தமிழில் சிறு பத்திரிகைகள்/இலங்கை இதழ்கள்
51. இலங்கை இதழ்கள்
தமிழ்நாட்டில் தீவிரமான இலக்கிய முயற்சிகள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் செயல்படுத்தப்பட்டு, வெற்றிநடை போடுகின்ற காலகட்டங்களில், இலங்கையிலும் அவற்றின் தாக்கம் நன்கு உணரப்படும். இலங்கையில் உள்ள இலக்கியவாதிகள் புது விழிப்புடனும் புதிய வேகத்தோடும், தமிழ்நாட்டில் நடைபெறுகிற முயற்சிகளைப் போல, அங்கும் உற்சாக முயற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். தமிழ்நாட்டில் ’மணிக்கொடி’ வந்து கொண்டிருந்த காலத்தில், இலங்கையில் ’ஈழகேசரி’ தோன்றி இலக்கிய மறுமலர்ச்சிக்காகப் பணிபுரிந்தது. பிறகு கிராம ஊழியன், கலா மோகினி காலத்தில் இலங்கை இளைஞர்கள் மறுமலர்ச்சி இலக்கியத்தில் ஆர்வம் காட்டினார்கள். ’மறுமலர்ச்சி’ என்றொரு சிறு பத்திரிகையை நடத்தினார்கள். கே. கணேஷ் பாரதி நடத்தினார். சரஸ்வதி நடந்து கொண்டிருந்தபோது அதை ஒட்டி ’சாந்தி’ , ’தாமரை’ வர ஆரம்பித்த காலத்தில், இலங்கை முற்போக்கு இலக்கிய வேகம் தீவிரமாகச் செயல்படலாயிற்று. டொமினிக் ஜீவா ’மல்லிகை’ யை ஆரம்பித்தார். இன்னும் எத்தனையே முற்போக்கு இலக்கியச் சிறு பத்திரிகைகள் தோன்றின, மறைந்தன.
இலங்கையில் வியாபாரம் செய்து கொண்டே இலக்கியப் புரவலராகவும் எழுத்தாளராகவும், எழுத்தாளர்களின் நண்பராகவும் வாழ்ந்த ஒட்டப்பிடாரம் ஆ. குருசுவாமி பிற்காலத்தில் என்னிடம் அடிக்கடி சொன்னது உண்டு. இந்த இலக்கியத் தாக்கங்கள், செயல் அலைகள் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்ற முடிவுரையோடு அவர் இப் பேச்சை முடிப்பது வழக்கம்.
இலங்கையின் இலக்கியப் பத்திரிகைகள் மற்றும் புத்தக வெளியீடுகள் குறித்து விரிவாக எழுதப்பட வேண்டியது அவசியமே. ஆனால் அவ்விதம் எழுதுவதற்கு எத்தனையோ தடங்கல்கள். அங்கே வெளியான புத்தகங்கள், பத்திரிகைகள் முதலியன தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. இது பெரிய குறைபாடு.
கிராம ஊழியன், சரஸ்வதி, எழுத்து காலங்களில் இலங்கை நண்பர்களோடு ஓரளவு தொடர்புகொள்ள முடிந்திருந்தது. பின்னர் அது நின்று போயிற்று. 1970 களில் இலங்கையில் பலப்பல சிறு பத்திரிகைகள் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. அவற்றைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இங்கே யாருக்கும் கிட்டியதாகத் தெரியவில்லை. என் இனிய நண்பர்கள் சிலரது உதவியினால் ஓரளவுக்குத் தகவல்கள் எனக்குக் கிடைக்க வழி ஏற்பட்டது. அவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் நான் இக் கட்டுரையை எழுத வேண்டியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பத்திரிகைகளின் பல இதழ்களைப் பார்க்க முடியாத நிலையில், கிடைத்த ஒன்று இரண்டைப் பார்த்து விட்டு அவை பற்றி எழுத நேரிட்டிருப்பதால், இலங்கைச் சிறு பத்திரிகைகள் பற்றி மேம்போக்காய் சில தகவல்களை மட்டுமே தர முடிகிறது.
இலங்கை ’தினகரன்’ நாளிதழின் வார மஞ்சரியில், தெளிவத்தை ஜோசப் என்ற ஈழத்து எழுத்தாளர் ’ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட ஏடு பாரதி’ என்ற தலைப்பில் சிற்றேடு பாரதி பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.
ஜனரஞ்சகப் பத்திரிகைகளான வணிகப் பத்திரிகைகள், கொள்கைப் பிடிப்போடு நடத்தப்படுகிற சிற்றேடுகள் குறித்து விளக்கமாக அறிவிக்கும் அவருடைய கட்டுரையிலிருந்து சில வரிகள் :
“எவ்வித சமுதாய நோக்கமோ இன்னபிறவோ இன்றி வெறுமனே மக்களின் இரசனையை மழுக்கி, வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பத்திரிகைகளுக்கு அரையிலும் குறையிலும் நிறுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதில்லை.
அவர்களுடைய இலக்கு பணம். இலக்கை நோக்கிப் பயணம் செய்யும் போது இடையே வரும் தடைகளை உடைத்தெறியப் பணத்தால் முடியும்.
மற்றவர்களின் இலக்கு பணம் அல்ல. ஒரு தர நிர்ணயம். இந்த இரண்டாவது குழுவினர் தங்களது இலக்கு நோக்கி நடக்கும்போது இடையில் குறுக்கிடும் முதல் தடை பணம்.
சில நேரங்களில் பணத்தால் இலட்சியங்களை உடைக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களிலுமே இலட்சியங்களால் பண்த்தை உடைக்க முடிவதில்லை, ஆகவே ஏதாவதோர் இலட்சியத்துடன் ஓர் ஏட்டை ஆரம்பிக்கிறவர்கள் இடையில் குறுக்கிடும் பணத்துடன் மோதிப் பார்த்து முடியாமல் தோற்றுவிடுவதுண்டு. இந்தத் தோல்வியே பெருமைக்குரியதுதான்...இவர்களுக்கு ஓர் எதிர்ப்புக் குரல்கூட நாம் கொடுக்காவிட்டால் இவைகளை நாமும் ஏற்றுக்கொண்டவர்களாகிறோம் என்று கூறிக்கொண்டு வெளிவரத் தொடங்கும் ஒரு சிற்றேட்டின் இலக்கு ’பணம்’ அல்ல. இத்தனை சீரழிவுகளையும் அழித்தொழித்துவிட்டு, தனது இலக்கை அடைந்துவிடுவதென்பதும் சாத்தியமானதொன்றல்ல. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் நாம் வாழும் காலத்தில் நடக்கும் இந்த அநீதிகளுக்கு நாமும் உடந்தையாகிவிடக் கூடாது என்னும் விழிப்புணர்வு போற்றற்குரியது.
தமிழ்நாட்டிலும் சரி, இங்கும் சரி; இலக்கியச் சிற்றேடுகளின் தோற்றம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த மாறுதல்களை நிகழ்த்தியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
1930—ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ’ஈழகேசரி’, 1946 ஜனவரியில் தொடங்கிய ’பாரதி’, 1946 மார்ச்சில் தொடங்கிய ’மறுமலர்ச்சி’, அதற்குப் பின் தோன்றிய இலக்கியச் சிற்றேடுகளும் தம்மாலான பணியினைச் செய்தே மறைந்துள்ளன” (தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 18, 1984).
‘ஈழகேசரி’ பல வருட காலம் நடைபெற்ற வார இதழ் ஆசிரியர் : சுன்னாகம் பொன்னையா. சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியில் பணி புரிந்திருக்கிறார். ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகள் பலரும் அதில் கதை எழுதினார்கள். பிற்காலத்தில் நல்ல நாவல்களைத் தொடர் கதையாகப் பிரசுரித்தது. இலக்கியக் கட்டுரைகள், சர்ச்சைகள், புத்தக விமர்சனங்கள் இடம் பெற்றன.
‘மறுமலர்ச்சி’— சில இதழ்களே வெளிவந்தன. வரதர், மகாகவி, அ. ந. கந்தசாமி, அ. செ. முருகானந்தன் போன்ற அந்நாளைய படைப்பாளிகள் இதில் எழுதினார்கள்.
’பாரதி’ யை கே. கணேஷ் ஆரம்பித்து நடத்தினார். திரு. வி. க. விடம் தமிழ் படிப்பதற்காக சென்னைக்கு வந்த கணேஷ் இடதுசாரிகள் பலருடனும் பழகும் வாய்ப்பைப் பெற்றார். நவசக்தி ஆசிரியர் குழுவில் இருந்த கே. ராமநாதன், ஐ. மாயாண்டி பாரதி, சக்திதாசன், சுப்பிரமணியன் ஆகியோருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்கள் சகலருடனும் பழகிய கணேஷ், கே. ஏ. அப்பாஸ், முல்க் ராஜ் ஆனந்த், கிருஷன்சந்த் போன்ற வட இந்திய எழுத்தாளர்களோடும் பழகினார். பெரும்பான்மையான வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அவர் அங்கே உள்ள எழுத்தாளர்கள், இலக்கியங்களுடன் தொடர்பு கொண்டவர். 1984—ல் கூட பல்கேரியா போய் வந்தார். பல்கேரியக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ் நாவல்களையும். அவர் தமிழாக்கியிருக்கிறார். ’கலாநேசன்’ என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதினார். இப்போதும் இலங்கைவாசியாகத்தான் இருக்கிறார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் கே. கணேஷும் ஒருவர். இலங்கை இலக்கிய விமர்சகரான பேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், ஈழத்தின் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்—
“1946—ல் இச்சங்கம் தோன்றுவதற்குக் காரணமாயிருந்தோர் அக் காலத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாகவிருந்த கே. ராமநாதன், கே. கணேஷ் ஆகியோரே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உந்துதலையும் ஆற்றுப்படுத்தலையும் அடிக்கல்லாகக் கொண்டு இந்தியாவில் கே. ஏ. அப்பாஸ் முதலியோரின் தலைமையில் தோன்றிய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று ராமநாதனும் கணேஷம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தனர்.”
இதே கணேஷுசும் ராமநாதனும்தான் கூட்டாசிரியர்களாக இணைந்து ‘பாரதி’ சஞ்சிகையை நடத்தினர்.
‘பாரதி’ யின் முதலாவது இதழ் 1946 ஜனவரியில் வெளிவந்தது.
அந்த இதழின் தலையங்கத்தின் சிறு பகுதி இது...
‘பாரதி அணுசக்தி யுகத்தின் சிற்பி. விஞ்ஞான முடிவுகளில் புரட்சி ஏற்படுத்திய அணுசக்தி போல் தமிழ் மொழிக்கும் புதுமைப் போக்களித்த மகாகவி பாரதியின் பெயர் தாங்கி வருகிறது இவ்விதழ். அவர் தமிழுக்குப் புது வழி காட்டியது போலவே பாரதியும் கண்டதும் காதல்கதைகள் மலிந்து விட்ட இன்றைய தமிழிலக்கியப் போக்கிற்குப் புது வழி காட்டும்...
தமிழ் தமிழுக்காகவே என்று தம் கூட்டத்திற்குள்ளேயே தமிழைச் சிறைப்படுத்திக் கொண்ட பண்டிதர்களின் இரும்புப் பிடியினின்று அதனை மீட்டு மக்கள் சொத்தாக்கினார் பாரதியார். இன்று பாரதி பரம்பரையில் வந்தோம் என்று ஜம்பமடிக்கும் எழுத்தாளர் கோஷ்டி கலை கலைக்காகவே என்று அப்பண்டிதர் பல்லவியையே வேறு இராகத்தில் பாடுகிறது. தமிழைச் சிறைமீட்ட பாரதியார் செய்த சேவையே பாரதியின் இலட்சியமும்’
கலை கலைக்காகவே என்று கூறி மொழி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் கலைஞர்களுக்கெதிராகவும்— ஏகாதிபத்தியத்துக்கெதிராகவும்—பாசிசத்துக்கெதிராகவும்— முதலாளித்துவத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பப் பாட்டாளி வர்க்கத் துணையுடன் பொதுவுடைமைச் சமுதாயத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பிய முதல் தமிழ் ஏடு பாரதிதான் என்று இலங்கை எழுத்தாளர்கள் கருதுகிறார்கள்.
1946 ஜனவரியில் தோன்றிய ’பாரதி’ ஆகஸ்ட் முடிய உள்ள எட்டு மாதங்களில் ஐந்து இதழ்கள்தான் கொண்டுவர முடிந்தது. அதன் ஆறாவது இதழ் 1948 ஜனவரியில் பிரசுரம் பெற்றது. அதுவே பாரதியின் இறுதி இதழாகவும் அமைந்தது.
முற்போக்கு இலக்கிய இதழாக ஆரம்பித்து, இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் சமமான இடம் அளித்து வந்த பாரதி, மூன்றாவது இதழுக்குப் பிறகு இலக்கியப் பகுதிகளைக் குறைத்துக் கொண்டு ஒரு அரசியல் ஏடு ஆகவே மாறிவிட்டது.
இலக்கியவாதிகளின் ஆதரவையும் பெறாமல், அரசியல்வாதிகளின் பக்கபலத்தையும் பெற முடியாமல், ’பாரதி’ தன் வரலாற்றை முடித்துக் கொண்டது.
முற்போக்கு இலக்கிய ஏடுகள் என்று சொல்லிக் கொண்டு இலங்கையில் அவ்வப்போது சிறு பத்திரிகைகள் வந்திருக்கின்றன. அவை சிறிது காலமே உயிர் வாழ்ந்துள்ளன.
நாவலாசிரியர் இளங்கீரனை ஆசிரியராகக் கொண்டு 1960 களில் ‘மரகதம்’ என்றொரு பத்திரிகை வந்தது.
1968—ல் மருதூர்வாணன் ஆசிரியராக இருந்து ’தேன்மதி’ என்ற பத்திரிகையை நடத்தினார். இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் அரங்கமாக அது விளங்கியது. ’கலைக் கூடல்’ என்ற அமைப்பையும் உருவாக்கி எழுத்தாளர்கள் சந்தித்து உரையாடிப் பழகுவதற்கும் அது ஏற்பாடு செய்தது.யாழ்ப்பாணம் இ. செ. கந்தசாமி 1967-ல் ’வசந்தம்’ மாத இதழை ஆரம்பித்தார். ’ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் முற்போக்கான பாதையில்’ செல்கின்றோம் என்று அறிவித்தது அது. தமிழ்நாட்டிலிருந்து கட்டுப்பாடினிறி இறக்குமதியாகி, இலங்கை வாசகர்களின் மனசையும், இலங்கைப் பத்திரிகைகளையும் வெகுவாகப் பாதித்துத் தீமைபுரியும் ’தமிழ்ப் பத்திரிகைக் குப்பைகளுக்கு’ பலத்த எதிர்ப்பு தெரிவித்தது வசந்தம். இளைய எழுத்தாளர்களின் கதை கவிதைகளுடன், லூ சூன் போன்ற முற்போக்கு இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தும் பிரசுரித்தது.
’புரட்சிகர சிந்தனையாளர்களின் எழு (த்துக்)களம் என்று கூறியவாறு புத்தளம் மன்னார் வீதியிலிருந்து ’பொன்மடல்’ வந்தது.
’அக்னி’ என்ற சிற்றேடு மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக்களம் ஆகச் செயல்பட்டது.
1971—ல் ’கற்பகம்’ தோன்றியது. ‘வண்மையுடையதொரு சொல்லினால்—உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்’ என்ற பாரதி வாக்கை இலட்சிய வரிகளாகத் தாங்கி வந்தது. கலை, இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் கவனம் செலுத்திய கற்பகம், ‘ஈழத்து மண் வாசனையையும் சாதாரண விவசாய, தொழிலாள மக்களுடைய வாழ்க்கை முறையையும் கருத்திற்கொண்டு ஆற்றல் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது.
களனி : ’நூறு சிந்தனை மலரட்டும் நாறும் கீழ்மைகள் தகரட்டும்’ என்ற கொள்ளை முழக்கத்துடன், யாழ்ப்பாணத்தில் 1973—ன் பிற்பகுதியில் தோன்றியது.
’தேசத்தின் முற்போக்கு இலக்கியம் மட்டுமல்ல முழு முற்போக்கு இயக்கமுமே பின்னடிக்கப்பட்ட நிலையில், ஒரு விவசாயப் பிரதேசமான கிளிநொச்சியை நிலைக்களமாகக் கொண்டு’ களனி தீவிரமாகச் செயல்பட முயன்றது. ஆயினும், 1975—ன் முற்பகுதிவரை நான்கே நான்கு இதழ்களைத்தான் கொண்டுவர முடிந்தது இலக்கிய உற்சாகிகளினால்.
1976—ல் களனி மீண்டும் ’ஊற்றுக்கண்களைத் திறக்க’ முற்பட்டது. ‘வைரம் பாய்ந்த தனது கொள்கைக் கால்களில் ஊன்றி நின்று, ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பு ஏற்றமுற வளமூட்டும் நூறு பூக்கள் மலரட்டும், நாறும் கீழ்மைகள் தகரட்டும். இது அன்றும் இன்றும் என்றும் களனியின் தாரக மந்திரம், அழகான ரோசாப்பூக்கள் களனியின் இலக்கல்ல. ஆனால் அவை அழகூட்டி அலங்கரிப்பதற்கு களனி எதிரல்ல’ என்று அது அறிவித்தது.
’கிட்ட நிற்கும் நண்பர்களை மட்டுமல்ல, எட்டி நிற்கும் நண்பர்களையும் களனி அரவணைத்து முன்னேறும். காலை இளங்கதிர்போல் நாளும் தோன்றுகிற புதுமைச் சிற்பிகளின் புலமைக்குக் களமாய் களனி அமைவாகும். முதிய தலைமுறையின் முத்தான அனுபவங்கள் பிற்கால சந்ததிக்குப் பின்பலமாய் அமைவதற்குக் களனி துணையாகும்’ என்றும் நம்பிக்கைக் குரல் கொடுத்தது.
சமுதாயப் பார்வையுடன் எழுதப்பட்ட கதைகள், கட்டுரைகள், கவிதைகளோடு கலை விமர்சனங்களையும் ’களனி’ வெளியிட்டது. நாடக விமர்சனத்துடன், மிருனாள்ஸென் எழுதிய கட்டுரைகளையும் மொழிபெயர்த்து வெளியிட்டது.
தாயகம் : 1974—ல், யாழ்ப்பாணம் தேசிய கலை இலக்கியப் பேரவை வெளியீடாக தாயகம் வெளிவந்தது. என். கே. ரகுநாதன், யோகன், சில்லையூர் செல்வராசன், அன்பு ஜவஹர்ஷா போன்றவர்களின் படைப்புக்களையும், க. கைலாசபதியின் கட்டுரைகளையும் தாங்கி வந்தது. ’தோட்டத் தொழிலாளரின் தொடர்ச்சியான சோக வரலாற்றை’ முக்கியப்படுத்தும் கட்டுரைகளும் கதைகளும் அதில் அதிகம் இடம் பெற்றன.
நவயுகம் : காரைத் தீவில் பிரசுரம் பெற்றது. மருதூர்க் கொத்தன் கதைகளும், திக்குவெல்லைக் கமால், தில்லையடிச்செல்வன், மேமன் கவி போன்றோரின் கவிதைகளும் வெளிவந்தன.
1979—ல் ’சமர் இலக்கிய வட்டக் குழுவினருக்காக ’சமர்’ என்ற முற்போக்கு இலக்கிய ஏடு தோன்றியது. ஆசிரியர் டானியல் அன்ரனி.
கீற்று இலக்கிய வட்டம் என்ற அமைப்பு 1979-ல் ’கீற்று’ என்ற காலாண்டு சஞ்சிகையை நடத்தியது. கல்முனை எனும் இடத்திலிருந்து பிரசுரமான இது வழக்கமான கவிதை, கதை, மொழிபெயர்ப்புக் கதைகள், நாடக விமர்சனம் முதலியவற்றை வெளியிட்டது. சினிமா சம்பந்தமான கட்டுரைகளும் பிரசுரம் பெற்றன.
“உண்ணுவதற்கும் நல்ல உணவின்றி உழைப்பவனின் எண்ணத்தை நாளும் இலக்கியமாய்ப் பாய்ச்சுகின்ற மின்னலெனும் கீற்று வீச்சாகும் எம் எழுத்து” என்று பெருமையுடன் கூறிக்கொண்ட இக் காலாண்டு ஏட்டின் ஆசிரியப் பொறுப்பை ஆர். என். லோகேந்திரலிங்கம், கல்லூரன், கலைக்கொழுந்தன் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.
சர்ச்சைக்குரிய விஷயங்கள், விறுவிறுப்பான தகவல்கள், பரபரப்பு ஏற்படுத்தும் அபிப்பிராயங்கள் முதலியவற்றை வெளியிடுவதில் ’கீற்று’ ஆர்வம் காட்டியது. எனவே அது இலக்கிய அபிமானிகள், பொதுவான வாசகர்கள் முதலியோரது கவனத்தைக் கவர்ந்தது.
சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் 1975 ஏப்ரல் முதல் சுடர் என்ற கலை இலக்கியத் திங்கள் இதழை நடத்தியது. இது சில வருடங்கள் தொடர்ந்து பிரசுரம் பெற்றதாகத் தெரிகிறது.
இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளிடையே ’சிரித்திரன்’ தனி இடம் பெற்றுள்ளது. இது பரவலான கவனிப்புக்கு இலக்காகி, தமிழகத்தின் சஞ்சிகைகளின் கவனத்தையும் கவர்ந்து பெருமை பெற்றிருக்கிறது.
இதன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் (சிவா) ஒரு ஓவியர். இலங்கையின் பிரபல தினசரிகளான தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சவாரித் தம்பர், சின்னக் குட்டி, மைனர் மச்சான் போன்ற பாத்திரங்கள் மூலம் தனக்கெனத் தனி இடம் தேடிக்கொண்டவர் சிவா. இந்த நகைச்சுவைப் படைப்புகளைத் தூரிகை மூலம் அளித்து வாசகர்களை ஈர்த்துக் கொண்டவர்.
வட இந்தியாவிலிருந்து வெளிவரும் ’கொஞ்ச்’, ’லோகசத்தா’ ஆகிய மராட்டிய ஏடுகளிலும் சிவாவின் ஓவியப் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
அரசாங்கக் கட்டிடக் கலைப்பகுதியில் கடமையாற்றிய சிவாவுக்கு ‘தினகரன்’ ஆசிரியராகப் பணியாற்றிய க. கைலாசபதியின் நட்பு கிடைத்தது. தினகரன் நாளிதழில் தொடர்ந்து தனது படைப்புகளைப் பிரசுரிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அவர் சிறிது காலம் பம்பாயில் தங்கி கட்டிடக் கலை இயலில் பயிற்சி பெற நேர்ந்தது. அப்போதுதான் சிவாவின் கார்ட்டூன் சித்திரங்கள் பிளிட்ஸ் முதலிய பத்திரிகைகளில் வரலாயின. இவருடைய சித்திரப் படைப்புகளைப் பிரசுரித்த ‘கொஞ்ச்’ என்ற சஞ்சிகை இந்திய தேசியத் தலைவரான வல்லபாய் பட்டேலின் மகன் தாதாபாய் பட்டேல் நடத்தியது ஆகும்.
இலங்கை எழுத்து உலகத்தில் ஆட்சி செலுத்திய ‘முற்போக்கு—பிற்போக்கு—நற்போக்கு என்ற எதிலும் சிக்காதவர்’ சிரித்திரன் சிவா. சிரித்திரன் என்ற சஞ்சிகையை நடத்துவதற்காக அவர் தான் பார்த்து வந்த அரசாங்க உத்தியோகத்தைத் துறந்தார். தனக்குக் கிடைத்த பணத்தில் பத்திரிகையை ஆரம்பித்தார். அது வெற்றிகரமாக வளர்ந்தது.
‘செய்தொழில் தெய்வம், சிரிப்பே சீவியம்‘ என்பதை இலட்சிய எண்ணமாகக் கொண்டது சிரித்திரன்.
சிரித்திரனில் முக்கிய இடம் பெறும் மகுடியின் கேள்வி பதில் பகுதி வாசகர்களுக்கு வெகுவாகப் பிடித்தது ஆகும். நகைச்சுவையோடு கூடிய சீர்திருத்தக் கருத்துக்களும், சமூகப் பார்வையும் படிப்பவர்களைச் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் தூண்டும். இக்கேள்வி—பதில்கள் புத்தகமாகவும் வெளிவந்திருக்கின்றன.
இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடனேயே பல பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
குமரன், புதுசு, சமூகதீபம், களம், ஒளி, நதி — இப்படி அநேகம். இவற்றில் ‘தாரகை’ என்பதும் ஒன்றும்.
‘வேள்வியொன்று காண வாரீர் !‘ என்று அது எழுத்தாளர்களை அழைத்தது.
‘இளம் எழுத்தாளர்களின் உள்ளக் குமுறல்கள்-எழுதத் துடிக்கும் இலக்கிய ஆர்வலர்களின் இதயத்துடிப்புகள் எமக்கும் கேட்கிறது. தாள் தாளாக எழுதி அனுப்பிவிட்டு அவை பிரசுரிக்கப்படாமையால் பாழ் பாழாகப் போன பல படைப்பாளிகளின் இதயங்களையும் பரிசோதித்துப் பார்த்து விட்டோம்.
இமயமலையில் ஏறுவது மிகமிகக் கஷ்டமான காரியம், ஆனால் ஒரு இலக்கியப் படைப்பாளியின் இலட்சியப் படைப்பைப் பத்திரிகையில் வெளிக் கொணர்வது அதைவிடக் கஷ்டம். இப்படிச் சொல்லிக் கொண்டு, இலக்கிய உலகத்தையே கைவிட்டுச் சென்ற பல அன்பர்களோடும் நாம் பழகி விட்டோம்.எனவேதான், பிரபலம் — புதுமுகம் என்ற பேதமின்றி, தரமாக எது வரினும் ஏற்றுப் பிரசுரிக்கும் நிலைக்குத் தயாராயிருக்கின்றோம்.
இந்த இலக்கிய வேள்வியில் கலந்து கொள்ளுமாறு படைப்பாளிகளையும், ஆர்வலர்களையும் இருகரங்கூப்பி வரவேற்கின்றோம்.’
இவ்விதம் அறிவித்துக்கொண்டு ‘தாரகை‘ ஆகஸ்ட் 1981-ல் தோன்றியது. ஆசிரியர்- சி. சங்கரம் பிள்ளை. ஆசிரியர் குழு : கண். மகேஸ்வரன், இந்திராணி தாமோதரம் பிள்ளை. பிரசுரமான இடம் மட்டக்களப்பு.
மரபுக் கவிதை, புதுக்கவிதை, கதைகள், நகைச்சுவைச் சித்திரம், சமூக சீர்திருத்த நோக்குடைய கட்டுரைகளை தாரகை பிரசுரித்தது.
முற்போக்கு இலக்கிய உணர்வுடன், ‘மல்லிகை‘ போல் தரமான இலக்கிய ஏடு ஆகக் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘வசந்தம்‘ 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. வசந்தம் இலக்கிய வட்டத்தினருக்காக நடத்தப்பெற்ற இந்த சஞ்சிகை யோகநாதன் கவனிப்பில் வளர்ந்தது. கைலாசபதி, சிவத்தம்பி கட்டுரைகள், யோகநாதன் கதைகள், கிருஷன்சந்தர் என்ற இந்தி ஆசிரியரது படைப்புகளின் மொழிபெயர்ப்பு முதலியவற்றை வெளியிட்டது. தமிழகத்திலிருந்து பொன்னீலன், கவிஞர் பாப்ரியா, ருத்ரய்யா ஆகியோரின் எழுத்துக்களும் இதில் பிரசுரமாகியுள்ளன .
யாழ்ப்பாணத்திலிருந்து 1981-ல் வெளிவந்த மற்றுமொரு பத்திரிகை ’கிருதயுகம்‘. ஆசிரியர் : க. வீரகத்தி.
‘ஊனுயிர் நான் உளவரைக்கும்
ஒருலகர சென்றே பாடி
மானுட நேசிப்பை வளர்ப்பேன்
என்பதை புன்னகை பூக்கும்‘
இவ்வரிகளை இலட்சிய எண்ணமாகக் கொண்டிருந்தது. பேராசிரியர் கைலாசபதி ஒரே உலகம் பற்றி எழுதிய கட்டுரை சரியான இடத்தில் சரியான சொல்லைப் பயன்படுத்தக் கூடிய சீரான மொழியாட்சியை வலியுறுத்தி முனைவர் சாலை இளந்திரையன் எழுதிய கட்டுரை; மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடு ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் பற்றி முருகையன் எழுதிய கட்டுரை; மற்றும் காவலூர் ஜெகநாதன் கதை; சில கவிதைகள், ‘சீனாவில் பணிபுரியும் திருமதி ராணி சின்னத்தம்பியுடன் ஒரு பேட்டி’; ‘பாரதி நூற்றாண்டு விழா 1982‘ என்று தலையங்கம்-இவை கிருதயுகம் இரண்டாவது இதழின் உள்ளடக்கம். இவை இந்தப் பத்திரிகையின் தனித்தன்மையை எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கின்றன. கிருதயுகம் எத்தனை இதழ்கள் ( எத்தனை காலம் ) வெளிவந்தது என்று தெரியவில்லை.
பூரணி, அலை, கவிஞன் என்று சில இலக்கியப் பத்திரிகைகள் வந்ததாகவும், அவை இலக்கியவாதிகளின் கவனிப்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியனவாக இருந்தன என்றும் தெரிய வருகிறது. இவற்றின் பிரதிகள் என் பார்வைக்கோ, என் நண்பர்கள் பார்வைக்கோ கிடைக்க வில்லை.
இலங்கையில் பிரசுரமான சிறு பத்திரிகைகளில்— சிறிது கால அளவே வாழ்ந்த போதிலும்— முக்கிய கவனிப்புக்கு உரியதாகி, ஏதோ சில வகைகளில் தாக்கங்கள் ஏற்படுத்திய வெளியீடுகளில், ‘தீர்த்தக்கரை‘க்கு முக்கிய இடம் உண்டு.
காலாண்டு ஏடு ஆக வெளிவந்த தீர்த்தக்கரை ஐந்து இதழ்கள் தான் பிரசுரம் பெற்றது என்று ஒரு இலக்கிய ரசிகர் குறிப்பிடுகிறார்.
‘மலையகத்தின் இளைய தலைமுறையைச் சார்ந்த புத்திஜீவி வட்டத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்தச் சஞ்சிகை ‘தீர்த்தக்கரை இலக்கிய வட்டத்திற்காக‘, எல். சாந்தி குமாரை ஆசிரியராகவும், எஸ். நோபெட், எம். தியாகராம், எல். ஜோதிகுமார் ஆகியோரை ஆசிரியர் குழு ஆகவும் கொண்டு இயங்கியது.
‘சிந்தனை பேதங்களுக்கெல்லாம் அப்பால் நின்று இலக்கியம் படைக்கும் நவீன கம்பர்கள் ஒருபுறமும், எமக்கு இளங்காலையின் கதகதப்புத் தேவையில்லை, நெருப்பைத் தாருங்கள் என்று யதார்த்தத்தை மறந்த நக்கீரர்கள் ஒருபுறமும் நின்று வரிந்து கட்டிக்கொண்டு மகத்தான கூப்பாடு போடுகையில், இவற்றின் இடையே அல்லலுறும் இளம் எழுத்தாளர்களைப் பார்த்தும், வந்து குவியும் மூன்றாந்தர சஞ்சிகைகளில் புதையுண்டு கிடக்கும் பல தரமான வாசகர் கூட்டத்தைப் பார்த்துமே நாம் எம்மை இந்தப் புதிய அக்கினிப் பரீட்சையில் இறக்கிக் கொள்ள நேரிட்டது.
இவ்வாறு கூறிக்கொண்டு தீர்த்தக்கரை தோன்றியது. மலையகத்தின் முன்னேற்றத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த அறிவு ஜீவிகளின் கூட்டுறவு முயற்சிதான் இக் காலாண்டு ஏடு. மலையக மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய சூழ்நிலை, பிரச்னைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் கருத்து செலுத்தியது.
மலையக மக்கள் மத்தியில் எழுதாத இலக்கியமாய் வாழ்ந்து வளர்ந்த நாட்டுப் பாடல்களைச் சேகரித்து, ஏட்டில் எழுதாத இதயத்து ராகங்கள் என்று இதழ்தோறும் நிறையவே அச்சிட்டு வந்தது குறிப்பிடத்தகுந்த முக்கியமான பணி ஆகும்.
மலையக மக்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் அவை.
“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்—சுற்றிலும் தமிழின் பெயரால் எழுகின்ற சந்தடிகளுக்கும், கலையின் பெயரால் நடக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் பாரதியின் எளிமையான இந்தக் கூற்று இன்னும் அதன் மகத்துவத்தைத் தாங்கி நிற்கின்றது. இந்தக் கூற்றினையே எமது தெய்வ வாக்காகக் கொள்வதில் பெருமைப்படுகின்றோம்.
ஆனால் இப்படிக் கூறுவதின் நோக்கம், ‘தமிழுக்கு உயிர்கொடுக்க வந்தோம்’ என்று சாதிக்கும் மமதை அல்ல. நாம் ஆற்றும் பணி மிக மிகச் சொற்பமானது என்பதை பிரக்ஞை பூர்வமாகவே தீர்த்தக்கரை உணர்ந்துள்ளது.
குழந்தை பிறந்தவுடனேயே எழுந்து நின்று எனக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது. என்னை நானே கவனித்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்று கூறி முகம் கழுவிச் சென்றால் யாருக்கும் சம்மதம்தான். இல்லை என்றாலும் யார்தான் கோபிக்கப் போவது ? குழந்தைகளாயிற்றே !
தீர்த்தக்கரையும் இந்தப் பருவத்தில் நின்றுதான் உங்கள் அரவணைப்புக்காகக் கரங்களை நீட்டுகின்றது, ஆனாலும் இந்தக் குழந்தையின் யாத்திரையில் முகம் கொண்டு அரவணைக்க முயலும் மழலைகளும்தான் எத்தனை. சமூகத்தில், பலவேறுபட்ட துறைகளில் வாசகர்களாக, விமர்சகர்களாக, படைப்பாளிகளாகச் சங்கோஜத்தோடும் சில சமயங்களில் துணிவோடும் நிற்கிற இந்தப் புதிய கர்த்தாக்களுக்குத் ‘தீர்த்தக்கரை’யின் தாய்மை ஆதர்சமாக விளையும்”
இவ்விதம் அதன் மூன்றாவது இதழ் தலையங்கம் பேசியது.
தீர்த்தக்கரை சமூகப் பிரச்னைகளிலும் அக்கறை காட்டியது. ஆப்பிரிக்க மக்களின் வாழ்க்கையையும் பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் படைப்பாளிகளின் எழுத்துக்களைத் தமிழாக்கி அறிமுகம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தது. கேள்வி பதில் பகுதியும் உண்டு.
குருக்ஷேத்திரம் என்ற பகுதி ஒவ்வொரு இதழிலும் வந்தது. இலக்கிய விமர்சனங்கள், எழுத்தாளர் பிரச்னைகள் முதலியன இதில் இடம் பெற்றன. பலபேர் தங்கள் அபிப்பிராயங்களை வெளிப்படையாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
தீர்த்தக்கரை ஆசிரியர் சாந்திகுமார் மலையகம் பற்றி ஆய்வு ரீதியான கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘தீர்த்தக்கரை’ பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. ஐந்து இதழ்களோடு அது நின்று போனது ஒரு இழப்புதான்.