தமிழரின் மறுமலர்ச்சி/தமிழரின் மறுமலர்ச்சி

தமிழ்! தமிழ்!!

"ஏன் சுவாமி! என்ன அபசாரம் செய்துவிட்டேன்?"

"அபசாரம் செய்யவில்லையா? உனக்கு விசேஷ ஆணவம் பிடித்து விட்டது. எதற்கும், எப்போதும், தமிழ் தமிழ்!! என்று கூவுகிறாய். தமிழில் பேசு; தனித் தமிழைத் தேடு; தமிழிலே எழுது; தமிழில் பாடு என்று கிளர்ச்சிகள் செய்கிறாய். தமிழர் நாகரிகம், தமிழர் நிலை என்று பேசுகிறாய். தமிழ் நாடு என்றும் கேட்கிறாய்.உன் தொல்லை வளர்ந்து விட்டது."

"இதுவா அபசாரம்? தமிழன் தமிழை எழுத்தில், எண்ணத்தில், இசையில்-- காண, கேட்க விரும்புகிறான். இது எப்படித் தவறாகும்?"

தமிழ் இசை ஏன்?

"தமிழ் இசை ஏன்? இருக்கிற இசை போதாதா? இத்தனைக் காலமாக இருந்து வந்த 'சுஜன ஜீவனா'வும் இனிமை ததும்பும் 'சுனோ சுனோ'வும் இருக்கும்போது, தமிழ்ப் பாடல்கள் என்று வேறு ஏன் வேண்டும்?"

"தமிழனுக்குத் தமிழ்ப் பாடல் வேண்டாமா?"

"தமிழா, நீ இங்ஙனம், எதிலும் தமிழ், தமிழ் என்று பேசிக்கொண்டே போகிறாய். அது எங்கு கொண்டுபோய் விடும் தெரியுமோ? நீ குறுகி, கூனி குவலயம் அறியாத் தவளையாகி விடுவாய்."

"இல்லையே! தமிழில் எழுதும்போது, இன்பம் காண்கிறேன். தமிழ்க் கவிதை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது. தமிழ் இசை, நெஞ்சை அள்ளுகிறது. தமிழில் இருக்கும் இனிமையை உண்ண நான் அவாவுவது குற்றமாயின், நான் குற்றவாளிதான். ஆனால், உமது நோக்கம் என்ன? நீ தமிழனா? ஆமெனில், உமக்கேன் இந்தத் தமிழ்ப்பற்று உண்டாகவில்லை? தமிழைக் கண்டதும் ஏன் பதைக்கிறீர்? அது எழுத்தாக வந்தால் எதிர்க்கிறீர். இசையில் வந்தால் சீறுகிறீர். நீர் ஆரியராதலால் எதிலும் ஆரியம் இருக்கப் பாடுபடுகிறீர். ஆரியத்தை ஒழிக்க, தமிழர் எந்தத் துறையிலே பாடுபட முன்வந்தாலும் எதிர்க்கிறீர். இனி உமது எதிர்ப்பைக் கண்டு, தமிழன் தன் காரியத்தைக் கவனியாது இருக்கப் போவதில்லை. 'தமிழா! உன் தோள் வலிமை, தரணியெல்லாம் அறியாதோ!" என்றதோர் இசை கேட்டேன். தடுக்க முடியாத பேராவல் கொண்டேன். தமிழே விழைவேன். அதை வளர்க்கவே முயல்வேன்."

இது ஊரார் பல்வேறு இடங்களில் உரையாடுவதன் சுருக்கம். தமிழர் என்ற சொல் கிளப்பிவிட்ட எழுச்சி, எங்கெங்கு ஆரியம் தங்கித் தொல்லை தருகின்றதோ, அங்கெல்லாம் அதனை அறுத்தொழிக்கக் கிளம்பிவிட்டது. அது கண்டு ஆரியர், தமது ஆதிக்கம் அழிவுபடுவதைத் தடுக்க, இன்று அண்டமுட்டக் கூக்குரலிட்டுப் பார்க்கின்றனர். நிலவொளியைக் கண்டு குக்கல் குலைக்குமாம்!

தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் கிடையாது. பாட வேண்டுமானால், தமிழ்ப் பாடகர்கள் கூச்சப்படுகின்றனர். தியாகய்யரின் கீர்த்தனங்களென்ன, சாமா சாஸ்திரியார் சுருதிகளென்ன, மற்றுள்ள தெலுங்குக் கீர்த்தனங்களைப் பாடினால் சங்கீத விற்பன்னர்கள் என்று பெயர் கிடைக்கும். தமிழில் என்ன பாடுவது! மளமளவென்று ஆறு தியாகய்யர் கிருதிகள் பாடிவிட்டு, 'சுரம்' இரண்டு கிருதிகளுக்குப் போட்டுவிட்டு, ராகமாலிகையை ரசமாகப் பாடிவிட்டு ஜாவளிக்குப்போய், கடைசியில் இரண்டு தமிழ் துக்கடாவைக் கிடுகிடுவெனப்பாடிவிட்டு, "நீ நாம ரூபகு" என்று மங்களம் பாடிவிடுவதைச் சங்கீத வித்வான்கள் சம்பிரதாயமாக்கி விட்டனர். பெரிய வித்வான் என்பதற்கு இலட்சணமே இதுதான் என்று கருதிவிட்டனர். இதனை எதிர்த்து யாராவது தமிழ்ப்பாட்டுப் பாடக் கூடாதா என்றால், நாடக மேடைபோல் ஆகிவிடுமே என்று நையாண்டி செய்வர். இது தமிழ்நாட்டில் பல காலமாக இருந்து வரும் வாடிக்கை.

புரிந்து கொள்ள வேண்டாமா?

இசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடியதான மொழியில் இருக்க வேண்டும். இது அறிவுத் துறையில் அரிச்சுவடி! இதனை. 'ஆரிய மேதாவிகள்' மறுக்கின்றனர்! என்ன அறிவீனம்!

நீக்ரோவின் நடனத்தைக் காண்கிறோம்; கண்டு விட்டு நகைக்கிறோம். ஆனால் நீக்ரோவுக்கு நெஞ்சு இழைகிறது நீக்ரோ நடனத்தைக் கண்டு! ஏன்? அதனைப் புரிந்து கொள்கிறான்.

நேற்று சித்தூர் பாடினார் அருமையாகப் புஷ்பராகத்தை ஜொலிக்கச் செய்து என்று கூறினால், புஷ்பராகம் என்று ஒரு ராகம் இருப்பதாக எண்ணிக்கொள்ள எத்தனையோ பேர்கள் உண்டு. அது அவர்கள் குற்றமல்ல; வராகம் என்று இன்னொரு ராகம் இருப்பதாக நம்பினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ராக விஷயங்கள், மக்களில் நூற்றுக்கு எத்தனை பேருக்குத் தெரிய முடியும்? கருப்பையா என்பதற்கு சுப்பையா என்று கையொப்பமிடும் பேர்வழிகள் நிரம்பியுள்ள நாட்டிலே நாம் இருக்கிறோம்.

கச்சேரிகளுக்குச் சென்று திரும்பியவர்கள். இன்னின்ன பாடல்கள் இன்ன ரசத்துடன் பாடப்பட்டன என்பதைப் பேசுவதைவிட மிருதங்கக்காரரின் உச்சிக்குடுமி இத்தனை முறை அவிழ்ந்து விட்டது; வித்துவான் மூன்றுமுறை பால் குடித்தார்; பிடில் வாசிப்பவரின் முகம் சில சமயங்களிலே மாருதி வேடமாயிருந்தது என்று; இவைகளை அதிகமாகப் பேசுவதைக் கேட்கிறோம். காரணம், அவர்கள் கேட்ட பாடல்களில் பல அவர்களுக்குப் புரிவதில்லை.

பெரும்பாலும் தியாகராஜ கீர்த்தனங்களையே பாடுகிறார்கள். அதிலே அடிக்கடி ராமா ராமா என்று வருவதைத் தெரிந்து கொண்டிருப்பார்களே ஒழிய, அதன் கருத்தை அறிந்து கொண்டவர்கள் அதிகம் பேர் இருக்க முடியாது. தமிழ்நாட்டிலே தெலுங்குக்கீர்த்தனங்களுக்குப் பொருள் விளங்க முடியுமா? ஆந்திர நாட்டிலே 'அரவம்' தெரிகிறதா?

ராஜா சர் செய்த பேருதவி

எனவே, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தமிழோடு இசை பாட மறந்தவர்களுக்குத் தமிழ்ப் பாடல்கள் பாட ஓர் நல்ல சந்தர்ப்பத்தை உண்டாக்கி வைத்தார். நல்லதோர் தொகையை நன்கொடையாக ஒதுக்கிவைத்து, தமிழ்ப் பாடல்கள் இயற்றவும், பாடவும், ஆர்வம் வர ஒரு வழி கண்டார்; அதற்காகக் கூடிய சிதம்பரம் மகாநாட்டிலே இசைவல்லோர் கூடித் தமிழ்ப் பாடல்களே பெரும்பாலும் பாடப்படவேண்டும் என்று தீர்மானித்தனர்.

இசையில் ஆரியம் புகுந்து இழுக்கு செய்வதைத் தடுக்க, தமிழ்நாடு தமிழ்ப்பாடல் கேட்பதைத்தர, கொடை வள்ளல் ராஜா சர் அவர்கள் செய்த இந்தப் பேருதவிக்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள். தமிழரின் எண்ணம் ஈடேறச் செய்வது கண்டு சீறுகின்றனர்; தெலுங்குக் கீர்த்தனங்களுக்கும், இந்துஸ்தானி துக்கடாக்களுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு வாதாடுகின்றனர். தமிழர் மறுமலர்ச்சி கண்டு ஆத்திரமடைந்து ஆர்ப்பரிக்கின்றனர். 'இந்து' பத்திரிகை இசையில் தமிழ் புகுவது கண்டு, குட்டித் தலையங்கமெழுதி குறும்புத்தனமாகக் கண்டிக்கத் துணிந்துவிட்டது.

ஆரியரின் இந்த எதிர்ப்புக் கண்டு தமிழர் அஞ்சத் தேவையில்லை. தமிழ்நாட்டிலே தமிழே இருத்தல் வேண்டும். தமிழருக்குத் தமிழ் இசையே தேவை. அதுவே அவர்களுக்கு இன்பத்தைத் தரும். பார்ப்பனரின் பிழைப்பு பாதிக்கப்படும் என்று பதைத்துப் பயன் இல்லை. ஆரியத்தை இலக்கியம், எண்ணம், இசை முதலிய எல்லாத் துறைகளிலுமிருந்து விரட்டி ஒழித்தால்தான் தமிழர் தமிழராக வாழ முடியும். ஆகவே, தமிழர்கள் இந்த ஆரிய எதிர்ப்பைக் கண்டு மனம் தளராமல் தனித் தமிழ், தமிழ் இசை ஆகியவற்றிற்கு உழைத்துத் தமிழ்நாடு தனி நாடாவதையும் கண்டு களித்து வாழும்வரை உழைக்க முன்வரவேண்டும்.

இதற்குமா எதிர்ப்பு?

தமிழ் வளர்ச்சி, தமிழர் முன்னேற்றம் என்ற சொற்களைக் கேட்டால் போதும். உடனே ஒரு கூட்டத்தார் மற்ற மொழிகளுக்குக் கேடு; மற்ற வகுப்பினருக்குத் தீங்கு என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதனால் உடனே இவைகளுக்கு எதிர்ப்பு வேலை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். இவர்களுடைய விபரீத உணர்ச்சி காரணமாகவே மொழிச் சண்டை, வகுப்புச் சண்டை நமது நாட்டில் வலுத்து வருகின்றன. உண்மையிலேயே இத்தகைய நிலை ஏற்படுவதற்கு நாம் வருந்துகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு மகாநாடு நடைபெற்றது. தமிழ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற இசைவாணர்கள், இசைக்கலை அன்பர்கள், தமிழன்பர்கள் அனைவரும் அங்கு கூடினர். நான்கு நாட்கள் தமிழிசைக் 'கச்சேரிகள்' நடத்தினர். தமிழிசையைப்பற்றிப் பலர் பேசினர். அம்மகாநாட்டில் ஒரு சிறந்த முடிவும் செய்யப்பட்டது.

தமிழ் வளர்ச்சியில் நல்ல காலம்


"சங்கீதப் பள்ளிக்கூடங்களில் தமிழ்ப்பாட்டுக்களையே சொல்லிக் கொடுக்க வேண்டும்; சபைகளில் தமிழ்ப் பாட்டுக்களையே பாடவேண்டும்" என்று அம்மகாநாட்டினர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வைத்தனர்.

இத் தீர்மானத்தை எல்லா இசைக் கலைவாணர்களும் ஒப்புக் கொண்டனர். நமது நாட்டுப் பத்திரிகைகள் பலவும், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு வந்திருக்கும் நல்ல காலத்தைப் பற்றி நாவாரப் புகழ்ந்தன. தமிழ் கலை வளர்ச்சியிற் கருத்துடையவர்கள் அனைவரும் உள்ளங் குளிர்ந்தனர். இத்தகைய மகாநாட்டுக்குக் காரணமாக இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிறுவனர் செட்டிநாட்டு அரசர் சர் அண்ணாமலைச் செட்டியாரவர்களைப் பாராட்டினர். அவருடைய அரும்பெரும் முயற்சிக்கு வாழ்த்துக் கூறினர்.

தமிழில் இசைப் பாடல்கள் இயற்றியதற்குப் பரிசளிப்பதற்காகவும் செட்டிநாட்டு அரசர் அவர்கள் பெருந்தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். இச்சிறந்த வேலையைத் தனது செல்லப் பிள்ளையாகிய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலமே செய்வதற்கு முன் வந்தார்.

முத்தமிழ்

தமிழ் மொழியே, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று முப்பிரிவையுடையது. இவற்றுள் இசையென்பது இயற்றமிழிலும் உண்டு; நாடகத் தமிழிலும் உண்டு. தமிழே இசையுருவாக அமைந்தது. இசையே தமிழில்தான் முதன் முதலில் தோன்றியதென்பது பல தமிழாராய்ச்சியாளர்களின் முடிவு. தமிழாராய்ச்சியுடைய, இசைவாணர்களுடைய முடிவும் இதுதான். இத்தகைய இசைத்தமிழ் இடைக்காலத்தில் குன்றிவிட்டது.

இசைவாணர்கள் பலர் தமிழ்ப் பாடல்கள் பாடுவதே அவமானமெனக் கருதியிருந்தனர். பொருள் விளங்காத பாடல்களைப் பாடி வந்தனர்.

ஆனால், பல ஆண்டுகளாகப் பல தமிழன்பர்கள் இசைத்தமிழ் வளர்ச்சியடைய வேண்டுமெனக் கூறி வந்தனர். ஒவ்வொரு சங்கீத மாநாடுகளிலும் இதுபற்றிப் பேசப்பட்டது. இம்முயற்சி காரணமாக இசைவாணர்கள் பலரும், சபைகளில் தமிழ்ப்பாடல்கள் பாடவும் தொடங்கினர். அப்பாடல்களை இசைக்காதலர்கள் சுவைக்கவும் தொடங்கினர். தமிழ்ப்பாடல்களைத் தமிழ் மக்கள் சுவைக்கின்றனர் என்பதை அறிந்தவுடன், இசைவாணர்களுக்கும் தமிழ்ச் 'சாகித்யம்' பாடுவதில் ஊக்கம் வளர்ந்து வந்தது.

அண்ணாமலை நகரில், பல்கலைக் கழகத்தில் இசைவாணர்களின் கூட்டத்தில், தமிழன்பர்களின் ஒத்துைழைப்பின் பேரில் செய்யப்பட்ட முடிவு இசைவாணர்களுக்கு ஊக்கமளிக்கும்; இசைக் காதலர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும்! இதில் ஐயமில்லை.

அறிவுக்குப் பொருந்துமா?

ஆனால் ஒரு சிலர், அண்ணாமலை நகரில் செய்யப்பட்டிருக்கும் அருமையான முடிவைக் குறைகூறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள், தமிழிலேயே இசைபாடுவது என்று தொடங்கினால் கர்நாடக சங்கீதம் அழிந்து போய்விடும்; தியாகராஜ கீர்த்தனங்கள் மறைந்து போய்விடும்; தமிழில் கர்நாடக சங்கீதத்தை அமைக்க முடியாது என்னும் வாதத்துக்கு, நம் மாகாணப் பத்திரிகையாகிய 'இந்து'வும் ஆதரவளித்து வருகிறது.

கர்நாடக சங்கீதம் ஒருநாளும் அழியாது. கர்நாடக சங்கீதத்தை அமைத்துப் பாடக்கூடிய பாடல்கள் தமிழில் ஏராளமாக இயற்றிக் கொள்ளலாம். இதற்குச் செட்டி நாட்டு அரசரின் நன்கொடை பேருதவி செய்யும். தமிழ் நாட்டில் பண்டு தொட்டு நிலவி வரும் சங்கீதம் கர்நாடக சங்கீதமாகும். ஆகையால் தமிழ்ப் பாடல்கள் பாடுவதால் கர்நாடக சங்கீதம் அழிந்துவிடும் என்பது தமிழரின் தன்மையை அறியாதவர் கூற்று. தியாகராஜ கீர்த்தனைகள் மறைந்து விடுமென்று கூறுவதும் தவறு. அவற்றையும் இசைவாணர்கள் பாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆதலால் கர்நாடக சங்கீதம் போய்விடும்; தியாகராஜ கீர்த்தனைகள் மறைந்துவிடும் என்று காரணங்கூறி, தமிழிசையை வளர்க்கும் முயற்சிக்குத் தடை செய்வது சிறிதும் அறிவுக்குப் பொருந்தாத செயலேயாகும்.

தமிழர்கள், தமிழின் உயிர்ப் பகுதியான இசைத் தமிழை வளர்க்கவே இம்முயற்சியில் தலையிட்டிருக்கின்றனர். இம்முயற்சி செட்டிநாட்டு அரசரின் அறச் சிந்தையாலும், நன்கொடையாலும் நிறைவேறத் தொடங்கியிருக்கிறது. இனி இம்முயற்சியைப் யாரும் தடுக்க முடியாது. இம்முயற்சியை பொதுமக்களும் ஆதரிக்கின்றனர்; இசைவாணர்களும் போற்றுகின்றனர்; தமிழன்பர்களும் பாராட்டுகின்றனர். ஆதலால் இசைத்தமிழ் இனி வளர்ச்சியடையும் என்பது உறுதி.

அன்றியும், அண்ணாமலை மகாநாட்டின் முடிவு கண்டு சிலருக்கு ஆத்திரம் உண்டான காரணம் விளங்கவில்லை. அங்கு வேற்றுமொழிக்கோ, கலைக்கோ எதிரான முடிவு ஒன்றுமே செய்யப்படவில்லை. அங்கு கூடியிருந்தவர்களுக்கு அத்தகைய உணர்ச்சி, எண்ணம் சிறிதுகூட இருந்ததாகத் தெரியவில்லை.

அண்ணாமலை மகாநாட்டுத் தீர்மானத்தில் 'தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும்' என்றுதான் தீர்மானம் செய்திருக்கின்றனர். தெலுங்குப் பாடல்கள் கூடாது; தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடக்கூடாது என்று சொல்லவில்லை. தெலுங்கின் மீதோ, தியாகராஜ கீர்த்தனத்தின் மீதோ எந்தத் தமிழன்பர்களுக்கும் தமிழிசைப் புலவர்களுக்கும் வெறுப்பில்லை; பகைமை இல்லை.

செட்டிநாட்டு அரசர் வகுப்புவாதக் கருத்துடன் இக்காரியத்திற்கு உதவி செய்யவில்லை; அரசியற் கருத்துடனும் இம்முயற்சிக்குத் துணை செய்யவில்லை. செட்டிநாட்டு அரசரை நன்றாக உணர்ந்தவர்கள், அவரால் அதிக உதவி பெற்று வருகிறவர்கள் எந்த வகுப்பினர் என்பதை அறிவார்கள். அவர் எந்த அரசியல் கட்சியிலும் கலந்து கொள்ளவில்லை; அரசியலை விட்டு விலகியே இருக்கிறார். ஆதலால் தமிழிசையை வளர்க்க வேண்டும் என்னும் அவருடைய நோக்கத்திற்கு, வகுப்பு வெறுப்பையோ, அரசியலையோ காரணமாகக் கூற முடியாது.

தமிழ்க் கலை விரோதிகள்

தமிழர்கள் தமிழ்ப்பாடல்கள் வேண்டுமென்று கேட்பது பிறமொழியின்மீது வெறுப்பாகுமா? தமிழில் நல்ல பாடல்கள் இயற்ற முயல்வது பிறமொழிக்குச் செய்யும் கெடுதியாகுமா? தமிழ்க்கலையை வளர்ப்பதற்குத் தமிழர்களும், தமிழன்பர்களும் செய்யும் முயற்சிக்குக் கூடவா தடை விளைவிக்க வேண்டும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறவர்களைத் 'தமிழ்ப் பகைவர்கள், தமிழ்க் கலை விரோதிகள், தமிழரின் எதிரிகள்' என்று கூறத் தொடங்கினால், அதை இல்லை என்று கூற முடியுமா?

முஸ்லிம்கள் தங்கள் கலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறவில்லையா? அவைகளின் தனித் தன்மையை அழியாமற் காப்பாற்றவேண்டும் என்பதையும் ஒரு காரணமாகக் காட்டித்தானே அரசியலிலும் பாதுகாப்புக் கேட்கின்றனர். அவர்கள் தங்கள் கலைகளையும் அவற்றின் கருத்துக்களையும் காப்பாற்ற முயல்வதை, யாரேனும் குற்றமென்று கூறமுடியுமா? தடுக்க முடியுமா? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு மாத்திரம் ஏன் முட்டுக்கட்டை போடவேண்டும்? ஏன் வகுப்புவாதம் கற்பிக்க வேண்டும்?

அண்ணாமலை மகாநாட்டுத் தீர்மானம் ஒரு வகுப்பினரால் நிறைவேற்றப்பட்டதன்று; ஒரு கொள்கையினர் நிறைவேற்றியதன்று; பல வகுப்பினரும் பல கொள்கையினருமே கூடிச் செய்த முடிவுதான் அது. பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் அனைவரும் அம்மகாநாட்டிற் கலந்து கொண்டனர். அம் மகாநாட்டின் முடிவைப் பற்றிக் குறைகூற வீண் வகுப்பு வேற்றுமையையும், மொழி வேற்றுமையையும் கிளப்பி விடுவதற்குக் காரணம் நமக்கு விளங்கவில்லை. 'இந்து' பத்திரிகைகூட இந்த வீண் கிளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இம்மாதிரியே தமிழ்க்கலை வளர்ச்சிக்காகச் செய்யப்படும் எல்லா முயற்சிக்கும் ஒரு கூட்டம் தடை செய்து கொண்டிருந்தால், இறுதியில் தமிழர் நிலை எப்படி முடியும்? தமிழ்க் கலை வளர்ச்சிக்கு உதவி செய்ய வேண்டியதே தமிழன்பர்கள் கடமை; தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கடமை.

தாய் மொழியிலேயே எல்லாம்

தமிழ் நாட்டைப்போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியில் சங்கீதம் பாடுவதைக் கேட்க முடியாது. ஒவ்வொரு நாட்டினரும் தங்கள் தங்கள் தாய் மொழியிலேயே எல்லாக் கலைகளையும் வளர்ச்சி செய்து வருகின்றனர்; இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப்போலத் தாய்மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காண முடியாது.

இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்தது. இன்றும் தமிழோடு இணை பிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக் காலத்தில் மழுங்கி விட்டது. அதை விளக்கவே அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முனைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கலை வளர்ச்சித் துறையிலும், வீண் பகையையும் வெறுப்பையும் கிளப்ப வேண்டாமென்று இக்கூட்டத்தார்க்கு எச்சரிக்கை செய்கின்றோம்.

இதற்கு ஈடாகுமா?

வளைந்து வளைந்தோடும் அந்த அருவி, வெண்மணலைத் தழுவிக்கொண்டு. தழதழத்த குரலில் பாடுவது கேளீர்! எந்தப் பாட்டு இதற்கு ஈடாகும்?

செடியும் கொடியும், தளிரும் இலையும், மலரும் கனியும் ஆடும் காரணம் அறியீரோ! அதோ, வீசும் காற்றுடன் கலந்து வரும் இசை கேட்டே அவைகள் ஆடுகின்றன. நடன சுந்தரிகள் போல!

பச்சிளங்கன்று, தாயைக் கூப்பிடும் குரல் கேட்டீரோ? அதிலுள்ள இசை இன்பமே தனியானது!

போர் வீரன், தனது உடலில் கவசமணிந்து, வாளை உறையினின்றும் எடுக்கிறானே, அச்சமயம் கிளம்பும் ஒலி, வீர உள்ளம் படைத்தோர்க்கு இசை?

இம்மட்டுந்தானா? குழலா இனிது? யாழா இனிது? மக்களின் மழலையே இனிது. ஈடு எதிர் இல்லாத இசையாகும் இது!

இங்ஙனம் மக்கள் இசை இன்பத்தை, ஒடும் அருவியில், வீசும் காற்றில், விளையாடும் கன்றின் குரலில், கொஞ்சும் குழந்தையிடம், வீரரின் செயலில், காதலியிடம் காண்பர்! களிப்பர்!!

மலருக்கு மணம்

இசை இன்பம், இயற்கையிலும், தமது அன்புக்குரிய இடங்களிலும் இருக்கக் காண்பர். உள்ளத்தில் களிப்புக் கொள்வர்! பிறகு,ஓடும் அருவி பாடினது என்ன எனின், கூற இயலாது. இனிமை இருந்தது என்று மட்டுமே சொல்ல இயலும். களிப்புடன் கருத்துக்கு விருந்தும் இருக்க வேண்டுமாயின், இசை இன்பத்தோடு பொருள் இன்பம் இழைந்து குழைந்து இருத்தல் வேண்டும். காதுக்கு இனிமையும், கருத்துக்கு இனிமையும் தேவையெனில், எம்மொழியில் இசை பாடப்படுகிறது என்பதைக் கவனித்தாக வேண்டும். இது பாடலைப் பொறுத்தமட்டில் இன்றியமையாததாகும். இசைக் கருவிகள் நாதத்தைத் தரும். மொழிப் பிரச்சினை அங்கு இல்லை. ஆனால் வாய்ப்பாட்டுக்கு மொழிப் பிரச்சினை முக்கியம். அவர் பாடுகிறார் என்றால் 'சஹானா ராக ஆலாபனம் செய்தார்; பிறகு இந்தக் கிருதியைப் பாடினார்; அதிலே ராம சௌந்தரியம் அழகாகக் கூறப்பட்டது' என்றுதான் அக்கிரகாரமும் பேசும். சாஹித்தியம், சங்கீதத்துக்கு மலருக்கு மணம் போன்றது. அந்த மணம் நறுமணமாக இருக்க வேண்டும் என்று தமிழர் கூறுகின்றனர். 'இது தகுமா? இது முறையா?' என்று ஆரியர் ஆர்ப்பரிக்கின்றனர். ஓடிந்த உள்ளங்களை ஒன்றாக்குவிக்கும் இசை விஷயமாக இன்று எழும் கிளர்ச்சி இதுவரை ஒடியாதிருக்கும் உள்ளங்களையும் ஒடித்துவிட முற்பட்டுவிட்டது.

ராஜா சர் அண்ணாமலையார் ஆற்றியுள்ள அருந் தமிழ்த்தொண்டை, இங்ஙனம் திரித்துக் கூறி, அவரது முயற்சியைக் குலைப்பது கண்டு, நாம் மனங் கலங்கவில்லை; கொதிப்படையவுமில்லை. மாறாகக் களிக்கிறோம்! ஏனெனில், வகுப்புவாத நோக்கமற்று, இசைக்கும் தமிழுக்கும் அவர் தொண்டாற்றியதை ஆரியர் எதிர்ப்பதன் கருத்தை அவர் உணர இஃதோர் வாய்ப்பு! அதனை அவர் உணர்ந்து அவரும் ஒர் வகுப்புவாதியாகி விட்டால், அக்கிரகாரத்தின் ஆதிக்கம் அழிவது திண்ணம். ஆகவே, இன்று ஆரியர் கிளப்பும் எதிர்ப்பினால், அவர்களுக்கே கேடு வரத்தான் போகிறது என்று நிச்சயமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கை நமது மனதில் களிப்பை ஊட்டுகிறது.

அறைகூவி அழைக்கின்றோம்

"கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ்மீது மோதிக் கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடைசெய்யுங்கள். தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை, ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள், தமிழன், தன்னைத் தமிழன் என்றுரைத்தால், சீறுங்கள். தமிழ் மொழியில் இசை இருக்கட்டும் என்றால், எதிர்த்துப் பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள். தமிழனைத் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளையிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவுபடுத்துங்கள். சாப்பாட்டு விடுதிகளிலும், சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உமது ஆணவச் செயலை, திமிர் வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம். ஆம்! உமது எதிர்ப்பு வளர வளரத்தான்; தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல் பட்ட புலிபோலச் சீறுவான். அந்தச் சீற்றம் கிளம்பி விட்டால், நாங்கள் 'ஜெயமுண்டு பயமில்லை மனமே' என்று பாடும் காலம் பிறக்கும்! 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற எண்ணம் உருவமாக அமையும் காலம் தோன்றும். சேரனும், சோழனும், பாண்டியனும் இறந்துபடினும், அவர்கள் காத்தாண்ட செந்தமிழ் நாட்டில் தமிழராட்சி தோன்றும். ஆகவே ஆரியர்களே, ஆரம்பியுங்கள் உங்கள் போரை என்று நாம் அறைகூவி அழைக்கின்றோம்."

தமிழ் ஆட்சி

ஆனால் தமிழ் இசைபற்றிப் பேசும்போது, சொத்தைக் காரணங்களை ஆரியர்கள் கூறுகின்றனர். அது நமக்குப் பிடிக்கவில்லை. அறிவு படைத்த யாருக்கும் பிடிக்காது. தமிழ் இசை என்று ஆரம்பிக்கும் தமிழன் வேறு எங்குமே தமிழ் ஆட்சிதான் தேவை என்றல்லவா கூறத் தொடங்குவான். அது நமக்கன்றோ ஆபத்தாக முடியும். ஆகவே, முளையிலேயே கிள்ளுவோம். தமிழ் உணர்ச்சியைத் தலைத்தூக்க ஒட்டாது அடிப்போம் என்பதே ஆரியரின் நோக்கம். தமிழகத்தின் தமிழ் உணர்ச்சி,தமிழர் என்ற உணர்ச்சியையும், தமிழ்நாடு தனிநாடு என்ற உணர்ச்சியையும் வளர்த்து விடும் என்ற அச்சம் ஆரியரைப் பிடித்துக் கொண்டது. அதனை வெளிப்படையாகப் பேச வெட்கி; "இசையில் மொழிப்போர் என்ன? தியாகய்யர் என்னாவது? சியாமா சாஸ்திரிகள், தீட்சிதர் கிருதிகள் என்னாவது?" என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

அண்ணாமலை நகரில் கூடினோர், மேற்படி கிருதிகள் அழிந்தொழிய வேண்டும் என்று கூறினாரில்லை. அவைகள் உள்ளன. ஆனால் தமிழ் நாட்டிலே தமிழ் இசை இருக்கட்டும்; இதற்கு ஆதரவு தேடுவோம் என்று கூறினர். இதற்கும் எதிர்ப்பு இருக்கிறதென்றால், பிறகு, தமிழகத்துக்குத் தேவையில்லாதவைகளைத் துரத்தும் வேலை, மும்முரமாக நடக்கும் என்பது திண்ணம்.

தமிழில் பாட்டு இல்லையா?

"சுதேசமித்திரன்" இதுபற்றி எழுதுகையில், "நமது சங்கீத வித்வான்கள் கச்சேரிகளில் தமிழ்ப் பாட்டுக்களை ஏன் அதிகமாகப் பாடுவதில்லை? கச்சேரி களை கட்டத் தகுந்த போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லாத தோஷந்தான்" என்று எழுதுகிறது.

தமிழ்நாட்டிலே, தமிழர் முன்னால் பாட, போதிய பாட்டுக்கள் தமிழில் இல்லை! இதைவிட வெட்கக்கேடான நிலைமை வேறு இருக்க முடியுமா என்று கேட்கிறோம். தமிழனின் தன்மானம் இருக்கும் விதம் இது!

அவனது நாட்டில் அவன் மொழியில் பாட்டு இல்லை!

ஜெர்மன் நாட்டிலே ஜெர்மன் மொழியில் பாடல்கள் உண்டு!

நீக்ரோ நாட்டிலே நீக்ரோவின் மொழியில் பாட்டு உண்டு!

வங்காள நாட்டிலே, வங்க மொழியிலே பாட்டு உண்டு!

தமிழ் நாட்டிலே, தமிழ் மொழியிலே போதுமான அளவு கச்சேரி களை கட்டத் தகுந்த பாட்டு இல்லை; 'இது ஏன்'? மித்திரன் கூறுமா? என்று கேட்கிறோம். தமிழர் நாடோடிக் கூட்டமா? இல்லை: பழங்குடி மக்கள்! இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள்! தமிழர் அறிவுத் துறையிலே பழக்கமற்றவர்களா? இல்லை. பலப்பல இனத்தார் பக்குவமடையா முன்னம் அறிவுத்துறையில் மேலோங்கி விளங்கியவர்கள்; தமிழர் இசை அறியாதவரா? இல்லை. அவர்களின் மொழியே இயல், இசை, நாடகம் என்ற மூன்று முத்துக்கள் கொண்டது. பின்னர் ஏனைய்யா, தமிழ்நாட்டிலே போதுமான தமிழ்ப் பாட்டுக்கள் இல்லையென்கிறீர்கள் என்று, மித்திரனையும் மற்றையோரையும் கேட்கிறோம்!

மித்திரன் ஆத்திரம்

குருடன் காணமாட்டான்; செவிடன் கேட்க இயலாது; முடவன் ஓடமாட்டான்; அதுபோல், தன்மானத்தைப் பறி கொடுத்த இனம், தன் கலை, தன் மொழி, தன் நிலை குலைந்து தவிக்கும் அத்தகைய நிலை தமிழனுக்கு ஏற்பட்டதால்தான், தமிழிலே பாட்டு இல்லை என்று கூறும் கேவலமான, கொடிய, இழிவான நிலையிலே இருக்க வேண்டி வந்தது. மித்திரன் கூறியுள்ளதை மனசில் பதியவைத்துக் கொள்ள வேண்டுகிறோம்.

பண்டைப் பெருமை வாய்ந்த தமிழகத்திலே தமிழில் பாடல்கள் கிடையா; ஆகவே, விழியற்றவனுக்குத் தடி துணையாவதுபோல் வேற்று மொழியிலே, இசை பாடக் கேட்கிறான்.

இந்த நிலைமையை மாற்றி, மற்ற எந்நாட்டிலும் உள்ளது போலத் தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாட்டுக்கள் வளர வழிச்செய்யத் தமிழ் வள்ளல் முற்படுகிறார். அதை 'மித்திரனும்' அவரது மித்திரர்களும் கெடுக்க முற்படுகின்றனர். அது ஏன்?

ஆரிய மித்திரர்கள் எண்ணம் அதுவல்ல! தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்கள் இல்லை. வேறு பாடல்கள் உள்ளன. அதைக் கொண்டு திருப்தி அடையுங்கள் என்பது ஆரியரின் வாதம்.

தமிழ் நாட்டிலே தமிழ்ப் பாடல்களை வளர்க்க வேண்டுமென்றால், தமிழ்ப் பாடல்கள் பாடுவோருக்கு ஆதரவு தருவதாகவும், தமிழ்ப் பாடல்களைப் பாடும்படி ஊக்குவிக்கக் கழகங்கள் இருந்தால் முடியுமா? வெறும் ஏட்டில் எழுதி வைத்தால் முடியுமா? எனவே, அண்ணாமலை நகரில் கூடினோர், சங்கீதக் கழகங்களில் தமிழ்ப்பாட்டுக்களைத்தான் அதிகமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சங்கீத சபைகளில் பெரும்பாலும் தமிழ்ப் பாட்டுக்களையே அடுக்கி வித்வான்கள் அவற்றைப் பாடும்படிச் செய்ய வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

இதற்குத்தான் எதிர்ப்பு

இன்று தமிழ்ப் பாடல்கள் இருப்பினும், பாடுவதில்லை. பாடினாலும், கச்சேரியின் கடைசி பாகத்தின் துக்கடாக்களாகவே இருக்கும். பாடகரின் முழுத்திறமையையும், இராக ஆலாபனத்திலும், பல்லவியிலும், கிருதிகளிலும் பாடிக்காட்டி ஓய்ந்த பிறகு, "வித்வாம்சாள்' களித்தான பிறகு விஷயமறியாத சாதாரண ஜனங்களுக்கு ஏதோ இரண்டொரு சில்லறை உருப்படிகள் பாடுவோம் என்று பாடகர், "சிக்கல் சிங்கார வடிவேலா உனை" என்று பாடுவார். இல்லையேல், "பித்தா பிறை சூடி" என்பார். கச்சேரி முடிகிறது என்பதற்குத் தமிழ்ப் பாடல்களை அறிகுறியாக வைத்துக் கொண்டனர்.

இதற்குக் காரணம், சபை அல்ல; சபையினர் தமிழர். தெலுங்குக் கிருதிகள் அவர்களுக்குப் புரிவதில்லை. வித்வானுடைய அபார திறமையை சபையிலே பலர் அவருடைய முகத்திலே தோன்றும் பலவித பாவங்களைக் கண்டோ, அவருடைய அவலட்சண அங்க அசைவுகளைக் கண்டோ, துடையில் போட்ட தாளம், அவிழ்ந்த குடுமி, நெகிழ்ந்த ஆடை, பக்கவாத்தியக்காரருக்கும் வித்வானுக்கும் நடக்கும் பார்வைகள், கனைப்புகள், கண் சிமிட்டல்கள், கால் தட்டுதல் இவைகளின் மூலமாகவோ தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முன் வரிசையிலே உள்ள சிலருக்கு வித்வானின் அருமை தெரிந்திருக்கும். ஆனால் சபை, முன் வரிசையோடு முடிந்து விடுகிறதா?

சபையினர் கவனிக்க முடியாத--ஏனெனில், தெரிந்து கொள்ள இயலாத-- மொழியிலே பாடல்களை வித்வான்கள் பாடுவதுதான், "வித்வத் இலட்சணம்" என்ற தப்பு எண்ணம் வளர்க்கப்பட்டு அத்தகைய பாடல்களைக் கற்றுக் கொடுக்கும் கழகங்களே அதிகரித்து, அத்தகைய பாடல்களையே போற்றும் சங்கீத சபைகள் வளர்ந்ததனால்தான் தமிழ்ப் பாடல்கள் வளரவில்லை. தமிழ்ப் பாடல்கள் அதிகரிக்க வேண்டுமானால், புதுப்பாடல்கள் இயற்றப்பட்டு, அவைகளைக் கற்றுக் கொடுக்கக் கழகங்கள் உற்சாகத்தோடு முன்வந்து, அத்தகைய பாடல்களைப் பாடும்படி சங்கீத சபைகள் ஊக்குவித்தால்தான் முடியும்.

தமிழிலே புதுவைக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் இயற்றிப் புத்தகக்கட்டு நிலையத்தில் தங்கினால் பயன் என்ன பாடகர்கள் அவைகளைப் பயில வேண்டும்; பாட வேண்டும்.

பழைய பல்லவி

தமிழ் நாட்டிலே தமிழ்ப்பாடல் தேவை என்று கருதுபவர், அண்ணாமலை நகர மாநாட்டார் முயற்சியை எதிர்க்கார். ஆரியர் எதிர்க்காமலிரார்; ஆரியர் எதிர்ப்புப் பற்றி நாம் அஞ்சத் தேவையுமில்லை. தமிழர் தமிழ் இசையை வளர்க்கத் தீர்மானித்து விட்டனர் என்ற செய்தியைத் தமிழர் பொதுக்கூட்டங்கள் கூட்டித் தெரிவித்து விட்டனர். தமிழகம் இந்த முயற்சியில் முழுமனதுடன் ஆதரவு தருகிறது என்பது தெரிந்துவிட்டால் ஆரியர் சுருண்டு விடுவர் என்பது திண்ணம். ஆரியத்தைக் காப்பாற்ற அவர் தம் ஆட்சியிலே போலீசும், ராணுவமும், பொக்கிஷமும் பிறவுங் கொண்டும் முயன்றே தோற்ற ஆரியர்கள், விழித்த தமிழன் வெஞ்சினத்துடன் வீறு கொண்டெழுந்தால் என்ன செய்ய இயலும்?

தனித் தமிழ் கேட்டால், மொழி வளம் குன்றும் என்பர்; தமிழ் இசை கேட்டால், சங்கீதக் கலை க்ஷுணமடையும் என்று கூறுவர்; தமிழர் அதிகாரம் வேண்டும் என்று கேட்டால், ஆட்சியிலே திறமை குறையும் என்று கூறுவர்; தமிழருக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்காலப் பக்குவம் பாழாகுமே என்று பகருவர். தமிழனுக்குத் தனி நாடு வேண்டும் என்று கேட்டால் பாரத மாதா பிரலாபிப்பாளே என்று பரப்புவர்; இது அவர்களின் -- ஆரியர்களின் பழைய பல்லவி! இது இனி பலிக்காது.

எங்கே அந்தக் கலை?

சேரனுடைய கொலு மண்டபத்திலே, கொண்டாட்டங்களின் போது இசைவாணர்கள் "வாதாபி கண" பாடவில்லை.

சோழன் களிக்க "சுனோ சுனோ" பாடவில்லை..

பாண்டியன் பரிபாலனத்தின்போது, "பலுகவே எமீனா" என்று பாடவில்லை.

மூவரசர்கள் வாழ்ந்த நாட்களிலும், அதற்கு முன்பும் தியாகய்யர், சாஸ்திரி, தீட்சிதர் கிருதிகள் பாடவில்லை. இசையே இல்லையோ? உண்டு! தமிழ் இசை பாடப்பட்டது. அந்த இசை இன்று எங்கே?

பொன்னும் மணியும் பொலிவுடன் விளங்க, வீரமும் ஈரமுங்கொண்டு ஆண்ட தமிழ் மன்னர்கள் மற்றைச் செல்வங்களை வளர்த்ததுபோல், கலைச் செல்வத்தையும் வளர்த்தே வந்தனர். தமிழகத்துச் சந்தனம் ரோம் சாம்ராஜ்யத்தில் வாடை வீசியதுபோல, தமிழ்க் கலையின் மணம் எங்கும் பரவி இன்பம் ஊட்டிற்று. எங்கே அந்தக் கலை இன்று?

சேர நன்னாட்டின் மங்கையர், வேழத்தை விரட்டிய தமது வீரக் காதலரை வாழ்த்திப் பாடியது தமிழில்தான். வெற்றிக்கொடி பறக்க எதிரியை விரட்டி அடித்துத் திரும்பிய சோழ மன்னர்கள் சிறப்பைத் தமிழில்தான் பாடினார்கள்.

பாண்டியனின் குமரிகளுக்குப் பாங்கிகள் பாடியது தமிழ்ப் பாட்டுக்கள்தான். எங்கே அந்தத் தமிழ்ப் பாட்டுக்கள்?

கதிரவன் காய்வதை அடக்கிக்கொண்டு மேனி சிவந்து மறையும் நேரத்தில் கடலோரத்தில் பட்டுக் கூடாரத்தினுள்ளே பக்கத்தில் இருந்த கோவலனின் உள்ளம் குழைய மாதவி பாடியது, "மாரு பல்கா. கொன்னாவே ஏமிரா” வுமல்ல; "சல்சல்ரே நவ்ஜவா"னுமல்ல! தமிழ்! இன்று, தமிழ் இசை போதுமான அளவு இல்லை என்று கூறும் நிலை வந்தது. காரணம் என்ன?

இழந்த இன்பம்

தமிழர் இசையை வளர்த்ததுபோல், வேறு இனத்தினர் வளர்க்கவுமில்லை; தமிழர் இசையை இழந்தது போல் வேறு யாரும் இழக்கவுமில்லை. தமிழனின் இன்றைய நிலை, இழந்த இன்பத்தைப் பற்றி எண்ணி ஏங்குவதாகவே இருக்கிறது.

தமிழிலே நல்ல பாடல்கள் இல்லை என்பதைக் கேட்கும் தமிழன், தமிழ் இசை இன்னமும் இருந்த தன்மையை அறிந்தால், தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டி வரும். அத்தகைய இசை இருந்தது; இன்று மறைந்தது! மறைந்தது மீண்டும் வெளிப்பட இன்று முயற்சிகள் செய்யப்படுகின்றன; அந்த மொகஞ்சதாரோவைக் கண்டு ஆரியர்கள் மருளுகின்றனர்.

"தமிழர் காட்டுமிராண்டிக் கூட்டம். அவர்களுக்கு நாங்களே நாகரிக போதனை செய்தோம். தமிழ்மொழி வளமறியாக் கூட்டம். நாங்களே நூற்கள் வகுத்தோம்! தமிழர் வாழும் முறை தெரியாக் கூட்டம். நாங்களே அவர்களுக்குச் சட்ட திட்டம், கட்டுக்காவல் கற்றுக் கொடுத்தோம்" என்று ஆரியர் கூறினர் ஆங்கிலேயரிடம். புத்தகங்களில் எழுதினர்; பொதுக் கூட்டங்களில் பேசினர். தமிழருக்கு ஆசான் ஆரியரே என்று வெளிநாட்டாரிடம் கூறவே, வெளிநாட்டார் தமிழரை, ஓர் "லம்பாடிக் கூட்டம்" என்றே எண்ணினர். ஒரு ராகவ ஐயங்கார், தமிழருக்குக் "கற்பு" என்பதே தெரியாது என்றும் கூறத்துணிந்தார்!

எழுச்சி தோன்றியது

ஜெர்மன் நாட்டு மாக்ஸ்முல்லர், ஆரிய வர்த்தம், ஆரியமொழி, ஆரிய நாகரிகம், ஆரிய மதம் என்பவைகளையே ஐரோப்பியருக்கு எடுத்துக் கூறினார். தமிழர் என்ற உணர்ச்சி மங்கிற்று. ஆரியரின் பிரசாரம் ஆங்கில நாட்டவரையும் மயக்கிற்று. விபசாரியிடம் சிக்கி வீட்டிலுள்ளோரை இழிவுபடுத்திவிட்டுப் பொருளைப் பாழாக்கும் காமாந்தக்காரனின் கதை போல, ஆரியரிடம் மயங்கிய ஆங்கிலேயன், நாட்டுக்குடையவர்களாகிய நம்மவரைப் புறக்கடையில் நிறுத்திவிட்டு ஆட்சி பீடத்திலே ஆரியரை சர்வாதிகாரியாக்கினர். தமிழர் தத்தளித்தனர். அந்தத் தத்தளிப்பு தன்னுணர்வைத் தந்தது. தன்னைத் தான் அறியத்தொடங்கிய பிறகு, தமிழன் தான் இழந்தவைகளைத் தேடத் தொடங்கினான்; தேடிக் கொண்டும் இருக்கிறான். தமது அழிவுக்குக் காரணம் என்ன என்று கண்டுபிடித்தான். அதனைக் களைய முற்படுகிறான். தூங்கியவன் விழித்ததுபோல் இன்று தமிழரிடையே ஒரு எழுச்சி உண்டாகியிருக்கிறது. இந்த மறுமலர்ச்சியைப் பல்வேறு துறைகளில் காண்கிறோம். தமிழ்மொழியில் துவங்கி தமிழ்நாடு என்ற எண்ணம்வரை இந்த மறுமலர்ச்சி இருக்கிறது.

வழி தவறி அலைந்தவன், நேர்வழி தெரிந்து நடக்க ஆரம்பிக்கும்போது, செந்நாய் சீறினாலும், சிறுத்தை உறுமினாலும், சிந்தை கலங்கத் தேவையில்லை. நமது பாதையை நாம் விட்டு அகலோம் என்றே உறுதி கொள்ள வேண்டும். மனம் இருக்க மார்க்கம் இல்லாது போகுமா?

மறுமலர்ச்சி

இத்தகைய மறுமலர்ச்சி, இன எழுச்சி -- இயல்பு, இது போல் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளன. ஆனால் இங்கு இருப்பது போன்ற எதிர்ப்பு அங்கு இருந்ததில்லை.

15, 16 -- வது நூற்றாண்டுகளில், ஐரோப்பாவிலே, பல்வேறு நாடுகளிலே, இத்தகைய மறுமலர்ச்சி ஏற்பட்டது. அந்தக் காலத்திலே விளைந்த பலன்களே அந்நாடுகளை மேன்மைப்படுத்தின.

பிரிட்டனிலே டியூடிர் (Tudor) மன்னர் காலத்திலே மறுமலர்ச்சி ஏற்பட்டது. மதத்துறையிலே சீர்திருத்தம். மக்கள் மன்றத் துறையிலே மாறுதல்கள், கலையிலே ஓர் புதுமை தோன்றிற்று. சிறந்த இலக்கியங்கள் வெளிவந்தன. தன்னாட்டுணர்ச்சி, தன் மொழிப்பற்று, தன்மானம் ஆகியவைகள் தாண்டவமாடின. பின்னரே பிரிட்டன் பலமுள்ளதாயிற்று. பிரிட்டனிலே, கவிகள், எழுத்தோவியங்களை ஏற்படுத்திக்கொண்ட நேரத்திலே தான், பிரிட்டிஷ் கப்பல்கள், திரைகடல்களைக் கடந்து சென்றன. மக்கள் தீரச் செயல்கள் புரிந்தனர். பழங்காலம் என்பது எல்லாத் துறைகளிலும் மடிந்தது; எழுதுவது புது முறையில்; பேசுவது புதுவிதமாக; இலக்கியம் புதுவிதமானது என்ற நிலைமை ஏற்பட்டது.

எதிர்ப்பு மடியும்

ஐரோப்பாக் கண்டத்திலே, அறிவுலகமும் வீரர் உலகமும் அமளியில் ஈடுபடும் விதமான, புரட்சிக்குக் காரணமாக இருந்த வால்டேர், ரூசோ, மார்ட்டின் லூதர் போன்றவர்கள் இத்தகைய மறுமலர்ச்சித் தோட்டத்தின் உழவர்கள்! அவர்களுக்கும் அவர்கள் புகுத்திய எண்ணங்களுக்கும் எதிர்ப்பு இருந்தது! இறந்தது! இங்கும் இன்று மறுமலர்ச்சி காண்கிறோம். இதற்கு எதிர்ப்பு காண்கிறோம். அந்த எதிர்ப்பு இறுதியில் மடியத்தான் போகிறது. கடல் அலையை, கைத்தடி கொண்டு அடிக்க முயலுவோனின் கை சலிக்குமேயொழிய, அலை சலிக்காது.

ஆனால், மற்றைய நாடுகளிலே நடந்ததற்கும் இங்கு நடப்பதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. அங்கெல்லாம் மறுமலர்ச்சியை எதிர்த்தவர்கள், வெறும் பழமை விரும்பிகள் மட்டுமல்ல; இன்று இருக்கும் முறையினால், ஆதிக்கம் செலுத்தி வாழும் கூட்டத்தினர். மறுமலர்ச்சி, பழமையைப் பாழாக்குமோ என்பது அல்ல அவர்களின் பயம். நமது ஆதிக்கம் போய்விடுமோ என்பதே அவர்களின் திகில். எனவேதான் இங்கு எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது; இந்தக் கடுமையைப் பொருட்படுத்தாமல், புதிய எழுச்சிக்காகப் போரிடும் முன்னணிப் படையினர், தேசத் துரோகி, வகுப்புவாதி என்று ஏசப்பட்டுத் தூற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் அந்த முன்னணிப்படை போட்டு வைக்கப் போகும் பாதையிலே பட்டாளங்கள் பலப்பல பிறகு நடக்கும்; மக்கள் மகிழ்ச்சியோடு அந்தப் பாதையிலே நடந்து, புதூர் சென்று வாழ்வார் என்பது திண்ணம்.

தமிழரின் மறுமலர்ச்சியே, 'தமிழில் ஏன் பிறமொழி கலக்க வேண்டும்' என்று கேட்கச் சொல்கிறது.

தமிழரின் மறுமலர்ச்சியே, தமிழகத்திலே 'இந்தி கட்டாயப் பாடமா?' என்று கிளர்ச்சி நடத்தச்சொல்லிற்று.

தமிழரின் மறுமலர்ச்சியே, மார்க்கத் துறையிலே, 'ஆரிய ஆபாசங்கள் கூடாது' என்று தைரியமாக எடுத்துக் கூறச் சொல்லிற்று. 'சமுதாயத் துறையிலே, நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன்' என்ற பேதம் கூடாது என்று கூறச் சொல்லிற்று.

கண்டனக் குரல்

இத்தகைய ஒவ்வொரு முயற்சிக்கும் ஆரியர்கள் கூடி தமிழரைக் கண்டிக்கின்றனர். தமிழ் இசைக்கு ஆதரவு தரவேண்டுமெனப்படும் முயற்சியைக்கண்டித்து, சின்னாட்களுக்கு முன்னம், சென்னை இரானடே மண்டபத்தில் ஆரியர்கள் பேசினர். அவர்கள் வெளியிட்ட கருத்து -- சங்கீதத்துக்கு நாதம்தான் பிரதானம். ஆகவே, எந்த மொழியில் சாஹித்தியம் இருக்கிறது என்பது பற்றிக் கவலை இல்லை. தெலுங்குக் கிருதிகள் இருப்பவை நல்லவை. தமிழ்ப் பாடல்களைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. தியாகய்யர் போலத் தமிழகத்திலே ஒருவர் தோன்றியதும், தமிழ்ப்பாடல்கள் உண்டாகும் -- என்பதாகும்.

இசையை, மக்கள் கேட்டு இன்புற வேண்டுமானால், அவர்களுக்குத் தெரிந்த மொழியில் சாஹித்தியம் இருந்தால் முடியுமே தவிர சாஹித்தியம் வேறு மொழியிலே இருந்தால் முடியாது. நாதம் காதைக் கவரும்; கருத்துக்கு என்ன அளிப்பது? தமிழனுக்குத் தமிழ்; தெலுங்கனுக்குத் தெலுங்கு; வடவருக்கு வடநாட்டு மொழியில் சாஹித்தியம் அமைத்தால்தான், அந்த இசையைக் கேட்டதும் அவர்கள் இன்புற முடியும்!

தெவிட்டாத விருந்து

இப்போது தமிழ்நாட்டிலே நடைபெறும் கச்சேரிகளில் தமிழ் இசை எவ்வளவு விரும்பப்பட்டு வருகிறது என்பதையும் நாம் விவரிக்கத் தேவையில்லை.

தோழர் தியாகராஜ பாகவதரின் பாடல்கள் இன்று தமிழருக்குத் தெவிட்டாத விருந்தாக இருக்கின்றன. அவருடைய குரல் அமைப்பு மட்டுமல்ல அதற்குக் காரணம்; அவர் தமிழ்ப் பாட்டுக்களைத் தெளிவாகக் கேட்கும்போதே பொருட்சுவையை மக்கள் ரசிக்கும் விதத்திலே பாடுவதுதான் முக்கியமான காரணம். சங்கீத வித்துவான்கள் என்ற சன்னத்துக்கள் பெற்று விளங்குவதாகக் கூறப்படும் பேர்வழிகளிடம் உள்ள வித்தை பாகவதரிடம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியோ, 'சுரம்' போடுவதில் அவர் இன்னாரைவிடக் குறைந்த திறமை உள்ளவரா என்பது பற்றியோ மக்கள் யோசிக்கவில்லை. அவசியமுமில்லை. பாகவதர் "மாயப் பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை" என்று பாடினால், அது வீட்டிலே, வெளியிலே, இரவிலே, பகலிலே கிழவர் குழந்தை உள்பட பாடும் பாட்டாகிவிடுகிறது. அழகும், அழுத்தந் திருத்தமும், பொருட்சுவையும் ததும்ப, "உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?" என்று பாகவதர் பாடினார். நாட்டினர் அதனைப் பாடுகின்றனர். காரணம், அவர் பாடுவது புரிகிறது. கேட்பவர் களிக்கின்றனர். அந்த இசை, கேட்போர் உள்ளத்திலே சென்று தங்குகிறது.

பூரிக்கின்றனர்

தோழியர் கே. பி. சுந்தராம்பாளின் இசைக்குத் தமிழர் தமது செவியையும் சிந்தனையையும் பரிசாக அளித்ததன் காரணமும் இதுவே. "செந்தூர் வேலாண்டி--" என்று பொருள் விளங்கப் பாடும்போது, இன்ன விஷயமாகப் பாடப்படுகிறது என்று புரிந்து கொண்டு பூரிக்கின்றனர்.

இசை விருந்தை இன்று அளித்துக்கொண்டு வரும் தோழியர் எம். எஸ். சுப்புலட்சுமி தியாகராயர் கீர்த்தனங்களைப் பல வருடப் பாடப் பழக்கத்துடன் பாடிக்கொண்டிருந்தபோது, வித்துவான்களுக்கு அறிமுகமாகி இருந்தாரேயொழிய நாட்டு மக்களுக்கு அறிமுகமாகவில்லை. ஏன்? நாட்டினர் எம். எஸ். எஸ். பாடுவது பிரமாதமான வித்தை அடங்கிய பாட்டு என்று கேள்விப் பட்டார்களேயொழிய, அதன் சுவையை அனுபவிக்க முடியவில்லை. ஆனால், அதே எம். எஸ். எஸ். "மனங்குளிர" என்ற செந்தமிழ் இசையைப் பாடியதும், தமிழரின் மனமெல்லாம் குளிர்ந்தது. இசை நம்மை இழுத்து சகுந்தலை கண்ட சோலை, சாலை, பசு, மான், கன்று, குயில், மயில் ஆகியவற்றை நமது மனக்கண்முன் நிற்கும்படி செய்தது. இசை இன்பத்தை மக்கள் முழுவதும் அடைய முடிந்தது.

தமிழ் இசைக்கு ஆதரவு இருக்குமா என்று கேட்கும் பேர்வழிகாள், இசையரசு தண்டபாணி தேசிகரின் தமிழ் இசை, மக்களை எவ்வளவு உருக்குகிறது! பொருள் விளங்க, உணர்ச்சி ததும்ப அவர் நமது தமிழில் நம்மிடம் பாடுவதால்; மக்கள் உருகுவது இருக்கட்டும்; தேசிகரே உருகுவதைக் காணலாம், தமிழ் இசை பாடும்போது!

மதுரை மாரியப்ப சுவாமிகள், சிதம்பரம் ஜெயராமன், திருவாரூர் நமச்சிவாயம் ஆகிய இசைமணிகளின். ஒலி, நமது தமிழாக இருப்பதால் நமது நெஞ்சை அள்ளுவதைக் கூற வேண்டுமா?

இயற்ற முடியாதா?

நம்மவரின் நெஞ்சில் நேராகச் சென்று இன்பத்தைத் தர தமிழ் இசையினால் மட்டுமே முடியும். அத்தகைய தமிழ் இசையை வளர்க்க, பாடகர்களும் கழகங்களும் முற்படுகின்றனர். வெளிமொழிக் கீதங்கள் என்ற முறையிலே இரண்டோர் கிருதிகள் பாடலாம். குற்றமில்லை; ஆனால் இசை என்றாலே அது தெலுங்கோ, இந்துஸ்தானியோதான் என்ற பொருள் படும்படி கச்சேரிகள் இருப்பதை இனித் தமிழர் வரவேற்கமாட்டார்கள்.

"ராகப் பிரதானமுள்ள கீர்த்தனங்கள்" தமிழிலே இல்லை. இனி ஏற்படவேண்டும் என்று 'மித்திரன்' கூறுகிறது; ஆனால் இன்றுள்ள இசை வல்லுநர்களால், இத்தகைய ராகப் பிரதானமுள்ள கீர்த்தனங்கள் இயற்ற முடியாது என்று மித்திரன் கூறத் துணிகிறதா என்று கேட்கிறோம். கர்நாடக சங்கீத வர்ணமெட்டுக்களை அனுசரித்துச் சில தமிழ்ப் பாட்டுக்கள் உள்ளன என்பதை 'மித்திரன்' ஒப்புக்கொள்கிறது. அவை போன்ற பாடல்கள் வளரவே அண்ணாமலை நகர் மாநாட்டினர் வழிவகை தேடினர்.

வாய்ப்பாட்டு ஏன்?

'சங்கீதம் எந்தப் பாஷையாக இருந்தாலென்ன?' என்று கூறுபவர்கள்; 'ராக இலட்சணமே முக்கியம்! சாஹித்ய இலட்சணம் முக்கியமாகாது' என்று கூறுபவர்கள்; திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்களின் நாதஸ்வரமும், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளையின் பிடிலும் இருக்க, வாய்ப்பாட்டு வேறு ஏன் தேடுகிறார்கள்? அந்த நாதஸ்வரத்தில் ராக இலட்சணங்கள் போதும் என்கிற அளவுக்குக் கேட்கலாம்! ஜிலுஜிலுப்பு வேண்டுமா? கமகம் தேவையா? ஆலாபனத்தில் அலங்காரம் வேண்டுமா? எது நாதஸ்வரக்காரரால் முடியாது? தாள வரிசைகளிலே திறமைகள் கேட்க வேண்டுமா? பக்கத்திலே நிற்கும் தவுல்காரரைப் பார்த்தால் போதுமே; கோடை இடி கேட்கும்! சங்கீதம், வெறும் ராக இலட்சணம், நாதம் என்று பேசுவோர், நாதத்தை, நாதஸ்வரத்தில், பிடிலில், வீணையில், புல்லாங்குழலில் கேட்கின்றனர் என்றாலும் வாய்ப்பாட்டும் தேடுகின்றனர்! காரணம் என்ன? வாய்ப்பாட்டில் நாதமும், நெஞ்சை அள்ளும் சாஹித்யமும் இருக்கின்றது என்பதற்காகத்தான். நெஞ்சை அள்ளும் சாஹித்யம் தமிழருக்குத் தமிழில் இருத்தலே முறை.

முன்னாளில் இசை

"பொழிற்கு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதறு திருமொழியே பணையின வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்லிணையே
யெழுதரு மின்னிடையே யெனையிடர் செய்தவையே."

பக்கத்திலே காதலி! எதிரே கடல்! யாழை வாசித்துக் கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள இசையை இனிமையாகப் பாடுகிறான் இளமையும் செல்வமும் பொருந்திய கோவலன். மாதவியின் மனம் மகிழப் பாடினான்! மாதவியோ, ஆடலிலும் பாடலிலும் தேர்ந்த அணங்கு, கோவலன் வணிகன் ஆயினும், அவன் பாடியது, மாதவியை மகிழ்விக்கும் விதமாக இருந்தது.

நறுமலரே! விரிமணலே! மதிமுகமே! மின்னிடையே! என விளித்துக் கோவலன் யாழை இசைத்துக் கானல் வரி பாடுகிறான். அந்நாட்டினருக்குத்தான் இன்று, "கச்சேரிகளில் களை கட்டும் பாட்டுக்கள்" இல்லை; தெலுங்குக் கிருதிகள் போய்விட்டால், சங்கீதக்கலையே சஷீணமாகிவிடும் என்று 'மித்திரன்' கூறும் நிலை வந்தது!

மரகதமணித்தான் செறிந்த
    மணிக்காந்தண் மெல் விரல்கள்
பயிர் வண்டின் கிளைபோல
    பன்னரம்பின் மிசைப் படர
வார்தல் வடிந்தலுந் தலுறழ்தல்
    சீருடனுருட்ட றெருட்டலுள்ள
லேருடைப் பட்டடையென
    விசையோர் வகுத்த

வெட்டுவகையினிசை காரணத்துப்
       பட்டவகை தன்செவியினோர்த்
தேவலன் பின் பாணியாதெனக்
       கோவலன் கையாழ்மீட்ட.

கோவலன், யாழை மீட்டி இசை பாடி இன்புற்றான்!

வார்தல் :— சுட்டு விரற் செய் தொழில்,

வடித்தல் :— சுட்டு விரலும் பெரு விரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்.

உந்தல் :— நரம்புகளை உந்தி, வலிவிற் பட்டதும், மெலிவிற் பட்டதும், நிரல் பட்டதும், நிரவிழிப்பட்டதும் என்றறிதல்.

உறழ்தல் :— ஒன்றிடையிட்டும், இரண்டிடையிட்டும் ஆராய்தல்

என்று, மேற்படி செய்யுளில் வரும் பதங்கட்கு அடியார்க்கு நல்லார் தரும் பொருளைப் படித்துவிட்டுப் பிறகு, தமிழின் இசை உள்ளமும், இசை வளமும் எங்ஙனம் இருந்தது என்பதை ஆரியத் தோழர்கள் அறியட்டும்.

இசைக்குழல்கள் எண்ணற்றன இருந்த இடம் இது! ஆங்கு இசை பயின்று, இசை நுணுக்கமுணர்ந்து ஏழிசையைப் பாடி வாழ்ந்தவரே தமிழர்.

சிறு வயது முதலே, இசையே தமிழரின் தோழன்.

ஊசல் வரி, கந்துக வரி, ஆற்று வரி, கானல் வரி முதலியன இன்று தமிழருக்கு வெறும் சொற்றொடர்கள். முன்னாளில், அவைகள் இனிய இசைகள்!

இசை எனும் சொல்லுக்கே, வயப்படுத்துவது, இசைவிப்பது என்பது பொருள். இதனைத் தமிழர் நன்குணர்ந்து, பயன்படுத்தி வந்தனர். மகிழ்ந்தனர்; மகிழ்வித்தனர்.

தினைப்புனத்திலிருந்து ஓர் தீஞ்சுவை மொழியாள் தத்தை எனப்படுவாள், இசை மொழிவாள். அந்த இசை கேட்ட பறவைகள் இசைக்கு வயமாகி மயங்குமாம்!

மலையோரத்தில், குறிஞ்சி பாடக் கேட்ட மழகளிறு உறங்குமாம்! இனிய இசையில் மயங்கி "அசுணமா" எனும் இசையறி பறவை, எதிரில் தன்னை மறந்து நின்று, பிடிபடுமாம்; ஆனினங்கள் அடங்குமாம்; மதங் கொண்ட யானையும் இசைக்கு அடங்கும் என்று கலித்தொகை கூறுகிறது. அதுமட்டுமா?

"அறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவின் பாலை."

அதாவது, கள்வரும் இசைகேட்டு, கொடுந்தொழில் மறந்து நின்றனராம்.

தோற் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவிகள் என இசைக் கருவிகள் எண்ணற்றன இருந்தன.

தோற் கருவிகளில் மட்டும் பேரிகை, படகம், இளக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, காடிகை முதலிய முப்பதுக்கு மேற்பட்டு இருந்தன.

இசைக் கருவிகளுக்கு இயம் என்றோர் பெயருண்டு. பலவகை இசைக் கருவிகளையும் வாசிக்கத் தெரிந்த காரணம் பற்றி, ஒரு புலவருக்கு நெடும் பல்லியத்தனார் என்ற பெயரும் இருந்தது.

பாடுவோர் பாணர் என்ற தனிக் கூட்டமாகவும் இருந்து, தமது முதுகுகளில் வகைவகையான இசைக் கருவிகளை ஏற்றிக் கொண்டும், பல நாடு சென்று பாடி மகிழ்வித்துப் பரிசு பெற்று வாழ்ந்தனர்.

மங்கின; அழிந்தன!

இன்னின்ன காலத்துக்கு இன்னின்ன இசை பாடுதல் பொருத்தமென்றிருந்தது. பாடி வந்தனர். காலையில் மருதப் பண்ணும் மாலையில் செவ்வழிப் பண்ணும் பாடுவராம்.

இசைத் தமிழின் இலட்சண விளக்கமாகச் சிகண்டியார் என்பவர் இசைநுணுக்கம் என்ற நூலையும், நாடகத் தமிழுக்குச் செயிற்றியன் என்ற நூலைச் செயிற்றியனார் என்பவரும் இயற்றினர்.

ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நுஷாதம் என்று வடமொழிப் பெயர்களுடன் உள்ள சுரம் ஏழும், ஏழிசை என்ற பொதுப் பெயருடன் முறையே குரல், துத்தம், கைகிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயருடன் முன்னம் விளங்கின.

தமிழர் ஒரு சுரத்தை பதினாறாகப் பகுத்துணரும் பக்குவமும் பெற்றிருந்தனர்.

ராகம் என்று கூறப்படுவது, தமிழரால் பண் என்று குறிக்கப்பட்டு வந்தது.

ராக லட்சணங்கள் பொருந்திய தமிழ்ப் பாடல் இல்லை என்று கூறுவோருக்குக் கூறுகிறோம். தமிழரின் பண்கள் எண்ணற்று இருந்தன. வடமொழியில் கரகரப்பிரியா எனக் குறிப்பிடப்படுவதே படுமலைப் பாலைப்பண் என்றும்; கல்யாணி எனும் ராகம் அருபாலைப்பண் என்றும் முன்னாளில் குறிப்பிடப்பட்டது. அரிகாம்போதிக்கு தமிழர் அளித்த பெயர், கோடிப்பாலைப்பண்; பைரவிக்கு விளரிப் பாலைப்பண்; தோடிக்கு செவ்வழிப் பாலைப்பண் என இங்ஙனம் ராக லட்சணங்கள் எவ்வளவோ தமிழில் இருந்தன; மறைந்தன! ஆரியத்தால் மங்கின; அழிந்தனவும் உண்டு.

ஆலாபனம் எனும் இசை நுணுக்கத்தைத் தமிழர் ஆலத்தி என்று அழைத்து வந்தனர். ஆரோகணம், அவரோகணம், கமகம் என்பன முறையே ஏற்றம், இறக்கம், அலுக்கு என்ற பெயருடன் விளங்கின. தமிழர் அவைகளில் தேர்ச்சி பெற்று, தேன் தமிழை உண்டு வாழ்ந்து வந்தனர். இன்று இரவல் இசை பெறும் நிலையில் உள்ளனர்.

எந்தப் பார்ப்பனர், மனு, 4-ம் ஆத்தியாயம், 15-ம் விதிப்படி இசை பயின்று, பொருள் ஈட்டக்கூடாது என்று தடுக்கப்பட்டு இருந்தனரோ. அதே ஆரியர்களின் சொத்தாக இசை இன்று கருதப்பட்டு வரும் நிலைமை ஏற்பட்டது.

அரியக்குடியார் அலறுகிறார்; பாபநாசம் சிவன் பதறுகிறார்; மருங்காபுரியார் மனவேதனைப்படுகிறார் என்று 'இந்து'வும், 'மித்திரனு'ம் முகாரி பாடியபடி உள்ளன. தமிழரின் அடாணா வெளிப்படும்வரை இசைபற்றி இவர்கள் இரைச்சலிட்டபடிதான் இருப்பர்.

பாவ, ராக, தாளம் எனும் மூன்றும் இழைந்திருக்க வேண்டும் இசையிலே என்பர், இசை நூல் வல்லோர். பாவம் விளக்கமாக இருக்க, அவரவருக்குப் புரியும் மொழியில் பாடல்கள் இருந்தாக வேண்டும். தமிழருக்குத் தமிழ்மொழியில் பாடல் இருந்தால்தான் புரியும்; சுவைக்க முடியும்; எனவே, தமிழ்நாட்டிலே தமிழ் இசைதான் முக்கியமாகத் தேவை.

சுவைக்க முடியும்

தமிழரின் இசைப்பற்று, தியாகய்யர் காலத்துக்குப் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தது, தெலுங்குக் கீர்த்தனங்கள் தோன்றா முன்னம், ராம கதையையோ, கிருஷ்ண கோலாகலத்தையோ. கீர்த்தனங்களாக அமைக்கா முன்னம் தமிழரின் இசை -- இறைவன்,. இயற்கை, இன்பம் எனும் மூன்று துறைகளை உள்ளடக்கியதாக உணர்ச்சியும் உற்சாகமும் தரத்தக்கதாக இருந்தது; இசைக் கருவிகள் எண்ணற்று இருந்தன; இசை நூற்களும் உண்டு. இசைக் கடலில் நீந்தி விளையாடி மகிழ்ந்தனர் மக்கள். ஆணும் பெண்ணும் பாடுவர், ஆடுவர். அரசனும், மக்களும் இசை பயின்றனர்; இன்புற்றிருந்தனர்.

கடலைக் கண்டால் ஓர் பாடல்; கரியைக் கண்டால் ஓர் பாடல்; தளிரைக் கண்டு ஓர் பாடல்; தனது காதலியைக் கண்டு ஓர் பாடல் எனத் தமிழர் தமது இன்ப உணர்ச்சியை இசை வடிவில் எத்துணையோ சிறப்புடன் வெளிப்படுத்தி வாழ்ந்தனர். இன்று தியாகராயர் கிருதிகளைவிட வேறு இல்லை என்று அவர்கள் முன்னால் கூறப்படுகிறது.

இசைச் செல்வத்தை இவ்வளவு பெற்று முன்னம் வாழ்ந்த தமிழர், இன்று கேட்பது, தமிழ்நாட்டிலே தமிழ்ப் பாடல்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த முயற்சியில் தமிழர் வெற்றி பெற்றால் இழந்த தமிழ் இசையை மீண்டும் பெற முடியும். ஆரியம் தமிழரின் எல்லா வகையான செல்வங்களையும் கொள்ளை கொண்டது போலவே, இசைச் செல்வத்தையும் கொள்ளை கொண்டது. இதனை அறிய தமிழர் தொன்மை பற்றி ஆசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய அரிய நூலையும் மற்றையோரின் ஆராய்ச்சி நூல்களையும் தமிழர் படிக்க வேண்டுகிறோம். தமிழரின் மொழி வளம், ஆட்சி வளம் முதலிய துறைகள் பற்றிய அரிய ஆராய்ச்சிகளிலே உண்மைகள் மிளிரும். தோழர் தேவநேயப் பாவாணர் எழுதிய ஒப்பியல் மொழி நூலில் உள்ளவைகளைத் தமிழர் கற்றுணர வேண்டும்.

அவர்களுக்குப் பிடிக்காது

தமிழ் இசை மறைந்து, வேற்று மொழியில் பாடல் பரவியதனால், நாம் இன்பத்தை மட்டுமே இழக்கவில்லை; இயற்கையின் அழகை உணரும் அறிவையும் பகுத்தறிவுத் திறனையும் இழந்தோம். புதுப் பாடல்கள், புதுக் கருத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும். வெறும் பக்திரசம் மட்டுமே ஊட்டக்கூடியதாக இருத்தல் போதாது. பக்தி ரசம் தமிழ் இசையில் இன்றும் உண்டு. ஆனால் ஆரியருக்கு அது பிடிக்காது. திருத்தாண்டகம், பிள்ளைத்தமிழ் போன்றவைகளைத் தோழர் சுந்தரமூர்த்தி ஓதுவார் எத்துணை இன்ப ரசத்துடன் பாடினார்.

தியாகய்யரின் ராமரசத்தை, அருணாசலக் கவிராயரின் தமிழ்க் கீர்த்தனங்களில் காண ஆரியர் மறுப்பர். கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தன் பாடல்களும், சித்தர்களின் பாடல்களும் சுப்பராமரின் தமிழ்ப் பதங்களும் ஆரியருக்குப் பிடிக்கவில்லை. ஆகவேதான் தமிழிலே பாடல்கள் ஏது என்று கேட்கின்றனர். தோழர் மாரியப்பசாமி எனும் இசைச் செல்வர், தியாகய்யர் கீர்த்தனை மெட்டுகளிலேயே செந்தமிழில் கிருதிகள் அமைத்து, இனிய முறையில் பாடுகிறார்! ஆரியருக்கு அது பிடிக்காது; அவர்கள் அசல் ஆரிய ரசமே தேடுவர். பக்தி என்ற ரசத்தையும் ஆரியத்தோடு கலந்து பருகுவரேயன்றித் தமிழோடு கலந்து பருகச் சம்மதியார். காரணம், அந்த ஒரே மொழிதான் பரந்த இந்தியாவில் ஆரியப் படையெடுப்பை, தாக்குதலைப் பொருட்படுத்தாமல், பணியாமல் சீரிளமைத் திறனோடு விளங்குகிறது. அத்தகைய தமிழ், இசையில் மீண்டும் ஆதிக்கம் பெறுமானால், தமது கதி என்னாகுமோ என்று ஆரியர் பயப்படுகின்றனர்! தமிழில் இசை வளரக் கூடாதெனத் தடுக்கின்றனர். தமிழனுக்குத் தமிழ் இசையைப் பெற உரிமை உண்டு! அதைத் தடுக்க ஆரியருக்கு உரிமை இல்லை! ஆயினும் ஆரியர் தடுக்கின்றனர் தமிழரே, உமது கருத்து என்ன? என்ன செய்யப் போகிறீர்? என்று தமிழரைக் கேட்கிறோம்.

"நாம் பெருங்கூட்டம்! அஃதோர் சிறு கும்பல்" என்றோர் இனிமை ததும்பும் கருத்தை, இளமையின் முறுக்குடன் கலந்து கவியாக உலகினோர்க்குக் கூறினார் ஷெல்லி என்பார். கவியின் கருத்தை வெறும் எழுத்துக் கோவையாகக் கொண்டு நோக்குதல் கூடாது; பலன் தராது.

ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் போதும்! மான் மந்தையைச் சிறு ஒநாய்க் கூட்டம் விரட்டியடிக்கும். பாம்பு படையைக் கலக்கும். ஷெல்லி கூறிய கருத்து இங்கு பயன் தராது. கட்டுப்பாடும், உறுதியும், உணர்ச்சியும் கொண்டதாக ஒரு பெருங்கூட்டம் இருப்பின், அதனை ஒரு சிறு கூட்டம் எதிர்த்துப் பயன் இல்லை என்பதே கவியின் கருத்து.

எண்ணிக்கையைவிட இங்கு இயல்பே முக்கியமாகக் கவனிக்கப்படுதல் வேண்டும்.

ஒருமைப்பாடு

தமிழ் இசை இயக்கத்தைப் பெருங்கூட்டம் ஆதரிக்கிறது. சிறிய கும்பலொன்று எதிர்க்கிறது. எதிர்க்கிறது என்றுரைப்பதைவிட எதிர்த்தது என்றுரைத்தால் பொருந்தும் என எண்ணுகிறோம். பல்வேறு கட்சிப் பற்றுடையவர்களும், தமிழினால் ஒன்றாக்கப்பட்டு, ஒருமனமாகி, ஒத்தகருத்தை வெளியிட்டதைக் கேட்டபிறகும், தமிழ் இசை இயக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு இருப்பினும், நாங்கள் எதிர்த்தே தீருவோம் என்று கூறும் அளவுக்கு அந்தச் சிறுகும்பல் அறிவை இழந்துவிட்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம். அவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் இசையைத் தமிழர் ஆதரிக்கின்றனர் என்பதை. எனவே, எதிர்த்துப் பயனில்லை என்று தீர்மானித்து விட்டிருப்பர்.

'தமிழ்ப் பாடல்களைச் சில்லறை உருப்படிகள் என்று கூறுகிறார்களே, அந்தக் கெட்ட வழக்கத்தை விட்டுவிட வேண்டும்' என்று தோழர் தியாகராஜ பாகவதர் கூறின போதும், திருவாவடுதுறை ராஜரத்தினம் அவர்கள் 'தமிழ்ப் பாடல்கள் பாடப்படாத கச்சேரிகளுக்குப் போகாதீர்கள்; தமிழ்ப் பாடல்களைப் பாடாத வித்வான்களை அழையாதீர்கள்' என்று கூறியபோதும், 'என் கீர்த்திக்குக் காரணமே தமிழ்தான்' என்று தோழர் தண்டபாணி தேசிகர் அகங்குளிரக் கூறியபோதும், 'எந்தக் கூட்டத்தார், எந்த வகுப்பார், எந்தப் பத்திரிக்கைக்காரர் எதிர்த்த போதிலும், தமிழர் அஞ்சத் தேவையில்லை' என்று குமார ராஜா சர் முத்தையாச் செட்டியார் அவர்கள் கூறிய போதும், மண்டபத்தின் உள்ளேயும், வெளியேயும் கூடியிருந்த மக்கள் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்ததைக் கண்டோர் அறிவர், தமிழரிடை பிறந்துள்ள புத்துணர்ச்சியை! தமிழிலே சாஹித்யம் உண்டா? உண்டு என்றனர் சொற்பொழிவாளர்கள். பாடிப் பாடிக் காட்டினர் இசைச் செல்வர்கள். கேட்டுக் களித்தனர் மக்கள். கேட்டது போதாதென மேலும் மேலும் தமிழ்ப் பாடல்கள் பாடும்படி கேட்டனர். இது போதும்; தமிழ் இசையை எதிர்க்கும் பேர்வழிகளின் கண்களைத் திறக்க! கருத்தைத் துவங்க!

கிளர்ச்சியின் சிறு பகுதி

இந்தப் பிரச்சினை தனிப்பட்ட தென்றோ, திடீரெனத் தோன்றியதென்றோ நாம் கருதவில்லை. இசை விஷயமாக எழுப்பிய இந்தக் கிளர்ச்சி, ஒரு மாபெருங் கிளர்ச்சியின் சிறு பகுதி; தமிழகத்திலே எழும்பியுள்ள மறுமலர்ச்சியில் ஒரு பாகம். இதனை எதிர்ப்போரின் செயலும். மறுமலர்ச்சியைக் கண்டு மனந்தாளாது எதிர்த்தொழிக்க எண்ணும் கூட்டத்தின் கொடுமைமிக்க செயல்களில் ஒன்று என்றே நாம் கருதுகிறோம். எனவே, இந்தச் சமயத்தில் தமிழர் பொதுவாக உள்ள பெரிய பிரச்சினையைச் சற்றுக் கூர்ந்து கவனிக்க வேண்டுகிறோம்.

இன்று தமிழருக்கு எழுச்சி, இசை விஷயமாக மட்டும் வத்ததில்லை! எதிர்ப்பும் அந்தத் துறையில் மட்டும் ஏற்படவில்லை.

எத்தனையோ கிளர்ச்சிகள்

மொழியிலே கலப்பு வேண்டாம் என்றோர் எழுச்சி.

இனத்திலே பற்றிருக்க வேண்டும் என்பதற்கோர் எழுச்சி.

நாட்டிலே யாவரும் ஒன்றெனும் எண்ணந் தோன்ற வேண்டும் என்பதற்கோர் எழுச்சி.

நாட்டு எல்லை குறிக்கப்படவேண்டும் என்றோர் கிளர்ச்சி.

நாட்டின் செல்வம், நாட்டினருக்குப் பயன்பட வேண்டும் என்று கூறுவதற்கு மற்றோர் கிளர்ச்சி.

நாட்டுக்கு, நாட்டினருக்கேற்ற சட்டதிட்டங்கள் அமைய வேண்டும் என்று வலியுறுத்த ஒர் கிளர்ச்சி.

இன்னோரன்ன பிற கிளர்ச்சிகள், பல சிற்றருவிகள் கூடி ஆறு ஆவதுபோல், தமிழர் மறுமலர்ச்சியும் பெரியதோர் இயக்கமாதலை, கூர்ந்து நோக்குவோர் காணக்கூடும். தமிழர் அதனைக் கூர்ந்து நோக்கவில்லை. ஆனால் எதிர்ப்பாளர்கள் கூர்ந்து நோக்கிப் பார்த்துத்தான் ஒவ்வொரு கிளர்ச்சிக்கும் எதிர்ப்பை உண்டாக்கிப் பார்க்கின்றனர்.

அது ஒரு சிறு கும்பல்! ஆம்! மிகச் சிறு கும்பல் ஆனால், சப்மெரைன்போல் மறைந்திருந்து தாக்கும் இயல்பு; விஷவாயுபோல் பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி; வெடிகுண்டுபோல் வீசப்பட்டதும் அரண்களைப் பிளந்தெறியும் வலிமை பெற்றது. இல்லையேல் சிறு கும்பல் பெரியதோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்

விக்டோரியா மண்டபக் கூட்டத்திலே தோழர் டி. எஸ். சொக்கலிங்கம், தமிழை எதிர்க்கும் சிறு கூட்டத்தை ஜார் காலத்தில் இருந்த ரஷிய சீமான்கள் கூட்டத்திற்கு ஒப்பானது என்றுரைத்து, அந்தச் சரிதம் மீண்டும் நடைபெறும் என்று எச்சரித்தார்!

அந்தச் சிறு கும்பலின் சக்தி அவருக்குத் தெரியக் காரணமிருக்கிறது.

அந்தச் சிறு கும்பல், பெரும்பாலானவரை ஆட்டிப் படைக்கும் சூழ்ச்சி பற்றி அவர் அறிந்து கொள்ளாதிருக்க முடியாது. அவர் அதுபற்றி வெளியே பேசாதிருக்கிறார். ஆனால் அன்று இசை அவருடைய உள்ளத்திலே சென்று உண்மையை இழுத்து வெளியே எறிந்தது என்றே நாம் நம்புகிறோம்.

ஏழை எளியவர் மொழி

"ரஷிய மொழி, ஏழை எளியவர் மொழி; பிரெஞ்சு மொழி கனவான்கள் பேசும் மொழி. ஆகவே நாங்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறோம்" என்று உரைத்த ரஷிய சீமான் கும்பல்போல், இங்கு ஒரு சிறிய கூட்டத்துக்குத் தமிழ் மொழியிடம் துவேஷமிருக்கிறது. இதுவரை, அவர்கள் பெரும்பாலோரை அடக்கி ஒடுக்கி வாழ்ந்தார்களே, அதையேதான் இம்மனப்பான்மையும் காட்டுகிறது" என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். உண்மை! ரஷ்ய சீமான்கள் பிரெஞ்சு மொழியைக் "கனவான்கள்" மொழி என்று கூறினதுபோல், இங்கு ஒரு சிறு கூட்டம் சமஸ்கிருதத்தைத் "தேவ பாஷை" என்று கூறிக் கொண்டிருக்கிறது; பெரும்பாலானவர்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி புரிகிறது. ஜார் காலத்துச் சீமான்கள், மன்னனும் மதகுருமார்களும் வாழ்க! மற்றையோர் மாளினும் மாள்க! என்றுரைத்தது போலவே, மனுவும் வாந்தாதாவும் அருளியது, பூதேவர்களிடம், மற்றையோர் மண்டியிட்டே கிடத்தல் முறையென்று கூறுகிறது. ரஷிய உழவனோ, பாட்டாளியோ தொட்டால் தீட்டு எனக் கருதினானில்லை. இங்குள்ள சிறு கூட்டம் பெரும்பாலான மக்கள் தொட்டால் தீட்டு என்று கூறுகிறது. அவர்களுடன் ஒன்றாக இருந்து உண்ண மறுக்கிறது; தொழ மறுக்கிறது. ரஷிய சீமானுக்காவது ஆயுதங்கள் இருந்தன! இங்கே உள்ள சிறு கும்பலுக்கு அதுவுமில்லை. ரஷிய சீமானாவது ஆயிரம் வேலி நிலமுடையோன்; ஆபரணப் பேழையுடையோன்; ஆயுதந்தாங்கிய ஏவலருடையோன் என்று கூறலாம். இங்குள்ள சிறு கும்பலுக்கு அவைகளுமில்லை; எனினும் ரஷிய சீமான்கள் ஆட்டிவைத்ததைவிட இங்குள்ள சிறு கும்பல் பெரும்பாலான கூட்டத்தை ஆட்டி வைக்கிறது.

"அந்த ரஷிய ஜார் கூட்டம் அழிந்ததே, அதே கதியைத்தான் இந்த அந்தஸ்துக் கூட்டமும் அடையும்" என்று தோழர் சொக்கலிங்கம் கூறினார். கேட்ட தமிழர் களித்தனர்.

அத்தன்மை படைத்த சிறு கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பது பற்றி, எக்கட்சியைச் சார்ந்த தமிழருக்குள்ளும் கருத்து வேற்றுமை இல்லை என்பது அந்தக் கூட்டத்திற்குத் தெரியும்படி தமிழர்கள் நடந்து கொள்ள வேண்டும். தமிழ்மொழிக்கும் கலைக்கும் ஊறு நேராதபடி பாதுகாக்க தமிழர் திரண்டு விடுவதுபோலவே. தமிழரின் தன்மானம் பறிக்கப்படும்போது தமிழர்கள் எந்தக் கட்சியினிடம் இருப்பினும், தமிழர் அணிவகுப்பில் வந்துசேர வேண்டும். தமிழரைச் சமமாக நடத்த மறுக்கும் சிறு கூட்டத்தை எதிர்க்க ஒன்றுசேர வேண்டும். தமிழ் நாட்டைப் பிற நாட்டாரோ, பிற இனத்தாரோ பங்கப்படுத்த -- வளங்குன்றச் செய்ய -- செல்வத்தைச் சுரண்ட முற்படும் வேளைகளில் தமிழர்கள் ஒன்றாகத் திரண்டெழ வேண்டும். தமிழரின் மறுமலர்ச்சிக்கு இந்த எண்ணமே உறுதுணை. இந்த எண்ணத்துடன் தமிழர் பணியாற்றுவரேல் தமிழர் முன்னேறி விடுவர் என்பது திண்ணம்.

இன்றுள்ள நிலைமை


இன்றுள்ள நிலைமை அங்ஙனமில்லை. தமிழ்நாட்டிலே தமிழன் தாழ்ந்த ஜாதி என்று தமிழன் படிக்கும் சாஸ்திர இதிகாச புராணங்கள் கூறுகின்றன. தமிழனின் பணத்தால் நடைபெறும் நீதிமன்றங்களில் அதற்கேற்பவே தீர்ப்புகள் தரப்படுகின்றன.

தமிழனுக்குத் தமிழ்நாட்டிலே தமிழரின் பணத்தால் கட்டி, தமிழன் பணத்தால் பராமரிக்கப்படும் கோயில்களிலே தமிழருக்குச் சம உரிமை இல்லை; உண்டிச் சாலைகளிலேயும் இல்லை.

தமிழ்நாட்டிலே தமிழனுடைய மொழியிலே தகாத மொழிகள் கள்ளிபோல் படர்ந்து விட்டன.

தமிழ்நாட்டிலே தமிழனுக்கு வேலை கிடைப்பதில்லை; மோரிசுக்கும், ஜான்சிபாருக்கும், நெட்டாலுக்கும், மலேயாவுக்கும், பர்மாவுக்கும், இலங்கைக்கும் சென்று உழைத்து உருமாறிச் சிதைகிறான். வியாபாரம் தமிழனிடம் இல்லை.

கலை தமிழனுடையதாக இல்லை. தமிழனுக்கு இழிவைத் தரும் கற்பனைகளும், அடக்குமுறை சட்டங்கள் கொண்ட ஆபாசங்களுமே கலையாகத் தரப்பட்டுள்ளன.

இங்ஙனம் மொழி, கலை, சமுதாயம், பொருளியல் முதலிய எல்லாத் துறைகளிலும் தமிழன் இழிவுபடுத்தப்பட்டு வருவதன் காரணம் 'சிறு கும்பலொன்று' ஆதிக்கம் செலுத்தி வருவதனால்தான்.

'எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே' என்று பாரதியார் பாடிய பிற்பாடு கூட கால மாறுதலை அறியாமல் இவர்கள் நடப்பது வெறும் அறிவீனம். ஒரு சிலர் சேர்ந்தகொண்டு தங்கள் சுயநலத்திற்காக மெஜாரிடியாரை அடக்கி ஆளும் காலம் கவிழ்ந்துவிட்டது' என்று தினமணி 1941 — செப்டம்பர் 16 — ந்தேதி இதழில் கூறியிருக்கிறது.

கவிழ்ந்து விட்டதா? உண்மையாகவா? இல்லை! கவிழ்ந்து விட்டிருக்குமேயானால், நாம் பள்ளுப் பாடுவோம்! இன்னமும் கவிழவில்லை. ஆனால் கவிழ்வது மட்டும் உறுதி.

'பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே; வெள்ளைப் பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என்றார் பாரதியார். ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகள், போச்சே என்பதற்குப் பதிலாகப் போச்சோ என்று கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது. இன்னும் சிறுகும்பல் சீறுகிறது! ஆதிக்கம் செலுத்துகிறது! தமிழரை எதிர்க்கிறது? தமிழரின் மறுமலர்ச்சியை அழிக்கக் கருதுகிறது. ஆம்! ஜார் அடைந்த கதியை அடைந்தும், அந்தச் சிறு கூட்டம் தனது ஆணவத்தை அடக்கிக் கொள்ளத்தான் இல்லை. அதனை அடக்கத் தமிழர் எழுச்சி பெற வேண்டும்.