தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/042-066
திருவாவடுதுறை வாசம்
15-4-1920 அன்று திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பரிபூரணம் அடைந்தார். காறுபாறாக இருந்த வைத்தியநாதத் தம்பிரான், சுப்பிரமணிய தேசிகர் என்ற திருநாமத்துடன் ஆதீனத் தலைவர் ஆனார். அவருக்கு எதிராகச் சிலபேர் வழக்குகள் தொடுத்தார்கள். அப்போது ஆசிரியப் பெருமான் தம்முடன் இருக்க வேண்டுமென்று ஆதீனத் தலைவர் விரும்பினார். அவர் விருப்பப்படியே 1920-ஆம் ஆண்டு முதல் ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறை சென்று சில காலம் தங்கினார். அப்போது மடத்திலிருந்த சுவடிகளையும், அச்சிட்ட புத்தகங்களையும் ஒழுங்குபடுத்தி அடுக்கிவைக்கச் செய்தார். அங்கே ஒரு பாடசாலையைத் தொடங்கிப் பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தார். மடத்திற்கு வருகிறவர்கள் எல்லாம் அந்தப் பாடசாலைக்கும் வந்து ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
1922-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு விஜயம் செய்தார். அப்போது தமிழிலும், வட மொழியிலும் சிறந்து விளங்கும் புலவர்களைக் கெளரவிக்க வேண்டுமென்று அரசினர் நினைத்தார்கள். ஆசிரியப் பெருமானுக்கும் ஒரு கிலத் கிடைத்தது. அந்தக் கிலத்தை வாங்கிக் கொள்வதற்காகச் சென்னைக்கு வந்த ஆசிரியப் பெருமான் இங்கே சில நாட்கள் தங்கி, பின்பு மீண்டும் திருவாவடுதுறை அடைந்தார். அங்கே ஆதீனத் தலைவராக இருந்த சுப்பிரமணிய தேசிகருக்கு உடல் நிலை மிக்க கவலைக்கிடமாயிற்று. 1922-ஆம் ஆண்டில் பரிபூரணம் அடைந்தார். அதன் பிறகு வைத்தியலிங்க தேசிகர் ஆதீனத் தலைவராக அமர்ந்தார். திருவாவடுதுறையில் தம் ஆராய்ச்சி வேலை வேகமாக நடைபெறாததை அறிந்து, ஆசிரியர் ஆதீனத் தலைவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிச் சென்னைக்கே வந்து சேர்ந்தார்.