தமிழில் சிறு பத்திரிகைகள்/முற்போக்கு இலக்கிய இதழ்கள்‌



29. முற்போக்கு இலக்கிய இதழ்கள்


முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிறு பத்திரிகைகள் பல 1970 களில் தோன்றின. அவை நீடித்து வெகுகாலம் வளர முடிந்ததில்லை. சில பத்திரிகைகள் தொடர்ந்து காலம் தவறாது பிரசுரம் பெற்றதுமில்லை. நின்று போவதும், திடீரென்று மறுபடியும் தோன்றுவதும் மீண்டும் மறைவதுமாக அவற்றின் வாழ்க்கையே பெரும் போராட்டமாகத்தான் அமைந்திருந்தது.

அவற்றின் முக்கியமான சிலவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கோள்ளலாம்.

இளவேனில் நடத்திய 'சிவப்பிலக்கிய மாத இதழ்'.

இளவேனில் கவிஞர். ஓவியர். மார்க்சிஸ்ட் சிந்தனையாளர். இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பற்றுக்கொண்டவர். 'கோபம் கொண்ட இளைஞர்'. உணர்ச்சி வேகமும் கருத்து ஓட்டமும் விறுவிறுப்பும் நிறைந்த உரைநடை எழுதக்கூடிய திறமைசாலி.

இந்தப் பண்புகள் அனைத்தும் 'கார்க்கி' இதழில் பிரதிபலித்தன.

‘வாளோடும் தேன்சிந்தும்
மலரோடும் வந்திருக்கும்
நானோர் கோபாக்கினி
நானோர் இளவேனில்'

என்று முழக்கமிட்டவர், கார்க்கி ஏட்டில் இவ்வாறு பிரகடனப்படுத்தி வந்தார்-

‘சமூகக் கொடுமையும் இலக்கியமும் மோதும்போது நாம் இலக்கியத்தின் பக்கம் நிற்போம். இலக்கியமும் மனிதனும் மோதும்போது நாம் மனிதனின் பக்கம் நிற்போம்'.

மார்க்சியக் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகளை கார்க்கி வெளியிட்டது. முற்போக்கு எழுத்தாளர்களில் பலர் அவ்வப்போது எழுதியுள்ளனர். உலக இலக்கியப் பிரச்னைகளிலும் அக்கறை காட்டியது.

சோவியத் ரஷ்ய எழுத்தாளர் பாஸ்டர்நாக்கிற்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது, அது பலவிதமான சர்ச்சைகளைக் கிளறிவிட்டது. 'பாஸ்டர்நாக்கும் நோபல் பரிசும்' சம்பந்தமான கட்டுரை ஒன்றை ‘கார்க்கி' பிரசுரித்தது.

அதேபோல ஸோல்லெனிட்ஸின் என்ற ரஷ்யப் படைப்பாளிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோதும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் பரவலாக நிலவின. ஸோல்ஸெனிட்ஸின் பற்றியும், அவருடைய படைப்பு, பாத்திரமும் குறித்தும் 'கார்க்கி' கட்டுரைகள் வெளியிட்டது.

‘இலக்கியம் பற்றிய லெனினியக் கொள்கை', 'எங்கள் சகாப்தத்தின் மகாகவி மயாகோவ்ஸ்கி', 'இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துக்கள்', 'புரட்சிக் கவிஞன் பெட்டோபி' ( ஹங்கேரியக் கவிஞன் - இப்படி கனமான விஷயங்களைப் பிரசுரிப்பதில் 'கார்க்கி' ஆர்வம் கொண்டிருந்தது.

‘சுதந்திரத்திற்குப் பிந்திய தமிழ் இலக்கியம்' குறித்து 'கார்க்கி' காரசாரமாக விமர்சித்தது. 'மனிதாபிமானி என்கிற கட்டத்தைத் தாண்டி வர்க்க எழுத்தாளராய் உயரும்போது' தான் ஒரு படைப்பாளி உண்மையான இலக்கியவாதி ஆகிறான். 'ஏனென்றால், வர்க்கத் தன்மை இல்லாத சுத்தமான இலக்கியம் என்று ஏதாவது உண்டா என்ன?' என்று இளவேனில் அழுத்தமாக அறிவித்தார்.

கவி பாரதியை அவர் அங்கீகரிக்கவில்லை. பாரதி பற்றிக் கடுமையாகவும், ஆத்திரத்தோடும் அவர், கோளாறும் குறைபாடும் நிறைந்த கருத்துக்களை வலியுறுத்தியிருக்கிறார்.

'சோஷலிச இந்தியாவில் முற்போக்குக் கவிஞன் என்று கதைக்கப்படும் பாரதி' என்றும்,

‘இந்தியாவின் சகல வர்க்கங்களும் தீபாராதனை நடத்துகிற மகாமகா-மகாகவி பாரதியின் இமாலயப் படைப்புக் கூட, பாட்டாளி வர்க்கத்திற்காக இப்போதுதான் பேனா பிடிக்கிற ஒரு நர்ஸ்ரிக் கவிஞனின் நாலாந்தரக் கவிதைக்கு முன் குப்பை என்று மிகுந்த ஆரவாரத்துடன் சொல்வோம்’ என்றும் 1972-ல் இளவேனில் எழுதியிருக்கிறார்.

இது எவ்வளவு அபத்தமான கருத்து என்பதைத் தரமான கவிதை ரசிகர்கள் எவரும் உணர முடியும்.

தனது நோக்கு சரியானது என்றும் அவர் வாதாடுகிறார்.

‘பாரதியார் பற்றி அசட்டுத்தனமான அல்லது ஈவிரக்கமற்ற த்வனியில் விமர்சிக்கிறேன் என்கிறார்கள். இந்தத் தாக்குதல் இந்த நேரத்தில் அவசியமானதென்று நான் கருதுகிறேன். பாரதி என்கிற மனிதனை நாம் இழந்துவிட விரும்பவில்லை. ஆனால் பாரதி என்கிற கவிஞன் ஒரு சித்தாந்தவாதி. அவனுடைய சித்தாந்தம் கம்யூனிசத்துக்கெதிரான நோய்க் கிருமி. இந்த விஷக்கிருமியை நாம் எப்படி விழுங்கிக் கொள்ள முடியும்?

பாட்டாளி வர்க்க இலக்கியத்தை உருவாக்க வேண்டுமென்றால், பழைய இலக்கியங்கள் அனைத்தையும் மோதியே தீரவேண்டும். மலத்திலே நெல் கிடப்பது மாதிரி பழைய இலக்கியங்களில் சில முற்போக்குக் கருத்துக்கள் இருக்கலாம். அதற்காக மலக் குழிகளை அளைந்து கொண்டிருப்பது அபத்தமான காரியம். நாம் இந்தக் குழிகள் மேடுகளை யெல்லாம் பரம்படிப்போம். பரம்படிக்கப்பட்ட அந்தக் கம்யூனிஸ் நிலத்தில் நெற்கதிர்களை மலைமலையாய் அறுவடை செய்வோம்.’

'இப்படி முழுக்க முழுக்க வர்க்கத் தன்மையும் மார்க்ஸியப் பார்வையும் கொண்ட போக்குடன் இளவேனில் 'கார்க்கி' யை நடத்தினார். சிரமங்களோடுதான். அடிக்கடி பத்திரிகை வராமலே போனது.

நீண்ட ஒரு இடைக்காலத்துக்குப் பிறகு, 'கார்க்கி' யின் அளவைச் சுருக்கி, ஒவ்வொரு மாதமும் ஒரு தனி விஷயத்தைக் கொண்ட சிறு வெளியீடு ஆகப் பிரசுரிக்க முனைந்தார் அவர். இதை 'கார்க்கியின் தொடர் வெளியீட்டியக்கம்' என்று அறிவித்தார்.

‘இது பத்திரிகையல்ல. ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றியதாக இருக்கும். இந்த இதழ் நெருடாவைப் பற்றிய சிறு அறிமுகம். அடுத்த இதழ் மார்க்ஸ் என்னும் இலக்கியவாதி. அப்புறம் ஷேக்ஸ்பியர், பிரெஞ்சுப் புரட்சியும் இலக்கியமும் என்று இது மாதிரி தொடரும்' என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆசை நிறைந்த திட்டமும் பூரணமாக வெற்றி பெறவில்லை.

1981-ல் மீண்டும் 'கார்க்கி' புதிய வடிவத்தோடும் புது வேகத்தோடும் தலைகாட்டியது. இலக்கியம், அரசியல் ஆகியவற்றுடன் சினிமா, நாடகம் ஆகியவற்றிலும் அக்கறை செலுத்த முனைந்தது. இத்தன்மையிலும் அது தொடர்ந்து வர இயலாது போயிற்று. பிறகும், கார்க்கி அவ்வப்போது வெளிவருவதும், சில இதழ்களோடு நின்று போவதும் ஒரு வழக்கமாகிவிட்டது. இம் முயற்சிகள் இளவேனில் ஆர்வத்தையும் ஆற்றலையும் புலப்படுத்துவனவாகும்.

பிரச்னை

‘சாதாரணத் தொழிலாளிகள் சில பேர் சேர்ந்து' வெகு ஜனங்களை எட்டக் கூடிய வகையில்- தொழிலாளர்களும் விவசாயிகளும் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன்- முற்போக்கு மாதமிருமுறை பத்திரிகை ஒன்றை நடத்தினார்கள். முதலில் அதன் பெயர் 'பிரச்னை' என்று இருந்தது.

ஆரம்பத்தில் ஆசிரியர்கள் : ஆர். சாம்பசிவம், எஸ். இசக்கிமுத்து என்று அறிவிக்கப்பட்டது. சில இதழ்களுக்குப் பிறகு தெ. சண்முகம் ஆசிரியர் என்றும், முந்திய இருவரும் இணை ஆசிரியர்கள் எனவும் அறிவித்தார்கள்.

முதல் இதழ் 1972 அக்டோபரில் வெளிவந்தது. 10வது இதழ் முதல் அது பெயர் மாற்றம் பெற்றது. பிரச்னை 'உதயம்' ஆயிற்று.

‘இலக்கியம் என்பது வாழ்க்கையிலிருந்து தோன்றியது. வாழ்க்கையைக் கண்டு சொல்வது. வாழ்க்கையைக் கண்டு சொல்வதோடு நின்று விடாது, அதை மாற்றியமைக்கவும் தூண்டுவது. புதிய வாழ்க்கைக்கு உட்படுத்துகிறது' என்ற அடிப்படையில் கதைகள், கவிதைகள், கட்டுரைகளை இந்த ஏடு வெளியிட்டது. சமூகப் பிரச்னைகள், அரசியல் விஷயங்கள், கலை மற்றும் இலக்கிய விஷயங்கள் பற்றி எளிய நடையில் விளக்கமாகவும் தெளிவாகவும் கருத்துக்களை எடுத்துக்கூறியது.

அஸ்வகோஷ் (ஏ. ஜி.) கதைகள், கவிதைகள், கட்டுரைகள் அதிகம் எழுதினார்.

மாவேலி ஜாப்ஸன், ஆத்மாநாம், அக்கிணிபுத்திரன் முதலிய பலரும் இதில் கவிதைகள் எழுதியுள்ளனர்.

வியாபார நோக்குடன், லாபத்தையே கருத்தில் கொண்டு, நடத்தப்படுகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகளின் போக்கை- வாசகர்களின் மனசையும் பண்பையும் கெடுக்கக் கூடிய தரக் குறைவான எழுத்துக்களையும் சித்திரங்களையும் வெளியிடும் இயல்பை-1970 களிலேயே பிரச்னை-உதயம் வன்மையாகக் கண்டித்தது.

இன்றைய வாரப்பத்திரிகை சினிமா, அரசியல் அனைத்தும் மாறியாக வேண்டும்-மாற்றப்பட வேண்டும்- என்ற கருத்தை வலியுறுத்திய இச்சிற்றேடு சிந்தனைக்கு உரிய ஒரு எண்ணத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொன்னது-

'நமக்கென்று ஒரு அடிப்படையான சிந்தனை உருவாகும்போது தான் நாம் மாறுவோம். இந்த அடிப்படை சிந்தனைகளோடு நாம் இந்த வாரப் பத்திரிகைகளையும் சினிமாவையும் அண்டத் தெரிந்துகொண்டு, அதன் சுயரூபம் என்னவென்று புரிந்துகொண்டு, அதையெல்லாம் எதிர்த்துப் போராடத் தொடங்கும் போதுதான் இந்த வாரப் பத்திரிகைகள் மாறும், சினிமா மாறும்.'

பட்டறையில் உழைத்து சராசரி இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் தொழிலாளர் சில பேர் சேர்ந்து, மாதம் தலா இவ்வளவு ரூபாய் என்று பணம் போட்டு, பலவிதமான சிரமங்களையும் பொருட்படுத்தாமல் கடுமையான உழைப்பை பத்திரிகையின் வளர்ச்சிக்காகவும் ஈடுபடுத்தி வந்த ஆர்வமும் செயலும் மிகுந்த பாராட்டுதலுக்கு உரியன.

தற்போதைய காலகட்டத்தில் நம் பக்கத்து- சமூகப் பொறுப்பு வாய்ந்த- எழுத்தாளர்களின் வேலை எழுதுவதுடன் இருந்துவிட்டால் போதாது. நம்முடைய எழுத்து இடம் பெற ஒரு பத்திரிகை வேண்டும். பத்திரிகை ஆரம்பிப்பது சுலபமல்ல, கணிசமான பண வசதி இதற்குத் தேவைப்படுகிறது. இந்தப் பணத் தேவையையும் அடைந்து பத்திரிகை வெளிவருகிறது என்றால், பத்திரிகையின் குறிக்கோளுக்குரிய மக்களின் இடையில் பத்திரிகை செல்லவும், தொடர்ந்து வெளிவருவதற்கான பொருளாதார வசதியும் இலக்கியப் படைப்புக்களும் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. அதே சமயத்தில் நாம் எதிர்க்க வேண்டியவர்க ளின் பிரமாண்டமான வசதிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் உதயம் சம்பந்தப்பட்டவர்கள் அறிவுறுத்திக் கொண்டார்கள்.

இவ்வாறெல்லாம் சிந்தித்துத் திட்டமிட்டு நிதானமாகச் செயல்படக் கூடியவர்கள் கூட்டுறவு உணர்வுடன் நடத்திய போதிலும் உதயம் பேரா தரவு பெற்று நீடித்து வாழ வழியேற்படவில்லை இந்த நாட்டில்.

சகாப்தம்

இது ஒரு 'இலவச இலக்கிய வெளியீடு'. இலக்கியப் பத்திரிகையான ‘கணையாழி' யின் வடிவத்தில் 24 பக்கங்களோடு வெளிவந்தது. முதல் இதழ் 1977 செப்டம்பரில் பிரசுரமாயிற்று. அச்சிட்டு வெளியிடுபவர் க. பாலசுப்பிரமணியன்' என்று திருச்சி விலாசம் அச்சிடப்பட்டிருந்த போதிலும், சகல தொடர்புகளுக்கும் கலாமணி என்ற எழுத்தாளரின் சென்னை விலாசம்தான் கொடுக்கப்பட்டது.

'ஏதோ, உலகைப் புரட்டிவிடுகிற ஒரு பெரிய காரியத்தைச் செய்து முடித்துவிடுவோம் என்கிற பிரமை எங்களுக்கில்லை. ஆனால், அத்தகைய ஒரு பெரிய காரியத்துக்குத் தூண்டுகோல்களாய் இருக்க முடியும் என்கிற சிறிய நம்பிக்கை எங்களுக்கு நிறைய உண்டு.

வியாபார ரீதியில் இதை ஒரு பத்திரிகை ஆக்குவது எங்கள் நோக்கமல்ல. எண்ணற்ற புதிய இளம் தலைமுறை எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து இலக்கிய உலகில் ஒரு புதிய சகாப்தத்திற்கான முன்னுரையை எழுதிவிட வேண்டும் என்பதுதான் எங்களின் இதயத் துடிப்பு'

இவ்வாறு 'ப்ரிய நெஞ்சங்களே' என விளித்து அறிமுகவுரை எழுதிய நண்பர்கள் தங்களைப் பற்றித் தன்னம்பிக்கையோடு நாவலித்த வரிகள் இவை_

'ஒரு சகாப்தம் தொடங்கிவிட்டது !

நாங்கள். . .

நிழல்களின் வசீகரங்களிலேயே மூழ்கிக் கிடக்கும் கனவுலகப் பிரஜைகள் அல்ல.

நிஜங்களின் போராட்டங்களை- அதன் நியாயங்களை கவிதாலங்காரத்தோடு பாடுகின்ற மண்ணின் புத்திரர்கள்-மக்களின் பிரதிநிதிகள்.

இளம் உள்ளங்களில் விஷம் துவும் நசிவு இலக்கியத்தின் எதிரிகள் !

அத்தகைய காமசூத்திரப் படைப்புகளைக் கலாகோபத்தோடு விமர்சிப்போம். சமூகக் கொடுமைகளை, அதன் சீரழிவுகளை, கவித்வ ரோஷத்தோடு கடுமையாய்ச் சாடுவோம்.

முகாரிகளின் மூல காரணங்களை எடுத்துச் சொல்லி, நீலாம்பரியில் நித்திரை புரியும் நெஞ்சங்களைத் தட்டியெழுப்புவோம்

எங்க ள் இதய வீணையின் இன்றைய ராகங்கள், நாளை பொன்னுலகின் விடியலில் பூபாளமாய் எதிரொலிக்கும் !

எங்கள் இலக்கு மிகவும் உன்னதமானது. எங்கள் பயணம் மிகவும் புனிதமானது. எங்கள் பாதை மிகவும் கரடுமுரடானது. எங்கள் பார்வையோ மிகவும் தெளிவாயிருக்கிறது.

நாங்கள் பயணம் தொடங்கிவிட்டோம். இலக்கிய வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது.

நாங்கள் : கலாமணி, மீராதாசன், ஜீவுகன், கார்க்கியன், பார்த்திபன்'.

சகாப்தம் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் உரிய தரமான பத்திரிகையாக வளர்ந்தது. இலக்கியவாதிகள், ரசிகர்கள் பலரும் அதன் இதழ்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள். கலாமணி ஆற்றல் உள்ள எழுத்தாளராகத் தெரியவந்தார்.

6-வது இதழ் முதல் அது 'மக்கள் சகாப்தம்' என்று பெயர் மாற்றம் பெற்று, 50 காசு விலையில், விற்பனைக்குரிய ஒரு பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியது.

பெயர்பெற்ற எழுத்தாளர்கள் சிலரும், திறமையை நிரூபிக்க முயன்றுகொண்டிருந்த இளைய எழுத்தாளர்கள் பலரும் அதில் எழுதினார்கள். அதன் 10-வது இதழ் கவிதைச் சிறப்பிதழாகத் தயாராயிற்று.

'சகாப்தம்' அவ்வப்போது புத்தக விமர்சனம், திரைப்பட விமர்சனம், இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய அபிப்பிராயங்கள் ஆகியவற்றையும் வெளியிட்டது.

முதல் ஆண்டில் பத்து இதழ்களைக் கொண்டு வந்த சகாப்தம், இரண்டாம் வருஷத்தின் முதலாவது இதழை 1978 ஏப்ரல் மாதம் வெளியிட்டபோது, அந்த ஆண்டில் மேலும் 4 இதழ்கள் மட்டுமே பிரசுரமாகும் என்று மாதக் கணக்கிட்டு அறிவித்தது.

அந்தத் திட்டம்கூட நிறைவேறவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.