தமிழிசை (நாமக்கல் வி. ராமலிங்கம்)

(நாமக்கல் வி. ராமலிங்கம் பிள்ளை எழுதிய தமிழிசை என்னும் கவிதை. இது இசைத்தமிழ் என்ற நூலில் காணப்படுகிறது)


தன் நாட்டுத் தாய்மொழியில் எவரும் கேட்கத்

தமிழ்நாட்டில் தமிழ்ப்பாட்டு வேண்டு மென்ற

நன்னாட்டத் துடன்ராஜா நம் சர். அண்ணா

மலையவர்கள் அதற்காகப் பரிசு நாட்டத்

தென்னாட்டுச் சிதம்பரத்தில் அறிஞர் கூடித்

தமிழ்மொழிக்குத் தேவையென்று தீர்மா னித்தால்

எந்நாட்டு யாராரோ எங்கோ கூடி

ஏசுவதும் பேசுவதும் என்ன விந்தை!
1


வந்தெந்தப் பிறமொழிக்கும் வரவு கூறி

வகைசெய்து வாழ்வளித்து வரிசை யெல்லாம்

தந்தவர்கள் தமிழரைப்போல் வேறு யாரும்

தாரணியில் இணைசொல்லத் தருவா ருண்டோ?

அந்தபெருங் குணத்தில்இன்னும் குறைவோ மில்லை;

ஆனாலும் தமிழ்இனங்கள் வாழ வேண்டின்

சொந்தமொழிக் கலைகளெல்லாம் சுருங்கித் தேயப்

பார்த்திருந்தும் சோம்புவது அறிவோ சொல்வீர்.
2

முக்கிமுக்கிப் பயின்றுபல முயற்சி செய்து

முக்காலும் வாக்குரைத்து, மூச்சு வாங்கத்

திக்குமுக்க லாடுகின்ற பாஷைக் கெல்லாம்

சிறப்பாகும் சங்கீதத் திறமை யென்றும்

சிக்குமுக்கு உச்சரிப்புச் சிறிதும் வேண்டாச்

சீரிலகும் எழுத்தியல்பு சேர்ந்த தாகித்

தக்கமிக்கோர் இனிமையெனும் தமிழில் நாதச்

சங்கீதம் குறைவென்றால் தரிக்க லாமா?
3

நாதமெனும் பிரமத்தைப் பணிவோம்; ஆனால்

நாமறியா மொழியில்நமக் கேதுநாதம்?

கீதமென்று புரியாத பாட்டைக் கேட்டுக்

கிளர்ச்சிபெறா உணர்ச்சியிலே கீதம் ஏது?

வாதமென்ன?இதிலெவர்க்கும் வருத்தம் ஏனோ!

வாய்மணக்கப் பிறமொழியை வழங்கி னாலும்

ஓதியதும் உணர்ந்ததுவும் தாய்ப்பா லோடு

ஊட்டியதாம் தாய்மொழிபோல் உதவா தொன்றும்.
4

கலையென்றால் உணர்ச்சிகளைக் கவர வேண்டும்,

களிப்பூட்டி அறிவினைப்போய்க் கவ்வ வேண்டும்,

நிலைகொள்ளாச் சிந்தனையை நிற்கச் செய்து

நீதிநெறி தெய்வநினைப் பூட்டற் கன்றோ?

விலையில்லாப் பெருமை பலஉடைய தேனும்

விளங்காத பாஷையிலே பாட்டைக் கேட்டுத்

தலையெல்லாம் சுளுக்கேற அசைத்திட்டாலும்

தனக்கதுவோர் கலையின்பம் தருவ துண்டோ?
5

சங்கீதம் பாடுதற்கும் மொழிக்கும் என்ன

சம்பந்தம் என்றெவரும் சாதிப் பாரேல்,

இங்கேதும் தடையில்லை ஏற்றுக் கொள்வோம்,

எல்லாமே தமிழ்ப்பாட்டாயிருந்தா லென்ன?

சிங்கார வாதங்கள் பலவும் பேசிச்

சிறப்பான முயற்சியிதைச் சிதைக்க லாமா!

தங்காமல் தயங்காமல் தளர்ந்தி டாமல்

தமிழ்நாட்டார் இச்செயலைத் தாங்க வேண்டும்.
6

கேட்டவர்கள் பாடினவர் எல்லாம் சேர்ந்து

கெடுத்துவிட்ட காரியத்தைக் கிண்டிக் கிண்டி

நாட்டிலின்னும் இதற்குமொரு சண்டை யின்றி

நல்லஒரு தமிழ்ப்பண்ணை நடத்த வேண்டும்:

பாட்டினோ டிலக்கியமும் படியப் பாடிப்

பருந்தோடு நிழல்செல்லும் பான்மை காப்போம்

கூட்டமிட்டுப் பேசிவிட்டு மறந்தி டாமல்

குற்றமிதைத் தமிழ்நாட்டிற் குறைக்க வேண்டும்.
7

பலநாட்டுச் சங்கீதம் நமக்கு வேண்டும்

பலபலவாம் முறைகளையும் புகழ வேண்டும்

விலைகூட்டிக் கலையறிவை வாங்கி யேனும்

விதம்விதமாய்த் தமிழ்மொழியில் விரிக்க வேண்டும்

அலைநீட்டும் கடல்கடந்த அறிவா னாலும்

அத்தனையும் தமிழ்வழியில் ஆக்க வேண்டும்

நிலைநாட்டித் தமிழ்க்கலைகள் வளர்ச்சிக் கென்றே

நிச்சயமாய் உழைக்க ஒரு நிலையம் வேண்டும்
8

ஆதலால் தமிழ்நாட்டில் தமிழ்ப் பாட்டிற்கே

ஆதரவு அகத்தியமாய் அதிகம் வேண்டும்;

காதலால் தாய்மொழியைக் காப்ப தன்றிக்

கடுகளவும் பிறமொழிமேற் கடுப்ப தல்ல;

தீதிலா திம்முயற்சி சிறப்புற் றோங்கத்

திருவருளைத் தினந்தினமும் தொழுது வாழ்த்தி

வாதெலாம் விலக்கிக்கலை வாண ரெல்லாம்

வல்லநல்ல தமிழ்பாடி வாழ வேண்டும்.
9