தமிழில் சிறு பத்திரிகைகள்/கலா மோகினி

5. கலா மோகினி


ஆழ்ந்த, கனமான விஷயங்களை உணர்ச்சிச் செறிவுடனும் நடை நயத்தோடும், சிந்தனைக்கு வேலை வைக்கும் விதத்திலும், புதிய ரீதிகளிலும் எழுதுகிற போக்கு மறுமலர்ச்சி இலக்கியப் போக்கு என்ற பெயரைப் பெற்றிருந்தது.

இத் தன்மையில் எழுதுவதில் ஆர்வம் காட்டிய எழுத்தாளர்கள், தமிழ் மறுமலர்ச்சிக்கு பொன் ஏர் பூட்டிய முதல்வன் ஆகவும், தங்களுக்கு முன்னோடியாகவும் மகாகவி சுப்பிரமணிய பாரதியை ஏற்றுக் கொண்டார்கள். பாரதி பாதையில் முன் சென்று மேலும் வளமான புதிய சோதனைகளைத் தமிழில் சேர்ப்பதே இவர்களது லட்சியம்.

இத் துடிப்புடன் செயலாற்றத் துடித்த படைப்பாளிகளுக்கு 'மணிக்கொடி' இலக்கியப் பத்திரிகை நின்றுவிட்டது பெரிய இழப்புதான். அதைத் தொடர்ந்து தோன்றிய 'சூறாவளி' வாரப் பத்திரிகை எழுந்த வேகத்திலேயே ஓய்ந்துவிட்டதும் மறுமலர்ச்சி இலக்கியவாதிகளுக்கு ஒரு நஷ்டமாகவே அமைந்திருந்தது.

ஜனரஞ்சகமான விஷயங்களை வாசகர்களை வசீகரிக்கும் விதத்தில் கொடுப்பதோடு, பத்திரிகையை வர்த்தக நோக்குடன் நடத்தி வெற்றியும் கண்ட 'ஆனந்த விகடன்' வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தது. 1933 முதல் 'விகடன்' தீபாவளி மலர் என்ற பெயரில் விசேஷத் தயாரிப்பு ஒன்றையும் வெளியிடலாயிற்று.

இந்தச் சிறப்பு மலர்களும் இலக்கியவாதிகளுக்கு திருப்தி அளித்ததில்லை. எனவே, மறுமலர்ச்சி இலக்கிய மலர்களை உருவாக்க வேண்டும் என்ற துடிப்பு அந்தக் காலத்துப் படைப்பாளிகளுக்கு உண்டாயிற்று. -

‘தினமணி' அவர்களுக்கு உதவியது. இரண்டு வருடங்கள் ‘தினமணி பாரதி மலர்’ என்ற பெயரில் சிறப்பு வெளியீடு பிரசுரமாயிற்று. 1934, 1935-ம் வருடங்களில் தோன்றிய இம்மலர்கள் கையில் பிடித்துப் படிப்பதற்கு வசதி இல்லாத வடிவத்தில்-தினமணி நாளிதழின் ஞாயிறு அனுபந்தமான ‘தினமணிச் சுடர்' அளவில் இருந்தன. மிக அதிகமான பக்கங்களுடன் ( குறைந்த விலையில்) வெளிவந்த இம் மலர்கள் மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் தரமான படைப்புகளைக் கொண்டிருந்தன.

1936 முதல் இத் தயாரிப்பு 'தினமணி ஆண்டு மலர்’ என்ற பெயரை ஏற்றது. இம் மலர்களைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனுக்குக் கிட்டியது. இம் மலர்கள் அருமையான இலக்கிய மலர்களாக விளங்கின. மலரின் உருவமும் கச்சிதமான வடிவத்தைப் பெற்றது. இப்படி நான்கு அல்லது ஐந்து மலர்களே வெளிவந்தன.

‘ஹனுமான்' வாரப் பத்திரிகை 1939, 1940-ம் வருடங்களில் மலர் தயாரித்து வெளியிட்டது. இம்மலர்களை உருவாக்கும் பொறுப்பை பி. எஸ். ராமையா ஏற்றிருந்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் பலரும் இம் மலர்களில் எழுதினார்கள்.

‘ஸீரியஸ் லிட்டரேச்சர்' முயற்சிகளில் ஆர்வம் காட்டி வந்த முதல் தலைமுறை எழுத்தாளர்களும்-அவர்களை மணிக்கொடி எழுத்தாளர்கள் என்றே குறிப்பிடலாம்- தங்கள் படைப்புகளை வெளியிடுவதற்குத் தகுந்த பத்திரிகைகள் இல்லாத ஒரு அசவுகரியத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலைதான் தமிழ்நாட்டில் நிலவியது.

ஆழமான, தீவிரமான போக்கும் நோக்கும் கொண்டிருந்த இலக்கியக் கொள்கையை 'மணிக்கொடி மனோபாவம்’ என்றும், அதற்கு நேரிடையான பாணியை- மேலோட்டமான, ஆழமில்லாத, சர்வஜனரஞ்சக எழுத்து ரீதியை 'விகட மனோபாவம்' என்றும் குறிப்பிட்ட கு. ப. ராஜ கோபாலன், இவ் இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலைப் போக்கை, ‘மிதவாதப் போக்கு' என்றும் கலைமகள் மனோபாவம் என்றும் கணித்தார். .

1930-40 களில் 'கலைமகள்' மணிக்கொடிப் படைப்பாளிகளையும் ஆதரித்தது; விகட மனோபாவ எழுத்துக்களையும் வரவேற்றுப் பிரசுரித்தது. அக்கால கட்டத்தில் தரமான இலக்கியப் பத்திரிகையாக அது விளங்கியது. மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் அம் மேடையை நன்கு பயன் படுத்திக் கொண்டார்கள்.

என்றாலும், மறுமலர்ச்சி இலக்கிய வேகம் கொண்ட இளைய தலைமுறையினரும் நாட்டில் தோன்றி வந்தார்கள். அவர்களுக்கு மணிக்கொடி ரீதியில் மறுமலர்ச்சி இலக்கியப் பத்திரிகை ஒன்றுகூட தமிழில் இல்லையே என்ற குறை பெரும் மனப்பாரமாக இருந்தது. இவ்வித உணர்வுடைய இளைய எழுத்தாளர்கள் நாடு நெடுகிலும் சிதறி இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.

1940 களில் மறுமலர்ச்சி இலக்கிய வேகத்தின் அலை சென்னையில் ஒடுங்கி, திருச்சி மாவட்டத்தில் புதிய எழுச்சியுடன் தலைதூக்கியது. இவ் வேகத்தின் முதல் எழுச்சி தான், 'கலா மோகினி' என்ற மாதம் இரு முறை வெளியீடு ஆகும்.

“கலாமோகினி—

இது லட்சியவாதிகளின் கனவு.

நீண்டநாள் தாமதத்திற்குப் பிறகு நனவாகியிருக்கிறது. இதன் வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டுக் கலா ரசிகர்களின் ஆதரவை வேண்டி நிற்கிறோம்.

முதல் இதழைத் தமிழ்நாட்டின் எழுத்தாள நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.”

இப்படி முதல் இதழ் 'க்ஷேமலாபங்கள்' பகுதியில் அதன் ஆசிரியரான வி. ரா. ராஜகோபாலன் எழுதியிருந்தார்.

கலாமோகினியின் முதலாவது இதழ் சித்ரபானு ஆனி 15 என்ற தேதியை (1942 ஜூலை 1) கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழும் தமிழ் வருடம், மாதம், தேதியைத்தான் தாங்கி வந்தது.

இது எழுத்தாளர்களின் பத்திரிகை என்பதைப் பல விஷயங்கள் நிரூபித்தன. முதல் இதழின் அட்டையில் ந. பிச்சமூர்த்தியின் உருவப் படம் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஒவ்வொரு இதழும் ஒரு எழுத்தாளரின் படத்தையே அட்டைச் சித்திரமாகக் கொண்டிருந்தது. கடைசிவரை கலாமோகினி இந்த நியதியை அனுஷ்டித்தது குறிப்பிடப்பட வேண்டிய முக்கிய அம்சம் ஆகும்.

அட்டையில் ஒரு எழுத்தாளரின் படத்தைப் பிரசுரித்து, இவர் நம் அதிதி என்று உள்ளே ஒரு பக்கம் அவரைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் வழக்கத்தை வி. ரா. ரா. மேற்கொண்டிருந்தார். அந்த எழுத்தாளரின் கதை அல்லது கட்டுரை அல்லது கவிதையை வாங்கி அதே இதழில் பிரசுரிப்பதும் அவர் வழக்கமாக இருந்தது.

இவ்வாறு எழுத்தாளர்களையும் இலக்கியத்தையும் பிடிவாதத்துடன் கவுரவித்த ஒரே பத்திரிகை கலாமோகினிதான். முதல் இதழின் அட்டையில் ஒரு படைப்பாளியின் படத்தை வெளியிட்டு, அந்த இதழை எழுத்தாளர்களுக்கு சமர்ப்பித்த முதல் தமிழ்ப் பத்திரிகையும் அதுவே.

கலாமோகினியின் முதல் இதழில் ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜ கோபாலன், சிட்டி, க. நா. சுப்ரமண்யம், சிதம்பர சுப்ரமணியன் முதலியவர்களது படைப்புகள் இடம் பெற்றிருந்தன்.

இந்த முதல் இதழே இலக்கியப் பிரியர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்து விட்டது. -

கலாமோகினி தனது பிறப்புக்கான காரணத்தையும், தன் நம்பிக்கை யையும் முதலாவது இதழிலேயே இவ்வாறு அறிவித்திருந்தது—

‘யுத்த பீதி, காகிதப் பஞ்சம், கட்டுப்பாடு இந்த நெருக்கடிகளுக்கு இடையில் இன்னுமொரு பத்திரிகையா என்ற நிர்த்தாக்ஷண்யமான கேள்வி நிச்சயம் பிறக்கும்.

அதற்குப் பதில் இது :

இந்தத் தமிழ்நாட்டில் எத்தனை காலம் வாழ முடியுமோ அத்தனை காலம் வாழ்ந்து, தமிழ் பாஷையின் புனருஜ்ஜீவனம் என்ற சேது பந்தனத்திற்கு இந்த அணிலும் தன்னாலான சேவையைச் செய்ய வேண்டுமென்றே கலாமோகினி பிறந்துள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவையும், தமிழன்னையின் கருணையையும், எல்லாவற்றிற்கும் மேலாக ஈஸ்வரனின் அருளையும் நம்பித்தான் கலா மோகினி பிறக்கிறது.

இவை எந்த அளவில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததே கலாமோகினியின் வாழ்வு, வெற்றி, லட்சியசித்தி எல்லாம்.

முதல் இதழிலேயே தொடர்கதையும், தொடர் நாடகமும் இடம் பெற்றன. ஐரோஸ்லாவ் ஹாஸ்க் எழுதிய நாவல் ஒன்றின் கதையைச் சுருக்கி மொழிபெயர்த்து, 'சூரப்புலி ஷீக்' என்ற தலைப்பில் வெளியிட்டார் வி. ரா. ராஜகோபாலன். 'விக்ரமாதித்தன்’ என்ற புனைபெயரை அதற்கு அவர் பயன்படுத்தினார்.

‘சாலிவாகனன்' என்ற புனைபெயரில் அவர் கவிதைகள் எழுதி வந்தார்.

இவ் இரு பெயர்களையும் வி. ரா. ரா. தனது புனைபெயர்களாகத் தேர்ந்து கொண்டதற்கு ரசமான ஒரு காரணமும் உண்டு.

பாரத நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றுள்ள மாமன்னர்களின் பெயர்கள் அவை. தனித்தனி சகாப்தம் கண்ட பெருமை பெற்றவர்கள் அவர்கள். சாலிவாகன சகாப்தம், விக்கிரமாதித்த சகாப்தம் என்றவாறு, இந்திய தேச சரித்திரத்தில் விக்கிரமாதித்தன் காலம் பொற்காலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அதேபோல் தமிழ் மொழி வரலாற்றிலும், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியிலும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. தன்னால் அப்படி ஒரு பொற்காலத்தை நிறுவ முடியும் என்ற நம்பிக்கையுடன்தான் அவர் கலாமோகினி யை ஆரம்பித்து, வளர்த்தார்.

கலாமோகினி இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் காட்டியது, ஆரம்பத்தில், அதில் அரசியலுக்கு இடம் இல்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘அரசியல்துறையில் பணியாற்ற ஏற்கனவே தமிழ்நாட்டில் தேவைக்கதிகமான சகோதரப் பத்திரிகைகள் இருக்கும்போது நாமும் அந்தக் குட்டையைக் குழப்புவது அனாவசியம். தமிழ்ப் பணி ஒன்றே நமக்குப் போதுமான இலட்சியமாகக் கொள்ளலாம் என்பது நமது தீர்மானம்' என்று மூன்றாவது இதழில் ஆசிரியர் கருத்து தெரிவித்தார்.

அவர் பழம் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர். என் சரித்திரம்' என்று மணிமேகலை காவியக் கதையை, மணிமேகலையே கூறுவது போல், தொடர்சித்திரமாக உரைநடையில் எழுதி வந்தார். ‘சங்க இலக்கியத்திலிருந்து' என்று கட்டுரைகளும் எழுதினார். பெ. கோ. சுந்தரராஜன் ( சிட்டி) எழுதிய ஹர்ஷன் நாடகம் தொடர்ந்து பிரசுரமாயிற்று. -

மணிக்கொடி எழுத்தாளர்களின் புதிய படைப்புகளும் இளைய படைப்பாளிகளின் விதம் விதமான சிறுகதைகளும், கவிதைகளும் மிகுதியாக வந்தன. பத்திரிகை வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

முதல் வருட இறுதியில் ஆசிரியர் செய்த பிரகடனம் இது–

‘நாம் சந்தேகமின்றிக் கூற முடியும் பெரிய நாமதேயங்கள், பிரபலமான பெயர்கள் முதலிய சம்பிரதாய விருதுகளில்லாது, முழுதும் வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களுடைய பலத்தையே ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த ஒரே ஒரு தமிழ் மறுமலர்ச்சிப் பத்திரிகை கலா மோகினி.'

வி. ரா. ரா. வின் எழுத்துக்கள் நேர்மை, காம்பீர்யம், நையாண்டி, மெய்த்துணிவு ஆகிய பண்புகளைப் பெற்றிருந்தன. பூசி மெழுகாத வெட்டொன்று துண்டிரண்டு என்ற அபிப்பிராயங்கள் கலாமோகினி மூலம் ஒலிபரப்பப்பட்டன.

கவிஞர் பாரதிதாசனின் புகழ் மேலோங்கி வந்த காலம் அது. கலா மோகினி அவரிடம் கவிதை கேட்ட போது, அவர் தர மறுத்தார். பாரதிதாசன் படத்தை அட்டையில் வெளியிட்டு, உள்ளே அவரைப் பற்றிய தனது கருத்தை எடுப்பும் மிடுக்கும் அழகும் கலந்த நீண்ட கவிதையாகப் பிரசுரித்தார் வி.ரா.ரா.

ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் செல்வாக்கு பெற்றிருந்த காலம் அது. அவர் கம்பன் காவியத்தில் திருத்தங்கள் செய்து, கம்பர் தரும் ராமாயணம் என்ற புதிய பதிப்பை வெளியிட்ட சமயம். அதைக் கண்டித்து, ஐந்தாம் படை ரசிகர்கள் என்ற தலைப்புடன் காரசாரமான கட்டுரை ஒன்றை எழுதினார் கலாமோகினி ஆசிரியர்.

யுத்த காலத்தில் 'ஐந்தாம் படை என்பது பிரசித்தமாக இருந்தது. ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டில் இருந்து கொண்டே உளவு சொல்லியும் நாச வேலைகள் செய்தும் எதிரிக்கு உதவிகள் புரிவார்கள்- இப்படி உள்ளே இருந்தபடி ஊறுகள் செய்வோர்- சொந்த நாட்டுக்குத் துரோகம் செய்பவர்கள்- ஐந்தாம் படையினர் ஆவர்.

அதேபோல், தமிழ் இலக்கியத்தை-கவிதைகளையும் காவியங்களையும்-ரசிப்பதாகப் பெயர் பண்ணி, அவற்றைச் சிதைத்து நாசவேலை செய்ய முற்படுவோரை ஐந்தாம் படை ரசிகர்கள் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

கலாமோகினி தான் தேர்ந்து கொண்ட பாதையில் துணிந்து செயல் புரிந்தது. நம்பிக்கை என்ற பலமும், கலை, கவிதை ஆகியவற்றின் மேல் உள்ள தன்னலமற்ற பற்றும்தான் இம்முயற்சியின் தளர்வற்ற போக்குக்கு உறுதுணைகள் ஆக விளங்கின. பொருளாதார பலம் வாய்க்காததால் கலாமோகினி சோதனைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது.

குறித்த தேதியில் பத்திரிகை வர முடியாத நெருக்கடி. இடையிடையே ஒரு இதழ் வராமலே போவது போன்ற குழப்பங்கள் கலா மோகினிக்கு அதன் இரண்டாவது, மூன்றாவது ஆண்டுகளில் ஏற்பட்டன.

கலாமோகினி முதல் 13 இதழ்கள் 'டிம்மி சைஸில்' (ஆனந்த விகடன் அளவில்) வந்தன. 14-ம் இதழ் முதல் 'கிரவுன் சைஸ்.' (கொஞ்சம் சிறிய அளவு) கடைசி இதழ் வரை இந்த அளவு நீடித்தது.

'அரசியல் வேண்டாம்' என்று ஒதுக்கி வைத்த கலாமோகினி பின்னர் அரசியல் தலையங்கங்களும், அபிப்பிராயங்களும் வெளியிட முன்வந்தது. 'ஆய கலைகள்' என்ற தலைப்பில் இசை, நாட்டியம், நாடகம், சினிமா பற்றியும் கட்டுரைகள் வெளியிட்டது. புத்தக மதிப்புரையை எப்போதாவது பிரசுரித்தது. காம இலக்கியப் பிரசுரம் ஒன்றைக் கண்டித்து 'மதிப்புரை மறுப்பு' என்று ஒரு கட்டுரை எழுதியது.

பிற்காலத்தில் தன்னை இலக்கிய முன்னணி என்று கலாமோகினி அறிவித்து வந்தது.

'லாபமும் நஷ்டமும் இந்த இலக்கிய முன்னணியின் இறுதி லட்சியமல்ல. இதில் எழுதுபவர் எவருக்கும் எழுத்து ஒரு வியாபாரமோ, தொழிலோ, பொழுதுபோக்கோ அல்ல. இலக்கியத்தை வாழ்வாகக் கொண்டவர்கள். தமிழுக்கு நித்தியமான அழகை அளிக்கச் செய்யும் முயற்சிகளே கலாமோகினி இதழ்கள்.'

இப்படி 45-ம் இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது இது வெறும் தற்புகழ்ச்சி இல்லை என்று கொள்ளலாம். -

☐☐