தமிழில் சிறு பத்திரிகைகள்/மகாநதி



34. மகாநதி


'சோஷலிஸ்டு எதார்த்தவாதம் உண்மையான நிலைக்கண்ணாடியைப் போல, வாழ்க்கையை மானசீகமாக அல்ல, தூலமாகக் காட்டுகிறது. வாழ்க்கையைச் சரித்திர பூர்வமாக உருவாகி வரும் சமுதாய அமைப்பிலும் அதன் பல்வேறு புரட்சிகரமான வளர்ச்சிகளிலும் காட்டுகிறது. சோஷலிஸ்டு எதார்த்தவாதம் மனித வர்க்கம் முழுமைக்கும் மனித வாழ்வின் சகல துறைகளிலும் சோஷலிச உணர்வுடன் பயிற்சி அளிக்கிறது.'

ப. ஜீவானந்தம் வலியுறுத்திய இக்கருத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் நடந்தது 'மகாநதி', மதுரையிலிருந்து வெளிவந்த 'இருமாதம் ஒரு முறை' கலை இலக்கிய வெளியீடு இது. 1970 களின் இறுதிக் கட்டத்தில் பிரசுரமான இந்த முற்போக்கு இதழின் ஆசிரியர் பரிணாமன். மதுரையில் உள்ள முற்போக்கு இலக்கியவாதிகள் குழுவாகச் செயல்பட்டு, மகாநதியை ஒரு தரமான இலக்கியப் பத்திரிகையாக உருவாக்கி வந்தார்கள்.

'தமிழ் இலக்கியத்தில் முற்போக்குத் திசைவழியில் பார்க்கவும் படைக்கவும் நமக்குக் கற்றுக் கொடுத்தவர் ஜீவா. இலக்கியத்திலும் நல்லது, நசிவு என்று பிரித்துப் பார்க்கவும், நல்லது, மக்கள் இலக்கியமாக, மகா நம்பிக்கைவாதக் கண்ணோட்டத்தைப் பெறவும் நமக்குக் கிடைத்த ஆதர்சம். ஜீவாவிடம் நாம் பெற்ற சொத்து. ஜீவாவிடம் பெற்ற ஜீவதாகங்கள் ஆங்காங்கே வேரூன்றி மரமாகி, காய்த்துக் கனிந்து, மீண்டும் விதை பரப்பும் பக்குவம் பெற்றிருப்பது மறைக்க முடியாத உண்மை. மகாநதியின் தோற்றத்திற்கு அதுதான் காரணம்.'

இப்படி நன்றி உணர்வோடு ஆசிரியர் குழுவினர் ஓராண்டு நிறைவுற்றதும் அறிவித்தார்கள். மேலும் பெருமையோடும் திருப்தியோடும் அவர்கள் தெரிவித்திருப்பது இது—

‘மத்தியதர வர்க்கத்தினருடன் கூடவே உழைக்கும் மக்கள் மத்தியிலும் அழகியல் உணர்வுடன் படைக்கும் ஆற்றல் பெற்ற படைப்பாளிகள் வளர்ந்துவிட்டதும் உழைப்பாளி மக்களிடமிருந்து புறப்படும் எழுத்தாளர்களை இரண்டாம் தரமாக நோக்க முடியாத நிலையும் முற்போக்கு இலக்கிய இயக்கம் பெற்ற வெற்றி. இந்த வெற்றியைப் பரந்த அளவில் மேலும் கொண்டு செல்வது, அளவிடற்கரிய பணியானாலும், அதில் ஒரு சில துளிகளை மகாநதி தனது ஆறு இதழ்களில் நிறைவேற்றியிருக்கிறது என்று பெருமைப்படுகிறது. எத்தனை அம்சங்கள் என்று பார்ப்பதை விட, எப்படிப்பட்ட அம்சங்கள் அரங்கேறி இருக்கின்றன என்று பார்த்தால் இப்பெருமை துலாம்பரமாகும்.’

இது நியாயமான பெருமையே ஆகும். மகாநதி தரமான சிறுகதைகளையும், பயன் நிறைந்த சிந்தனைக் கட்டுரைகளையும் பிரசுரித்துள்ளது.

சமுதாயப் பார்வையுடன் அழகியல் உணர்வும் கொண்ட தன்மையில், ரசனைக்கு உரிய நல்ல கதைகளை சகுந்தலை என்ற பெயரில் எழுதியவர் படைத்திருக்கிறார். 'சூழலூதி வருவான் குமிந்தன்', 'தேவனே தேவனே', 'ஜென்மபூமி' ஆகியவை குறிப்பிடப்பட வேண்டியவை.

மற்றும், கொ. மா. கோதண்டம் எழுதிய 'மலைக்காட்டிடையே ஒரு மாட்டுக் கிடை'. பெரிய தனக்காரர்களின் மாடுகளை மலைமீது பாதுகாத்து வளர்க்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை விரிவாக வர்ணிக்கும் கதை, இராகுலதாசனின் தாய் போன்ற நல்ல கதைகளை மகாநதி வெளியிட்டிருக்கிறது.

கட்டுரைகள் விஷயத்தில் மகாநதி மிகுந்த அக்கறை காட்டி, பல் முக்கியமான பிரச்னைகளை அலசியிருக்கிறது. வட்டார இலக்கியம் சம்பந்தமான ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்தவை.

‘வட்டார இலக்கியம் எனும் பாகுபாடு' என்ற தலைப்பில் தி. சு. நடராசன் எழுதியதும், 'படைப்பிலக்கியத்தில் வட்டார வழக்கும் கிராமமும் நமது தேசிய ஜனநாயக மரபும்' என்ற நவபாரதி கட்டுரையும் தற்கால இலக்கிய முயற்சிகளை அறிமுகம் செய்வதோடு, வட்டார வழக்கின் தன்மைகள் குறித்தும் ஆழமாகச் சிந்தித்துள்ளன. வட்டார வழக்கு, கொச்சை எல்லாம் மொழிவளம், உள்ளடக்கம் என்பதைக் கூர்மைப்படுத்துவதற்குத்தானே ஒழிய, அவற்றை மழுங்கடிக்க அல்ல' என்று நவபாரதி தன் கட்டுரையில் அழுத்தமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

கட்டுரை மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டன. மாயகோவ்ஸ்கி கவிதை பற்றிய சோவியத் அறிஞர்கள் பலரின் கருத்துக்கள், காலமும் கலைஞனும் என்ற செக்கோஸ்லாவேகியக் கட்டுரை கமலேசுவரின் இந்திக் கட்டுரைகள், நாவலின் மொழிநடை குறித்து எம். பக்தின் எழுதியது-இவை 'மகாநதி' யில் வந்துள்ளன.

இலக்கியப் பத்திரிகை செய்ய வேண்டிய ஒரு முக்கிய காரியத்தை மகாநதி தவறாமல் செய்து வந்திருப்பதைப் பாராட்ட வேண்டும். வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய நல்ல புத்தகங்களை விரிவான கட்டுரைகள் மூலம் அது அறிமுகம் செய்தது.

உருபுவின் நாவல் 'சுந்தரிகளும் சுந்தரன்மார்களும்', இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் ‘நந்தன் கதை', இன்குலாபின் 'வெள்ளை இருட்டு', சிற்பியின் 'சர்ப்பயாகம்', தமிழவனின் 'புதுக்கவிதை பற்றிய நாலு கட்டுரைகள்', ஐசக் அருமைராசனின் 'கீறல்கள்', வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்', ராஜம் கிருஷ்ணனின் 'அலைவாய் கரையில்' ஆகியவை பற்றிய கட்டுரைகள் அப் படைப்புகள் குறித்து அறிந்து கொள்ள உதவும்.

நல்ல திரைப்படங்கள் குறித்தும் விரிவான கட்டுரைகளை 'மகாநதி’ வெளியிட்டது. போலந்து திரைப்படம், ஆந்த்ரேவாய்தாவின் 'தி பிராமிஸ்ட் லேண்ட்', தெலுங்கு திரைப்படம், மிருணாள் ஸென்னின் 'ஒரு ஊரின் கதை' ஆகியவை முக்கியமானவை.

இந்த 'இரு மாதம் ஒருமுறை' இலக்கிய இதழ் அதிகமான கவிதைகளையும் வெளியிட்டது. ‘கவிஞன் உலகின் எதிரொலி; தன்னுடைய சொந்த ஆத்மாவின் அழுகுரல் அல்ல' என்ற மாக்சிம் கார்க்கியின் கூற்றைத் தனது கவிதைக் கொள்கையாகக் கொண்டு, சமுதாயப் பார்வையுடன் கூடிய புதுக் கவிதைகளையே இது பிரசுரித்தது. பரிணாமன், பொன்மணி, கே. சி. எஸ். அருணாசலம், சூர்யகாந்தன் உள்ளிட்ட பல கவிஞர்கள் தங்கள் படைப்புகளினால் மகாநதிக்கு உயிர்ப்பும் உணர்வும் அளித்தார்கள்.

புதுமைக் கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்ற நோக்குடன் பரிணாமனும் மற்றும் சிலரும் நாட்டுப் பாடல் பாணியில் கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். புதிய தாலாட்டு ஒன்றிரண்டையும் மகாநதி பிரசுரித்திருக்கிறது.

'ஒரு தொலைநோக்கு கொண்ட இதழ்' என்ற தன்னடக்கமான பெருமையுடன், தேசிய-சர்வதேசிய உள்ளடக்கம் நிறைந்ததுதான் தேசிய வாழ்வு என்ற பொறுப்புணர்ச்சியுடன், தேசிய வாழ்வில் இலக்கியத்திற்கும், கலை, கலாச்சாரத்திற்கும் பங்கு உண்டு என்ற அந்தரங்க சுத்தியுடன் செயல்பட்ட 'மகாநதி' தரமான முற்போக்கு இலக்கிய இதழாகத் திகழ்ந்தது.

இதுபோன்ற ஒரு பத்திரிகை இன்றும் தேவைதான். ஆனால், மகாநதி ஒன்பது இதழ்களோடு மறைந்து விட்டது.