தமிழகம் ஊரும் பேரும்/குலமும் கோவும்

4. குலமும் கோவும்

பழந் தமிழ் நாட்டில் பல வகுப்பார் வாழ்ந்திருந்தார்கள்; பல குல மன்னர் ஆட்சிபுரிந்தார்கள். அன்னார் வரலாறு இன்னும் முறையாக எழுதப்படவில்லை. ஆயினும், அவர் பெயரும் பெருமையும் ஊர்ப் பெயர்களால் விளங்குகின்றன.

நாகர்

நாகர் என்பார் ஓர் இனத்தார். தமிழ் இலக்கியங்களில் நாக நாடு செல்வமும் அழகும் வாய்ந்த சிறந்த நாடாகக் குறிக்கப்பட்டுள்ளது.சோழ மன்னன் ஒருவன் நாக மங்கையை மணந்து பெற்ற மைந்தனே தொண்டைமான் என்னும் பெயரோடு காஞ்சி மாநகரில் அரசாண்டான் என்று பண்டைக் கதை கூறும். அன்றியும், தமிழ் நாட்டில் நிறுவப் பெற்ற தலைச் சங்கத்தில் முரஞ்சியூர் முடி நாகராயர் என்பார் சங்கப் புலவருடன் வீற்றிருந்து முத்தமிழை வளர்த்தார் என்று தெரிகின்றது. இன்னும், கடைச் சங்கப் புலவர்களில் நாகன் என்னும் பெயருடையார் சிலர் இருந்தனர். நன்னாகன், இளநாகன், வெண்ணாகன் என்னும் மூவரும் பாடிய பாடல்கள் பழந்தொகை நூல் களிற் சேர்க்கப் பட்டுள்ளன. தமிழ் நாட்டிலுள்ள நாகப்பட்டினம், நாகர்கோவில் முதலிய ஊர்களின் பெயர்களில் நாகர் நாமம் விளங்குகின்றது. அருவர்

அருவர் என்பார் மற்றொரு குலத்தார். அவர் வாழ்ந்த நாடு அருவர் நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடை நடுவே அமைந்திருந்தது. அன்னாருடன் பழகிய ஆந்திர நாட்டார் தமிழர் எல்லோரையும் அருவர் என்றே குறித்தார்கள். இதற்குச் சான்று கலிங்கத்துப் பரணியில் உண்டு. குலோத்துங்க மன்னன் ஆணைப்படி ஆந்திர தேசத்திலுள்ள கலிங்க நாட்டின் மீது படையெடுத்த தமிழ்ச் சேனையைக் கண்டபோது,

“ஒருவர் ஒருவர்மேல் வீழ்ந்து வடநாடர் அருவர் அருவரென அஞ்சி”

ஓடினர் எனப் பரணிக் கவிஞர் பாடியுள்ளார். அருவர் பேசிய தமிழ் மொழியைத் தெலுங்கள் அருவம் என்றார்கள். அதுவே பிற்காலத்தில் அரவம் என்றாயிற்று. அருவர் நாட்டைக் கொடுந்தமிழ் நாடுகளில் ஒன்றாகத் தமிழ் இலக்கண நூலோர் கூறினர். இக்காலத்தில் அருவர் தமிழ்நாட்டிற் காணப்படவில்லை.ஆயினும், திருச்சி நாட்டிலுள்ள அரவக்குறிச்சி என்ற ஊரும், நீலகிரியிலுள்ள அரவங்காடு என்னும் இடமும் அருவரோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

மழவர்

மழவர் என்பார் மற்றொரு பழைய குலத்தார் ஆவர். அன்னார் சிறந்த படை வீரர். முடிவேந்தர்களும் அவர் உதவியை நாடினர். அக்குலத்தார்க்கும்,தமிழ் அரச குலத்தர்க்கும், உறவு முறையும் இருந்ததாகத் தெரிகின்றது. தஞ்சை நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று அக்குலத்தார் பெயரைத் தாங்கி நிற்கின்றது.

“மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே.”

என்று தேவாரத்திற் பாடப்பெற்ற மழபாடி என்னும் ஊர் மழவரால் உண்டாக்கப்பட்டதாகும். மழவர் பாடி என்பது மழபாடியாயிற்று.

திரையர்

திரையர் என்பார் இன்னொரு பழந்தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர்.தொண்டை நாட்டை யாண்ட பண்டையரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான்.காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந்திரையனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார்.

இன்னும், தொண்டை நாட்டில் திரையர் குலத்தைச் சேர்ந்த ஒருவன் பெயரால் திரையனேரி என்னும் ஊர் உண்டாயிற்று. அதுவே இப்பொழுது செங்கற்பட்டு நாட்டில் தென்னேரியாக விளங்குகின்றது.

முத்தரையர்

முத்தரையர் என்னும் பெயர் வாய்ந்த பண்டைக் குலம் ஒன்று பழந்தமிழ் நூல்களிலே பேசப் படுகின்றது. அவரும் சிறந்த படைவீரராக விளங்கினர். அக்குலத்தைச் சேர்ந்த வள்ளல்களின் பெருமையை நாலடியார் என்னும் பழைய நீதி நூல் பாராட்டுகின்றது. அன்னார் குணநலங்களை வியந்து, “முத்தரையர் கோவை” என்ற நூலும் இயற்றப்பட்டதாகத் தெரிகின்றது. சாசனங்களில் சத்துரு பயங்கர முத்தரையன், பெரும் பிடுகு முத்தரையன் முதலியோரின் வீரச் செயல்கள் குறிக்கப்படுகின்றன. இராமநாதபுரத்திலுள்ள முத்தரசன் என்னும் ஊரும், தஞ்சை நாட்டிலுள்ள முத்தரசபுரமும் திருச்சி நாட்டிலுள்ள முத்தரச நல்லூரும் அக்குலத்தாரது பெருமையைக் காட்டுவனவாகும்.

முனையர்

முனையர் என்ற குலத்தாரும் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள். அவர் சிறந்து வாழ்ந்த இடம் முனைப்பாடி என்று பெயர் பெற்றது.9 அவ்வூரைத் தன் அகத்தே கொண்ட நாடு திருமுனைப்பாடி நாடு. தேவாரம் பாடிய மூவரில் இருவரை ஈந்தது அந் நாடே. சுந்தரர் வாழ்ந்த காலத்தில் நரசிங்க முனையர் என்னும் சிற்றரசன் திருமுனைப்பாடி நாட்டை ஆண்டு வந்ததாகத் திருத் தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது.10

பாணர்

பாணர் என்றும், வாணரென்றும் பெயர் பெற்ற குடியினர் பெரும்பாணப்பாடி என்னும் நாட்டை நெடுங்காலம் ஆண்டு வந்தனர். முனையர் பெயரால் முனைப்பாடி எழுந்தாற் போன்று, பாணர் பெயரால் பெரும் பாணப்பாடி உண்டாயிற்று.அதன் தலைநகரம் நிவா நதிக் கரையிலுள்ள திருவல்லம் என்னும் தீக்காலி வல்லம் ஆகும். வாணபுரம் என்ற மறு பெயரும் அதற்குண்டு. அந்நகரின் அருகே பாண மன்னர் வெட்டிய ஏரியும், அதைச் சார்ந்த ஊரும் வாண சமுத்திரம் என்று பெயர் பெற்றன. இன்னும், வட ஆர்க்காட்டில் சோழிங்கருக்கு அண்மையிலுள்ள பாண வரம் என்ற ஊரும் பாணர் குடியை நினைவூட்டுகின்றது.11

அதியர்

தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும்,அதியர் கோமான் என்றும் வழங்கப் பெற்றான்.ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ்நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது.அக்குலத்தைச் சார்ந்த அதியர் தலைவருள் சிறந்தவன் அதியமான்.நெடுமான் அஞ்சியாவான்.அவனது நாட்டின் தலைநகர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும்.அவ்வூருக்கு ஐந்து மைல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும்.அக்கோட்டை அதியமானால் கட்டப்பட்டது போலும்! அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். இன்னும், சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற் பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

ஆவியர்

ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக் குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள்.அவர் தலைவன் ஆவியர் கோமான் என்று பெயர் பெற்றான். கடையெழு வள்ளல்களில் ஆவியர் ஒருவனாகிய பேகன் என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. அம்மன்னன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று. முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி என்னும் பதி ஆவியர் குடியிருப்பேயாகும். திரு ஆவிநன் குடி என்பது பழனியின் பெயர்.

ஓவியர்

ஆவியரைப் போலவே ஓவியர் என்னும் வகுப்பாரும் இந்நாட்டில் இருந்தனர். சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக் கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவன். அவன் ஆட்சி புரிந்த நாடு ஓய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. ஓவியர் பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவிய வர்மான் நாடு என்று பெயர் பெற்றுப் பின்னர் ஓய்மான் நாடென்று சிதைந்திருத்தல் கூடும். திண்டிவனம், கிடங்கில், வயிரபுரம் முதலிய ஊர்கள் அந்நாட்டைச் சேர்ந்தனவாகும்.

வேளிர்

இன்னும், வேளிர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பார் முன்னாளில் சிறந்து விளங்கினர். அக்குலத் தலைவர்கள் சோழகுல மன்னரோடு உறவு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது.அக்குலத்தாரில் ஒரு வகையார் இருக்கு வேளிர் - எனப் பெயர் பெற்று, புதுக்கோட்டை நாட்டிலுள்ள கொடும்பாளுர் முதலிய இடங்களில் வாழ்ந்து வந்தனர்.அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய கணம்புல்லர் என்பவர் இருக்கு வேளுரிற் பிறந்தவர் என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது.இன்னும் சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதியொன்று புள்ளிருக்கு வேளுர் என்று பெயர் பெற்றிருக்கிறது. இவ்வூர்ப் பெயர்கள் இருக்கு வேளிரொடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

குறுக்கையர்

வேளாளர் குலத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒன்று குறுக்கையர் குடியாகும். திருநாவுக்கரசர் அக்குடியைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் பாட்டால் விளங்குகின்றது. இக்குடியினர் பெயரால் அமைந்த ஊர்கள் சோழநாட்டிற் பலவாகும். அவற்றுள் மாயவரம் வட்டத்தில் அமைந்த குறுக்கை, பாடல் பெற்றுள்ளதாகும். அங்குள்ள வீரட்டானத் திறைவனை,

"சற்றுநாள் அற்ற தென்று தருமா கற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே"

என்று போற்றினார் திருநாவுக்கரசர். இன்னும் சில குறுக்கைகள் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளன. திருப்பிடவூர் நாட்டுக் குறுக்கை இப்பொழுது நாட்டுக் குறுக்கையென்னும் பெயரோடு திருச்சி. நாட்டு லால்குடி வட்டத்திலுள்ளது. திருநறையூர் நாட்டுக் குறுக்கை என்று சாசனத்திற் கூறப்படுவது கொறுக்கை என்னும் பெயர் கொண்டு கும்பகோண வட்டத்தில் காணப்படுகின்றது.

முடி மன்னர் குடி

முடியுடை மன்னராய்த் தமிழ் நாட்டில் அரசு புரிந்தவர் சேர சோழ பாண்டியர் ஆவர். அன்னார் நினைப்புக்கு எட்டாத பழங்காலந் தொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள்.

சோழர்

சோழர் குடி பல சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தது. செம்பியன், வளவன், சென்னி முதலிய பெயர்கள் அவற்றுள் சிறந்தனவாம். செங்கற்பட்டிலுள்ள செம்பியம், வடஆர்க்காட்டில் உள்ள செம்பிய மங்கலம், தஞ்சை நாட்டிலுள்ள செம்பிய நல்லூர், பாண்டி நாட்டிலுள்ள செம்பிய னேந்தல் முதலிய ஊர்கள் செம்பியன் பெயரைத் தாங்கி நிற்கின்றன. தஞ்சை நாட்டிலுள்ள செம்பங்குடி என்பது செம்பியன் குடியாக இருத்தல் கூடும். இனி, தென் ஆர்க்காட்டு வளவனுர், வட ஆர்க்காட்டு வளையாத்தூர் என்னும் வளவன் ஊற்றுார், தஞ்சை நாட்டிலுள்ள வளவ நல்லூர், செங்கற்பட்டிலுள்ள வளவன் தாங்கல் முதலிய ஊர்களின் பெயரில் வளவன் என்னும் சொல் காணப்படுகின்றது. இன்னும், தஞ்சை நாட்டில் சென்னி வனம், சென்னிய நல்லூர், சென்னிய விடுதி என்னும் ஊர்கள் உள்ளன.

பாண்டியர்

தமிழகத்திலுள்ள தென்னாட்டையாண்ட பாண்டி மன்னர்க்குத் தென்னவன், மாறன், செழியன் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு.அவையாவும் ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. தென்னாட்டி லுள்ள தென்னன்குடி,தென்னன்பட்டி, தென்னவ னல்லூர், தென்னவனாடு முதலிய ஊர்கள் தென்னவனோடு தொடர்புடையன என்பது தேற்றம். மாறன் என்னும் பெயரை மாறனேரி, மாற மங்கலம், மாறனுத்து முதலிய ஊர்ப் பெயர்களிலே காணலாம். நெல்லை நாட்டிலுள்ள செழியனல்லூர் முதலிய ஊர்களின் பெயர்களில் செழியன் என்னும் சிறப்புப் பெயர் விளங்குகின்றது.

பாண்டி நாட்டு மன்னர்

பூதப்பாண்டியன்

பழந்தமிழ் நூல்களில் பூதப்பாண்டியன் என்ற பெயருடைய மன்னன் பெருமை பேசப்பட்டுள்ளது. ஒல்லையூரில் மாற்றாரை வென்று புகழ் பெற்ற அம்மன்னனை ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் - என்று நல்லிசைப் புலவர்கள் பாராட்டினார்கள்: நாஞ்சில் நாடு என்னும் தென் திருவாங்கூர் தேசத்திலுள்ள பூதப்பாண்டி என்ற ஊர் அவன் பெயரால் அமைந்ததென்று கருதலாகும்.

அழகிய பாண்டியன்

பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய அழகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப்பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பொருட்டு அம்மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டான் என்பர்.

சேந்தன்

ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில் அரசாண்டவன் சேந்தன் என்னும் செழியன். அவன் சிறந்த வீரனாகவும், செங்கோல் வேந்தனாகவும் விளங்கினான் என்பது சிலைத் தடக்கைச் செழியன் என்றும், செங்கோல் வேந்தன் என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுதலால் அறியப்படும். சேந்தமங்கலம் என்ற ஊர் பாண்டி நாட்டில் உண்டு. கோச்சடையன்

திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்திருந்த பாண்டியன், அரிகேசரி மாறவர்மன்.அவனுக்குப் பின் அவன் மகனாகிய கோச்சடையன் அரசனாயினான்.நாற்பதாண்டுகள் அரசு வீற்றிருந்த அம்மன்னன் பல்லவனோடு போர் புரிந்து பல நாடுகளை வென்று புகழ் பெற்றான். இராமநாதபுர நாட்டிலுள்ள கோச்சடை என்னும் ஊர் அவன் பெயரை தாங்கி நிற்கின்றது.

வரகுணன்

கோச்சடைக் கோமகனுக்குப் பின்பு பட்டமெய்திய பாண்டிய மன்னருள் வீரமும் சீலமும் ஒருங்கே வாய்ந்தவன் வரகுண பாண்டியன். அவன் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன். பல்லவ மன்னர் வீறு குறைந்திருந்த அக்காலத்தில் தந்திவர்மன் என்னும் பல்லவனிட மிருந்து சோழ வரகுணன் நாட்டை அவன் கைப்பற்றி ஆண்டவன் என்பது நன்கு விளங்கு கின்றது. திருச்சிராப்பள்ளிக்கு அருகே வரகனேரி என்னும் ஊரொன்று உண்டு, வரகுணன் ஏரி என்ற பெயரே வரகனேரி யென மருவிற் றென்பர். இவ்வூர் வரகுண பாண்டியன் பெயரைத் தாங்கி நிலவுகின்றது போலும்

சேரவன் மாதேவி

வரகுண வர்மனுக்குப் பின்னே அவன் தம்பியாகிய பராந்தக பாண்டியன் பட்டம் எய்தினான். வீர நாராயணன் என்னும் விருதுப் பெயர் கொண்ட அம்மன்னன் இயற்றிய அறங்களும், நிகழ்த்திய போர்களும், பிறவும் சின்னமனூர்ச் செப்பேடுகளில் விரித்துரைக்கப்படுகின்றன. வானவன் மாதேவி என்னும் சேரகுல மங்கை அவன் தேவியாய்த் திகழ்ந்தாள். நெல்லை நாட்டிலுள்ள சேரமாதேவி என்னும் சேரவன் மாதேவி. அம் மங்கையின் பெயரால் அமைந்த ஊர் என்று கருதலாகும்.

வீரபாண்டியன்

தஞ்சைச் சோழர் தலையெடுத்தபோது பாண்டியர் பணியத் தொடங்கினர். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாண்ட பராந்தக சோழன் பாண்டி மன்னனை இரு முறை வென்று, அவன் தலைநகராகிய மதுரையையும் கைப்பற்றிக் கொண்டான். இங்ஙனம் பதங் குலைந்த பாண்டியன் மூன்றாம் இராஜ சிம்மன் என்பர். ஆயினும், அவன் மைந்தனாகிய வீரபாண்டியன் சோழரை வென்று, வசைத் தீர்ப்பதற்குக் காலம் பார்த்திருந்தான்.அதற்கேற்ற வாய்ப்பும் வந்துற்றது. வடபுலத்து வேந்தன் ஒருவன் சோழ நாட்டின் மீது படையெடுத்துக் குழப்பம் விளைவித்தான். அக்காலத்துச் சாசனங்கள் வீரபாண்டியனைச் சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன் என்று பாராட்டுதலால், அவன் போர்க்களத்தில் சோழன் ஒருவனைக் கொன்று புகழ் பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகின்றது. அவ்வெற்றியின் காரணமாக அவன் சோழாந்தகன் என்னும் விருதுப் பெயர் பூண்டான். மதுரை நகரின் அருகேயுள்ள சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் அவன் பெயர் தாங்கி நிலவுகின்றது.சோழாந்தகன் என்பது சோழவந்தான் என மருவியுள்ளது.

வீர பாண்டியன் பெயரால் அமைந்த ஊர்கள் இன்னும் சில உண்டு. நெல்லை நாட்டு நாங்குனேரி வட்டத்தில் வீரபாண்டியன் நல்லூர் என்று முன்னாளிற் பெயர் ஊரும் பேரும் பெற்றிருந்த ஊர் வீரபாண்டியம் என இன்று வழங்குகின்றது. மதுரை நாட்டுப் பெரிய குளம் வட்டத்தில் மற்றொரு வீரபாண்டியன் நல்லூர் உண்டு. புல்லை நல்லூர் என்னும் பழம் பெயர் வாய்ந்த அவ்வூர் வீரபாண்டியன் பெயரைப் பிற்காலத்தில் பெற்றதென்பது கல்வெட்டுகளால் விளங்கும்.அவ்வீரபாண்டிய நல்லூர் வீரபாண்டி எனக் குறுகியுள்ளது.

மூன்று பாண்டியர்

பாண்டி நாட்டைச் சோழர் ஆட்சியினின்றும் விடுவிப்பதற்குப் பன்முறை முயன்றனர் பாண்டியர். இராஜாதி ராஜ சோழன் காலத்தில் மூன்று பாண்டியர் ஒன்று சேர்ந்து உள்நாட்டுக் கலகம் விளைத்தார்கள்.சோழன் படையெடுத்தான். பாண்டியர் மூவரும் எதிர்த்தனர். அவர்களில் மானாபரணனும், வீர கேரளனும் போர்க்களத்தில் இறந்தார்கள். அன்னார் பெயர் கொண்டு நிலவும் ஊர்கள் நெல்லை நாட்டிற் சில உண்டு. அம்பா சமுத்திர வட்டத்திலுள்ள மானாபரண நல்லூரும், தென்காசி வட்டத்திலுள்ள வீர கேரளன் புத்தூரும் அவரது சுதந்தர ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கின்றன.

சுந்தர பாண்டியன்

பாண்டி நாட்டிலுள்ள ஊர்களில் ஒன்று மாறனேரி. முற்காலத்தில் அது மாறமங்கலம் என்னும் பெயரால் வழங்கிற்றென்பது சாசனத்தால் விளங்குகின்றது. அவ்வூர் சுந்தரபாண்டிய நல்லூர் என்ற மறு பெயர் பெற்றிருந்த தென்பதும், சுந்தர பாண்டிச்சரம் என்னும் சிவாலயம் அங்கு அமைந்திருந்த தென்பதும் கல்வெட்டால் அறியப்படுவனவாகும். இத்தகைய மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின் சிறப்பினால் மாறனேரி யாயிற்றென்று கொள்ளலாம்.

குலசேகரன்

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அரசு புரிந்த மன்னன் குலசேகர பாண்டியன். அவன் ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில சிற்றுார்களைச் சேர்த்து, இராஜ கம்பீர சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரால் ஓர் ஊரை உண்டாக்கினான் என்று திருப்பூவணத்துச் செப்பேடு கூறுகின்றது. இராஜ கம்பீரன் என்பது குலசேகர பாண்டியனது விருதுப் பெயர் என்று தெரிகின்றது. இக் காலத்தில் இராமநாதபுரச் சிவகங்கை வட்டத்திலுள்ள இராஜ கம்பீரமே அவ்வூராகும்.

ஸ்ரீவல்லபன்

தென்பாண்டி நாட்டுக்குப் பெருந்தொண்டு செய்த பாண்டியன் ஸ்ரீவல்லபன் என்று கர்ண பரம்பரைக் கதை கூறுகின்றது.தாமிரவருணியாற்றங் கரையில் உள்ள மணப்படை வீடு அம் மன்னனுக்குரிய படை வீடுகளில் ஒன்றாக விளங்கிற்றென்று தெரிகின்றது. அப்படை வீடு ஸ்ரீவல்லபன் மங்கலம் என்ற ஊரின் ஓர் அங்கமாக அமைந்திருந்த தென்று. சாசனம் கூறும்.அவ்வூரின் அருகே கொட்டாரம் என்னும் பெயருடைய சிற்றூர் காணப்படுகின்றது. கொட்டாரம் என்பது அரண்மனையைக் குறிக்கும். இவ்வூர்களுக்கு எதிர்க்கரையில் செப்பறை என்ற சிற்றூர் அமைந்துள்ளது. செப்பறை என்னும் சொல் செம்பினால் ஆகிய அறை என்று பொருள்படும். செப்புத் தகடுகள் பொதிந்து கோட்டையின் மதில்களை வலுப்படுத்தும் முறை முன்னாளில் கையாளப்பட்டதாகத் தெரிகின்றது.36 எனவே,செப்பறை என்பது ஒரு சிறந்த கோட்டையாக இருந்திருத்தல் கூடும். இடிந்த மதிற் சுவர்களும், உயர்ந்த மேடுகளும் இன்றும் அங்கே காணப்படுகின்றன. அதற்கு அண்மையில் இராஜவல்லிபுரம் என்னும் பெயருடைய சிற்றூர் ஒன்று அமைந்திருக்கின்றது. சாசனத்தில் இராஜவல்லவபுரம் என்று அவ்வூர் வழங்கும். இவைகளில் எல்லாம் ஸ்ரீவல்லபன் என்னும் பாண்டியனது கைவண்ணம் விளங்கக் காணலாம். 37


பாரத நாட்டில் இந்துக்கள் போற்றும் புண்ணியத் தலங்களுள் தலைமை சான்றது காசியாகும். இத்தகைய காசியைத் திசை நோக்கித் தொழுத பழந்தமிழர் தமது நாட்டில் அப்பதியின் பெயரைச் சில ஊர்களுக்கு பராக்கிரம
பாண்டியன்
அமைத்துள்ளார்கள். சிவகாசி, தென்காசி முதலிய ஊர்கள் வடகாசியை நினைவூட்டுவனவாகும்.தென்பாண்டி நாட்டில் தென்காசியைச் சிறக்கச் செய்தவன் பதினைந்தாம் நூற்றாண்டில் அரசு செலுத்திய பராக்கிரம பாண்டியன். சிவநேயச் செல்வனாகிய அம்மன்னன் கங்கைக் கரையில் உள்ள காசி விசுவநாதரின் கோலத்தைச் சித்திரா நதிக்கரையிற் கண்டு வணங்க ஆசைப்பட்டு, அங்கு விசுவநாதர் கோயிலைக் கட்டினான். திருப்பணி முற்றுப் பெறுவதற்குப் பதினேழு ஆண்டுகள் ஆயின என்று சாசனம் கூறுகின்றது. தென் காசியில் கோயில் கொண்ட விசுவநாதர் பெயரால் அம்மன்னன் பெரியதோர் ஏரியும் வெட்டுவித்தான்.விசுவநாதப் பேரேரி என்று பெயர் பெற்ற அவ்வேரி, விசுவநாதப்பேரி என இன்றும் வழங்கக் காணலாம். இன்னும் விந்தனுர் முதலாய ஐந்து ஊர்களில் அவ்வரசன் அகரங்கள் அமைத்து அந்தணரைப் பேணிய செய்தி கல்வெட்டுகளால் அறியப்படும். அவ் வகரங்கள் ஒன்று மேலகரம் என்னும் பெயரோடு இன்றும் தென்காசிக்கு அருகே நின்று நிலவுகின்றது. சிவபக்திச் செல்வமும், செந்தமிழ்ப் புலமையும் வாய்ந்த அம் மன்னன் தென்காசித் திருப்பணியைக் குறித்துப் பரிவுடன் பாடிய பாட்டு அன்பர் உள்ளத்தை உருக்குதாகும்.

கிருஷ்ணப்ப நாயக்கன்

பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டி நாடு நாயக்கரது ஆட்சியில் அமைவதாயிற்று. விஜயநகரப் பேரரசர்களின் சார்பாக, கர்த்தாக்கள் என்னும் பெயரோடு நாயக்கர், மதுரையில் ஆட்சி புரிவாராயினர். அவர்களுள் ஒருவன் கிருஷ்ணப்ப நாயக்கன்.பாளையங் கோட்டையின் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் அவன் பெயரைத் தாங்கி நிற்கின்றது. அங்குள்ள திருமால் கோவிலில் அமைந்துள்ள சிற்பத்தின் சீமை இன்றும் கலைவாணர்களால் வியந்து பாராட்டப்படுவதாகும்.

திருமலை நாயக்கன்

நாயக்கர் மரபைச் சேர்ந்த திருமலை நாயக்கன் பெயரைத் தென்னாடு நன்கு அறியும். மதுரை மாநகரை அலங்கரிக்கின்ற கட்டடங்களில் மிகச் சிறந்தது திருமலை நாயக்கன் மாளிகையேயாகும். அவ்வரசன் ஸ்ரீவில்லி புத்தூரிலும் ஒரு சிறந்த அரண்மனை அமைத்தான். அந்த நாயக்கன் பெயரால் அமைந்த ஊர்கள் திருச்சி நாட்டிலுள்ள திருமலை சமுத்திரமும், நெல்லை நாட்டிலுள்ள திருமலை நாயக்கன் படுகையும் ஆகும்.

அரியநாத முதலியார்

நாயக்கர்கள் மதுரையில் அரசு புரிந்தபோது அவர்க்குப் பெருந்துணை புரிந்தவர் அரியநாத முதலியார் ஆவர். குழப்பம் நிறைந்திருந்த பாண்டி நாட்டில் நீர்மையும் ஒழுங்கும் நிலைபெறச் செய்தவர் அவரே. அவர் நெல்லை நாட்டில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிப் பயிர்த் தொழிலைப் பண்புற வளர்த்தனர்.பொருநை யாற்றிலுள்ள நான்காம் அணைக்கட்டு இன்றும் அரியநாத முதலியார் அணை என்றே அழைக்கப் படுகின்றது.திருநெல்வேலி நகருக்குத் தென் மேற்கே பத்து மைல் தூரத்திலுள்ள அரிய நாயகபுரம் என்னும் ஊரின் பெயரிலும் அவர் பெருமை விளங்கக் காணலாம். பொருநை யாற்றின் வடகரையிற் பொருந்தியுள்ள அவ்வூர் வளங்கள் பலவும் நிறைந்த சிற்றுாராக விளங்குகின்றது. நாயக்கர் ஆட்சியில் அவர் பெற்ற தளவாய் என்ற பட்டம் இன்றும் நெல்லை நாட்டிலுள்ள தளவாய் முதலியார் குடும்பத்தில் நிலவுகின்றது.

வீரராகவ முதலியார்

திருநெல்வேலி நகரத்தில் ஆற்றங்கரையில் அமைந் துள்ளது வீர ராகவபுரம். அது வீரராகவ முதலியார் பெயரால் அமைந்த ஊராகும். கிருஷ்ணப்ப நாயக்கர் மதுரையில் ஆட்சி புரிந்த போது வீரராகவர் அவருடைய பிரதிநிதியாகத் தென்னாட்டில் விளங்கினார் என்பது சாசனத்தால் அறியப்படும்.

திருவேங்கட நாதன்

பதினேழாம் நூற்றாண்டில் பிற்பகுதியில் மாதைத் திரு வேங்கடநாதன் என்பவர் நாயக்கரது பிரதிநிதியாக நெல்லை நாட்டின் நிர்வாகத்தை நடத்தி வந்தார். அவர் கலைவாணரைப் பெரிதும் ஆதரித்தவர். இலக்கண விளக்கம் என்னும் நூலின் ஆசிரியர் திருவேங்கட நாதன் கொடைத் திறத்தினைப் நாவாரப் புகழந்துளளார்.குடிகளின் நன்மையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேணிய அந் நல்லார் பெயர் திருநெல்வேலிக்குத் தென் மேற்கிலுள்ள திருவேங்கட நாதபுரம் என்னும் ஊரால் விளங்குகின்றது.

நாயக்கர்

விஜயநகரப் பெரு மன்னரது ஆட்சி நிலைகுலைந்த பின்பு ஆந்திர நாட்டில் அச்சமும் குழப்பமும் ஏற்பட்டன. ஆந்திரத் தலைவர் பலர் தம் பரிவாரங்களோடு தமிழ் நாட்டிலே குடியேறி வாழத் தலைப்பட்டார்கள். இங்ஙனம் தென்னாட்டிற் போந்த வடுகத் தலைவர்களில் ஒருவர் எட்டப்ப நாயக்கர். அவர் பெயரால் அமைந்த ஊர் எட்டயபுரம் ஆகும். இவ்வண்ணமே கொடைக்கானல் மலைக்குப் போகும் வழியிலுள்ள அம்மை நாயக்கனூர் நாயக்கன் பெயரைக் கொண்டுள்ளது. இன்னும் போடி நாயக்கனூர் முதலிய ஊர்களின் பெயரிலும் தென்னாட்டில் வந்து சேர்ந்த வடுகத் தலைவரின் பெயர் விளங்கக் காணலாம்.

பல்லவர் குடி மன்னர்

பல்லவர் ஆட்சி

பல்லவர் குடியைச் சேர்ந்த அரசர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டையாளத் தலைப்பட்டார்கள்.ஏறக்குறைய அறு நூறாண்டுகள் அன்னார் அரசு புரிந்தனர் பல்லவர் என்னலாம். சுந்தரர் தேவாரத்திலும், ஆட்சி திருமங்கை யாழ்வார் திருப்பாசுரங்களிலும் பல்லவர் பீடும் பெயரும் குறிக்கப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அரசாட்சி நிலைகுலைந்து அழிந்தது. ஆயினும் அக்குல மன்னர் பெயர் சில ஊர்ப் பெயர்களில் இன்றும் விளங்கு கின்றது.

சிம்ம விஷ்ணு

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு புரிந்த பல்லவன், சிம்ம விஷ்ணு வர்மன் என்னும் பெயரினன். அவன் சோழ மன்னனை வென்று, காவிரி நாட்டிலும் ஆணை செலுத்தினான் என்று சாசனம் அறிவிக்கின்றது. அவன் காலத்தில் காவிரிக்கரையில் கும்பகோண வட்டத்திலுள்ள கஞ்சனூர், சிம்ம விஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்னும் மறுபெயர் பெற்றது.வடஆர்க்காட்டிலுள்ள சீயமங்கலமும் அவன் பெயரால் அமைந்த தென்பர்.

மகேந்திரன்

ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன் மகேந்திரப் பல்லவன். அவன் பெயர் வடஆர்க்காட்டிலுள்ள மகேந்திரவாடி என்னும் ஊரால் விளங்குவதாகும். அவ்வூரில் திருமாலுக்குக் கோயில் கட்டியும், குளம் வெட்டியும் பணி செய்தான் மகேந்திரன். அவ்வூர் முன்னாளில் பெரியதொரு நகரமாக இருந்திருத்தல் வேண்டும் என்று தோன்றுகிறது. அந் நாளில் மகேந்திர வாடியின் கீழ வீதியாயிருந்த இடம், இப்பொழுது தனியூராகக் கீழவீதி என்னும் பெயரோடு அதற்குக் கிழக்கே மூன்று மைல் தூரத்திற் காணப் படுகின்றது. குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில் ஆக்கும் வழக்கம் தமிழ் நாட்டில் மகேந்திரன் காலத்தில் எழுந்தது என்பர். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்றாகிய அண்ணல் வாயில் என்னும் சித்தன்ன வாசற் குகைக் கோவிலில் அவன் காலத்துச் சிற்பமும் ஓவியமும் சிறந்து விளங்குகின்றது.

இன்னும், பல்லவ மன்னர் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களில் ஒன்று சென்னைக்கு அண்மையிலுள்ள பல்லா வரம் ஆகும். பல்லவபுரமே பல்லாவரம் என மருவியுள்ளது. அங்குள்ள குகைக் கோயிலில் மகேந்திரவர்மன் விருதுப் பெயர்கள் பொறிக்கப் பட்டிருத்தலால் அஃது அப் பல்லவன் காலத்தே எழுந்த ஊர் என்று கருதலாம்.

நரசிங்கன்

மகேந்திர வர்மனுக்குப் பின்னர் அரசாண்டவன் நரசிங்க வர்மன். வாதாபி கொண்ட நரசிங்கன் என்று சாசனங்களில் புகழப்படுபவன் அவனே. திருத்தொண்டர் புராணத்திற் குறிக்கப்படுகின்ற சிறுத்தொண்டரைத் தலைவராகக் கொண்ட பெருமை வாய்ந்தவனும் அவனே என்பது நன்கு விளங்குகின்றது. பரஞ்சோதி என்னும் இயற்பெயருடைய சிறுத்தொண்டர்.

“மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரம் துகளாகச்

செய்தார் என்னும் சேக்கிழார் பாட்டால் அவர் பெற்ற வெற்றியின் சிறப்பு விளங்குவதாகும்.

மாமல்லன் என்னும் மறு பெயருடைய நரசிங்கவர்மன் தொண்டை நாட்டின் பண்டைத் துறைமுகமாகிய கடல் மல்லையைத் திருத்தினான்; கடற்கரையில் கற்கோயில்களை ஆக்கினான். அவன் காலத்தில் மல்லை நகரம் மாமல்லபுரம் என்று பெயர் பெற்றது போலும்.அது பிற்காலத்தில் மகாபலிபுரமென மருவிற்று.

பரமேஸ்வரன்

ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசு புரிந்த பரமேஸ்வரன் ஒரு சிறந்த பல்லவன். இவனே விக்ரமாதித்தன் என்னும் சாளுக்கிய வேந்தனைத் திருச்சி நாட்டுப் பல்லவபுரத்திற்கருகேயுள்ள பெருவள நல்லுர்ப் போரில் வென்று புகழ் பெற்ற வீரன். இவன் சைவ சமய சீலன் என்பதைப் பரமேஸ்வரன் என்ற பெயரே உணர்த்துவதாகும். காஞ்சிபுரத்திற்கு அண்மையிலுள்ள பரமேஸ்வர மங்கலம் என்னும் ஊர் இவன் பெயரால் விளங்குகின்றது. இம்மன்னன் கூரம் என்ற ஊரில் ஒரு சிவாலயம் எடுத்து, அதற்குப் பரமேஸ்வர மங்கலத்தை நன்கொடையாகக் கொடுத்த செய்தி கூரத்துச் செப்பேடுகளிற் கூறப்பட்டுள்ளது.

கும்பகோணத்துக்கு அண்மையில் நந்திபுரம் என்னும் பெயருடைய நகரம் ஒன்று பல்லவர் காலத்திற் சிறந்திருந்தது. திருமங்கை ஆழ்வார் அந் நகரில் அமைந்த விண்ணகரத்தைப் பாடிள்ளார்.

நந்திவர்மன்

'நந்தி பணி செய்த நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணு மனமே' என்பது அவர் திருவாக்கு. அவ்வூர் இன்று நாதன் கோயில் என வழங்கும். எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசுரிமை பெற்ற நந்தி வர்மனின் பெயர் தாங்கி நிற்பது அந் நகரம் என்பர்.

உதய சந்திரன்

அந்நந்திபுர நகரத்தில் வைகிய நந்தி வர்மனைத் தாக்கினர் பகைவேந்தர். அப்போது பல்லவ சேனாதிபதியாகிய உதய சந்திரன் உருத்தெழுந்து, மாற்றார் சேனையைச் சின்ன பின்னமாக்கித் தன் மன்னனை விடுவித்தான் என்று உதயேந்திரச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. இவ்வாறு, காலத்தில் உதவி செய்து, காவலன் நன்றிக் குரியனாய் உதயசந்திரன் மாற்றாரைப் பின்னும் பல போர்க் களங்களில் வென்று பல்லவர் பெருமையைப் பாதுகாத்தான்.அவ்வீரன்,வேகவதி யாற்றங்கரையிலுள்ள வில்லிவலம் என்னும் ஊரிற் பிறந்தவன். அவன் பெயரால் விளங்குவது உதயேந்திர மங்கலம் என்னும் ஊர். இப்பொழுது வட ஆர்க்காட்டுக் குடியாத்த வட்டத்திலுள்ள உதயேந்திரமே அவ்வூராகும்.

வயிர மேகன்

தென்னாட்டில் நிலவளத்தைப் பேணி வளர்த்த பல்லவ மன்னருள் ஒருவன் வயிரமேக வர்மன். பயிர்த் தொழில் சிறக்கும் வண்ணம் அவன் தொட்ட குளமும்,வெட்டிய வாய்க்காலும் சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தந்திவர்ம பல்லவனே .வயிரமேகன் என்னும் விருதுப் பெயர் தாங்கி விளங்கினான் என்று சரித்திர நூலோர் கருதுவர்.தென்னார்க்காட்டுத் திண்டிவன வயிர மேகன் வட்டத்திலுள்ள வயிரமேகபுரம் என்னும் ஊர் அவன் பெயரை விளக்குகின்றது.அவ்வூர் வயிர மேக நகரம் என்று ஒரு சாசனத்திற் குறிக்கப் படுதலால் அதன் பண்டைச் சிறப்பினை ஒருவாறு அறியலாகும். இடைக் காலத்தில் ஜனநாதபுரம் என்ற பெயரும் அதற்கு வழங்கலாயிற்று. இக்காலத்தில் வயிரபுரம் என்பது அதன் பெயர்.

சோழ நாட்டு மன்னர்

விசயாலயன்

பல்லவர் ஆட்சி நிலை குலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர்.விசயாலயன் பெயர் தாங்கிய ஊர் ஒன்றும் இல்லையென்றாலும் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழிச்சரம் என்னும் கற்கோயில் அவன் பெயரால் அமைந்ததென்பர்.

ஆதித்தன்

விசயாலயனுக்குப் பின்பு அவன் மகன் ஆதித்தன் அரசுரிமை பெற்றான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லவர் பெருமைக்கு உறைவிட மாயிருந்த தொண்டை நாடு இவன் கால முதல் சோழர் ஆட்சியில் அமைவதாயிற்று. இராஜ கேசரி என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. தஞ்சை நாட்டுப் பண்டார வாடைக்கு அண்மையில் இராஜகிரி என்ற சிற்றுார் உள்ளது. காவிரியின் தென்கரையில் உள்ள அவ்வூர் முன்னாளில் இராஜகேசரி சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றிருந்தது. இராஜகேசரிப் பெயரே இராஜகிரி என மருவிற்றென்பர். இப்போது இராஜகிரி மகமதியர் வாழும் ஊராக இருப்பினும்,பழைய கோவில்களின் குறிகளும் அடையாளங்களும் அங்குக் காணப்படுகின்றன.

பராந்தகன்

தஞ்சைச் சோழர் குடியின் ஆதிக்கத்திற்கு அடிப்படை கோலியவன் பராந்தகமன்னன். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரியணையேறிய இம்மன்னன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு புரிந்தான்;பாண்டிய மன்னனை இருமுறை வென்று,மதுரையைக் கைப்பற்றினான்; மாற்றானுக்கு உதவிசெய்த இலங்கை மன்னன் மீது படையெடுத்து வெற்றி பெற்று ஈழ நாட்டையும் கைக்கொண்டான்.

இவ்வரசனது விருதுப் பெயர்களில் ஒன்று வீர நாராயணன் என்பதாகும். ஆர்க்காட்டு நாட்டில் வீர நாராயணபுரம் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் சில உண்டு. அவை வீராணம் என வழங்கும். தென்னார்க் காட்டிலுள்ள வீராணத்தேரியும் இவன் பெருமையை விளக்குவதாகும். மதுரையை வென்று கைப்பற்றிய இம் மன்னனுக்கு மதுராந்தகன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இக் காலத்தில் செங்கற்பட்டு நாட்டில் சிறந்து விளங்கும் மதுராந்தகம் என்ற ஊர் இவனால் உண்டாக்கப்பட்ட சதுர்வேதி மங்கலம் போலும் கடப்பேரி என்னும் பழமையான ஊரின் அருகே எழுந்தது மதுராந்தகம்.

வளவன் மாதேவி

வளவன் மாதேவி என்பாள் பராந்தக சோழனுடைய தேவி. அவள் பெயரால் நிலைபெற்ற சதுர்வேதி மங்கலம் வளவன் மாதேவி என வழங்கு வதாயிற்று. தென்னார்க் காட்டு எரும்பூர் என்னும் உருமூர்க் கோயிற் சாசனத்தால் வளவன் மாதேவி என்ற ஊர் மேற்கா நாட்டைச் சேர்ந்த பிரம தேயம் என்பது விளங்கும். அவ்வூர் இப்பொழுது வளைய மாதேவி என்னும் பெயரோடு சிதம்பரம் வட்டத்தில் உள்ளது.

உத்தமசீலி

உத்தமசீலி என்பான் பராந்தகன் மைந்தருள் ஒருவனாகக் கருதப்படுகின்றான். அவன் பெயரால் அமைந்த உத்தம சீலி சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் இப்பொழுது உத்தம சேரி என வழங்குகின்றது.

கண்டராதித்தன்

பராந்தக சோழனுக்குப் பின்னே அரசு புரிந்தவன் அவன் மைந்தனாகிய கண்டராதித்தன், 'ஈசன் கழல் ஏத்தும் செல்வமே செல்வம்' என்று கருதி வாழ்ந்த இக்காவலனைச் சிவஞானகண்டராதித்தன் என்று சாசனம் சிறப்பிக்கின்றது.தில்லைச் சிற்றம் பலத்து இறைவன்மீது இம்மன்னன் பாடிய திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் சேர்த்துப் போற்றப்படுவதாகும். அவ் இசைப்பாட்டில்,

“காரர் சோலைக் கோழிவேந்தன் தன் தஞ்சையர் கோன் கலந்த
ஆரா இன்சொற் கண்டராதித்தன்”

என்று வருதலால், அரசாளும் பெருங்குலத்திற் பிறந்தும் அரனடியே தஞ்சமெனக் கருதிய சீலன் இவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சி நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள கண்டராதித்தம் என்னும் ஊர், இவன் உண்டாக்கிய சதுர்வேதி மங்கலம். இம்மன்னனது மறுமை நலங்கருதி அம்மங்கலம் நிறுவப்பட்டதாகத் தெரி கின்றது. இன்னும்,கண்டராதித்தன் பெயரால் நிலவும் ஊர் ஒன்று தென்னார்க்காட்டுத் திருக்கோவிலூர் வட்டத்தில் உண்டு. கண்டராதித்தபுரம் என்று பெயர் பெற்ற அவ்வூர் இந் நாளில் கண்டராச்சிபுரம் என்று வழங்கும். தென்னார்க்காட்டிலுள்ள கண்டமங்கலமும் கண்டராதித்த மங்கலமாய் இருத்தல் கூடும். அங்ஙனம் இம்மையிலும் மறுமையிலும் செம்மையே நாடிய இம்மன்னரின் திருவுருவம் கோனேரி ராஜபுரம் என்னும் திருநல்லத்துக் கோவிலில் இன்றும் காணப்படுகின்றது.

செம்பியன் மாதேவி

சோழர் குடியில் சீலத்தாற் சிறந்தவள் செம்பியன் மாதேவி. சிவநேசச் செல்வராகிய கண்டராதித்தரின் முதற் பெருந்தேவி என்னும் உரிமைக்குத் தக்க முறையில் அம்மாதேவி செய்த திருப்பணிகள் பல வாகும். தஞ்சை நாட்டில் செம்பியன் மாதேவி என்ற ஊர் இன்னும் அவள் பெருமைக்கு அறிகுறியாக நின்று விளங்கு கின்றது. அங்குள்ள கைலாச நாதர் கோவில் இவளாலே கட்டப்பட்டதாகும். செம்பியன் மாதேவியின் மைந்தனாகிய உத்தம சோழன் அரசு புரிந்த காலத்தில் அவன் தேவியர்கள் அக் கோயிலுக்குப் பல சிறப்புகள் செய்தார்கள். இராஜேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிவத்தை அக் கோவிலில் நிறுவி, அதன் பூசைக்கு வேண்டிய நிவந்தமும் அளித்தான்.

அரிஞ்சயன்

கண்டராதித்தன் காலம் சென்ற பின்பு, அவன் தம்பியாகிய அரிஞ்சயன் எய்திச் சில காலம் அரசாண்டான். பாண்டியனோடு நிகழ்த்திய அரிஞ்சயன் போரில் அவன் உயிர் இழந்தான் என்பர்.இவ்வாறு அகால மரணமுற்ற அரிஞ்சயன் உயிர் சாந்தி பெறுமாறு பள்ளிப் படையாக இராஜராஜன் அமைத்த ஆலயம் அரிஞ்சயேச்சுரம் என்று பெயர் பெற்றது.

சுந்தர சோழன்

அரிஞ்சயனுக்குப் பின் அரசுரிமை ஏற்றான் அவன் மைந்தனாகிய சுந்தர சோழன். இவன் செங்கோல் மன்னன் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறுகின்றது. தென்னார்க்காட்டிலுள்ள செளந்திரிய சோழபுரம் என்னும் ஊரும், சங்கற்பட்டைச் சேர்ந்த சுந்தர சோழ வரமும் இவன் பெயர் கொண்டு விளங்குகின்றன. இம் மன்னனைப் பொன்மாளிகைத் துஞ்சிய தேவன் எனக் கல்வெட்டுக் கூறும். இவ்வாறு துஞ்சிய நிலையில் வானவன் மாதேவி என்னும் இவன் மனையாள் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். தஞ்சையில் எழுந்த இராசராசேச்சுரம் என்னும் பெருங்கோயிலுள் இவ்விருவர் படி மங்களையும் நிறுவினார் குந்தவைப் பிராட்டியார்.

உத்தம சோழன்

கண்டராதித்தருடைய திருமகனாய்த் தோன்றிய உத்தம சோழன் பதினைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவன் பெயரால் எழுந்த ஊர்கள் சோழ நாட்டிலும்,தொண்டை நாட்டிலும் கொங்கு நாட்டிலும் உண்டு.தஞ்சை நாட்டில் நன்னில வட்டத்தில் உள்ள உத்தம உத்தம சோழபுரம் என்னும் ஊரும், சோழன் தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்திற் காணப்படும் உத்தம சோழ மங்கலமும் செங்கற்பட்டு மதுராந்தக வட்டத்திலுள்ள உத்தம நல்லூரும்,சேலம் நாட்டிலுள்ள உத்தம சோழபுரமும் இவன் ஆண்ட நாட்டின் பரப்பை ஒருவாறு காட்டுகின்றன.மதுரையை ஆண்ட வீர பாண்டியனோடு இவன் போர் புரிந்து அவன் தலை கொண்டான் என்று சாசனம் அறிவிக்கின்றது.அவ் வெற்றியின் அடையாளமாக இவனும் மதுராந்தகன் என்னும் விருதுப் பெயர் கொண்டான் என்பர்.

ராஜராஜன்

உறந்தையைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னருள் சிறந்தவன் திருமாவளவன் என்று தமிழ் இலக்கியம் கூறுவது போலவே,தஞ்சையைத் தலைநகராகக் கொண்ட சோழர் குலத்தைத் தலையெடுக்கச் செய்தவன் இராஜராஜன் என்று சாசனம் அறிவிக்கின்றது. பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் அரசாளத் தொடங்கிய இம் மன்னன் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து தமிழ் நாட்டின் பெருமையைப் படிப்படியாக உயர்த்தினான்.

விருதுப் பெயர்கள்

இம் மன்னனது இயற்பெயர் அருண்மொழித் தேவன் என்பதாகும். இவன் சேர மன்னனையும், பாண்டியனையும் வென்று அடக்கி, மூன்று தமிழ்நாட்டையும் ஒரு குடைக்கீழ் அமைத்தபோது, மும்முடிச்சோழன் என்னும் பெயருக்கு விருதுப் பெயர்கள் உரியனாயினான்; பின்னர்த் தென் பாலுள்ள இலங்கை என்னும் ஈழ நாட்டையும், வடபாலுள்ள வேங்கை நாடு, கங்கபாடி முதலிய நாடுகளையும், குடபாலுள்ள கொல்லம், குடகம் ஆகிய நாடுகளையும் வென்று, மன்னர் மன்னனாக விளங்கிய போது இராஜராஜன் என்ற விருதுப் பெயர் பூண்டான். அப்பால் கப்பற்படை கொண்டு பன்னிராயிரம் தீவங்களைக் கைப்பற்றி நிலத்திலும் நீரிலும் வெற்றி பெற்று வீறுற்ற நிலையில் ஜயங் கொண்டான் என்னும் பெயரைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டான். இவன் வீரத்தாற் பெற்ற விருதுகளோடு சீலத்தாற் பெற்ற பெயர்களும் சேர்ந்து அழகுக்கு அழகு செய்தன. “சிவனடி பணியும் செல்வமே செல்வம்” எனக்கொண்ட இராஜராஜன் சிவபாத சேகரன் என்னும் செம்மை சான்ற பெயர் தாங்கினான். ஈசனார்க்குக் கோயில் எடுத்துப் பணி செய்த பான்மையில் கோச்செங்கட் சோழன் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவன் இராஜ ராஜன்.

தில்லைச் சிற்ற்ம்பலத்தின் ஒருசார் அடைபட்டு மறைந்திருந்த தேவாரத் திருப்பாசுரங்களைத் திருவருளாற் கண்டு வெளியிட்டு இராஜராஜன் சைவத்திற்குப் பெரு நலம் புரிந்தான். உலகம் ஈடேறும் வண்ணம் எழுந்த தேவாரத்தை எடுத்து வெளியிட்ட வேந்தனை உய்யக் கொண்டான் என்று உயர்ந்தோர் பாராட்டினர்.

இராஜராஜன் விருதுப் பெயர்களை அவன் ஆட்சியில் அமைந்த மண்டலங்கள் தாங்கி நின்றன. ஈழ மண்டலம் (இலங்கை) மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயர் பெற்றது. தொண்டை மண்டலம் ஜயங்கொண்ட சோழ மண்டல மாயிற்று. பாண்டி மண்டலம் இராஜராஜப் பாண்டி மண்டலம் எனப்பட்டது.

அருண்மொழி

இனி, இவ்வரசன் பெயர் கொண்டு எழுந்த ஊர்களை முறையாகக் காண்போம். திருவாலங் காட்டுச் செப்பேடு களில் இராஜராஜன், அருண்மொழி வர்மன் என்று குறிக்கப் படுகின்றான். அருண்மொழி என்பது அருமொழி என மருவி வழங்குவதாயிற்று. பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த கான நாட்டில் அருமொழித் தேவபுரம் என்னும் பெயருடைய ஊர் இருந்ததாகச் சாசனம் அறிவிக்கின்றது. இன்னும், தஞ்சை நாட்டிலும், தென்னார்க்காட்டிலும் அருமொழித் தேவன் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுண்டு.

மும்முடிச் சோழன்

தஞ்சை நாட்டுப் பட்டுக்கோட்டை வட்டத்தில் சோழபுரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அதன் முழுப் பெயர் மும்முடிச் சோழபுரம் என்பதாகும். நாஞ்சில் நாட்டில் நாகர் கோவிலுக் கருகேயுள்ள கோட்டாறு, மும்முடிச் சோழ நல்லூர் என முன்னாளில் வழங்கிற்று. தொண்டை நாட்டிலுள்ள திருக்காளத்தி, மும்முடிச் சோழபுரம் என்னும் மறுபெயர் பெற்றது. இராஜராஜன் கால முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை அவ்வூர் மும்முடிச் சோழபுரம் என வழங்கிற்று. இன்னும், மும்முடிச் சோழமங்கலம் (திருச்சி), மும்முடிக் குப்பம் (செங்கற்பட்டு), மும்முடிச் சோழகன் (தென்னார்க்காடு) முதலிய ஊர்ப் பெயர்களில் இராஜராஜனது விருதுப் பெயர் விளங்கக் காணலாம்.

இராஜராஜன்

தென்னார்க்காட்டுத் திண்டிவன வட்டத்தில் உள்ள தாதாபுரம் என்னும் ஊர் இராஜராஜபுரமேயாகும்.79 நெல்லை நாட்டிலுள்ள இராதாபுரமும் இராஜராஜபுரமே என்று சாசனம் கூறுகின்றது.80 . ஈழநாட்டுப் பாலாவி க்கரையில் இராஜராஜன் தீச்சரம் பாடல் பெற்ற திருக் கோவிலைத் தன்னகத்தேயுடைய மாதோட்டம் இராஜராஜபுர மென்னும் பெயர் பெற்றது.81

ஜயங்கொண்டான்

ஜயங்கொண்டான் என்ற விருதுப் பெயரைத் தாங்கி நின்ற நகரங்களுள் தலை சிறந்தது ஜயங்கொண்ட சோழபுரமாகும். அஃது இராஜராஜன் காலமுதல் சில நூற்றாண்டுகள் சோழ ராஜ்யத்தின் சிறந்த நகரமாக விளங் ஜயங்கொண்டான் , இப்பொழுது திருச்சி நாட்டு உடையார் பாளைய வட்டத்தில் அஃது ஒரு சிற்றுாராக இருக்கிறது.

ஜயங்கொண்ட பட்டணம் என்னும் ஊர் சிதம்பர வட்டத்தில் உள்ளது. ஜயங்கொண்டான் என்ற பெயருடைய ஊர்கள் பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் சில உண்டு. திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலை வட்டத்திலுள்ள மகாதானபுரத்தின் உட்கிடையாகிய சிற்றுார் பழைய சங்கடம் என்னும் விந்தையான பெயரைக் கொண்டுள்ளது. பழைய ஜயங்கொண்ட சோழபுரம் என்பதே நாளடைவில் பழைய சங்கடமாய் முடிந்தது என்பர்.

ஜனநாத சோழன்

இராஜராஜனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய ஜனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.

“குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு”

என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி ஜனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராஜராஜன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் ஜனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. ஜனநாதநல்லூர் என்னும் மறுபெயர்,சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள ஆருேக்கும்,தென் ஆர்க்காட்டைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் வயிரமேக புரத்துக்கும், செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த வாயலூர் என்னும் திருப்பில வாயிலுக்கும் வழங்குவதாயிற்று. பட்டுக்கோட்டையிலுள்ள சோழபுரம் என்னும் மும்முடிச் சோழபுரத்தின் வழியாகச் சென்ற சாலை, ஜனநாதன் பாதை என்று பெயர் பெற்றது. மதுரையின் மருங்கிலுள்ள தேனூர், ஜனநாத சதுர்வேதி மங்கலமாயிற்று. மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரம் ஜனநாதபுரம் என்ற மறு பெயர் பெற்றது. சிவபாத சேகரன்

திருச்சி நாட்டைச் சேர்ந்த குழித்தலைக்குத் தெற்கே ஐந்து மைல் அளவில் சிவாயம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. சிவாயம் என்பது - சிவபாத சேகரபுரம் என்ற பெயரின் சிவபாத சேகரன் சிதைவாகும். அங்குள்ள கோயில் திருவாலிச்சுரம் என்ற பெயருடைய தென்பது சாசனத்தால் விளங்கும்.

உய்யக் கொண்டான்

உய்யக்கொண்டான் என்பது இராஜராஜரின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. இப்பெயர் தமிழ் நாட்டு மலைகளோடும், கால்களோடும் மருவி நிற்கக் காணலாம். சோழ நாட்டில் பாடல் பெற்ற உய்யக் கொண்டான் பதிகளுள் ஒன்றாகிய கற்குடி என்பது உய்யக் கொண்டான் திருமலை என்று பெயர் பெற்றது. இன்னும் திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் காவிரியாற்றினின்றும் கிளைத்துச் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்கால் இம் மன்னன் பெயரையே தாங்கி நிலவுகின்றது.

சோழபுரம் என்னும் பெயருடைய ஊர்களில் ஒன்று வடஆர்க்காட்டு வேலூருக்குத் தெற்கே எட்டு மைல் தூரத்தில் உள்ளது. அதன் பழம் பெயர் காட்டுத்தும்பூர் என்பதாகும். இராஜராஜ சோழன் அவ்வூரில் இராஜ ராஜேச்சரம் என்னும் சிவாலயம் கட்டியதோடு,ஊரின் பெயரையும் உய்யக் கொண்டான் சோழபுரம் என மாற்றி விட்டதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஆலயம் பழுதுற்றிருக்கின்றது. ஊர்ப் பெயரும் சோழபுரம் எனக் குறுகிவிட்டது. இராமநாதபுரத்துத் திருப்பத்தூர் வட்டத்தில் உய்யக் கொண்டான் என்ற ஊர் உள்ளது. தென் ஆர்க்காட்டு விருத்தாசல வட்டத்தில் உய்யக் கொண்ட ராவி என்பது ஓர் ஊரின் பெயர்.

உலகமாதேவி

இராஜராஜன் தேவியருள் சிறப்புற்று விளங்கியவள் உலகமாதேவி. அவள் பெயரால் அமைந்த நகரம் தென் ஆர்க்காட்டிலுள்ள உலகமாதேவிபுரம், அவ்வூர்ப் பெயர் ஒலகபுரம் எனவும், ஒலகாபுரம் உலகமாதேவி எனவும் மருவி வழங்குகின்றது. செங்கற்பட்டு நாட்டிலுள்ள மணிமங்கலம் என்னும் ஊர் உலகமாதேவி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்கள் கூறும்.’ திருவையாற்றுக் கோயிலில் உள்ள உத்தர கைலாசம் என்னும் உலோகா மாதேவீச்சரம் இம்மாதேவியாற் கட்டப்பட்டதாகும்.

திரிபுவன மாதேவி

திரிபுவன மாதேவி என்பது மற்றொரு தேவியின் பெயர். இவளே இராஜேந்திரனைப் பெற்ற தாய். புதுவை நாட்டில் உள்ள திரிபுவனி என்னும் ஊர் இவள் பெயர் தாங்கி நிற்பதாகும். அவ்வூரின் பெயர் திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதன் சிதைவாகத் தெரிகிறது.

சோழ மாதேவி

இன்னொரு தேவியாகிய சோழ மாதேவியின் பெயர் தாங்கி நிலவும் ஊர்கள் பலவாகும். கோவை நாட்டு உடுமலைப்பேட்டை வட்டத்தில் சோழமாதேவி என்னும் ஊர் ஒன்று உண்டு. அது முற்காலத்தில் சோழமாதேவி நல்லூர் என வழங்கிற் றென்பது சாசனங்களால் அறியப்படும். அங்குள்ள குலசேகர ஈச்சுரம் என்னும் சிவாலயத்திற்கும், அதன் அருகே சோழமாதேவி அமைந்த திருமடத்திற்கும் சோழ மன்னர் அளித்த நன்கொடை கல்வெட்டுகளால் விளங்குகின்றது.

திருச்சி நாட்டில் உத்தம சேரிக்கு அண்மையில் சோழமாதேவியின் பெயரால் அமைந்த சதுர்வேதி மங்கலம் ஒன்றுள்ளது.அது முன்னாளில் விளா நாட்டைச் சேர்ந்த பிரமதேயமாக விளங்கிற்றென்று சாசனம் கூறும்.இப்பொழுது அவ்வூர் சோழமாதேவி என்றே வழங்குகின்றது.

இராஜேந்திர சோழன்

இராஜராஜனுக்குப் பின்பு அரசுரிமை பெற்றான் அவன் மைந்தனாகிய இராஜேந்திரன், தஞ்சைச் சோழர் என்று சொல்லப்படும் இடைக்காலத்துப் பெருஞ் சோழ மன்னர் பெருமையெல்லாம் தன் பெருமையாக்கிக் கொண்டு தலைசிறந்து விளங்கியவன் இவனே. இவன் காலத்தில் சோழர் பேரரசு உச்சநிலை அடைந்திருந்தது. இவன் புகழ், பாரத நாட்டின் எல்லை கடந்து, சிங்களம், கடாரம், மாநக்கவாரம் முதலிய பன்னாடுகளிலும் பரவி நின்றது.

விருதுப்பெயர்கள்

இம்மன்னன் தான் பெற்ற வெற்றியின் அறிகுறி யாகச் சில பட்டப் பெயர்களை மேற் கொண்டான்.அவற்றுள் மிகச் சிறந்தவையான முடி கொண்டான். கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்னும் விருதுப் பெயர் மூன்றும் ஊர்ப் பெயர்களிலே விளங்குகின்றன.

முடிகொண்ட சோழன்

சோழர் ஆட்சியில் அமைந்த கங்கபாடி என்னும் நாடு இவ்வரசன் காலத்தில் முடிகொண்ட சோழ மண்டலம் என்று பெயர் பெற்றது.பழம் பெருமை வாய்ந்ததும், பாடல் பெற்றதுமாகிய பழயாறை என்ற நகரம் முடிகொண்ட சோழபுரம் என வழங்க லாயிற்று.199 இந்நகரம் காவிரியினின்றும் பிரிந்து செல்லும் முடிகொண்டான் என்னும் கிளையாற்றின் கரையில் அமைந்துள்ளது. நெல்லை நாட்டின் வழியாகச் செல்லும் பொருநை யாறு முடிகொண்ட சோழப் பேராறு என்று அக்காலத்துச் சாசனங்களில் குறிக்கப்பட்டது.194

இன்னும், சிதம்பர வட்டத்திலுள்ள முடிகண்ட நல்லூரும், மாயவர வட்டத்திலுள்ள முடிகொண்ட நல்லூரும், பாண்டி நாட்டுச் சிவகங்கை வட்டத்திலுள்ள முடிகுண்டம் என்னும் ஊரும் இம் மன்னனது விருதுப் பெயரைப்பெற்று விளங்கு வனவாகும்.கோவை நாட்டில் கொள்ளக்கால் வட்டத்தில் முடிகுண்டம் என்ற ஊரொன்று உண்டு. சாசனங்களில் முடிகொண்ட சோழபுரம் என்று குறிக்கப்படும் ஊர்ப் பெயரே இப்போது முடிகுண்டமெனக் குறுகியுள்ளது.முடிகொண்ட சோழிச்சுரம் என்னும் சிவாலயம் அவ்வூரிற் காணப்படுகின்றது. அஃது இராஜேந்திர சோழன் காலத்தில் எழுந்த திருக்கோயில் என்று கொள்ளலாகும். அவ்வூரில் கோயில் கொண்ட தேசிப் பெருமாள் என்னும் திருமாலுக்குக் காவிரியாற்றின் வட கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும், தென் கரையிலுள்ள பதினெட்டு ஊர் வணிகரும் அளித்த நிவந்தங்கள் சாசனத்தால் அறியப்படுகின்றன.இன்னும் அவ்வூரில் நகரஜினாலயம் என்று பெயர் பெற்ற சமணக் கோயிலும் இருந்தது. சந்திர பிரப தீர்த்தங்கரர் அவ்வாலயத்தில் எழுந்தருளி யிருந்ததாகச் சாசனம் கூறும். எனவே, முடிகொண்ட சோழபுரம் சைவம், வைணவம், சமணம் என்னும் மும்மதங்களும் சிறந்து விளங்கிய நகரமாகத் தோன்றுகின்றது.

கங்கைகொண்ட சோழன்

இராஜேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் சோழன் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.

கடாரம் கொண்டான்

கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இராஜேந்திரன், கப்பற்படை கொண்டு கழகம் என்னும் கடார நாட்டை இம்மன்னன் வென்று,இவ்விருதுப் பெயர் பூண்டான்.தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்தில் கடாரம் கொண்டான் என்பது ஓர் ஊர்ப் பெயராக வழங்குகின்றது.தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் கடாரங் கொண்ட சோழபுரம் இருந்ததென்று சாசனம் கூறும்.

குலோத்துங்க சோழன்

இராஜேந்திர சோழனுக்குப் பின் அரசாண்ட மன்னரில் பெருமை சான்றவன் முதற் குலோத்துங்க சோழன். கலிங்கத்துப் பரணியிற். பாராட்டப்படுகின்ற சிறந்த அரசன் இவனே. கருணாகரத் தொண்டைமான் என்னும் படைத்தலைவன் இச் சோழ மன்னனது ஆணையால் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து வெற்றியும் புகழும் பெற்ற செய்தியைக் கலிங்கத்துப் பரணி எடுத்துரைக்கின்றது. குலோத்துங்கன் திரிபுவனச் சக்கரவர்த்தி முதலாய பட்டங்களைத் தாங்கி நின்றான். சுங்கந்தவிர்த்த சோழன் என்னும் விருதுப் பெயரும் அவனுக்குரிய தாகும்.தஞ்சாவூரின் அருகேயுள்ள கருந்திட்டைக்குடி அம்மன்னன் காலத்தில் சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர் என வழங்கலாயிற்று.

முதற் குலோத்துங்க சோழன் தன் தேவியாகிய கம்பதேவியின் விருப்பத்திற் கிணங்கித் தொண்டை நாட்டுச் சிற்றிசம்பாக்கம் என்ற ஊருக்குக் கம்பதேவி நல்லூர் எனப் பெயரிட்டுக் காஞ்சிபுரக் கோவிலுக்கு நிவந்தமாக அளித்தான் என்னும் செய்தி ஒரு சாசனத்தால் விளங்குகின்றது.

தீன சிந்தாமணி

இன்னும், குலோத்துங்கன் தேவியாகிய தீன சிந்தாமணியின் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. தென் ஆர்க்காட்டிலுள்ள சிந்தாமணி என்னும் ஊர் முன்னாளில் தீன சிந்தாமணி நல்லூர் என வழங்கிற்று. எனவே, சிந்தாமணி என்பது அதன் குறுக்கமாகத் தோன்றுகின்றது. இன்னும், வட ஆர்க்காட்டிலுள்ள கடைக்கோட்டுப் பிரம தேசம், தீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்று சாசனங்களிற் குறிக்கப்படுதலால் அவ்வூரும் இத் தேவியின் பெயர் தாங்கி நிற்பதாகத் தெரிகின்றது.107

அநபாய சோழன்

இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு அநபாயன் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அப்பெயர் சில ஊர்களுக்கு அமைந்தது. சோழ மண்டலத்தில் ஜயங்கொண்ட சோழ வளநாட்டு திருவழுந்தூர் நாட்டில் அநபாய புரம் என்னும் பெயருடைய ஊர் ஒன்று இருந்ததாகச் சாசனம் கூறுகின்றது.108 தொண்டை நாட்டில் அரும்பாக்கம் என்னும் ஊரில் இருந்த சில நிலங்களை ஓர் எடுப்பாகச் சேர்த்து, அநபாய நல்லூர் என்று பெயரிட்டுத் திரு ஆலக் கோயிலுடையார்க்கு அளித்தான் அநபாய சோழன்.109

மூன்றாம் குலோத்துங்கன்

மூன்றாம் குலோத்துங்கன் காலத்துச் சாசனத்தால் தென் ஆர்க்காட்டு வேலூரில் குலோத்துங்க சோழ விண்ணகரம் விளங்கிற்று என்பது தெரிகின்றது. மூன்றாம் இம்மன்னன் பெயரால் உண்டாகிய குலோத்துங்கன் குலோத்துங்க சோழ நல்லூர் அத்திருக் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப் பட்டது.110

திரிபுவன வீரன்

தஞ்சை நாட்டில் கும்பகோணத்துக்கும், திருவிடை மருதுருக்கும் இடையே திரிபுவனம் என்ற ஊர் உள்ளது. மூன்றாம் குலோத்துங்கன் சிறப்புப் பெயர்களில் ஒன்று திரிபுவன வீரன் என்பதாகும். அப்பெயரால் அமைந்த ஊர் திரிபுவன வீரபுரம் என்று பெயர் பெற்றுத் திரிபுவன மாயிற்று. அவ்வூரில் சிறந்து விளங்கும் சிவாலயம் குலோத்துங்கனாற் கட்டப்பட்ட தென்று சாசனம் கூறும்.கட்டுமான முறையில் அது தஞ்சைப் பெரிய கோவிலை ஒத்திருப்பதாக அறிந்தோர் கருதுகின்றார்கள்.இன்னும் சீர்காழி வட்டத்திலுள்ள திரிபுவன வீரமங்கலம் என்ற ஊரும் இக்குலோத்துங்கன் பெயர் பெற்றதாகத் தோன்று கின்றது.

பல்லவராயன்

இரண்டாம் இராஜராஜன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவராயர் என்பவர் தலைமை அமைச்சராக விளங்கினார்.அம்மன்னன் முதுமையுற்ற போது தனக்குப்பின் பட்ட மெய்தி அரசாளுதற்குரிய மைந்தன் இல்லாமையால் மனம் வருந்தினான். அந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து அவன் மரபைச் சேர்ந்த இளம் பிள்ளையைப் பல்லவராயர் அழைத்து வந்து முடிசூட்டி அரசியற் பொறுப்பனைத்தையும் வகித்து முறையாகவும் திறமையாகவும் நடத்தினார். இவ்வாறு நாட்டுக்கும் அரசுக்கும் நலம் புரிந்த பல்லவராயர் காலஞ்சென்ற பொழுது அவர் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொருட்டு அம் மன்னனால் இறையிலியாக அளிக்கப்பட்ட ஊர் பல்லவராயன் பேட்டை என்று பெயர் பெற்றது.112

பரகேசரி

சிதம்பரத்துக்கு அண்மையில் பரகேசரி நல்லூர் என்னும் ஊர் உள்ளது. பரகேசரிப் பட்டம் உடைய மன்னன் காலத்தில் அஃது உண்டாயிருத்தல் வேண்டும் என்று தோன்றுகின்றது. அங்கு இருங்கோளன் என்னும் குறுநில மன்னன் கட்டிய கோவில் விக்கிரம சோழேச்சரம் என்று பெயர் பெற்றது.113 இப்பொழுது அவ்வூர் பரமேஸ்வர நல்லூர் என்று அழைக்கப்படுகின்றது.

வானவன் மாதேவி

இன்னும், வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் தென் ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில் வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது. செங்கற்பட்டுக் காஞ்சிபுர வட்டத்தில் வானவன் மாதேவி என்பது ஓர் ஊர்.அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது. பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும். அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.115

இன்னும் செங்கற்பட்டு நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் மானாமதி என்னும் பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள பழமையான கோவில் திருக்கரபுரம் என முற்காலத்தில் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்பொழுது ஊர்ப் பெயராக வழங்கும் மானாமதி என்பது வானவன் மாதேவியின் சிதைவாகும். இராஜேந்திர சோழன் காலத்தில், அவ்வூரில் திருக்கயிலாயநாதர் கோயில் எழுந்தது. அதன் அருகே காணப்படுகின்ற அகரம் என்னும் ஊரும் அம்மன்னனால் உண்டாக்கப்பட்டதேயாகும்.116

தஞ்சைச் சோழ மன்னர் ஆட்சியில் அவர்க்குக் கீழ்ப்பட்ட சிற்றரசர் பலர் இருந்தனர். கொங்குராயன், சேதிராயன், மழவராயன், பல்லவராயன் முதலியோர் சாமந்தர்

சாமந்தராய்ச் சோழ நாட்டின் பல பாகங்களைக் கண்காணித்து வந்ததாகத் தெரிகின்றது. தென் ஆர்க்காட்டிலுள்ள கொங்கு ராய பாளையம், கொங்குராயனுள் முதலிய ஊர்களும், நெல்லை நாட்டிலுள்ள கொங்குராய குறிச்சியும் அக்காலத்திய கொங்குராயர் பெயரை நினைவூட்டுகின்றன.

சேதிராயப் பெயர் தென் ஆர்க்காட்டிலுள்ள சேதிராய நல்லூர், சேதிராயன் குப்பம் முதலிய ஊர்களிலும், நெல்லை நாட்டிலுள்ள சேதிராய புத்தூரிலும் விளங்குகின்றது.இன்னும் தென் ஆர்க்காட்டிலுள்ள மழவராயனூர்,மழவராய நல்லூர் முதலிய ஊர்களும், இராமநாதபுரத்திலுள்ள மழவராயனேந்தல் என்னும் இடமும் மழவராயரோடு தொடர்புடையன. இனி, பல்லவராயன் பெயர் பல ஊர்களில் காணப்படு கின்றது. பல்லவராயன் பாளையம்,பல்லவராய நத்தம், பல்லவராய னேந்தல், பல்லவராயன் மடிை முதலிய ஊர்கள் நாட்டில் பல பாகங்களிற் காணப்படும்.

மராட்டிய மன்னர்

சோழ மன்னரது ஆதிக்கம் நிலைகுலைந்த பின்பு, பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை நாட்டில் மராட்டிய மன்னரது ஆட்சி நிலை பெறுவதாயிற்று. இந்திய சரித்திரத்தில் புகழ் பெற்று விளங்கும் வீர சிவாஜி மன்னனது தம்பியாகிய எக்கோசி என்பவன் தஞ்சையில் மராட்டியர் ஆட்சியை நிலை பெறுத்தினான். தஞ்சை நாட்டி லுள்ள எக்கோசி மகாராச புரம் என்னும் ஊர் அவன் பெயரால் இன்றும் நிலவுகின்றது. எக்கோசியின் மகன் சரபோசி. அவன் பெயர் தஞ்சையிலுள்ள சரபோசிராசபுரம் என்னும் ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் பட்டம் எய்திய துளசி மன்னன் பெயரும் சில ஊர்ப்பெயர்களில் அமைந்துள்ளது. துளசாபுரம், துளசேந்தி புரம், துளசேந்திரபுரம் என்ற மூன்று ஊர்கள் தஞ்சை நாட்டிலே காணப்படுகின்றன.

தஞ்சையில் மராட்டிய மன்னருக்குக் கண்போல் விளங்கிய அமைச்சர் பெயரும் ஊர்ப் பெயராக வழங்கு கின்றது. பாவாசி என்பவன் அத்தகைய அமைச்சர்களில் ஒருவன். தஞ்சை நாட்டில் பட்டுக்கோட்டை வட்டத்தி லுள்ள வாவாசிக் கோட்டை என்னும் ஊரின் பெயர் அவன் பெயரே ஆகும். மானோசி என்பவன் மற்றோர் அமைச்சன். மானோசியப்பச் சாவடி என்னும் இடம் அவன் பெயரால் நிலவுகின்றது.

விஜய நகர மன்னர்

விஜய நகர மன்னருள் பல்லாற்றானும் தலை சிறந்தவன் கிருஷ்ண தேவராயன். இம் மன்னன் பெருமையை,

“படைமயக் குற்றபோதும் படைமடம் ஒன்றி லாதான்
மடைசெறி கடகத் தோளான் மதிக்குடை மன்னர் மன்னன்.”

என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடிப் போந்தார்.117 மாற்றாரை வென்று மாபெரும் புகழ்பெற்று வாழ்ந்த கிருஷ்ண தேவன் கும்பகோணத்தில் நிகழ்ந்த மகாமக விழாவிற்குச் செல்லும் வழியில் பொன்னேரி வட்டத்தி லுள்ள அரகண்டபுரம் என்னும் ஊரிலே தங்கினான். அங்கு அரிதாசர் என்று பெயர் பெற்ற பரம வைணவர் ஒருவர் இருந்தார். அவர் கனவிலே பெருமாள் அறிவித்த வண்ணம் கிருஷ்ண தேவராயன் அவ்வூரிலே திருமால் கோயில் ஒன்று கட்டுவித்தான்.அது வேத நாராயணன் கோயிலென இன்றும் விளங்குகின்றது.அக் கோயிலுக்கு வேந்தன் அளித்த நிவந்தங்கள் கோபுரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஆரிய வேதமும், திராவிட வேதமும் ஓதுவார்க்கு ஏற்படுத்திய நன்கொடை யாகும். கோயிற் காரியங்களை எல்லாம் மன்னன் அரிதாசரிடம் ஒப்புவித்தான்; பெருமாள் அருளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்த அரகண்ட புரத்தை என்றும் நினைத்து இன்புறும் வண்ணம் நாகலாம்மாள் என்னும் தன் தாயின் பெயரை அவ்வூருக்கு இட்டான். அன்று தொட்டு அரகண்டபுரம் என்னும் பழம்பெயர் மாறி நாகலாபுரம் என்ற புதுப் பெயர் வழங்கலாயிற்று.

பொன்னேரி வட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் என்னும் ஊரின் வரலாறும் உணரத்தக்கதாகும். ஆதியில் கூவம் என்பது அதன் பெயர். குன்றுார் நாட்டுக் கூவம் என்பது சாசன வாசகம். விஜய நகர மன்னனாகிய அச்சுதராயன் அங்கு நரசிங்கப் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டுவித்தான்; அவ்வளவில் அமையாது நரச நாயக்கன் என்னும் தன் தந்தையின் பெயர் விளங்குமாறு நரச நாயகபுரம் என்று அவ்வூருக்குப் பெயரிட்டான். ஆயினும் பெருமாள் நாமத்தையே பெரிதும் பேசக் கருதிய பொது மக்கள் நரச நாயகபுரத்தை நரசிங்க புரமாக்கி விட்டனர்.

குறுநில மன்னர்

பாரி

தமிழ் நாட்டில் ஈகையாலே புகழ்பெற்ற வள்ளல்கள் பலர் இருந்தனர்.பாண்டி நாட்டிற் குறுநில மன்னனாக விளங்கிய பாரி வள்ளலின் பெருமை தமிழகம் முழுவதும் பரந்திருந்தது.கொடைத் திறத்திற்கு இவனையே ஒரு வரம்பாக எடுத்துக் காட்டினர் கவிஞர். “கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை” என்று பாடினார் சுந்தரமூர்த்தி. இங்ஙனம் ஆன்றோர் புகழும் பேறு பெற்ற பாரி வள்ளல் சைவ சீலனாக விளங்கினான்.அவ்வள்ளலுக்குரிய பறம்பு நாட்டிற் காணப்படும் பாரீச்சுரம் என்னும் சிவாலயம் அவன் எடுத்த திருக்கோயிலாகக் கருதப்படுகின்றது. பாரீச்சுரம் என்பது பாரியால் வழிபடப்பெற்ற சிவபிரான் கோயில் கொண்ட தலம் என்ற பொருளைத் தரும். அப்பாரீச்சுரம் தேவாரப் பாடல் பெற்ற கொடுங்குன்றத்திற்கு அருகேயுள்ளது. எனவே, இக்காலத்திற் பிரான்மலை யெனப்படும் கொடுங்குன்றத்தைத் தன்னகத்தேயுடைய பறம்பு நாடே பாரியின் நாடென்பதும்,அங்குள்ள பாரீச்சுரம் அவன் எடுத்த திருக்கோயில் என்பதும் இனிது விளங்கும்.

ஆய்

பொதியமலைக்கு அண்மையிலிருந்த நாட்டை ஆய் என்ற குலத்தார் நெடுங்காலம் ஆண்டு வந்தனர். அக்குலத்தில் வந்த ஆய் அண்டிரன் என்னும் வள்ளல், புலவர் பாடும் புகழுடையவனாய் விளங்கினான். அவன் காலத்தில் ஆய்குடி என்ற ஊர் சிறந்திருந்தது.

“தென்திசை ஆஅய் குடியின் றாயின் பிறழ்வது மன்னோஇம் மலர்தலை உலகே"

என்று மோசியார் அதன் பெருமையைப் புனைந் துரைத்தார். இவ்வூர் இன்றும் பொதியமலைச் சாரலில் உள்ளது.

காரி

கடைவள்ளல் எழுவரில் காரி என்பவன் ஒருவன். அவன் சிறந்த குதிரை வீரன். சங்க இலக்கியத்தில் மலையமான் திருமுடிக்காரி என்று அவன் குறிக்கப்படுகின்றான். சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள கார்குடி என்னும் ஊர் அச்சிற்றரசனோடு தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது.சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு.

ஓரி

திருமுடிக் காரியின் பெரும் பகைவன் ஓரி என்பவன். அவன் வில்லாளரிற் சிறந்த வீரன்; சிறந்த கொடையாளன். வல்வில் ஓரி ஒரி என்று பண்டைப் புலவர்கள் அவனைப் பாராட்டினார்கள். கோவை நாட்டுப் பவானி வட்டத்தில் ஒளிசேரி என்னும் ஊர் உள்ளது.

குமணன்

கடையெழு வள்ளல்களின் காலம் கழிந்த பின்பு கொங்கு நாட்டுக் குறுநில மன்னனாகிய குமணன் சிறந்த கொடையாளனாக விளங்கினான். முதிரம் என்னும் மலையும், அதைச் சேர்ந்த நாடும் அவன் ஆட்சியில் அமைந்திருந்தன. குமணன் வாழ்ந்த ஊர் குமணம் என்று பெயர் பெற்றுப் பிற்காலத்தில் கொழுமம் எனத் திரிந்த தென்று அறிந்தோர் கூறுவர். கோவை நாட்டைச் சேர்ந்த உடுமலைப்பேட்டை வட்டத்தில் கொழுமம் ஒரு சிற்றுாராக இன்று காணப் படுகின்றது. சோழிச்சுரம் என்னும் பழைமையான சிவாலயம் இவ்வூரில் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொங்கு நாட்டை யாண்ட வீரசோழன் அங்கே கட்டிய கோயில் வீரசோழீச்சுரம் என்னும் பெயர் பெற்றுப் பின்னர்ச் சோழிச்சரம் எனக் குறுகி வழங்கலாயிற்று என்பது சாசனங் களால் விளங்குகின்றது. கொழுமத்திற்குத் தெற்கே காதவழி தூரத்திற் காணப்படும் குதிரை மலையே பழைய முதிர மலை என்பர். முதுகிற் சேணமிட்டு நிற்கும் குதிரை போன்று இம் மலை காட்சி யளித்தலால் பிற்காலத்தார் அதனைக் குதிரை மலை என்று அழைத்தனர் போலும்!123

வள்ளலூர்

கோயம்புத்துருக்கு அண்மையில் வள்ளலூர் அழகிய பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அங்குள்ள சிவன் கோவிலுக்குத் தேனிச்சுரம் என்பது பெயர். உலகளந்த பெருமாள் கோவிலும் அங்குண்டு. பழைய பேரூர் நாட்டைச் சேர்ந்த இவ் வள்ளலூர் அன்னதான சிவபுரி எனவும் வழங்கிற்று. எனவே, அன்னதானத் தால் அழியாப் புகழ் பெற்ற வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று கூறலாகும். இந் நாளில் இவ்வூரின் பெயர் வெள்ளலூர் என மருவியுள்ளது. பூதன்

பெண்ணையாற்றின் அருகேயுள்ளது புல்வேளுர் என்ற ஊர். இவ்வூர் தொண்டை நாட்டு எயிற் கோட்டத்தைச் சேர்ந்ததென்று சாசனம் கூறும். தமிழ் இலக்கியத்திலும் இவ்வூர் இடம் பெற்றுள்ளது. நல்லிசைப் புலவராகிய ஒளவையாரை ஆதரித்த பூதன் என்னும் புரவலன் இவ் வியூரில் விளங்கினான் என்பது,

“பூங்கமல வாவிசூழ் புல்வேளூர்ப் பூதனையும் ஆங்குவரு பாற்பெண்ணை யாற்றினையும்”

நினைந்து பாடும் ஒளவை வாக்கால் அறியப்படும்.புல்வேளுர் என்பது இப்போது புல்லலூர் எனத் திரிந்துள்ளது.

மகமதியரும் கிருஸ்துவரும்

வாலாஜா

தமிழ் நாட்டிலுள்ள வட ஆர்க்காட்டு வட்டத்தில் மகமதியத் தலைவர்கள் பெயரால் அமைந்த ஊர்கள் சில உண்டு. கருநாடக நவாபுகளில் ஒருவன் முகம்மது அலி என்பவன். அவனுக்கு வாலாஜா என்னும் பெயரும் உண்டு. அப்பெயர் ஆர்க்காட்டிலுள்ள பேட்டைக்கு அமைந்துள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாலாஜாவின் அமைச்சனால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதென்று சரித்திரம் கூறும். பதினெட்டுப் பேட்டைகளை உடையதாக அமைந்த அந்நகரம் சில காலம் சிறந்து விளங்குவதாயிற்று.

இன்னும், உடையார் பாளையத்திலுள்ள வாலாஜா நகரமும், பாலாற்றங்கரையிலுள்ள வாலாஜாபாத் என்னும் ஊரும் முகம்மது அலியின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.

வாலாஜா பேட்டைக்கு அருகேயுள்ள இராணிப் பேட்டையின் வரலாறு அறியத் தக்கதாகும். செஞ்சிக் கோட்டையில் தேசிங்குராஜன் என்னும் வீரன் சிறந்து விளங்கினான்.மகமதிய நவாபாகிய சாதுல்லாகான் என்பவன் அக்கோட்டையின் மீது படையெடுத்தான். இருவருக்கும் கடும் போர் மூண்டது. தேசிங்குராஜன் மாற்றார் வியப்புற வீரப்போர் புரிந்து மாண்டான். அந்நிலையில் அவன் தேவியாகிய இராணி, கணவன் உயிரோடு தன் உயிரை இசைவிக்கக் கருதி,உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். அப்பெண்மணியின் பெருமை என்றும் விளங்கும் வண்ணம், இராணிப் பேட்டை என்னும் பெயரால் புதியதோர் ஊரை உண்டாக்கினான். அது நெடுங்காலமாக ஒரு சிறந்த படை வீடாக விளங்கிற்று.

கான்சாசிப்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலப் படைக்குத் துணைபுரிந்த மகமது யூசப்கான் என்பவன் தமிழ்நாட்டில் கான்சாகிப் என்று வழங்கப்பெற்றான். அவன் செய்த உதவிக்குக் கைம்மாறாகப் பாண்டி நாட்டின் கவர்னராக ஆங்கிலேயர் அவனை நியமித்தனர். மதுரையைச் சேர்ந்த கான்சாபுரமும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த கான்சாகிபு புரமும் அவன் பெயரால் அமைந்துள்ளன.

இன்னும் பல ஊர்கள் மகமதியப் பெயர்களைக் கொண்டு வழங்கக் காணலாம். அவை பெரும்பாலும் பேட்டை முதலியவற்றோடு இணைந்துள்ளன.சென்னையின் அருகே அமைந்துள்ள சைதாப்பேட்டையும், வட ஆர்க்காட்டிலுள்ள ஜாவ்வர் பேட்டை, மூர்தானா பட்டடை முதலிய ஊர்களும் மகமதிய சம்பந்தமுடையன என்பது வெளிப்படை

அபாத்

இன்னும் மகமதியரோடு தொடர்புடைய ஊர்கள், அபாத் என்பது முடிவுடைய பெயர் கொண்டு வழங்கக் காணலாம்.பாரசீக மொழியில் அபாத் என்பது நகரத்தைக் குறிக்கும். ஆர்க்காட்டு வட்டத்தில் மன்சரபாத், அனவரபாத், முரார்பாத் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன.

தமிழ் நாட்டில் மகமதிய வகுப்பாரைக் குறிக்கும் ராவுத்தர், மரக்காயர் முதலிய பொருள்களும் ஊர்ப் பெயர்களில் புகுந்துள்ளன.தென் ஆர்க்காட்டிலுள்ள ராவுத்த நல்லுனரும், இராமநாதபுரத்திலுள்ள மரக்காயர் பட்டினமும் இவ்வுண்மைக்குச் சான்றாகும்.

உசேன்

வட ஆர்க்காட்டு வேலூருக்கு அருகே ஊசூர் என்னும் ஊர் உள்ளது. அஃது உசேன் என்ற மகமதியர் பெயரால் அமைந்த ஊராகும். உசேனூர் என்பது ஊசூர் என மருவிற்று. உசேன்பாத் என்னும் பெயரும் அதற்குண்டு.இன்னும் வட ஆர்க்காட்டுப் போளூர் வட்டத்தில் அலியாபாத் என்னும் ஊரும், மன்சராபாத் என்னும் துருக்கமும் உள்ளன. அவை. முறையே அலி, மன்சூர் என்ற இரு மகமதியர் பெயரைக் கொண்டுள்ளன. திருச்சி நாட்டிலுள்ள லால்குடி என்னும் ஊருக்கு அப்பெயரிட்டவர் மகமதியரே. முன்னாளில் தவத்துறை என்பது அதன் பெயர். அங்குள்ள திருக்கோயிலின் செங்கோபுரத்தைக் கண்டு லால்குடி என்று அவ்வூரை மகமதியர் குறித்தார்கள். பாரசீக மொழியில் லால்குடி என்பதற்குச் செம்பதுமை என்பது பொருளாம்.

சென்ற சில நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டில் பரவி வரும் கிருஸ்துவ சமயத்தின் சார்பாக எழுந்த ஊர்களும் உண்டு. நெல்லை நாட்டில் கிருஸ்தவர்கள் மிகுதியாக வசிக்கும் பாகங்களில் நாசரேத்து, சுவிசேஷபுரம், மெய்ஞ்ஞானபுரம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இன்னும் ஆரோக்கியபுரம், சாந்தபுரம், செளக்யபுரம், சந்தோஷபுரம், நீதிபுரம் முதலிய புத்தூர்களும் சென்ற நூற்றாண்டில் எழுந்துள்ளன. இருநூறாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் கிருஸ்துவப் பெருந்தொண்டராக விளங்கிய வீரமா முனிவர் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள ஏலாக்குறிச்சி என்னும் பழைய ஊரின் ஒரு பாகத்தில் அடைக்கல மாதா ஆகிய தேவ மாதாவுக்கு ஒரு கோவில் கட்டினார்; அம் மாதாவின் அருட்காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; அவ்வூரில் கோவில் கொண்ட மாதாவின் மீது ஒரு கலம்பகம் பாடினார். அதன் பெயர் திருக்காவலூர்க் கலம்பகம் என்பது.

வீர மாமுனிவர் கால முதல், வேதியர் என்னும் சொல் கிருஸ்தவ சமுதாயத்தில் உபதேசியார் களைக் குறிப்ப தாயிற்று. அன்னார்க்குரிய ஒழுக்க முறைகளையெல்லாம் தொகுத்து, வேதியர் ஒழுக்கம் என்னும் பெயரால் ஓர் உரைநடை நூலும் எழுதினார் முனிவர். வேதியர்புரம் என்ற ஊர் தஞ்சாவூருக்குத் தென்கிழக்கே எட்டு மைல் துரத்தில் உள்ளது. கிருஸ்தவர்கள் வாழும் ஊராகவே அஃது இன்றும் விளங்குகின்றது.

சான்றோரும் ஊர்ப்பெயரும்

தெய்வ மணங் கமழும் தமிழகத்தில் ஆன்றோர் பலர் தோன்றினர்; ஆண்டவனை அடைதற்குரிய நெறி காட்டினர்; அருட்பாடல்களால் அன்பை வளர்த்தனர். இத்தகைய தெய்வப் பணி செய்த பெரியாரை நாயனார் என்றும், ஆழ்வார் என்றும் தமிழகம் போற்றி வருகின்றது. அவர்கள் பிறந்த ஊர்களும், பாடிய பதிகளும் தனிப் பெருமையுற்று விளங்குகின்றன.

நாவீறுடையார்

நெல்லை நாட்டில் நாவீறுடையபுரம் என்ற சிற்றூர் ஒன்று உள்ளது. நாவீறு என்பது சொல்லின் செல்வம். அச்செல்வத்தைச் சிறப்பாகப் பெற்ற நம்மாழ்வாரை நாவீறுடையார் என்று வைணவ உலகம் போற்றுகின்றது. அவர் பெயர் கொண்டு விளங்குவது நாவீறுடையபுரம்.

சிறுத்தொண்டர்

திருத்தொண்டர் புராணத்தில் பாராட்டப்பெறுகின்ற சிவனடியாருள் ஒருவர் சிறுத்தொண்டர் என்னும் பெயருடையார். அவர் பல்லவ மன்னரிடம் படைத் தலைவராய்ப் பணி செய்தவர். பகைவரை முருக்கி வெல்லும் வீரம் வாய்ந்த அப்பெரியார் பரமனடியாரைக் கண்ட பொழுது பணிந்து தாழ்ந்து துவண்டு நின்ற காரணத்தால் சிறுத்தொண்டர் என்று சைவ உலகம் அவரைப் போற்றுவதாயிற்று.நெல்லை நாட்டிலுள்ள சிறுத்தொண்ட நல்லூர் என்னும் சிற்றூர் அவர் பெருமையை நினைவூட்டுகின்றது.

சண்டேச்சுரர்

சண்டேச்சுர நாயனார், சிவாலயத்திற் சிறப்பாகப் போற்றப்படும் சிவனடியார்களுள் ஒருவர். சிவ வழிபாட்டிற்கு இடையூறு செய்த தந்தையை மழுவால் எறிந்து, “அரனார் மகனார்” ஆகிய அப்பெருமானைச் . சண்டேச்சுரர் என்றும், தண்டேச்சுரர் என்றும் சைவ உலகம் வணங்கு கின்றது. அவர் பெயரால் அமைந்த ஊர் தண்டேச்சுர நல்லூர், அது சிதம்பர வட்டத்திலுள்ளது.

சோமாசிமாறன்

இன்னும், திருத்தொண்டர் புராணத்தில் பேசப்படுகின்ற சிவனடியார்களில் ஒருவர் சோமாசிமாற நாயனார். அவர் திரு அம்பர் நகரத்து மறையவர் குலத்தைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் வாக்கால் தெரிகின்றது.128 அன்னார் பெயரைக் கொண்ட சோமாசி என்ற ஊர் இராம நாதபுரத்துப் பரமக்குடி வட்டத்தில் உள்ளது.

தமிழ் நாட்டில் ஆன்றோர் பிறந்த ஊர்கள் சிறந்த தலங்களாக மதிக்கப் பெற்றன. பாடல் பெற்ற தலங்களைப் போலவே அவ்வூர்ப் பெயர்களில் திரு என்னும் அடை விளங்கக் காணலாம்.

திருவாதவூரர் திருநாவுக்கரசர்

சைவர்கள் தலைக்கொண்டு போற்றும் பெருமை சான்றது திருவாசகம். அதனை அருளிச் செய்தவர் மாணிக்கவாசகர். மணி மொழிகளால் அமைந்த திருவாசகத்தைப் பாடிய பின்னரே மாணிக்க வாசகர் என்னும் பெயர் அமைவதாயிற்று. அதற்கு முன் திருவாதவூர் என்றே அவர் குறிக்கப்பெற்றார். அவர் பிறந்தமையால் பாண்டி நாட்டிலுள்ள வாதவூர், திருவாதவூர் ஆயிற்று. அவ்வாறே திருநாவுக்கரசர் பிறந்தமையால் பெருமையுற்ற ஊர் ஆமூர் ஆகும். “தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர்” என்று திருத்தொண்டர் புராணத்திற் சிறப்பிக்கப்பட்ட ஊர் இப்பொழுது தென் ஆர்க்காட்டுக் கூடலூர் வட்டத்தில் உள்ளது. ஆமூர் என்னும் மூதூர் திருநாவுக்கரசர் பிறந்த ஊராதலால் திருவாமூர் ஆயிற்று.

திருமழிசையாழ்வார்

சென்னைக்கு மேற்கேயுள்ள பூந்தமல்லி என்னும் பூவிருந்த வல்லிக்கு அண்மையில் அமைந்தது திரு மழிசை. இவ்வூரிற் பிறந்து இளமையிலேயே பரஞானம் பெற்று, திருவல்லிக்கேணியில் நெடுங்காலம் யோகத்தில் எழுந்தருளியிருந்து, கும்பகோணம் எனப்படும் திருக்குடந்தையில் பரமபதம் அடைந்தார் ஓர் ஆழ்வார். அவர் பிறந்தமையால் மழிசை திருமழிசை ஆயிற்று. அவ்வாழ்வாரும் திருமழிசை ஆழ்வார் என்றே வழங்கப் பெறுகின்றார். செயின்ட் தாமஸ்

கிருஸ்தவ சமய சீலராகிய செயின்ட் தாமஸ் என்பவர், கி.பி. முதல் நூற்றாண்டில் தமிழ் நாட்டிற் போந்து,மயிலாப்பூரில் சில காலம் தங்கியிருந்து சமய போதகம் செய்தார் என்றும், அதனால் விளைந்த குரோதத்தால் கொலை யுண்டு இறந்தார் என்றும் கர்ண பரம்பரைக் கதையொன்று உண்டு. அவர் வசித்த இடம் மயிலாப்பூரை அடுத்த சாந்தோம் என்பர். அவர் கொலையுண்ட இடம் சென்னைக்கு ஆறு மைல் தூரத்தில் அவர் பெயரால் வழங்கும் செயின்ட் தாமஸ் மலையென்றும் கூறுவர். பதினாறாம் நூற்றாண்டில் பரங்கியர் என்று தமிழ் நாட்டில் அழைக்கப்பட்ட போர்ச்சுகீசியர் அம் மலையில் வசித்தமையால் பரங்கிமலை யென்னும் பெயரும் அதற்கு அமைவதாயிற்று. நானூறு ஆண்டுகளுக்கு முன்னே அன்னார் கட்டிய தேவமாதாவின் கோவில் இன்றும் பரங்கிமலையின் உச்சியிற் காணப் படுகின்றது என்பர்.129

புலவரும் ஊர்ப்பெயரும்

சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகின்ற எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களில் பல புலவர்கள் இயற்றிய பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னவருள் ஊர்ப் பெயராற் குறிக்கப் பெற்றவர் சிலர். ஊர்ப் பெயரோடு தொடர்ந்த இயற் பெயர்களாற் குறிக்கப் பெற்றவர் சிலர். அப் பெயர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்த இடம் பெறுவனவாகும்.

பொதும்பிற் புலவர்

பொதும்பில் கிழார் என்பது ஒரு பழம் புலவர் பெயர். அவரும், அவர் மைந்தராகிய புலவரும் இயற்றிய செய்யுட்கள் நற்றிணையிற் காணப்படும். பொதும்பில் புல்லாளங் கண்ணியார் என்னும் மற்றொரு புலவரும் முன்னாளில் வாழ்ந்தார். இம் மூவரும் பொதும்பில் என்ற ஊரைச் சேர்ந்தவர் என்பது புலனாகின்றது. பாண்டி நாட்டு மதுரை வட்டத்திலிலுள்ள பொதும்பு என்னும் ஊரே பழைய பொதும்பில் என்பர்.189

கிடங்கிற் புலவர்

முற்காலத்தில் சிறப்புற்றிருந்த கிடங்கில் என்ற ஊரில் காவிதிப் பட்டமும் குலபதிப் பட்டமும் பெற்ற புலவர்கள் வாழ்ந்திருந்தனர். காவிதிக் கீரங்கண்ணனார், நாவிதிப் பெருங்கொற்றனார், குலபதி நக்கண்ணனார் என்னும் மூவரும் கிடங்கிற்பதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாடிய பாட்டு நற்றிணையிலும், குறுந்தொகையிலும் காணப்படும். இப்பொழுது திண்டிவனம் என வழங்கும் ஊரின் ஒரு பாகத்தில் கிடங்கால் என்னும் பெயரோடு அமைந்துள்ள இடமே .

நொச்சி நயமத்தார்

நொச்சி நியமங்கிழார் என்னும் புலவர் பாடிய நயஞ்சான்ற பாடல்கள் நற்றிணையிற் காணப் படுகின்றன. நியமம் என்பது கோவிலைக் குறித்தலால் முன்னாளில் நொச்சி நியமம் தெய்வ நலம் பெற்ற ஊர்களில் ஒன்றென்று கொள்ள லாகும். இப்பொழுது அவ்வூர்ப் பெயர் நொச்சியம் என மருவி வழங்குகின்றது.

கிள்ளி மங்கலத்தார்

கிள்ளி மங்கலங்கிழார் என்னும் புலவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிற் காணப்படும். சோழ மரபினர்க் குரிய கிள்ளி யென்ற பெயர் தாங்கி நிலவும் பதியில் வேளாளர் குலத்திற் பிறந்த புலவர் கிள்ளி மங்கலங்கிழார் என்று குறிக்கப்பெற்றார். அவ்வூரின் பெயர் இப்பொழுது கிண்ணி மங்கலம் என மருவி வழங்குகின்றது.

பிசிர் ஆந்தையார்

தமிழகத்தில் தலை சிறந்த நட்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்தவர்கள் கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும். அவ்விருவரும் வேறு வேறு நாட்டினராயினும்,வேறு வேறு நிலையின ராயினும், ஒத்த உணர்ச்சியுடையராய் இருந்த மையால் உயரிய நண்பர் ஆயினர் என்று பரிமேலழகர் கூறிப் போந்தார். பிசிர் என்ற ஊரைச் சேர்ந்த ஆந்தையார் பிசிராந்தையார் என்று பெயர் பெற்றார். அவ்வூர் பாண்டி நாட்டிலுள்ள தென்பது,

“தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும் பிசிரோன் என்ப”

என்று கோப்பெருஞ் சோழன் கூறுதலால் அறியப்படும். இப்பொழுது அவ்வூர் இராமநாதபுரம் நாட்டில் பிசிர்க்குடி யென்று வழங்குகின்ற தென்பர்.

மோசியார்

மோசி என்னும் சொல்லாலும், அதோடு தொடர்ந்த பெயராலும் குறிக்கப்படும் புலவர்கள் பழந்தொகை நூல்களிற் சிலர் உண்டு. புறநானூற்றில் ஆய் அண்டிரன் என்ற வள்ளலைப் பன்னிரு பாட்டால் புகழ்ந்து பாடியவர் முட மோசியார் ஆவர். இவரை மோசி என்றும் அக்காலத் தறிஞர் அழைத்ததாகத் தெரிகின்றது. இன்னும் மோசி கீரனார் இயற்றிய பாடல்கள் அகப் பாட்டிலும், புறப்பாட்டிலும் காணப்படும்.தகடூர் எறிந்த பெருஞ் சேரமானின் முரசு கட்டிலில் அறியாது படுத்துறங்கி,அவனால் கவரி வீசப்பெற்ற புலவர் இவரே.இன்னும் மோசி கொற்றனார்,மோசி சாத்தனார்,மோசி கண்ணத்தனார் என்னும் புலவர்களும் முற்காலத்தில் இருந்தனர். அன்னார் பெயர்களில் அமைந்த மோசி என்னும் சொல் மோசுகுடி என்ற ஊர்ப் பெயரில் விளங்குகின்றது. இப்பெயர் பெற்ற ஊர் இராமநாதபுரத்துச் சிவகங்கை வட்டத்தில் உள்ளது.

அழிசியார்

அழிசி என்னும் பெயருடைய மூவர் சங்க காலத்தில் இருந்தனர். அன்னவருள் ஒருவர் நல்லழிசியார். பரிபாடலில் இரு பாடல்கள் அவருடையன. கொல்லன் அழிசி என்பவர் இயற்றிய செய்யுட்கள் நான்கு குறுந்தொகையிற் சேர்ந்துள்ளன. அழிசி நச்சாத்தனார் என்பது இன்னொரு புலவர் பெயர். ஆதன் அழிசி என்னும் தலைவன் பூதப் பாண்டியனுடைய நண்பர்களுள் ஒருவன் என்பது புறப்பாட்டால் விளங்குகின்றது. இவர்தம் பெயரை நினைவூட்டும் அழிசிகுடி என்னும் ஊர் தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் உண்டு.

மிளையார்

முன்னாளில் மிளை யென்ற ஊரில் வாழ்ந்த ஒரு தலைவன் பெயரும், இருபுலவர் பெயரும் குறுந்தொகை யால் விளங்கும். மிளை வேள் தித்தன் என்று அந்நூல் கூறுதலால், அத் தலைவனுடைய ஊரும் குலமும் பெயரும் அறியப்படுகின்றன. இன்னும் மிளைக்கந்தன், மிளைப்பெருங்கந்தன் என்னும் புலவர்கள் இயற்றிய செய்யுளும் கிடைத்துள்ளன. தென் ஆர்க்காட்டு விருத்தாசல வட்டத்தில் பெரு முளை, சிறு முளை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. மிளையென்பது முளையென மருவி வழங்குதல் இயல்பாதலால் அன்னார் அவ்வூர்களில் ஒன்றைச் சேர்ந்தவராக இருத்தல் கூடும்.

குறுங்கோழியூரார்

பழந்தொகை நூல்களில் குறுங்கோழியூர் கிழார் என்னும் சொல் வேளாளரைக் குறிக்கும். ஆதலால்,அப்புலவர் குறுங்கோழியூரைச் சேர்ந்த வேளாளர் என்பது விளங்கும். முன்னாளில் குறுங்கோழி என்று தொண்டை நாட்டிற் பெயர் பெற்றிருந்த ஊர் இப்போது கருங்குழி எனச் செங்கற்பட்டிலுள்ள மதுராந்தக வட்டத்தில் உள்ளது.

பெருந்தலைச் சாத்தனார்

முற்காலத்தில் இருந்த மற்றொரு புலவர், பெருந் தலைச்சாத்தனார் என்று குறிக்கப்படுகின்றனர். குமணன் என்னும் சிறந்த வள்ளலைக் காட்டிலே தேடிக் கண்டு சோகம் நிறைந்த சொற்களால் அவன் உள்ளத்தை உருக்கி, அவன்பால் தலைக்கொடை பெற்ற பெருந்தலைச் புலவர் இவரே.பெருந்தலை என்னும் ஊரிற் பிறந்த சாத்தனார்.பெருந்தலைச் சாத்தனார் என்று அழைக்கப் பெற்றார். அவ்வூர், பெருந்தலையூர் என்னும் பெயரோடு கொங்கு நாட்டில் இன்றும் காணப்படுகின்றது.குமண வள்ளலுக்குரிய நாடும் கொங்கு நாட்டின் ஒரு பாகமேயாகும்.கொங்கு நாட்டைச் சேர்ந்த புலவர் ஒருவர் கொடிய வறுமையால் துன்புற்ற நிலையில் கொங்கு நாட்டு வள்ளலை நாடிச் சென்று அவனிடம் தன் குறையை முறையிட்டார் என்பது மிகப் பொருத்தமாகவே தோற்று கின்றது. இவ்வாறே சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவரையும் சீத்தலை என்னும் ஊரிற் பிறந்தவர் என்று கொள்ளுதலே பொருத்த முடையதாகும்.

ஒட்டக் கூத்தர்

தமிழ்ப்புலவர்தம் பெயர்களும் அருமையாக ஊர்ப் பெயர்களிலே காணப்படுகின்றன.சோழ மன்னர் அவைக்களத்திற் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்று விளங்கிய கவிஞருள் ஒருவர் ஒட்டக் கூத்தர். அவர் மலரி என்ற சிற்றுரிலே பிறந்தவர். முன்று சோழ மன்னர்கள் அவரை ஆதரித்தார்கள். அன்னாருள் ஒருவன் தன்னை அவர் மாணவன் எனப்பேசி பெருமை கொண்டான். பேரளத்துக்கு அருகேயுள்ள ஒரு சிற்றுள் அக்கவிஞருக்குப் புலமைக் காணியாக அளிக்கப்பட்டது. அதன் பெயராகிய கூத்தனுர் என்பது, ஒட்டக்கூத்தர் பெயரால் வந்ததென்று தெரிகின்றது. கலைமகள் அருளால் சீரும் சிறப்பும் பெற்ற ஒட்டக்கூத்தரது மரபில் தோன்றிய வரதக் கூத்தன் அங்கு அத் தெய்வத்திற்கு ஓர் ஆலயம் அமைத்துப் போற்றினான் என்பர்.

பொய்யா மொழியார்

பதினாறாம் நூற்றாண்டில் விளங்கியவர் பொய்யா மொழிப் புலவர். அவர் தஞ்சாவூரை யாண்ட சந்திரவாணன் மீது பாடிய கோவை “தஞ்சைவாணன் கோவை” என்று வழங்குகின்றது. அவர் வாக்கு அருள் வாக்கென்றும், பொய்யாமொழி யென்றும் கொண்டாடப்பட்டது. தொண்டை நாட்டுச் செங்கற்பட்டு வட்டத்தில் பொய்யாமொழி மங்கலம் என்னும் பெயருடைய ஊர் ஒன்றுள்ளது. அங்குக் கடிகை என்ற தமிழ்ச் சங்கம் இருந்ததென்று திருக்கச்சூர்ச் சாசனம் தெரிவிக்கின்றது. அவ்வூருக்கும் பொய்யாமொழிப் புலவர்க்கும் ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகின்றது.

காரிகைக் குளத்தூர்

சோழ மண்டலத்திலுள்ள மிழலை நாட்டில் தமிழ் வளர்த்த தலைவர் பலர் தழைத்து வாழ்ந்தார்கள். அன்னவருள் ஒருவனாகிய கண்டன் மாதவன் முதற் குலோத்துங்க சோழன் காலத்தினன், மிழலை நாட்டைச் சேர்ந்த நீடூர்க் கோவிலிற் கண்ட சாசனப் பாட்டால் அவன் செய்த திருப்பணிகள் அறியப்படுகின்றன. "புராணநூல் விரிக்கும் புரிசை மாளிகையும் விருப்புறச் செய்தோன்” என்று புகழப்படுதலால் பட்டி மண்டபம் ஒன்று அவன் கட்டினான் என்பது விளங்கும். இத்தகைய மிழலை நாட்டுக் குறுநில மன்னனைக் “காரிகைக் குளத்தூர் மன்னவன்” என்று அச்சாசனம் கூறுதல் கருதத் தக்கதாகும்.தமிழில் யாப்பருங்கலக் காரிகை என்னும் செய்யுளிலக்கணம் செய்தவர் அமிதசாகரர் என்ற சமணமுனிவர் என்பது அந் நூற்பாயிரத்தால் அறியப் படுகின்றது. அவ்வாசிரியர்பால் அன்பு கூர்ந்து, அவரை அழைத்து வந்து, குளத்தூரில் வைத்து ஆதரித்துக் காரிகை நூல் இயற்றுவித்தவன் மாதவன் குலத்துதித்த மிழலை நாட்டுத் தலைவன், காரிகையின் மணம் கமழ்ந்த குளத்தூர், காரிகைக்குளத்தூர் என வழங்கலாயிற்று.

ஆட்பெயரும் ஊர்ப்பெயரும்

கீரன்

பழந்தமிழ் நூல்களில் பேசப்படுகின்ற கீரன்,ஆதன் முதலிய பெயர்கள் தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களிற் கலந்துள்ளன. கீரன் என்னும் பழம் பெயருக்குப் பெரும் புகழ் அளித்த புலவர் நக்கீரர் என்பது நாடறிந்தது. கீரனுர் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டின் பல பாகங்களில் உண்டு.

ஆதன்

ஆதன் என்னும் சொல் சேரகுல மன்னர் பெயரோடு சேர்த்துப் பேசப்படுகின்றது.இளங்கோ ஆதன் வடிகளின் தந்தை சேரலாதன் என்று குறிக்கப் படுகின்றான். ஆதன் பெயரைத் தாங்கிய ஆதனூர்களும் தமிழ்நாட்டிற் காணப்படும்.

கோடன்

கோடன் என்னும் பெயரும் ஊர்ப் பெயராக வழங்குவதுண்டு. சென்னைக்கு அணித்தாக உள்ள கோடம்பாக்கம் கோடன்பாக்கமே.நெல்லை நாட்டில் முன்னாளில் கோடனூர் என்று வழங்கிய ஊர் இந் நாளில் கோடக நல்லூர் எனப்படுகின்றது.

டோனா

இன்னும் பிற நாட்டுப் பெருமக்கள் பெயரும் தமிழ் நாட்டில் சில ஊர்களுக்கு அமைந்துள்ளன. நெல்லை நாட்டில் டோனாவூர் என்னும் சிற்றூர் இந்நாளிற் சிறந்து விளங்குகின்றது. அவ்வூரின் பழம் பெயர் டோனா புலியூர்க் குறிஞ்சி என்பதாகும். கிருத்தவ சமயம் நெல்லை நாட்டிற் பரவத் தலைப்பட்ட போது கிருஸ்தவரானவர்கள் குடியிருந்து வாழ்வதற்காக அக்குறிச்சியிலுள்ள மனைகளையும் நிலங்களையும் விலை கொடுத்து வாங்கினர் கிருஸ்தவ சங்கத்தார். அக்கிரயத் தொகையை ஜெர்மானிய தேசத்தைச் சேர்ந்த டோனா என்னும் பெருஞ் செல்வர் நன்கொடையாக அளித்தார். நன்றி மறவாத நெல்லை நாட்டுக் கிருஸ்தவர் அவர் பெயரை அவ்வூருக்கு அமைத்து டோனாவூர் என வழங்கலாயினர்.

சாயர்

நெல்லை நாட்டிலுள்ள மற்றொரு சிற்றூர் சாயர்புரம் என்று பெயர் பெற்றுள்ளது. அங்கும் கிருஸ்தவர்களே பெருந்தொகையினராக வசிக்கின்றார்கள்.அவ்வூரில் குடியிருப்புக் கேற்ற மனையிடங்களை விலை கொடுத்து வாங்கியவர் சாயர் என்னும் போர்ச்சுகீசிய வணிகர். கிறிஸ்தவ சங்கத்தார் நெல்லை நாட்டிற் செய்த பெரும் பணிகளை அவர் மனமுவந்து ஆதரித்தார். அவர் வழங்கிய பொருளால் எழுந்த ஊர் சாயர்புரம் என்று பெயர் பெறுவதாயிற்று.

காசாமேசர்

திருக்குற்றால மலைக்கு அருகே காசிமேசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. அவ்வூர்ப் பெயரில் ஆங்கில நாட்டார் ஒருவர் பெயரைக் காணலாம். கம்பெனியார் காலத்தில் காசா மேஜர் என்ற ஆங்கில நாட்டு வர்த்தகர் குற்றால மலையின் அடிவாரத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்தார். தெற்கு மலை முதலிய இடங்களில் தோட்டப் பயிரிடும் பணியை அவர் மேற்கொண்டார். அவர் வாசம் செய்த இடம் காசாமேசர் புரம் என்று பெயர் பெற்றது. அதுவே பிற்காலத்தில் காசிமேசபுரமாயிற்று. மாக்டானல்

சேலம் நாட்டில் மகுடஞ் சாவடி என்பது ஓர் ஊரின் பெயர். மாக்டானல் என்ற பெயருடைய படைத் மாக்டானல் தலைவன் சில காலம் பாசறை கொண்டிருந்த இடம் மாக்டானல் சாவடி என்று பெயர் பெற்றது. அதுவே மகுடம் சாவடி எனத் தமிழில் மருவி வழங்குகின்றது.

அடிக்குறிப்பு

1. சிலப்பதிகாரம், மங்கல வாழ்த்து, 19-20

2. மணிமேகலை, 24, 30-61

3. அரவம் என்பதைக் குறித்து வழங்கும் பல கொள்கைகளைக் கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் முடிவுரையில் காண்க.

4. புறநானூறு, 88, 90.

5. பாடல் பெற்ற திருமழபாடியை மழுவாடி என்று சில சாசனங்கள் குறிக்கின்றன. “மழபாடி மேய மழுவாளனார்” எனத் திருநாவுக்கரசர் பாடுதலால் மழபாடிக் கோயிலில் மழுவாடி அமர்ந்தருளும் தன்மை அறியப்படும். ஆகவே, மழபாடி என்பது ஊர்ப் பெயர் மழுவாடி என்பது அங்குள்ள நாதன் நாமம். கொள்ளிட நதி வளைந்து செல்லும் இடத்தில் அழகுற அமைந்துள்ள மழபாடிக் கோயிலைப் “புனல்வாயிற் கோயில்” என்று சாசனம் குறிக்கின்றது. 98 of 1920.

6. தொண்டைமான் இளந்திரையன் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் உண்டு. புறம், 185.

7. திரைய மங்கலம் என்ற ஊர், செங்கற்பட்டுக் காஞ்சிபுர வட்டத்தில் உள்ளது.

8. தஞ்சை நாட்டு முத்தரையரைப்பற்றி நீலகண்ட சாஸ்திரியார் எழுதிய சோழர் முதற்பாகம், 133, 134-ஆம் பக்கங்களிற் காண்க. 9.மழவர்படி, மழபாடி என்று பெயர் பெற்றாற் போன்று முனையர்பாடி, முனைப்பாடியாயிற்று.

10.நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர்” தடுத்தாட்கொண்ட புராணம், 5.

11. S. I. I. Vo]. Hi, Part I. p. 99.

12.அதியர்,மழவர் இனத்தினர் என்பர்.

13. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

14. இப்பொழுது தர்மபுரி என வழங்கும் தகருேக்குத் தென்கிழக்கேயுள்ள அதமன் கோட்டையின் தற்கால நிலைமையை Sewell’s Antiquities என்ற நூலிற் காண்க.

15. பேகனை ஆவியர்கோ என்று புறநானுறும் -147 ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படையும் - 86 குறிக்கும்.

16. L M. P, p. 183.

17. புள்ளிருக்கு வேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வேளும் வழிபட்ட காரணத்தால் அப்பெயர் வந்ததென்று புராணம் கூறும்.

18.வேளாண் குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர்தம் குடி விளங்கும்” - திருநாவுக்கரசர் புராணம்.15.

19. M. E. R. 1926,265; 1927,316.

20. சென்னி வளவன் செம்பியன் கிள்ளி ....................... சோழன் பெயரே - பிங்கல நிகண்டு.

21. வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்திலுள்ள வளையத்துர், வளவன் ஆற்றுரே என்பது சாசனத்தால் விளங்கும். M.E. R. 1933-34. 22.

“செழியன் கூடற் கோமான் தென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்
குமரிச் சேர்ப்பன் கோப்பாண் டியனே”
- பிங்கல நிகண்டு.

23. மாற்றாரை வென்று வருவதால் இவன் கூறிய வஞ்சினம் புறநானூறு 71-ஆம் பாட்டில் காணப்படும்.

24.The Chronology of the Early Tamils, p. 122, F.N.

25.இவனைச் சுந்தர பாண்டியன் என்றும், நெடுமாறன் என்றும் புராணங்கள் கூறும். நெல்லை நாட்டிலுள்ள அரிகேசரி நல்லூர் இவன் பெயரால் அமைந்தது போலும். இப்பொழுது அஃது அரிகேச நல்லூர் என வழங்கும்.

26.சின்னமனூர்ச் செப்பேடுகளில் இம் மன்னர் “கொற்றவர்கள் தொழு கழற்கால் கோ வரகுண மகாராசன்” என்று புகழப்பட்டுள்ளார். பட்டினத் தடிகள் திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் இவருடைய சிவ பக்தியின் பெருமையைப் பாராட்டியுள்ளார். “பெரிய அன்பின் வரகுண தேவர்” என்பது அவர் வாக்கு.

27. The Pandyan Kingdom, p. 79.

28. இராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ண தேவன்.

29. I. M. P. 1175; 474 of 1909.

30. The Pandyan Kingdom. p. 120. அதன் பழம் பெயர் குருவித் துறை.

31. T. A. S. Vol. I. p. 90.

32, 426 of 1907. அங்குள்ள பழமையான சிவாலயம் கண்ணுடை ஈச்சரம் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. அஃது இப்பொழுது கண்ணிஸ்வரர் கோயில் எனப்படும். 33. இஃது இராமநாதபுரம் நாட்டுச் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.

34. 481of 1909

35. 442 of 1909

36. “செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்- கம்பராமாயணம், கும்பகருணன் வதை 159,

37. சீவலப்பேரி, வல்லநாடு என்னும் ஊர்கள் ஸ்ரீ வல்லபப் பேரேரி, வல்லவன் நாடு என்பர்.

38. தென்காசிக் கோயிற் சாசனம் :

“சேலேறிய வயல் தென்காசி ஆலயம் தெய்வச் செயலாலே சமைந்தது, இங்கென் செயல் அல்ல, அதனையின்னம் மேலே விரிவு செய்தே புரப்பார் அடி வீழ்ந்து, அவர் தம்பால் ஏவல் செய்து, பணிவன் பராக்கிரம பாண்டியனே"- T. A. S. Vol. . pp. 95.97.

39. 478 of 1916.

40, Tinnevelly Gazetteer, p. 376.

41. “பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்” - தேவாரம்.

42. 265 of 1907. திருவொற்றியூருக்கு அண்மையிலுள்ள மணலி என்ற ஊரும், சிம்ம விஷ்ணு சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது. Pallavas, p. 87.

43. ஒரு பாறையில் குடைந்தெடுத்த கோயில் அங்குள்ளது. அது துணாண்டார் கோயில் என்று பெயர் பெற்றிருந்தது. (6l of 1900) சிங்கமங்கலத்துத் திருக்கற்றளியென்று அக்கோயில் கல்வெட்டிற் குறிக்கப்படுகின்றது. (69 of 1900). குலோத்துங்க சோழன் காலத்தில் சாம்புவ ராயன் என்ற சாமந்தன் அக்கோயிலில் ஒரு மண்டபம் கட்டினான். சாம்புவராயனைச் செம்புராஜா என்று கர்ண பரம்பரைக் கதை கூறும். சீயமங்கலக் கோயில் செம்புராஜாவால் குடைந்தெடுக்கப்பட்டதென்று அவ்வூரார் கூறுவர். North Arcot Manual, Vol. II, p. 438.

44, North Arcot Manual, Vol. II, p. 438.

45. திருச்சி நாட்டு லால்குடிக் கருகே மற்றொரு பல்லாவரம் உண்டு. அவ்வூரில் முதல் நரசிங்கவர்மன் காலத்திற் கட்டிய கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும். (பல்லவர் சரித்திரம், Vol. II, p, 44). வட ஆர்க்காட்டுச் செய்யாற்று வட்டத்தில் மற்றொரு பல்லாவரம் உள்ளது. இவ்வூரில் குரங்கணில் முட்டம் என்னும் பாடல் பெற்ற சிவாலயம் அமைந்ததாகச் சாசனம் கூறும். 290 of 1912.

46. வாதாபி என்ற பாதாமி, பீஜப்பூர் தேசத்தில் உள்ளது.

47. Pallavas, p. 102.

48. இவ்வூர் உதயேந்திர மங்கலம் என்னும் சாசனத்தில் வழங்கும், உதயேந்திரச் செப்பேடுகள் எனப்படும். அச்சாசனத்தில் நந்திவர்மப் பல்லவனுக்கு உதயேந்திரன் செய்த அருஞ்சேவையும் பகைவரைப் பல போர்க்களங்களிற் புறங்கண்ட செய்தியும் விரித்துரைக்கப்படுகின்றன.

49. Pallavas, p. 144.

50. 254 of 1913.

51. 253 of 1913.

52. முதல் இராசராச சோழன் (உலகநாத பிள்ளை) ப. 11.

53. 239 of 1923. Cholas Vol. I. p. 542.

54. இவன் “மதுரையும் ஈழமும் கொண்ட பரகேசரி” என்று பாராட்டப் பெற்றான்.

55. வட ஆர்க்காட்டுத் திருவண்ணாமலை வட்டத்தில் வீரணம் என்ற ஊரும், வாலாஜா வட்டத்தில் மேல் வீராணமும்,

160

ஊரும் பேரும்



தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் வீராண நல்லூரும், விழுப்புர வட்டத்தில் வீராணமும் உள்ளன. இன்னும் தென் ஆர்க்காட்டிலுள்ள உடையார் குடி, வீர நாராயண சதுர்வேதி மங்கலம் எனவும், சித்துர் நாட்டைச் சேர்ந்த மேல்பாடி, வீர நாராயணபுரம் எனவும் வழங்கிய செய்தி சாசனத்தில் விளங்கும். 562 of 1920, 101 of 1921.

56. Cholas, Vol. I, 145; 735 of 1905.

57. 248 of 1894.

58. 398 of 1913.

59. இது திருச்சி நாட்டு வட்டத்தில் திருப்பாற்றுறையை அடுத்து உள்ளது. L. M.P. p. 1580.

60. சாசனத் தமிழ்க் கவி சரிதம், ப. 37.

61. S. I. I., Vol. II. p. 374.

62. M. E. R., 1934-35.

63. 356 of 1917,

64. "கண்டராதித்தர் திருநாமத்தால் திருநல்லமுடையார்க்குத் திருக்கற்றளி எழுந்தருளுவித்து” என்பது சாசன வாசகம், 450 of 1908.

65. இம் மாதேவி இப்போது கோனரி ராஜபுரம் என வழங்கும் திருநல்லத்தில் கற்கோயில் கட்டினார்; தென் குரங்காடுதுறை, திருமணஞ்சேரி முதலிய தலங்களிலும் கற்றளிகள் அமைத்தார்; உய்யக்கொண்டான் திருமலையென்று பிற்காலத்தில் பெயர் பெற்ற திருக்கற்குடியில் அடைந்த விழுமியார்க்குப் பொன்னாலும் மணியாலும் இழைத்த திருமுடி யணிந்து மகிழ்ந்தார்; 85 of 1892.

86. 490 of 1925.

67, 480 of 1925; 494 of 1925.

68. 481 of 1925.

69. பாண்டியர் வரலாறு (சதாசிவ பண்டாரத்தார்) ப. 39.

70. S. H. I., Vol. III, Nos. 15, 16, 17.

குலமும் கோவும்

161


71. The Leyden grant.

72. மும்மடிச் சோழன் என்றும் சாசனங்களில் வழங்கக் காணலாம். மும்மடி என்பதற்கு மற்றையோரினும் மும்மடங்கு வலிமையுற்றவன் என்று பொருள் காண்பர் சிலர். -முதல் இராசராச சோழன் (உலகநாத பிள்ளை) ப. 41.

73. உய்யக் கொண்டார் என்ற தொடர் திருநாவுக்கரசரது வாக்கிலே பிறந்ததாகும். “மாதுயரம் தீர்த்தென்னை உய்யக்கொண்டார். மழபாடி மேய மழுவாளனார்” என்று ஈசனைப் போற்றினார் திருநாவுக்கரசர்.

74. 255 of 1914.

75. தஞ்சை நாட்டு மாயவர வட்டத்தில் அருமொழித் தேவன் என்ற பெயருடைய இரண்டு ஊர்களும், நாகப்பட்டின வட்டத்தில் ஓர் அருமொழித் தேவனும் உள்ளன. தென் ஆர்க்காட்டுச் சிதம்பர வட்டத்திலும் அருமொழித் தேவன் என்னும் ஊர் உண்டு.

76. 216 of 1908.

77. அங்கு இராஜேந்திர சோழன் பெயரால் மதுராந்தகன் என்பான் கட்டிய சிவாலயம் இராஜேந்திர சோழேச்சரம் என்று பெயர் பெற்றது. (31 of 1896) சுந்தர பாண்டியன் அக்கோயிலுக்கு நிவந்தம் அளித்தான்.

78. I. M. P., p. 480.

79. அங்குச் சுந்தர சோழன் திருமகளாகிய குந்தவைப் பிராட்டியார் இரவிகுல மாணிக்க ஈச்சரம் என்ற சிவாலயமும், குந்தவை விண்னகர் என்ற திருமால் கோவிலும், குந்தவை ஜினாலயம் என்னும் ஜைனக் கோயிலும் கட்டினாள். (8 of 1919). இரவிகுல மாணிக்கம் என்பது இராஜராஜனது விருதுப் பெயர்.

80. M. E. R. 162 ஊரும் பேரும்

81. 616 of 1912.

82. ஜெயங் கொண்டான் - செஞ்சி வட்டம் - தென் ஆர்க்காடு. ஜெயங் கொண்டான் - சிதம்பர வட்டம் - தென் ஆர்க்காடு. ஜெயங் கொண்டான் - திருப்பத்துார் வட்டம் - இராமநாதபுரம்.

83. Trichinopoly Gazetteer, Vol. p. 282.

84. 386 of 1922.

85. 278 of 1910; 256 of 1913; 364 of 1908.

86. 204 of 1908.

87. 132 of 1910.

88. 171 of 1894.

89. 47 of 1913.

90. 346 of 1901.

91. 421 of 1902.

92. ஆவி என்பது குளம், இராஜராஜன் வெட்டிய குளத்தின் பெயர் ஊருக்கு அமைந்தது போலும்.

93. 127 of 1919.

94. 7 of 1892.

95. S.L.L, Vol. II., p. 7.

96. 196 of 1919

97. 222 of 1909.

98. 576 of 1908.

99. 490 of 1911.

100. 271 of 1927.

101. 642 of 1916.

102. I. M. P. p. p. 554-556. 103. கங்கை கொண்டான் - திருநெல்வேலி வட்டம், திருநெல்வேலி நாடு. கங்கை கொண்டான் - முதுகுளத்துர் வட்டம், இராமநாதபுரம், கங்கை கொண்டான் - பரமக்குடி,

கங்கை கொண்டான் - விருத்தாசலம், தென் ஆர்க்காடு.

104. 244 of 1910.

105. 45 of 1921.

106. 389 of 1922.

107. 271 of 1915.

108. 484 of 1907.

109. 359 of 1911.

110. 114 of 1919.

111. 190 of 1907.

112. 433 of 1924.

113. 309 of 1918.

114. வானவன் மாதேவி என்ற பெயருடைய அரச மாதேவியார் பலர்: (1) கந்தர சோழன் தேவியும் முதல் இராஜராஜ சோழன் தாயும் ஆகிய வானவன் மகாதேவி, (2) உத்தம தேவியாகிய வானவன் மகா தேவி, (3) இராஜராஜன் இராஜேந்திரன் தாயும் ஆகிய வானவன் (4) ராஜேந்திரன் தேவியாகிய வானவன் மகாதேவி,

115. 160 of 1902.

116. 380 of 1923; M. E. R., 1923. p 30/

117. பெருந்தொகை, 1243.

118. 628 of 1904. 119. I. M. P, pp. 400-401.

120. சாசனத் தமிழ்க்கவி சரிதம், ப. 7

121. புறநானூறு, 99.

122. 38 of 1913. காரிக்குடிக் கயிலாசமுடைய நாயனார்க்கு வடகரைக் கரிகால சோழவள நாட்டைச் சேர்ந்த ஊற்றங்கரையென்னும் அழகிய கூத்தநல்லூரைச் சித்திரைத் திருநாட் சிறப்புக்காக வழங்கிய செய்தியைக் கூறுவது இச்சாசனம்.

123. கோழீச்சுரதேவர் திருத்தல வரலாறு, ப.29.

124. 141 of 1910.

125. 46 of 1923.

126. பெருந்தொகை, 983.

127. சண்டேசுர நாயனார் புராணம், 59.

128. சோமாசி மாறநாயனார் புராணம், 1.

129. M. M. Vol. III, p. 778.

130. பொதும்பு என்பது சோலை. சோலையினிடையே எழுந்த ஊர் பொதும்பில் என்று பெயர் பெற்றது போலும்.

131. கிண்ணிமங்கலம், மதுரைத் திருமங்கல வட்டத்தில் உள்ளது.

132. 109 of 1928.

133. 535 of 1911.

134. The C. M. S. Tinnevelly, p. 46.