தமிழில் சிறு பத்திரிகைகள்/விழிகள்‌



24. விழிகள்


மதுரை, விழிகள் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெற்ற சிறு பத்திரிகையான 'விழிகள்' 1976-ல் தோன்றியது. 'இது தொட்டுக் கொள்ளத் துடிக்கும் வடிவங்கள் மட்டுமல்ல, தூரங்களும் விஸ்தீரண மானவைதான்' என்ற உணர்வுடன் செயல்பட்டது.

சிறுகதை, கவிதை, கட்டுரை போன்ற இலக்கிய விஷயங்களோடு மட்டுமே 'விழிகள்' தன்னை ஒடுக்கிக் கொண்டதில்லை. நாடகம், தெருக் கூத்து, கலைத் திரைப்படங்கள்; கலாசாரம், கல்வித் தரம் போன்ற பல விஷயங்களிலும் இது அக்கறை கொண்டிருந்தது.

தங்கத் தாமரை பரிசுபெற்ற கன்னடத் திரைப்படம், 'சோமன துடி' பற்றி விரிவான கட்டுரை, அதைத் தயாரித்த பி. வி. காரந்துடன் பேட்டி, காந்தி கிராமத்தில் இராமானுஜம் பொறுப்பில் நடைபெற்ற நாடகப் பயிற்சி முகாம் போன்ற விஷயங்களை விழிகள் பிரசுரித்தது. புது நாடகங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளது.

சுந்தரபாண்டியன் என்பவர் ஆசிரியராகவும் வெளியிட்டாளராகவும் செயல்பட்ட இப்பத்திரிகையில் ராமசாமி ( ஆராமுதம்) தான் நிறையவும் தீவிரமாகவும் எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், கிராமியப் பாடல்கள், மக்கள் கலாச்சாரம், நிஜநாடக இயக்கம் முதலியவற்றில் ஈடுபாடு உடையவர் அவர்.

தற்காலத்திய மக்கள் கலாச்சாரத்தின் தன்மையிலும், தமிழ் மன நிலையிலும் அருவருப்பும் கசப்பும் கொண்டிருந்தனர் 'விழிகள்' வட்டத்தினர். அது 'விழிகள்' எழுத்துக்களில் நன்கு வெளிப்பட்டது.

‘எது சரியானது என்பதைத் தீர்மானிக்கவே விடாதபடி, கொடி தூக்குவதற்கும் கோஷமிடுவதற்கும், சாணி எறிவதற்கும், மேளம் அடிப்பதற்கும் மட்டுமே இந்த மனநிலை மனிதர்களை உருவாக்கியிருக்கிறது’ என்று 'தமிழ் மனநிலை' பற்றியும்,

‘தமிழ் மனநிலை இன்றைய கலாச்சாரத்தின் மொத்தத் தளத்திலும் நடந்துகொண்டிருக்கிற அருவருக்கத்தக்க யதார்த்தம், இந்தச் சிக்காளிக்கலாச்சாரத்திற்கு எதிராக ஆரோக்கிய கலாச்சாரத்தை நிறுவுவதாகச் சொல்லிக்கொள்ளும் சிறுசிறு அறிவுஜீவிக் குழுக்களும் சாக்கடையில் நின்று மலேரியா ஒழிப்பு பற்றிப் பேசிக்கொண்டிருப்பது நம் கலாச்சாரத்தின் போலிமை என்றும்,

காரமாகக் கருத்துக்களை அறிவித்திருக்கிறார்கள் கட்டுரையாளர்கள்.

‘மனுஷ வமிசத்தையே தினம் தினம் இழிவுபடுத்தும் செயல்கள், வெகுஜன சீரழிவுக் கலாசாரத்தைச் சுமந்து வரும்-காசு பணத்திற்காகப் பத்திரிகை விபச்சாரம் செய்து வரும் பத்திரிகைகளில் நடந்து வருகிறது. இதற்காக இதுவரை மனுஷ வமிசம் கோபப்படாமல் 'அதில் சுகம் கண்டு கொண்டே வந்திருக்கிறது'.

இவ்விதம், தற்கால நிலைகளைக் கண்டு கோபமும் ஆத்திரமும் கொண்ட மனங்களின் எழுத்துக்களை விழிகள் தாங்கி வந்தது.

‘கல்வி மதிப்புகளின் சீரழிவு குறித்து கவலைப்படுகிறவர்களுக்காக இது' என்று அவ்வப்போது கட்டுரைகள் வந்தன. பல்கலைக்கழக மட்டத்திலும், கல்வித்துறையிலும் நிலவுகிற சீரழிவுகளையும் குறைபாடுகளையும் அவை குத்தலாகவும், உதாரணங்களோடு விரிவாகவும் பேசின.

தமிழ் சினிமாப் படங்களைப் பரிகசிக்கும் சிறுசிறு விமர்சனங்களை 'விழிகள்' வெளியிட்டது. உதாரணத்துக்குச் சில-

பஞ்சவர்ணம்- வசனம், பாடல்கள் நா. காமராசன். இவரைவிட குயிலன், புரட்சிதாசன்கள் புத்திசாலித்தனமாக எழுதுகிறார்கள். ஒரு படம் எப்படி எடிட் செய்யக்கூடாது என்பதற்கும், எப்படி உரையாடல் எழுதக்கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்று படிப்பதற்கும் இந்தப் படம் உதவும்.

சகலகலா வல்லவன்- முரட்டு ராஜா, போக்கிரி ராஜாவைத் தொடர்ந்து, கமலைக் கோமாளியாக்க ஏவி. எம். எடுத்த மசாலா. தமிழ்ச் சூழலில் இந்த எளவு தான் விலை போகிறது.

எங்கேயோ கேட்ட குரல்-தாலி கட்டிய பெண் கணவனை விட்டு இன்னொருத்தனுடன் ஓடுகிறது என்பது தமிழ்ப் படத்துக்குப் புதுசு. ராதாவின் 'மார் ஆட்டி' டான்சும் மற்ற மசாலாக்களும் உண்டு. ரொம்ப நாட்களுக்குப் பிறகு மாமா அத்தை அத்தான் இந்த நெருக்கங்களைக் கேட்க முடிகிறது. மற்றபடி ரஜனி தன் தலையில் ஒரு மூட்டை பளுவைத் தூக்கி வைத்திருக்கிற இறுக்கத்துடன் வயதான ரோலில் சிரமப்படுவது பாவமாயிருக்கிறது. முன்பெல்லாம் 'மார் ஆட்டி' டான்சுகளை வில்லிகள்தாம் ஆடுவதுண்டு. இப்பொழுது கதாநாயகிகள் ஆடுவது கவனிக்கத்தக்க ஒரு முன்னேற்றம்!'

இவ்வாறே கிண்டல் தொனியிலும், காரசாரமாகவும், செய்தி, ரிப்போர்ட், மியாவ் என்ற தலைப்புகளில் பல தகவல்களை-அபிப்பிராயங்களை-சூடான எண்ணங்களை 'விழிகள்' தந்தது.

சோதனை ரீதியிலான சிறுகதைகளையும், புதுக் கவிதைகளையும் வெளியிட்டது. பாரதி நூற்றாண்டு விழா சமயத்தில் 1982 ஜனவரி இதழை 'பாரதி மலர்' ஆகத் தயாரித்தது.

தெருக்கூத்து, பகல் வேஷம் ஆகிய மக்கள் கலைகளின் ஆய்வு தொடர்பான கட்டுரைகளைப் பிரசுரித்தது.

‘விழிகள்' குறிப்பிட்ட காலத்தில் தவறாது வெளிவர வேண்டும் என்று ஆசைப்பட்டது. 'வரும்' என அடிக்கடி உறுதி கூறியது. எனினும், காலம் தாழ்த்தி, நீண்ட இடைவெளிகளுக்குப் பிறகேதான் ஒவ்வொரு இதழும் வருவது சாத்தியமாக இருந்தது.

1983- ல் 'விழிகள்' ஒரு இதழ்கூட வந்ததாகத் தெரியவில்லை.