தமிழில் சிறு பத்திரிகைகள்/இலக்கிய வெளிவட்டம்‌

31. இலக்கிய வெளிவட்டம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் தோன்றிய மற்றொரு தனித்துவமான சிறு பத்திரிகை 'இலக்கிய வெளிவட்டம்' ஆகும்.

சமூக நோக்கும் மார்க்ஸிய உணர்வும் கொண்ட தீவிரவாதப் பத்திரிகை இது. மார்க்ஸியத்தைப் பரந்த அடிப்படையில் ஏற்றுக் கொண்டவர்கள் இ. வெ. வட்டத்தில் எழுதினார்கள்.

‘மார்க்ஸியம் என்பது மார்க்ஸ், ஏங்கல்ஸ் சொன்னவை மட்டுமின்றி, பின்வந்த காலகட்டங்களில், உலகம் பூராவும் தோன்றிய அந்தந்தப் பகுதியின் விசேஷத் தன்மைக்கு ஏற்ப மார்க்ஸிய ஆய்வுகளால் செழுமை சேர்த்த லெனின், ஸ்டாலின், மாவோ, கிராம்சி அல்துஸ்ஸர் போன்ற இவர்களின் படைப்புகளும் சேர்ந்தே மார்க்சியம் எனப்படுகிறது' என்று இ. வெ. வ. விளக்கம் தந்துள்ளது.

1976—ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் காலாண்டு ஏடு பலதரப்பட்ட விஷயங்களிலும் அக்கறை காட்டியது. இலக்கிய விவாதத்தில் ஆர்வம் கொண்டிருந்தது. பலவித அபிப்பிராயங்களை உடைய எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் தனது பணியில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

‘பத்திரிகை, படைப்பாளிகள், வாசக விமர்சனங்கள்—இந்த அடிப்படையிலான கூட்டுறவு பங்கப்படாமல் வளரும் போதே அறிவார்ந்த சூழல் என்பது விஸ்தாரமடைய முடியும். எங்களுக்கு எல்லாந் தெரியுமாக்கும் என்று நாங்கள் எப்போதும் முதுகைத் திருப்பிக்கொண்டு நின்றதில்லை. இ. வெ. வ.திட்டமிட்டு யாரையும் புறமொதுக்கியதில்லை. சுகவீனமற்ற எக்கருத்தையும் விவாதத்துக்கு ஏற்கத் தயக்கமில்லை என்று அது அறிவித்தது.

சிறு பத்திரிகை நடத்த முற்படுகிறவர்களில் அநேகர் பரபரப்பு ஊட்டுவதற்காகவும், எளிதில் கவனத்தைக் கவர்வதற்காகவும் தாங்கள் ‘விஷயம் தெரிந்தவர்கள்' என்று காட்டிக் கொள்ளவேண்டும் என்ற ஆசையினாலும் தடாலடி விமர்சனங்கள், தாக்குதல்கள், சாதனைகள் புரிந்துள்ள முன்னோடிகளின் நற்பணிகளைக் கவனிப்புக்குக் கொண்டு வராமலே அவர்களது சில பலவீனங்களையும் குறைபாடுகளையும் மட்டுமே வெளிச்சப்படுத்த விரைதல், பெயர் பெற்றவர்களைப் பழித்தலும் பரிகசித்தலும் போன்ற செயல்களில் உற்சாகமாக ஈடுபடுகிறார்கள். 1970 களில் சிறு பத்திரிகைக்காரர்கள் வெங்கட்சாமிநாதன், தருமு சிவராம் கட்டுரைகளை விரும்பிப் பிரசுரித்ததற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

இ. வெ. வட்டமும் சில சமயம் இப்படிச் செயல்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, 'திருட்டு மாம்பழமும் தித்திக்கவில்லை' என்ற கௌதமன் கட்டுரையைக் குறிப்பிடலாம்.

க. நா. சுப்ரமண்யம் படைத்துள்ள நாவல்கள் பற்றியோ, அவரது இலக்கிய விமர்சனங்கள், க. நா. சு.வின் இலக்கிய விமர்சனங்களில் காணப்படுகிற குறைபாடுகள் போன்ற எதைப்பற்றியும் இ. வெ. வ. தனது வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவர ஆசைப்பட்டதில்லை. ஆனால் திடீரென்று க. நா. சு. வின் இலக்கியத் திருட்டு பற்றி விரிவான கட்டுரையை வெளியிட முன்வந்தது.

திருட்டு மாம்பழம் தித்திக்காமலா இருக்கும் என்ற தன்மையில் இலக்கியத் தழுவலைக் கேலி செய்து க. நா. சு. எப்பவோ எழுதிய வரிகளை எடுத்துக் காட்டி, க. நா. சு. வும் திருடியிருக்கிறார்; ஆனால் அந்தத் 'திருட்டு மாம்பழம் தித்திக்கவில்லை' என்று கட்டிக் காட்டுகிற கட்டுரை அது. கட்டுரையாளர் தனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டது, க. நா. சு. என்றோ எழுதி வெளியிட்ட 'இரண்டு பெண்கள்' என்ற சிறு நாவல். அது பால் சாக்கின் ‘கிழவன் கொரியாத்' (பெரி கொரியாத்) என்ற படைப்பின் திருட்டு ஆகும் தானே திருட்டு வேலை செய்திருப்பவர்—அதுவும் திறமைக் குறைவோடு செய்திருப்பவர்—இலக்கியத் திருட்டு பற்றிப் பரிகசிப்பது வேடிக்கைதான் என்று எடுத்துச் சொல்வதற்காக அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பெரியவர்கள், பெயர் பெற்றவர்கள் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டுவது சரியல்ல என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் செய்திருக்கிற அரும்பெரும் காரியங்களை மறைத்துவிட்டும், மறந்து விட்டும் சின்னத் தவறுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்த முன்வருவது நேர்மையுமல்ல, நியாயமும் இல்லை என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

இ. வெ. வ. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் வெளியிட்டது. ‘கொச்சைக் கலாச்சாரம் கொள்ளை நோய்—எலெனா கார்ட்ஸெவா புத்தகம் பற்றி ஆன்ட்ரீ நுய்கின் மதிப்புரை', கலை இலக்கியம் பற்றி சூ என் லாய்— இவை போன்ற விஷயங்களே தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

‘படைப்பு வேறு, படைப்பாளி வேறு'— (படைப்புகளில் வெளிப்படுத்துகிற வகைகளிலேயே படைப்பாளியின் வாழ்க்கை முறைகளும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லை) என்ற கருத்தின் மீது மோதல்கள் ஏற்பட இ. வெ. வ. களம் அமைத்துக் கொடுத்தது.

இக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் தமிழவன் ‘கண்ணீர் மறைந்துவிடும். கவிதை மறையாது' என்றொரு கட்டுரை எழுதினார்.

‘வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் வாழ்க்கை' என்ற தலைப்பில், நிவேதித்தா எதிர்ப்புத் தெரிவித்து விரிவாக எழுதினார்.

'தான்—படைப்பு—தமிழவன்' எண்ணங்களை ஆய்வு செய்து சில விளக்கங்கள் தந்திருக்கிறார் ஞானி.

தமிழவன் தனது கருத்தை வலியுறுத்தி 'பாம்பு செத்துப் போயிற்று’ என்றொரு கட்டுரை எழுதினார்.

விவாத முடிவில், இருதரப்பு அபிப்பிராயங்களையும் சீர்தூக்கிப் பார்த்து 'ஸம்மிங் அப்' செய்துள்ளார், எஸ். வி. ராஜதுரை.

பயனுள்ள—சிந்தனைச் செறிவுள்ள கட்டுரைகள் இவை.

அதேபோல, 'மார்க்சியமும் கிறித்துவமும்' என்ற எஸ். வி. ராஜதுரையின் 17 பக்கக் கட்டுரையும் குறிப்பிடத்தகுந்தது.

‘இந்திய, கிரேக்க தத்துவ மரபுகள்—சில பிரச்னைகள் என்ற தலைப்பில், சாரு நிவேதிதா, வெ. சாமிநாதன் சிந்தனைகளை விவாதத்துக்கு எடுத்துக்கொண்டு விரிவான மறுப்புரை எழுதியதும் கவனிப்புக்கு உரியது.

‘வண்ணநிலவனுடன் உரையாடல்' வல்லிக்கண்ணனிடம் சில கேள்விகள், மற்றும் வண்ணநிலவனின் 'பாம்பும் பிடாரனும்' சிறுகதைத் தொகுப்புப் பற்றிய சந்திரமூலரசன் எழுதிய 'வீம்புள்ள பிரக்ஞை'—

'நமது இலக்கு—அதற்கான செயல்பாடுகள்- ந. முத்துசாமி, ஜெனக ப்ரியா கட்டுரை.

'ஜே.ஜே. சில குறிப்புகள்' பற்றி ராஜ்கெளதமன் கட்டுரை.

'தான்—படைப்பு— இயங்கியல் உறவுகள்— ஓர் எக்ஸிஸ்டென்ஷியல் மார்க்ஸிய அணுகல்'—சாருநிவேதிதா எழுதியது.

ஆகிய விஷயங்கள் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தவையாகும்.

1982 ஜூன் இதழில் இ. வெ. வ. ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இலக்கியம், கலை, கலாச்சாரம், சமூக விஷயங்களில் கவனம் செலுத்திய இ. வெ. வ. சாதி, சமயப் பிரச்னைகளுக்கு அதிகமான கவனிப்பைத் தரத் தீர்மானித்தது.

‘சமூகத்தின் சாதி, சமயப் பிரச்னைகள் முன்னுரிமை தந்து விவாதிக்கப்படும். வர்க்கப் பிரச்னையை மார்க்ஸியம் பிரதானப்படுத்துகிறது என்ற கவனத்தை நாங்கள் மறக்கவில்லை. சாதி, சமயப் பிரச்னைகளுக்குள் வர்க்கப் பிரச்னைகள் நீக்கமற நிறைந்திருப்பதை நாங்கள் குறித்துக் கொள்கிறோம். இதே போலத்தான் அரசியலும். அரசியல் தனி டிபார்ட்மெண்ட் என்று யாரும் நம்பவில்லை.'

இந்நோக்கில் நாட்டின் நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புகள், தகவல்கள் இடம்பெற்றன.

1983-ல் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி இ. வெ. வ. அதிகக் கவலையும் தீவிர அக்கறையும் காட்டியது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள சிறு பத்திரிகைச் சூழல் சார்ந்தவர்கள், மற்றும் கலாச்சார அமைப்புகள் இணைந்த கருத்தரங்கம் ஒன்றை ‘இலக்கிய வெளிவட்டம்' ஏற்பாடு செய்தது. 7-8-1983 அன்று மதுரையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுயேச்சை எழுத்தாளர்கள்— படைப்பாளிகள் சிலரும் கலந்துகொண்டார்கள்.

அங்கே வெளியிடப்பட்ட கருத்துக்கள், தீர்மானங்கள் அனைத்தையும் தொகுத்துத் தரும் இ. வெ. வ. இதழ் நவம்பரில் வெளிவந்தது. இந்தச் சிறப்பிதழ் இலங்கைத் தமிழர் பிரச்னைகளையும் போராட்ட அனுபவங்களையும் தமிழ்நாட்டினருக்கு உணர்த்தும் நோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இதழில் காணப்படும் சில விஷயங்கள்—

ஈழப் போராளிகளுடன் கலந்துரையாடல்.

இலங்கைத் தோட்டத் தொழிலாளர் பிரஜா உரிமை பற்றி.

இந்தியத் தமிழர்களும் வாக்குரிமையும்.

ஈழத் தேசிய இலக்கிய வளர்ச்சியில் எழுத்தாளரின் பங்கு பற்றி—மு. நித்தியானந்தன்.

மலையக சிறுகதை இலக்கியம்.

நெருப்பு ( சிறுகதை )—எஸ். கே. ரகுநாதன் ('சரஸ்வதி' இதழில் வந்த கதை-மறுபிரசுரம் ).

‘இலக்கிய வெளிவட்டம்' ராமநாதபுரம் மாவட்டம் வ. புதுப்பட்டி என்ற ஊரிலிருந்து வெளிவரும் பத்திரிகையாகும்.