தமிழில் சிறு பத்திரிகைகள்/மணிக்கொடி
காரைக்குடியிலிருந்து 1930 களில் 'ஊழியன்' என்ற பத்திரிகை வந்து கொண்டிருந்தது. 'ராய. சொ.' அதன் ஆசிரியர் ( ராய. சொக்கலிங்கம் அவரது முழுப் பெயர்). பெரிய அளவில் நடந்து கொண்டிருந்த பத்திரிகை அது. பத்திரிகையின் சைசும் பெரிதுதான்.
ஈ. சிவம் என்பவர் 'ஊழியன்' துணை ஆசிரியராகப் பணியாற்றினார். ஒரு சந்தர்ப்பத்தில், புதுமைப்பித்தன் 'ஊழியன்' பத்திரிகையில் வேலை பார்ப்பதற்காகப் போய்ச் சேர்ந்தார். ஆனால், சீக்கிரமே சென்னைக்குத் திரும்பிவிட்டார். 'ஏன் ஊழியன் வேலையை விட்டுவிட்டீர்கள்?' என்று நண்பர் கேட்டபோது, ஈ. சிவம் எறும்பு சிவம் ஆக அரித்துப் பிடுங்கிவிட்டார். என்னால் ஊழியனில் வேலை பார்க்க முடியவில்லை' என்று டி. பி. சொன்னார்.
ரகுநாதன் எழுதிய 'புதுமைப்பித்தன் வரலாறு' நூலில் இத்தகவல் காணப்படும்.
கு.ப. ராஜகோபாலனும் சில பத்திரிகைகளில் பணிபுரிந்து பார்த்தார். ந. பிச்சமூர்த்தி அந்தக் காலத்திய பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தார். இப்படி, ஆர்வமும் உற்சாகமும், உழைப்பும் ஊக்கமும் பெற்றிருந்த எழுத்தாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற தகுதியான ஒரு அரங்கத்தைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு, தக்க தருணத்தில் காலம் அமைத்துக் கொடுத்த இலக்கிய அரங்கம் ஆயிற்று, கதைக் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட * மணிக்கொடி' என்ற மாதம் இருமுறை வெளியீடு.
அரசியல் மற்றும் சமூக விஷயங்களுக்கும், கட்டுரைகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வந்த 'மணிக்கொடி' வாரப் பதிப்பு 1935 ஜனவரியில் நின்று விட்டது. பி. எஸ். ராமையா தீவிரமாக முயன்று, 1935 மார்ச் மாதம் முதல் 'மணிக்கொடி'யை மாதம் இருமுறை பத்திரிகையாகக் கொண்டு வந்தார்.
மணிக்கொடி வார இதழ் பெரிய அளவில் வந்து கொண்டிருந்தது. கதைப் பத்திரிகை புத்தக வடிவம் ஏற்று, { டிம்மி சைஸ், கலைமகள் அளவு) ஆர்ட் அட்டை, பல வர்ண அட்டைச் சித்திரம் எல்லாம் கொண்டு வெளிவந்தது.
மணிக்கொடி வாரப் பத்திரிகையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டி. எஸ். சொக்கலிங்கம் அந்நாட்களில் 'காந்தி' என்றொரு பத்திரிகை நடத்தினார். 'சுதந்திரச் சங்கு' மாதிரி காலணாப் பத்திரிகை. அரசியல் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விஷயங்கள் அதில் வந்தன. இதரரகக் கட்டுரைகளும் கதைகளும் உண்டு. அந்த 'காந்தி' மணிக்கொடியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மணிக்கொடியின் ஒவ்வொரு இதழிலும் அச்சிடப்பட்டு வந்தது.
மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் போக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய வாரப் பதிப்பின் தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைப் பத்திரிகையின் முதல் இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.
இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி', சி. சு. செல்லப்பாவின் ‘ஸரஸாவின் பொம்மை', பி. எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன.
தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும், 'மணிக்கொடி' தோன்றியுள்ளது என்று பி. எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தச் சாதனையை மணிக்கொடியின் பிந்திய இதழ்கள் செய்து காட்டின. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி. சு. செல்லப்பா, மௌனி ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி. ரா. எம். வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா. ச. ராமாமிர்தம் முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு. . பிச்சமூர்த்தியின் 'தாய்' என்ற கதையைப் பிரசுரித்தது பற்றிக் குறிப்பிடும்போது, பி. எஸ். ராமையா இவ்வாறு எழுதுகிறார்-
'பிச்சமூர்த்தியின் தாய் என்ற கதை மிகமிக உயர்ந்த தரத்தில் உள்ளது. அந்தத் தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே மணிக்கொடி கதைப் பதிப்பு முயற்சி ஒரு சாதனையாக நிறைவு பெற்றுவிட்டது என்பது என் கருத்து. மணிக்கொடி காலம் என்பதற்கு அந்த மாதிரி இலக்கியத்தரமான கதைகள் எழுதப்பட்ட ஒரு காலகட்டம் என்று பொருள் கொள்ளலாம் என்று தோன்றுகிறது ( மணிக்கொடி காலம் ).
‘மணிக்கொடி' வெளிவந்த காலத்தில் இதர பத்திரிகைகளும் சிறு கதைகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருந்தன. வெற்றிகரமாக வளர்ந்து கொண்டிருந்த 'ஆனந்த விகடன்' கதைகளுக்கு அதிக இடம் அளித்தது. கட்டுரைகள், ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த கலைமகள் ஒவ்வொரு இதழிலும் சில கதைகளைப் பிரகரித்தது. நாளிதழ்களும் மற்றுமுள்ள பத்திரிகைகளும் கதைகளுக்கு வரவேற்பு அளித்தன. ஆனாலும், மணிக்கொடி போன்ற தனித்தன்மை உள்ள ஒரு பத்திரிகை காலத்தின் தேவையாக இருந்தது.
இது குறித்துப் புதுமைப்பித்தன் ஆண்மை என்ற சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்-
‘மணிக்கொடி பத்திரிகையானது வெளிவரும் முன்பு எத்தனையோ இலக்கியப் பத்திரிகைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால், புதிய பரிசீலனைகளுக்கு இடம் கொடுக்கும்- உற்சாகம் ஊட்டும் வரவேற்கும்பத்திரிகைகள் அதற்கு முன்போ பின்போ கிடையாது.
‘ஆனந்த விகடன்' மூலம், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இன்பமூட்டும் சிறுகதைகளை- வாழ்க்கையின் மேலோட்டமான அம்சங்களை இனிமையாக, அழகாக, சந்தோஷம் தரும் விதத்தில் சித்திரிக்கும் ஆழமற்ற கதைகளை- பிரபலப்படுத்தி வந்தார். ‘கலைமகள்' மிதவாத நோக்குடன் கதைகளைப் பிரசுரித்து வந்தது.
உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் நன்கு அறிந்திருந்த திறமையாளர்கள் இலக்கியத்தரமான சிறுகதைகளை- கதைக்கலையின் பல்வேறு தன்மையான படைப்புகளை- வாழ்க்கையின் அடிமட்டம் வரை ஆழ்ந்து அலசிப் பார்த்து உண்மைகளை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் சிருஷ்டிகளை- பலரகமான உணர்ச்சி வெளிப்பாடுகளை எல்லாம் ஆழமாகவும் அழுத்தமாகவும் தமிழிலும் உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இத்தகைய புது முயற்சிகளுக்கு மணிக்கொடி இடம் அளித்தது.
பிற்காலத்தில் மணிக்கொடி கோஷ்டி என்று இலக்கிய வட்டாரங்களில் குறிப்பிடப்பெறுவது சகஜமாயிற்று. ஆயினும், மணிக்கொடி காலத்தில் அப்படி ஒரு கோஷ்டி (குழு) ஆக எழுத்தாளர்கள் இயங்கியதில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
மணிக்கொடியில் எழுதியவர்கள் ஒரே விதமான இலக்கியக் கொள்கையோ, நோக்கும் போக்குமோ கொண்டிருந்தவர்கள் அல்லர், ஒரே தரத்தினரும் இல்லை. அவர்களுக்கிடையே கருத்து வேற்றுமை அதிகமாகவே இருந்தது. அதை வேகத்தோடு வெளியிடவும் அவர்கள் தயங்கியதில்லை. ஆனால், அவர்கள் உலக இலக்கியத்தின் சிறுகதை வளத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள். அதே தரத்தில் தமிழிலும் சிறுகதைகள் வரவேண்டும் என்ற தீவிர வேட்கை கொண்டவர்கள். ஆர்வமும் எழுத்து அனுபவமும் இலக்கிய ருசியும் உடையவர்கள். தமிழ் இலக்கியம் மறுமலர்ச்சி பெறவேண்டும் என்ற எண்ணத்திலும் அதற்காக உற்சாகமாக உழைப்பதிலும் அவர்கள் ஒத்த மனம் உடையவர்களாக இருந்தார்கள்.
'மணிக்கொடி’க்கு பி. எஸ். ராமையா ஆசிரியர். கி. ரா. (கி. ராமச்சந்திரன்) துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுமைப்பித்தன் ராமையாவின் மணிக்கொடிக்கு அதிக ஒத்துழைப்புத் தந்துள்ளார். புத்தக மதிப்புரைகள் எழுதினார். இலக்கிய விவாதங்களைக் கிளப்பினார்.
இலக்கியப் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட கருத்துப் பரிமாறலுக்கு 'யாத்ரா மார்க்கம்' என்ற பகுதி பெரிதும் உதவியது.
நேரடி மொழிபெயர்ப்பு நல்லதா, தழுவி எழுதுவது சரியா?- என்ற விவகாரம் இப்பகுதியில் சுவாரஸ்யமான விவாதமாக நடந்தது குறிப்பிடத்தகுந்தது. புதுமைப்பித்தன், கி. ரா., கு. ப. ராஜகோபாலன், ந. சிதம்பர சுப்பிரமணியன், க. நா. சுப்ரமண்யம் ஆகியோர் இந்தச் சர்ச்சைக்குச் சூடும் சுவையும் அளித்தனர் ( இந்த விலாதக் கட்டுரைகளை, மதுரையிலிருந்து வெளிவந்த 'வைகை' என்ற சிறுபத்திரிகை 1980-ம் வருடம் அதன் 27, 28 -ம் இதழ்களில் மறுபிரசுரம் செய்துள்ளது).