தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/038-066
திருக்காளத்திப் புராணம்
1912-ஆம் வருடம் மெ. அரு. நா. இராமநாதன் செட்டியார் சகோதரர்கள் காளஹஸ்தியில் கும்பாபிஷேகத்தை மிகவும் சிறப்பாக நடத்தினார்கள். சிவப்பிரகாசர் எழுதிய சீகாளத்திப்புராணம் மாத்திரம் முன்பு இருந்தது. ஆசிரியர் திருக்காளத்திப் புராணம் என்ற நூலை ஆராய்ந்து வைத்திருந்தார். கும்பாபிஷேகம் செய்த செட்டியார் அந்தத் தல சம்பந்தமான ஏதாவது புதியதொரு நூலை வெளியிடலாம் என்று நினைத்தார். ஆசிரியப் பெருமானும் திருக்காளத்திப் புராணம் தம்மிடம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் நலம் என்றும் சொன்னார், அவ்வாறு செய்யலாம் என்று செட்டியார் இசைந்தார். ஆசிரியர் கண்ணப்ப நாயனாரைப்பற்றித் தமிழ் நூல்களில் என்ன என்ன கருத்துக்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொகுத்தார். எல்லாவற்றையும் சேர்த்துத் திருக்காளத்திப் புராணப் பதிப்பில் சேர்த்தார். 1912-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் அந்த நூல் அச்சாயிற்று. கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் அந்த நூலை அந்தத் தலத்தில் அரங்கேற்றினார்.
1915-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஆசிரியப் பெருமானுக்கு 60-ஆவது ஆண்டு நிறைவேறியது. சஷ்டியப்த பூர்த்தியை நல்ல முறையில் நடத்த வேண்டுமென்று பல அன்பர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆசிரியருக்கு அதில் விருப்பம் இல்லை. திருக்காளத்தி சென்று இரண்டு மூன்று நாட்கள் அங்கே தங்கி இறைவனைத் தரிசித்துக் கொண்டு வந்தார்.
1917-ஆம் ஆண்டு மே மாதம் ஆசிரியருடைய மனைவியார் இறைவன் திருவடியை அடைந்தார்.
காசியிலுள்ள 'பாரத தர்ம மகா மண்டலம்' என்ற சபையினர் ஆசிரியர் செய்து வரும் தமிழ்த் தொண்டை அறிந்து அவருக்கு ஏதாவதொரு விருது கொடுக்க வேண்டுமென்று எண்ணினார்கள். 'திராவிட வித்யா பூஷணம்' என்ற பட்டத்தை வழங்கினார்கள்.