரியார், “அரிசியை வெளிமாகாணங்களுக்குச் செல்லவொட்டாமல் தடுப்பது, லெவி கொள்முதல் முறையைத் சீர்திருத்துவது, குறைந்த நிலமுள்ளவர்களுக்குக் கிஸ்தியில்லாமல் செய்வது, பஸ் கட்டணம் குறைப்பது போன்றவைகளைச் செய்வது தேவையேயில்லை. அப்படிச் செய்வதானாலும் நிதானமாக, ஆழ்ந்து யோசித்துச் செய்ய வேண்டும்.

அரிசி நிலவரி முதலிய பிரச்சினைகள் இயற்கைப் பிரச்சினைகளல்ல; செயற்கைப் பிரச்சினைகள். அதனால் இவற்றை நம்பியே வெற்றியைக் கணித்துக் கொள்ளக் கூடாது. உத்தியோகம், பதவிகள் அளிப்பதில் பக்தவத்சலத்தை முன் மாதிரியாகக் கொள்ளக்கூடாது; இனநலம் மறக்கக் கூடாது.”

இன்றைக்குத் தங்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆரவாரத்தையும் நம்பி, மந்திரிகள் ஏமாந்து விடக்கூடாது என்றார் பெரியார், விபூதி வீரமுத்துவுக்கு ஒரு காலத்தில் இருந்த பெருமை என்ன? இன்றைக்கு ஒரு கிருபானந்த வாரியார் சுவாமிக்கோ, சங்கராச்சாரிய சுவாமிக்கோ இருக்கிற பெருமை என்ன? இதெல்லாம் நிலையானதா என யோசிக்க வேண்டும். சிபாரிசுகள், இலஞ்சங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எதுவாயிருந்தாலும் மந்திரிகள் தாங்கள் நேர்மையாக நடந்து கொள்வதாகவும், தங்கள் மீது தவறில்லை என்றும் பெரும்பான்மையான மக்களுக்குக் காட்டிக் கொள்வதுடன், அறிவாளிகளாகச் சிந்திக்க வேண்டும் - என்றும் பெரியார் கேட்டுக் கொண்டார்.

அடுத்தபடியாகப் பெரியாருக்குக் கடினமான வேலை ஒன்று காத்திருந்தது. அதாவது அதிருப்தி கொண்டுள்ள தமது தோழர்களுக்குத் தொடர்ந்து சில சான்றுகள், ஆதாரங்கள் காட்டித் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியால், திராவிடர் கழக-சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது, என்று நிரூபிக்க வேண்டும். அதற்காகப் பத்திரிகைகளை - நல்லவண்ணம் துருவித்துருவிப் படித்து வந்தார் பெரியார்!

மந்திரிகள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டபோது கீதை, இராமாயணம், குரான், பைபிள் போன்ற நூல்கள் பக்கத்திலிருந்தும் அவற்றைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அறநிலைய மந்திரி உள்பட அனைவரும், ‘மனப்பூர்வமாக’ என்றே பதவிப்பிரமாணம் செய்தார்களே, என்று பத்திரிகைகள் அங்கலாய்த்தன. இது பெரியாருக்கு ஆதரவான முதல் சான்று! அடுத்து, தேர்தல் நேரத்தில் இராஜாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்தினரைத் தமது இனத்தாருக்கு அறிமுகப்படுத்தும் போது, இவர்கள் தி.க. வாசனையை அடியோடு கழுவிவிட்டு வந்தவர்கள் என்றாரே. அது பொய்யென்று இந்த மந்திரிகள் பதவி ஏற்ற நாளிலிருந்தே தெரிய ஆரம்பித்து விட்டது. இரண்டாவது சான்று பெரியாருக்கு ஆதரவாக! மூன்றாவதாக, நீங்கள் தாம் திராவிடர் கழகத்தை விட்டு வந்தவர்களாயிற்றே; திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக, தர்ம முன்னேற்றக் கழகம் - அப்போதும் D.M.K. தானே என்று பெயரை மாற்றச் சொன்னதற்கு இணங்கவில்லை இவர்கள்! நான்காவதாக, உங்கள் கொடியில் எதற்குக் கருப்பும் சிவப்புமாக இரு நிறங்கள்? பேத உணர்ச்சி எங்களுக்குக் கிடையாது என்று காட்ட, ஒரே நிறத்தில் கொடியை மாற்றி விடுங்களேன்-என்ற பார்ப்பனர் ஆலோசனைகளை தி.மு.க. அலட்சியப்படுத்தியது.

இப்போதைக்கு இந்தச் சான்றுகளே போதும் என்று பெரியார் எடுத்துக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி சிறிதளவு நன்மை செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் பெற வேண்டும். கோர்ட்டில் வாதாடுகிறபோது வழக்கின் தன்மை ஒரு மாதிரியாக இருக்கும். பஞ்சாயத்தாரைக் கொண்டு ராஜி பேசுகிறபோது, வழக்கின் தன்மை வேறு மாதிரியாகத்தானே இருக்கும் என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும் - என்றார் பெரியார்.

அடுத்து இரண்டொரு நாட்களுக்குள், பெரியாருக்குத் தமது கருத்தை வேடிக்கையாகச் சொல்ல இன்னொரு வாய்ப்பைத் தந்துவிட்டார். பொதுப்பணி, போக்குவரத்து, வீட்டுவசதித் துறை அமைச்சரான கலைஞர் மு.கருணாநிதி, பெரியாரின் 16.3.1967 “விடுதலை” தலையங்கத்தின் ஒரு பகுதியே விவரங்களை விளக்கும்:"அட பாவமே! மந்திரி கலைஞர் கருணாநிதி தமிழுக்குக் கேடு வந்தால் மந்திரி பதவியை விட்டுவிடுவேன்!' என்று எதற்காகச் சொல்ல வேண்டும்? ஏன் அநாவசியமாய் முட்டாள்கள் வைத்த கண்ணியிலே மாட்டிக் கொள்ள வேண்டும்? அப்துல் காதருக்கும் ஆடி அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?

ஒழுக்கம் - நாணயம் கெட்டால், நீதி கெட்டால், நம்பிக்கை கெட்டால், நன்றி கெட்டால் என்பது போன்ற மனிதத்தன்மை எங்களிடம் இல்லையானால், எங்களால் காப்பாற்ற முடியாவிட்டால், பதவியை விட்டுவிடுவேன்- (ஏன்) உயிரையும்கூட விட்டு விடுவேன்என்று கூறலாம்! கப்சாவும் விடலாம்! அதை விட்டுவிட்டு, தமிழைக் காப்பாற்றாவிட்டால், அதற்குக் கேடு வந்தால் பதவியை விட்டு விடுகிறேன் என்றால், அதற்கா மக்கள் ஓட்டுக் கொடுத்தார்கள்? ஒவ்வொன்றுக்காகவும் மந்திரி பதவியை விட்டு விடுவேன் என்றால், அப்படி ஒரு மனிதனுக்கு எத்தனை மந்திரி பதவி இருக்கிறது?

நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து, நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிறோம். சமயத்தைச் சமய நூல்களை இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோம்! சரி! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?

எவ்வளவோ வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ‘மந்திரி பதவியில் உட்கார்ந்து கொண்டு, தமிழுக்குக் கேடு வந்தால் பதவியை விட்டுவிடுகிறேன்’ என்கின்ற மந்திரிக்கும், ஊர் ஊராய்த் திரிந்து குட்டிச் சுவராக வேண்டிய கோயில்களை எல்லாம் கட்டி முடிக்கின்ற திருப்பணியில் இருந்த மந்திரிக்கும் (பக்தவத்சலம்) தரத்தில் என்ன வித்தியாசம்? நான் இதை மந்திரி மீது குறைகூற எழுதவில்லை ; மந்திரிக்கு உள்ள பகுத்தறிவு எனக்கு நன்றாய்த் தெரியும்!

ஏன், பாமர மக்களுக்கு வழியல்லா வழியில் பயப்பட வேண்டும்? என்பதற்காகவே எழுதுகிறேன் தமிழ் பற்றிய இந்தக் கருத்து, என் இன்றையக் கருத்தல்ல! இந்தி எதிர்ப்புக் காலந்தொட்டு எனக்கு இந்தக் கருத்துதான். இது மந்திரிகளுக்கும், தமிழுக்காக இன்று பாடுபடுபவருக்கும் தெரியும்!

அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக், கல்வி
        அதிகமென்றே கற்றுவிட்டோம், அறிவில் லாமல்!
திடமுளமோ கனமாடக், கழைக்கூத் தாடச்
        செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லை!
தடமுலைவே சையராகப் பிறந்தோ மில்லை;
        சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை!
        என்னசென்ம மெடுத்துலகில் இரக்கின் றோமே?

தமிழ் படித்தால் பிச்சைகூடக் கிடைக்கவில்லை ; தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும், 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்துக் காட்டி இருக்கிறார்”.

யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? அரசியல் நிலையினை இனநலம் என்ற அளவு கோலால் அளந்து பார்த்து, இந்த ஆட்சி நமக்குப் பயன்படுமா? தமிழர் நலனுக்குப் பாதுகாப்பாக இருக்குமா? உரிமைகள் பறிபோகாமல் காப்பாற்றப்படுமா? சமதர்மம் தழைக்குமா? பகுத்தறிவு ஓங்குமா? என்று பார்ப்பதுதானே பெரியாரின் கொள்கை இந்தப் பொதுத் தேர்தலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தீர்க்க தரிசனத்துடன், அரசியல் முன்கணிப்புத் திறனுடன், ஒன்று கூறியிருந்தார். 1.1.62 “விடுதலை” தலையங்கப் பகுதியில் “இனி கண்னரீர்த்துளிக் கட்சி, தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத் தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள் இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம்; நானும் ஆதரவாளிக்கலாம்” என்று எழுதியிருந்தது இருதரப்பாருக்கும் அனுசரணையான வாசகமல்லவா? வந்து சந்தித்தவர்களுக்கும் வந்த பின் ஆதரிக்கத் தொடங்கியவருக்கும் இது ஓர் எழுதா ஒப்பந்தம் உடன்படிக்கை - தானோ?

எனவேதான் பெரியார், தமிழர்களின் பிறப்புரிமையான வகுப்புரிமை முழக்கத்தை இப்போதும் தொடங்கினார்:- "தமிழ் நாட்டில் தமிழர்கட்கு வகுப்பு உணர்ச்சி ஏற்பட்ட காலமான 1920-ஆம் ஆண்டு முதல், நாட்டில் ஒழுக்கம், நாணயம், அமைதி, கண்ணியம், நீதி, நேர்மை முதலிய எல்லா நற்குணங்களையும் ஒழியும்படிச் செய்து விட்டார்கள்! யோக்கியன் அயோக்கியன் என்ற பேதமேயில்லாமல் செய்து விட்டார்கள். மனிதனுக்கு மனிதன், தான் எப்படிப்பட்ட ஈனத்தன்மையான காரியங்களைச் செய்தாவது வாழ வேண்டியதுதான் மனிதப் பண்பு என்று ஆக்கிவிட்டார்கள். ஆண்களோ பெண்களோ, யாரும் ஒழுக்கத்தைப் பற்றியோ நாணயத்தைப் பற்றியோ சிந்திப்பது முட்டாள்தனமென்றே ஆக்கிவிட்டார்கள்.

இன்றைய நிலைமை, ஒரு ராணுவ ஆட்சி ஏற்பட்டுச் சர்வாதிகார அரசு ஏற்பட்டால் ஒழிய மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்படாது; நல்வாழ்வு ஏற்படாது என்கிற நிலையை உண்டாக்கி விட்டார்கள்! காரணம், தங்கள் நிலை பாதுகாப்பாய்விட்டது; மற்ற எவன் எக்கேடு கெட்டால்தான் நமக்கென்ன என்கிற முடிவுதான்! மனு தர்மத்துக்கு மாறான தன்மையைக் காங்கிரஸ் தனது கொள்கையாகக் கொண்டவுடன், நாட்டை அந்நியன் வசப்படுத்தியாவது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் துணிந்துவிட்டார்கள். நாட்டில் இமயம் முதல் குமரி வரை உள்ள எல்லாச் செல்லாக் காசுகளையும், கீழ்த்தர மக்களையும், சமுதாய எதிரிகளையும், எதைச் செய்தாவது வயிறு பிழைக்கும் தன்மையில் உள்ளவர்களையும் தேடிப் பிடித்துத் தங்கள் வசமாக்கிக் கொண்டு, பேடி யுத்தம் நடத்துகிறார்கள்! இதனால் பொறுப்பும் நேர்மையும் உள்ள மக்கள் பயந்து மறைந்து வாழ்கிறார்கள். '

நாட்டின் நிலைமைக்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டாக அண்மையில் நடந்த தேர்தலையே பார்க்கலாம். தேர்தலில் ஒவ்வொரு அபேட்சகர் ஒரு லட்சம், ஒன்றரை லட்சம், இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும், சிலர் தோற்றுப் போய் இருக்கிறார்கள். சில காலிகள் தேர்தலில் நின்றதன் மூலம் 10,20,30 ஆயிரம், ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் சேர்த்துக் கொண்டார்கள். காமராசரைத் தோற்கடிப்பதற்காக 2,3 லட்சம் செலவாயிற்று என்றும் சொல்லுகிறார்கள்!

இந்த நிலை பற்றி நான் சொல்லுவது. அபேட்சகர்களைப் பொறுத்தோ, கட்சிகளைப் பொறுத்தோ, அரசியல் தன்மையைப் பொறுத்தோ மாத்திரம் அல்ல மக்களைப் பொறுத்துமேதான் கூறுகிறேன். இப்படிப்பட்ட நாட்டில் பொதுத் தொண்டு, அரசியல் தொண்டு, சமுதாயத் தொண்டு என்று எதைச் செய்கிறது என்பது நமக்குத் தோன்றவில்லை

இப்போது உள்ள வசதியைக் கொண்டு, நமது வகுப்பு விகிதாச்சார உரிமையை நாம் முதலில் பெற்று ஆக வேண்டும். அதற்குப் பல சங்கடங்கள் ஏற்படலாம் என்றாலும், எதிரிகள் கையாளும் எல்லா முறைகளையும் நாம் கையாளப் பின் வாங்கக்கூடாது. மற்றும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வேலையில் நாம் தீவிரமாய், அதி தீவிரமாய் ஈடுபட வேண்டும். இதற்குப் பார்ப்பனரும், இமிடேஷன் பார்ப்பனரும் தவிர மற்றவர்கள் குறுக்கிட மாட்டார்கள்! நம்முடன் சேருவார்கள்; ஆதரவளிப்பார்கள்!

நாம் இந்த எண்ணம் கொண்டுதான் காங்கிரசை ஆதரித்தோம்; ஆனால் காங்கிரஸ் நம்மை ஆதரிக்கவில்லை ; சிறிது கூட ஆதரிக்கவில்லை; அரசியல் தன்மையில் நெருங்கியதால், பாமர மக்கள் நம் மீது பற்றுக் கொண்டிருந்தும், நம்மை ஆதரிக்கவில்லை! கடைசியாய்ச் சொல்லுகிறேன்; எனக்கு வயது 88. இனி நான் எவ்வளவு நாளைக்கு இருக்க ஆசைப்பட முடியும்? எவ்வளவு நாளைக்குத்தான் இருக்க முடியும்? என் நிலை எனக்குத் தெரியும்! அதனால்தான் சொல்லுகிறேன், வகுப்புரிமை பெற்றே ஆகவேண்டும் என்று!“ (”விடுதலை" - தலையங்கம் 18.3.1967)

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெறுவதால் பெரியார் தமது பிரிவினைக் கொள்கையைக் கைவிட்டு விடுவாரோ? அவர்கள் திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம் என்று சொல்லித்தானே, தேர்தலுக்கு நின்று, வெற்றி பெற்று, இன்று ஆட்சிக்கும் வந்து விட்டார்கள்! பெரியார் 1938 முதல் நாட்டுப் பிரிவினை கேட்டவராயிற்றே! இதிலுள்ள நியாயத்தை ஜின்னா, அம்பேத்கார் மாத்திரமில்லாமல், காந்தியார், இராஜாஜி போன்றவர்களும் ஒத்துக்கொண்டார்கள்! வெள்ளைக்காரன் ஓடிய அவசரத்தில் தராமல் போய்விட்டான்! நாடு காங்கிரஸ்காரர் கையில் கிடைத்ததும், இந்தியா இனி ஒரே நாடுதான்! பிரிக்கக்கூடாத நாடு! என்று சட்டம் செய்து கொண்டார்கள். திராவிடர் கழகமும், அதிலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிவினைக் கோரிக்கையை விடாமல்தான் வலியுறுத்தி வந்தன.

பெரியார் 30.3.67 “விடுதலை“யில் “நாட்டுப் பிரிவினை” பற்றித் தலையங்கம் எழுதினார்:- "காங்கிரஸ் ஆட்சி பலத்தால், திராவிட நாடு பிரிவினை கேட்பவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது என்று விதி இருக்க முடியும்? இப்படி இருப்பதனால் தனிப்பட்ட மாநில மக்களுக்கு வரும் இலாபம் என்ன?

55கோடி பேருக்கும் ஒரே நாடு, ஆயிரக்கணக்கான சாதி யாருக்கும் ஒரே நாடு, ஆயிரக்கணக்கான மொழி பேசுகிறவர்களுக்கும் ஒரே நாடு, நூற்றுக் கணக்கான கலாச்சாரம் கொண்ட மக்களுக்கும் ஒரே நாடு. பல்வேறு மதம் உடைய மக்களுக்கும் ஒரே நாடு - அதாவது இவ்வளவு பேர்களுக்கும் ஆட்சிக்கு ஒரே ஒரு நாடு இத்தனை பேரையும் அடக்கி ஆள ஒரே ஒரு கட்சி என்றால், இது என்ன நாடா? பாழா? நரகமா? ஜெயிலா? சர்க்கஸ்காரன் வளையத்துக்குள் இருக்கும் மிருகப் பிராணி போல், இப்படி இருக்க என்ன அவசியம் உள்ளது? இதுதான் சுதந்திரமா? மானம் - ரோஷம் கண்ணாடி போட்டுக் கொண்டு பாருங்கள்!

உலகில் எங்கே இப்படி ஒரு நாடு இருக்கிறது? ஓர் ஆட்சி இருக்கிறது என்று கேட்கிறேன்?”

சுயமரியாதை இயக்க, திராவிடர் கழகத் தனிக்கூட்டம் (Sepecial Meeting); காலம் 9.4.1967 ஞாயிறு காலை 10 மணி; இடம் திருச்சி பெரியார் மாளிகை; விஷயம் தற்கால நிலை, எதிர்காலப் போக்கு, ஸ்தாபன விஷயம், மற்றும் அப்போது அவைக்குத் தோன்றும் விஷயங்கள்-ஈ.வெ. ராமசாமி, தலைவர் சுயமரியாதை ஸ்தாபனம், திராவிடர் கழகம் - என்று “விடுதலை”யில் விளம்பரப்படுத்தப்பட்டது, கழகத் தோழர்களின் கலக்கம், குழப்பம், அச்சம், தயக்கம், மயக்கம், வியப்பு, வேதனை அனைத்துக்கும் ஒரே அருமருந்தாய் அமைந்தது! அவ்வாறே, சுமார் 2,500 தோழர்கள், உறுப்பினர் தாளில் கையொப்பமிட்ட பின் உள்ளே நுழைந்து, விவாதங்களில் பங்கேற்றனர். நம் கொள்கைக்குப் பாதகமில்லாத வரையில், தி.மு.க. ஆட்சியை எதிர்க்கத் தேவையில்லை, என்று பெரியார் பேசினார். கமிட்டியில் காமராஜர் தோல்விக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் குறித்துப் பெரியாரின் அறிக்கை, அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வகுப்புரிமை, தனிநாடு கிளர்ச்சிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. திருச்சிக் கமிட்டித் தீர்மானங்களை விளக்கி “விடுதலை” 6 நாட்கள் தொடர்ந்து தலையங்கம் தீட்டிற்று.

சட்ட மன்றத்தில், “தி.மு.க.வுடன் தேனிலவு முடிந்துவிட்டதாக ராஜாஜி சொல்கிறாரே, உங்கள் பதிலென்ன?“ என்று கேட்டபோது ”ஆமாம்! இப்போது குடும்ப வாழ்க்கை நடக்கிறது!“ என்று முதல்வர் அண்ணா சமத்காரமாய்ப் பதிலுரைத்து விட்டார். ஆயினும், வெளியில் ராஜாஜி, தி.மு.க. அரசின் சில கொள்கைகளைக் கண்டித்து வந்தார். அவற்றுள் ஒன்று, பதுக்கி வைக்கப்பட்ட நெல்தானியங்களை வேட்டையாடி வெளியில் கொணர்வது. இதை ”விடுதலை"பெட்டிச் செய்து கொண்டவுடன், தி.மு.க. ‘நாங்கள் திராவிட நாடு பிரச்சினையை விட்டுவிட்டோம். என்று சொல்லித், தேர்தலுக்கு நின்று, இன்று ஆட்சிக்கும் வந்துவிட்டார்கள்! தேர்தலுக்கு அது ஒரு தடைப் பிரச்சினை ஆகிவிட்டதால், அவர்கள் அதைப் பற்றிப் பேச்சு மூச்சுக்கூட விடக்கூடாத நிலையில் இருக்கிறார்கள்!

மத்திய அரசாங்கம் காங்கிரசார் கையிருப்பதால், அவர்களுக்குப் பயந்து கொண்டு, அடிக்கடி தி.மு.க.வினர் காலாகாலம் பார்க்காமல், நாங்கள் திராவிட நாடு பிரச்சினையைக் கைவிட்டு விட்டோம். விட்டுவிட்டோம். விட்டே விட்டோம்!’ என்று சொல்ல வேண்டிய அவசியத்திற்கு வந்து விட்டார்கள். நாமோ தேர்தலுக்கு நிற்கிறவர்கள் அல்ல. ஆனாலும், நமது திராவிடர் கழகத்தில் அது (திராவிட நாடு பிரிவினையே) ஒரு கொள்கையாய் இருந்தாலும், காமராஜர் காங்கிரஸ் தலைவரானவுடன், சமதர்மம் - சோஷலிசம் காங்கிரசின் கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டதால், அது தக்கபடி அமுலுக்கு வந்தால், திராவிட நாடு பிரச்சினை அவசியமாக இருக்காது - அல்லது கூடாததாய் இருக்காது என்று கருதி, அதிகமாய்ப் பிரஸ்தாபிக்காமல் இருந்தோம்.

என்றாலும், காங்கிரசின் பலக்குறைவையும், பார்ப்பனரின் கட்டுப்பாடு பலத்தையும் பார்க்கும் போது, சோஷலிச அமுலுக்குத் தொல்லை ஏற்படும் என்று பயப்பட வேண்டியிருப்பதால், இப்போது திராவிட நாடு பிரச்சினையைப் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் அவசியமென்றே தெரிகிறது.

இந்தியாவில் சோஷலிசத்திற்கு அனுகூலமானவர்கள் முழுமூச்சுடன் பாடுபடுகிறவர்கள் எத்தனை பேர் என்றே கணக்கிட முடியவில்லையே! மொழி பேதத்தால் ஒருவருக்கொருவர் கலந்து பேசிக்கொள்ள முடிவதில்லை. கலாச்சார பேதத்தால் நாம் ஒரு நாட்டு மக்கள், சகோதரப் பிரஜைகள் என்கின்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. கூட்டுப் பொறுப்பு என்பதே எதில் என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை!

நான் தமிழ் நாட்டில், கிராமம் பட்டி தொட்டி முதலிய எல்லா ஊருக்கும், எல்லா மக்களுக்கும், தெரிந்தவனாக இருந்தாலும், கேரளாவில், வைக்கம் கிளர்ச்சியில் தெரிந்து கொண்டதால், ஒரு 5,000 பேருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். கர்நாடகத்தில், பெங்களூரில், சில ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்னைத் தெரிந்திருக்கலாம். ஆந்திராவில் ஒரு சிலர் இருக்கலாம். பிறகு, மற்ற நாடுகளில் என்னைத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? 55 கோடி இந்திய மக்களில் 55 ஆயிரம் வெளி மாநில மக்கள் தவிர, மற்றவர்களுக்கு நானே தெரியாதவனாக இருக்கும்போது, இந்தியா எப்படி ஒரே நாடாக இருக்க முடியும்? இந்திய மக்கள் எப்படி ஒரே சமுதாய மக்களாக செய்தியாகப் பிரசுரித்தது:- “சுதந்திராவுடன் தி.மு.க. குடும்ப வாழ்க்கை நடத்துவதாகத் திரு. அண்ணாதுரை கூறுகிறார். ராஜாஜியோ (சுதந்திரா) மனைவியின் (திமுக) நடத்தை சரியில்லை என்கிறார். நடக்கட்டும் கதை; ஊர் சிரிக்கிற வரை” என்று!

லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் ஒரு நாள் பேசும்போது தி.மு.க. உறவு பற்றி ராஜாஜி குறிப்பிட்டார்- இராமன் சொன்னான் சீதா தான் உன்னை மீட்பதற்காகப் போரிடவில்லை; இராவணனை அவமானப்படுத்தவே போரிட்டேன் என்று. அது போல “நான் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தப் பாடுபடவில்லை; காங்கிரசை (காமராஜை) ஒழித்து அவமானப்படுத்தவே பாடுபட்டேன். அதில் ஜெயித்தேன்” என்றார். இதை எடுத்தாண்டு, “விடுதலை” ஏளனம் செய்தது!

பெரியார் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, மந்திரிகள் பயபக்தியுடன் எதிரில் நிற்க, ராஜாஜி மெதுவாய் எட்டிப் பார்க்க, ‘சுதேசமித்திரன்’ கார்ட்டூன் போட்டது; “நானிருக்க பயமேன்?“ என்று தலைப்பு! இதையும் - ராஜாஜி. “எனக்கு இந்தக் கண்ட்ரோலைக் கண்டால் பிடிக்காது”; அண்ணா - ”அதனாலேதான் என் மேலே உங்களுக்கு இருக்கிற கண்ட்ரோலை கொஞ்சம் கொஞ்சமா எடுத்திட்டு வாரேன்“ என்பதாக ‘ஆனந்த விகடன்’ வெளியிட்ட கார்ட்டூனையும், “விடுதலை” வெளியிட்டு, அவாள் உள்ளத்தை எக்ஸ்ரே படம் பிடித்துக் காட்டிற்று!

9-ந் தேதி திருச்சிக் கமிட்டிக்கு முன்பும், பெரியார் “விடுதலை”யில் தொடர்ச்சியாகச் சில தலையங்கப் பகுதிக் கட்டுரைகள், ஆட்சியாளர்க்கு அறிவுரைகளாகத் தீட்டி வந்தார்:- “இது பகுத்தறிவாளர் ஆட்சி என்பதால் கூறுகிறேன். நான் சமதர்மவாதிதான் என்றாலும், முதலில் பகுத்தறிவுவாதி! பத்திரிகைகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சர்க்கார் தரும் அதிகார பூர்வமான செய்திகளை, இன்ன மாதிரியான முறையில் பிரசுரிக்க வேண்டும் என்பதாக உத்தரவிட வேண்டும். உணவுப் பிரச்சினையைச் சமாளிக்க மக்கள் உணவுப் பழக்கத்தை மாற்றும்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும். சர்க்காரே உணவுப் பண்டங்களை (ரொட்டி போன்றவை) மலிவு விலையில் தயாரிக்க வேண்டும். கல்வியில் உயர்நிலைப் பள்ளி வரை இலவசக் கல்வி போதும். அல்லது பி.யூ.சி. வரை கொடுக்கலாம். எதற்காக நிலவரியை ரத்துச் செய்ய வேண்டும்? அவசியமில்லை. உயர் படிப்புகளைக் கல்லூரியில் உட்படத் தமிழில் ஆக்கப் போகிறோம் என்கிறீர்கள் இது கூடாது. நம்மைத் தமிழும் இந்தியும் படிக்கச் சொல்லிவிட்டுப், பார்ப்பானும் பணக்காரனும் இங்கிலீஷ் கான்வென்டில் படித்து மேலே போய்விடுவார்கள்! பிறகு நம் கதி என்ன? அதனால், இங்கிலீஷ் இப்போது உள்ள நிலையிலிருந்து, எந்த மாற்றமும் செய்து விடாதீர்கள்" என்பதாக.

6.4.67 அன்று “பொற் காலம்” என்ற தலைப்பில் அலசி ஆய்ந்து, கழகத் தோழர்களுக்கு அறிவுரை புகன்றார். “சமதர்மத் திட்டத்தை அமுல்படுத்துகிறார்கள் என்பதற்காகவே நாம் இதுவரை காங்கிரசுக்கு ஆதரவு தந்தோம். ஆனால் எதனாலோ காங்கிரஸ் தோற்றுவிட்டது. தமிழ் நாட்டில் மாத்திரம் அல்லாமல் இந்தியா எங்கும் பரவலாகத் தோற்றுப் போனது. ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம். பொதுவான காரணம் சொல்ல வேண்டுமானால், சோஷலிச எதிரிகளின் சூழ்ச்சி, சதி என்று சொல்லலாம். மேலும் வாக்காளர்களின் பலவீனமான பல பழக்க வழக்கங்கள் (Voters' Weaken mind) தேர்தலில் முடிவுகள் (Heart Failure) மாரடைப்பு போலத் திடீரென்று மாறிவிட்டன! இங்கே இப்போது புதிய ஆட்சி அமைந்திருக்கிறது. மற்ற விஷயங்களில் இந்த ஆட்சி நமக்குப் பயன்படுகிறதோ இல்லையோ, நிச்சயமாய் நமது பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு எதிப்பாக இருக்காது என்பதை நம்பலாம். நமது லட்சியம் என்ன? சுயமரியாதை, பகுத்தறிவுக் கொள்கைகள் பரவ வேண்டும்; கல்வி, பதவி, இவைகளில் மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார முறையில் உரிமை தரப்படவேண்டும் என்பவைதானே? 9.4.67 அன்று திருச்சியில் எல்லாரும் கூடுவோம்; திட்டம் தீட்டுவோம் தோழர்கள் பலர் கடுஞ்சொல்லால் என்னைக் கடிந்து கொண்டார்கள். நோய் முற்றிப் போன ஒரு நோயாளிக்கு, ரணசிகிச்சை செய்யாவிட்டால் நிச்சயம் உயிர் போய்விடும்; ரணசிகிச்சை செய்தால், 70% பிழைக்கலாம் என்ற நிலை இருந்தால், ரணசிகிச்சை செய்து பார்த்து விடுவதுதானே நல்லது? அது போல், இந்த ஆட்சியை அணைத்துப் போக முயல்வோம்; முடியாவிட்டால் அது நமக்கு ஏமாற்றமல்ல” . என்றார் பெரியார்!

அடுத்த படியாகப் பெரியார் கல்வி அமைச்சரைப் பாராட்ட ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்தது! 16.4.67 அன்று கோட்டையின் முகப்பில் தமிழக அரசு தலைமைச் செயலகம் என்று தமிழில் அமைந்த நியான் சைன் போர்டை முதலமைச்சர் திறந்து வைத்ததும்; ஸ்ரீ, ஸ்ரீமதி, குமாரி என்ற வடமொழிச் சொற்களுக்குப் பதிலாகத் திரு.திருமதி, செல்வி. என்ற மரியாதை அடைமொழிகள் வழங்கப்படும் என அறிவித்ததும்; (26.4.67 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது). பெரியாருக்கு மகிழ்வைத் தந்தன. அத்துடன், அறநிலையத்துறையும் அவர் (நெடுஞ்செழியன்) பொறுப்பிலிருந்ததால், சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு அலுவலாகச் சென்றபோது, வழங்கப்பட்ட திருநீற்றைக் கீழே கொட்டியது, தன்னை நாத்திகன் என்று காட்டிக் கொள்ளவே, எனப் பெரியார் கருதினார். அதனால், “பலே நெடுஞ்செழியன் பலே பலே நெடுஞ்செழியன்“ என்று தலைப்பிட்டு, ஒரு பெட்டிச் செய்தி வெளியிட்டார். “விடுதலை”யில் “தமிழ்ப் புத்தாண்டை“ முன்னிட்டுத் ”தமிழ் மகனுக்கு ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் - இந்து மதம், கோயில், உருவக் கடவுள், பண்டிகை, நெற்றிக்குறி இவைகள் வேண்டுமா? என்று கேட்டிருந்தார். பெரியார்.

தமது ஆராய்ச்சிக்குத் துணையாகப் பழைய நூல் ஒன்றை Referenceக்காகத் தேடிய போது தம் நூலகத்தில் அது கிடைக்காததால், “வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்- 1878-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பட்ட, தேசிக தாத்தாச்சாரியார் மொழி பெயர்த்த, இராமாயணம் உத்தரகாண்டம் யாரிடமாவது இருந்தால், பழைய புத்தகக் கடைகளில் கிடைத்தாலும், வாங்கி அனுப்பித் தந்தால், அதற்குரிய விலையைத் தந்துவிடுகிறேன்“ என்று கையொப்பத்துடன், 18.4.67 ”விடுதலை" யில் பெரியார் செய்தி வெளியிட்டிருந்த பாங்கினைக் கண்ணுற்றோர் அந்த 88 வயது மாணவரின் ஆர்வத்தை வியந்து, மெய்மறந்து நின்றனர்!

“தனியார் மின் நிறுவனங்கள் அரசுடைமையாகும்” முதல்வர் சி.என். அண்ணாதுரை அறிவிப்பு. இது ஏழு காலச் செய்தி. 19.4.67 “விடுதலை” யின் முதல்பக்கம்! அடுத்த நாள், அமைச்சர் மதியழகனும் தலைவர் காமராசரும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்து. மதுரையில் இறங்கினர்; காங்கிரஸ், கண்ணீர்த் துளித் தோழர்கள், தங்கள் தங்கள் தலைவர்களை வரவேற்றனர் - என்றொரு செய்தி! சென்னை மத்திய சிறையிலுள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா நெஞ்சுவலி காரணமாகச் சென்னை பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் என்றொரு துணுக்கு நீதிக்கட்சியின் நிர்வாக அனுபவம், சுயமரியாதை இயக்கத்தின் தீவிரக் கொள்கை, காங்கிரசின் ராஜதந்திரம்-இவை எங்கள் ஆட்சிக்கு வழிகாட்டப் பயன்படுத்திக் கொள்வேன் என்று அண்ணா கூறியதைப் பலமுகங்களோடு, கேலிச் சித்திரம் போட்டது Mail ஏடு. இதை எடுத்துக் காட்டியது “விடுதலை” மைல் கற்களைக் கூடச் சாமி என்று கும்பிடுவதா? அமைச்சர் மா. முத்துசாமியின் அணுகுண்டு - என்று ஒருநாள் “விடுதலை” செய்தி

பெரியார் ஏப்ரல் மாதத்தில் நிறையத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சிதம்பரத்தில் வெற்றி பெற்ற இரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் திராவிடர் கழகம் நடத்திய பாராட்டுக் கூட்டத்திலும், பெரியார் கலந்து கொண்டார். 28-ந் தேதி, காலையில் பெரம்பலூர் வட்டம்' ஓகளுர், அரசினர் உயர்நிலைப் பள்ளிப் புதுக் கட்டடத்தை, வேளாண்மை அமைச்சர் ஏ.கோவிந்தசாமி திறந்து வைத்தபோது, பெரியார் தலைமை தாங்கியதுடன் அண்ணா படத்தையும் திறந்து வைத்தார். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகட்கு இதுதான் தொடக்கமாயிருந்தது! இதற்குமுன் 23-ந் தேதி திருச்சியில் பேசும்போதுதான், ஒரு விளக்கம் கூறியிருந்தார் பெரியார். “இந்த ஆட்சிக்கு ஆதரவு தரச் சொல்லி நான் இன்னும் நமது தோழர்களுக்குக் கூறவில்லை! தொல்லை தரவேண்டாம் என்றுதான் சொன்னேன் இந்த ஆட்சிக்கு நாம் எதிரி அல்ல. தி.மு.க. நகரசபைகளில் என்னைக் கூட இப்போது அழைக்கிறார்கள், போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

“பார்ப்பான், பணக்காரன், பெரியமனிதன்” என்கின்ற தலைப்பிட்டு, 24-ந் தேதி பெரியார் “விடுதலை”யில் தீட்டிய தலையங்கக் கட்டுரை, தீவிர சிந்தனைக்குரியதாகும்:- “இன்று நமது நாட்டில் சுயமரியாதை இயக்கம் அல்லது பகுத்தறிவு இயக்கம் என்பதாக ஒன்று தோன்றிய பின், நாளாவட்டத்தில் பார்ப்பனருக்கும், பணக்காரர்களுக்கும், பெரிய மனிதர் என்பவர்களுக்கும் இருந்த மரியாதை, பெருமை என்பது படிப்படியாய்க் குறைந்து கொண்டு வருகிறது; வந்து விட்டது என்றே சொல்லலாம்! முதல் மாறுதலான பார்ப்பானின் மரியாதை கெட ஆரம்பித்தவுடன், மற்றெல்லா மரியாதைகளும் கெடுவதற்குப் பார்ப்பானே முயற்சியாளனாகவும், உறுதுணைவனாகவும் இருந்து தீர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது!

கடவுளும் மதமும் கெடவேண்டுமானால் பார்ப்பான் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அவன் கெட்ட இடந்தான் கடவுள் மதம் கெட்ட இடமாகும். அதுபோலவே நீதி கெடவேண்டுமானால் அரசன் கெட்டாக (இல்லாமல் போக) வேண்டும். அரசன் கெட்ட இடம்தான் ஜனநாயகம் என்பது. பார்ப்பான் இல்லையானால் எப்படி கடவுள் மதம் இல்லையோ, அப்படித்தான் அரசன் இல்லையானால், நீதி நேர்மை இல்லை என்பது உறுதி!

1926 முதல் 47 வரை நாட்டில் சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவு இயக்கமும், ஜஸ்டிஸ் கட்சியான திராவிடர் கழகமும் செய்து வந்த பிரச்சாரத்தினால் பார்ப்பான் பெருமையும், பணக்காரன் பெருமையும், பெரிய மனிதர்கள் என்பவர்கள் பெருமையும் நாளுக்கு நாள் தேய்ந்து வர ஆரம்பித்தது! வெள்ளையன், ஆதிக்கத்தை இந்தியரிடம் ஒப்படைத்து விட்டுப் போனவுடன், அதாவது இந்தியன் என்பது காங்கிரஸ்காரர்களாகவும், காங்கிரஸ்காரன் என்பது பார்ப்பனராகவும் இருந்து வந்ததால் பார்ப்பான் கைக்கு ஆட்சி, ஆதிக்கம் வந்தது வந்தவுடன் முதல் காரியமாக, இந்தப் பார்ப்பான், பணக்காரன், பெரிய மனிதன் ஆகிய மூன்றையும் பாதுகாத்துக் கொள்ளும் அளவுக்கு ஆட்சிச் சட்டம் செய்து கொண்டுவிட்டான்! அதனால் சாதி மதத்தையும், பணக்காரனையும் அதாவது பொருளாதார சொத்துரிமையையும், பெரிய மனிதத் தன்மையையும் அதாவது அந்த ஸ்தானத்தையும் அசைக்க முடியாதபடி அரசியல் சட்டம் செய்து கொண்டான்

இவை மூன்றும் சட்டத்தினால்தான் ஒழிக்கப்பட முடியாமல் இருக்கின்றனவே ஒழிய, அஸ்திவாரமில்லாததால், பாரம் தாங்காமல் இடிந்து விழும் மாடிக் கட்டடம் போல், சாய்ந்து விழுந்து வருகின்றன. அதாவது பார்ப்பான் என்பதாலோ, பணக்காரன் என்பதாலோ, பெரிய மனிதன் என்பதாலோ நாட்டில் இன்று எவருக்குமே பெருமையோ, மரியாதையோ இல்லாமல் போய்விட்டது!

பகுத்தறிவு வளர்ச்சித் தன்மைதான் சமதர்மக் கொள்கைக்கு மக்களை இழுத்துச் சென்றது என்றாலும் இன்று சமதர்மத்தை எதிர்க்கக்கூட அதே பகுத்தறிவு வளர்ச்சிதான் அதாவது எதையும் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டதும் ஆகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இன்றைய சுதந்திர ஜனநாயகத்தால் -ஜனநாயக ஆட்சியில் - உண்மை சமதர்மத்தை அமுல் படுத்துவது ஒரு நாளும் முடியாத காரியமாகத்தான் இருக்கும். யார், எவ்வளவு பாடுபட்டாலும், வெள்ளரிப் பழத்திற்குப் பூண் (கட்டு) போடும் காரியமாகத்தான் முடியும்! இதைச் சமாளிக்க வேண்டுமானால், சுதந்திர ஜனநாயக ஆட்சியால் முடியாது; இரும்புக்கை அடக்கு முறை ஆட்சியால்தான் முடியும்! இந்த நிலையில், இனியும் சமதர்மத்தைக் கட்டிக் கொண்டு அழுவதென்றால், தர்மத்தின் பேரால் வண்டி ஓடினவரை ஓடட்டும் என்பதல்லாமல், அதில் உண்மை என்ன இருக்க முடியும்?

இந்த நிலையில், உண்மையான சமதர்மவாதிகள், சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்கள் இருப்பார்களேயானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக்கொண்டு, பொதுவுடைமைத் தத்துவத்தை இலட்சியமாக்கிக் கொண்டு முயன்றால், பயன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். ‘பொது உடைமை’ என்பது பகுத்தறிவின் எல்லையாகும்!

எனது சமுதாயத்துறை சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கை இனியும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால், அது பொதுவுடைமைக்கு நல்ல வண்ணம் பயன்படலாம்".

மேதினத்தன்று பெரியார் வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசினார்; - “காங்கிரசை விட தி.மு.க. தேவலாம். நமது தோழர்கள் அவர்களிடம் அன்புடன் பழகவேண்டும். எந்தக் காரணத்தாலோ நமக்குள் தகராறு இருந்தது, இப்போது போச்சு. போச்சு என்றால் போனதுதானே? பிறகு என்ன?“ என்று கேட்டு முடித்தார் பெரியார். “கம்யூனல் ஜி.ஓ.வை அந்தந்த மந்திரிகளே தமது இலாக்காவில் அமுல் படுத்தத் தொடங்கலாமே! தி.மு.க. ஆட்சி என்ன, வைதிக ஆட்சியா? இதற்கும் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா?” என்றும் “ரூபாய்க்கு ஒருபடி அரிசி போடுவது தவறு. மிகுந்த நட்டம் ஏற்படும், சிந்தித்துச் செயல்பட வேண்டும். இந்த அரிசிவிலைக் குறைப்பே ஒரு நியூசென்ஸ், அநாவசியத் தொல்லை” என்றும் பெரியார் அறிவுறுத்தல் தலையங்கம் தீட்டினார். “இந்த மந்திரிசபை ஒழிந்தால், அடுத்த மந்திரி சபை எதுவானாலும், அது பார்ப்பன ஆதிக்க, அல்லது பார்ப்பனக் கலப்பு மந்திரி சபையாகத்தானே இருக்கும்?" என்றும் கேட்டார் பெரியார்.

முதலமைச்சர் அண்ணா மருத்துவக் கல்லூரி அட்மிஷன் சம்பந்தமாய்த் தெரிவித்த கருத்துகளைத் தங்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்கத் திரித்துக் கூறி, “மெயில்”,“இந்து”, “எக்ஸ்பிரஸ்” ஏடுகள் எழுதியதைக் கண்டித்து, Wishful thinking என்று “விடுதலை” ஏடு தலையங்கம் எழுதியது“முதல்வர் பேட்டி, பார்ப்பன ஏடுகளின் விஷமம்“ என்ற தலைப்பில்! தமிழகத்தில் ஆகாஷ்வாணி ஒழிந்து, வானொலி வரப்போவதாக 9.5.67 அன்று, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் சத்தியவாணி முத்து கூறினார். இந்தியக் குடி அரசுத் தலைவராக டாக்டர் ஜாகீர் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சங்கராச்சாரியாரும், ராஜாஜியும் எதிர்ப்புத் தெரிவித்தனர், ”விடுதலை“ வாழ்த்துக் கூறியது. துணைத் தலைவராக வி.வி.கிரி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் “விடுதலை” வரலாறு வெளியிட்டு, வரவேற்றது! திருமணங்களை இனிமேல் சப்ரிஜிஸ்ட்ராரும், கோயில் நிர்வாக அதிகாரிகளும் கூடப் பதிவு செய்யலாம் என்ற அரசாணை 11.5.67 அன்று இடப்பட்டது.

‘உண்மைத் தலைவர் காமராஜர்’ என்றும், ‘மந்திரிகளுக்குத் தலைவலி உதயம்’ என்றும் 12, 13 தேதிகளில் பெரியார் முக்கியமான இரு தலையங்கக் கட்டுரைகள் எழுதினார். "காமராசர் தன் கட்சித் - தோழர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார். உண்மையான எதிர்க் கட்சியாகக் காங்கிரசார் செயல்பட வேண்டும். (தமிழ் நாட்டில்) ஆக்க ரீதியான கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும். எல்லாவற்றையும் மூர்க்கத்தனமாக எதிர்க்கக் கூடாது என்றார். இதை தி.மு.க. மந்திரிகள் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறுகிய காலத்தில் மது விலக்குக் கொள்கையிலும் ஜனாதிபதி தேர்தலிலும் இரண்டு முறை கரணம் போட்டுவிட்டார்களே அது கூடாது! திரு. கருணாநிதி, திரு அண்ணாதுரையை இராஜாஜியிடம் அழைத்துச் சென்றார்.

அவரிடத்தில் 2 காரியங்களுக்கு ஒத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒன்று ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை எதிர்த்து, ஜஸ்டிஸ் சுப்பாராவுக்கு வாக்களிப்பது, இன்னொன்று ம.பொ.சி.க்கு மந்திரி பதவி தருவது. திரு. அண்ணாதுரைக்குக் காரியம் வெற்றி பெறலாம். ஆனாலும் வாசனை போய் விடுமே! ஆச்சாரியாரை நம்பி இனியும் ஏமாற வேண்டாம்!"- என்று எச்சரித்தார் பெரியார். இந்திய யூனியனிலிருந்து தமிழர் வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டால் தான் மானத்தோடு வாழ முடியும், என்று 13-ம் நாள் எழுதினார். ம.பொ.சி. க்கு மந்திரிப் பதவி தர வேண்டாம். அவர் ராஜாஜியின் கையாள் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தார், பெரியார். ராஜாஜிக்குத் தாமே முதல்வராக வர வேண்டுமென்ற நைப்பாசை இருந்தது என்ற செய்தி பெரியாருக்கும் தெரியும். மதுவிலக்குக் குற்றங்கள் பெருகி வரும் விவரப் பட்டியலை வெளியிட்டு, வெற்றி பெறாத மதுவிலக்கு இன்னும் வேண்டுமா? இது அண்ணாதுரைக்கு அர்ப்பணம் - என்றும் செய்தி வெளியிட்டார் பெரியார்.

இந்த ஆண்டில் பெரியாரின் முக்கிய பணியாகத் தஞ்சை மாவட்டத்தில், திருவாரூர்-தஞ்சை ரயில் மார்க்கத்தில், திருமதிக் குன்னம் நிலையத்தில் இறங்கி, ஒரு மைல் செல்லக் கூடிய விடையபுரம் கிராமத்தில், சுயமரியாதைப் பகுத்தறிவுப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் மே மாதம் தொடங்கி நடைபெறும்; வரக்கூடியவர்கள் 24-ந் தேதிக்குள் வர வேண்டும் என்பதான அறிக்கைகள் “விடுதலை”யில் பிரசுரமாயின. நாகரசம்பட்டியில் மே 21-ல், என்.எஸ்.சம்பந்தம் அவர்களின் தங்கை, மற்றும் மகள் ஆகியோரின் திருமண விழாக்களில் பெரியார் கலந்து கொண்டார்.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இரண்டும் தேவையில்லாத ‘வெள்ளையானைப் பதவிகள்.’ சிறுபான்மையினர் இந்த இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள். அதிகாரமில்லாத அரசர் பட்டத்துக்கு வந்திருக்கிறார் என்றாலும் முன்னவர் முஸ்லீம், பின்னவர் பார்ப்பனர், பிரதம மந்திரியோ பார்ப்பனத்தி - என்று பெரியார் குறிப்பிட்டார். “மந்திரிகளே! மெல்லப் போங்கள்! ஜாக்கிரதையாக போங்கள்! அரிசிவிலை குறைந்தால்தான் மந்திரிகள் சம்பளம் வாங்குவோம் என்று சொல்லி விட்டதால், இப்போது எப்படியாவது சம்பளம் வாங்கிவிட வேண்டுமே என்பதற்காகத் தான் 1 ரூபாய்க்கு 1 படி அரிசி போடுகிறீர்கள் என்று மக்கள் பேசுவார்கள்! கூட்டுறவுச் சங்கங்களில் நிறைய மோசடிகள் நடக்கின்றன. கமிஷனர் போன்ற நிர்வாகதிகாரிகளைப் போட்டுக் கண்காணிக்க வேண்டும். ம.பொ.சி. விஷயத்தில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உரல் தேய்ந்து உளிப்பிடிக்கும் தகுதியற்றவாக ஆகிவிடக் கூடாது. தண்ணீர் எவ்வளவு தான் சூடாக ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் முடியும்; எரியச் செய்ய முடியாது! நம் நாட்டு அரசியல் வாழ்வு மிகக் கேடு கெட்டதாகி விட்டது. கட்சி மாறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றம் என்ன என்பதற்கு, நல்ல ரிக்கார்டு ஏற்படுத்த வேண்டும். சமுதாய சீர்திருத்தத்திற்கும் பார்ப்பனருக்கும் சம்பந்தமில்லை என்பதை உணரவேண்டும். ஜனநாயகத்தில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லையே தொழிலாளர், மாலாவர், பார்ப்பனர் பிரச்சினைகள்தான் நாட்டின் கேடுகெட்ட நிலைக்குக் காரணம். ம.பொ.சி. அவர்களை அழைக்கின்றீர்களே; அதன் உள்நோக்கம் என்ன?” இப்படி வேறுபட்ட பிரச்சினைகளிலும் தமது நாட்டத்தைப் பதித்து வந்தார் பெரியார்!

சுயமரியாதைப் பிரச்சாரத்துக்குச் செல்லும் தோழர்கள் “நாள் கடவுளை மறுக்கிறேன். பார்ப்பானை ஏற்றுக் கொள்ள மாட்டேன்; சாதி மதம் பாராட்டமாட்டேன்” என்றெல்லாம் பகுத்தறிவுக் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதாக ஒரு நமுனாவில் கையொப்பமிட்டு ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் சேகரிக்க வேண்டும் என்று ஒரு பணி தந்திருந்தார் பெரியார் 23.5.67 அன்று. இது வரை 10,000 கையெழுத்துகள்தான் திரட்டியிருக்கின்றீர்கள்; இந்தப் பணியை இன்னும் மும்முரமாகச் செய்யுங்கள், என்று முடுக்கிவிட்டார். திருச்சி பெரியார் மாளிகையில், 7.6.67 அன்று, காலஞ்சென்ற ஜீவானந்தம் மகள் உஷாவுக்கும், அருணாசலத்துக்கும் திருமணம் என்று பெரியாரும், மணலி கந்தசாமியும் அழைப்பு விடுத்தனர்.

அழைப்பினை ஏற்று முதலமைச்சர் அண்ணாவும் குன்றக்குடி அடிகளாரும் மணமக்களை வாழ்த்திட வந்திருந்தனர். அண்ணா பேச்சு:- “என்னுடைய பொது வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே தலைவரான பெரியார் அவர்களே!

நமது தமிழ் நாட்டில் மட்டும் வயதானவர்கள் வீட்டிற்குப் பெரியவர்களாக வீட்டிலேயே இருப்பார்கள். அவரது பிள்ளைகள் வெளியூர்களில் ஒருவர் டாக்டராகவும் ஒருவர் எஞ்சினீயராகவும் ஒருவர் வக்கீலாகவும் இருப்பர். வீட்டில் நடைபெறும் விழா நிகழ்ச்சியின்போது அந்தப் பெரியவர் தன் மகன்களைச் சுட்டிக் காட்டி, அதோ போகிறானே அவன்தான் பெரியவன் டாக்டராக இருக்கிறான். அவன் சிறியவன் வக்கீலாக இருக்கிறான். இவர்கள் எல்லோரும் எனது பிள்ளைகள் என்று கூறிப் பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைவார்.

அது போலப் பெரியாரவர்கள் தம்மாலே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் பல்வேறு கட்சிகளிலிருந்தாலும், அவன் என்னிடமிருந்தவன்; இவன் என்னுடன் சுற்றியவன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை இந்தியாவிலேயே, உலகிலேயே, பெரியார் ஒருவருக்குத் தான் உண்டு! காங்கிரசில் இருப்பவர்களைப் பார்த்து; கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்களைப் பார்த்து; இவர்கள் என்னிடமிருந்தவர்கள். இவர்களுக்கு நான் பயிற்சி கொடுத்தேன். இன்று இவர்கள் சிறப்போடு இருக்கிறார்கள் - என்று சொல்லிக் கொள்ளக் கூடிய பெருமை அவர் ஒருவரையே சாரும்!

அவர் என்னுடைய தலைவர். நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையேதான் தலைவராகக் கொண்டேன். வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை! அந்த அவசியமும் வரவில்லை. அன்று ஏற்றுக் கொண்டது போல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணிசெய்து வருகிறேன். சுயமரியாதை இயக்கம் ஒழுக்கச் சிதைவு இயக்கம் அல்ல. மனித சமுதாயத்தை ஒழுக்க நெறிக்குக் கொண்டு வந்து முன்னேற்ற வேண்டும் என்பதற்காகப் பாடுபடும் இயக்கமாகும் சுயமரியாதை இயக்கம். பகுத்தறிவு இயக்கம் தமிழ் இயக்கத்தோடும் பிணைத்துக் கொண்டது.

பகுத்தறிவு வாதிகளாகிய நாங்கள், பகுத்தறிவால்தான் மனித சமுதாயத்தை முன்னேற்றத்திற்குக் கொண்டுவர முடியும். அதற்கு எதிராக இருக்கிற மதம், புராணம் இவைகள் எல்லாம் மக்களின் எண்ணத்திலிருந்து அகற்றப் படவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு வருகிறோம். சுயமரியாதை இயக்கம் வளர்ந்து வளர்ந்து, பெண்ணுரிமையைப் பெற்றிருக்கிறது. ஆலயங்களில் நுழையும் உரிமையைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல உரிமைகளைத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. தமிழர்களின் குடும்பங்களில் பல சுயமரியாதைத் திருமணங்களை ஏற்று நடத்தியிருக்கின்றன. சட்டப்படி செல்லாது என்று தெரிந்தும் அதனால் ஏற்படும் தொல்லைகளைப் பொருட்படுத்தாது, மக்களுக்காகத் தானே சட்டம் என்பதை உணர்ந்து, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் நமது வணக்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்!

எங்களது ஆட்சியில், விரைவில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்படிச் செல்லத்தக்கதாக்கச் சட்டம் கொண்டுவர இருக்கிறோம். ஏற்கனவே நடத்தி வைக்கப்பட்ட திருமணங்களும் சட்டப்படிச் செல்லத்தக்கதாகும் என்று சட்டம் கொண்டுவர இருக்கிறோம், பெரியாரவர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை நாங்கள் வந்து செய்யும் வாய்ப்புக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெடுந் தொலைவு பிரிந்து சென்றிருந்த மகன் தன் தந்தைக்கு மிகப் பிடித்தமான பொருளைக் கொண்டுவந்து கொடுப்பதைப் போல, நாங்கள் பெரியாரவர்களிடம் இக்கனியை (சட்டத்தை)ச் சமர்ப்பிக்கிறோம்.

எனக்கு முன் இருந்தவர்கள்கூட இதைச்செய்திருக்க முடியும்! எனினும் நான் போய் நடத்த வேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்காகப் பெருமகிழ்ச்சியடைகிறேன்' என்று முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை பேசினார்.

மகிழ்ச்சிப் பேருவகையில் திளைத்த பெரியாரவர்கள், தமது முடிவுரையில், “முதலமைச்சரின் இந்த அறிவிப்பை , நான் அருள்வாக்காகவே கருதி வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.

குன்றக்குடி அடிகளாரும், முன்னதாக மணமக்களை வாழ்த்தினார். தந்தையும் தனயனும் மீண்டும் சந்தித்து, ஒரே மேடையில் பேசிய இந்த முதல் நிகழ்ச்சியே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தது.

மே 24, 25 இருநாட்களும் பெரியார் தஞ்சை மாவட்டம் விடையபுரம் சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்பு மாணவர்க்குப் பாடம் நடத்தினார். பகுத்தறிவின் முதற் பகை கடவுள் நம்பிக்கைதான் என்று கருத்தறிவித்தார்.

கேள்வி : சாதி ஒழிப்பது என்றால் என்ன? பதில்: நாட்டில் லைசென்ஸ் பெற்ற திருடர்களை அயோக்கியர்களை மடையர்களை ஒழிப்பது என்பது. இதில் யாருக்கும் எவ்விதச் சந்தேகமும் வேண்டாம். என்று, பெரியாரின் பெயர் போடாவிட்டாலும், அவர்தான் என்று காண்பிக்கும் பெட்டிச் செய்தி ஒன்று, “விடுதலை 6.6.67 முதல் பக்கம் பிரசுரமாகியிருந்தது. 7-ந்தேதி பெரியார் அறிக்கை எனுந் தலையங்கத்தில், பெரியார் விடையபுரம் பயிற்சி வகுப்பில் உருவாக்கிய கடவுள் மறுப்பு வாசகங்கள் முதன் முறையாக உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி, ஒவ்வொரு கழக நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போதும், அமைப்பாளர் முதலாவதாக முன்வந்து, இவற்றைக் கூறவேண்டும். கூட்டத்தினர் ஒவ்வொன்றாக எதிர் முழக்கமாக எதிரொலிக்கவும் வேண்டும். அன்று முதல் இன்று வரை இத்திட்டம் வழக்கத்தில் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். பெரியார் அறிவித்தது:

கடவுள் இல்லை.
கடவுள் இல்லை.
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்.
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்.
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி,

எதார்த்தம் பொன்னுசாமி நாடக உலகில் பழம் பெரும் நடிகர். பலநடிகர்களை உருவாக்கி ஓய்ந்து போனவர் அவருக்கு நிதி திரட்ட நடிகர் கே.ஏ.தங்கவேலு குழுவினர் திருச்சி தேவர் மன்றத்தில் 9.6.67 அன்று நடத்திய ‘மனைவியின் மாங்கல்யம்’ நாடகத்திற்குப் பெரியார் கட்டணம் வாங்காமல் தலைமை தாங்கினார். அந்த வகையில் பெரியாரின் நன்கொடை ரூ.150 என்று கணக்கிடப்பட்டது. அங்கே பேசும்போது பெரியார், தாம் ரஷ்யாவில் பார்த்த மூன்று நாடகங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். 36 ஆண்டுகளாக அவற்றை மறக்காமல் இருந்தார். அவற்றில் ஒரு கதையை 8.1.66 அன்று சென்னையில் கூறினார். அடுத்த இரண்டு கதைகளுங்கூடக் கிறிஸ்துவப் பாதிரிமார்களைப் பற்றியவைதாம்; இரண்டு கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடி வந்தார்கள். அவர்களைப் போலீசார் துரத்தி வந்தனர். மாதாகோயில் ஒன்று எதிர்ப்பட்டது. அதன் முன்புறம் ஒரு கட்டிலில் எப்போதும் அமர்ந்து பிச்சை கேட்கும் ஒரு நொண்டியை எல்லாரும் அறிவார்கள். அவன் எங்கோ வெளியில் போயிருந்தான். ஒரு கைதி அவனுடைய இடத்தில் நொண்டி போல் அமர்ந்து கொண்டான். இன்னொருவன் மாதா கோயிலுக்குள் ஓடினான். அங்கிருந்த பாதிரிமார்கள் ஏற்கனவே ஒரு சாதாரண ஆளுக்குப் பயிற்சி கொடுத்து, அவனை மகான் என்று சொல்லி ஊரை ஏமாற்ற, அவனைக் கட்டாயப்படுத்தி ஓர் அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். ஓடிவந்த கைதி, இரவில் அவனைத் தப்பிப் போக விடுத்துத், தான் அவன் இடத்தில் அமர்ந்து கொண்டான். பாதிரியார்கள் வந்து, மகானின் மகத்துவத்தை மக்களிடம் புகழ்ந்தனர். அவனும் பாசாங்கு செய்து, தனது மகிமையால் வெளியிலுள்ள நொண்டிப் பிச்சைக்காரனுக்குக் காலை வரவழைப்பதாய்க் கூறி, நிரூபித்துக் காட்டினான். பாதிரிமார்களுக்கே ஏமாற்றம்; ஆனால் வெளியில் சொல்ல முடியாதே! மகான் கைதிக்குப் பெண்ணையும், பொன்னையும் கொடுத்து அனுப்பினர். கைதிகள் இருவருக்கும் வெளியில் மரியாதை கூடிவிட்டது!

இன்னொரு கதையில் - தூக்குத்தண்டனைக் கைதி ஒருவனுக்குக் கடைசி நேர ஜெபம் செய்ய வந்த பாதிரியாரை, அவன் கொன்று விட்டு, அவர் உடையில் இவன் வெளியேறுகிறான். அவருக்கு இணக்கமான கன்னியா ஸ்திரீகளை இவனும் வசியப் படுத்திக் கொண்டான். அவர்களும் விஷயத்தை மறைத்து இவனைப் போப்பாக்கி விடுகிறார்கள். போப்புக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க - ஒரு ஜட்ஜ் வருகிறார். அவர் இவனுக்கு, முன்பு மரண தண்டனை வழங்கியவர். இவனை அடையாளம் கண்டுகொண்டு காட்டிக்கொடுக்க முனையும்போது, இவன் மதத்துறையில் தனக்குள்ள செல்வாக்கால், அந்த ஜட்ஜையே தொலைத்து விடுவதாக மிரட்டிப் பதவியில் நிலைத்து விடுகிறான்.

இப்படியாக மதத் துறையினரின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தும் நாடகக் கதைகளை நினைவுகூர்ந்தார் பெரியார். அதற்குப்பின், தொடர்ந்து நான்கு நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய முடிந்தது. 12-ந் தேதி திட்டக்குடியில் கலைஞர் மு. கருணாநிதியின் படத்தைத் திறந்து வைத்தபோது, பெரியார் அவரைப் பற்றிச் சிறப்புடன் குறிப்பிட்ட மொழிகள் மறக்கவொண்ணாதவை;-

“கருணாநிதியின் உழைப்பும், முயற்சியும், இல்லாவிட்டால் கழகத்தின் செல்வாக்கு இந்த அளவு வளர்ந்திருக்காது. அண்ணாதுரை கெட்டிக்காரர்தான். ஆனால் கருணாநிதிக்கு இருக்கின்ற முன்யோசனை அவருக்குக் கிடையாது. 1949-ல் திராவிட மாணவர் பயிற்சி முகாம் ஒன்றினைத் திருவாரூர் தோழர்கள் ஏற்பாட்டின்படி, மாவூரில் நடத்தினோம். பார்ப்பனரானாலும் சர் ஆர். எஸ். சர்மா, தமது பங்களாவில் முழு உரிமை தந்து, உணவு வசதிகளும் எல்லாருக்குமே செய்து, சில நாட்கள் வகுப்புகள் நடைபெற அழைப்பும், ஒத்துழைப்பும் தந்தார். இதைக் கருணாநிதி கண்டித்துப், பெரியார் பார்ப்பனர் வலையில் வீழ்ந்து விட்டார், என்று பேசினார். இதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் அவர் என்னைக் குறை கூறிப்பேசியது கிடையாது” என்றார் பெரியார்.

ஒரு வாரமாகச் சமாளித்துப் பார்த்து, இயலாமற் போய்ச் சென்னை சென்று, பொது மருத்துவ மனையில் சேர்ந்துவிட்டார் பெரியார். 18-ந்தேதி வீரமணியின் அறிக்கை “விடுதலை” முதற்பக்கத்தில் வெளியாயிற்று:- பெரியாருக்கு ஹெர்ணியா வளர்ச்சி ஏற்பட்டு, நீர் இறங்குவதில் நோயும், மூலத்தில் கோளாறும் உண்டாகி, ஒரு வாரம் கஷ்டப்பட்டுப், பிறகு சென்னை வந்ததில், 15 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் பொது மருத்துவமனையில், என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர். அதனால், ஏற்கனவே பெரியார் ஒத்துக்கொண்ட சுமார் பத்து நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ளுவதோடு, அவற்றுக்காகப் பெற்றுக் கொண்ட பணத்தையும் திருப்பி அனுப்பச் சொல்லியிருக்கிறார் என்பதாக.

இந்த வயதில் ஆப்பரேஷன் தேவையில்லை, எப்படியும் நோயைக் குணப்படுத்தலாம் என்றே டாக்டர்கள் முயன்றனர். 21-ந்தேதி காலையில் வந்த செய்திப் பத்திரிகைகளிலிருந்து, வீரமணி ஒரு செய்தியைப் படித்துக் காண்பித்ததும், படுத்துக் கிடந்த பெரியார் வாரிச் சுருட்டி எழுந்து உட்கார்ந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன், “இந்த அன்பான சேதியினால் எனக்குத் தொல்லை அதிகம் ஏற்படலாம் என்ற போதிலும், எனக்குப் பெருமளவுக்கு வலியை இது குறைத்து விட்டது" என்றார் பெரியார்.

அப்படி என்ன செய்தி அது? 20.6.67 சட்டமன்றத்தில், தி.மு.க. உறுப்பினர் ஒருவர், “பெரியாருக்குத் தியாகிகள்“ பென்ஷனும், மான்யமும் வழங்கப்படுமா?” என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்ணா , “இந்த அமைச்சரவையையே அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்திருக்கிறோமே?" என்றார்.

“விடுதலை” அன்றாடம் பெரியாரை வந்து பார்த்த பிரமுகர்கள் பெயரை வெளியிட்டு வந்தது. சுகாதார அமைச்சர் சாதிக் பாட்சா திடீரென்று வந்து பார்த்தார். அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, நாவலர் நெடுஞ்செழியன், மா.முத்துசாமி ஆகியோரும் பார்த்து விசாரித்தவர். 30.6.67 இரவு 7.30 மணிக்கு முதலமைச்சர் உயர்திரு சி.என். அண்ணாதுரை வந்து பார்த்து விசாரித்தார். மற்றும் திருவாளர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன், ம.பொ.சி. சம்பத், ஏ.எஸ்.கே., பேளுக்குறிச்சி சோமசுந்தரம், நடிகர் அசோகன், அன்பில் தர்மலிங்கம், வி.வி.இராமசாமி, என். வி. நடராசன், ஜி.டி. நாயுடு, இலக்குவனார். து.ப. அழகமுத்து, நாகசுந்தரம், மதுரை முத்து, ஏ.பி. சனார்த்தனம், க. ராஜாராம், டி. எம். பார்த்தசாரதி, எஸ். இராமநாதன், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரும், கழகத் தோழர்கள் பலரும் வந்து, பெரியார் உடல் நலம் விசாரித்துச் சென்றனர்.

ஆனைமலை ஏ.என். நரசிம்மன் பி.ஏ., 2.7.67 அன்று இயற்கை எய்தினார். பெரியார் உடனே ஆனைமலை செல்ல வேண்டுமென்று துடித்தார். டாக்டர்கள் அனுமதிக்க அடியோடு மறுத்துவிட்டனர்! அதனால், மணியம்மையாரும் போக முடியவில்லை! 3-ந்தேதி “விடுதலை”யில் பெரியார் எழுதினார் - கழகத்தின் கண் போன்ற தோழர், எவ்வளவோ செல்வக் குடும்பத்தில் பிறந்தும், துறவிபோல், என்னிடம் உண்மை அன்பு வைத்து, என்னோடு சுற்றிக் கொண்டிருந்தார். அருமை நண்பர். அனைவரும் பின்பற்றத்தக்க மனிதர் (Exemplary), என்று .

முன்னாள் அமைச்சர்களில், நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றும், சட்ட மன்ற மேலவை உறுப்பினர் பதவியை விடாமல் வைத்திருந்த ஆர். வெங்கட்ராமன்,

‘கலப்புமணத் தம்பதிகளைப் பாராட்டித் தங்கப்பதக்கம் வழங்குவது தேவையற்றது; சமூக விஷயங்களிலெல்லாம் அரசு தலையிடக்கூடாது‘, என்று அறிவுரை கூறித், தம்மை இன்னாரென்று காட்டிக் கொண்டார்! அலுவலகங்களிலும், நீதிமன்றங்களிலும், படிப்படியே தமிழ் நடைமுறைக்கு வரும் என்று, அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. கருணாநிதி, மதியழகன் ஆகிய அமைச்சர்களின் மான்யக் கோரிக்கைகள், ஏ.கோவிந்தசாமி, மா.முத்துசாமி ஆகிய அமைச்சர்களின் சுற்றுப் பயணத்திட்டங்கள் இவையெல்லாம் விடுதலை’யில் இடம் பெறத் தொடங்கின. சென்னையில் குடிசைப் பகுதிகளில் தொடர்ந்து தீவிபத்துகள் நடைபெற்று வந்தன. 15.7.67 அன்று காமராசரின் 65-ஆவது பிறந்த நாள், காமராசர் நீழே வாழ்க என்று ’விடுதலை' முதல் பக்கம் வாழ்த்தியிருந்தது. திருச்சியில் 17.9.67 அன்று பெரியார் சிலையைத் திறக்கக் காமராசர் ஒத்துக் கொண்டதாகவும், அடிபீடம் தயாரென்றும் 6.7.67 அன்று, சிலை அமைப்புக் குழுவின் செயலாளர் நோபில் கோவிந்தராஜுலு அறிவித்தார்,

பொது மருத்துவமனையிலிருந்து 4.7.67 அன்று பெரியார் வீடு திரும்பி, 9-ந்தேதி தர்மபுரி திருமணத்துக்குச் சென்று, அப்படி 3, 4 நிகழ்ச்சிகளுக்கும் செல்லத் தொடங்கினார். ஆனால், மீண்டும் உடல் நலிவுற்றுச் சுரம் வந்து, 17-ந்தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, அதே 18-ந் தேதி மீண்டும் சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர் இறங்குவதில் பழையபடி தொல்லை பரிதாபத்துடன் பார்த்த டாக்டர்களிடம், “இந்த முறை நீங்கள் எவ்வளவு நாள் என்னை இங்கே இருக்கச் சொல்கிறீர்களோ அவ்வளவு நாள் இருக்கிறேன்" என்று பெரியார் உறுதியளித்தார். மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில், முதல்வர் அண்ணா , கலைஞர் மு.க., சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, மா.முத்துசாமி, சி.பா. ஆதித்தனார், மேயர் இரா.சம்பந்தம், ஜி.டி. நாயுடு, அவினாசிலிங்கம் செட்டியார், டாக்டர் ஆர்.ஜி. கிருஷ்ணன், பி.ஜி. கருத்திருமன், கே.டி.கே.தங்கமணி, மன்றாடியார், எம்.கல்யாணசுந்தரம், வ.சுப்பையா, பாலதண்டாயுதம் மோகன் குமாரமங்கலம், தங்கவேலர், டாக்டர் அண்டே ஆகியோர் வந்து, விசாரித்துச் சென்றனர். 4.8.67 இரவு காமராசர் வந்து பார்த்துச் சென்றார். அதன் பிறகு அன்றிரவே வீடு திரும்பி, உடனே திருச்சி புறப்பட்டார் பெரியார்.

இதற்கிடையில் 18.7.67 அன்று. தமிழகச் சட்ட மன்றத்தில், மெட்ராஸ் ஸ்டேட் கிடையாது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இது தமிழ் நாடுதான் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. சபாநாயகர் அனுமதியுடன் முதல்வர் அண்ணா மும்முறை முழங்க, அனைவரும் ‘வாழ்க’ என்று பின் தொடர்ந்து முழக்கமிட்டது, வரலாறு தழுவிய உணர்ச்சி மிக்க நாளின் வெற்றிக் குறிப்பாகும். 23.7.67 அன்று, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துக் காரியம் விரைவில் நடைமுறைக்கு வரத் தி.மு.க. எழுச்சி நாள் கொண்டாடியது. அதாவது சேலம் இரும்பாலைத் திட்டமும், தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டமும் முன்னுரிமையுடன் நிறைவேற்றப்பட! காங்கிரசார் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முதலியவற்றில் ஈடுபடவேண்டாம், என்று கூறிவிட்டார் காமராசர். “இதற்கெல்லாம் ஒரே வழி நாட்டுப் பிரிவினைதான்! அதுதான் Surgeon‘s Cure பெரியார் வழி! எழுச்சி நாள் Physician’s Cureதி.மு.க. வழி என்று 25ந்தேதி “விடுதலை” எழுதியது. அடுத்த நாள் ‘வரவேற்கத்தக்க பிரகடனம்’ என்று. அவைனவருக்கும் கல்வி வசதியளிக்கப்படும் என்ற திட்டம் குறித்து எழுதியது. நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கு, செங்கற்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் 27-ந்தேதி முதல் விசாரணை என்றும், வழக்கு விசாரணையில் பப்ளிக் பிராசிக்யூட்டர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன், சர்க்கார் தரப்பில் வாதாடுவார் என்றும், செய்தி வெளியானது. 3.8.67 அன்று, நன்னிலம் தாழ்த்தப்பட்ட தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராஜின் காலை

யாரோ வெட்டித் துண்டாக்கிவிட்டனர் என்று கேள்வியுற்று, முதமைச்சர், வருந்தித் தந்தி அனுப்பியதாகவும் “விடுதலை” செய்தி வந்தது. ஆனைமலை தோழர் ஏ.என். நரசிம்மன் அவர்களின் மறைவுக்கு அனுதாபந் தெரிவித்து, நாடெங்கிலும் உள்ள திராவிடர் கழகக்கிளைகள் நிறைவேற்றி அனுப்பிய இரங்கல் தீர்மான விவரம் “விடுதலை" யின் கடைசிப் பக்கத்தை நிறைத்து வந்தது.

15.8.67 அன்று, சென்னைக் கடற்கரையில், திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழாவில், பெரியார் சமதர்மம் பற்றிப் பேசிவிட்டு “நாம் எதில் இன்று விடுதலை பெற்றிருக்கிறோம்? நான் அரசியலின் பெயரால் துன்பப்பட்டவன். நட்டப்பட்டவன். மானத்தையும் பறி கொடுத்தவன். மந்திரி பதவியை உதறித் தள்ளியவன். ஆதனால் எனக்கு இந்த இழி வாழ்வு வெறுப்பாகத் தோன்றுகிறது“ என்றார் பெரியார். “சில இடங்களில் தி.மு.க. - காங்கிரஸ் மோதல்கள் இன்னும் நடந்து வருவதாக எனக்குச் சேதிகள் வருகின்றன. தலைவர்கள் . இவற்றைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். சில்லுண்டிகள் சில்லரைத்தனம் செய்யலாம். அதை லட்சியம் செய்ய வேண்டாமென்று தலைவருக்கு (காமராஜருக்கு) விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன்” என்று முடித்தார். நாட்டில் காலித்தனம் அதிகரித்து விட்டது என்று “விடுதலை”யில் ஒரு தலையங்கமும் எழுதினார்.

மூன்றாம் முறையாகப் பெரியார் உடல் நலங்குன்றி, சுந்தரவதனம் நர்சிங்ஹோமில் 23.8.67 அன்று சேர்க்கப்பட்டார். டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியமும் கவனித்து வந்தார். எம்.ஆர். ராதாவின் இரு மகள்களுக்குச் சென்னையில் நடைபெற்ற திருமணவிழாவுக்கு, மருத்துவர்களின் அனுமதியுடன், பெரியார் 26-ந் தேதி சிறிது நேரம் சென்று, தலைமை ஏற்றுத் திரும்பினார். எம்.ஆர்.ஆர். வாசு வரவேற்றார். கி. வீரமணி, திருவாரூர் தங்கராசு, சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி, பாலதண்டாயுதம், ஈ.வெ.கி. சம்பத், கவிஞர் கண்ணதாசன் - மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். மருத்துமனையிலிருந்த பெரியாரை 6.9.67 அன்று அமைச்சர் மாதவனும், அன்பில் தர்மலிங்கமும் சென்று பார்த்தனர். 7ந் தேதி வடசென்னையில் லோட்டஸ் ராமசாமியின் மகன் திருமணத்தையும் நடத்தி வைக்க, மருத்துமனையினின்று சென்று வந்தார். ஓரளவு நலம் பெற்று 9-ந் தேதி திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார் பெரியார். மருத்துவமனையிலிருந்து கொண்டே “விடுதலை”க்குப் பெட்டிச் செய்திகளும், தலையங்கமும் எழுதுவதை நிறுத்தவில்லை.“ வேலியில் போகிற சுக்குட்டியைக் காதில் விட்டு கொண்டு குடையுது குடையுது என்கிற கதை” என்பதாக ஒரு பெட்டிச் செய்தி! இது பதவி கிடைக்காததால் சலிப்புற்ற ம.பொ.சி பற்றியது. இன்றைய காங்கிரஸ் நிலை பற்றி எழுதுகையில் - காங்கிரஸ் - (மைனஸ்) காமராசர் =0 (ஜீரோ) தானே? நான் இன்னமும் காமராஜர் தலைமையில் உள்ள காங்கிரஸ், சிறு மாறுதல்களுடன் நாட்டை ஆளவேண்டுமென்று ஆசைப்படுகிறவன்; ஆனால் அடுத்த தேர்தல் என்ன ஆகுமோ என்று பயமாயிருக்கிறது - என்று பெரியார் குறிப்பிட்டார்.

பம்பாயில் சிவசேனைக்காரர்களின் அட்டகாசம் உச்ச கட்டத்திலிருந்து, தமிழர்கள் பயங்கரமாகத் தாக்கப்பட்டனர். அரசு எந்தப் பாதுகாப்பும் தர இயலவில்லை . பெரியார் இந்தப் பிரச்சினையைத் தமது சொந்தப் பிரச்சினையாகப் பாவித்தார். “தமிழனுக்கு மானம் வேண்டாமா? பம்பாயில் சிவசேனைக்காரன் தமிழனை அடித்தால் அதற்குப் பரிகாரமாக இங்கிருக்கிற பம்பாய்க்காரனை நாம் விரட்ட வேண்டாமா?. வெறுக்கத் துணிந்தவன்தான் வெற்றி பெறுவான்" என்றெல்லாம் எழுதினார். திருச்சி சென்றவுடனே, சிவசேனை எதிர்ப்பு மாநாடு நடத்திட ஆவன செய்து வந்தார்; தமது பிறந்த நாளுக்கு முதல் நாள் என்று, தேதியும் குறித்தார்!

அமைச்சரவை விஸ்தரிப்பு கிடையாது என்று முதலமைச்சர் வெளியிட்ட செய்தி, “விடுதலை” க்கு கரும்பு சாப்பிட்டபோது போல இனித்தது; 6. 9.67 அன்று அதைப் பிரசுரித்தபோது, 8ந் தேதி வெளியான மலர்மணம் என்ற விளம்பரத்தில் தான், முதல் தடவையாக ( பிணைந்த பின்னர்) அறிஞர் சி.என். அண்ணாதுரை தரும் “அந்த வசந்தம் “ எனக் காணப்பட்டது. 16.9.67 ”விடுதலை" முதல் பக்கத்தில், 59 வயதடைந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு சி.என். அண்ணாதுரை வாழ்க, எனப் பெரிய எழுத்துக்கள் மின்னின 20 ந் தேதி ஒரு செய்தி:- மத்திய அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர்.வி. ராவ் காஞ்சியில் பிறந்தவர்தான். அவர் காஞ்சி சென்ற போது, முதல்வர் அண்ணாவை வரதராஜப் பெருமாள் கோவிலுக்குத் தன்னுடன் அழைத்தாராம். அண்ணா வீட்டெதிரே உள்ள இந்தக் கோயிலுக்குக் கூடத் தாம் என்றும் போனதில்லை என்று கூறி, மறுத்துவிட்டாராம். இதை மத்திய அமைச்சரே வெளியிட்டுப் பாராட்டி இருந்தார் அண்ணாவை!

“விடுதலை” தலையங்கம் பெரியார் எழுதினார். பொங்கும் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தார். தி.மு.க அரசும், மந்திரிகளும், அதிகாரிகளும் தம்மிடம் மிகுந்த கனிவும் மரியாதையும் நன்றியும் அன்பும் செலுத்துகிறார்களாம். ஒரேயடியாகப் புகழ்ந்தார். அதில் உண்மையில்லாமல் இல்லை! திருச்சி தேவர் மன்றத்தில் சிவசேனை எதிர்ப்பு மாநாடு பெரியாரின் சிம்ம கர்ச்சனையில் நிறைந்தது. இனிமேல் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது வணக்கம் கூறாமல் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று கூறச் சொன்னார். "சென்னையில் இதைப்பற்றி விளங்குவோம் அக்டோபர் - 1ல் நாடெங்கும் கண்டனக் கூட்டம் நடத்துவோம். ஊர்வலம் எடுப்போம். 9 பேர் கொண்ட சிவசேனை எதிர்ப்புக் குழு அமைக்கிறேன்.” என்று பெயர்களையும் அறிவித்தார் பெரியார். - ஈ.வெ.ரா மணியம்மையார், என். வி. விசாலாட்சி அம்மையார், எம்.என். நஞ்சய்யா, கு.கிருஷ்ணசாமி, என்.எஸ். சம்பந்தம், என். செல்வேந்திரன், புலவர் கோ. இமயவரம்பன், தோலி ஆர்.சுப்ரமணியம், டி.எம். சண்முகம் - ஆகியோர் குழுவினர்.

வாடிக்கை தவறாமல் இந்த 89 வது பிறந்த நாளிலும் பெரியார் தமது செய்தியைச் சுருக்கமாக வழங்கியிருந்தார்:- “எனக்கு இன்று முதல் 89 வது வயது தொடங்குகிறது. என் வாழ்வு என்னவோ கவலை தொல்லை துன்பங்களுக்கு ஆட்பட்டதாய் இருந்தாலும், சராசரி மக்கள் வாழ்க்கைக்குக் குறைந்ததாய் இல்லாமல், மேம்பட்ட வாழ்வாகவே நடந்திருக்கிறது. காரணம், அக்காலத்தில் ஈரோட்டில் எங்கள் கடைதான் பெரிய கடை. எங்கள் வீடு தான் பெரிய வீடு, எங்கள் தகப்பனார்தான் ஊருக்குப் பெரிய மனிதருங்கூட.

மக்கள் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும், மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்க வேண்டும் என்பதிலும், எனக்கு 1927 ஆம் ஆண்டு முதல் உறுதியான எண்ணமும், ஆசையும் உண்டு. ஆதிக்கத்தினால்தான் பார்ப்பான், சாதி மத அரசியல் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு, சமுதாய வளர்ச்சியையும் அறிவு விஞ்ஞான வளர்ச்சியையும் தடை செய்து கொண்டு இருக்கிறா என்பது எனது உறுதியான எண்ணம். நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும், எந்தக் கட்சியை ஆதரித்தாலும், யாரோடு சேர்ந்தாலும், யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணம்!

இப்போதும், காங்கிரஸ்காரர் பலரை வெறுக்கிறேன் என்பதற்கும், தி.மு.க காரர் பலரை நேசிக்கிறேன் என்பதற்கும் இதுவேதான் காரணம்! இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு, நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது? இதை ஆத்திகர் எதிர்க்கலாம் ஆளால் பகுத்தறிவாளர் (நாத்திகர்) என்பவர்களின் கடமை என்ன? அரசியலில் குற்றம் குறை என்பது, யாருடைய ஆட்சியிலும், எந்த அளவுக்காவது நடந்துதான் தீரும்! என்றாலும் இதில் சுயமரியாதை இயக்கத்தார் - திராவிடர் கழகத்தார் கடமை என்ன என்பதை நல்ல வண்ணம் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் சரிபகுதி காங்கிரசிற்கு எதிர்ப்பாகி விட்டது. என்றாலும், காங்கிரசார் மக்களைத் தங்கள் பக்கம் திருப்பிட, மக்களிடம் பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு, எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப் பாடுபடுகிறார்கள். இது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிற கதையாகத்தான் முடியும். காங்கிரசார் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று காட்டிக் கொள்ளாத வரை, நாம் எப்படி இன்று காங்கிரசை ஆதரிக்க முடியும்.

தி.மு.க காரரும், என்ன செய்தாவது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்கிற ஆர்வத்தில், தாங்கள் இருக்கும் படகில் ஓட்டை ஏற்படும்படிச் செய்து கொள்வதும் ஒரு வழியென்று நினைப்பார்களானால், அது தங்களைக் காப்பாற்றிக் கொள்வதாகாது; மூழ்கடித்துக் கொள்வதுதானாகும்! அவர்கள் முயற்சியில் கூடிய வரை சுயமரியாதைக்காரரையும், திராவிடர் கழகத்தாரையும் விரோதித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கள் மக்களுக்கு அடக்கத்தைப் போதிக்க வேண்டும். சிறு தகராறு, கோளாறுகளை சிறிது விட்டுக் கொடுத்தாவது, பொறுமை காட்டிச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் இரு கூட்டத்திலும் தங்களை ஒருவருக்கொருவர் விரோதிகள் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்; அது தவறு!

இன்று பார்ப்பனரும், காங்கிரசாரும் ஒன்றாகிவிட வில்லையா? ஒருவருக்கொருவர் எவ்வளவு சிபாரிசு! எவ்வளவு ஆதரவு! அந்தப் புத்தி நமக்கு வர வேண்டாமா?

ஒரு நாள் இரண்டு அல்ல; இன்னும் நாலரை வருடம் இருக்கிறது. அடுத்த எலெக்ஷன் எப்படியானாலும் எனக்குக் கவலையில்லை . அதுவரை தி.மு.க ஆட்சி நல்லபடி நடைபெற வேண்டும்.

நமது தோழர்கள் இனி பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் தான் கவலை கொள்ள வேண்டும். பகுத்தறிவுவாதிகள் என்று லட்சக்கணக்கில் மக்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும்.

எனது காயலா சற்றுக் கடினமானதுதான்; எளிதில் குணமாகாது. மூத்திர வழியில் கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக் கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை . எதற்கும் தயாராக இருக்கிறேன். மணியம்மையார் கவனிப்பும், உதவியும் அளவிடற்கரியது. உங்கள் கடமையிலிருந்து தவறாதீர்கள்!"

17.9.67 காலையில் கண்விழித்த ஞாயிறு, காணருங் காட்சிகளைத் தமிழகமே ஒரே நகரில் திரண்டு, திருச்சியை மூழ்கடித்த நிகழ்ச்சியைக் கண்டு முகம் சிவந்தது. காலை 9.30 மணிக்குத் திருச்சி மெயின்கார்டு கோட்டிலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டது. தந்தையும் தனயனும் மீண்டும் ஒருங்கே அமர்ந்த விந்தைமிகு காட்சியினைக் கண்டோர் சித்தை பறிகொடுத்தனர். அன்று காலையிலேயே முதலமைச்சர் அண்ணா திருச்சி பெரியார் மாளிகை சென்று மணமிக்க மல்லிகை மாலை ஒன்றைத் தந்தைக்குச் சூட்டினார். நான் வாடாத மாலையினைச் சூட்டுகிறேன் என்று சரிகை மாலை அணிவித்தார் பெரியாரும். ஊர்வலம் ஊர்ந்தும், நகர்ந்தும், பிளாசா டாக்கீஸ் அருகில் சிலை அமையும் இடத்தையொட்டிய அலங்காரப் பெரும்பந்தலை 11.30 மணிக்குச் சென்றடைந்தது. விழாக் குழுத்தலைவரும், பெரியாரின் மிக நீண்டகால நண்பருமான சே.மு.அ. பாலசுப்பிரமணியம் வரவேற்றார். விழாக்குழுச் செயலாளர் கோவிந்தராஜுலு (“பஞ்சாயத்துச் செய்தி” ஆசிரியர்) முன்மொழிய, டி.டி. வீரப்பா வழிமொழிய, முதலமைச்சர் அண்ணா தலைமை ஏற்றார். டாக்டர் ராஜாசர் முத்தையா செட்டியார் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்த, ராணி மெய்யம்மை ஆச்சி அன்னை மணியம்மையாருக்குப் பொன்னாடை போர்த்தினார். விழாவில் அமைச்சர் மா. முத்துசாமி, சி.பா. ஆதித்தனார், டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம், கி.வீரமணி ஆகியோர் பேச, பெரியார் ஏற்புரை நல்கினார். அதே மேடையில் அன்று மாலை 5 மணிக்குக் குன்றக்குடி அடிகளார் தலைமையில், பெரியாரின் முழு உருவச்சிலையினை (நின்று கொண்டிருக்கும் தோற்றம்) காங்கிரஸ் தலைவர் காமராசர் திறந்து வைத்தார். ஈ.வெ.கி. சம்பத், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர் உரையாற்றப் பெரியார் சிறப்புச் சொற்பெருக்கு நிகழ்த்தினார். இந்த விழா மேடையில் பெரியாரின் வேன் டிரைவர் மானுவேல் ராஜ், மூன்று குழந்தைகளின் தாயான அலமேலுவைப் புரட்சித் திருமணம் புரிந்து கொண்டார். மேலும் 3 ஜோடி மணமக்களும், தங்கள் திருமணத்தை இங்கேயே நிறைவேற்றிக் கொண்டார்கள். பெரியார் டிரம் வாசிப்பது போலும், காமராசர் புல்லாங்குழல் ஊதுவது போலும், அண்ணா ஜால்ரா போடுவது போலும் “மெயில்” ஏடு கார்ட்டூன் வெளியிட்டுத், தன் வயிற்றெரிச்சலைக் காட்டிக் கொண்டது.

பெரியாரின் 89-வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்றுப் பேசிய முதலமைச்சர் அண்ணா கூறினார்:-

“நான் முதலமைச்சரான பிறகு எனக்கு ஏதாகிலும் ஒரு பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த விழாவிலே நான் கலந்து கொள்வதுதான் மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தருவதாகும். ஆனால் உங்களிலே பலருக்கு இது புதுமையானதாகத் தெரியும். என்னைப் பொறுத்தவரையில், இடையில் சில நாள் இல்லாமல் இருந்த பழைய நிகழ்ச்சிதானே தவிர, இது புதிதல்ல! பெரியாரவர்களுடைய 89-வது பிறந்த நாள் விழாவானது, இன்றைய தினம் தமிழகத்திலுள்ள எல்லாப் பண்பாளர்களாலும் கொண்டாடப்பட்டு வருவது இயற்கையானது. கட்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக, எல்லாக் கட்சியிலுள்ள பண்பாளர்களும் வரவேற்கத் தக்கதாகத், தமிழக மக்கள் நல்வாழ்வில் அக்கறையுள்ளவர்கள் போற்றத்தக்க நிகழ்ச்சியாக, இந்த மாபெரும் நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

தமிழகத்திற்கும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்விற்கும், இன்னும் உலகிற்கே என்று கூடச் சொல்லலாம், அவர்கள் செய்திருக்கிற அரிய பெரிய காரியங்கள், ஆற்றியிருக்கிற அருந்தொண்டுகள், ஏற்படுத்தியிருக்கிற புரட்சி உணர்ச்சிகள், ஓடவிட்டிருக்கிற அறிவுப்புனல், உலகம் என்றுமே கண்டதில்லை இனியும் காணப்போவதில்லை.

பிறந்த நாள் கொண்டாடுகிற நேரத்தில், என்னுடைய நினைவுகள் திராவிடர் கழகமாகவும், அதற்குமுன், தமிழக இயக்கமாகவும், சுயமரியாதை இயக்கமாகவும் இருந்த நேரங்களில் அவர்களோடு இணைந்து பணியாற்றிய பல எண்ண அலைகளை நெஞ்சில் பாயவிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு போர் வீரன் களத்தில் புகுந்து, இந்தப் படையை முறியடித்தேன்; அந்தப் படையை வென்றேன் என்று காட்டி, மேலும் மேலும் செல்வதுபோல் பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுதும் களத்தில் நிற்கிற போராட்ட மயமாகும். முதல் போராட்டம் புத்தரைப் போன்று மக்களுக்காகச் சுக போகங்களைத் துறந்ததாகும். பெரியார் அவர்களின் குடும்ப நிலை எப்படிப் பட்டது? எந்தப் பக்கம் திரும்பினாலும் குடும்பச் செல்வாக்கு; வாணிபத்தில் ஆதாயம்; நிலபுலன்கள்; வீடுவாசல் -இவைகளையெல்லாம் பெரியாரவர்கள் திரும்பி ஒருமுறை பார்த்து விட்டு, இவைகள் எனக்குத் தேவையில்லை; வீட்டை மறப்பேன்; செல்வத்தை மறப்பேன்; செல்வந்தருஞ் சுகபோகங்களை மறப்பேன்; அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் என் நாட்டு மக்களுக்கு அறிவுச் செல்வத்தைத் தரப்போகிறேன்! நல்லது கெட்டது ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் அற்ற மக்களுக்குச் சிந்தனைச் செல்வத்தைத் தரப்போகிறேன். பகுத்தறிவுச் செல்வத்தைத் தரப்போகிறேன் - என்று துணிவுடன்; குறுக்கிடுவோரின் ஆற்றலை முறியடிப்பேன் என்று கிளம்பினார்களே அதுதான் முதல் போராட்டத்தில் பெற்ற வெற்றியாகும். அதற்குப் பிறகு, அவர்கள் சந்தித்த ஒவ்வொரு களத்திலேயும் வெற்றிதான் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் தேசிய மொழி இந்திதான் என்று சொன்னவுடன், தேசியம் என்பது மகாபுரட்டு! இந்தியா என்கிறீர்களே அது மிகப் பெரிய கற்பனை என்று கூறி, அவை இரண்டையும் உடைத்தெறிவதுதான் என்னுடைய வேலை என்று கிளம்பினார்கள். பிறகு, ஆட்சிமொழி என்று சொல்லி, எதிர்த்த பின்னர், இப்போது இந்தி, இணைப்பு மொழி இடத்துக்கு வந்திருக்கிறதென்றால், அது பெரியாரவர்கள் நடத்திய போராட்டத்தினால்தான்!

மொழிப் பிரச்சினை அவர்களைப் பொறுத்தவரை மிகச் சாதாரண பிரச்சினை. தமிழ் மக்களிடையே பரவியிருக்கிற காட்டு மிராண்டித்தனமான கொள்கைகள் ஒழிந்து, மனிதத் தன்மையும் ஒழுக்கமும் பண்பும் வளரத்தக்க விதத்தில் அறிவுப்புரட்சி செய்ய வேண்டும் என்பதே அவர்கள் நாட்டம். எந்த நாட்டிலும், இரண்டு நூற்றாண்டுகளில் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை இருபது ஆண்டுகளில் அவர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் Putting centuries into capsules என்பார்களே அதுபோல!

20 ஆண்டுகளுக்கு முன் வடநாட்டுக்கு நான் அவர்களோடு போயிருந்த நேரத்தில், சில பெரியவர்கள் கேட்டார்கள், உங்களை இன்னுமா விட்டு வைத்திருக்கிறார்கள்? நீங்கள் சொல்வதிலே பத்தாயிரத்தில் ஒரு பங்கு நாங்கள் இங்கே சொன்னாலும், நீங்கள் செய்வதிலே ஆயிரத்தில் ஒரு பங்கு செய்தாலும்கூட, எங்களை அடியோடு அழித்திருப்பார்களே' என்று. அப்படிப்பட்ட வீரமிக்க காரியங்களை நடத்திக் காட்டித், தாம் பெற்ற வெற்றிகளை இப்போது நம்மிடத்திலே ஒப்படைத்திருக்கிறார்கள் பெரியார் அவர்கள்.

இதே திருச்சியிலே, 1945-ல் நடைபெற்ற மாநாட்டுக்கு முதல் நாள் பெய்த பெருமழையால், பந்தலும் திடலும் நாசமாயின. ஒரே இரவுக்குள் தண்ணீர் இறைக்கப்பட்டு, மணல் தூவப்பட்டுப், பந்தல் பக்குவப்படுத்தப்பட்டது பெரியாரின் தொண்டர்களால். அதேபோலத்தான் பழைமைச் சேறும் இப்போது துடைக்கப்பட்டு விட்டது. ஒருமுறை சிவகங்கையிலே செருப்புத் தோரணங்களைத் திரும்பிய பக்கம் எல்லாம் தொங்கவிட்டு, எங்களை வரவேற்றார்கள்.

இன்று அவர்களுடைய பிள்ளைகளெல்லாம், இந்தப் பந்தலுக்குள் குழுமியிருக்கிறார்கள். அன்று வெறுத்தவர் இன்று போற்றுகின்றனர்! இப்படி ஒரு சமூகத்தை, ஒரு நாட்டு மக்களை ஆனாக்கிவிட்ட பெரியார், அவர் காட்டியுள்ள லட்சியப் பாதையில் நாமெல்லாம் நடந்து செல்ல நமக்கு ஆற்றல் தந்து, அவர் நமக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். அந்த வாழ்த்துப் பெறவே, நாம் இங்கே கூடியிருக்கிறோம். பெரியார் கட்டளைப்படி நடந்து தமிழகத்தைப் பொன் மயமாக்குவோம்."

17.9.67ல் திருச்சியில் குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியாரின் முதலாவது உருவச் சிலையைத் திறந்து வைத்த காமராசர் பேச்சு: “பெரியார் அவர்களுடைய திருவுருவச் சிலையைத் திறந்து வைத்திருக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாகச் சமுதாயத்திற்காகச் சிறந்த தொண்டுகளைச் செய்து வருகிறார்கள். அவர்கள் தொண்டின் பலனால் நம்முடைய தமிழகத்தில், சமுதாயத்தில், ஓர் பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அந்த எழுச்சியைப் புரட்சி என்றும் சொல்லலாம். அவர்கள் எப்படிச் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் மறைய வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அப்படியே அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஏற்றத் தாழ்வுகள் மறைய வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் ரஷ்யா சென்று வந்து, சோஷலிச லட்சியத்தைத் தமிழ்நாடு எங்கும் பரப்பினார்கள். அது தமிழகத்தோடு நின்றுவிடாமல், இந்தியா பூராவும் பரவியது. பெரியார் ஜூஸ்டிஸ் கட்சியிலிருந்த போதும். பொருளாதாரப் புரட்சியை உண்டுபண்ணிவிடுவாரோ என்று பயந்து. ஜஸ்டிஸ் ஆட்சியே இவரை ஜெயிலில் போட்டார்கள்!

அவர்கள் பாடுபட்டு, விதைவிதைத்துக் களை எடுத்து விட்டார்கள். நாம் செய்ய வேண்டியது அறுவடைதான். அதைக்கூட நாம் செய்ய மாட்டோமென்று சொல்ல முடியுமா என்ன? மனதில்பட்டதை மறைக்காமல் சொல்லக்கூடிய துணிவு, எனக்குத் தெரிந்த வரையில், அவர் ஒருவருக்குத்தான் உண்டு! யாருடைய தயவு தாட்சண்யத்தைப் பற்றியும் அவருக்குக் கவலையில்லை. தனக்கு நியாயமாகப்பட்டதைச் சொல்லி வரும் தலைவர், நீண்ட நாள் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஏன் இப்படி ஊர் சுற்றுகிறீர்கள்? என்றுகூட நான் கேட்டேன். பத்து நாள் வெளியிலும், பத்து. நாள் ஆஸ்பத்திரியிலும் இருக்கிறார்; மக்கள் நல்வாழ்வு வாழவேண்டு மென்ற லட்சியத்துக்காக"

பெரியாருக்கு மிக விருப்பமானதும், தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலேயே, முதன்முதலாகக் குடும்பக்கட்டுப் பாடுபற்றிக் கர்ப்ப ஆட்சி என்ற தலைப்பில் பெரியார் எடுத்துக் காட்டியதுமான-குடும்பநல விழா ஒன்று 20.9.67 மண்ணச்சநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. மலர் வெளியிடும் நிகழ்ச்சியில் பெரியார் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். அடுத்து ஒரு சிறப்பான விழா, சென்னை மயிலைப்பகுதி தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்தநாள் விழா| 22.9.67 மாலை ஓஷியானிக் ஓட்டல் பின்புறம் நடந்தது. மயிலை எஸ். வி.வேலு தலைமை தாங்கினார். அதில் கலந்து கொண்டு இருகழகத்தவரும் பிணைந்த பின்னர், அண்ணாவைப் பாராட்டிப் பெரியார் பேசிய முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் இது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் குழுமி நின்றனர். பெரியார் உரையாற்றினார்:

“பேரன்பிற்குரிய தாய்மார்களே! பெரியோர்களே! தலைவர் அவர்களே மகாசந்நிதானம் அவர்களே! கனம் கருணாநிதி அவர்களே! மாதவன் அவர்களே மற்றும் உள்ள தோழர்களே! இன்றைய தினம் இங்கு கூட்டப்பட்ட இந்தக் கூட்டமானது தமிழக முதல் அமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களுடைய பிறந்தநாள் பாராட்டுக் கூட்டம். அண்ணா அவர்களைப் பாராட்டவோ, வாழ்த்துக் கூறவோ நான் வரவில்லை. ஆனால் இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்த உங்களைப் பாராட்டவும் வாழ்த்துக் கூறவுமே வந்திருக்கிறேன். நீங்கள், இந்த ஆட்சி, நீண்ட நாள் நீடித்து இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று எடுத்துக் கூறவே இங்கு வந்திருக்கிறேன்.

அண்ணாதுரை அவர்கள் வெற்றிபெறுகிறவரையிலும், அந்தச் சேதி என் காதில் விழுகிற வரையிலும், அண்ணா துரையும், அவரது கட்சிக்காரர்களும், நல்ல வண்ணம் தோல்வி அடைய வேண்டுமென்றும், காங்கிரசு நல்ல வண்ணம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டுமென்றும் மனதாரப் பாடுபட்டேன். வேண்டியவர்கள் சால்லியடைந்து விட்டார்களே என்று நான் துக்கப்படும் முன்பே, வெற்றி பெற்ற இவர்கள் என்னிடம் வந்துவிட்டார்கள். தைரியமாக வந்து என்முன் உட்கார்ந்துவிட்டார்கள். எனக்கு ஒரே வெட்கம்!

இவர்கள் என்னைப் பார்த்துவிட்டுப் போனதும், இந்த ஆட்சியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று அறிக்கை விட்டேன். என்மேல் பலருக்குக் கோபம். என்னைக் கண்டித்துக் கடிதம் எழுதினார்கள். பின்பு, மாறுபட்டவர்களும் தாங்களாகவே பாராட்ட ஆரம்பித்து விட்டனர். இந்த ஆட்சி நிலைக்க நானும் என்னால் இயன்றவரை எந்த விதமான ஒதுக்கலும் (without any reservation) இல்லாமல் மனதாரப் பாடுபடுவேன்!

நம்மை எதிர்ப்பவர்கள், இவர்கள் வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கிய தேசத்துரோக ஜஸ்டிஸ் கட்சிக் கும்பல் என்று, 15 ஆண்டுகளாக தான் யாருக்காகப் பாடுபட்டேனோ, அந்தக் காங்கிரஸ்காரர்கள், மிகவும் கீழ்த்தரமாக இப்போது பேசுகிறார்கள். இந்த நாட்டில் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும், தலை நிமிர்ந்து நடக்கவும் செய்தது ஜஸ்டிஸ் கட்சிதான் நான் தலைவனான அந்தக் கட்சிதான் இப்போதும் ஆள்கிறதென்றால், என்னைவிட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாராக இருக்க முடியும்? ஆகவே நம்முடைய மக்கள் (இந்திய) தேசத் துரோகிகளாகவும் (தமிழ்) நாட்டுப் பற்றாளர்களாகவும் வாழ வேண்டும். இன்றைய தினம் மொழித் தகராறு வந்து ரொம்பவும் தொல்லை செய்கிறது. மாதவன் அவர்கள் டெல்லியில் மிகக் கண்டிப்பாகப் பேசி உள்ளார், அவரைப் பாராட்டுகின்றேன். தி.மு.க. ஆட்சி இந்தி வேண்டாம் என்பதில் மிகவும் கண்டிப்போடும், விழிப்போடும் இருக்க வேண்டும். இந்தி வேண்டாம் என்கிற தி.மு.க. காரர்களும், இந்தியா வேண்டாமென்கிற நாங்களும், ஒரே படகில்தான் இருக்கிறோம்.

இன்றைய தினம் சரித்திரமே கண்டிராத அளவுக்கு நமக்குப் பகுத்தறிவாளர் ஆட்சி கிடைத்திருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டு சரித்திரத்தில் ஒரு பகுத்தறிவுவாதி ஆட்சி கூட நமக்குக் கிடைக்கவில்லை. இனி எந்தக்காலத்திற்கும் இப்படிப்பட்ட ஆட்சி கிடைக்கவே கிடைக்காது!

பதவி போனதால் காங்கிரஸ்காரன், நிர்வாணமாய் நெருப்பின் மேல் நிற்பது போல் குதிக்கிறான். எப்படியாவது இவர்களைக் கவிழ்த்துவிட்டுத், தான் வரவேண்டுமென்று துடிக்கிறான். அடுத்து வருவதானாலும் பக்தவத்சலம் போன்றவர்கள்தானே வருவார்கள்?

1965-ல், இந்தத் தமிழ்நாடு மந்திரிகள் யாவரும், இன்றைக்கு ஆட்சி நடத்த யோக்கியதை அற்றவர்கள், என்று எழுதிப் புத்தகமே போட்டிருக்கிறேன்! அன்றைக்கு இதையெல்லாம் கேட்டுக்கொண்டு, என்னைத் தலைவன் என்று அன்றைக்குச் சொன்னவன், இப்போது பதவி போனதும் குதிக்கிறீர்களே!

நான் முதலில் இந்த ஆட்சி 5 வருடம் இருந்தால் போதும் என்று நினைத்தேன். நீ நடந்து கொள்வதைப் பார்த்தால், இந்த ஆட்சியே இன்னும் பத்து ஆண்டுகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றல்லவா நினைக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் இந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும். யாருக்காக? நம் (தமிழர்கள்) நன்மையைக் கருதி.

காமராசர் வந்த பின், கல்வி - தொழில் அபிவிருத்தியும், பொருளாதார உயர்வும் ஏற்பட்டதால், நான் காமராசரை, காமராசர் ஆட்சியை, ஆதரித்தேனே தவிரக் காங்கிரசை அல்ல!" என்று விளக்கியுள்ளார் பெரியார்.

“காங்கிரஸ்காரர்களே! உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள்! தி.மு.க.வை எதிர்க்காதீர்கள்! ஆதரியுங்கள்!” என்று வேண்டுகோள் விடுத்தார் பெரியார். “தமிழ்நாடு தமிழருக்கே” என்று, 23.9.67 அன்றையத் தலையங்கத்தில் சிவசேனைக் கொடுமைகளை விவரித்துவிட்டு, “இப்போது நாம் கொண்டாட இருக்கும் கண்டன நாள் நாசவேலையல்ல. யாருடைய சொத்துக்கும் சிவசேனைக்காரர்களைப் போல் நாம் சேதம் விளைக்க மடட்டோம். பம்பாயிலுள்ள நமது தமிழனை மேலும் உதைபடாமல் இங்கே அழைத்துக் கொள்ள; இங்கிருந்து நமது செல்வம் ஒரு துளியும் வெளியே போகாமல் தடுக்கத்; தமிழ்நாடு சுதந்தர ஸ்தாபனம் ஒன்றை உருவாக்குவோம்” என்று பெரியார், உருக்கமாக, ஒன்றரைப் பக்கம் எழுதினார்.

சென்னையிலுள்ள நண்பர்கள் கழகம், பெரியார் திடலில் பெரியாருக்கு நடத்திய பிறந்தநாள் பாராட்டு விருந்தில், அமைச்சர் மாதவன், ஏ.என். சட்டநாதன், டாக்டர் ஆர். ஜி.கிருஷ்ணன், மேஜர் ஜெனரல் அழகப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். சண்முகம் நன்றி கூறினார். இங்கு பேசும்போது, பக்தவத்சலம் தமது ஆட்சியில் செய்த ஓர் இனத்துரோகத்தைப் பெரியார் வெளியிட்டார். பஞ்சாயத்துப் படிப்பகங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த “விடுதலை” 2,000 பிரதிகளை நிறுத்திப், பதிலுக்கு, ராமசுப்பய்யரின் “தினமலர்” அனுப்ப ஏற்பாடு செய்தாராம், அந்த மகானுபாவர்!

24-ந் தேதி அதிகாலை திண்டிவனம் அருகில் நடந்த ஒரு கார் விபத்தில் அமைச்சர் கலைஞரும், அவரோடு சென்ற மதுரை முத்து, கவியரசு பொன்னிவளவன், கருணானந்தம் ஆகியோரும் சிக்குண்டனர். கார் பெருத்த சேதத்துக்குள்ளாகி டிரைவர் பாண்டியும், பலத்த காயத்துக்காளானார். கலைஞருக்கும் பெரிய ஆபத்து, மயிரிழையில் தப்பினார். அன்று காலை அண்ணாவும் பிற அமைச்சர்களும் திண்டிவனம் வரை சென்று அழைத்துவந்து, மாலையில் சென்னைப் பொது மருத்துவமனையில் கலைஞரைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெரியாரும் மணியம்மையாரும் அவரைப் பார்க்க 25.9.67 காலை 10 மணிக்கு மருத்துவமனை சென்ற போது, 50 கார்களாம்; ஆவல் நிறைந்த முகத்துடன் ஏராளமாக மக்கள் காத்திருந்தார்களாம்; பெரியாரே குறிப்பிடுகின்றார்! அடுத்து இருவரும் 11.15 மணிக்கு அடையாறு அரண்மனை சென்று ராஜா சர் முத்தையச் செட்டியார் அவர்களையும் ராணியார் அவர்களையும் கண்டு சிறிது பொழுது அளவளாவித் திரும்பினர். அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு நாள் என 16/9 முதல் 30/9 வரை கொண்டாடப்பட்டதைப் பெரியார் வரவேற்று எழுதினார்.

“திருவள்ளுவர் பகுத்தறிவுவாதியா என்று கேட்டால் ஆம் என்பதற்கும் என்னிடம் ஆதாரமுண்டு; இல்லை என்பதற்கும் ஆதாரமுண்டு. ஆகவே அவர் எந்தக் குறளில் பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறியுள்ளாரோ, அதற்காக நான் வள்ளுவரைப் போற்றுவேன்; மடமைக் கருத்துக்காகத் தூற்றுவேன். இரண்டும் செய்வேன்” என்று பெரியார் கருத்தெழுதினார். “ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவதே தவிரத் தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவதல்ல என்று பகுத்தறிவு வாதிகள் கருதுவோம். காங்கிரஸ் காரர்கள் ஜனநாயகவாதிகளா என்றால், இல்லை ! பக்தவத்சலமும், அளகேசனும் இப்போது ஊரூராய்ச் சென்று, காமராசருக்கு எதிர்ப்பு அணி உருவாக்குகிறார்கள். “நவசக்தி”ஏடு. நம்மையே நன்றி கெட்டதனமாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறதே!” என்றும் எழுதினார் பெரியார்.

1.10.67 அன்று சிவசேனை எதிர்ப்பு ஊர்வலத்தில் சென்னையில் பெரியாரும் கலந்து கொண்டார். ஒழிக கோஷங்களே கூடாது என்று கூறிவிட்டார். போலீசார் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்ததாகப் பெரியாரே பாராட்டிக் கூறினார். அடாதமழையிலும் விடாது கூட்டம் நடந்தது. பெரியார், வீரமணி, பாலசுந்தரப்பாவலர் பேசினர், சுரண்டல் கடுப்புக் கிளர்ச்சியில் பங்கு பெற, மணமாகாத ஆண், பெண் தொண்டர்கள் முன்வரலாம் என்றார் பெரியார்.

சிங்கப்பூரிலும், பம்பாயிலும், தமிழ்ப் பெருமக்கள் வாழுமிடங்களிலெல்லாம் பெரியார் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாய்க் கொண்டாடப்பட்டது. முன்னாள் சுப்ரீம் கோர்ட்
தலைமை நீதிபதி கஜேந்திரகட்கார் பம்பாய்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். எம்.ஆர். ராதாவுக்காக. மோகன் குமாரமங்கலம் வழக்காடினார். அரசுத்தரப்பில் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் வாதத்தை முடித்திருந்தார். தருமபுரியில் நவம்பரில் பெரியார் சிலை திறக்கப்படும் என்று செய்தி வெளியாயிற்று. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது அரசியல் அவகேடாகும் என்று அண்ணா சொன்னார்.

பெரியாருடைய தூண்டுதலால் (ஒத்துழைப்பால்) நலம் நாடுவோர் கழகத்தின் சார்பில் 3.10.67 அன்று அண்ணாவுக்கும், அமைச்சர்களுக்கும், முக்கியமான சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்மட்ட அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில், பிரியாணி விருந்து, மிகப்பெருமளவில் சிறப்புடன் அளிக்கப்பட்டது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாவின் ராஜிநாமாவால், இடைத் தேர்தல் ஏற்பட்டது. புது முகமாயிருக்க வேண்டுமென்ற அண்ணாவின் ராஜதந்திர மூளையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முரசொலி மாறன் தி.மு.க. வேட்பாளர்! ராஜம் ராமசாமி காங்கிரஸ் வேட்பாளர். “ஆங்கிலம் வேண்டுமானால் முன்னவரையும், இந்தி வேண்டுமானால் பின்னவரையும் ஆதரிக்க வேண்டியதே தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் நமது கொள்கையாகும்” என்றார் பெரியார்.

“மனிதனே சிந்தித்துப்பார்! உன்னையும் ஆரியனையும் ஒப்பிட்டுப்பார்? இந்தி ஏகாதிபத்யம் ஒழிய, இந்திய ஏகாதிபத்யமோ, யூனியனோ, ஒழிய வேண்டும். இது உடையாத வரையில் ஜாதித்திமிரும், ஆணவமும், ஈனத்தனமும் ஒழியாது ஒழியாது ஒழியாது! தமிழ்த் தம்பிமார்களே! என்னை நீங்கள் ஒன்றும் செய்துவிட முடியாது! நான் துறவி; அதிலும் இந்தத் துறவிக்குக் கடவுளே துரும்பு! காமராஜர் அமைத்த அஸ்திவாரத்தின்மீது ஆட்சி நடத்த ஆளில்லை. அதனால் வெட்கப்படாமல், அண்ணாதுரை ஆட்சியைப் பலப்படுத்துங்கள், ஆரியனுக்கு அடிபணியாத ஆட்சி இது! காங்கிரஸ்காரர்களே! இந்தியை தேசிய மொழியாக்கி, இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். புலவர்களே! நீங்களே முன் வந்து இப்போது கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும். தமிழன் காட்டுமிராண்டி என்பதற்கு இன்னும் தீபாவளி கொண்டாடுகின்ற ஒரு சான்றே போதாதா?” இந்தக் கருத்துக்கள் அக்டோபர் திங்களில் பெரியார் சுற்றுப் பயணங்களிலும், கட்டுரைகளிலும் சிதறிய முத்துகளாகும். திருச்சி வழக்கறிஞர்கள் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டு, உதகை குன்னூர் ஆகிய நீலமலைப் பகுதிகள், சிதம்பரம், சீரங்கம், வாழ்குடை போன்ற ஊர்களுக்கெல்லாம் சென்று வந்தார் பெரியார்.

தென் சென்னையில் முரசொலி மாறன் வெற்றி பெற்றதும், மக்கள் தமிழராட்சிமீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கும், தமிழரின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி மங்கவில்லை என்பதற்கும் இது நல்ல சான்றாகும் என்றார் பெரியார். திருக்குறளில் காணப்படும் மூடநம்பிக்கைச் சொற்களைப் பட்டியலிட்டு, 82 இருப்பதாகப் பெரியார் எடுத்துக் காட்டியிருந்தார். காட்டுமிராண்டிகளுக்கு 37 வகையான அடையாளங்கள், சோதிடம் பார்ப்பது போல் பல்வகை, உண்டு என்று ஒரு நாள் விளக்கியிருந்தார். பூணலும் நெற்றிக்குறியும் அணிகின்றவர்களே நீங்கள் பேசுகின்ற சமதர்மத்துக்கு இவை நோர்பகையாயிற்றே - என்று ஏளனம் செய்தார் ஒரு நாள்

8.11.67 அன்று திருச்சி பெரியார் பள்ளிகளின் நிறுவனர் நாளில் கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் கலந்து கொண்டு, நாட்டில் விழிப்பு உணர்ச்சியை உண்டாக்கியவர் பெரியார் என்று கூறினார். பெருமக்கள் 1,000 பேர் பிரியாணி விருந்தில் பங்கேற்கப்; பெரியாரும் மணியம்மையாரும் உபசரித்தனர். கோயில்களின் உபரிப்பணம் சமூக நலனுக்கே செலவிடப்படும் என்றார் முதலமைச்சர் அண்ணா . அவரது இந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா உரையினை 19, 20.11.67 இரு நாட்களும் வெளியிட்டு “விடுதலை” அண்ணாவின் கூரிய பகுத்தறிவுக் கருத்துகளையும், ஆங்கில மொழி உபயோகத்தின் மேன்மையையும் சுட்டிக்காட்டிற்று. 4.11.67 அன்று, ஏழாண்டுச் சிறைத் தண்டனை பெற்ற நடிகவேள் எம்.ஆர். ராதா, 15-ந் தேதி ஜாமீனில் வெளிவந்திருந்தார். சென்னை போயஸ்ரோடு அவரில்லம் சென்று, 16.11.67 அன்று, பெரியாரும் மணியம்மையாரும் ராதாவைச் சந்தித்து வந்தனர்.

“காங்கிரஸ்காரர்களே! நான் 'காங்கிரசுக்கு எதிரி அல்ல. உங்களில் காமராசரை நீக்கி விட்டால், மீதி உள்ளவர்களின் தரம் என்ன? தி.மு.க. வில் உள்ள கடைசி மனிதனை விட மேலானவர் உங்களில் யாருமில்லை! ஆதலால் உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள், தி.மு.க. ஆட்சியாளர்களே! உங்களைப் பகுத்தறிவாளர் என்றும், ஜாதி ஒழிப்பாளர் என்றும் பிரகடனப் படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் 9 மாதக் குழந்தைகள்தானே! உங்களைப் பார்ப்பனப் க்ஷயக்கிருமிகள் சுற்றும்; எச்சரிக்கையாயிருங்கள்! ஐக்கோர்ட் தலைமை நீதிபதியோ பார்ப்பனர்; நமது நீதிபதிகள் நிறைய வரவேண்டும்” என்ற ரீதியில் பெரியார் அறிவுரைகள் இருந்தன. சென்னை மாநகராட்சி, பெரியாருக்கு 22.11.67 அன்று மை லேடீஸ் பூங்காவில் வைத்துச் சிறப்பான வரவேற்பு வழங்கிப் பெருமை கொண்டது. அப்போது மேயர் இரா.சம்பந்தம்.

28.11.67 அன்று சட்டமாக்கப்பட்ட இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா திராவிடருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கிட்டாதிருந்த பெருவாய்ப்பை அளித்தது. அதாவது இதுவரை நடைபெற்றிருந்த சுயமரியாதைத் திருமணங்கள் அனைத்துமே செல்லுபடியாவதற்கு (With retrospective effect) இச்சட்டம் வழிவகுத்தது. பார்ப்பனரின் மதகுருத் தன்மை ஒழியவும், மூடச் சடங்குகள் அகலவும் வழிவகுத்து, உரிமையளித்த இச்சட்டத்தை நிறைவேற்றியதன் மூலமாகப், பெரியாரின் நீண்ட நாளையக் கனவை நனவாக்கினார். முதல்வர் அண்ணா. நாம் இருக்கின்ற காலத்துக்குள், நமக்குப்பின் வேறு யார் வந்து ஆண்டாலும் மாற்ற முடியாதபடி, சில நிலையான காரியங்களை, அவை மூன்று நான்காயிருந்தாலும்கூடப் போதும்! செய்து முடிக்க வேண்டும், என்று சொல்லிய வண்ணமே அண்ணா, தமிழ்நாடு பெயர் மாற்றம், சு.ம. திருமணச்சட்டம், பி. யூ.சி. வரை இலவசக் கல்வி ஆகிய திட்டங்களைக் கொண்டு வந்தார்.

கல்விக்கு நிறையச் செலவிடுவேன் என்ற அண்ணா கூற்றை, முதல் பக்க ஏழுகாலப் பெருஞ்செய்தியாக, 11.12.67 வெளியிட்டு, அடுத்த நாள் பாராட்டுத் தலையங்கமும் தீட்டியிருந்தது “விடுதலை” ஏடு. ஆனால், உலகத் தமிழ் மாநாடு சிறப்புடன் நடத்தப் போவதாக அண்ணா அறிவித்தது பெரியாருக்குச் சினத்தையே வரவழைத்தது! “உலகத் தமிழ் மாநாடாம் - வெங்காய மாநாடாம், இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது? காங்கிரசை விட இந்த மந்திரி சபை தேவலாம் என்கிறார்கள்; இந்த நேரத்தில் ஏன் இந்தக் கூத்து? கனம் அண்ணாதுரை 1972-ல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லி விடட்டும்!. உலகத் தமிழ் மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன் சூத்திரனாகத்தானே இருக்கப் போகிறான்! இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும், கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்களல்லவா? தமிழர்களே! நம் எதிர் காலம் சுத்தத் தமிழில் இல்லை, ஆங்கிலம் கலந்தே பேசுங்கள்! தாயாரை மம்மி என்றே சொல்லுங்கள்“ என்றார் பெரியார் ஆவேசமாக. “அரசியல் சட்டப் பூச்சாண்டி என்னிடம் காட்ட முடியாது” என்றும் காட்டமாக 15.12. 67 அன்று எழுதினார்.

6.12. 67 விருதுநகரில், ஆசைத்தம்பி மகள் திருமணத்தில், சுயமரியாதைத் திருமணச் சட்டம் பெரியாருக்கே காணிக்கை என்றார் அண்ணா . டிசம்பரில் 7,8,9 மூன்று நாள் கூட்டங்கள் மழையால் ரத்தானது பெரியாருக்கு வருத்தந் தரும் செய்தி. 6.12.67 அன்று “கைத்தறித் தொழில் ஒரு நியூசென்ஸ்” என்று பெரிய தலையங்கம் விவரமாக எழுதினார். “கைத்தறியாளரின் வாழ்க்கை நிலை, அவர்கள் குடும்பத்திலுள்ள குழந்தை குட்டி முதல் அனைவரும் ஒவ்வொரு வகையில் பாடுபட்டும், தரித்திரம் தான்? அவர்களில் பலரும் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கிடைக்காததால் பிச்சை எடுக்கக் கிளம்பிவிட்டனர். அவர்கள் நிலை உயர நிரந்தரமான பரிகாரம் கண்டு பிடிக்க வேணும். ரிபேட் தருவது அரசாங்கப் பணத்தை வீணடிப்பதே ஆகும். அதனால் சில ரகங்களைக் கைத்தறிக் கென்றே கட்டாயமாய் ஒதுக்கித் தீரவேண்டும். அதற்கான சட்டங்களைச் செய்ய வேண்டும்” என்றார். 19-ந் தேதி நாகரசம்பட்டியில் பெரியார் ராமசாமி கல்வி நிலையம் வீரமணி தலைமையில், அறிஞர் சி.என். அண்ணாதுரை திறந்து வைப்பார். பெரியார் அறிவுரை கூறுவார். க. ராஜாராம் எம்.பி. கலந்து கொள்வார் என “விடுதலை”யில் செய்தி வந்தது.

இந்த விழாவில் பெரியார், அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தினார். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்ற குறளைச் சொல்லி, “நான் இவர்கள் தோற்க வேண்டும் என்று மனப் பூர்வமாகப் பாடுபட்டேன். இருந்தும் எல்லாவற்றையும் மறந்து, தீமை செய்த என்னைத் தண்டிப்பது போல், இதற்காகத் திருச்சிக்குப் புறப்பட்டு வந்து என்னைப் பார்த்தார்கள். இவர்களது பெருந்தன்மையால் எனக்குத்தான் வெட்கமாகப் போய்விட்டது. தலை நிமிர்ந்து பேச முடியவில்லை. சங்கடப்பட்டேன்.“ என்றார். அண்ணா பேசும் போது, பெரியாரின் கருத்துகளுக்கெல்லாம் சட்ட வடிவம் தருவோம். அதற்காகத்தான் பதவியில் இருப்போம். பெரியார் அவர்கள் பதவியை விட்டு எப்போது வரச் சொன்னாலும், அவரோடு சேர்ந்து எந்தப் போராட்டத்திலும் ஈடுபடுவோம். பதவியை விட்டு வரவா? இருக்கவா?” என்று கேட்டு, உணர்ச்சி மயமாக்கினார். இடையிலே ஒரு நகைச்சுவை:- “என். டி. சுந்தரவடிவேலுவைத் தமிழக அரசின் கல்வித்துறை ஆலோசகராகப் போட்டு, இப்போது தான் ஃபைலில் கையெழுத்திட்டு வருகிறேன்' என்று அண்ணா பெரியார் காதில் கூறினார். பெரியார் உடனே பரபரப்புடன் எழுந்து, மைக் முன்பு வந்து, “ஒரு நல்ல செய்தி...” என்று தொடங்கு முன்பு அண்ணா அவரை இழுத்து அமர்த்தி, “இப்போது சொல்லி விடாதீர்கள். காரியம் கெட்டுப் போகும். இது ரகசியம்” என்றார்.

டெல்லி நாடாளுமன்றத்தில் ஆட்சி மொழி மசோதா நிறைவேற்றப்பட்டது. வடநாட்டாருக்கு இருக்கிற மெஜாரிட்டி பலத்தால் “மொழி பற்றிய பார்லிமெண்ட் தீர்ப்பு” என்ற தலையங்கத்தில் 17-ந் தேதி பெரியார், “205 பேர் ஆதரித்தும் 41 பேர் எதிர்த்தும் ஆட்சி மொழி மசோதா நிறைவேறியிருக்கிறது. இது விஷயத்தில் தென்னக எம்.பி.க்களின் தனித்த கூட்டத்தில் மெஜாரிட்டி பார்த்து, முடிவெடுக்கும் முறை கையாளப்படவேண்டும். இந்தி பேசும் பகுதியினர் மெஜாரிட்டியாக இருந்து கொண்டு இருக்கும் வரையில், நாம் நினைப்பது எதுவும் நடக்காது! அதனால் இந்திய யூனியனில் இருப்பது நமக்குக் கேடு தரும் விஷயமே” - என்று குறிப்பிட்டார். காமராஜர்கூட“மொழி மசோதாவால் விபரீதமே விளையும். நாடு பிரிய வழி வகுக்கும்” என்று எச்சரித்ததை “விடுதலை” முதல் பக்க பேனராக வெளியிட்டது 18-ந்தேதி. தலையங்கமும் “ஆட்சி மொழி மசோதாவா? இந்தித் திணிப்பு மசோதாவார் என்று எழுதிற்று. முதல் பக்கம் ”தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாக மாறினால் ஒழியத் தமிழர் தன்மானத்தோடு வாழ முடியாது. ஈ. வெ. ராமசாமி“ என்றும், 3-ம் பக்கம் தோழர்களே! காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை ஆசி நமக்கு இருக்கிறது. நமது நாடு முழுச் சுதந்திரம் அடைய சுதந்தரப் படையில் சேருங்கள்- ஈ.வெ.ரா.” என்றும் கட்டம் கட்டிய கொட்டை எழுத்து வாக்கியங்கள் பிரசுரமாயின.

காமராசர் தலைவர் பதவியை நிஜலிங்கப்பாவுக்குத் தர இருப்பதாகச் செய்திகள் வந்தன. மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை நாடெங்கும் துவக்கினர். 21-ந் தேதி நாடாளுமன்றத்தில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு (பிரிவினைத் தடுப்பு) மசோதா நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து வெளி நடப்புச் செய்தனர். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் துரோகம்: செய்து விட்டதாக முரசொலி மாறன் எம்.பி. குற்றம் சாட்டியிருந்தார். “விடுதலை” ஆசிரியர் வீரமணி, தமது மனைவி, பிள்ளைகளுடன், விமான மூலம் மலேசியா, சிங்கப்பூர் பயணமானார். 25. 12.67 அன்று மாலை 3.20 மணிக்கு அவர்களை வழியனுப்பி வைக்க, மணியம்மையார் விமான நிலையம் வந்திருந்தார். பெரியார் சுற்றுப் பயணத்திலிருந்தார். 21-ந் தேதி “விடுதலை”யில் பிரிவினை எதிர்ப்புச் சட்டம் என்ற தலையங்கத்தில், “தி.மு.க. மந்திரிகள் தவிர, மற்றத் தோழர்களெல்லாரும் முன் வாருங்கள். போராட்டம் துவக்குவோம்” என்று பெரியார் எழுதினார்.

சென்னை அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசைச் சங்க மாநாட்டில், இராஜாஜியையும் வைத்துக் கொண்டு அண்ணா, “பெரியார் கருத்தை ஒப்புக் கொள்ளாதிருக்க முடியுமா? பிரிவினை வேண்டாம் என்று சொல்ல எனக்கும் மனம் இடந்தரவில்லையே!” என்று சொன்னார். உடனே பெரியார் இதனை ஏந்திக் கொண்டு, 22.12.67 தலையங்கத்தில் “பிரிவினை அவசியமா இல்லையா?” என்று கேட்டு; “நான் வேண்டுமானால் என்னுடைய ஜாதிப் போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன்; இந்தத் தென்னாடு விடுதலைப் போராட்டத்தை முன்னிட்டு அண்ணாவின் அண்ணாமலை மன்றப் பேச்சு எனக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. போராட்டம் துவக்க வேண்டியது தான்! இந்திய அரசாங்கம் இருக்குமா, விலகுமா?” என்று துணிவுடன் எழுதினார். இராஜாஜியின் 90-வது பிறந்த நாள் விழாவில், 26.12.1967 அன்று பேசிய தமிழகத்தின் முதலமைச்சர் அண்ணா , “இந்தி ஆதிக்கம் ஒழிய, என்னுடைய இரத்தம் சிந்தவும் தான் தயாராக உள்ளேன்” என்று வீர முழக்கமிட்டார்.

வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூரில், பெரியார் தலைமையில், அமைச்சர் மாதவன், சலவையாளர் துறையைத் திறந்து வைத்தார். பின்னர் கூட்டுறவு வங்கியின் கட்டடமாகிய நடேசன் நிலையத்தையும் பெரியார் தலைமையில் அமைச்சர் திறந்தார். ஆம்பூர் நகர மன்றத் தலைவர் சம்பங்கி, இருவருக்கும் வரவேற்பு மடல் வழங்கினார். மறுநாள் டிசம்பர் 25 அன்று பெரியார் ஈரோடு நகரமன்றத்தில் நடந்த விழாவிலும், விருத்திலும் பங்கேற்றார். அடுத்த நாள் வேலாயுதம் பாளையத்தில் பேசும்போது “காமராஜருக்கு முன் புத்தி இருந்தது இப்போது என்ன கோளாறு ஏற்பட்டதென்று தெரியவில்லை . தி.மு.க. ஆட்சி தவறு செய்தால், மக்களிடம் அதை எடுத்துச் சொல்வோம்; 5 வருஷம் ஆனதும் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லி வந்தவர், இப்போது மாறிப் பேச ஆரம்பித்து விட்டாரே” என்றார் பெரியார். 27ந்தேதி லாலாப் பேட்டையில் பதவிக்கு வருபவர்கள் யாராயிருந்தாலும் அவர்களையெல்லாம் ஆதரிப்பது எங்கள் வேலையல்ல! நம் தமிழர் சமுதாயத்திற்குக் கேடான காரியம் செய்தால் அவர்களைக் கண்டிக்கத் தவறமாட்டோம்" என்று சொன்னார் பெரியார். 31ந்தேதி திருச்சியில் காலை 11 மணிக்கு அரசு மருத்துவமனையில் “பெரியார் ஈ.வெ.ரா. - மணியம்மை குழந்தைகள் பகுதி”யைக் கலைஞர் தலைமையில் அண்ணா திறந்து வைத்தார். இதற்காகப் பெரியார் 1 லட்ச ரூபாய் வழங்கியதைப் பாராட்டிய கலைஞர், பிற மாவட்டங்களுக்கும் பெரியார் அன்பளிப்புகள் தரவேண்டுமெனக் கோரினார். மணியம்மையாருடன் இந்த விழாவுக்கு வருகையளித்திருந்த பெரியார், “மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டபடி என் சக்தி அனுசாரம் நன்கொடை தருகிறேன். குடும்பக் கட்டுப்பாடு நமது கொள்கையாக இருந்தாலும், பெற்று விட்ட குழந்தைகளை வீணாக்காமல் பாதுகாக்கவே இந்த நிலையம் பயன்படும்” என்று கருத்தறிவித்தார்.

அன்று காலை 10 மணியளவில் “பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் கல்லூரி”க்கான புதிய கட்டடத்தைப் பொதுப் பணி அமைச்சர் தலைமையில், முதலமைச்சர் திறந்து வைத்தார். அன்பில் தர்மலிங்கம் வந்திருந்தார். “பெரியார் கல்லூரியில் பயின்ற நாங்கள், சிக்கனத்தைக் கையாண்டு, இம்மாதிரிக் காரியங்களை நிறையச் செய்ய விரும்புகிறோம்” என்றார் கலைஞர். பெரியாரின் சிக்கனத்தைக் குறிப்பிட அண்ணா ஒரு நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார்:- “பெரியாரோடு ஈரோட்டிலிருந்தபோது, ஜங்ஷனில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் ஸ்டாலில், ஹிட்லர் பற்றிய நல்ல புத்தகம் ஒன்று வந்திருந்தது. விலையைப் பார்த்தால், பெரியார் வாங்கித் தருவாரோ என்ற சந்தேகம் என்னுள் எழுந்ததால், 4, 5 தடவை புக் ஸ்டாலுக்குப் போய்க், கொஞ்சம் கொஞ்சமாக, அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். ஒரு நாள் அந்தப் புத்தகத்தின் சிறப்பு பற்றிப் பெரியாரிடம் குறிப்பிட்டு, அதை வாங்கச் சொன்னேன். நீங்கள்தான் படித்து விட்டீர்களே, இனி எதற்காக அது? என்று மறுத்துவிட்டார் பெரியார்,

ஈரோடு மகாஜன உயர்நிலைப் பள்ளியின் பொறுப்பாளராக இருந்த பெரியார், 3,000 ரூபாய் மிச்சப்படுத்திவிட்டுத்தாள், பொறுப்பைத் திரு சிக்கையா நாயக்கரிடம் ஒப்படைத்து, வந்தார்.” என்றார். குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரத்துக்குக் கடவுளரே வழி காட்டி என நகைச்சுவையோடு குறிப்பிட்ட அண்ணா , “சிவனாருக்குப் பிள்ளைகள் இரண்டுதான். அதில் ஒருவருக்குத் திருமணமே ஆகவில்லை, இன்னொருவருக்கு மனைவி இரண்டானாலும் பிள்ளை இல்லை ” என்றார். பத்திரிகையாளரிடம் பேசும் போது, “பள்ளிகளில் தமிழும் இங்கிலீஷும் கட்டாயப் பாடங்கள். மத்திய அரசு, இந்தியையும் போதிக்க வேண்டும் என்று எங்களை நிர்ப்பந்தம் செய்தால், பதவியிலிருந்து விலகி, அதை எதிர்த்துப் போராடுவோம்” என்றார் முதலமைச்சர் அண்ணா .

கழகப் பிரச்சாரத்திற்காகவும், சிங்கை-மலேசிய நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டதாலும், 25.12.67 அன்று பிற்பகல் 3.30க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட வீரமணி குடும்பத்தினர், இரவு 8.30 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்தபோது, “தமிழ் முரசு” தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களும், தோழர்களும் வரவேற்று, உபசரித்தனர். மறுநாள் காலை 11 மணிக்கு சிங்கப்பூரை விட்டு விமானத்தில் புறப்பட்டுப் பிற்பகல் 11 மணிக்கு, ஈப்போ விமான நிலையம் சென்றடைந்தனர். அங்கே மர்க்கண்டைல் பிரஸ் உரிமையாளரான வீரமணியின் மைத்துனர் சந்திரனின் குடும்பத்தார், மற்றும் தமிழ்ப் பெரு மக்கள் திரண்டிருந்து வரவேற்றனர். ஒரு மாதகாலம் மலேசியாவில் தங்கிய வீரமணி, ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியாரின் கருத்துக்கனல் கமழச் செய்தார்.

2.1.68 அன்று சென்னை மவுண்ட்ரோடு ரவுண்டானாவில் சர் ஏ. ராமசாமி முதலியார், அண்ணா சிலையைத் திறந்து வைத்துத் “திறமை மிக்கவர். தளராமல் உழைத்து முன்னேறியவர் அண்ணா” என்று புகழந்து பாராட்டினார். 11.1.68 அன்று அதிகாலை 3.30 மணிக்குப் பூவாளூர் அ.பொன்னம்பலனார் சென்னைப் பொது மருத்துவமனையில்
காலமானார். அன்னாரின் சடலம் பூவாளூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கே எரியூட்டப் பெற்றது. நடிகவேள் எம்.ஆர். ராதா, கோவை, சேலம் நகரங்களிலுள்ள சினிமா ஸ்டூடியோக்களில் மட்டும் நடிக்கலாம் என, ஜாமீன் தளர்த்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத் நீதிபதி என், கிருஷ்ணசாமி ரெட்டியாரால். இந்தியாவில் காங்கிரசல்லாத ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழ் நாட்டின் தி.மு.க. ஆட்சியே சிறந்து விளங்குவதாக அய்தராபாத் அ.இ.கா.கமிட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சி.சுப்ரமணியம் புகழ்ந்தாராம், நாடாளுமன்ற சபாநாயகர் நீலம் சஞ்சீவரெட்டி, மொழி மசோதாவில் தக்க மாறுதல்கள் தேவை என்ற கருத்தைத் தெரிவித்தார். அண்ணா , நாவலர், கலைஞர் முன்னிலையில் தஞ்சையில் கூடி, கடலூர், அண்ணாமலை நகர், திருச்சி முதலிய இடங்களில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் கைவிடுவதாக, மாணவர் கவுன்சில் முடிவெடுத்தது.

உலகத் தமிழ் மாநாட்டையொட்டிக் கடற்கரைச் சாலையில் கம்பன், கண்ணகி, அவ்வை போன்றார்க்குச் சிலையெடுத்தது பெரியாருக்கு அறவே பிடிக்கவில்லை. பொங்கலன்று குனியமுத்தூரில் “நமது இழிவை சூத்திரத் தன்மையை நிலைநாட்ட விழாவா? மடமை இலக்கியங்களுக்கெல்லாம் விழாவா? மூடநம்பிக்கை கொண்ட கதாபாத்திரங்களுக்கு வரிசையாகச் சிலைகளா? இதெல்லாம் மக்கள் பணத்தைப் பாழாக்கும் வீண் செலவுதானே?” என்று கேட்டுக், கண்டித்தார் பெரியார். 19-ந் தேதி “விடுதலை”யும், “சென்னையில் மூன்று விழாக்கள் நடந்தன. தேவையில்லாத உலகத் தமிழ் மாநாடு ஒன்று. உடல் வலிமை காட்டும் அகில இந்திய விளையாட்டுப் போட்டி ஒன்று நேரு ஸ்டேடியத்தில் நடந்தது; இது தேவைதான். மூன்றாவதாக அண்ணா நகரில் வர்த்தகத் தொழில் பொருட்காட்சி துவங்குகிறது; இதுவும் மிக அவசியமானதுதான்” என்று தலையங்கம் தீட்டியது.

சுயமரியாதைத் திருமணச் சட்டத்துக்கு 17.1.68 அன்று குடி அரசுத் தலைவர் ஒப்புதலளித்துவிட்ட நல்ல செய்தி கிடைத்தது. சேலம் பி. ரத்தினசாமிப் பிள்ளையின் மாமாங்கப் பண்ணையில் நடந்த மாட்டுப் பொங்கல் விழாவில் பங்கேற்ற பெரியார், “உழைப்பின் பயனைக் கண்டு மகிழ்வுறும் பொங்கல் விழாவே அறிவுக்குப் பொருத்தமான விழா” என்றார். தமக்குப் பொங்கல் வாழ்த்து அனுப்பியவர்களுக்கெல்லாம் “விடுதலை”யில் நன்றியும் தெரிவித்தார். 22.1.68 “விடுதலை” பெரியாரின் பேனா ஓவியங்களால் செறிந்திருந்தது. முதல் பக்கத்தில் இரண்டு பெட்டிச் செய்திகள்; தமிழ்நாடு பிரிந்தாலென்ன? என்னுந் தலைப்பில். தமிழ்நாடு இந்திய யூனியனிலிருந்து பிரிந்து தனிச் சுதந்திர நாடாகிவிட்டால் தமிழ் நாட்டிற்கோ, அல்லது இந்தியாவிற்கோ, அல்லது இந்த உலகத்திற்கோ என்ன கேடு ஏற்பட்டு விடும். அப்படிப் பிரியாது இருந்து வருவதால் யாருக்கு என்ன நன்மை உண்டாகும்?” என ஒன்று. மற்றொன்று நாட்டுப்பற்று என்ற தலைப்புடன்- ஒருவன் அவனது சரித்திர அனுபவபூர்வமான ‘தாய்’ நாட்டைச் சுதந்திர நாடாக ஆக்கப்பட வேண்டும் என்று வாயால் சொல்வதற்குக்கூட (அவன்) பயப்படுவானே ஆனால் அவன் எந்த அளவுக்கு நாட்டுப்பற்றுடையவன் ஆவான்?” என்பதாக. “தமிழர் நிலைபற்றி எனது கருத்து” என்ற தலையங்கக் கட்டுரையில் இந்தியக் குடி அரசின் துணைத்தலைவர் வி.வி.கிரி சிக்கித் தவித்தார்.” அவர் சமஸ்கிருதம் நாட்டு மொழியாக வேண்டும் என்று கூறிவிட்டாராம். துணிச்சலான பேச்சல்லவா? கட்சிச் சார்பற்ற முறையில் தமிழர்கள் மாநாடு ஒன்று கூட்டி, இந்தி ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது; தமிழ் நாட்டை முழுச்சுதந்தரமுள்ள நாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது மானம் அறிவு சுதந்திரம் உணர்ச்சி உள்ள மக்களின் கடமையாகும்." அடுத்த நாளும் “மான உணர்ச்சி உள்ளவர்கள் பிரிவினைக் கொடி உயர்த்த வேண்டும்” என்று எழுதியதோடு, சென்னை 60-வது வட்ட அண்ணா படிப்பகத் திறப்பு விழாவிலும் பெரியார் அவ்வாறே பேசினார்.

மலேசிய நாட்டின் எல்லா ஊர்களிலும், பெரியாரின் கொள்கை. மணம்பரப்பும் ஊதுவத்தியாகச் சென்ற வீரமணி சிறப்புடன் வரவேற்கப்பட்டார். தமிழகச் சட்டமன்றத்தின் அவசரக் கூட்டம் ஒன்று 23.1.68ல் அழைக்கப்பட்டு, மொழி மசோதாவைத் தமிழகம் ஏற்காது; தேசிய மாணவர் படையின் ஆணைச் சொற்கள் இந்தியில்தான் இருக்கவேண்டுமெனக் கட்டாயப்படுத்தினால் தமிழகத்தில் என்.சி.சி. படையே கலைக்கப்படும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றியது. இதை விளக்கி நேப்பியர் பூங்காவில் அடுத்த இரண்டாம் தேதி பேசிய அண்ணா “இதனால் எங்கள் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, நாங்கள் சிறை செல்ல நேர்ந்தாலும் சரி; சிறைவாசம் எங்களுக்குப் புதியதல்ல! அல்லது உயிரே போவதானாலும் சரி; இந்த உயிர் ஒரு முறைதானே போகும். நல்ல காரியத்துக்காகப் போகட்டுமே” என்று வீர முழக்க மிட்டார். 26.1.68 “விடுதலை”யில் அண்ணாவுக்கு... என்ற தலைப்பின் கீழ் பெரியார் தலையங்கம் தீட்டினார்:- “23ந் தேதி சட்டசபை தீர்மானங்களைப் பாராட்டுகிறேன். ஆனால் காலேஜில் பயிற்று மொழியாகத் தமிழ் எதற்கு? கல்லூரியில் மாணவர்கள் கற்பது மொழியறிவை வளர்த்துக் கொள்வதற்கல்ல; அறிவுப் பெருக்கத்துக்காகவே! இங்லீஷ் மொழியைக் கற்றுதான் நிபுணர்கள் பல துறைகளில் உண்டாயினர். முதலில் அறிவியல், தொழில், விஞ்ஞானம் இவற்றுக்குத் தேவையான சொற்களைத் தமிழில் உண்டாக்குங்கள். புத்திமான் பலவானே தவிர, தமிழ் வித்துவான் பலவானாக மாட்டான். எதையோ மனதில் வைத்துக் கொண்டும், யாரையோ திருப்தி செய்யவும், ஓட்டு வாங்கிடவும் இவ்வளவு கேடான காரியத்தை தம்முடைய சமுதாயத்திற்குச் செய்யக் கூடாதென்றுதான் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்” என்று!

மொழிப் பிரச்சினை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சவான், தமிழக முதல்வர் அண்ணாவுடன் பேசக்கூடும் எனச் செய்தி வெளியாயிற்று. “சுதந்திரப் போராட்டத்துக்காக முதன் முதலில் இந்தியாவிலேயே குடும்பத்தோடு சிறைக்குப் போனவன் நான்தானே. அதனால் தமிழ் நாடு பிரிவினைக்கான காரியங்களையும் இப்போது நானே பார்த்துக் கொள்கிறேன்! துணிவில்லாதவர்கள் சும்மா ஒதுங்கியிருந்தால் போதும்;” என்று - அடுத்து, “பிரிவினை பயம்” என்ற தலையங்கமும் பெரியார் எழுதியிருந்தார். “ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழியாகாது. மிகமிகப் பழகிப் போன மொழி. நம்மால், நாம் விரும்பினாலும், புறக்கணித்து ஒதுக்க முடியாத, மொழி” என்று அதற்கடுத்த நாள் எழுதினார். 30-ந் தேதி, “இன்று காந்தியார் கொல்லப்பட்ட நாள். அவர் இருந்திருந்தால், இன்று இந்திய யூனியனும் இருக்காது; அரசியல் சட்டத்தை இப்படி இயற்றிடவும் அனுமதிக்க மாட்டார்” என்ற ஒரு பெட்டிச் செய்தியும் பெரியார் தந்தார். “நமது நீதி இலாகா யோக்கியதை” என்று 31-ந் தேதி எழுதிய தலையங்கத்தில் “சென்னை உயர்நீதி மன்றத்தில் நீண்ட நாட்களாக இரண்டு காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படாததால் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. சட்டந்தெரியாத ரங்க ராஜன் என்ற பார்ப்பன ஜில்லா ஜட்ஜுக்குப் பதவி உயர்வு தந்தே ஆகவேண்டு மெனப் பார்ப்பனத் தலைமை நீதிபதி தலை கீழாய் நிற்கிறார். கீழ்க் கோர்ட்டில் விதிக்கப்பட்ட அபராதத் தொகை மேல் கோர்ட்டில் இருக்கும் தன்னால் குறைக்கப்பட முடியாது என்று சாதாரண சட்ட நுணுக்கங் கூடத் தெரியாத அந்தப் பார்ப்பனருக்காக இவ்வளவு முயற்சி” என்று துணிவுடன் எழுதிக் காட்டினார் பெரியார். 31.1.68ல் ஆந்திர மாநிலத் தெனாலியில், “சமூக நீதி கிடைக்காமல் நீண்ட நாட்களாகக் கொடுமைக்கு ஆளாகிக் கிடந்த மக்களுக்காகப் போராடி வருபவர் பெரியார்” என்று தமிழக முதல்வர் அண்ணா புகழ்ந்து போற்றினார்.

“மதுவிலக்கு என்கிற மடமைக் கொள்கைக்காகத் தமிழக அரசு ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வருமானத்தை இழப்பதா?” எனப் பெரியார் உத்திரமேரூர் பொதுக் கூட்டத்தில் பேசினார். “கணவன் மனைவியிடம் நீ என் மீது பிரியமாய் இரு என்று சொல்லிக் கொண்டே அவளை முள் கம்பியால் அடிப்பது போன்றே, மத்திய அரசு நம்மை இந்திய யூனியனில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, இந்தித் திணிப்பு போன்ற பாதகமான காரியங்களைச் செய்ததாகும்” - என்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தும் தலையங்கப் பகுதிக் கட்டுரைகளைப் பெரியார் எழுதிவந்தார்.

31.1.68 அன்று சென்னை அசோகா ஓட்டலில் டி.சி. மோங்கா என்ற வடவர் - ஒரு மோட்டார் கம்பெனி மேலாளர் - நடுவயதைடைந்தவர் - குடந்தை திராவிடர் கழகப் பெரியவரான (15.11.1979ல் தமது 86 வயதில் மறைந்த) டி. மாரிமுத்துவின் மகள் - மருத்துவத் துறையில் நற்பணியாற்றும் - வயது வந்த பெண் - ஜெயலட்சுமியை மணந்து கொண்டதற்கான பாராட்டு விழாவில், பெரியாருடன் அண்ணாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிங்கப்பூரில் 1.2.68 நடந்த வரவேற்பில் சிறப்பிடம் பெற்ற வீரமணி எஸ். எஸ். ரஜுலா கப்பலில் புறப்பட்டு, 4ந் தேதி காலை 8 மணிக்கு நாகைத் துறைமுகம் வந்தடைந்தார். நாகைப் பகுதிக் கழகத் தோழர்கள், படகிலேறிக் கப்பலுக்குச் சென்று, வீரமணியைக் கண்டு, மரியாதை தெரிவித்து வந்தனர். மறுநாள் சென்னை வந்தடைந்தபோது, காலை 9.30 மணிக்கு, பெருமிதமான வரவேற்பு காத்திருந்தது. 5ந் தேதி பெரியார் தர்மபுரியில் திருமண விழாவில் பங்கேற்றுப், “பெண்களே! படிப்புக்கு முதலிடம் தாருங்கள்! பெண்களை அடிமைப்படுத்தி வைக்கும் முறையை மாற்றிக் கணவனும் மனைவியும் சிநேகிதராக நடக்க வேண்டும். கோயிலுக்கும், சினிமாவுக்கும் போகாமல், பொருட்காட்சி போன்ற அறிவு வளர்க்கும் இடங்களுக்கே செல்லுங்கள்” என்று அறிவுரை புகன்றார்.

2.2.68 அன்று தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தில், நாவலர் தலைமையில் பெரியார், அண்ணாவின் உருவப்படத்தினைத் திறந்து வைத்தார். வயிற்று வலி காரணமாக அண்ணா , சென்னைப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, 13.2.68 முதல் 26.2.68 வரை சிகிச்சை பெற்றார். சட்டமன்றம் நடந்து வந்த காலமாகையால், இடையிடையே மருத்துவர்களின் அனுமதியோடு அங்கே சென்று வந்தார். தஞ்சை திலகர் திடலில், பிப்ரவரி 8ந் தேதி பேசிய பெரியார், “தமிழ்நாடு பிரிந்தே ஆகவேண்டும். எனக்குத் தெரியும்; சுயமரியாதை இயக்கத் தோழர்கள் 100க்கு 100 பேரும் பிரிவினையை ஆதரிப்பவர்கள்தான்! தி.மு.க.வில் 99 பேரும், காங்கிரசில் 75 சதவீதம் பேரும் நிச்சயம் பிரிவினைக் கொள்கையை ஆதரிப்பவர்களே! எல்லாருமே தமிழர் என்பதை உணருங்கள்! குடும்பம், பதவி, படிப்பு, பந்தம், பாசம் இல்லாத தமிழர்கள் என்னோடு போராட்டத்தில் சேர வாருங்கள்! தி.மு.க. காரர் பதவியிலேயே இருங்கள். பிறகு நீங்களும் தேவைப்பட்டால் அப்போது உங்களையே கூப்பிடுகிறேன்” என்று பெரியார் முழக்கமிட்டார்.

21ந் தேதி சட்ட மன்றத்தில் அண்ணா “நாங்கள் இந்தியை ஒழிக்க வேண்டிய இடத்தில் ஒழித்தோம்! மத்திய அரசு மொழித் தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும்” என்று கோரினார். அன்று மேலவையில் பேசும்போது, மொழிப் பிரச்சினை குறித்துத் தாம் விரைவில் காமராசருடன் பேசப் போவதாகக் குறிப்பிட்டவாறு, 23ந் தேதியன்றே , இரவு 9 மணி முதல் 11 மணி வரை, எ.வி.பி. ஆசைத்தம்பி இல்லத்தில் காமராசருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் அண்ணா . “மோசடியான இந்திய யூனியனும், சுப்ரீம் கோர்ட்டும், பார்ப்பனர்களும் தமிழன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றனர். பார்ப்பான் பண்ணையில், அதாவது டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராமன் மந்திரிகளாயிருந்ததில், பார்ப்பனத் தொழிலதிபர்கள் கொழுத்தனர். தமிழ் நாடு தனிப்பண்ணையாவது மிகமிக அவசியம். உரிமையின் பாற்பட்ட பிரிவினை, சட்ட விரோதம் என்கிறார்கள். சட்ட விரோதமாகவே நாச வேலையில்லாமல் அமைதியாகத் தனி நாடு பெறுவோமே”, என்றும்; “நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியும்” வீக்கமும் அளவுக்கு மீறிப் போனதால், நம் மக்கள் மேலும் காட்டுமிராண்டி நிலைமைக்குப் போகிறார்கள்! ஒவ்வொருவனும் 2, 3 லட்சத்துக்கு வீடு கட்டுகிறான். 20 ஆயிரம் 30 ஆயிரம் நகை செய்து கொள்கிறான். 3,000 ரூபாயில் சேலை எடுக்கிறான். 30, 40 லட்சம் திருப்பதி உண்டியலில் போடுகிறான்” என்றும்; “உலகத்தில் 75 கோடி கிறிஸ்துவர்களுக்கு ஏராளமான நாடுகள், 40 கோடி முஸ்லீம்களுக்கும், பல கோடி பவுத்தர்களுக்கும் எத்தனையோ நாடுகள், ஆனால் 40 கோடி இந்துக்கள்-அதிலும் பல சாதிகளுக்கு - ஒரே நாட்டான் ஆட்சி தேவையா?” என்றும், பெரியார் கருத்தை எழுத்தில் வடித்தார்.

23.2.68 அன்று “விடுதலை” பணிமனை ஊழியர்கள், மலேசியா சென்று வந்த ஆசிரியர் வீரமணிக்குப் பெரியார் தலைமையில் பாராட்டு விருந்து நடத்தினர். சிங்கப்பூர் “தமிழ் முரசு” ஏடு வீரமணியின் பேட்டியைச் சிறப்புடன் வெளியிட்டிருந்தது. பெரியாருக்குப் பின்? என்ற கேள்விக்கு, திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும், பெரியாரின் நூல்களே எங்களை வழிநடத்தும் என்றார். உங்கள் பத்திரிகை அதிக விநியோகமுள்ளதா? என்று கேட்டபோது: அதிகமாகப் படிக்கப்படும் பத்திரிகை “விடுதலை” என்றார் வீரமணி. சென்னை 2வது வட்டத்தில் எஸ்.ஆர். சாண்டோ தலைமையில் பெரியார் பேசும்போது, “தீ பரவட்டும் நூலின் ஆசிரியர்தான் இன்றைய முதல்வர் அண்ணாதுரை. ஆனால் தேர்தலின்போது இராமாயண எரிப்புச் சம்பந்தமாக ஒன்றும் சொல்வதில்லை. அண்ணாதுரை அவர்களுக்கு அவ்வளவு ஞானமிருந்தும், ஓட்டுக்காக வாயை மூடிவிட்டார். ஓட்டும் தடதடவென்று விழுந்தது. பதவி வந்தது. பழைய ஞானமும் வந்துவிட்டது! இப்போது பகுத்தறிவு வாதியாகவே நடந்து கொள்கிறார்; நாத்திகராகவே காட்டிக் கொள்கிறார். பார்ப்பான் ஜெயித்து விட்டான்; நான் தோற்றுவிட்டேன் என்று அறிக்கை விட்டேனே-ஆனால் மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்தை வளரவிடாமலிருந்தால், தமிழர்களை முன்னேற்றும் ஆட்சியாகவே தி.மு.க. ஆட்சி விளங்கும்” என்று சிறப்புடன் குறிப்பிட்டார்.

1968-69க்கான மாநில அரசின் பட்ஜெட் 0.74 கோடி உபரியாகவும், மத்திய அரசின் பட்ஜெட் 290 கோடி துண்டு விழுவதாகவும் அமைந்தன. 5.3.78 “மெயில்” ஏடு, தி.மு.க. தனது ஓராண்டுச் சாதனை பற்றிப் பெருமை கொள்ளலாம் என்று புகழ்ந்தது. சேலம் உருக்காலையை அவசியமானால் தமிழக அரசே ஏற்று நடத்தும் என அண்ணா அறிவித்தார். மருத்துவக் கல்லூரி நுழைவுப் பேட்டி நடக்கும் என்றும், பிற்படுத்தப்பட்ட மாணவரின் நலன் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிந்தது. அண்ணா நகரில் நடைபெற்ற பொருட்காட்சியை 50 நாட்களில் 30 லட்சம் மக்கள் கண்டுகளித்ததாக முதல்வர் அண்ணா பூரிப்படைந்தார். கல்வி நீரோடை வெள்ளமாய்ப் பெருகியது. துவக்கப் பள்ளிகள் 31,000; உயர்நிலைப் பள்ளிகள் 2,345; கல்லூரிகள் 116; பயிற்சிப் பள்ளிகள் 130; பயிற்சிக் கல்லூரிகள் 20. பேரறிஞர் அண்ணாவை அமெரிக்க அரசு அழைத்தது. யேல் பல்கலைக் கழகமும் அழைப்பு விடுத்ததையொட்டி, அடுத்த திங்கள் புறப்பட இருப்பதாக அண்ணா அறிவித்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பில் ஒருவர் கலப்புத் திருமணத்தைச் சு.ம. முறையில் செய்தாலும், தங்கப் பதக்கத்துக்குத் தகுதி பெறுவார் என அமைச்சர் சத்தியவாணிமுத்து தெளிவு படுத்தினார். “மொழிப் பிரச்சினை மத்திய அரசால் சுமுகமாகத் தீர்க்கப்படாவிட்டால், பிரிவினைக்கு வித்திட்டதாகும், என்பதை மத்திய ஆட்சியினர்க்குப் புரிய வைக்கிறேன்” என்று காமராசர் மனந்திறந்து பேசினார், வாலாஜா அருகே 5.3.68 அன்று!

“பக்குவம் அற்ற மக்களின் கையில் ஓட்டுரிமை வந்தது தான் இந்திய ஆட்சியால் ஏற்பட்ட கேடு. அதனால் சட்ட அவமதிப்பு, ஒழுங்கீனம், நாசவேலை ஆகியவை பெருகிவிட்டன. மனிதப்பண்பே அடியோடு கெட்டு விட்டது. யாவுமே அலங்கோலமாகக் காட்சி தருகின்றன. இப்போது மாணவர்களே நாட்டுப் பிரிவினை கேட்கத் தொடங்கி விட்டார்கள். அது பாவம் என்று ஆச்சாரியார் சொல்கிறாராம்; அதுசரி! ஆனால் அண்ணாதுரையும் கருணாநிதியும் கூடாது என்கிறார்களாமே! சுதந்தரம் கேட்பது குற்றமல்லவே?“ என்று எழுதினார் பெரியார். 5.3.68 “விடுதலை”யில் “காங்கிரஸ் கவனிக்க வேண்டும்” என்னுந் தலையங்கத்தில் "தி.மு.க. ஆட்சி காங்கிரசை விட நலமான ஆட்சி. அது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த ஆட்சியைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. தண்ணீரில் தன் மகள் விழுந்து தத்தளிக்கும் போது, தன் மானத்தைப் பற்றிக் கவலையில்லாமல், தன் சீலையை அவிழ்த்து, ஒரு முனையை விசி, தண்ணீருக்குள் எறிந்து தவிக்கும் மகளை அந்த முனையைப் பிடித்துக் கொள்ளச் செய்து, கரைக்கு இழுத்துக் காப்பாற்றும் தாய் போல் நாம் காப்பாற்றக் கடமைப் பட்டிருக்கிறோம். நான் எப்படி 1954 வரையில் காங்கிரசை எதிர்த்து வந்தேனோ, அதே போல், 1967 வரையில் தி.மு.கழத்தையும் எதிர்த்து வந்தவன்தான் இப்போதுகூட 3,000 பேர் வரையில் போராட்டத்தில் சிறை செல்லத் தயாராய் இருந்து கொண்டு தான், இந்த ஆட்சியை ஆதரிக்கிறோம். இதையெல்லாம் புரிந்து கொண்டு, காங்கிரஸ் தமது எதிர்ப்புப் போக்கைக் கண்ணியமாய் மாற்றிக் கொள்ள வேண்டும்!” என எழுதினார் பெரியார்.

சென்னைப் பொது மருத்துவமனையில் சிறுநீரகச் சிகிச்சைக்காகப் பெரியார் 15.3.68 முதல் சில நாட்கள் தங்க நேரிட்டது. மணியம்மையார் உடனிருந்தார்கள். முதலில், 27-ந் தேதி வரையில் தங்க நேரிடலாம், அது வரை நிகழ்ச்சிகளைத் தள்ளி வைப்பதைப் பொறுத்தருள வேண்டும் என்று அறிவித்த வீரமணி, 28ந் தேதியன்று, 15 நாள் ஆகியும் மூத்திரம் இறங்குவதில் நோய் தணியவில்லை. எனவே இன்னும் 10, 20 நாள் தங்கவேண்டியிருக்கும் என்றார். பெரியார் 7.4.68 அன்று, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி, ஒருவாரம் ஓய்வெடுக்கத் தங்கினார். ஆயினும் தலையங்கம், பெட்டிச் செய்திகள், அறிக்கை எழுதுவதில் ஓய்வில்லை!

“மாணவரின் திறமை பண்பு ஆகியவற்றை மார்க்கினால் அறியமுடியாது. பரிட்சை முறை ஏற்பட்டதே, உயர் ஜாதிக்காரரின் கொலை பாதகச் செயலால்தான். பரீட்சையில் ஒருவனுக்கு விருப்பம் போல் பாஸ் பெயில் போட்டுவிடலாம். தொழிலில் ஈடுபடும் ஒரு மாணவனுக்கு அவன் வாங்குகிற மார்க் எவ்விதம் பயன்படும்? தகுதியும் திறமையும் என்ன மேல் ஜாதியாருக்கு மட்டுமே உரிமையா! விகிதாச்சார உரிமையை மறுப்பது, மேல் ஜாதியாரின் ஜாதிக் குறும்பினால் தானே! ஆகையால், பிற்படுத்தப்பட்ட மக்களை எப்படியும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டியது ஆட்சியில் உள்ளவர்களின் நீங்காக் கடமையாகும்“ என்று மார்ச் 16-ல் எழுதினார். 17-ல் “மதச்சார்பற்ற ஆட்சியும் நமது அமைச்சும்” என்ற தலையங்கம், “மாண்புமிகு கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் இராமாயண - பாரதக் கதைகளைப் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் சேர்ப்பது குற்றமல்ல; அது மதச் சார்பற்ற ஆட்சிக்கு விரோதமுமல்ல என்கிறாராமே! இதைச் சொல்வதற்குப் பழைய பக்தவத்சலமே போதுமே - இவர் தேவையில்லையே! மூட நம்பிக்கை நூல்களைப் பள்ளிகளில் நுழைய விடாதீர்கள்! அப்படி அவை நுழையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது மந்திரிகளின் அருளாக இருக்க வேண்டும். என் மனதின் பட்டதை எழுதினேன். இவற்றில் குற்றமிருப்பின் மன்னித்தருள்க” இவ்வாறு கோரினார். “நமது ஜனநாயகம் சுத்த காட்டுமிராண்டி ஜனநாயகமாகும்” என்று 19ந் தேதி பெரியாரை எழுதத் தூண்டியது பாண்டிச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் கட்சி மாறிய சம்பவமாகும். “இதற்குப் பரிகாரம் பிறகு எழுதுகிறேன்; இது வடமாநிலங்களில் இருந்து பரவிய தொத்து நோய்” என்றார்.

விளை நிலங்களை யாராவது வேண்டுமென்றே தரிசு போட்டால் தண்டிக்கப்படுவார்கள், இரண்டாம் முறையும் அப்படிச் செய்தால் நிலத்தைப் பறிமுதல் செய்யப்படும் - என்று அண்ணா சட்ட மன்றக் கேள்வி நேரத்தில் பதிலாகச் சொன்னார். தஞ்சாவூர் மாவட்டத்திற்கான உள்ளாட்சித் தொகுதியில் கோ.சி.மணி ஆசிரியர் தொகுதியில் வி. ராஜகோபால் பி.ஓ.எல், ஆகியோரைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக வெற்றி பெறச் செய்யுமாறு, தஞ்சை மாவட்ட தி.க. தோழர்களுக்குப், பெரியார் அறிக்கை மூலமாக, 22.3.68 அன்று வேண்டுகோள் விடுத்தார். சட்டமன்ற மேலவை உறுப்பினராக எஸ்.ராகவானந்தம் தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டார்-21.4.68 முதல் ஆறு ஆண்டுகளுக்கு! மார்ச் மாத இறுதியில் சென்னையில் மாணவர்-பஸ் தொழிலாளர் கலவரம் பயங்கரமாக உருவெடுத்தது! ஒருவர் மாண்டு போகவும் நேரிட்டது!

மருத்துவ மனையிலிருந்து பெரியார் மனம் பதறினார். “நமது நாடு சிவில் ஆட்சிக்கே லாயக்கில்லாமல் போய் விட்டது. இந்த நேரத்தில் போலீசுக்கு முழு அதிகாரம் கொடுத்து விட வேண்டும். வெறியாட்டங்களை, வன்முறைகளை ஒழிக்க வேண்டும்! டாக்டர்களே! மாணவர்களே! அண்ணாவை நம்புங்கள் அவரைப் பெருமைப்படுத்துங்கள்! நம் எதிரிகள் சிரிக்கும்படிச் செய்து விடாதீர்கள்! என் நோய்கூட அதிகமாகி விட்டது” என்று கதறினார்.

அண்ணாவின் அரசு ராஜினாமாச் செய்ய வேண்டும் என்கிற அளவுக்குக் காரியம் மிஞ்சிவிட்டது. 1.4.68 “விடுதலை”யில் “இராஜிநாமாவுக்கு அப்புறம் என்ன?” என்ற தலையங்கம் பெரியாரால் தீட்டப்பட்டது. “இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் அடிதடி கலவரம் ஏற்பட்டால், அந்த வன்செயல்களுக்கும் அரசுதான் பொறுப்பா? அதற்காக இராஜினாமா செய்யச் சொல்வதா? காங்கிரஸ் ஆட்சியில் இதைவிட மோசமாக நடக்கவில்லையா? 25.1.1965 முதல் 12.2.1965 வரை 18 நாள் பாரத யுத்தநாள் அளவு கலவரங்கள் தமிழ் நாட்டில் நடக்க வில்லையா? பாறைபோல் நின்று சமாளித்தார் என்று பக்தவத்சலத்தைக் காங்கிரசார் பாராட்டவில்லையா? பிறகு, இதே பக்தவத்சலம், இந்த வன்முறைகளை யார் தூண்டிவிட்டாரோ; அதே இராஜாஜியை அவர் வீட்டுக்குப் போய்ச் சந்திக்கவில்லையா? சந்தித்து, வன்முறை தூண்டிய அவர் பத்திரிகை மீது அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை வாபஸ் பெறவில்லையா? நான் தானே அப்போதும் தாக்குதலுக்கு உள்ளானவள்! கத்தி எடுத்துக் காலிகளைக் குத்துங்கள் என்று துணிச்சலாகச் சொன்னது நான்தானே? என்னுடைய காரை மறித்துச் சேதப்படுத்தினார்கள். 3,000 ரூபாய் ரிப்பேர் செலவு ஆனது. அப்படியிருந்தும் அன்றையப் போலீஸ் மந்திரி (எம் பக்தவத்சலம்) என் அறிக்கையைப் பறிமுதல் செய்தார். அதிகாரிகளை அனுப்பி, என்னைத்தான் மிரட்டினார். சரி, அண்ணா மந்திரிசபை இராஜினாமாச் செய்துவிட்டால் அப்புறம் என்ன ஆகும்? சிந்தியுங்கள்! ” என்று பெரியார், உருக்கமிகக் கேட்டிருந்தார். இடையிலே குறுக்கிட்ட ராமநவமியையும் மறக்காமல் “மானமுள்ள தமிழர்கள் ராமநவமி கொண்டாதீர்கள், இராமாயணக் கதை கடவுள் கதை அல்ல. இராமன் மெய்யன் அல்ல!” என்று எழுதினார்.

“1968 ஏப்ரல் 14-ஆம் நாள் டில்லி ஆதிக்கக் கண்டன நாளை நம் சுதந்திர எழுச்சி நாளாகக் கொண்டாடுங்கள்! பொதுக் கூட்டங்கள் நடத்தி, வகுப்பு நீதிக்காகவும் வகுப்புரிமைக்காகவும் தமிழர் சுயமரியாதைக்காகவும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருந்து பிரிந்து, சுதந்தரத் தமிழ்நாடாக வேண்டியது அவசியமாகும், என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள். கிராமந்தோறும் ஊர்வலங்களும் நடத்துங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் தெற்கு ஆதரவு தாருங்கள். நாடெங்குமிருந்து கண்டனத் தீர்மானங்கள் குவியட்டும்" என்று பெரியார் 4, 5 தேதிகளில் எழுதியிருந்தார். 7-ந்தேதி நண்பகல் வீடு திரும்பி, அன்று மாலை நேரு ஸ்டேடியத்தில் ஜி.டி. நாயுடுவின் 75-வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றார். சென்னை மேயர், அங்கேயே நாயுடுவுக்கு வரவேற்பளித்தார். பி.டி.ராஜன் தலைமையில் பெரியார், அண்ணா , காமராஜர், ஓமந்தூரார், மத்திய அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர். வி. ராவ் ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர். கருமுத்து தியாகராயச் செட்டியார் பொன்னாடை போர்த்தினார். 7 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது. கி.ஆ.பெ. விசுவநாதம் நன்றியுரைத்தார்.

“இந்த மந்திரிசபையை மாற்ற நினைப்பது கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்வது போலாகும். தமிழர்களின் நல்வாய்ப்பாக இப்போது அண்ணாவின் ஆட்சி வந்தது. யார் ஆண்டாலும், தமிழ் நாடு தனியாகப் பிரிந்தே ஆகவேண்டும். நாம் தனியாகப் பிரிந்தால், ராணுவச் செலவு குறைந்து, இப்போது போல பெரிய சுமையாக அது நம் தலையிலும் விழாமலாவது இருக்குமோ” என்று 8-ந் தேதியும், “மதுவிலக்கு ஒரு முட்டாள்தனமான சீர்திருத்தம். மதுவைத் தடை செய்வதற்குப் பதிலாக அதில் நிறையச் சத்து இருப்பதால், நல்ல பயனுள்ள உணவாக அதை மாற்றலாம்” என்று 9ந் தேதியும் “தமிழா! நீக்ரோக்களைப் பார்! 18 கோடி அமெரிக்கரில் நீக்ரோக்கள் 2 கோடி தான். நீக்ரோக்களோடு கலந்தால், தங்கள் குழந்தைகளின் நிறம் மாறி விடுமே என்றுதான் வெள்ளையர் பயப்படுகிறார்களே தவிர, நம்மைப் போல் தீண்டாத சாதியென்று அவர்களை ஒதுக்கி வைக்கவில்லை. அவ்வளவு உரிமை தந்தும், இப்போது தங்கள் தலைவரான மார்ட்டின் லூத்தர் கிங் கொலை செய்யப்பட்டதால், நீக்ரோக்கள் சட்டத்தைத் துச்சமாக மதித்துக் களி நடனம் புரிகிறார்கள் இப்போது அங்கே நீக்ரோ மக்களின் துப்பாக்கியே சட்டம்!” என்று 13ந் தேதியும், “நாம் உயிர்த் தியாகத்துக்குத் துணிய வேண்டும்; அப்போதுதான் பிரிவினை சாத்தியமாகும். காங்கிரஸ்காரர்களைப் போலப் பதவிக்கு அலையக் கூடாது. தேர்தலில் தோற்றார்கள். மந்திரி பதவி பறிபோனது. இப்போது Side Business ஆக சி.சுப்ரமணியம், வெங்கட்ராமன், அளகேசன் ஆளுக்கு ஒன்று தேடிக்கொண்டார்கள். கவர்னர் பதவி கிடைக்குமா என்று பக்தவத்சலம் அலைகிறார். இப்படிப்பட்ட அரசியல் காரர்களால்தானே மக்களின் ஒழுக்கம் பாழாகிறது?” என்று 14ந் தேதியும், பெரியார் “விடுதலை” யில் தலையங்கம் தீட்டியுள்ளார்.

தமிழகப் பொதுப்பணி- போக்குவரத்துத் துறை அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகன் முத்து - கலைஞரின் மைத்துனர் சிதம்பரம் இசைச்சித்தர் சி.எஸ், ஜெயராமன் அவர்களின் மகள் சிவகாம சுந்தரி ஆகியோருக்கும்; கலைஞரின் மகள் செல்வி கலைஞரின் சிறிய தமக்கையார் மகனும் முரசொலி மாறனின் தம்பியுமான செல்வம் ஆகியோருக்கும்; 12.4.68 மாலை 5.30 மணிக்கு, சென்னை ஆபட்ஸ்பரி திறந்த வெளியில், அண்ணா தலைமையில் திருமணம், பெரியாரை அடுத்து அமர்ந்த இராஜாஜி, “நாங்கள் இப்படி அமர்வதே உண்மைத் திருமணம்” என்றார். “இவர்கள் அன்புடன்தான் பழகுகிறார்கள். இதனால் - இன்றைய மணமக்களைத் தமிழ் நாடே வாழ்த்துவதாக அமைகின்றது, நாம்தான் இவர்கள் இருவரையும் பற்றி விவரம் தெரியாமல் விழிக்கிறோம்” என்றார் அண்ணா ! 15.4.68 அன்று அண்ணா அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். வழியில் ரோமில் போப்பைச் சந்தித்தார். பாரீசில் டாக்டர் மால்க்கம் ஆதி சேஷய்யா, வாஷிங்டனில் ஊதாண்ட் ஆகியோரையும் சந்தித்தார் அண்ணா. யேல் பல்கலைக் கழகம் முதல் முறையாக அமெரிக்கரல்லாத ஒருவருக்கு - அண்ணாவுக்குச் - சப் ஃபெல்லோஷிப் வழங்கிச் சிறப்படைந்தது. திரும்பி வரும் போது ஜப்பானில் சேலம் இரும்பாலை பற்றியும் அண்ணா பேச்சு நடத்தி விட்டு வந்தார்.

14.4.68ல் பெரியார் அறிவிப்புக்கிணங்க, சென்னையில் பெரியார் திடலில், டெல்லி ஆதிக்கக் கண்டனநாள் பொதுக் கூட்டத்தில் பெரியார் முழங்கினார். “தமிழர் மான வாழ்வுக்காக சுதந்திரத் தமிழ்நாடு பெற்றே தீருவோம். 3,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பாலுள்ள டெல்லிக்கு நாம் ஏன் அடிமையாயிருக்க வேண்டும்? நாங்கள் என்ன, போரில் அடிமைப்பட்ட கைதிகளா?” என்று கேட்டார் பெரியார். தமிழகம் எங்கணும் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானங்கள் (ஆங்கில வாசகமும் முன்பே “விடுதலை”யில் தரப்பட்டிருந்தது) டெல்லியில் குடி, அரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் சென்னை “விடுதலை” அலுவலகம் இங்கெல்லாம் குவிந்தன என்ற செய்தி. “விடுதலை” ஏட்டின் நாலாம் பக்கத்தை, அந்த மாதம் முழுதும் நிறைத்தது! பெரியார் உடல்நிலை சுற்றுப் பயணத்துக்குத் தகுதியற்றதாக இருந்ததால், தோழர்கள் அழைக்காதிருக்க வேண்டுகோள் விடப்பட்டது.

எம்.ஆர். ராதா வழக்கு அப்பீலில் சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு அவருக்குப் பாதகமாக அமைந்ததால், சுப்ரீம் கோர்ட் செல்லவிருப்பதாகச் செய்தி வெளியானது. 17.11.1951 “கரண்ட்” இதழில் ஆசிரியர் கரகா, ஒரு செய்தி தெரிவித்திருந்தார் இராஜாஜி பற்றி. மைசூர் ஜட்ஜ் மேடப்பாவைக் கொல்ல முயன்ற சதி வழக்கில், சம்பந்தப்பட்டதாக, எஸ். எஸ். ராஜு என்ற பார்ப்பன வக்கீல் தண்டிக்கப்பட்டார். ஆனால் அதே இரவில், காரணமின்றி, விடுவிக்கப் பெற்றார். அப்போது டெல்லியில் உள்துறை மந்திரி இராஜகோபாலாச் சாரிதான் என்று 17 ஆண்டு கழித்து இதை எடுத்துக் கூறி, இராஜாஜியின் “நேர்மை” க்கு விளக்கம் தந்தது “விடுதலை” 17.4.68 அன்று பெரியாரின் வள்ளல் தன்மைக்கு ஓர் எடுத்துக் காட்டு: 1966ம் ஆண்டு, ஈரோடு சிக்கய்யா நாயக்கர் மகாஜனக் கல்லூரியில், பெரியார் 1,000 ரூபாய் நன்கொடை தந்து, நிறுவனர் நாளில், ஆண்டு தோறும் பகத்தறிவுத் துறையில் சிறந்து விளங்கும் ஒரு மாணவனுக்குப் பரிசு தரவேண்டும் என்பதற்காக ஓர் அறக்கட்டளை நிறுவினார்; என்.டி. சுந்தரவடிவேறு அவர்கள் பெயரால்! முன்பு 1951ல் சென்னையிலும் 1961ல் சிதம்பரத்திலும் பெரியாருக்கு அன்பளிப்பாகக் கார் வழங்கினார்கள். இப்போது படுக்கை முதலிய வசதிகளுடன் நகரும் வீடு போல ஒரு வேன் விலைக்கு வந்துள்ளது. சுமார் 20 ஆயிரம் ரூபாய்க்குக் கிடைக்கலாம். தோழர்கள் அன்பளிப்புத் தாருங்கள்! அதை வாங்கிப் பெரியாருக்கு, வழங்குவோம் - என வீரமணி ஒரு வேண்டுகோள் விடுத்தார் 4.5.68 அன்று.

காமராசருக்கு எதிராக விருந்து நடத்தி, எதிர் கோஷ்டி சேர்த்து வந்தனர் சில மாஜி மந்திரிகள்; இது எப்படியோ பெரியாரின் சுவனத்துக்கு வந்துவிட்டது. இவர்கள் இரகசியமாக இராஜாஜியின் சீடர்களாயிருப்பதும் தெரிந்தது. விடுவாரா? பூனைக் குட்டி பையிலிருந்து வெளியே வந்துவிட்டது என அவர்கள் முகமூடியை எடுத்து, அடையாளம் காட்டினார் பெரியார். “விடுதலை” யின் தலையங்கம் 23.4.68, 29.4.68, 2.5.68 எல்லாம் இவர்களுக்கே சமர்ப்பணம்! “காங்கிரசின் போக்கு இப்போது சரியில்லை. காலமெல்லாம் சமுதாய சாதி வேறு பாடுகளை ஒழித்துக்கட்ட வாழ்நாள் முழுதும் போராடி வரும் பெரியாரின் அருந்துணையைக் காங்கிரஸ் பெற வேண்டும்“ என்று மெயில்” பத்திரிகையே எழுதிற்று. “பசுவதையும் டெல்லி அரசும்” என்று 10.5.68 “விடுதலை” யில் ஒரு தலையங்கம், அப்போதைய நிலையை விளக்கிற்று. முதல் முறையாகத் தமிழக அரசின் விளம்பரம் ஒன்று 14.5.68 அன்றைய “விடுதலை” யில் ஒருநாள் மட்டும் காணப்பட்டது புதியதோர் அதிசயமாகத் தெரிந்தது! அறிஞர் அண்ணா மேல், கீழ் நாடுகளின் சுற்றுப் பயணத்திலிருந்து 12ந் தேதி இரவு 10 மணிக்குத் திரும்பினார். மறுநாள் கடற்கரை மணற்பரப்பில், “உலகெங்கும் தமிழர் என்கிற உணர்வு பெருக்கெடுத்து ஓடக் கண்டேன், எங்கள் இரு மொழிக் கொள்கையிலிருந்து என்றும் பிறழவே மாட்டோம்“ என்றார் அண்ணா! வாகை சூடிய வீரரை வரவேற்கிறோம் என “விடுதலை” எழுதியிருந்தது.

மத சம்பந்தமான பண்டிகைகளுக்கு விடுமுறை விடும் பழக்கத்தை அண்ணாவின் ஆட்சி நிறுத்தவில்லை. இது பெரியாரின் பகுத்தறிவு உள்ளத்தை உறுத்தியது. “தமிழன் (திராவிடன்) காட்டு மிராண்டிதான்!“ என்று கட்டுரை உதயமாயிற்று 18.5.68 ”விடுதலை“ தலையங்கப் பகுதியில். ”தி.மு.க. வின் கொள்கை பகுத்தறிவுக் கொள்கை. இந்தக் கொள்கையின்படியே நடப்பார்கள் என்று நம்பியே மக்கள் இவர்களுக்கு வோட்டளித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, தி.மு.க. ஆட்சியே, உனக்கும் பப்பே உங்க அப்பனுக்கும் பப்பே என்ற கதை போல நடந்து கொள்ளலாமா? தி.மு.க. மந்திரிகள் தங்கள் பதவிகளைப் பிரதானமாகக் கருதுகிறார்களே ஒழிய, கொள்கைகளையோ, வோட்டளித்த மக்களது நம்பிக்கைகளையோ இலட்சியம் செய்யாமல் துரோகந்தான் செய்து வருகிறார்கள் என்று சொல்வதற்கு நான் மிகுதியும் துன்பப்படுகிறேன்“ பெரியாரின் வேதனையும் வெந்த உள்ளமும் வெளியாகிறதல்லவா? “சூத்திரன் படித்த மேதாவியானாலும் பிராமணனுக்குச் சமமாக முடியாது என்று சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு உள்துறை அமைச்சர் சவான் ஆத்திரப்படுகிறார். சட்டத்தினால் இதற்குப் பரிகாரம் தேட முடியாது; மக்கள் மனம் மாற வேண்டும் என்கிறார். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் இங்கே மூடநம்பிக்கை ஒழிப்பு இலாகா என ஒன்று உண்டாக்க வேண்டும். திருக்குறளுக்குப் பதில், பாரதிதாசன் பாடல்கள் பாட புத்தகங்களில் இடம் பெற்றால் ஐந்தாண்டு அறிவை ஓராண்டில் பெற்றுவிடலாம். சமுதாயத்துக்குப் பயன்படும் காரியங்களைச் செய்ய முடியாவிட்டால் பதவியிலிருக்கமாட்டோம் என்று அண்ணாவே சொல்லியிருக்கிறார். எனவே அரசினரின் கல்வி இலாகா இதைப்பற்றி நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும்” என்று அடுத்த நாள் தலையங்கத்திலேயே பெரியார் உரைத்தார். மறுநாள் “காமராஜர் கவனிப்பாரா? என்கிற மகுடமிட்டுப் பெரியார் ”தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்தப் பதினைந்து மாதங்களில் எவ்வளவோ கேடுகள் குறைந்திருக்கின்றன. உங்கள் கையிலிருந்த ஆட்சி பார்ப்பானுக்குப் போகாமல் தமிழர் கைக்குத்தானே வந்திருக்கிறது? அப்படியிருக்க, மதுரையில் ஏன் மந்திரிகளுக்குக் கருப்புக் கொடி பிடித்தார்கள்? எந்தக் காங்கிரஸ் கமிட்டி அப்படி முடிவு எடுத்தது? கடும் மழையால் இடி மின்னல் ஏற்படாமல் காமராஜர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்! உங்கள் தொல்லைகளால்தானே அண்ணா, மதுவிலக்கு நீடிக்கும் என்கிறார்; நாவலர், பாடத்தில் இதிகாசம் இருக்கட்டும் என்கிறார்; கலைஞர், தமிழ் தமிழ் என்கிறார்' என்று எழுதினார்.

தமிழக அமைச்சர் ஏ.கோவிந்தசாமி உடல் நலங்குன்றி, 3.5.68 அன்று பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பெரியாரும், மணியம்மையாரும், 23ந் தேதி மாலை 5 மணிக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். அடுத்த 22.6.68 அன்றுதான் அமைச்சர் நலமுற்று வீடு திரும்ப முடிந்தது! இந்திராகாந்தி ஆஸ்திரேலியா சென்றிருந்தார்; அங்கு, உங்கள் நாட்டில் ஏன் மூடநம்பிக்கை அதிகமாயிருக்கிறது என்று கேட்டதற்கு, எங்கள் நாடு மிகப் பெரியதாயிருப்பதுதான் காரணம் என்று கூறியிருந்தார். பெரியாருக்குப் பிரதம மந்திரி ஒரு பிடி கொடுத்துவிட்டாரே! “சுய மரியாதை இயக்க, திராவிடர் கழகத் தோழர்களே! இந்தப் பேச்சை நீங்கள் ஒரு கட்டளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்! சிறிய நாடாயிருந்தால், மூடநம்பிக்கைகளை எளிதில் ஒழிக்கலாமென நமது பிரதமரே கூறியிருக்கிறார். அதனால் நாம் தமிழ் நாட்டைப் பிரித்துச் சிறிய நாடாகவே வைத்துக் கொள்ள, நீங்கள் பாடுபட வேண்டும்" என்றார் பெரியார். சென்னை எழும்பூரிலுள்ள மகா போதி சங்கக் கட்டடத்தில் அநாதைச் சிறார்கள் நிலையத்தை, 26.5.68 அன்று, பெரியார் திறந்து வைத்து, அறிவும் சிந்தனையுமே புத்தரின் கொள்கைகளாகும் எனச் சுருக்கிக் கூறினார்!

அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்குச் சிலை அமைக்க முடிவு செய்து, சிலையும் தயாராகி, இடமும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், யாரோ எதிர்ப்புத் தெரிவித்ததற்காக, அவரே தனக்கு வைக்கக்கூடாதெனத் தடுத்துவிட்ட செய்தி பெரியாருக்கு எட்டி விட்டது. “கருணாநிதிக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும்“ என்கிற தலைப்பில் 28, 29 இரு நாட்களும், சூடான தலையங்கம் தோன்றியது. ”கலைஞர் அறிவில் சிறந்தவர். நீர்வாகத்தில் சிறந்தவர், பார்ப்பன ஆதிக்க ஆட்சியைத் தமிழர்க்கு ஆக்கித் தந்தவர். எனவே, தயாரான கலைஞரின் சிலையை, ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், நிலை நிறுத்தியே ஆகவேண்டும். அறிஞர் அண்ணா அவர்கள், இடையூறுக்கு இடந்தராமல், தமிழர் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். இதில் கலைஞரும், தனது அபிப்பிராயத்தை வெளியிட, அவருக்கே உரிமை கிடையாது! யாருக்காவது சங்கடம் இருக்குமானால், இந்தச் சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொண்டு எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்“ என்று பெரியார் விடுத்த சவால், எப்படியும் அவருக்குப் பிற்காலம் மணயம்மையாரால் சிறப்புடன் பூர்த்தி செய்யப்பட்டது உயரியதோர் வரலாறாகும். இதையொட்டி அடுத்த மாதம் 2ந் தேதி குடந்தையில் “காங்கிரஸ்காரனே! நீ ஒரு கலைஞர் சிலையை உடைத்தால், நாங்கள் உங்களுடைய 2, . சிலைகளை உடைக்க மாட்டோமா?” என்றும் பேசியிருக்கிறார் பெரியார். 8.6.68 “பிளிட்ஸ்" இதழ் கடைசிப் பக்கத்தில் கே.ஏ.அப்பாஸ், பெரியாரை அபாரமாகப் புகழ்ந்து, கடவுளை மறுக்கும் மாமேதையென அளவிலாப் பாராட்டு நல்கியிருந்தார்.

பெரியாருக்கு “நகரும் குடில்“ வழங்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரமணி, 14.6.68 வரை ரூ. 10,115-50 சேர்ந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்துக்குள் மீதத் தொகையும் கிடைத்து விட்டால், ஆகஸ்ட் திங்களில் கரூர் வட்ட திராவிடர் கழகத்தினர் கோரியுள்ளவாறு, அங்கே விழா நடத்தி அளித்திடலாம் எனவும் அறிவித்திருந்தார். இராஜாஜியை அடிக்கடி சி.சுப்பரமணியம் சந்திக்கிறார். இது எதற்கோ என வினா எழுப்பியது ”விடுதலை" தென்காசி இடைத் தேர்தல் 3.7.68 அன்று நடைபெறுவதாக இருந்தது. பெரியார் ஜூன், ஜூலை மாதங்களில் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதிலும், தேர்தல் பிரச்சாரத்துக்காக அந்தப் பகுதிக்குச் செல்லவில்லை !

“காமராஜர் காலத்தில் எஸ். எஸ். எல். சி. யில் பரிட்சைத் தேர்வு பெற்றவர்கள் 50 சதவீதம். இப்போது அது 2 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. இது எப்போது 75 சதவீதம் ஆவது? ஏழைப் பிள்ளைகள் எப்போது கடைத்தேறுவது? இந்த ஆட்சியிலும் இதுதான் கதி என்றால், யாரைக் கொண்டு, எங்கே போய், எப்போது தெற்குப் பரிகாரம் காண்பது?” என்று கவலை தெரிவித்தார் பெரியார். “இவ்வளவு நாள் கழித்துக் காமராஜர், தி.மு.க. பணம் கொடுத்து ஓட்டு வாங்கியதாகக் கூறலாமா?“ இது இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க நினைப்போரின் சூழ்ச்சியான கருத்தல்லவா? எந்த விதத்திலும் காங்கிரஸ் ஆட்சியை விட இன்றைய தி.மு.க. ஆட்சி மேலானதுதான் என்பது என்னுடைய 50 ஆண்டு அனுபவம் சொல்வதாகும்” என்று திருச்சியில் 10.6.68 அன்று பேசினார் பெரியார். 13-ந் தேதி சென்னை வெள்ளாள தேனாம்பேட்டையில், கலைஞர் பிறந்த நாளில் பேசும்போது, “மந்திரி பதவியை விட்டு விட்டுக் கட்சி வேலைக்குப் போகிறேன் என்கிறார் கலைஞர், இவரைத் தவிர வேறு யாரும் இப்படிச் சொல்வார்களா? நல்ல பின்பற்றக் கூடிய தொண்டுள்ளம் படைத்த கொள்கை வீரர் கலைஞர்“ என்று புகழ்ந்தார். புதுச் சேரியில் ஒரு பொதுக் கூட்டத்தில் “ரிஷிகளும், மகாத்மாக்களும் நாட்டு மக்களிடையே முட்டாள் தனத்தை வளர்த்தார்கள். மடமையை வளர்க்கும் பத்திரிகைகளும், புலவர்களும் மேலும் தூண்டினார்கள். கடவுளை ஒழித்தால் மட்டுமே நாம் பேதமற்ற சமுதாயம் காண முடியும். கடவுள் என்கிறார்களே, அது என்ன ஒரு பொருளா? அது இயற்கைப் பொருளா? செயற்கைப் பொருளா? எந்த மருந்தானாலும் அதற்கு ஒரு formula இருப்பது போல, எந்தப் பொருளுக்கும் ஒரு formula இருக்க வேண்டுமே? கடவுளின் கூட்டு முறை, அல்லது செய்முறை formula என்ன? யாராவது சொல்ல முடியுமா?” என்று உலக மேதைகளின் சிந்தனைக்கும், கேள்விக்குறி ஒன்றை எழுப்பினார் பெரியார்.

“சென்னை வானொலியில் பூணூல் மயம்” என்று ”விடுதலை“ 27.6.68 அன்று, பட்டியலிட்டுக் காட்டியது. தென்காசி இடைத்தேர்தல் பற்றி, ”இந்து“ பத்திரிகையின் கருத்தைக் கண்டித்து, ”மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவின் சாதிப்புத்தி“ என 1.7.68 தலையங்கம் வந்திருந்தது. 4ந் தேதி தென்காசியில் தி.மு.க. 15,000 வாக்குகள் முன்னணி என்ற செய்தி-5ந் தேதி கதிரவன் எம்.எல்.ஏ. ஆனார்; வாக்கு வித்தியாசம் 23,256- இதைக் கேட்டு டெல்லியே திகைக்கிறது என ‘மெயில்’ கூற்று. விழுப்புரம் அரசினர் கல்லூரித் திறப்பு விழாவில், கல்வியில் அனைவருக்கும் சம வாய்ப்பு வேண்டும் என்று அண்ணா கருத்துரைத்தார். மாயூரம் வட்டம் மணல் மேடு கிராமத்தில் கிட்டப்பா எம்.எல்.ஏ. முயற்சியால் 12, 13 தேதிகளில் சமுதாய சீர்திருத்த-விவசாய மாநாடுகள் நடைபெறவிருப்பதைப் பாராட்டி ”விடுதலை“ துணைத் தலையங்கம் தீட்டியது. 13ந் தேதி முதல் அச்சு, தட்டச்சு முறைகளில் எளிதாக இருக்கும் பொருட்டு, எழுத்துச் சீர் திருத்தம் (தமிழில் அல்ல) கேரளாவில் அமுலுக்கு வருமென அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டும் காமராசரின் 66வது பிறந்த நாள் வாழ்த்து 15.7.68 அன்று “விடுதலை” யில் வெளிவந்திருந்தது. வழக்கம் போலல்லாமல், சிறிய அளவில்

காங்கிரஸ் தலைவர்களாக சி.சுப்ரமணியம், நிஜலிங்கப்பா ஆகியோர், இராமாயணம், பாரதம் ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான கதைகளை அரசியல் பிரச்சாரத்துடன் இணைத்துப் பேச, இவர்கள் பார்ப்பனரல்லாதாராயிருந்தும், எப்படி மனம் வருகிறது - என்று பெரியார் கண்டித்தார். 13.7.68 அன்று “விடுதலை” பெரியாரின் வேகமான தலையங்கம் ஒன்றைத் தாங்கி வெளி வந்தது. “தமிழ் நாடு சுதந்தர நாடு ஆகவேண்டும்” இது தலைப்பு. இடம் 2 பக்கங்கள். "காங்கிரசுக்கு வெட்கம் மானம் வேண்டாமா? 48க்கு 139 ஆக வெற்றி பெற்றவர்களை, ரவிக்கையைக் கிழித்தான் வெங்காயத்தை உரித்தாள் சபாநாயகர் பிரச்சாரம் செய்தார் (ஆதித்தனாருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? 7, 8 மந்திரிகள் போகையில்) அரிசி கொடுக்க வில்லை- கருப்புக் கொடி காட்டியவர்களை அடித்தான் என்று - அளிச்சான் புளிச்சான் ஆட்டம் ஆடி, ஒழிக்கப் பார்ப்பதா வீரம்? காங்கிரஸ் சந்ததியையே புறமுதுகு காட்டும் பேடி வீரர்களாக அல்லவா ஆக்குகிறது? முதுகில் தட்டினால் பல்லு உதிர்ந்து போச்சு என்பது தானே இது? பிரிவினை முயற்சியை நசுக்கிவிடுவோம் என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்களே! புருஷனிடம் வாழ இஷ்டமில்லாமல் வெளியேறிய பெண்டாட்டியை, கோர்ட்டு அமீனாவை விட்டு, படுக்கை அறையில் தள்ளச் சொல்வது போல் அல்லவா இருக்கிறது இது!" - விஷயச் சுருக்கம் இவ்வளவே!

எஸ். எஸ். எல். சி. தமிழ்ப் பாட புத்தகத்தில் மறைமலையடிகளின் “தமிழ்த்தாய்“ என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளதை “மெயில்” ஏடு எதிர்த்து எழுதியது. இதை ”விடுதலை“ தலையங்கம் சுட்டிக் காட்டவே, தமிழுணர்வு படைத்த மக்கள், ஆரியப் பத்திரிகைகளைப் பேனா முனையால் தாக்கத் தொடங்கினர். இன்னொரு பேரிடியாகப் பழைமையாளர் மீது வீழ்ந்தது அரசாணை ஒன்று! இதையும் இந்து” விலிருந்துதான் “விடுதலை” சேகரித்தது. அதாவது, அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டி வைக்க்கூடாது என்பதே அது. இதுவும் அடுத்து வந்த நாட்களில் பெரிய கருத்து மோதலை ஏற்படுத்திற்று! அடுத்த அக்டோபர் 2 முதல் கலப்பு மணத் தம்பதியர்க்குத் தங்கப் பதக்கம் வழங்கப்படுமென அமைச்சர் சத்தியவாணி முத்துவால் அறிவிக்கப்பட்டது.

அரூரில் 12.7. 68 அன்று இரவு, பெரியார் 89வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில், எச். எல். முருகேசன் தலைமையில் பெரியார், முதல்வர் அண்ணாவுக்குப் பொன்னாடை போர்த்தினார். மாண்புமிகு அறிஞர் அண்ணா பெரியாரைப் பாராட்டிப் பேசினார்:- "பெரியாராவர்கள் மூலம் நாம் பெற்றிருக்கிற பகுத்தறிவுக்கு, நல்லறிவுக்கு நன்றிக் கடனைச் செலுத்துவதற்கு நாம் கூடியிருக்கிறோம். தமிழ்ச் சமுதாயத்திற்குச் செய்த தொண்டில் ஆயிரத்தில் ஒரு பங்கு பார்ப்பன சமுதாயத்திற்குப் பெரியார் செய்திருந்தாரானால், அவரைக் கடவுள் அவதாரமாக்கி, சங்கராச்சாரியரைவிட அதிக மதிப்பும் மரியாதையும் கொடுத்து, மிகப் பெரியவராக்கி இருப்பார்கள்.

ஈரோட்டுக்கருகிலுள்ள ஈங்கூரில் 30 ஆண்டுகளுக்கு முன் ஒரு பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர், பெரிய மூட்டை ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு, அதிலிருந்த சாம்பலை அள்ளி அள்ளிக் காற்று வீசிய பக்கம் அதைத் தூவிவிட்டார். அந்தச் சாம்பல் தூளானது பெரியாரவர்களின் மேல்பட்டது. அதைப்பற்றியெல்லாம் லட்சியம் செய்யாது, பெரியார் பேசி முடித்தார். அடுத்து, தான் பேச ஆரம்பித்ததும், சொன்னேன்:- ‘பெரியவரே! நீங்கள் 30, 40 வருடங்களுக்கு முன் இதுபோல் செய்திருந்தால், பெரியாரின் கருமை நிறமான தாடி உங்கள் சாம்பல்பட்டு வெள்ளையாகி இருக்கும். இப்போது நீங்கள் தூவிய சாம்பல், அவர் தாடியை மேலும் வெண்மையாக்கிப் பளபளப்பூட்டியிருக்கிறது’ என்றேன். அந்தக் காலத்தில் இது போன்ற எத்தனையோ இடையூறுகள் நிகழ்ந்துள்ளன.

என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாளில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூடத் தவறு. இந்த நாட்டு அரசியலை நமக்கு நேர்மாறான கருத்து உடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து, அதனைக் கைப்பற்றியும் இருக்கின்றேன்! நம்மிடம்தான் ஆட்சி வந்து விட்டதே; எல்லாவற்றையும் உடனே செய்துவிட முடியும் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது!

30,35 ஆண்டுகளுக்கு முன், க்ஷத்திரியர் என்று தங்களைச் சொல்லிக் கொண்டிருந்த சமுதாயத்தினருக்குக் கூடக் கோயிலுக்குள் நுழைய உரிமையில்லாமல் இருந்தது. கோயிலுக்குள் கல்தானே இருக்கிறது. நீ அங்கு போகாதே!' என்று பெரியார் பிரச்சாரம் செய்தார். இவர்கள் எல்லாம் கோயிலுக்குள் வராவிட்டால் வருமானம் வராதே என்று, இவர்கள் கோயிலுக்குள் வரலாம் என்றாக்கினார்கள்.

இந்த நள்ளிரவில் இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறீர்கள்; ஒருவர் நெற்றியில் கூடத் திருநீரோ, திருநாமமோ காணோம். இந்த இரண்டுமே பெரியாரின் சலியாத தொண்டினால் விளைந்த பலன் தானே! தம் வாழ்நாளில் சொல்ல வேண்டியதைச் சொல்லிச், செய்ய வேண்டியதைச் செய்த பெருமை பெரியார் ஒருவரைத்தான் சாரும் சமுதாயத்தின் அடித்தளம் வரை சென்று, சுய மரியாதைப் பிரச்சாரம் செய்த புரட்சி எழுத்தாளரோ சீர்திருத்தவாதியோ வேறு யாருமே இல்லை. பெரியாருக்கு நிகர் பெரியார்தான் என்றால் இது மிகையல்ல; உண்மைநிலை!

பெரியாரவர்கள் எந்தெந்த நேரத்தில் எந்தெந்த அரசியல் கட்சிகளை ஆதரித்து வந்த போதிலும், அவர் தமது சமுதாயக் கருத்துகளைச் சொல்லாமல் இருப்பது கிடையாது. காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த போது, ‘பெரியார் எவ்வளவு அழகாக் காங்கிரசைப் பற்றி மக்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்கிறார் தெரியுமா?’ என்று அவரைப் புரிந்துகொள்ளாத சிலர், என்னிடம் சொல்வதுண்டு. அவர் பேச்சில், காங்கிரசுக்கு எவ்வளவு நேரம்? சமுதாயத்துக்கு எவ்வளவு நேரம்? என்பதை நீர் கூர்ந்து கவனித்ததுண்டா?' என்று நான் கேட்பேன்

இவரைப் பாராட்டதவரே ஒருவர் கூட இல்லை. பெரியார் எங்கள் பகுதியில் பிறக்கவில்லையே என்று ஜெகஜீவன்ராம் என்னிடம் வருத்தப்பட்டுக் கொண்டார். அமெரிக்காவில் பெரியாரைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவரைப் போலத் தன்னைப் பின்பற்றிவர லட்சோபலட்சம் தொண்டர்களைப் கொண்ட பகுத்தறிவு வாதி, உலகில் வேறெங்குமில்லை . 90 வயதாகியும் இவருக்குள்ள சுறுசுறுப்பு, 45 வயது உள்ளவருக்கும் வராது! தொலைவிலிருந்து பேச்சைக் கேட்டால் 'இவர் வயது என்ன நாற்பத்தய்ந்தா, ஐம்பத்தொன்றா?' என்று கேட்பார்கள். சற்றுக் கோபமாகப் பேசக் கேட்டால், 'முப்பத்தய்ந்தா, முப்பத்தெட்டா?' என்று கேட்பார்கள்!

-இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை; எதுவும் செய்ய இயலாது என்றால், ஒட்டிக் கொண்டிருப்பேன் என்று யாரும் கருத வேண்டாம்! எனக்கு இப்பதவி இனிப்பானதல்ல. இப்பதவிக்கு வருகிற நாள்வரை, நான் கடிகாரத்தையும், காலண்டரையும் பார்த்ததில்லை ; காரணம் அதுவரை நான் சம்பளம் வாங்கும் உத்தி யோகஸ்தனல்ல! (பெரியாரணிந்திருந்த கெடிகாரம், ஒரு மோதிரம் கூட, அண்ணா அணிந்ததில்லை!)

நம்முடைய கழகத் தோழர்கள் திராவிடர் கழகத் தோழர்களை விரோதிகளாகக் கருதக் கூடாது. இரண்டு கொடிகளும், ஒரே அளவுதான்; இரண்டிலும் நிறம் கருப்பும் சிவப்பும்தான்! தந்தை பெரியாரவர்கள் சமுதாய மாற்றத்தைக் காணப் பாடுபடுகிறார்கள். சமுதாயமும் மாறி இந்த ஆட்சியும் இருந்து செயல்பட்டால், சுதியோடு சேர்ந்த இசையாக அமையும்; இல்லாவிடில் அபசுரமாகத் தானிருக்கும்!

எனக்கு முதல் முதல் நகரசபை வரவேற்புத் தர, ஈரோட்டில் ஏற்பாடு செய்தவரே பெரியார்தான். என்னை ஊர்வலத்தில் அமர வைத்துத்தான் நடந்தே வந்தார்கள் (1948ல்). இன்று அதே பெரியாரே, எனக்குப் பொன்னாடையும் போர்த்தினார்கள். நான் ஈரோட்டில் அவர் வீட்டில் தங்கியிருந்தபோது, இரவில் வெகுநேரம் கழித்துப் படுக்கச் செல்வதால், காலையில் கண் விழிக்காமல், அதிக நேரம் தூங்குவேன். அவர் அதிகாலையில் எழுந்தவுடன், என்னைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். சில சமயங்களில், நான் அணிந்திருக்கும் துணிகள் விலகி இருக்கும். அப்போதெல்லாம் அவர், தான் மேலே போட்டிருக்கிற சால்வையை எடுத்து, என்மீது போர்த்திவிட்டுப் போவார். அதைவிட இந்தப் பொன்னாடை எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை!

என்றைய தினம் நான் சுயமரியாதைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டேனோ,அன்றிலிருந்து இன்று வரை, நான் சுயமரியாதைக்காரனாகத்தான் நடந்து வருகிறேன் என்று பேசிவிட்டு அண்ணா அவர்கள், பெரியார் தனக்குப் போர்த்திய பொன்னாடையை, அரூர் முத்துவிடம் 500 ரூபாய்க்குத் தந்து, அந்தத் தொகையைப் பெரியாரிடம் கார் நிதிக்காக வழங்கினார், அதே மேடையில்!

சென்னை மாநில சுயாட்சிக் கருத்தரங்கு 20.7.68ல் நடைபெற்றது. -அண்ணா பங்கு கொண்டு, “மத்திய அரசின் கையில் அநாவசியமான, தேவையற்ற ஏராளமான அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. பாதுகாப்பு, போக்குவரத்து, நாணயச் செலாவணி தவிர மற்றவற்றை மாநிலங்களுக்குப் பிரித்தளிக்க வேண்டும்!“ என்றார். பெரியாரின் “நகரும் குடில்” நிதிக்காக 24.7.68 வரை, ரூ. 17,140.01 சேர்ந்துள்ளதாக, வீரமணி அறிவித்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிகப் பிரதம நீதிபதியாக கே. வீராசாமி 26.7.68 முதல் நியமிக்கப்பட்டது, பெரியாருக்கு ஓரளவு ஆறுதலளித்த செய்தியாகும்.

20.7.68 முக்கிய தலையங்கம் பெரியாரால் வரையப்பட்டது. “மத்திய ஆட்சி ஜார் (Czar) ஆட்சியே!” என்பது தலைப்பு. “ரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சியை லெனின் மலரச் செய்வதற்கு முன்பு இருந்தது போல், இந்தியாவிலும் இப்போது மத்திய ஆட்சி செயல்படத் துவக்கியுள்ளது. இம் என்றால் சிறைவாசம். அம் என்றால் வனவாசமாம். நமது இயக்கத்தை, திராவிடர் கழகத்தைச் சட்ட விரோதமாக்க மத்திய அரசு கத்தி தீட்டுகிறதாம்! நம்மைக் கைது செய்து, சிறையில் நீண்டகாலம் அடைக்கவும் திட்டம் தயாராகிறதாம். தோழர்களே தயாராகுங்கள்“ என்று வீரமுரசு ஒலித்தது. துணைத் தலையங்கமோ ‘கடவுளர்பட நீக்கமும் பூணூல்களின் கொதிப்பும்’ என்பதுபற்றி. பெரியாரும், இது சம்பந்தமாய்த் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்து, “இந்த ஆணை பிறப்பித்தது மிகவும் நல்லது. இதே காரணத்தால் அலுவலகங்களிலுள்ள திருவள்ளுவர், காந்தியார் படங்களையும் அகற்றி விடலாம். பட்டாளத்தில் உள்ள ஒழுங்கு முறைபோல் அரசு ஊழியர்களும் பூணூல், நெற்றிக் குறிகளை நீக்க வேண்டுமென உத்தரவிடலாம்,” என்று எழுதினார்.

“அலுவலகங்களில் சாமி படம் வைத்தது யார்? கீழ்த்தரச் சிப்பந்தி தானே? செத்துப்போன ‘சுதேசமித்திரன்’ இதை வைத்து, நடமாடப் பார்க்கிறது. மாண்புகள் அறிஞர் ஒன்று சொல்லுகிறார். நாவலர் ஒன்று சொல்லுகிறார். ஞாபக மறதியா, பார்ப்பனப்புரட்டா? என்று பெட்டிச் செய்தி ஒன்று 23.7.68 அன்று பெரியாரால் வெளியிடப்பெற்றது. இதற்குக் காரணங்கள்- “சுதேசமித்திரன்" ஏடு, கடவுளர் பட நீக்கத்துக்கு ஒரேயடியாகக் கூக்குரலிட்டு, எதிர்த்தது ஒன்று: அண்ணா இந்தச் சுற்றறிக்கையில் கையெழுத்திடவில்லை என நாவலர் கூறிய செய்தி ரெண்டு பார்ப்பான் சொன்னால் தமிழனுக்குப் புத்தி எங்கே போச்சுது? Secular என்ற வார்த்தை, இங்கிலீஷ் வார்த்தை, இதற்கு இங்கிலீஷ்காரன் சொல்லுகிற அர்த்தம்தானே சரியானது? மதச்சார்பற்ற என்றால் எல்லா மதத்தையும் அனுமதிப்பது என்றா பொருள்? தமிழர்களே முதலில் நீங்கள் உங்கள் வீடுகளிலுள்ள கடவுளர் படங்களையாவது எடுத்து எறிந்து விடுங்கள்" என்று 29-ந் தேதியில் பெரியார் எழுதினார். அண்ணாவிற்கு உடல் நலங்குன்றியதால் 30ந் தேதி, சுற்றுப் பயணம் ரத்து செய்யப்பட்டது.

ஆகஸ்டு முதல் வாரம் முழுவதும் பெரியாரின் எழுத்துகள் “விடுதலை" க்கு விறுவிறுப்புத் தந்தன. “பார்ப்பனர் (ஆரியர்) சுத்தக் காட்டுமிராண்டிகள். பார்ப்பனக் கடவுளரின் ஆபாசமான, கீழ்த்தரமான நடவடிக்கைகளை விளக்கும் வடமொழி நூல்களிலுள்ள விஷயங்களை நாம் அப்படியே மொழி பெயர்த்துத் தந்தாலே போதும்; இவர்கள் வண்டவாளம் விளங்கி விடும். அதற்காக என்றே ஒரு பத்திரிகை துவக்க இருக்கிறேன். எழுதுவதற்குத் தமிழறிஞர்களைப் பணி புரியுமாறு அழைக்கிறேன். இன்றையக் கடவுள் படப் பிரச்சினை நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. படத்தைச் சுவரில் தொங்க விடுவது, அவனவன் சொந்த பக்திக்காகவா, இல்லை பிரச்சாரத்துக்காகவா என்பதைக் கேளுங்கள். பார்ப்பனர்கள் இதை எதிர்க்கத் துவங்கியதே, நமக்கு நல்லதாயிற்று! ஆச்சாரியாரையே கேட்போம்; பதில் கூறுவாரா? ஒரு பெண் கன்னி என்றால், ஆண் சம்பந்தமே இல்லாதவள் என்பதல்ல; எல்லா ஆண்களையும் சமமாகப் பாவித்துக் கூப்பிட்ட வனோடெல்லாம் போகிறவள்தான், என்று அர்த்தம் சொல்வது போல், செக்குலார் ஸ்டேட்டுக்கும் அர்த்தம் சொல்கிறார்களே!

முதல் அமைச்சரும் கல்வி அமைச்சரும் பதவி போய் விடுமோ? நாம் கொல்லப்பட்டு விடுவோமோ? என்கிற பயமில்லாமல் துணிவுடன் செய்ய வேண்டும். பகுத்தறிவாளர் ஆட்சியில் தானே இம்மாதிரிக் காரியங்கள் நடைபெற முடியும்? பாரதிதாசன் கவிதைகள் பாடங்களில் நிறைய இடம் பெறுமாறு, கல்வி இலாக்காவைச் சீர்திருத்த வேண்டும், எனக்கப்புறம் இந்த விஷயங்களைச் சொல்லவும் ஆளில்லை . தி.மு.க.வுக்கு அப்புறம், இதைச் செய்யவும் ஆட்சியில்லை . அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளர் படங்களை அவர்களாகவே அகற்றி விடாவிட்டால், நானும் எனது தோழர்களுமே, புகுந்து நீக்குவோம்.

அதேபோல் தெருவோரம், அலுவலக வளைவு இங்கெல்லாம் பார்ப்பான் ஆதரவுடன் கோயில்கள் முளைக்கின்றன. தமிழர்கள் கோர்ட்டுக்குச் சென்றாவது இவற்றைத் தடுக்க வேண்டும்." (திருவரங்கத்தில் 4.8.68 அன்று இம்மாதிரி. ஒரு தடையுத்தரவைத் திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம் பெற்றது) என்பன சில கருத்துகள். 7.8.68 பத்திரிகை நிருபர்களிடையே “அரச அலுவலகங்களில் கடவுளர் படம் அகற்றும் பிரச்சினையில் பதில் கூற வேண்டியவர் அலுவலர்களே தவிர, அரசியல் வாதிகளுக்கு இதிலேன் அக்கறை?” என்று கேட்டார் முதலமைச்சர் அண்ணா.

“காங்கிரஸ்காரர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள், அவர்களின் தீண்டாமை ஒழிப்பு கபட நாடகமே” என்பதைப் பெரியார் சான்றுடன் எழுதினார். “பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல் - தீண்டாமை போன்றவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று, திடீர் ஞானோதயம் உண்டானவர்போல், சி.சுப்ரமணியம் கூறுகிறார். இவர்தான் சங்கராச்சாரியார் காலில் விழுந்து, பூமியை முத்தமிட்டு வணங்கித், தனக்கு மந்திரி பதவி கிடைக்குமாறு ஆசி கோரியவர் மேலும், இவரது தலைவரும் குருவுமான ஆச்சாரியார் சங்கதி என்ன தெரியுமா? ராஜாஜியாரையும் தொடுவார், யார் வீட்டிலும் சாப்பிடுவார், யாருக்கும் பெண் கொடுப்பார், ஆனால் ஜாதி ஒழியச் சம்மதிக்க மாட்டார்! தான் பிராமணன், மற்றவர் சூத்திரர் என்பதைச் சொல்லி, ஜாதி தர்மத்தைக் காப்போம் என்பார்.

1963க்குப் பிறகு காமராஜர் தொடர்பு தமிழ் நாட்டில் இல்லாமல் போய்விட்டது. காமராஜர் இல்லையென்றால் காங்கிரஸ் அநாமதேயந்தான். கல்விக் கண்கொடுத்ததற்குப் பரிசாக இன்று காமராஜரையே குறை சொல்கிறார்கள். அவரும் நமது பொது எதிரிகளுக்கு இடம் கொடுத்து விடாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அவர் காலத்தில் காங்கிரசுக்குப் பெருமை குறையாதிருக்க, அவர் சார்புள்ள பத்திரிகைகளை அடக்கிட வேண்டும்” என்று பெரியார், விட்ட குறை தொட்ட குறையோ என்னவோ; இவ்வாறும் எழுதினார்.

ஆகஸ்டு மாதம், நிறையத் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெரியார் பெண்கள் முன்னேற்றதுக்கான அறிவுரைகளை வழக்கம் போல் வழங்கினார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தேவதாசிகள் ஒழிப்பு மசோதாவை ஆதரித்துச் சட்ட மன்றத்தில் பேசியபோது, சத்தியமூர்த்தி அய்யர். அதை எதிர்த்து, “அப்படியானால் கடவுளுக்கு சேவை செய்ய தேவதாசிகள் வேண்டுமே என்ன செய்வது?” என்று கேட்க, “எங்கள் சமூகத்தார் ஆண்டாண்டு காலமாய்ப் பொட்டுக் கட்டியிருந்தோம். இனிமேல் அந்த வேலையை உங்கள் சமூகத்துப் பெண்கள் செய்தால் தெய்வ வேலையாயிருக்குமே” என்றாராம். அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கம் சட்ட விரோதமாக்கப்பட்டது போல், பெண்களுக்கு இப்போது தாலி கட்டுகின்ற வழக்கமும் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும் என்றார் பெரியார்.

தந்தை பெரியார் உடல் நலங்குன்றியிருக்கிறார்கள். எனவே ஏற்கனவே ஒப்புதல் தந்துள்ள நிகழ்ச்சிகள் தவிரப் புது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இயலாதிருப்பதால், தோழர்கள் அழைக்காதிருக்கக் கேட்டுக் கொள்ளும் அறிவிப்பு, 27.8.68 அன்று பிரசுரமாயிற்று. அண்ணாவும் தளர்வு உற்றிருப்பதால் தர்மபுரியில் பெரியார் சிலை திறப்பு விழா 30.8.68 அன்று நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டதாக, என். எஸ். சம்பந்தம் செய்தி அறிவித்தார். இங்கிலீஷ் நமக்கு மிக மிக அவசியம், அதைப் புறக்கணித்தால் நமது முன்னேற்றமே தடைபடும் என்று மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் அண்ணா கருத்துரைத்தார். லாட்டரி சீட்டு நடத்தக் கூடாதென ராஜாஜி கூறுவதைத் தாமும் ஆதரிப்பதாகப் புதுப் பெரியவாள்" சி. சுப்ரமணியம் தெரிவித்தபோது, ராஜாஜியின் சுதந்தரக் கட்சியினர் ஆளும் ஒரிசா மாநிலத்தில் நடைபெறும் பரிசுச் சீட்டுகளை முதலில் ராஜாஜி தடுக்கட்டுமே, என்றார் அண்ணா , மேலும், ஆச்சாரியார் ஆண்ட காலத்திலேயே, நமது மாநிலத்தில் குதிரைப் பந்தயம் இருந்ததே! அதை அவர் ஒழித்திருப்பதுதானே என்றும் கேட்டார். மத்திய அரசு. சென்னை ராஜ்யத்தின் பெயரைத் (Tamil Nad) தமிழ்நாட் என்று மாற்றக்கோரி சென்னை அரசுக்கு அனுப்பியிருந்த தீர்மானத்தில், (Tamil Nadu) தமிழ் நாடு என்று திருத்தம் செய்து, சட்டமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றினார். அண்ணா , 17.8.68 அன்று . அமைச்சர் சாதிக்பாஷாவின் திருமணம் சென்னையில் 22.8.68 அன்று நடைபெற்றபோது பெரியார் வள்ளியூரில் இருந்து வாழ்த்து அனுப்பினார். தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராக, இணைச் செயலாளர் அந்தஸ்துடன், என்.டி. சுந்தரவடிவேலு நியமனம் பெற்றதற்குத் "தமிழக அரசைப் பாராட்டுகிறோம் " என்று "விடுதலை" யில் 4.9.68 அன்று தலையங்கம் தீட்டியது. 6.9.68 அன்று அண்ணாவுக்கு 2 முறை 'பேரியம் டெஸ்ட்' செய்யப்பட்டது. Endoscopy முறை கையாளப்பட்டு, உணவுக் குழலில் சதை வளர்ச்சி இருப்பது தெரிந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அண்ணா சென்னைப் பொது மருத்துவ மனையிலிருப்பதை அறிந்தவுடன், திருச்சியிலிருந்த பெரியார், மணியம்மையாருடன் விரைந்து வந்து, 7ந் தேதி 11.30 மணியளவில் அண்ணாவைப் பார்த்து விட்டு, “தமிழ் நாட்டின் நிதி போன்றவரை, உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறோம்" என்று அங்குள்ள மருத்துவ நிபுணர்களிடம் கூறியபின், காரைக்கால் நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டுச் சென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வழங்கிய டாக்டர் பட்டத்தைக் கூட நேரில் பெறமுடியாமல், அண்ணாவுக்காக நாவலர் சென்று பெற்று வந்தார். பாளையங்கோட்டை நகராட்சியில் பெரியார் படம் திறந்து வைத்துத் திரும்பினார் நாவலர். ராணி அண்ணியார் திருப்பதி சென்று வந்ததாக “சுதேசமித்திரன்' ஏடு செய்தி வெளியிட்டது கயமைத்தனமான பொய் என்று கலைஞர் அறிவித்தார்.

10ந்தேதியன்று சிகிச்சைக்காக அண்ணா அமெரிக்கா செல்லுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டதும் சென்னை திரும்பினார் பெரியார். நேரே குன்றக்குடி அடிகளாருடன் மருத்துவமனை சென்றபோது. ஜன சமுத்திரத்தில் நீந்தித்தான் உள்ளே செல்ல நேர்ந்தது. அடிகளார் தந்த பொன்னாடையைத் தந்தை தனயனுக்குப் போர்த்தி, நலமுடன் திரும்புக என வாழ்த்தினார். தமது மடியில் 25,000 ரூபாய் வைத்திருந்த பெரியார் அண்ணாவின் காதருகே வாயை வைத்து, அதைத் தருவதாகவும் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். அண்ணா மறுக்கமுடியாமல் கருணாநிதியிடம் சொல்லுங்கள் என்றார். கலைஞரோ நன்றியுடன் மறுத்து, இப்போது பணம் இருக்கிறது அய்யா என்றார். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் சென்ற பெரியார், தமது சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு, விமானத்தினருகில் காரில் சென்று கொண்டிருந்த அண்ணாவைக் கண்டு கையசைத்தார். பெரியாரைக் கண்டவுடன் அண்ணா காரை நிறுத்திக் கீழே இறங்க முயன்று, கதவைக் கூடத் திறந்துவிட்டார். பெரியார் வேண்டாமெனச் சைகை செய்யவே, அண்ணா தனது இருகரங்கூப்பிப் பெரியாரை வணங்கி விடை பெற்றார்

பம்பாய், நியூயார்க் நகரங்களில் நல்ல வரவேற்புப் பெற்ற அண்ணாவுக்கு, டாக்டர் மில்லர் சிறந்த முறையில் சிகிச்சை நடைபெறுமென நம்பிக்கையளித்தார். அண்ணாவுடன் அண்ணியார், டாக்டர் சதாசிவம், மகன் பரிமலாம் இரா. செழியன், க. ராஜாராம் ஆகியோரும் சென்றிருந்தனர். 16ந் தேதி அறுவை சிகிச்சை நடைபெறும் என ராஜாராம், பெரியாருக்குக் கடிதம் எழுதியிருந்தார். 15.9.68 அண்ணா 60-வது பிறந்த நாள். “ஆனந்த விகடன்" கூடப் பாராட்டித் தலையங்கம் எழுதியிருந்தது. திருச்சியிலும், தஞ்சையிலும் இரு அண்ணா சிலைகள் திறந்து வைக்கப்பட்டன; நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த கலைஞரும் நாவலரும், திருச்சியில் பெரியாரைச் சந்தித்து, முன் கூட்டியே 90-வது பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர். 17.9.68 திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் வழக்கம் போல நடைபெறும் நிறுவனர் நாள் விழாவில் பெரியார், குன்றக்குடி அடிகளார், அமைச்சர் சத்தியவாணி முத்து ஆகியோர் பங்கேற்றனர். பர்மாவில் பெரியார் 90 வது பிறந்த நாளைச் சிறப்புடன் கொண்டாடக் குழுவமைத்துச் செயல்பட்டனர்.

“அண்ணாவின் அறுபதாம் ஆண்டு பிறந்த திருநாள்" என்ற பொன் மகுடமிட்டு, வைர வரிகளால் பெரியார் "விடுதலை" யில் தமது மரகதப் பேனாவினால் மாணிக்க முத்திரை பதித்திருந்தார். "அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவருடைய அறிவின் திறம்தான். தம்முடைய அமைச்சரவையில் அவர் ஒரு பார்ப்பானைக் கூட மந்திரியாகப் போடவில்லை என்பதோடு, தி.மு.க.வுக்கு எதிரான கொள்கையுடையவர். தமிழானானலும், அவர்களிலும் யாரையும் போடவில்லையே! இதற்காக அண்ணா அவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாமே! மேலும், அவருடைய இந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் எந்தத் தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்தினுடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்கு உரிய விஷயமாக இருக்கிறது. அண்ணா வாழ்க என்று இந்த அறுபதாவது பிறந்த நாளில் நாமும் வாழ்த்துவதோடு, தமிழர்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளவரை அண்ணா வாழ்வார் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை !" முத்தான பவளச் சொற்களல்லவா?

தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அமோக ஆதரவு இருப்பதாகவும், இதனால் கெடுதலில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டதாகவும், நீண்ட நாளாகப் பெரியாரின் இயக்கம் செய்த பிரச்சாரமும் உதவியாக இருக்கிறது என்றும், சுகாதார அமைச்சர் சாதிக்பாஷா கூறினார். அமெரிக்காவில் மருத்துவமனையிலிருந்த அண்ணாவின் அன்றாட நிலவரம் குறித்து, மகிழ்ச்சி தரும் செய்திகள், தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி 21ந் தேதியும், துணைப்பிரதமர் மொரார்ஜி தேசாய் 28-ந் தேதியும் நியூயார்க்கில் அண்ணாவைக் கண்டு நலம் விசாரித்தனர். இந்தியாவின் ஐ. நா. சபைப் பிரதிநிதி ஜி.பார்த்தசாரதி, நல்ல துணையாக இருந்து வந்தார். ரூ.1.50 விலையில் வெளியிடப்பட்ட பெரியார் 90வது பிறந்தநாள் மலரில், பெரியாரே பத்து கட்டுரைகள் வரைந்திருந்தார். அதில் “எனது நிலை" என்னுந் தலைப்பில் எழுதும்போது, ஒருவித சலிப்பு உணர்வுடன், நான் துறவியாய்ப் போய்விடலாமா என்ற எண்ணம் உண்டாகிறது, என்பதாகக் குறிப்பிட்டிருந்தார் பெரியார்.

கரூரில் பெரியாருக்கு “நகரும் குடில்“ வழங்கும் விழா அக்டோபர் 6-ம் நாள் நடைபெறும் என்றும், குன்றக்குடி அடிகளார் தலைமையில் கலைஞர் காரை வழங்குவார்; மதியழகன் பொன்னாடை போர்த்திப் பொற்கிழி அளிப்பார்; பெரியார் அறிவுரை நல்குவார்; அன்பில் தர்மலிங்கம், ஆசைத்தம்பி, திருவாரூர் தங்கராசு, வீரமணி ஆகியோர் பங்கேற்பர் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. மத்திய சுகாதாரக் குடும்பநலத்துறை ராஜாங்க அமைச்சர் டாக்டர் சந்திரசேகர் “தலைசிறந்த மனிதாபிமானி பெரியார் ஈ.வெ. ராமசாமி, சீர்திருத்த எழுத்தாளர், தேர்ந்த பகுத்தறிவுவாதி, அயராது பாடுபடும் உயர்ந்த பேச்சாளர்” என்று பெரியாரைப் புகழ்ந்துரைத்தார். சென்னைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திய கஜேந்திர கட்கார் மாணவர்களை நோக்கி “சாதிகளை ஒழித்திட முன்வாருங்கள் பகுத்தறிவுக் கொள்கைகளை இணைத்து. நவீன விஞ்ஞான முறைகளில் கருத்தைச் செலுத்துங்கள். பழைமையில் ஊறிக்கிடக்கும் நமது சமுதாயத்தைப் புதுமையைக் கையாளும் நவீன சமுதாயமாக மாற்றுங்கள்” என்று பேசியது. பெரியாரின் எதிரொலியாகவே தோன்றியது.

பெரியாரின் 90வது ஆண்டு பிறந்தநாள் செய்தி சுருக்கமாகவே இருந்தது:- "சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களும், தி.மு.க. விலும், காங்கிரசிலும் உள்ளவர்களும் அரசில் அதிகாரிகளாய், குமாஸ்தாக்களாய், பணியாளர்களாய் உள்ளவர்களில் தமிழர் உணர்ச்சியாளர்களாய் இருப்பவர்களும், தங்கள் தங்கள் வீட்டில், தொழில் மனைகளில், வாகனங்களில் உள்ள கடவுள், மத, புராண, இதிகாசக் கதைகள் முதலியவை சம்பந்தமான உருவப் படங்கள் எவையானாலும் அவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும்! கண்டிப்பாய் அப்புறப்படுத்தி விடவேண்டும் என்று மிக்க மரியாதையாய், வணக்கமாய் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அரசாங்கப் பணிமனைகளில் தொங்கும் படங்களை எடுத்து விடுங்கள் என்று சொன்னவுடன் எல்லாப் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு ஆத்திரம் வந்தது? நீங்கள்தான் பார்த்தீர்களே, இராஜாஜி மிரட்டுகிறார். ‘மித்திரன்’, ‘தினமணி’, ‘இந்து’, ‘ மெயில்’, 'எக்ஸ்பிரஸ்" முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் மிரட்டுகின்றன. விஷமப் பிரச்சாரங்கள் செய்கின்றன? இந்த ஒரு பிரச்சினையைக் கொண்டே தி.மு.க. ஆட்சியையே கவிழ்க்கப் பார்க்கின்றனர். ஏன்?

தங்கள் சாதி உயர்வும், நம் சாதி இழிவும் அந்தப் படங்கள் தொங்குவதில் உயிர் வாழ்கின்றன. அவை (படங்கள்) போய்விட்டால், உயர்வு தாழ்வு போய் விடுமே என்கிற கவலைதானே? மற்றபடி, அப்படங்களில் என்ன இருக்கின்றது? அவர்கள் சமுதாய உயர்வுக்கு அவர்கள் (பார்ப்பனர்கள்) அவ்வளவு பாடுபடுகின்றார்கள்.

நமக்கு புத்தி, மான, ஈன, உணர்ச்சி இருக்க வேண்டாமா? அந்தப் படங்களில் கடவுள் இல்லை என்பதற்காக அவற்றை எடுத்து - எறியாவிட்டாலும், நமது ஈனநிலை, இழிவுநிலை, பார்ப்பான் உயர்வுநிலை அதில் இருக்கிறது என்பதற்காகவாவது அவற்றை நமது அரசுப் பணிமனைகளிலிருந்தும், அதைவிட நமது வீடுகளிலிருந்தும், தொழில் ஸ்தாபனங்களிலிருந்தும், எடுத்து எறிய வேண்டாமா என்று கேட்கிறேன்.

தோழர்களே! இனியாவது நீங்கள் இழிசாதி மக்கள் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டாமா? உங்கள் தாயார் சகோதரி மனைவி மகள் பார்ப்பானுக்கு வைப்பாட்டி காமக்கிழத்தி ஆனவர்கள் அல்ல, ஆகவேண்டியவர்கள் அல்ல என்பதைக் காட்டிக் கொள்ள வேண்டாமா நான் 45 ஆண்டுகளாகப் பாடுபட்டு வருகிறேன். அதன் பலன் இதற்காகவாவது இந்தப் படங்களை அப்புறப்படுத்தவாவது) பயன்பட்டது என்று இருக்க வேண்டாமா?

நம் நல்வாய்ப்பாக தி.மு.க. ஆட்சி ஏற்பட்டது. அதை ஒழியும் படிச் செய்தீர்கள் ஆனால், பிறகு உங்கள் கதி என்ன ஆவது? நானும் இனியும் (90க்கு மேல்) வாழமுடியுமா? எனக்கு அப்புறம் உங்களுக்கு இதை யார் சொல்லுவார்கள்? தி.மு.க. ஆட்சிக்கு அப்புறம் யார் இந்த உத்தரவு போடுவார்கள். எல்லோரும் மாறான காரியத்தை அல்லவா செய்வார்கள்! நீங்கள் பழைய நிலைக்குதான் போக வேண்டி இருக்கும். ஆகவே எனக்கு 90-வது ஆண்டு பிறந்தநாள் பரிசாக இதையாவது செய்யுங்கள்; செய்து காட்டுங்கள் என்று வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இது கிடைக்கப்பெற்ற ஒவ்வொருவரும் இதை மற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள்!" - எப்படி? எதிரில் உட்கார்ந்து நம்மிடம் பேசுவது போல் இல்லையா?

19.9.68 அன்று பெரியார் வாலாஜாபாத் கூட்டத்தில் “மக்களுக்கு அறிவிருந்தால் தங்களை இழிவு படுத்தும் கோயில்களைத் தரைமட்டமாக்கி இருக்கமாட்டார்களா? நம்மை நிரந்தரமாய் இழி மக்களாகவே வைத்திருக்கத்தானே கோயில்கள் இருந்து வருகின்றன!" என்று பேசினார். அதே நாளிட்ட “விடுதலை” தலையங்கப் பகுதியில் "எனது கொள்கை, ஆதரவு மாற்றத்திற்குக் காரணம்" என்ற தலைப்பில் "எனது ஆசையெல்லாம் மக்கள் பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆகவேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக் கூடாது - இந்த மூன்றுதான் எனது கொள்கை. பல கட்சிகளை எதிர்த்ததும், பல கட்சிகளை ஆதரித்ததும் இதற்காகத்தான். இனியும் எந்தக் கட்சியை ஆதரிப்பேனோ, எதிர்ப்பேனோ தெரியாது" - என்று எழுதி முடித்தபின், அடியில் 'குறிப்பு' என்று போட்டு, “இந்த மூன்றுக்கும் தி.மு.க. எதிரியானால் என் நிலை இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது" எனவும் எச்சரிக்கை போல எழுதியிருந்தார் பெரியார்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947, இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டது 7.12.1947. காந்தியார் கொல்லப்பட்டது 30.1.1948 முன்னது நடைபெற்ற 165-வது நாள், பின்னது அறிவிக்கப்பட்ட 53வது நாள், காந்தியார் கொல்லப்பட்டு விட்டார். ஏன் தெரியுமா? சுதந்திரத்துக்குப் பின் பார்ப்பனர் நடத்தையைப் பார்த்து காந்தியும் சு.ம. ஆகிவிட்டார். அதனால்தான் தீர்த்துக் கட்டி விட்டார்கள் எனப் பெரியார் பெட்டிச் செய்திபோல ஒரு புள்ளிவிவரம் தந்து சிந்தனையைத் தூண்டி விட்டார்!

20.9.1968 வேலூரில் எம். ஜி. ஆர். மன்றத்தின் சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார் பேசினார். எம்.ஜி.யாரின் நூறாவது பட நிறைவு விழாவாகவும் இது நடைபெற்றது. "நான் தோற்றுவிட்டேன், பார்ப்பான் வெற்றி பெற்று விட்டான்; என்றாலும் கழகத் தோழர்கள் அவசரப்பட வேண்டாம்; இவர்களை ஒழிக்கும் வேலையை என்னிடம் விட்டு விடுங்கள் என்று 1967-ல் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றவுடனே சொன்னேன். சொன்ன வண்ணம் தான் பெரிய போராட்டம் துவக்குவேன் என்று எதிர்பார்த்த தி. க. தோழர்கள் ஏமாந்தார்கள், காரணம், கிடைத்தற்கரிய நிதியாக அண்ணா நமக்கு வாய்த்துவிட்டார். பகுத்தறிவோடு காரியங்களைச் செய்து வருகிறார். அதே போலக் கலைத் துறையிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு விளக்காக இருந்து வருகின்றார். நான் இவருடைய திறமையைப் போற்றுவேனே தவிரத், தொண்டினைப் போற்றுவது என்பது கிடையாது. ஏனெனில், நம் நாட்டில் சினிமாவானது அறிவை வளர்க்காமல், உணர்ச்சியைத்தான் தூண்டுகிறது. பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. சம்பாதித்தது போதும் என்று, இவர் மக்களுடைய அறிவை வளர்க்க சிந்தனையைத் திருப்ப, இனிமேல் பாடுபட வேண்டும்" என்பதாகப் பெரியார் தமது உள்ளக் கிடக்கையைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்திக் காண்பித்தார்.

தமிழ் நாடெங்கும் பெரியார் பிறந்த நாளும், அண்ணா பிறந்தநாளும், தனித்தும் இணைத்தும் பெருமெடுப்பில் நிகழ்த்தப்பெற்று வந்தன. போளூர் தி.மு.க. நடத்திய அண்ணா பிறந்தநாள் விழாவில் 21ந் தேதி பேசிய பெரியார் தி.மு.க. நீடித்து இருந்தாக வேண்டும். இவர்கள் சட்டத்திற்கு உட்பட்டே ஆட்சி செய்யட்டும். மற்ற பிரச்சினைகளை நாம் பார்த்துக் கொள்வோம். காங்கிரசார் இந்த ஆட்சியைக் கவிழ்த்திடச் செய்யும் எந்த முயற்சிக்கும் நாம் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது" என்று வலியுறுத்தினார். புதுக்கோட்டையிலுள்ள மன்னர் கல்லூரியில் மாணாக்கர்கள் மத்தியில் பெரியார் பேசும் போது “நமது சமுதாயத்தைப் பிடித்திருப்பது மிகக் கடுமையான நோயாகும். அந்தக் கடுமையான நோய்க்கு ஏற்பவே நானும் கடுமையான மருந்து கொடுக்கிறேன். நம் நாட்டு மனித சமுதாயம் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி போலத்தான் காணப்படுகிறது. ஆகையால் பேதமற்ற, கவலையற்ற ஒரு நிலையடையக் கடவுள் மதம் சாஸ்திரம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். மனிதன் எதற்காகக் கடவுளை வணங்குகிறான்? எதற்காகப் பக்தி செலுத்துகிறான்? தனது தகுதிக்கு மேற்பட்ட பதவியோ பலனோ அடைய வேண்டும் என்கிற பேராசைதானே காரணம்? கடவுள் நம்பிக்கை என்பதே ஒருவர்மீது மற்றவரால் திணிக்கப்படுவதே ஆகும். கடவுள் பிரார்த்தனை என்பதெல்லாம் கைதேர்ந்த மோசடி வேலையாகும். இன்று நடக்கின்ற பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார். அல்லது ஆரியர்-திராவிடர் போராட்டம், அன்றைக்கே பழங்காலத்திலேயே இருந்தது என்பதை எடுத்துக் காட்டுவதுதானே தசாவதாரம் என்கிற பத்து அவதாரக் கதைகள்! ஒவ்வொரு அவதாரத்திலும், புகழ் பெற்ற திராவிடர்களை ஒழிக்கத்தானே கடவுளே பிறத்திருக்கிறான்? இதையெல்லாம் நல்ல வண்ணம் சிந்தித்து, தமது இளைஞர்கள் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும்", என்று கருத்து விளக்கங்களைப் பெருத்த அளவில் தொகுத்துத் தந்தார் பெரியார்.

காரைக்குடியில், "அண்ணாவைத் தெரிந்தோ தெரியாமலோ தென்னாட்டு காந்தி என்கிறார்கள். அருள் கூர்ந்து அண்ணாவைக் காந்தியோடு ஒப்பிடாதீர்கள்! அண்ணா முற்போக்குவாதி, மிகச் சிறந்த பகுத்தறிவுவாதி. நாட்டில் எழுந்த பல கலவரங்களுக்குக் காரணமே காந்தியார் தான்! அதனால் அவர் பெயரோடு அண்ணாவின் பெயரை இணைக்க வேண்டாம். நமது சமுதாயத்தில் பல விஷயங்கள் சீர்கேடடைந்து, புரையோடிய புண்ணாக இருந்து வருகின்றன. உடல் உறுப்பில், கெட்டுப் போன பாகத்தை வெட்டியெறிந்து விட்டுப், புதிய பாகத்தைப் பொருத்துகின்ற பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற முறைதான் நமது சமுதாயத்துக்கு இப்போது தேவை" என்று பெரியார் பேசினார். காந்தி ஜெயந்தி கொண்டாடுகிறவர்களில் எத்தனை பேர் காந்தி சொன்னவைகளைப் பின்பற்றுகிறவர்கள்? கோயில் குச்சுக்காரி விடுதி, காங்கிரசில் அயோக்கியர் புகுந்துவிட்டதால் கலைத்துவிட வேண்டும், காங்கிரஸ் அரசு மதச்சார்பற்றது என்று சொன்னாரே, கேட்டார்களா? என்று கேட்டார் பெரியார்.

அடுத்து 6.10.68 அன்று, கரூரில் பெரியாருக்கு “நகரும் குடில்" வழங்கும் விழா பெருத்த கோலாகலத்துடன், ஊரே திருவிழாக் காட்சியாகச், சிறப்புடன் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலைஞர் கலந்து கொள்ள முடியவில்லை. பெரியாருடன் மதியழகன் ரதத்தில் அமர்ந்து வந்தார். தலைமை தாங்க இருந்த குன்றக்குடி அடிகளார்- வர இயலாது போனதால், கருத்துச் செறிந்த அவர் உரையை, வீர. கே. சின்னப்பன் படித்தார். மழை வந்ததைக் குறிப்பிட்டுக், “ காரோடு பெரியாருக்குக் கார் தருவோம்" என்றார் கலைஞர். காஞ்சிபுரம் மாநாட்டில் காங்கிரசை ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்-ஆதரித்தே அதை அழித்தாரே! எனவும் வியந்து போற்றினார். மதியழகன் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்தி, 1,001 ரூபாய் பொற்கிழியும் வழங்கினார். "நகரும் குடில்" அன்றிரவு கரூரில் புறப்பட்டு, உடனடியாகத் தொலை தூரப் பயணம் ஒன்றை மேற்கொண்டது பெரியார், மணியம்மையார், வீரமணி ஆகியோருடன் அதில் வடநாடு பயணம் சென்றார்.

7.10.68 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு செகந்தராபாத்தில் 9-ந் தேதி தங்கி, அங்கு பத்திரிகையாளரிடம் பேட்டியளித்து, 12-ந் தேதி லக்நோ சேர்ந்தார். அங்கே உத்தரப் பிரதேச மாகாணத்தின் தாழ்த்தப்பட்டோர்- பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் மாநாட்டைத் துவக்கி வைத்து ஆராய்ச்சி மிக்க அரிய கருத்துரைகள் வழங்கினார். பெரியாரின் தமிழ்ப் பேச்சை வீரமணி ஆங்கிலத்தில் தர, அதை இந்தியில் மொழி பெயர்த்து அப்பகுதி மக்களுக்குச் சொன்னார்கள். திரும்பவும் வழியில் ஐதராபாத்தில் இருநாள் தங்கிய பின், 20.10.68 இரவு பெரியார் குழுவினர் சென்னைக்குத் திரும்பினார்கள். இதற்கிடையில், அண்ணா ஓரளவு நலம் பெற்றுப் பூங்காவில் உலவினார்; பொருட்காட்சி பார்த்தார் என்றெல்லாம் செய்திகள் கிடைத்தன. 19ந் தேதி கிடைத்த செய்தியில், பசியின்மையும் களைப்பும் இருப்பதாகவும், எனினும், அதைப் பொருட்படுத்தாமல் அண்ணா, மாநகராட்சித் தேர்தல்கள் சென்னையில் எப்படி நடைபெறுகின்றனவோ எனக் கவலை கொண்டதாகவும் தெரிந்தது.

பெரியார் 90-வது பிறந்தநாள் மலர், நியூயார்க் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் பெரியாரின் சில கட்டுரைகளைப் படித்தவுடன், தனது எண்ணங்களைப் பெரியாருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் வடித்திருந்தார் அண்ணா: பேரன்புடைய பெரியார் அவர்களுக்கு வணக்கம். என் உடல் நிலை நல்ல விதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும் இளைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இந்தத் திங்கள் முழுவதும் இங்கு இருந்துவிட்டு, நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம், செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். சென்னை மருத்துவமனையிலும், விமானதளத்திலும் தாங்கள் கவலையுடனும் கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என்முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவே தான், கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன், தங்கள் அன்புக்க என் நன்றி. தங்கள் பிறந்தநாள் மலர் கட்டுரை ஒன்றில், மனச்சோர்வுடன், துறவியாகிவிடுவேனா என்னவோ, என்று எழுதியிருந்ததைக் கண்டு, மிகவும் கவலை கொண்டேன். தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை, மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்த வாதிக்கும் கிடைத்ததில்லை; அதுவும் நமது நாட்டில்! ஆகவே சலிப்போ, கவலையோ, துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினைத் திருமதி மணி அம்மையார் அவர்களுக்குத் தெரிவிக்கவும். அன்பு வணக்கங்கள்.

நியூயார்க்

தங்கள் அன்புள்ள

10.10.68

அண்ணாதுரை

இந்தக் கடிதம் "விடுதலை" யில் 22.10.68 அன்று பிரசுரமாகியிருந்தது.

புதுவையில் முதலமைச்சராயிருந்த எம். ஓ.எச். ஃபாரூக் காங்கிரசை விட்டு விலகி 13.10.68 அன்று சென்னையில் கலைஞர் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் 29.10.68 அன்று தெரிந்து விட்டன. தி.மு.க. 54, காங்கிரஸ் 52, முஸ்லீம் லீக் 7, சுதந்தரா 3, கம்யூனிஸ்ட் 1, உழைப்பாளர் கட்சி, தமிழ் அரசுக் கழகம் 1, பெரியார் இதில் குறை பாடுகள் நிலவக் கண்டார். 30-ந் தேதி தலையங்கத்தில் “காமராஜரைப் போல் அண்ணாவும் சென்னையில் இருக்க நேர்ந்து, பிரச்சாரம் செய்திருந்தால், தி.மு.க.வுக்கு மேலும் 10, 15 இடங்கள் கிடைத் திருக்கக்கூடும். அதனால்தான் இப்போது தி.மு.க.வுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காது போயிற்று. உடனே தி.மு.க. குடும்பத்திற்குள் நல்லபடி பழுதுபார்த்துச் சீர்திருத்தம் சில செய்ய வேண்டும். அண்ணாவே தி.மு.கழகத்தின் சர்வாதிகாரியாக ஆகிவிட வேண்டும் தலைவருக்குக் கீழ்ப்படிதல், கொள்கைக்குக் கீழ்ப்படிதல், ஸ்தாபனத்துக்குக் கீழ்ப்படிதல் ஆகிய மூன்று வகையான கட்டுப்பாடு உணர்ச்சியும் தி.மு.க. உறுப்பினர்களுக்கு உண்டாக வேண்டும். இந்தத் தேர்தலில் அண்ணா-காமராஜர் ஒற்றுமை ஏற்பட்டால் தமிழர் இன நலனுக்கு உகந்ததாயிருக்கும். இதை இருசாராரும் மறக்கக்கூடாது. திராவிடர் கழகம் இந்தத் தேர்தலில் தோல்வி, என்று பத்திரிகைகளில் குறும்புத் தனமாக எழுதுகிறார்கள். எப்போதும் எந்தத் தேர்தலிலும் நிற்காதது திராவிடர் கழகம்! இரண்டுபேர் சுயேச்சையாக நின்றார்கள்; நல்ல வண்ணம் தோற்றார்கள்; அவ்வளவுதான்!" - என்று பெரியார் மனந்திறந்து வரைந்திருந்தார். மாநகராட்சியின் விசேஷ அதிகாரத்தில், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் போன்றாரை இணைத்துத் தி.மு.க. மாநகராட்சி உறுப்பினர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்து, 'தனிப் பெரும்பான்மை பெற்றது.

அண்ணா அமெரிக்காவிலிருந்து 2.11.68 அன்று கிளம்பி, லண்டனில் இரண்டு நாள் தங்கி, 6ந் தேதி சென்னை வந்து சேர்ந்தார். தமிழகமே திரண்டு வந்து அவரை வரவேற்றுக் களித்தது. இதற்கு முன்னர் இவ்வளவு மாபெரும் வரவேற்பைச் சென்னை மாநகரம் கண்டதேயில்லை! உடல் இளைத்துப் பொலிவு குன்றிக் காணப்பட்டாலும், அண்ணா நலம் பெற்றுத் திரும்பினாரே எனத் தமிழ் மக்கள் ஆறுதல் பெருமூச்சு விட்டனர். காஞ்சியிலுள்ள தமது வயது முதிர்ந்த தாயார் பங்காரு அம்மாளைக் காண, மறுநாள் காஞ்சி சென்று, தங்கினார் அண்ணா. "விடுதலை" அண்ணாவை வாழ்த்தி வரவேற்றது. மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற பெரியார் 90-வது பிறந்த நாள் விழாவில், பிரதமரின் அரசியல் துறைத் தனிச் செயலாளர் யாப்சின்குவீ கலந்து கொண்டு சிறப்பித்தார். கேரள மாநிலத்தைப் தனியாகப் பிரிக்க வேண்டுமென்றும், இந்தியைக் கேரளாவில் திணிக்கக் கூடாதென்றும் கோரிக்கைகள் எழுந்து, தமிழ்நாட்டுக் காற்று அங்கும் வீசத் தொடங்கியதை உணர்த்திற்று. "விடுதலை" முன்னாள் துணையாசிரியர் பூ.கணேசன் தமிழ்நாடு குடும்பநலத் துறையின் துணை இயக்குநர் என்னும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அண்ணாவின் அமெரிக்கப் பயணத்துக்கு அனுமதிக்கப்பட்ட அந்நியச் செலாவணி எவ்வளவு என நாடாளுமன்றத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கேள்விக்கு, நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் 8,165 டாலர் (61,000 ரூபாய்) என அறிவித்தார். (இந்த ரூபாயை அரசுக்குத் தி.மு.க. கட்சியே செலுத்திவிட்டது)

11.11.68 அன்று அண்ணாவின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்குப் பெருமதிப்பிற்குரிய பெரியார், மணியம்மையார், வீரமணி ஆகியோர் சென்று, அண்ணாவைக் கண்டனர். "நான் வந்து அய்யாவைக் காண இருந்தேன். அதற்குள் தாங்கள் முந்திக் கொண்டீர்களே" என்று கூறியவாறு, அண்ணா பெரியாருக்கு ஆப்பிள் ஒன்றை வழங்கினார்.

நாகர்கோயிலில் நாடாளுமன்ற உறுப்பினராயிருந்த மார்ஷல் நேசமணி காலமானதை அடுத்து, அங்கே இடைத்தேர்தல் வர இருந்தது. காமராஜர் நிற்கப்போவதாகச் செய்தி பரவிற்று. “நின்றால் ஜெயித்து விடுவாரே! ஜெயித்தால் மத்திய மந்திரி ஆகிவிடுவாரே என்று இராஜாஜி அங்கலாய்க்கிறார். ஜுரமே வந்துவிட்டது இவருக்கு! ஆனால் நமது கருத்து அவர் மத்திய மந்திரியாவதால் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் லாபமில்லை. அவருடைய உழைப்பு தமிழ் நாட்டுக்குத்தான் தேவை" என்று பெரியார் தமது எண்ணத்தை இயம்பினார். “தமிழர் நிலை மாறவேண்டுமானால் நம்மைக் கைதூக்கி விடுவதற்கு ஏற்ற மாதிரிக் கலைகள் நம்மிடமில்லை . நம்முடைய கல்வியில் பகுத்தறிவுக் கருத்துகளைப் புகுத்த வழியில்லை. கிராம உத்தியோகஸ்தர்களும் போலீசின் அடிமட்டத்துச் சேவகர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட வேண்டும். ஐகோர்ட் ஜட்ஜ்களை வக்கீல்களிலிருந்து தேர்ந்தெடுக்கக் கூடாது. படிப்படியாக உயர்வு பெற்றுத்தான் வர வேண்டும். நேரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கக்கூடாது. அதுவும் ரெவின்யூ இலாகாவின் கீழ் நிலையிலிருந்து பதவி உயர்வு தரவேண்டும். எல்லா நிலையிலும், கல்வி இலவசமாகவும், கட்டாயமாகவும் ஆக்கப்பட வேண்டும். அவையெல்லாந்தான் உண்மையான முன்னேற்றத்துக்கு வழிகளாகும். துருக்கி நாடு பழைமைப் பிடிப்பில் சிக்கிக் கிடந்த போது எப்படி இருந்தது? கமால் பாட்சாவின் புரட்சிகரமான சீர்திருத்தம், ஐரோப்பியரோடு வித்தியாசம் காண முடியாதபடி துருக்கியரை நாகரிகப்படுத்தி விட்டது. அதேபோல நமது பிள்ளைகளையும் இளமையிலிருந்தே பழக்க வேண்டும். தமிழில் பேசக் கூடாது. கையால் சாப்பிடக் கூடாது. வேட்டை சட்டை புடவை எல்லாம் மாற்றி, ஆங்கிலேய முறை உடை உணவு மொழி ஆகியவற்றுக்கு மாறுதல் செய்யப்படவேண்டும்" என்றெல்லாம் நவீனக் கருத்துகளைப் பெரியார் வலியுறுத்தினார்.

"மதுவிலக்கு என்பது இமயமலை அளவு முட்டாள்தனம். காந்தியாரின் காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளில், வெற்றி பெறாத ஒன்றாகும் இது. மது விலக்கால் எந்தப் பயனும் கிடையாது. இதனால் தொழிலாளரின் தேசிய சக்தி (Energy ) தான் குறைந்து போய்விட்டது. காங்கிரஸ்காரர்களைக் கெடுத்துப் பதவியிலிருந்து விரட்டியது போலவே இந்த மதுவிலக்கு இவர்களையும் கெடுத்து விரட்டிவிடுமோ என்றே நான் பயப்படுகிறேன்" என்று பெரியார் ஒரு தலையங்கத்தில் அச்சந்தெரிவித்தார். பூம்புகாரில் கண்ணகிக் கோட்டம் எழுப்பும் செய்தி கேள்வியுற்று "பத்தினி பதிவிரதை" என்று 11.11.68-ல் பெரியார் தலையங்கத்தின் வாயிலாகச் சீற்றம் தெரிவித்தார்:-"இடித்தொழிக்க வேண்டிய கோயில்களைப் பாதுகாக்க வேண்டிய சின்னங்களாகக் கொள்ளுவதும், கண்ணகிக்குக் கோயில் கட்டுவதும், முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான முதல் பணி என்றால், இந்தப் பரிதாபத்திற்குரிய தமிழர்களின் எதிர்காலம் என்ன ஆவது? மாண்புமிகு கருணாநிதி அவர்களை மனம் மொழி மெய்களால் பாராட்டுகிறவன் நான்.ஆனால் கம்பன் கண்ணகி பாரதிகளுக்குச் சிலைகள் வளர்ந்து கொண்டே போனால், கையும் மெய்யும் சகித்தாலும் மனம் சகிக்க மாட்டேன் என்கிறதோ இந்தச் சிலைகள் எழுப்புவதிலுள்ள அக்கறை தன்னுடைய சிலை விஷயத்தில் மாறுபட்டு, செய்த சிலை மூலைக்குப் போய் விட்டதே!” என்று,

8.11.68 அன்று பெரியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பொதுப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பேருரை ஆற்றினார். துணைவேந்தரான டாக்டர் எஸ். பி. ஆதிநாராயணன் தலைமை ஏற்றார். பெரியார் மாணாக்கருக்கு அறிவுரைகள் வழங்கினார்:- “எந்தக் காரியமானாலும் ஏன் எதற்கு எதனால் என்று சிந்தியுங்கள். கலவரம் செய்வதும் காலித்தனம் விளைப்பதும், மாணாக்கர் இங்கு அறிவுப் பெருக்கத்திற்காக வந்துள்ள பெரிய ஒரு இலட்சியத்திற்கே கேடானதாகும். நம்முடைய கடவுள் மதம் இவை யாவும் மக்களை மடையர்களாக்கவே பயன்படுகின்றன. அவற்றை அறவே ஒழித்துக் கட்டுங்கள்” என்று பேசினார் பெரியார்.

"விடுதலை" - எழுத்துகள் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன் காட்சி தந்தது. நாள்தோறும் "பெரியார் பொன் மொழிகள்" தவறாமல் இடம் பெற்றன. உலக பாங்க் தலைவர் மக்னமாரா தமிழ்நாடு அரசின் சிறந்த நிர்வாகத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார். டெல்லி மக்களவையில் 'தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் வெற்றியுடன் மலர்ந்தது. அண்ணா வாரந்தோறும் சனி ஞாயிறுகிழமைகளில் காஞ்சியில் தங்கி ஓய்வெடுத்த வந்தார். வேலூர் நாராயணன் சென்னை மாநகர மேயரானார். நடைபாதைக் கோயில்களை அகற்றுவதென அவர் உறுதி பூண்டார். மிரட்டல் கடிதங்கள், காகிதப் புலிகளின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை!

திருச்சியில் நவம்பர் 15ம் நாள் கி.ஆ.பெ. விசுவநாதம் 70வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் பெரியார் பங்கேற்றார். சி.சுப்ரமணியம் அவர்களின் மகள் அருணா-ஈரோடு டாக்டரும் பெரியாரின் அன்பருமான எல்.கே. முத்துசாமி அவர்களின் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் திருமணம், 24.11.68 அன்று சென்னை ஆபட்ஸ்பரியில் நடைபெற்ற போது, பெரியார் சென்றிருந்தார். காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோர் பெரியாரிடம் வந்து, வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்தனர். அடுத்த நாள் "விடுதலை" யில் பெரியார் “கூலிக்காகவும் வரும்படிக்காகவும் காங்கிரசில் இருக்கிறவர்கள் நீங்கலாக மற்றவர்கள் காங்கிரசைக் கைகழுவிவிட்டு வெளியே வாருங்கள்! காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளை உங்கள் கைகளாலும் தொடாதீர்கள் எவ்வளவு மோசமான தமிழன் ஆனாலும் தமிழன் என்கிற உணர்வு கொள்ளுங்கள்' என்று வேண்டினார். இதற்கு முன்னதாகச் சேத்தியாதோப்பு பொதுக் கூட்டம் ஒன்றில் "அரசு அலுவலகங்களிலுள்ள கடவுள் பட நீக்கக் கிளர்ச்சி ஒன்று நடத்த இருக்கிறேன். உருவமில்லாதவர் கடவுள் என்று சொல்லிக்கொண்டே, பலவிதப் படங்களை மாட்டித் தொங்கவிடும் மடமையை ஒழிக்கப் பெருவாரியாகக் கிளர்ச்சியில் ஈடுபட முன் வாருங்கள்!" என்று அழைப்பு விடுத்தார் பெரியார்.

தமிழ்நாடு பெயர் மாற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் அண்ணா 1.12.1968 அன்று பேசினார். மூன்று மாதமாகப் பேசவிடாமல் உடல் நலிவு தடுத்ததல்லவா? அன்றுங்கூடப் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாமென்றுதான் மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். இன்றைய தினம் நான் பேசுவதால், என் உடலுக்கு ஊறு நேரிடுமானால், இந்த உடலிருந்து எனக்கு என்ன பயன்?” என்று கேட்டுவிட்டு அண்ணா , தமது அரசின் மாற்றிட முடியாத முப்பெரும் சாதனைகளைக் குறிப்பிட்டார். பள்ளிகளில் இந்தியை ஒழித்தது, சுயமரியாதைத் திருமணச் சட்டம்; தமிழ் நாடு பெயர் மாற்றம் ஆகியவை.

ஆனால் பெரியார் என்ன கருதினார், தமிழ் நாடு பெயர் மாற்றம் பற்றி? 6ந் தேதி தலையங்கம்."இந்தப் பிரச்சினை வெற்றி பெற்றதற்கு அண்ணாவின் ஆட்சிதான் காரணம். ஆனால் தமிழ் மக்களுக்கு இந்தப் பெயர் மாற்றத்தினால் என்ன பயன்? இது எப்படியிருக்கிறதென்றால், நமது ஆள் எதிரியிடம் உதை வாங்காமல் தப்பித்து வந்து விட்டான், என்பது போல்தான் இருக்கிறது. ஆசாமிக்குக் கண் பொட்டைதான்; என்றாலும் பெயர் கண்ணப்பன் என்பது போல் தோன்றுகிறது எனக்கு. இப்போதும், டில்லி ஆட்சி இந்தப் பெயர் மாற்றத்தை மறுத்திருந்தால் நம் கதி என்ன? ராஜினாமா செய்வோம். அது நமது பலவீனத்தைக் தானே காட்டுகிறது? எப்படியானாலும் இது மற்ற கட்சியாரால் செய்து முடித்திருக்க இயலாது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதுதான்! ஆயினும், இதற்கு "அண்ணாதுரை நாடு" என்பதாகப் பெயர் மாறினாலும், தமிழர்கள் அடிமை நாட்டில் அடிமையாக வாழ்வது மாற்றமடையுமா?" என்று வினவியது!

பூரிசங்கராச்சாரியாரின் திமிர்வாதத்துக்கு உதாரணமாக அவரே எழுதிய வாசகம் ஒன்று இதோ:- "சூத்திரர்கள் கிறஸ்தவர்கர், முஸ்லிம்கள் நாட்டுப் பற்றாளர் அல்லர். இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களால், சமைக்கப்பட்ட உணவை உண்ணுகின்ற மற்றவர்கள் சமைத்தவர் யாரென்பதைப் பற்றியே கவலை கொள்ளாமல் தின்றுவிடுகின்ற நாய், பூனை, போன்ற விலங்குகளுக்கு ஒப்பானவர்கள் " இந்த எழுத்துக்காக அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இடமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சவான் கூறியது சரியல்ல: இ.பி.கோ.295A பிரிவின் படி நடவடிக்கை எடுக்கலாம் என “விடுதலை" 7.12.68 அன்று எடுத்துக் காட்டிற்று. புதுவை மாநில நகரசபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்றிருந்தது. ஃபாரூக் தொலைபேசியில் இதைக் கூறியபோது அண்ணா அவரை வெகுவாகப் பாராட்டினார்.

சென்னை மேயருக்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியாரும் வீரமணியும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நீதிபதி பி.எஸ். கைலாசம் - திருமதி சௌந்தரா கைலாசம் ( ஒரு காலத்தில் இந்த அம்மையாரின் தாத்தா, பெரியாருக்கு அணுக்கத் தொண்டராம்) ஆகியோரின் மகள் நளினி - ராஜா சர் முத்தையச் செட்டியாரின் தங்கைமகன் சிதம்பரம் ஆகியோரின் திருமண விழாவில் பெரியார், மணியம்மையார். ஆளுநர், சர்தாரிணி உஜ்ஜல் சிங், பி.டி.ராஜன், நாவலர், கே.ஏ. மதியழகன், சி.சுப்ரமணியம், பி. வி. ராஜமன்னார் முதலியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மறு நாள் 11.12.68 “விடுதலை” யில் பெரியார் "இந்த வழிகாட்டித் திருமணத்திற்குச் செட்டி நாட்டரசர் போன்ற செட்டியார்கள் வந்து கவுரவித்திருக்க வேண்டும். கவுண்டர்- செட்டியார் கலப்புத் திருமணம் என்று பயந்து விட்டார்கள். செட்டிநாட்டில் நான் நடத்திய எத்தனையோ கலப்புத் திருமணங்களில் ராஜாவும் கலந்து கொண்டாரே!" என்று எழுதினார்.

14.12.1968 அன்று, சிறுநீர் இறங்குவதில் தொல்லை ஏற்பட்டதற்காகப் பெரியார் சென்னை பொது மருத்துவமனையில் சேர்ந்து, 28ந் தேதி மாலை இல்லத் திரும்பி, 13ந் தேதி முதல், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் அண்ணா 21ந் தேதி கோட்டை சென்றிருந்து, டெல்லியில் திட்டக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் புறப்பட்டார். மற்ற சிற்றூர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டான கழகக் கோட்டையான இடையாற்று மங்கலம் தோழர்களிடையிலும், சிறிது சுய நலம் தலை தூக்கவே, அங்கே, சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு வழங்கப் பெற்றிருந்த சொத்து சம்பந்தமாக வழக்கு ஒன்று எழுந்தது. திருச்சி வழக்குரைஞரும், நீண்ட நாள் கழகத் தலைவருமான தி.பொ. வேதாசலம், எதிர் தரப்பில் சாட்சி கூறும் அவலத்தை நாடு கண்டது. ஆனால் வழக்கு, கழகத்துக்கே வெற்றியாய் முடிந்தது 23.12.68 செய்தியின்படி!

மருத்துவமனையில், வாய் சும்மாயிருந்தாலும் பெரியாருக்குக் கை சும்மாயிருக்குமா?: "நாகர்கோயில் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றே ஆகவேண்டும். அவரால் தமிழ் மக்களுக்கு அளவிட முடியாத நன்மைகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்க்க வேண்டாம் என்று சொல்வதற்கு, நான் தி.மு.க. வுக்கு ஒன்றும் உதவி செய்திடவில்லை . ஆனாலும், அவர்களுக்கு இராஜாஜியைத் திருப்திப்படுத்துவது எப்படி சுடமையாக இருக்கிறதோ அப்படியே தி.மு.க.வுக்கு ஞாபகப்படுத்துவதும் என் கடமையாக இருப்பதால், சொல்லுகிறேன்" என்று தலையங்கமே தீட்டினார். “நமது பிற்படுத்தப்பட்ட மக்கள் சீக்கிரம் படித்து முன்னேற, 4-வது வயதிலிருந்தே படிப்பு தொடங்கவும், கட்டாயக் கல்வியைக் கண்டிப்பாக அமுல் செய்யவும், பகுத்தறிவின் அடிப்படையில் பாடத்திட்டங்களை அமைக்கவும் நமது முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் ஆவன செய்ய வேண்டும்" என்று இன்னொரு தலையங்கமும் எழுதினார் பெரியார்.

தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் 42 தாழ்த்தப்பட்ட மக்களை வீட்டோடு கொளுத்திச் சாம்பலாக்கிய கறைபடிந்த வரலாறு, 24.12.68 அன்று எப்படியோ நிகழ்ந்து, அண்ணாவின் உடல் நலத்தை மேலும் குலைத்துவிட்டது. "இந்தியாவை ஆள இந்தியருக்குத் தகுதியில்லை . இது ஜனநாயகத்தால், ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று, இன்று கீழவெண்மணி போன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டு வந்து விட்டுவிட்டது. நம்முடைய நாடு மீண்டும் அரசநாயகமாகப் போக வேண்டும். அல்லது தனித்தமிழ் நாடு பிரித்துத் தரப்படவேண்டும். அல்லது அந்நிய ஆட்சி வேறு ஏதாவது வரவேண்டும். Patriotism is the last reguge of a scoundral-Dr.Johinson. தேசபக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்-ஜான்சன்” - என்று வேதனையை வெளியில் காட்டும் தலையங்கம், பெரியாரால் 28.12.78 "விடுதலை" யில் எழுதப்பட்டது.

நாகர்கோயிலில் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற இடத்தில், அமைச்சர் ஏ.கோவிந்தசாமி இரத்த வாந்தி எடுத்து, 6.1.69 அன்று அங்கேயே சிகிச்சை பெற்று. சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். நம்முடைய அமைச்சர்களும், என்னைப் போலவே உடல் நலமில்லாதவர்களாகப் போய்விட்டார்களே என அண்ணா கவலைப்பட்டார் நாகரசம்பட்டியிலுள்ள உயர் நிலைப் பள்ளிக்குப் பெரியார் ராமசாமி கவர்ன்மெண்ட் (போர்டு) உயர் நிலைப்பள்ளி எனப் பெயர் மாற்றும் அரசு ஆணை 8.1.69 அன்று வழங்கப்பட்டது. பொங்கலன்று தியாகராய நகர் வாணிமகால் அருகே, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடைய முழு உருவச் சிலையை, உடல் நலிவோடு அண்ணா திறந்து வைத்து உரையாற்றினார். இதனுடைய அவலங்கலந்த முக்கியத்துவம், அப்போது தெரியவில்லை! இந்த விழாவில் கலைஞர், எஸ்.எஸ். வாசன், ஏ.எல். சீனிவாசன், திலீப்குமார் ஆகியோரும் பங்கேற்றனர். 14.1.69 முதல் தமிழ் நாடு என்ற பெயர் புழக்கத்தில் வருவதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக கே..நாராயணசாமி முதலியார், கே.எஸ். பழனிச்சாமி கவுண்டர், எஸ். கணேசன் (நாடார்) ஆகியோர் நியமனம் பெற்றனர்

காமராஜர் நாகர்கோயிலில் வெற்றி பெற்றதும், பெரியார் 11.1.69 அன்றே தலையங்கம் தீட்டிவிட்டார். “காமராஜர் ஜெயித்தார். தி.மு.க. (தேர்தலில் நிற்காவிட்டாலும்) தோற்றது. காமராஜர் 2,49,437. தோற்றவர் 1,21,236, இருந்தாலும், காங்கிரசைவிட தி.மு.க. பெரிய கட்சிதான்! அவர்களுடைய கெட்ட வாய்ப்பாக இப்போது இருந்து வருவது இராஜாஜியின் சம்பந்தம்தான். இது எப்படி என்றால் ஒரு படி அரிசியும் ஒரு படி உமியும் ஒன்றாய்க் கலந்து, உமியைப் புடைத்து ஊதித்தள்ளி, மீதியைச் சாப்பிடுவது போன்றதாகும். இதில் இப்போது எனக்குள்ள கவலை, நடக்க இருக்கும் நகரசபைத் தேர்தல்களிலும் தி.மு.க. வைப் பாதிக்குமே என்பதுதான். ஆகையால் அண்ணா அவர்கள் இதற்குப் பிராயச் சித்தம் தேடித், தோல்வியைச் சமாளிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் காமராஜர் எப்போதும் தமிழராகவே இருப்பார் என்பதில் நம்பிக்கை உண்டு.” 18ந் தேதி விருதுநகரில் காமராஜரின் அன்னை சிவகாமி அம்மையார் மரணம் அடைந்தார். அண்ணா அனுதாபச் செய்தி அனுப்பினார். “விடுதலை” துணைத் தலையங்கம் தீட்டியது.

அண்ணாவின் உடல் நலம் நாள்தோறும் சீர்கேடு அடைந்து கொண்டே வந்தது. ஏ.கோவிந்தசாமி இருந்து வந்த திருவரங்கம் என்ற இல்லம், குளிர்சாதன வசதியுடன் திருத்தி அமைக்கப்பட்டது. அங்கு செல்ல விரும்பாமல் அண்ணா நுங்கம்பாக்கம் சொந்த வீட்டிலேயே இருந்தார். உணவு ஒரு பருக்கையும் உட் செல்லவில்லை, வேலூர் செல்ல ஏற்பாடுகள் நடந்தன. அண்ணா புறப்படுந் தறுவாயில் மறுத்துவிட்டார். உடனே டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உதவியுடன் அடையாறு கான்ஸர் இன்ஸ்டிட்யூட்டில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 20.1.1969 அன்று. சிங்க ஏறுபோல் விறுவிறுப்புடன் நடந்து சென்று, தமது அறையில் நுழைந்தார். மருத்துவ நிபுணர் குழு அமைக்கப் பட்டது. அமெரிக்க மருத்துவர் டாக்டர் மில்லர் அழைக்கப்பட்டார். (இரகசியமாக வைத்திருந்த இச்செய்தியைச் செழியனே அண்ணாவுக்குத் தெரியச் செய்துவிட்டார்) பம்பாயிலிருந்து டாக்டர் பேமாஸ்டர், டாக்டர் ஜகாவாலா வந்தனர், வேலூரிலிருந்தும் மருத்துவர்கள் வந்தனர். உணவுக் குழலில் பழைய நோயின் அறிகுறி மீண்டும் தென்படுவதாக அறிவித்தனர். அமெரிக்காவிலிருந்து மில்லருடன் டாக்டர் ஹென்ஸ்கேயும் வந்தார். 25ந் தேதி அறுவை நடந்தது. மறுநாள் முதல் ரேடியோக்கதிர் சிகிச்சை தொடங்கப்பட்டது.

22ந் தேதி காமராசரும், 24ந் தேதி இரவு 10.30 மணிக்குப் பெரியாரும் வந்து பார்த்தனர். 27ந்தேதி அமெரிக்க டாக்டர்கள் திரும்பிச் சென்றனர்.

1969 மார்ச் 1, 2 தேதிகளில் சேலத்தில் இழிவு நீக்கக் கிளர்ச்சி மாநாடு நடத்தப் போவதாகப் பெரியார் 26.1.69 அன்று அறிவித்தார். “இது விளம்பர மாநாடல்ல; இரண்டில் ஒன்று பார்த்துவிடும் மாநாடு. 5,000 பேராவது சிறை செல்லத் தயாராக வேண்டும். 4,5 இடங்களில் தொடர்ந்து 100 நாள் 150 நாள் நடத்தப்பட வேண்டும். தோழர்கள் நன்கொடையாகப் பணம், அரிசி, கருப்புத்துணி ஆகியவற்றை அனுப்பி உதவுங்கள்” என்று எழுதிய பெரியார், அடுத்து, அண்ணாவின் உடல் நிலை மோசமானது கேட்டு, மாநாட்டை ஒத்திவைத்துவிட்டுச் சேலத்திலிருந்து 30ந் தேதி சென்னைக்கு விரைந்தார்!

தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகளில் மக்கள் கூட்டம் வானொலிப் பெட்டிகளுக்கு முன்பாகக் குவிந்து கிடந்தது. சென்னை அடையாறுப் பகுதியில் சாலைகளிலும் தெருக்களிலும், இரவும் பகலும், நகர இடமின்றி, வெள்ளம் போல் தமிழர் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம். அன்றாடம் அண்ணாவின் உடல் நிலை பற்றி மன்றத்துக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. 28ந் தேதி முதல்வரின் இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 29 காலை 11 மணிக்குத் திடீரென்று நெஞ்சைக் குலுக்கும் ஒரு செய்தி! சட்ட மன்றம் ஒத்திவைக்கப்பட்டு, அமைச்சர் பெருமக்கள் அடையாறு நோக்கிப் பறந்தனர்! காமராஜர், சி.சுப்ரமணியம், சம்பத் ஆகியோரும் வந்தனர். ஈசல் கூட்டமென மக்கள் வெருண்டோடி வந்தனர். செய்தி வதந்தியென அறிந்ததும், அனைவருடைய முகத்திலும் நிம்மதி படர்ந்தது. 30ந் தேதி சிறிது அபிவிருத்தி என்றனர். அண்ணா படுக்கையிலிருந்த படியே கார்ட்டூன் படங்கள் வரைந்து கொண்டிருந்தார்.

பெரியார் அடையாறுப் பகுதியிலேயே, வீரமணியின் இல்லத்தில் தங்கிக்கொண்டு, மருத்துவமனைக்கு, நாள்தோறும் கவலை தேங்கிய முகத்துடன் வந்து போனார். 31.1.69 கவலைக்கிடம் நீடிக்கிறது. 1.2.1969 நம்பிக்கை தென்படுகிறது. 2.2.69 டாக்டர்கள் போராடி வருகின்றனர். காலை முதல் மருத்துவமனையிலிருந்த பெரியார், வீரமணியின் இல்லம் சென்றார்; நள்ளிரவில் !

அதே நள்ளிரவு!

மணி 12-40. அந்தோ ! பேரிடி, பூகம்பம், பிரளயம்! என்.எஸ். சம்பந்தம் பெரியாரை அழைத்து, அண்ணாவின் மறைவு குறித்துச் சொன்னார். திடுக்கிட்டெழுந்து பெரியார் தம் வலது கையால் ஓங்கிச் சுவரில் அறைந்து அறைந்து, “போச்சு போச்சு. 'எல்லாம் போச்சு!” என்று கதறினார். உடனே மணியம்மையாருடன் வேனில் ஏறிப் புறப்பட்டு, அடையாறு மருத்துவமனை சேர்ந்தனர். அண்ணாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்ற, எடுத்து வந்தனர். தந்தை தனயனை வெறிச்சென்று பார்த்தார். “அய்யா நாங்கள் அநாதையாகிவிட்டோமே!" என்று கலைஞர் பெரியாரைக் கட்டிக்கொண்டு அழுதார். ஏ.கோவிந்தசாமியும் அலறித் துடித்தழுதார். மக்கள் வெள்ளம் கண்ணீர் வெள்ளத்தில் மறைந்தது!

3ந் தேதி காலை 11 மணியளவில் கையில் ஒரு மலர் வளையத்துடன் பெரியார், அண்ணாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்துக்குள் செல்ல முனைந்தார். அன்று சென்னை மாநகரத்தில் காணப்பட்ட ஈடு இணையில்லாச் சோகச் சூழ்நிலையில் அவரால் உள்ளே நுழையவே முடியவில்லை. எனவே மலர் வளையத்தை ராஜாராமிடம் தந்துவிட்டுப் பெரியார் திரும்பிச் செல்ல நேரிட்டது.

"நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. எதிர்காலம் இருட்டாகவே இருக்கிறது. நாலு கோடி மக்களையும் பொறுத்த, பெரிய, பரிகாரம் செய்ய முடியாத துக்க சம்பவம் ஆகும்" - என்று உடனடிச் செய்தியாகப், பெரியாரால் இவ்வளவுதான் சொல்ல முடிந்தது! 3.2.69 "விடுதலை" யில் “அண்ணாவின் முடிவு" என்று பெரியாரின் தலையங்கம் வெளியாயிற்று "இன்று அண்ணா அவர்கள் முடிவு எய்தி விட்டார். இந்த முடிவு தமிழ் நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல், இந்தியாவிலுள்ள மக்களை மாத்திரமல்லாமல், உலகில் பல பாகத்திலுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்.

அண்ணாவுக்குச் செய்த வைத்திய சிகிச்சை உலகத்தில் உள்ள வேறெவருக்கும் செய்திருக்க முடியாது. டாக்டர் சதாசிவம் தலைமையில் அமைந்த குழுவினரும், மற்றும் வேலூர் டாக்டர்கள் டாக்டர் ஜான்சனும் டாக்டர் பதம்சிங்கும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அரும்பாடு பட்டிருக்கிறார்கள்.

அண்ணாவின் மறைவு தமிழ் நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ் நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றம் அடையக் காத்திருந்தது. நான் இந்த மந்திரி சபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்து விட்டேன் என்று அண்ணா சொன்னதை - பெரியாரின் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதினேன்.

நாட்டில் எல்லாக் கட்சியாருடனும், எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்குரியவராகவும், நேசமாகவும் இருந்து வந்தார். அண்ணாவின் குணம் மிக தாட்சண்ய சுபாவமுடையது. யாரையும் கடிந்து பேசமாட்டார். தன்னால் முடியாத காரியமாய் இருந்தாலும், முடியாது என்று சொல்லத் தயங்குவார்.

காங்கிரஸ் ஸ்தாபனம் என்பது அதிகார சக்தி கொண்ட ஸ்தாபனமாகும். அண்ணாவின் முன்னேற்றக் கழக ஸ்தாபனமானது. அதிகார சக்தி இல்லாதது என்பதோடு, அன்பினாலேயே கட்டுப்படுத்தப்பட்ட ஒரு நட்பு நிலை ஸ்தாபனமாகும். இதற்கு உதாரணம் என்னவென்றால், தி.மு.க.வில் ஏமாற்றமடைந்த எத்தனையோ பேர் (சி.பி. சிற்றரசு, என்.வி. நடராசன், அன்பில் தர்மலிங்கம், சி.பா.ஆதித்தனார், ம.பொ. சிவஞானம், எட்மண்ட் பெர்னாண்டோ , இரா. இளம்வழுதி, பெ.சீனிவாசன், ஆகிய அமைச்சுப் பதவி வேட்பாளர்களைப் பெரியார் குறிப்பிடுகிறார்) இருந்தாலும் கழகத்திற்குள் ஒரு பூசலோ, தனிப்பிரிவோ, கருத்து வேற்றுமைக் கோஷ்டியோ இல்லாமல், ஒரு குடும்பம் போலவே வாழ்ந்து வருகின்றார்கள் என்றால், இதற்கு அண்ணா நடந்து கொள்ளும் தன்மையேதான் காரணமாகும்.

நான், தி.மு.க. தேர்தலில் வெற்றி பெறும் வரை, அக்கழகத்திற்குப் படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்து, அடியோடு மறந்து, மிக்க பெருந்தன்மையுடன், நட்புக் கொள்ள ஆசைப்பட்டு, என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன், நண்பராகவே நடத்தினார்.

இப்படிப்பட்ட ஒரு அற்புத குணம் படைத்த அண்ணா முடிவானது, தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும். மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணாவின் புகழ், மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இப்படி எல்லாரும் துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு, எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்!

இனியும் அவர் புகழ் ஓங்கவேண்டுமானால், அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெற வேண்டும். தி.மு.க. தோழர்களையும் நான் எனது தி.க. தோழர்களைப் போலவே கூட்டுப் பணியாளர்களாகவே கருதுகிறேன். பொது மக்கள் எல்லாருமே ஒத்துழைத்து, மக்களுக்கு வேண்டிய நலன்களைப் பெறப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

மறுநாள் வானொலியில் பெரியார் இரங்கலுரை ஆற்றினார். “அண்ணா முடிவெய்தி விட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா கொள்கை வாழ்க! நோய் வருவதும், முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையே ஆகும். அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமே ஆகும். என்றாலும், இவ்விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிரதாயத்தையெல்லாம் தாண்டி, மக்களின் உச்சிநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்று விட்டார்!

யானறிந்த வரை, சரித்திரம் கண்டவரை, அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்கக் கொண்டாட்டத்தில் 4-ல், 8-ல் ஒரு பங்கு அளவுகூட வேறு எவருடைய முடிவுக்கும் காட்டியதான நிகழ்ச்சி, கிடையவே கிடையாது!

அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்து விட்டார். எனவே, அண்ணாவின் நற்குண, நற்செய்கை, பெருமைக்கு, இதற்கு மேல் எடுத்துக்காட்டு, காட்ட முடியாது.

இன்றும் மக்களுக்கு உள்ள கவலை எல்லாம், நானறிந்த வரை, அண்ணா முடிவடைந்து விட்டாரே; இனி ஆட்சி எப்படியிருக்குமோ? என்பதுதான்! நான் சொல்லுவேன். 'அண்ணா இறந்து விட்டார்; அண்ணா வாழ்க!" என்பதற்கிணங்க, இனி நடைபெறும் ஆட்சியில் எவ்வித மாறுதலும், திருப்பமும் இல்லாமல், அவரது கொள்கை வளர்ந்து, ஆட்சியாளர்கள் தாங்கள் தமிழர்கள், தமிழர்களுக்காகத், தமிழர்களாக ஆட்சி செய்கிறோம் என்கின்ற உணர்ச்சியோடு, மற்ற இனத்தார் காட்டும் இன உணர்ச்சியைத் தங்களுக்கு வழி காட்டியாக வைத்துக்கொண்டு, அதன்படி நடந்து கொள்வார்கள் என்றே கருதுகின்றேன். இயற்கையும் அவர்களை அந்தப்படியே நடக்கச் செய்யும் என்பது உறுதி. அதற்காக யாரும் கவலைப்பட வேண்டாம் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்,

தமிழ் மக்கள் அண்ணாவிடம் காட்டிய அன்பு போலவே இன்றைய நமது மந்திரிகள் எல்லோரிடமும் அன்பு காட்டிப் பரிவாய் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்." 4.2.69 இரவு 8 மணிக்கு இது ஒலிபரப்பாகிறது. மக்கள் கூட்டம் 15 லட்சம் பேர் என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார்.

அண்ணா இயற்கை எய்தியவுடனே, நுங்கம்பாக்கம் இல்லத்துக்குச் சடலம் கொண்டு செல்லப்பட்டது. கூட்டம் சமாளிக்க முடியாமல் போகவே, விடியற் காலையில் ராஜாஜி ஹாலில் பொது மக்கள் இறுதி மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அண்ணாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர், அரசு சம்பிரதாயப்படி நாவலரைத் தற்காலிக முதல்வராக நியமித்து, அவருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் இரவிலேயே ஆளுநர் மாளிகையில் 1.15 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சர்தார் உஜ்ஜல் சிங், அவரது துணைவியார் இருவருமே அண்ணாவிடம் அளவிடற்கரிய அன்பும் மரியாதையும் காட்டி வந்தவர்கள்!

அண்ணாவை ஒருமுறை கண்டுவிட வேண்டுமென்ற ஆர்வமேலீட்டால், தமிழகமே, கிடைக்கின்ற வாகனங்களிலெல்லாம் ஏறிச் சென்னை நோக்கித் திரண்டது. மாநகரின் மக்களிலே 95 சதவீதம் பேராவது, நேரில் கண்டு செல்ல வந்தனர். இந்திய வரலாற்றிலேயே யாருடைய மறைவுக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் திரண்டதுமில்லை; திரண்டவர் அனைவருமே கதறி அழுததுமில்லை; இதற்கு முன்னும்,
பின்னும்! அண்ணா மறைந்தார் என்ற சேதி கேட்டுப் பலர் மாரடைப்பால் மறைந்தனர். ரயில் கூரை மீது ஏறிவந்து, அறியாமையால் பாலத்தில் சிக்குண்டு, சிதம்பரம் அருகில் மாண்டவர் பலபேர். ராஜாஜி ஹாலில் உடலைக் கண்டு அங்கேயே மாரடைத்து மாண்டவர் சில பேர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், ஏறியும், குதித்தும், தாண்டியும், மிதிபட்டும், சிக்கியும், நசுக்குண்டும், சிதைந்தவர் பல்லாயிரம் பேர் ராஜாஜி ஹாலின் உட்புறம் வைத்துச் சமாளிக்க முடியாமல், காமராஜர் யோசனையின்படி, வெளியிலே படிக்கட்டு மீது, சிறிது நேரம் வைத்துக் காண்பிக்கப்பட்டது.

3-ந் தேதி இரவு ஒருமுறை ராஜாஜிஹால் சென்று வந்த பெரியார், 4-ந்தேதி அதிகாலையிலேயே புறப்பட்டுத் தமது வேனிலேயே அமர்ந்து, இறுதி ஊர்வலத்தில் சென்றார். இந்திய வரலாறு காணாத இறுதி ஊர்வலம் -40 லட்சம் மக்கள் கோவெனக் கதறிக் - குலுங்கிக் குலுங்கி அழ ஏழை மாந்தரின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஏந்தல்-தமது 60-வது வயது பூர்த்தியாகு முன்னரே வாழ்வு நீத்துப் புறப்பட்டார். கலைஞரின் மதியூகத்தினால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு எதிரே கடலோரத்தில், அண்ணாவின் சடலம் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு, இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது - என்று பொறிக்கப்பட்ட கல்லும், நினைவுச் சின்னமாய் நெடுந்தூணும், அணையா விளக்கும், உதய சூரியனும், இரைதேடும் பொம்மை விலங்குகளும், அழகிய பூங்காவும், அகலாத பொன் மொழிகளும் பொலிந்திடப் பின்னாளில் அண்ணா சதுக்கமாய் உருவாக்கிக் காட்டினார் அண்ணாவின் தம்பி கலைஞர். பெரியார், அருகே செல்ல இயலாமல், சதுக்கத்தின் வெளியிலேயே காத்திருந்தார். காமராஜர், சி. சுப்ரமணியம், சவான், மற்றும் மத்திய-மாநில அரசுப் பிரதிநிதிகள், ஆளுநர் அனைவரும் வந்திருந்தனர் இராஜாஜி தவிர!

5.2.69 அன்று “அண்ணாவின் இறுதி நிகழ்ச்சி” எனப் பெரியாரே தலையங்கம் எழுதியிருந்தார். “விடுதலை" யில்: “இது 'அகிலமே காணாத அரும்பெரும் நிகழ்ச்சியாகும். நான் வானொலியில் பேசும் போது, அண்ணாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த கூட்டம் 15 லட்சம் இருக்கும் என்று சொன்னேன். எனக்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டேன். அது குறைவு என்றார்கள். ஆமாம் 25 லட்சம், 30 லட்சம் என்று சொல்லப்பட்டது.

சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டு, சடலத்தைக் கண்டு துக்கப்பட்டுக் கதறிக் கூப்பாடு போட்டுக், கூவி அமுத மக்களின் எண்ணிக்கையைப் போல நான் இதுவரை எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை!

நான் கண்ட மிகப் பெரிய கூட்டம், ரஷ்யாவில் Red Square (ரெட்ஸ்கொயர்) செஞ்சதுக்கம் என்னும் இடத்தில் மேதினம் கொண்டாடுவதற்காகக் கூடும் 10 லட்சம் மக்களின் உணர்ச்சி மிகுந்த கட்டம். ஆனால் இங்கேயோ அடைவிட மூன்று மடங்கு கூட்டம்; துக்கமும் சோகமும் துயரமும் அழுகையும் கூக்குரலும் கொண்ட மக்கள் கூட்டம்!

இராஜாஜி வந்திருப்பதாகப் பொய் சொல்லி, இந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் தம் புத்தியைக் காட்டத் தவறவில்லை. அண்ணா மறைவு, தமிழர் சமுதாயத்துக்கு மாபெரும் நட்டம் என்பதும், சங்கடமான நிலையை உண்டாக்கி விட்டது என்பதும் உண்மையே! அண்ணா இல்லாத மந்திரி சபைக்குப் புதிய கருத்தோ, புதிய கொள்கையோ, புதிய மந்திரிகளோ கூடத் தேவையில்லை. வேண்டியதெல்லாம் ஒற்றுமை, ஒற்றுமை, ஒற்றுமையேயாகும்.

இன்றைய ஆட்சி வெறும் தி.மு.க. ஆட்சி அல்ல. தமிழர்கள் ஆட்சி, தமிழர்களின் நலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி. ஆகவே இந்த நேரத்தில் கடமை கண்ணியம் என்பதைவிடக், கட்டுப்பாடே முக்கியமானதாகும்."

7ந் தேதி “விடுதலை" யில் “முதல் மந்திரி தேர்தல்" என்ற தலைப்பிட்ட பெட்டிச் செய்தி ஒன்று, பெரியாரால் தரப்பட்டது. "முதல் மந்திரி தேர்தல், வரும் 9ந் தேதியன்று நடைபெற இருப்பதாகச் சேதி வந்தது. மிக்க மகிழ்ச்சி! எவ்வளவு சீக்கிரம் தலைவர் தேர்தல் நடைபெறுகிறதோ, அவ்வளவுக்கு நன்மை அதிகம். எனக்கு இன்றுள்ள இந்த எட்டு மந்திரிகளில் யார் முதல் மந்திரியாக வந்தால் தேவலாம் என்ற சிந்தனைகூடக் கிடையாது. பிளவும், கருத்து வேற்றுமையும் இல்லாமல் தேர்தல் முடிவு இருக்க வேண்டும். வளைய முடியாத கல்தூணில் பிளவு ஏற்பட்டால், பிறகு அபாயத்தை எதிர்நோக்க வேண்டியதுதான்." அன்றையத் தலையங்கமும் பெரியாருடையதே; “புதிய மந்திரிகள் தேவையில்லை " என்பது தலைப்பு. “இதைப் பற்றிப் பல தடவை எழுதியிருக்கிறேன். மீண்டும் ஓரிருவர்க்கு மந்திரி பதவி தந்தால், பதவி கிடைக்காத மற்றவர் பூசல் உண்டாக்கக்கூடும். யாருடைய யோசனையும் கேட்டு, Coalition Government கூட்டு மந்திரி சபை அமைக்கும் எண்ணமும் வேண்டாம்; வேண்டவே வேண்டாம். முதலில் நெருக்கடியிலிருந்து தப்பி, நம்மை நிலை நிறுத்திக்கொண்டு, பிறகே மற்றவைகளைப் பற்றிச் சிந்திப்பது நல்லது" என்பதாக எழுதிக் காட்டினார்.

9ந் தேதியன்று பெரியார் நாகப்பட்டினம் சென்றிருந்தார். அன்று காலை சென்னையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தபோது, கலைஞரின் பெயர் தலைவருக்காக முன் மொழிந்து; வழி மொழியப்பட்டது. நாவலரின் பெயரை எஸ்.ஜே. ராமசாமி முன் மொழிய, வி.டி., அண்ணாமலை ஆதரித்தார். வேறு யாரும் ஆதரிக்காத நிலையில், நாவலர், தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தவர், உள்ளேயிருக்காமல் வெளியேறினார். பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, தாம் அமைச்சரவையில் இருக்கப் போவதில்லை எனவும், வெளியிலிருந்து கழக வளர்ச்சிக்குப் பாடுபடப் போவதாகவும் கூறினார். இந்த நிலையில் அவர் பிடிவாதமாயிருந்ததால், மீதமுள்ள 7பேர் கொண்ட கலைஞரின் அமைச்சரவை 10. 2. 69 மாலை 3.30 மணிக்குப் பதவி ஏற்றது. அமைச்சர்கள் நேரே கோட்டைக்குச் சென்று, தமது அறைகளில் அமர்ந்து, சில ஃபைல்களில் கையெழுத்திட்ட பின்னர், அடையாறு வீரமணி இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரைச் சந்திக்கச் சென்றனர். கலைஞர் பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டினார். பெரியார் "நேற்று நான் நாகையில் இருந்தேன். உங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதாகக் கூறி, எல்லாருமே வரவேற்றார்கள். என் ஆதரவும் ஒத்துழைப்பும், எப்போதும் உண்டு" என்றார்.

10, 11 இரண்டு நாட்களும் “விடுதலை" பெரியாரின் தலையங்கம் தாங்கி வந்தது. முதல் நாள் “வரவேற்க வேண்டியதும் வருந்த வேண்டியதுமான நிகழ்ச்சிகள்' என்ற தலைப்பில்; “தி.மு.க வுக்கு இந்த நிலையில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகின்ற வருக்குத் தேவையானது, தகுதி திறமை மாத்திரமல்ல, கட்சியைத் திறமையுடன் பாதுகாக்கும் திறமையும் தேவைப்படுகிறது. கலைஞர் அவர்கள் கட்சிக்காக அரும்பாடுபட்டவர் என்பதை எதிரிகளும் ஒப்புக் கொள்வார்கள். கலைஞருக்குக் கட்சி உறுப்பினர்களிடத்திலும், சட்ட சபை உறுப்பினர்களிடமும் பெருவாரியான ஆதரவு இருக்கிறது. நாவலர், மந்திரி சபையிலிருந்து விலகிக் கொள்வதானது, மிகவும் வருந்த வேண்டிய விஷயமாக இருக்கிறது.

இந்த நெருக்கடியான நேரத்தில், நாவலரும், மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு கலைஞரை ஆதரிக்க வேண்டும், என்பதோடு 2, 3 ஆண்டுகளுக்கு முன் இராஜாஜி கூறிய ஆப்த வாக்கியத்தைக் கூறி இதை முடிக்கிறேன். 'எப்படிப்பட்ட பாதகமான காரியத்தைச் செய்தாவது, நம் இனத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அது பாவமாகாது' என்பதுதான் அது."

அடுத்த நாள் தலைப்பு “ஊடல் ஒழிக!" என்பது. “தமிழ் நாட்டு ஆட்சியில் மந்திரி பதவிகள் என்பது கலைஞருக்கோ நாவலருக்கோ சொந்தமான பதவிகள் அல்ல. அது தமிழர் சொத்தாகும். நாவலரும் கலைஞரும் டிரஸ்டிகள் பாதுகாவலர்கள். நாவலர் அவர்கள் என்னதான் ஆயிரம் சமாதானம் சொன்னாலும், பதவி கிடைக்காததால் தான், இந்த ஊடல் ஏற்பட்டது என்பார்கள். நாம் நமது பரிதாபத்திற்குரிய தமிழர் நல சார்பாய்ச் சொல்கிறேன். இரண்டு பக்கமும் தூண்டிவிடுகின்றவர்கள் இருப்பார்கள். அவைகளுக்கு இணங்காமல், அருள் கூர்ந்து ஒன்றுபடுங்கள்" இது வேண்டுகோள் ஆனால் பலனளிக்கவில்லை; அப்போது

நாவலர் இல்லாததால் நான்கு பேர் புதிய அமைச்சர்களாக இனைணத்துக்கொள்ளப்பட்டார்கள். ப.உ. சண்முகம், சி.பா. ஆதித்தனார், கே.வி. சுப்பய்யா , ஓ.பி. இராமன் ஆகியோர். "மந்திரி சபை விஸ்தரிப்பு" என்ற பெட்டிச் செய்தியில், 13ந் தேதி பெரியார் எழுதியிருந்தார் - “புதிய மந்திரிகளை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். நாவலர் இருந்திருந்தால் இலாகா பிரிவினையும், அவர் இஷ்டப்படியே நடந்திருக்கும். ராஜிக்கே இடமில்லாமல் அவர் போய்விட்டதால், கலைஞர் அவர்கள் மிக்க ஜாக்கிரதையோடும், பொறுப்போடும் செய்திருக்கிறார். பலர் ஏமாற்றமடைந்திருக்கலாம். அவர்கள் செய்யும் எந்தவிதமான சலசலப்பும், முணுமுணுப்பும், எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பதோடு, 15 நாட்களுக்குள் அண்ணாவை மறந்துவிட்டதாகும்" என்று.

பெரியார் திருச்சிக்கு விரைந்தார். ஏன்? அவரிடமே மந்திரி பதவிக்காகப் பலர் சிபாரிசுக்கு வந்தார்களாம். சல சலப்புக் காட்ட வேண்டாம் என்று எழுதினாரே. காரணமாகத்தான்! அப்படியும் ஒருவருடைய முணுமணுப்பு வெளியில் வந்துவிட்டது. துறையூர் து.ப. அழகமுத்து, ஆளுங்கட்சிக் கொறடா, சொன்னதாகச் செய்தி பரவிற்று: “நான் மந்திரி பதவிக்கு ஆசைப்படுவதற்கு எனக்கு ஜாதியும் இல்லை ; படிப்பும் இல்லை " என்றாராம். பெரியார் இதையே குறிப்பிட்டு, 17ந் தேதி, “தமிழனின் பரிதாபநிலை” என்று தலையங்கம் எழுதினார். "ஜனநாயக ஆட்சியில் இன்னின்ன யோக்கியதாம்சம் உள்ளவர்தான் மந்திரியாக வரவேண்டும் என்று கிடையாது. இந்த 11பேர் கொண்ட தி.மு.க. மந்திரிசபையில் என்னைப் பொறுத்தவரை குறைபாடு இல்லை. கட்சியைக்கொண்டோ, ஆட்சியைக் கொண்டோ வாழ்க்கைக்கு வசதி செய்து கொள்ளாதவர்கள், அதிருப்தி காட்டமாட்டார்கள். இதுவரை அண்ணா செல்வாக்கால் பிணக்கு வெளிப்படையாய்த் தெரியமுடியவில்லை. அண்ணாவுக்கு மேல் - கட்சி நிலைப்பையும், பலப்படுத்தலையும் கவனித்து வந்தவரிடம் தலைமை போய்விட்டது. மந்திரி பதவிக்காக என்னிடம் சிபாரிசுக்கு வந்தவர்களிடம் சொல்லி விட்டேன், தி.மு.க. பற்றிப் பேச எனக்கு உரிமை இல்லை என்பதை." அய்யாவிடம் இரகசியம் தங்காது என்பதை அந்தப் பலரும் புரிந்திருப்பார்கள்!

நெய்வேலியில் புராணப் பிரசங்கம் செய்ய அடிக்கடி செல்கின்ற கிருபானந்தவாரியார். “தெய்வ நிந்தனை செய்ததால் அண்ணாவுக்குப் புற்றுநோய் ஏற்பட்டு மரண மடைந்தார்” என்று-ரமண மகரிஷியை மறந்து-பேசியிருக்கிறார். கழகத்தோழர்கள் கனன்றெழுந்து, அவரைச் குழந்து கொண்டு, அவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கினார்களாம், 18ந் தேதியன்று. இதைக் குறித்துப் பலவிதமான செய்திகள், நம் நாட்டுப் பத்திரிகா தர்மத்திற்கேற்ப, வெளியாயின. "யோக்கிய மற்ற கூப்பாடுகள்" என்று 24ம் தேதி பெரியாரே தலையங்கம் தீட்டிட நேரிட்டது. " கிருபானந்த வாரியாருக்குப் புத்திகற்பித்ததற்காக, உலகமே முழுகிவிட்டது போல் கூப்பாடு போடுகிறார்களே இந்த மாதிரி அவர் மன்னிப்புக் கேட்டது, இது முதல் தடவையும் அல்லவோ! 1944-ல் தொடங்கி நமது தோழர்கள் அவர்மீது பலதடவை பகுத்தறிவுக் கணைகளை வீசி, மடக்கியிருக்கிறார்களே இவரே பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை என்னோடு ரயிலில் இரண்டாம் வகுப்பில் கோயமுத்தூர் வரை பிரயாணம் செய்தார். நான் அவரைச் சந்தித்தது அப்போதுதான்! தங்கள் ஆட்கள் என்னைத் தவறாக நினைக்கிறார்கள். நான் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக இந்தப் பிரசங்கம் செய்து வருகின்றேன். நான் தமிழர் விரோதியல்ல; எதையும் தவறாகக் கூறமாட்டேன். உறுதி என்று என்னிடம் சொன்னவர்தானே!

இராஜாஜி ஒரு கூட்டத்தில் பேசும்போது சூத்திரன் என்று சொல்லிவிட்டார். பக்கத்திலிருந்த காமராஜருக்குக் கோபம் வந்து முதலில் இதை வாபஸ் வாங்கிவிட்டுப் பிறகு பேசுங்கள் என்றார். அவரும் அதன்படியே செய்தார். ஆகையால் இதில் ஒன்றும் தவறில்லை .

இன்று நாடெங்கும் காலித்தனங்கள், அமளிகள், கலாட்டாக்கள் நடக்கின்றன. நாட்டிற்கு வந்த சுதந்திரத்தால் பெரும்பான்மையான மக்களுக்கு உரிமையில்லை. நாட்டை ஆள்பவர்களுக்கு எதற்கும் அதிகாரமில்லை. கோழிப் பண்ணையில் கோழிகள் அடைக்கப்பட்டு இருப்பது போல், மனிதப் பண்ணையில் மனிதனாக நாம் இருந்து வருகிறோம்.

காலித்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால் முதலில் பத்திரிகை அதிபர்கள் யோக்கியர்களாக இருக்க வேண்டும். என்ன செய்தாவது பத்திரிகை சர்க்குலேஷன் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில்தான் இவர்களுக்குக் கவலை எல்லாம், எப்படி என்றால், தேவதாசி முறை இருந்த காலத்தில், எப்படி ஒரு மனிதன் தாய், தங்கை, மகளுக்கும் நாயகன் தேடும் பணியில் ஈடுபட வேண்டியிருந்ததோ அது போல, நாட்டில் சமதர்மம் வேண்டுமென்று சொன்னால், யோக்கியனும் அயோக்கியனும் ஒன்றாகி விடுவதா? மனிதனை மனிதன் செருப்பால் அடித்தால், வலி பொறுக்காமலா கதறுகிறான்? மானக்கேட்டுக்கு ஆகத் தானே? அந்த மாதிரி இப்போது தமிழர் பத்திரிகைகளும் ஈன நிலைக்குப் போய்விட்டன."

பெரியார் 16.2.69 அன்று மேலக்கற்கண்டார் கோட்டையில் பேசும்போது, சென்னை உயர்நீதி மன்றத்தில் இப்போது உள்ள 16 நீதிபதிகளில் 10பேர் தமிழர்கள் என்று கூறிப் பூரிப்படைந்தார். தமிழகச் சட்ட மன்றத்தின் துணைச் சபாநாயகராக எட்மண்டு பெர்னாண்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார். கலைஞரின் அமைச்சரவையை வரவேற்றும், கலைஞரின் தனிப்பட்ட திறன், ஆற்றல் இவற்றைப் பாராட்டிப் மகழ்ந்தும் "ஆனந்த விகடன்" எழுதிய தலையங்கத்தை, “விடுதலை 20. 2.69 அன்று வெளியிட்டிருந்தது. நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் இளவல் என். எஸ். ஏகாம்பரம் பி.ஈ. -டாக்டர் சரோஜினி எம்.பி.பி.எஸ். இவர்களின் கலப்புத் திருமணத்தையொட்டி நடந்த வரவேற்பு விழாவில் 20.2.69 அன்று, பெரியார் மணியம்மையாரால் அழைக்கப்பட்டுக், கலைஞரும் பிறரும் வந்திருந்து, பெரியார் திடலில் பாராட்டிப் பேசினர். சென்னை மாநகராட்சி உறுப்பினர்களால், தமிழகச் சட்டமன்ற மேலவைக்குத் திருமதி ராணி அண்ணா 2.3.69 அன்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மார்ச் 3-ஆம் நாள் தலையங்கம் “தமிழர் நிலை ஊர் சிரிக்கிறதே" என்பது. பெரியார், தமிழர்களே இப்படி ஒருவர்மீது மற்றவர் சேற்றை வாரி இறைத்துக் கொள்கிறார்களே; இதனால் பார்ப்பனர் நிர்வாணமாய் ஆட்டம் போடுவரே; மேலும் மக்கள் ஆதரவும் குறைந்து போய்விடுமே; இதனால் அரசியலில் ஏதாவது ஆதாயம் கிட்டலாமே ஒழிய, மனிதப் பண்பு வளராதே- என்று கவலைப்பட்டிருந்தார். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரான கருத்திருமன். வெளியில் தலைவரான சி.சுப்ரமணியம் ஆகியோர், தி.மு.க. அரசு மீது குற்றஞ் சுமத்துவதையும், இதற்குப் பதில் சொல்லக் கலைஞர், ஆதித்தனார் போன்றோர் முனைவதையுமே பெரியார் குறிப்பிட்டிருந்தார். அடுத்த 5ந் தேதி “அரசாங்கம் கவனிக்க வேண்டும்" என்ற தலைப்பில் நல்ல அறிவுரை ஒன்றை வலியுறுத்தினார். “தி.மு.க. ஆட்சி ஒவ்வொரு பதவி, உத்தியோகம் பற்றிக் கையெழுத்துப் போடும் போதும் இந்த ஆள் பார்ப்பானா, கிறிஸ்துவனா, முஸ்லீமா, சைவனா, மலையாளியா, தமிழனா என்பதைப் பார்த்துத் தான் கையெழுத்துப் போட வேண்டும். காமராஜர் தமிழனுக்குக் கல்விக் கண் கொடுத்தார். ஆனால் கண்ணிருந்தும் குருடராயிருப்பதில் பயனில்லை. ஆகையால் தி.மு.க. ஆட்சி தமிழர்களை எழுந்து நடக்கச் செய்ய ஆவன செய்திட வேண்டும். கண்டிப்பாய் இதில் கவனம் செலுத்திட வேண்டும்."

9.3.69 அன்று திருவரங்கத்தில் திருச்சி மாவட்ட சமுதாய சீர்திருத்த மாநாடு வீரமணி தலைமையில் நடந்தது. செல்வேந்திரன் திறந்து வைக்க, வீரப்பா கொடி ஏற்றினார். பாட புத்தகங்களில் மூடநம்பிக்கைக் கதைகளை அகற்றல், கோயில் கருவறை நுழைவு, வானொலியின் அறிவுக்குப் புறம்பான ஒலிபரப்பு, கோயில் சொத்துகளை நாட்டுடமை ஆக்கல், காலாண்டு சிவில் லிஸ்ட் பிரசுரித்தல் ஆகியவை பற்றித் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. புதுவையில் காங்கிரஸ் நல்ல வகையாகத் தோல்வியைத் தழுவியது பற்றி “விடுதலை” 11, 12 இரு நாட்களும் தலையங்கம் தீட்டியது. 17ந் தேதி அங்கே ஃபாரூக் தலைமையில் தி.மு.க. அமைச்சரவை பதவி ஏற்றது. தி.மு.க. அமைச்சர்களின் சுற்றுப் பயணம், சொற்பொழிவு ஆகியவை “விடுதலை" யில் நிரம்ப இடம் பெற்றன. பெரியார், மார்ச் மாதம் நிறைய சுற்றுப்பயணம் மேற் கொண்டவர். எல்லா இடங்களிலும் அண்ணாவின் சிறப்புகளை நவிலத் தவறுவதில்லை, சென்னை சட்டக் கல்லூரி விடுதியில் பெரியார் 15-ந் தேதி அண்ணா படத்தினைத் திறந்தார். சட்டக் கல்லூரி வளைவில் 12-ந் தேதி டாக்டர் ஏ. எல். முதலியார் அண்ணா சிலையைத் திறந்து வைத்தார். காஞ்சியில் 13.3.69-ல் பேசிய நாவலர், தான் கட்சிப் பணிகளைக் கவனித்துக் கொள்வதாகவும், கலைஞர் ஆட்சிப்பணிகளைக் கவனிக்கட்டும் என்றும் கூறினார். நாவலரும், செழியனும் பெரியாரை ஒருமுறை சந்தித்துக் கலைஞரின் கீழ் அமைச்சராக இருக்க இயலாமை குறித்துப் பேசினார்கள். பெரியார் அதை அவ்வளவாக இரசிக்கவில்லை !

தஞ்சை மாவட்டத்தின் ஈடு சொல்ல முடியாத செயல் வீரர் வி.எஸ். பி. யாக்கூப் சென்னைப் பொது மருத்துவ மனையில் 15-ந் தேதி மறைந்தார். அன்னாரின் உடல் திருவாரூர் கொண்டு செல்லப்பட்டுச் சிறப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. யாக்கூபால் அழைக்கப்பட்டுத், தஞ்சை மாவட்டத்தில், சுற்றுப் பிரயாணம் செய்யாத தலைவர்களே, இயக்கத்தில் கிடையாது! 14ந் தேதிதான் பெரியாரும், மணியம்மையாரும் யாக்கூபை மருத்துவமனையில் கண்டு நலம் விசாரித்தனர். அப்போதே கவலைக்கிடமான நிலைதான் அப்போது கூட, அங்கே சிகிச்சை பெற்று வந்த கே. ராஜாராம், திருச்சி அருணாசலம் ஆகியோரையும் இருவரும் கண்டு திரும்பினர். 17.3.69 “விடுதலை”, யாக்கூப் மறைவுக்காகத் துணைத் தலையங்கம் எழுதிச் சிறப்பித்தது.

14, 15, தேதிகளில் பெரியார் தி.மு.க. கட்சிக் கட்டுப்பாடு பற்றி மூன்று தலையங்கக் கட்டுரைகள் தீட்ட நேர்ந்தது. பேராசிரியர் அன்பழகன் அந்த நிலைமையை உண்டாக்கி விட்டார். சென்னை நேப்பியர் பூங்காவில் பேசும்போது, “நான் கருணாநிதியைத் தலைவர் என்று ஏற்றுக் கொண்டால், என் மனைவியே என்னை மதிக்க மாட்டார்' என்றாராம்! "அதிருப்தியாளர்கள் கட்சியிலிருந்து விலகி விடுவதே நல்லது; பெருந்தன்மையுமாகும். கட்சியில் இருக்கிற வரையில் தலைவருக்குக் கட்டுப்பட்டு தான் தீரவேண்டும். தனி நபரைப் பற்றி எனக்குக் கவலையில்லை. கருணாநிதியே, அண்ணா எனக்குப் பயந்து கொண்டு இருந்த காலத்தில், என்னை வெளிப்படையாக எதிர்த்துப் பேசி, விலக முயன்றவர்தான். இன்றைக்குக் கருணாநிதி இடத்தில் அன்பழகன் இருந்து, கருணாநிதி தலைவரை மதிக்காமல் பேசினால், அவரையும் இப்படித்தான் நான் கண்டிப்பேன் உள் விவகாரம் என்ன என்பது எனக்குத் தெரியாது. கட்சியின் கவுரவத்தைக் காப்பது தலைவரின் கடமை. தி.மு.க. இனியும் கறைந்தது 2 பீரியட் (Period) பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க. என்னை மதித்தாலும் மதிக்காவிட்டாலும், அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தி.மு.க. வைப் பாதுகாப்பதில் அண்ணா எனக்குப் பங்கு ஏற்படுத்திவிட்டார். அதற்காகத்தான் நிபந்தனையற்ற unreserved தொண்டு ஆற்றி வருகிறேன். தி.மு.க.வில் சிலருக்கு ஜாதி உணர்ச்சி, வகுப்பு உணர்ச்சி, படிப்பு உணர்ச்சி, பண உணர்ச்சி இருக்கிறது. தம்மையே மறக்கும் படியான அளவுக்குப் பதவி உணர்ச்சி, பொறாமை உணர்ச்சி இருக்கிறது. இவற்றையெல்லாம் மறந்து விட்டு இனஉணர்ச்சி ஒன்றை மட்டும் பெறவேண்டும். இதற்காக எதையும் விட்டுக் கொடுக்கும் துணிவும் தாராளமும் வேண்டும்!" என்று பெரியார், உரிமையுடன், உருக்கமுடன் எழுதியிருந்தார். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் அமைச்சர் ப.உ.சண்முகம் தலைமையில், பெரியார் அண்ணா படம் திறந்தார். “தி.மு.க. கழகம் பிரிந்தவுடன் நான் அண்ணாவை ரொம்பக் கண்டித்தேன். குறை சொல்லிக் கொண்டேயிருந்தேன். எதற்குமே பதில் சொல்லாமல், மாறாக என்னைப் புகழ்ந்து பேசிவந்தார் அண்ணா! இந்த உயர்வான பண்பைப் பாராட்டித்தான், மக்கள் அவரை அன்போடு ஆட்சிக்கு அனுப்பிளார்கள். என்னுடன் இருந்த காலத்திலும்கூட நாங்கள் இருவரும் கூட்டத்திற்குச் சென்றால், அண்ணாவைப் பேசச் சொல்லுங்கள் என்று தான் மக்கள் பிரியமுடன் கேட்பது வழக்கம்", என்று புகழ்ந்துரைத்தார் பெரியார்.

அண்ணா திராவிடநாடு பிரச்சினையை ஒரு ஏற்பாடு செய்து ஒதுக்கி வைத்திருக்கிறார்; அடியோடு கைவிடவில்லை என்பதற்காக ஏ.வி.பி. ஆசைத்தம்பி, திருவரங்கத்தில், ஒரு சம்பவம் பற்றிக் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய அபராதத் தொகையினை வசூலிக்க அண்ணா வீட்டில் சோபாவையும், கருணாநிதி ஆபீசில் பேப்பரையும், சம்பத் வீட்டில் சாமானையும் கைப்பற்றி விட்டு, என் வீட்டுக்கும் வந்து, ஏதோ சோபாவை எடுத்தார்கள். " இதை நீங்கள் தொடமுடியாது! எல்லாம் என் மனைவிக்குச் சொந்தம்" என்றேன், “உங்கள் பேரில் என்னதான் இருக்கிறது?" என்றார்கள், “என்னுடைய எம்.எல். ஏ. சம்பளத்தில் அட்டாச் செய்து கொள்ளுங்கள்" என்றேன். சென்றார்கள்; அதில் அட்டாச் செய்ய முடியாது என்பது தெரியாமல், கடைசியில், என்னிடமிருந்து அபராதத் தொகையே வசூல் செய்ய முடியவில்லை. அப்படியானால் நான் என்ன பாப்பரா? இல்லை . அப்படி ஓர் ஏற்பாடு; யாரும்
சொத்தை அபகரிக்க முடியாதபடி!- என்றார். “தமிழர் நல ஆட்சியான தி.மு.க.வின் மற்றொரு சாதனை" என்று "விடுதலை" முதல் பக்க ஏழு காலச் செய்தியில் கே.வீராசாமி தலைமை நீதிபதியாக மே மாதம் முதல் நியமனம் பெற்றதைப் பாராட்டியது.

இப்போதைய சுதந்திரம், கணவனுக்கு அடிமையாவதன் மூலம் மனைவி வைரக்கம்மல், வைர நெக்லஸ், அதிசய அற்புதப் பட்டு ஜரிகை உடைகள் அணிந்திருப்பது போன்றதேயாகும் " - என்றும்; "மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்பது, வெறும் செருப்பால் அடிக்காதே, பட்டுக்குஞ்சம் கட்டி, அதால் அடி என்று சொல்வது போன்றதேயாகும்." என்றும்; பெரியார் உவமைகள் வாயிலாகத் தமிழ்நாடு பிரிவினையின் அவசியத்தை எழுத்தால் உணர்த்தினார். பூரி சங்கராச்சாரியார் எப்போதுமே வாய்க் கொழுப்பு மிகுந்தவரல்லவா? தீண்டாமை இந்து மதக் கோட்பாடுதான் என்று கூறியிருந்தார். குன்றக்குடி அடிகளார் கண்டித்தார். உள்துறை அமைச்சர் சவான், சங்கர் ராவ்தேவ் ஆகியோர் தவறென்றனர். அண்ணாமலை நகர் மாணவர்கள் கொடும்பாவி கொளுத்தினர். மைசூருக்கோ, தமிழகத்துக்கோ வந்தால் கைது செய்வோம் என்றனர் மாநில அதிகாரத்திலிருந்தோர் ஜகஜீவன்ராம், பொது இடத்தில் தீண்டாதவரை அனுமதிக்க மாட்டோம் என்று யாராவது சொன்னால், மீறி நுழைய வேண்டும்" என்பதற்காக, “சுதேசமித்திரன் அவரைக் கண்டித்திருந்தது. பெரியார் சும்மாயிருப்பாரா? "பொது இடத்தில் தானே நுழையச் சொன்னார். பார்ப்பான் வீட்டில் அல்லவே! சட்ட விரோதமாய் நடந்து, தங்கள் ஜாதி உயர்வை எப்படியும் காப்பாற்றிடப் பார்ப்பனர் நினைக்கும்போது, போலீஸ் ஸ்டேஷனுக்கே நெருப்பு வைக்கிற இந்தக் காலத்தில், பார்ப்பான் வீட்டுக்கு நெருப்பு வைப்பது கஷ்டமா? பார்ப்பனர்களே, ஜாக்கிரரை! வாயை அடக்குங்கள்!" என்று ஆவேசமாய் எழுதினார் பெரியார்.

புதுவை அமைச்சர்களைப் பாராட்டிப் பேசும்போது “பைத்தியக்காரத்தனமாய் உங்கள் ராஜ்யத்தில் மதுவிலக்கு கொண்டுவர முயலாதீர்கள்! பகுத்தறிவோடு நடந்து கொள்ளுங்கள்" என்றார் பெரியார். “நம் அரசியலில் மது விலக்கும், கதரும் இருபெரும் மடமைகள். நான் ரயில் பிரயாணத்தில் கூட ராட்டினம் சுற்றிய மடையன். சாணி வழிக்கும் துணியாகக் கூடப் பயன்படாத கதரை உடுத்தியவன்; காந்தியாரே, 'Mr. Ramaswamy! you need not spin hereafter. I exempt you for three months' என்று எனக்கு எழுதியும், விடாதவன்" என்றார்.

ஏப்ரல் மாதமும் பெரியார் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மன்னார்குடியில், மாவட்ட தி.க. தலைவர் தோலி சுப்ரமணியம் தலைமையில் பேசும்போது, நம் சமுதாய இழிவை ஒழிக்க விரைவில் மாபெரும் கிளர்ச்சி துவக்குவோம் என்றார். சென்னை மாவட்ட சமூக சீர்திருத்த மாநாட்டிலும், கடவுள் மத சாஸ்திரங்களைப் பாதுகாக்கும் மத்திய ஆட்சி ஒழிந்தாக வேண்டும், என்றார் பெரியார். 20.4.69 அன்று இந்த மாநாடு வே.ஆனைமுத்து தலைமையில் நடந்தது. சேலம் பச்சைமுத்து திறப்பாளர் : மயிலை சம்பந்தமூர்த்தி கொடி ஏற்றியோர்; தே.மு. சண்முகம் வரவேற்பாளர்.

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குத் தனி இலாக்கா ஏற்படுத்தப்படும். வறட்சி நிவாரணத்துக்கு 20 கோடி ரூபாயில் திட்டம் தந்துள்ளோம். மத்திய அரசு இதற்குப் போதிய அளவு உதவாவிடில் மக்கள் நாட்டுப் பிரிவினை கோரக் கூடும். இப்போதெல்லாம் தி.மு.க. ராஜாஜியைக் கலந்தோசிப்பது இல்லை என சி.சுப்ரமணியம் ஏன் அங்கலாய்க்கிறார்? மாணவர்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியை ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். நகர சபைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கே மகத்தான வெற்றி! ஏழாக இருந்தது; இப்போது 47 நகரசபை தி.மு.க.வசம்- என்றெல்லாம் முதல்வர் கலைஞர் தந்த செய்திகளை, முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தது “விடுதலை", 107 ஆண்டுகளில், முதல் தமிழர் பிரதம நீதிபதி என்று பாராட்டியது "விடுதலை" 2.5.69 அன்று. 3ந் தேதி முதல் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் அட்வகேட் ஜெனரல் ஆனார். ஜனாதிபதி ஜாகீர் உசேன் 3.5.69 அன்று 11.20 மணிக்குக் காலமானார். வி.வி.கிரி தற்காலிக ஜனாதிபதியாய்ப் பொறுப்பேற்றார்.

1.5.69 மே நாள் சென்னைக் கடற்கரையில் பேசிய பெரியார், புதிய வரலாறு படைத்த தலைமை நீதிபதி நியமனத்தைப் பாராட்டி, இதே போல் சாதி-மத விகிதாசரத்தின்படி, அரசாங்கம் எல்லாப் பதவிகளிலும் நியமனம் செய்துவர வேண்டும் என்றார். 3ந் தேதி பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளாண்மைத்துறை அமைச்சர் ஏ.கோவிந்தசாமியைப் பெரியாரும் மணியம்மையாரும், 16ந் தேதி சென்று கண்டனர்.“அந்தோ பெருந்தகையாளர் மறைந்தார்” என்று “விடுதலை” கதறியழுதவாறு, 18ந் தேதி மாலை 3.30 மணிக்கை மறைந்த அன்னாரது சடலத்தின் மீது, 19 காலை 9.30 மணியளவில் பெரியாரும் மணியம்மையாரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் 1:6.69 அன்று பெரியார் தலைமையில் கலைஞர் ஏ. கோவிந்தசாமியின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்தார். நாம் மானம் பெறவும், நமது ஈனஜாதித்தனம் ஒழியவும், நான்கு காரியங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். நெற்றிக்குறி இடக்கூடாது. கோயில்களுக்குக் செல்லக் கூடாது. பண்டிகைகள் எதையுமே கொண்டாடக்கூடாது பார்ப்பானை பிராமணன் என்று சொல்லக்கூடாது என்பதைக் கோட்பாடுகளாகவே பெரியார் கூறிவந்தார்.

கடவுளர் படம் அகற்றும் சுற்றறிக்கை வாபஸ் பெறப் படவில்லை என்று கலைஞர் வேலூரில் 26ந் தேதி கூறினார். வேலூர் சிறையில் ஞாபகார்த்தமாக, அண்ணா சிலை ஒன்றைக் கலைஞர் திறந்து வைத்தார். வறட்சியினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1 கோடியே 86 லட்சம் வரும் கல்வியாண்டில் பி.யூ.சி. வகுப்பில் சேர 73,680 பேருக்கு இடவசதி செய்யப் பட்டுள்ளது - என்றார் முதல்வர்.

தர்மபுரியில் பெரியாரின் முழுஉருவ வெண்கலச் சிலை ஏழடி உயரமுள்ளதாக அமைக்கப்பட்டுத், திறப்பு விழா பல முறை ஒத்தி வைக்கப்பட்டு, 24.5.69 அன்று மிகுந்த எழுச்சியோடும் சிறப்போடும் நடைபெற்றது. மதியழகன் தலைமையில் கலைஞர் திறந்து வைத்தார். சிலை அமைப்புக் குழுத் தலைவர் எம்.என். நஞ்சையா வரவேற்றார். சி.பா. ஆதித்தனார், அன்பில் தர்மலிங்கம், கே. ராஜாராம் எம்.பி., அரூர்முத்து எம்.பி., கி.வீரமணி, பெரியார் ஆகியோர் உரையாற்றினார்கள், நீதிபதி கே.நாராயணசாமி வந்திருந்தார். அமைச்சர் பெருமக்களுக்கும், பெரியார் அவர்களுக்கும் தர்மபுரி நகராட்சி மன்றத்தின் சார்பில், மாலையில் வரவேற்பு வழங்கப்பட்டது. சிலையடியில் பீடத்தின் ஒரு புறத்தில் கடவுள் மறுப்பு வாசகங்கள் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தன. இது புதிதல்லவெனினும், வெறும் வாயைமெல்லும் பத்திரிகைகளுக்கு ஒரு பிடி அவலாகக் கிடைத்தது! இது மேலும் இப்படிச் செய்யவே தூண்டும் என்றார் பெரியார்.

தர்மபுரியில் 25.5.69 பெரியார் சிலையைத் திறந்து வைத்த தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் சொற்பொழிவு:-

“என்னுடைய பெற்றோர்கள் வேறொரு பள்ளிக் கூடத்துக்குப் போபோ என்று என்னைத் துரத்திய நேரத்தில், அந்தப் பள்ளிக் கூடத்திற்குப் போக மறுத்து, நான் பெரியார் பள்ளிக்கூடத்துக்கு வந்தவன், நண்பர் வீரமணி அவர்கள், அய்யா அவர்களுக்கு இருபுறமும் உள்ளவர்களையெல்லாம் சுட்டிக்காட்டிப், பெரியார் அவர்களது பெருந்தொண்டினால் விளைந்த பயன் என்று சொன்னார்கள். அவர்கள் மனிதர்களைத்தான் சுட்டிக் காட்டினார்கள்! பெரியார் அவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிற நாய்க்குட்டியை வீரமணி சுட்டிக் காட்ட வில்லை. நாய் நன்றியுள்ள பிராணி. பெரியார் பக்கத்திலே எப்போதும் நன்றியிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் நாங்கள் அவர்கள் பக்கத்திலே இருக்கிறோம்.

பெரியார் அவர்களோடு நாங்கள் இரண்டறக் கலந்து இருந்தோம். இடையிலே ஒரு பதினெட்டு ஆண்டுக்காலம், பெரியார் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலே ஊடல். அதைப் பெரியார் அவர்கள் பல மேடைகளிலே குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த ஊடல் உள்ளபடியே எங்களுக்குள் வியூகம் வகுத்து ஏற்படுத்திக் கொண்ட ஊடல் என்று அண்ணா சொல்வார்கள்.

அய்யா அவர்கள் சொல்வார்கள். 'பதினெட்டு ஆண்டுக்காலம் நான் இவர்களைத் தாக்கினேன்; ஏசினேன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள்' என்று. ஆனால் அய்யா அவர்கள் தாக்குதலையும் ஏசல்களையும், எங்களுக்கு அவர்கள் தருகின்ற பயிற்சியாக நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

நெல் பயிரிடுகின்ற விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும். நெற்கதிரோடு வைக்கோலைக் களத்தில் போட்டு, மாடுகளைவிட்டு மிதிக்கச் சொல்வார்களே, அது எதற்காக? அந்த நெற்பயிருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவா? அல்ல அல்ல; மாடுகள் மிதிக்க மிதிக்க நெல் மணிகள் கிடைக்கும் என்பதற்காக அதைப்போல நெல்கதிர்களாகிய எங்களைப் பெரியார் பதினெட்டாண்டுகளாக மாடுகளை விட்டு மிதிக்கச் செய்து, போரடித்து. இப்போது கிடைத்திருக்கிற நெல்மணிகளைக் கையிலெடுத்து, அள்ளிப் பார்த்து. ஆகா மரகதமணிகள்! மாணிக்க மணிகள் என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்!

காஞ்சியில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், துண்டை உதறித் தோளிலே போட்டுக் கொண்டு, தன்னுடைய கைத்தடியைத் தரையிலே வேகமாக ஊன்றிக், காங்கிரசை ஒழித்துக் கட்டி விட்டுத் தான் மறு வேலை பார்ப்பேன், என்று வெளியேறினார் பெரியார். அப்படி வெளியேறியவர் பதினெட்டு ஆண்டுக் காலம் காங்கிரஸ் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்தார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்; அவரும் ஒத்துக் கொள்ளமாட்டார்! ஏனென்றால், அவரே சொல்லியிருக்கிறார். நான் காமராசரைத்தான் ஆதரிக்கிறேன்; காங்கிரசை அல்ல என்று!

நாங்களெல்லாம் இல்லாத நேரத்தில், மிச்சமிருப்பவர்களுக்குச் செலவு வைக்க வேண்டாம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் மேடைபோட்டுக் கொடுக்க, மைக் வைத்துக்கொடுக்க, அவர்கள் செலவிலேயே, அவர்கள் பெரியார் வாழ்க என்று சொல்லச் சொல்லத் தைரியமாக அதே மேடையிலிருந்து கொண்டு, நான் காங்கிரசை ஆதரிக்க மாட்டேன் காமராசரை மாத்திரமே ஆதரிப்பேன், என்று சொல்லக் கூடிய புரட்சிக்காரர், பெரியாரைத் தவிர, இந்தத் தரணி முழுதும் வேறு ஒருவரைக் காணமுடியுமா?

அப்படிப்பட்ட ஆற்றல் பெற்றவர்! அறிவின் சுரங்கம்; பகுத்தறிவுப் பேழை; கருத்துக் கருவூலம்: தமிழகத்திலே மண்டிக்கிடந்த மூடநம்பிக்கைகளை எல்லாம் உதறி விடுவதற்காக கிளர்ந்து எழுந்த புயற்காற்று, பெரியார் ராமசாமி அவர்களாவார்கள்!

எத்தனையோ சீர்திருத்தச் சிற்பிகளெல்லாம் தோன்றினார்கள். ஆனால் அவர்களெல்லாரும் தெய்வங்களாக ஆக்கப்பட்டு, அவர்களுடைய கொள்கைகள் அழிக்கப்பட்டன.

தன்னுடைய அயராத உழைப்பால், அறுபதாண்டுக்காலம், அவருடைய கால்படாத இடம் தமிழகத்திலே இல்லை; அவர் செல்லாத குக்கிராமம் இல்லை; அவர் பேசாத பட்டிதொட்டி இல்லை; அவருடைய குரலை எதிரொலிக்காக மனைகளே இல்லை! நான் எண்ணிக் கொள்வதுண்டு; பெரியாருக்கென்று ஒரு வீடு எதற்காக என்று! அதையும் கேட்டுவிடப் போகிறேனோ என்று பெரியார் அவர்கள் பயந்துவிட வேண்டாம். அவர் இருப்பதெல்லாம் காரிலேதான்; அவர் வாழ்வதெல்லாம் காரிலேதான்!

வேளாண்மைத்துறை அமைச்சர் கோவிந்தசாமிக்கு உடல் நலமில்லை. பெரியார் பொது மருத்துவமனைக்கு வந்து பார்த்துச் செல்கிறார். அடுத்த நாள், “பெரியார் எங்கே?" என்று வீரமணியைக் கேட்டால், “ஜெயங் கொண்டத்திலே நிகழ்ச்சி" என்கிறார். அன்றைக்கு மறுநாள் கோவிந்தசாமி அவர்கள் மறைந்தவுடன், சடலத்தைக் காணப் பெரியார் விரைந்து வருகிறார். கொளுத்துகிற வெய்யிலில், தள்ளாத பருவத்தில், மயான பூமிவரை வந்து விடுகின்றார்.

என்ன காரணம்? தான் பெற்ற பிள்ளைகள், தான் வளர்த்த பிள்ளைகள், தான் ஆளாக்கிய பிள்ளைகள், ஆட்சி புரிகிறார்களே என்று மகிழ்ந்திருக்கிற நேரத்தில், இப்படிச் சோதனைக்கு மேல் சோதனையாக வருகிறதே என்று, சோக முகத்தோடு, அவர் அமர்ந்திருந்த காட்சியை நாங்கள் கண்டோம். அது எங்கள் வேதனையை அதிகப்படுத்தியதென்றாலும், ஒரு புறத்தில் எங்களை ஆறுதலுக்கும் ஆளாக்கியது.

அண்ணனை இழந்திருக்கிற எங்களுக்குத் தந்தை பெரியார் அவர்கள் பெரும் ஆறுதலாகத் தோன்றுகிறார்கள். அவர்களை எண்ணிக் கொள்கிறபோது, எங்களுக்கு ஏற்படுகின்ற சங்கடங்களையெல்லாம் போக்கிக் கொள்கின்றோம். பகுத்தறிவாளர் ஆட்சி நடைபெற வேண்டுமென்று பெரியார் விரும்பினார். நடைபெறுகிறது, அவர் மகிழ்கிறார்; பாராட்டுகிறார்! பெரியார் நீண்டநாள் இருந்து, எங்களைப் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்".

3.6.69 அன்று முதல்வர் கலைஞரின் 46-ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குப், பெரியார், “அன்பும் பண்பும் நிறைந்த அருமைக் கலைஞர் கருணாநிதி அவர்களது 45-ம் ஆண்டு கழிந்து. 46-ம் ஆண்டுத் தோற்றத்தை, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்" என்று வாழ்த்துக் கூறினார். ஆனால் 2ந் தேதியே பெரியார் சென்னைப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஒரிருவாரம் தங்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தும், 7, 8 தேதிகளில் தஞ்சை, திருத்தணி, அரக்கோணம் இங்கெல்லாம் சென்று, மீண்டும் மருத்துவமனை சேர்ந்து, 15 சென்னையிலும் 21 திருச்சியிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். எனினும் 25ந் தேதி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் டாக்டர்கள் பட், கோஷி, ஜான்சன் ஆகியோர் சிகிச்சை தர, அங்கே தங்கினார். மணியம்மையார், ஆம்பூர் பெருமாள், ஏ.டி. கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.

16.6.69 அன்று பெரியார் “இலண்டனில் அண்ணா ஆட்சி" என்று குறிப்பிட்டு, மகிழ்ச்சியோடு ஒரு தலையங்கம் “விடுதலை” யில் தீட்டியிருந்தார். 'கூடி வாழ இஷ்டமில்லை , என்று தம்பதிகளில் ஒருவர் வாயினால் கூறினார். போதும்! மணவிலக்குத் தந்துவிடலாம்' என்று காமன்ஸ் சபையில் இங்கிலாந்து ஒரு Divorce சட்டத்தை 14.6.69 அன்று நிறைவேற்றியது. “இது அண்ணாவின் சுயமரியாதைத் திருமணச் சட்டம் போலப் புரட்சிகரமானது, இதைப் பெரிதும் வரவேற்கிறேன்" என்றெழுதினார் பெரியார்.

மாநில சுயாட்சிப் பிரச்னைபற்றி ஆராய நீதிபதிகள் பி.வி. ராஜமன்னார், சந்திராரெட்டி, மற்றும் டாக்டர் ஏ.லட்சுமணசாமி முதலியார் ஆகிய மூவர் கொண்ட குழுவைத் தமிழக அரசு நியமித்தது. கீழத் தஞ்சை விவசாயக் கூலி நிர்ணயம் செய்ய கணபதியா பிள்ளை கமிஷனையும் நியமித்தது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகளாக பி.ஆர், கோகுல கிருஷ்ணன், ஜி.இராமானுஜம் நியமிக்கப்பட்டதை அடுத்து, கோவிந்த சுவாமிநாதன் அட்வகேட் ஜெனரல். வி.இராமசாமி பப்ளிக் பிராசிக்யூட்டர், எஸ். மோகன் கவர்ன்மெண்ட் ப்ளீடர்-நியமனம் பெற்றனர் 10.7.69 அன்று. சென்னைக் கடற்கரையில், கலைஞர் பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டத்தில், இந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளன்று தமிழகம் எங்கணும் 60 ஊர்களில் அண்ணா சிலை நிறுவப்படும் எனக் கலைஞர் அறிவித்தார்.

Shankar's Weekly ஜூன் 1-ந் தேதி 8-ந் தேதி இரண்டு இதழ்களில், பெரியாருக்கு மிகுந்த மரியாதை செலுத்தியிருந்தது. முதல் இதழில் 4 வித போஸ்களில் தர்மபுரி பெரியார் சிலை. அடியில் கடவுள் மறுப்பு வாசகங்கள், ராஜாஜி திகைப்போடும், வெறுப்போடும், அச்சத்தோடும் முதல் மூன்று படங்களில்/ கடைசிப் படத்தில் கைத்தடி கிடக்க, ஆள் மறைந்துபோயிருக்கிறார். Quo Vadis? என்ற தலைப்பில் இந்த கார்ட்டூன் தொகுப்பு. அடுத்த வாரம், Pen Portrait பகுதியில், படத்துடன் விளக்கம். பெரியார் சாதி ஒழிப்பில் காந்தியாரையும் விஞ்சியவர். இருண்ட தமிழகத்தில் பகுத்தறிவு ஒளிபரப்பிய மாமேதை, நாத்திகக் கோட்பாட்டில் Bertrand Russel in England and Alfaro Sequicros in Mexico ஆகியோரை ஒத்தவர் என்றெல்லாம் ஏராளமாகப் புகழ்ந்து, போற்றிப் பாராட்டியிருந்தது!

காரைக்குடி குறள் விழாவில் பேசிய அமைச்சர் மா முத்துசாமி, 'குறளிலும் குற்றம் உள்ளதென்று தம் மனத்திற்பட்ட உண்மையை, மறக்காமல் துணிந்து கூறக் கூடியவர், பெரியார் ஒருவரே!' என்றார். 1.7.79 அன்று திருச்சியில் மதுரம் விளையாட்டரங்கில், கலப்பு மணத் தம்பதியர் 8 ஜோடிகளுக்கு அரசு தங்கப்பதக்கம் வழங்கும் விழா பெரியார் ரதத்திலும், தம்பதிகள் ஜீப்பிலும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பெரியார் தலைமையில் முதல்வர் கலைஞர் பதக்கம் வழங்கினார். சமுதாய சீர்திருத்தத் தொண்டர்களுக்குக் கடவுள் மத சாஸ்திர நம்பிக்கை இருக்கக் கூடாது என்று பெரியார் கூறினார்.

15.7.69 காமராஜரின் 67வது பிறந்தநாள். வழக்கம் போலல்லாமல், "விடுதலை" சிறிய அளவில் வாழ்த்துச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. தலையங்கப் பகுதியில் பெரியார், “தி.மு.க.வுக்குச் சோதனைக் காலம்" என்று எழுதினார். பொதுச் செயலாளர் தேர்தலில் கலைஞர், நாவலர் இருவருமே போட்டியிடப் போவதாக வந்த செய்தி கேட்டு வருந்தினார். கட்சித் தலைவர் ஒருவராகவும், முதல்வர் வேறு ஒருவராகவும் இருப்பதும் தவறுதான் என்றார். தஞ்சை மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு Tractor உபயோகிக்கக் கூடாது என்று இடது கம்யூனிஸ்டுகள் போராடிய போது, இது பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள கட்சி, இது அவர்கள் சூழ்ச்சிதான் என்று எழுதினார் பெரியார். ராஷ்டிரபதி தேர்தலை யொட்டி, டெல்லியில் சிக்கல்கள் எழுந்தள. அதிகார பூர்வமான வேட்பாளர் சஞ்சீவரெட்டியைக் காமராஜரும், நிஜலிங்கப்பாவும் ஆதரித்தனர். இந்திராகாந்தி, வி.வி. கிரியைத் தூண்டிவிட்டு, நிற்கச் சொல்லி, ஜகஜீவன்ராம் ஆதரவைத் தேடிக் கொண்டார். இதிலிருந்து, இந்திய அரசியலிலும் ஆரிய திராவிட உணர்ச்சிப் போராட்டம் முகமூடியைக் கிழித்து வெளிவந்து விட்டது" என்றார் பெரியார்-"வகுப்பு வாதம் டில்லிக்கு எட்டி விட்டது" என்னுந் தலைப்பில்

காமராஜரின் பிறந்த நாள் விழா சென்னை பாலர் அரங்கில் மாணவர்களால் 18.7.69 அன்று நடத்தப்பட்டது. கலைஞரது பிறந்தநாள் விழாவில் காமராஜர் கலந்து கொள்ள மறுத்தபோதிலும், கலைஞர் இந்த விழாவில் பங்கேற்றார். சி.சுப்ரமணியம், சம்பத், ஹண்டே, என்.வி. நடராசன், சிவாஜி கலந்து கொண்டனர். பெரியார் சார்பில் வீரமணி, பெரியார் வேலூர் மருத்துவமனையிலிருந்து தந்த செய்தியை

வாசித்தார். "தமிழர்களுக்குக் கல்வி கொடுத்த பெருமையில் பங்குபெற வேறு யாருக்கும் உரிமை கிடையாது" என்று 20.7.69 உலக அறிவியலில் குறிப்பிடத்தக்க நாள். ஆம்ஸ்ட்ராங், அல்டிரின் இருவரும். நிலாவில் காலடி வைத்த நாள்! இந்திய அரசியலிலும்' குறிப்பிடத்தக்க நாள்: 14 பேங்குகள் தேச உடைமை ஆன நாள்!

தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடும், பகுத்தறிவாளர் மாநாடும் 26, 27 தேதிகளில் நடைபெற்றன. தி.சு. மாநாட்டின் தலைவர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம்: திறப்பாளர் திருவாரூர் தங்கராசு; கொடி உயர்த்தியோர் கி.வீரமணி; பகுத்தறிவாளர் மாநாட்டுத் தலைவர் பெரியார்; திறப்பாளர் ஃபாரூக். இந்த நாளில் சென்னையில் தி.மு.க. பொதுக் குழு கூடிப், பேச்சு வார்த்தைகள் மூலமே சுமுகமான முடிவுக்கு வந்து, தலைவராகக் கலைஞர், பொதுச் செயலாளராக நாவலர், பொருளாளராகப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., துணைப் பொதுச் செயலாளர்களாகக் காஞ்சி மணிமொழியார், கே. ராஜாராம் என்ற வகையில் போட்டியின்றி அறிவிக்கப்பட்டது கேட்டுப் பெரியார் நிம்மதியடைந்து “தலைவர் ஸ்தானம் 20 ஆண்டுகளாகக் காலியாயிருந்தது நிரப்பப்பட்டது" என்றார். 29ந் தேதி "விடுதலை" யில் ரசிக்கத்தக்க செய்தி ஒன்று:- குன்றக்குடி அடிகளார் பூசையில் அணியும் 7,000 ரூபாய் பெறுமான சாமான்கள் திருட்டுப் போயின. போலீசார், பழைய பணியாள் ஒருவனிடமிருந்து கைப்பற்றினர். இதில் கடவுள் கைகொடுக்கவில்லை என்று!

புதிய அமைச்சர்களாக நாவலர், என்.வி. நடராசன், கா.வேழ வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். என்.டி. சுந்தரவடிவேலு சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப் பட்டதைப் பாராட்டி "விடுதலை" 31.7.69 அன்று தலையங்கம் தீட்டியது. "நாடு பஞ்சம் வறட்சி என்று தவித்துக் கொண்டிருக்கையில், பார்ப்பான் பாரத ராமாயணம் படிப்பதை நிறுத்துகிறானோ? ஆட்சி மீது குறை சொல்லுவதை நிறுத்துகிறானோ? என் உயிர் உள்ளவரை தி.மு.க. ஆட்சியை ஒழிய விடமாட்டேன்!" என்று உறுதி தெரிவித்த பெரியார், நீதித்துறையில் யாரும் தொட்டுக் காட்டாத ஓர் அக்கிரமத்தைக் குறிப்பிட்டார். “ஜில்லா ஜட்ஜ்கள் 16 பேர்தான் இருக்கிறார்கள். அவர்கள் தீர்ப்பு மீது அப்பீலை விசாரிக்க, ஐகோர்ட்டில் ஏன் 18 நீதிபதிகள்?" என்ற கேள்விக்கு, என்ன பதில்? ஜட்ஜுகளை வக்கீலில் இருந்து நேரடியாக நியமிப்பதைப் பெரியார் இடைவிடாமல் எதிர்த்து வந்தார்.

ஆகஸ்டு மாதம், பெரியாருக்கு, இயல்புக்கு மாறான மாதமாகிவிட்டது. 30.7.69 சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் அறுவை சிகிச்சை நடந்தது. ஆகஸ்டு 2-ஆம் நாள் கலைஞர், நாவலர், ப.உ. சண்முகம், முரசொலி மாறன் ஆகியோர் சென்று கண்டு வந்தனர். 4-ந் தேதி மாலை 3.30 மணிக்கு திருமதி திரு. எம்.ஜி.ராமச்சந்திரன், காலையில் கே.ராஜாராம் ஆகியோர் பார்த்தனர். அன்று பெரியாருக்கு மூத்திரப் பையில் அறுவை நடந்து, உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. 6ம் தேதி மதியழகன், ஜி.டி. நாயுடு, பி.ஜி.கருத்திருமன் கண்டனர். 7-ந் தேதி புதிய மந்திரி என்.வி. நடராசன் தமது குடும்பத்தாருடன் சென்று பெரியாருக்கு மாலையணிவித்தார். அப்போது அங்கிருந்த Dr.பட் அவர்களிடம் பெரியார், He is honourable Mr. N.V. Natarajan. Today he has become a minister. He was once my private secretary" என்று அறிமுகம் செய்து வைத்தார்.

10-8-69 அன்று ப.உ சண்முகம். பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரும் பெரியாரை நலம் விசாரித்தனர். அன்றைய தினம் பெரியார் திருச்சியில் நடைபெற்ற நீதித்துறை அலுவலர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள ஒப்புதல் தந்திருந்தார். “எவ்வளவோ விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கவும், உங்களிடமிருந்து தெரிந்து கொள்ளவும் இருந்தேன். உடல் நலக் குறைவால் இயலாமல் போனது. பாமர மக்களுக்கு நீதி முறையிலுள்ள கொடுமைகள் நீங்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்" என்று பெரியார் வேலூரிலிருந்து செய்தி அனுப்பியிருந்தார். 11-ந் தேதி காலை 11-45 மணிக்குக் காமராசர், வேலூரில் பெரியாரைச் சந்தித்து, அளவளாவினார். 14 அன்று ம.பொ.சிவஞானம், டி.கே.சண்முகத்துடன் வந்துசென்றார். மறுநாள் அய்.ஜி. மகாதேவனும், பிரதம எஞ்சினீயர் சி.வி. பத்மநாபனும் பார்த்து நலம் விசாரித்தனர். 8-ந் தேதி இரவு குன்றக்குடி அடிகளார் பெரியாரைக் கண்டனர். 19-ந் தேதி மாலை 3-30 மணிக்குப் புறப்பட்டு நேரே நாகரசம்பட்டி சென்று திருமணத்தை நடத்தி விட்டு, மறுநாள் ஆம்பூரிலிருந்து, அடுத்த நாள் மீண்டும் வேலூர் மருத்துவமனைக்கே வந்தார் பெரியார். 25-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆகித் திருச்சி சென்றுவிட்டார். செப்டம்பர் மாதம் வரை ஓய்விலிருப்பார் என்று செய்தி கிடைத்தது. அதற்குள் 28-ந் தேதியே வேலூர் சென்று, புது டியூப் பொருத்தி வந்தார். சோர்வும், களைப்பும் அதிகமிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் தி.மு.க. உறுப்பினர்கள், வி.வி. கிரிக்கு வாக்களித்தது தெரிந்ததும், பெரியார் "தி.மு.க. தலைமை சிந்திக்க வேண்டும். பார்ப்பானோ அல்லது சூத்திரனல்லாதானோதான் இதுவரை ராஷ்ட்ரபதியாக வரமுடிகிறது" என்று எழுதினார். மதுரை திராவிடர் கழகக் கட்டட நிதிக்காகப் பெரியார் 1,000 ரூபாய் அன்பளிப்பாகத் தந்து, மற்றவர்களும் வழங்கிட, வேண்டுகோள் விடுத்தார். 26-8-69 அன்று “ஆனந்த விகடன்" அதிபர் எஸ்.எஸ். வாசன் மறைவுக்கு "விடுதலை" துணைத் தலையங்கம் தீட்டியது. “குடி அரசு" துவக்க நாட்களில், வாசன் விளம்பரந் திரட்டும் ஏஜண்டாகப் பணியாற்றி யிருக்கிறார். பெரியாரிடம் மிக்க அன்பு பூண்டவர். ஜெமினி தயாரித்த எல்லாப் படங்களுக்கும் "விடுதலை"யில் விளம்பரம் வெளியிட்டு வந்தார். 2-9-69 அன்று பெரியாரும், மணியம்மையாரும் - திருமதி பட்டம்மாள் வாசனிடம் துக்கம் விசாரிக்கச் சென்றனர். மகன் பாலுவும், மணியனும் வரவேற்றனர். 5-ந் தேதி மயிலை இசபெல்லா நர்சிங் ஹோமில் சிகிச்சை பெற்று வந்த ராணி அண்ணியாரைப் பெரியாரும், மணியம்மையாரும் சென்று பார்த்தனர். முதல்வர் கலைஞருடைய முயற்சியால், வானொலியில் "பிராந்தியச் செய்தி"களாயிருந்தது, 1-9-69 முதல் "மாநிலச் செய்தி"களாக மாறிற்று. 26-8-69 அன்று தியாகராயநகர், தருமபுரம் ஆதீன நிலையத்தில், துணை வேந்தரான சுந்தர வடிவேலு, மேலவை உறுப்பினரான குன்றக்குடி அடிகளார், இவற்றுக்குக் காரணமான கலைஞர் ஆகியோருக்குப் பாராட்டு வழங்கப் பெற்றது.

மது விலக்கு அமுலினால் மாநிலத்துக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மத்திய அரசு மான்யம் தராவிட்டால், மதுவிலக்கை ரத்து செய்ய நேரும், என்று முதல்வர் கலைஞர் கூறியதை, "விடுதலை" முதல் பக்க பேனர் செய்தியாக 7-9-69 அன்று வெளியிட்டது. 9-ந் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எஸ். மகராஜன், பி.எஸ். சோமசுந்தரம் நியமனம் பெற்றுப், பெரியாரின் கனவு நனவாகச், செய்தியாயினர். தேசிய மாணவர் படையின் ஆணைச் சொற்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்று. மத்திய அமைச்சரவையைச் சார்ந்த எம்.ஆர். கிருஷ்ணா சென்னையில் 12-ந் தேதி நேரில் கூறினார். அண்ணாவின் உறுதி வென்றது! 12-ஆம் நாள் பெரியார் வேலூர் மருத்துவமனை சென்று வந்தார்.

இந்த ஆண்டு பெரியார் 91-ஆவது பிறந்த நாள் விழா, தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலத்துடன் கொண்டாடப் பட்டது. இராமநாதன் மன்றத்தில் கவியரங்கம் 11-30க்குத் துவக்கம். வீரமணி வரவேற்றார். அடிகளாரும், பெரியாரும் அமர்ந்திருந்தனர். வேலூர் மருத்துவ நிபுணரான டாக்டர் பட், திருமதி பட், டாக்டர் ஜான்சன் ஆகியோர் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அமைச்சர் மா. முத்துசாமி கவியரங்கத்தலைவர். கவிஞர்களான கருணானந்தம், பாலசுந்தரம், புதுவை சிவப்பிரகாசம், பழம் நீ, முத்தன், குடி அரசு ஆகியோர் பெரியாரின் - சிறப்பியல்புகளைக் கவிதைகளில் பொழிந்தனர். பிற்பகல் 2-30 மணிக்குத்தான் முடிந்தது. “நான் போதையில் இருக்கிறேன். இப்பேர்ப்பட்ட புகழ் மொழிகளைக் கேட்டு, நான் சகித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது தான் கஷ்டம்! என்றார் பெரியார். அனைவர்க்கும் பெரியார் இல்லத்தில் செஞ்சோறு (பிரியாணி) வழங்கப்பட்டது. மாலையில் மாபெரும் ஊர்வலம். பெரியாரும்' என். வி. நடராசனும் முத்துப் பல்லக்கில் அமர்ந்து வந்தனர். முதல்வர் கலைஞர், சிறிது தூரத்தில் வந்து ஏறிக்கொண்டார். மணிக்கூண்டருகில் வந்ததும், அங்கே எதிரில் அமர்ந்திருக்கும் அண்ணாவைப் பார்ப்பது போல, முழு உருவ அளவில் வெண்கலத்தால் செய்யப்பட்ட, நிற்கும் நிலையில் நிறுவப்பட்ட பெரியார் இலையினைக் கலைஞர் திறந்து வைத்தார். நாவலர் தலைமையில், ஊர்வலம் திலகர் திடலை அடைந்ததும், பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கலைஞர் பேசும்போது "பெரியார்தான் தமிழக அரசு. தமிழக அரசுதான் பெரியார். நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்பதற்கு ஒரே சான்று, அதிர்ஷ்டமில்லாததென்று சொல்லப்படும் 13 தான் இன்றைய அமைச்சர்களின் எண்ணிக்கையாகும். நாங்கள் பெரியாரின் ஆதரவு பெற்றவர்கள் அல்ல. பெரியாராலேயே ஆளாக்கப்பட்டவர்கள்” என்று உணர்ச்சி பொங்க உரைத்தார். நாவலர் 1,001 ரூபாய் கொண்ட பொற்கிழியினைப் பெரியாரிடம் வழங்கிய போது, நகைச்சுவையாகப் பெரியார் “சரியாயிருக்குமா?" என்று கேட்க, அந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளம் கொல்லௌச் சிரித்தது, அலையோசையாக ஒலித்தது. என்.வி. நடராசன், மா. முத்துசாமி, திருவாரூர் கே. தங்கராசு ஆகியோரும் பேசினர். மணியம்மையார் டாக்டர் பட் அவர்களிடம் மருத்துவமனைக்கு அன்பளிப்பாக ஏதோ தொகை வழங்கினார்கள். டாக்டர் இருவருக்கும் முதல்வர் பொன்னாடை போர்த்தினார். வீரமணி வரவேற்றுப் பேச, கா.மா. குப்புசாமி அனைவர்க்கும் மாலை சூட்டினார். தோலி ஆர், சுப்ரமணியம் நன்றி நவின்றார்.

இந்த ஆண்டு திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நாள் 27-ந் தேதி நடைபெற்றது. அமைச்சர் என்.வி. நடராசன், கல்வி இயக்குநர் லா.வே. சிட்டிபாபு, போலீஸ் அதிகாரி ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர். 28 ந் தேதி பெரியார் 91-ஆவது பிறந்த நாள் விழா, சுய மரியாதைக் குடும்பங்களின் விருந்து, கருத்தரங்கு. பாராட்டுவிழா அனைத்தும் சிறப்புற நடந்தன. மதியழகன், சாதிக் பாஷா, ஓ.பி. இராமன், என்.டி. சுந்தரவடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர். வழக்கம் போல் இரு நாட்களிலும் பெரியார் உபசரிப்பும் பேருரையும் உண்டு. “நம்முடைய எந்தச் சமுதாயப் புரட்சிக்குமே முட்டுக்கட்டை போடுவது பார்ப்பனர்தான். பார்ப்பன ஏடுகளை வாங்காதீர்கள். அவர்கள் மிரட்டலும் இனிப் பலிக்காது. ஒரு மலையாளப் பழமொழி என் நினைவுக்கு வருகிறது. “பொரைக்கொரு முத்தி அரைக்கொரு கத்தி" என்றால் வீட்டுக்கு ஒரு கிழவியும், இடுப்புக்கு ஒரு கத்தியும் அவசியம் தேவை என்பது. ஆமாம்! என்று பேசினார் பெரியார். சென்னை இராஜாஜி மண்டபத்தில் அண்ணா படத்தைப் பிரதமர் இந்திராகாந்தி 6-10-69 அன்று திறந்து வைத்தார். ஒரு படம் சட்ட மன்றத்திலும் வைக்கப்பட்டது.

91-வது ஆண்டு பிறந்தநாள் செய்தியாகப் பெரியார் எனது நிலை" என்ற தலைப்போடு கட்டுரை வரைந்தார்:- எனது 90-வது ஆண்டு பிறந்தநாள் விழா மலரில் எனது நிலை என்கிற கட்டுரை எழுதும்போது, 91-வது ஆண்டு பிறந்தநாள் விழா மலருக்கு எனது நிலை என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ வாய்ப்பு ஏற்பட்டது. முன்பு, "எனக்கு வயது 90; உடல் நிலை மிகவும் மோசம்; கைகால் நடுக்கம் அதிகம்; சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன்; அதாவது அவ்வளவு வலி, தூக்கம் சரியாய் வருவது இல்லை ; நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டு, சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது; உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை; முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை; எந்தக் காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை ; களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது; நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும், ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது; எதைப் பற்றியும் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சுருக்கமாகச் சொல்லுவதானால், வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச்செலவுத் தொகையை ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக ஏற்படுத்தி விட்டேன். ரூ.100 எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதலியவைகளுக்கு அநேகமாகச் சரியாகப் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2, 3 பயணம் ஏற்பட்டால் ஓரளவு மீதியாகி, பிரச்சாரத்திற்குப் பயன்படும். எனக்கு இனிப் பிரச்சாரத்தில் ஆசை இல்லை . ஒரு வாரப் பத்திரிக்கை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. இன்னும் என்னால் வெளியாக்கப்படவேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.

இதற்காக, எளிதில் என்னைக் காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப் போய்விடலாமா, அல்லது ஈரோட்டிற்கே போய் விடலாமா, என்றுகூட எண்ணுகிறேன். இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்குக் கவலை இல்லை . இருந்தவரை தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும் ஏற்படுவதும் இயற்கையேயாகும். அதுபோல் என் முடிவும் இருக்கலாம்.

பொதுவாக என் மனம் குழப்பமாக இருக்கிறது. துறவி ஆகிவிடுவேனோ என்னமோ?"

இந்தப்படி எழுதியிருக்கிறேன். அதை ஊன்றிப் படித்தாலே நான் எழுதியதன் தன்மை விளங்கும்.

இப்போது எனக்கு 90 முடிந்து 91 நடக்கிறது என்றாலும், இடையில் ஓராண்டில் என் உடல் நிலையானது 94, 95 என்று கருதும்படியான கிழத்தன்மை ஏற்பட்டு விட்டது. உடல் நிலை மாத்திரமல்லாமல் பஞ்சேந்திரியங்களோடு, புத்தி, மனது, சிந்தனாசக்தி முதலிய தன்மைகளும் மிகக் குறைந்து பலவீனப்பட்டு விட்டன. என்றாலும் இவ்வோராண்டு நாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தால், எனக்கு மற்ற கருவி கரணாதிகளின் பலக்குறைவு எப்படி இருந்தாலும், மனம் உற்சாகம் அடையும்படியான பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன,

முதலாவது நிகழ்ச்சி நமது தி.மு.க. ஆட்சியில் 13 மந்திரிகளில் 13 பேரும் தமிழர்கள் என்பதோடு, 18 அய்க்கோர்ட் ஜட்ஜ்களில் 14 பேர்கள் தமிழர்கள் (பார்ப்பனர் அல்லாதவர்கள்). டெல்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100க்கு 50 முதல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது. அரசியலில், ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைவர்கள் பணியாளர்கள் யாவருமே 100க்கு 100-ம் தமிழர்களேயாவார்கள். இதை அனுசரித்தே, மற்ற நிலைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் தி.மு.க ஆட்சி என்றே சொல்லுவேன். -

காங்கிரஸ் மத்திய ஆட்சியிலும், பச்சையாகப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு - தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றி வாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும்.

மற்றும் 90-வது பிறந்தநாள் மலரில் குறிப்பிட்ட சலிப்பு இப்போது எனக்குக் குறைவென்றே சொல்லலாம். உதாரணமாகக் துறவியாய்ப் போய்விடலாமா என்று எழுதியிருந்தேனே - இன்று எனக்கு அப்படி எண்ணம் இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர் காமராசரும், அறிஞர் அண்ணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது, 'இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்!' என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றன.

இன்று எனக்குள்ள குறையெல்லாம், தமிழர் சமுதாயத்தில் 'விபீஷணப் பரம்பரை' வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில 'சாதிக்கு' (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத் தக்கதேயாகும். எனது 90-வது வயதைவிட, 91-வது வயது திருப்தியையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்பது என் கருத்து.

விபூஷணர்கள் திருந்துவார்களா!

தி.மு.க. ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்குமேல் கருத்தும் ஓடவில்லை ; எழுதவும் முடியவில்லை .

அக்டோபர் மாதத்தில் கோயில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி பற்றியே பெரியாரின் சிந்தனை ஓட்டம் மிகுத்துக் காணப்பெற்றது. "விடுதலை" முதல் பக்கம் பெரிய எழுத்தில் கட்டம் போட்ட செய்தி; சூத்திரன் என்கிற இழிவு நீக்கக் கிளர்ச்சி. காலம் வீணாய்ப் போய்ச் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் சூத்திரன் என்கிற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட இஷ்டமுள்ளவர்கள் ஈ.வெ.ரா.வுக்குத் தெரிவியுங்கள் - என்று! “விடுதலை" 9-ந் தேதி தலையங்கமே, காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. என்பதுதான். பெரியார் அந்த வாரத்தில் எழுதினார்:- "வடநாட்டில் உள்ள காசி, பூரி, பண்டரிபுரம் முதலான ஊர்களின் பிரபலமான கோயில்களில், பக்தர்களே பூசை செய்யலாம். கர்ப்பக்கிரகத்தில் யாரும் போகலாம். இந்து மதம், ஆகமம் என்றெல்லாம் சொல்லிக் கொள்வது, இந்தத் தமிழ் நாட்டில்தான். இந்துக்கள் எல்லாருக்கும் பொதுவான இடமாகிய கோயிலில் பேதம் காட்டுவது ஏன்? சிலை இருக்கும் இடத்திற்குப் பார்ப்பான்தான் போகலாம். சிலைகளுக்குப் பார்ப்பான்தான் பூசை செய்யலாம். கடவுளுக்கு வடமொழியில்தான் மந்திரம் சொல்ல வேண்டும். ஆகவே இந்த இழிவுகளை ஒழிப்பதற்காக நாம் நடத்த இருக்கும் கர்ப்பக்கிரகப் பிரவேசக் கிளர்ச்சியில் ஈடுபடத் தயார் என்று கையெழுத்துப் போட்ட கடிதத்தை எனக்கு, திருச்சி - 17 என்ற முகவரிக்கு அனுப்புங்கள். கிளர்ச்சி துவக்கப்படும் இடம் சென்னை , திருச்சி, திருவரங்கம், தஞ்சாவூர் அல்லது மன்னார்குடி ஏதாவது ஓர் ஊராக இருக்கலாம். இதில் பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் எனப்படுவோர், எந்தக் கட்சிக்காரராயிருந்தாலும், எல்லாரும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கிளர்ச்சி அவசியமா, இல்லையா, என்று கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். அவசியம் என்று தெரிந்தால் வாருங்கள்; போகலாம்! இந்தக் கிளர்ச்சியின் தத்துவம், நம்மேல் சுமத்தப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சாதி என்கிற இழிவை ஒழிப்பதுதான். ஈரோட்டில், முதன்முதலில் கோயில் பிரவேசம் செய்து காட்டியது நான்தான். நாம் இப்படிக் கோயிலுக்குள் செல்வதால், நம்மீது இரண்டு கிரிமினல் குற்றங்கள்தான் சுமத்தப்பட முடியும்! அதையும் பார்த்து விடலாம்"

மேலும், இராஜாஜி பெரியாரைப்பற்றி, என்ன சொன்னாராம்: "என்னை யோக்கியமானவன், உண்மையானவன் என்று இராஜாஜி கூறியதாகத் "தினமணி" ஏடு தெரிவிக்கிறது. அவரைப்பற்றியும் நானும் அப்படியேதான் கருதிக்கொண்டு இருக்கிறேன். நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற தொண்டிற்கு ஏற்பக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அது எங்கள் கடமையாகப் போய்விட்டதே" என்றார் பெரியார்!

பிற்படுத்தப்பட்டோர் நலம்பற்றி ஆராயத் திரு. ஏ.என். சட்டநாதன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் என்.வி. நடராசன், 17-ந் தேதி தெரிவித்தார். இழிவு ஒழிப்புக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர், பெரியாரின் கட்டளையை ஏற்றுப் பெயர் கொடுத்தோர், பட்டியல் 17-ந் தேதி முதல் “விடுதலை"யில் பத்தி பத்தியாய் வெளிவரத் தொடங்கிவிட்டது. ஊக்கம் பெற்ற பெரியார் 18, 19 நாட்களில் இரு தலையங்கக் கட்டுரைகள் தீட்டினார். மூலஸ்தானப் பிரவேசம் என்பது தலைப்பு:- மூலஸ்தானத்தில் எல்லா மக்களும் பிரவேசிக்கக்கூடாது என்பது கோயில் சம்பந்தமாக, அல்லது ஒது பொது இடம் சம்பந்தமாக, அரசாங்கத்தார் செய்து கொண்ட ஒரு ஏற்பாடுதானே ஒழிய, அது எந்தவிதத்திலும் ஒரு மதசம்பந்தமான தத்துவமாகாது. கோயிலுக்குள்ளாகவோ, மூலஸ்தானத்திற்குள்ளாகவோ இன்ன மதத்தார்தான், இன்ன சாதியார்தான் செல்லலாம்; இவரிவர் செல்லக்கூடாது என்பதற்கு எந்தச் சட்டமும், மத ஆதாரமும், சரித்திர நியமமும் இல்லை. இன்ன மொழியில்தான் பூசைக்குச் சொற்கள் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. கோயில் நிர்வாகத்துக்கு, டிரஸ்டி பதவிக்கு இன்ன சாதியாகத்தானிருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நிர்ப்பந்தமுமில்லை. மதவிரோதமும், சாஸ்திரவிரோதமும், சட்டவிரோதமும் இல்லை.

நான் நாஸ்திகக் கொள்கை உடையவனாக இருந்து கொண்டே, சுமார் 20 ஆண்டுகாலம் ஈரோடு, கோபி, பவானி, திருப்பூர் தாலுக்காக்களின் தேவஸ்தானக்கமிட்டித் தலைவராக இருந்திருக்கிறேன். இவன் நாஸ்திகன் என்று கலெக்டரிடம் புகார் செய்தபோது கூட, அவர் சிரித்துக்கொண்டே இந்துதானே? என்று கேட்டிருக்கிறார். இன்றும் விஷ்ணு கோயில்கள் பலவற்றில் நாம் வெளியிலிருந்து கையை நீட்டினால், எட்டக்கூடிய தூரத்தில் சிலை இருக்கக் காணலாம். பூசாரிக்குக்கூட, நெற்றியில் நாமமோ, விபூதியோ இருக்க வேண்டுமே யொழிய, அவன் ஸ்நானம் செய்து, சுத்தமாக உடுத்திவரவேண்டும் என்ற திட்டங்கூட இல்லை. நெற்றிக்குறி என்பதும், அதிகாரத்தாலும் செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய, அதற்குச் சட்டமோ சாஸ்திரமோ நிர்பந்தமோ கிடையாது. ஆக, மூலஸ்தானப் பிரவேசத்திற்கும், கர்ப்பக்கிரகப் பிரவேசத்திற்கும் சட்டம், சாஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதற்கும் எந்தத் திட்டமும் - இந்து மதம் என்பதற்கே கிடையாது!

எங்கள் தோட்டத்தில் மட்டுமே பூக்கக்கூடிய சண்பகப்பூ மனோரஞ்சிதப் பூவை மாலைகட்டி, சாமிக்கு அனுப்புவேன்; அது இரவில் தாசிகளின் தலையில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படி வந்தது? அர்ச்சகர் 'மாமா' வேலை பார்ப்பவராயிருப்பார்!

எனவே, ஆட்சியாளர் இதைப் பகுத்தறிவோடு கவனிக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறேன்.

அடுத்த நாள் இழிவு நீக்கக் கிளர்ச்சி என்ற தலைப்பு:- சூத்திரர் என்கிற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியல் காரியமே தவிர இதில் அரசியல் (பொலிடிகல்) ஏதுமில்லை , பலாத்காரமும் இதில் ஏதுமில்லை .

நம்நாட்டில் 100க்கு 97 பேராயுள்ள படித்தவர்கள், செல்வவான்கள், நீதிபதிகள், கலெக்டர்கள், துணைவேந்தர்கள், மடாதிபதிகள், மகாராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள் ஆகிய யாராயிருந்தாலும் சமுதாயத்தில் கீழ்பிறவியாக, கீழ்மக்களாக, அவர்களுடைய கடவுள் என்கிற சிலையிடம் கூட நெருங்கக்கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தரமான இழிவுக்கு உள்ளாக்கப் பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகக், கிளர்ச்சி செய்வதென்றால் - இதுவரை செய்யாமல் இருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறும் ஆகுமே ஒழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும், ஒருவிதத்திலும், தவறாகவோ கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது!

நீக்ரோக்களுக்கும் வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவி பேதம் நிறபேதம் நாகரிகபேதம் - நமக்கும் பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள - மைனாரிட்டியான நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் ஜாதியான, பிரபுக்களான, வெள்ளையரோடு எல்லாத் துறைகளிலும் சரிசமமாய்க் கலந்து, உண்பன, உறங்குவன, பெண்கொடுக்கல், வாங்கல்; உட்படக் கலந்து புழங்குகிறார்கள். ஆனால் நம் நாட்டில் 100க்கு 3 பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும், உழைக்காததையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாய்ப் - பிழைப்பாய்க் கொண்ட கூட்டம், மற்றும் வாழ்வில் யோக்கியமாக நேர்மையாக நாணயமாக இருக்க வேண்டும் என்கின்ற தர்மம் இல்லாததும், தாங்கள் எது வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அனுபவத்தில் இருக்கின்ற கூட்டம், தங்களை மேல் பிறவி என்றும், நாம் கீழ்ப்பிறவி என்றும் பொது இடமாகிய கடவுள் என்னும் கல்சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக்கூடாத, மிகமிக இழிதன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நம்பேரில் ஏற்றிவைத்து. அறைக்கு வெளியில் நின்று வணங்கவேண்டும் என்பதை நிலைக்க விடலாமா? என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.

மேலும், குருக்கள் என்பவர்கள் பார்ப்பனரல்லாத சைவர்கள் என்பதற்கான ஆதாரங்களுமிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சாதியார் தான் பூசாரியாக இருக்க வேண்டுவென்கிற நிபந்தனை எந்த ஆதாரத்திலுமில்லை; குருக்கள் அர்ச்சகர்கள் வீட்டில் மற்றப் பார்ப்பனர்கள் சாப்பிடவோ, பெண் கொடுக்க, எடுக்கவோ மாட்டார்களாம். அந்த நிலையிலிருப்பவர்கள் பூசை செய்யும் இடத்திற்கு, மற்ற இந்துக்கள், பார்ப்பனரல்லாதவர் மட்டும் - நுழையக் கூடாது என்றால் அது எப்படி, நியாயமாகும்?

நாம் மூலஸ்தானத்திற்குள் செல்லலாம்; ஆனால் சிலையைத் தொடக் கூடாது என்று வேண்டுமானாலும் திட்டம் வைத்துக் கொள்ளட்டும். ஆனால் நெருங்கக் கூடாது; அறையின் படியைத் தாண்டக் கூடாது என்பது என்ன நியாயம்?

எனவே, இந்தக் கர்ப்பக்கிரகம் என்கிற பூச்சாண்டிகள், பார்ப்பனரல்லாத மக்களை இழிமக்கள் என்றாக்கப்படுவதற்காகத்தான் இருந்து வருகின்றன. வேறு எந்தப் புனிதத் தன்மையும் பாதுகாக்க அல்ல. நாம் உள்ளே சென்று வணங்குவதால், எந்தப் புனிதத் தன்மையும் கெட்டுவிடாது; இருந்தாலும் கெடுக்க வேண்டுமென்கிற எண்ணம் நமக்கு இல்லவேயில்லை.

நமது இழிவு நீக்கப்படவேண்டும் என்கிற ஒரே காரியத்திற்காகத்தான் இதைச் சொல்லுகிறோம். உடனே பெயர் கொடுங்கள்!"

கரூர்வட்ட திராவிடர் கழக மாநாடும், சமூக சீர்திருத்த மாநாடும் 26-10-69-ல் நடைபெற்றன. வீரமணி தலைமை ஏற்க, செல்வி தன்மானம் பி.எஸ்.சி. கொடி உயர்த்த, செல்வேந்திரன் திறந்துவைக்க, அமைச்சர் ப.உ. சண்முகம், பெரியார் ஆகியோர் சிறப்புரையாற்ற, மாநாடுகள் முடிவுற்றன. 27-ந் தேதி "விடுதலை"யில் பாராட்டத்தக்க நியமனப்பகுதியில் வந்த செய்தி ஒன்று:- தமிழக அரசின் பிரச்சார அதிகாரியாக கவிஞர் திரு. கருணானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் ஆற்றல் உள்ளவர். "குடி அரசு" போன்ற ஏட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே, துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.

இழிவு நீக்கக் கிளர்ச்சிக்காகப் பெயர் கொடுத்த தொண்டர்களின் எண்ணிக்கை 24-10-69 அன்று 202 பேர். கர்ப்பக்கிரக நுழைக் கிளர்ச்சி, நவம்பரில், மனனார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் துவங்கும்; அலுவல்களைக் கவனிக்கக் குழுஒன்று நியமனம்; என்ற போர்ப் பிரகடனமும் அன்றே வெளியாயிற்று. 29-ந் தேதி திருச்சி சவுந்தரராஜன் நாடக மன்றத்தார் நடத்திய குமரிக்கோட்டம் நாடகத்திற்குப் பெரியார் தலைமை தாங்கினார்.

சென்னை "விடுதலை" அலுவலகத்தில், ‘விக்டோரியா 820’ என்ற புதிய அச்சு இயந்திரம் இறக்குமதி செய்யப்பட்டு, 4-11-69 அன்று. அதனை இயக்கி வைக்க, ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; ஆசிரியர் வீரமணி, மேலாளர் சம்பந்தம், மற்றும் தோழர்களால். அமைச்சர் என்.வி. நடராசன் தலைமையில், முதல்வர் கலைஞர் இயந்திரத்தை ஓட்டினார். அமைச்சர் மாதவனும் கலந்து கொண்டார். பெரியார், அண்ணா படத்தைத் திறந்துவைத்தார். முன்னதாக அருமையான தேநீர் விருந்தொன்று நடைபெற்றது. விழா முடிந்து, அழைப்பாளரெல்லாரும் விடைபெற்றபோது, பெரியார் ஆச்சரியம் தாங்காமல், மணியம்மையாரை அழைத்து, 'தேநீர் விருந்து இவ்வளவு காஸ்ட்லி (Costly)யாக எப்படிச் செய்தார் வீரமணி?" என்று நயமாக விசாரித்தார். அம்மையார் சிரித்தார்கள், 'நேற்று இங்கு நமது வழக்கறிஞர் கஜபதியின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடினார். அதில் மீதமான இனிப்பு, காரம் வகையராதான் இது' என்றார் அம்மையார். குருவுக்கேற்ற சீடர்கள் எப்படி?

9-ந் தேதி திருச்சியில், சந்தேகந் தீர்க்கும் முறையில், பெரியார் விளக்கமுரைத்தார். நாம் தி.மு.க. அரசை ஆதரித்தாலுங்கூட, திட்டப்படி, கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி நடந்தே தீரும். மனிதன் சந்திரனுக்குச் சென்று வரும் விஞ்ஞான யுகத்தில்கூடச் சூத்திரன் என்ற இழிவை நாம் ஒழித்தாக வேண்டாமா? என்று கேட்டார் பெரியார்.

இந்திரா காந்தியைக் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் 12-ந் தேதி நீக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன. இந்திரா அரசு முற்போக்காகச் செயல்படும் வரையில் அதற்குத் தி.மு.க. ஆதரவு உண்டு என்பதாக முதல்வர் கலைஞர் கூறியது. இராஜாஜிக்குப் பதிலென்றாலும், தன்னிலை விளக்கமாகவும் அமைந்தது. கடவுள் அருகில் எல்லாரும் போகலாம். எல்லாரும் தொடலாம் என்பதுதான் என்னுடைய கருத்தும் ஆகும். ஆனாலும், பெரியாரின் கிளர்ச்சியைக் கைவிடுமாறு நான் கேட்டுக் கொள்வேன், என்பதாகவும் முதல்வர் கூறினார்.

கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சியில் ஈடுபடுவோர்மீது வழக்குகள் தொடரப்பட்டால், தோழர்களுக்காக வாதாடத் தயார் என்று கூறிய வழக்கறிஞர்களின் பட்டியல் “விடுதலை"யில் தினமும் பிரசுரமானது. 16-11-69 திருச்சியில், தி.சு. மத்திய நிர்வாகக் கமிட்டியில், இழிவு நீக்கக் கிளர்ச்சிக்கான குழு ஒன்று அமைக்கப்பட்டது. பெரியார் தலைவர், வீரமணி செயலாளர், புலவர் கோ. கமயவரம்பன் பொருளாளர், டி.டி. வீரப்பா , அ. ஆறுமுகம், து.மா, பெரியசாமி உறுப்பினர்கள். 1970 ஜனவரி 26-ந் தேதி இழிவு நீக்கக் கவர்ச்சி துவக்கப்படும் நாள்; களமாக மன்னார்குடி தவிர, மற்ற ஊர்களையும் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்; அதுவரையில் இடையிலுள்ள நாட்களில் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்; தேவைப்பட்டால் எதிர் வழக்காடலாம்; கிளர்ச்சியைக் கைவிடுமாறு தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய கடிதத்தை ஏற்க முடியாமைக்கு வருத்தந் தெரிவித்தல் - ஆகிய முக்கியமான தீர்மானங்கள் இயற்றப்பட்டன. பாராட்டத்தக்க நியமனங்கள் பகுதியில், 13-11-69 “விடுதலை”யில் இடம் பெற்றவை:- இ.பி. ராயப்பா முதல் அய்.ஏ.எஸ். அதிகாரியாகத் தலைமைச் செயலாளரானார்; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி பாலசுந்தரம் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவரானார்; எஞ்சினிர் கே.ஆர். ராதாகிருஷ்ணன் மின்வாரியத் தலைவரானார்.

“காங்கிரஸ் பிளவுக்குக் காரணம் இந்திராகாந்தி செய்த தவறுதான். அதிகார பலத்தை வைத்துக்கொண்டு ஸ்தாபனத்தைப் பாழ்படுத்தி விட்டார். பதவியில்லாவிட்டால் தம்மால் வாழமுடியாது என்று கருதுகின்றவர்களுக்கு இனிக் காங்கிரஸ் கட்சி பயன்படாது. இந்திரா காந்தியை ஆதரிப்பதாகச் சொல்கின்ற தி.மு.க. நிலை சரிதான். தங்கள் ஆட்சிக்குக் கேடில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்” என்று பெரியார் ஒரு தலையங்கத்தில் குறிப்பிட்டார். 28-ந் தேதி ”விடுதலை“யில் தலையங்கம் மூலமாகவும், ஒரு பெட்டிச் செய்தி மூலமாகவும் பெரியாரின் வேண்டுகோள் ஒன்று பிரசுரமாகியிருந்தது. “ஜனவரி மாதத்திலிருந்து ‘உண்மை’ என்னும் மாத சஞ்சிகை, 25 காசு விலையில், புவலர் கோ. இமயவரம்பனை ஆசிரியராகக் கொண்டு, திருச்சியிலிருந்து வெளிவரும், நிறையச் சந்தா எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஆங்கிலத்திலும் அதேபோல ஒரு இதழ் ஆரம்பிக்கும் ஆசையும் இருக்கிறது” என்பதுதான் விஷயம்.

5-12-69 அன்று அமைச்சர் ஓ.பி. இராமன் திருமணம். அதன் பொருட்டுத் திருச்சி வந்த முதல்வர் கலைஞர், தம் குடும்பத்தாருடன் பெரியாரைக் காலை 9 மணிக்குச் சந்திந்தார். அப்போது ஈரோடு மருத்துவமனை விரிவுக்காக என்று, பெரியார், முதல்வரிடம் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். 5-ந் தேதி பெரியார் அண்ணாமலை நகரில் பொதுக் கூட்டத்தில் பேசினார். 13-ந் தேதி மதுரை நகர மன்றத்தின் சார்பில், தலைவர் எஸ். முத்து பெரியாருக்கு வரவேற்பளித்தார். அன்றைய தினம் துவங்கப்பட்ட அண்ணா பேரவையில் பேசிய கா. காளிமுத்து, விடுதலை பெற்ற தமிழகத்தின் முதல் ஜனாதிபதியாகப் பெரியார் வரவேண்டுமெனத் தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஈரோடு செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏதோ காரணமாய் வேலை நிறுத்தம் செய்தபோது, பெற்றோர்களில் 200 பேர் ஒன்று திரண்டு, கம்பு, பிரம்பு சகிதமாய், மாணவர்களை விரட்டிச் சென்று, பள்ளியில் விட்டதைப் பாராட்டி, ஈரோடு பெற்றோர்களின் சீரிய நடவடிக்கை" என்று "விடுதலை" தலையங்கம் பாராட்டிற்று. 12-ந் தேதி.

டிசம்பர் 16, 17 தேதிகளில் கடவுளைப் பற்றிப் பெரியார் எழுதிய இரு தலையங்கக் கட்டுரைகள் சிந்தனைக்கு விருந்தாகும்:- "பெரு மழையால், பூகம்பத்தால், இடி விழுவதால், பெரும்புயல் காற்றுகளால் பயிர்கள், கால்நடைகள், வீடுகள் சேதமாகின்றன. பல நாசங்கள் ஏற்படுகின்றன. இதில் சிந்திக்கும்படியான விஷயம் என்னவென்றால், மேற்கண்ட கேடுகளில், சேதங்களில், நாசங்களில், ஜீவ அழிவுகளில் எந்த ஒரு சிறு அளவுக்கும் ஆறறிவு படைத்த மனித வர்க்கத்தால், எந்தவிதமான பாதுகாப்பும் செய்து கொள்ள முடியாத நிலையில், அனுபவித்தே தீரவேண்டியதாகவும், பல நேரங்களில் அவை நிகழும் வரை தெரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கும் விசித்திரம்தான்.

இந்த நிலைக்குக் காரணம் என்ன? 'கடவுள் சித்தம்' என்பது நானே? அது உண்மையாயிருக்குமானால், இதிலிருந்து கடவுளை எவ்வளவு அயோக்கியன் என்று கருத வேண்டியிருக்கிறது? இந்நிலையில் கடவுள் இருப்பானேயானால், அவன் உலகத்தைப் படைத்ததே முட்டாள் தனம் அல்லது அயோக்கியத் தனம் என்றுதானே சொல்ல வேண்டியிருக்கிறது? ஏனெனில் இந்த மாபெரும் உலகத்தைப் படைத்து, அதில் ஏராளமான ஜீவன்களைப் படைத்து, அவை திருப்தியாய் வாழ்வதற்கில்லாமல், பசி பட்டினி நோய் துன்பம் தொல்லை வேதனைகள் உண்டாக்கி, நாசமடையச் செய்வது என்றால், இதில், அறிவுடைமையோ கருணையுடைமையோ நேர்மையுடைமையோ ஒழுக்கமுடைமையோ என்ன இருக்கிறது?

இந்த நிலையிலுள்ள ஒரு கடவுளுக்காக என்று, பகுத்தறிவு உள்ள மனிதனால், எவ்வளவு பொருள் நேரம் ஊக்கம் முயற்சிகள் செலவழிக்கப்படுகின்றன? கடவுள் பெயரைச் சொல்லி எத்தனை மக்கள் முட்டாள்களாக்கப்பட்டு, ஏய்க்கப்படுகின்றனர்!

எல்லா மக்களும் குறைவற்ற செல்வத்துடனும், நிறைவுற்ற ஆயுளுடனும் வாழ்வதற்குப், பகுத்தறிவுப் பள்ளிகள் மாத்திரம் வைத்து, நிர்வாணமான' சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்தால், நாட்டில் இன்று வீணாகும் செல்வம் நேரம் ஊக்கம் எல்லாம் மீதமாகும்."

"மதத்திற்கும், சாத்திரங்களுக்கும் கடவுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும்; கடவுள் வேறு, மதம் சாஸ்திரம் வேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடவுள் அறியாமையில் இருந்து தோன்றியதாகும். மதமும் சாத்திரங்களும் அயோக்கியத்தனத்திலிருந்து, அதாவது மக்களைப் பயப்படுத்தி அடிமைகளாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் உண்டாக்கப்பட்டவைகளாகும். கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஆனால் மதம் சாத்திரங்களைக் கற்பித்தவனை மன்னிக்கவே கூடாது என்றார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். கடவுளைக் கற்பித்தவன், உலக உற்பத்திக்கும் நடப்புக்கும் ஒரு கடவுள் அல்லது கர்த்தா இருக்க வேண்டுமே என்று சந்தேகத்தின் பலனை (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான். ஆனால் மதமும் சாஸ்திரமும் முழுப்பொய்யாகவே கற்பனை செய்து, மக்களை ஏய்ப்பதற்கென்றே, பயப்படுத்துவதற்கென்றே பாகுபடுத்தி அமைத்திருக்கின்றான். அதனால்தான் அவற்றில் மாறுபாடும், முரண்பாடும் இவ்வளவு அதிகமாக உள்ளன.

இந்து மதத்தைப் பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள். பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதனால் அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால், பிராமண மதமென்றும், கிறிஸ்வர் முகமதியர் அல்லாதார் மதம் என்றும் குறிப்பிடப பட்டிருக்கிறது.

ஆகவேதான் கடவுள் நம்பிக்கை. மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டுமென்று கூறுகிறோம்."

கடவுள் நம்பிக்கைக்காரர்களைப் பற்றிப் பெரியார் என்ன கருதுகிறாராம்:- "ஒரு தேவதாசியை விபசாரி என்று சொன்னால், ஒரு வக்கீலை அவர் காசுக்காகப் பேசுகிறவர் என்று சொன்னால், ஒரு வியாபாரியை அவர் பொய் பேசுகிறவர் என்று சொன்னால், எப்படிக் கோபித்துக் கொள்வார்களோ - அதேபோல் கடவுள் நம்பிக்கைக் காரர்களை முட்டாள் அயோக்கியன் காட்டுமிராண்டி என்று சொன்னால் - கோபித்துக் கொள்கிறார்கள்.

சர்வவல்லமையுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என்பதை நான் என் மனம் மொழி மெய்களால் நம்புகிறேன், அதற்கேற்பவே நடந்து கொள்கிறேன் என்று யாராவது ஒருவர் முன்வந்து சொல்லித் தனது -நடத்தையைக் கொண்டு நிரூபித்துக் காண்பிக்கட்டும்; நான் பதினாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன். யோக்கியமானவர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும் என்று சவால் விடுகிறேன்.

சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் யோக்கியர்களாகிக் தீரவேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள்களாகித் தீரவேண்டும். ஆனால் கடவுள் விஷயத்தில் மக்கள் இந்த மூன்றும் ஆகித் தீரவேண்டும்.

கடவுளைப் பற்றிய பிரச்சாரத்தினாலேயே பலர் பிழைத்து வருகிறார்கள். அவர்கள் பல கொலை பாதகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்துள்ள அயோக்கியத்தனங்கள் கொஞ்சமார தொண்டரடிப் பொடி ஆழ்வார் என்ற வைணவப் பார்ப்பான், சம்பந்தன் என்ற சைவப் பார்ப்பான், சமண பவுத்தர்களைக் கொலை செய்யவில்லையா?"

குன்றக்குடி ஆதீனத்தைச் சார்ந்த கோயில்களில், டிசம்பர் 24 முதல், கர்ப்பக் கிரகத்துக்குள் அனைவரும் செல்லலாம் என்று ஆதீன கர்த்தரான அடிகளார் அறிவித்தது, பெரியாரின் பெரிய வெற்றி என்று கருதப்பட்டது. 27-ந் தேதி வெளியான செய்தியின்படி, டால்மியாபுரம் ரயில்வே ஸ்டேஷன் பெயரைக் கல்லக்குடி - பழங்காநத்தம் என்று மாற்ற மத்திய அரசு ஒப்புக் கொண்டதாம். “இந்தப் பிரம்மாண்ட வெற்றிக்குப் பாராட்டுதல்” என்று பெரியார், கலைஞருக்குத் தந்தி அனுப்பினார்.

30-ந் தேதி பெரியாருக்கு வேலூரில் புதிய டியூப் பொருத்தினார்கள். 31-12-69 வரை கோயில் கர்ப்பக் கிரக நுழைவுக் கிளர்ச்சிக்குப் பெயர் கொடுத்த தொண்டர்களின் எண்ணிக்கை 1,710. அன்றைய "விடுதலை"யில் பெரியார் புத்தாண்டுச் செய்தி வழங்கினார்:- "தமிழனுக்கு இன்றுள்ள கடமை (1) பார்ப்பனப் பத்திரிகைகள் வாசிப்பதைத் தடுத்தல் (2) கோயில்களுக்குப் போவதைத் தடுத்தல் (3) அப்படியே போனாலும் வெறுங்கையோடு போய் வருதல், அப்படியே தேங்காய் எடுத்துப் போனாலும் தானே * உடைத்துத் திரும்பக் கொண்டு வருதல் (4) பூசாரி அல்லது அர்ச்சகனுக்குத் தட்சிணை கொடுக்காதிருத்தல் (5) நெற்றியில் மதக்குறிகள் தீட்டுவதைத் தடுத்தல் (6) பார்ப்பனரைப் பிராமணர் என்று சொல்லாமல் பார்ப்பனர் என்றே சொல்லுதல் - இவை 1970-ஆம் ஆண்டில் கண்டிப்பாய் எல்லா மக்களாலும் கைக்கொள்ளத் தக்கவையாகும்!"

1970 புத்தாண்டு நாளில் எஸ். குருசாமியின் மகள் டாக்டர் கே.ஜி. ரஷ்யா, நாயுடு வகுப்பைச் சார்ந்த சித்தரஞ்சனைத் திருமணம் புரிந்தார். என்.டி. சுந்தர வடிவேலு - காந்தம்மாள் இருந்து நடத்தி வைத்தனர்.

5-1-70 அன்று, திருச்சி வானொலி சார்பில் மாறன் என்பார் பெரியாரைப் பேட்டி கண்டு, அந்தப் பெரிய, முழு அளவு உரையாடலும், ஒலிபரப்பானது. இது பின்னர், 1-3-70 “விடுதலை"யில் பிரசுரமாயிற்று. 9-1-70 "இந்து" பத்திரிகை இந்தப் பேட்டி குறித்துப் பாராட்டியிருந்தது. பெரியாரிடம் சரளமாகக் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகட்கும், ஒளிவு மறைவின்றிப் பதில் சொன்னார். அந்தக் காலத்தில் பெரியார் வீட்டில் தர்மத்துக்காக வைத்த தண்ணீர்ப் பந்தலிலேயே தீண்டாதவர்க்கு மூங்கில் குழாயும், மற்ற வகுப்பாருக்குத் தம்ளரும் வைத்தார்களாம். மதத்துக்கு விரோதமாகப் பேசாமல், சாதியை மட்டும் ஒழிக்கப் பிரச்சாரம் செய்யலாமே என்ற கேள்விக்கு, “அதைப் பிரிக்க முடியாதுங்களே அய்யா! மதம் வேற சாதி வேறேன்னு பிரிக்கவே முடியாதே!" என்றார் பெரியார். ஒழுக்கம் குறைந்து வருவதால், ஒன்று அரச தண்டனைக்கு மக்கள் பயப்பட வேண்டும். அல்லது ஆண்டவன் தண்டிப்பாரே என்றாவது பயம் இருக்க வேண்டாமா என்ற வினாவுக்குப் பெரியார் - இனிமேல் எந்தக் காரணம் சொல்லியும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு எல்லை வரை போய்த்தான் திரும்புவார்கள். அது வரையில் ஒழுக்கம் என்று பேசுவதால் ஒரு பயனுமில்லை என்றார். தம் கருத்தே, ஜனநாயகம் வந்த பிற்பாடுதான் அதிகமாக ஒழுக்கம் கெட்டுப் போனது, என்றார் பெரியார். சிக்கனத்தைப் பற்றிக் கேட்டபோது, காசை இழுத்துப் பிடித்தோம். புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது. சிக்கனம் நமக்கு ஒரு ஹேபிட் (habit) அவ்வளவுதான் பணத்தை என்ன செய்வது என்று இப்போதுதான் யோசித்துக்கொண்டு வருகிறோம் என்றார். "பொது நலத்துக்காக ஒருவன் வரவேணும்னா அவன் கிட்டே ரெண்டு குணம் இருக்கணும். அதிலேயே சாப்பிடறோம்கிற நிலைமை இருக்கக்கூடாது. பொது நலத்தினாலே அவன் சுயநலத்துக்காக ஒரு பலன்கூட எதிர்பார்க்கக்கூடாது. அவன் வாழ்க்கைக்கு வேறே ஏற்பாடுகள் பண்ணிக்கணும்" என்றார் பெரியார்.

பெரியாரின் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை இந்தியிலும் இங்லீஷிலும் பெயர்த்தெழுதி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் புத்தகங்களாக வெளியிட்டிருந்தார்கள். அதற்கு அங்கு நல்ல வரவேற்பு! காங்கிரஸ் ஆளும் அந்த மாதிலத்தின் அரசு, இந்தி, ஆங்கில நூல்களைத் தடைசெய்துவிட்டது! மதவாதிகளின் மனத்தை அது புண்படுத்துகிறதாம். 3-ந் தேதி இச்செய்தி கிடைத்தது. சென்னையில் முன்னாள் துணைமேயராம் டி.ஜி. லெட்சுமணசாமி என்பவர் அரசுத் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதிப், பெரியார் சிலைக்கு அடியில் பொறிக்கப்பட்டுள்ள கடவுள் மறுப்பு வாசகங்களை அகற்றக் கோரியிருந்தாராம். ஒருவருக்குச் சிலை எழுப்புகையில், அடியில் அவரது சிந்தனைகளைப் பொறிப்பது வழக்கந்தான் என்று பதில்' தரப்பட்டது அவருக்கு!

"கண்ட்ரோல், ஜனங்களுக்கும் அரசாங்கத்துக்கும் நியூசென்சாக இருந்தது. அதை எடுத்தது இருவருக்கும் அனுகூலமாகும். கண்ட்ரோல் துறையிலுள்ள அதிகாரிகளில் 75 சதவீதம் நேர்மையில்லாதவர்கள்தான். இனி அந்த இலாகா நேர்மையாகிவிடும். 200 ரூபாய் அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, ரூபாய்க்குப் படி அரிசி என்பதை 100 ரூபாய் உயர்ந்த வருமானம் என்று வைக்கலாம். உணவுக் கட்டுப்பாட்டை நீக்கியதற்காக முதலமைச்சர் அவர்களையும், உணவு அமைச்சர் அவர்களையும் பாராட்டுகிறேன் - ஈ.வெ. ராமசாமி."

"உண்மை மாத இதழ் ஆண்டுச் சந்தா 3 ரூபாய். கடவுள் புரட்டு, மதப் புரட்டு, சமுதாய இயல் புரட்டு, தேசியப் புரட்டு, புராண இதிகாசப் புரட்டு, சாஸ்திரப் புரட்டு இவைகளை விளக்கிடும் பகுத்தறிவு இதழ். எல்லாரும் சந்தாதாரராகுங்கள் ஈ.வெ. ராமசாமி."

முறையே ஜனவரி 9, 10 தேதிகளில் “விடுதலை"யில் வெளியான பெட்டிச் செய்திகள் இவை. 14-1-70 பொங்கல் திருநாள் அன்று மாலை 5 மணிக்குத் திருச்சியில் “உண்மை ” இதழ் வெளியீட்டு விழா நடந்தது. பெரியார் வரவேற்புரை நிகழ்த்தினார். சே.மு.அ. பாலசுப்ரமணியம் தலைமையில், வீரமணி வெளியிட்டார். இப்போதே 5,000 பேர் சந்தா செலுத்தியுள்ளனர், நானே உட்கார்ந்து எழுதப் போகிறேன் என்றார் பெரியார். விழாவில் செல்வேந்திரன், அன்பில் தர்மலிங்கம், ஜி. பராங்குசம், டி.டி. வீரப்பா, வே. ஆனைமுத்து, கே. கோவிந்தராஜ், து.ம. பெரியசாமி ஆகியோர் உரையாற்றினர். புலவர் கோ. இமயவரம்பன் நன்றி கூறினார்.

"உண்மை" முதலிதழில் பெரியாரின் தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:- “மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை ஒழித்து, மக்களை அறிவாளிகளாக்கும் பணியில் நான் பலமுறை சிறை சென்றிருக்கிறேன். வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன். அரசாங்கத்தால் வெறுக்கப்பட்டிருக்கிறேன். கடந்த காலத்துக்கு என்று 15 லட்சம் ரூபாயும், இந்த ஆண்டுக்கு என்று 1 லட்சம் ரூபாயும் இன்கம்டாக்ஸ் போடப்பட்டு, என் முயற்சியைத் தடுக்க நினைக்கிறார்கள். இது தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும், மேல் சாதியாராகத் தங்களைக் கருதிக்கொள்ளும் சைவர்களாலும், 100க்கு 90 கிறிஸ்தவர்களாலும் நான் வெறுக்கப்படுகிறேன். இஸ்லாமியர்களால் வெளிப்படையாய் வெறுக்கப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஓர் அதிசயம், ஆதித்திராவிட மக்களுள், பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர்கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது.

இதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடையத்தக்கதும் உண்டு. என் கட்சியில் கட்டுப்பாடும் கடமைப்பாடும் அதிகம். பிடிக்காவிட்டால் வெளியில் போய்விடுவார்கள். “குடி அரசு" துவக்க காலம், மோசமாக இருந்தது. இப்போதும் “உண்மை "யின் தொண்டும் எதிர் நீச்சல் தொண்டுதான். "குடி அரசு" இதழை ஒழிக்கக் கிறிஸ்தவர்கள் அமெரிக்காவிலிருந்தும் பணம் வரவழைத்தார்கள். பார்ப்பனர்கள் எதிர்ப்புப் பத்திரிகை ஆரம்பித்தும், காலிகளை ஏவியும் எதிர்ப்புக் காட்டினார்கள், "குடி அரசு" வாரப் பத்திரிகை, "விடுதலை” தினப் பத்திரிகையாக வளர்ந்தது; ஒழிந்துவிடவில்லை! "உண்மை சமுதாய இழிவு, மடமை ஒழிக்கும் தொண்டுக்காக என்றே பிறந்திருக்கிறது.

“உண்மை " நாத்திகப் பத்திரிகைதான். சாக்ரடீஸ் நாத்திகர், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், பெர்னார்ட்ஷா நாத்திகர்கள்தான், இயேசு நாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டுக் கொலையுண்டார். முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அடித்து விரட்டப்பட்டார். பவுத்தர்களும், சமணர்களும் நாத்திகர்கள் என்றே சொல்லப்பட்டுக் கழுவேற்றப்பட்டனர்; கொல்லப்பட்டனர்! உலகத்தில் பல நாத்திகச் சங்கங்களில் உறுப்பினர்களாக அமெரிக்காவில் 3 கோடி, இங்கிலாந்தில் ½ கோடி, ஜெர்மனியில் 1 கோடி, சீனாவில் 60 கோடி, ரஷ்யாவில் 40 கோடி, ஸ்பெயினில் ¾ கோடி, பிரான்சில் ¾ கோடி, பர்மாவில் ½ கோடி, சயாமில் 1 கோடிப் பேர் இருக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்று நாத்திக அரசாங்கம். கேரளாவில் நாத்திக அரசாங்கம். இவற்றால் உலகம் என்ன முழுகியா போய்விட்டது? நாத்திகம் கூடாததல்ல; இல்லாததல்ல; வேண்டாத தல்ல! நமது கடவுள்களில் ஒருவனான சந்திரன் இன்று அமெரிக்கர்களால் உதைபடுகிறான்! ஆகையால் “உண்மை”யை வரவழைத்துப் படியுங்கள். விரைவில் வாரப் பத்திரிகையாக ஆக்குங்கள்!"

15 -ந் தேதி வரை கிளர்ச்சியாளர் பட்டியலில் 1,820 பேர் தங்களைப் பதிவு செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இந்நிலையில் 17-1-70 அன்று “விடுதலை” முதல்பக்கம் ஏழுகாலக் கொட்டை எழுத்துச் செய்தியாக -“முதல்வர் அறிக்கை; தகுதியினால் அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டுவர அரசு முன் வருகிறது. பெரியாரவர்கள் கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்” என்று வந்தது. 18-ந் தேதி பெரியார் கும்பகோணத்தில் இருந்தார். அங்கே சமூக சீர்திருத்த மாநாட்டை முத்துப் தனபால் தலைமையில் ஏ.ஆர். ராமசாமி திறந்து வைத்தார். வீரமணி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. அமைச்சர் என்.வி. நடராசன் பேசினார். பெரியார் பேசும்போது, முதல்வரின் அறிக்கையை ஏற்று, அவசியமான அளவுக்குக் கிளர்ச்சியை ஒத்திப்போடலாம் என்றார். தம் இனத்திற்குக் கேடு செய்யும் பத்திரிகைகளைக் கொளுத்த ஒரு போராட்டம் நடத்தியே தீரவேண்டும் என்றார் பெரியார். 22-ந் தேதியன்று “விடுதலை"யின் முதல் பக்கச் செய்தி, பெரியார் திருச்சியிலிருந்து தொலைபேசியில் கூறியதாகும்:- “முதல்வரின் உறுதி மொழியை ஏற்றுப் பெரியார் அறிக்கை. கிளர்ச்சி ஒத்தி வைக்கப் படுகிறது. தத்துவத்தைப் புரிந்து கொண்ட அரசுக்கு நன்றி. விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்."

பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷன் 22 மாலை 4-30 மணிக்குப் பெரியாரைத் திருச்சியில் சந்தித்தது. பெரியார் தமது நீண்ட நாளைய எண்ணங்களைத் தெரிவித்தார். ஆதித்திராவிடர்களுக்கு. அக்கிரகாரத்தினுள் சொந்த வீடு கட்டித் தந்து குடியிருக்கச் செய்ய வேண்டும். சட்ட சபையில் 25 சதவீத இடத்தைத் தேர்தல் மூலம் நிரப்பாமல், போட்டியிட்டு வரமுடியாத ஜாதிகளிலிருந்து, அரசே நாமினேஷன் செய்ய வேண்டும். யாரும், எந்தப் பதவியிலும், இரண்டு term-க்கு மேல் இருக்கக் கூடாது.

24-ந் தேதி கடவுள் என்ற தலையங்கத்தில் பெரியார் - “மதமும் கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள். கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். உண்மையான தி.மு.க. காரர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்பது எனக்குத் தெரியும். இன்னும் இது மாதிரி 2 லட்சம் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டால், யாரும் ஆட்சியையோ, கழகத்தையோ அசைக்க முடியாது. நிலாக்கல் கொண்டு வரும் காலத்தில் கல்லுச்சாமியைக் கட்டிக்கொண்டு அழ வேண்டுமா?" என்று கேட்டார். இந்தி சகவருட முறையைத் தமிழக அரசு ஏற்கவில்லை என 31-ந் தேதியும், தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டது என 1-ந் தேதியும் அரசு தரப்பில் செய்திகள் வெளி வந்தன.

'நாத்திக உலகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு' எனப் பெரியாரால் வருந்தி மொழியப்பட்டவாறு, பிரிட்டிஷ் பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 3-2-1970 அன்று 96-வது வயதில் காலமானார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளான அன்றைய தினம், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், மத்திய அமைச்சர் பேராசிரியர் ஷேர்சிங், அண்ணா நினைவுத் தபால் தலை வெளியிட்டார்.

35 லட்சம் ரூபாய்க்கு ஸ்டாம்புகள் வெளியிடப்பட்டதாக அவர் கூறினார். 6-ந் தேதி வித்தியாசமான ஒரு தலையங்கம் பெரியார் எழுத நேர்ந்தது. ஆனந்த விகடனின் ஜாதி புத்தி' என்பது தலைப்பு, என்ன கோபம்? - “வாசன் இருந்தவரை ஆனந்தவிகடன் பத்திரிகை சமுதாய சம்பந்தமான விஷயங்களில் நடுநிலை வகித்து வந்தது. இப்போது அது அசல் பார்ப்பன சாதி புத்திக்கு வெற்றிலை பாக்கு வாங்கும் நிலைக்கு வந்து விட்டது. அனைத்துச் சாதியும் அர்ச்சகராக வேண்டும். அல்லது கோயில் கருவறைக்குள் எவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிளர்ச்சி நடத்த நாங்கள் முடிவெடுத்தோம். அரசாங்கம் உறுதி சொன்னதன் பேரில் கிளர்ச்சியை ஒத்திவைத்தோம். இனியும் அரசு தாமதப்படுத்தினால் நாங்கள் ஒத்திப் போட்ட காலத்தைச் சுருக்க நேரிடும்" என்பதுதான் கருத்து. “பஞ்சேந்திரியங்களுக்கும் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு ஆகிய எதுவானாலும் அது பொய் என்று சொல்வதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை" என விளக்கினார் பெரியார். "பழங்கால வைத்தியமுறை இப்போது எதற்காக? சித்த மருத்துவத்துக்குப் புத்துயிர் தரப்போகிறார்களாம். நவீன இரத்தப் பரிசோதளை போன்ற காரியங்களை இயந்திர மூலந்தானே செய்ய முடியும்! இதைப் பற்றிக் கவலையோடு சிந்திக்க வேண்டும்” என்றார் பெரியார்.

மத்திய சுகாதாரத்துறை 'ராஜாங்க அமைச்சர் டாக்டர் எஸ். சந்திரசேகருடன் பெரியார் பேட்டி, 14-ந் தேதி நடந்தது. இது அடுத்த மார்ச் 8-ந் தேதி சென்னை வானொலியில் ஒலிபரப்பாகியது, "விடுதலை" 9-ந் தேதி பிரசுரித்தது. இதனடிப்படையில் தானோ என்னவோ, பெரியார், அடுத்த முறையும் டாக்டர் சந்திரசேகரை ராஜ்யசபை உறுப்பினராக்க வேண்டுகோள் விடுத்தார். அது பின்னர் வெற்றி பெறவில்லை.

தோழர்கள் நிறையப் பேர் தம்மிடம் சிபாரிசுக்கு வந்து தொல்லை தருவதாகப் பெரியார் மிக எரிச்சலுற்றார். நாள்தோறும் தொந்தரவும், வீண் கெட்ட பெயரும் வருவதாக வருத்தத்துடன் எழுதியிருந்தார்.

10-2-70 அன்று, கலைஞர் ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவு நாள், அண்ணாவின் இடத்தில் தானிருப்பது, மின்விளக்குக்குப் பதில் மெழுகுவத்தி போலிருந்தாலும், இயன்றவரை ஒளிதருவதாகக் குறிப்பிட்டார். இடிப்பாரையில்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் என்ற குறளை நினைவூட்டிப், பெரியார் போன்றவர்கள், தான் தவறு செய்தால் எடுத்துக்காட்ட வேண்டினார். 19-ந் தேதி திருச்சியில் தி.மு.க. மாநாடு எழுச்சியுடன் நடந்தது. சி.பி. சிற்றரசு தலைமையில் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் துவக்கிவைத்தார். பஞ்சாப் முதல்வர் குர்ணாம்சிங், புதுவையில் தி.மு.க. முதல்வர் ஃபாரூக் ஆகியோர் பங்கேற்றனர். அண்ணா வழியில் அயராதுழைப்போம்; ஆதிக்கமற்ற சமுதாயம் அபைத்தே தீருவோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயஆட்சி என்ற அய்ந்து முழக்கங்களைக் கலைஞர் அங்கே தந்தார். தி.மு.க. வின் அரசியல் தீர்மானம் வரவேற்கப்படத்தக்கதே; மத்திய ஆளுங்கட்சிக்கு வரையறுத்த ஆதரவு தருவதாகக் கூறியது சரிதான் - என்று “விடுதலை” 21-ந் தேதித் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது. இந்தி கட்டாயமாக மத்திய அரசு ஊழியர்மீது திணிக்கப்படுவதை

எதிர்த்து, நாடாளுமன்ற உறுப்பினரான முரசொலி மாறனும், தபால்துறை ஊழியரான ஜி. லட்சுமணனும் ரிட்மனு தாக்கல் செய்தனர்.

16-2-70 மதுரையில் சுயமரியாதைக் குடும்பங்களின் விருந்து விழாவில் பெரியார் கலந்து கொண்டார். தமிழர் ஒரே இனம், நாம் ஒரே சாதி என்றார். டாக்டர் சந்திரசேகருக்களித்த பேட்டியில் பெரியார் பல நல்ல கருத்துகள் சொன்னார். இளமையில் பிரத்தியட்சமாகப் பல குழந்தை பெற்ற குடும்பத்தினர் பட்ட கஷ்டங்களைக் கண்டார். கடவுள் கொடுத்தது என்று நம்பியே துன்பங்களை மக்கள் அனுபவித்ததை உணர்ந்தார். அதனால் தான் 1920-ல் எழுதினார். கர்ப்ப ஆட்சி என்று. “மத்திய அரசு குடும்ப நலத்துறைப் பிரச்சாரத்துக்காகப் போடும் பணியாளர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருந்தால் நல்லது. பெண்களின் திருமண வயதை 20-ஆக உயர்த்தினால் இந்த பிராப்ளம் ஓரளவு சால்வ் , ஆகும். உத்தியோகங்களில் 50 சதவிதம் பெண்களுக்குத்தான் என்றாக்கினால், அவர்களுக்குத் தன்னம்பிக்கை உண்டாகும். அபார்ஷனை லீகலைஸ் செய்வது நல்லதுதான்.” என்றார் பெரியார்.

செட்டி நாட்டரசர் எம். ஏ. முத்தையாச் செட்டியாரின் மனைவியார் ராணிமெய்யம்மை ஆச்சி 1-3-70 காலை 9-30க்கு இறந்து போனார். பெரியாரும் மணியம்மையார், வீரமணியுடன் 2-ந் தேதி மாலை 5-30 மணிக்கு, அடையாறு அரண்மனை சென்று, துக்கம் விசாரித்து வந்தார். 9-ந் தேதி எஸ். இராமநாதன் ஸ்டான்லி மருத்துவமனையில் இயற்கை எய்தினார். 10-ந் தேதி “விடுதலை” அன்னார் மறைவுக்கு வருந்தி ஓர் துணைத் தலையங்கம் தீட்டியது. 14-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்றம், அந்த முன்னாள் அமைச்சரின் மறைவுக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்திற்று. 11-3-70 அன்று பெரியாரும் மணியம்மையாரும் சைதாப்பேட்டை சென்று, இராமநாதனுடைய துணைவியார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் துக்கம் விசாரித்து வந்தனர்.

12-3-70 சட்டமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்வர், கர்ப்பக்கிரகம் வரை கோயிலுக்குள் எல்லா இனத்தவரும் செல்லலாம் என்பதுதான் இந்த அரசின் கொள்கை. ஆயினும், தகுதி அடிப்படையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகி, அர்ச்சனை செய்யலாம் என்கிற அளவில் இப்போது சட்டத் திருத்தம் கொணரப்படும் என்றார். சேலம் உருக்காலை நிறுவ, மத்திய அரசு முடிவெடுத்து விட்டதாகவும், தமது முயற்சி வெற்றி பெற்று விட்டதாகவும் கலைஞர் கூறியிருந்தார். 14-ந் தேதி பண்ணுருட்டி நீதிமன்றத்தில், கிருபானந்தவாரியார் சாட்சியமளிக்கையில் நெய்வேளியில் தாம் யாரையும்
தூஷிக்கவில்லை என்றும், தாம் தாக்கப்பட்டதற்கும் தி.மு.க.விற்கும் சம்பந்தமில்லை என்றும் கூறினார்.

நம் நாட்டுப் பார்ப்பனர் வாழ வேண்டுமானால் - என்ற தலைப்பில் பெரியாரால் எழுதப்பட்ட தலையங்கம் 14-ந் தேதி "விடுதலை"யை அலங்கரித்தது:- "நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்றுப் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டோமானால் கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான்' என்ற நிலைதான் ஏற்படும். அவர்கள், மேல் வகுப்பு மக்களாக வாழ்வதற்காகவே, கடவுள் மத நம்பிக்கைகளை நம்மிடையே பரப்புவதுதான் பார்ப்பனர் கொள்கை. அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்வது நம்மை நிரந்தரமாய் ஏமாற்றி வைக்கவே ஆகும்," என்றார். பாப்பிரெட்டிப் பகுதியில் பேசும்போது பெரியாரின் ஆத்திரம் மிகவும் மேலெழுந்து நின்றது. 22-2-70 அன்று! “நம் நாட்டிலுள்ள கோயில்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கும் வரை சாதி ஒழியாது; கோயில்களிலுள்ள சிலைகளை உடைத்து, ரோட்டுக்கு ஜல்லியாகப் போடும் வரை சாதி நிலைபெற்றுதான் இருக்கும்" என்றார் பெரியார்!

அறநிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பய்யா, 24-ந் தேதி, விவாதத்துக்குப் பதிலளித்தபோது; கர்ப்பக்கிரகத்தில் அனைத்துச் சாதியினரையும் அனுமதிக்கும் சட்டத்திருத்தம்; தமிழில் அர்ச்சனை; கோயில் சொத்துகளின் மதிப்பீடு; கோயில் நிலங்களைக் கணக்கெடுத்தல்: பெண்களையும் அறங்காவலர்களாய் நியமித்தல் ஆகிய முற்போக்கான கருத்துகளை உரைத்தமைக்காக "விடுதலை" 25-ந் தேதி, பாராட்டியிருந்தது. 23-ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகத்தில், மீண்டும் பிராமணாள் போர்டு அழிப்புக் கிளர்ச்சி தொடங்க வேண்டியிருக்கும்" என்று பெரியார் பேசினார். 26-ந் தேதி முதல் 4 நாள் பெரியார் பெங்களூரில் ஓய்வு எடுத்தார்.

பெரியாரின் சாதி ஒழிப்புப் பணிகளை வெகுவாகப் புகழ்ந்தும், மாணவர்கள் கலப்பு மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்றும், 26-3-70-ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவில் டாக்டர் எஸ். சந்திரசேகர் வலியுறுத்தினார். மாயூரத்தில் ஏப்ரல் 11-ஆம் நாள் திராவிடர் கழக மாநாடு, இரா. சண்முகநாதன் தலைமையில்; பெங்களூர் விசாலக்குமி சிவலிங்கம் திறப்பாளர்; சுந்தரலீலா சிங்கம் கொடி உயர்த்தல். மறுநாள் சமூக சீர்திருத்த மாநாட்டின் தலைவர் கி. வீரமணி; திறப்பாளர் புதுவை அமைச்சர் எஸ். இராமசாமி. தடைசெய்யப்பட்ட நூல்களின் மீதுள்ள தடையை ரத்துச் செய்ய வேண்டும். ஏப்ரல் 26 முதல் மீண்டும் * பிராமணாள்" அழிப்பு முதல் நாளே சம்பந்தப்பட்டவர்க்கு அறிவித்து விடவேண்டும்; என்று தீர்மானங்கள் நிறைவேற; இருநாளும் பெரியார் பேச்சு, திருநாளாக அமைந்தது! இதனையடுத்துப் பல ஊர்களில் தாமே பெயர்ப் பலகைகளில் பிராமணாள்" எழுத்தை அழித்திட முன்வந்தனர், உணவுவிடுதி உரிமையாளர்கள்.

15-4-70 இரவு 8 மணிக்கு, சேலம் ராவ்சாகிப் பி. இரத்தினசாமிப் பிள்ளை தமது 62-வது வயதில் காலமாகிவிட்டார். பெரியாரும் வீரமணியும் ஏதோ ஒரு காரை இரவல் பெற்று, உடனே சேலம் விரைகின்றனர். மறுநாள் திரும்பவும் சென்னையில் நிகழ்ச்சி இருக்கிறது பெரியாருக்கு! உளுந்தூர்பேட்டையருகில், கார் ரிப்பேராகி விடுகிறது. பெரியாரை இறக்கி விட்டுக், காரை எடுத்துப் போய், வீரமணி ஒரு மெக்கானிக்கைப் பிடித்துச் சரி செய்கிறார். இதற்குள் நேரமாகி விடவே, சேலம் செல்வதால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த பெரியார், சென்னை செல்லும் லாரி ஒன்றில், டிரைவருக்கருகில் ஏறி அமர்ந்து கொண்டு புறப்படுகிறார். வழியில் நின்றுகொண்டிருந்த வீரமணிக்குச் சைகை காட்டியபடியே, பெரியார் லாரியில் விரைகிறார். வீரமணி திகைத்துப்போய், லாரியை வெகுதூரம் துரத்திச் சென்று, வழிமறித்து, முந்தி நின்று, பெரியாரை இறங்கி வருமாறு வேண்டுகிறார்.

"இந்த லாரிக்காரர் எவ்வளவு பிரியத்தோடு என்னை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார். சென்னையில் கொண்டுபோய் விடுவதாக அவர் அன்புடன் ஒப்புக் கொண்டுள்ளார். பாதியில் இறங்கி வந்துவிட்டால் அவர் மனம் நோகாதா?" என்று, பெரியார் மறுக்கிறார். பிறகு லாரி டிரைவரே முன்வந்து பெரியாரிடம் வேண்டி, இறக்கிவந்து காரில் ஏற்றி விடுகிறார். 18-ந் தேதி காஞ்சிபுரம் செல்லப் புறப்படும் போது பெரியாரின் உடல்நிலை கெடுகின்றது; ஜுரம் வந்து விட்டது. மறுநாள் பண்ணுருட்டி நிகழ்ச்சிக்குத் தமக்குப் பதில் வீரமணியைப் போகச் சொல்லித், தொடர்ந்து, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டச் சுற்றுப் பயணத்தையும் ரத்து செய்துவிட அறிவித்தார் பெரியார்.

23-ந் தேதியன்று சி.பி. சிற்றரசு தமது 64-வது வயதில் சட்டமன்ற மேலவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 24-ந் தேதி வந்து பெரியாருக்கு மாலை சூட்டி வணங்கினார். “நானல்லவா அய்யாவை வந்து பார்த்திருக்க வேண்டும்!" என்றார் பெரியார். அன்றே ஒரு பெட்டிச் செய்தியில் "நானும் 30-ந் தேதிவரை ஓய்வில் இருக்கிறேன். முதலமைச்சரும் கண் நோயினால் சிகிச்சையில் இருக்கிறார். அதனால் மே 6-ந் தேதி வரை தவணை தரப்பட்டிருக்கிறது. தோழர்கள் சலிப்படைய வேண்டாம்" என்று, பலகையில் 'பிராமணாள்' பெயரழிப்புப் போராட்டம் குறித்து எழுதியிருந்தார். நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்? என்று தலையங்கமும் எழுதினார் பெரியார். “நீ கோபிப்பதால் கடவுளையே அவமதிக்கிறாய்! ஆத்திரப்படுபவன் இரட்டை முட்டாள் என்பேன். கடவுளுக்கு உருவமில்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொள்கிறாய் பின் அதற்கு பெண்டாட்டி வைப்பாட்டி பிள்ளைகுட்டி ஏது? இதைக் கேட்டால் மனம் புண்படும் என்கிறாய் மடையர்களின் மனம்தான் புண்படும். உலக மாறுதலின் வேகம் என்ன தெரியுமா? இன்றைக்குப் போப்பாண்டவரையே கல்லால் அடித்ததாகச் சேதி வந்ததே - இந்த சங்கராச்சாரிக்கு அந்த நிலை ஏற்படாதா? நாட்டில் பகுத்தறிவு பரவுவதற்குத் தடையாக இருப்பதே இவர்தானே?" என்றும் வினா எழுப்பினார்.

30-ந் தேதி ஓரளவு உடல் நலம் பெற்றுக் கண்கொடுத்த வனிதம் நிகழ்ச்சிக்குச் சென்று, சுற்றுப்பயணம் தொடர்ந்தார் பெரியார். அங்கு பேசும்போது, பெண் கடவுள்களுக்குப் பூசை செய்யவாவது, பெண் பூசாரிகளை நியமிக்கலாமே என்ற கருத்தைத் தெரிவித்தார். 6-5-70 அன்று சேலம் பி. ரத்தினசாமிப் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பங்கேற்றுச், சென்னை கண் மருத்துவ மனையில் முதல்வர் கலைஞரை மறுநாள் காலை 11-30 மணிக்குப் பார்த்து : நலம் விசாரித்தார். முதல்வரை 2-ந்தேதியன்று ஆளுநர் உஜ்ஜல்சிங், ஜனாதிபதி வி.வி.கிரி ஆகியோர் பார்த்துச் சென்றனர். 8-ந்தேதி வீடு திரும்பிய கலைஞர் 1 மாதம் ஓய்வில் தங்கினார். 9-5-70 தலையங்கப் பகுதியில் "விடுதலை"யில் பெரியார் "மாவட்டத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். "தஞ்சை, வேலூர், சேலம், தர்மபுரி, காஞ்சி நீங்கலாக மற்ற மாவட்டத் தலைநகர்களில் அழிக்கப்பட இன்னும் ஒரு வார வாய்தா இருக்கிறதே! முக்கால் வாசிப்பேர் பலகையை எடுத்து விட்டார்கள். பிராமணாள் எழுத்தை அவர்களாகவே சிலர் அழித்து விட்டார்கள். சில இடங்களில் மறைத்து விட்டார்கள். நாம் இந்தப் பிரச்சினையில் எந்தவிதமான அசம்பாவிதத்துக்கும் இடம் தரக்கூடாது. இந்தக் கிளர்ச்சி இன்னும் 3 மாதமோ 5 மாதமோகூட நீடிக்கலாம். பாதகமில்லை. இதில் நாம் தோல்வியடைந்தால் கூடப் பரவாயில்லை " என்றார். “பகுத்தறிவுப் பள்ளி; அரிய வாய்ப்பு” என்று வீரமணி (ஆசிரியர்) எழுதிய துணைத் தலையங்கத்தில் “என்.எஸ். சம்பந்தம் பிரச்சாரப் பள்ளிப் போறுப்பாளராயிருப்பார். 10 நாள் நடைபெறும். கட்டணம் ரூ.20 நமக்குப் பிரச்சாரமே மிக இன்றியமையாததாக இருப்பதால் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்" என்று கோரியிருந்தது.

15-ந் தேதி மதுரையில் “பிராமணாள்" அழிப்பு வெற்றி பெற்றது. தொடர்ந்து பல ஊர்களிலும் அகற்றப்பட்டது. 17-5-70 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில், மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசுவுக்கு வீடு, கார் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலைஞருடன், பெரியாரும் பங்கேற்று, “இது தனித்தமிழர் ஆட்சி. தமிழ் நாட்டில் இனி வேறு ஆட்சி வரவிடமாட்டோம். நான் செய்ய எண்ணும் காரியங்களைத் தி.மு.க அரசு செய்து வருகிறது. அதனால் என் வேலை குறைகிறது" என்றார். 19-ந் தேதி 'தமிழர்களின் பொதுத் தொண்டு' என்னுந் தலையங்கத்தில், "இழிவு ஒழிப்பு நடவடிக்கை எனக்கு மட்டுந்தான் சொந்தமா? விளம்பரம் பெற்ற தமிழன் வேறு யாராவது எதிர்காலத் தமிழர்களின் நிலை பற்றிக் கவலைப்படுகின்றானா? இப்போது நமக்குத் தி.மு.க. ஆட்சி கிடைத்திருப்பதே மிகப் பெரிய வெற்றி. காங்கிரஸ்காரன் ஆட்சி இப்போது இருந்தால் இதெல்லாம் நடக்குமா? இனி அவன் வந்தாலும் இதை நடக்க விடுவானா? என்ன காரணம்? நமது திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இலட்சியத்தில் ஒன்றாயிருப்பதுதானே காரணம்" எனப் பெரியார் தீட்டியிருந்தார்.

காந்திக்கும் நேருவுக்கும் பிறகு அண்ணாவின் மறைவுதான் இந்தியாவின் மிகப் பெரிய தேசிய இழப்பு என்று சென்னை வந்திருந்த மத்திய துணையமைச்சர் கடில்கார் 29-5-70 அன்று புகழ்ந்து கூறினார். "விடுதலை" 19-5-70 ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் நெய்வேலி கு. வீராசாமி என்பார், “தந்தை பெரியாரின் முழு வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும்" என்று கோரியிருந்தார். அந்தக் கடிதத்தினடியில் ஆசிரியர் குறிப்பாக, “விரைவில் அப்பணி தொடங்கப்பட இருக்கிறது" என்று காணப்படுகிறது. (அப்பணி தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லையே!) 1-6-70 அன்று பேராசிரியர் டாக்டர் சி. இலக்குவனார் நாகர்கோயில் இந்துக் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றார். 10-ந் தேதி காஞ்சி மணிமொழியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பெரியார், "ஒரு குடும்பம் போலிருந்து நாம் பொதுத் தொண்டாற்றி வந்தோம். கொள்கையில் மாற்றமில்லாவிட்டாலும் இரண்டு கழகங்களாய்த் தனித்தனியே பிரிந்து பணியாற்றியவர்கள், இப்போது இணைந்துவிட்டோம்! இதைப்பற்றிப் பொறாமையால் யாரும், ஏதும் சொல்லலாம். இதனால் ஒன்றும் குற்றமில்லை . இன்றையத் தி.மு.க. ஆட்சி, என் ஆயுள்வரை இருந்தால், நான் மனக்குறை இல்லாமல் சாவேன்!" என்று, உணர்ச்சி மேலிடக் கூறினார்.

கலைஞர் தமது பிறந்த நாள் விழாவில், “நான் பெரியாரின் மாணவன் என்பதில் தான் எனக்குப் பெருமை அதிகம்" என்று பூரிப்புடன் புகன்றார். தமிழக அரசின் சார்பில் “தமிழரசு" என்று ஒரு மாதமிருமுறை இதழ் வெளிவரும் என முதல்வர் கூற்றிக்கிணங்க, ஓர் அழகிய விளம்பரம் “விடுதலை" முதல்பக்கம் காணப்பெற்றது 15-6-70 அன்று.

பெரியார் கொட்டாம்பட்டியில் 5-ந் தேதி பேசினார்: “ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது முட்டாள்தனமான பேச்சு. ஒரு கடவுளை நம்புவதால் ஏற்படும் முட்டாள் தனந்தான் ஆயிரம் கடவுளை நம்புவதாலும் ஏற்படுகின்றது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கையாயிருக்காது. தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகச் சொல்லப் பட்டதாயிருக்கும்" என்று மிக்க நம்பிக்கையோடு சொன்னார் பெரியார். கோவையை அடுத்த ஆலந்துறையில் 7-ந் தேதி ஒரு திருமண விழாவில் பேசும் போது, அங்கு விளக்கேற்றி வைத்திருந்ததாலோ என்னவோ, அதைப் பற்றிக் குறிப்பிட்டார். "யாரோ விளக்கை லட்சுமி என்று சொல்லி விட்டார்கள். அதை நம்புகின்ற மக்கள், அது லட்சுமி என்பதற்காக, மண வீட்டில் மட்டுமல்லாமல், பிணத்தருகிலும் கொளுத்தி வைக்கிறார்கள். சரி, நான் கேட்கிறேன்; இந்த மணமகனுக்கோ, அல்லது மணமகளுக்கோ தெரியுமா, விளக்கு ஏன் வைக்கிறார்கள் என்று?" பெரியாரின் கேள்விக்கு என்ன பதில்!

13-ந் தேதி ஜோலார்பேட்டையில் பெரியார் “ அண்ணாபோலத் தனியான ஒரு கொள்கை ஏற்படுத்தி, அதன் பேரில் தேர்தலுக்கு நின்று, ஆட்சியைப் பிடித்தவர், உலகிலேயே லெனின் ஒருவர்தான், என்று பெரியதொரு வரலாற்றுச் சிகரமான உண்மையை உரைத்தார். அன்றே திருப்பத்தூரில், ஆசிரியர்கள் சங்கத்தில், எனக்கு அதிகாரமிருந்தால் கல்யாணமானவர்களுக்கே ஆசிரியர் வேலை தரமாட்டேன்; அல்லது, கல்யாணமானாலும், பிள்ளை பெற்றால் அவர்களுக்குத் தரமாட்டேன், கடவுளை நம்பாத பகுத்தறிவுவாதிகளுக்கே ஆசிரியர் வேலை தருவேன்; அப்போது தான் இளமையிலேயே பிள்ளைகள் பகுத்தறிவோடு வளர்வார்கள்" என்றார் பெரியார். அடுத்த “பிராமணாள்" போர்டு அழிப்புக் களமாகத் திருச்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. 18 ந் தேதியும் 21-ந் தேதியும் மறியலுக்குத் தேதி குறிப்பிட்டுச் சென்ற போது, தாமே அழித்துவிட்டுப் போராட்டத்தை வெற்றியாக முடிக்க உதவினர் ஓட்டல் உரிமையாளர்கள்.

திருச்சியிலுள்ள கிறிஸ்துவப் பிணங்களைப் புதைக்கும் இடுகாட்டில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனியிடம் இருந்தது. சுவர் எழுப்பியே அதைத் தனிமையாகப் பிரித்திருந்தார்கள். இதை எதிர்த்து 20-6-70 ல் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய பெரியார் - “இது கிறிஸ்துவ மதத்துக்கே இழிவு. உலகில் வேறெங்கும் இப்படிக் கிடையாது. நீக்ரோக்களைக் கொடுமைப்படுத்தும் அமெரிக்காவிலும் இல்லை. இடையிலுள்ள சுவரை நீங்களே உடைத்தெறியுங்கள். இல்லாவிட்டால் நாங்கள் இந்துவாகப் போய்விடுவோம் என்று மிரட்டுங்கள்" என்பதாக வழி சொல்லிக் கொடுத்தார் பெரியார். "இப்போது இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றுவதே, தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சிதான். காங்கிரஸ் ஆட்சியைவிட இது எவ்வளவோ நலமான ஆட்சியாகும். தி.மு.க ஆட்சியைக் காப்பதில் நமக்குப் பொறுப்பு அதிகம். ஒரு தாயின் நிலையில் இருந்து நாம் காப்பாற்றவேண்டும். காமாஜரே, நான் இந்த ஆட்சியைக் கவிழ்க்க மாட்டேன் என்பதாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் சொல்லியிருக்கிறார். பொறுப்பும், மரியாதையும் உள்ள பத்திரிகைகள் இல்லாததால் தாறுமாறாக ஏதோ எழுதிவருகிறார்கள் என்று 22 ந்தேதி பெரியார் தலையங்கம் எழுதினார். 15 ஸ்டாண்டர்டு ஏக்கரா உச்சவரம்பு கட்டி நிலச் சீர்திருத்தச் சட்டம் இயற்றித் தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதா, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றுவிட்டதாக 25-3ந் தேதி செய்தி செய்தி வந்தது.

அனைத்துலக அய்க்கிய நாடுகள் சபையைச் சார்ந்த கல்வி கலாச்சார நிறுவனம் (Unesco) பெரியாருக்கு விருது வழங்கிச் சிறப்புப் பெற்றது. சென்னை இராஜாஜி மண்டபத்தில் 27-6-70 மாலை 5.30 மணிக்கு மத்தியகல்வி அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பெரியாருக்கு இந்த விருதினை வழங்கினார். citation எனப்படும் அறிமுக உரையில் - புது உலக தீர்க்கதரிசி, தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை அர்த்தமற்றசம்பிராதாயம் இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி - என்று பெரியார் அவர்களைப் பாராட்டி அந்த விருதுப் பட்டயத்தில் பொறித்திருந்தார்கள். பெரியார் நன்றியுரையில், "மற்ற புகழ்ச்சிகளுக்கு நான் பாத்திரனல்ல, ஆனால் கடும் எதிரி என்பதை ஒப்புக்கொள்கிறேன். இன்னும் என் கருத்துகளை முழுவதும் விரிவாக எடுத்துச் சொல்ல எனக்குப் பத்திரிகை வசதியில்லை. இருப்பதை வைத்துக்கொண்டு இவ்வளவாவது செய்ய முடிகிறதே என்று மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டில் இந்தக் கருத்துகளைச் சொல்கிறேன், இதுவரை கொலை செய்யப்படாமல் உயிர் வாழ்வதே ஓர் அதிசயமாகும்” என்றார்."

சென்னை பாலர் (கலைவாணர்) அரங்கத்தில் ஒரு புதுமைத் திருமணம் நடைபெற்றது. நரிக்குறவர் சமுதாய மக்களை உயர்த்துவதையே குறிக்கோளாய்க் கொண்டு உழைத்துவரும் ஆசிரியர் ஏ.கே.ரகுபதி (வெள்ளாள வகுப்பு). அந்தச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்மணி எம்.ஏ. ஞானசுந்தரியை 28-6-70 அன்று கலப்புத் திருமணம் புனைந்து புரட்சி நிகழ்த்தினார். அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய எம்.ஜி.ஆர். அவர்கள் எந்தச் சீர்திருத்தவாதியும் பெறாத பெருவெற்றிகளைப் பெற்றவர் தந்தை பெரியார் அவர்கள். கலப்புத் திருமண விழாக்களில், முதலில் அவரது தியாகத்துக்குத் தலை வணங்குவதே நம் கடமை” என்றார்,

29-ந்தேதி சென்னை அசோகா ஓட்டலில், நலம் நாடுவோர் குழுவின் சார்பில், அய்ரோப்பா செல்லும் முதலமைச்சர் கலைஞரைப் பாராட்டி நடந்த விருந்தும், கூட்டமும்; பெரியாரின் வாழ்த்துகளோடு இணைந்திருந்தது குன்றக்குடி அடிகளார், வீரமணி, என்.டி. சுந்தர வடிவேலு, ஏ.என். சட்டநாதன், ஈ.பி. இராயப்பா ஆகியோர் கலந்து கொண்டனர். டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம் வரவேற்றார். " எனக்குச் சூட்டப்படுகின்ற புகழ்மாலைகள் அனைத்தையும் பெரியார் பாலடிகளுக்கே சமர்ப்பிக்கிறேன். நாங்கள் செய்யாத காரியங்களுக்காக எங்களை மன்னிக்க வேண்டும்” என்று உணர்ச்சி பொங்கும் நன்றியுரை நவின்றார் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாதிதி அவர்கள். சீரணி சார்பில் நேரு ஸ்டிேயத்தில் பேசிய டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார், "வெளிநாடு செல்லுமுன்பே அங்கெல்லாம் புகழ்பெற்ற முதல்வர் நமது கலைஞர்" என்று பாராட்டினார்.

அய்ரோப்பிய சுற்றுப்பயணத்துக்காக 1-7-70 அன்று புறப்பட்ட கலைஞர், "என்னை அடிமை கொண்ட அன்பு நெஞ்சங்களே! உங்கள் அடிதொழுது விடைபெறுகிறேன்" என்று கூறிச்சென்றார். கல்வியாளர் எஸ்.வி. சிட்டிபாபுவின் மகள் திருமண விசாரிப்புக்காகப் பெரியார், மணியம்மையாருடன் சென்று வந்தார். ஜூலை மாதம் கடும் பயணம் பெரியாருக்கு ! கலைஞரை வழியனுப்பிய பின் 2 சிவகங்கை, 3 பரமக்குடி, 4 தேவகோட்டை, 5 காலை பட்டுக்கோட்டை, மாலை காரைக்குடி, 6 இராமநாதபுரம், 7 அருப்புக்கோட்டை 10 திம்மராய சமுத்திரம், 11 திருச்சி, 12 சீரங்கம் திருவானைக்கோயில், 14 15 16 17 18 சென்னை, 19 கும்பகோணம், 20 லாலாபேட்டை 21 தாளக்குடி ஆலம்பாடி, 22 பச்சாம்பேட்டை , 26 சேலம், இப்படி! இதற்கிடையில் நாவலர் நெடுஞ்செழியனின் 51-வது பிறந்தநாளான 11-7-70 அன்று வீரமணி மூலமாகப் பெரியாரின் வாழ்த்துச்செய்தி தி.மு.க. தலைவர்களில் தலைசிறந்தவர். தி.மு.க. கொள்கைகளை முழுக்க முழுக்க ஆதரித்து நடந்து கொள்பவர் நாவலர்" என்று எடுத்துக் கூறியது. 15-ந்தேதி காமராஜரின் 68-வது பிறந்தநாளன்று, வழக்கத்தை விடாமல், ஒரு சிறிய புகைப்படமும், 4 வரியில் வாழ்த்துச் செய்தியும் "விடுதலை" முதல் பக்கத்தில் இடம் பெற்றன. இந்தியன் பேங்கில் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்து, நிர்வாகம் சீர்கெட்டதாக “விடுதலை" ஆதாரங்களை அள்ளி இறைத்ததால், அரசு, கண்காணிப்புத் தனி அதிகாரிகளை நியமித்தது.

ஈ.வெ.கி. சம்பத்தின் மகள் டாக்டர் நாகம்மாள் - நீதிபதி அழகர் சாமியின் மகன் டாக்டர் வெங்கடேஷ் இருவரின் திருமணம் பெரியார் திடலில் 15-7-70 காலை 10-30 மணிக்குப் பதிவு செய்யப்பட்டபோது, பெரியார், மணியம்மையார், காமராசர், கக்கன், சி. சுப்ரமணியம் ஆகியோர் வந்திருந்தனர். மாலையில் 5-30 முதல் 7-30 மணிவரை நடந்த வரவேற்பு விழாவில், பெரியார்தான் பிரதம வரவேற்பாளர். முதல்வர் கலைஞர் 16-ந்தேதி லண்டன் மாநகரில், "அண்ணா வலியுறுத்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்பதே தி.மு.க. கொள்கை" என்பதை விளக்கினார். தமிழில் மதராஸ் என்பதற்குப் பதில் சென்னை என்றே வழங்கப்படுவதற்கான அரசாணை 19-ந் தேதி வெளியிடப்பெற்றது.

15-ந் தேதி கோயில்களை இடிக்க நேரலாம்" என்ற தலையங்கம் பெரியாரின் கோபத்தைக் காண்பித்தது. "இருக்கின்ற கோயில்கள் போதாதா? இப்போதும் அரசாங்க நிலங்களில் கோயில்கள் கட்டி வருகிறார்களே! இதை இந்த அரசு அனுமதிக்கலாமா? எங்களுக்கு ஆத்திரம் உண்டாக்கக்கூடிய காரியங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இவைகளைத் தடுத்து நிறுத்தவேண்டியது தி.மு.க அரசின் கடமையாகும். இல்லையானால் இப்படிப்பட்ட கோயில்களை அழிக்கின்ற வேலையைத் துவக்குகின்ற சங்கடம் எங்களுக்கு ஏற்படலாம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்."

16-7-70 அன்று கிண்டி பொறியியல் கல்லூரியில் தமிழ்மன்றத் துவக்க விழாவுக்குப் பெரியாரை ஏன் அழைத்தார்களோ? பெரியார் பேச்சின் துவக்கமே இப்படி: “பொறியியல் கல்லூரியில் தமிழ் மன்றம் எதற்காக? என்ன அவசியம் உங்களுக்கு? நீங்கள் மொழி ஆராய்ச்சி செய்யவா எஞ்சினீரிங் காலேஜுக்கு வந்தீர்கள்? தமிழில் முதலாவதாக ஒரு மரியாதைச் சொல் உண்டா ? வா, தா, கொடு, இரு என்கிறோம். மேல் ஜாதியாக இருந்தால் வாருங்கள், தாருங்கள், கொடுங்கள், இருங்கள் என்கிறோம். இதிலேயே ஜாதிப் பாகுபாடு இங்கிலீஷில் அரசனாயிருந்தாலும் Come, go, give; ஆண்டியாயிருந்தாலும் அதே வார்த்தைதானே! இதைச் சொல்லி, அறிவியல் மொழியல்ல தமிழ்: காட்டுமிராண்டி மொழி என்று நான் சொன்னால், என்னோடு அதே விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் சொல்கிறார்; பழைமையான மொழி என்பதற்காகப் பெரியார் காட்டுமிராண்டி மொழி என்கிறார்; என்று சப்பைக்கட்டு கட்டுகிறார். நானும் சரி, விழாவில் ஏன் தகராறு? என்று விட்டுவிட்டேன். அதே முதல் அமைச்சர் இப்போது பாரீசில் போய் - ஏதோ உலகத் தமிழ் மாநாடாம் அதில் சொல்கிறார்; விண்வெளி வேகத்திற்கு ஏற்பத் தமிழ் வளரவேண்டும் என்று. அப்படியானால் வளரவில்லை என்பதை இவரே ஒத்துக் கொண்டதாகத்தானே அர்த்தம்? நேற்று எங்கள் சம்பத்து வீட்டுத் திருமணத்தில் கூட விளக்கு, பாத பூஜை எல்லாம் நடத்துகிறான். கேட்டால், பிள்ளை வீட்டாருக்காக என்கிறான். என்ன நியாயம்?"

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் காஞ்சி மணிமொழியார் தலைமையில், 18-ந்தேதி, நாவலர் பொள் விழா மலரைப் பெரியார் வெளியிட்டு உரையாற்றினார். “நாவலர் நெடுஞ்செழியன் அண்ணாவுக்கு அடுத்த பேச்சாளர். புள்ளி விவரங்களை ஏராளமாக அள்ளி வீசுவார். ஒழுக்கத்தில் குற்றம் கூற முடியாதவர். இவர் நூறாண்டுக்கு மேலும் வாழ்க என்று வாழ்த்துகிறேன், தம்பியும், இவரும் படித்து முடித்தவுடன், வேலைக்குப் போக விரும்பாமல், என்னிடம் வந்து பொதுத் தொண்டு செய்ய விரும்புகிறோம் என்பார்கள். ஆனால் நாவலரிடத்தில் இப்போது எனக்குப் பிடிக்காதது, தமிழைப் பயிற்சி மொழி ஆக்குகின்ற திட்டந்தான். நீங்கள் என்னதான் செய்தாலும் இங்கிலீஷின் இடத்தைத் தமிழால் நிரப்ப முடியுமா? நல்ல வண்ணம் சிந்திக்க வேண்டும். மற்றபடி என்னைப் பொறுத்த வரையில் தி.மு.க. என்பது தி.க.வின் கிளைதாள்" என்று.

அன்புள்ள தந்தை பெரியார் அவர்கட்கு வணக்கம். சுற்றுப் பயணம் தமிழகத்திற்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. தங்கள் நலமும் நண்பர்கள் நலமும் அறிய ஆவல், அன்புள்ள மு. கருணாநிதி - 12-7-70-ல் ஆம்ஸ்டர்டாமிலிருந்து எழுதப்பட்ட இந்தக் கடிதம், 21-ந்தேதிதான் சென்னையில் கிடைத்தது. அன்றே பிற்பகல் 2-30 மணிக்கு, அழகிய அய்ரோப்பிய உடையில், சென்னை வந்து இறங்கினார் முதல்வர் கலைஞர்.

“பழைய காங்கிரசும், இராஜாஜியின் சுதந்தராக் கட்சியும் இப்போது ஒன்று சேர்கிறார்கள். இந்திராவை எதிர்ப்பது என்ற போர்வையில், தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவே இவர்கள் மறைமுகமாகக் கூட்டு சேர்ந்துள்ளனர். தன் ஜாதி நலத்துக்காக ஆச்சாரியார் தி.மு.க.வை எதிர்க்கிறார், டில்லித் தலைமைக்குக் கட்டுப்பட்டுக் காமராஜர் தி.மு.க.வை எதிர்க்கிறார்' என்று பெரியார் அறிவித்த கருத்து -இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டிலும் இடம் பெற்றது. 2-8-70 அன்று தாழ்த்தப்பட்டோர் கலாச்சார மன்றம் பெரியாருக்குப் பொன்னாடை போர்த்திக் கவுரவித்தது. அமைச்சர் சத்தியவாணிமுத்து, மேயர் வை. பாலசுந்தரம், நீதிபதி கோகுலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் - “சென்னை உயர்நீதி மன்றத்தில் இதுவரை தாழ்த்தப்பட்டோர் யாரும் நீதிபதியாக நியமிக்கப்படவே இல்லை. கிரமப்படி இரண்டு பேர் இடம்பெற வேண்டும், உடனடியாக ஒருவரையாவது நியமிக்கவேண்டும்” என்று பெரியார் அங்கு விடுத்த கோரிக்கை, தமிழக அரசின் காதில் உடனே விழுந்தது எவ்வளவு பெரிய வியப்பு!

3-ந் தேதி “வேண்டுகோள் எச்சரிக்கை” என்ற தலையங்கத்தில் பெரியார் - “தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் திருப்தியாயில்லை. முக்கியமான காரணம், கழகத்தின் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போ, கட்டுப்பாடோ குறைவானதுதான், என்று நான் கவலைப்படுகிறேன். இது எப்படி இருக்கிறதென்றால், பெட்டி கெட்டி; பூட்டு பலமில்லை' என்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. தலைமையான ஆட்சி சரியாயிருந்தும், கீழ்மட்டத்தில் இப்படிப் போகவிடலாமா? உள்ளாட்சி போன்ற இலாக்கா மாற்றமோ, அல்லது மிகுந்த எச்சரிக்கையோ தேவை என்று நினைக்கிறேன். இதைப்பற்றி நான் கழகத் தலைவரிடமும் சொல்வேன்; முக்கியமாக ரிப்பேர் செய்தாக வேண்டும். இப்போதுள்ள பெரிய அதிகாரிகள் பரவாயில்லை. எப்போதுமே சிறிய அதிகாரிகள்தான், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிரிகளாகி விடுவார்கள் - என்று தமது மனக்குறைகளை வெளிப்படுத்தவும்; முதல்வர் கலைஞர் 4-ந்தேதி பெரம்பூரில் பேசும் போது, “தந்தை பெரியார் அவர்களின் கருத்தைக் கழகத் தோழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். நம்மிடையே இன்னும் கட்டுப்பாடு தேவை என்பது உண்மைதான். ஆயினும் பெரியாரவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஊராட்சித் தேர்தல்களில் நமக்கு முன்னேற்றந்தானே ஒழியச் சரிவில்லை . 1,500 ஆக இருந்தது 3,000 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் 5,000 ஆக இருந்தது 3,000 ஆக வீழ்ந்துள்ளது” என்று புள்ளி விவர ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.

ஆச்சார்ய கிருபளானி என்னதான் வயது முதிர்ந்த தலைவரானாலும், இன இயல்பு போகவில்லை. தமிழ்நாடு அமைச்சரவையில் பிராமணர் யாருமே இல்லையே எனப் பகிரங்கமாகத் தனது கவலையை வெளிப்படுத்தினார். 31-7-70, 1-8-70 இரண்டு நாட்களும் “கிருபளானியின் ஏக்கம்" என்ற இரு தலையங்கக் கட்டுரைகளால் "விடுதலை" அவரைச் சாடியிருந்தது. டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் ஓய்வு பெற்றதால் அவரது இடத்துக்குத் தலைமை மருத்துவராக டாக்டர் கே. ராமச்சந்திரா 6-ந் தேதி முதல் நியமிக்கப் பெற்றார். தமிழ்நாட்டுக்குத் தனிக்கொடி வைத்துக்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக, முதல்வர் கலைஞர், 14-ந் தேதி அறிவித்தார். 19-ந் தேதி தித்திக்கும் செய்தி ஒன்றை வழங்கி நல்ல முன்னுதாரணம் ஒன்றும் படைத்தார் முதல்வர். N.G.G.O.க்களின் இரகசியக் குறிப்பு முறை (C.R.) ஒழிக்கப்படும் என்பதே அது! சென்னை ஆபட்சுபரியில் சி.என்.ஏ. கவுதமன், துளசிபாய் திருமணம் பெரியார் தலைமையில் 21-ந் தேதி நடைபெற்றது. முதல்வர் கலைஞர் வரவேற்றார். அதேபோல் கலைஞரே முன்னின்று, காஞ்சியில் நாவலர் தலைமையில் சி.என்.ஏ. ராஜேந்திரன் (பாபு), சாந்தா திருமணத்தையும் நடத்திவைத்தார், 6-9-70 அன்று.

ஆகஸ்ட் 25-ல் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் மறைந்தார். தமிழ்நாடு சட்டமன்றம் அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றி 20 நிமிடம் அலுவலை ஒத்திப்போட்டது. டெல்லி சென்று திரும்பிய முதல்வர், மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்க நேரலாம், என்றார் 27-ந் தேதி. “சபாஷ் கலைஞர் கருணாநிதியாரே" என்று பெரியார் மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ளிக் குதித்தார். “கண்டறியாதன கண்டேன். எந்த ஆட்சியிலும் நடத்த முடியாத அதிசயம், அற்புதம்; கலைஞரின் புரட்சிக் கொள்கைகள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன." என்று பெரியார் தமது இயல்புக்கு மீறிப் புகழ்ந்து பாராட்டுகின்றார். இத்தனைக்கும் கலைஞரை மூள்பீப்பாய்க்குள் போட்டு உருட்டுவதுபோல், அவருக்கு ஓயாத சொல்லை கொடுக்கிறார்கள். மின்சார ஊழியர்கள், பால்வள நிறுவன ஊழியர்களின் தொல்லை ஒருபுறம். தனியார் பஸ் முதலாளிகளின் தொல்லை ஒருபுறம்; நிலப்பறி இயக்கம் என்று கம்யூனிஸ்டுகளின் மிரட்டல் ஒருபுறம். இவ்வளவு மலைபோல் வந்த துயரங்கள் சூரியனைக் கண்ட பனிபோல் நீங்கிவிட்டன. அனைத்துச் சாதியாரும் கடவுள் அருகில் போய் மணியாட்டலாம் பூசை செய்யலாம் என்றார்; இப்போது N.G.O. இரகசியக் குறிப்பை ஒழித்தேன் என்கிறார்; இது சரித்திரங் காணாத அதிசயம். கலைஞர் ஆட்சி நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன். ஏன்? காங்கிரஸ் ஆட்சியிலே, என் வீட்டிலே கூடக் காலிகள் அட்டகாசம் செய்ததால், எனக்கே போலீஸ் காவல் தேவைப்பட்டதே." உள்ளக் குமுறலும், பீரிட்டுவந்த உணர்ச்சிப் பிரவாகமும், 21-ந் தேதி “விடுதலை”யில் தலையங்கமாய்ப் பொங்கி வழிந்தன! 1-9-70 பொள்ளாச்சியில் கலைஞர் படத்திறப்பு விழாவில் பெரியார் -இவருக்குப் படம் திறப்பது போதாது, கட்டாயம் உடனே சிலை அமைத்தாக வேண்டும்" என்றார்.

6-9-70 அன்று சென்னையில் முதன்முறையாகப் பகுத்தறிவாளர் கழகம் துவக்கப்பட்டது. சி.டி. நடராசன் தலைமையில், நாவலரும் பெரியாரும் கலந்து கொண்டனர். ஆகஸ்டு மாம் 10-ந் தேதி முதல் 20 வரை ஓய்விலிருந்த பெரியார் செப்டம்பர் முழுவதும் கடும் பயணம் மேற்கொண்டார். 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கோவை மாவட்டச் சுற்றுப் பயணம். பல கூட்டங்களில் பேசினார். கோயிலை நானே இடிப்பேன் என்று ஓர் நாள் கர்ச்சித்தார். “இந்தக் காமராஜர் புத்தி ஏன் இப்படிக் கீழாகப் போய்விட்டது? இவர் ஏன் ஆச்சாரியார் வீடு தேடிப் போகிறார்? தி.மு.க. ஆட்சியை ஒழிக்க, கவிழ்க்க அவருடனா கூட்டு சேருவது? பார்ப்பான் குடுமியை அறுத்தால் 3 மாதம், பூணூலை அறுத்தால் 6 மாத தண்டனை! செய்து பார்த்து விடுவோமே! அடுத்த முறை இதே தி.மு.க. ஆட்சியில் நானே கடப்பாரை எடுத்துக் கோயிலை இடிக்கிறேனா இல்லையா, பாருங்கள்" என்று முழங்கினார் தந்தை பெரியார்.

செப்டம்பர் மாதம் 12, 13 நாட்களில் சென்னை அசோக் நகரில் மாநில சுயாட்சி மாநாடு நடத்த தி.மு.க. ஆவன செய்து வந்தது. இதற்கிடையில் 9-9-70 அன்று கலைஞர் அமைச்சரவையில் அமைச்சர்களாயிருந்த கே.ஏ. மதியழகன், மா. முத்துசாமி, கா. வேழவேந்தன் ஆகிய மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை . பதவி இழப்பினும், அன்னார் மூவரும் கழகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். இவர்களது பதவி நீக்கம் பற்றி, முதல்வர், தந்தை பெரியாரிடம் முன்பே கலந்ததாகச் சிவ வட்டாரங்கள் கருத்தறிவித்தன கலைஞர் தலைமையில் அஜய் மூகர்ஜி மாநில சுயாட்சி மாநாட்டைத் தொடங்கிவைத்தார். "தலைவரை உருவாக்கிய தலைவர் பெரியார் இப்போது பேசுவார்" என்று 18- ந் தேதி கலைஞர் அறிவித்ததும், பெரியார் பேசினார்: "சுதந்திரம் பெற்று 25 ஆண்டுகள் கழிந்த பின்பு ஓர் மாநாடு கூட்டி, எங்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லையே என்று கேட்கிறோம். இது வெட்கக் கேடான நிலைமை அல்லவா? இந்த மாநாட்டின் கோரிக்கைகள் விரைவில் வழங்கப்படாவிட்டால், இன்னும் மூன்றே ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு மாநில சுயாட்சி அல்ல; முழுச் சுதந்திரம், விடுதலை, கிடைத்தே தீரும்! அதை யாரும் அப்போது தடுக்க முடியாது” என்றார் பெரியார், நாவலர் நெடுஞ் செழியன் மேல் நாடுகள் சுற்றுப்பயணத்துக்காக 17-9-70 அன்று மாலை புறப்பட்டார். பின்னர் இவர் 28-10-70 இரவு 10 மணிக்குத்தான் சென்னை திரும்பினார்.

இந்த ஆண்டு பெரியார் 95-வது பிறந்த நாள் விழா மதுரைத் திருநகரில் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டது, 17-9-70 அன்று. பெரியாரும் நேரில் கலந்து கொண்டார். இந்த ஆண்டும் “விடுதலை" மலரில், பெரியாரின் அறிவுக்கு விருந்தான சில கட்டுரைகள் வழக்கம் போல் இடம் பெற்றன. பிறந்த நாள் செய்தி, வேலைத் திட்டம் ஆகியவை தரப்பட்டன:- “என்னுடைய 91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச்சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல், வாழ்நாள் நீண்டால், மேலும் பல முன்னேற்ற கரமான காரியம் செய்யலாம்போல் தோன்றுகிறது. அதாவது கடவுள், மதம், சாதி முதலிய விஷயத்தில் மக்கள் எந்த அளவு வேண்டுமானாலும் மாறுதலடையப், பக்குவமாய், மாறுதலுக்கு இணங்குபவர்களாய் இருக்கிறார்கள் என்றே காணுகிறேன். இந்த நிலைதான் எனது உற்சாகத்திற்கும், மேலும் இருந்து தொண்டு செய்யலாம் என்ற நம்பிக்கைக்கும், அவாவிற்கும் காரணம் ஆகும்.

நமது நாட்டு ஆட்சியானது பகுத்தறிவு ஆட்சி என்பதோடு எந்தவித மாறுதலுக்கும் எவ்வளவு தூரம் துணிந்து செயலாற்றுவதற்கும் துணிவுள்ள ஆட்சியேயாகும். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பொதுவாகவே மக்கள் வாழ்வில் சுபிட்சம் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் எண்ணத்தில் பெருத்த முன்னேற்றத்தையும் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நான் எனது 92- வது ஆண்டுச் செய்தியாக மக்களுக்குத் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் இந்த ஆட்சியை இன்னும் ஒரு பத்தாண்டுக்குப் பாதுகாத்து வரவேண்டும் என்பதேயாகும். இந்த நிலையில் நமது நாட்டு ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் ஏற்படுமானால் காமராஜர் ஆட்சி ஒரு நாளும் அந்த இடத்திற்கு வராது. மற்றெது வருமென்றால், பாரப்பனர் ஆட்சி - இராஜாஜி ஆதிக்க ஆட்சிதான் - வரும் அதுவோ, வேறு எதுவோ, வந்தாலும் பழிவாங்கும் ஆட்சியாய்த்தான் இருக்கும்! அல்லது, அசல் காலித்தன, பலாத்காரத் தாண்டவ ஆட்சியாகத்தானிருக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதை எனது 91 ஆண்டு அனுபவச் செய்தியாகக் கூறுகிறேன்!

நான் எனது 92-வது ஆண்டின் வேலைத் திட்டமாகப் பார்ப்பனப் பத்திரிகைகளை நம் மக்கள் பகிஷ்கரிக்கும்படிச் செய்ய ஓர் இயக்கத்தைத் துவக்கி நடத்தலாமென்று ஆசைப்படுகிறேன். ஆத்திரப்படுகிறேன்.

இதற்காக மாநாடுகள் பொதுக்கூட்டங்கள் நடத்திப் பிரச்சாரம் செய்வது கூடுமானவரை எல்லா கிராமங்களிலும் ‘நம் எதிரிகளின் பத்திரிகை பகிஷ்கார சங்கம்’ என்பதாக ஸ்தாபனம் ஏற்பாடு செய்வதும்; இந்தக் காரியத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் நிதி திரட்டுவதும்; பல தொண்டர்களை ஏற்பாடு செய்து முழுநேர வேலையாக நாடெங்கும் பணியாற்றச் செய்வதும் என்று திட்டமிட முடிவு செய்திருக்கிறேன்.

கண்டிப்பாய் இதற்கு எல்லாரும் நன்கொடை அளித்தாக வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளுகிறேன். அதிகாரிகளும், அமைச்சர்களும், உதவவேண்டும். நண்பர் வீரமணியிடம், நன்கொடை அளிப்பவர்கள் இரகசியமாகத் தரலாம். நன்கொடையாளர்களின் பெயர்கள் கண்டிப்பாய்த் தெரிவிக்கப்படமாட்டாது.

இந்தப் பணியானது, கடவுளை, மதத்தை ஒழிக்கும் பணியை விடக், கோயில்களை இடிக்கும் பணியைவிட, முக்கியமானதும் பயனளிக்கத் தக்கதுமாகும் என்பது என் உறுதியான எண்ணமாகும். இந்தக் காரியத்தைச் செய்வதால் எனது வாழ்நாளில் ஒரு பயனுள்ள காரியத்தை நான் செய்ததாகக் கருதிக்கொண்டு முடிவடைவேன்.

மேலும், இப்போது நமக்கு வேண்டியதெல்லாம், இன்னும் பகுத்தறிவும் ஒற்றுமையும் இன உணர்ச்சியும் ஆகும். நமது அதிகாரிகளும், ஆட்சிச் சிப்பந்திகளும், பொதுமக்களும் தங்கள் சுயநலங்களில் சிறிது விட்டுக்கொடுத்தாவது, தமிழர்க்கான பொது நல்வாழ்வுக்காக ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்."

20-9-70 அன்று சேலத்தில், ஜி.டி. நாயுடு தலைமையில் எஸ். சந்திரசேகர் பெரியார் சிலையைத் திறந்து வைத்து, “மூடநம்பிக்கை சாதி ஒழிப்புக்குப் பாடுபடும் 92 வயது இளைஞர் பெரியார்' என்று பாராட்டினார். வருகை தந்திருந்த பெரியார், “பார்ப்பனப் பத்திரிகைகள் வாங்கும் தமிழர்களைத் தடுத்து நிறுத்துங்கள். இந்த என் சிலை உங்களைப் பார்த்துப் பேசுவது அதுதான்" என்றார். 25-ந் தேதி திண்டுக்கல்லில், குன்றக்குடி அடிகளார் தலைமையில் பெரியார் சிலையைத் திறந்த முதலமைச்சர் கலைஞர், "பெரியார் எப்போதுமே தேவை" என்றார், பெரியார் பேசும்போது, “பகுத்தறிவுக் கொள்கைகள் நாடெல்லாம் பரவிட, தெருவுக்குத் தெரு ஒரு பகுத்தறிவாளர் சிலை நிறுவப்பட வேண்டும்" என்றார்.

திருச்சியில் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் 26-ந் தேதி நடைபெற்ற நிறுவனர் நாள் விழாவில், பெரியார், வீரமணியுடன், அமைச்சர்கள் க. ராஜாராம், செ. மாதவன் ஆகியோர் பங்கேற்றனர். 27-ந் தேதி திருச்சி சிந்தனையாளர் கழகச் சார்பில் பெரியாருடன், அமைச்சர் என்.வி. நடராசன், ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பேசினர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்குக் கட்டுப்பட்டே, பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி - உத்தியோகங்களில் 49 சதவீதம் ஒதுக்கிட, இப்போதே இடமிருப்பதாகத் தாம் கருதுவதாகப் பெரியார் தெரிவிக்கவும்; அமைச்சர் என்.வி.என். அவ்வாறாயின் பெரியார் கருத்தை ஏற்பதாக அறிவித்தார். (பின்னர் கலைஞர் அவ்விதமே ஆணை பிறப்பித்தது வரலாறாகும்!) பன்மொழிப் புலவரும் தனித்தமிழ்ச் சான்றோரும் சிறந்த ஆராய்ச்சி நிபுணருமான ஞா. தேவநேயப் பாவாணர், அன்று திருச்சியில் பெரியாரைப் பற்றி ஒரு வெண்பா இயற்றிப் பாடினார்:-

பைந்தமிழ் நாட்டுப் பகுத்தறிவுத் தந்தையென
அய்ந்து கண்டத்தும் அரும்பெயரை - மைந்துடனே
தொண்ணூற் றிரண்டாம் தொடராண்டும் நாட்டிய நீ
எண்நீட்டி இங்கே இரு

வானொலி நிலையங்களிலும் இனி மதராஸ் என்பதற்குப் பதிலாகச் சென்னை என்றே சொல்லப்படுமென முதல்வர் கலைஞர் 29-9-70 அன்று அறிவித்தார். கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தொடர்ந்து சலுகைகள் வழங்கப்பட்டு வருமெனவும் முதல்வர் 2-10-70 காந்தியடிகள் பிறந்த நாள் விழாவில் அறிவித்தார்.

பிறக்கின்ற குழந்தைகளுக்கெல்லாம் இனி அண்ணாத்துரை என்றே பெயரிடுமாறு எழுமலை என்னும் ஊரின் பொதுக் கூட்டத்தில் பெரியார் கேட்டுக் கொண்டார். தியாகராய நகரில் திடீர்ப் பிள்ளையார் ஒன்று திடுமெனக் கிளம்பிய மோசடி பற்றிப் பெரியார் புதுவையில் பேசும் போது, சாணக்யன் கற்றுக் கொடுத்த ராஜதந்திர முறைதான் திடீர்ப்பிள்ளையார். அரச வருமானத்தைப் பெருக்க அவன் சொல்லிக் கொடுத்த தந்திரத்தைப், பார்ப்பனர் தமது வருமானம் பெருக இப்போது கையாள்கின்றனர் என்றார். 12-10-70 அன்று, தியாகராயநகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில், கவிஞர் சுரதா தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் தியாகாய நகர் பேருந்து நிலையம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீர்ப் பிள்ளையார் பிரச்சினை குறித்துப் பெரியார் பேசுவதாகவும் அறிவிப்பு, திடீரென்று பெரியார் வேலூர் மருத்துவமனை சென்று, tube பொருத்திக்கொண்டு, அப்படியே 13-ந் தேதி தர்மபுரி நிகழ்ச்சிக்காகப் புறப்பட்டு விட்டார்; அதனால் 12-ந் தேதி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று செய்தி தரப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்தக் கூட்டம், பின்னர் மூன்றாண்டு கழித்து நடந்தது. பெரிய வரலாற்றுச் சின்னமாகவே ஆகிவிட்டது. காரணம், அது நடைபெற்ற தேதி 19-12-1973 ஆகும். இப்போது திடுமென ஒத்திவைக்கப்பட்டதற்குக் காரணம், கூட்டம் நடத்துவோர் பேசுவோர் இருவருக்குமே, அரசுத் தரப்பிலிருந்து ஏதோ நெருக்கடி தரப்பட்டதாக, மக்களிடையே கருத்துப் பரவியது!

திருவரங்கம், திருவானைக் கோயில் முதலிய ஊர்களில் ‘பிராமணாள்’ எழுத்துகளை அழிக்குமாறு எச்சரிக்கை தரப்பட்டது. 16-ந் தேதியே வெற்றி பெற்றுவிட்டது! 27-10-70 முதல், பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்கரிப்போர் பட்டியல் தொடர்ச்சியாக "விடுதலை"யில் வெளிவந்தது. நாள்தோறும் வளர்ந்து வந்த இந்தப் பட்டியலின் புள்ளி விவரம் படிக்கச் சுவையானதாகும்:- 23-11-70-ல் 1005 பேர், 23-12-70-ல் 1503 பேர், 17-1-71-ல் 2014 பேர், 23-2-71-ல் 2509 பேர், 20-3-71-ல் 3000 பேர், 4-4-71-ல் 3500 பேர், 15-4-71 -ல் 4014 பேர், 25-4-71-ல் 4518 பேர், 7-5-71 -ல் 5037 பேர், 24-5-71-ல் 5528 பேர், 15-6-71-ல் 6001 பேர், 12-7-71 6501 பேர், 9-8-71-ல் 7005 பேர், என்று நீண்டுகொண்டே போயிற்று!

28-10-1970 பிற்பகல் 2-15 மணிக்குப் பெரியார், மணியம்மையார், வீரமணி, என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் வேனிலும், தஞ்சை கா.மா. குப்புசாமி முதலியோர் இன்னொரு தனிக்காரிலும் பம்பாய் புறப்பட்டளர். சிவ சேனையின் பிறப்பிடத்திலேயே - சிங்கத்தின் குகையிலேயே நுழைந்து, அதன் பிடரி மயிரைப் பிடித்துக் குலுக்குவது போல் - அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளப், பெரியார் பெரும்படை அணி திரண்டது. பம்பாயில் வழியெங்கும் வரவேற்புகள். மேடையில் பெரியாருக்கு மாலைகள் சூட்டி முடிக்கவே 30 நிமிடங்கட்கு மேலாயிற்று. பி.என். ராஜ்போஜ் தலைமை ஏற்றுப், “பெரியார் நாட்டில் செய்த பெரிய புரட்சிகரமான பணிகளால், தமிழ் நாட்டில் இந்து மதத்தின் பிடி தளர்ந்து, அதன் காரணமாக இப்போது அங்கே அண்ணாவின் ஆட்சியும், நடைபெற முடிகிறது" என்றார். டாக்டர் பொராலோ பெரியார் படத்தைத் திறந்து வைத்து, இந்தியாவிலேயே சிறப்பான ஆட்சி நடப்பது தமிழ் நாட்டில் மட்டுந்தான் எனப் புகழ்ந்தார். தொல்காப்பியன், நன்னிலம் அ. நடராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பெரியார் பேசும் போது, “இந்திய வரலாற்றில் வேறெந்த ஆட்சியாளரும் சாதிக்காத அருஞ்சாதனைகளைச் சாதித்துக் காட்டியவர் அறிஞர் அண்ணா, ஒரு பகுத்தறிவு ஆட்சியை நிறுவியது சாதாரணம் அல்ல. அண்ணா பகுத்தறிவாளர் ஆகையினால், சாதி மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் தயவு செய்து அவர் சிலையைத் திறக்காதீர்கள். கடவுள் இல்லாமல் ஒரு மயிர்கூட அசையாது என்று நம்பிக்கையோடு சொல்கிறவன்; இவன்தானே சீப்பை எடுத்துச் தன் தலையைச் சீவிக் கொள்கிறான்? நம்மை ஒரு நாய் கடித்தால், நாயைக் கோபிப்பதில்லை; நாயை ஏவிவிட்டவனைக் கோபிக்கிறோம். அதைப்போல் நம்மை ஒரு மனிதன் அடித்தால், ஏவிவிட்ட கடவுளைக் கோபிக்காமல், நம்மை அடித்த மனிதனையேதானே கோபிக்கிறோம். இது எப்படி நியாயமாகும்? என்னிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்து, கொஞ்சம் அவகாசம் தந்தால், கழுதையைக்கூட மகாத்மா ஆக்கிக் காட்டுவேன் நாம் சாதாரணமாக ஒரு பொருளைத் தொலைத்துவிட்டால், தொலைந்த இடத்தில்தானே தேடுவோம். அதே போல் நாம் நமது அறிவைத் தொலைத்த இடமாகிய கடவுள் சாஸ்திர புராணங்களில்தானே தேடவேண்டும்?" என்றெல்லாம் அற்புதமான கருத்து விளக்கம் செறிந்த உரை நிகழ்த்தினார் பெரியார்.

"விடுதலை" மேனேஜராக இருந்த தாதம்பட்டி எம். ராஜாக்குப் பதிலாக, நாகரசம்பட்டி என்.எஸ். சம்பந்தம் 1-11-70 முதல் மேலாளர் எனப் பெரியார் கையெழுத்துடனான “விடுதலை” செய்தி தெரிவித்தது. சென்னை குருநானக் கல்லூரிக் குழுவின் செயலாளர் பி.என். தவான் அண்ணாவைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொன்னார். அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, குடிசைகள் தீப்பிடித்து எரிந்தன அல்லவா? அப்போது நிவாரண நிதியாக சீக்கியர்கள் சங்கத்தில் முதல்வர் அண்ணாவிடம் 10,000 ரூபாய் நன்கொடையாக வழங்க முன்வந்தபோது, பெற்றுக்கொண்ட அண்ணா , “இந்த சீக்கிய சமுதாயம் போர் முனையில் நமக்காகக் காலமெல்லாம் இரத்தம் சிந்துகின்ற வீர சமுதாயம். இந்தத் தியாக வரலாறு படைக்கும் மக்கள் தந்த 10 ஆயிரம் ரூபாய்க்காக, நான் நன்றி சொன்னால், இவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?" என்று பெருந்தன்மை துலங்கப் பேசினாராம்.

பெரியார் பம்பாய் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு, 8-11-70 சிவகங்கை நிகழ்ச்சிக்குச் சென்றார். பண்ணுருட்டியில் பேசும் போது, “தி.மு.க. ஆட்சி நடப்பதால் தான் நாம் இப்போது நாடெங்கும் பகுத்தறிவாளர் மன்றங்கள் திறக்க முடிகின்றது. வேறு ஆட்சியாக இருந்தால் இந்த நேரம் தடை போட்டிருப்பார்களே" என்றார் பெரியார். “இராஜாஜி (ஒப்பாரி) அழுகை” என்ற மகுடத்தின் கீழ் “சுதந்திரமும் ஜனநாயகமும் இந்திய மக்களுக்கு உயிர்நாடி. இந்திராகாந்தி உதவியுடன் கம்யூனிசம் இவை இரண்டுக்கும் பேராபத்தை விளைவிக்கிறது என்று “சுயராஜ்யா” இதழில் இராஜாஜி பிரலாபிக்கிறார். இவருடைய அழுகையை நாம் மதிப்பதா? கம்யூனிசம் வெற்றி பெறப் பாடுபடுவதே நம் கடமையாகும்? அதற்காகவே நாம் இந்திராவை ஆதரித்திட வேண்டும் (பார்ப்பனர் தவிர்த்து), எவ்வளவு பெரிய திருட்டு அயோக்கியனும், மேல் ஜாதிக்காரனாக, எஜமானனாக, முதலாளியாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதுதான் இராஜாஜியிசமா?" எனப் பெரியார் வினவினார்.

நாடெங்கும் பகுத்தறிவாளர் கழகம் ஏற்படுத்துங்கள். கொள்கையை அனுசரிப்பதில் கண்டிப்பாயிருங்கள். நெற்றிக்குறி மதச் சின்னம் அணியாதீர்கள். உறுப்பினர் குறைவானாலும், பகுத்தறிவாளர்களையே உறுப்பினர்களாய்ச் சேருங்கள் - என்று பெரியாரின் பெட்டிச் செய்தி வேண்டுகோள் வெளியாயிற்று. 30-11-70-ல் “தமிழர் நிலை" என்ற பெரியாரின் தலையங்கம் ஆழ்ந்த கவலையோடும் பொறுப்போடும் தீட்டப்பட்டிருந்தது:- “தமிழ் நாட்டில் இன்று தன் காலில் நிற்கும் தமிழன் கட்சி ஒன்றுமில்லை . காமராஜரும் நிஜலிங்கப்பாவும் தங்கள் கட்சியோடு போய் இராஜாஜியிடம் சரணடைந்து விட்டார்கள். நடிகர் ஒருவரை மக்கள் கடவுளாகக் காண்கின்றார்களாம். தி.மு. கழகத்துக்குக் கஷ்டம் வருமானால் நிச்சயமாக அது வெளியிலிருந்து வராது. என்னதான் திராவிடர் கழகத்தை அவர்கள் மதிக்காவிட்டாலும், கோபுரம் தாங்கும் பொம்மைபோல் என்னை நானே நினைத்துக்கொண்டு, குடும்பஸ்தனைப் போலப் பெரிய கவலையோடு, தி.மு. கழகத்தை ஆதரிக்கிறேன் என்பதில் மாற்றமில்லை ! கலைஞர் கருணாநிதி அவர்களின் புத்திசாலித் தனத்தைப் பற்றி நிறையப் படித்து வருகிறோம். அடுத்தபடியாகவும் இவர் ஆட்சி வந்தால்தானே வேலை. இல்லாவிட்டால் தமிழ் நாடே சூத்திர நாடாகிவிடுமோ!” என்றெழுதினார்.

எல்லா வகுப்பாருமே பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் என்கிற மசோதாவை, அறநிலையத் துறை அமைச்சர் கே.வி. சுப்பய்யா 30-11-70-ல் சட்டமன்றத்தில் முன் மொழிந்தார்; 2-12-70 அன்று எதிர்ப்பின்றி அம்மசோதா நிறைவேறியது. பகுத்தறிவாளர் கழகம், சொசைட்டி ஆக்டின்படி 2-12-70 அன்று பதிவு செய்யப்பட்டது. “ஆச்சாரியார் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்கவோ ஒழிக்கவோ தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டத்தை ஆயுதமாக எடுத்தாளப் பார்க்கிறார். அதற்கு ஆட்சியாளரும் இடந்தரக் கூடாது. எனக்குத் தமிழ்மீது வெறுப்பில்லை. நான் வீட்டிலும் வெளியிலும் பேசுவது தமிழ். படிப்பது தமிழ். எழுதுவதும் தமிழ். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்று, சில முறைகளைப் புகுத்தியவனும் நான்தான். தமிழ், வளர்ச்சியடையாத பழங்கால மொழியாக அப்படியே இருந்து வருகின்றது. விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை . ஆகையால் தமிழில் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பில் சலுகை தருவதாக அரசு கூறவேண்டியதாகிறது. இது வரவேற்கத் தக்கதே. ஆனாலும் இதைச் சாக்காக வைத்து, ஆட்சியை எதிர்க்கிறார்கள். இனி காங்கிரஸ் ஆட்சி வந்துவிட்டால் என்ன செய்வது? என்னால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை . எப்படிப் போராடுவது?" என்று பல அய்ய வினாக்களை, “நமது கடமை” என்ற தலைப்பின் கீழ்த் தாமே எழுதிய "விடுதலை" டிசம்பர் 1-ந் தேதி தலையங்கவாயிலாகப் பெரியார் உருவாக்கினார். சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு 20-12-70-ல் நடைபெறும் என 4-ந் தேதி ஒரு செய்தி வந்தது; பிறகு, ஜனவரி 16, 17-ல் நடக்கும் என 8-ந் தேதி திருத்தமான செய்தி; கடைசியாக 1971 ஜனவரி 23, 24 என ஒரு முடிவான செய்தி! சரித்திரத்தில் முதன் முறையாக ஒரு பார்ப்பனரல்லாதார் ரெவின்யூ போர்டு முதல் உறுப்பினராக 9-12-70 முதல் நியமிக்கப்பட்டார். அவர் பி. சபாநாயகம் அய்.ஏ.எஸ்.

பெரியார் ஆத்தூரில் 3-12-70-ல் பேசும் போது, “பகுத்தறிவாளர் என்றால் அவர்களுக்கு நாடு, மொழி, இன்ன ஆட்சி என்பது போன்ற பற்று பாசம் இருக்கக்கூடாது. ஆனால் நாட்டால், மொழியால், ஆட்சியால் மக்களுக்கு என்ன பயன் என்று பார்க்கவேண்டும்" - என்றார். கண்ணை மூடிக்கொண்டு நாம் யாவரும் முனிசிபல் தேர்தல்களில் தி.மு.க. கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று எழுதினார் பெரியார். கவிஞர் கண்ணதாசன் ஒரு சுவையான செய்தி தெரிவித்ததாக “விடுதலை" 11-12-1970 ஏடு தெரிவித்தது. தமிழ் பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்று மூன்றாண்டுகளுக்கு முன்பே சொன்னவர் காமராசர். இப்போது ஏன் எதிர்க்கிறார் என்பது அரசியல். அப்போது தமிழ் பயிற்று மொழி என்பதை “தினமணி", "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஏடுகள் எதிர்த்தபோது, “இந்தப் பாப்பாரப் பையங்க ஆங்கிலம் இருந்தால்தான் தங்க கையில் ஆதிக்கம் இருக்கும்னு பாக்கிறாங்க, படிச்சா தமிழ் படி; இல்லைனா இந்தி படின்னு சொல்லிப் போடுவோம்” என்றாராம் காமராசர்,

12-ந் தேதி சிண்டிகேட் காங்கிரஸ், சுதந்தரா, ஜனசங்கம் ஆகிய கட்சிகளின் கடையடைப்பு ஹர்த்தால் வேண்டுகோள் தோல்வியுற்றது. "எதிர்க் கட்சிகளின் நிலை" என்ற தலையங்கத்தில் பெரியார் அபாய அறிவிப்புத் தெரிவித்தார்; “காமராசரிடம் இப்போது ஆட்களே இல்லை. இருப்பதெல்லாம் கக்கன், சம்பத்து, சிவாஜிகணேசன் இவர்கள் தவிரச், சரியான கொலைபாதகக் கூட்டத்திடம் சிக்கிக் கொண்டிருக்கிறார். பத்திரிகை வசதியும் கிடையாது. எல்லா யோசனைகளுக்கும் ஆச்சாரியார்தான். ஆகையால் பொது மக்களே! மாணாக்கர்களே! ஆசிரியர்களே! அரசுப் பணியாளர்களே தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால் நீங்கள் தொலைந்தீர்கள். ஆகவே நன்றாகச் சிந்தியுங்கள்!" என்று.

15-12-70 அன்று சுப்ரீம் கோர்ட், நாடாளுமன்றம் நிறைவேற்றிய ராஜமான்ய ரத்துச் சட்டம் செல்லாதென, அரசுக்கு எதிர்ப்பாகத் தீர்ப்பு வழங்கி விட்டதால், நாடாளுமன்றம் கலைக்கப்படுமோ என்ற கேள்வி பிறந்தது. வீரமணியின் சகலையான பேராசிரியர் சா.கு. சம்பந்தம் காலமானார்; ஓட்டேரி இடுகாட்டில் பெரியார் தலைமையில் 16-12-70-ல் இரங்கல் கூட்டம் நிகழ்ந்தது. 18-12-70 அன்று சேலம் ரோசுசெட்டியார் என்றழைக்கப்படும் ரொ.சு. அருணாசலம் மறைவு பெரியாருக்கு ஒரு கை போனது போலாயிற்று. 19-ந் தேதி அவருடைய அடக்கத்துக்குப் பெரியார் சென்றிருந்தார். 30-ந் தேதி நினைவு நாளில் அவர் படத்தையும் பெரியார் திறந்து வைத்தார். 16, 18 தேதிகளில் பெரியார், காமராஜர் - ராஜாஜி உறவு பற்றித் தலையங்கம் தீட்டியிருந்தார். “ஆச்சாரியாரின் ஜாதிப்புத்தியே இப்போது காமராஜரின் புத்தியாகிவிட்டது. காமராஜரும் நானும் ஒன்றுதான் என்று ஆச்சாரியார் சொல்கிறார். ராஜாஜியும் நானும் ஒன்றுதானெனக் காமராஜரும் சொல்லுகின்றனர். இவர்கள் இருவரையுமே தலையெடுக்க வொட்டாமல் தோல்வியுறச் செய்து, தமிழ்மக்கள் ஏமாறவில்லை என்று காட்டவேண்டும். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் செய்து விடாதீர்கள்' என்பது பெரியார் கருத்து.

“மட்டக் குதிரையையும் எருமையையும் ஒரு வண்டியில் கட்டி ஓட்டினால் எப்படி இருக்கும்? அதுபோலக் காமராஜரும் இராஜாஜியும் சேர்ந்து இழுக்கும் ஜனநாயக வண்டியின் கதி என்னாகும்? வண்டி ஓடுமா? போய்ச் சேருமா?" எனவும் 25-ந் தேதி பெரியார் பெட்டிச் செய்தி தந்தார். அடுத்த நாளும் இன்னொன்று, “கலைஞர் ஆட்சிக்கு அனுகூலமான இந்திரா ஆட்சியும், இந்திராவைக் கட்டுப்படுத்தக் கூடிய வசதியும் வாய்ப்புங் கொண்ட கலைஞர் ஆட்சியும் நமக்கு நல்ல ஆட்சியா? அல்லது இரண்டுக்கும் கேடான, எதிரான, இராஜாஜி - காமராஜர் கூட்டணி ஆட்சியா?" என்பதாக!

27-12-1970 நள்ளிரவுச் செய்தி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

பழனியில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி துவங்கப்படுமென அமைச்சர் கே.வி. சுப்பய்யா அறிவித்தார். தமிழ் இசைச் சங்கம் நடத்தும் இசைவிழா நிகழ்ச்சிகளில் 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர் கள்தான் 100க்கு 99 இடத்தை ஆக்கிரமித்திருப்பதாக “விடுதலை” சுட்டிக் காட்டியிருந்தது. தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும் - ஏன்? என்று பெரியார் எழுதியு புத்தகம் ஒன்று; தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் - என்று வீரமணி எழுதிய புத்தகம் ஒன்று - ஆக இரண்டும் தக்க சமயத்தில் பிரசுரமாகி விற்பனையாகி வந்தன. 29-12-70-ல். பெரியாருக்குக் காய்ச்சல், தலைவலி, மயக்கம். தலைகீழாய்க் கீழே தள்ளுவது போல் இருக்கிறது. சென்னை செல்வார் - என்று செய்தி 3-1-71 அன்று சென்னை பொது மருத்துவ மனையில் பெரியார் அனுமதிக்கப்பட்டார். 4-1-71 அன்று தமிழ் நாடு சட்டசபையும் கலைக்கப்பட்டது. அன்று இரவு பெரியார் மருத்துவ மனையிலிருந்தவாறே, மயிலாப்பூர் சென்று, கலைஞர் எழுதிய “தானே அறிவாளி" என்ற தேர்தல் பிரச்சார நாடகத்தை, ஆர்.ஆர். சபாவில் பார்த்தார். 5-ந் தேதி பகல் கலைஞர், நாவலர், ப.உ. சண்முகம் ஆகியோர், பெரியாரை மருத்துவ மனையில் கண்டு நலம் விசாரித்தனர். பெரியார் 6-ந் தேதி இல்லந் திரும்பினார். 5-1-71- முதல், நீண்டகால இயக்கப் பாடகர் நாகூர் இசை முரசு இ.எம். அனீஃபா, மேலவை உறுப்பினரானார்.

நாங்கள் நான்காண்டு காலம் கொள்கைப்படி ஆண்டோம். நாங்கள் செய்த எத்தனையோ காரியங்களில் எங்களுக்கு அனுபவம் போதாததால் எங்களுடைய judgement - ல் ஏதாவது தவறு இருந்தாலும் இருக்கலாம். இனி அப்படியும் நேராமல் பார்த்துக் கொள்ளுவோம். நமக்கு இப்போது முக்கியமானது இந்த இராஜாஜி - காங்கிரஸ் கூட்டு ஒழிந்தால்தான், மான வாழ்வு ஏற்படும். தவறியும் அவர்கள் வெற்றி பெற இடந்தரக்கூடாது. தாம் ஆட்சியில் அமர்த்திய இந்திராகாந்தி அம்மையாரையே இப்போது காமராஜர் எதிர்ப்பது ஏன்? சமுதாயப் பொருளாதாரத்துறையில் அந்த அம்மையார் ஏற்படுத்திய மாற்றந்தானே? அதேபோல் இங்கேயும் தாம் ஏற்படுத்திய தி.மு.க. ஆட்சியை ஆச்சாரியாரே எதிர்ப்பது ஏன்? சமுதாய பேதங்களைப் பாதுகாப்பதற்குத் தி.மு.க. இணங்காததுதானே காரணம்! இதைப் பொது மக்கள் நல்லவண்ணம் சிந்திக்க வேண்டும் - என்பதாகப் பெரியார் எழுதிவந்தார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், முன்பு பெரியாரின் இராமாயணப் பாத்திரங்கள் நூலைப் பறிமுதல் செய்தது செல்லாது என அந்த மாநில உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த செய்தி 20-1-71 அன்று பிரசுரமாயிற்று. ஜனவரி 23, 24 தேதிகளில் தமிழ்நாடு இருபெரும் மாநாடுகளை ஒருங்கே கண்ணுற்றது. சென்னை அசோக் நகரில் தி.மு.க. சிறப்பு மாநாடு, ஊர்வலம், வேட்பாளர் பட்டியல் இங்கு வெளியிடப்பட்டது. பிரச்சினைகள், வழக்குகள், வாதப் பிரதிவாதங்களுக்கு நிறைய இடமளித்த சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடும் இந்தத் தேதிகளில் நடந்தது. சேலம் ரத்தினசாமி பந்தலில் ரோசு அரங்கில் மாநாடு. ½ மைல் நீளமுள்ள பிரம்மாண்டமான ஊர்வலம். கருங்கடல் அலைகள் பெருங்குரல் எடுத்து அருங்காட்சி அமைத்திட ஒருங்கே திரண்டதோ என 50,000 கருஞ்சட்டை வீரர்களின் அணி வகுப்பு. ஊர்வலத்தில் தீமிதி, அலகு குத்திக்கொள்ளுதல், கரகம், காவடி ஆட்டம் முதலியவை. 10 அடி உயரமுள்ள ராமன் எரிக்கப்பட்ட ராவணலீலாக் காட்சியை 2 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். ஊர்வலத்தில் மத நம்பிக்கையைப் புண்படுத்தும் காட்சிகளை எடுத்துச் செல்ல வேண்டாமெனக் காவல்துறை அதிகாரிகள் கூறியபோது, எழுத்து மூலமாக அப்படித் தடைபோடும் உத்தரவு தரச்சொன்னார் பெரியார். தரப்படவில்லை. ஊர்வலம் சென்று கொண்டேயிருந்தபோது, எட்ட இருந்து யாரோ ஒரு கயவன், செருப்பு ஒன்றை வீசி எறிந்தான். கழகத் தோழர் ஒருவர், கையில் கிடைத்த அதை வீணாக்காமல், ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இராமன் படத்தின்மேல் செருப்பால் அடித்துக்கொண்டே வந்தார். இந்தப்படிச் செய்ய எந்தவிதமான திட்டமும் கிடையாது; ஆனால் இதைத்தான் பின்னர் பார்ப்பனப் பத்திரிகைகள் பெரிதுபடுத்தின!

மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவர் டி.வி. சொக்கப்பா எம்.ஏ.,எல்.டி; தலைவர் பெரியார்; திறப்பாளர் ஜி.டி. நாயுடு மூட நம்பிக்கைக்குப் பெரியார் (definition) இலக்கணம் கூறினார். Observation and experiment இரண்டுக்குமே உட்படாதது மூடநம்பிக்கை என்றார். மத உணர்ச்சியைப் புண்படுத்துவதாகக் கூறும் இ.பி.கோ. சட்டத்தை எடுத்துவிட வேண்டும்; கடவுளுக்கும் மதத்துக்கும் அரசு பாதுகாப்புத் தரக்கூடாது; சுப்ரீம் கோர்ட்டை எடுத்துவிட வேண்டும்; பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் செய்து புறக்கணிக்க வேண்டும்; ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது - என முற்போக்கான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேறின. இதில் கடைசித் தீர்மானத்தை, மனம் போன போக்கில், அயோக்கியத்தனமாகப் பொய்யாகத் திரித்துக் கூறிவிட்டார்கள் என்றார் பெரியார். இதை அவ்வாறு தவறாக வெளியிட்ட “இந்து", "இந்தியன் எக்ஸ்பிரஸ்", "தினமணி" பத்திரிகைகள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 1-2-71-ல் அவர்களுக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டது. 9-ந் தேதி அய்ந்தாவது மாகாண மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் வழக்குத் தொடங்கியது. இடையில், வழக்கு நடைபெறும் போதே, “இந்து”ப் பத்திரிகை மீண்டும் பழைய முறையிலேயே ஒரு தடவை அந்தத் தீர்மானத்தைப் பிரசுரித்ததற்காகச், சென்னை உயர்நீதி மன்றத்தில், அவமதிப்பு வழக்குத் தொடுத்தபோது, 16-3-71 அன்று, “இந்து” நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியது.

30-1-71-ல் திருவாளர்கள் வி. ராமசாமியும், என். எஸ். ராமசாமியும் அய்க்கோர்ட் ஜட்ஜானார்கள். 18-ல் 15 பேர் தமிழராகி விட்டார்கள்; ஏன் பார்ப்பனருக்கு ஆத்திரம் வராது? என்று கேட்டார் பெரியார். 31-1-71-ல் சென்னையில் கா. து. நடராசன் தலைமையில் நடந்த பகுத்தறிவாளர் கூட்டத்தில் கா. திரவியம் அய்.ஏ.எஸ்., கி.வீரமணி, பெரியார், சி.பி. சிற்றரசு ஆகியோர் உரை நிகழ்த்தினர். மயிலையில் ஒரு திருமண விழாவில் வீரமணி பேசிக்கொண்டிருக்கும் போது, விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் வெளியில் கூச்சல் போட்டனராம். தேர்தல் முடிவு தோல்வி என்பதாகத் தெரிந்துபோனதால், கலவரம் காலித்தனத்தில் பார்ப்பனர் இறங்குவார்கள்; ஜாக்கிரதை என்று பெரியார் 1-2-71-ல் எழுதினார். 2-ந் தேதி மயிலையில் பேசும்போது, தாங்கள் ஜெயிக்கும் நம்பிக்கையிருந்தால் காமராசர், கக்கன், சம்பத்து ஆகியோர் பார்லிமெண்டுக்கு நிற்பார்களா? எனக் கேட்டார் பெரியார்.

கற்பு என்ற சொல்லைப் பற்றிப் பெரியார் நிரம்ப ஆராய்ச்சி செய்திருக்கிறார். இது ஆண் பெண் இருபாலருக்கம் பொதுவானது. ஆனால், ஆரியக் கலாசாரத்தின்படி கற்பு என்பதற்குப் பரவிரதத்தன்மை என்று பொருள் கொண்டு, அதைப் பெண்களுக்கு மட்டும் உரித்தாக்கி விட்டார்கள். ஆங்கிலத்தில் Chastity அல்லது Virginity என்பதுகூட இருவர்க்கும் பொதுவானதுதான். ஒரு முறை ஆண் பெண் சம்பந்தம் ஏற்பட்டுவிட்டால் இருவருடைய கற்பும் கெட்டதாகத் தானே பொருளாக முடியும்? குழந்தை சுமப்பது ஒன்று தவிர பெண்களுக்கு மட்டுமே சொந்தமென்று சொல்ல என்ன இருக்கிறது? திருவள்ளுவர் கூடப் பெண்களுக்கு மட்டுமே கற்பை வலியுறுத்துகிறார். அதனால் தான் குறள்கூடப் பிற்போக்கான நூல்' - என்று பெரியார் கருதினார். பெண்ணடிமை தீர்ந்து ஆண் பெண் சமத்துவம் ஏற்படக் கற்பு என்ற சொல்லை இருவருக்கும் பொதுவாக ஒழுக்கம் என்ற பொருளில் வைத்துக்கொள்ளலாம் என்றார். பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலில் மிக நுட்பமாகவும் திட்பமாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் பெரியார் பல விஷயங்களையும் அலசியுள்ளார்.

மார்ச் மாதம் 1, 4, 7 தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறத் திட்டம். அதனால் பிப்ரவரி முழுதும் தேர்தல் பிரச்சாரம் மும்முரமாயிருந்தது. தமிழ் நாட்டில் இந்திரா காங்கிரசின் ஒத்துழைப்போடு தி.மு.க. களத்தில் நின்றது. வலது கம்யூனிஸ்டுகள் ஆதரவும் உண்டு. மற்ற அணிகள் ஒன்றாக இணைந்தன. நடிகர் சோ என்னும் பார்ப்பனரும், சிவாஜிகணேசனும் காமராஜர் ராஜாஜி அணியில் பாடுபட்டனர். பெரியார் பிப்ரவரி மாதம், நிறையச் சுற்றுப் பயணம் செல்லாமல், எழுதுவதில் அதிக அக்கறை மேற்கொண்டார். காமராஜர் கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம். திடீர்ப் பிள்ளையார் போச்சு, பாடமொழிப் பிரச்சினை போச்சு, சேலம் வந்தது. சாதனை புரிந்து வரலாறு படைத்த தி.மு.க.வை ஆதரிப்பீர். மாட்டுச் சாணியை மிதிக்கத் தப்பி மனிதச் சாணியை மிதிப்பதா? இந்திரா மீது உள்ள கோபத்தில் இராஜாஜியை ஆதரிப்பதா? இதுவும் போதாதென்று இன்னொரு பார்ப்பனக் கட்சியான ஜனசங்கத்திடம் காமராஜர் சரணாகதி அடைவதா? தமிழராட்சி ஏற்படத் தமிழர்களான தி.மு.க.வுக்கே வோட்டளியுங்கள். ஆதாரமற்ற செய்தி பிரசுரித்த Hindu, Indian Express, தினமணி மீது கிரிமினல் வழக்குத் தொடரப்பட்டது. வோட்டர்களே! ஆதாரமற்ற செய்திகளை நம்பாமல் தி.மு.க.வுக்கே ஓட்டளியுங்கள் - என்கிற வாசகங்கள் "விடுதலை" யை நிறைத்தன.

12-2-71-ல் “பொறுமையாய் இருங்கள் தோழர்களே” என்ற தலையங்கத்தில் பெரியார் எழுதினார்:- “சேலம் மாநாட்டைச் சாக்காக வைத்து, தி.மு.க.வை வரவிடாமல் செய்ய முயலுகிறார்கள். மக்கள் இன்று இருக்கின்ற மனப்பக்குவமான நிலையில், அவர்களை ஒன்றும் அசைக்க முடியாது என்கிற தைரியம் எனக்கு உண்டு. ரஷ்யாவில் பாதிரியார்களைக் கொன்று, மாதா கோயிலை வெடிவைத்துத் தகர்த்து, சிலுவைகளைப் பிளந்து நெருப்பிலிட்டுக் கொளுத்தி, வேதங்களையும் தீயிலிட்டு எரித்தார்களே. அங்கு என்ன கெடுதல் வந்து விட்டது? இப்போது, நம்மால் ஏதாவது கலவரம் மூண்டு விட்டால், பார்ப்பானுக்கு அது லாபமாகிவிடும். ஆகையால் என்னதான் ஆத்திர மூட்டினாலும் பொறுமையாக இருங்கள்!” என்று பெரியார் தமது தோழர்களைக் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிரிகள் சும்மாயில்லையே! பெரியார் கொடும்பாவி கொளுத்தினார்கள். சிலையில், உருவப் படத்தில், செருப்படி நடத்தினார்கள். அப்போதும் பெரியார் என்ன எழுதியிருந்தார் - “என் உருவத்தை மட்டுமல்ல; என்னையே செருப்பால் அடித்தாலும், லட்சியமோ கவலையோ கொள்ளாதீர்கள்! இது நமக்குப் புதிதல்ல. இதெல்லாம் கிடைத்தால்தான் நமது கொள்கையில், லட்சியப் பாதையில் நாம் வேகமாய்ச் செல்வதாக அர்த்தம். இதற்குப் பதில் காரியமாக, எதிரிகள் வெட்கப்படும்படி, தி.மு.க. வெற்றி பெறச் செய்யுங்கள், போதும்" என்றுதான்!

மணியம்மையாருக்குக் கொஞ்சம் ஆத்திரம் மூண்டுவிட்டது. “தாய்மார்களே, சிந்தியுங்கள்! பார்ப்பனர் முயற்சியால் பெரியார் படத்தையும், சிலையையும் செருப்பால் அடிக்கிறார்களாம் பெரியார் இல்லாவிட்டால் நமக்கு ஏது இந்த உயர்நிலை என்று எண்ணிப் பார்த்துப் பெரியாருக்கு நன்றி பாராட்டச் சொல்லவில்லை உங்களை. தேர்தலில் உங்கள் கடமை என்ன? சிந்தித்துப் பாருங்கள்! நமக்கு அனுகூலமான ஆட்சி ஏற்பட வேண்டாமா, என அன்புடன் கேட்கிறேன்!” என்பதாக ஒரு பெட்டிச் செய்தி 18-ந் தேதி அம்மா அவர்களின் பெயரில். “ஒரு ஆரியனாவது தவறியும் திராவிடன் பக்கம் இருக்கிறானா? திராவிட மாணவர்களே! நீங்கள் இதிலாவது ஆரிய மாணவர்களைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்! இனி ஆரியர் திராவிடர் வெளிப்படையாக இரண்டாய்ப் பிரிய வேண்டியதுதான்" என்று 19-ந் தேதி பெரியார் எழுதியிருந்தார். 17-ந் தேதியன்று திருச்சியில், மாணவர்கள் திரளாக வந்து பெரியாரைச் சந்தித்துத், தமது நல்ல எண்ணத்தைத் தெரிவித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றனர்.

மாத இறுதியில் பெரியார் பயணத்தை முடுக்கிவிட்டார்; 20 திருச்சி, 21 தஞ்சை , 22 நன்னிலம், 23 சேலம், 24 திருப்பத்தூர் (வ.ஆ.), 25 சீரங்கம், 26 சிதம்பரம் என்பதாக, 20-2-71 காலை 8 மணியளவில் பெரியார்பால் பேரன்பு பூண்ட நண்பர் சே. மு. அ. பாலசுப்ரமணியம் திருச்சியில் காலமான உடன், பெரியாரும் மணியம்மையாரும் சென்று துக்கம் விசாரித்தனர்.

25-2-71 அன்று இரவு 11-45 மணிக்கு ஈரோட்டில் பெரியாரின் இலட்சியத் தங்கையான எஸ்.ஆர். கண்ணம்மாள் மறைந்தார். பெரியார் சீரங்கத்திலிருந்து ஈரோட்டுக்கு விரைந்தார். முதல்வர் கலைஞர் அனுதாபத் தந்தி அனுப்பியிருந்தார்.

சென்னைக் கடற்கரைப் பெருமணற் பரப்பில் 21-ந் தேதி சோ என்ற ஜனசங்கவாதியும், 25-ந் தேதி இராஜாஜி, காமராஜர் ஆகியோரும் பேசிய இருபெரும் பொதுக்கூட்டங்களுக்கு வந்திருந்த கார்கள், சென்னையில் இதுவரை எப்போதும் வந்ததில்லை. காமராஜர் நெற்றியில் இராஜாஜி வெற்றித் திலகமிட்டு ஆசீர்வதித்தார். இந்த இரு கூட்டங்களையும் கண்டு, ஈசிச்சேர் பாலிட்டீஷியன்ஸ், நிச்சயம் இத்தோடு தி.மு.க. வீழ்ந்தது; இந்திராவும் ஒழிந்தார் என மதிப்பிட்டனர்.

முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த பின் திருச்சியில் 3-3-71 அன்று நிருபர்களிடையே பேசிய முதல்வர் கலைஞர் “முன்பு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையைப் பெரியார் துவக்கினார். இந்தத் தேர்தலில் இராஜாஜி துவங்கியிருக்கிறார்" என்றார். 8-3-71 அன்று காமராஜர் இராஜாஜி வீட்டுக்குச் சென்றிருந்தார். முடிவுகள் வரத்தொடங்கும் நேரமாகையால், தமிழ் நாட்டு மந்திரி சபையை எப்படி அமைப்பது என்பது குறித்து இருவரும் பேசியதாக ஒரு சாரார் கூறினர். தேர்தல் பயம் மிகுந்ததால் போனதாகவும் இன்னொரு தரப்பில் கூறப்பட்டது. எதற்குப் போனார்களோ? 11-3-71 அன்று “விடுதலை"யில் முதல் பக்கச் செய்தி - இது தேர்தல் அல்ல இனப்போர் என்று சொன்ன தந்தை பெரியார் வெற்றி - இதுவரை வெளிவந்த முடிவுகளில் சட்ட மன்றத்திற்கு தி.மு.க. 111, சிண்டி. காங்கிரஸ் 5, சுதந்தரா 5, பார்வர்ட் பிளாக் 3, வலது கம்யூ 1, லீக் 3, பி.சோ. 1, விவசாயி 1, சுயே. 2.

“உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை இல்லை. எனக்குப் பழி நீங்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது.

ஈ.வெ. ராமசாமி."

என்று 11-ந் தேதி பெரியார், கலைஞருக்கக் தந்தி அனுப்பினார். 12-ந் தேதி காலை எல்லா அமைச்சர்களும் வந்து தந்தை பெரியாருக்கு மாலை சூட்டினார்கள். பெரியாரோடு சேர்ந்து அனைவரும் அண்ணா சதுக்கம் சென்று மலர் வளையம் வைத்தனர். அண்ணா சிலை அருகே இராஜாஜி காமராஜர் படங்கள் நெற்றியில் பட்டை நாமத்துடன் விளங்கியதை மக்கள் அனைவரும் கண்டு நகைத்தனர். பத்திரிகை உலகம் படுத்தியபாட்டை நினைத்தோ என்னவோ, பெரியார், 1 தேதி ஏட்டில், சீக்கிரம் ஓர் ஆங்கில தினசரி துவக்கிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். இன்னொரு பெட்டிச் செய்தியில் அண்மையில் எடுக்கவிருக்கும் (Census) மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், எல்லாரும் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்றும், தங்களுக்கு ஜாதி இல்லை என்றும் தகவல் தருமாறு வேண்டுகோள் விடுத்தார் பெரியார்.

13-3-71 "விடுதலை"யில் இராஜாஜிக்குப் பதிலளிக்கும் தலையங்கத்தைப் பெரியார் தீட்டினார். “இது தேர்தல் அல்லவாம்!” என்பது தலைப்பு, "இது தேர்தல் அல்ல, அசிங்கமான பர்மிட், லைசன்ஸ், பணபலம் பெற்ற வெற்றிதான் என்கிறார் இராஜாஜி. இப்படி எழுத இவருக்கு மானம் வெட்கம் இல்லையா? அன்னக்காவடிப் பார்ப்பனர் எத்தனையோபேர் இன்று தொழிலதிபர் - கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்களே யாரால்? எப்படி? நீங்கள் அதற்குள் கற்பனை மந்திரி சபை அமைத்தீர்களே, எந்த நம்பிக்கையில்? தோற்றுப் போனதோடு, தவறான காரணம் வேறா காட்டுகிறீர்கள்? என்னைப் பொறுத்தவரையில் இது சேலம் சம்பவத்துக்குக் கிடைத்த பாராட்டுதல் என்றே கருதுகிறேன். (அங்கே வெற்றி பெற்ற தி.மு.க எம்.எல். ஏ. இருவரில் ஒருவர் ராஜாராமன், இன்னொருவர் ஜெயராமன், தமிழர்கள் இனியும் ஏமாந்து சும்மாயிருக்கமாட்டார்கள். ஆகையால் நீங்கள் உங்கள் இனத்தாருக்கு இனியும் தவறான வழிகாட்டாதீர்கள்!" என்று.

“முரசொலி"யோ இந்துவின் திமிர் இன்னும் அடங்கவில்லை; அண்ணா எவ்வளவோ பாடுபட்டு வகுப்பு ஒற்றுமை உண்டாக்கிவைத்தார்; இந்த ஒரு மாதத்தில் அதையெல்லாம் தரைமட்டமாக்கிவிட்டீர்களே! என்றே இடித்துக் காட்டிற்று. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 184 பேர் தி.மு.க. (1967-ல் 138) இந்த முறை தி.மு.க. தவிர்த்த மற்றக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து 50 தான். 14-3-71 அன்று தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், என்.வி. நடராசன் தலைமையில், நாவலர் முன் மொழிய, எம்.ஜி.ஆர். க. அன்பழகன், மதுரை எஸ். முத்து வழிமொழிய, மீண்டும் கலைஞரே தலைவராகப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 15-3-71 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம்
கொள்ளாமல், வெளியில் கடலோடு கலந்த மக்கள் வெள்ளம்; உள்ளே பதவி ஏற்ற 14 அமைச்சர்களும் அவ்வப்போது வந்து தந்தை பெரியாரிடம் வணங்கி வாழ்த்துப் பெற்ற காட்சி மறக்கவொண்ணா மாட்சி, வரலாற்றின் ஆழமான சாட்சி.

“நமது மந்திரிசபை" எனும் சிறப்புத் தலைப்பிட்டுப் பெரியார் 15-ந் தேதி எழுதிய “விடுதலை"யின் தலையங்கத்தில், “இந்தப் புதிய மந்திரிசபையில் எல்லா ஜில்லாக்களுக்கும் ' பிரதிநிதித்துவம் இருக்கிறது. கன்னியாகுமரி நீலகிரி, தர்மபுரி போன்ற சிறிய மாவட்டங்களுக்கு இல்லை; தஞ்சைக்கு மூன்று போய்விட்டது. அதேபோல் பார்ப்பனர் தவிர மற்ற ஜாதிகளுக்குப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். சைவருக்கு இரண்டு, அதிகம்தான். என்றாலும் மொத்தத்தில் பரவாயில்லை. வஞ்சனையாக ஒன்றுமே செய்யப்படவில்லை என்று திருப்தி கொள்ளலாம். இந்த நேரத்தில் கலைஞர் தலைவராயில்லாமல் வேறு யாரிருந்தாலும், நாம் ஒழிந்திருப்போம். இதைப் பற்றி எனக்குத் தெரிந்த அளவு விஷயங்கள், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்காது! இது போதாது. கலைஞர் கட்சியின் சர்வாதிகாரியாகவே ஆக்கப்பட வேண்டும். அவர் இப்போது செய்துள்ள எல்லாக் காரியங்களையும் நான் மனநிறைவோடு ஏற்றுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் தனியே பார்ப்பனர் மீது எந்த வெறுப்புணர்ச்சியுமில்லை, அவர்கள் உயர்ந்தவர்கள் என்கிற மனப்பான்மையை ஒழிக்க வேண்டும் என்பதுதான்! மற்றபடி இனி கடவுள் ஒழிப்பிற்காக 5,000 10,000 பேர் சிறை செல்ல, சிலர் கொல்லப்படத் தயாராகுங்கள்! என் அடுத்த அறிவிப்பிற்காகக் காத்திருங்கள்” என விளக்கியிருந்தார் தந்தை பெரியார். இவரைப்பற்றி முதல் அமைச்சரின் கருத்து என்ன? என்று, நிருபர்கள், பதவி ஏற்றவுடனேயே கலைஞரிடம் கேட்டனர். “தந்தை பெரியார் சமூக சீர்திருத்தப் பணிபுரிபவர். அவரது சமுதாய சீர்திருத்த வேலையில் அரசு தலையிடாது. யாருடைய மனமாவது புண்படுவதாகப் புகார் கூறப்பட்டால், அப்போது அரசு கண்காணிக்கும்" என்றார் கலைஞர் 15-3-71 அன்று.

மாபெருந் தலைவரான காமராஜர், நாகர்கோயில் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு தென்மாநிலங்களுக்கும் சிண்டிகேட் காங்கிரசின் ஒரே பிரதிநிதி அவர்தான். அது மட்டுமல்ல சிண்டிகேட், சுதந்தரா, ஜனசங்கம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சிகளின் கூட்டணிக்கே ஏகப்பிரதிநிதியும் அவரேதான். சேலம் நகராட்சியிலும், பாளையங்கோட்டை நகராட்சியிலும் உள்ள படிப்பகங்களில், பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லையென முடிவெடுக்கப்பட்டது 26-3-71 முதல் இது தவறு எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ரிட் மனு தாக்கல்
செய்தார். நீதிபதி ராமப்ரசாதராவ் அவர்கள், தவறாகாது என 21-5-71-ல் தீர்ப்பளித்தார்.

மது விலக்கு நீடிப்பால் மக்களுக்கு எவ்வித நன்மையுமில்லை எனப் பெரியார் எழுதினார். "கடவுள் இழிவு" பற்றித் தனது தர்மசங்கடமான நிலை குறித்தும் 28-ந் தேதி பெரியார் ஒரு தலையங்கம் தீட்டினார்:- "இராமனை இழிவுபடுத்தியதாக என்மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு நான் இதுவரை எந்த விதமான பதிலோ சமாதானமோ சொல்லவில்லை. அதற்குக் காரணம் தி.மு.க. விஷயத்தில் எனக்குள்ள தாட்சண்யம்தான். பல ஊர்களிலும் எனது தோழர்கள் இந்தப்படியாக இராமனை அல்லது கடவுளை இழிவு செய்யப்படவே விரும்புகிறார்கள். போலீசார் அங்கெல்லாம் தலையிட்டு, நிறுத்திவிடுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். இப்படிக் கேட்டுக்கொள்வதும், தடை செய்வதும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். இந்தக் காரியங்களுக்கு இது அனுகூலமான காலம். இது வெறும் ஆத்திக நாத்திகப் பிரச்சினையே அல்ல. மானவமானப் பிரச்சினை. இவற்றைச் செய்வதில் எனக்கு மக்கள் ஆதரவு நிரம்ப உண்டு. இது சம்பந்தமாய் ஆட்சியாளர்க்குச் சந்தேகம் வேண்டாம். இப்படி ஏதாவது நான் செய்யாமலிருந்தால் மக்கள் என்னைக் கைவிட்டு விடுவார்கள்!" என்பதாக.

1-4-71 அன்று இரவு 11 மணிக்கு சென்னை பொது மருத்துவ மனையில் பாவலர் பாலசுந்தரம் மறைந்தார். 3-4-71-ல் அவர் சடலம் கண்ணம்மா பேட்டை இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. 2, 3 தேதிகளில், “நாளை ஸ்ரீ ராம நவமி. ராமன் படத்தை உங்கள் வீடுகளில் கீழே வைத்துச் செருப்பால் அடித்துவிட்டு, விரும்பினால் உங்கள் பெயரைக் கொடுங்கள். வெளியிடலாம்" எனப் பெரியார் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இராமன் படத்தைச் செருப்பாலடித்தோர் பட்டியல் 7-4-71-முதல் 22-4-71 வரை “விடுதலை"யின் கடைசிப் பக்கத்தை நிறைத்து வந்தது. 4-4-71 அன்று, சுயமரியாதைத் திருமணங்கள் புதுச்சேரி ராஜ்யத்திலும் சட்டப் பிரகாரம் செல்லு படியாகுமெனச் சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல், மே, மாதங்களில் பெரியார் இடையறாத சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மதுரையில் பகுத்தறிவாளர் கழகம் துவங்கப்பட்டபோது, பெரியார் முன்னிலையில் பெண்கள் ஒன்றுகூடி, சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்பதாகக் கூறினர். பார்ப்பன ஏடுகளுக்கும் அங்கே தீயிடப்பட்டது.

கவிஞர் சலகண்டபுரம் ப. கண்ணன் (முன்னாளில் ஜே.பி. கிருஷ்ணன்) 21-4-71 இரவு 9-30-க்கு மறைந்தார். “ஆரம்ப காலத் தொட்டுக் கடைசிவரை கொள்கைக்காகப் பாடுபட்டவர். இலட்சியவாதி. சிறந்த சீர்திருத்த எழுத்தாளர்” எனப் பாராட்டி இரங்கலுரைத்தார் பெரியார், பி. சபாநாயகம், அய்.ஏ.எஸ். தலைமைச் செயலாளராகவும், சி.ஜி. ரங்கபாஷ்யம் அய்.ஏ.எஸ். மின்வாரியத் தலைவராகவும் 8-4-71-ல் நியமிக்கப்பெற்றனர். புரட்சிக் கவிஞரின் 80-வது பிறந்த நாளை ஓட்டி 29-4-71 அன்று புதுவை அரசு விடுமுறை வழங்கியது. பாரதிதாசன் இல்லத்தை அரசுடைமை ஆக்கி அங்கே நூலகமும் அமைத்தது. 1-5-71 முதல் மதுரை நகராட்சி, மாநகராட்சி அந்தஸ்து பெற்றது. மதுரைக் கார்ப்பரேஷன் முதல் மேயராக எஸ். முத்து நியமிக்கப்பெற்றார். (சென்னை கார்ப்பரேஷன் முதல் மேயர் குமாரராஜா M.A, முத்தையா செட்டியார்) 2-5-71 அன்று இராஜாஜி வீட்டு முன்னர், அவர் பென்ஷன் வாங்கக் கூடாது; தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2-5-71-ல் தஞ்சையில் பெரியார், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கி வைத்தார். 7-ந் தேதி சென்னையில், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அமைச்சரவைக்குப் பாராட்டுவிழா பெரியார் திடலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞரும் அமைச்சர்களில் நாவலர் நெடுஞ்செழியன், அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து ஆகியோடும் பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர் ஆயினர்.

திருவாரூரில் 15-5-71 அன்று பகுத்தறிவாளர் மாநாடு: தலைவர் வீரமணி; திறப்பாளர் உலகநம்பி எம்.ஏ.பி.எல். எம்.பி. ரெங்கராசு திடலில், சிங்கராயர் பந்தலில், முத்துக்கிருஷ்ணன் அரங்கில் மறுநாள் திராவிடர்கழக மாநாடு பெரியார் தலைமையில், T.V. சொக்கப்பா எம்.ஏ. எல்.டி திறப்பாளர். வி.எஸ்.பி. யாகூப் மன்றத்தில் பகுத்தறிவுப் புத்தகக்காட்சி, ஓவியக் காட்டு நடைபெற்றது. 16-5-71 அன்று மாபெரும் ஊர்வலம் புறப்படத் தயாராயிருந்த நேரத்தில், பெரியார் தங்கியிருந்த முசாபுரி பங்களாவுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் டி.வி. அந்தோணி அய்.ஏ.எஸ் (முன்னாள் தலைமைச் செயலாளர் டி.ஏ. வர்கீசின் மகன்) வந்து, பெரியாரைச் சந்தித்து, ஊர்வலத்தில் இராமன், சீதை ஆகிய உருவங்களை எடுத்துச் செல்லக்கூடாது, என்றார். அதில்லாமல் எங்கள் கொள்கை நிறைவேறாதுங்களே என்றார் பெரியார். அப்படியானால் ஊர்வலத்தை அனுமதிக்க முடியாதே. என்றார் கலெக்டர். எழுத்து மூலமான உத்தரவு தருவீர்களா என்று பெரியார் கேட்கவும், அங்கேயே டைப் செய்து கையெழுத்திட்டு, மாவட்டக் கலெக்டர் மற்றும் மாஜிஸ்டிரேட் என்கிற தகுதிகளில், திராவிடர் கழக ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பதாக ஆணை பிறப்பித்து, நகலைப் பெரியாரிடம் தந்தார். மேலிடத்தின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு நடைபெறாது என யூகித்தார் பெரியார்! அப்போது பெரியார் கூறிய ஒரு பழமொழியைக் கேட்டு ஆத்திரமாயிருந்த தோழர்களும் சிரித்துவிட்டனர். “என்ன செய்வது மாமியாருக்குத் தொடையிலே புண், மருமகன்தான் டாக்டர்!” என்றார் பெரியார். தங்கும் விடுதிக்கு வெளியே உணர்ச்சிப் பிழம்புகளாய்க் கொதிக்துக் கொண்டிருந்த கருஞ்சட்டையினரைத் தாமே அமைதிப் படுத்தி, ஊர்வலம் ரத்து என அறிவித்து, நேரே மாநாட்டைத் துவக்கினார்.

“இன்னும் 15 நாளில் இராமாயணம் தடைசெய்யப்பட வேண்டும். தவறினால் விபச்சாரி சீதை, குடிகார ராமன் சூத்திர சம்பூகன் வெட்டிக் கொல்லப்படுதல் - இந்தக் காட்சிகள் தமிழ் நாடு முழுவதும் ஊர்வலமாக எடுக்கப்படும்” என்ற ஏகமனதான ஒரு தீர்மானம் எழுச்சி மயமாக நிறைவேற்றப்பட்டது, திருவாரூரில் 16-5-71 அன்றையதினம்!

அடுத்த 17, 19 தேதிகளில் "விடுதலை"யில் ஆசிரியர் தலையங்கம் மிகுந்த வேதனையுடன் தீட்டப்பட்டிருந்தது. 18-ந் தேதி புலவர் குழந்தையின் இராவண காவியம் நூல் மீதிருந்த தடை, அரசால் நீக்கப்பட்டது. பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, முதல்வர் கலைஞர், இனியும் “சேலம்" நடந்தால் “திருவாரூர்" நடக்கும் என்றார்; அதாவது, இராமன் உருவம் ஊர்வலத்தில் இழிவு செய்யப்படுமானால், தி.க. ஊர்வலமே தடை செய்யப்படும் என்ற பொருளில்! “அரசின் இந்தப் போக்கு விரும்பத்தக்கதல்ல என்ற கசப்பான உண்மையைச் சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது. நாம் நடத்தும் ஊர்வலம் எதிரிகளைப் புண்படுத்த அல்ல; நம்மவர்களுக்கு ஏற்பட்டுள்ள புண்ணை ஆற்றவே சேலம் நடந்தால் திருவாரூர் நடக்குமென்று முதல்வர் கூறிவிட்டதாகச் சிண்டு முடிவோர் ஏமாறுவர். அரசு கடமையாற்றட்டும். நாமும் செயலாற்றுவோம். அடுத்து ஒரு மாநாடு கூட்டி, வேலைத் திட்டம் வகுப்போம்!" என்றார் வீரமணி. 21-ந் தேதி பெரியாரோ - “நான் தி.மு.க. அமைச்சர்களை மதிக்கவில்லையா? பிறகேன் இந்த முடிவு? தி.க.வை ஒடுக்கும் திட்டமா? ஆட்சியின் காரியத்துக்காக நான் இவற்றைக் கைவிட முடியுமா? அப்படிச் செய்தால் திராவிடர் கழகத்தை நானே கொல்லுபவன் ஆவேன்!" என்று மனம் பொருமினார். அரசின் போக்கைக் கண்டித்துத் திராவிடர் கழகத் தோழர்கள் மனங்குமுறி ஆத்திரத்துடன், இரத்தக் கண்ணீர் வடித்து, எழுதிய எண்ணற்ற கடிதங்கள் "விடுதலை"யில் “ஆசிரியருக்கு" என்ற பகுதியில் தினந்தோறும் நிறைந்தன.

22-5-71 நாத்திகர் மாநாடு; தலைவர் எஞ்சினியர் கே.எம். சுப்பிரமணியம் பி.இ. திறப்பாளர் ஜி.டி. நாயுடு. 23-ந் தேதி பார்ப்பனரல்லாதார் மாநாடு. தலைவர் பெரியார்; திறப்பாளர் டி.வி. சொக்கப்பா. திருச்சியில் சிந்தனையாளர் கழகம் நடத்திய இந்த மாநாடுகளில் “மது விலக்கைக் விரைந்து நீக்க வேண்டும். சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மதுவிலக்கு நீடிக்க வேண்டும் என்று சொல்ல உரிமையில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை, ஆட்சிக்குச் சென்று சாதிக்கக்கானே திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தது. பிறகென்ன தயக்கம் என்று பெரியார் கருத்துரைத்தார். திருக்கோயிலூர் அருகே உள்ள சென்னகுனம் கிராமத்தில் இப்போது தி.மு.க. ஆட்சியாளர் ஓடாத தேரையெல்லாம் ஓட வைக்கக் காரணம், பார்ப்பானின் செல்வாக்குக்கு அரசு இன்னும் பயப்படுகிறது என்பதுதான். வேதம் ஒழியும் இடத்தில்தானே பேதம் ஒழியும். கடவுளைச் செருப்பால் அடிப்பதால் நமக்கு ஒன்றும் கேடு நேர்ந்து விடாது என்பதற்கு என் வயதே சான்று!" என்று மொழிந்தார் பெரியார்.

சேலத்தில் இராமனுக்குச் செருப்படி தந்ததாகப் பெரியார் மீதும் ஒருவர் வழக்குத் தொடர்ந்தனர். கோர்ட்டில் 4-6-71-ல் அது தள்ளுபடி செய்யப்பட்டது.“கல்கியார் கனைக்கிறார்” என்பதாக “விடுதலை"யில் 4-ந் தேதி ஒரு தலையங்கம்; இராமாயணத்தைத் தடை செய்ய முடியாது என்பதால் இராவண காவியம் நூலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையைத் தாம் நீக்கியதாக முதலமைச்சர் கூறினாராம், என்பதை விளக்கி இராமாயணம் தடை செய்யப்படவேண்டும் - ஏன் என்கிற தலைப்பில் தினம் சில காரணங்களை விவரித்து "விடுதலை"யில் பெரியதொரு பெட்டிச் செய்தி அந்த மாத முழுவதும் வெளியிடப் பெற்றது. பெரியாரின் உடல் நிலை கருதி அவரைக் குறைவான நிகழ்ச்சிகளுக்கே அழைக்க வேண்டுமென்கிற கருத்திலும் பெட்ரோல் விலை உயர்வாலும் இனிமேல் பெரியாரைப் பொதுக் கூட்டங்களுக்கு அழைப்போர் ரூ.200/-ம், திருமணங்களுக்கு அழைப்போர் ரூ.250/-ம் அனுப்ப வேண்டுகிறோம் என்பதாக வீரமணி 6- 6-71-ல் அறிவித்தார். "பெரியாரின் பகுத்தறிவுப் படை மூட நம்பிக்கைகளுக்குக் கொடுத்த சவுக்கடி, நயவஞ்சகர்களைக் கலகலக்க வைத்தது. அப்படிப்பட்ட பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குத் தகுந்த ஆதாரங்களைத் திரட்டி வழங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்" என்று முதல்வர் கலைஞர் 6-ந் தேதி இராயபுரம் சிங்காரவேலர் படகு கட்டும் நிலையம் திறந்தபோது கூறினார்.

14-ந் தேதி பெரியார் நாச்சியார்கோயிலில் பேசும்போது, 10 கல்லூரிகளைத் திறப்பதைவிட எல்லாக் கிராமங்களிலும் உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்கலாம்; கல்லூரிகளால் எப்போதும் தொல்லைதானே? என்றார். 25-6-71 அன்று பேளுக்குறிச்சி ஜி.பி. சோமசுந்தரம் மறைந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்திலும் கருப்புச் சட்டையை விடாமலிருந்த பெரியவர் இவர். அன்றைய தினம் பெரியார் பொள்ளாச்சியில் பேசும்போது கீதையையும் கிருஷ்ணனையும் செருப்பாலடிக்காமல் நாம் ஏற்றுக்கொண்டால் என்றென்றும் சூத்திரர்தானே? என்று கேட்டார் மதுவிலக்கு ஆகஸ்டு 30 முதல் ரத்தாகும் என்பது துணிச்சல் மிக்க முடிவு என "விடுதலை" 19-6-71-ல் எழுதிற்று. இந்த முடிவைப் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வெளிவரத் தொடங்கின.

திருநெல்வேலி மாவட்டத்துச் செய்துங்கநல்லூரில் தேவேந்திர குல வேளாளர் கல்லூரிக்கு 4-1-71 அன்று பெரியார் அடிக்கல் நாட்டினார். பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவின் அறிக்கை வெளியாகியிருந்தது. அரசுத் துறைகளில் மட்டுமின்றிப் பொதுத் துறைகளிலும், தனியார் துறைகளிலுங்கூட இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென அதில் பரிந்துரைக்கப்பட்டதைப் பாராட்டிப், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு ஒரு பொற்காலம், என்று "விடுதலை" 16-7-71 அன்று கலையங்கம் தீட்டிற்று. பிற்படுக்கப்பட்டோர் நல விழாக்கள் நடத்தப்படுமா?, என கிட்டப்பா எல்.எல்.ஏ. கேட்டபோது, சட்டமன்றத்தில், 6-7-71 அன்று, அமைச்சர் ராஜாராம், அன்றாடம் நாட்டில் நடைபெற்று வரும் பெரியார் பொதுக் கூட்டங்களும், அண்ணா - கலைஞர் பிறந்த நாள் விழாக்களும் உண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நல விழாக்களே ஆகும். எனவே தனியாக விழாத் தேவையில்லை என்றார்! The Modern Rationalist என்ற ஆங்கில மாத சஞ்சிகைக்கு ஆசிரியராக வீரமணியும், அச்சிடுவோராக ஈ.வெ.ரா. மணியம்மையாரும் என 8-7-71 அன்று பதிவு செய்யப்பட்டது.

சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளரும், கழகப் பிரமுகரும், மிக்க ஆர்வமுள்ள இளைஞருமான ஆர்.வி. கணபதி சென்னையருகில் கார் விபத்தில் 10-7-71 அன்று காலமானார். பகுத்தறிவுச் சுடர் நாவலர் நெடுஞ்செழியன் 52-வது பிறந்த நாள் இன்று என, “விடுதலை" 11-7-71-ல் வாழ்த்தியிருந்தது. பெரியார் 15-ந் தேதி தஞ்சையில் House Surgeons Association -ல் சொற்பொழிவாற்றினார். அன்றைக்கே தஞ்சையிலுள்ள திறந்த வெளிச் சிறைச் சாலையினையும் பார்வையிட்டார். தன்னுடைய ராஜிநாமாவை ஏற்கக்கூடாது எனச் சட்டமன்ற மேலவை உறுப்பினராயிருந்த எஸ். இராகவானந்தம், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட்மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது, 15-ந் தேதியன்று மேலவை உறுப்பினரான தவத்திரு குன்றக்குடி அடிகளார், ரஷ்ய சுற்றுப்பயணத்திற்காக 18-ந் தேதி புறப்பட்டபோது, மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு, கி. வீரமணி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதுவரை தான் எந்தக் கோயிலுக்கும் போனதில்லையென, 25-ந் தேதி ஒரு தன்னிலை விளக்கமளித்தார் மேலவைத் தலைவர் சி.பி.சி.

23-7-71 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிற்று. பகுத்தறிவுக் கொள்கைக்கு அளிக்கப்பட்ட விருது என "விடுதலை" பாராட்டியது. “எதிரிகளுக்குக் காலித்தனமின்றி கதி இல்லை” என்ற தலையங்கத்தில் 24-ந் தேதி பெரியார், “அண்ணாமலை நகரில் பார்ப்பனர் பின்னணியில் இருந்து கொண்டு மாணவரைத் தூண்டி விட்டுக் கலவரம் விளைவித்திருக்கின்றனர். போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்யாமலே சாமர்த்தியமாகச் சமாளித்ததைப் பாராட்டியே ஆகவேண்டும். தமிழர்களே பொறாமைக்காரர்கள் இப்படி, எரியும் பந்தத்திற்கு நெய்யூற்றி வருகிறார்களே! உங்கள் கடமை என்ன? பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கலாமா?" என்பதாக எழுதியிருந்தார். துணைத் தலையங்கத்தில், பட்டமளிப்பு விழாவில் பகுத்தறிவு வெள்ளம் பாய்ச்சிய கலைஞர் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 24-7-71 அன்றைய தினமே முதல்வர் கலைஞர் சென்னை பொது மருத்துவமனையில் பெரியாரைச் சந்தித்தார். பெரியாரும் டாக்டர் கலைஞரைப் பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார். 28-7-71 அன்று சட்ட மன்றத்தில் டாக்டர் அண்டே , இது நாலாந்தர அரசு என்று, குற்றஞ் சுமத்திப் பேசினார். முதல்வர் கலைஞர் எழுந்து, "ஆமாம் இது நாலாந்தர மக்களுக்காக நாலாந்தர மக்களால் நடத்தப்படும் அரசுதான். பெரியார் மொழியில் சொல்கிறேன்; நாலாஞ் சாதி சூத்திரர்கள் ஆட்சிதான் நடக்கிறது!" என்று கல்மேல் எழுத்தாய்ப் பொறித்தார்.

27-ந் தேதி சட்டமன்றத்தில் கேள்விக்குப் பதிலாக, அறநிலைய அமைச்சர்; இருக்கின்ற 5,000 கோயில்களில், இப்போது 3,000 இடங்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது என்ற தகவல் தந்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி 5-8-71 நள்ளிரவில் அடையாறு இல்லத்தில் தமது 57 வது வயது மரணமடைந்தார். மறுநாள் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர்கள், கலையுலக நண்பர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். ஒரு நாள் இரவில், பெரியாரின் வேன் ரிப்பேராகி, வழியில் நிற்கக் கண்ட கே.ஆர். ராமசாமி, தம்முடைய காரில் வரச்சொல்லி, மிக அன்புடன் அழைத்தும், பெரியார் தமது வழக்கப்படி, நன்றியுடன் மறுத்து விட்டார். எனினும் சில நாள் கழித்துக் கே. ஆர். ஆர். இல்லம் தேடிச்சென்று, அவரது அன்புக்கு நன்றி பாராட்டித், திரும்பினார் பெரியார். கலையுலகில் தன்னை அழித்துக்கொண்டு, மற்றவர்க்கு ஒளி காட்டி உயர்த்திய வள்ளல் கே.ஆர்.ஆர். உருகிக் கரைந்து போன மெழுகுவத்தியானார்! 14-8-71 அன்று பெரியாரும், மணியம்மையாரும் சென்று, கே.ஆர். கல்யாணி, அம்மையாரையும், பிள்ளைகளையும் கண்டு துக்கம் விசாரித்தனர்.

“இதுதான் பாரதம்” என்ற தலைப்பில், மகாபாரத இதிகாசத்தின் பல்வேறு ஆபாசக் கருத்துகள், நாள்தோறும் “விடுதலை”யில் கட்டங்கட்டி வெளியிடப்பட்டு வந்தன. 4-8-71-ல் சேலத்தில் முதல்வர் கலைஞர், பெரியாரைப் பற்றிப் பெருமை பொங்கக் குறிப்பிட்டார்: இந்தத் தொண்ணூற்று மூன்றாவது வயதிலும் தன்னைப் படாதபாடு படுத்திக்கொண்டு தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டி வருகிறார் பெரியார். ‘ஏன் அய்யா உடம்பு சரியில்லையாமே?’ என்று விசாரிக்கச் சென்றால். 'ஆமாமுங்க இரண்டு நாளாய்க் கூட்டம் பேசவில்லை; அதனால் தானுங்க .' என்கிறார். எனக்கு மிகுந்த பொறாமையாக இருக்கிறது" என்றார் கலைஞர்.

“திருச்சியிலுள்ளது போல் கடவுள் மறுப்புக் கல்வெட்டுகள் எல்லா ஊர்களிலும் பதிக்கப்பெறும். இதற்கு யாராவது எதிர்ப்புத் தெரிவித்தால், பிறகு கோயில்களும் இருக்கக் கூடாதென்று நாங்களும் ஆரம்பிப்போம்” என்றார் பெரியார் 8-8-71 அன்று, சென்னை பகுத்தறிவாளர் கழகம், டாக்டர் பட்டம் பெற்ற கலைஞரைப் பாராட்ட, 14-ந் தேதி பெரியார் திடலில் ஒரு விழா நடத்திற்று. பெரியார், கலைஞருக்குப் பொன்னாடை போர்த்தி, அவர கன்னங்களைத் தமது விரல்களால் தடவிக் கொடுத்தார். பெரியார் தலைமையில் குன்றக்குடி அடிகளார், என்.டி. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன், கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர். கலைஞருக்குச் சிலை அமைக்க வேண்டுமென்று, பெரியார் பிடிவாதமாகக் கூறி, அங்கேயே குழுவும் அமைக்கப்பட்டது. பெரியார் புரவலர்; அடிகளார் தலைவர்; மேயர் சா. கணேசன், என்.டி. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன் துணைத்தலைவர்கள்; கி. வீரமணி செயலாளர், அவ்விடத்திலேயே 2,755 ரூபாய் நன்கொடையும் வசூலாகி விட்டது. கலைஞரால் மறுக்க முடியவில்லை ; எனினும் தந்திரமாய் ஒரு நிபந்தனை வெளியிட்டார் - அதாவது நாங்கள் முதலில் பெரியாருக்குச் சிலை அமைப்போம். அதன் பிறகு பார்க்கலாம். என்றார். “சும்மா சொன்னாலோ, கேட்டுக் கொண்டாலோகூட நான் மறுத்திருப்பேன். அய்யாவின் கட்டளையை என்னால் மீற முடியாது. பதவி ஏற்ற போது நான் சொன்ன எதையும் மறுக்கவுமில்லை; மாறவுமில்லை. பெரியார் வழிதான் அண்ணா வழி; அதுதான் எங்கள் வழி! முறைகளில் சில வேறுபாடு இருக்கலாம்; ஆனால் முரண்பாடு இருக்க முடியாது! நாலாந்தரத்தாரை நாலாந்தளத்தாராக மாற்றுவோம், என்று சூளுரைத்தபடியே சென்று காட்டுவோம் - அய்யாவின் திருக்கரங்கள் என் கன்னத்திலே பட்டது. என்தாயின் முத்தத்தைவிடச் சிறந்தது. வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து மகிழ்ந்திருப்பேன்" என்றார் கலைஞர். இந்தக் கூட்டத்தில் பெரியார், புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கடவுள் வாழ்த்துக்குப் பதிலாக இது என்றால், ஒரு முட்டாள் தனத்துக்குப் பதிலாக இன்னொரு முட்டாள்தனம் என்றுதானே அர்த்தம்?" என்றார்.

24-ந் தேதி சென்னையில் நடந்த சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பெரியார், “இது சாதி அடிப்படையில் இருப்பதால், இந்தச் சங்கம் ஒழியவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். உங்கள் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, வேறு தொழில்களில் ஈடுபடுத்துங்கள்" என்றார். பெரியாரின் 93-வது பிறந்த நாள் விழாவையொட்டி 17-9-71 அன்று பெரியார் சிலை ஈரோட்டில் நிறுவப்படும் என்றும் 26-9-71 அன்று சேலத்தில் அன்று சேலத்தில் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கப்படும் என்றும் முன்னதாகவே செய்திகள் வெளியாயின. லால்குடி வட்டம் திருமங்கலம் கிராமத்தில், பெரியார் மின்விளக்கேற்றிய போது. "பள்ளிகளில் தருவது போலக் கல்வரிகளிலும் மதிய உணவு தந்தால், நம் பிள்ளைகள் இன்னும் பலர் உயர்கல்வி பெற முடியும். இப்போது நடந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் தேர்ந்தெடுப்பதில் 1,000க்கு 950 பேர் நம் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இந்த ஆட்சியில், என்று மகிழ்ந்தார் பெரியார். “திராவிடர் கழகம் ஏற்பட்டது கடவுளை ஒழிப்பதற்காக அல்ல; இன இழிவை ஒழிப்பதற்குத்தான். ஆனால் நம் இன இழிவை ஒழிக்கும் பணியில் கடவுள் குறுக்கிடுவதால், அதை ஒழிக்க முற்படுகிறோம்" என்று பெரியார் தாதம் பேட்டை பழுவூரில் கூறினார்.

துவாரகையிலுள்ள சாரதா பீடம் சங்கராச்சாரியாரின் விழாவில் கலந்து கொள்ளத் துணை ஜனாதிபதி ஜி.எஸ். பாடக் மறுத்துவிட்டார்; காரணம், அவர் தீண்டாமையை ஆதரிப்பவர் என்பதால் இந்தச் செய்தியை "விடுதலை" வெற்றியுடன் பிரசுரித்தது. நாகரசம்பட்டி தன்மானக் குடும்பத்தின் தலைமை மூதாட்டியும் என்.வி. சுந்தரம் சகோதரர்கள், என்.வி. விசாலாட்சி அம்மாள் சகோதரிகள் ஆகியோரின் தாயாரும், என்.எஸ். சம்பந்தம் சகோதரர்களின் பாட்டியாருமான தாயாரம்மாள் 15-8-71 அன்று மறைந்தார். அவரது நினைவு நாளான 29-8-71 அன்று பெரியார், அம்மையாரின் படத்தினைத் திறந்து வைத்துத், தமது கொள்கையில் அன்னாருக்கிருந்த ஈடுபாட்டை நினைவு கூர்ந்தார்.

சென்னை பாலர் அரங்கத்தில் கலைவாணர் நினைவுநாள் விழா 4-9-71 அன்று கொண்டாடப்பட்டது. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிப்பிசைப்புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோருக்குப் பகுத்தறிவுப் பாடல்கள் இயற்றித் தந்தவரும், பெரியாரின் நண்பரான உடுமலை முத்துசாமிக் கவிராயரின் சீடருமான உடுமலை நாராயணக் கவிராயருக்கு, முதல்வர் கலைஞர் 15,000 ரூபாய் பொற்கிழி வழங்கினார். “உயிரும் மயிரும் இல்லா உருவச் சிலைகளுக்கு வயிர முடிகள் வேணுமா? வாயும் வயிற்றில்லாச் சாமிக்கு மானியமாகவே வயலும் வாய்க்கால் வேணுமா?” என்பது போன்ற அறிவார்ந்த பாடல்களை அவர் இயற்றித்தர, நடிகமணி டி.வி. நாராயணசாமி, கணியூர் கே.ஆர். செல்லமுத்து போன்றோர் இயக்க மேடைகளில் இசையோடு முழங்க... வாழ்க, உடுமலைக் கவிராயர்! அன்று மாலை, விழாவில், பாலர் அரங்கத்துக்குக் கலைவாணர் அரங்கம் என்று பெயர் சூட்டுவதாக, முதல்வர் கலைஞர் அறிவித்தார். மறுநாள் காலையே, நியான் சைன் போர்டில், கலைவாணர்
அரங்கம் என்ற எழுத்துகள் மின்னக் கண்டனர் மக்கள்! நன்றியுடன் கலைவாணரை நினைத்து மகிழ்ந்தனர் 5-ந் தேதி Shankar's weekly யில் “கலைஞரைப் பற்றிக் கணித்ததில் பார்ப்பனர் ஏமாந்து விட்டனர்” என்பதாக எழுதப்பட்டிருந்தது. “விடுதலை”யில் எடுத்துக் காட்டப்பெற்றது.

17-9-71 பெரியாரின் 93-வது பிறந்தநாள் விழா, பெரியாரைத் தந்த ஈரோட்டில் மரியாதை தெரிவிக்க மக்களுக்குச் சரியான வாய்ப்பு! பெரியார் நகரமன்றத்தில் தங்கியிருந்த தந்தைக்கு நல்வாழ்த்துக் கூறி, மாலை சூட்டிட, முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் ப.உ. சண்முகம், ராஜாராம், கண்ணப்பன் ஆகியோர் காலை 10-30க்கு வந்தனர். மாலையில் எல்லாருக்கும் ஈரோடு நகராட்சி மன்றம் வரவேற்பளித்தது. குன்றக்குடி அடிகளார் தலைமையில் முதல்வர் கலைஞர் பெரியார் சிலையினைத் திறந்து வைத்தார். அமைச்சர் ப.உ. சண்முகம் 93 நூறு ரூபாய் நோட்டுகளாக, 9,300 ரூபாய் பொற்கிழி, பெரியாருக்கு வழங்கினார். கி. வீரமணி, அமைச்சர்கள் க. ராஜாராம், மு. கண்ணப்பன் ஆகியோரும் பெரியாரும் உரையாற்றினர். சிலையின் பீடத்தில்; “ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறவி, பிதிர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தது யோக்கியமற்ற செயல், இவற்றை நம்புவது மடமை; இவற்றினால் பயன் அனுபவிப்பது வடிகட்டிய முட்டாள் தனம்” என்பதாக ஒருபுறத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 19-9-71 திருச்சியில் பெரியார் கல்வி ஸ்தாபனங்களின் நிறுவனர் நாள் விழாவில், இந்த ஆண்டில் அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் பங்கேற்றார். மறுநாள் பெரியார் சென்னையில், முடிதிருந்துவோர் முன்னேற்றச் சங்க மாநாட்டில் பேசும்போது, “போலீஸ் துறையிலுள்ள எல்லா வேலைகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அதே போல மந்திரிப் பதவியில் கூட Rotation முறை கொண்டுவந்து, எல்லாச் சமூகத்தாரும் மந்திரிகளாகின்ற வாய்ப்புத் தரவேண்டும்" என்ற கருத்தைப் புகன்றார்.

ஜனாதிபதி வி.வி. கிரி சிங்கப்பூர் சென்றிருந்தபோது, ஹில்டன் ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அங்கு சமைத்ததைச் சாப்பிட மறுத்துத், தனக்குப் பார்ப்பன சமையற்காரர் வேண்டுமென்று கேட்டாராம், விலாநோகச் சிரிப்பை வரவழைக்கும் விசித்திரமான இந்தச் செய்தியை 16-9-71 "விடுதலை" வெளிப்படுத்திற்று. 19-ந் தேதி கடற்கரை சீரணி அரங்கத்தில் முதல்வர் கலைஞர், அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசும்போது, “கைபர் கணவாய் வழியாக வந்த நரிக்கூட்டம் - விஷ நாகங்கள் - சமுதாயத்திலும், சர்க்காரிலும் இன்றும் இருக்கின்றனர் காலம் வரும்போது நடவடிக்கை எடுப்போம்!” என்று எச்சரித்தார். சம்பந்தப்பட்டவர்கள் கதிகலங்கிப் போனார்களாம்.
செய்தித்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்த டி.வி, வெங்கட்ராமன் அய்.ஏ.எஸ். அவர்களுக்குப் பதிலாக ஆர். நாகராஜன் நியமிக்கப்பட்டார் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் தலைமைப் பொறியாளராக சி.வி. பத்மநாபன் நியமனம் பெற்றார். 26-9-71 அன்று கோவையில் விவசாயப் பல்கலைக் கழகத்தை முதல்வர் கலைஞர் துவக்கினார். அமெரிக்கா வருகை தருமாறு முதல்வருக்கு அழைப்பு வந்திருப்பதாக 25-ந் தேதி செய்தி தரப்பட்டது. எப்போது புறப்படுவார் என்று கூறப்படவில்லை அப்போது!

திராவிடர் மாணவர் கழகம் ஒன்று அவசியம் இருந்திடல் வேண்டுமெனப் பெரியார் கருத்தறிவித்ததற்கிணங்க, 23-9-71 அன்று எஸ். துரைசாமியை அமைப்பாளராகக் கொண்டு, உறுப்பினர் சேர்க்கும் பணி துவக்கப்பெற்றது. மணப்பாறை பகுத்தறிவாளர் கழகத்தில் பெரியார் பேசும்போது - “அரசு ஊழியர்கள் சாதியைப்பற்றிப் பேசினால் கம்யூனல் என்கிறார்கள். சமுதாயத்தைப் பற்றிப் பேசினால் பொலிட்டிகல் என்கிறார்கள். இந்தச் சங்கடமான அவதியில் அவர்கள் எதைத்தான் பேசமுடியும்?” என்று கேட்டார்.

4-10-71 மதுரையில் கூடிய திராவிடர் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில், பெரியார் சிலை அமைப்புக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்போதே 10,562 ரூபாய் நன்கொடை வசூலாயிற்று. மலேசியாவில் பிணம் புதைக்கும் இடத்தில் ஜாதி வேறுபாடு நடைமுறையிலிருந்ததை எதிர்த்து, அங்குள்ள திராவிடர் கழகம் வழக்குத் தொடுத்ததில், 6-10-71 அன்று, வென்று விட்டது! “பெண்கள் கூந்தலை வகிடு எடுத்து இரண்டாகப் பிரித்திடுவதே மீண்டும் ஒன்றாகப் பின்னுவதற்காகத்தான்! அதுபோல தி.க.வும் தி.மு.க.வும் பிரிந்ததே. மீண்டும் பிணைவதற்காகத்தான்!” என்று முதல்வர் கலைஞர் தஞ்சையில் 8-10-71-ல் பேசினாராம், 17-ம் நாள் சென்னையில், தமிழில் Ph.D. என்னும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற பெரும் புலவர் அனைவரும் ஒன்று கூடிக், கலைஞருக்குத் “தமிழவேள்" என்ற சிறப்புப்பட்டம் வழங்கினர்; Dr. மெ. சுந்தரம் அமைப்பாளராயிருந்து நடத்தினார். சட்ட மன்றத்தில் ஆப்காரி சட்டத்திருத்தம் 23-ந் தேதி கொண்டுவரப்பட்டபோது, ஆதரவாக 121 வாக்குகள்: சுதந்தரா முஸ்லீம் லீக், சிண்டிகேட் உட்பட எதிர்ப்பான வாக்குகள் 19.

"எனது 93-வது ஆண்டு பிறந்த நாள் மலருக்கு ஒரு செய்தி வேண்டும் என்று நண்பர் திரு வீரமணி அவர்கள் கேட்டார். 10 ஆண்டுகளாகவே சேதி கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். எனது பிறந்த நாள் என்பதே, பிரச்சாரத்திற்கு ஒரு சாதனமாக, ஓர் ஆதாரமாக விளங்குகிறது என்பது, ஒரு கல்லுப் போன்ற செய்தியாகும்.

நான் சமுதாய சமத்துவத்திற்குப் பாடுபடுகின்ற ஒரு தொண்டனாவன். அதாவது சாதி அமைப்பை அடியோடு ஒழிக்கப் பாடு படுவேன். நான் எனது பிரச்சாரத்தில். கடவுளே இல்லை என்று சொல்லுவதற்காக, அது மூட நம்பிக்கை என்று நல்ல வண்ணம் மக்களுக்கு விளக்குவதற்காகக், கடவுளையே செருப்பால் அடிக்கும் படிச் சொல்லும் அளவுக்கு நான் ஆளாகியிருக்கிறேன். இந்த நிலையிலேயே நான் 92 வயது கடந்து. 93 வயது தோன்றிவிட்டவனாக இருக்கின்றேன். கடவுள் இருந்தால், என்னை விட்டுக்கொண்டு இருப்பானா?

உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பன ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும்! இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும்! நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்கிறார்கள். அவர்கள் இந்த மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிய மாட்டார்கள். சுதந்தர உணர்ச்சியும் அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது! மடமைக்கும், அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான், கடவுள் மதம் சாஸ்திரம் பார்ப்பனர் என்ற நான்குமாகும்!

சாதி ஒழிய வேண்டும் என்று மனப்பூர்வமாகச் சொல்பவர்கள், இந்த நான்கு ஒழிப்பிற்கும் சம்மதித்தவர்களாகவேதான் இருப்பார்கள். நமது மக்களில் பெரும்பாலோர் இன்று அப்படி ஆகிவிட்டார்கள் என்பதுதான் எனது உற்சாகத்திற்குக் காரணம் ஆகும். எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால், சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டையும், அதனை அடுத்து நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க பெற்ற பெரிய வெற்றியையும் கொண்டுதான் இப்படிச் சொல்லுகிறேன்!

அதாவது, கடவுளைச் செருப்பால் அடித்ததாக 10 லட்சக்கணக்கான பத்திரிகைகள், 10 லட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள், மாணவர்கள், வக்கீல்கள், அதிகாரிகள், சில பெண்கள், மற்றும் காங்கிரஸ் இயக்கம், சுதந்தரா இயக்கம், ஜனசங்க இயக்கம் முதலிய பலவும் எதிர்ப்பாகப் பாடுபட்டும்; இவ்வளவு பெரிய வெற்றி தி.மு.க. பெற முடிந்தது என்றால், என்னுடைய கருத்து மெய்யாகி வெற்றி பெற்றது என்பது யாருக்கும் விளங்கும்.

இனி தமது சாதி ஒழிப்புக்கு, மக்களில் யாரும் எதிர்ப்பு இல்லை என்பது உறுதியான செய்தியாகிவிட்டது. இந்த நிலையில் நான், நமது மக்களை அடிபணிந்து வேண்டிக்கொள்வதெல்லாம், கோயில்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும்; உற்சவங்களில் கலவாமல், மதப் பண்டிகைகள் கொண்டாடாமல், நெற்றிக்குறி அணியாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்!

மற்றும் நான் நினைக்கின்றேன். அண்மையில் ஓர் மாநாடு கூட்டிக், கோயில்களுக்குப் போகிறவர்களை அடிபணிந்து வேண்டிக் கொள்வதன் மூலம், போகாமல் இருக்கச் செய்யலாமா என்று யோசனை கேட்டுக் காரியத்தில் தொடரலாமா என்று சிந்திக்கிறேன்."

இதுதான் பெரியாரின் 93-வது பிறந்த நாள் விண்ணப்பமாகும்.

10-10-71 அன்று திருச்சியில் சிக்கனையாளர் கழகம் பெரியாரின் 93- வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடியது. கே.எம். சுப்பிரமணியம் பி.இ., கோவிந்தராஜலு, ஆனைமுத்து ஆகியோர் முயற்சியில் பெரியாருக்கு வெள்ளித்தட்டு, வைரமோதிரம் ஆகியவை வழங்கப் பெற்றன. விழாவில் அன்பில் தர்மலிங்கம், சத்தியவாணிமுத்து, எஸ். இராமச்சந்திரன், Dr. வி.சி. குழந்தைசாமி, மா.கி. தசரதன், என். திருஞானசம்பந்தம் பி.இ., கே.வி. சுப்பய்யா, கி. வீரமணி ஆகியோர் பெரியாருடன் பங்கேற்றனர். அன்று மாலை பெரியார், பொதுக் கூட்டத்தில், “நான் இப்போது பதினான்கு அமைச்சராக அல்லவா இருக்கிறேன்' என்றார். இரவு 7-15 மணிக்குத் தி.பொ. வேதாசலனார் மறைந்ததாகச் செய்தி கிடைத்தது. மறுநாள் காலை பெரியார், மணியம்மையார், ரங்கம்மாள் சிதம்பரம், என்.எஸ். சம்பந்தம் ஆகியோர் 9 மணிக்குத் தென்னூரில் வேதாசலனார் இல்லம் சென்றனர். அன்று மாலை 6 மணிக்கு இடுகாட்டிலும் பெரியார் இரங்கலுரை ஆற்றினார். பழைமையை நினைவு கூர்ந்து மிகவும் வேதனைப்பட்டார்.

பர்மாவில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்பதாக ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, நல்லவிதமாக அது செயல்படத் துவங்கிற்று. “இப்போது ஏன் கடவுள் அவதாரம் எடுப்பதில்லை ? நாட்டில் கொடுமைகள் நடக்கவில்லையா என்ன? மனிதனுக்கு இப்போது அறிவு வளர்ந்து விட்டது என்பதற்குச் சான்றுதானே அது" என்று பரங்கிமலையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பெரியார் வினவினார் 20-10-71-ல், வீரமணி ஓர் அறிக்கை வாயிலாகப், பெரியாரின் உடல் நிலை கருதி, அவர்களைப் பல முறை காரிலிருந்து இறங்கி இறங்கி ஏறாவண்ணம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யுங்கள். கூட்ட மேடையில் பெரியார் அவர்களையும் உட்காரவைத்து விட்டுப், பலரை முன்னதாகப் பேசச் சொல்லிப், பெரியார் களைப்படைந்த பின்பே அவர்களைப் பேச அனுமதிக்காதீர்கள்! இதைத் தவிர்க்க, முன்னதாக அதிகமான தோழர் பேசாதபடி ஏற்பாடு செய்யுங்கள், என்றெல்லாம் அன்பு வேண்டுதல் தந்திருந்தார்.

பவானியில், இராவண காவியம் இயற்றிய புலவர் குழந்தை அவர்களுக்கு 6-10-71-ல் பெரியார் பொன்னாடை போர்த்தி, “இராவணகாவியம், இராமாயண ஆராய்ச்சி போன்ற நூல்களைப் பிள்ளைகளுக்குப் பாடமாக வைக்க வேண்டும்” எனக் கழறினார். நெய்வேலி பொதுக்கூட்டத்தில் 17-ந் தேதி பெரியாருக்கு 93 கத்திகளை மாலையாகத் தொடுத்துச் சூட்டினார்கள். "ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த நேரத்தில், 1953-ல், நான் கேட்டேன், அப்போது ஒரு மாதத்திற்குள் எனக்கு 600, 700 கத்திகளை அன்பளிப்பாகத் தந்தார்கள் மக்கள். ஆனால் இப்போது கத்தி தேவைப்படவில்லையே" என்பதாகப் பகர்ந்தார் பெரியார்.

சட்ட மன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது முதலமைச்சர், பெரியாருக்கு அரசு விழா நடத்தவும். தபால்தலை வெளியிடவும் யோசனை இருப்பதாகவும், இதற்கு அனைத்துக் கட்சியாரும் சம்மதமளித்ததாகவும் கூறினார். 1-11-71 அன்று, சேலம் வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி, அய்க்கோர்ட்டில் Hindu, Indian Express, தினமணி சார்பில் மனுச் செய்யப்பட்டதை ஏற்காமல், 5வது மாகாண மாஜிஸ்ட்ரேட் தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. நவம்பர் 1-ல் புதுச்சேரியில் பெரியார் சிலை வைக்க முடிவு செய்து, அங்கேயே 14,000 ரூபாய், உடனே வசூலாயிற்று.

சேலம் நேரு ஸ்டேடியத்தில் 4-11-71-ல் புதுமையான பெருவிழா; மாலை 5-30 மணிக்கு, அமைச்சர் கே. ராஜாராம் தலைமையில் பெரியாருக்குக் கலைஞர் வெள்ளிச் சிம்மாசனம் வழங்கல். ஈ.ஆர். கிருஷ்ணன் எம்.பி. வரவேற்றார். சேர்மன் பழனியப்பன், வீரபாண்டி ஆறுமுகம் எம்.எல்.ஏ., எம்.என். நஞ்சையா, மா. முத்துசாமி எம்.பி, செ. சுந்தப்பன் எம்.எல்.ஏ., கி. வீரமணி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். வெள்ளிச் சிம்மாசனத்தில் தந்தை பெரியாரைக் கலைஞர் அமர்த்தினார். எதிர்பாராதவிதமாகப் பெரியார் எழுந்து, கலைஞரை இழுத்து, அதில் அமர்த்திய காட்சி, பெருத்த ஆரவார ஆனந்தக்களிப்பினை வருவித்தது.

கலைஞர் அப்போது ஆற்றிய உரை:-

மனிதன் வாழ்விலே எல்லா நாட்களும் உணர்ச்சிமயமான கட்டங்கள் உள்ள நாட்கள் அல்ல. ஏதாவது உள்ளத்தைத் தொடும் சம்பவங்களும், வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்களும்தான் அவனை உணர்ச்சிமயமாக்கி வரும் நாட்களாகும்.

தந்தை பெரியாரவர்களை நான் வெள்ளிச் சிம்மாசனத்திலே அமரவைத்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். திரும்ப அவர்கள் என் கையைப் பிடித்திழுத்து என்னை அதில் உட்காரவைத்தபோது என் உடல் சிலிர்த்தது; நா தழுதழுத்தது; கண்கள் கண்ணீர் சிந்தின. உள்ளபடியே என்னால் பேச முடியவில்லை. மிகவும் உணர்ச்சி வயப்பட்டு இருக்கிறேன் இது என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத பொன்னாளாகும்.

இங்கே தரப்பட்ட வெள்ளிச் சிம்மாசனத்தில் பெரியார் உட்காரவைத்தபோது அவர்கள் சிறிது நேரம் தான் அதில் உட்கார்ந்திருந்தார்கள். இந்த சிம்மாசன அமைப்பு வெகு நேரம் உட்காரவைக்க முடியாத ஒன்றாகும். பின்னால் சாயமாட்டார்கள். கைகளை இரண்டு பக்கமும் ஓரளவுக்கு வைப்பார்கள். பிறகு எழுந்து வழக்கமாக அவர்கள் அமரும் சுதந்தரமான இந்த இடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அவர்களது பொதுவாழ்க்கையே இப்படிப்பட்ட ஒன்றாகும். வெள்ளிச் சிம்மாசனமானாலும், பெரியாரைக் கட்டுப்படுத்தி உட்காரவைக்க முடியாது. பெரியார் அவர்களை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது எவராலும் செய்ய முடியாத ஒன்று. அவ்வளவு சுதந்திரமானவர் அவர். அவர் தமிழ் நாட்டிலே இருக்கிற 4 கோடித் தமிழர்களின் இதயச் சிம்மாசனங்களில் என்றென்றும் வீற்றிருப்பவர்.

சிம்மாசனத்திற்குத் தமிழில் அரியணை என்று பெயர். தமிழை அரியணை ஏற்றியவர். தமிழர்களை அரியணைக்குத் தகுதியாக்கியவர். தன்மான உணர்வுகளை அரியணையில் ஏற்றி அமரவைத்த பெருந்தலைவர் அவர்களுக்கு இந்த வெள்ளிச் சிம்மாசனம் மிகச் சாதாரண பரிசாகும். எவ்வளவு பெரிய பரிசுகளை அளித்தாலும் அவரது தொண்டுக்கு எடைக்கு எடை அளித்ததாக ஆகவே முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை லட்சியங்களை நாம் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கின்றோம் என்பதில்தான் அவர்களின் வாழ்வு நீடிப்பு இருக்கிறது. பெரிய ஆலமரமாய் இன்று அவர்கள் காட்சி அளிக்கிறார்கள். எனவே அதன் கீழே நிற்கும் நாங்கள் எங்களுக்கு வரும் எதிர்ப்புகளை எல்லாம் துச்சமெனக் கருதுகிறோம்.

பெரியார் அவர்கள் சாவைக் கடந்தவர்கள். பெரியாரின் கொள்கைகள் என்றென்றைக்கும் சாகாதவை. நாட்டில், உலகில் மனிதனுடைய பகுத்தறிவு எதுவரை வேலை செய்து கொண்டு இருக்கிறதோ அதுவரை பெரியார் அவர்கள் வாழ்வார்கள்; வாழ்வார்கள்!

சுயநலம் - பிறநலம் என்ற இருசொற்களுக்கும் பெரியாரைப் போல் இதற்கு முன்போ, பின்போ யாரும் விளக்கமளித்திருக்கவே முடியாது. என்ன நயமான வர்ணனைகள்:- “சுயநலத்துக்கு அறிவே தேவையில்லை. எந்த ஒரு ஜீவனும் உணவுக்கு அலைவதும், உயிரைக் காப்பதும் இயற்கையே. ஒவ்வொரு உயிரிடத்தும் சில அருமையான, அற்புதமான குணங்கள் உண்டு என்றாலும், அவையெல்லாம் அந்தந்த உயிரினத்தின் சுயநலத்துக்கேதான் பயன்படுகின்றன. மனிதன் மற்ற உயிர்களைவிட வேறாகிப், பகுத்தறிவு உள்ளவன் எனினும், அவனது வாழ்க்கையும் தன்னலம், புகழை, அடிப்படையாய்க் கொண்டே அமைகிறது.

மனிதன் தன்னுடைய நலத்தை மட்டுமின்றித் தாய், தகப்பன, பெண்டு, பிள்ளை முதலியோரின் நலத்தைப் பற்றியும் கவலை கொள்கிறான் என்றால், அதுவும் பெரிதும் சுயநலத்தை உத்தேசித்ததே ஆகும். மனிதன் ஏன் தன் மனைவியை அழகுபடுத்துகிறான்? தான் பயன்படுத்தும் மாடு கன்றுகளின் நலத்தை எதற்காகக் கவனிக்கிறான் தனது நாய்க்கு எதற்காக நல்ல போஷணை கொடுக்கிறான்? எதற்காகத் தான் குடியிருக்கும் வீட்டைப் பாதுகாக்கிறான்? எதற்காகத் தனது பணத்தைப், பொருளைப் பத்திரப்படுத்திப், பெருக்குகிறான்? ஓட்டல்காரன் எதற்காகத் தனது வாடிக்கைக்காரர்களுக்கு நல்ல சாப்பாடு போடுகிறான்? பத்திரிகைக்காரன் எதற்காக நல்ல, அதிசய, புதிய செய்திகளைப் கண்டு பிடித்துப் பிரசுரிக்கிறான்? வைத்தியன் எதற்காகத் தன்னிடம் வரும் நோயாளிகளையெல்லாம் சவுக்கியப்படுத்த வேண்டுமென்று கவலைப்படுகிறான்? வக்கீல் தன்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்கு அனுகூலம் ஏற்பட வேண்டுமென்று பல வழிகளிலும் பாடுபடுவது எதற்காக? தாசிகள் தங்களிடம் வருபவர்களிடம் தங்களுக்குத் காமம் இல்லாவிட்டாலும், எதற்காக மேல் விழுந்து இன்பமளிக்கிறார்கள்? இவர்கள் எல்லாரும் பிறர் நலத்தைப் பேணுவதாக நமக்குக் காணப்பட்டாலும், அவர்கள் பயனாய்ச் சுய நலம் அடைவதற்கேயாகும் என்பதில் அய்யமுண்டோ ? இது தெளிவாய்த் தெரிகிறதல்லவா? ஆதலால் ஜீவசுபாவமே சுயநலந்தான் என்பதில் சந்தேகமே இல்லை!

மனிதனுக்கு நலம் என்பவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத்திருப்தியே ஆகும். பிறர் நலத்துக்காக அவன் செய்யும் காரியம், அவனுக்குப் பூரண திருப்தியளித்தால், அதுவே அவனது (சுய) நலமாகும்.

ஒரு மனிதன் தெருவில் நடக்கிறான். அங்கே ஓர் அழிந்து போன வேலிக்குள், பூஞ்செடியில், 6 அங்குல சுற்று வட்டமும் பல இதழ்களும் கொண்ட ஒரு ரோஜா மலர் இருக்கிறது. அது அவனுக்கு அதிசயமும், அழகும் நிறைந்த காட்சியாகக் காணப்படுகிறது. அங்கு யாரும் இல்லாததால், அவன் பறித்துக்கொண்டு போனால் யாரும் கேட்க மாட்டார்கள். பறித்துக்கொண்டு போய்த் தன் காதலிக்குத் தரலாம். ஆனால் அவன் நினைக்கிறான் - நாம் பறித்துச் சென்றால் இருவரும் தானே மகிழ முடியும். இந்த வேலியைச் செப்பனிட்டு, மலரை யாரும் பறிக்க முடியாமல் செய்தால், இவ்வழியே செல்லும் ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சியடைவார்களே - என்று! அவ்விதமே செய்கிறான். பலர் மகிழ்வதை அவன் கண்டு இன்பம் அனுபவிக்கிறானே - அது சுயநலமில்லையா?

ஒரு மனிதன், இன்னொருவன் பசியால் கஷ்டப்படும்போது, தனக்கு மட்டும் உள்ள உணவில் பாதியை அவனுக்குத் தந்து, அவன் பசியை ஆற்றிவிட்டுத், தான் சிறிது பசிக் கஷ்டத்தை அனுபவித்தாலுங் கூட ஒரு மனிதனின் பசியைப் போக்கினோம் என்று. ஒரு இன்பத் திருப்தி அடைவதில் சுயநலம் இல்லையா?

ஒரு மனிதன் ரயிலில் போகும் போது, மற்றொருவன் கதவைச் சாத்தியதில் இவன் விரல்கள் நசுங்கிவிடுகின்றன. இதைப் பார்த்த இன்னொருவன் மனம் பதறி, வேதனை அடைந்து, வேறு யாரும் முந்துவதற்குள், இவன் தனது ' வேட்டியைக் கிழித்து, நசுங்கிய விரல்களில் சுற்றித் தான் குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீரையெல்லாம் அதில் ஊற்றி, நனைத்துக் கட்டி விடுகிறான். அடுத்த ஸ்டேஷன் வந்ததும் இவன் சொல்லிக் கொள்ளாமலே இறங்கித், தன் வழியே போகிறான். தன் வேட்டியின் கிழிசலைப் பார்க்கும் போதெல்லாம் அது பயன்பட்ட காரியத்தை எண்ணி மகிழ்கிறான். இதில் சுயநலம் இல்லையா?

திருடுகிறான். தாசி வீட்டுக்குச் செல்கிறான். அடுத்தவன் குடும்பத்தைக் கெடுக்கிறான், பழிவாங்குகிறான். இதிவெல்லாம் அவனுக்கு ஒருவித மனத்திருப்தி ஏற்படுகிறதே - பிறர் துன்பத்தினால் ஏற்படும் சுயநலம் இல்லையா?

இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலம். ஆதலால் மனிதன் பிறர் நலம் பேணித், தன்னலம் இல்லாமல் செய்கின்ற காரியம், எதுவுமே இல்லை என்பதே உண்மை.”

சென்னை கோகலே ஹாலில் நண்பர்கள் கழகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பெரியார் “நாம் கோயிலுக்குள் செல்ல உரிமை கேட்டுப் போராடி, உள்ளே சென்று விட்டோமானால், உடனே பார்ப்பான் வெளியில் வந்து, இப்போது நாம் செய்யும் காரியத்தைப், பிரச்சாரத்தைத் தொடங்கி விடுவான். நாம் பேதங்களை ஒழிக்கத் தானே கோயிலுக்குள் செல்ல விரும்புகிறோம்! இப்போது போய்க் கோயில் ரிப்பேருக்காக அரசு 4 கோடி ரூபாய் செலவழிக்கிறதாம். என்ன நியாயம்? இந்தப் பணத்தில் விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் அமைக்கலாமோ” என்று கருத்துரைத்தார்,

முதல்வர் கலைஞர் 8-11-71 மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். உடுமலை நாராயணன் மறைவால் ஏற்பட்ட பொள்ளாச்சி பார்லிமெண்ட் இடைத் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் மோகனராஜ் அமோக வெற்றி பெற்றார். தனக்கு இந்தத் தொகுதி வேண்டுமென்று கேட்ட, மதியழகன் தம்பி கே. ஏ. கிருஷ்ணசாமிக்கு, ராஜ்யசபை உறுப்பினர் பதவியைத் தருவதாகக் கலைஞர் உறுதி கூறினார். பொள்ளாச்சி இடைத்தேர்தலும் புதிய பாடமும், என்ற தலையங்கத்தில், 16-11-71-ல் “விடுதலை” எதிர்க்கட்சிகள் திருந்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

பெரியாருக்கும் சேலம் வழக்கில் நோட்டீஸ் அனுப்புமாறு உயர்நீதி மன்றம் 18-11-7-ல் தீர்ப்பளித்தது. 28-ந் தேதி திராவிடர் மாணவர் கழகம் துவங்கப்பட்டது. பெரியார் 30-11-71 அன்று பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர்களும், புதிதாக மேயரான திருமதி காமாட்சி ஜெயராமனும், பெரியாரைச் சந்தித்து, விசாரித்தனர். சிகாகோவிலிருந்த முதல்வர் கலைஞரிடம் ஆசாரியர்களும், மாணாக்கர்களும் பெரியாரைப் பற்றியும் அன்னாரின் சமூகத் தொண்டு குறித்தும் நிரம்பக் கேட்டு விளக்கம் பெற்றதாக "விடுதலை"யில் செய்தி வந்தது. 1971 ஜூன் 7-ந் தேதி முதல், பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சத வீதமும் பதவிகளைக் கணக்கிடுமாறு 2-12-71-ல் அரசாணை பிறப்பிக்கப்பெற்றது.

நமது கடவுள்களாக நாம் கருதிக் கொண்டிருக்கிற எல்லாமே காப்பியடிக்கப்பட்டவை; ஒரிஜினல் அல்ல என்ற பெரியாரின் ஆராய்ச்சிபூர்வக் கருத்துகள், ஆழ்ந்த சிந்தனைக்குரியவையாகும்: “கடவுள் என்பதற்கு ஒரு சொல் வடமொழியிலும் கிடையாது. தமிழிலும் கிடையாது. தமிழில் கடவுள் என்னும் இந்தச் சொல் தமிழனுக்கு இராண்டாயிரம் ஆண்டுகளுக்குள் கற்பிக்கப்பட்ட சொல்லேயல்லாமல் பழங்காலச் சொல் என்று கூற முடியாது. இருக்கின்ற இலக்கியங்கள் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டனவேயாகும். தொல்காப்பியமும் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதேயாகும். அதுதான் தமிழனுக்கு ஆதி நூலாம்!

இன்றைய நம் கடவுள்கள் அத்தனையும், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரும், அவர்களது பிள்ளை குட்டிகளும் ஆரியக் கற்பனையே. ஆரிய வேதங்களில் அவர்களால் கொண்டு வரப்பட்டவையே என்பதல்லாமல், தமிழர்க்குரியதாக ஒன்றைக்கூடச் சொல்ல முடியவில்லை. சிவன், விஷ்ணு தமிழருடையதென்று சிலர் சொல்லிக் கொண்டபோதிலும், அவற்றின் இலக்கணம் வடமொழி முறையேயாகும். லிங்கம், சதாசிவம் முதலிய சொற்களும், அவற்றின் கருத்துகளும் ஆரிய மொழியேயாகும். கடவுளர்க்கு ஆரியர் இட்ட பெயரனைத்தும், மேல்நாட்டுக் கடவுளர்க்கு இட்ட பெயர்களை அனுசரித்தே என்பதைப் பின்வரும் பட்டியல் மூலம் ஒப்பிட்டுக் காணலாம்:

சிவன், இந்திரன் - ஜுபிடர்; பிரம்மா - சாட்டர்னஸ்; எமன் - மைனாஸ்; வருணன் - நெப்டியூன்; சூரியன் - சோல்; சந்திரன் - லூனாஸ்; வாயு - சயோனஸ்; கணபதி - ஜூனஸ்; குபேரன் - புளூட்டஸ்; கிருஷ்ணன் - அப்போலோ; நாரதர் - மெர்க்குரி: இராமன் - பர்க்கஸ்; கந்தன் - மார்ஸ்; துர்க்கை - ஜூனோ ; சரஸ்வதி - மினர்வா; அரம்பை - வீனஸ்; உஷா - அரோரா,

கடவுள்களின் பிறப்பு பற்றி வழங்கப்படுகின்ற கதைகளைப் போன்ற ஆபாசக் குப்பை எங்குமே காண முடியாது.”

4-12-71 அன்று பாக்கிஸ்தான் அதிபர் யாஹ்யாகான் இந்தியா மீது போர்ப் பிரகடனம் செய்து விட்டார். அமெரிக்காவில் கண் மருத்துவம் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னர், கலைஞர் சிக்காகோ, நியூயார்க் முதலிய மாநகரங்கட்குச் சென்றுவிட்டு, 5-12-71-ல் சென்னை வந்து சேருவார் எனத் தகவல் கிடைத்தது. கண்ணின் இடப்புறம் இருந்த தொல்லை நீங்கி, மூக்கடைப்பும், தொண்டைக் கமறலும் அறவே அகன்று, தெளிவோடும் தென்போடும் வெண்கலக் குரலோடும், பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 7 மணிக்கு வந்த கலைஞரைப், பெரியார், விமான நிலையத்தில் வரவேற்றார். அன்றே கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாக்கிஸ்தான் கண்டனக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், தந்தை பெரியார், மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 55 கோடி மக்கள் மீதும் 6 கோடி மக்கள் போர் தொடுத்திடவா?" என்று முழங்கினார் பெரியார்.

முதல்வர் கலைஞர் நியூயார்க்கிலிருந்து தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று 3-12-71 "விடுதலை"யில் பிரசுரிக்கப்பட்டிருந்தது:-" அன்புமிக்க அய்யா பெரியார் அவர்கட்கு தங்கள் கருணாநிதி வணக்கம். இன்று நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்துவிட்டு, அமெரிக்காவில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் (Thanks giving day) நன்றியறிவிப்பு நாள் விழாவில் நயாகரா கிளப் விருந்தினராக இருந்து விட்டு, நியூயார்க் செல்லும் வழியில் இந்த மடல் எழுதுகிறேன்.

தாங்களும் அம்மையாரும் வீரமணியும் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். தங்களுக்குத் தேவைப்படும் ஓய்வுபற்றி நான் அதிகம் கூறவேண்டியதில்லை .

சிக்காகோ பல்கலைக் கழகத்தில் அரசியல் பிரிவில் அரசியல் கருத்தரங்கில் கலந்து உரையாற்றினேன். அங்கு தங்களைப் பற்றியும், நமது இயக்க வரலாறு பற்றியும் அமெரிக்க மாணவர்களும் பேராசிரியர்களும் நிறையத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்மவர்கள் தாம் தமிழகத்தில் நமது வளர்ச்சியை, சூரியனை மேகத்தால் மூட நினைப்பது போல், இருட்டடிப்புச் செய்ய முனைகிறார்களே தவிர, உலகின் பல்வேறு நாடுகளில் நமது பணியின் பயன்பற்றிப் பேசப்படுகிறது.

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் ஓயாத தொண்டு, தங்கள் காலத்திலேயே கொள்கைகள் பெற்றுவரும் வெற்றி குறித்தெல்லாம் குறிப்பிட்டேன். பேச்சுக்குப் பிறகு தங்களைப்பற்றியும், தன்மான இயக்க வளர்ச்சி பற்றியும் நிறைய வினாக்கள் எழுப்பினார்கள். பதில்களை விளக்கமாக அளித்தேன்.

கண்ணில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. பயணத்தை முடித்துக்கொண்டு, தங்களையும், தமிழகத்து அன்பு முகங்களையும் காண, டிசம்பர் முதல்வாரத்தில் வந்து சேருகிறேன். அமெரிக்காவில் விஞ்ஞானக்கூடங்கள் பலவற்றையும் கண்டேன். அவைகளின் சிறப்புகளை நேரில்தான் விளக்கவேண்டும். தங்கள் அன்பு மறவாத மு. கருணாநிதி, வணக்கம்."

வங்கதேச அரசை இந்தியா அங்கீகரித்ததாக 6-12-71 அன்றைய முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக "விடுதலை" ஏடு தந்தது; 1965-ல் இந்தியாமீது பாக்கிஸ்தான் படையெடுத்தபோது ஆச்சாரியார் என்ன எழுதினாரோ, அதையே இப்போதும் செய்வது பச்சை துரோகப்போக்கு - என்று 10-ந் தேதி வங்கதேசம் பாகிஸ்தான் பிடியிலிருந்து விலகிப் பரிபூரண விடுதலை பெற்றது. சுதந்திர வங்கதேசத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தும்: முஜிபூர் ரஹ்மானை விடுவிக்கக் கோரியும் தமிழ்நாடு சட்ட மன்றம் 17-12-71 அன்று தீர்மானங்கள் இயற்றியது.

பெரம்பலூர் வட்டம், குன்னம், குடும்பநல விழாவில் பெரியார், "பெண்களின் திருமண வயதை உயர்த்திச் சட்டம் கொண்டு வரவேண்டும். குறைவாகப் பிள்ளைபெற இது அனுகூலமாயிருக்கும்" எனக் கருத்தறிவித்தார். 28-ந் தேதி ஆனைமலையில், ஏ.என். நரசிம்மன் நினைவுப் பகுத்தறிவாளர் மன்றம். நரசிம்மன் நகர் காலனி ஆகியவை திறக்கப்பட்டன. மன்றம் துவக்கியவர் ஆனைமலை நகரத்து மாப்பிள்ளையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவருமான கே. ஏ. மதியழகன் பெரியாரும், ஈ.வெ.கி. சம்பத், அமைச்சர்கள் செ. மாதவன், க. ராஜாராம் ஆகியோரும் விழாக்களில் பங்கு பெற்றனர்.

29-12-71 திருச்செங்கோட்டில், “உயிர்ச்சேதம் எதுவுமே இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவர் உலகிலேயே அண்ணா ஒருவர்தான். ரஷ்யாவில் நிறுவினார்கள் என்றாலும் அங்கே பலாத்காரப் புரட்சிதான் தேவைப்பட்டது” என்று பெரியார், புத்தம் புதிய நற்கருத்தொன்றை நவின்றார்!

பெரியாரின் புத்தாண்டுச் செய்தியினைப் பெறுகின்ற பெரு வாய்ப்பைப் பெற்றுப் பிறந்தது 1972. “கடந்த ஆண்டில் தமிழ் நாட்டுக்கும், தமிழர் சமுதாயத்துக்கும், மிகவும் பாராட்டத்தக்க நன்மையும், வளர்ச்சியும், தி.மு.க. ஆட்சியின் காரணமாய் அடைந்திருக்கிறோம்! வரப்போகிற ஆண்டிலும், அதற்கு குறைவில்லாமல், மிகுதியாகவே நன்மையும், வளர்ச்சியும் அடைவோம் என்பதில் அய்யமில்லை ! சாதி, மத, கட்சி வேறுபாடில்லாமல், அறிவுக்குப் பிரதானம் கொடுத்து, நாடும் சமுதாயமும் முன்னேற வேண்டும்!" ("விடுதலை" முதல்பக்கப் பெட்டி 1.1.72)

2.1.72 அன்று தஞ்சையில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி நடந்த விழாவில், தோழர்கள் திரட்டிய 93 கிராம் தங்கம் சி.பி. சிற்றரசு வாயிலாகவும், தோழர் கா.மா. குப்புசாமி அளித்த ரூபாய் 2,000, மதுரை மேயர் முத்து மூலமாகவும் பெரியாரிடம் வழங்கிடப் பெற்றன. எஸ். இராமச்சந்திரன் தலைமையில் பல்லவன் போக்கு வரத்துக் கழகத்தை முதல்வர் கலைஞர் 3-1-72 அன்று தொடங்கி வைத்தார். முதல்வர் திரட்டும் ரூ. 10 கோடி தேசப் பாதுகாப்பு நிதிக்கு, எல்லோரும் தாராளமாக உதவுங்கள். மாவட்டந்தோறும் 2 கோடி 1 கோடி என்று வழங்கிடுங்கள் என்பதாகப் பெரியார், தாம் செல்லும் ஊர்களில் வேண்டுகோள் விடுத்து வந்தார். பொதுப்பணித்துறையின் முதல் தலைமைப் பொறியாளர் (பொது நிர்வாகம்) என்ற பதவியில், முதல் தமிழராக, எஸ்.பி. நமசிவாயம் 11-1-72-ல் நியமிக்கப்பட்டார். 11-ந் தேதி முதல் புதுவை அரசின் நாட்டு வாழ்த்துப் பாடலாகப் புரட்சிக் கவிஞரின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே" என்னும் பாடல் இருக்குமென்றும்; அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஏதாவதொரு பாரதிதாசன் பாடல் இடம்பெற வேண்டுமென்றும் ஆளுநர் பி.டி. ஜாட்டியின் பேரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

9-1-72 அன்று பெரியார், திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில், “கம்யூனிசம்" என்ற தலைப்பில் உறையூரில் பேசிய சொற்பெருக்கு, அற்புதமான கொள்கைப் பெருக்கு; கருத்துப் பெருக்கு; காவிரியின் ஆடிப்பெருக்கு:- “கம்யூனிசம் என்பதற்குத் தமிழில் பொதுவுடைமை என்பார்கள். இன்றைய தினம் உடைமை என்று கருதப்படுவதெல்லாம் தனித்தனி மனிதனுக்குச் சொந்தம். பொதுவுடைமை என்றால் எந்தச் சொத்தும் எந்த மனிதனுக்கும் சொந்தமல்ல; எல்லாம் சர்க்காருக்குச் சொந்தம். எல்லோரும் உழைப்பது; உழைப்பினால் வரும் பொருளை எல்லோரும் அனுபவிப்பது.

உதாரணமாக இந்த உறையூர் ஒரு பொதுவுடைமை நாடாக ஆகின்றது என்றால், உறையூர் மக்கள் எல்லோரும் ஒரே குடும்பம் போன்றவர்கள். குடும்பத்தின் சொத்து எல்லாருக்கும் பொது என்பது போல், உழைப்பு எல்லாரும் செய்யவேண்டியது என்பது போல், வருவாயை எல்லாரும் சேர்ந்து அனுபவிப்பது என்பது போல், ஊரில் எல்லாமே பொதுவுடைமையாகிவிடுகிறது!

இதன் அடிப்படைத் தத்துவம் என்ன? மனிதன் கவலை உள்ளவனாகவே இருக்கிறான், பிரதமரானாலும், முதன் மந்திரியானாலும், நாட்டை ஆள்பவர்களுக்குப் பல பிரச்சினைகள் சமாளிக்க வேண்டிய கவலைகள். கோடீசுவரன் ஆனாலும் எப்படி ஒரு கோடியைப் காப்பாற்றுவது என்று கவலை; அல்லது அடுத்தவனுக்கு 2 கோடி இருக்கிறதாமே என்று தம்மினும் மேம்பட்டவரைப் பார்த்துக் கவலை; ஏழை தனக்குச் சாப்பாடில்லையே; குச்சு வீட்டில் வாழ்கிறோமே; என்று. கவலைப்படுகிறான். மற்றவன் வசதியாக மச்சு வீட்டில் வாழ்கிறானே என்று மனம் புழுங்குகிறான். சொந்த உடமை இருப்பதால் கவலை நிறைந்த வாழ்வாகிவிடுவதால், பொதுவுடைமை ஏற்பட்டால் கவலையற்ற வாழ்வு பெறலாம் என்பதே தத்துவமாகும். இன்றைக்கு இந்தப்படிக்குப் பொதுவுடைமைக் கொள்கையினை ஏற்றுக்கொண்ட மக்கள் ரஷ்யா, சீனா, அங்கேரி, போலந்து, ஆஸ்ட்ரியா, செக்கோஸ்லாவாகியா, கிழக்கு ஜெர்மனி ஆகிய நாடுகளில் 100 கோடிக்கு மேல் வாழ்கிறார்கள். இந்த நாடுகளில் கடவுளோ, மதமோ, சாஸ்திரமோ, முன்னோர்கள் நடப்போ ஒன்றும் கிடையாது; அறிவுதான் பிரதானம்.

நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளுக்கு, வயிற்றுப் பிழைப்புச் சாதனமே தவிர, பொது மக்கள் கடைத்தேறப் பொதுவுடைமைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில்லை. மோட்சம், முக்தி என்ற வார்த்தைக்குத் துக்கநாசம், சுகப் பிராப்தி என்பது பொருள். இந்தக் துக்க நிவர்த்திக்கும் குறைபாடுகள் ஒழிப்பிற்கும் பரிகாரம் பொதுவுடைமைதான். ஆசையினால் ஏற்படும் குறைபாடும், தேவையினால் ஏற்படும் குறைபாடும் பொதுவுடைமையால் ஒழிந்துவிடும்.

ரஷ்யாவில், கணவன் மனைவியாக வாழ்கின்றவர்களுக்கு வசிக்க அறை கொடுக்கின்றார்கள். மற்ற வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள். இருவரும் இஷ்டப்பட்டுச் சேர்ந்து வாழ்கின்றனர். இஷ்டமில்லாதபோது பிரிந்து கொள்கின்றனர். ஏதாவது விவகாரம் என்றால், குழந்தைகள் யாரிடமிருப்பது என்பதாக வந்தால், அதற்கென்று தனிக் கோர்ட்டுகளில் தீர்த்துக் கொள்வார்கள். ஒருவன் மனைவியை இன்னொருவன் அனுபவித்தான் என்ற பேச்சே அங்கு வராது; அனுபவிக்கப் பலாத்காரம் பண்ணினான் என்றால் தான் கேஸ் அங்கு பிள்ளைகளை அரசாங்கமே வளர்த்துக் கொள்கின்றது. இங்குதான் கொள்ளிபோட, சொத்துக்கு வாரிசாகப், பிள்ளை வேண்டும் என்கிறோம்.

அங்கு, கீழ்மேல் என்று உத்தியோகத்தில் வித்தியாசம் இல்லை. ஒரே சம்பளம், சமமான அந்தஸ்து. வேலைதான் வேறு வேறாக இருக்கும். உடலில் வலுவிழந்த வயோதிகர்களை அரசாங்கமே காப்பாற்றுகிறது. அங்கு புரட்டோ திருட்டோ கிடையாது. அங்கு கழிப்பிணித்தனம் அவமானமாகக் கருதப்படும். நாணயம் என்பது மக்களிடம் கரைபுரண்டு ஓடும். மக்களுக்கு எந்தவிதமான கவலைகளோ, குறைபாடுகளோ, கிடையாது. அதனால்தான் அங்கு. 100 வயது 120 வயது வரை பல்லாயிரக் கணக்கானவர்கள் உயிரோடு வாழ்கிறார்கள்,

அங்கு 1915-ல் புரட்சி ஏற்பட்டது. 1920-ல் சோவியத் ஆட்சி என்று பிரகடனம் செய்தார்கள். இந்தக் காலத்துக்குள்ளாக எவ்வளவு மேம்பாடு அடைந்து விட்டார்கள். எனவே எனக்குத் தோன்றிய பொதுவுடைமை சுருக்கமாய்ச் சொன்னேன்!"

20-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகக் கூட்டம், கா. திரவியம் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள் கா. ராஜாராம், எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் பேசியபின் பெரியார், “எதிரிகளை வென்று விடலாம், இனத் துரோகிகளை அடையாளம் காண்பது சிரமம். பகுத்தறிவுவாதி போல வேஷம் போடுவோரிடம் தான் நாம் மிகுந்த எச்சரிக்கையாயிருக்கவேண்டும்" என்று உஷார்படுத்தினார். 23-ந் தேதி கடலூரில் இல்லாத கடவுளை இருப்பதாகக் கூறும் மடமையை ஒழிக்க வேண்டும் என்கிறோம் நாங்கள். இதிலென்ன தவறு?" என்று பெரியார் கேட்டார்.

“தமிழரசு” இதழின் சிறப்பு மலர் ஒன்றில் பெரியார் கட்டுரை யொன்று வழங்கியிருந்தார். அதன் முடிவுரையாக, சாதி ஒழிப்பு போன்ற பணிகளுக்கு மத்திய அரசு தடையாக இருந்து வருவதால், தமிழ் நாடு தனியாகப் பிரிந்தால்தான் வழி பிறக்கும் என்ற எண்ணம் ஏன் உண்டாகக் கூடாது என்று கேட்டிருந்தார். அரசு இதழில் பிரிவினைவாடை வீசுவதாகச் சட்டமன்றம் வரையில் சிலர் பிரச்னை உருவாக்கினர். 22, 24 ஜனவரி 72 "விடுதலை" இதற்கான விளக்கங்களை நல்ல வண்ண ம் தீட்டிக் காட்டிற்று. "26-1-1950 Hindu ஏட்டில், பெரியார், ஏன் தனித் திராவிட நாடு வேண்டும் என்பது பற்றி விளக்கிக் கட்டுரை எழுதியிருந்தார். அதனால் "இந்து" வின்கொள்கை திராவிட நாடு பிரிவினை என்றாகி விடுமா?" என்று கேட்டது “விடுதலை."

25-ந் தேதி பகல் 11.30 மணியளவில் சென்னை தேவி குரூப் தியேட்டர்களின் உரிமையாளர்கள் வேண்டியவாறு, பெரியாரும் மணியம்மையாரும் அங்கு சென்று, சுற்றிப் பார்த்து, வியந்து, மேல் நாட்டை ஒப்ப நம் நாட்டுத் தமிழர் ஒருவர் இதனை அமைத் துள்ளதற்காகப் பாராட்டுகிறேன்" என்று வருகையாளர் பதிவேட்டில் எழுதினார் பெரியார். 27-ந் தேதி மயிலாப்பூர், “சாதி ஒழிந்த சமுதாயம் அமைக்கின்றாயா? அல்லது எங்களைப் பிரித்து விட்டு விடுகின்றாயா? என்று மத்திய அரசுக்கு நோட்டீஸ் விடவேண்டும்” எனப் பெரியார் முழங்கினார். அடுத்த இரண்டாம் நாள் வேலாயுதம்பாளையத்தில், “மாநில சுயாட்சி கேட்டு மத்திய அரசைக் கெஞ்சுவது எப்படியிருக்கிற தென்றால், ஒருத்தி, ஒருபடி மிளகை அடுத்த வீட்டுக்காரியிடம் கொடுத்துவிட்டு, ஒரு டம்ளர் ரசத்துக்குப் பிச்சை கேட்டுக் கையேந்தி நின்றாளாம். அது போல இருக்கிறது என்ற அழகான எளிய உவமை கூறினார் பெரியார்.

5-2-72 சென்னை பொது மருத்துவ மனையில், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின துணைத்தலைவர் கோட்டையூர் சிதம்பரம் அவர்கள், மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். 1934-ல் இருவருக்கும், திருவண்ணாமலை ரங்கம்மாளுக்கும் பெரியார் தலைமையில் சுயமரியாதைக் கலப்புத் திருமணம் நடைபெற்றது செல்லாது எனப் பிறகு ஒரு முறை கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. சந்திரன், ஜெயம் என இரு ஆண்மக்களும், மோகனா - வீரமணி, சூரியகுமாரி - சம்பந்தம் என இரு பெண்மக்களும் இவருக்கு உண்டு. பெரியார் திடலில், அன்னாரின் சடலம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து பெரியார் விரைந்து வந்து சேர்ந்தார். முதல்வர் கலைஞர், அமைச்சர் ப.உ. சண்முகம் ஆகியோர் அனுதாபத் தந்தி அனுப்பியிருந்தனர். 6-2-72 காலை 10 மணிக்கு ஓட்டேரி இடுகாட்டில் அடக்கம் நடைபெற்றது.

11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து 28 பார்ப்பனர் செய்திருந்த ரிட்மனுமீது விசாரணை நடந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் கோவிந்த சுவாமிநாதன் வாதம் புரிந்தார். 14-2-72 அன்று ஜார்ஜ் பெர்னாண்டஸ், பம்பாயில் நிருபர்களிடையே பரபரப்பான ஒரு செய்தியை வெளியிட்டதாக “விடுதலை" பிரசுரித்திருந்தது. தமிழகத்தில் கலைஞர் ஆட்சியைக் கவிழ்க்க, இந்திராகாந்தி சதி செய்வதாகவும், தி.மு.க.வில் முக்கியப் பொறுப்பிலுள்ள மூன்று பேரைப் போட்டித் தலைமைக்குத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு விளம்பரம் வெளிச்சம் தரப்படுவதாகவும். பெர்னாண்டஸ் தெரிவித்தார். அந்த மூன்று பேர் யாரென்று தாம் சொல்வதற்கில்லை என்றார். எனினும் நிருபர்கள் ஊகம் ஓரளவு சரியாகவே இருந்தது. மூவரில் ஒருவர் அடுத்த சில மாதங்களில் வெளியேறித் தனிக் கட்சி தொடங்கினார்; இரண்டாமவர் 1977-ல் வெளியேறி, அந்த முகாமில் இப்போதுள்ளார்; மூன்றாமவர் இப்போதும் கலைஞரிடமிருந்தே செயல்படுகின்றார்!

15-2-72 அன்றிரவு, கொரடாச்சேரி கூட்டம் முடிந்து, மறுநாள் சின்னமனூருக்குச் செல்லப் புறப்பட்டபோது, பெரியாருக்கு வாந்தியும், வயிற்றுப் போக்கும் ஏற்பட்டது. தஞ்சையில் மருத்துவக் கல்லாரி முதல்வர் டாக்டர் பூபதியிடம் செல்லவும், அவர் அங்கேயே பெரியாரைப் படுக்கையில் தங்கிடச் செய்தார். அதன் காரணமாக 16 சின்னமனூர், 17 ஒட்டன் சத்திரம், 18 போடி நாய்க்கனூர், 19 வேடசந்தார், 20 காரைக்குடி கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, உடனிருக்கும் புலவர் கோ. இமயவரம்பன் அறிவித்தார். 17 - ந்தேதியன்று, மணியம்மையார் உடனிருந்து கவனிப்பதாகவும், மருத்துவமனையில் மன்னை நாராயணசாமி, தஞ்சை பெத்தண்ணன், நடராசன் எம்.எல்.ஏ., திருவையாறு இளங்கோவன் எம்.எல். ஏ. போன்ற தி.மு.க. தோழர்களும், கா. மா. குப்புசாமி போன்ற தி.க. தோழர்களும் பார்த்ததாகவும், வீரமணி தகவல் தந்தார். அத்துடன், பெரியாருக்குத் தங்கள் வீடுகளில் விருந்தளிக்கும் பழக்கத்தை இனியாவது தோழர்கள் கைவிடுங்கள், என்று வீரமணி வேண்டினார். 18-ந் தேதி கலைஞர் தொலைபேசி மூலம் விசாரித்தார். என். வி. நடராசன் மணியம்மையாரிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டார். அன்பில் தர்மலிங்கம் நேரில் வந்து விசாரித்தார். கலெக்டர் அந்தோணி, பெரியாரைச் சந்தித்துத், தஞ்சை மாவட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகவும், பெரியாரின் பிரச்சாரம் உதவியதாகவும் கூறி; நலம் விசாரித்தார். 19-ந் தேதியன்று ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு ஆகியோர் வந்து பார்த்தனர். அன்று மாலை 4-30 மணிக்குப் பெரியார் திருச்சி போய்ச் சேர்ந்தார். அங்கு 20-ந்தேதி பேராசிரியர் அன்பழகனும், 21-ந் தேதி காமராஜரும் பெரியாரைக் கண்டனர்.

22-2-72 அன்று பெரியார் சென்னை வந்து சேர்ந்தார். பெரியார் திடலில், அன்றைக்குப் பெரியாரை, இலங்கைத் தமிழர் தலைவர் செல்வநாயகம், அவரது தளபதி, அமிர்தலிங்கம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், மணவைத் தம்பி ஆகியோர் சந்தித்து உரையாடினர். அமைச்சர் ராஜாராமும், துணைவேந்தர் சுந்தர வடிவேலுவும் உடனிருந்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் தமது அனுதாபமும் ஆதரவும் எப்போதும் உண்டு என்றார் பெரியார். மறுநாள் 23-ந் தேதி சென்னையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பாராட்டு விழா; பெரியார் தலைமையில், அமைச்சர்கள் மாதவன், அன்பில் தர்மலிங்கம், வீரமணி, கா.து. நடராசன், நெ.து. சுந்தரவடிவேலு, ஏ.என். சட்டநாதன் ஆகியோர் பாராட்டுரை பகர்ந்தனர். "சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர், அந்தக் காலத்தில் M.A. பட்டம் பெறுவதென்பது சாமான்யமல்ல, இவர் தம்பியும் எம்.ஏ. பட்டதாரி; படித்து முடித்ததும் இவர் நேரே என்னிடம்தான் வந்தார். எனக்குச் சோறு போதும்; தங்களுடன் பொதுத்தொண்டு செய்கிறேன் என்றார். இவர் சந்து பொந்து இல்லாத பகுத்தறிவாளர்! என்னைப் போல இவரும், தன் வரையில் சிக்கனமானவர்!" என்று பெரியார் நாவலரைப் புகழ்ந்தார்.

1-3-72 அன்று தமிழ் நாடு அரசு சமர்ப்பித்த பட்ஜெட் 2-49 கோடி ரூபாய் உபரி. பெரியார் இதனை வெகுவாகப் பாராட்டினார். “மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதால்தான் உபரி பட்ஜெட் தர முடிந்தது. மேலும் பல நல்ல திட்டங்களை அறிவிக்க முடிந்தது. உச்சவரம்பை, ஒரு குடும்பத்துக்கு 10 ஸ்டாண்டர்டு ஏக்கரா எனக் குறைக்கலாம். குத்தகை பாக்கிச் சுமையை ரத்துச் செய்தது நல்ல காரியம், கிராமச்சாலை அமைப்பும் மிக முக்கியமானது" என்றெல்லாம் எழுதினார். 7-ந் தேதி விடுதலையில் எனது விண்ணப்பம் என்ற தலையங்கம் பெரியார் எழுத்தில் வடிக்கப்பட்டது:- “ஆட்சிக்குத் தொந்தரவு தராமல் ஏதாவது கிளர்ச்சி செய்ய வேண்டுமென நினைக்கிறேன். அரசியலில் செய்தால், உடனே நம்மையும் ஆட்சியையும் எதிர்க்க, மோகன் குமாரமங்கலம், சி. சுப்ரமணியம், காமராஜர், பக்தவத்சலம் கூட்டத்தார் கிளம்பி விடுவார்கள். அதனாலும், அதைவிடச் சமுதாயக் கிளர்ச்சி முக்கியம் என்பதாலும், சட்டத்தை மீறுவதா, அல்லது மறியல் செய்வதா, என்றெல்லாம் யோசனை செய்து வருகிறேன். தோழர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். 1 லட்ச ரூபாய் நிதியும், 10,000 தொண்டர்களும் இதற்காகத் திரட்டுவோம்!” என்று.

8-3-72 அன்று, அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்துக்குப் பதில் மன்னை நாராயணசாமி அமைச்சராக்கப்பட்டார். உடல் நிலை குன்றியதால் அன்பில் ராஜிநாமா செய்ததாக அறிவிக்கப்பட்டது. திருச்சியில் 11, 12 தேதிகளில் மூன்று மாநாடுகள் - திடுக்கிடும் தீர்மானங்கள் - திரளாக வாருங்கள்! என்று விளம்பரம் செய்யப்பட்டது. 11-3-72 காலை 9 மணிக்குத் திராவிடர் மாணவர் மாநாடு, வரவேற்பு டி.டி. வீரப்பா, தலைவர் எஸ். துரைசாமி, திறப்பாளர் வீரராக்கியம் கே. சின்னப்பன். ஜி.டி. நாயுடு, பூ.சி, இளங்கோவன் ஆகியோர் உரை அன்று மாலை 3 மணிக்குப் பெண்கள் விடுதலை மாநாடு. பிரபாவதி பி.ஏ., தலைவர்; வீரமணி, பராங்குசம், வெற்றிச் செல்வி, சக்தி கோதண்டம் பி.ஏ. சிறப்பு உரை. அன்பில் தர்மலிங்கம் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்தினருக்கு விருதுகள் வழங்கினார். மறுநாள் 12-3-72 காலை 9 மணிக்கு ஊர்வலம். இதில் மத சம்பந்தமான வேடமணிந்தவர்கள் ஊர்வலத்தில் வரவேண்டாம் எனப் போலீசார் கேட்டுக்கொள்ளவே, சரியென இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பெரியாரும், வீரமணியும் அலங்கார ரதத்தில் அமர்ந்து சென்றனர். மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் வரவேற்பாளர் செல்வேந்திரன், தலைவர் வீரமணி; சி.பி. சிற்றாசு, திருவாரூர் தங்கராசு, எஸ்.எஸ். பாட்சா, இறையன் பி.ஏ. பி.டி. ஆகியோரின் உரை. பெரியாரின் பேருரையோ இரு நாட்களுமே! இது ஜாதிப் பாதுகாப்பு மாநாடல்ல, இது ஓட்டு வேட்டை மாநாடல்ல, மானத்துக்கு உயிர் கொடுக்கத் துடிக்கும் மாநாடு - எனவும், திடுக்கிடும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும், எனவும் விளம்பரம் செய்யப்பட்டதால், ஏராளமான பொது மக்கள் குழுமியிருந்தனர். சுதந்திரத் தமிழ்நாடு பெறக் கிளர்ச்சி துவக்குவது என்றும்; கோயில்களில் அனைவருமே பூசை செய்வதற்கான உரிமையை நிலை நாட்டுவது என்றும்; கோயில்களைப் புறக்கணிக்குமாறு பொது மக்களை அமைதியாக வேண்டுவது என்றும் தீர்மானங்கள் இயற்றப் பெற்றன. “இந்த அரசு நீடித்து இருந்தால்தான் நமது இந்தக் காரியங்கள் வெற்றி பெற முடியும். அரசுக்கு ஏதாவது இடையூறு வருமென்று கருதி, நம்மைக் கைவிடக்கோரினால், அப்படியே கேட்க வேண்டியதுதான் நமது கடமை! ஏனென்றால், கண்ணைக் குத்திக்கொண்ட பின் சித்திரம் வரைய முடியுமா?” என்றார் தந்தை பெரியார்.

14-3-72 அன்று அர்ச்சகர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அதாவது, அர்ச்சகர் தொழிலுக்குப் பரம்பரை பாத்யதை கிடையாது. ஆனால் அர்ச்சகர் நியமன விஷயத்தில் அந்தக் கோயிலின் ஆகமம் பின்பற்றப்படவேண்டும். “விடுதலை” விமர்சித்தவாறு, இது ஆப்பரேஷன் வெற்றி; நோயாளி இறந்தார் என்பது போன்றதே! 15-ந் தேதி தலையங்கத்தில் “விடுதலை” எழுதிற்று:"டாக்டர் அம்பேத்கர் முன்பு சொன்னது தான் சரி; We are bound by the decision; but we do not bound to respect the decision, "அர்ச்சகர் சட்டத்திருத்தத்துக்காக தி.மு.க. நாடாளுமன்றத்தில் போராடும் என, முதல்வர் கலைஞர் கருத்துரைத்தார். 15-3-72 அன்று பெரியார் ஒரு தீர்க்கதரிசனமான (?) உரையினை நாகப்பட்டினத்தில் நிகழ்த்தினார்: “இன்றைய ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவோ சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அப்படியே கவிழ்க்கப்பட்டாலும் நமது கருணாநிதி ஒன்றும் பயந்து விடமாட்டார். தி.மு.க. என்பதில் உள்ள 'மு'வை எடுத்துவிட்டு, நாங்கள் இரண்டு பேரும் ஒன்றுதான் என்று கூறித், தீவிரமாக வந்து விடுவார்” என்றாரே தந்தை பெரியார்

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் வேளாங்கண்ணியில், மாவட்ட திராவிடர் கழகச் சார்பில், பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள் 10-3-1972 முதல் நடைபெற்றன. பெரியார் 14, 15 நாட்களில் வகுப்பு நடத்தினார். மற்ற நாட்களில் தோழர்களான கி. வீரமணி, திருவாரூர் தங்கராசு, வே. ஆனைமுத்து, செல்வேந்திரன், கலியராசுலு, வி.பொ. பழனிவேலனார் ஆகியோர் விளக்கவுரைகள் ஆற்றி வந்தனர்.

ஏப்ரல் 1-முதல், இந்தியா முழுவதும் கருக்கலைப்பு சட்ட சம்மதம், என்பது தொடங்கப்படுகிறது. இங்கே முதலில் 22 மருத்துவ மனைகளில் செய்து கொள்ளலாம் என, நல்வாழ்வு அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், 31-3-72 அன்று கூறினார். 4-4-72 மாலை, சென்னை ஷெரீஃப் எம்.ஏ.எம். ராமசாமி, சிகப்பி ராமசாமி, ராஜா சர் முத்தையாச் செட்டியார் ஆகியோர் அளித்த விருந்துக்குப் பெரியார் வீரமணியுடன் சென்றிருந்தார். ஆளுநர் கே.கே. ஷா, முதல்வர் கலைஞர், தலைமை நீதிபதி வீராசாமி, அமைச்சர்கள், பிரமுகர்கள் வந்திருந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அபாயக் கட்டத்திலிருந்த முஸ்லீம்லீக் தலைவர் கண்ணியத்துக்குரிய காய்தேமில்லத் முகமது இஸ்மாயில் சாகிப் அவர்களைப் பெரியார் பார்த்து வந்தார். ஆனால் அன்னார் மரணமடைந்து விடவே. சடலம் புதுக்கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. இரவே மணியம்மையாருடன் சென்று, மரியாதை செலுத்தினார் பெரியார், மறுநாள் “விடுதலை”யில் துணைத் தலையங்கம் தீட்டப்பட்டதோடு, 5-4-72 அன்று கடற்கரையில், தி.க. சார்பில், அனுதாபக் கூட்டமும் நடைபெற்றது. தெ.மு. சண்முகம் தலைமையில், நெல்லிக்குப்பம் சுப்பிரமணியம், எஸ். துரைசாமி, கி. வீரமணி ஆகியோர் இரங்கலுரை ஆற்றினர். பெரியாரும் அனுதாபம் தெரிவித்தார்; மேலும், பேசும்போது, “மந்திரிகள்மீது லஞ்சம் ஊழல் என்றெல்லாம் இப்போது பேசத் துவங்கியிருக்கிறீர்களே! இதற்கெல்லாம் வழிகாட்டிகளே நீங்கள்தானே! ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், பக்தவத்சலம் இவர்கள் ஊழல் பேர்வழிகள் அல்லவா? உருப்படியாக எதையும் சொல்லத் தெரியாமல், ஊரிலே பேசிக் கொள்கிறார்கள் என்பதுதான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இது சோதாக்களின் பேச்சு, காமராஜர்தான் ஆதாரத்தோடு ஏதாவது கூறட்டுமே! இவர்களை ஒழித்து விட்டு என்ன செய்யப் போகிறாராம்? பார்ப்பான் காலில் தானே விழப்போகிறாய்?” என்றார் சூடாக.

6-ந் தேதி பிற்பகல் 3-30 மணிக்குப் பெரியால் திடலில், பெரியார் தங்கும் விடுதியில், ஒரு திடீர்த் திருமணம் திரு எம்.எச். ராவ் பி.ஏ.பி.எல், அவர்களின் மகன் ரவீந்திரநாத் எம்.எஸ்சி.யும் கணபதி சேண்டப்பிரியர் மகள் ராஜேஸ்வரி எம்.எஸ்சி.யும் 10 நண்பர்கள் சூழ வந்திருந்து, பெரியார் தலைமையில் தங்கள் திருமணத்தை முடித்துக் கொண்டனர். 25 ரூபாய் நன்கொடை வழங்கினர். இவர்கள் புகைப்படம் 'விடுதலை'யில் இடம் பெற்றது. ராஜாஜி மண்டபத்தில், முதல்வர் கலைஞருக்கும், பெரியாருக்கும், என்.ஜி.ஜி.ஓ. ரகசியக் குறிப்பு முறை ஒழிப்பிற்காகப் பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. “மத்திய அரசிலும் ரகசியக் குறிப்பு முறை ஒழிந்தால், அங்கு கொஞ்சநஞ்சமிருக்கிற நம்மவர்களும் தலையெடுக்கமுடியும். இல்லாவிடில் காலம் முழுவதும் பார்ப்பானுக்குப் பயந்துதான் கிடக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆட்சியிடம் விசுவாசமாயிருங்கள்” என்றார் பெரியார். கலைஞர் “பெரியார் சுய ஆட்சிக்குப் பதில் சுதந்திர ஆட்சி ஏன் கூடாது என்கிறார். தமது வாழ்நாளிலேயே தம் கருத்துகளும் எண்ணங்களும் நிறைவேறுவதைக் கண்டு வருகின்ற தலைவர் உலகத்திலேயே நமது பெரியார் ஒருவரே தான் பெரியாரிடமும் அண்ணாவிடமும் நாம் பயின்றது அடக்குமுறை வழியல்ல; அடக்க முறைதான்" என்று பேசிவிட்டு, ஊழியர்கள் எதிர்பாராமலிருந்தபோதே, அங்கு அவர்கட்குப் பஞ்சப்படி உயர்வு அறிவித்தார். அன்றிரவு 8 மணிக்குப் பெரியார் திடலில், ஜார்ஜ் கோமகன் எம்.எல்.சி. ஆனதற்குப் பாராட்டுக் கூட்டத்தில், அமைச்சர்கள் என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து ஆகியோருக்குப் பின்னர், பெரியார் இன்னொரு தீர்க்கதரிசன உரை (?) நிகழ்த்தினார்:- "தி.மு.க. அமைச்சரவை ஆதரவால் இப்படி வெற்றி பெற்றவர், ஆட்சியை ஆதரிக்க வேண்டும்; அநாவசியமாய்த் தொல்லை கொடுக்கக் கூடாது. காமராஜர் அப்படித்தான் என்னுடனிருக்கும்போது அசல் மனிதராயிருந்தார். இப்போது ராஜாஜிக்குக் கையாள் ஆகிவிட்டார். இப்போதே இப்படி என்றால், இன்னும் பதவிக்குப் போனால் அவரிடம் எப்படி, எவ்வளவுக்குப் போவாரோ? காமராஜர் நிலை மிகப் பரிதாபமாயிருக்கிறது. அம்மா கட்சியிலாவது சேரலாமா என்றும் பார்க்கிறார். அது, கிட்டே சேர்க்க மாட்டேன் என்கிறது!" என்று, வவ்வால் மனிதர் நிலைமையைப் பெரியார் விண்டுரைத்தார்.

பகுத்தறிவாளர் மாநில மாநாடு, இழிவு ஒழிப்பு மாநில மாநாடு இரண்டும் சென்னையில் மே மாதம் நடக்கும் என்ற அறிவிப்புகள் வெளியாயின. 8-4-72-ல் காஞ்சிபுரத்தில் தி.மு.க. மாநாடு நடைபெற்றது. பெரியார் திண்டுக்கல்லில் பேசும்போது "பிரிவினை கேட்டால் 7 வருடம் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தேதான் நாங்கள் கேட்டு வருகிறோம். தி.மு. கழகத்தை மிரட்டுவது போல எங்களை மிரட்ட முடியாது. நாங்கள் தேர்தலுக்கு நிற்கும் கட்சியல்ல!" என்று மத்திய அரசுக்குத் தாக்கீது விடுத்தார். 29-4-72 அன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 81-வது பிறந்த நாள். கடற்கரைச் சாலையிலுள்ள அவரது சிலைக்குப், பகுத்தறிவாளர் கழகச் சார்பில், கா.து. நடராசன், என்.எஸ். சம்பந்தம், எஸ். துரைசாமி ஆகியோர் மாலை சூட்டினர். சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் சட்ட மன்ற மேலவையின் துணைத் தலைவராக அன்றைய தினந்தான் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மன்னார்குடியில் மே 6, 7 தேதிகளில் நடந்த தி.மு.க. மாநாட்டில் பெரியாரும் பங்கேற்று, 6-ந் தேதி அண்ணா படத்தினைத் திறந்து வைக்கும் போது, “இன்றும் இரட்டையாட்சி முறைதானே இங்கு நடைபெறுகிறது? அது நீங்கி, நம் சொந்த ஆட்சி நடைபெற வேண்டும். அதற்கு என்ன வழி? முதலில் கோயில் சொத்துக்களை அரசுடைமை ஆக்குங்கள். கடவுளைப் பாதுகாக்க ஒரு இலாகா இருப்பதை ஒழியுங்கள்!" என்றார். 9-ந் தேதி தொட்டியத்தில் “தி.மு.க. ஆட்சி மேலும் 50 ஆண்டுகள் நீடிக்க வேண்டும். பொதுமக்களாகிய நீங்கள் இன்னும் பக்குவமடையாத காரணத்தால்தான் ஆட்சியாளர் துணிவாக எதையும் செய்யாமல், பயப்படுகிறார்கள்”, என்று பெரியார் எடுத்துக் காட்டினார்.

மே 27 மாநிலப் பகுத்தறிவாளர் மாநாடு, 28-ல் மாநில இழிவு ஒழிப்பு மாநாடு. முந்தியதற்குத் தலைவர் நாவலர், திறப்பாளர் கலைஞர். பிந்தியதற்குத் தலைவர் பெரியார், திறப்பாளர் சி.பி. சிற்றாசு. காரைக்குடி ஆர். சுப்பிரமணியம் குழுவினரின் தீ பரவட்டும் நாடகம் நடைபெற்றது. பெரியார் நேரடி மேற்பார்வையில் மாநாட்டின் ஏற்பாடுகள் நடைபெற்றன. இடையில் பெய்த மழையின் பாதிப்புகள் சமாளிக்கப்பட்டன. புத்தகக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, பாட்டரங்கம், படத்திறப்பு விழாக்கள் எல்லாம் நடைபெற்றன. பக்குவமடையவும், மான உணர்ச்சி பெறவும், கோயில்களுக்குச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளவும், செயலில் இறங்கிடச் சிந்தனை செய்யவும் இந்த மாநாடு பயன்படும் என்றார் பெரியார். அன்பில் தர்மலிங்கம் கண்காட்சி இருந்தார், “இந்தக் கண்காட்சி ஆபாசம் என்றால் கோயில்களில், தேர்களில் உள்ள ஓவியங்கள், சிற்பங்கள், புராணச் சித்திரிப்புகள் ஆபாசமல்லவா?” என்று கேட்டார் கலைஞர்.

தாமலில் ஒரு திருமணத்தில் பெரியார், “திருமணம் என்ற சொல் இந்தி எதிர்ப்புக் காலத்தில்தான் வழக்கத்திற்கு வந்தது. வாழ்க்கை ஒப்பந்தம் என்ற சொல்லை சுயமரியாதைக்காரர்களாகிய நாம் உருவாக்கினோம். ஏன் இதற்குரிய சரியான தமிழ்ச் சொல் இல்லை? கூடி வாழும் இந்த வாழ்க்கைக்கு என்னதான் பெயர்? தொல்காப்பியனே கூட “மேலோர் மூவர்க்கும் புணர்த்த காரணங்கள் கீழோர்க்காக்கிய காலமும் உண்டே" என்கிறான், எனச் சரியான அய்ய வினா ஒன்றை எழுப்பினார். 15-5-72 மயிலை கற்பகாம்பாள் திருமணமண்டபத்தில், நாகரசம்பட்டி ராஜாசுப்ரமணியம் பேரனும் விசுவநாதன் மகனுமான சம்பத்குமார் எம்.எஸ்சி., மாயூரம் வேணுகோபால் மகள் வனிதாமணி எம்.எஸ்சி. இருவரின் கலப்புத் திருமண விழா, பெரியார் தலைமையில் நடைபெற்றது. வழுவூர் ராமய்யா பிள்ளை , நெ.து. சுந்தரவடிவேலு, தொகரப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரைத்தனர்.

இந்த முறை 20 கல்லூரி மாணவர்களுக்கு, சுயமரியாதைப் பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், தர்மபுரி மாவட்டம் தாதப்பட்டியில், கிருஷிபண்டிட் பட்டம் பெற்ற கோவிந்தசாமி - துரைசாமி சகோதரர்களின் சாந்தி நிகேதன் போன்ற குளுமையான மாந்தோப்பினிடையே, நாகரசம்பட்டி என்.வி. சுந்தரம், என்.வி. விசாலாட்சி அம்மையார் நேரடி மேற்பார்வையில் வெகு சிறப்புடன் நடை பெற்றன. 3-5-72-ல் துவங்கி கொண்டல் மகாதேவன் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சித் துறை இயக்குநராக 11-ந் தேதி பொறுப்பேற்றார். ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். பொதுப்பணித்துறை செயலாளராக 25-ந் தேதி நியமனம் பெற்றார். 21-5-72 அன்று சென்னை வந்த பிரதமர் இந்திராகாந்தியிடம், முதல்வர் கலைஞர், போர் நிதியாக 6 கோடி ரூபாய் வழங்கினார். 3-6-72 அன்று கலைஞரின் 49-வது பிறந்த நாளன்று. பெரியார் எழுதித்தந்திருந்த பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியை வீரமணி நேரில் படித்தளித்தார், காலை 8-30 மணிக்கெல்லாம்.

கோயில்கள் ஏற்பட்டது ஏன் என்ற தொடர் கட்டுரை "விடுதலை"யில் ஆசிரியர் வீரமணியால் எழுதப்பட்டு வந்தது. கடவுளான் ஆபாசக் கதைகளும் பெட்டிச் செய்தியாகப் பிரசுரமாகி வந்தன. ஜூன் மாதம், மற்ற முந்திய மாதங்களைவிட அதிகமாகப் பெரியார் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 11-6-72 அன்று கூடிய சென்னை மாவட்ட திராவிடர் கழகம், அடுத்த 16-6-72 முதல் மயிலை கபாலி கோயில் முன் பகிஷ்காரக் கிளர்ச்சி துவக்குவதாக முடிவெடுத்து, முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கிற்று. 14-ந் தேதி கோவையில் கூட்டத்தில் பேச்சைத் துவக்கிய பெரியார், "பரிதாபத்திற்குரிய சகோதரர்களே! உணர்ச்சியற்ற தாய்மார்களே! இனி இப்படித்தான் உங்களை அழைக்கப் போகிறேன்!" (என்று துவக்கினார்)

15-6-72 அன்று பெரியாரிடமிருந்து Trunk Call - ல் வந்த செய்தி, "விடுதலை"யில் கட்டம் கட்டிப் பிரசுரிக்கப்பட்டது. “நமது கிளர்ச்சிக்கு அரசு தடை விதித்திருப்பதை இன்று அறிந்தேன். நம்முடைய கிளர்ச்சி பலாத்காரம் சிறிதுமில்லாத வேண்டுகோள் முறைதான். இதைத் தடை செய்திருக்க நியாயமேயில்லை. இனி நமக்கு மானத்தோடு வாழ வாய்ப்பில்லை. தடையை மதிப்பதும், தடைக்கு ஆளாவதும் மானக் கேடு என்றுதான் கருதுகிறேன். என்றாலும், நம்மாலான வரையில் இந்த ஆட்சிக்குச் சங்கடமும் அதிருப்தியும் ஏற்படாதவாறு நடந்து கொள்ளக் கருதி, நீதியாய் நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்துச், சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்கிறேன்!" - கபாலி கோயில் கிளர்ச்சி இவ்வாறாயிற்று!

சென்னை பகுத்தறிவுக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கடவுளார் ஆபாசப் படங்கள் சிலவற்றை “Illustrated Weekly” 18-6-72 இதழ் வெளியிட்டது. "துக்ளக்" இதழிலும் சில படங்கள் வெளியாயின. சேலம் எஸ்.சி. ஜெயராம ரெட்டியார் என்ற தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கு, 24-1-71 முதல் சேலம் மாவட்ட ஜுடீஷியல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடைபெற்று, 22-6-72 அன்று சேதுமாதவன் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது. பெரியார், டி.வி, சொக்கப்பா, திருவாரூர் தங்கராசு, புலவர் பச்சைமுத்து, ஆர். நடேசன் ஆகியோர் மீது 294, 298, 504 பிரிவுகளின்படிக் குற்றம் இழைக்கப்படவில்லை என, விடுதலை செய்த தீர்ப்பு! பெரியாருக்குப் பதில் வழக்கறிஞர் எஸ். துரைசாமி ஆஜரானார். மற்றும் விசுவநாதன், நடராசன், ஏ, துரைசாமி , ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினர்.

முதல்வர் கலைஞர் மீது, ஏதோ சி.பி.அய், வழக்குத் தொடரப்பட்டதாகச் செய்தியை அவதூறாக வெளியிட்டமைக்காகத் தமிழர் பேரணி என்னும் அமைப்பினைச் சார்ந்தவர்கள், 23-ந் தேதி “ஆனந்த விகடன்”, 24-ந் தேதி "கல்கி" இதழ்களின் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, அந்தந்த இதழ்களுக்கும் தீ இட்டனர். பிரிவினை தவிர வேறு வழியுண்டா? என்று வந்த பெட்டிச் செய்தி “விடுதலை”யில் - "தனித் தமிழர் ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்காமல் Hindu டெல்லி அரசுக்கு மூன்று யோசனைகளைத் தெரிவிக்கும் தைரியத்துடன் முன் வருகிறது.

1. அகில இந்திய சர்வீஸ்களில் 50 சதவீதம் வெளி மாநிலத்தார்க்குத் தரப்பட வேண்டும்.

2. பல சர்வீஸ்களை அகில இந்திய அடிப்படையில் மாற்ற வேண்டும்.

3. அய்க்கோர்ட் ஜட்ஜ்களில் மூன்றிலொரு பங்கு வெளி மாநிலத்தாராயிருக்க வேண்டும்.

இதற்குப் பதில் என்ன சொல்கிறீர்கள்? தமிழ்நாடு தனி நாடானால் தவிரத், தமிழனுக்கு வேறு கதி மோட்சம் உண்டா ?"

விவசாயிகள் கிளர்ச்சி 16-7-72 அன்று நடைபெறும் என்கிற முயற்சி, ஆட்சிக் கவிழ்ப்புக்காகவே செய்யப்படுகிறது. இதிலும் புதுக் காங்கிரஸ் போக்கு சரியில்லை. எனவே நாடெங்கும் 8-7-72 அன்று இதற்குக் கண்டனக் கூட்டங்கள் நடத்துவது, என ஆளுங்கட்சியின் தோழமையிலுள்ள கட்சிகள் முடிவெடுத்தன. “இந்திரா அம்மையாரின் பணந்தான் வருகிறது, தமிழ் நாட்டில் இந்த மாதிரிக் கிளர்ச்சிகள் நடத்த இந்தப் பிரதமர் அம்மா யோக்கியதை, நகர்வாலா ஊழலில் தெரியவில்லையா?" என்று பெரியார் 12-ந் தேதி திருவாரூரில் அம்பலப்படுத்தினார். 12-7-72 முதல் ஆர். தில்லைநாயகம் நெடுஞ்சாலைத் துறையின் பிரதமப் பொறியாளரானார். 31-7-72 முதல் வே. தில்லைநாயகம், நூலகத் துறை தனியாக்கப்பட்டதில், அதன் இயக்குநரானார். நெ.து. சுந்தரவடிவேலு இரண்டாம் முறையாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானதில் பெரியாரின் பரிவு மிகுதி!

“ அரசியல் வாழ்வு, நாளுக்குநாள் மனிதப்பண்பையே கெடுத்தது. நமது பின் சந்ததிகளையே பாதிக்கின்ற அளவு, கீழ்த் தரத்துக்குப் போய்விட்டது. அரசியல் போட்டியாளர்களின் காரணமாக இன்றையச் சமுதாயம், சட்டம் அமைதி ஒழுங்குத் தன்மைகளை அலட்சியமாய்க் கருதும் அகம்பாவம் ஏற்படுத்திக் கொண்டது. ஜனநாயகம் என்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

நமது நாட்டில் பார்ப்பனர்கள் இருக்கும் வரை மனுதர்ம சாஸ்திரம் இருக்கும்வரை, இத்தகைய வன்முறை பலாத்காரம் காலித்தனம் இருக்கத்தான் செய்யும். இதைப் பொதுமக்கள் செயலாக ஆக்கியவர் காந்தியார்தான். இந்த நிலைமை வளர்ச்சிக்கு உற்சாகம் தருபவர்கள் பார்ப்பனப் பத்திரிகைக்காரர்களே ஆவார்கள்.

பொதுவாழ்வில் பார்ப்பனர்களுக்குள்ள ஆதிக்கம் குறையக் கண்டவுடன், உண்மையில் பெருமையும் கவுரவமும் உள்ளவர்களை ஒதுங்கும்படிச் செய்து, அயோக்கியர்கள், காலிகள், பொறுப்பற்ற கீழ்மக்கள் ஆகியவர்களையே பெரிதும் வேட்டையாடி விளம்பரம் கொடுத்துப் பொது ஒழுக்கத்தையே பாழாக்கினார்கள்.

கட்டுப்பாடும் சமாதானமும் அற்ற தன்மையை சத்திய சோதனை என்னும் பேரால் உண்டாக்கிவிட்டு, ஜனநாயகத்தையும் உண்டாக்கிவிட்டால் - எந்தக் குணம், எந்தத் தன்மை கொண்ட மக்களின் ஆட்சிதானே நிலவும்? தொழிலாளர் தொல்லை, கூலிக்காரர் தொல்லை, இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், இந்த நாட்டில் இந்த இனம்தானே மெஜாரிட்டியாக உள்ளனர்.

இந்த நிலையில், சமதர்மம் ஜனநாயகம் என்றால், நாடும் மனித சமுதாயமும் எக்கதி ஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஆகவே நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்று, சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்." இது பெரியார் 6-7-72 அன்றைய "விடுதலை"யில் தீட்டிய தலையங்கப் பகுதியாகும்.

இந்த ஆண்டு 15-7-72 அன்று பெரியார் - காமராஜ் படங்களுடன், " காமராஜ் அவர்களைக் கட்சிக் கண்கொண்டு பார்ப்பதில்லை. பார்ப்பனரல்லாதார் என்பதில் உள்ள தனிப்பற்று கொண்டு பார்க்க வேண்டும். பார்ப்பனர் எந்தக் கட்சியிலிருந்தாலும் கவலைப்படாமல், தங்கள் நலனில் மட்டும் அக்கறை காட்டுவது போல, நம்மவர்களுக்கும் வரவேண்டும்" என்ற செய்தி காமராஜர் பிறந்தநாளை யொட்டி "விடுதலை"யில் தரப்பட்டது.

“அரசாங்கத்தின் முக்கிய கவனத்துக்கு” என்று பெரியார் 17-7-72 அன்று எழுதிய தலையங்கம் கவலையோடு கூடியிருந்தது:- கல்வித் துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பனீயம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தமிழ் நாடு அரசு உத்தேசித்துள்ளதாம். எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபிகேட்டில் காலேஜில் சேர்த்துக்கொள்ளத் தகுதியுடையவர் (Eligible for college course) என்று எழுதிக், கையெழுத்தும் செய்து கொடுத்து விட்டுக், காரியத்தில் மார்க்கு பார்த்து, திறமை பார்த்துப், புகுமுகப் பரிட்சை வைத்துச் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு போடுவதும், தராதரம் பார்க்காமல் சேர்க்கக்கூடாது என்பதும், பார்ப்பனீயமா, அல்லவா? ஏனென்றால் இவை பார்ப்பானின் மூளையில் தோன்றியவைதானே?

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு என்பவர்களைக் கல்வி விஷயத்தில் குழியில் தள்ளி மூடுவதுதானே இந்த யோசனையின் பலன்? கல்வித்துறை அதிகாரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பார், தாழ்த்தப்பட்ட வகுப்பார் இருந்தால், இந்த எண்ணம் அவர்களது ஞாபகத்தில் வருமாடி கல்வித்துறையில் பார்ப்பன் ஆதிக்கத்தை, உயிருக்குத் துணிந்து ஒழித்ததன் பலன் இதுதானா? இராஜாஜி, பக்தவத்சலனார் உத்தரவுகளுக்கும் இதற்கும் என்ன பேதம்?

உத்தியோகத்தில் தகுதி திறமை பார்ப்பதே யோக்கியமற்ற காரியம் என்று, 40 ஆண்டுகளாய்ச் சொல்லிப் போராடி வருகிற நான், பாஸ் செய்தவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்குத், தரம் பார்க்க வேண்டுமென்றால், பெரிதும் சாதித் தரம் தவிர வேறு தரம் என்ன என்று கேட்கிறேன்! நாம்தான் பாஸ் பண்ணாதவனை பெயில் ஆக்கி விடுகிறோமோ

நான் மனித சமுதாயத்தின் தகுதி, திறமை, தரம் என்பவைகளைப் பார்த்து வந்த அனுபவமுடையவன். அவைகளைப்பற்றி நான் எழுதி வந்த கருத்துகள் இன்னமும் இருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்காக உழைத்து வந்தவன்; வருபவன் நான், மந்திரிகள் முதல், அவர்களிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஆகித் தீரவேண்டும் என்பவன்,

கல்வி விஷயத்தில், இந்த ஆட்சியைவிடக் காமராஜர் ஆட்சி, மிக்க தேவலாம் என்று ஆகிவிடக்கூடாது,

கண்டிப்பாய் அரசாங்க அகராதியில், தகுதி திறமை தரம் என்ற சொற்களை எடுத்துவிட வேண்டும். இது என் சொந்தக் கருத்து,

பெரியார் உடல்நலம் சீர்கெட்டது. ஹெர்ணியா தொல்லையால் சோர்வும் களைப்பும் ஏற்பட்டதால், சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் 19-7-72 அன்று சேர்க்கப்பட்டு, டாக்டர் கே. ராமச்சந்திரா அவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறார் என வீரமணி அறிவித்தார். 18-7-72 அன்று “என்னைப்பற்றி" எனப் பெரியார் ஓர் அறிய விஷய விளக்கத் தலையங்கம் எழுதியிருந்தார். "பெரியோர்களே, நண்பர்களே, தோழர்களே! சில தெரிவித்துக் கொள்ளுகிறேன் நான் செய்து வந்த, வருகிற. தொண்டு நீங்கள் அறிந்ததேயாகும். என் நலத்தை, செல்வத்தை, செல்வாக்கைப் பொது நலத்தொண்டுக்குக் கொடுத்தேனா, அல்லது பொதுத் தொண்டால் இவற்றைப் பெருக்கினேனா என்பது உங்களுக்குத் தெரியும்

இராஜாஜி அவர்களும், இருகவர்னர்கள், இருகவர்னர் ஜெனரல்களும் வேண்டியும் கேட்டுக் கொண்டும், மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். வேறெந்தப் பதவியையும் விரும்பியவன் அல்லன்.

என் பொதுத் தொண்டால் கூட்டம் மாநாடுகள் மூலமாக வரும்படி 1 லட்ச ரூபாயிருக்கும். மற்ற சொத்துகள் டிரஸ்ட் ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தாகும். நான் அவற்றிலிருந்து திருச்சி காலேஜுக்கு 5 லட்சம், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு 1 லட்சம், ஈரோடு குழந்தைகள் வார்டுக்கு 1 லட்சம், மற்றும் சில்லறையாகக் கொடுத்தது 2, 3 லட்சம் ரூபாய்க்குக் குறையாது.

இயக்கத்துக்கு நான் வாங்கியிருக்கிற சொத்துகள் 30 லட்ச ரூபாய் பெறும். எங்கள் டிரஸ்ட் சொத்துகள் 20, 30 லட்ச ரூபாய் பெறும். இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும் தலைவர் என்கிறமுறையில் என் ஆதிக்கத்தில் உள்ளதால், சொத்து வளர்கின்றது; பெருகுகின்றது இதனால் எனக்கென்ன பலன் என்றால், கவலை தொல்லை அதிகமாகிறது. இன்கம்டாக்ஸ் மூலம் எவ்வளவு சொத்து குறையுமோ?

எனது தொண்டின் பயனாய்ப் பலர், நினைக்க முடியாத பதவி அந்தஸ்து செல்வாக்கு அடைந்துள்ளார்கள், நான் அவர்கள் யாரிடத்தும் கைநீட்டாமல், இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டுதான் வருகிறேன். எனது நிலை தாழாமல் வளர்ந்து கொண்டுதான் வருகிறது.

ஏன் இவற்றையெல்லாம் சொல்லுகிறேன் என்றால், உங்களிடம் மன்னிப்புக் கேட்பதற்கு ஏன் மன்னிப்பு என்றால், சுற்றுப் பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வதற்கு!

சென்னையிலோ, திருச்சியிலோ, வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்து கொண்டு, துண்டுப் பிரசுரம், வால் போஸ்டர், சிறு சித்திரப் புத்தகம் பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம்; அலைய வேண்டாம் என்று பார்க்கிறேன். இனி யார் தயவையும் விரும்பாமல், யார் விஷயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல், சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகிறேன்.

நான் சென்னைக்கு வந்தால் 'உண்மை' மாத இதழையும் கொண்டு வரலாம். பல சங்கடங்களும் இருக்கின்றன! மணியம்மையார் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கின்றது. பல பள்ளிகள், ஒரு பண்ணை , பல வீடுகள் திருச்சியில் உள்ளன. நான் சென்னைக்கு வந்து தனியாய் இருக்க மணியம்மையார் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சென்னைக்கு வந்தால் திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். என் உடல்நிலை மன நிலையைப் பொறுத்துதான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன.

மற்றொரு முக்கியமான விஷயம்; சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு, சினிமா பார்க்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கோயில் பகிஷ்காரம் செய்துவிட்டாயா என்று கேட்பீர்கள். அது அவமானம்தான். ஆனாலும் நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை என்றாலும், கலைஞர் தடையை நீக்கும்போது ஆரம்பிப்பேன். ஆனால் சினிமா பகிஷ்காரத்துக்கு யாருக்கும் ஆட்படமாட்டேன். அது அண்மையில் துவக்கப்படும். இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெளியிட இருக்கிறேன். வணக்கம்"

சில படங்கள் புராண, மத, கடவுள் பிரச்சாரம் அதிகம் செய்து வருவதால், அத்தகைய சினிமாக்களையே பகிஷ்காரம் செய்ய இருப்பதாக மறுநாள் விளக்கமளித்தார் பெரியார்.

"மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு, நாட்டு உணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்கவேண்டுமானாலும், மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும்.

உதாரணமாக இன்று பார்ப்பனர்களுக்கு, அவர்கள் எந்த வகுப்பார்களானாலும், சமுதாயத்துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும், (சமஸ்கிருதம்) வடமொழி என்கிற ஒரு மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பலதுறைகளில் ஆதிக்கம் பெற்ற தாலுமே, தமிழர்களுக்குள் இனவுணர்ச்சி புலப்படவில்லை; குறைந்து வந்துவிட்டது. இப்போது பாக்கி உள்ள துறைகளிலும், இந்தி ஆதிக்கம் பெற்று, இந்தி மயமாகி விட்டால், இந்தியும் ஆட்சி பீடம் ஏறிப் பெருமை பெற்றுவிட்டால், தமிழன் நிலை என்ன ஆகும் என்பதைச் சிந்தியுங்கள்" இந்த ஆழ்ந்த கருத்தினைப் பெரியார் விடுதலை"யில் 34-7-72 அன்று வடித்திருந்தார்.

கர்நாடகமாநிலத்தில், ஒரு மாணவன் குடுமி வைத்துக்கொள்ள மறுத்ததால், அவனுக்கு மாணவர் உணவு விடுதியில் அனுமதி கிடைக்கவில்லை என்பதை வன்மையாகக் கண்டித்து பெங்களூரில், 23-7-72 அன்று சட்டமன்றத்தில், எஸ்.எம். சந்திரசேகர் பேசினார். “தமிழ்நாட்டுப் பெரியார் இங்கேயும் பிறக்கவேண்டும்; நமது மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பெரியார் தேவை" என்றும், தமக்குப் பெரியாரிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு எனவும் அவர் கூறினார்.

சிறப்பாக நடந்தேறியது. முதல் நாள் பிரும்மாண்டமான ஊர்வலம், பல லட்சம் மக்கள் பங்கேற்றனர். இறுதியாகச் சிறப்புப் பேருரை ஆற்றிய முதல்வர் கலைஞர் அரைமணி நேரம் பேசியபின், உடல் நலிவுற்றுப் பேச்சை முடித்துக் கொண்டார். புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன் முன்னதாகப் பேசும்போது, “மாநில சுயாட்சிபெறப் போராடுவோம்! நம்மை எதிர்த்து மத்திய அரசு இராணுவத்தை ஏவினாலும் சமாளிப்போம்" என்றார். முரசொலிமாறன் இந்த மாநாட்டின் தலைவர், மதுரை மேயர் எஸ். முத்து வரவேற்புக் குழுத் தலைவர்,

9-8-72 அன்று பெரியார் மதுரை மாநாட்டைப் பாராட்டித் தலையங்கம் வரைந்தார்: “மதுரை மாநாடுகள் வெற்றியுடன் நடந்ததை அறிந்து, இதற்குக் காரணமானவர்களை வாயார மனமாரப் பாராட்டுகிறேன். இது இவ்வளவு நல்லவண்ணம் நிறைவேறக் காரணம் தி.மு.க. ஆட்சியின் சிறப்பு என்றுதான் கூறவேண்டும். அரசு பகுத்தறிவுவழி மாறாமல் தன் பயணத்தை நடத்தி வருகிறது. கலைஞரின் திறமையான நிர்வாகத்தினால் நல்ல ஆட்சி நடைபெற முடிகிறது. கல்வித் துறையில் முன்னேற்றம், உணவுத் துறையில் பஞ்சம் இன்மை , போக்குவரத்து வசதிகள், சாலை அமைப்புகள், சிறு தொழிலுக்கு ஊக்கம், தாழ்த்தப்பட்டோருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியிலும் உத்தியோகத்திலும் நியாயமான விகிதாச்சாரம், ஏழை உழவர்களுக்கு நிலப்பட்டா வீட்டுமனைப்பட்டா வழங்குதல். இப்படி அடுக்கடுக்காய் நன்மைகள் குவிக்கிறார்கள். இந்த ஆட்சியைக் கண்போல் காப்பது நமது கடமையாகும்."

"கவர்னர் பதவி தேவையற்ற ஒன்று. எப்போதும் அவர்கள் டில்லியின் ஏஜண்டாகத்தான் பணியாற்றுவார்கள். இதுவரையில் எந்த கவர்னர் வந்தாலும், அவரது தனிக்காரியதரிசி பார்ப்பானராகவேதாள் இருக்கிறார்' என்று 7-ந் தேதி "விடுதலை"யில், ஆசிரியர் வீரமணியின் தலையங்கக் கட்டுரை வெளியானது.

வேடிக்கையான வேதனையான பெட்டிச் செய்தி ஒன்று “விடுதலை"யில் வெளியாகியிருந்தது. "ஈ.வெ.ரா. வேண்டுகோள். அன்புள்ள நண்பர் திருவண்ணாமலை பால கிருஷ்ணன் அவர்களே! நீங்கள் வீட்டை விட்டு வெளியேறி நாள் ஆகிவிட்டதாம். நீங்கள் எங்கிருந்தாலும் திருச்சி பெரியார் மாளிகைக்கு உடனே வாருங்கள். உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் நானே தக்கது செய்திறேன்,

உங்கள் நண்பன் ஈ.வெ. ராமசாமி

திருச்சி 12-8-72

13-7-72 அன்று கடலூரில் அரிய பெருவிழா. கெடிலம்

பாலத்தருகில் பெரியார் சிலை திறப்புவிழா, மஞ்சகுப்பம் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம். ஊரே மக்கள் திரளால் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி வழிந்தது. மாலை 5 மணிக்குத் தந்தை பெரியார் முத்துப்பல்லக்கில் அமர்ந்துவர, மக்கள் முழங்கிவரக், கடலலை போல் மனிதத்தலை அணி அணியாய் ஊர்ந்துவர, அழகுமிகு எழுச்சி ஊர்வலம் புறப்பட்டது வே இடையிடையே முதல்வர் கலைஞர். அமைச்சர்கள் ப.உ. சண்முகம் எஸ். இராமசந்திரன், சி.பி. சிற்றரசு, அன்பில் தர்மலிங்கம், ஆகியோர் பல்லக்கில் ஏறி அமர்ந்து கொண்டனர். ஊர்வலம் வரும் வழியில், அனைவரும் இறங்கி, தந்தை பெரியார் நிற்கும் பாங்கில் அமைக்கப்பெற்ற முழு உருவ வெண்கலச் சிலையினைக் கலைஞர் திறந்து வைக்க, மீண்டும் ஊர்வலம் முன்னேறி, நகராட்சி மன்றம் அடைய, அங்கே பெரியார், முதல்வர், அமைச்சர்கட்கு நகராட்சிமன்றம் வரவேற்பு வழங்கி, இரவு 9 மணிக்கு முடிக்க, பொதுக்கூட்டம் 9-30 மணிக்கு தொடங்கியது. மேலவைத்தலைவர் சிந்தனைச்சிற்பி சி.பி. சிற்றரசு தலைமை ஏற்றார். கண்காட்சியின் பகுத்தறிவுக் கோலத்தை மக்கள் கண்டு விழிப்புணர்வு பெறுமாறு, ப.உ. சண்முகம் திறந்து வைத்தார். வீரமணி - கடலூர்க்காரராயிற்றே - வரவேற்றார். மாவட்ட அமைச்சர் எஸ். இராமச்சந்திரன் 10,000 ரூபாய் பொற்கிழி பெரியார்பால் ஈந்தார்.

முதல்வர் கலைஞர் பேசும்போது, “சிக்காகோ பல்கலைக் கழகத்தில் பெரியாரின் நூல்களெல்லாம் இருந்தது காணப் பெருவியப்பும் மகிழ்ச்சியும் பெருமையும் உற்றேன். பெரியாரிடம் நாம் தரும் செல்வம் வீண்போகாது. மருத்துவமனையாக, கல்விச்சாலையாக மக்களுக்கே திரும்பிவரும்” என்றார். மேலும் “இன்று பெரியாருக்குச் சிலை. சிலை என்றால் வில் என்றும் ஒரு பொருளுண்டு. பெரியாரின் வில்லில் இருந்து புறப்பட்ட அக்கினியாஸ்திரம் அழகிரி; வருணாஸ்திரம் அண்ணா; நாகாஸ்திரம் சி.பி. சிற்றரசு; நான் என்ன அஸ்திரமோ நீங்களே முடிவு செய்யுங்கள்” என்றார். புதுவை முதல்வர் ஃபாரூக், அன்பில் தர்மலிங்கம், சிதம்பரம் டாக்டர் ரங்கசாமி, ஆர். கனகசபை, எம். செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோருக்குப்பின், பெரியார் சீருரை நிகழ்த்தினார். செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும் என்று, 1944 - 1972 இரு நிகழ்ச்சிகளுக்கும் eye witness ஆன கவிஞர் கருணானந்தம், கவிதையொன்று தீட்டியவாறு, பெரியார் சிலை பீடத்தில் குறிக்கப்பட்ட சொற்கள் மிகப் பெரிய வரலாற்று உண்மை ஒன்றை நினைவூட்டுகின்றன.

சரித்திரக் குறிப்பு

29-7-1944 அன்று தந்தை பெரியார் அவர்கள் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இதே இடத்தில், இன்று (13-8-1972) அவருக்கு சிறப்புடனும் அன்புடனும் சிலை எழுப்பப்படுகிறது. வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!

15-8-1972 சுதந்திரதின வெள்ளி விழா, சென்னைக் கடற்கரையில் முதல்வர் கலைஞர் தலைமையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெகஜீவன் ராம், பெரியார் வழியில் அண்ணாவும் கலைஞரும் ஆட்சிப் பொறுப்பின் வாயிலாகச் செய்து வரும் சாதி ஒழிப்புப் பணிகளைப் பெரிதும் பாராட்டினார். அன்று மாலை அவர் அரசினர் அம்பேத்கர் நினைவுக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், இந்தச் சுதந்திர நாள் பெரியாரின் உள்ளத்தில் எப்பேர்ப்பட்ட சிந்தனையைத் தந்தது:- என்னைப் பொறுத்தவரையில், நான் இதை, அடிமையும் மடமையும் ஒழுக்கக்கேடும் நேர்மைக்கேடும் ஏற்பட ஏதுவான, துக்கநாள் துவங்கிய 25-ம் ஆண்டு நாள் என்றுதான் கூறுவேன். இந்தியாவுக்கு என்றைக்குச் சுதந்தரம் வெளியிடப்பட்டதோ, அன்றைக்கே இதை நான் சொல்லிவிட்டேன்.

சுதந்தரம் என்று முதலில் விஷயம் வெளியானவுடன். உயர்திரு அண்ணா, அதைச் சுதந்திர நாள் என்று பாராட்டினார். காங்கிரஸ்காரர்கள் அதைத் துணித் தோரணங்களில், பெரிதாக எழுதி, அடியில் அண்ணாதுரை என்றும் எழுதி, தெருத் தெருவாகக் கட்டி வைத்தார்கள். பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் போல் பிரசுரித்தார்கள். அநேகமாக இந்தச் சம்பவம்தான் அண்ணாதுரைக்கும் நமக்கும் மாறுபாடு வெளியான சம்பவமாக இருக்கலாம்.

அது மாத்திரமல்லாமல், அடுத்த விஷயத்தை மாண்புமிகு நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கூட்டத்தில் (பொள்ளாச்சி என ஞாபகம்) இது சுதந்தர நாள் என்று பேசினார் என்பதைக் கேள்விப்பட்டு, நான் கண்டித்தேன். அப்போது அதற்குப் பதிலளிக்க நாவலர் அவர்கள் “தலைவர் கருத்து இப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு முதலிலேயே தெரிவித்திருக்க வேண்டாமா? எங்களுக்கு எப்படித் தெரியும்” என்று சொன்னார்.

ஆகவே இது துக்க நாள், மனித சமுதாயத்திற்குக் கேடானநாள் என்பதை அப்போதே சொன்னேன். அது எப்படியோ இருக்கட்டும்; இன்று இந்த நாட்டில் ஓர் ஆட்சிக்கு இருக்கக்கூடாத ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, புரட்டு, பித்தலாட்டம், மானங்கெட்ட தனம், கட்சிமாறல், கட்சிக்குத் துரோகம், இழிதன்மையான சுயநலம், அபாண்டமாய்க் குறைகூறல் முதலிய கூடாஒழுக்கக் காரியங்கள் எந்தக் கட்சியில் யாரிடம் இல்லாமல் இருக்கின்றன? இப்படிப்பட்ட காரியத்திற்காக யார் வெட்கப்படுகிறார்கள்?

முதலாவதாக, அயோக்கியத் தனத்துக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். இந்தத் தேசத்தில் எவன் ஒருவன் தன் நாட்டுக்குச் சர்வ சுதந்திரம் கேட்கிறானோ, அவன் ஏழாண்டுகள் வரை தண்டிக்கப்படத்தக்க குற்றவாளியாக ஆக்கப்படுவான் என்ற சட்டம் உலகில் எந்த நாட்டில், தேசத்தில் இருக்கிறது?

அடுத்துச் சொல்கிறேன்; எவனொருவன் தேர்தலில் நிற்பதானாலும் 10,000 ரூபாய் முதல் 3 லட்சம் வரை செலவு செய்து தான் வெற்றியோ, தோல்வியோ அடைய முடியும் என்பது, எப்படி யோக்கியமான நிலையாகும்?

காலித்தனத்துக்குப் பெயர் வேலை நிறுத்தம்; அயோக்கியத்தனத்துக்குப் பெயர் அகிம்சை; சண்டித்தனத்திற்குப் பெயர் சத்தியாக்கிரகம் தான் பதவி பெற்ற கட்சிக்குத் துரோகம் செய்து விட்டு, எதிர்க்கட்சியின் ஆளாக ஆவது முதலியவை. எப்படி யோக்கியமான சுதந்தரமான இருக்க முடியும்?

பூரண சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகள் ஆனபின்பும் 54 கோடி மக்களில், ஆண்களில் 70 சதவீதம், பெண்களில் 82 சதவீதம் தற்குறி, கையெழுத்துப் போடத் தெரியாதவர்கள் என்றால், இதற்குப் பெயர் சுதந்தர ஆட்சியா? அடிமை ஆட்சியா? 100க்கு 3 பேராயுள்ள பார்ப்பனர் மேல்சாதி 97 பேராயுள்ள சூத்திரர் கீழ்சாதி என்ற நிலை நீடிக்கையில், இது சுதந்தரம் பெற்ற தேசமா? அடிமைச் சாசனம் பெற்ற தேசமா?

இதற்கு மேலும் நமது சுதந்திர நாள் விழாவைப்பற்றி விளக்குவதென்றால், மனம் மிகுந்த பரிதாபப்படுகிறது.

தோழர்களே! இப்படிப்பட்ட நிலைபற்றி எந்தக் குடிமக்களாவது வெட்கப்படுவதாக இருந்தால், நமது சமுதாயத்திற்குக் கேடாக உள்ள பார்ப்பனப் பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என உறுதி எடுத்துக்கொள்ளுவதன் மூலம் காட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுதான் இன்று பொது மக்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ளும் ‘இஞ்செக்ஷன்’ செய்தியாகும்.

துக்க நாள் ஒழிக! உண்மைச் சுதந்தர நாள் தோன்றுக!

தாழ்த்தப்பட்டோர் ஒருவர் கட்டாயமாக ஒவ்வொரு கோயிலிலும் அறங்காவலர் குழுவில் இடம் பெறவேண்டும் என்ற மசோதா 18-9-72 அன்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. “விடுதலை” அலுவலகத்தில் பெரியாரிடம் 14 வயதில் அச்சுக்கோப்பாளராக வேலையில் சேர்ந்து Foreman ஆக உயர்ந்து, 25 ஆண்டு பணியாற்றியபின் ஓய்வு பெற்ற நாகேஷ் என்ற தோழருக்கு, ஊழியர்கள் சார்பில் அளிக்கப்பட்ட பிரிவுபசார விருந்தில் பெரியாரும், வீரமணியும் பங்கேற்று, வாழ்த்தினர். அரசவைக் கவிஞராக வீற்றிருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை , 24-8-72 அன்று மறைந்தார். கலைஞர் ஆட்சி இவருக்கு சிறப்பு ஊதியம் ஒன்று வழங்கி வந்தது, இரக்கத்தினடிப்படையில்! அன்பில் தர்மலிங்கம் 26-8-72 முதல் மீண்டும் வேளாண்மைத்துறை அமைச்சராகவே நியமிக்கப் பெற்றார். அன்று மாலையே பெரியாரைச் சந்தித்து வணங்கினார். ஆனால் 2-9-72 அன்றுதான் இவர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். வாடிப்பட்டி ரயில் நிலையம் அருகிலுள்ள 6 ஏக்கர் புஞ்சை நிலத்தில் தந்தை பெரியார் குடியிருப்பு என்ற பெயரில் சிற்றூர் உருவாகி வருவதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று பிரசுரமாகியிருந்தது. இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் பரிசாக, வீடு வீடாகச் சென்று தோழர்கள் எளிமையாக வழங்கும் பொருட்டுப், பத்துகாசு விலையில் “உயர் எண்ணங்கள்” என்ற அழகிய சிறிய நூல் பெரியாரின் சிந்தனைகளைத் தாங்கி, வெளியிடப்பட்டு, லட்சக்கணக்கில் விற்பனையை எட்டியது. (1½ லட்சம் பிரதிகள்) இவ்வாண்டு “விடுதலை” மலர் விலை ரூ.2-50; பக்கம் 200.

கோயில் திரைமறைவில் பக்தியின் பெயரால் 12,750 ஏக்கரா ஏப்பம். கோயில் பெருச்சாளிகளின் மர்மம் அம்பலம். தமிழ்நாடு அரசு நடத்திய விசாரணையின் விளைவு - என “விடுதலை”யில் முதல் பக்கத் தலைப்புச் செய்தி 1-9-72 அன்று வெளியாயிற்று. தூத்துக்குடியில் 5-ந் தேதி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலையைப், பிரதமர் இந்திரா திறந்து வைத்துத் துறைமுகத்துக்கும் அவர் பெயரே சூட்டப்படும் என்றார். 6-9-72 அன்று திருச்சியில் திருவாளர் டி.எம். நாராயணசாமிப் பிள்ளையின் 80-வது வயது பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, அன்னாரின் கல்வித் தொண்டுகளைச் சிறப்பித்துக் கூறினார் பெரியார். 10-ந் தேதி தர்மபுரியில் பேசும்போது பெரியார் “டில்லி ஆட்சியின் அதிகார பலத்தைக் கொண்டு எப்படியாவது தமிழக அரசை டிஸ்மிஸ் செய்துவிட வேண்டும் என்று சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள்” என்று தீர்க்கதரிசனமான செய்தி ஒன்றைக் கூறினார். சேலம் ஊர்வல வழக்கு, மாவட்ட நீதிபதி சாமிக்கண்ணு அவர்கள் முன்னிலையில், ரிவிஷன் மனுவாகச் செய்யப்பட்டபோது, அதனைத் தள்ளுபடி செய்தார், 12-9-72 அன்று.

இந்த ஆண்டு பெரியார் தமது 94-வது பிறந்த நாளன்று திருச்சியிலிருந்தார். சிந்தனையாளர் கழகச்சார்பில் நடந்த விழாவில், அமைச்சர்கள் அன்பில் தர்மலிங்கம், எஸ். ராமச்சந்திரன், கே. ராஜாராம், துணைவேந்தர் சுந்தரவடிவேலு ஆகியோர் பங்குபெற்றனர். பெரியாருக்கு அன்பளிப்பாக வெள்ளிவாளும், வெள்ளித்தட்டும் வழங்கப்பட்டன. “பார்ப்பனர்கள் எப்படி சங்கராச்சாரியாரைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டி வருவதால், அவர்கள் சமுதாயத்துக்கே லாபம் ஏற்படுகிறதோ, அதேபோல, நீங்கள் என்னைப் பாராட்டுவதால், எனக்கொன்றும் லாபமில்லா விட்டாலும், தமது சமுதாயத்துக்கு நிச்சயம் நன்மை ஏற்படும் என்பதால் செய்கிறீர்கள். இல்லாவிட்டால் கொஞ்சம் அவர்கள் பக்கம் தான் சாய்ந்தால், வெகு சுலபமாகப் பகவான் ராமசாமி அல்லது மகான் ராமசாமி ஆகிவிடுவேனே” என்று அந்த விழாவில் பெரியார் குறிப்பிட்டார்.

“விடுதலை” பெரியார் 94-வது பிறந்தநாள் விழா மலரில் இரண்டொரு கட்டுரைகள் பெரியார் தீட்டியிருந்தார். பிறந்த நாள் செய்தி போலத் தந்திருந்தது - கடந்த 93 ஆண்டுகளில், நான் பிறந்து, 1,116 மாதங்கள், 34,045 நாட்கள், பிறைகள் 1,635 ஏற்பட்டு மறைந்து விட்டன. இனி எத்தனை காலத்துக்கு நான் வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானந்தான். வளர்ச்சி காண்பது முடியாது காரியமாகும்.

தெய்வம் என்பதாக எதுவும் இல்லை; மனிதத்தன்மைக்கு மேற்பட்டதாக தெய்வசக்தி - தெய்வீகத்தன்மை என்பதாக எதுவுமில்லை என்று திண்ணமாய்க் கருதி, உறுதியான பணி ஆற்றி வருகின்றேன். இதனால் யாதொரு குறையும், மனச் சங்கடமும், அதிருப்தியும் இந்த 93 ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்டதில்லை என்பதோடு, நாட்டுக்கும், மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமேயில்லை என்று கருதி மக்கள் நிம்மதியுடன் இழி நிலையைத் துன்பங்களை ஏற்றுக்கொண்டு இருந்த காலத்தில், நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய்ச் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும் இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதித் துணிந்து, கடவுளையும் மதத்தையும் சாஸ்திரங்களையும் முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக் கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களையும், அறிவையும் உண்டாக்க வேண்டும் என்று பாடுபட்டு வந்ததே, இம்மாற்றங்களுக்குக் காரணமாயிற்று.

எனவே நான் 93 ஆண்டுகள் வாழ்ந்ததை வீண் வாழ்வு என்று கருதவில்லை. என் பணிகளை வீண்பணி என்றும் கருதவில்லை இனிமேலும் வாழ்வதைத்தான் கஷ்டமாகக் கருதுகிறேன். என் உடல் நிலைமை மிக மோசமாகிவிட்டது. நினைவு சரியாக இல்லை. மறதி அதிகம். காண் காது சரியாக இல்லை. கால்கள் நடக்கவே முடிவதில்லை. அசதி அதிகம்.

இப்படிப்பட்ட நிலையிலும் சற்று மகிழ்ச்சி உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் தி.மு.க. ஆட்சிப் பணிகளால்தான்!

ஏதாவது பொல்லாத வாய்ப்பால், இப்போதைய இந்தத் தி.மு.க. ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சி வரும், அதன் பலன் என்ன ஆகும் என்பவைகளைச் சிந்தித்தால் பெரும்பயம் ஏற்படுகிறது. மற்றபடி மகிழ்ச்சியோடு இதை முடிக்கிறேன்.

அடுத்த ஒரு கட்டுரையில் பெரியார், இன்றையச் சுதந்திர இந்தியாவில் நடைபெறும் சில அட்டூழியங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்:- “அரசியலில் நாம் பெற்ற மாறுதல் என்பது கெட்டதிலிருந்து கழிசடைக்குச் சென்று கொண்டிருக்கிறோம் (from bad to worse). இதனால் வரவர நம் நாட்டுப் பெண்களும், மாணவர்களும் தவறான காரியங்களால் சூழ்ந்து தழுவிக்கொள்ளப்படுவார்கள் போல் தெரிகிறது.

ஒரு கல்லுருவத்திற்கும், அயோக்கியத்தனங்களைப் பரப்பும் ஸ்தாபனமான ஒரு கோயிலுக்கும், ஒரு மடத்திற்கும், ஒரு சபையாருக்கும், ஒரு சாமியாருக்கும், ஒரு சங்கராச்சாரியாருக்கும் ஒரு கோடி ரூபாய் வருமானமிருந்தாலும், சொத்து இருந்தாலும், வரவு - செலவு இருந்தாலும் அனுமதிக்க வேண்டியது. கணக்கு வரி கேட்கக்கூடாது. ஆனால், உழைத்துப் பாடுபட்டு, திருடாமல், ஏமாற்றாமல், தேடிய சொத்துக்களுக்கு அளவு - அதாவது ஒருவனுக்கு இவ்வளவுதான் உரிமை - என்பது ஆட்சிக் கொள்கைத் திட்டம் என்றால், இந்திய ஆட்சியின் தன்மை எப்படிப்பட்டது? முன்னவர் செல்வம் எப்படி நாசமாகிறது? யாருக்குப் பயன்படுகிறது? பின்னவர் செல்வம் யாருக்குப் பயன்படுகிறது?

கார்த்திகை என்கிறான்; குடம் குடமாய்ப் பீப்பாய் பீப்பாயாக நெய் வெண்ணெய் எண்ணெய் பால் பாழாகிறது. இலட்சதீபம் என்கிறான்; அபிஷேகம் என்கிறான்; எல்லாம் குடம் குடமாக ஜலதாரைக்குப் போகிறது. கேள்வி கேட்பாரே கிடையாது. இந்தப் பார்ப்பனர் வாழும் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட பழக்கமோ, வழக்கமோ, சர்க்கார் அனுமதியோ கிடையாதே!

மேலும், தேசத்தில் உள்ள 50 கோடி மக்கள் ஒன்று சேராதபடி, 16 மாகாணங்களாகப் பிரித்து, பல நிபந்தனைகளைக் கட்டாயச் சட்டமாக ஆக்கிக்கொண்டான். இது உலகம் உள்ளவரை நிரந்தரமாகப் பிரிந்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தமும், பிரிந்து கொள்ள விரும்புகிறவனுக்குப் பிரதிநிதித்துவ உரிமை இல்லை, கிரிமினல் தண்டனை என்றும் ஆக்கிக்கொண்டு, மேல் சாதியானுடைய சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டு, பரம்பரைச் சொத்து போல், அனுபவித்து வரும் ஓர் ஆட்சியின் கீழ் நாமிருக்கின்றோம். இதை அடிமை ஆட்சி என்றும் சொல்ல முடியாமல் அந்நிய ஆட்சி என்றும் சொல்ல முடியாமல் தவிக்கின்ற நிலைமையில் இருக்கின்றோம்.

நாட்டின் சுதந்தரம் இந்த யோக்கியதையில் இருக்கிறது. நமக்கு உண்மையான சுதந்தரம் வேண்டுமானால், தமிழ்நாடு தனித்த ஏகபோக ஆட்சியாய் இருக்க வேண்டும்.”

21-ந் தேதி முதலமைச்சர் கலைஞர் ஹைதராபாத்தில் பேசும் போது, “பெரியாரைப்போல் உங்கள் மாநிலத்தில் யோகி வேமண்ணா, சவுதுரி ராமசாமி ஆகியோர் உள்ளனர்” என்று சிறப்பித்துக் கூறினார். 22-ந் தேதி கும்பகோணம் அருகில் பெரியார் வேனில் ஒரு டிராக்டர் மோதி, வேன் கதவு நசுங்கிவிட்டது. பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தவிர, ஒன்றும் ஆபத்தில்லை. டிராக்டர் ஓட்டிமீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துவிட்டுப் பெரியார் மாயூரம், திருவையாறு, மண்ணச்சநல்லூர் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து செல்கிறார் என்று வீரமணி அறிவித்தார். இராவண காவியம் பாடிய புலவர் குழந்தை 24-ந் தேதி மறைந்தார். பஞ்சாபின் சீர்திருத்தவாதியும் அங்கே பெரியாரைப் போலப் பிற்படுத்தப்பட்டோருக்காகப் பாடுபடுபவருமான சந்த்ராம் பி.ஏ., ஹோஷியார்பூரிலிருந்து பெரியார் பிறந்த நாளை ஒட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார். பெரியாரும், அண்ணாவும் எங்கள் கண்களிலேயே எப்போதும் நிற்கிறார்கள். இவர்கள் தொண்டு பாராட்டத்தக்கதாகும் என்று புகழ்ந்தார் அவர்.

இராஜாஜி காலத்தில் சட்டமன்றச் செயலாளராயிருந்த ஆர்.வி. கிருஷ்ணய்யரின் மகன் ஆர். கே. பாலசுப்ரமணியம் சென்னையில் பாராளுமன்றப் பணிகளுக்கான ஆய்வகம் ஒன்றை நடத்தி வருகிறார். “தமிழ்நாட்டில் பெரியாரின் ஓய்வற்ற பணிகளால் பல்வேறு துறைகளில் மக்களிடையே குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. அவரது தொண்டுகளை அங்கீகரித்து அவரை நட்புடன் அணைத்துச் செல்வது ஆட்சிக்கு நல்லது” என்று அவர் பிரதமர் இந்திரா காந்திக்கு ஒரு விவரமான கடிதம் எழுதியிருந்தார் 30-9-72 அன்று. அதற்குப் பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் என்.கே. சேஷன் “மேற்கண்ட கடிதம் கிடைக்கப்பெற்றது. மிக்க நன்றி பிரதமர் கடிதத்திலுள்ள விஷயங்களைப் பார்த்துக் கொண்டார்” எனப் பதில் விடுத்திருந்தார் 3-10-72-ல்.

4-ந் தேதி வள்ளலார் விழாவில் பேசிய முதல்வர் “அடிகளார் போன்றவர்கள் எவ்வளவு பேசினாலும் நமது தமிழ் மக்களை எழச்செய்ய முடியாது. அவர்களது கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து எழுப்பப் பெரியார் எனும் யானைதான் மிதிக்க வேண்டும்” என்றார். கல்வி சம்பந்தமாக அடைந்துள்ள முன்னேற்றம் 1967-ல் 27 கல்லூரிகள், 72-ல் 52, மாணாக்கர் எண்ணிக்கை 1967-ல் 80,000 1972-ல் 1,83,000 என்றார்.
“நாங்கள் பெரியாரிடம் கற்ற பாடத்தை மனத்தில்கொண்டு பணியாற்றுவதால், கோயில் வருமானம் பெருகியுள்ளது. மழையில் போகவேண்டாம் என்று குழந்தையிடம் கேட்காமல், அடம்பிடித்து மழையில்தான் போவேன் என்றால், குடையைக் கொடுத்து அனுப்புவது போலப், பிடிவாதமாகக் கோயிலுக்குப் போவோம் என்கிற மக்களுக்காகக் கோயில்களில் வசதிகளைப் பெருக்குகிறோம்” என்றார் முதல்வர் கலைஞர்

6-10-72-ல் திருச்சி பெரியார் மாளிகையிலிருந்து மணியம்மையார், நாயைக் காணவில்லை, என்று “விடுதலை”யில் செய்தி தந்தார்கள். பப்பி என்னும் 2 வயதுடைய அல்சேஷன் அது. செயிண்ட் ஜோசப் கல்லூரியருகே கிடைத்ததாக யாரோ 9-ந் தேதி அதனைச் கொண்டுவந்து விட்டனர். அம்மையார் மகிழ்ச்சியுற்றார்.

8-ந் தேதி பெரியமேட்டில் பேசிய பெரியார் “கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். இதில் கடமைக்கும் கண்ணியத்துக்கும் நேரம் இடம் காலம் பார்த்து வெவ்வேறு அர்த்தம் சொல்ல முடியும். ஆனால் கட்டுப்பாடு என்பதற்கு, எப்போதும் எல்லாருக்கும் ஒரே அர்த்தம்தான். வியாக்கினம் வேறுபட முடியாது. தி.மு.க.வுக்கு இப்போது மறுபடியும் கட்டுப்பாடு பற்றி நான் ஞாபகப்படுத்த வேண்டியவனாயிருக்கிறேன். முன்பு நேப்பியர் பார்க்கில் மாண்புமிகு அன்பழகன், கலைஞரைத் தலைவரென்று ஒத்துக் கொண்டால் என் மனைவியே என்னைக் கோபிப்பாள் என்று சொன்னபோதும் நான் இதையே குறிப்பிட்டேன். கட்டுப்பாடு குலைந்தால் நீதிக்கட்சியின் கதிதான் உங்களுக்கும் ஏற்படும்” என்று எச்சரித்தார். பூண்டி பொறியியல் விஞ்ஞானி, தலைசிறந்த பகுத்தறிவாளர் குமாரசாமி அவர்கள் தலைமையில் பெரியார் பூண்டியில் பகுத்தறிவாளர் கழகத்தை 9-10-72 அன்று துவக்கினார். இதன் செயலாளர் கோபாலசாமி, சிறந்த சுயமரியாதை வீரராவார். 10-ந்தேதியன்று “விடுதலை”யில் தி.மு.க.வும் கட்டுப்பாடும் என்ற தலையங்கக் கட்டுரை ஆசிரியரால் எழுதப்பட்டிருந்தது.

10-10-1972 சென்னையில் தி.மு. கழகத்தின் தலைமை நிர்வாகிகள், 12 மாவட்டச் செயலாளர்கள், தவிர சத்திய வாணிமுத்து, ப.உ. சண்முகம், க. ராஜாராம், காஞ்சி கல்யாணசுந்தரம், டி.கே. சீனிவாசன் ஆக 26 பேர் கையெழுத்திட்டு, கழகக் கட்டுப்பாட்டை மீறியதாகப் பொருளாளர் புரட்சி நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரனைத் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து, பதில் தரப் பத்து நாள் அவகாசம் தந்தனர். 11-ந் தேதி நிருபர்களின் கூட்டத்தில் முதல்வரும் கழகத் தலைவருமான கலைஞர் “15 லட்சம்
உறுப்பினர்களையும், 18 ஆயிரம் கிளைகளையும் கொண்ட கழகம் இது. என்னுடைய 27 ஆண்டு கால நண்பரான அவரையோ, அல்லது என்னையோ காப்பதைவிடக் கழகத்தைக் காப்பாற்றுவதே முக்கியம். கழகத்தில் ஊழல் என்று பொது இடத்தில் பேசியதற்காக அவரை விலக்கிவைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று விளக்கினார்.

11-ந் தேதி பெரியார் மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். தி.மு. கழகத்தின் பொருளாளரே இவர்தான். கணக்குத் தெரிய வேண்டுமென்றால், இரகசியமாக, உறவு முறையில் கேட்டிருக்கலாமே! பொது மேடையில் பேசியதால் கழகத்துக்குத்தான் கேடு செய்தார்கள். இதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டால் கழகத்தின் கதி என்ன? எதிர்காலம் இருக்குமா? வெளியில் போவதற்குச் சாக்குத் தேடியது போல் போய், இப்போது குப்பை போடுகிறார்கள். ஆகையால் தமிழ் மக்கள் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டும்” என்றார். 12-ந் தேதி பெரியாரே முன்னின்று நடத்திய மணிவிழா ஒன்று. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கட்கு 12-10-72 அன்று வயது 61. காந்தம்மையாருடன், இருவரையும் மணமேடையில் அமர்த்தி விழா எடுத்தனர், பெரியார் சார்பில் வீரமணியும் சம்பந்தமும் முதல்வர் கலைஞர், அமைச்சர்கள் நாவலர், அன்பில் தர்மலிங்கம், க. ராஜாராம் ஆகியோரும், மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், செட்டி நாட்டரசர் ராஜாசர் முத்தையாச் செட்டியார், எம். ஏ. எம். ராமசாமி, கா. திரவியம், கா. து. நடராசன், சை. வே. சிட்டிபாபு, பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரும் வாழ்த்துரைத்தனர். மகனுக்குத் தந்தை நடத்தும் புதுமையான அறுபதாண்டு நிறைவு விழா இது என்றார் நாவலர். கலைஞர் பேசுகையில் “தந்தை பெரியார் கையில் தி.மு. கழகக் குழந்தையை ஒப்படைத்திருக்கிறோம். நோய் போக்கும் பச்சிலை மூலிகை வைத்திருக்கும் தாய்தான் நமது பெரியார். இந்தத் தாயார் இந்தக் குழந்தைக்குத் தானே தைத்த (பதவிச்) சட்டையை அணிவித்துக், குழந்தையை நடக்கவிட்டு, முன்னும் பின்னும் பார்த்து மகிழ்வார். சட்டையில் ஊசி தங்கிப்போய் எங்கேயாவது குத்துமோ என்றும் கண்காணிப்பார். ஆயினும், ஏதாவது எதிர்ப்பு வந்தால்தான் எப்போதுமே பெரியாருக்குப் பிடிக்கும்!” என்றார்.

13-ந் தேதி தி.மு.க. செயற்குழுவும், 14, 15 தேதிகளில் பொதுக்குழுவும் கூடி, எம்.ஜி.ஆர். மீது எடுத்த நடவடிக்கை சரியென முடிவு செய்து, 22-ந் தேதி 200 ஊர்களில் விளக்கக் கூட்டங்கள் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.

13-10-72 அன்று காலை, பெரியார் அழைப்பின் பேரில்,

திடலுக்கு வந்து எம்.ஜி.ஆர். பெரியாரைச் சந்தித்தார். “நீங்கள் பொறுப்பான பதவியில் இருக்கிறீர்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் கேடுவராமல் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமையல்லவா?” என்று கேட்டார் பெரியார். எம்.ஜி.ஆர். தனது நிலையை எடுத்துக்கூறி, பெரியார் கூறியது பற்றி ஆலோசிப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். அன்றே, பகல் 11.15 மணிக்கு முதல்வர் கலைஞரும், அமைச்சர்களான நாவலர், மன்னை நாராயணசாமி க. ராஜாராம் ஆகபயாரும் வந்து, இந்தியப் பிரதமர் பெரியாருக்கு வழங்கிய தாமிரப்பட்டய விருதினை நேரில் அளித்தனர். கலைஞர், பெரியாருக்கு ரோஜா மாலை சூட்டிப் பழங்களுடன் பட்டயத்தை ஒரு தாம்பாளத்தில் வைத்துப், பெரியாருக்குப் பணிவன்புடன் வழங்கினார். அதைவிடப் பணிவன்புடன் அதனைப் பெரியார் பெற்று மகிழ்ந்தார். அந்தப் பட்டயத்தில் இந்தி மொழியில் “பாரத விடுதலையின் 25 ஆண்டு நிறைவையொட்டி, பெரியார் ஈ.வெ. ராமசாமிக்கு, பாரதப் பிரதமர் ஸ்ரீமதி இந்திராகாந்தி, நாட்டின் சார்பில் வழங்குகிறார்” எனப் பொறிக்கப்பட்டிருந்தது. பெரியார், தாம் எம்.ஜி.ஆரை அழைத்துப் பேசியது பற்றி அவர்களிடம் விளக்கிக் கூறிவிட்டுத் திருச்சிக்கு வேனில் புறப்பட்டார். விழுப்புரம் அருகில் வேன் செல்லும்போது, எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எனப்படுவோர் வேனை வழிமறித்து, எம்.ஜி.ஆர். வாழ்க, கருணாநிதி ஒழிக என்று முழக்கமிட வற்புறுத்தினர். உள்ளே அமர்ந்திருந்த பெரியார் எழுந்ததும், அனைவரும் ஓடிவிட்டனர்.
11-ந் தேதி தொடங்கிய நாடெங்கும் இப்படிப்பட்ட அமளி ஆர்ப்பாட்டங்கள் நிறைய நடைபெற்றன. 14-ந் தேதி வரை 1,625 பேர் இதனால் கைதாகியிருப்பதாக முதல்வர் செய்தி தந்தார். 17-ந் தேதி கே.ஏ. கிருஷ்ணசாமி எம்.பி., தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அடியோடு நீக்கப்பட்டார். அமைச்சர் மாதவன் பேசும்போது “எம்.ஜி.ஆர். தனக்கு அமைச்சர் பதவி கேட்டார். நடிப்பதை நிறுத்திக் கொண்டால் தருவதாகச் சொல்லப்பட்டது. அதனால் விலகி விட்டார்” என்றார். 18-10-72 அன்று எம்.ஜி.ஆர்., தான் தி.மு. கழகத்திலிருந்து விலகிவிட்டதாகவும், புதுக்கட்சி துவங்கிவிட்டதாகவும் அறிவித்ததால், இவர் முன்பு கேட்டது கணக்குப் பார்க்க அல்ல, கணக்குத் தீர்க்கத்தான் என்பது புரிந்தது. “விடுதலை” தொடர்ந்து மூன்று நாள் தலையங்கத்தில் “புதுக் கட்சி என்ற பூனைக்குட்டி வெளியே வந்தது” என விளக்கமாக எழுதியிருந்தது. பெரியார் 11-ந் தேதியே சூசகமாய்க் குறிப்பிட்டதையும் எடுத்துக் காட்டிற்று. இந்திரா காங்கிரசின் கட்சித் தலைமை எதிர் பார்த்தவாறே

நடந்துவிட்டதாக 19-ந் தேதி “சுதேசமித்திரன்” எழுதியது. 17-10-72 அன்று ஜஸ்டிஸ் அழகிரிசாமி, சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜான முதல் தமிழர். இவருக்கு முன்பாகத் தமிழ் தெரிந்த அய்ந்து பேர் இருந்திருக்கிறார்கள். யாரார் தெரியுமா? நீதிபதிகளான வரதாச்சாரி, பதஞ்சலி சாஸ்திரி, டி.எஸ். வெங்கட்ராம அய்யர், சந்திரசேகர அய்யர், ராஜகோபால் அய்யங்கார் ஆகியோர்தான்!

21-ந் தேதி அமைச்சர் கே. ராஜாராம், எம்.ஜி.ஆர். பற்றிக் குறிப்பிடுகையில், “இரண்டு வருடமாகப் பொருளாளராக இருந்தவர், இதுவரை கேட்காத கணக்கை இப்போது கேட்கக் காரணம் என்ன? ‘அய்யய்யோ கலைஞர் எதிலோயோ காலை வைத்து விட்டாரே’ என இவர் பொருளாளராக வைக்கப்பட்டபோதே பெரியார் கூறினார். மதுவிலக்கு நீடிக்க வேண்டாம்; நீக்க வேண்டும் எனப் பேசினார் எம்.ஜி.ஆர்.” என்றதோடு, பிறகோர் சமயத்தில் எம்.ஜி.ஆர். அண்ணாவின் மருத்துவச் செலவுக்குத் தான் பணம் கொடுத்ததாகச் சொன்னபோது, “அப்படியானால் அது இவருடைய வருமானவரிக் கணக்கில் எழுதப்பட்டிருக்குமே, காட்ட முடியுமா?” என்று கேட்டார் ராஜாராம்.

கலைஞர் தலைமை மாறினால் போதாது. தி.மு. கழக ஆட்சியே மாற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக 22-ந் தேதி “அலை ஓசை” ஏடு வெளியிட்டதை, 26-ந் தேதி “விடுதலை” பெட்டிச் செய்தியாகப் பிரசுரித்தது. 22-10-72 அன்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மரணமடைந்தார். பின்னர் 23-1-73 அன்று, கடலூரில் ராஜாங்கம் இல்லம் சென்று, பெரியார் துக்கம் விசாரித்து, அவர் படத்துக்கு மாலை சூட்டி வந்தார்.

22-10-72 அன்று நாகர்கோயிலில் பெரியார் சிலை அமைப்புக் குழு கூடி, முதல் கூட்டத்திலேயே 13, 750 ரூபாய் வசூலாயிற்று. 23-ந் தேதி இராமநாதபுரத்தில், அமைச்சர் மன்னை நாராயணசாமி பேசும்போது கல்லெறிந்து கலகம் விளைவித்ததில், அமைச்சரின் மண்டை உடைந்து, ரத்தம் சிந்தியது. (எம்.ஜி.ஆர். ரசிகர்களால்!)

23-10-72 “விடுதலை”யின் தலையங்கத்தில் பெரியார் தனது அரசியல் நிலை குறித்து ஒரு விளக்கமளித்திருந்தார்: “நான் எப்போதும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க முந்துபவன் அல்லன்; முந்தியதே கிடையாது. என்னை அணுகுகின்றவர்களுக்குத்தான் ஆதரவு கொடுத்து வந்திருக்கிறேன். எனக்கு எந்தக் கட்சி ஆதரவும் தேவையில்லை. ஜஸ்டிஸ் கட்சி என்னை அடைந்ததால் அதற்கு ஆதரவு கொடுத்தேன்: நானே ஜஸ்டிஸ் கட்சியானேன். யாரையும் போய் ஆதரவு தேடாமல் இன்று ஜஸ்டிஸ் கட்சியே, அதாவது திராவிடர் கழகமே (முன்னேற்றக் கழகமே) ஆட்சி செய்யும்படியான நிலைமைக்கு அதை ஆக்கியிருக்கிறேன்,

அந்தக் காலத்தில், காங்கிரஸ் ஒழிக்கப்பட்ட 1939-ல், இரண்டு கவர்னர் ஜெனரல்கள் என்னை வேண்டியும், நான் இணங்காமல் வெளியில் நின்றேன். அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துக், காங்கிரசை அடக்கினேன்.

வெள்ளையர் அரசாங்கம் நாட்டைக் காலி செய்துவிட்டுப் போனவுடன், வேறு கதியில்லாமல் காங்கிரஸ் பார்ப்பனர் கைக்கு வந்தவுடன், அவர்கள் எவ்வளவு என்னை வேண்டியும் நெருங்காமலிருந்து, பார்ப்பனரைப் பதவியிலிருந்து வெளியேற்றினேன். பிறகு பதவிக்கு வந்த பார்ப்பனரல்லாத தமிழர் திரு. காமராஜர், அவரே விரும்பியதற்கிணங்க அவரை ஆதரித்தேன்.

அவர் ஆட்சி மாறி ஜஸ்டிஸ் கட்சியின், திராவிடர் கழகத்தின், ஒரு பிரிவான திராவிட முன்னேற்றக்கழகம் பதவிக்கு வந்தது என்றாலும், அது பார்ப்பனர் ஆதரவு தங்களுக்கு அபாயத்தைக் கொடுக்கும் என்று கருதி, பிரிவுபட்ட ஜஸ்டிஸ் கட்சியின் (தி.மு.க.) தலைவரான அண்ணா அவர்களே தேரில் என் வீட்டிற்கு வந்து, “உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்களே எங்களை நடத்துங்கள்!” என்று சொன்னதால், ஜஸ்டிஸ் கட்சியின் (தி.க.) ஆதரவில் நடந்து வருகிறது. இந்த ஜஸ்டிஸ் கட்சி சேலம் மாநாட்டில் அண்ணா அவர்களின் பிரேரணையின் மீதுதான் 'திராவிடர் கழகம்' என்ற பெயர் கொண்டதாயிற்று. அதற்கு மற்றொரு ஆதாரம் ஜஸ்டிஸ் கட்சி (தி.க.) கொள்கைப்படிப் பார்ப்பனரல்லாதாராலேயே ஆளப்பட்டு வருகிறது தமிழ்நாடு இன்று.”

இதைத் தவிர, 23-ந் தேதியே, இரட்டைக்காலம் பாக்ஸ் ஒன்றும் ‘இன்றைய நிலை’ என்ற தலைப்பின் கீழ்ப் பெரியாரால் வரையப்பட்டது:- “தமிழ் நாட்டின் இன்றைய நிலை எதிரிகளால் மிகவும் பரிகசிக்கத்தக்கதாகவும், பார்த்துப் பரிதாபப்படத்தக்கதாகவும் மாறியிருக்கிறது. நாடெங்கும் கலகம், காலித்தனம், நாசவேலை ஆகிய கேடுகள் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. பணக்காரரும் பார்ப்பனரும் சேர்ந்து, தி.மு.க. ஆட்சியை ஒழிப்பதற்கான காரியத்தில், இந்திரா காங்கிரசின் சலுகையும் தேவைப்பட்டதால் அதையும் வேண்டிய அளவு பெற்றுக்கொண்டு, இப்போது திசை திருப்பிவிடும் தந்திரமாக, இதற்கு எம்.ஜி.ஆர். கிளர்ச்சி என்று பெயர் தந்துவிட்டனர். தி.மு.க.வுக்குக் கலைத்துறையில் தொடுப்பு இருந்ததால் எம்.ஜி.ஆர். அங்கிருந்து அரசியலுக்கு இழுக்கப்பட்டார். மெள்ளப் பொருளாளராகவும் ஆகிவிட்டார். இந்த வளர்ச்சியைக் காட்டித், தனக்கு மந்திரி பதவி கேட்டாராம். மதுரை மாநாட்டில் வரம்புமீறிப் பேசி விட்டதாலும் பிணக்கு ஏற்பட்டதாம். இதெல்லாம் தி.மு.க.வை விட்டு வெளியேறுவதற்கான சாக்குதான்! இப்போது எம்.ஜி.ஆரை தூக்கி வைத்துக்கொள்ளும் பத்திரிகைகள், முன்பு இவரை எம்.ஆர். ராதா சுட்டபோது எம்.ஜி.ஆரை ஆதரித்தார்களா? அனுதாபப்பட்டார்களா? இப்போது மட்டும் இவர் மீது என்ன அக்கறை? தமிழர்களே! உங்கள் தலையில் நீங்களே நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்ளாதீர்கள்! எச்சரிக்கை!”

இத்தோடு விடவில்லை பெரியார். பார்ப்பனரல்லாத இன நலக் கண்ணோட்டத்தினடிப்படையில், ஒற்றுமைக்காக ஆனவரை முயல்வதே அவரது வாடிக்கை! 24-ந் தேதியும் ‘எம்.ஜி.ஆருக்கு அறிவுரை’ என்ற தலையங்கத் தீட்டினார்:- “எம்.ஜி.ஆர். ஒரு கலைஞர். எனக்கு அந்தத் துறையில் அனுபவம் இல்லை; சுயபுத்திக் கொள்கை உடைய நடிகரின் நாடகம்தான் நான் பார்ப்பேன். இரண்டொரு சினிமா பார்த்திருக்கிறேன். சிவாஜிகணேசன், எம்.ஆர். ராதா ஆகியோரை எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு இவரைத் தெரியாது. இரண்டொரு நிகழ்ச்சிகளில் பார்த்தபோது, வணக்கம் தெரிவித்தார். நானும் பதில் வணக்கம் தெரிவித்தேன் இவருக்கு இன்கம்டாக்ஸ் தொல்லை இருக்கிறது என்கிறார்கள். அதனால் குழப்பம் ஏற்படுவது இயற்கை தான், 'இதனால்தான் யோசிக்கிறேன். நான் கட்டாயம் வேறு கட்சியில் சேரமாட்டேன்' என்று என்னிடம் கூறினார். இவரால் இனி கழகத்திற்கும் தொல்லைதான். இவருக்கும் இனி கலைத்துறையும் வீழ்ச்சிதான். பார்ப்பனர் ஆதரவெல்லாம் எவ்வளவு நாள் தாங்கும்?" என்று.

அடுத்த நாளாகிய 25-10-72 அன்றும் ஓர் தலையங்கம் சிந்திக்க வேண்டும்' என்பதாக! இதில் ஓர் உவமை கூறினார். புருஷன் செத்ததை நினைத்துக்கொண்டு, வேறொரு இழவு வீட்டிற்குச் சென்றாலும், அங்கே அழுவது போல், பார்ப்பனர்களும், தமிழ் மக்களின் எதிரிகளும் சேர்ந்து நடத்துவதே இன்றையக் கிளர்ச்சி, இதற்குப் பத்திரிகைகள் ஆதரவு தருவது எம்.ஜி.ஆருக்காக அல்ல. தி.மு.க.வை ஒழித்து விடுவதற்காகவே - என்று குறிப்பிட்டார் பெரியார்.

தமிழகச் சட்டமன்றப் பேரவைச் செயலாளரும், அண்ணாவின் உடன் பயின்றோருமாகிய சி.டி. நடராசன் அவர்களின் மகன் டாக்டர் பரிமேலழகன் எம்.எஸ். செல்வி வனிதா திருமணம் ஆபட்ஸ்பரி மாளிகையில் 26-ந் தேதி நடைபெற்றது. பெரியார், கலைஞர், அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் வாழ்த்திச் சிறப்பித்தனர். பூந்தமல்லி வழக்கறிஞர் பழனியப்பன் அவர்களின் தந்தை ரத்னசபாபதி அவர்கள் மறைந்த துக்கம் விசாரிக்கப் பெரியாரும், மணியம்மையாரும் 29-ந் தேதி அங்கு சென்று, ஆறுதல் கூறி வந்தனர்.

பெரியாரின் மனவேதனை தணியவேயில்லை என்பதற்கு ஒரு சான்று. 1-11-72 “விடுதலை”யில் அவர் எழுதிய தலையங்கம். தெற்கு அவர் கொடுத்த தலைப்பே அயோக்கியர் அயோக்கியர், மகா அயோக்கியர்' என்பது. என்ன எழுதினார் தெரியுமா? “அரசியலில் கட்சி மாறுகிறவர்கள் அயோக்கியர்கள், அயோக்கியர்கள், மகா அயோக்கியர்கள், அரசியலில், ஒரு கட்சித் தலைவர்களிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சி, சிபாரிசு பிடித்து, தன்னை ஒரு இடம் கொடுத்து ஏற்றுக்கொள்ளச் செய்து, தேர்தலில் 10 ஆயிரம் 20 ஆயிரம் கட்சிப் பணச் செலவில் பதவிக்க வந்து, கைதூக்குவது தவிர வேறு ஒரு தொண்டும் கட்சிக்குச் செய்யாமல், பொது மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சர்க்காருக்குப் பல சிபாரிசுகள் செய்து பணம் சேர்த்துக் கொண்டு, கட்சிப் பெயரால் பதவிப் பெயரால் பல சலுகைகளைப் பெற்று அவற்றாலும் பணம் சம்பாதித்துக்கொண்டு, தகுதிக்கு மேற்பட்ட சொத்தும் அந்தஸ்தும் வருவாய்க்கு வழியும் தேடிக் கொண்டதைத் தவிர, வேறு காரியத்திற்குப் பயன்படாத அநாம தேயங்கள் சுயநலத்துக்கு என்றே கட்சியைக் காட்டிக் கொடுக்க, விலை பேசி வாங்கி வேறுகட்சி என்னும் பெயரால் தானிருந்த கட்சிக்கு மனதறிந்து கேடு செய்யும் கட்சிக்குப் போய்த் தன் பெயரைக் கொடுப்பதும், தன்னை ஆளாக்கிய சுட்சியைக் குறை கூறுவதும், அக்கட்சியை ஒழிக்கப் பாடுபடுவதும், அதற்குத் தன் பெயரைக் கொடுப்பது மான காரியத்தில் ஈடுபடுவதைத்தான் - நான் அயோக்கியம், அயோக்கியத் தன்மை என்றும், அயோக்கியர் என்றும், மேலும் அப்படிப்பட்டவர் மகா அயோக்கியர் என்றும் பொது நன்மையை உத்தேசித்துக் கூறுகிறேன்!

இம்மாதிரிக் கண்டிக்காவிட்டால், இப்படிப்பட்டவர்களை மக்கள் வெறுக்கும்படிச் செய்யாவிட்டால், நாளாவட்டத்தில் யோக்கி யமான பலருக்கும் நாக்கில் தண்ணீர் வடிய ஆரம்பிக்கும். கட்சி மாறுகிறவர்கள், தமது தேர்தலுக்குக் கட்சி செய்த செலவுத் தொகை களைக் கொடுத்துவிட்டு, கட்சியால் தாம் பெற்ற பதவியையும் ராஜிநாமாச் செய்துவிட்டு வெளியேற வேண்டும். அப்போதுங்கூட இதுவரை தானிருந்த கட்சியில் மக்களுக்கு என்ன கெடுதல் ஏற்பட்டது; அதைத் தவிர்க்கத் தானெடுத்த முயற்சி என்ன? தெரிவித்த யோசனை என்ன? என்பனவற்றை விளக்குவதோடு, தாம் சேரப்போகும் கட்சியின் யோக்கியதை என்ன? நாணயம் என்ன? அதனால் நாட்டு மக்களுக்கு விளைய இருக்கும் நன்மை என்ன? என்பதையும் தன்னுடைய ஓட்டர்களுக்க விளக்க வேண்டும்.

ஓட்டுக்குப் பணம் கொடுத்து வாங்கியதால், அவர்களுக்குச் சொல்லத் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர்களாயிருந்தால், கட்சிக்காவது சொல்லிவிட்டுத்தான் செல்ல வேண்டும். ஏனென்றால், இந்த அயோக்கியர்கள், இப்படிச் செய்வது பொது நலனுக்கு ஏற்றதா என்று எண்ணிப் பாராமல், தங்கள் அப்பன் வீட்டுப் பரம்பரைச் சொந்தக் காரியம் என்று கருதகிறார்கள்,

ஓர் உதாரணம், அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவன் கருதினாலும், அவன் வீட்டிலேயே - யாரோ அமாவாசையில் பிறந்தவன் திருடிவிட்டால் - அவன் அதை வெளியில் சொல்லாமலும், போலீசில் பிராது கொடுக்காமலும் இருந்து விடுவானா? - அது போல, இன்று கட்சி மாறுவது சுபாவம் என்றாலும், நான் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.

நாட்டில் இப்படிப்பட்ட அயோக்கியர்களைக் காப்பாற்ற, மூடி மறைக்கப், பிறவி அயோக்கியப் பத்திரிகைக்காரர்கள் பலர் இருக்கின்றார்கள்; இவர்களுக்கு மானாவமானமில்லை!

யோக்கியமான காரணம் காட்டாமல், பதவியை இராஜிநாமாச் செய்யாமல், கட்சி மாறுகிறவர்கள் அயோக்கியர்கள் என்று சுவரில் எழுதுங்கள். துண்டுப் பிரசுரம் போடுங்கள். கல்லில் இவற்றைச் செதுக்கி முச்சந்தியில் நடுங்கள், என்று கேட்டுக் கொண்டு இப் போதைக்கு முடிக்கிறேன்.

மனவேதனைப்பட்ட வேதனையாளன்.”

அடுத்து, கோவையில் 5-ந் தேதி பெரியார் பேசுங்கால் “தமிழ் நாட்டிலுள்ள தொழிற்சாலைகளில் தமிழரல்லாதாரின் ஆதிக்கமே மிகுந்து விட்டது. பாதிக்கு மேல் மலையாளிகளின் ஆதிக்கம்தான் காணப்படுகிறது. எம்.ஜி.ஆர். துரோகத்தாலும், டில்லி அரசின் சூழ்ச்சியாலும், தி.மு.க. ஆட்சி கவிழ்ந்தால், இனி தமிழனுக்கு வாய்ப்பு ஏது? கலவரம் செய்வதற்கு மாணவர்களை வேறு தூண்டிவிட்டுப் பயன் படுத்துகிறார்கள்; இப்படியாகக் கவலையோடு நாம் சிந்திப்பதற்குரிய பல விஷயங்கள் இருப்பதால், விரைவில் ஒரு மாநாடு கூட்டி வேலைத் திட்டம் வகுக்கலாம் என எண்ணுகிறேன்” என்றார். 11-ந் தேதி சென்னை வாயிட்ஸ் எஸ்டேட்டில் “நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டதால், 20 லட்ச ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதே! இவ்வளவும் யாரால்?” என்று கேட்டார் பெரியார்.

10-11-72 அன்று எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் ஊர்வலம் நடத்தி அமைச்சரவை ராஜிநாமாச் செய்யக் கோருவதைக் குறிப்பிட்டு முதல்வர் கலைஞர், “இதெல்லாம் அர்த்தமற்றது. ஆகஸ்டு மாதம் மதுரை மாநாட்டில் அவரே கூறினார் - அடுத்த தேர்தலுக்கு முன்பு ஆட்சியைக் கவிழ்க்க மத்திய அரசே முயன்றாலும், முறையல்ல என்று. இப்போது மாத்திரம் என்ன அவசியம் வந்தது?” என்று கேட்டார். 12-ந் தேதி அமைச்சர் என். வி. நடராசன் மணிவிழா, சென்னை ஆபஸ்ட்பரியை அடுத்துத் தி.மு. கழகத்தால் வாங்கப்பட்ட அண்ணா அறிவாலயத்தில், பெரியார் தலைமையில், சிறப்பாக நடைபெற்றது. கலைஞர் கேடயம் வழங்க, நாவலர் பொன்னாடை போர்த்த, சத்திய வாணிமுத்து வாழ்த்திதழ் படிக்க, ம.பொ.சி. மலர் வெளியிட, விழா கோலாகலமாய் நிறைவேறியது.

13-11-72 அன்று கூடிய சட்டமன்றத்தில், சபா நாயகர் மதியழகன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், மறுநாள் எடுத்துக் கொள்ளப்படுமென அவைத் தலைவரான அவரே முதலில் கூறினார். பின்னர் திடீரென்று, “சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்தலாம். சபை டிசம்பர் 5-ந் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது” என்று முரண்பாடாகக் கூறிவிட்டு, எழுந்து சென்று விட்டார் 14-ந் தேதி சபாநாயகர் இல்லமாகிய “கூவம் இல்லம்" முன்பாக, மதியழகனைத் தேர்ந்தெடுத்த சட்டசபைத் தொகுதியான ஆயிரம் விளக்குப் பகுதியினர், ஆர்ப்பாட்டம் செய்து கைதாயினர். 15-ந் தேதி அர்த்தால் நடத்த எம்.ஜி.ஆரும், வலது கம்யூனிஸ்ட்க ளும் வேண்டுகோள் விடுத்தும், சரியாக நடைபெறாமல் பிசுபிசுத்தது. 15-ந் தேதியன்று தமிழக ஆளுநர் சட்டசபையை இறுதியாக்கி (Prorogue) செய்து ஆணை பிறப்பித்தார்.

பெரியார், 14-ந் தேதி சிந்தாதிரிப்பேட்டை பொதுக்கூட்டத்தில், “தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க விரும்பியவர்களுக்குக் கருவியாக எம்.ஜி.ஆர். இப்போது கிடைத்துவிட்டார். ஆமாம்; புகார் வந்ததன் பேரில் மந்திரி பதவியிலிருந்து மதியழகனை 1970 செப்டம்பரில் விலக்கிய கலைஞர், இப்போது எதற்காக அவருக்குப் போய்ச் சபாதாயகர் பதவியைத் தந்தார்?” என்று கேட்டார் பெரியார். அடுத்த நாள் தலையங்கம் “சபாநாயகர் நிலை”. அதில் “நாணயக் கேடாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் மீது பதவியிலிருந்து விலக்கப் பட்ட மதியழகன், அன்றைக்கே தனது மரியாதையை இழந்து விட்டார். அண்ணா செய்த தவறுதான் முதலில் இவருக்கு 1967-ல் மந்திரி பதவி தந்ததாகும். அடுத்து ஒரு தவறு அண்ணா செய்தது என்ன வென்றால், எம்.ஜி.ஆரைக் கட்சியில் சேர்த்ததாகும். அவர் தம்மவரும் அல்ல; நம் இனத்தவரும் அல்ல" என்று எழுதினார் பெரியார். அதை மெய்ப்பிக்கத் தானோ என்னவோ, திண்டுக்கல்லில் இருந்த பெரியார் சிலையை, 16-ந் தேதி உடைத்திடும் முயற்சிகள் நடந்ததாகச் செய்தி!

"சுயராஜ்யா" இதழில், தமிழ் நாட்டில் ஜனாதிபதி ஆட்சியைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று இராஜாஜி எழுதி, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல், பெரியாரின் குமுறும் எரிமலையான நெஞ்சத்தில் மேலும் ஆத்திரத்தை மூட்டிவிட்டார். நவம்பர் 15, 16 தேதிகளின் தலையங்கத்தில், பெரியார் ராஜாஜியைப் போட்டுப் புரட்டி எடுத்துவிட்டார்! “நம் நாட்டு அரசியலில் ஆகட்டும், பொது வாழ்வில் ஆகட்டும், பெருவாரியான மக்களால் பாராட்டப் படக்கூடிய பெரிய மனிதர் என்பதற்கு ஒரு நபர்கூட இல்லாமல் போய்விட்டார்கள். தமது இன மக்களால் பெரியவராக விளம்பரம் செய்யப்படும் இராஜாஜி ஒருவர் இருக்கிறார். ஆனால் அவரைப் பெரிய மனிதன் என்று சொல்வதற்கு அவருடைய வயதைத் தவிர அவரிடம் வேறு ஏதாவது தன்மை இருக்கிறதா என்றால், ஒன்றுமேயில்லை!

அவர்களிடமிருக்கும் தொண்டு - முதலாவது அவருடைய சமுதாய எதிரிகளை ஒழிக்க வேண்டும்; தமது சமுதாயம் ஒன்றே உயர் நிலையில் வாழவேண்டும். இதற்காக அவர் உண்மை , யோக்கியம், நேர்மை, நாணயம், மானம் முதலிய உயிர் போன்ற அருங் குணங்களையே தியாகம்? செய்து விட்டார்! தன்னைப்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்று சிந்திப்பதையே தியாகம் செய்து விட்டார். இந்தத் தியாகம் அவரது சுய நலத்திற்காக அல்ல; தமது சமுதாய நலத்திற்காகவே ஆகும். ஒரு விபசாரி (வேசி) பதிவிரரை வேடம் போட்டால், எப்படி ஒரு குடும்பப் பெண் போல நடந்து கொள்வாளோ- அது போல் தனது இலட்சியத்தில் அவர் நடந்து கொள்கிறார். இதில் அவருக்கு வெட்கமோ, அவமானமோ, பழிக்கு ஆளாகும் தன்மையோ ஏற்பட அவசியமேயில்லை. என்ன செய்தாவது நம்மை ஒழிக்க வேண்டியதுதான் அவரது தலையாய கடமை.

ஆகவே, இராஜாஜிக்கு என்னதான் புகழ் இருந்தாலும், அவரைப் பெரியவர் என்று நாம் கருதினால் - பிறர் கருத இடம் கொடுத்தால் - நமக்கு அழிவு நெருங்கிவிடும்.

இவரது அரசியல் நாணயத்தை எடுத்துக் கொண்டால், மாதம் 500 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்க மாட்டோம் என்று கட்சியின் கொள்கையாகச் செய்து கொண்டு, கட்சியின் மூலமே பதவிக்கு வந்து, மாதம் 20,000 ரூபாய்க்கு மேல் சம்பளமும், பிறகு பென்ஷனும் வாங்கி, சொத்துச் சேர்த்துக் கொண்டிருக்கும் தியாகிதானே இவர்? அரசியல், சமுதாய வாழ்வில் இவர் எதில் யோக்கியமாய் நடந்து கொண்டிருக்கிறார்? இவர் வந்து பொது மக்களுக்கு அறிவுரை சொல்ல, இவருக்கு எதில் என்ன யோக்கியதை இருக்கிறது?

அயோக்கியத் தனமான பத்திரிகைகளின் ஆதரவு இருக்கிறது என்பதாலும், தன்னிடம் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதாலும், ஒரு மனிதன் எந்த அயோக்கியத்தனத்தையும் செய்யலாமா? செய்தாலும் - மடையனும். அயோக்கியனும், துரோகிகளுமாக இருக்கும் மக்கள்தாம் சரி என்று சொல்வார்கள்; யோக்கியர்கள் இழித்துத்தான் கூறுவார்கள்!

ஏன் இவ்வளவு வேதனைப்பட்டு எழுதுகிறேன் என்றால், 'கருணாநிதி ஆட்சி விலகிட வேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும்' என்று அவர் சொன்னால், அப்படிச் சொல்லும் அவர் கருத்தையும் நான் புரிந்து கொண்டால், மனம் பதறுமா? பதறாதா?

அயோக்கியத்தனத்திற்கு எல்லை இல்லையென்றால் மனித சமுதாய நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களுக்கு மனம் பதறாதா? வெடிக்காதா? என்று தான் கூறுகிறேன். எனவே மக்களே! நீங்கள் அவற்றை மதிக்க மாட்டீர்கள் என்றிருந்தாலும், உங்கள் வெறுப்பை அவரர்களுக்குக் காட்டுங்கள் என்று வேண்டி இதை முடிக்கின்றேன்!

19ந் தேதி சென்னையில் சூளைப் பகுதியில் பேசிய பெரியார் "எம்.ஜி.ஆர். வரிகொடா இயக்கம் ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லி யிருக்கிறாரே-இவர் வரி (இன்கம்டாக்ஸ்) கொடாததால் இப்போது இயக்கம் நடத்தப் போவதாகச் சொல்கிறாரா?" எஎன்று நகைச் சுவையோடு கேட்டார். 13-ந் தேதியன்று சட்டசபையில் மதியழகன் நடத்தையைக் கண்டித்து, அகில இந்தியப் புகழ்பெற்ற ஆங்கில ஏடுகளான நேஷனல் ஹெரால்டு, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஸ்டேட்ஸ்மென், இந்துஸ்தான் டைம்ஸ், பெட்ரியாட் ஆகியவை எழுதியிருந்தன. அங்ஙனமிருக்க, "மதியழகன் யோசனை நல்லதுதான் என்று சி.சுப்ரமணியம் கூறுகிறாராம். இவருக்கும் மோகன் குமாரமங்கலத்துக்கும் இன்றுள்ள பதவி தி.மு.க. இட்ட பிச்சை என்பதை மறந்து விட்டார்களா? கலைஞர் சொல்வது போல், பசு சும்மாயிருக்க இந்தக் கன்றுகள் ஏன் துள்ளுகின்றன? கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என இவர்களை எச்சரிக்கிறோம். இனி இந்த விவஸ்தைகெட்ட பேச்சு வேண்டாம்!" என விடுதலை 20-ந் தேதி தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தது.

18.11.72 சென்னை மாநகராட்சியில் தி.மு.க, புதிய மேயராக ஆர் ஆறுமுகமும் (பிற்படுத்தப்பட்டோர்) துணைமேயராகக் கன்னியப்பனும் (தாழ்த்தப்பட்டோர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1965 இந்தி எதிர்ப்புப் போரில் தீக்குளித்து வீரமரணம் எய்தியோர் குடும்பத்துக்கு, மாதம் நூறு ரூபாயும், 53 தியாகிகட்கு மானியம் 2,000 ரூபாயும் தரப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

21.11.72 “விடுதலை”யில் ஒரு பெட்டிச் செய்தி: ‘இராஜாஜியின் பரிதாப நிலை’ என்ற தலைப்பு. “11.11.72 அன்று எம்.ஜி.ஆர். சென்று இராஜாஜியைச் சந்தித்தாராம். ‘நீங்கள் இப்போது செய்ததைப் பத்தாண்டுகட்கு முன்பே செய்திருக்க வேண்டும்’. என்றாராம் அந்த மேதை (அப்போது தி.மு.க. ஆட்சியிலா இருந்தது?) என் நண்பர் ஏன் இப்படி உளறினார் என்று தெரியவில்லை! பைத்தியக்காரன் வாயில் கொஞ்சம் கள்ளையும் ஊற்றியது போல் ஆகிவிட்டதா? ஈ.வெ.ராம சாமி” என்பதாக! அன்றே “எனது சுற்றுப் பிரயாணம்” என்ற தலையங்கமும் பெரியாரால் எழுதப்பட்டிருந்தது:- “இப்போது இருக்கின்ற உடல் நிலையில் நான் சுற்றுப்பிரயாணம் செல்லவே தகுதியற்றவனாக இருக்கின்றேன். ஆனாலும் என் மனவேதனை, துடிப்பு இவற்றைத் தணிக்க, இந்தச் சுற்றுப்பிரயாணம் காரணமாயிருப்பதால் துணிவு பெற்றேன்! எதற்காகவும் மனந்தளராமல் தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்கப் புறப்பட்டு விட்டேன்” என்று. அத்துடன் அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசினார்:-“ஒருவன் கச்சேரி கேட்கப் போனான். அவன் புதிதாகப் போனதால் எங்கேங்கே தலை அசைக்க வேண்டுமென்று தனக்குத் தெரியாதே என்று நண்பனிடம் யோசனை கேட்டான். உன் குடுமியில் ஒரு கயிற்றைக் கட்டி என்கையில் பிடித்துக் கொண்டிருப்பேன். நான் அதை இழுக்கிற நேரத்தில், நீ தலையாட்டினால் போதும் என்றான் நண்பன். அதேபோல, இன்னொரு கதை மகாபாரதத்தில். அஞ்ஞாத வாசத்தில் (விராடபர்வம்) இருந்த போது, அர்ச்சுனன் உத்தரகுமாரனுக்குத் தேர்ச்சாரதியாகி, யுத்தத்துக்குப் போனார்கள் இருவரும். எதிரிகளைக் கண்ட உத்தர குமாரன் பயந்து போய் தேரைத் திருப்பு; ஊருக்குப் போய்விடலாம் என்றான். அர்ச்சுனன் விடுவதாயில்லை. உத்தர குமாரனைத் தேர்க்காலில் கட்டிப்போட்டு விட்டுத் தானே போருக்குப் போனான். இந்த இரண்டு கதைகளிலும் சொன்னது போல, இப்போது எம்.ஜி.ஆர். தயங்கினாலும், கம்யூனிஸ்டுகள் அவரை விடுவதாயில்லை” என்றார் பெரியார்.

28-ந் தேதி எம்.ஜி.ஆர். ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் தன்னை அழித்திட முயன்றதால்தான் புதுக்கட்சி தொடங்கிவிடத் தான் முடிவு செய்ததாகக் கூறியிருந்தார். 29-ந் தேதி சேலம் வேலூரில் முதல்வர் கலைஞர் பேச இருந்த கூட்டத்தில் பெருங்கலகம் விளைத்து, மின்சார டிரான்ஸ்ஃபார்மரைக் கொளுத்திக் கலவரம் செய்தனர் எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள். மறுநாள் தஞ்சையில் பேசிய பெரியார் “இவ்வளவு தூரம் போன பிறகு இந்த ஸ்தாபனத்தைத் தடைசெய்ய வேண்டியதுதானே” என்றார்.

சென்னை சட்டமன்றம் 2.12.72 அன்று சபாநாயகர் மதியழகன் தலைமையில் துவங்கியபோது, அவரை நீக்குகின்ற தீர்மானம்
நிறைவேறியும், அவர் தலைவர் நாற்காலியை விடாமல் உட்கார்ந்திருந்தார். எனவே வேறுவழியின்றி, இன்னொரு நாற்காலி போடப்பட்டு, அதில் துணை சபாநாயகர் பெ. சீனிவாசன் அமர்ந்து, சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்த நேரிட்டது. 4-ந் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் பெ.சீனிவாசன் தலைமையில், கலைஞர் அமைச்சரவை மீது நம்பிக்கை வாக்கு கோரப் பெற்றபோது ஆதரவாக 172, எதிர்ப்பாக 0 வாக்குகள் என அறிவிக்கப்பட்டது.

1.12.72 அன்று மதுரையில் பெரியார் பேசும்போது, “எல்லாத் துறைகளிலும் மலையாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட ஒரு திட்டம் வகுத்தாக வேண்டும். அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் திராவிடர் கழகம் மாநாடு நடத்தும்” என்றார். கரூரில் பெரியார் “தி.மு.க. சாதனைகளால் மற்றக் கட்சிகளின் வாழ்வே அஸ்தமித்து விட்டது. அதனால்தான் ஒழிக்கக் கிளம்பிவிட்டனர். பார்ப்பனர் அதிகார வர்க்கம் தி.மு.க.வால் ஒழிக்கப்பட்டது. அதனால் தான் கவிழ்ப்பில் இறங்கியுள்ளனர்” என்று தெளிவுபடுத்தினார்.

“உண்மை” மாத இதழ் இனி சென்னையிலிருந்து வெளிவரும். ஆண்டுச் சந்தா 5 ரூபாய் என்று பெரியார் பெயரில் “விடுதலை” 2.12.72 ஏட்டில் செய்தி பிரசுரமாயிற்று. தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தியாக முதல்வர் கலைஞர் மாறியது 10.12.72 அன்று. அவரது இரண்டாவது மகன் அழகிரிக்கு, அமைச்சர் ஓ.பி. இராமனின் மைத்துனியும், காராளரின் இரண்டாவது மகளுமான காந்தியை அன்றைய தினம் வாழ்க்கைத் துணையாக இணைத்து வரலாறு படைத்தார். நாவலர் தலைமையில், பெரியார், அமைச்சர் ஜெகஜீவன்ராம் முன்னிலையில், பெரியார் திடலில் திருமணம்! அவரவர் வீட்டில் சாப்பாடு மத்திய அமைச்சர் காலந்தாழ்ந்து 12 மணிக்குத்தான் வர இயன்றதால், நேரே கலைஞரின் இல்லத்திற்கே வந்துவிட்டார். பெரியாரும் அங்கே சென்றிருந்து, சந்தித்து மகிழ்ந்தனர் முன்னதாக மணமக்களைக் காமராஜர், எம்.ஆர். கிருஷ்ணா (மத்திய துணை அமைச்சர்), பிரம்மானந்தரெட்டி, கே.கே.ஷா, நீதிபதி கே. வீராசாமி, மோகள் குமாரமங்கலம், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் ஹண்டே , சி.பி. சிற்றரசு, ம.பொ. சிவஞானம், ஏ.ஆர். பெருமாள், அப்துல்வகாப் ஜானிபாய், சத்தியவாணிமுத்து ஆகியோர் வாழ்த்தினர். மாலையில் ஓய்.பி. சவான், ஓம் மேத்தா, இல்லத்துக்கு வந்து மணமக்களைக் கண்டு சென்றனர்.

எம்.ஜி.ஆர்., எம்.கல்யாண சுந்தரம் ஆகியோர், கலைஞர் மற்றும் சில அமைச்சர்கள் மீது தந்திருந்த புகார்ப்பட்டியல் பிரதம மந்திரி வழியாக, முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப் பட்டிருந்தது. அந்தப் புகார் பட்டியலின் பிரதியும் அதற்கான
பதில் விளக்கமும் புத்தக உருவில் அச்சிடப்பட்டு 14.12.72 அன்று பிரதமருக்கு அனுப்பப்பெற்றது. சட்டமன்றத்திலும் வைக்கப்பட்டது. 15.12.72 முதல் 5.1.73 வரை தொடாந்து 22 நாட்களும் இவற்றை “விடுதலை” வெளியிட்டு வந்தது.! 19.12.72 அன்று சென்னையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. வெள்ளச் சேதம், நிவாரணப்பணிகள் பற்றி ஆராய்ந்து, துயர் துடைப்புக்காக 25 கோடி ரூபாய் தேவை என்றும், இப்போது 4 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் முதல்வர் நிருபர்களிடம் அறிவித்தார். மேலும் அவர் “வெள்ளச் சேதத்தால் பெற்றோரை இழந்து அநாதையான குழந்தைகள் 5, அவற்றில் அறநிலையைத் துறை பொறுப்பேற்றுக் கொண்டது. பெரியார் முன்வந்து மனமுவந்து தத்தெடுத்துக் கொண்ட குழந்தை1, முன்பு கோயில்கள் செய்து வந்த வேலையை, இப்போது பெரியார் மேற் கொண்டுள்ளார். இது பெரியாரின் அன்பு உள்ளத்தைக் காட்டுவதாகும் என்றார்.”

21.12.72 அன்று மூதறிஞர் இராஜாஜியின் உடல் நிலை மிக்க கவலைக்கிடமாகி விட்டதால், சென்னை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். 24ந் தேதி பெரியாரும் மணியம்மையாரும் திண்டிவனத்திலிருந்து நேரே 2.45p.m. மணிக்குத் திடலுக்கு வந்து சேர்ந்தனர். இராஜாஜி உடல் நலக் குறைவு பற்றி விசாரித்த பெரியார், வேனிலிருந்து இறங்காமலேயே மருத்துவமனை சென்று, தம் நீண்டகால நண்பரைப் பார்த்து வந்தார். 25-ந் தேதி காலையிலும் மாலையிலும் பெரியாரும் மணியம்மையாரும் மீண்டும் சென்று பார்த்து வந்தனர். “எவ்வளவோ கருத்து வேறுபாடு எங்களுக்கிடையே இருந்தாலும், எங்கள் நட்பு ஆழமானது. ஒருவருக்கொருவர் மாறாத தன்மை கொண்டது” என்று நிருபர்களிடம் கூறினார் பெரியார்.

மருத்துவர்களின் அரிய முயற்சிகள், அமைச்சர்களின் அரிய கவனிப்பு, அன்பர்களின் உரிய பேரார்வம் அனைத்தையும் மீறி, மூதறிஞர் இராஜாஜி அவர்கள் 25.12.72 அன்று மாலை 5.44 மணிக்கு மரணமடைந்தார்கள். அன்னாரின் சடலம் இராஜாஜி மண்டபத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மறுநாள் குடி அரசு தினம் ஆகையால் 27ந் தேதி கிருஷ்ணாம் பேட்டையில் தகனம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. முதல்வர் கலைஞரின் தனி முயற்சியால், கிண்டி, காந்தி மண்டபத்தை அடுத்த காலி மனையில், காத்தியடிகளின் சகாவும் சம்பந்தியுமான சக்கரவர்த்தி இராது கோபாலாச்சாரியாருக்கு, எட்டுக் கோண நினைவு மண்டபம், உச்சியில் மணிக்கிரீடம் ஆகியவை பின்னர் அமைக்கப்பட்டன.

சென்னை 114வது வட்டத்தில் பேசிய பெரியார், “யார் யாரோ யாரையோ கணக்குக் கேட்கின்றார்களே- பிரதமர் அம்மையார் கட்சியின் தேர்தல் செலவுக் கணக்கு என்ன? கோடி கோடியாய்ச் செலவு செய்கின்றார்களே? இவர்களுக்கு மட்டும் ஏது பணம்? இதை யாராவது கேட்க வேண்டாமா?" என்று, தாமே கேட்டு விட்டார்.

37.12.73 மாலை இராஜாஜியின் சவ ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டபோது, பெரியாரும் வேனில் பின் தொடர்ந்து சென்றார். எம்.ஜி.ஆரும் ஊர்வலத்தில் நடந்து வந்தார். அவரது ரசிகர்கள் சவ ஊர்வலம் என்பதை மறந்து, கைதட்டி, விசிலடித்து, ஆரவாரம் செய்யக் கண்டு, அவர் தமது காரில் ஏறிச் சென்றுவிட்டார், கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் தமது அறுபதாண்டு நண்பரின் சிதைக்குத் தீயிடப்பட்டபோது, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பெரியார், கசிந்து கண்ணீர் சிந்திய காட்சி, கண்டோர் நெஞ்சத்தைப் பிழிந்து விட்டது!

26.12.72 'விடுதலை'யின் தலையங்கம் இராஜாஜியின் மறைவுக்காகப் பெரியாரால் தீட்டப் பெற்றது என்பதைத் சொல்லவும் வேண்டுமா?... “நண்பர் இராஜாஜி அவர்கள் முடிவெய்திய நிகழ்ச்சி எல்லையற்ற துக்கத்துக்குரிய நிகழ்ச்சியாகும். சம்பிரதாயத்திற்கல்ல. உண்மையாகவே சொல்லுகிறேன்; இராஜாஜி அவர்கள் ஒப்பற்றவர். இணையற்றவருமாவார். கொள்கைக்காகவே வாழ்ந்து, கொள்கைக் காகவே தொண்டாற்றி, முடிவெய்திய பெரியார் ஆவார். அவரது இழப்பு பரிகாரம் செய்ய முடியாது இழப்பாகும்.

தமிழ் நாட்டில் ஒப்பிலாமணியாய் வாழ்ந்து அரும்பெரும் காரியங்களைச் சாதித்த பெரியார் இராஜாஜி, தமது 95வது வயதில் முடிவெய்தி மறைந்து விட்டார். அவரது பெருமைக்கு ஓர் எடுத்துக் காட்டு தெரிவிக்க வேண்டுமானால், இராஜாஜி இல்லாது இருந்தால் "மகாத்மா காந்தி" யே இருந்திருக்க மாட்டார். அது மாத்திரமல்ல, இந்திய தேசிய காங்கிரசே இருந்திருக்க மாட்டாது.

தமிழ் நாட்டில் பார்ப்பனருக்கு எதிராகத் தோன்றிய ஓர் எரிமலையை, மகாத்மா காந்தி என்னும் ஒரு புயல் மழையைக் கொண்டு தான் அவித்து, பார்ப்பனரை இருக்கச் செய்தார். 40 ஆண்டுக்கு உட்பட்ட மக்களுக்குத் தெரியாத சேதியாகும் இது. இராஜாஜி அவர்கள் 1910ல் பார்ப்பனரல்லாதாருடன் சமபந்தி போஜனம் செய்தார். 1915லிருந்து பார்ப்பனரல்லாத மக்கள் வீட்டில் உணவு அருந்துவார்; அவரால், காங்கிரசில் எல்லாப் பார்ப்பனர்களும், காந்தியாரும், சமபந்தி போஜனம் அருந்தும்படி ஆயிற்று. நான் அறிய, திராவிட நாட்டில் இவரால்தான் முதலில் யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மை ஏற்பட்டது.

தீவிர தேசபக்தர் மகாதியாகி என்று சொல்லப்பட்ட வ.வே.சு. அய்யர் வர்ணாசிரமப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், தான் மாத்திரமல்லாமல் அநேகப் பார்ப்பனரையும் துணிந்து யார் வீட்டிலும் உணவு அருந்தக்கூடிய சமுதாயச் சீர்திருத்தம் செய்த பெருமை இராஜாஜிக்குத் தான் உண்டு. மேலும், கலப்புத் திருமணத்தைத் துணிந்து முதலில் ஆதரித்தவரும் இவரே. ருக்மணிதேவி அருண்டேல் திருமணத்தைக் கட்டுப்பாடாகப பார்ப்பன சமுதாயமே- ஏன் சத்தியமூர்த்தி அய்யர், ரெங்கசாமி அய்யங்கார், கஸ்தூரி ரெங்க அய்யங்கார் எல்லாருமே எதிர்த்தபோதும், துணிந்து அதை ஆதரித்ததோடு, தமது மகளையும் கலப்புத் திருமணமாக, காந்தியார் மகனுக்குக் கொடுத்தவர் இராஜாஜி.

என்னை முழுக்க முழுக்க சமுதாயத் தொண்டனாக ஆக்கி, காங்கிரசில் ஈடுபடுத்தித், “தலைவர் நாய்க்கர்” என்று தாமே அழைத்து, பிறரையும் அழைக்கச் செய்த பெருமையும் அவரையே சாரும். நாங்கள் நாலைந்து ஆண்டுகள் இரண்டறக் கலந்து, நண்பர்களாக இருந்தோம்.

இராஜாஜி என்னோடு உள்ளவரை ஒரு பகுத்தறிவுவாதியாகவே இருந்தார். மற்றும் அவர் பொதுவுடைமைக் கருத்தையும் ஆதரித்தவர்.

வக்கீல் தொழிலிலும் “கோர்ட்டார் அவர்களே! எனது கட்சிக்காரரை நிரபராதி என்று சொல்ல நான் இங்கு வரவில்லை , இவர் குற்றவாளி என்று ஒரு முடிவு செய்ய வேண்டிய அளவுக்குச் சட்டப் படியான ஆதாரங்கள் இல்லை!” என்றுதான் சொல்லுவார். காந்தியை அடிக்கடி திணற வைத்து விடுவார். இதனாலேயே காந்தியாரும், இராஜாஜி அவர்களின் ஆமோதிப்பைப் பெற்றே எந்தக் கருத்தையும் வெளியிடுவார்.

இந்தி விஷயத்தில், பிற்காலத்தில், அவருக்கு அது கட்டாயப் படுத்தத் தக்கதல்ல என்கின்ற கருத்து பலமாக இருந்தது. இராஜாஜி அவர்களும் என்னைப்போலவே ஸ்தல சுய ஆட்சி என்பது தேவை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்.

நம்நாட்டு அரசியல் வகுப்பு உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அரசியலாக ஆகிவிட்டதால், அரசியல் காரணமாக வகுப்புகளுக்குக் கேடு வரக்கூடாது என்ற கருத்தால் - நம்முடைய சில கருத்துகள், காரியங்கள் இராஜாஜி அவர்களது ஆதரவுக்கு உரியன அல்லவாக இருக்கலாம் என்றாலும், பொதுவில் இராஜாஜி அவர்களை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, நமக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் பரிகாரம் செய்ய முடியாத இழப்பே ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.”