தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/019-066
புறநானூறு வெளியீடு
சிலப்பதிகாரத்தை வெளியிட்டவுடன் மணிமேகலையையும் ஆராய்ந்து வெளியிடவேண்டுமென்ற ஆசை எழுந்தது. அடுத்தபடியாகப் புறநானூறு என்ற சங்க நூலைப் பதிப்பிக்கவேண்டுமென்ற விருப்பமும் உண்டாயிற்று. புறநானூற்றுக்கு ஒரு பழைய உரை உண்டு. முதல் 260 பாடல்களுக்கே உரை இருந்தது. அதற்குமேல் இல்லை. ஆகவே அந்தப் பகுதியைப் பதிப்பிக்கும்போது இடையூறு ஏற்பட்டது. பல காலம் பயின்ற பழக்கத்தால் ஒருவாறு பொருள் செய்துகொண்டார். புறநானூற்றை 1893-ஆம் வருடம் ஜனவரி மாதம் சென்னையில் அச்சிடத் தொடங்கினார். அவ்வாண்டு செப்டெம்பர் மாதம் ஆசிரியப் பெருமானுடைய தந்தையார் இறைவன் திருவடியை அடைந்தார். அதனால் ஆசிரியப் பெருமானுக்கு மிகவும் துயரம் உண்டாயிற்று. 10—12—1898-இல் பூண்டி அரங்கநாத முதலியார் காலமானார். தம் தந்தையாரை இழந்த துக்கமும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் ஆசிரியரின் மனவுறுதியைக் குலைத்தன. என்றாலும் 1894-ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் புறநானூற்றுப் பதிப்பு நிறைவேறியது. பல அருமையான வரலாற்றுச் செய்திகள், பழங்கால மன்னர்கள், வள்ளல்கள், பல உபகாரிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகள் எல்லாம் அதனால் தெரியவந்தன. பிற்காலத்திலே அருமையான வரலாறுகளையும் ஆராய்ச்சிகளையும் பல புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் கருவியானது புறநானூறு என்னும் சங்க நூலே.
ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பிப்பது பெரிய காரியம் அன்று என்று சிலர் நினைக்கலாம். ஒரு நூலைப் பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மாணவர்களுக்கு அதைச் சொல்லிக்கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள். இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற விஷயங்களையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக்கொள்வதும் உண்டு, மற்றவர்கள் அதைப் பார்த்துப் பிரதி செய்துகொள்ளும் போது அந்தக் குறிப்புகளையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இதுபோன்று எழுதுவதில் ஏற்பட்ட பிழைகள் அதிகம். சுவடிகளில் மேற்கோள் செய்யுட்களைக் கண்டு பிடிப்பதும் கடினம்.
உரை இல்லாத மூலங்கள் எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும், பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, சில பாடல்களின்பின் திணை எழுதப்படாமலும் இருக்கும். சில வற்றில் துறை எழுதப்படாமல் இருக்கும். சிலவற்றில் இரண்டுமே இரா. பாடினோர் பெயர் இருக்காது. சிலவற்றில் சிதைந்து இருக்கும். சிலவற்றில் இரண்டு பெயர்களுமே இரா. ஒரே எண்ணில் இரண்டு பாடல்கள் வரும். ஒரே பாடல் இரண்டு இடங்களில் வரும். சில முதற்பாகம் குறைந்தும், சில இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும் இருக்கும். ‘ஏட்டுச் சுவடி என்றால் திருத்தமாக இருக்கும். அப்படியே அச்சுக்குக் கொடுத்துவிடலாம்’ என்று சிலர் நினைக்கிறார்கள். அதைப் பார்த்துத் தலைசுற்றி அவற்றைப் பதிப்பிக்க முடியாது என்று போனவர்கள் பலர் உண்டு. யாராலும் இந்தப் பழைய நூலை வெளியிட முடியவில்லை. பொருள் செய்வதற்கே தடுமாற்றம் இருந்தது. ஆண்டவன் திருவருளினால் ஆசிரியப் பெருமான் தம் நிறைந்த தமிழ் அறிவைக் கொண்டு மிகவும் பொறுமையுடன் தொண்டாற்றியதால் தமிழகத்திற்கு அந்தப் பழங்காலப் புதையல்கள் கிடைத்தன. அவற்றை வெளியிட இவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவை யாவும் இப்போது மறந்துபோயின. பத்துமாதம் குழந்தையைச் சுமந்து, பல்வேறு துன்பங்களுக்கிடையே பிரசவ வேதனையுற்றுக் குழந்தையை ஈன்ற தாய், தன் அருகில் குழந்தையைச் கொண்டுவந்து போட்டவுடன் தான் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துபோய்ப் பேரானந்தம் கொள்வது போல, பதிப்பிக்கப்பெற்ற புறநானூற்றுப் புத்தகத்தைப் பார்த்தவுடன் ஆசிரியப் பெருமானுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.