தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/010-066

புராணப் பிரசங்கம்

1874-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் முதல் ஒரு மாத காலம் தம் ஊரில் இருந்து வேண்டிய மருந்துகளை இவர் உண்டு வந்தார். அப்போது குடும்பத்தில் சிறிது கடன் இருந்தது. அதை அடைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசிரியப் பெருமானின் தந்தையார் எண்ணினர். சில ஊர்களுக்குச் சென்று புராணப் பிரசங்கம் . செய்து பொருளை ஈட்டி அந்தக் கடனை அடைக்க வேண்டுமென்று அவர் நிச்சயித்தார். அதன்படி ஆசிரியர் செங்கணம் முதலிய இடங்களுக்குச் சென்று திருவிளையாடல் புராணப் பிரசங்கம் செய்து வந்தார். அப்போது பல தமிழன்பர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. எனினும் மீண்டும் பிள்ளையிடம் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்ற ஆர்வம் மிகுதியாக இருந்தது. அப்போது அம்பர்ப்புராண அரங்கேற்றம் சம்பந்தமாக அம்பர் என்ற ஊருக்குப் பிள்ளை சென்றிருந்தார். அங்கே போய் இவர் தம் குருநாதரைச் சந்தித்தார். அங்கேயே இருந்து சில நூல்களைப் பாடம் கேட்டார்.

காரை என்ற இடத்தில் நடத்திவந்த திருவிளையாடல் புராணப் பிரசங்கத்தை இவர் இடையில் நிறுத்தி வைத்துவிட்டு, அம்பருக்கு வந்திருந்தார். எனவே அங்குச் சென்று அதை நிறைவேற்றினார். அந்தப் பக்கத்தில் இருந்தவர்கள் ஆசிரியப் பிரானைத் தொடர்ந்து அங்கே இருந்து பிரசங்கம் செய்து வரவேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஆனால் ஆசிரியருக்குத் தம் குருநாதரை விட்டுப் பிரிந்து வாழ்வதில் விருப்பம் இருக்கவில்லை. ஆகவே, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு திருவாவடுதுறையை அடைந்தார்.

அங்கே வேதநாயகம் பிள்ளை ஒரு நாள் வந்திருந்தார். அவர் மாயூரத்தில் முன்சீபாக இருந்தவர். அவரும் சுப்பிரமணிய தேசிகரும் உரையாடிப் பழகிய தன்மை இவரைப் பெரிதும் நெகிழச் செய்தது.