தமிழ்ப் பழமொழிகள் 3/7
தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?
தகப்பன் பேரை எடுக்கிற பின்ளையே பிள்ளை.
தகப்பன் வெட்டின கிணறு என்று தலைகீழாய் விழுவார்களா? 11775
- (துரவென்று விழலாமா.)
தகப்பனுக்கு இட்டது தலைச்சனுக்கு.
தகப்பனுக்க ஒட்டுக் கோவணமாம்; மகன் எடுத்துப் போட்டது வேண்டும் என்கிறான்.
தகப்பனுக்கு ஒட்டுக் கோவணமாம்; பிள்ளைக்கு எங்கே இழுத்துப் போர்த்துகிறது.
தகப்பனுக்குக் கட்டக் கோவணம் இல்லை; மகன் தஞ்சாவூர் மட்டும் நடை பாவாடை போடச் சொன்னானாம்.
தகப்பனுக்குக் காய்ச்சுகிற பாலில் ஆடையைத் துவைக்கிற பிள்ளை. 11780
- (குதியைத் தேய்க்கிற பிள்ளை.)
தகப்பனைக் கொன்ற பாவம் மாமியார் வீட்டில் ஆறு மாதம் இருந்தால் போகும்.
- (போதும்.)
தகப்பனைக் கொன்ற பிள்ளை.
தங்கக் கத்தி என்று கழுத்தை அறுத்துக் கொள்ளலாமா?
- (சூரி.)
தங்கக் கத்தி என்று வயிற்றைக் கிழித்துக் கொள்ளலாமா?
தங்கக் குடத்துக்குப் பொட்டு இட்டுப் பார்த்தாற் போல். 11785
தங்கக் கொழு என்றால் நெஞ்சிலா இடித்துக் கொள்வது?
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா? தண்ணீர்க் குடமும் தன் குடம் ஆகுமா?
தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆனால் தவத்துக்குப் போவானேன்.
- (திருவிளையாடற் புராணம்.)
தங்கச் செருப்பு ஆனாலும் தலைக்கு ஏறாது.
தங்கத் தூள் அகப்பட்டாலும் செங்கல் தூள் அகப்படாது. 11790
தங்கத்தை உருக்கி விட்டது போல.
தங்கத்தைக் குவிக்கிறேன் என்றாலும் தன் புத்தி விடுகிறது இல்லை என்கிறான்.
தங்கத்தைத் தவிட்டுக்கு மாறுவதா?
தங்கத்தை விற்றுத் தவிடு வாங்கினது போல.
தங்கப் பெண்ணே, தாராவே, தட்டான் கண்டான் பொன் என்பான்; தராசிலே வைத்து நிறு என்பான்; எங்கும் போகாமலே இங்கேயே இரு. 11795
தங்கம் எல்லாம் தவிட்டுக்கு மாறுகிறது.
தங்கம் செய்யாததைச் சங்கம் செய்யும்.
தங்கம் தரையிலே கிடக்கிறது; ஒரு காசு நார்த்தங்காய் உறி கட்டித் தொங்குகிறது.
தங்கம் தரையிலே; தவிடு பானையிலே.
தங்கம் புடத்தில் வைத்தாலும் தன் நிறம் போகாது. 11800
தங்கம் விற்ற கையால் தவிடு விற்க வேணுமா?
தங்க முடி சூட்டினாலும் தங்கள் குணம் விடார் கசடர்.
- (ஆடினாலும் தங்கள் குலம் போகாது, கயவர்.)
தங்கமும் பொன்னும் தரையிலே; ஒரு காசு நார்த்தங்காய் உறியிலே.
தங்க வேலை அறியாத ஆசாரியும் இல்லை; தாய்ப் பால் குடிக்காத குழந்தையும் இல்லை.
தங்கின வியாழன் தன்னோடு மூன்று பேர். 11805
தச்ச வாசல் இருக்கத் தாளித்த வாசலாலே புறப்படுகிறது.
- (தக்க.)
தச்சன் அடிக்கக் கடா இழுத்தது.
தச்சன் அடித்த தலைவாசல் எல்லாம் உச்சி கடிக்க உலாவித் திரிகிறான்.
- (திரிந்தேன்.)
தச்சன் அடித்த வாசலில் எல்லாம் தலை குனிகிறது.
- (தாழக் குனிகிறது.)
தச்சன் கருமான் தள்ளுபடி, மற்றவை எல்லாம் ஏறுபடி. 11810
தச்சன் கோணல் நிமிர்ந்தான்; தப்பிதச் சொல்லாகப் பேசாதே.
தச்சன் தொட்டு என்றால் தச்சத்தி அரிசி என்பாள்.
தச்சன் பெண்சாதி அறுத்தால் என்ன? கொல்லன் பெண்சாதி கூலிக்கு அறுத்தால் என்ன?
தச்சன் பெண்சாதி தரையிலே; கொல்லர் பெண்சாதி கொம்பிலே.
தச்சன் லொட்டு என்றால் அவன் பெண்டாட்டி துட்டு என்பான். 11815
தச்சன் வீட்டில் தயிரும் எச்சன் வீட்டில் சோறும் எப்படிச் சேரும்?
தச்சன் வீட்டில் பால் சோற்றை நக்காதே, வெள்ளாளா.
தச்சன் வீட்டுப் பாயசம்.
தசமி எண்ணெய் தந்தால் தேய்த்துக் கொள்ளலாம்; ஏகாதசி எண்ணெய் இரந்தும் தேய்க்கலாம்; துவாதசி எண்ணெய் தந்தாலும் கூடாது.
தச வாக்யேஷு பண்டித: 11820
தசை கண்டு கத்தியை நாட்ட வேண்டும்.
தஞ்சம் என்ற பேரைக் கெஞ்ச அடிப்பதா?
தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
தஞ்சாவூர் எத்தனும் திருவாரூர் எத்தனும் கூடினாற் போல.
தஞ்சாவூருக்கப் போனக்கால், சண்டை கிண்டை வந்தக்கால், ஈட்டி கிட்டி உடைந்தக்கால், ஊசிக்கு இத்தனை இரும்பு தருகிறேன். 11825
தஞ்சி தாப்பாளு, தச்சப் பையன் கூத்தியார்.
தஞ்சையில் திருட இங்கிருந்தே பம்ப வேணுமா?
தட்சிணை இல்லாவிட்டாலும் அப்பத்தில், பார்த்துக் கொள்ளலாம்.
- (தட்சிணை குறைந்தால்; பார்த்துக் கொள்கிறேன், மலையாளப் பார் பான் கூற்று.)
தட்சிணையோடே பட்சணமாம்.
தட்டத் தட்ட எள்ளு; கொட்டக் கொட்டக் கேழ்வரகு. 11830
தட்டார்கள் புரட்டைக் கூற எட்டாறு வழியும் போதா.
தட்டார் தட்டினால் வாழ்வர்; தட்டாமல் போனால் தாழ்வார்.
தட்டாரச் சித்துத் தரையிலே; வண்ணாரச் சித்து வழியிலே.
- (சித்துக்கு வகை இல்லை.)
தட்டாரச் சித்துத் தறிசித்து; வண்ணாரச் சித்துக்கு வராது.
தட்டாரப் பூச்சி தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும். 11835
தட்டான் ஆத்தாளுக்குத் தாலி செய்தாலும் மாப்பொன்னில் காப்பொன் திருடுவான்.
தட்டான் இடத்தில் இருக்கிறது; அல்லது கும்பிடு சட்டியில் இருக்கிறது.
தட்டான் காப்பொன்னிலும் மாப்பொன் எடுப்பான்.
தட்டான் கொசு தடுமாறுகிறது போல.
தட்டான் தட்டினால் தட்டாத்தி துட்டு என்பாள். 11840
தட்டான் தாய்ப் பொன்னிலும் மாப்பொன் திருடுவாள்.
தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
- (பெய்யும்.)
தட்டான் பறந்தான் கிட்டமழை.
தட்டான் பொன் அறிவான்; தன் பெண்களுக்கு ஒன்று செய்யான்.
தட்டானிடம் இருந்தால் என்ன? கும்மிட்டியில் இருந்தால் என்ன? 11845
தட்டானுக்குப் பயந்தல்லவோ, அணிந்தான் சிவன் சர்ப்பத்தை?
தட்டானும் செட்டியும் ஒன்று ஆனால் தங்கம் கொடுத்தவன் வாயிலே மண்.
தட்டானும் செட்டியும் தலைப்பட்டாற் போல.
தட்டானும் செட்டியும் கண்; சட்டியும் பானையும் மண்.
தட்டானைச் சேர்ந்த தறிதலை. 11850
தட்டானைத் தலையில் அடித்து வண்ணாணை வழி பறித்தது.
- (வண்ணானை வழியிலே மறி.)
தட்டிக் கொடுத்தால் தம்பி தலைவிரித்து ஆடுவான்.
தட்டிப் பேச ஆள்இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
தட்டிப் போட்ட வடையைத் திருப்பிப் போட நாதி இல்லை.
- (ஆளும் இல்லை.)
தட்டிப் போட்ட வறட்டியைத் திருப்பிப் போட நாதி இல்லை. 11855
- (புரட்டிப் போட ஆள் இல்லை.)
தட்டினால் தட்டான்; தட்டா விட்டால் கெட்டான்.
தட்டுக் கெட்ட சால்ஜாப்பு.
தட்டுக் கெட்டு முறுக்குப் பாய்ந்து கிடக்கிறது.
தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவள் பெயர் கூந்தல் அழகி.
தடவிப் பிடிக்க மயிர் இல்லை; அவன் பெயர் சவரிராஜப் பெருமாள். 11860
தடி எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனா?
- (செங்கல்பட்டு வழக்கு.)
தடி எடுத்தவன் தண்டல்காரன்.
தடிக்கு அஞ்சிக் குரங்கு ஆடினது போல.
தடிக்கு மிகுந்த மிடா ஆனால் என்ன செய்யலாம்?
- (தடிக்கு மிஞ்சின.)
தடிக்கு மிஞ்சின மாடா? 11865
தடிக்கு மிஞ்சின மிடாவானால் என்ன செய்யலாம்?
தடித் திருவாரூர்.
தடி பிடிக்கக் கை இல்லை; அவன் பெயர் செளரியப் பெருமாள்.
தடி மழை விட்டும் செடி மழை நிற்கவில்லை.
தடிமனும் தலையிடியும் தன் தனக்கு வந்தால் தெரியும். 11870
- (தடிமன்-ஜலதோஷம். யாழ்ப்பாண வழக்கு.)
தடியங்காய் திருடினவன் தோளைத் தடவிப் பார்த்துக் கொண்டானாம்.
தடுக்கில் பிள்ளை தடுக்கிலேயா?
- (யாழ்ப்பாண வழக்கு.)
தடுக்கின் கீழே நுழைந்ததால், கோலத்தின் கீழே நுழைகிறான்.
- (நுழைகிறது.)
தடுங்கித் தள்ளிப் பேச்சுப் பேசுகிறது.
தடுக்கு விழுந்தால் தங்கப் போகிணி; எகிறி விழுந்தால் இருப்புச் சட்டி. 11875
தடுக்கி விழுந்தால் பிடிக்குப் பாதி.
தடும் புடும் பயம் நாஸ்தி; நிஸப்தம் ப்ராண சங்கடம்.
தடைக்கு அஞ்சாத பாம்பு.
தண்ட சோற்றுக்காரன் குண்டு போட்டால் வருவான்.
- (தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.)
தண்ட சோற்றுத் தடிராமன். 11880
தண்ட சோற்று ராமா, குண்டு போட்டு வாடா.
தண்டத்துக்கு அகப்படும்; பிண்டத்துக்கு அகப்படாது.
தண்டத்துக்குப் பணமும்திவசத்துக்குக்கறியும் அகப்படும்.
- (காசும் வந்துவிடும்.)
தண்டத்துக்குப் பணமும் திவசத்துக்குக் காசும் அகப்படும்.
- (காசும் வந்துவிடும்.)
தண்டத்துக்குப் பெற்றுப் பிண்டத்துக்கு வளர்த்தேன். 11885
தண்டத்துக்கு வந்தான் பண்டாரவாடையான்.
தண்டரிந்த முக்கு; தலைக்கு இரண்டு அமுக்கு.
தண்டிகை ஏறப் பணம் இருக்கிறது; தலையில் கூடத் துணி இல்லை.
- (கட்ட.)
தண்டில் போனால் இரட்டிப்புச் சம்பளம்.
தண்டிலே போனால் இரண்டிலே ஒன்று. 11890
- (தண்டு-படை.)
தண்டுக்கு ரொட்டி சுட்டுப் போடுகிறவன்.
தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; அடிபிடிக்காரனுக்கு ஆனமும் சோறும்.
தண்டு முண்டுக்காரனுக்குத் தயிறும் சோறும்; விசுவாசக்காரனுக்கு வெந்நீர்க் சோறு.
தண்டை இட அத்தை இல்லாவிட்டாலும் சண்டை இட அத்தை உண்டு.
தண்ணீர் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு. 11895
தண்ணீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
தண்ணீர் என்று சொன்னால் நெருப்பு அவியுமா?
தண்ணீர்க்குடம் உடைந்து தவியாய்த் தவிக்கையிலே கோவணத்தை அவிழ்த்துக் கொண்டு குதியாய்க் குதிக்கிறாயே!
தண்ணீர் கண்டாயா? பால் கண்டாயா?
- (பார்.)
தண்ணீர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! தயிர்க்குடம் உடைந்தாலும் ஐயோ! 11900
தண்ணீர் காட்டினான்.
தண்ணீர் கிடக்கும் நாக்குத் தலை கீழாய்ப் புரளும்.
தண்ணீர் குடித்த வயிறும் தென்னோலை இட்ட காதும் சரி.
தண்ணீர் தகராறு, பிள்ளை பதினாறு.
தண்ணீர் தவளை குடித்ததும் குடியாததும், யார் அறிவார்? 11905
தண்ணீர் பட்ட பாடு.
தண்ணீர் மிஞ்சினால் உப்பு; உப்பு மிஞ்சினால் தண்ணீர்.
தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும்.
தண்ணீரில் இருக்கிற தவளை குடித்ததைக் கண்டதார்? குடியாததைக் கண்டதார்?
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்கிறான். 11910
தண்ணீரில் இறந்தவரிலும் சாராயத்தில் இறந்தவர் அதிகம்.
தண்ணீரில் உள்ள தவளை தண்ணீர் குடித்ததோ, இல்லையோ?
தண்ணீரில் மூச்சு விட்டால் தலைக்கு மேலே.
தண்ணீரில் விழுந்தவர்களுக்கும் தடுமாறி நிற்பவர்களுக்கும் ஆனைப்பலம் வந்து விடும்.
தண்ணீரிலே தடம் பிடிப்பான். 11915
தண்ணீரிலே போட்டாலும் நனையாது; கரையில் போட்டாலும் காயாது.
தண்ணீரிலேயே தன் பலம் காட்டுகிறது.
தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
- (வளர்ந்த உப்பு.)
தண்ணீருக்குள் கிடைக்கும் தவளை தண்ணீரைக் குடித்ததும் குடிக்காததும் யாருக்குத் தெரியும்?
தண்ணீரின் கீழே மூச்சுவிட்டால் தலைக்கு மேலே. 11920
- (குசு விட்டால்.)
தண்ணீருக்குள் குசுவினாலும் தலைக்கு மேலே வந்துவிடும்.
தண்ணீரும் கோபமும் தாழ்ந்த இடத்திலே.
தண்ணீரும் தாமரையும் போல.
தண்ணீரும் பாசியும் கலந்தாற் போல.
தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும். 11925
தண்ணீரைத் தடிகொண்டு அடித்தாலும் தண்ணீரும் தண்ணீரும் விலகுமா?
தண்ணீரையும் தாயையும் பழிக்கலாமா?
தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
தத்திக் குதித்துத் தலைகீழே விழுகிறது.
தத்தி விழுந்தால் தரையும் பொறுக்காது. 11930
தத்துவம் அறிந்தவன் தவசி.
தந்தவன் இல்லை என்றால் வந்தவன் வழியைப் பார்க்கிறான்.
- (வந்தவன் வந்த வழியை பார்க்க வேண்டும்.)
தந்தனம் பாடுகிறான்.
தந்தானா என்பது பாட்டுக்கு அடையாளம்.
தந்தால் ஒன்று; தராவிட்டால் ஒன்று. 11935
தந்தி தாழ்ப்பாள் தச்சப் பையன் கூத்தியார்.
தந்திரத்தால் தேங்காய் உடைக்கலாமா?
தந்திரம் படைத்தவன் தரணி முழுவதையும் ஆள்வான்.
தந்திரம் பெரிதா? மந்திரம் பெரிதா?
தந்தை எவ்வழி, தனையன் அவ்வழி. 11940
- (புதல்வன்.)
தந்தைக்குத் தலைப் பிள்ளை, தாய்க்குக் கடைப் பிள்ளை.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தப்படி எடுத்துத் தாடையில் போடாதே.
தப்பில் ஆனவனை உப்பிலே போடு.
- (தப்பிலி.)
தப்பு அடித்தவன் தாதன்; சங்கு ஊதினவன் ஆண்டி. 11945
- (தப்பை எடுத்தவன்.)
தப்புப் புடலுக்கு நல்ல ருசி.
தப்பும் திப்பும் தாறுமாறும்.
தபசே அணிகலன்; தாழ்மையே மேன்மை.
தம் இனம் தம்மைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான். 11950
- (உள்ளான் சண்டைக்கு.)
தம்பி உழுவான்; மேழி எட்டாது.
- (மேழி - கலப்பை.)
தம்பி கால் நடையிலே; பேச்சுப் பல்லக்கிலே.
தம்பி குசு தவிடு மணக்கும்; வேற்றுக் குசுவாக இருக்கிறது, ஏற்றடி விளக்கு.
தம்பி சமர்த்தன்; உப்பு இல்லாமல் கலக் கஞ்சி குடிப்பான்.
தப்பி சிம்புகிற சிம்பலுக்குத் தயிரும் சோறும் சாப்பாடு. 11955
தம்பி சோற்றுக்குச் சூறாவளி: வேலைக்கு வாரா
வழி.
தம்படி நாஸ்தி; தடபுடல் ஜாஸ்தி.
தம்பி தலை எடுத்துத் தறி முதலும் பாழாச்சு.
தம்பி தாய் மொழி கற்கத் தாளம் போடுகிறான்; அண்ணன் அந்நிய மொழியிலே ஆர்ப்பாட்டம் செய்கிறானாம்.
தம்பி தெள்ளு மணி; திருட்டுக்கு நவமணி. 11960
தம்பி படித்த படிப்புக்குத் தயிரும் பழையதுமாம்;
ஈரவங்காயமாம்,எலுமிச்சங்காய் ஊறுகாயாம்.
தம்பி பள்ளிக்கூடத்தான்.
தம்பி பிடித்த முயலுக்கு மூன்றேகால்.
தம்பி பிள்ளையாண்டான் அலுவல், தலை சொறிய நேரம் இல்லை.
தம்பி பிறக்கத் தரைமட்டம் ஆச்சு. 11965
தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி.
தம்பி பேச்சைத் தண்ணீரில்தான் எழுத வேண்டும்.
தம்பி மொண்டது சமுத்திரம் போல.
தம்பி ரோசத்தில் ராஜபாளயத்தான்.
- (நாய் வகை.)
தம்பி வெள்ளோலை வாசிக்கிறான். 11970
- (வெள்ளோலை சங்கரமூர்த்தி வாசிக்கிறான்.)
தம்பி ஸ்ரீரங்கத்தில் கோதானம் கொடுக்கிறான்; தன்னைப் பெற்ற தாய் கும்பகோணத்தில் கெண்டிப் பிச்சை எடுக்கிறாள்.
- (கெஞ்சி.)
தம்ளர் தீர்த்தம் இல்லை; பேர் கங்கா பவானி.
தமக்கு மருவார் தாம்.
- (பழமொழி நானூறு.)
தமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குக் சகுனப்பிழை வேண்டும்.
தமிழுக்கு இருவர் கதி. 11975
- (கதி-கம்பரும் திருவள்ளுவரும்.)
தமிழுக்கு இருவர்; தத்துவத்துக்கு ஒருவர்.
தமையன் தந்தைக்குச் சமம்; தம்பி பிள்ளைக்குச் சமம்.
தயிர் குடிக்க வந்த பூனை சட்டியை நக்குமா?
தயிர்ப் பானை உடைந்தால் காக்கைக்கு விருந்து.
தயிர்ப்பானையை உடைத்துக் காகத்துக்கு அமுது இட்டாற் போல. 11980
தயிர்ப் பானையை உடைத்து நாய்களுக்கு பங்கு வைத்தாற் போல.
தயிருக்குச் சட்டி ஆதாரம்; சட்டிக்குத் தயிர் ஆதாரம்.
- (ஆதரவு.)
தயிரும் பழையதும் கேட்டான்; கயிறும் பழுதையும் பெற்றான்.
தயை தாக்ஷிண்யம் சற்றாகிலும் இல்லை.
தர்மத்துக்கு அழிவு சற்றும் வராது. 11985
தர்மத்துக்கு உள்ளும் பாவத்துக்குப் புறம்பும்.
தர்மத்துக்குத் தாழ்ச்சி வராது.
தர்மத்துக்குத் தானம் பண்ணுகிற மாட்டைப் பல்லைப் பிடித்துப் பதம் பார்க்கிறதா?
தர்மத்தைப் பாவம் வெல்லாது.
- (கொல்லாது.)
தர்ம புத்திரனுக்குச் சகுனி தோன்றினாற் போல. 11990
தர்மம் உள்ள இடத்தில் ஜயம்.
தர்மம் கெடின் நாடு கெடும்.
தர்மம் தலை காக்கும்.
தர்மமே ஜயம்.
தரகுக்காரப் பயலுக்குத் தன் காடு பிறன் காடு ஏது? 11995
தரத்தர வாங்கிக் கொள்ளுகிறாயா? தலையை முழுகிப் போட்டுப் போகட்டுமா?
தராதரம் அறிந்து புராதனம் படி.
தரித்திரப் பட்டாலும் தைரியம் விடாதே.
தரித்திரப் பட்டி மகன் பேர் தனபால் செட்டி.
தரித்திரம் அறியாப் பெண்டாட்டியால் பயன் இல்லை. 12000
தரித்திரம் பிடித்தவள் தலைமுழுகப் போனாளாம்; அப்போதே பிடித்ததாம் மழையும் தூற்றலும்.
தரித்திரம் பிடித்தவள் தலை முழுகப் போனாளாம்; ஏகாதசி விரதம் எதிரே வந்ததாம்.
தரித்திரன் சந்தைக்குப் போனால் தங்கமும் பித்தளை ஆகும்.
தரித்திரனுக்கு உடம்பெல்லாம் வயிறு.
தரித்திரனுக்குப் பணம் கிடைத்தது போல. 12005
- (புதையல் கிடைத்தது போல.)
தரித்திரனுக்கு விஷம் கோஷ்டி.
தரைக்குப் பண்ணாடி; மலைக்கு மண்ணாடி.
தரையில் படுத்தவன் பாய்க்குப் போவான்; பாயில் படுத்தவன் தரைக்கு வருவான்.
தரக்கு வந்தால் சரக்கு விற்கும்.
- (தரகு வந்தால்.)
தரை நீக்கிக் கரணமா? 12010
தரையில் தேளும் தண்ணீரில் தேளி மீனும் கொட்டியது போல.
தலை அளவும் வேண்டாம்; அடி அளவும் வேண்டாம்; குறுக்கே அள அடா படியை.
தலை ஆட்டித் தம்பிரான்.
தலை இடிக்குத் தலையணையை மாற்றி ஆவது என்ன?
தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும். 12015
- (சங்கடமும்.)
தலை இருக்க வால் ஆடுமா?
தலை இருக்கிற இடத்தில் கழுத்து வரட்டும் பார்த்துக் கொள்வோம்.
தலை எழுத்து இருக்கத் தந்திரத்தால் ஆவது என்ன?
தலை எழுத்துத் தலையைச் சிரைத்தாற் போகுமா?
தலை எழுத்தை அரி என்று சொல்வார், அதல்ல. 12020
தலை எழுத்தோ, சிலை எழுத்தோ?
தலைக்கு ஏற்ற குல்லாயா? குல்லாய்க்கு ஏற்ற தலையா?
தலைக்கு ஏறினால் தனக்குத் தெரியும்.
தலைக்குத் தலை நாட்டாண்மையாய் இருக்கிறது.
- (நாயகமாய்.)
தலைக்குத் தலை பண்ணாட்டு. 12025
தலைக்குத் தலை மூப்பு.
தலைக்குத் தலை பெரிய தனம்; உலைக்குத்தான் அரிசி இல்லை.
தலைக்கு மிஞ்சிய தலைப்பாகை.
தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; காலுக்கு மிஞ்சின உபகாரம் இல்லை.
தலைக்கு மிஞ்சின ஆக்கினை இல்லை; கோவணத்திற்கு மிஞ்சின தரித்திரம் இல்லை. 12030
- (தலைக்கு மீறிய தண்டமும்.)
தலைக்கு மிஞ்சின மிடா.
தலைக்கு முடியோ? காலுக்கு முடியோ?
தலைக்கு மேல் ஐசுவரியம் இருந்தாலும் தலையணை மேல் உட்காராதே.
- (தலைக்கு மேல் போனாலும்.)
தலைக்கு மேல் வெள்ளம் போகும் போது சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?
- (தலைக்கு மேல் ஓடின தண்ணீர்.)
தலைக்கு மேலே கை காட்டுகிறதா? 12035
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு.
- (தலைபோக வந்தது கையோடு போச்சு.)
தலைக்கு வந்தது மயிரோடே போச்சு.
தலைக்கு வேறே, தாடிக்கு வேறா?
- (சிகைக்காய்.)
தலை கண்டால் பெண் சிணுங்கும்.
தலை கழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும். 12040
- (சுழன்றவனுக்கு.)
தலை கழுத்தில் நிற்கவில்லை.
- (-செருக்கு.)
தலைகீழ் நின்றாலும் வராது.
தலைகீழ்ப் பாடம்.
தலைகீழாய் இருந்து தபசு செய்தாலும் கூடுகிற காலந்தான் வந்து கூட வேண்டும்.
- (வந்தால்தான் கூடும்.)
தலைகீழாய் நிற்கிறான். 12045
தலைச்சன் பிள்ளைக்காரி இடைச்சன் பிள்ளைக்காரிக்குத் தைரியம் சொன்னாளாம்.
- (புத்தி சொன்னாளாம்.மருத்துவம் பார்த்தாளாம்.)
தலைச்சன் பிள்ளைக்காரிக்குத் தாலாட்டும், தாலி அறுத்தவளுக்கு ஒப்பாரியும் தாமே வரும்.
- (அகமுடையான் செத்தவளுக்கு.)
தலைச்சன் பிள்ளைக்கு இல்லாத தண்டையும் சதங்கையும் இடைச்சன் பிள்ளைக்கு வந்தனவா?
தலைச்சனுக்குத் தாலாட்டும் கணவன் செத்தால் அழுகையும் தாமே வரும்.
தலைச் சுமை தந்தான் என்று தாழ்வாய் எண்ணாதே. 12050
தலை சுழன்றவனுக்கு உலகமெல்லாம் சுற்றும்.
தலை சொறியக் கொள்ளி தானே வைத்துக் கொண்டது.
தலை சொறியக் கொள்ளியா?
- (கொள்ளி போல.)
தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
- (பிழைத்தது பாக்கியம்.)
தலை தெரியாமல் எண்ணெய் தேய்ப்பதா? 12055
தலை தெரியாமல் தத்தித் தடவுகிறது.
தலை தெறிக்க ஓடி வருதல்.
தலை நோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் தீருமா?
தலை நோவும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.
தலைப்பாகை மாற்றுபவன். 12060
தலைப் பிள்ளை ஆண்; தப்பினால் பெண்.
தலைப் புறத்தைத் தந்தால் தருவேன் மருந்துப் பையை.
தலை பெரிது என்று கல்லில் முட்டிக் கொள்ளலாமா?
தலை போக வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
- (பாரதக் கதை.)
தலை போனாலும் விலையைச் சொல்லாதே. 12065
தலை மயக்கமே சர்வ மயக்கம்.
தலைமாட்டில் சொல்வன் தலையணை மந்திரம்.
தலைமாட்டிற்குக் கொள்ளி தானே தேடிக் கொண்டாய்.
- (கொண்டான்.)
தலைமுறை இல்லாத தாழ்வு.
- (தலைமுறையில்.)
தலைமுறை தலைமுறையாய் மொட்டை; அவள் பேர் கூந்தலழகி. 12070
தலைமேல் அம்பு பறந்தாலும் நிலையிற் பிரிதல் ஆகாது.
தலைமேல் ஓடின வெள்ளம் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன?
தலைமேலே இடித்தால்தான் குனிவான்.
- (குனியான்.)
தலைமேலே தலை இருக்கிறதா?
தலைமொட்டை; கூந்தலழகி என்று பெயர். 12075
தலையார் உறவு தலைக்கு.
தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
- (வேண்டியமட்டும் திருடலாம்.)
தலையாரி வீட்டில் திருடி அதிகாரி வீட்டில் ஒளித்தது போல.
தலையாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும்.
தலையாலே மலை பிளப்பான். 12080
தலையில் இடித்த பின் தாழக் குனிவான்.
- (பிறகா. குனிகிறது.)
தலையில் இடித்தும் குனியாதா?
தலையில் எழுத்து இருக்கத் தந்திரத்தால் வெல்லலாமா?
தலையில் எழுத்துக்குத் தாய் என்ன செய்வாள்?
தலையில் களிமண்ணா இருக்கிறது? 12085
தலையில் விடித்தால் அரைப்பு; இலையில் விடித்தால் பருப்பு.
தலையிலே, இடி விழ.
தலையிலே கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்ளலாமா?
தலையிலே விறகுக் கட்டு; காலிலே தந்தப் பாதுசையா?
தலையும் தலையும் பொருதால் மலையும் வந்து பொறுக்கும். 12090
- (மோதினால், பொருத்தினால்.)
தலையும் நனைத்துக் கட்டியும் நாட்டின பிறகா?
தலையைச் சுற்றிப் பிடிக்கிறான்.
தலையைச் சுற்றியும் வாயாலே.
தலையைச் சுற்றுகிற மாடும் கூரையைப் பிடுங்கித் தின்கிற மாடும் குடும்பத்துக்கு ஆகா.
தலையைத் தடவி மூளையை உரிய வேண்டாம். 12095
- (உறிஞ்ச வேண்டாம். உறிஞ்சுவான்.)
தலையைத் திருகி உரலில் போட்டு இடிக்கச்சே, சங்குசக்கரம் கடுக்கள் உடைந்து போகப் போகிறது என்றானாம்.
தலையும் நனைத்தாச்சு; கத்தியும் வைத்தாச்சு.
தலையை வெட்டிச் சமுத்திரத்தின்மேற் போடலாமா?
தலைவலிக்குத் தலை அணையைத் தானே மாற்றிப் போட்டாற் போல.
தலைவலி போகத் திருகுவலி வந்தது. 12100
- (திரு வலி.)
தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
தலைவலியும் பசியும் தனக்கு வந்தால் தெரியும்.
- (தலையிடியும்.)
தலைவன் சொற் கேள்.
- (+நன்னெறி தவறேல்.)
தலைவன் நிற்கத் தண்டு நிற்கும்.
- (தண்டு-சேனை.)
தலைவன் மயங்கச் சர்வமும் மயங்கும். 12105
தவசிக்குத் தயிரும் சாதமும் விசுவாசிக்கு வெந்நீரும் பருக்கையும்.
தவசிப்பிள்ளை நமசிவாயம் கையாசாரம்.
தவசுக்கு என்று வந்து அச்சப்படுகிறதா?
தவசுக்குத் தனிமையும் தமிழுக்குத் துணையும்.
தவசே அணிகலன்; தாழ்மையே மேன்மை. 12110
தவத்தில் இருந்தால் தலைவனைக் காணலாம்.
தவத்து அளவே ஆடுமாம் தான் பெற்ற செல்வம்.
தவத்துக்கு ஒருவர்; கல்விக்கு இருவர்; வழிக்கு மூவர்.
தவத்துக்கு ஒருவர்; தமிழுக்கு இருவர்.
- (கல்விக்கு.)
தவத்தோர் மனம் அழுங்கச் செய்யக் கூடாது. 12115
- (மனம் முறிய.)
தவம் இருக்க அவம் செய்தாற் போல்.
தவழும் குழந்தைக்கு நடக்கும் குழந்தை யமன்.
தவளை கத்தினால் உடனே மழை.
தவளை கூவிச் சாகும்.
தவளை தண்ணீருக்கு இழுக்கிறது; ஓந்தி மேட்டுக்கு இழுக்கிறது. 12120
- (ஓணான்.)
தவளை தன் வாயால் கெடும்.
தவளை தாமரைக்குஅருகில் இருந்தும் அதன் தேனை உண்ணாது.
தவளை வாழ்வும் தனிசு வாழ்வும் ஆகா.
- (தனிசு-கடன்.)
தவிட்டுக்கு ஆசைப்பட்டுத் தீட்டிய அரிசியை நாய் கொண்டு போனதாம்.
- (தவிட்டுக்கு மன்றாடி)
தவிட்டுக்கு வந்த கைதான் தங்கத்துக்கும் வரும். 12125
- (தனத்துக்கும்.)
தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை தன் பிள்ளை ஆகுமா?
தவிட்டுப் பானைக்குள்ளே எலி குமரி ஆனது போலே.
தவிட்டை நம்பிப் போகச் சம்பா அரிசியை நாய் கொண்டு போயிற்று.
தவிடு அள்ளின கை தனம் அள்ளும்.
தவிடு தவிடு என்றால் குருடு குருடு என்கிறான். 12130
தவிடு தின்கிறதில் ஒய்யாரம் வேறா?
தவிடு தின்பவன் அமுதை விரும்புவானா?
தவிடு தின்பவனை எக்காளம் ஊதச் சொன்னாற் போல.
தவிடு தின்னும் அம்மையாருக்கு விளக்குப் பிடிக்க ஓர் ஆளா?
தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடிப்பவன் மந்திரி. 12135
தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத பாவி.
தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு; பிள்ளை பெற்றவளுக்குப் பால் உண்டு.
தழைத்த மரம் வளையாத கணக்கும் உண்டோ?
- (அருட்பா.)
தழைந்து போனால் குழைந்து வருவான்.
தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளைப் பிடிப்பானேன்? 12140
தள்ளத் தள்ளத் தாழ்ப்பாளை மெள்ள மெள்ளத் திறப்பானேன்?
தள்ளரிய தாறு வந்து தாய் வாழையைக் கெடுத்தாற் போல. ⬤
தள்ளாதவன் மனைவி பிள்ளைத்தாய்ச்சி; தள்ளிவிட்டு ஓடுதாம் குள்ளநரி.
தள்ளாவிட்டால் ஆசாரம் இல்லை; இல்லாவிட்டால் உபசாரம் இல்லை.
தள்ளாதவனுக்கு ஆசாரம் இல்லை; தரித்திரனுக்கு உபசாரம் இல்லை. 12145
- (இல்லாதவருக்கு )
தள்ளி ஊட்டினது தலைக்குட்டி.
தள்ளிப் பேசினாலும் தழுவிக் குழைகிறது.
- (குழைகிறதா?)
தளபதி இல்லாத தளம், கரை இல்லாத குளம்.
தளர்ந்த கிழவனுக்குச் சோறும், இடிந்த சுவருக்கு மண்ணும் உண்டானால் சில நாட்கள் நிற்கும்.
தறுதலைக்குத் தயவு ஏது? 12150
தறுதலைக்கு ராஜா சவுக்கடி.
தன் அழகு தனக்குத் தெரியாது.
தன் அறிவு வேணும்; இல்லை என்றால் சொல்லறிவு வேணும்.
தன் ஆள் இல்லா வேளாண்மையும்; தான் உழாத நிலமும் தரிசு.
தன் இச்சையை அடக்காவிட்டால் அது தன்னையே வருத்தும். 12155
- (ஆளும்.)
தன் இனம் தன்னைக் காக்கும்; வேலி பயிரைக் காக்கும்.
தன் உயிர் கருப்பட்டி.
- (வெல்லம்.)
தன் உயிர் தனக்குச் சர்க்கரை.
தன் உயிர் போல மண் உயிர் காக்க.
- (திணை. எண்ணுவர்.)
தன் உயிரைத் தின்கிறான். 12160
தன் உயிரைப் போல மண்ணுயிருக்கு இரங்கு.
- (மண்ணுயிரை நினை. மண்ணுயிரையும் காக்கவேண்டும்.)
தன் ஊர் கிழக்கு, தங்கின ஊர் மேற்கு, வேட்டகம் தெற்கு, வேண்டா ஊர் வடக்கு.
- (தலைவைத்துப் படுக்கும் திசை.)
தன் ஊர்ச் சுடுகாட்டுக்கும் அயல் ஊர் ஆற்றுக்கும் அஞ்ச வேண்டும்.
தன் ஊரில் தாய் அடிக்காதவன் அயலூரில் ஆனை அடித்தானாம்.
தன் ஊருக்கு அன்னம், பிற ஊருக்குக் காகம். 12165
தன் ஊருக்கு ஆனை; அயலூருக்குப் பூனை.
- (மன் ஊருக்குப் பூனை.)
தன் ஊருக்குக் காளை; அயல் ஊருக்குப் பூனை.
தன் ஊருக்குப் புலி; அசலூருக்கு நரி.
தன் கண் இரண்டும் போனாலும் அயலான் கண் ஒன்றாவது போகவேண்டும்.
தன் கண் தனக்குத் தெரியாது. 12170
தன் கண்ணைக் கொடுத்து வெங்கண்ணை வாங்க வேண்டும்.
தன் கஷ்டத்தை விடப் பெண் கஷ்டம் பொல்லாது.
தன் காசு செல்லாவிட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.
தின் காயம் தனக்குத் தித்திப்பு.
தன் காரியதுரந்தான், பிறர் காரியம் வழவழ என்று விடுகிறவன். 12175
தன் காரியப் புலி.
தன் காரியம் என்றால் தன் சீலையும் பதைக்கும்.
தன் காரியம் தனக்குத் தித்திப்பு.
தன் காரியம் பாராதவன் சதைக்கு ஒரு புழுப் புழுப்பான்.
- (சதையால்.)
தன் காரியம் ஜரூர், சாமி காரியம் வழவழா. 12180
தன் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டும்.
- (பார்த்தான் நடந்தால் போதாதோ?)
தன் காலைத் தானே கும்பிட்டுக் கொள்ளலாமா?
தன் கீர்த்தியை விரும்பாதவனைத் தள்ளிவிடு.
தன் குஞ்சு என்று வளர்க்குமாம், குயிற் குஞ்சைக் காகம்.
தன் குணம் போல் தனக்கு வரும் வாழ்வு. 12185
தன் குற்றம் இருக்கப் பிறர் குற்றம் பார்க்கிறதா?
தன் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது.
- (தெரியாது.)
தன் குற்றம் தனக்குத் தெரியாது.
தன் குற்றம் பார்ப்பவர் இங்கு இல்லை.
தன் குற்றம் முதுகில்; பிறர் குற்றம் எதிரில். 12190
தன் குற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியா.
தன் குற்றமும் முதுகும் தனக்குத் தெரியா.
தன் கை ஆயுதம் பிறன் கையிற் கொடுப்பவன் பதர்.
தன் கைத் தவிடு உதவுவது போலத் தாயார் கைத்தனம் உதவாது.
- (தன் கைத்தனம்.)
தன் கையே கண்ணைக் குத்தினாற் போல. 12195
தன் கையே தனக்கு உதவி.
- (உதவும்.)
தன் கொல்லையில் கீரையை வைத்துக் கொண்டு அசல் வீட்டுக்குப் போவனேன்?
தன் சோற்றில் உள்ள கல்லைப் பொறுக்கமாட்டாதவன் சொக்கனார் கோயில் மதிற் கல்லைப் பிடுங்கப் போனானாம்.
தன் சோற்றைத் தின்று தரையில் இருந்தால் வீண் சொல் கேட்க விதியோ!
தன் சோறு தின்று, தன் புடைவை கட்டி, விண் சொல் கேட்க விதியோ? 12200
- (தன் துகில் தரிப்பார்க்கு, விதி ஏன்?)
தன் தப்புப் பிறருக்குச் சந்து.
தன் தலையில் அக்ஷதை போட்டுக் கொள்கிறான்.
தன் தார் தார் பரதார புத்திரன்.
- (தாரதார.)
தன் தொழிலைப் பாராதவனுக்குத் தலையளவு பஞ்சம்.
தன் நாயை உசுப்பியே தன்னைக் கடிக்கச் செய்யலாம். 12205
தன் நாற்றத்தைத் தானே. கிளப்பிக் கொள்கிறதா?
தன் நிலத்தில் குறுமுயல் தந்தியிலும் வலிது.
- (யானையிலும் :)
தன் நிழல் தன்னைக் காக்கும்.
தன் நிழல் தன்னோடே வரும்.
தன் நெஞ்சு அறியாத பொய் இல்லை; தாய் அறியாத சூல் இல்லை. 12210
தன் நெஞ்சே தன்னைச் சுடும்.
தன் நோய்க்குத் தானே மருந்து.
- (பழமொழி நானூறு.)
தன் பணம் செல்லா விட்டால் தட்டானைக் கட்டி அடித்தானாம்.
- (தாதனை.)
தன் பல்லைக் குத்திப் பிறர் மூக்கில் வாசனை காட்டுவது போல.
தன் பல்லைக் குத்தித் தன்னையே நாத்திக் கொள்ளலாமா? 12215
- (நாற்றி.)
தன் பல்லைப் பிடுங்கிப் பிறர் வாயில் வைக்கலாமா?
தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்.
- (கொண்டு.)
தன் பாவம் தவினோடே.
தன் பானை சாயப் பிடிக்கிறது இல்லை.
- (பிடிப்பார் உண்டோ?)
தன் பிள்ளை என்று தலைமேல் வைத்துக் கொள்ளலாமா? 12220
தன் பிள்ளைக்குப் பதைக்காதவள் சக்களத்தி பிள்ளைக்குப் பதைப்பாளா?
தன் பிள்ளையைத் தான் அடிக்கத் தலையாரியைச் சீட்டுக் கேட்கிறது போல.
- (கேட்டு வர வேண்டுமா?)
தன் மகன் போனாலும் குற்றம் இல்லை; மருமகள் தாலி அறுக்க வேண்டும்.
தன் மனம் பொன் மனம்.
தன் மா ஆனால் தின்னாளோ? தானே வாரி மொக்காளோ? 12225
தன் முதுகில் அழுக்கு இருப்பது தெரியாமல் பிறன் முதுகில் அழுக்கு அழுக்கு என்பது போல.
தன் முதுகு ஒரு போதும் தனக்குத் தெரியாது.
தன் மூக்கு அறுபட்டாலும் எதிரிக்குச் சகுனப் பிழை.
தன்மை உடைமை தலைமை.
தன் வயிற்றைத் தான் உலர வைக்கலாமா? 12230
தன் வாய்க் கஞ்சியைக் கவிழ்த்துப் போட்டான்.
தன் வாயிலே சீதேவி, முன் வாயிலே மூதேவி.
தன் வாயால் தவளை கெட்டது.
தன் வாயால்தான் கெட்டதாம் ஆமை.
தன் வாயால் தான் கெட்டான். 12235
தன் வாலைச் சுற்றிக் கொள்ளும் நாய் போல.
தன் வினை தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்.
- (பட்டினத்தார் கதை.)
தன் வீட்டு அகமுடையான் தலை மாட்டிலும் அசல் வீட்டு அக முடையான் கால் மாடும் நலம்.
- (கால் மாட்டிலும்.)
தன் வீட்டுக் கதவை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தாளாம்.
தன் வீட்டுக் கதவைப் பிடுங்கி அயல் வீட்டுக்கு வைத்தாற் போல. 12240
- (வைத்து விடிகிற மட்டும் நாய் ஓட்டினாளாம்.)
தன் வீட்டுக்குத் தவிடு இடிக்கவில்லையாம்; ஊரார் வீட்டுக்கு
இரும்பு இடிக்கப் போனாளாம்.
தன் வீட்டுக்கு வந்த விருந்தாளியை அசல் வீட்டுக்குப் போகச் சொன்னால் போவானா?
தன் வீட்டு நாய் என்று தாவ விடுவதா?
தன் வீட்டுப் படலை இரவல் கொடுத்துவிட்டு விடிய விடிய நாய் காத்தானாம்.
தன் வீட்டு விளக்கு என்று முத்தம் இடலாமா? 12245
- (இருக்கிறதா?)
தன் வீட்டு விளக்குத் தன்னைச் சுடாதா?
தன் வீடு தவிர அசல் வீட்டுக்கு மேட்டு வரி என்றான்.
தன்னது தன்னது என்றால் குசுவும் மணக்கும்.
தன்னந் தனியே போகிறாள்; திமிர் பிடித்து அலைகிறாள்.
தன்னவன் செய்கிறது மன்னனும் செய்யான். 12250
தன்னவன் தனக்கானவனாய் இருந்தால் தலைப் பாதியில் இருந்தால் என்ன? கடைப் பந்தியில் இருந்தால் என்ன?
- (பரிமாறுகிறவனாய் இருந்தால், )
தன்னால் இல்லாத வேளாண்மையும் தான் உழாத நிலமும் தரிசு.
- (தன் ஆள் இல்லாத)
தன்னால் தான் கெட்டான் பத்மாசுரன்.
தன்னாலே தாழ் திறந்தால் தச்சன் என்ன செய்கிறது.
தன்னாலே தான் கெட்டால் அண்ணாவியார் என்ன செய்வார். 12255
- (அண்ணாவியார் - உபாத்தியாயர்.)
தன்னில் எளியது தனக்கு இரை.
தன்னை அழுத்தினது சமுத்திரம்.
தன்னை அறிந்தவன் தலைவனை அறிவான்.
தன்னை அறிந்தவன் தானே தலைவன்.
தன்னை அறிந்து பின்னைப் பேசு. 12260
தன்னை அறியாச் சன்னதம் உண்டா?
- (அறியாத சன்னதம் இல்லை.)
தன்னை அறியாதவன் தலைவனை அறியான்.
தன்னை அறியாப் பேயாட்டம் உண்டா?
தன்னை இகழ்வாரைப் பொறுத்தலே தலையாம்.
தன்னை ஒளித்து ஒரு வஞ்சனை இல்லை. 12265
தன்னைக் கட்டக் கயிறு யானை தானே கொடுத்தாற் போல்.
தன்னைக் காக்கிற் கோபத்தைக் காக்க வேண்டும்.
தன்னைக் கொல்ல வந்தது ஆயினும் பசுவைக் கொல்லல் ஆகாது.
- (திருவாலவாயுடையார் திருவிளையாடல் 36-21.)
தன்னைக் கொல்லவந்த பசுவைத் தான் கொன்றால்பாவம் இல்லை.
தன்னைச் சிரிப்பது அறியாதாம் பல்லாவரத்துக் குரங்கு 12270
- (தன்னைப் பார்த்துச் சிரிக்குமாம்.)
தன்னைச் சிரிப்பாரைத் தான் அறியான்.
தன்னைத் தானே பழிக்குமாம். தென்ன மரத்திலே குரங்கு இருந்து,
தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை.
தன்னைப் பணிவாரைத் தான் பணியக் காலம் வந்தது.
தன்னைப் பாடுவான் சம்பந்தன்; என்னைப் பாடுவான் அப்பன்; பொன்னைப் பாடுவான் சுந்தரன். 12275
- (சிவபெருமான் கூற்று.)
தன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லையாம் தென்னமரத்துக் குரங்கு; பார்த்துப் பார்த்துச் சிரிக்கிறதாம் பலா மரத்துக் குரங்கை.
தன்னைப் புகழ்தலும் தரும் புலவோர்க்கே.
- (நன்னூல்.)
தன்னைப் புகழ்வானும் சாண் ஏறி நிற்பானும் பொன்னைப் புதைத்துப் போவானும் பேய்.
தன்னைப் புகழாத கம்மாளன் இல்லை.
தன்னைப் புகழாதவரும் இல்லை; தனித்த இடத்தில் குசுவாத வரும் இல்லை. 12280
தன்னைப் பெற்ற ஆத்தாள் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்; தம்பி கும்பகோணத்தில் கோதானம் பண்ணுகிறான்.
தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப்பிச்சை வாங்குகிறாள்; தங்கத்தாலே சரப்பளி தொங்க ஆடுகிறதாம்.
தன்னைப் பெற்றவள் கொடும்பாவி; தன் பெண்ணைப் பெற்றவள் மகராசி.
தன்னைப் போல வேணுமாம் தவிட்டுக்குக் கட்டை.
தனக்காகப் புத்தி இல்லை; பிறத்தியார் சொல் கேட்கிறதும் இல்லை. 12285
தனக்கு அழகு மொட்டை; பிறர்க்கழகு கொண்டை.
- (கூந்தல்-தனக்குக் கொண்டை, பிறர்க்கு மொட்டை.)
தனக்கு அழகு மொட்டை, பிறர்க்கு அழகு கொண்டை.
தனக்கு ஆகாத பானை உடைந்தால் என்ன? இருந்தால் என்ன?
தனக்கு இல்லாத அழகு தண்ணீர்ப் பானையைப் பார்த்தால் தீருமா?
- (தண்ணீரை.)
தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. 12290
- (பழமொழி நானூறு. )
தனக்கு உகந்த ஊணும் பிறர்க்கு உகந்த கோலமும்.
தனக்கு உண்டு; எதிரிக்கு இல்லை.
தனக்கு உதவாத பாலைக் கொட்டிக் கவிழ்த்தாளாம்.
தனக்கு உதவாத பிள்ளை ஊருக்கு உதவும்.
தனக்கு எளிய சம்பந்தம்; விரலுக்குந் தகுந்த வீக்கம். 12295
தனக்கு எளியது சம்பந்தம்; தனக்குப் பெரியது விம்மந்தம்.
- (ஒம்மந்தம், யாழ்ப்பாண வழக்கு.)
தனக்கு என்றால் பிள்ளையும் களை வெட்டும்.
தனக்கு என்றால் புழுக்கை கலம் கழுவி உண்ணான்.
தனக்கு என்று அடுப்பு மூட்டித் தான் வாழும் காலத்தில் வயிறும் சிறுக்கும்; மதியும் பெருக்கும்.
தனக்கு என்று இருந்தால் சமயத்துக்கு உதவும். 12300
தனக்கு என்று ஒருத்தி இருந்தால் தலைமாட்டில் இருந்து அழுவாள்.
தனக்கு என்று கொல்ல நாய் வெடுக்கென்று பாயும்.
- (சொல்ல.)
தனக்கு என்ன என்று இருக்கல் ஆகாது; நாய்க்குச் சோறு இல்லை ஆயின்.
தனக்கு ஒன்று, பிறத்தியாருக்கு ஒன்று.
தனக்குக் கண்டுதானே தானம் வழங்க வேண்டும்? 12305
தனக்குச் சந்தேகம்; அடைப்பைக்காரனுக்கு இரட்டைப் படியாம்.
தனக்குத் தகாத காரியத்தில் பிரவேசிப்பவன் குரங்கு பட்ட பாடுபடுவான்.
தனக்குத் தகாத காரியம் செய்தால் ஆளுக்குப் பிராண சேதத்துக்கு வரும்.
தனக்குத் தங்கையும் தம்பிக்குப் பெண்டாட்டியும்.
தனக்குத் தவிடு இடிக்கத் தள்ளாது; ஊருக்கு இரும்பு அடிக்கத் தள்ளும். 12310
தனக்குத் தவிடு குத்த மாட்டாள்; அயலாருக்கு இறுங்கு இடிப்பாள்.
- (இறுங்கு-ஒருவகைச் சோளம்.)
தனக்குத் தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்.
- (தாய்ச்சீலை-கௌபீனம்.)
தனக்குத் தனக்கு என்றால் பிடுங்கும் களை வெட்டும்.
- (ஒருகை பிடுங்கும், மற்றொரு கை களை வெட்டும்.)
தனக்குத் தாறும் பிறைக்குத் தூணும்.
தனக்குத் தானே கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்தால் கனியுமா? 12315
தனக்கும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்.
தனக்குப் பிறந்த பிள்ளை தவிட்டுக்கு அழுகிறதாம்; ஊரார் பிள்ளைக்குக் கூட்டுக் கல்யாணம் செய்கிறானாம்.
தனக்குப்பின் தானம்.
தனக்குப் பின்னால் அகம் இருந்து என்ன? கவிழ்ந்து என்ன?
- (நிமிர்ந்து என்ன?)
தனக்குப் பின்னால் வாழ்ந்தால் என்ன? கெட்டால் என்ன? 12320
தனக்குப் பெரியாரைத் தடிகொண்டு அடிக்கிறது.
தனக்குப் போகத் தானம்.
தனக்கும் உயர்ந்த குலத்தில் பெண்ணைக் கொடு; தன்னிலும் குறைந்த இடத்தில பெண்ணை எடு.
தனக்கு மிஞ்சித்தான் பரோபகாரம்.
தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை வேண்டும். 12325
தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.
தனக்கே தகராறாம்; தம்பிக்குப் பழையதாம்.
தனக்கே தாளமாம்; தம்பிக்குப் பலகாரமாம்.
தனத்தால் இனம் ஆகும்; பணத்தால் ஜனம் ஆகும்.
தனம் இரட்டிப்பு; தானியம் முத்திப்பு. 12330
தனிக் காட்டு ராஜா.
தனி மரம் தோப்பு ஆகுமா?
தனி வழி போகாதே; அரவத்தொடு ஆடாதே.
தனிவழியே போனவளைத் தாரம் என்று எண்ணாதே.