தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/003-066

439989தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் — 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல்கி. வா. ஜகந்நாதன்

மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலிலுள்ள வீட்டில் இருந்தார். அவர் சைவத் திருக்கோலத்துடன் விளங்கினர். அப்புலவர் பெருமாளை முதல் முதலாகக் கண்ட போது இவருக்கு உண்டான உணர்ச்சியைச் சொல்லினால் சொல்ல முடியாது. இவரே சொல்வதைக் கேட்கலாம்

"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது.”

தந்தையார் தம் குமாரரை அறிமுகம் செய்துவைத்தார்."இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியும்” என்றும் தந்தையார் சொன்னார். பிறகு மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவரிடம் ஒரு பாடலைச் சொல்லச் சொல்லி இவருடைய கல்விப் பயிற்சியை ஒருவாறு தெரிந்துகொண்டார். சில கேள்விகளைக் கேட்டு இவரது அறிவின் நுட்பத்தை உணர்ந்தார். இவருடைய தந்தையார், “பையனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார். புலவர் பெருமான் சிறிது யோசித்தார். “இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறை யாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை.நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை” என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே இவர் தந்தையார், “இவன் அவ்வாறு இருக்கமாட்டான். தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தமிழ்க் கல்வி கற்க எவ்வளவு காலம் ஆனாலும் தாங்கள் சொல்லிக் கொடுக்கலாம். வேறு எந்தவிதமான கவலையும் இவனுக்கு இல்லை” என்று சொன்னார். “இவரது உணவுக்கு என்ன செய்வது?” என்று அந்தப் புலவர் பெருமான் கேட்டார். “அதற்குத் தாங்களே ஏற்பாடு செய்தால் நல்லது” என்று தந்தையார் சொன்னர்.

“திருவாவடுதுறையிலும், பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய உணவு விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேனே!” என்றார். அப்போது தந்தையார்,“ இங்கே இருக்கும்போது இவன் உணவுச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று நான் அனுப்பிவிடுகிறேன்” என்றார். “அப்படியானால் ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்” என்று புலவர் பெருமான் சொன்னர். அப்போது இவருக்கு உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பை எவ்வாறு சொல்வது? அதன் பின்பு ஆசிரியர் பெருமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணாக்கராக தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினர். அதுமுதல் இந்தப் பெருமானுடைய வாழ்க்கையில் இரண்டாவது பகுதி ஆரம்பமாயிற்று.

சில காலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நேரே பாடம் கேட்கச் சந்தர்ப்பம் இல்லை. அவரிடம் பாடம் கேட்டு வந்த சவேரிநாத பிள்ளை என்ற கிறிஸ்தவர், நல்ல அன்பு உடையவர்: அவரிடமே இவர் பாடம் கேட்கும்படியாகப் பிள்ளை பணித்தார். அவரிடம் பாடம் கேட்கும்போது தம் அறிவாற்றலுக்கேற்ற வகையில் அவரால் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதை இவர் உணர்ந்தார். எப்படியாவது பிள்ளையிடமே அன்பைப் பெற்றுக் கொண்டு அவரிடம் நேரே பாடம் கேட்கவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்தது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம்முடைய வீட்டின் பின் பக்கத்தில் பல மரங்களை அப்படியே வேருடன் பறித்து வந்து நட்டு வைத்தார். அவை நன்றாக தளதளவென்று தளிர்த்து வரவேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் அந்தமரங்களில் புதிய தளிர் விட்டிருக்கிறதா என்று பார்ப்பாராம். இதனை உணர்ந்து இவர் விடியற்காலையில் எழுந்திருந்து, அந்த மரங்களைப் பார்த்து, எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வார். பிள்ளை தளிரைப் பார்த்து வரும் போது, எங்கு எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று இவர் சுட்டிக் காட்டுவார். இதனைக் கண்டு இவரிடத்தில் பிள்ளைக்கு அன்பு மிகுந்தது. மெல்ல மெல்ல அவரோடு இவர் உரையாடத் தொடங்கினர். “இப்போது என்ன பாடம் நடக்கிறது?” என்று அவர் கேட்டார். “நைடதம் கேட்கிறேன். மேலே ஐயா அவர்களை எனக்குப் பாடம் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று விண்ணப்பித்துக்கொண்டார், அது முதல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமே பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவர் பாடிய திருக்குடத்தைத் திரிபந்தாதியை முதலில் பாடம் சொன்னார். இவ்விளைய மாணாக்கரிடத்தில் காணப்பெற்ற தமிழ்ப் பசியைப் பிள்ளை தெரிந்துகொண்டார். இவரது பசிக்கேற்ப ஒருநாளில் பல பாடல்களைப் பாடம் சொல்லி வந்தார். பஞ்சத்தில் அடிபட்டவன் சிறிது சிறிதாகப் பல இடங்களில் உணவுபெற்று உண்டு, பிறகு ஓரிடத்தில் வயிறு நிறையச் சோறு உண்டதுபோல ஒருவகை உணர்ச்சியை இவர் பெற்றார். இவரே சொல்கிறார்:

“எனக்கிருந்த தமிழ்ப் பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு. சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். ‘இனி நமக்குத் தமிழ்ப் பஞ்சம் இல்லை' என்ற முடிவிற்கு வந்தேன்”

என்று எழுதுகிறார்.

வரிசையாகப் பல பிரபந்தங்களை மகாவித்துவானிடம் இவர் பாடம் கேட்டார். பல அந்தாதிகளையும், பிள்ளைத் தமிழ் நூல்களையும், வேறு பிரபந்தங்களையும் இவர் கற்றார். பாடம் சொல்வதற்காகவே அவதரித்தவர்போல மகாவித்துவான் விளங்கினார். பாடம் கேட்பதற்காகவே வந்தவர்போல இவரும் இருந்தார். இரண்டு பேர்களுடைய உணர்ச்சியும் ஒன்றுபட்டுச் சங்கமமாயின. அதனால் இரண்டு பேர்களுக்கும் பயன் கிட்டியது. மகாவித்துவான் பாடம் சொன்னார். தம் பசி தீர இவர் பாடம் கேட்டார். நன்றாகப் பாடம் கேட்கும் மாணாக்கரிடம் ஆசிரியருக்குத் தனி அன்பு உண்டாவது இயற்கை. ஆகவே, இந்தப் பெருமானிடம் கவிச்சக்கரவர்த்திக்கு உள்ளம் நெகிழ்ந்த பேரன்பு உண்டானது ஆச்சரியமன்று.