தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/001-066
தமிழ்த் தாத்தா
சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தமிழ்த் தாய்க்கு அணி செய்தவர்கள் இரண்டு பெரியவர்கள். ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் இருந்த சங்க நூல்கள் என்னும் பழைய அணிகலன்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்து அன்னையின் திருமேனியில் அணிவித்தார். மற்றொருவர் தாமே புதிய கவிகளை இயற்றி அணி செய்தார். முன்னவர் என்னுடைய ஆசிரியப் பிரான் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், பின்னவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். டாக்டர் ஐயர் முயற்சியால் முதலில் சீவகசிந்தாமணி வெளிவந்தது. பிறகு பத்துப்பாட்டு, அடுத்துப் பெளத்த காவியமாகிய மணிமேகலை வெளியாயின. எட்டுத் தொகையில் ஐந்து இலக்கியங்களை அவர் ஆராய்ந்து வெளியிட்டார். அவரோடு தொடர்புடையவர்கள் மற்ற நூல்களை வெளியிட்டார்கள்.
டாக்டர் ஐயர் தமிழ் இலக்கியத்தில் பழைய அணிகளை வெளியிட்ட பிறகு தமிழ்நாட்டில் ஒரு புத்துணர்ச்சி உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், அவர்களது பண்பாட்டு நிலையையும், பழக்க வழக்கங்களையும் தெரிந்துகொள்வதற்கு அந்த நூல்கள் கருவிகளாக விளங்குகின்றன. உலகம் முழுவதும் உள்ளவர்கள் சங்க நூல்களைக் கண்டு விம்மிதம் அடைந்தார்கள். அவர்கள் அந்த நூல்களைப் படித்து ஆராயத் தொடங்கினார்கள். மிகப்பழங்காலத்தில் தோன்றிய அந்த நூல்கள், இன்றைய மாணவர்களும் படித்து, ஆராய்ந்து இன்புறுவதற்கு ஏற்றவாறு இருந்தது, வியப்பில் ஆழ்த்தியது. நாளடைவில் பழைய நூல்கள் எல்லாம் பயனற்றுப் போக, இன்றைய நூல்களுக்கு மதிப்பு உண்டாவது உலக இயற்கை. பழைய நூல்களைக் கண்காட்சியில்தான் காணலாம். ஆராய்ச்சியாளர் மாத்திரம் ஆராய்ந்து வருவார்கள். ஆனால் சங்க நூல்கள் அத்தகையான அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாலும் அவற்றைப் படிக்கவும், ஆராயவும், அநுபவிக்கவும் முடிகிறது. அதனால் கம்பராமாயணம் முதலிய காப்பிய நூல்களோடு சங்க நூல் ஆராய்ச்சியும் எங்கும் நடைபெறலாயிற்று. அதன் பயனாகத் தமிழ் மாநாடுகளும், உலக விழாக்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. சங்க நூல்களின் பெருமையை மற்ற நாட்டிலுள்ளவர்களும் தெரிந்துகொள்ளும்படி அவற்றின் மொழிபெயர்ப்பைச் சிறந்த அறிஞர்கள் செய்து வெளியிட்டார்கள்.
இவ்வாறு, தமிழகத்தில் ஒரு புதிய யுகத்தை உண்டாக்கிய பேராளர் டாக்டர் ஐயர். அவர் இறைவன் திருவருளால் 87 ஆண்டுகள் வாழ்ந்தார்; தமிழுக்கு வளம் சேர்த்தார். தம்முடைய இளமைக் காலத்தில் அவர் காணாத காட்சியை அவர் தம் முதுமையில் கண்டார். பாரி என்றும், அதிகமான் என்றும் வெறும் பெயர்களைக் கேட்டுக்கொண்டிருந்த நிலையை மாற்றி, அவர்களால் தமிழ் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாயிற்று என்பதைப் பள்ளிக்கூட மாணவர்களும் தெரிந்துகொள்ளும் நிலை உண்டாயிற்று. காப்பிய இன்பத்தை நுகர்ந்த தமிழ்ப் புலவர்கள் சங்க இலக்கியங்களைப் பாராட்டினார்கள். தமிழ் மிகப் பழமையானது, மிகச் சிறந்த பண்பாட்டை உள்ளுறையாகக் கொண்டது என்பதைப் புலவர்கள் எல்லாம் ஆராய்ந்தறிந்து சொன்னார்கள்.