தமிழில் சிறு பத்திரிகைகள்/பாரதி சோலை⁠

54. பாரதி சோலை


நம்மிடையே மண்டிக் கிடக்கும் எல்லா அநீதிகளுக்கும் சுரண்டல்களுக்கும், வறுமைக்கும் நமது சமுதாய அமைப்பே காரணம் என்று புரிந்துகொண்டு, இந்த அமைப்பை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் திட்டங்களிட்டு, அவரவருக்குத் தோன்றிய முறைகளில் அங்கங்கே அநேகர் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தத்தமக்கெனத் தனிப்பெயர் கொண்ட சிறு சிறு இயக்கங்களாகப் பணிபுரிகிறார்கள்.

அப்படிப்பட்ட அமைப்புகளில் காட்பாடி அருகில் உள்ள கிறிஸ்டியன் பேட்டையில் அலுவலகம் வைத்துக் கொண்டு ஆக்கப் பணிகள் புரிந்து வருகிற சோலை இயக்கமும் ஒன்று.

சோலை (SOLAI) என்பது Social Life Animation India எனும் ஆங்கிலச் சொற்களிலிருந்து அமைக்கப்பட்டதாகும். ‘இந்திய சமூக வாழ்க்கை மேம்பாட்டு இயக்கம்‘ என்பது அதன் பொருள்.

இந்த இயக்கம் ‘பாரதி சோலை‘ என்ற மாத இதழை வெளியிடுகிறது. நலவாழ்வு மற்றும் சமூக மேம்பாட்டு இதழ் ஆக இது மூன்று வருடங்களுக்கும் மேலாகவே வளர்ந்து வருகிறது. சோலை இயக்கத்தின் இயக்குநராகச் செயலாற்றும் ஆர். டி. ராஜன் எம். ஏ. (சமூகவியல்), எம். ஏ. (பொது நிர்வாகம்), டி. எச். இ. தான் இந்த மாத இதழின் ஆசிரியருமாவார்.

‘மக்கள் எழுச்சிக்குப் பயிற்சி, அதுவே மக்கள் வளர்ச்சிக்கு வழி. மக்கள் தலைமைக்குப் பயிற்சி; அதுவே மக்கள் எழுச்சிக்கு வலிமை‘ என்று பாரதி சோலை அறிவிக்கிறது.

‘நலமிக்க சமுதாயம் காண்பதே நலவாழ்வு முயற்சிகளின் நோக்கம் எல்லார்க்கும் நலவாழ்வு ஏன் கிடைக்கவில்லை எனப் பகுப்பாய்வு செய்வதும், அதனை மக்கள் புரிந்துகொள்வதும், புரிந்து கொண்ட மக்கள் நல வாழ்வைப் பாதிக்கும் சமூக பொருளாதார அரசியல்—கற்றுச் சூழ்நிலைப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சிபெற்று ஒன்றுபட்டு, சரியான முடிவுகளை எடுப்பதும் முக்கியமாகும் என்று பாரதி சோலை கருதிச் செயல்படுகிறது.

சமூகத் தாக்கமும், சமூகப் பொருத்தமும் இல்லாத எந்த ஒரு சமூகச் செயல்பாடும் பயனற்றது எனப் பழித்துரைக்கப்பட்டு காலத்தால் ஒதுக்கப்படும். மனித மேம்பாடு நோக்கிய செயல்பாட்டையே சமூகச் செயல்பாடு என்று குறிப்பிடுகிறோம். எழுத்துப் படைப்பாக்கமும் ஒரு சமூகச் செயல்பாடே. சமூக விழிப்புணர்வுக்காக இக்கலை அர்த்தமுள்ள பங்கை வலுவாக ஆற்ற முடியும்.

எழுத்துக்கலை கருத்துப் பரிமாற்றத்துக்கும், கருத்து வளர்ச்சிக்கும், சமுதாய உயர்வுக்கும் ஆற்றியுள்ள மகத்தான சாதனைகளை வரலாறு நமக்குக் காட்டுகிறது. இத்தகைய வலுவான கலை, தனிமனித லாபத்துக்காகவோ, தனிமனித மன நிறைவுக்காகவோ, தனிமனிதச் சிறப்புக்காகவோ, சிலரது லாப நோக்கங்களின் கருவியாகவோ பயன்படுத்தப்படுமானால், அதன் சமூகக் குணாதிசயம் பழுதாகி, எதிரான திசையில் எளிதில் இழுக்கப்பட்டு அழிவுக் கலாசாரத்தின் ‘எடுபிடி சக்தி‘ யாக மாறி சிறுமைப்பட்டுப் போகும்.

சமூக மேம்பாட்டில் அக்கறையுடைய எவரும் ‘மனித வாழ்க்கையை மனித வாழ்க்கையாக இவ்வுலகில் பராமரிக்க நடத்தப்படும் செயல்களே, இயக்கங்களே, போராட்டங்களே சரியானவை—தேவையானவை என்று கருதுவர். இந்தக் கோணத்தில் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புப் பணி எந்த அளவுக்கு உரிய சமூகச் செயல்பாடாக அமைந்து இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதில் ‘சோலை‘ அக்கறை காட்டுகிறது.

பெரும்பான்மையான எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக் கடமையை, எழுத்து தர்மத்தை அறவே மறந்து, பெரும்பான்மை மக்களைப் பற்றிய சிரத்தையே இல்லாமல், ஆட்டுவிக்கும் சீரழிவுக் கலாச்சார சக்திகளின் ஆடும் பாவைகளாய் செயல்பட்டு வரும் அலங்கோலத்தை ‘சோலை’ உணர்கிறது.

இந்நிலையில், கருத்துப் புரட்சிக்கு ஆதாரமாக— பெரும்பான்மை மக்களின், குறிப்பாக அடித்தட்டு மக்களின், வாழ்க்கை மேம்பாட்டுக்காக அர்ப்பணிக்க வேண்டிய மானுட மரியாதையை, உரிமையை, ஒவ்வொரு மனிதனும் சமூக சமத்துவ அடிப்படையில் அனுபவிக்கத் தேவையான சமூக விடுதலை நோக்கிய பயணத்தின் முன்னணியினராகத் திகழவேண்டிய எழுத்தாளர்களுக்கு அவர்களது பங்குப் பணியை நினைவூட்ட வேண்டிய முயற்சி சமூக மேம்பாட்டு இயக்கத்தின் முன்னுரிமைப் பணியாகும் எனக்கொண்டு ‘சோலை‘ செயல் புரிந்து வருகிறது.

சமூக மேம்பாடு என்கிறபோது, அதன் பொருளாதார மேம்பாட்டை மட்டுமே கணக்கில் கொள்ளாது, சமூகத்தின் கூட்டு வாழ்க்கைக்குத் தேவையான ஒருமைப்பாட்டு உறவுணர்ச்சிகள், கலை நாகரிக எழுச்சிகள், மனோகாய ஆரோக்கிய வளர்ச்சிகள் ஆகிய அனைத்தின் மொத்தத்தையும் கொண்டு ஒரு முழுமையான சமூக மேம்பாடே குறிக்கப் படுகிறது.

இந் நோக்கிலான விஷயங்களை பாரதி சோலை வெளியிடுகிறது. கதைகள், கவிதைகளோடு சிந்திக்கத் தூண்டுகிற கட்டுரைகளை அதிகமாகப் பிரசுரிக்கிறது. புதிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும் கட்டுரைகள், பொருளாதாரக் கட்டுரைகள் இதில் இடம் பெறுகின்றன. மற்றும் உணவு வகையின் குணங்கள், மூலிகைகள், குழந்தை நலம், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு பற்றிய கட்டுரைகளையும் தருகிறது.

‘லாபமே குறிக்கோள் எனக் கொண்ட பொருள் உற்பத்தியும் வாணிபமும் பெரும்பான்மை நாடுகளின் சமூக வாழ்க்கையையே மாசுபடுத்திவிட்டன. இத்தகைய வாணிபத்தை வளர்ப்பதற்கு உருவானதே காலனி ஆட்சிகள். இன்று, காலனி ஆட்சிகள் கரைந்துவிட்டன; எஞ்சியிருப்பதும் கரைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அது விதைத்த கொடிய கலாச்சாரம் இன்றும் ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கலாசாரத்தின் ஆதிக்கம் முற்றிலும் நீங்கினாலொழிய எளியநாடுகளின் மேம்பாட்டிற்கு வழியே இல்லை. இது குறித்துச் சிந்திப்பதும் செயல்படுவதும் இந்தத் தலைமுறையில் வாழும் ஒவ்வொரு அறிவுஜீவியின் தலையாய பொறுப்பாகும் என்று பாரதி சோலை ஆசிரியர் வலியுறுத்துகிறார்.