தமிழர் வரலாறும் பண்பாடும்/புராதன ஆரியரும் திராவிடரும்

புராதன ஆரியரும்
திராவிடரும்

(டாக்டர் ஆனந்த குமாரசுவாமி

1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி, இங்கிலாந்தில் பூகர்ப்ப இயலில் டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 1947ம் ஆண்டில் உயிர் நீத்தார். அவர் எழுதிய நூல்களுள், இந்திய இந்தோனேசியக் கலைகளின் வரலாறு தலைசிறந்தது. அதைப் போன்றதோர் சிறந்த நூல் வரலாற்றுத் துறையில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இந்நூலில் ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். அவரது கருத்துக்களைத் தொகுத்து இக்கட்டுரையில் விளக்க முயன்றுள்ளேன். -நா.வா.)

கிறிஸ்து சகாப்தத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதிலும் சிறு சிறு குடியினராகப் பரவியிருந்தனர். இவர்கள் மேற்கிலிருந்து வந்தனர் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுவர். ஆனால் புதிய கற்காலம் தொட்டு இந்நாட்டிலேயே பண்பாட்டு வளர்ச்சி பெற்றவர்கள் திராவிடர் என்பதே ஆனந்தரின் கருத்து. ஆரியர்கள் ‘தாஸ்யூக்கள்’ அல்லது ‘தாஸர்’ என்ற வகுப்பாரோடு ஓயாமல் போராடி வந்தார்களென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்களது நகரங்கள் ஆரியர்களால் புரங்கள் என்று அழைக்கப்பட்டன. அவர்கள் ஆரிய இனத்தவர் அல்ல என்பது ‘அனாஸர்’ (மூக்கற்றவர்கள்) என்று ஆரியர் அவர்களுக்கு இட்ட பெயரிலிருந்து தெரிகிறது.

இன்றைய இந்தியப் பண்பாட்டில் திராவிட அம்சங்களை நாம் சுட்டிக்காட்டலாம். லிங்க வணக்கம், சக்தி வணக்கம், நாகர், யக்ஷி வணக்கம் இன்னும் இயற்கைத் தேவதை வணக்கம் முதலிய திராவிடப் பண்பாட்டிலிருந்து தோன்றியவை பல கலைகளிலும் அவர்களது காணிக்கையைக் காணலாம். ஆரியர்கள் வட நாட்டார், திராவிடர் தென்னாட்டார்; ஆரியர் திராவிடரை வெற்றி கொண்டனர். இவ்வெற்றி முடியரசு அமைப்பு இன ஆட்சி முறையின்மீது கொண்ட வெற்றி என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் வெற்றி பெற்றவர்களது பண்பாடு, தோற்றவரது கலைகளாலும் பண்பாட்டாலும் மூழ்கடிக்கப்பட்டு, தோற்றுவிட்டது. திராவிடர் பண்பாட்டின் முக்கிய அம்சங்களான லிங்க வணக்கம், சக்தி வணக்கம், பக்தி இயக்கம், அது தோற்றுவித்த உருவ வழிபாடு முதலியன ஆரியர் பண்பாட்டை ஆட்கொண்டது. ஆரியரது யக்ஞம் என்ற வழிபாட்டு முறையை திராவிடரது பூசை என்ற வழிபாட்டு முறை ஆக்கிரமித்து மாற்றிவிட்டது.

சிற்பக் கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிடர் கலையில் தோன்றி, இந்தியக் கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள், (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்களல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல், தொழில், புராதன கடல் வழி வாணிபம் அனைத்தும் திராவிடர்களுடையதே.

தட்சிணத்திலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த திராவிடருடைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வளர்ச்சி பெற்றதோர் பண்பாட்டை உடையவர்கள் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரை முதல் கிழக்குக் கடற்கரை வரை பரந்து கிடந்த ஆந்திரப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது. அக்காலத்திலேயே கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர் பேரரசு வலிமை பெற்று விளங்கியது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியமும் இன்கலைகளும் மகத்தான வளர்ச்சிபெற்று உலகப் புராதனப் பண்பாடுகளுள் சிறந்ததொன்று என விளங்கியது. தமிழ்நாடு, ரோம் சாம்ராஜ்யத்தோடும் இந்தோனேசியாவோடும் வாணிபத் தொடர்பும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து மிளகு, முத்து, சந்தனம், தேக்கு முதலிய பொருள்கள் ஏற்றுமதியாயின.

இந்தியத் தொல் பொருள்களில் சில, கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும், பின்புமாகத் தோன்றியவை. அவற்றின் தோற்றகாலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை. பழங்கற்காலச் சின்னங்களும், நடுகற்காலச் சின்னங்களும் இந்தியா முழுவதிலும் கிடைக்கின்றன. புதிய கற்காலச் சின்னங்கள் கிறிஸ்து சகாப்தத்திற்கு அணித்தானவை. அவற்றில் கல் ஆயுதங்களும், மண்பாண்டங்களும் அடங்கும். வட இந்தியாவில் புதிய கற்காலத்தில் செம்புப் பண்பாடு தோன்றியது. இவ்வுண்மைக்கு மோஹன்ஜோதராத் தொல் பொருள்களே சான்தாக அமையும். மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ என்ற பகுதியில் செம்புக் கருவிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சாதாரண ஈட்டி முனைகளும், பிளவற்ற ஈட்டி முனைகளும், போர்வாள்களும், மீன் தூண்டில்களும் இவ்விடத்தில் அகப்பட்டன. அவற்றுள் சில திறமையான வேலைப்பாடுடையவை. இவற்றுள் சில மிகவும் கனமாகவிருக்கின்றன. இவை தொழில்களில் பயன்பட்டிரா. பூசைக்குரியனவாக இவை இருந்திருக்கலாம். வட இந்தியாவில் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வெண்கலச் சாமான்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இரும்பு கி.மு.1000 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்திருக்கலாம்.

ஆரியர்களுக்கு அதற்கும் முன்னரே இரும்பின் பயன் தெரிந்திருக்க வேண்டும். செம்புக்காலம் என்றதோர் பண்பாட்டுக் கட்டம் தென்னிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கும், இரும்புக் காலத்திற்கும் இடைவெளியற்ற தொடர்பு உள்ளது. தென்னாட்டில் வரலாற்று முற்காலப் புதை பொருள் தலங்களில் இரும்புக் கருவிகள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் இரும்புக் கணியம் ஏராளமாகக் கிடைக்கிறது என்பதைக் காணும்பொழுதும், சங்க வளையல் முதலிய அணிகலன்களைச் செய்வதற்கு இரும்பு அரங்கள் தேவை என்பதை நினைவில் கொண்டும் இரும்பு தென்னிந்தியாவிலேயே உருக்கி எடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது. வேதங்களில் இரும்பு என்ற சொல் இல்லாததைக் கவனத்தில் கொண்டு கி.மு.1500ம் ஆண்டிற்கு முன் இரும்பு வட இந்தியாவில் உபயோகத்தில் இருந்ததில்லை எனக் கூறுவாரும் உளர். ஆயினும் இந்தியா முழுவதிலும் சுமார் 3000 ஆண்டுகளாகவே இரும்புக் கால நாகரிகம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

திராவிடருக்கும் முந்திய பண்பாடு ‘நிகிரிடோ’ பண்பாடு என்றும், அதுவும் இந்தியா முழுவதிலும் காணப்பட்டதென்றும் நினைக்கப் பல சான்றுகள் உள்ளன.

இந்தியாவினுள் ஆரியர் நுழைந்த காலம் சுமார் கி.மு.2000 முதல் 1600 வரை இருக்கலாம். சிந்து சமவெளியில் குடியேறி பின்னர் அவர்கள் கங்கைச் சமவெளியிலும், விந்திய மலையடிவாரத்திலும் பரவினார்கள் என்று நாம் கருதலாம். பின்னர் அவர்கள் தென்னிந்தியாவிலும் குடியேறினர். வேதகால ஆரியர் தச்சுத் தொழில், வீடுகட்டும் தொழில், ரத நிர்மாணம், உலோக வேலைகள், செம்புப் பாத்திரங்கள் செய்தல், தங்க நகைத் தொழில் முதலியனவற்றை அறிந்திருந்தார்கள். நெசவும். மண்பாண்டத் தொழிலும், தோல் பதனிடும் தொழிலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தெய்வப் படிமங்களை அவர்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்தார்கள் என்பதற்குப் புராதன நூல்களில் சான்று கிடைக்கவில்லை. ஆரியர்களது கலை அழகுபடுத்தும் கலையாக அடையாளபூர்வமான கலையாக இருந்தது. இயற்கையையோ, மனிதர்களையோ, உருவபூர்வமாக அல்லாமல், அடையாளபூர்வமாக இக்கலை வெளியிட்டது. ஆனால் திராவிடக் கலையில் உருவபூர்வமான வெளியீடு காணப்பட்டது. ஆனால் வளர்ச்சியுற்ற நிலையில் அடையாள பூர்வமான கலைப்போக்கும், உருவபூர்வமான கலைப் போக்கும் கலந்து (Synthesis) புதியதோர் கலைப் போக்கு உருவாயிற்று. உதாரணமாக பெளத்தக் கலையில் உருவமும், அடையாளமும் ஒன்றி நிற்பதைக் காணலாம். யானையின் உருவமும், அதன் பொருளான செழிப்பும் பழங்கால நாணயங்களின் சின்னங்களாகக் காணப்படுகின்றன. யானையின் உருவம் செழிப்பை அடையாளமாக உணர்த்தும். இதில் இரண்டு கலைப்போக்குகள் கலந்து பரிணமித்து முழுமையடைவதைக் காணலாம். இதுபோலவே உடைகளின் கரைகளிலும், சுவரில் எழுதிய கொடி சித்திரங்களிலும் இக்கலப்புப் போக்கைக் காணலாம். ஆனால் இக்கலை இணைப்பு மிகப்பழங்காலத்திலேயே தோன்றி விட்டது. குஷானர் காலகட்டத்தில் நிலவிய கலை பக்தி இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சாராம்சத்தில் திராவிடர் கலையாகும். புத்த கயாவிலுள்ள ‘இந்திர சாந்தி’ உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றியமைத்ததின் விளைவாகும். குப்தர்காலப் புத்தர் படிமங்களும் எலிபான்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும், பல்லவர் காலத்து லிங்கங்களும், நடராஜர் மூர்த்தங்களும், இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வத் திருவுருவங்கள் உள்ளன. இவை யாவும் இந்திய சிற்பக் கலையின் ஆழ்ந்த தத்துவத்தை வெளியிடுகின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் அடையாள பூர்வமானதாகும். வழிபடுபவன் தனது உணர்வின் உருவமாகவும் சிலையைக் காண்கிறான். வரலாற்றுக் கால இந்தியக் கலையிலும், தத்துவத்திலும், புலனுணர்விற்கும், அகத்துறவிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டைத் தீர்த்து ஒன்றுபடுத்த நிகழ்ந்த நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். மேற்கும், கிழக்கும், வடக்கும், தெற்கும் இவ்வாறாக ஒன்றி உருமாறிப் புதியதொரு முழுமையான கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. இவை யாவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னேரே நிகழ்ந்து வளர்ச்சியுறத் தொடங்கி விட்டன. உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன்னரே ஆரியத் திராவிட பண்பாட்டுக் கலப்பு முழுமை பெற்று விட்டது.