தமிழில் சிறு பத்திரிகைகள்/சில தகவல்கள்

7. சில தகவல்கள்



இத் தொடரில் இதுவரை குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகைகள் பலவும் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில் வெளிவந்தவை ஆகும்.

அதே காலத்தில் தோன்றி வளர்ந்த 'பெரிய பத்திரிகைகள்' வேறு வகை முயற்சிகள், எழுத்தாளர்களிடத்தும் எழுத்தின் மீதும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் அல்லது பாதிப்புகள் மற்றும் இவை போன்ற முக்கிய விவரங்கள் குறித்தும் தகவல்கள் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று இலக்கிய நண்பர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்தான் என்பதால் இங்கு பொதுவான சில தகவல்களை இணைக்கிறேன்.

இந்திய சுதந்திரப் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக மட்டுமே அமைந்திருந்ததில்லை. அரசியல், விடுதலை உணர்வோடு, சமூக சீர்திருத்த வேட்கையும், தனிமனிதப் பண்பாட்டு உயர்வு உணர்ச்சியும், தாய்மொழி வளர்ச்சி வேகமும் சேர்ந்தே செயல்பட்டன.

மொழி வளர்ச்சி உணர்வு பத்திரிகைகளின் வளர்ச்சிக்குத் துணை புரிந்தது. நாட்டு மக்கள் மத்தியில் அரசியல் விடுதலை உணர்ச்சி, சமூகச் சீர்திருத்த உணர்வு, பண்பாட்டு உயர்வு ஆகியவற்றைப் பரப்புவதற்கும், அவர்களைச் செயல்வீரர்களாக மாற்றுவதற்கும் பத்திரிகைகள் பயன்பட்டன.

பத்திரிகைகளின் வேக வளர்ச்சி மொழி மறுமலர்ச்சிக்கு உதவியது. இந்திய மொழிகள் பலவற்றிலும் வரலாற்று ரீதியாகக் காணப்படும் இந்தப் பரிணாமம் தமிழ்நாட்டிலும் செயல்பட்டது.

1930 களுக்கு முன்னரும், முப்பதுகளின் ஆரம்பத்திலும், இலக்கியப் பத்திரிகை என்று 'செந்தமிழ்', 'செந்தமிழ்ச் செல்வி', ‘ஆனந்த போதினி' ஆகிய பத்திரிகைகளே இருந்தன.

முந்திய இரண்டு 'வித்வான்கள்', பழந்தமிழில் புலமை பெற்றவர்கள் ஆகியவர்களது எழுத்துக்களையே ஆதரித்து வந்தன. ஆனந்த போதினி கம்பராமாயணம், திருக்குறள், சங்க இலக்கியம் போன்ற தமிழ்ச் செல்வங்கள் பற்றிய கட்டுரைகளோடு, நாவல், சிறுகதை ஆகியவற்றுக்கும் இடம் அளித்து வந்தது.

ஜனரஞ்சகப் பத்திரிகையாக, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்குடன், 'ஆனந்த விகடன்' தோன்றி வளர்ந்தது, மாதப் பத்திரிகையாக ஆரம்பித்து, 'மாதம் இருமுறை' ஆகி, பின் 'மாதம் மும்முறை' என்று வந்து, பிறகு 'வாரப் பத்திரிகை'யாக மாறி ‘விகடன்' வளர்ச்சி பெற்றது, ஜனரஞ்சகப் பத்திரிகையின் வெற்றிக்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

‘விகடன்' வாயிலாக ‘கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி தமது எழுத்தாற்றலினால் தமிழ்நாட்டில் பரவலாக வாசகர்களையும், பத்திரிகையை ஆவலோடு எதிர்பார்த்து வரவேற்றுப் படிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்தார். -

வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பதும், வாழ்க்கையின் துன்ப துயரங்கள், ஏமாற்றங்கள், வெறுமை, வறட்சி முதலியவைகளைக் காண மறுப்பதும், பொதுவாக இனிமைகளையும் சுகங்களையும் கிளுகிளுப்பூட்டும் விஷயங்களையும் கதைப்பொருள் ஆக்குவதுமே விகட மனோபாவமாகவும், 'கல்கி'யின் நோக்கு ஆகவும் இருந்தது. அவ் வழியில் அவரைப் பின்பற்றி எழுதுகிறவர்கள் பெரும் பலர் ஆயினர்.

இந்த ரக எழுத்து பொழுதுபோக்கு அம்சத்தையே வலியுறுத்தியது. ‘விகடன்' அரசியல் கருத்துக்களையும்-முக்கியமாக தேசியப் பார்வையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் செயல்களையும் பிரசாரப்படுத்தும் எழுத்துக்களை- அந்த அந்தக் காலத்திய அதிவிசேஷமான செய்திகளையும், சங்கீதம், சினிமா போன்ற கலை விஷயங்களையும் வெளியிட்டதுடன் கதைகளுக்கு அதிக இடமும், பழந்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சில பக்கங்களும் ஒதுக்கியது. 'தொடர்கதை'யை வாசகர்களை வசீகரித்து, விடாது பிடித்து வைத்திருக்கும் உத்தியாகவும், பத்திரிகையின் விற்பனையை வளர்க்கத் துணைபுரியும் ஒரு சாதனமாகவும் ஆக்கியது.

மொழி வளர்ச்சி, மொழி மறுமலர்ச்சி காரணமாக இந்திய மொழிகள் அனைத்துமே சிறுகதைக்கு அதிகமான கவனிப்பு அளித்து வந்த காலம் அது சஞ்சிகைகளும், வாரப் பத்திரிகைகளும் மட்டுமல்லாது, தினப் பத்திரிகைகள் கூடக் கதைகளை வரவேற்றுப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தன. 'ஓரங்க நாடகம்’ எனும் இலக்கியப் பிரிவு எல்லா மொழிகளிலும் வளர்ந்து மலர்ந்தது. நாவல்கள் வேகமாகப் பிறந்து கொண்டிருந்தன. -

இந்தத் தாக்கம் தமிழ்ப் பத்திரிகைகளிலும் காணப்பட்டது. ஓரங்க நாடகங்கள் பல்வேறு சுவைகளோடும் எழுதப்பட்டன. தமிழ்ப் பத்திரிகைகள் கதைகளை வரவேற்றன. சுயமாக எழுதப்படும் நாவல்களை ஆதரிப்பதற்குப் பதிலாக ஹிந்தி, வங்க நாவல்களின் தமிழாக்கத்தையே விரும்பிப் பிரகரித்தன.

1930 களிலும் 1940 களிலும் பிரேம்சந்த், பங்கிம் சந்திரர், தாகூர், சரத் சந்திரர் ஆகியோரது நாவல்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் தொடர் கதைகளாகவும், புத்தக வெளியீடுகளாகவும் அதிகம் அதிகமாக வந்துள்ளன. பின்னர் தொடர்ந்து வி. ஸ். காண்டேகரின் மராத்தி நாவல்கள் வேகமாகத் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு பத்து வருஷ காலம் காண்டேகர் ஸீசன் என்ற நிலை இங்கு நீடித்தது.

தமிழ் நாவல் படைப்பு வெகுகாலம் வரை சோனிக் குழந்தையாக இருந்ததற்கு நாட்டில் நிலவிய இந்த நிலைமையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

விகடனும், அதைப் பின்பற்றிய ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் 'கல்கி' வழியில் செயலாற்றிய எழுத்தாளர்களும்-உலக இலக்கியங்களின் நல்ல கதைகளை நேரடி மொழிபெயர்ப்பாகக் கொடுப்பதை விரும்ப வில்லை. பிறநாட்டு நல்ல கதைகளைத் தழுவித் தமிழ்க்கதைகளாக வெளியிடுகிற போக்கே மிகுந்திருந்தது.

இலக்கியம் என்பது தொன்மையானவற்றைப் புகழ்ந்து விரிவுரை கூறிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, புதிய விஷயங்களைப் புதிய புதிய முறையில் எடுத்துக்கூறும் கவிதைகளும் கதைகளும் நாவல்களும் இலக்கியமாக முடியும் என்ற உணர்வு மொழி மறுமலர்ச்சியின் பயனாக வளர்ந்தது. ஆற்றல் நிறைந்தவர்கள் இவ்வகை எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

விற்பனையைப் பெருக்குவதில் தீவிர கவனம் செலுத்திய ஜனரஞ்சகப் பத்திரிகைகள் புதிய படைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு காட்டுவதில் ஒரு எல்லை வகுத்து, தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு செயல்பட்டன.

1930 களின் ஆரம்பத்தில் தோன்றிய 'கலைமகள்' இலக்கியப் பத்திரிகையாகச் சில காலம் வளர்ந்தது. இது மணிக்கொடி மனோபாவ எழுத்தாளர்களையும், விகட மனோபாவ எழுத்தாளர்களையும் ஆதரிக்கும் மிதவாதப் பத்திரிகையாகச் செயலாற்றியது. 1950 களில் இது தன்னை ‘குடும்பப் பத்திரிகை' என்று கூறிக் கொண்டு, வணிக முறைகளைக் கையாண்டு வெற்றிகரமாக முன்னேறுவதில் அக்கறை காட்டலாயிற்று.

கனமான இலக்கியத் தன்மையையும் ஜனரஞ்சகப் போக்குகளையும் இணைத்து, பெரிய அளவில் ஒரு பத்திரிகையை நடத்தி லாபமும் வெற்றியும் காண முடியுமா என்று சோதனை பண்ணுவதில் க. நா. சுப்ரமண்யம் ஆர்வம் கொண்டிருந்தார். 1930 களில் அவர் 'சூறாவளி'யை, ‘விகடன்' போல், ஒரு வாரப் பத்திரிகையாக நடத்திப் பார்த்தார். பதினெட்டு இதழ்களோடு பத்திரிகை நின்று போயிற்று.

1940 களில், தொழில் அதிபர் ஒருவரது துணையோடு, சந்திரோதயம் பத்திரிகையை மறுமலர்ச்சி பண்ணிப் பார்த்தார் க. நா. சு.

‘விகடன்' பகுத்தறிவுப் போட்டியை ஒரு பந்தய பிசினஸ் ஆகவும், பத்திரிகையின் விற்பனையைப் பெருக்கக் கூடிய ஒரு சாதனமாகவும் நடத்திக் கொண்டிருந்தது. அந்நாட்களில் விகடனைப் பின்பற்றி வேறு சில பத்திரிகைகளும் போட்டிப் பந்தய பிசினஸில் ஈடுபட்டிருந்தன. ஆனால் வெற்றி பெற்றதில்லை. -

அவைகளில் 'சந்திரோதயம்' என்பதும் ஒன்று. நன்றாக நடைபெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த அது, மறுமலர்ச்சி 'மாதம் இரு முறை' பத்திரிகையாக மாறி இரண்டு வருஷங்கள் வந்தது. க. நா. சு. ஆசிரியர். சி. க. செல்லப்பா துணை ஆசிரியர். .

புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் இதில் தொடர்ந்து வந்தது. லா. ச. ரா. சில கதைகள் எழுதினார்.

பத்திரிகை எழுத்துலகத்தில் பாதிப்பு எதையும் ஏற்படுத்தி விட வில்லை.

க. நா. சுப்ரமண்யம் உலகத்துச் சிறந்த நாவல்கள் பலவற்றைத் தமிழாக்கி உதவினார். கு. ப. ராஜகோபாலன், புதுமைப்பித்தன் மற்றும் சில எழுத்தாளர்கள் உலகத்துச் சிறுகதைகளை நல்ல முறையில் மொழி பெயர்த்துத் தந்தார்கள்.

அவற்றை நவயுகப் பிரசுராலயம், அ. கி. ஜயராமனின் ஜோதி நிலையம், அ. கி. கோபாலனின் தமிழ்ச் சுடர் நிலையம் போன்ற பதிப்புகங்கள் புத்தகங்களாக வெளியிட்டன.

‘சக்தி பிரசுராலயம்' வை. கோவிந்தன் பிரசுரத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் பெரும் சாதனைகள் புரிந்துகொண்டிருந்தார். அறிவுக்கு விருந்தாகும் நல்ல நூல்களை அழகான முறையில் வெளியிடுவதில் அவர் ஆர்வம் காட்டினார்.

வை. கோவிந்தன் பல வருட காலம் நடத்திய 'சக்தி' என்ற மாசிகை தமிழில் ஒரு வித்தியாசமான பத்திரிகையாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில், 'டைம்' பத்திரிகை அளவிலும் அமைப்பிலும் அது வந்து கொண்டிருந்தது. பிறகு புத்தக வடிவம் பெற்றது. கனத்த அட்டையுடன், அழகிய தோற்றப் பொலிவுடன், நல்ல வெள்ளைத் தாளில் அருமையான அச்சில் வந்த 'சக்தி' ஒரு சில கதைகள், ஒன்றிரண்டு கவிதைகளோடு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பாணியில் பலசுவைக் கட்டுரைகளையும், அறிவுக்கு விருந்தாகும் விஷயங்களையும், சுவாரஸ்யமான துணுக்குகளையும் சேகரித்து வழங்கியது. வெகு காலம்வரை தி. ஜ. ர. (தி. ஜ. ரங்கநாதன்) அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அவருக்குப் பிறகு சுப. நாராயணன் என்ற ஆற்றலும் சிந்தனைத் திறமும் மிகுதியாகப் பெற்றிருந்த எழுத்தாளர் அதன் ஆசிரியராகச் செயலாற்றினார். சில வருடங்களுக்குப் பின்னர் கு. அழகிரிசாமியும் தொ. மு. சி. ரகுநாதனும் பொறுப்பேற்று ‘சக்தி' பத்திரிகையை உருவாக்கி வந்தனர்.

காலப்போக்கில், 'சக்தி' என்ற நல்ல மாதப் பத்திரிகை நிறுத்தப் பட்டது. 'சக்தி மலர்’ என்ற பெயருடன், கதைகள்- கட்டுரைகள்கவிதைகள் நிறைந்த 'மாதம் ஒரு புத்தகம்' அழகிரிசாமி ரகுநாதன் தயாரிப்பாக ஒரு வருடம் வெளியிடப் பெற்றது. இறுதியில் 'சக்தி பிரசுராலயம்' என்ற நல்ல புத்தக வெளியிட்டு நிறுவனமே செயலற்றுப் போயிற்று.

இரண்டாவது உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்திலும் அதற்குப் பிந்திய சில வருடங்களிலும் (1940 களின் முற்பகுதியில்) புதிய பத்திரிகைகள் துவங்கி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நெருக்கடி நிலையை மீறிச் சமாளிக்கும் விதத்தில் ஏ. கே. செட்டியார் ஒரு வழி கண்டுபிடித்தார். பத்திரிகை போலவும்- ஆனால் முறையான ஒரு பத்திரிகையாக இல்லாமல் புத்தகம் போலவும், ஆயினும் நேரான ஒரு புத்தகமாக அமையாது-'மாத வெளியீடு' ஆக ஒரு மலர் பிரகரிக்கலாம் என்று கண்டு, 'குமரி மலர்’ என்ற மாதம் ஒரு புத்தக வெளியீட்டை ஆரம்பித்தார்.

‘குமரி மலர்' காட்டிய வழியில் தொடர்ந்து ஏகப்பட்ட மலர்கள் தமிழகத்தில் அந்நாட்களில் தோன்றின. தோன்றிய வேகத்திலேயே மறைந்தும் போயின. தமிழ் மலர், கதை மலர், கதைக் கொடி இப்படி ஏதேதோ பெயர்களில் பலப்பல வெளியீடுகள். அவற்றில் சில தரமான தயாரிப்புகளாகவும் அமைந்திருந்தன. எல்லாம் வழக்கமாக எழுதும் பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகளை ஏற்றுப் பிரசுரிப்பதில் உற்சாகம் காட்டின. ஒரு சில நல்ல படைப்புகள் தோன்றுவதற்கு இவற்றில் சில உதவி புரிந்தன என்று கூறலாம்.

பெரும்பாலும் எல்லாப் பத்திரிகைகளும் 'மாதம் ஒரு வெளியீடு’ மலர்களும் சென்னையிலிருந்து வந்தன என்றாலும், நல்ல முறையில் நடந்த சில பத்திரிகைகள் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் சிலவற்றி லிருந்தும் வந்து கொண்டிருந்தன.

கும்பகோணத்திலிருந்து 'காவேரி' என்றொரு மாதப் பத்திரிகை, வாசகர்கள் விரும்பக் கூடிய விதத்தில், பல வருட காலம் பிரசுரமாயிற்று. இது 'கலைமகள்' வழியில் நடக்க முயன்றது என்று குறிப்பிடலாம். ஆனாலும், இலக்கியப் பிரக்ஞை எதையும் அது கொண்டிருந்ததில்லை. ஆகவே, சிறுகதைத் துறையில் அல்லது நாவல் துறையில் அல்லது எதிலுமே கணக்கில் கொள்ளத்தக்க விதத்தில் (எண்ணிப் பார்க்க வேண்டிய அளவுக்கு ) அந்தப் பத்திரிகை எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது.

கோயம்புத்தூரிலிருந்து 'வசந்தம்' என்ற மாதப் பத்திரிகை பல வருட காலம் வந்தது. வாசகர்கள் விரும்பக் கூடிய ஒரு 'நல்ல பத்திரிகை' யாகத்தான் இதுவும் வளர்ந்தது. நாவலாசிரியர் ஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி ஆர். திருஞானசம்பந்தம் இதன் ஆசிரியர். பிரபல அரசியல்வாதி ஆர், கே. சண்முகம் செட்டியார், பிற்காலத்தில் பத்திரிகை நடத்தும் பொறுப்பை ஏற்று நிர்வகித்தார். விசேஷமான சாதனைகளோ சோதனைகளோ இந்தப் பத்திரிகையின் வாயிலாக நிகழ்த்தப்பட்டதில்லை. சரத் சந்திரரின் பெரிய நாவல்கள் ஆர். சண்முகசுந்தரத்தின் தமிழாக்கமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இதில்.

பம்பாயிலிருந்து ஒரு தமிழ்ப் பத்திரிகை அழகான- வசீகரமான அட்டைப் படங்களோடு வெளிவந்தது. 'விந்தியா' என்பது அதன் பெயர்.

1940 களில் பத்திரிகைத் துறையில் இலக்கிய உணர்வோடு செய்யப்பட்ட சில புதிய சோதனை முயற்சிகள் என்று குறிப்பிடப்பெற வேண்டியனவும் உண்டு.

க. நா. சு. புத்தகங்கள் பற்றி மதிப்புரையும் தகவல்களும் தருவதற்காக 'ராமபாணம்' என்றொரு சிறு வெளியீட்டைப் பிரசுரித்தார்.

ராமபாணம் என்பது புத்தகங்களில் துளைபோடும் ஒரு பூச்சியின் பெயர். புத்தகப்பூச்சி அல்லது புத்தகப் புழுவைக் குறிக்கும் இச் சொல்லையே க. நா. சு. தனது சூறாவளி பத்திரிகையில் புத்தக மதிப்புரைப் பகுதியின் தலைப்பாகப் பயன்படுத்தி வந்தார். பின்னர், புத்தக உலகச் செய்திகளையும் அபிப்பிராயங்களையும் கூறும் பிரசுரத்தின் பெயராக அதை வைத்தார். -

இவ் வெளியீடு சில இதழ்களே வந்தன.

சில வருஷங்களுக்குப் பிறகு. மறுமலர்ச்சி இலக்கியத்தில் புதுமை பண்ணும் நோக்கத்துடன் க. நா. சு. 'உஷா' என்றொரு சிறு பத்திரிகையை வெளியிட்டார். அது இரண்டே இரண்டு இதழ்கள்தான் வந்தன.

ரோமன் ரோலந்த் எழுதிய அற்புதமான மாபெரும் நாவல் 'ஜீன் கிறிஸ்தோவ்'. அதை க. நா. சு. தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ய ஆசைப்பட்டார். நாவல் மொழிபெயர்ப்பை ஒரேயடியாகப் புத்தகமாக வெளியிடுவதற்குப் பெரும்பணமும் மிக நிறையக் காகிதமும் தேவைப்படும் என்பதால் க. நா. சு. ஒரு புதிய திட்டம் வகுத்தார். ஒவ்வொரு வாரமும் பதினாறு பக்கங்கள் கொண்ட துண்டுப் பிரசுரமாக இரண்டனா விலையில் வெளியிடுவது நாவல் முழுவதையும் இந்த ரீதியில் பிரசுரிக்கலாம் என்று அவர் கருதினார். .

இந்த அடிப்படையில் 'ஜின் கிறிஸ்தோவ்' மொழிபெயர்ப்பு சில வாரங்கள் தொடர்ந்து வந்தது. பிறகு நின்றுவிட்டது.

உலக இலக்கியங்களின் அருமையான சிறுகதைகளை மொழி பெயர்த்து, எட்டனா விலையில் மாதம் ஒரு புத்தகமாக, அ. கி. ஜயராமன் பிரசுரித்தார். 'சர்வதேசக் கதை மலர்' வரிசையில் க. நா. சு. புதுமைப் பித்தன், தி. ஜானகிராமன் முதலியோர் மொழிபெயர்த்த நல்ல சிறு கதைகள் வெளிவந்தன. தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களும், ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறாதவர்களும் இந்த ‘மலர்' களினால் நல்ல பலன் அடைந்தார்கள்.

ஜோதி நிலையத்தின் முயற்சியைத் தொடர்ந்து சக்தி காரியாலயமும் சர்வதேசக் கதைகளின் மொழிபெயர்ப்பைச் சிறுசிறு வெளியீடுகளாகப் பிரசுரித்தது.

1940 களில் நிகழ்ந்த மற்றுமொரு சாதனை, அல்லயன்ஸ் குப்புசாமி அய்யர் வெளியிட்ட 'கதைக் கோவை' ஆகும். ஒரு வருடத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த நல்ல சிறுகதைகளைத் தேர்ந்து தொகுத்து ஒரு கோவை ஆகப் பிரசுரிக்கும் முயற்சி. இதன்படி, முதல் வருடம் முப்பது எழுத்தாளர்களின் முப்பது கதைகளும், இரண்டாவது வருடம் நாற்பது எழுத்தாளர்களின் நாற்பது கதைகளும் கோவை ஆக வெளியிடப்பட்டன. மூன்றாவது தொகுதி ஒன்றும் வெளிவந்தது. அதன் பிறகு இம் முயற்சி. தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை. -

நாவலுக்கு என்று மட்டுமே வெளிவந்த பத்திரிகைகள் அந்தக் காலத்திலும்- அதாவது 1930 களிலேயே-இருந்தன.

நாவல்கள் எழுதிப் பிரசித்த பெற்றிருந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதும் புதிய நாவல்களை, மாதத்துக்கு இத்தனை அத்தியாயம் என்ற ஒரு கணக்கில், தொடர்கதை ரீதியில் வெளியிடுவதற்காக மனோரஞ்சிதம் என்ற மாதப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. வடுவூராரின் நாவல்களைப் புத்தகங்களாகப் பிரசுரித்து வியாபாரம் பண்ணிய நிறுவனம்தான், வணிக நோக்கில் அந்தப் பத்திரிகையையும் நடத்தி வந்தது.

வடுவூர் பாதையில் நாவல் எழுத ஆரம்பித்து, பின்னர் காந்தியம், சமூக சீர்திருத்தம், மாதர் முன்னேற்றம் ஆகிய நோக்குகளுடன் நாவல்கள் படைப்பதில் தனது கவனத்தைத் திருப்பிக்கொண்ட வை. மு. கோதை நாயகி, தன் நாவல்களைத் தொடர்கதை ரீதியில் வெளியிடுவதற்காக ‘ஜகன்மோகினி' என்ற மாதப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்.

‘ஆனந்த போதினி' என்ற இலக்கிய மாசிகையைப் பிரசுரித்து வந்த நா. முனிசாமி முதலியார், பிரசண்ட விகடன் என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார், ஆனந்த விகடன் மாதிரி ( ஆனால், பத்திரிகை 'தீபம்' சைஸ் இருக்கும் ). பல வருஷங்கள் வெளிவந்த இந்தப் பத்திரிகையின் ஆசிரியர், நாரண துரைக் கண்ணன். அவர் எழுதிய நாவல்கள் அந்நாட்களில் பரவலான கவனிப்பைப் பெற்றன. 'இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்', 'நான் ஏன் பெண்னாய் பிறந்தேன்?’, ‘சீமாட்டி கார்த்தியாயினி', 'உயிரோவியம்', 'தாசி ரமணி' போன்ற நாவல்கள், நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் வாசகர்களால் ஆவலுடன் வரவேற்று விரும்பிப் படிக்கப்பட்டன.

‘பிரசண்ட விகடன்' இன்னொரு விதத்திலும் குறிப்பிடத்தகுந்த பத்திரிகையாக விளங்கியது. ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் ‘இன்னார் இனியார் என்று பாராது' புதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் ஊக்கமூட்டி உற்சாகம் அளித்து வந்ததால், எழுத்தில் ஆசையோடு அடி எடுத்து வைத்து ஆர்வத்தோடு எழுதி முன்னேறத் துடித்த இளைஞர்கள் பலருக்கு நல்ல பயிற்சித் தளமாக உதவியது அந்தப் பத்திரிகை.

புதுக்கோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த 'திருமகள்', 'அணிகலம்' போன்ற சிறிய பத்திரிகைகளும் இப்படி இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்து, அவர்களுடைய திறமை ஒளிர்வதற்கு நல்ல துணையாக உதவின.

1940 களின் இறுதிக் கட்டத்தில், சென்னையில் அ. கி. ஜயராமன், அ. கி. கோபாலன் இருவரும் நாவலுக்கென்றே 'காதம்பரி' என்ற மாதப் பத்திரிகையைத் தொடங்கினார்கள். ஜயராமன் 'ஜோதி நிலையம்' மூலம் நல்ல நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் பிரசுரித்து வந்தார். கோபாலன் தமிழ்ச் சுடர் நிலையம் மூலம் அருமையான மொழி பெயர்ப்பு நாவல்களையும், தரமான படைப்புகளையும் வெளியிட்டுப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மாதம் தோறும் 'ஒரு முழு நாவல்' வெளியிடவும், மற்றும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற அம்சங்களைப் பிரசுரிக்கவும் 'காதம்பரி' தோன்றியது. பிரசுர வாய்ப்பைப் பெறாமலே கிடந்த புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு' கதை இதில்தான் முதன் முறையாக அச்சாயிற்று. மாதம் தோறும் பிரசுரமாகும் நாவலுக்கு ஒரு பவுன் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது ‘காதம்பரி'.

‘காதம்பரி' நீண்ட நாள் வாழவில்லை. ஆறு இதழ்களோ என்னவோ தான் வந்தன.

1940 களின் இறுதியில் வெளிவந்த பத்திரிகைகளில் பேராசிரியர் ஆ. சீனிவாசராகவனை ஆசிரியராகக் கொண்டிருந்த 'சிந்தனை' என்ற மாதப் பத்திரிகை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும். அ.சீ ரா. மாணவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும், எழுத்தாளர்களிடையே கவனிப்பும் மதிப்பும் பெற்றிருந்த கல்லூரிப் பேராசிரியர். ஆங்கில இலக்கியத்தில் நல்ல புலமையும் தமிழ் இலக்கியத்தில் தேர்ச்சியும் ஈடுபாடும் கொண்டவர். நாணல் என்ற பெயரில் கவிதைகளும் நாடகங்களும் எழுதி இலக்கியப் பிரியர்களின் பாராட்டுதலைப் பெற்றிருந்தார்.

அ. சீ. ரா. ஆசிரியராக இருந்து நடத்திய 'சிந்தனை' நல்ல மாதப் பத்திரிகையாகத் திகழ்ந்தது. அ. சீ. ரா. வின் படைப்புகள், ஜஸ்டிஸ் மகாராஜன் திருமூலர் பற்றி எழுதிய கட்டுரைகள், பல்வேறு விஷயங்களைப் பற்றிய சிந்தனைக் கட்டுரைகள், தரமான சிறுகதைகள், கவிதைகள் பத்திரிகைக்கு மதிப்பு சேர்த்தன. ஆயினும், எழுத்துலகத்தில் விசேஷமான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஜீவனுள்ள இலக்கியப் பத்திரிகையாக ‘சிந்தனை' வளரவில்லை. ஒரு வருஷம் வாழ்ந்து அது ஆண்டு மலர் ஒன்றைப் பிரசுரித்த பெருமையோடு கடையைக் கட்டிக் கொண்டது.

அதே மாதிரிதான் 'தேனி' என்ற மாதப் பத்திரிகையும். 'மணிக்கொடி' யில் எழுத ஆரம்பித்து, கவனிப்புக்கு உரிய எழுத்தாளராக வளர்ந்து, 'கலாமோகினி', 'கிராம ஊழியன்' வாயிலாகத் தனது படைப்பாற்றலை ஒளி வீசச் செய்த எம். வி. வெங்கட்ராம் நடத்திய மறு மலர்ச்சி இலக்கிய மாசிகை. கரிச்சான்குஞ்சு (ஆர். நாராயணசாமி ) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். கும்பகோணத்திலிருந்து வந்தது.

‘மணிக்கொடி' எழுத்தாளர்கள் சிலரும், 'கலாமோகினி', 'கிராம ஊழியன்' பத்திரிகைகளில் எழுதி வளர்ந்தவர்களும், வேறு சில புதியவர்களும் 'தேனி' யில் எழுதினார்கள். அந்த அளவுக்குத்தான் அது பயன்பட்டதே தவிர, சாதனைகள் என்று சொல்லும்படியாக எதையும் தேனீ செய்து விடவில்லை. ஒரு நல்ல பத்திரிகையாக இருந்தது அது. மற்றபடி பாதிப்பு அல்லது தாக்கம் எதுவும் அதனால் நிகழவில்லை. 'தேனி' யும் ஒரு வருடமும் சில மாதங்களும்தான் வெளிவந்தது.

1940 களின் பிற்பகுதியில் தோன்றி, பல வருடங்கள் வெற்றிகரமாக வாழ்ந்த ‘பொன்னி' என்ற இலக்கியப் பத்திரிகை பலரது நினைவில் இடம் பெற்றுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நினைவுகூரப்படுகிற வித்தியாசமான ஒரு பத்திரிகை.

அரசியல் அடிப்படையில் செல்வாக்குடன் வேக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த திராவிடர் இயக்கத்தைச் சார்ந்த பத்திரிகை பொன்னி. பத்திரிகைத் துறையில் எழுத்தாளர்களும் பத்திரிகைக்காரர்களும் குறிப்பிட்ட ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்; உண்மையான தமிழ் எழுத்தாளர்களை வளர விடுவதில்லை; தமிழ்க் கலைகளையும் இலக்கியத்தையும் அந்த இனத்தின் எழுத்தாளர்கள் சிதைத்துச் சீர் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களோடு போட்டியிட்டு தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கும் திராவிடக் கலைகளின் வளத்துக்கும், தமிழ் (இலக்கியத்தின் ) மொழியின் ஆரோக்கியமான எழுச்சிக்கும் பணிபுரிய வேண்டும் என்பது திராவிட இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அந்த அடிப்படையில், அக்காலகட்டத்தில் (1940 களில்) ஏகப்பட்ட திராவிட இயக்கப் பத்திரிகைகள் தோன்றின. அவற்றில் ‘பொன்னி' யும் ஒன்று.

‘பாரதிதாசன் பரம்பரை’ என்று கவிஞர்கள் அணி ஒன்று வளர் வதற்கு ‘பொன்னி' துணை புரிந்தது. திராவிட இயக்கக் கொள்கைகளையும் கருத்துக்களையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் மிகுதியாக வெளிவந்தன. ஒன்றிரு நாவல்களும் தொடர்கதையாக வந்து கவனிப்புப் பெற்றன.