தன்னுணர்வு

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


தன்னுணர்வு




 


பாவலரேறு
பெருஞ்சித்திரனார்

முன்னுரை

உடல் வளர்ச்சிக்கு உணவு எவ்வாறு இன்றியமையாததோ, அவ்வாறே உள்ளத்தின் வளர்ச்சிக்கு உணர்வு இன்றியமையாதது. உணரப்பெறும் அறிவுக்குத் தேவையானது உணர்வு. நமக்கிருக்கும் அறிவுப்பொறிகள், நல்ல உணர்வோடிருந்து செயற்பட்டால்தான், அவற்றின் வழி, அறிவை நாம் பெற முடியும். அவற்றை உணர்வோடிருக்கும்படி செய்ய, அப் பொறிகள் பழுதுறாவண்ணம் காப்பது நம் கடமை. அப் பொறிகள் பழுதுறாமல் இருப்பினும், அவற்றை மன உணர்வால் திறனுடையதாகச் செய்து, அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்தினால்தான், நாம் முழு அறிவு பெற முடியும். எனவே நம் அறிவுக்கருவிகளாகிய கண், மூக்கு, செவி, வாய், மெய் ஆகிய ஐம்பொறிகளையும், பழுதுறாமல் காத்து, அவற்றின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி அவற்றின் வழியாக அறிவு பெறுவதற்கு மனத்தைச் செம்மையாகவும் உணர்வுடையதாகவும் நாம் வைத்திருத்தல் வேண்டும்

'மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி'
(453)
'மனந்தூயார்க் கெச்சம் நன்றாகும்'
(456)
'மனநலம் மன்னுயிர்க் காக்கம்'
(457)
-- என்பவை திருவள்ளுவர் வாய்மை மொழிகள்

மனமே எல்லா நன்மை தீமைகளுக்கும் காரணமானது; மூலமானது. மனம் நல்லுணர்வைப் பெற்றிருப்பின், நம் சொல், செயல், அறிவு ஆகிய அனைத்தும் நல்லபடியாய் இருக்கும். அது தீயவுணர்வைப் பெறின், அதன் தொடர்புடைய அனைத்தும் தீமையாகவே முடியும். 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்' என்றார் அறநூலாசிரியரும் மனம் தூயதாக, மாசில்லாததாக இருக்க அதை நல்ல நிலைகளில் கொண்டு செலுத்துதல் நம் கடமை. உடல் நலத்துக்கு உடற்பயிற்சி தேவை போலவே, மனநலத்துக்கும் மனப்பயிற்சி தேவை. மனத்தை நல்லவற்றில் ஈடுபடுத்துவது அறிவு. அறிவு நல்லவறறில் ஈடுபடத் துணை நிற்பது மனம், இவ்வாறாக, மனம் அறிவையும், அறிவு மனத்தையும், ஒன்றையொன்று துணையாகப் பற்றிக் கொண்டுதான், அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன. மனமும் அறிவும் இரட்டைப் பிறவிகள் போன்றன. அவை ஒன்றையொன்று பிரிந்து இயங்குமானால் நம் செயல்கள் அனைத்துமே தாறுமாறாக இருக்கும். மனம் தழுவாத அறிவு கொடுமையானதாக இருக்கும். அறிவு தழுவாத மனம் இழிவானதாகப் போகும். மனமும் அறிவும் ஒன்றுக்கொன்று துணைமட்டுமன்று ஒன்றையொன்று வளர்க்கக் கூடியது; மேலோங்கச் செய்வது

மனம் உலகப் பொருள்களிடம் இணக்கத்தையும், அறிவு அவற்றின் விளக்கத்தையும் தரவல்லன. மனம் இயக்கம் உடையது; அறிவு நிலைப்பு உடையது. மனம் ஒன்றைப் பற்றிக் கொண்டால், அதனுடைய தொடர்பால் அங்கேயே சுழன்று, அதனையே இறுகப் பற்றிக்கொண்டு இயங்கும். அறிவு ஒன்றைப் பற்றிக் கொண்டால் அதுவும் அங்கேயே ஊன்றி அதனையே ஆராய்ந்துகொண்டிருக்கும். அந் நிலைகளில், மனத்தை அறிவும், அறிவை மனமும் தட்டியெழுப்பி விழிப்புறச் செய்து, மேலும் மேலும் தொடர்ந்து முன்னே செல்ல ஊக்கப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் உயிர் தன் வாழ்க்கைச் செலவையும் அதன் வழியாக வாழ்க்கைப் பயனையும் பெறமுடியும்

மனம் அறிவு இரண்டிலும் எது முந்தியது. எது பிந்தியது என்று கூறமுடியாது. இரண்டும் உயிரியக்கத்துடன், ஒரே பொழுதில், ஒரே அளவில், ஒரே ஆற்றலொடு பற்றி, அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் துணையாகத் தொடர்ந்து வருகின்றன. ஐம்பொறிகள் வழி, மனமும் அறிவும் பெறுகின்ற உணர்வை, உயிர் துய்த்து, விளக்கமும் ஒளியும் பெறுகிறது. இம்முயற்சிக்கிடையில், உயிர்க்குக் கிடைக்கக் கூடிய ஊதியமும் இழப்பும், இன்பமும் துன்பமுமே!

மனமும் அறிவும் நல்லவற்றில் தோய்வதால் இன்பமும், தீயவற்றில் தோய்வதால் துன்பமும் பெறுகின்றன. நல்லவை தீயவை என்பது அது அதற்குப் பொருந்தியனவும், பொருந்தாதனவும் ஆகும். உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலையிலும் அவற்றிற்குப் பொருந்தியன, பொருந்தாதன என்று சில உண்டு. உடலுக்கு வேண்டிய உணவு நிலைகளுங்கூட அப்படித்தாம். விலங்குகளுக்கு உணவாகக் கூடியவை சில நமக்குப் பொருந்தாத உணவாகப் போகலாம். அவ்வகை உணவை நாம் உண்கையில் நம் உடல் துன்புறலாம். அதுபோலவே விலங்கு நிலையில் உள்ள மனவுணர்வுக்குப் பொருந்திய சில உணர்வுகள், மாந்த நிலையில் உள்ள நமக்குப் பொருந்தாமல் போகலாம். அந் நிலையே துன்பம் எனப்பெறும். மாந்தநிலைக்குப் பொருந்திய உணர்வுகளை நாம் கடைப்பிடித்து ஒழுகும் பொழுது நமக்கு நேர்வது இன்ப நிலைகளாகவே இருக்கும்

மனமும் அறிவும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கும்படியாகவே நம் செயல்கள் இருத்தல் வேண்டும். அல்லாக்கால் நிலைகள் தட்டுத்தடுமாறிப் போகும். மனம் எப்பொழுதும் எந்தப் பொருளின் மேலும் சட்டென்று பாய்ந்து நிலை கொள்ளும் தன்மை உடையது; கவர்ச்சியான பொருள்களில் உடனே காந்தம் போல் பாயும் அங்காப்புக் கொண்டது அது ஒன்றில் பற்றிய பின்னை, அந்நிலையினின்று அதைப் பெயர்த்தெடுப்பது மிகவும் கடினம். அக்கால் அறிவுணர்வால் அதனை மீட்டு நல்வழியில் திருப்பிச் செலுத்துதல் வேண்டும்.

சென்ற விடத்தான் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
(422)
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.
(116)
என்பார் திருவள்ளுவர்.

எனவே ஐம்பொறிகளின் நுட்பவுணர்வுகளையும் நல்லபடி தேர்ந்து, அவற்றை ஓர் ஊர்தி வலவன் போல் அறிவால் இயக்குதல் வேண்டும். இவ்வியக்க நிலையில் வல்லவனுக்கு உலக வாழ்க்கையில் உள்ள மேடுபள்ளங்களும், இண்டு இடுக்குகளும், சந்து சதுக்கங்களும் தெளிவாகப் புலப்பட்டு விளங்கும்

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
(27)
மனம், அறிவு இரண்டினது ஆளுமையிலும் மனத்தினது ஆட்சியே எல்லார்க்கும் மிகவும் வலியதாக உள்ளது. ஏனெனில், அது மென்மையானது; எளிதாக எந்தப் பொருளின் மேலும் அவாவுகின்றபடி அலைவுறும் தன்மையுடையது. அதனால் அறிவு நலம் மிகாத ஒருவனைவிட, மனநலம் வாயாத ஒருவனே விரைந்து அழிவுகளுக்கு உட்படுகின்றான். எந்தெந்தப் பொருளின்மேல் மனம் அவாவுதை, அதன்மேல் செல்லுவதைத் தடுத்துக் கொள்கின்றோமோ, அந்தந்தப் பொருளால் வரும் துன்பத்தைத் தவிர்த்துக் கொள்கின்றோம். 

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் (341)

எனவே, இத்தகைய மென்மையுடைய மனமே, அறிவுணர்வைவிடப் பேணிக் காக்கப்பெறும் தன்மை யுடையது. உள்ளம் தன் இயல்பான மென்மைத் தன்மையினின்று வலிவு பெறப் பெற, அதன் இயக்கம் சிறந்து விளங்கும். ஒருவன் அறிவுணர்வால் சிறந்து மேன்மையுறுவதைவிட, உள்ளத்தினால் சிறந்து பெருமையுறும் - நன்மைபெறும் - வாய்ப்பை அதிகமாக இவ்வுலகத்தில் பெறமுடியும். ஆகவே, ஒருவன் தன் வாழ்க்கையில் மிகுதியாகப் பேணிக் காத்துக் கொள்ளத்தக்கது தன் உள்ளமே. பொருளுடைமைகளைக் கூட ஒருவன் அதிகமாகப் பெறவோ பேணிக் கொள்ளவோ தேவையில்லை. உள்ள வலிமையே ஒருவனுக்கு யாண்டும் வேண்டுவது. அதன் இயக்க வலிமை போய்விட்டால் ஒருவன் இவ்வுலகத்தில் கோடை(ஆடி)க் காற்றால் அலைக்கப்படும் தூசு தும்புகளைப் போல் துன்புற வேண்டியதுதான். அதனால் தான் திருவள்ளுவப் பெருமானும்,

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும் (592)

- என்று கூறுவார்.

இத் தன்னுணர்வு என்னும் சிறிய ஆனால் சிறந்த நூலுள் உள்ளத்தின் இயக்கநிலைகள், அதன் மெலிவு வலிவுகள் நன்கு எடுத்து விளக்கப் பெறுகின்றன. இவ் வுலகில் மாந்தனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தன் உள்ளவுணர்வுகளை எவ்வாறு பேணிக் காத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதை இந்நூலில் மிகவும் அழகுபெற எடுத்துக் கூறுகிறார். இதன் ஆசிரியர் எமர்சன் அவர்கள். எமர்சன் சிறந்த ஒரு மெய்யறிவறிஞர். அவரின் Self Reliance என்னும் ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பே இந்நூல். சொல்லுக்குச் சொல், வரிக்குவரி இது மொழிபெயர்க்கப் பெறாமல், அதன் கருத்துகள் சிதைவுறாத வண்ணம் அழகிய தமிழில் எளிய வகையில் அமைந்த மொழிபெயர்ப்பு இது.

இதன் இன்றியமையாத சிறப்புநிலை கருதி, இதனை நானே விரும்பி மொழி பெயர்த்தேன். இக் கட்டுரை முன்பே சுத்தானந்த பாரதியார் முதலியோரால் சில மொழி பெயர்ப்புகளைக் கொண்டுள்ளது. அவை எனக்கு முழு அளவில் நிறைவு தரவில்லை. எனவே தான் இதனை இதன் மூலக் கருத்துகள் மங்கி மழுங்கிவிடாதபடி, நானே ஈடுபட்டுத் தமிழ் வடிவில் கொணர்ந்தேன். --

மனம் சோர்வற்றிருக்கும் பொழுது இதனை ஒருமுறை படித்தால் போதும். மனம் கிளர்ச்சியுற்று விடும்; வலிமை பெற்றுவிடும் அளவில்லா ஆற்றலைப் பெற்றுவிடும்.

இக் கட்டுரையின் ஆங்கிலத் தலைப்புக்குச் சரியான மொழிபெயர்ப்பு "தன்னம்பிக்கை" என்பதே. ஒருவன் தன்னம்பிக்கை பெறும்முன், தன்னுணர்வு பெறவேண்டும். தன்னுணர்வு பெற்ற ஒருவன்தான் தன்னம்பிக்கை கொள்ள முடியும். தன்னம்பிக்கைக்கு அடிப்படை தன்னுணர்வு என்பதாலேயே, இத் தலைப்பைத் தன்னுணர்வு என்று மாற்றினேன்.

சிற்சிலவிடங்களில், கருத்து விளக்கத்திற்காக, மூல நூலிலில்லாத உவமைகளையும் விளக்கங்க ளையும் இதில் நானே சேர்த்துள்ளேன். அவை கட்டுரையாசிரியரின் மூலக்கருத்துக்குத் துணை போகுமாறு அமைந்துள்ளனவே தவிர, அவற்றைத் திசைத்திருப்புமாறு அமையவில்லை. நன்கு பட்டை தீட்டப்பெற்றுச் சுடரொளி வீசும் வயிரம் போன்ற கருத்துகள் நிறைந்தது இந்நூல். மாந்தராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் இவ்வொளி வீசுதல் வேண்டும் என்பதே என் உள்ளக்கிடக்கை

இதனை நம் இளைஞர்கள் நன்கு படித்துப் பயன்படுத்தி, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்த இம் மக்கள் கூட்டத்திற்கும் மிகவும் பயன்படக் கூடியவர்களாக விளங்குவார்களாக

தென்மொழி, சென்னை - 5 10-8-1982.


அன்பன்,
(பெருஞ்சித்திரனார்)

உனக்கு முன்னும், இவ் வுலகம் இருந்தது!
உனக்குப் பின்னும், இவ் வுலகம் இருக்கும்!
ஊழியிற் சுழலும், இவ் வுலக வண்டியில்
நாழியே ஏறிடும் நல்வழிப் போக்கன், நீ!


தொடங்கிய தெங்கே? தொடர்வது மெங்கே?
அடங்கா முடிவினில் அடைவது மென்ன?
என்பவை எல்லாம் எண்ணினும் விளங்கா!
மன்பதைக் கடலுள் மண்துகள் அசைவு, நீ!


எந்த இடத்தினில் இறங்கிடு வாயோ?
அந்த நொடிவரை ஆர்ப்பரிக் கின்றாய்!
சொந்தமும் சுற்றமும் சுழன்றிடும் அணுக்கள்!
சிந்துகண் ணிரும் சிரிப்பும் கனவுகள்!


வந்தது நினையாய்! வழிதடு மாறுவாய்!
வெந்தது தின்றிட வீணிற் பேசுவாய்;
மந்தையில் ஆடுபோல் மனத்தைச் சுழற்றுவாய்!
முந்தையர் விட்ட முழுமை தொடருவாய்!


நினைத்தவை எல்லாம் நிலைத்தவை ஆகா!
அனைத்து முயற்சியும் அரைகுறை முயற்சியே!
மனத்திருள் குறைந்தால் மனத்துயர் குறையும்!
மனத்தொளி பெறுதலே வாழ்க்கையின் மலர்ச்சி!


ஒளிபெற எண்ணுவாய்; ஒளித்துவை யாதே!
வெளிவான் விரிவுபோல் விரியட்டும் நினைவுகள்!
துளியே யாயினும் தூய்மையே வாழ்க்கை !
களிசேர்ப் பதுவும் கசடிலா எண்ணமே!


ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு மலர்ச்சி!
ஒவ்வொரு நாளும் ஒருபடி உயர்ச்சி!
எவ்வழி நினைவோ அவ்வழி நிகழ்ச்சி!
செவ்விய மனமே செவ்விய வாழ்க்கையாம்!

-1974


*

[ஆங்கிலத்தில் எமர்சன் எழுதிய SELF RELIANCE என்ற அருமையான கட்டுரைப் பிழிவைத் தழுவியதாகும் இச் சுருக்கம். ஒவ்வொரு மாந்தனின் உள் மனத்தே அவ்வப்பொழுது பளிச்சிடும் அறிவுணர்வின் பேராற்றலை எடுத்து விளக்கி, அவ்வுணர்வின் முதிர்வால் முற்றுப்பெறும் மாந்த வாழ்க்கையின் உண்மை உருவத்தை வெளிப்படுத்துகின்றது இவ்வரிய கட்டுரை அறிவுணர்வு வேட்கையுற்று, நல்லறிவுக்கு அலைந்து திரிகின்ற, மெய்யுணர்வு முளையிடும் இளைஞர், பன்முறை இதனை ஊன்றிக் கற்றுத் தெளிந்து தேர்வாராக.]

இடுக நும் பிள்ளையை மாமலை மேல்விளை யாடுதற்கே!
விடுக செந் நாய்களின் பாலினை மாந்தி வளர்க அவன்!
கெடுக வன் அச்சம்! நரியொடும் நாயொடும் கேண்மையுற
நடுக நீ, நன் மறம் நெஞ்சில், வினையில், நரம்பிலுமே!


ஓர் உணர்வுப் புலவனின் ஆழ்ந்த உள்ளத்தினின்று உணர்வெடுத்துப் பொங்கும் பாக்களின் உட்பொருள் என்ன வாக விருப்பினும், அவற்றில் அறிவுணர்வைத் தட்டி யெழுப்பும் சூடு மிகுந்து இருக்கும். அப் பாடல்களின் புறப் பொருளைப் பார்க்கினும் உட்பொருளே மிகவும் உயர்ந்திருக்கும் அறிவாளியின் ஆழத்தினின்றெழுந்த அவ்வெண்ண அலைகள் மாந்த இனத்தையே அலைக்கழிக்க வல்லன. அவை உண்மை யாகவே இருக்கும். அவற்றை அறிதலும், மேற்கொள்ளுதலுமே பேரறிவாகும்

ஆனால் புலவர்களின் எண்ணங்களையும் மெய்யறிஞர் தம் சொற்களையும், நாம் நோக்குவதினும் மேலாக நம் உள்ளத்தே ஒரு நொடிப் பொழுது மின்வெட்டுப் போல் ஒளிரும் கருத்துக் கீற்றை, நாம் கண்கொட்டாது காத்து உணர்ந்து கொள்ளல் வேண்டும். அரிய நூல்களில் உள்ளன வெல்லாம் அவ்வாறு ஒரு போழ்து நம் உள்ளத் திரையில் மின்னியனவாகவே இருக்கும். ஆனால் நாம் அவற்றை முன்பு, நம்முடையவை என்பதற்காகப் புறக்கணித்து விட்டதை நாணத்துடன் ஒப்புக்கொள்ளல் வேண்டும்

நம்முடைய உள் எண்ணங்களை நாம் அறியவும், அறிந்து போற்றவும் நாம் பழகிக்கொள்வதுடன், அவற்றையே பிறர்பாலும் துணிந்து கூறவும் எழுதவும் வேண்டும். அவ்வாறின்றி வேறொருவன் எழுதிய கருத்துகளை நாம் எழுதும் நூலின் பக்கங்களில் கொட்டி நிரப்புவது எள்ளி நகைக்கத்தகும் தற்கொலை முயல்வே. இவ்வுலகெங்கும் பல்லாயிரங்கோடி வயல் வெளிகளிருப்பினும், நாம் நம் உடலுழைப்போடு உழுது, வித்துான்றி விளைவித்தாலொழிய, ஒரு சிறு நெல்மணியையும், நம்முடையதென்று கூறிக் கொள்ளல் சால்பாகாது. அச் செயற்கு நாம் வெட்கப் படவும் வேண்டும்

நமக்குள் தோன்றும் பொருளை, நாம் உள்ளது உள்ளபடியே கூறுவோமாகில், நம் சொல்லிலும், கருத்திலும் மிகுந்த உண்மையும், ஆழமும் மட்டுமின்றித் தகுதியும் செழுமையும் உறுதியாக விருக்கும். நீ, வலிமை மிக்கவன் என்ற தன்னம்பிக்கை எப்பொழுதும் உன் உள்ளத்தே இருக்க வேண்டும். உனக்கென இறைவன், உன் காலத்தில், உன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கென்று, உன்னுள்ளே பொதிந்து வைத்துள்ள ஆற்றலையும் அதன் நிலையையும் மலர்ந்து பரவச் செய். பேரறிஞர் எனப் படுவோர் செய்கையும் இதுவே

நாம் வினை மிகுந்த ஆடவர்கள்தாம். வீட்டிற்குள் கட்டிலின் மேல், மேனி முழுவதும் போர்த்துக் கொண்டு, படுத்துள்ள நோயாளிகள் அல்லமே! அல்லது தொட்டிலில் முடங்கிக் கிடக்கும் பிள்ளைகளும் அல்லமே அன்றியும் உலக மாற்றங்களைக் கண்டு அஞ்சி யொதுங்கும் பேடியரும் அல்லமே. நம் இயற்கைத் தாய், நமக்குள் துணை வைத்துள்ள படைகளை ஏந்தி, நம் காலத்து நம்மனோர் வழிப் பேரிருள் கப்பிய அறியாமையை எதிர்த்து நிற்கும் போர்மறவர்தாமே நாம்! ஒரு குழந்தைக்கிருக்கும் துணிவு கூடவா நமக்கு இல்லாமலிருத்தல் வேண்டும்?

ஒருவன்மாட்டு எழுகின்ற உள்ள ஆண்மையை அடக்கிவிடும்படி, அவனைச் சூழ்ந்துள்ள மக்கள் கூட்டமே ப்ொறாமையோடு பார்த்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் கூட்டத்திற்கு உண்மை பிடிக்காது. புதுவது புனைவோரைப் பற்றி அது கவலையுறுவது இல்லை. வெறும் பெயர்களும், பழைய பழக்கவழக்கங்களுமே அதற்குப் போதும். எவனொருவன் உண்மை மாந்தனாக விரும்புகின்றானோ, அவன் அதன் வழக்கமானவற்றை இடித்துத் தகர்த்தெறிப வனாக இருத்தல்வேண்டும். இஃது அறச் செயலன்று என நினைத்தல் வேண்டாம். உண்மையான அறிவின் நேர்மையைக் காக்க வேண்டியதுதானே அறம். உன் உள்ளம் கறையற்றுத் தூய்மையாக இருந்தால், நீ வருந்த வேண்டியதில்லை. உலகம் உன்னைத் தானாக நாடிவரும்

நல்லது, தீயது என்பவை வெறும் அழகுச் சொற்களே! மக்கள் ஒரு பொருளினின்று, இன்னொரு பொருளுக்கு அப் பெயர்களை மிக எளிதில் மாற்றி விடுவர். உள்ளம் எழுப்பு கின்ற ஆழமான் உண்ர்வில் உண்மையன்றி வேறில்லை. அதனால் வருகின்ற பிற தடைகளும், இழிவுப் பெயர்களும் அழிகின்றவையே என்று நாம் கருதல் வேண்டும். வெறும் கூட்டங்களையும், அவற்றின் கூப்பாடுகளையும் கண்டு நாம் வணங்கி விடுவதா? வெட்கம்!

ஏழைகளுக்கு உழைப்பதே உன் வேலை என்று சொல்லாதே! அதுவே அறமென்றும் நினையாதே! அவர் தமக்கிருக்கும் உண்மையான ஆற்றலை மறக்கச் செய்து, உன் ஈகையால் மாய்ந்துபோகச் செய்வது, உன் வாழ்வையும் வீணடித்து அவர் வாழ்வையும் வீணடிப்பது ஆகும். நோயாளிகளும், பித்தர்களும், சோற்றுக் கடைக்காரனுக்கு இரண்டு மடங்கு விலை கொடுப்பதுபோல், அறங்கள், மக்கள்தம் குற்றங்களை மாற்றும் வழியென்று விலை தந்து, அவற்றைப் போக்க முயல்கின்றனர். நம் வாழ்க்கையின் நோக்கம் வாழ்க்கையே! ஊரார் மெச்சுதல் வேண்டுமென்ப தன்று. வாழ்க்கை வெளிக்கு மட்டும், பகட்டாக இருந்து நிலையான தன்மைக்கு மாறாக இருந்து விடுவதன்று. அது போலியாக இல்லாமலிருந்தால் மட்டும் போதாது; உண்மையாகவும் இருத்தல் வேண்டும்

உள்ளத்தை விட்டு விட்டு அறச் செயல்களின் விரிவைப் பார் என்றால் நான் ஒப்பமாட்டேன். நமக்குள்ள ஆற்றல் மிகவும் குறைவாகவே இருக்கலாம். ஆனால் உண்மையாக இருந்தால் போதும்

நாம் மக்களிடையே வாழ வந்த தேவை ஒன்றுண்டு. அந்தத் தேவைக்கான ஆற்றல் நம்மிடம் உள்ளத்தில் ஒளிர்கின்றது. அதுதான் நாம் செய்யவேண்டிய கடமை. நம் கடமை என்னவென்பதுதான் நம் வாழ்க்கைக்குப் பொருளே யொழிய, நம்மைப்பற்றி மக்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதை அறிவது நம் வாழ்க்கைக் கடனன்று. பருவுலகினும் மனவுலகினும் இதன்படி நடப்பது கடினம்தான். ஆனால் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் உள்ள வேற்றுமை மாற்றம் இதுவே. உன் கடன் என்ன என்பதை உன்னைக் காட்டிலும் உன்னைச் சுற்றியுள்ள மாந்தர் அறியார். ஆனால் அதை அறிந்தது போல் உள்ள போலியர் நாம் கூறுவதை அறிவதும், அறிந்து, அதன்படி நடப்பதும் கடினமே. உலகத்தாரின் விருப்பப்படி நடப்பது மிகவும் எளியதே. அதே போல் உலகத்தாரை விட்டொதுங்கி, நாம் நினைப்பதுபோல் நடப்பதும் எளிதே! ஆனால் உலகத்தார் நடுவில் இருந்துகொண்டே நம் எண்ணப்படி நடப்பதுதான் கடினம். ஆனால் அதனை நிறைவேற்றுபவன் மாந்தரில் மேலானவன். உனக்கு உடன் பாடற்ற செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொள்வது உன் உள்ளத்தின் ஆற்றலைச் சிதற அடிப்பதாகும்

உன் வினைத் திறத்தைக் காட்டி உன்னை அறிமுகம் செய். ஒரு கூட்டத்தைக் காட்டி உன்னைக் காட்டாதே. ஒரு தனிப்பட்ட கூட்டத்துக்கு இணங்கியிருப்பது வெறும் குருட்டுச் செயலே. நீ எக்கூட்டத்தைச் சார்ந்தவன் என்பது எனக்குத் தெரிந்தால் நீ செய்யவிருக்கும் சொற்பொழிவும், எனக்குத் தெரிந்ததாகவே இருக்கும். நீ பேசத் தொடங்கினால், உன் கூட்டத்தாரின் வழக்கமான எண்ணங்களைத் தவிர உன் உள்ளத்திலிருந்து வந்ததாக ஒரு சொல்லும் இராதே! நீ ஒரு கட்சிக்கென்று வைக்கப்பெற்ற வழக்குரைஞன் ஆகிவிடக்கூடாது. ஒரு கூட்டத்தோடு ஒட்டிய கருத்து எல்லார் வழியும் தொடருமானால் அக் கருத்தில் உள்ள பிழையின் தொடக்கம் எஃது என்று நமக்குப் புலப்படாது போய்விடும்

பொது மக்களின் ஒன்று திரண்ட கருத்துக்கு நீ இலக்கானால் உனக்கென்று எவ்வகைப் பெருமையும் இல்லை. பொது மக்களின் கடுப்புக்கும், மலர்ச்சிக்கும் ஆழமான பொருட்டுகள் இருப்பதில்லை. காற்று எப்புடை வீசுகின்றதோ, செய்தித் தாள்கள் எந்தக் குரலில் பேசுகின்றனவோ, அதைப் பொறுத்திருக்கின்றன, பொது மக்களின் விருப்பும் வெறுப்பும், கற்றவர்களுக்குத் தங்கள் அறியாமை தெரிந்திருக்குமாகையால், அவர்கள் என்றும் பொது மக்களின் மனக்கிளர்ச்சிகளைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறரிடம் முன்னே ஒன்று சொல்லிவிட்டாய் என்பதற்காக நீ இப்போது வேறொன்றைச் சொல்ல அஞ்சாதே. உண்மையை எப்பொழுதும் போலியின்மேல் வீசியெறியலாம். முன்பின் முரணாகிவிடுமோ என்ற நினைவுப் பிணத்தை உன் உள்ளத்தால் கட்டி இழுத்துத் திரியாதே. முன்பு தவறென்று நீ சொன்னவை இப்பொழுது சரியென்று பட்டால் உடனே ஒப்புக்கொள். அவ்வப் பொழுது உன் உள்ளம் உண்மையறிவையே நாடிப் போகின்றது. அதை முன்னும் பின்னும் இழுத்துத் தொல்லையுறாதே. இன்றைய வரை உனக்குப் படுவனவற்றை நீ அழுத்தமாகக் கூறத் தயங்காதே. நாளைக்குத் தோன்றும் செய்திகளையும் நாளைக்கும் அதே அழுத்தத்துடன் சொல். உன்னைப் பொதுமக்கள் தூற்றுவார்கள் என்று நினையாதே. அது தானே உன் பெருமைக்கு உரைகல்

தன்னியல்பை எவராலும் மீறிவிடல் முடியாது. மனம் தூய்மையானது. அது வெளிப்படுத்தும், மறைவான சொற்றொடர்களை நீ படிக்கத் தொடங்கிவிட்டால் நீ அதை எப்படியிருந்து படித்தாலும் உனக்கு விளங்கும். ஒவ்வொருவரும் தமக்கு இயல்பான உள்ளத்தையே வெளியிடுகின்றனர். ஆனால் அதை அவர் அறிவதில்லை

இனிமேல் எதற்காகவும், யாரையும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவேண்டாம். எவ்வளவு தாழ்ந்த வேலையாயிருந்தாலும், அதையே உண்மையாகவும், உள்ளத்தின் முழு ஆற்றலொடும் செய்பவனே, மாந்தரினத்தின் மேன்மையை உணர்த்துபவன். பொய்க்கு எத்தனையோ உவமைகள் இருக்கலாம். உண்மையான ஆற்றலுக்கும், மெய்ம்மைக்கும் எதையும் உவமை காட்டமுடியாது. காலத்தையும் நாடுகளையும் ஒன்றுமில்லையென்று கருதும்படி வினையாற்றும் வல்லமையை ஒவ்வொருவரும் பெறல் வேண்டும். அத்தகைய வல்லமையுற்றவனே அறமாகவும், காலமாகவும், நாடாகவும், ஊழியாகவும் காட்சி தருகின்றான். ஒவ்வொருவனும், தன்னாற்றல் பெற்றுத் தனக்கென உள்ளடங்கிக் கிடக்கும் வன்மையையும், உண்மையையும் வெளிக் கொணர முயல வேண்டும். அதை விட்டுவிட்டுத் தலைமுறை தலைமுறையாக ஒருவன் சொன்னவற்றிலும், அவன் சென்ற வழியிலுமே கருத்துன்றி, அவற்றையே பின்பற்றிப் போய்க் கொண்டிருப்பது வருந்தத்தக்கது

கிறித்து என்றொருவன் தோன்றினான். கோடிக்கணக்கான மக்கள் அவன் அடிப்புகுந்து, அறமும் வாழ்க்கையின் முழுமையும் அவனையன்றி வேறில்லை என நினைத்து விடுகின்றனர். ஒரு சமயம் என்பது ஒரு தனி மாந்தனின் அல்லது ஒரு குழுவின் மிக வளர்ந்த சாயலே. தொன்ம(புராண) தொல்பெருங்கதைஇதிகாசங்களும், உறுதியும் துணிவும் கொண்ட வல்லார் சிலரின் சாயல்களே

மாந்தன் தன் திறமையைத் தெரிந்துகொண்டு, முழுஆற்றலையும் வெளிக்கொணர வேண்டும். பருத்த புத்தகங்களைப் பார்த்த அளவிலேயே அவற்றைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் தனக்கில்லை என்று அஞ்சிச் சோர்ந்து போகின்றான். ஆனால் அந்த நூல்களோ, பிறர் தம்மை எக்கால் எடுத்துப் படிக்கப் போகின்றனரோ என்று ஏங்கிக் கிடக்கின்றன

பெரிய வள்ளல்கள், அரசர்கள் வாழ்ந்த கதைகளில் மக்களுக்கு அறிவுக்கிறக்கம் ஏற்பட்டு விடுகின்றது. அவர்தம் செயல்களோடு தம் தம் செயல்களை, ஒப்பிட்டு, ஏக்கப் பெருமூச்சு விட்டு அங்காந்து விடுகின்றனர். அவர் தம் வாழ்க்கையையும், தனி மாந்தனாகவும், மிகவும் திறமை யற்றவனாகவும் கருதிக்கொள்ளும் ஒருவனுடைய வாழ்க்கை யையும், கூட்டிப் பெருக்கிக் கழித்துப் பார்த்தால், இரண்டிற்கும் பயன் ஒன்றாகவே இருக்கும். முன்பிருந்த வள்ளல்களோடு அறச்செயல்கள். போய் விடுவதுமில்லை; அரசர்களோடு ஆண்மை வினைகள் முடிந்து விடுவதுமில்லை

தன்னை வேறு எந்த ஒன்றிற்கும் இணையாக வைத்துப் பார்க்காமல், தனக்குத் தன்னையே இணையாக நினைத்துக் கொண்டு பார்த்தால், நம்முள்ளே பொதிந்து வைக்கப் பெற்றிருக்கும் ஒரு பேராற்றலின் ஒளிக்கீற்று நமக்கே நன்கு புலப்படும். அப் பேராற்றல் உலகில் உள்ள எல்லாப் பொருள்களிலும், அது அதுவாக நின்று இயக்குகின்றது

தன்னுணர்வால் முங்கிய தன்னுரிமையின் ஒரு தினையளவே நமக்கிருந்தால் போதும். அரிய பெரிய வல்லாண்மையின் பேரெல்லையைக் காலப்போக்கில் நாம் சிறிது சிறிதாக அடைந்துவிட முடியும்

இப் புடவியெங்கும் நீக்கமற விரிந்து சிறகார்ந்து சுடர் வீசிக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றல் எதுவோ, அதுவே தான் நம்முடைய உள்ளத்திலும், உடலிலும் ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இந்தப் பேராற்றலே அறிவுக்கும் வினைக்கும் வித்து. இத்தகைய உயரிய வித்தை நமக்குள் தரப்பெற்றிருக்கும் புலன் பொறி முதலிய துணைக்கரணப் பொருள்களைக் கொண்டு, நம்மை நாம் பெருமரமாக வளர்த்துக் கொள்வதே நமக்கிட்ட வேலை. அகன்று விரிந்த விசும்பிடை உராய்ந்து திரிகின்ற காற்று, நம்முள்ளும் போய் வந்து கொண்டிருப்பதுபோல், என்றும் நிலையாக உள்ள அப் பேராற்றலையும், அதன் உள் வினைகளையும் மறுப்பது, நம்மை நம் கல்வி கரணியங்களால் மூடிப் புதைத்துக் கொள்வது போலாகும். அவ்வாற்றலின் உண்மைபற்றி நாம் கூற இயலும்படிதான் நமக்கு அறிவு வனையப் பெற்றிருக் கின்றது. நமக்குள்ள அறிவு நம்மை நாம் கண்டு கொள்ளவே அன்றி, நம்மை உண்டாக்கிய பேராற்றலை ஆராய்ந்து கண்டு கொள்வதற்காகத் தரப்படவில்லை. அதை ஆராயும்போது அது நிலைத்துவிடுகின்றது. அந்தப் பேராற்றலைப் பற்றி நாம், அதிகமாகச் சொல்ல இயல்வது இவ்வளவே. மிகவும் இழிவாக நம்மால் கருதப்பெறும் ஒரு பேதையின் உள்ளத் துள்ளும் அவ்வறிவொளி ஊடுருவிக் கொண்டிருக்கின்றது. ஆனால் தனக்கமைந்த வினைபுரி கருவிகளின் இயக்கங்களைக்கூடச் சரிவரப் புரிந்துகொள்ளும் ஆற்றலற்ற அவன், அவனை ஊடுருவி நிற்கும் அப்பேராற்றலை உணர்தல் இயலாது. அவன் அதுபற்றி ஒரளவு கூறுவதானாலும், அதனை மாறாகவே உணரமுடியும். விழிகளின் வேலைத் திறனையே சரிவரப் பெறாத குருடன் கதிரொளியின் வண்ண வீசல்களை யாங்கன் அறிவான்? ஆனால் தனக் கமைந்த பார்வைக் குறைவால் உள்ளோடி நிற்கும் இருளுக்கு மாறாக ஒரு பெருஞ்சுடர் பொலிந்து கொண்டிருப்பதை அவன் நம்புகின்றான். இதுபோலவே பேதை இறையாற்றலை நம்புகின்றான். நம்பாத முழுப் பேதையைவிட அதனை நம்புகின்ற அரைப் பேதை ஒரு படி உயர்ந்தவன் தானே?

தன் அக ஆற்றலை ஒருவன் உணரும்பொழுது அந்த ஆற்றலின்மேல் அமைந்த பருப் பொருள்களான கருவிகள், சமயங்கள், தொன்மங்கள் அவற்றில் வரும் தொடர் மொழிகள், கோயில்கள் யாவும் பயனற்றுச் சாய்ந்து விடுகின்றன. குருடன் தன் கையுணர்வால் நுண்பொருள்க ளின் சாயல் போன்று அமைந்த படிவங்களைத் தொட்டு அறிகின்றான். பார்வை கிடைத்தவுடன், கையால் நீவி அறிகின்ற அப்படிவங்கள் பயனற்று, அவற்றின் உண்மையான மூலத்தோற்றங்களையே நேரில் கண்டு அறிவால் உணர்கின்றான். குழந்தை முதலில் ஒவ்வோர் எழுத்தாகக் கூறிக்கற்று, நாளடைவில் ஒரே பார்வையில் ஒவ்வொரு சொற்றொடராகக் கூட்டிப் படிப்பதுபோல், பருப் பொருள் தோற்றப் பழக்கம், நாளடைவில் உணர்வின் பழக்கமாக மாறி, அதனுள் ஊடுருவிய உண்மையை ஒருவன் கண்டு கொள்ள உதவுகின்றது. அக்கால் அவன் ஒவ்வோர் எழுத்தாகப் படிக்கத் தேவையில்லை. பார்த்தளவிலேயே அதன் முழுத் தோற்றத்தையும் உணர முடியும்

நமக்கு முன்பாக வாழ்ந்த பேரறிஞர்தம்மை நாம் தொடர வேண்டுவதில்லை. அவர்தம் உணர்வின் எல்லைக்கு மேல் நாம் நம் உணர்வைச் செலுத்திக்கொண்டு போக வேண்டும். தரையிலிருந்து நம்மை ஒருவன் தூக்கி அவன் தலை வரை உயர்த்துவானானால் நாம் நம் தலைக்குமேல் என்ன இருக்கின்றது என்பதையே காண வேண்டுமல்லாது, நம்மைத் தூக்கி நிறுத்தியவனை நாம் குனிந்து பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நமக்கு முன்னால் உள்ள அறிஞர்களும், சமயத் துறவிகளும், நம்மை இத்தன்மைக்குக் கொண்டு வந்துள்ளனர். இனி நாம் அவர்கட்கு மேல் நம்மை நடத்திக் காட்டவேண்டும். இந் நிலையில் அவர்களைப் பற்றி நாம் பாராட்டிக் கொண்டிருக்கத் தேவையென்ன?

மாந்தன் மருண்ட பார்வையால், நலிந்த பேச்சையே பேசுகின்றான். நாம் இப்படித்தான் எண்ணுகின்றோம், இப்படித்தான் இருக்கின்றோம் என்றிராமல், ஒரு முனிவரையும் ஓர் அறிஞனையும் உவமை காட்ட வேண்டியதில்லை

ஒரு தாமரை மலரோ, ஒரு குருவியோ, அல்லது ஒரு கோழிக்குஞ்சோ தங்கட்கு முன்பிருந்த தம் முன்னோரைப் பற்றி எண்ணி தம் வாழ்க்கையை மலர்த்துவதில்லை. தங்களைத் தாங்களாகவே எண்ணி வாழ்கின்றன. நமக்குள்ள ஆற்றலைக் கொண்டு நாமாக நம்மை நாம் நடத்த வேண்டுமேயல்லாமல் வேறு ஒன்றின் போலியாக நம்மை நாம் எண்ணிக் கொள்ளவோ நடத்திக்கொள்ளவோ வேண்டுவதில்லை. மலர்ந்து மணம் வீசும் மலரில், அதைவிட வேறு ஆற்றலில்லை. அதன் ஆற்றலை அது முழுமையும் நம்மை எவ்வளவுக் கெவ்வளவு, நாமாகச் செய்துகொள்ளல் முடியும் என்பதைப் பொறுத்தே இருக்கின்றது. ஒரு கனியின் முழுமை கனியே. ஒரு வேரின் முழுமையும் அந்த வேரே; மாத்தனின் முழுமையும் மாந்தனே. மணமின்றி வெறுந் தோற்றத்தை மட்டுமே காட்சியளவில் காட்டுகின்ற ஒரு மல்லிகை மலரை நாம் பார்க்க முடியாது. அப்படிக் காட்டும் ஒன்றும் மல்லிகையாகாது. அதுபோல் தன்னுள் பொதிந் துள்ள மனத்தை முழுமையாக மலர்த்தி, மணம் வீசச் செய்யாமல் வெறும் தோற்றத்தையே காட்டிக்கொண்டிருக்கின்ற ஒரு மாந்தனும், மாந்தன் ஆகிவிட முடியாது நேற்றிருந்த எண்ணங்களைக் கடந்து இன்றிருக்கின்ற எண்ணங்கட்கு நாம் வளர்ந்திருக்கிறோம். மேலும் நாம் நாளைக்கிருக்கின்ற எண்ணங்களை நோக்கி நடையிட வேண்டும். இவ்வாறின்றி நேற்றிருந்த எண்ணத்தையும், அதற்கு முன்பிருந்த வரலாற்றுக்காரர்தம் எண்ணங்களையும் எண்ணிக்கொண்டு நாம் கடந்த காலத்திற்கு நழுவுவது, நம்மை நாம் இழிவுபடுத்திக் கொள்வதாகும்; நம் கால்களை வெட்டிக் கொள்வதாகும்; நம் பார்வைகளைச் சுருக்கிக் கொள்வதாகும். மலையின் அடிவாரத்தினின்று உச்சி நோக்கிப் போகவே நமக்குக் கால்களும், கைகளும், கண்க ளும் வேண்டும். அங்கிருந்து கீழ்வர அவை தேவையில்லை. கால் கைகளை மடக்கிக் கொண்டு, கண்களை நன்றாக இறுக்கி மூடிக்கொண்டு உருள வேண்டியதுதானே?

நாம் எண்ணுவது என்று ஒன்றும் இல்லை. நாம் சொல்வது என்றும் ஒன்றில்லை. நமக்குள் ஊடுருவி நடந்து கொண்டிருக்கும் பேராற்றலின் அலைகளே அவை. அதனை மடக்கி அடக்கிவிட்டு நாம் நம்மைத் தாறுமாறாக ஒட்டிக் கொண்டு போவதில் நம் வாழ்க்கை வெற்றியடைந்த தென்று கூற முடியுமா?

எவரும் காலடி வைக்காத புது நிலப் பகுதியிலேயே நம் காலடிகள் பதியவேண்டும். நம் முன்னோர்கள் நடந்து குழப்பிய சேற்றையே நாமும் குழப்பத்தான் வேண்டுமா? அவர்தம்மைவிட ஆற்றலொடும், விரைவொடும் நம்மை நாம் செலுத்திக்கொண்டு போகவேண்டும்

ஒருவன் தன் முயற்சியை நிறுத்திக் கொள்ளுங்கால் அவன் ஆற்றலெல்லாம் அவனை விட்டுப் போய்விடுகின்றது. தன் ஆற்றலை முற்றிலும் வெளிப்படுத்துபவனையே, இருக்கின்றான் என்று கூறமுடியும். தன் உள்ளத்தில் எழும் அரிய ஆற்றலைப்பற்றி அறியாதவனையோ, குறைவாக அறிந்த ஒருவனையோ, தன் ஆற்றலை அறிந்து அதன் வழி நடக்கின்றவன் எளிதாக அடக்கி விடுகின்றான் ஒரு பொருள் தனக்கியல்பான ஆற்றலை வெளிப்படுத்தும் பொழுதே அது பொருளாக நம்மால் மதிக்கப்படுகின்றது. அப்பொழுதுதான் அதுவும் நிலைக்கின்றது.அதன் ஆற்றலை அது கைவிட்டு விடும்பொழுது அதைப் பொருளாக நாம் மதிப்பதில்லை.(கை விளக்கிலுள்ள மின்கலம் (Cell) தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கை மின் விளக்கை (Battery Light) எரிக்கும் வரையில் அதை நாம் மதிப்பதும், அதன் ஆற்றலை இழந்துவிட்டபின், அது தன் மேனிப் பளபளப்பில் எட்டுனையும் குறையாதிருப்பினும், அதனை மதியாது ஒதுக்குவதும் இல்லையா?) தன்னாற்றலை அழுத்தந் திருத்தமாக நம்பிக் காத்துக்கொள்ளாத ஒன்றினை இறையாற்றலும் காப்பதில்லை

மாந்தன் ஒருவன் தன்மேல் தானே நம்பிக்கை கொள்ள முயல்வதில்லை. இவன், பிறர் தன்னை நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன பொருள் இருக்கின்றது?

கோயில்களில் நடக்கும் சொற்பொழிவு, மந்திர மொழி இவற்றின் ஆரவாரத்தைவிட, அதன் பின்பு இருக்கும் அமைதிதான் எனக்கு மிகவும் விருப்பமானது. தன்னைச் சுற்றி அறத்தின் சாயல்களைக் காப்பாக அமைத்துக் கொண்டு இம் மாந்தர் வாழ்வார்களாயின், அவர்தம் மாட்டு எத்தகைய அமைதி, பெருந்தன்மை, திறமை முதலியன சுடர் விடும் தெரியுமா? நம் உயிரொடும் ஊணொடும் நெருங்கியவர்கள் என்னும் பொருட்டிற்காக நம் மனைவி மக்கள், பெற்றோர், உற்றோர் முதலியோர் செய்யும் பிழைகளைச் சரியென்று ஏற்கமுடியுமா?

சிற்சில கால், உன்னை வீண் வேலைகளில் ஈடுபடுத்த இவ்வுலகம் முனைந்து நிற்கும். நீ அமைதியாக இருந்து உன் ஆற்றலை மிகைப்படுத்திக் கொள்ள முயலும்போது, உன் மனைவி மக்கள், நண்பன், இரவலன், நோயாளி, கோழை, ஏழை எல்லாரும் ஒருங்கு கூடி வந்து, உன் அமைதிக் கதவைத் தடதடவென இடித்து, “எங்களிடம் நீ வரவேண்டும், எங்களோடு சற்றுப் பேசவேண்டும்” என்று ஓயாமல் அழைக்கலாம். ஆனால், நீ உன் ஆற்றலை அப்படியே புறந் தள்ளிவிட்டு உன்னை அதனின்று விடுபடுத்திக் கொண்டு, அவர்தம்பால் ஓடிவிடாதே! உன் உறுதியற்ற அலைமோதும் உள்ளந்தான், உனக்குப் பிறர் தொல்லை தரும்படியான ஆற்றலை அவா்கட்குத் தருகின்றது. உன் உள்ள ஆற்றலைப் பயன்படுத்துவாயானால், உன் இசைவின்றி எவனும் உன்னை நெருங்கி உன் எண்ணங்களை நிலைகுலைத்துவிட முடியாது

எதை யெண்ணித் தூய்மையான வலிந்த ஆற்றலோடு அன்பு காட்டுகின்றோமோ, அது நம் கைகளில் தானே வந்து விழுகின்றது. ஆனால் புலன் வேட்கையில் மூழ்கி மூழ்கி நம் ஆற்றலைச் சிதைத்துக்கொள்கின்றோம் என்று மெய்யறிஞர் ஒருவர் கூறியுள்ளதை நினைவூட்டுகின்றேன்

குழம்பிப்போய் உண்மை உருவற்று, விளக்கெண்ணை யில் வீழ்ந்த வெண்டைக்காய்போல், கொழ கொழக்கும் இந்தக் காலத்தின் முறையற்ற வினைப்பாடுகளை, நாம் உண்மையான மனவாற்றலைக் கொண்டு எதிர்ப்பதுதான் சரியான வழி போலி நட்பையும், பொய் வணக்கங்களையும், இரக்கமின்றி வெட்டியெறி. தாங்களும் ஏமாறிக்கொண்டு, பிறரையும் ஏமாற்றிக்கொண்டு, உன்னையும் ஏமாற்றவரும் உன் உறவினர்கள், நண்பர்கள்தம் விருப்பப்படி நடவாதே. அவர்களை உன் முன் நிறுத்திப் பின்வருமாறு உரத்த குரலொடு அழுத்தமாகக் கூறிவிடு. "ஏ! தந்தை தாயாரே! ஏ! மனைவி மக்களே! ஏ! உடன் பிறந்தவனே! ஏ! நண்பனே! நான் இதுவரை இவ்வுலகத்தின் நடைமுறைகளுக்கு ஒத்து உங்களோடு ஒன்றி நடந்துவந்தேன். ஆனால் இது முதல் நான் மெய்ப்பொருளின் உட்கிடையாகி விட்டேன். அந்த மெய்ப்பொருளின் உண்மை ஏற்பாடுகட்கு மாறாக நான் வேறெவர்க்கும் தலை வணங்கேன். எனக்கு இனிப் போலிச் சமயத்தின் ஒழுகலாறுகள் வேண்டாம். உண்மை அறிவுதான் வேண்டும். உங்கள் பழக்கவழக் கங்களை நான் இனி ஒப்பேன். என் உள்ளம் கூறுகின்ற மெய்யான கட்டளைகட்கே நான் இசைந்து நடப்பேன். நீங்கள் என்மேல் அன்பு காட்டினால் அந்த அன்புக்கும் என்னை உரியவனாக்கிக் கொள்வேன். என் விருப்பு வெறுப்புகளை உங்களிடமும் வேறு எவரிடமும் ஒளிக்கப் போவதில்லை. என் உள்ளத்தையே வாயாகக்கொண்டு சொற்களைத் துணிவுடன் யார் மாட்டும் உதிர்ப்பேன். உங்களிடம் சால்பு இருந்தால் உங்களை நான் விரும்புவேன். இல்லாவிட்டால் வெளிக்குமட்டும் உங்களை விரும்பி மதிப்பது போல், பொய்யாக நடித்து, உங்கட்கும், எனக்கும் ஏமாற்றத்தைத் தேடித் தரேன். நீங்களும் நல்ல நெறிகளில் நடக்க விரும்புவதாக என்னிடம் கூறுவீர்களானால், உங்களுக்குரிய கூட்டாளிகளை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். நானும் எனக்குற்றவர் களைத் தேடிக் கொள்வேன். இவ்வளவும் தலைச்செருக்கோடும், அறிவுத் தருக்கோடும் கூறுவதாக நினைக்க வேண்டாம். அடக்கம் வழிந்தோடும் தூய்மையான உண்மை உள்ள ஆற்றலோடு பேசுகின்றேன். பொய்யிடம் நெடுநாள் பழகிவிட்டதாலேயே, நாம் அதனுடன் ஒன்றிப் போய்விடக் கூடாது. இறுதிக் காலத் திலாவது அறிந்து கொண்ட மெய்ம்மைகளைப் பின்பற்றி நடப்பதால் உங்கட்கும் எனக்கும், மற்றெவர்க்கும் நன்மையே காத்திருக்கின்றது. உயிர் அடையும் ஊதியமும் அதனுள் பொதிந்துள்ளது. இன்றைக்கு நான் கூறுகின்றவை யெல்லாம் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் விரைவில் உங்கள் போலி அடக்கத்துக்கும் என்னுடைய உண்மையான கடுப் பிற்கும் வேற்றுமைகளை அறிந்து கொள்வீர்கள். அதனால் இறுதியில் கைவருவது நன்மை ஒன்றே"

இப்படிக் கூறுவதால் அவர்தம் உள்ளம் நோகலாம். அவர்கள் நம்மேல் வைத்த நம்பிக்கை சாம்பிப் போகலாம்; உண்மைதான். ஆனால் அவர்கட்கு மனம்  நம் உண்மையான உள்ளத்தின் தன்னுணர்வையும் அதன் பேராற்றலையும், அதன் பெரும்பயனையும் நாம் இழந்துவிட முடியாது. அதுவுமின்றி மெய்த் தனிப்பொருள் இயங்கு முறைப்படி, அவர்கள் எல்லாரும் உண்மை வாயிலை வலிந்து தட்டித் தட்டி அதன் கதவைத் திறக்கக் கெஞ்சும் நேரம் ஒன்று வந்தே தீரும். அப்பொழுது அவர் தாமும் நாம் மேலே கூறியதை ஒப்புக்கொண்டு, அதையே அவரைச் சார்ந்த மற்றவர்க்கும் கூறத் தயங்கமாட்டார்கள்

இவ்வகையில் நாம் உலகத்தார்க்குச் செய்யும் கடமைகள் என்ற காரண முறைப்பாடுகள் தவிர்ந்து போகலாம். ஆனால் அந்த வகைகளின் முடிவிலும் நாம் பெறப்போவது நம் உள்ள ஆற்றலைப் பேணி நடக்கும் முறைதான். அப்படிச் சுற்றிக்கொண்டு வர விரும்புபவர்களும் அவ்வாறே வரட்டும்! மற்றவர்க்காக வன்றித் தனக்குத் தானே வலிந்து பின் பற்றத்தக்க ஒரு பேராற்றலில் நம்பிக்கை வையுங்கள். அந்த நம்பிக்கை கொண்ட உள்ளம் எஃகுப்போல் நிலைத்து நிற்கட்டும்! அங்கு உண்மையே சூழட்டும்! அதன் அறிவு தெளிவுற்றுப் பொலியட்டும்! அத்தகையவன் தனக்குத் தானாகவும், தானே மக்கள் கூட்டமாகவும், தானே அரசனாகவும் இருக்கவேண்டியிருக்கும்

இந்தக் காலத்தில் உள்ள வாகு போகற்ற மக்கள் கூட்டத்தின் கோணல் மாணலான செய்கைக் குழப்பங்களை ஊன்றிப் பார்ப்பவனுக்கு நாம் கூறுவது எத்தகைய சிறந்த வழி என்று நன்கு விளங்கும். இக்காலத்து மாந்தன் ஒருவனைப் பார்க்கும்பொழுது அவனுடைய உள்ள ஊறல்களும், அறிவு நரம்புகளும் மட்கிப் போய்விட்டன என்று சொல்லிவிடலாம். நாம் தன்னுணர்வற்ற கோழைகளாகி விட்டோம் உண்மையைக் கண்டால் அச்சமாக விருக்கின்றது. நேர்மைக்கும் நமக்கும் வெகு தொலைவு. இறப்பை நினைத்து அலமருகின்றோம். ஒருவரைக் கண்டு ஒருவர் நடுங்குகின்றோம். முழுமையான உள்ள எழுச்சி நிறைந்த ஒருவனை நம் காலத்தில் பார்ப்பது அருமையினும் அருமையாகவிருக்கின்றது. இந்நிலையில் இப்பொழுதுள்ள வாழ்க்கையையும், மனபதையின் போக்கையும், முற்றிலும் திசைதிருப்பி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உண்மையான ஆடவரும் பெண்டிரும் ஏராளமாக வேண்டியிருக்கின்றனர். ஆனால் இங்குள்ள வாழ்க்கைக் குறைபாடுகளைக் கூடத் தாங்களே போக்கிக்கொள்ளத் திறமையற்றவர்களாக விருக்கின்றனர். அவர்தம் திறமையின் எல்லைக்கு மீறியதாக விருக்கின்றது அன்னவரின் விருப்பம். மாந்தர் ஒருவர்க் கொருவர் ஒருவரைச் சார்ந்துகொண்டும் ஒருவர்.பால் ஒருவர் கையேந்திக் கொண்டுமே உள்ளனர். நமது குடும்ப அமைப்பில் பெருமையில்லை? நம் கல்வி, தொழில், திருமணம், கொள்கை முதலிய எதையும் நாம் வரையறுத்துக் கொள்வதில்லை. வலிந்த சிலரே அவற்றை வரையறுக்கின்றனர். நாமெல்லாம் சமையலறைக் காவலர்கள் ஆகிவிட்டோம். சூழ்நிலையை எதிர்த்துப் போகும் ஆற்றல் நமக்கில்லை.

தாம் தொடும் முதல் செயலில் தோல்வி ஏற்படுமாயின் இளைஞர்கள் சோர்ந்து போகின்றனர். வாணிகன் தொடக்கத்தில் வரும் இழப்போடு தன்னம்பிக்கையையும் இழந்து விடுகின்றான். பள்ளிப் படிப்பையோ கல்லூரிப் படிப்பையோ முடித்த ஓராண்டிற்குள் ஏதாவதொரு வேலை கிடைக்காவிட்டால் தன்னைப் பெரிய படிப்பாளி என்று நினைத்துக்கொண்டிருப்பவன், நிலை குன்றிப் போய் விடுகிறான். தான் ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே என்ற நாணம் அவனுக்கு இருப்பதில்லை

ஈண்டுள்ளதைவிட மிகுதியான மன ஈடுபாடு மட்டும் இம் மாந்தர்க்கு ஏற்படுமானால் உலகில் அறம், கல்வி, தொழில் முதலிய வாழ்க்கைக் கூறுபாடுகளிலும் அவற்றைக் கைக்கொள்ளும் முறைகளிலும் ஒரு பெரிய தெளிவு ஏற்பட்டு விடும் என்பதை அறிய வேண்டும்

மாந்தன் எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகையில் என்ன வெல்லாமோ தனக்குத் தேவை என்று வேண்டிக் கொள்கின்றான். தனக்கென நன்மை வேண்டுமென்று இறைவனை வேண்டுவது இழிவும், திருட்டுத்தனமும் ஆகும். தனக்குண்டான வினைப்பாடுகளை உண்மையாகச் செய்வதுதான் இறைவனை வழுத்தும் மெய்யான முறை என்று அவன் அறிவதில்லை. குறிக்கோள் சிறிய அளவாக விருப்பினும் களைகளைப் பிடுங்கி எறிவதற்காக உழவனும், துடுப்புகளை வலிப்பதற்காகப் படகோட்டியும், மண்டியிட்டு உட்காருவதும் உண்மையான வழிபாடாகும். இந்த வழிபாடே உலகின் எம்மருங்கிலும் ஒலிக்கும் ஆற்றலுடையது. நாம் இறைவனை நோக்கி வருந்தி வேண்டுவதும் அவனை நொந்து கொள்வதும் நம் நம்பிக்கைக் குறைவையும், உள்ளத்தின் உறுதியின்மையையுமே. காட்டுகின்றன. பிறர் வருத்தத்திற்காக இரங்கும் போலிச் செயலும் வேண்டுவதில்லை. உண்மையாகத் தொல்லையுறுபவர்க்கு உதவிசெய்ய முடியுமானால் இரங்கு; இல்லையேல் உன் வேலையை நீ செய்துகொண்டு போ. தொல்லை தானாக நீங்கிப் போகும். பிறர் அழுவதைப் பார்த்து நாம் அவர்களோடு சேர்ந்து அழுவதும் சிறுமைச் செயலே. அறிவின்றி அழுதுகொண்டிருப்பவர்க்கு, மின்னல் வெட்டுவது போலப் பேசி ஆறுதல் கூறி உண்மையை உணர்த்துவதற்கு மாறாக, நாமும் சேர்ந்துகொண்டு அழுவது நாம் செய்யத் தக்கதில்லை

உண்மையான உள்ளத்தின் வலிந்த ஆற்றலைக்கொண்டு எவன் தன்னைத் தானே கைதுக்கி விட்டுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றானோ அவனே இறைவனுக்குகந்தவன்! 'துயர்களைப் பார்த்து மனந்தளராது விடாப்பிடியாக முன் செல்பவனுக்கு இறைவன் மிக விரைந்து உதவிக்கு வருகின்றான்' என்று ஈரானிய மெய்யறிஞன் ஒருவன் கூறுகின்றான். (குடிசெய்வல் என்னும் ஒருவர்க்குத் தெய்வம் மடிதற்றுத்தான்முந்துறும் - என்னுத் திருக்குறளை ஓர்க)

ஒவ்வோர் அறிஞனும் ஒவ்வொரு புதிய படைப்பாளன் அவன் தன் அறிவு ஆழ்ந்து போகப் போக, உள்ளத்தால் மிகுந்த இன்பம் பெறுகின்றான். ஒவ்வொரு சமயமும், அறத் தைப் பற்றியும், கடவுளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு பற்றியும், தோன்றியுள்ள சில அடிப்படையான உண்மைகளை விடாது பற்றிக்கொண்டு, மனவாற்றலுள்ள ஒருவன் ஏற்படுத்துகின்ற பாகுபாடே, இச் சமயக் கொள்கைகளே உண்மையின் கூறுபாட்டை அறியாதவர் தமக்கு மறைகளாகி விடுகின்றன. அஃது இறைப் பேராற்றலைப் போய் அடையும் ஒரு கருவி என்றறியாமல் அதுவே இறை என்று எண்ணி விடுகின்றனர். அத்தகையோர் அடி வானத்தை உலகத்தின் எல்லையென்று தவறாக நினைத்துக் கொள்பவர் போலப் போலிக் கொள்கையால் மயங்குகின்றனர். புறச் சமயங்களைப் புறக்கணித்து ஏளனப்படுத்துகின்றனர். எல்லாம் வல்ல பேராற்றல் கதிரவன் ஒளி போல் எல்லாருடைய குடிலுக்குள்ளும் நுழைந்து, அங்குள்ளவர்க்கும் துணை நிற்கும் என்பதை மறந்து விடுகின்றனர். போலிச் சமயத் தலைவர்கள் பல பெருமைசேர் கோயில்களில் நுழையவென்று ஊர் ஊராக வும், நாடு நாடாகவும் அலைகின்றனர். ஆனால் உண்மை மெய்யறிஞனோ தன் இருப்பிடத்திலேயே இருக்கின்றான். மிகத் தேவையாக உள்ள போதுகூட அவன் அடிக்கடி தன் இருப்பிடத்தை விட்டு நீங்குவதில்லை. மூட்டை கட்டிக் கொண்டும், தம் நண்பர்களைப் பார்த்து விடை பெற்றுக் கொண்டும், ஊர் ஊராய்ப் போய்க் கோயில் குளங்களை வழிபடுவது மூடர்கள் விரும்பும் செயல். நம் உள்ளக் கவலைகளை மாற்றப் பெருமையுற்ற அத் திருப்பதிகளில் நம் கால்களை வைக்கும் முன்பே, நம் கவலைகள் அங்குப்போய் எதிர்கொண்டு நமக்காகக் காத்திருக்கின்றன. ஆனால் நாம் போய்விட்டோமே என்பதற்காக அங்குள்ள வழிபாட்டிலும், காட்சிகளிலும் நம் உள்ளம் மகிழ்ந்ததாகப் பிறர் நம்புமாறு நாம் நடிக்கின்றோம். எங்குப் போனாலும் நம் நிழல் போலவே நம் சுழல்கின்ற உள்ளமும் கூட வருகின்றதை நாம் உணரவேண்டும். இத்தகைய செலவுகள்யாவும் மன நோயின் விளைவுகளே

ஒருவரைப் பார்த்து பின்பற்றாதே! உன் தனிம ஆற்றலை வெளிப்படுத்து. ஒவ்வொருவனுக்கும் அவனவன் முற்றும் முழுமையாகச் செய்யும் ஆற்றலை, அவனைத் தோற்றுவித்த பேராற்றலே உண்டாக்கித் தரமுடியும். ஒருவன் ஒன்றில் சிறப்புற்றவன் என்று அவனே தன்னைப்பற்றி உலகுக்கு வெளிப்படுத்துகின்ற வரையில், அவனாற்றலை எவரும் முன் கூட்டியே அறிந்து கொள்ளல் இயலாது. செகப்பிரியர், பிராங்களின், வாசிங்டன், பேகன், நியூட்டன் ஆகிய இவர்கட்கு அறிவூட்டக்கூடிய ஆசிரியன் எங்கு இருக்கின்றான்? ஒவ்வொரு பெருமகனும் தன்னந் தனியனே. செகப்பிரியரைப் பார்த்து வேறொரு செகப்பிரியராகிவிட முடியாது. உனக்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ள கல்வியைப் பயில், நீ அதைத் தெரிந்துகொள்ள விரும்புவாயானால் எல்லா ஆற்றலும் எளிதில் உனக்கு வரும். இந் நொடியில் உன்னுள்ளே ஒரு பெரிய ஆற்றல் உள்ளது. அதன் அடிவழி நீ நடக்கத் தொடங்குவையானால், உன்னைக் கடந்துபோன ஊழிகளை நீ மீண்டும் படைத்துவிடுவாய்

மக்கள் கூட்டம் முன்பிருந்ததைவிட மிகவும் மேம்பாடடைந்துள்ளது என மக்கள் தங்களைத் தாங்களே வியந்து பாராட்டிக் கொள்கின்றனர். ஆனால் அவருள் ஒருவனாவது சிறப்புற்று விளங்குவதாகத் தெரியவில்லை

மக்கள் கூட்டத்தில், வளர்ச்சி என்பதே இல்லை. ஒரு புடை முன்னேறினால், ஒரு புடை பின்னிறங்குகின்றது. என்றும் இடைவிடாத மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நாகரிகமற்ற வாழ்விலிருந்து நாகரிகத்தை அடைவதாகக் கூறப்படுகின்றது. புதிய சமயங்களை உண்டாக்கியிருப்பதாகப் பெருமைப்படுகின்றது. செல்வத்தை பெருக்கியிருப்பதாக ஆரவாரிக்கின்றது.பூதவியல்,வேதியியல் முதலிய அறிவியற் கலைகளில் வளர்ந்துள்ளதாக வாய்ப்பெருமை காட்டுகின்றது. ஆனால் இத்தகைய மாறுதல்களால் மக்கட்குப் பண்பு வளர்ச்சி ஏற்படக் காணோம். ஒரு நன்மை பெறவேண்டி இன்னொரு நன்மையை விட வேண்டியுள்ளது. மக்கள் கூட்டம் புதிய கலைகளைத் தோற்றுவிக்கின்றது. ஆனால் அதற்கீடாகப் பழைய இயற்கை உணர்வுகளையும், மனவாற்றல்களையும் இழத்தல் செய்கின்றது. உயரிய வெள்ளையுடை பூண்டு கையில் எழுதுகோலும், சட்டைப்பையில் மணிப்பொறியும், காசோலையும் வைத்துக்கொண்டு படிக்கவும், எழுதவும், எண்ணவும் கற்றுள்ள நாகரிக மாந்தன் எங்கே? வில்லும், வாளும், ஈட்டியும் எடுத்துக்கொண்டு ஓர் ஓலைக் குடிலில் அரைகுறை உடையுடன் உலவிய முன்னைய மாந்தன் எங்கே? ஆனால் இந்த இருவருடைய உடல் நிலையைப் பார்க்குங்கால் நாகரிக மாந்தனுக்கு முன்னை நாளைய வன்மை தளர்ந்து விட்டதைக் கண்டுகொள்ள முடிகின்றது

நாகரிக மாந்தன் இயங்கிகள் பல செய்திருக்கின்றான்; ஆனால் தன் கால்களின் முழு வலிமையையும் இழந்து விட்டான். பிரம்பு பிடித்துக்கொண்டு நடக்கின்றான்; ஆனால் தசையின் வலிவு குன்றிவிட்டது. வேண்டும்போது படித்துக் கொள்ளலாம் என்று பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கின்றான்; அதனால் நினைவாற்றல் அவனை விட்டு நீங்கிவிட்டது; புத்தகப் பெருக்கங்கள் அறிவை அழுத்துகின்றன. நாகரிக உணவுகளால் வல்லமை குறைந்து விடவில்லையா? உயிர் முறிக்குழும்பு, (Insurance Company) தோன்றிய பின்தான் உயிரிழப்புகள் மிகுந்து போயின

மாந்தனின் உயரத்திலும், பருமனிலும் எங்ஙன் மாறுபாடில்லையோ, அங்ஙனே உள்ள வளர்ச்சியிலும் மாறுபாடில்லை. இருபதாம் நூற்றாண்டின் அறிவு நூல், இயற்கை நூல், உயிர் நூல், பூத நூல், வேதி நூல் முதலியன யாவும் சேர்ந்து முன் இருந்த பெருமறவர்தம்மையும், பேரறிஞர் தம்மையும் உண்டாக்கக்கூடவில்லை. மாந்தன் உடைகளை மாற்றிக்கொள்வதும் அவற்றின் வண்ணங்களைப் புதுக்கிக் கொள்வதும்போல் நாகரிகப் பொருள்களை வளர்த்துக் கொண்டிருக்கின்றானே யல்லாமல் தன் உடல், உள்ளத் திறமைகளை உயர்த்திக் கொள்ளச் சிறிதும் முயலவில்லை. புதிதாகக் கண்டுபிடிக்கும். ஒரு பொறியினால் நமக்கு ஏற்படுகின்ற நன்மைக்கும் அதனால் நம் ஆண்மைக்கும் அகத்திற்கும் ஏற்படுகின்ற தீமைக்கும் கணக்குச் சரியாகப் போய்விடுகின்றது. சில நூற்றாண்டுகட்கு முன் மிகுந்த ஆர வாரப்படுத்திய பொறிகள், இன்று தூக்கி யெறியப்பட்டு அவ்விடத்தைப் புதுப்பொறிகள் வலிந்து பற்றுவது நமக்கு வேடிக்கையாகவிருக்கின்றது

மாந்தன் உயிராற்றலை மிகுக்கின்ற வினைப்பாடுகளை விட்டு விட்டு, எளிய அவன் உடலாற்றலையாவது பேணாமல், தன் புறவாழ்க்கைப் பருப்பொருள்களையே நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டிருக்கின்றான். செல்வமே அவனுக்குக் குறிக்கோளாகிவிட்டது. அறச்சாலைகளையும், கல்விச்சாலைகளையும், அரசியல் மன்றங்களையும், அச் செல்வத்தின் காப்பாளர்களாகவே பயன்படுத்தத் தொடங்கி விட்டான். எவனாவது இவன்றன் கல்வி இழிவையும் அறக் கொலையையும், அரசியல் கூத்தாட்டங்களையும் கடிந்து கூறுவானானால், மக்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு அவன்மேல் விழுந்து தாக்குகின்றனர்

இக் காலத்தவன் பெருமை அவன் சேர்த்த சொத்துகளிலேயே இருப்பதாக எண்ணுகின்றான். தன் தன்மையைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ஆனால் அறிவுள்ளவன். தன் சொத்துகளின் பெருக்கத்தைக் கண்டு நானுகின்றான். தன் பண்புபோய்விடுமோ என்று அஞ்சுகின்றான். இன்னும் அவனுக்குள்ள செல்வம்தன் முன்னோர் வழியாவது பிறர் கொடுத்த கொடையிலாவது தவறான வழியிலாது கிடைத் திருப்பின் அதை அருவருத்துத் தொடவும் கூசுகின்றான். அது தன் உடைமையன்று; அதன் வேர் தன்னுள் இல்லை யென்றும், ஒரு கள்வனிடமோ ஏமாற்றுக்காரனிடமோ அது சிக்கிவிடாமல், ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காகவே அது தன்னிடம் வந்து தங்கியிருக்கின்றது என்பதையும் நன்றாக உணர்கின்றான்

நம் ஆற்றல் கொண்டு நாம் தேடுவது, நம் உள்ளத்துள்ள மெய்ப்பொருள்தான். நமக்கென்று காத்து வைக்கப் பெற்றுள்ள அழியாத பொருள்களும் அவையே. பிற வெளிப் பொருள்களைத் தேடி உங்கள் உள்ளங்களை நாறவிட்டு, உங்கள் மேனித் தசைகளையும் அழுகவிட்டு, உங்கள் குப்பாயங்களை மட்டும் தடித்த துணியினாலோ மெல்லிய பட்டுகளாலோ தைத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள்

உள்ளம் பேராற்றலின் இருக்கை, அஃது இறைவனின் படுக்கை. அதை விட்டுவிட்டுப் பிறிதோரிடத்தில் இன்பத்தையும் நலத்தையும் வறிதே தேடித் திரிவதால் தன்னுள்ளத்து வீற்றிருக்கும் அரிய ஆற்றல் குன்றிவிடுகின்றது என்றொருவன் அறிந்துகொண்டு, அவன் தன் அறிவையும் உள்ளதையுமே நம்பி நடப்பானாகில், அவன் வாழ்க்கை வளைவுக ளெல்லாம் நேராக்கப்பெறுகின்றன. தன்னை யறிந்தவுடன் அவன் நிற்கத் தொடங்குகின்றான்

செல்வம் என்று பொதுமக்களால் கூறப்படும் ஆரவாரப் பருப்பொருள்கள், சூதாடுபவர்களின் கைகளில் விழுவது போல ஒருகால் ஒருசேர வந்து விழும். மறுகால், அவரை விட்டு ஒருசேரப் போகும். (கூத்தாட்டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளிந் தற்று- என்ற திருக்குறளை ஒர்க) இவற்றைத் துகள்களாக எண்ணு. உன் உள்ளத்தின் வளர்ச்சியும் தூய்மையுமே, உன் உண்மையான செல்வம். அவைதாம் உனக்கு அமைதியைத் தரும்; உன்னை வெற்றி அன்னையின் மடியில் கொண்டுபோய்க் கிடத்தும். உன்னை நீயே அறி; உன்னை நீயாகவே ஆக்கிக் கொள்!

(முற்றும்)


பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார்

அவர்களின் நூல்கள்

***


1 கொய்யாக்கனி(பாவியம்) 16.00
2 ஐயை 30.00
3 பாவியக் கொத்து 22.00
4 கற்பனை ஊற்று 40.00
5 பள்ளிப் பறவைகள்(குழந்தைப் பாடல்கள்) 18.00
6 நூறாசிரியம்(விளக்கவுரையுடன்) 100.00
7 திருக்குறள் மெய்ப்பொருளுரை(முதற்பகுதி) 150.00
8 உலகியல் நூறு(பொழிப்புரையுடன்) 10.00
9 பாவலரேறு பாடல்கள்-களிச்சாறு(எட்டு தொகுதிகளாக) (அச்சில்)
10 மகபுகு வஞ்சி (அச்சில்)
11 எண்சுவை எண்பது (அச்சில்)
12 அறுபருவத்திருக்கூத்து (அச்சில்)
13 கழுதை அழுத கதை (அச்சில்)
14 தன்னுணர்வு (அச்சில்)
15 பாவேந்தர் பாரதிதாசன் 25.00
16 இலக்கிகத்துறையில் தமிழ் வளர்ச்சிக்குரிய ஆக்கப்பணிகள் 5
17 ஆரியப்பார்ப்பனரின் அளவறிந்த கொட்டங்கள் 7.00
18 இனம்ஒன்றுபட வேண்டும் என்பது எதற்கு? (அச்சில்)
19 சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும் 3.00
20 செயலும் செயல்திறனும் 45.00
21 தமிழீழம் 70.00
22 ஓ! ஓ! தமிழர்களே! 11.00
23 தனித்தமிழ் இயக்கத் தோற்றமும் வரலாறும் 10.00
24 இட்ட சாவம் முட்டியது 10.00
25 நெருப்பாற்றில் எதிர்நீச்சல் '6.00
26 இளமை விடியல் 50.00
27 வாழ்வியல் முப்பது (அச்சில்)
28 பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு மலர் 60.00
29 தென்மொழி(பாவலரேறு ஐயா அவர்களின் 2ஆம்,3ஆம் ஆண்டு நினைவு மலர்) 16.00

"https://ta.wikisource.org/w/index.php?title=தன்னுணர்வு&oldid=1519976" இலிருந்து மீள்விக்கப்பட்டது