தமிழ்ப் பழமொழிகள் 3/12
தெட்டிப் பறிப்பாரை எட்டிடத்தில் பறிக்கிறது.
13115
- (எத்தில் பறக்கிறது.)
தெந்தினப் பாட்டுப் பாடித் திருநாமம் இட வந்தான்.
தெய்வ அருள் இருந்தால் செத்தவனும் பிழைப்பான்.
தெய்வத்துக்குச் சத்தியம்; மருந்துக்குப் பத்தியம்.
தெய்வத்துக்குச் செய்வதும் செய்க்கு உரம் போடுவதும் வீண் அல்ல.
தெய்வத்தை இகழ்ந்தவர் செல்வத்தை இழந்தார். 13120
தெய்வப் புலவனுக்கு நா உணரும்; சித்திர ஓடாவிக்குக் கை உணரும்.
- (சித்திரக்காரனுக்கு.)
தெய்வ பலமே பலம்.
தெய்வம் இட்டபடி நடக்கிறது.
தெய்வம் இட்டு விடாமல் வீணர் படியிட்டு விடிவதுண்டோ.
தெய்வம் இல்லாமலா பொழுது போகிறதும் பொழுது விடிகிறதும்? 13125
தெய்வம் உண்டு என்பார்க்கு உண்டு; இல்லை என்பார்க்கு இல்லை.
தெய்வம் காட்டும்; எடுத்து ஊட்டுமா?
தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
தெய்வம் கெடுக்காத குடியைத் தெலுங்கன் கெடுப்பான்.
தெய்வம் கைகூட்டி வைத்தது. 13130
தெய்வம் சீறின் கைதவம் ஆகும்.
தெய்வம் துணைக் கொள்; தேகம் அநித்தியம்.
- (தெய்வம் பேணி.)
தெய்வம் படி அளக்கும்.
தெய்வம் பண்ணின திருக்கூத்து.
தெய்வமே துணை. 13135
தெய்வ வணக்கம் நரக வாசலை அடைக்கும் தாழ்.
தெரிந்தவர்கள் தென்னம் பிள்ளை வைப்பார்கள்.
தெரிந்தவன் என்று கும்பிடு போட்டால் உன் அப்பன் பட்ட கடனை வைத்துவிட்டுப் போ என்றானாம்.
தெரிந்தவனுக்குத்தான் தெரியும் செம்மறியாட்டு முட்டை,
தெரியாத் துணையே, பிரியாத் துணை நீ. 13140
- (தெரியாத துணையே.. பிரியாத துணை..)
தெருச் சண்டைக்கு இடுப்புக் கட்டல்.
- (கட்டுகிறதா?)
தெருச்சண்டை கண்ணுக்கு இன்பம்.
- (குளிர்ச்சி.)
தெருவில் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே.
தெருவிலே ஊர்வலம் போகிறதென்று திண்ணையில் தூங்குபவன் திணறிக்கொண்டு செத்தானாம்.
தெருவிலே போகிற சனியனை விலை கொடுத்து வாங்கினது போல. 13145
தெருவிலே போகிறவனை அண்ணை என்பானேன்? ஆத்தைக்கு இரண்டு கேட்பானேன்.
- (இலங்கை வழக்கு.)
தெருவோடு போகிற சண்டையை வீட்டு வரைக்கும் வந்து போ என்றது போல.
தெருவோடு போகிற வண்டியைக் காலில் இழுத்துவிட்டுக் கொண்டது போல.
தெருளா மனசுக்கு இருளே இல்லை.
தெலுங்கச்சி சுவர்க்கம் போனாற் போல. 13150
- (தாமதம்.)
தெவிட்டாக் கனி பிள்ளை; தெவிட்டாப் பானம் தண்ணீர்.
தெள்ளிய திருமணி, திருட்டுக்கு நவமணி.
தெள்ளுப் பிடித்த நாயைப் போல.
தெளிந்த தண்ணீர் நீர் குடித்தீர்; சேற்றைக் கலக்கி விட்டீர்.
தெளிவு கூறும் பரதேவ தேசிகன். 13155
நெற்கத்திக் குருவியை வடக்கத்திக்குருவி தெற்றி அழைத்ததாம்;சீசம் பழம் தின்னம் போக.
தெற்கு விழுந்த கருக்கலும் தேவடியாளிடம் போன காசும் திரும்பா.
தெற்கே அடித்த காற்றுத் திரும்பி அடியாதா?
தெற்கே சாய்ந்தவன் தெரு எல்லாம் கூடை.
- (-பிறை)
தெற்கே சாய்ந்தால் தெருவெல்லாம் விலைப் பெட்டி; வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல். 13160
- (தைப்பிறை.)
தெற்கே போகிற நாய்க்கு வடக்கே வால்.
தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை.
தெறிக்க அடித்த தட்டானைப் போல.
தென்காசி ஆசாரம்; திருநெல்வேலி உபசாரம்.
தென்காசி வழக்கா, பாதி போடு. 13165
தென் திசைப் புலையன் வட திசைக்கு ஏகின் நடை திருந்திப் பார்ப்பான் ஆவான்.
- (கபிலர் அகவல்.)
தென்றல் அடிக்கிற காற்றே, என் இறுக்கத்தை ஆற்றே.
தென்றல் திரும்பியும் மழையா?
தென்றல் முற்றிப் பெருங்காற்று ஆனது போல.
- (ஆச்சு.)
தென்றல் முற்றானால் புயலாக மாறும். 13170
தென்றலும் வாடையும் இறக்கும் பயிர்கள்.
தென்னங் குரும்பை திருக்குரும்பை, பன்னாடை எல்லாம், ஒரு மரத்துக் காய்.
தென்னந்தோப்பில் குரங்கு வளர்த்தது போல.
தென்னமரத்தில் ஏண்டா ஏறினாய் என்றால், கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க என்றானாம்; தென்னமரத்தில் புல் ஏதடா என்றால், அதுதான் கீழே இறங்குகிறேன் என்றான்.
தென்னமரத்தில் ஏறுபவனை எவ்வளவு தூரம் தூக்கிவிட முடியும்? 13175
தென்ன மரத்தில் தேள் கொட்டப் பன மரத்திலே பதவளை காட்டினது போல.
தென்ன மரத்தில் தேள் கொட்டிப் பனமரத்தில் நெறி ஏறிற்றாம்.
- (புன்னை மரத்தில்.)
தென்ன மரத்தில் பாதி, என்னை வளர்த்தாள் பாவி.
தென்ன மரத்திற்குத் தண்ணீர் வார்த்தால் தலையாலே தரும்.
- (ஊற்றினால்.)
தென்ன மரத்தின் நிழலும் தேவடியாள் உறவும் ஒன்று. 13180
தென்ன மரத்துக் குரங்கே, என்னைப் பார்த்து இறங்கே.
தென்னாலிராமன் குதிரை வளர்த்தது போல.
தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
தென்னாலிராமன் போட்ட சித்திரம் போல.
தென்னை செழித்தால் பண்ணை செழிக்கும். 13185
தென்னையிலே தேள் கொட்டித் திருவையாற்றுக்கு நெறி கட்டியதாம்.
தென்னையிலே பாதி என்னை வளர்த்தாள் பாவி.
தென்னை வைத்து வாழை ஆச்சு; வாழை வைத்து மஞ்சள் ஆச்சு மஞ்சள் வைத்து முள்ளி ஆச்சு.
தேகம் அநித்தியம்; தெய்வம் துணைக் கொள்.
தேகம் சந்தேகம். 13190
தேங்காய் ஆடும்; இளநீர் ஆடும்; திருவுமணையில் தூக்கமா? தேங்காய்க்குள் நீர் போல.
தேங்காய்க்கு மூன்று கண்; எனக்கு ஒரு கண்.
தேங்காய் தின்றவன் ஒருத்தன்; தண்டம் கொடுத்தவன் ஒருத்தன்.
தேங்காய் தின்னலாம், இளநீர் குடிக்கலாம்; திருவு பலகையிலே வந்ததோ தூக்கம்? 13195
தேங்காயிற் சிறிது; மாங்காயிற் பெரிது.
தேங்காயை உடைத்தால், சிரட்டையை உடைக்கிறேன்.
தேங்காயை உடைத்தாற்போல் பேசுகிறான்.
தேங்காயைத் தின்றவன் தின்னக் கோம்பை சூப்பினவன் தண்டம் இறுக்கிறதா?
- (சப்பினவன்.)
தேங்காயை விழுங்குகிறது தினை; பருவத்தை விழுங்குகிறது பனை. 13200
தேசங்கள் தோறும் பாஷைகள் வேறு,
- (ஆசாரம் வேறு.)
தேசத்து நன்மை தீமை அரசர்க்கு இல்லையா?
தேசத்தோடு ஒத்து வாழ்.
தேச பத்தியே தெய்வ பத்தியாம்.
தேசம் எல்லாம் பறக்கும் காகம் தான் இருக்கும் கொம்பை அறியாது. 13205
தேடக் கிடையாது; தேட என்றால் கிட்டாது. திருப்கொட்பா, திருப்பிக் கொடு.
தேடத்தசை இருந்தும் அனுபவிக்க அதிர்ஷ்டம் இல்லை.
தேட நினைப்பது தெய்வத்தை.
தேடப் போன மச்சினன் செருப்படியில் அகப்பட்டது போல.
தேடாது அழிக்கின் பாடாய் முடியும். 13210
தேடாது அழித்த தேவடியாள் தேவடியாள்.
தேடி அழைத்த விருந்துக்கு வாடி இருந்ததுபோல.
தேடி எடுத்துமோ திருவாழி மோதிரத்தை.
தேடித் திருவிளக்கு வை.
தேடித் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர். 13215
தேடிப் பிடித்தாள் தேவடியாள் கள்ளனை.
தேடிப் புதைத்துத் தெருவில் இருக்கிறதா?
தேடிப் போகாதே; கூறி விற்காதே.
தேடிப் போனது அகப்பட்டது போல.
தேடிப் போன தெய்வம் எதிரே வந்தது போல. 13220
தேடிப் போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போல.
தேடியதை எல்லாம் கொடுத்துத் தேட்டு மீன் வாங்கித் தின்னு.
தேடின பூண்டு காலிலே மிதிபட்டது போல.
- (பூடு)
தேடின பொருள் காலிலே தட்டினது போல.
தேடுவார் அற்ற பிணம் தெருவோடே. 13225
- (பணம்.)
தேய்ந்த அம்மாள் தெய்வயானை, தெய்வத்துக்கு இட்டாலும் ஏறாது.
தேய்ந்த கட்டை மணம் நாறும்.
- (தேய்த்த.)
தேய்ந்தாய், மாய்ந்தாய் கொம்பும் கறுத்தாய், தும்பிக்கையும் உள்ளே இழுத்துக் கொண்டாயா?
தேய்ந்தாலும் சந்தனக் கட்டை மணம் போகாது.
- (மாறாது.)
தேய்ந்து மாய்ந்து போகிறான். 13230
தேய்ந்து மூஞ்சூறாய்ப் போகிறது.
தேயத் தேய மணக்கும் சந்தனக் கட்டை.
தேர் இருக்கிற மட்டும் சிங்காரம்; தேர் போன பிறகு என்ன?
தேர் ஓடித் தன் நிலையில் நிற்கும்.
- (ஓடினாலும்.)
தேர் ஓடி நிலைக்குத்தான் வரவேணும். 13235
தேர் செய்கிற தச்சனுக்கு அகப்பை போடத் தெரியவில்லை.
தேர் தாழ்ந்து தில்லை உயர்ந்தது; ஆனை தாழ்ந்து அரசு வளர்ந்தது.
தேர் தெருத் தெருவாக ஓடினாலும் தன் நிலையில்தான் நிற்கும்.
தேர்ந்தவன் என்பது கூர்ந்து அறிவதனால்.
தேர் வேந்தன் தன் களத்தில் சிலர் வெல்லச் சிலர் தோற்பர்; ஏர் வேந்தன் களத்தில் இரப்பவரும் தோலாரே. 13240
தேராச் செய்கை தீராச் சஞ்சலம்.
தேருக்கு உள்ள சிங்காரம் தெரு எல்லாம் கிடக்கிறது.
தேருக்குப் போகிறபோது தெம்பு; திரும்பி வருகிறபோது வம்பு,
தேருக்குள் சிங்காரம், தெரு எல்லாம் அலங்காரம்.
தேரைகள் பாம்பைத் திரண்டு வளைத்தாற் போல. 13245
தேரை மோந்த தேங்காய் போல.
தேரோடு திருநாள் ஆயிற்று; தாயோடு பிறந்தகம் போயிற்று.
தேரோடு திருநாள் போம்.
தேரோடு நின்று தெருவோடு அலைகிறான்.
- (தேரோடு மாலையாகத் தெருவோடு.)
தேவடியாள் இருந்து ஆத்தாள் செத்தால் கொட்டு முழக்கு; தேவடியாள் செத்தால் ஒன்றும் இல்லை. 13250
தேவடியாள் சிந்தாக்கு உள்ள வரையில் நட்டுவனுக்குப் பஞ்சம்
இல்லை.
- (சிந்தாக்கு - பொட்டு.)
தேவடியாள் குடியில் குமரிப் பெண்ணை ஈடு வைக்கலாமா?
தேவடியாள் சிங்காரிக்கும் முன்னே தேர் ஓடி நிலையில் நின்றது.
- (தெருவில்.)
தேவடியாள் செத்தால் பிணம்; தேவடியாள் தாய் செத்தால் மணம்.
தேவடியாள் தெரு கொள்ளை போகிறதா? 13255
தேவடியாள் மகன் திவசம் செய்தது போல.
தேவடியாள் மகனுக்கும் திவசம்.
தேவடியாள் மலம் எடுத்தாற் போல.
- (பொட்டு எடுத்தாற் போல.)
தேவடியாள் மூக்கில் மூக்குத்தி கிடந்தால் நட்டுவக்காரன் பட்டினி கிடப்பான்.
தேவடியாள் வீட்டில் ஆண் பிள்ளை பிறந்தாற் போல. 13260
தேவடியாள் வீட்டில் பெண்குழந்தை பிறந்தாற் போல.
தேவடியாள் வீடு போவது போல.
தேவடியாளுக்குத் தினமும் ஒரு கணவன்.
தேவர் உடைமை தேவருக்கே.
தேவர்கள் பணிவிடை சேப்பு மேலவன் கர்த்தா. 13265
தேவரீர் சித்தம்; என் பாக்கியம்.
தேவரே தின்றாலும் வேம்பு கைக்கும்.
- (பழமொழி நானூறு.)
தேவரைக் காட்டிலும் பூதம் பணி கொள்ளும்.
தேவலோகத்து அமிர்தத்தை ஈ மொய்த்த கதை.
தேவாமிர்தத்தை நாய் இச்சித்த கதை. 13270
தேள் கொட்டப் பாம்புக்கு மந்திரிக்கிறதா?
தேள் கொட்டிய நாய் போல்.
தேள் நெருப்பில் விழுந்தால் எடுத்துவிட்டவனையே கொட்டும்.
தேளுக்குக் கொடுக்கில் விடம்; உனக்கு உடம்பெல்லாம் விடம்.
தேளுக்குக் கொடுக்கில் விடம், தீயவருக்கு நாவில் விடம். 13275
தேளுக்குக் கொடுக்கில் விடம்; தேவடியாளுக்கு உடம்பு எங்கும்
விடம்; துஷ்டனுக்குச் சர்வாங்கமும் விடம்.
- (தேவடியாளுக்கு இடுப்பில் விடம்.)
தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்.
- (ஜாமத்துக்கு ஜாமம் பத்துத்தரம் கொட்டும்.)
தேளோடு போனாலும் தெலுங்கனோடு போகாதே.
தேற்றிக் கழுத்து அறுக்கிறது.
தேற்றினும் மகப் பிரிவு தேற்றல் ஆகாது. 13280
தேன் உண்டானால் ஈத் தேடி வரும்.
தேன் உள்ள இடத்தில ஈ மொய்க்கும்.
தேள் எடுத்தவரைத் தண்டிக்குமா தேனீ?
தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?
- (தேனை அழித்தவன்.)
தேன் எடுத்தவனுக்கு ஒரு சொட்டு; மாமன் மனையில் இருந்தவனுக்கு ஒரு சொட்டு. 13285
தேன் ஒழுகப் பேசித் தெருக்கடக்க வழிவிடுவான்.
- (தெருவிலே விடுவான், தெரு வழியே விடுகிறது.)
தேன் ஒழுகப் பேசுவான்.
தேன் குடித்த குரங்கைத் தேள் கொட்டியது போல.
தேன் கூட்டிலே கல்லை விட்டு எறியலாமா?
தேன் சர்க்கரை சிற்றப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா? 13290
தேன் தொட்டவர் கையை நக்காரோ?
- (தேன் எடுத்தவர்.)
தேன் நீரைக் கண்டு வான்நீர் ஒழுகுவது போல்.
தேன் வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரம் நுங்கு ஆகுமோ?
தேனாகப் பேசித் தெருக் கடக்க வழிவிடுவான்.
தேனில் விழுந்த ஈப்போலத் தவிக்கிறான். 13295
- (தத்தளிக்கிறான்.)
தேனுக்கு ஈயைத் தேடி விடுவார் உண்டா?
தேனுக்கு ஈயைப் தேடி விடுவார் யார்?
தேனுக்கு ஈயைப் பிடித்து விடவேண்டுமா?
தேனும் தினை மாவும் தேவருக்கு அமிர்தம்.
தேனும் பாலும்போல் இருந்து கழுத்தை அறுத்தான். 13300
தேனும் பாலும் போல் சேரவேண்டும்,
தேனும் பாலும் போல
தேனும் பாலும் செந்தமிழ்க் கல்வி.
தேனை எடுத்தவரைத் தண்டிக்குமாம் தேனீ
தேனைக் குடித்துவிட்டு இளித்த வாயன் தலையில் தடவினாற்போல. 13305
தேனைத் தடவிக் கொண்டு தெருத் தெருவாய்ப் புரண்டாலும்
ஒட்டுவதுதான் ஒட்டும்.
தேனைத் தொட்டாயோ? நீரைத் தொட்டாயோ?
தேனைத் தொட்டு நீரைத் தொட்டாற்போல் பழகுதல்.
தேனை வழிக்கிறவன் புறங்கையை நக்கமாட்டானா?
தேனை வார்த்து வளர்த்தாலும் காஞ்சிரங்காய் தேங்காய் ஆகாது. 13310
தை ஈனாப் புல்லும் இல்லை; மாசி ஈனா மரமும் இல்லை,
தை உழவு ஐயாட்டுக் கிடை.
தை உழவோ, நெய் உழவோ?
தை எள்ளுத் தரையில்; மாசி எள் மடியில் பணம்; வைகாசி எள் வாயில்
தைக்கவும் வேண்டாம்; பிய்க்கவும் வேண்டாம். 13315
தைக் குறுவை தரையை விட்டு எழும்பாது.
தைக் குறுவை தவிட்டுக்கும் உதவாது.
தைக் குறுவையோ, பொய்க் குறுவையோ?
தைத்த வாய் இருக்கத் தாணிக் கதவாற் புறப்பட்டாற் போல.
தைத்த வாயிலும் இருக்கத் தாணித்த வாயிலும் இருக்க எங்காலே போனீர் உப்பனாரே! 13320
தைப் பணி தரையைத் துளைக்கும்; மாசிப் பனி மச்சைத் துளைக்கும்.
- (தரையைப் பிளக்கும்.)
தைப் பிள்ளையைத் தடவி எடு.
தைப் பிறை கண்டது போல.
தைப் பிறை தடவிப் பிடி; ஆடிப் பிறை தேடிப் பிடி.
தைப் பிறையைத் தடவிப் பார். 13325
தைப் பிறை வட கொம்பு உயர்ந்தால் வடவனுக்குச் சோறு உண்டு; தென் கொம்பு உயர்ந்தால் தெரு எங்கும் தீய வேண்டும்.
தைப்புக்குத் தைப்பு மரம் பிடித்தாற் போல.
தை பிறந்தது; தரை வறண்டது.
தை பிறந்தால் தரை ஈரம் காயும்.
தை பிறந்தால் தலைக் கோடை. 13330
தை பிறந்தால் தழல் பிறக்கும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்.
தை மழை தவிட்டுக்கும் ஆகாது.
தை மழை நெய் மழை.
தை மாசத்து விதைப்புத் தவிட்டுக்கும் ஆகாது. 13335
தை மாசப் பனி தலையைப் பிளக்கும்; மாசி மாசப் பணி மச்சைப் பிளக்கும்.
தை மாசம் தரை எல்லாம் பனி.
தை மாசம் தரையும் குளிரும்; மாசி மாசம் மண்ணும் குளிரும்.
- (மரமும் குளிரும்.)
தையல் இட்ட புடைவை நைய நாள் செல்லும்.
தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு. 13340
தையல் சொல் கேளேல்.
தையலின் செய்கை மையலை ஊட்டும்.
தையலும் இல்லான், மையலும் இல்லான்.
தையலும் மையலும்.
தையலே உலகம் கண்ணாடி, 13345 .
தையில் கல்யாணமாம்; ஆடியிலே தாலி கட்டிப் பார்த்துக் கொண்டாளாம்.
தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளையாத மரமும் இல்லை.
தையும் மாசியும் வையகத்து உறங்கு,
தைரியம் ஒன்றே தனமும் கனமும்.
தைரியமே சகல நன்மையும் தரும். 13350
தைரிய லக்ஷ்மி தனலக்ஷ்மி.
தை வாழை தரையில் போடு,
தை வெள்ளம் தாய்க்குச் சோறு.