தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/025-066
ஐங்குறுநூறு வெளிவரல்
சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றை ஆராய்ந்து அதற்கு வேண்டிய குறிப்புகளே ஆசிரியர் தொகுத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. நூலை மிகவும் பெருக்காமல், சுருக்கமாக வெளியிட்டால் பல நூல்களைத் தாங்கள் சீக்கிரத்தில் வெளியிடலாம் என்று ஓர் அன்பர் எழுதியிருந்தார். அதை நினைவில் வைத்துக்கொண்டு ஐங்குறுநூற்றைச் சுருக்கமான முறையில் 1902-ஆம் வருஷம் செப்டெம்பர் மாதம் ஆசிரியர் வெளியிட்டார்.
அது வெளிவந்த பிறகு அந்த யாழ்ப்பாணத்து அன்பர், "இப்படி எல்லாவற்றையும் சுருக்கிக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டிய பெரும் பயனைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று ஒரு கடிதம் எழுதினார்.
1903-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பு வெளியாயிற்று. அதைத் தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராஜ செட்டியாருக்கு உரிமையாக்கினர் இவர்.