தமிழர் வரலாறும் பண்பாடும்/சமூகக் கதைப்பாடல்கள்
சமூகக் கதைப்
பாடல்கள்
சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ்மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத் தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்ல தங்காள் கதை, கெளதல மாடன் கதை முதலியவை. இவை யாவும் தமிழ்நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டவை. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.
முத்துப்பட்டன் கதை
முத்துப்பட்டன் பிராமணன். பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து ககத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள்.
முத்துப்பட்டன் கதையில் வரும் சம்பவங்கள் சாதிப் பிரிவின் பொய்மையையும், மானிட உயர்வின் மேன்மையையும் போற்றிக் கூறுகிறது. உயர் குலத்தவன் ஒருவன் தனது சாதியினரின் கொடுமைகளை உணர்ந்து உழைப்பாளிகளுள் ஒருவனாக இணைந்து, அவர்கள் குலத்துப் பெண்களை மணம் புரிந்து கொண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்ந்ததை இக்கதை விவரிக்கிறது. இக்கதைத் தலைவன் மானிட உணர்வின் உருவமாகப் பிறருக்காக உயிர் விடும், தியாக மூர்த்தியாக உண்மைக் காதலின் பிரதிநிதியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளான். இக்கதை பரவியுள்ள தென்பாண்டி நாட்டில், மக்கள் இவ்வுயர்ந்த பண்புகளைப் போற்றி, முத்துப்பட்டனைத் தெய்வமாக்கி வழிபடுகிறார்கள்.
சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ்பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.
இத்தகை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும், கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது இப்பாடல்.
நல்லதங்காள்கதை
நல்லதங்காள் கதை தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கதை. இக்கதைப் பாத்திரங்கள் சிற்சில பண்புகளுக்குப் பிரதிநிதிகளாக இன்றும் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளார்கள். உதாரணமாக கொடுமைக்காரியான அண்ணியை ‘மூளியலங்காரி’ என்று அழைக்கிறார்கள். இக்கதையில் வரும் மூளியலங்காரி, தனது கணவனின் தங்கையைக் கொடுமைப்படுத்தி, அவள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்தவள். தங்கையின் மீது அன்பாக இருக்கும் அண்ணனை இன்றும் இக்கதையில் வரும் அண்ணன் பெயரை வைத்தே நல்லண்ணன் என்று அழைப்பது வழக்கமாயிருக்கிறது. பஞ்சத்தால் தாய் வீட்டுக்கு வருகிறாள் நல்லதங்காள். தாய் தந்தையர் இல்லை. அண்ணன்தானிருக்கிறான். அவன் மிக நல்லவன். அவளையும், குழந்தைகளையும் பராமரிக்கிறான். அவன் வெளியில் சென்றிருக்கும் போது அவனுடைய மனைவி மூளியலங்காளி, குழந்தைகளையும், நல்லதங்காளையும் படாத பாடுபடுத்துகிறாள். அண்ணனும், தங்கையும், சிறுவயதில் வளர்த்த செடிகள் மரமாகிப் பழுத்திருக்கின்றன. பழங்களைப் பறிக்கக் கூடாதென்கிறாள் அண்ணி. தன்னுடைய உழைப்பினால் பயன்தரும் பழத்தைத் தொடக் கூடாது ன்று அண்ணி சொல்லுவதை எண்ணி நல்லதங்காள் வருந்துகிறாள். அவளுடைய மான உணர்ச்சியை மூளியலங்காரி புண்படுத்துகிறாள். இதனைத் தாங்க முடியாமல் அவள் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி தானும் விழுந்து விடுகிறாள். உண்மையறிந்த நல்லண்ணன் தன் மனைவியைக் கொன்றுவிடுகிறான்.
இக்கதை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூத்தாக நடிக்கப்பட்டது. பெண்களுக்குப் பிறந்தகத்தில் சொத்துரிமையில்லாததால் வரும் அவதிகளை இக்கதை விவரிக்கிறது. உரிமையற்றவளாக அடிமையிலும் இழிவானவளாக, தான் பிறந்த வீட்டில் தானும் உழைத்து உருவாக்கிய நலன்களில் பங்கில்லாதவளாக உழலும் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரதிநிதி நல்லதங்காள். இச்சமூக அமைப்பு முறையில் பலியானவள் நல்லதங்காள்.
சின்ன நாடான் கதை
சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று. அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.
சின்ன நாடான் கதை உண்மையான நிகழ்ச்சி. ஐந்து சகோதரர்களில் ஒருவனுக்கு மட்டும் ஆண்பிள்ளை பிறந்தது. அவன்தான் சின்னநாடான் என்ற குமாரசுவாமி. ஐந்து சகோதரர்களும் பண்ணையார்கள். அவர்கள் அனைவருடைய சொத்துக்களும் இவனையே சேர வேண்டும். பதினாறு வயதில், இவனுக்கு இரண்டு வயதான தங்கள் சகோதரியின் மகளை மணம் செய்து வைத்தார்கள். சகோதரியின் புருஷனுக்கும் ஏராளமான நிலபுலன்கள் உண்டு. குமாரசுவாமி இளைஞனானான். ஐயம் குட்டி என்ற நாவித குல மங்கையைக் காதலித்தான். தைரியமாக அவளோடு கூடி வாழ்ந்தான். அவனது குழந்தை மனைவி பக்குவமடையவில்லை. அதுவரை அவரது தந்தையும், சிறிய தந்தைமாரும் இவ்விஷயம் தெரிந்தும் தெரியாதது போலிருந்து விட்டார்கள். குழந்தை மனைவி பெரியவளானவுடன், ஐயம் குட்டியைப் பிரிந்து வந்து மனைவியோடு வாழ அழைத்தார்கள். அவன் மறுத்து விட்டான். ஐயம்குட்டியே, தன் மனைவியென்றான். இதைப் பொறாது அவர்கள் பலமுறை அவனைத் தங்கள் வழிக்குத் திருப்ப முயன்றனர். முடியவில்லை. கடைசியில் வஞ்சகத்தால் அவனைக் கொன்றுவிட்டனர்.
சொத்துரிமை சமுதாயத்தில் வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானது. அதற்காக மகனைக் கொல்லவும் தந்தை துணிந்தான். என்பதையே இக்கதை புலப்படுத்துகிறது.
கெளதலமாடன் கதை
மாதர் மீது ஆண்கள் கொள்ளும் இருவகை உணர்ச்சிகளைக் கெளதல மாடன் கதை சுட்டிக் காட்டுகிறது. இக்கதையில் சாதிக்கும், நல்லுணர்வு, தீய உணர்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாக்கப்படுகிறது.
கெளதல மாடன் ஒரு போக்கிரி. அவன் வாழ்ந்த ஊரிலேயே பூவாயி என்னும் சக்கிலியப் பெண்ணும் வசித்து வந்தாள். அவள் கறவை மாடுகள் வைத்து பால், மோர் முதலியன விற்று ஜீவனத்தை நடத்திவந்தாள். அவள் தாழ்ந்த குலத்தினளாதலால் உயர் சாதியினர் அவளிடம் பால், மோர் முதலியவற்றை வாங்க மாட்டாராதலால் பக்கத்தூரில் உள்ள ஒரு பட்டாணியன் வீட்டிற்குச் சென்று மோர் விற்று வந்தாள். பட்டாணியனும் அவளை ஒரு சகோதரியாகக் கருதி வந்தான். ஒரு நாள் மோர் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது கெளதல மாடன் அவளை வழிமறித்து சரச வார்த்தைகள் பேசினான். ஆனால் பூவாயி திரும்பி வருவதாகக் கூறி அந்தச் சமயத்தில் தன் கற்பைக் காப்பாற்றிக்கொண்டாள். மறுநாள் தன் பட்டாணிய சகோதரனிடம் முதல் நாள் நடந்ததைக் கூறி வருந்தினாள். பட்டாணியன் அவளோடு உடன் பிறந்தவனல்லன். ஆனால் உடன் பிறந்தவளைப் போன்று அவளை நினைத்திருந்ததனால் அவனது மானிட உணர்வு அவளைக் காப்பாற்றத் தூண்டியது. தான் அவளுக்கு, அவளது ஊர்வரை துணை வருவதாகக் கூறினான். அவளை முன்னே போகச் சொல்லி அவன் சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்தான். வழியில் கெளதல மாடன் பூவாயியை வழிமறித்து அவளை வலிந்து தழுவ முயன்றான். பின்னால் வந்து கொண்டிருந்த பட்டாணியன் அதைக் கண்டு, கெளதல மாடன் மேல் பாய்ந்தான். இருவரும் போராடி உயிர்நீத்தனர். தன்னைக் கெடுக்க வந்தவனுக்கும், தன்னைப் பாதுகாக்க வந்தவனுக்கும், உயிர் போக தானே காரணமானதை எண்ணி பட்டாணியன் இடுப்பிலுள்ள கத்தியை உருவி தன் வயிற்றில் குத்திக்கொண்டு இறந்தாள்.
இக்கதை சாதி உணர்வு, மத உணர்வு இவற்றிற்கெல்லாம் மேலாக மானிட உணர்வைப் போற்றுகிறது. அது இந்தச் சாதிக்குத்தான் சொந்தம் என்று இல்லை. ‘குலத்தளவாகுமாம் குணம்!’ என்ற பிற்போக்கான பழமொழியை இக்கதை பொய்யாக்குகிறது. மானிட உணர்வு சாதி கடந்தது. இங்கே பட்டாணியனிடம் அது இருக்கிறது. தன் உடலின்புத்துக்காகத் தன் வலிமையைப் பயன்படுத்துகிறான் கெளதல மாடன். அதற்குக் குறுக்கே வந்த பட்டாணியனை எதிர்த்து மூர்க்கமாகப் போராடி அவனைக் கொன்றான். பட்டாணியன் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் மானத்தைக் காக்கப் போராடினான். அவனும் உயிர் நீத்தான். பட்டாணியனது வீரம் பிறருக்குப் பயன்பட முனைந்தது. மானிட உணர்வோடு கூடிய வீரம் கிராம மக்களால் போற்றப்படுகிறது.
வெங்கல ராசன் கதை
ஈழ நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக மலையாளத்திலுள்ள முட்டத்திற்கு வெங்கல ராசனும், அவனது இரு பெண்களும் வந்து சேர்ந்தனர். முட்டத்தில் புதிதாகக் கட்டிய கோட்டையினுள் வாழும் குடிமக்களுடன், அவர்களும் வாழ்ந்து வந்தனர். வெங்கல ராசனின் இரு பெண்களும் மிகவும் அழகானவர்கள். வந்திருப்பதோ புதிய இடம். ஆகையால் வெங்கல ராசன் அவர்களை வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல அனுமதிப்பதில்லை. பறக்கை என்பது முட்டத்திற்கு அருகிலுள்ள ஓர் ஊராகும். அங்கு தேர்த் திருவிழா நடைபெற்றது. வெங்கல ராசனின் பெண்களும் தேர்பார்க்க ஆசைப்பட்டுத் தகப்பனிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அவன் அனுமதி கொடுக்க மறுத்து விட்டான். தேர் பார்க்கும் ஆசையில் சகோதரிகள் இருவரும் தகப்பனுக்குத் தெரியாமல் பறக்கைக்குச் சென்று திருவிழா பார்த்தனர். அவ்விருவரது அழகையும் கண்ட மலையாள ராஜா அவர்களை அடைய ஆசைப்பட்டு இன்னாரென அறிந்து வைத்துக் கொண்டார். திரும்ப சகோதரிகள் வீடு வந்து சேர்ந்து விட்டனர். மகாராஜாவின் வேலையாள் வெங்கலராசனிடம் அவனது இரு பெண் மக்களையும் மகாராஜாவிடம் அனுப்பி வைக்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டதாகக் கூறினார். பின்பே தன் பெண்கள் பறக்கைக்குத் திருவிழா பார்க்கச் சென்றதையறிந்து கொண்டான்.
மலையாள ராஜாவினுடைய பரம்பரையில் ராஜ்யத்திற்கு வாரிசாகும் உரிமை அரசனது சகோதரியின் சந்ததிக்கே உரித்தாகும் என்பதால் அரசர்கள் மணம் செய்து கொள்ளுவதில்லை. அந்தப்புரத்தில் காதற் கிழத்திகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். காதற்கிழத்திகளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் வாரிசு உரிமை கிடையாது. காதற்கிழத்திகள் அம்மச்சி என்று மதிப்புடன் அழைக்கப்பட்டனர்.
அரசனது பரம்பரை வழக்கத்தை அறிந்த வெங்கலராசன் தன் பெண்களை அரசனது அந்தப்புரக் காதலிகளாக்குவதற்கு விரும்பவில்லையாதலால் அரசனது விருப்பத்துக்கு உடன்பட முடியாதென மறுத்தான். இதனால் கோபம் கொண்ட அரசன் தனது படையை அனுப்பி வெங்கலராசனைப் பணியவைக்க நினைத்தான். படைகள் கோட்டைக்கு வெளியே நின்றுகொண்டிருந்தன. வெங்கல ராசனின் மூத்தமகள், தங்களால் ஒன்றுமறியாத குடிமக்களும் மற்றவரும் துன்பப்பட வேண்டாம் எனக் கருதி, துணிவு மிகுந்தவளாதலால் தன் தந்தையிடம் தன் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே எறிந்து விட்டால் அரசன் மனம் மாறித் திரும்பிப் போய் விடுவான் எனக் கூறினாள். அதைக் கேட்ட வெங்கல ராசன் முதலில் பெற்ற பாசத்தால் மனம் கலங்கி மறுத்தானாயினும், மற்றவரின் நன்மையை உத்தேசித்து மகளின் தலையை வெட்டி கோட்டைக்கு வெளியே வீசியெறிந்தான். பெண்களை எதிர்பார்த்து வந்த அரசன் அதில் ஒருத்தியின் தலை துண்டிக்கப்பட்டு வெளியில் வந்து விழுந்தவுடன் மனம் கலங்கி, அத்தலையை ஒரு பல்லக்கில் வைத்து மரியாதையுடன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து வழிபட்டான்.
சமூகக் கதைகள் பற்றிய கருத்து
இரண்டு மாறுபட்ட சமுதாய அமைப்புகளில் வளர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் முரண்பாடுகளை இக்கதை சுட்டிக் காட்டுகிறது. மணமுறை பற்றிய வெங்கல ராஜனின் கருத்தும், மலையாள ராஜனின் கருத்தும் மோதிக் கொள்ளுகின்றன. அதன் விளைவு பலவீனமான சமூகத்திற்கு அழிவைத் தருகிறது.
சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை யாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்ற முடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறிப்பட்டன. தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும் சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.
வரலாற்றுக் கதைகள்
வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்ச பாண்டவர்’ கதை அல்லது ‘ஐவர் ராஜாக்கள்’ கதையாகும்.
ஐவர் ராஜாக்கள் கதை
பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டைத் தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. கம்பணன் தென் நாட்டில் படையெடுத்தான். தென்பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். வித்தவராயன் படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும்போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின்வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டே இருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில் நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள். எல்லோரிலும் இளையவனான குலசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்து விட்டால் பாண்டியர் எதிர்ப்பு அடங்கும் என்று கன்னடிய மன்னன் எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை. குலசேகரன், வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டையேறினாள். இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 400 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை. கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்து விட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்துகொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.
ராமப்பய்யன் கதை
திருமலை நாயக்கன், தன்னுடைய காலத்தில் தமிழகம் முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொணரப் பல போர்களை நடத்தினான். அவனுடைய தளவாய் ராமய்யன் தென் பாண்டி நாடு முழுவதையும் வென்று அடிமைப்படுத்தினான். இராமநாதபுரம் சேதுபதிக்கும், ராமய்யனுக்கும் பல போர்கள் நடந்தன. இப்போரில் இலங்கையிலிருந்து வந்த டச்சுப் போர்க் கப்பல்கள் பங்கு கொண்டன. சடைக்கத் தேவனது மருமகன் வன்னியன் வீரத்தோடு போராடி மாண்டான். இறுதியில் சேதுபதி சிறைப்பட்டான். தண்டனையால் பகைமையை வளர்த்துக் கொள்ளுவதைவிட நட்புரிமையால் சேதுபதியை அணைத்துக் கொள்ள எண்ணி திருமலை நாயக்கன் அவனை விடுதலை செய்து கடற்கரை மண்டலத்தின் அதிபதியாக நியமித்து, ‘திருமலை சேதுபதி’ என்ற பட்டமும் அளித்து அவனோடு உறவு பூண்டான். இச் சேதுபதியே பிற்காலத்தில் மைசூர் மன்னன் மதுரையைப் பாதுகாக்கப் பெரும் படையோடு சென்று போராடினான். திருமலை நாயக்கனது பெருமையையும், ராமய்யனுடைய வீரத்தையும், சடைக்கனுடைய வீரத்தையும், நன்றியுணர்வையும் போற்றிப்பாடும் நாட்டுப்பாடல் ராமப்பய்யன் அம்மானை.
இரவிக்குட்டிப்பிள்ளை
இதுபோலவே ராமப்பய்யன் தெற்குக் கோடியில் திருவனந்தபுரம் மன்னர்களோடு, பல போர்கள் புரிந்திருக்கிறான். ஆரல்வாய் மொழிக் கோட்டையிலிருந்து அடிக்கடி வரும் படையெடுப்புகளைத் தடுக்கவும், நாஞ்சில் நாட்டைக் கைப்பற்றவும் செய்த முயற்சியே இது. இம்முயற்சியை நிறைவேற்ற ராமய்யன் பெருபடை கொண்டு ஆரல்வாய் மொழியை முற்றுகையிட்டான். மலையாள மன்னன் படை சிதறியோடியதும் இரவிக்குட்டி என்ற இளைஞன் படைகளைச் சேகரித்து பெரும் படையை எதிர்த்துப் போராடினான். அரசனை எதிர்த்து நின்ற எட்டு வீட்டுப் பிள்ளைமார் என்ற பிரபுத்துவத் தலைவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுக்க முன்வந்தார்கள். இரவிக்குட்டிப்பிள்ளைக்கு துணைப்படை அனுப்புவதாக வாக்களித்துவிட்டு நல்ல சமயத்தில் அவனைத் தனியே தவிக்கவிட்டனர். இரவிக் குட்டிப்பிள்ளை வீரமரணம் எய்தினான். அவனது இணையற்ற வீரத்தைப் போற்றும் தமிழ்நாட்டுப் பாடலும், மலையாள நாட்டுப் பாடலும் உள்ளன. இச்சம்பவங்கள் 1537லும், 1639லும் நடைபெற்றவை.
தேசிங்குராஜன் கதை
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அப்பேரரசை எதிர்த்து செஞ்சிக் கோட்டையின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவனுக்கு உதவி செய்தவன் செஞ்சி முஸ்லீம்களின் தலைவன் முகமதுகான். ஜாதியையும் மதத்தையும், மேலாகக் கருதாமல் நட்பையும், நாட்டுப் பற்றையுமே மேலெனக் கருதியவன் முகமதுகான். இவர்களது வரலாற்றுக் கால வாழ்வு பத்து மாதங்கள் தான். நீண்டநாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. ஏன்? லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை முன்னூறு குதிரைவீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு. முகலாயப் படைத்தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்று விட்டான். தானும் உயிர்நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லீம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலைவணங்குகிறது.
ஆங்கிலேயர் காலத்தில்
வரலாற்றுப்பாடல்கள்
இதன் பின்னர் ஆங்கிலேயர் ஆதிக்கம் மறைமுகமாகவும், அதன் பின்னர் நேரிடையாகவும் வளரத் தொடங்குகிறது. இவ்வளர்ச்சி எதிர்ப்பின்றி நடைபெற்றுவிடவில்லை.
பூலுத்தேவர்கதை
வெவ்வேறு காலங்களில் எட்டயபுரத்தாரும், கட்டபொம்மன் முன்னோரும், சிவகிரி வன்னியரும், வடகரைச் சின்னணைஞ்சாத் தேவரும் நவாபையும், அவர்களது வசூல் குத்தகைதாரர்களான ஆங்கிலேயர்களையும் எதிர்த்து நின்றனர். ஆனால் அவர்களிடையேயிருந்த உட்பூசல்கள் காரணமாக எல்லோரும் ஒன்று சேரவில்லை. 1795ல் பூலுத்தேவர் முடிந்த அளவுக்குப் பாளையக்காரர்களை ஒன்று திரட்டி வரிகொடா இயக்கம் நடத்தினார். அவரை அடக்காமல் தென்பாண்டி மண்டலத்துப் பாளையங்களை அடக்க முடியாதென்று கண்ட ஆங்கிலேயர்கள் கர்னல் ஹீரான், மாபூஸ்கான், கம்மந்தான் கான்சாகிப் என்ற மூன்று தளபதிகளின் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்கள்.
சிறிய படையோடு நெற்கட்டான்செவல் கோட்டையிலும், மலையரண்களிலும் புகுந்துகொண்டு சமயம் நேர்ந்தபோது விரைவாகப் பாய்ந்து பெரும் படையைத் தாக்கிய பூலுத்தேவரை அவர்களால் அடக்க முடியவில்லை. அவரது திண்மையும், வீரமும் மற்றப் பாளைக்காரர்களையும், மக்களையும் கவர்ந்தது. அவருக்கு ஆதரவு திரண்டது. அவர் ஆங்கிலேயரை எதிர்க்கும் அனைவரையும், ஓரணியில் இணைக்க முயன்றார். முடிவில் ஐதர் அலியோடு தொடர்புகொண்டு தென்னாடு முழுவதிலும் ஆங்கில எதிர்ப்புப் போரை விஸ்தரிக்க முயன்றார். ஆனால் எதிர்ப்பு அணியிலேயே பல பிளவுகள் ஏற்பட்டதால் இதனை அவரால் சாதிக்க முடியவில்லை. ஆனால் இம் முயற்சியால் உயிர்விட்ட பூலுத்தேவர் விடுதலை வேட்கைக்கும், வீரத் தியாகத்துக்கும் ஒளிவிளக்காக விளங்குகிறார்.
அவரது வரலாறு ஆங்கில ஆசிரியர்களது நூல்கள் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் அவரைக் கலகக்காரராகவும், கொள்ளைக்காரராகவுமே சித்திரிக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் அவரைப்பற்றிய தனி நாட்டுப்பாடல்களும், ஒரு ஒயில் பாட்டும், சிந்துப் பாடலும் வழங்கி வருகின்றன. அவை இன்னும் முழுமையாக அச்சாகவில்லை. சிற்சில பாடல்களே வெளியாகியுள்ளன. அவை சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
கான்சாகிபுகதை
இப்போரில் ஆங்கிலப் படையின் தளபதி யூசப் கான் என்பவன். அவன் இந்துவாக இருந்து, ஒரு முஸ்லிம் வணிகனால் அபிமான புத்திரனாக வளர்க்கப்பட்டான். அவன் நவாபின் படையில் சிப்பாயாகச் சேர்ந்து தனது வீரத்தாலும், திறமையாலும் தளவாயாக உயர்ந்தான். பரங்கிமலையிலும், சதுரங்கப்பட்டணத்திலும் காலூன்றியிருந்த டச்சுக்காரர்களின் கோட்டைகளைப் பிடிக்க ஆங்கிலேயருக்குத் துணை செய்தான். அவனது போர்த் திறமையைக் கண்டு வியந்த ஆங்கிலேயர்கள் அவனைத் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டு கம்மந்தானாக (Commander) நியமித்தனர். தென்னாட்டை அடக்க அவனையே அனுப்பி வைத்தார்கள். பல ஆண்டுகள் முயன்று அவன் தென்னாட்டுப் பாளையங்களை அடக்கினான். முக்கியமாகப் பூலுத் தேவரது வலிமையை ஒடுக்கினான். பல கொடுமைகள் செய்து ஆங்கிலேயர் ஆட்சியைத் தென்னாட்டில் நிறுவினான். ஆனால் ஆங்கிலேயர் நவாபின் விருப்பப்படி அவனை நவாபின் படைக்கு அனுப்பிவிட முடிவு செய்தனர். இவ்வாறு அவனது செல்வாக்கைக் குறைத்துவிட அவர்கள் முயன்றனர். ஆனால் பாளையக்காரர்களின் வீரவுணர்வைக் கண்ட அவன் தென்னாட்டில் சுயேச்சை அரசை நிறுவ எண்ணி மதுரையில் முடிசூட்டிக் கொண்டான். நவாபும், ஆங்கிலேயரும் அவனை ஒழித்து விட எண்ணினர். அவன் ஏற்கனவே ஆங்கிலேயரின் கையாளாகத் தென்னாட்டின் பாளையக்காரர்களை விரோதித்துக் கொண்டிருந்தான். ஆகவே அவனுக்கு இருபுறமும் இடி தோன்றியது. ஏககாலத்தில் சிவகங்கையையும் ஆங்கிலேயரையும் எதிர்த்தான். சிவகங்கையின் மன்னன் ஆங்கிலேயர்களோடு சேர்த்துகொண்டான். அதன் பின்னர் நிகழ்ந்த போரில் கான்சாகிப் தோற்றான். சூழ்ச்சியால் அவன் சிறைப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். கடைசிக் காலத்தில் ஆங்கிலேயனை எதிர்த்த கான்சாகிப், தனது முற்காலத்துச் செயல்களால் தென்னாட்டுப் பாளையக்காரர்களை ஒன்றுதிரட்டி ஆங்கிலேயருக்கு எதிரான முன்னணியை உருவாக்க முடியவில்லை. அவனது செயல்களின் விளைவால் அவன் அழிந்தான்.
அவனது வரலாறு ஆங்கிலேய ஆசிரியர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன. S.C.ஹில், கால்டுவெல் ஆகியோர் எழுதிய நூல்களிலும் மதுரை, திருநெல்வேலி, கெஜட்டியர்களிலும் அவனது வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மக்கள் அவனைப் பற்றிக் கொண்டிருந்த கருத்து ‘கான்சாகிப் சண்டை’ என்ற நாட்டுப் பாடலில் வெளியாகிறது. இது போன்ற சில நாட்டுப் பாடல்கள் மதுரை மாவட்டத்தில் வழங்கி வருகின்றன. அவை அச்சாகவில்லை. அவையனைத்தும் சேகரித்து வெளியிடப்பட வேண்டும்.
கட்டபொம்மு
கான்சாகிபுவின் மரணம், திப்புவின் தோல்வி, ஆர்க்காட்டு நவாப்பின் வீழ்ச்சி இவற்றின் காரணமாக கிழக்கிந்திய கம்பெனி தென்னாட்டில் நேரடி ஆட்சியை மேற்கொண்டது. தமிழ்நாட்டுப் பாளையங்களின் சில ஆதிக்க உரிமையைக் கட்டுப்படுத்தி வரி வசூலிக்க நிலங்களை செட்டில்மெண்டு செய்தனர்.
இந்த செட்டில்மெண்டு மூலம் பணிந்துவிட்ட பாளையக்காரர்களுக்கு, தங்களிடம் பணியாத பாளையக்காரர்களின் நிலங்களைப் பிடுங்கி வழங்கினர். இவ்வாறுதான் பாஞ்சாலங் குறிச்சிப் பாளைய நிலங்கள் உள்ள அருங்குளம் சுப்பலபுரம் என்ற கிராமங்களை எட்டயபுரத்தாருக்கு வழங்கினார். கட்டபொம்மு ஆங்கிலேயரின் உரிமையை எதிர்த்தான். அவர்களுக்கு வரி செலுத்தவும் மறுத்தான். இதன் விளைவு என்ன என்று அவனுக்குத் தெரியும். தென்னாட்டில் சிவகெங்கை மருதுவைத் தவிர மற்ற எல்லாப் பாளையக்காரர்களும், ஆங்கிலேயரின் நவீனப்படை வலிமைக்கு அடி பணிந்து விட்டனர். மேற்கு வட்டகைப் பாளையக்காரர்களும் கிழக்கு வட்டகை நாயக்கர் பாளையங்களும், சேதுபதி முதலிய பெரிய பாளையக்காரர்களும், வெள்ளையர் ஆட்சிக்கு அடிபணிந்துவிட்டனர். ஆயினும் கட்டபொம்மு ஆங்கில ஆட்சியின் ஆணையை ஏற்க மறுத்தான். அவனை அடிமைப்படுத்த ஆங்கிலேயர்கள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்தனர். மண் கோட்டையிலிருந்து வாளும், வில்லும் கொண்டு சிறிய படையோடு, பீரங்கியும், துப்பாக்கியும் கொண்ட பெரும் படையை எதிர்த்துப் போராடினான் கட்டபொம்மன், முதற் போரில் தளபதி காலினஸ் இறந்தான். கட்டபொம்மனது தளபதி வெள்ளையனும் இறந்தான். முற்றுகை உடைந்தது. வெள்ளையர் படை சிதறியது. 1799ல் மறுபடியும் பெரும் படையோடு மேஜர் பேனர் மேன் கோட்டையைத் தாக்கினான். கோட்டை பிடிபட்டது. ஆனால் வெள்ளையர் படைக்குப் பெருஞ் சேதம் ஏற்பட்டது. ஆயினும் வெள்ளையர் வென்றனர். கட்டபொம்மன் தூக்கலிடப்பட்டான். பாஞ்சாலங்குறிச்சி தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது. ஆனால் வீர கட்டபொம்மனது தியாகம் சுற்றிலுமுள்ள மக்கள் மனத்தில் வீர உணர்வை எழுப்பியது. மக்கள் படை திரண்டது. பாளையங்கோட்டைச் சிறையிலிருந்த ஊமைத்துரையும், அவனது உறவினரும் விடுதலைப் படையால் விடுவிக்கப்பட்டனர். ஏழு நாட்களில் கோட்டை மறுபடியும் கட்டப்பட்டது. வெள்ளையர் எதிர்ப்பு அணி சுற்றிலும் பரவியது. தூத்துக்குடி துறைமுகத்தை ஊமையன் படை கைப்பற்றியது. வெள்ளையர் கலங்கினர். பெரும் படையோடு வெள்ளையர் தளபதி பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினான். ஊமையன் தப்பியோடிச் சிவகங்கைக்குச் சென்றான்.
மருது சகோதரர்கள்
சிவகங்கையில் ஆண்ட பெரிய மருது அரச வம்சத்தினன் அல்லன். வெள்ளையரை எதிர்த்து நின்ற சிவகங்கை மன்னன் முத்துவடுகநாதன் ஆட்சியை மருதுவிடம் ஒப்படைத்தான். அவனது விதவை வேலு நாச்சியார் அவனை மணந்து கொண்டாள். இவ்வாறு அவன் பாளையக்காரனானான். அரசியல் திறமை மிக்க தனது தம்பி சின்ன மருதுவின் துணையோடும், மக்கள் ஆதரவோடும் அவன் சுயேச்சையாக நாட்டைக் காத்து வந்தான். பலமுறை அவனை வெள்ளையர் பயமுறுத்தி வந்தனர். அவன் பணியவில்லை. வெள்ளையர்களை எதிர்த்து நிற்கும் பாளையங்களுக்கு அவன் உதவியளித்து வந்தான். அவனோடு சேர்ந்து போராடவே ஊமைத்துரை சிவகங்கை சென்றான். அவனைத் தங்களிடம் ஒப்படைத்து விடும்படி வெள்ளையர்கள் கேட்டார்கள். மருது உடன்படவில்லை. இதனையே சாக்காக வைத்துக்கொண்டு, தங்களை எதிர்த்து நிற்கும் கடைசிப் பாளையக்காரனான மருதுவை ஒழித்துவிட வெள்ளையர்கள் முடிவு செய்தார்கள். கர்னல் வெல்ஷ் என்ற தளபதி பெரும் படையோடு சிவகங்கையைத் தாக்கினான். பல போர்களுக்கு அப்புறமும் மருதுவை வெல்ல முடியவில்லை. மருது முத்து வடுகன் நேர் பரம்பரையைச் சேர்ந்தவனல்லன் என்றும், பரம்பரைப் பாளையக்காரர்களின் சாதியான தேவர் சாதியைச் சேர்ந்தவனல்லன் என்றும் கூறி முத்து வடுகனின் தாயாதி உறவினன் ஒருவனை பாளையக்காரனாக்கி தேவர் சாதியினரை மருதுவின் பக்கமிருந்து பிரித்தனர். இச் சூழ்ச்சிக்கு இரையான தேவர்கள் வெள்ளையருக்கு ஆதரவாகத் திரண்டனர். இவ்வாறு மருதுவின் அணியைப் பிளவு செய்து மருதுவைப் பலவீனப்படுத்தினர். கடைசியில் மருது பிடிபட்டான். சின்ன மருதுவும் ஊமையனும் பிடிபட்டனர். மூவரும் தூக்கிலிடப்பட்டனர். அவர்கள் குடும்பத்தினர் நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு ஓய்ந்தது.
வரலாற்றுப்பாடல்களைப் பற்றிய கருத்து
இவ்வரலாறு அனைத்தும் ஆங்கிலேயர் எழுதிய நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் இவ்வீரர்கள் பிடிவாதமும் மூர்க்க குணமும் உடைய கலகக்காரர்களாகவே அவர்களால் வருணிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது மானிடப் பண்புகளும் வீரத்தன்மையும் அவர்கள் மக்கள் பால் பெற்றிருந்த நன்மதிப்பையும் அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
ஆனால் மக்களுடைய படைப்புகளான நாட்டுக் கதைப் பாடல்கள் இவ்வீரர்களின் சிறப்பான பண்புகளைப் போற்றிப் பாடுகின்றன. அவர்களது வீரச் செயல்களைப் பற்றிக் கூறி நாம் பெருமை கொள்ளச் செய்கின்றன. மருதுவைப் பற்றிய பாடல்களில் இரண்டு ‘ஒரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ்’ தொடரில் சென்னை அரசினரால் வெளியிடப்பட்டுள்ளன. கட்டபொம்மன் கதைப் பாடலை என்னுடைய ஆராய்ச்சியோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள்: இன்னும் பல பாடல்கள் ஏட்டிலேயே புதைந்து கிடக்கின்றன. அவையாவும் திரட்டி வெளியிடப்படவேண்டும்.
தெய்வம் பற்றிய கதைப் பாடல்கள்
இனி கதைப் பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிடி வில்லுப்பாடல்களும், அம்மானைகளும் அடங்கும், வில்லுப்பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இருவகையாகப் பிரிக்கலாம்.
பெண் தெய்வங்களைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை. திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘அலையோசை’ என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார்கள். அவற்றுள் வேதக்கடவுளரை நீக்கிவிட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன. இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.
தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே. பரட்டைத்தலை கொட்டை விழி, கோரப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்கச் சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்லி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்துகொள்ளாத தேவியர், இவற்றை பயத்தோடு தான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக் கூடியவை என்று நம்பினார்கள். ‘யக்ஷி’ என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் - பண்பாட்டுக் தொடர்பின் காரணமாக இங்குக் குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம். கொத்துபல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.
தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப் பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகி விட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்குச் சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின் போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒரு நாள் மட்டுமே கொடை நடைபெறும்.
பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட துண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ, அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே. சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாங்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும், சுடலை மாடனுக்கு ஊர்தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தேய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்குச் சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.
மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம். அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.
இவை யாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக்கடவுளரில் சிவன், நாராயணன், முதலியோரைப் பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும் அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல, லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்கால முதல் தமிழ்நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.
பெளத்த சமணச் சிறு தேவதைகளும் அம்மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியனவையாயின. ஆனால் அவை உருமாறி, இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றிவிட்டு பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக்கூற்றை மெய்பிக்கும் சான்று. ‘சாஸ்தா’ சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்குப் பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம்.
பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவது போல சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.
சமூக நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள், புராணக் கதைகள் இவைபற்றி உழைக்கும் மக்களின் கருத்துக்களின் வரலாறு முழுவதையும் நாட்டுக் கதைப் பாடல் பற்றிய ஆராய்ச்சி நமக்குத் தெளிவாக்கும். ஆனால் இக்கதைப் பாடல்களைக் குறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை தமிழ் நாட்டில் தொடங்கவில்லை. இவற்றை ஆராயாமல் தமிழ் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை ஆராய முடியாது. இக் கதைப்பாடல்கள் ஆயிரக் கணக்கில் கிடைக்கின்றன. இவற்றின் ஆராய்ச்சியின் மூலம் நமது நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை சுமார் கி.பி.1330 முதல் கி.பி.1801 வரை ஆராய முடியும். இம் முயற்சிகளை தமிழறிஞர்கள் மேற் கொள்ள வேண்டும். இப்பணி பொதுப் பணியாகையால், ஆராய்ச்சிக் கழகங்களும், தமிழ்நாடு அரசினரும் இதற்கு உதவ வேண்டும்.
இந்நாட்டுப் பாடல்களின் மூலம் நாம் அறிந்துகொள்வன வருமாறு:-
1. நாட்டுப்புற மக்கள், வரலாற்றை எவ்வாறு நோக்குகிறார்கள்? வரலாற்று வீரர்களைப் பற்றி அவர்களுடைய சிந்தனை என்ன?
2. சமூகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அவர்கள் உயர்வாகக் கருதுவது எதனை? இழிவாகக் கருதுவது எதனை?
3. அவர்களுடைய நம்பிக்கைகள், துன்பங்கள் இன்பங்கள் இவை யாவை?
4. புராணங்களில் அவர்களுக்கு விருப்பமானவை எவை? அவற்றில் எத்தகைய மாறுதல்கள் அவர்கள் கருத்துக்களுக்கு உகந்தது?
5. அவர்கள் உருவாக்கியுள்ள பண்பாட்டையும், அதைச் சீரழிக்கும் முயற்சிக்கு அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பையும், இக்கதைகளில் நாம் காண்கிறோம்.
நம் நாட்டு மக்களின் பண்பாட்டு வரலாற்றை நாம் மதிப்பிட, நமது இலக்கியம், கலைகள் நாம் வளர்த்துள்ள பழக்க வழக்கங்கள் இவற்றோடு நாட்டுக் கதைப் பாடல்களையும் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும்.
பண்பாடும்
பண்டைய வரலாற்றின்
அரசியல், மொழி, கலை,
இலக்கியம் முதலிய தமிழ்ப்
பண்பாட்டினை
இக்கட்டுரைத் தொகுப்பு
புதிய பார்வையோடு
ஆராயகிறது. தமிழர்
வரலாற்றை வரைவதற்கு
இந்நூல் ஒரு தூண்டுகோலாக
அமையுமென்று
நம்புகிறோம்.