தமிழ்ப் பழமொழிகள் 2/கெ
கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது. கெஞ்சும் புத்தி கேவலம் கொடுக்கும். 9335
கெஞ்சு மணியம் பண்ணுகிறது,
- (கெஞ்சி பண்ணுகிறதா?)
கெட்ட இடையனுக்கு எட்டு ஆடு போதும். கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை. கெட்ட கழுதைக்குத் துஷ்ட புத்தி. கெட்ட கழுதைக்குப் பட்டது கண்டது. 9340
கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்று மீனை எடுத்து விழுங்கினது போல. கெட்ட காலத்துக்கு விபரீத புத்தி.
- (விநோத புத்தி.)
கெட்ட குடிக்கு ஒரு கேட்டை பிறந்தது. கெட்ட குடிக்கு ஒரு துஷ்டப் பிள்ளை. கெட்ட குடி கட்டி வருமா? 9345
கெட்ட குடி கெட்டது; பூராவாய்க் குடி அப்பா! கெட்ட குடி கெட்டாலும் வட்டி நஷ்டம் இல்லாமல் வாங்கிவிடு: (கெட்ட குடி கெட்டது.) கெட்ட குடியே கெடும்; பட்ட காலிலே படும். கெட்ட கேட்டுக்குக் கொட்டு ஒன்று, முழக்கு ஒன்றா? கெட்ட கேட்டுக்குக் கெண்டை போட்ட முண்டாசு குறைச்சலா? 9350
- (கொண்டை போட்ட.)
கெட்ட கேட்டுக்கு நெட்டை ஆள் கூலியா?
- (இரட்டையாள்.)
கெட்ட கேட்டுக்குப் பட்டுப் பீதாம்பரம்! கெட்ட கேட்டுக்குப் பிச்சைக் குடுவை இரண்டாம்.
கெட்ட கேட்டுக்கு வட்டம் காற்பணம்.
கெட்டது கிழவன் குடித்தனம். 9355
கெட்டது கெட்டாய் மகளே, கிட்ட வந்து படுத்துக் கொள்.
கெட்டது பட்டது கிருஷ்ணாங்குளம்; அதிலும் கெட்டது அத்திப்பட்டான் குளம்.
- (கிருஷ்ணாம்பேட்டை, ஆனைக்குளம்.)
கெட்டதும் கிழிந்ததும் பெற்றான் கோனான் நாட்டிலே.
கெட்டதும் பட்டதும் கீரைக்கு இறைத்ததும் போதும்.
கெட்டதைக் கேனத்தில் தேடு. 9360
- (கேனம்.கேனோப நிஷத்.)
கெட்ட நாய்க்குப் பட்டது அரிது.
- (பட்டது உறுதி.)
கெட்ட நாய்க்குப் பட்டது பிரீதி.
- (பட்டது லாபம்.)
கெட்ட நாய்க்குப் பட்டதே சரி.
கெட்ட பயலுக்கு ஏற்ற துஷ்டச் சிறுக்கி.
கெட்ட பால் நல்ல பால் ஆகுமா? 9365
கெட்ட பெயர் ஒரு போதும் மறையாது.
கெட்ட பேருக்கு எட்டு வார்த்தை.
கெட்ட மாடு தேடுவாரும் இல்லை; மேய்த்த கூலி கொடுப்பாரும் இல்லை.
- (தேடுகிறதும், கொடுக்கிறதும்.)
கெட்ட மாட்டைத் தேடும் முன்னம் எட்டு மாடு கட்டலாம்.
- (தேடலாம்; சம்பாதிக்கலாம்.)
கெட்ட மார்க்கத்தில் இருக்கும் ஒருவன் மற்றவர்களையும் இழுத்துக் கொள்வான். 9370
கெட்டவள் கெட்டாள் மகளே, கிட்ட வா.
கெட்டவள் கங்கை ஆடினால் பாவம் தீருமா?
- (போகுமா?)
கெட்டவள் பட்டணம் சேர்வாள்.
கெட்டவன் வாழ்ந்தால் கிளை கிளையாய்த் தளிர்ப்பான்; வாழ்ந்தவன் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.
கெட்டவனுக்கு எத்தனை படிப்பித்தாலும் துஷ்டத்தனம் விடான். 9375
கெட்டவனுக்குக் கெட்டதுதான் கிடைக்கும்; நல்லவனுக்கு நன்மையே கிடைக்கும்.
கெட்டவனைக் கண்டால் கிளையிலும் சேரார்.
கெட்டாயே கீரைத் தண்டே, தலையை விரித்துக் கொண்டோடக் கண்டேன்.
கெட்டார்க்கு உற்றார் கிளையிலும் இல்லை.
கெட்டார்க்கு நட்டார் இல்லை. 9380
- (குறள்)
கெட்டார் வாழ்ந்தால் களப்பொறை தாமரை, வாழ்ந்தார் கெட்டால் வறையோட்டுக்கும் உதவார்.
- (கிளம்புகிற தாமரை.)
கெட்டார் வாழ்ந்தால் கிளைப்புரை தலைமுறை.
கெட்டார்க்கு உற்றார்க்குக் கிளையிலும் இல்லை.
- (வாழ்ந்தாருக்கு உறவு வழியிலும் உண்டு.)
கெட்டால் தெரியும் கோமுட்டிக்கு.
கெட்டால் பெரிய வெட்டரிவாள். 9385
கெட்டாலும் குலாசார முறையோடு கெட்டான்.
கெட்டாலும் கெடுகிறது, கிட்ட வந்து படுத்துக் கொள்.
கெட்டாலும் செட்டி; கிழிந்தாலும் பட்டு.
- (கெட்டாலும் வேட்டியே. கெட்டாலும் செட்டியே.)
கெட்டாலும் பட்டணம் சேர்.
கெட்டான் பயல் பொட்டலிலே; விழுந்தான் பயல் சறுக்கலிலே. 9330
கெட்டான் வாழ்ந்தால் கிளை கிளையாய்த் தளிர்ப்பான்; வாழ்ந்தான் கெட்டால் வறையோட்டுக்கும் ஆகான்.
கெட்டிக்கார முட்டாள்.
கெட்டிக்காரன் கொல்லையிலே கழுதை மேய்கிறது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளிலே தெரியும்.
- (+ அசடன் புளுகு அப்போதே தெரியும்.)
கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள் அளவும். 9395
கெட்டிக்காரனுக்குப் பயம் இல்லை; மட்டித்தனத்துக்கு நயம் இல்லை.
கெட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா?
கெட்டு ஓடினாலும் நட்டு ஒடு. கெட்டு கிழக்கே போ.
- (வடஆற்காடு வழக்கு )
கெட்டுக் கெட்டுக் குடி ஆகிறதா? 9400
கெட்டுப் போகிற காலம் வந்தால் சொட்டுப் புத்தி தேடுவானாம்.
- (நாள் வந்தால், சொட்டுப் புத்தி தோன்றும் தேறாது.)
கெட்டுப் போன பார்ப்பானுக்குச் செத்துப் பீயான பசுவைத் தானம் செய்தானாம்.
கெட்டும் பட்டணம் சேர்.
கெடுக்க நினைக்கின் அடுக்கக் கேடுறும்.
கெடுக்கினும் கல்வி கேடு படாது. 9405
- (கொடுக்கினும் )
கெடுங் காலத்துக்குக் கெட்டார் புத்தியைக் கேட்டார்.
கெடுங்குடி சொற் கேளாது.
கெடுத்தவருக்கும் கேடு நினையாதே.
கெடுப்பதும் வாய்; படிப்பதும் வாய்.
- (வாயால்.)
கெடுப்பாரைத் தெய்வம் கெடுக்கும். 9410
கெடுமதிக்குப் படுகுழியை வெட்டு.
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது.
கெடுவது செய்தால் படுவது கருமம்.
கெடுவாய், கேடு நினையாதே.
கெடுவார்க்குக் கெடுமதி பிடரியில். 9415
- (கெடுப்பார்க்கு.)
கெடுவான் கேடு நினைப்பான்.
கெண்டை பட்டாலும் பட்டது; கிடாரம் பட்டாலும் பட்டது.
கெண்டையைப் போட்டு வராலை இழுக்கிறதா?
- (இழுக்கிறது.)
கெதம் போனது கிருஷ்ணப்ரீதி.
கெருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்டான். 9420
- (பல்டி என்பான்.)
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கு அல்ல.
கெலியன் பாற்சோறு கண்டது போல.
- (கலியன்.)