தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/059-066
குறுந்தொகைப் பதிப்பு
ஆசிரியப் பெருமான் குறுந்தொகையை ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார். முன்பு ஒருவர் அதைப் பதிப்பித்திருந்தார். சங்க நூல்களின் மரபு தெரியாத காரணத்தினால் பல பிழைகள் அப்பதிப்பில் இருந்தன. அது வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. புத்தகம் கிடைக்காமல் இருந்தது. எனவே குறுந்தொகையை விரிவான முறையில் அச்சிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு உண்டாயிற்று. அதற்கு வேண்டிய ஆராய்ச்சிகளும் குறிப்பு எழுதும் வேலையும் நடந்துகொண்டிருந்தன.
குறுந்தொகைக்கு மிக விரிவான முறையில் உரையை எழுதினார். இவர் பதிப்பித்த நூல்களில் இதுவே மிக விரிவாக அமைந்தது. நூலாராய்ச்சி என்ற பகுதியை நூறு பக்கங்களில் எழுதியிருக்கிறார், பதவுரை, பொழிப்புரை, விசேட உரை, மேற்கோளாட்சி, ஒப்புமைப் பகுதி, பாடபேதங்கள் என்பனவும், விரிவான அகராதியும் இணைந்த பயனுள்ள பதிப்பு இது. இதை வெளியிட்டதில் இவர் ஒருவகை மனநிறைவு பெற்றார். இது 1937-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியாயிற்று.