சொ


சொக்கட்டான், சோழி, சதுரங்கம் இம் மூன்றும் துக்கம் அற்றார் ஆடும் தொழில்.

சொக்கட்டான் விளையாட்டு, பொல்லாத சூது.

(சொக்கட்டான் சூது)

சொக்கட்டானும் செட்டியும் தோற்றினாற் போல.

சொக்கநாதர் கோவிலுக்குப் புல்லுக்கட்டுக் கட்டினாற் போல.

சொக்கர் உடைமை அக்கரை ஏறாது. 11550

(சொக்கன் காசு அக்கரை சேராது.)


சொக்கனுக்குச் சட்டி அளவு; சொக்கன் பெண்டிாட்டிக்கும் பானை அளவு.

சொக்கனும் செட்டியும் தொற்றினது போல.

சொக்கா, சொக்கா, சோறுண்டோ? சோழியன் வந்து கெடுத்தாண்டா.

சொக்காயை அவிழ்த்தால் சோம்பேறி.

சொக்காரன் குடியைப் பிச்சை எடுத்துக் கெடுப்பான். 11555

(சொக்காய்க்காரன்.)


சொக்குப் பொடி போட்டு மயக்குகிறான்.

சொட்டையிலே உள்ள சீலம் சுடலை வரை.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

சொட்டை வாளைக் குட்டி போல் துள்ளி விழுகிறது.

சொத்தி கை நீளாது; நீளக் கை சுருங்காது.

சொத்துக் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம். 11560


சொத்துக் குடலிலே சோறு புகுந்தால் தத்தக பித்தக என்ற கதை.

சொத்தைக் கொடுத்துப் புத்தி வர வேண்டும்; இல்லாவிட்டால் செருப்படி பட்டும் புத்தி வர வேண்டும்.

சொத்தைப் போல வித்தைப் பேணு.

சொந்தக்காராய் இருந்தாலும் பெட்ரோல் இருந்தால் தான் கார் நகரும்.

சொந்தக் கோழி தோல் முட்டை இடுகிறது. 11565

சொந்த மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைக்கப் பறை ஏன்?

சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு உதவுமா? கனவு கண்ட பணம் செலவுக்கு உதவுமா?

சொப்பனத்தில் கண்ட பணம் செலவுக்கு ஆகுமா?

சொப்பிலே சோறு ஆக்கினால் சுளுவுதான்; சும்மா இருந்து பிள்ளை பெற்றால் அழகுதான்.

சொர்க்கத்திலே தோட்டியும் சரி; தொண்டைமானும் சரி. 11570


சொர்க்கத்துக்கு நான் போனால் போகலாம்.

(நான் அகங்காரம்.)

சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே மூட்டை ஆகுமா?

(ஏன்?)

சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கத்திலே கழுதைக் குட்டியா?

சொர்க்கத்துக்குப் போகிற போதும் கட்கக்திலே ராட்டினமா?

சொர்க்கத்துக்குப் போகிறபோதும் பக்கத்திலே கூத்தியாரா? 11575


சொர்க்கத்துக்குப் போயும் ராட்டினமா?

சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே அக்ஷயபாத்திரமா?

சொர்க்கத்துக்குப் போனாலும் கட்கத்திலே ஒரு பிள்ளை ஏன்?

சொருக்கி போனாள், சிறுக்கி வந்தாள்.

சொருக்குக் கொண்டைக்காரி, சொக்குப்பொடி போடுவாள். 11580


சொருகி இருந்த அகப்பை சொத்தென்று விழுந்ததாம்.

சொருகிக் கிடந்த அகப்பையும் சோறு அள்ளப் புறப்பட்டது.

சொருகி வைத்த அகப்பை.

சொல் அம்போ, வில் அம்போ?

சொல்கிறது ஒன்று; செய்கிறது ஒன்று. 11585


சொல்கிறவனுக்கு வாய்ச்சொல்; செய்கிறவனுக்குத் தலைச் சுமை.

சொல் கேளாப் பிள்ளையினால் குலத்துக்கு ஈனம்.

சொல்திறம் கூறல் கற்றவர்க்கு அழகு.

சொல்லச் சொல்லச் செவிடி புக்ககம் போனாளாம்.

சொல்லச் சொல்லப் பட்டிப் பெண்ணைப் பெற்றான். 11590


சொல்லச் சொல்ல மட்டி மண்ணைத் தின்றான்.

சொல்லப் போனால் பொல்லாப்பு; சொறியப் போனால் அரையாப்பு.

(நொள்ளாப்பு.)

சொல்லாததை மனையாளுக்குச் சொன்னவன் பட்ட பாடுபோல.

சொல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.

சொல்லாது விளையாது; இல்லாது பிறவாது. 11595


சொல்லாமல் இருக்கிறவனே பண்டிதன்.

சொல்லாமல் செய்வார் நல்லோர்; சொல்லியும் செய்யார் கசடர்.

(பெரியோர்.)

சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எதுவரையில் நிற்கும்?

சொல்லிச் செய்வார் சிறியோர்; சொல்லாமற் செய்வார் பெரியோர்; சொல்லியும் செய்வார் கயவர்.

(சொல்லிச் செய்வார் நல்லோர், சொல்லியும் செய்யார் கசடர்.)

சொல்லிப் போக வேணும் சுகத்துக்கு; சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு. 11600


சொல்லின் உறுதி நல்ல நெறியே.

சொல்லுக்கு அரிச்சந்திரன்.

சொல்லுக்குச் சொல் சிங்காரமா?

(சிங்காரச் சொல்லா?)

சொல்லுக்கும் பொருளுக்கும் எட்டாதான்; சோதிக்கும் சாதிக்கும் நடு ஆனான்.

சொல்லும் சொல், ஆக்கமும் கேடும் தரும். 11605


சொல்லும் சொல் கேட்டால் சுட்டாற் போல் கொடுப்பார்.

சொல்லும் பொருளும் தோன்றும் கல்வி.

சொல்லுவதிலும் செய்து காட்டுதல் நல்லது.

(மேல்.)

சொல்வது யார்க்கும் எளிது; சொல்லியபடி செய்தல் அரிது.

சொல்வது லேசு, செய்வது அல்லவா பிரயாசம்? 11610


சொல்ல வல்லவனை வெல்லல் அரிது.

சொல்லியும் கொடுத்து எழுதியும் கொடுத்துப் பின்னோடே போனாளாம்.

சொல்வதைக் கேளாத பிள்ளையும் நீட்டின காலை மடக்காத நாட்டுப் பெண்ணும்.

சொல்வதை விடச் செய்வது மேல்.

சொல்வளம் இல்லாத நற்கதை, சொல்லில் அதுவே துர்க்கதை. 11615


சொல்வார் எல்லாம் துணிவாரா தீப் பாய?

சொல்வார் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போச்சு?

(மதி இல்லையா.)

சொல் பேச்சையும் கேளான்; சுய புத்தியும் இல்லை.

சொறி சொறிகிற சுவாரசியத்தில் ஆனை விலைகேட்ட மாதிரி.

சொறிந்து தேய்க்காத எண்ணெயும் எண்ணெய் அல்ல; பரிந்து இடாத சாதமும் சாதம் அல்ல. 11620


சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.

சொறி நாய்க்குக் குட்டையே சொர்க்கம்.

சொறி நாய் சுகம் பெற்றது போல.

சொறி நாய் சோர்ந்து விழும்; வெறி நாய் விழுந்து கடிக்கும்.

சொறி பிடித்த நாயானாலும் வீட்டைக் காக்கும். 11625


சொறியக் கொடுத்த பசுப் போல.

சொறியாந் தவளையும் வேட்டை ஆடுகிறதாம்.

சொன்ன சொல்லுக்கு இரண்டு இல்லாமல் வருவான்.

சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.

(பிடுங்குகிறான்.)

சொன்னதைச் சொல்லடி, சுரணை கெட்ட மூளி. 11630


சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

சொன்னதை சொல்லுமாம் கிளி; செய்ததைச் செய்யுமாம் குரங்கு.

சொன்னதை விட்டுச் சுரையைப் பிடுங்குகிற மாதிரி.

சொன்னபடி கேட்காவிட்டால் மண்ணை வெட்டி மாப்படைப்பேன்.

சொன்னபடி கேட்டால் மாப்படைப்பேன்; கேளாவிட்டால் மண்ணை வெட்டிப் படைப்பேன். 11635


சொன்னபடியே கேட்பவனுக்குச் சோறும் இல்லை; புடைவையும் இல்லை.

சொன்னபடி கேட்டால் சுட்டவுடன் தருவேன்.

(தருவாள்.)

சொன்னால் ஆய் செத்துப் போவாள்; சொல்லாவிட்டால் அப்பன் செத்துப் போவான்.

சொன்னால் குற்றம்; சொறிந்தால் அரிப்பு.

சொன்னால் துக்கம்; அழுதால் வெட்கம். 11640


சொன்னால் வெட்கக் கேடு; அழுதால் துக்கக் கேடு.

சொன்னால் பெரும்பிழை; சோறு என்றால் பட்டினி.

சொன்னால் போலக் கேட்டால் சுட்டாற் போலக் கொடுப்பேன்

சொன்னாலும உறைப்பதில்லை; சுட்டாலும் உறைப்பதில்லை.

சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் தோஷம். 11645


சொன்னான் சுரைக்காய்ககு உப்பு இல்லை என்று.

சொன்னேன், சுரைக்காய்ககு உப்பு இல்லை, பாகற்காய்க்குப் பருப்பு இல்லை என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/4&oldid=1158966" இலிருந்து மீள்விக்கப்பட்டது