வீ

வீக்கம் கண்டால் தூக்கமாம்

வீக்கமோ, தூக்கமோ? 20485


வீங்கலுக்கு விஷமம் அதிகம்.

வீங்கலுக்கு வீரியம் அதிகம்.

வீச்சு என்றாலும் விடுவேனோ.

வீரபுத்திர அம்பலகாரா? வீசம் இறுத்த குடி நாசம்.

(கொண்ட)

வீசி நடந்தால் வீசம் எடை. 20490


வீசி நடந்தால் வெள்ளி வீசம் குறையும்.

வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்குவான்.

வீட்டில் அழகு வேம்பு அடி ஆகும்.

வீட்டில் இருக்கிற சாமியைப் போகச் சொல்லி விட்டுக் காட்டில் இருக்கிற சாமியை வரவழைத்தாளாம்.

வீட்டில் இருக்கிறது வெறும் சோகை; விருந்தாளி வந்தது காமாலைச் சோகை. 20495


வீட்டில் இருக்கிற பூனையை அடித்தால் மேட்டில் இருக்கிற எலியைப் பிடிக்கும்.

(மோட்டில்.)

வீட்டில் இருந்தால் காட்டிலும் உண்டு.

வீட்டில் வினை இருக்கிறது; வினைதீர்த்தான் கோயிலுக்குப் போனால் தீருமா?

வீட்டின் செழிப்புக் காட்டில் தெரியும்.

வீட்டு அடிக்கு வேம்பு அடி மேல். 20500


வீட்டு அழகு வாசற்காலைப் பார்த்தால் தெரியும்.

வீட்டு இளக்காரம் வண்ணான் அறிவான்.

வீட்டு எலியை அடித்தால் மோட்டு எலி பறக்கும்.

வீட்டுக் கருமம் நாட்டுக்கு உரையேல்.

வீட்டுக் கழுதை ஊராருக்குச் சுமக்குது. 20505 

வீட்டுக்காரி என்பது பெண்சாதிக்குப் பெயர்.

வீட்டுக்காரிக்கும் போட்டிக்காரி.

வீட்டுக் காரியம் பாராதவன் நாட்டுக் காரியம் பார்ப்பானா?

வீட்டுக்கு அடங்காத பிள்ளையை ஊரார் அடிக்கி விடுவார்கள்.

(அடங்காததை ஊர் அடக்கும்.)

வீட்டுக்கு அலங்காரம் பெரிய குடி. 20510


வீட்டுக்கு அலங்காரம் மனையாள்.

வீட்டுக்கு அலங்காரம் விளக்கு.

வீட்டுக்கு அலங்கானம் வேளாண்மை.

வீட்டுக்கு இருந்தால் வெண்கலப் பெண்டாட்டி; வீட்டுக்கு இல்லாமற் போனால் தூங்கல் பெண்டாட்டி.

(வெறும்பயல் பெண்டாட்டி.)

வீட்டுக்கு உள்ளே வேட்டை நாயை உசுப்புவானேன்? 20515


வீட்டுக்கு ஏற்றின விளக்கு விருந்துக்கும் ஆகும்.

வீட்டுக்கு ஒரு மொத்தை; கேட்டுக் கொள்ளடி மாரியாத்தை.

(மாரியாத்தா. பாரதம் படிக்கிறவருக்கு.)

வீட்டுக்கு ஒரு வாசற்படி; பூட்டுக்கு ஒரு திறவு கோல்.

வீட்டுக்குக் கேடும் சோற்றுக்கு நாசமும்.

வீட்டுக்குச் சோறு இல்லை; சிவன் அறிவான்; நாட்டுக்குச் செல்லப் பிள்ளை நான் அல்லவா? 20520


வீட்டுக்குப் புகழ்ச்சியோ, நாட்டுக்குப் புகழ்ச்சியோ?

வீட்டுக்குப் புளி, காட்டுக்குப் புலி.

வீட்டுக்கு முன்னே பட்டைக் கட்டி, மாட்டுக்குப் பின்னால் வைக்கோல் போட்டது போல்,

(பிட்டத்துக்கு முன்னே..)

வீட்டுக் குருவியை காட்டில் காட்டுக் குருவியைப் பிடி

வீட்டுக்கு வாய்த்தது எருமை; மேட்டுக்கு வாய்த்தது போர். 20526


வீட்டுக்கு விளக்கு வேண்டாம்

வீட்டுக்கு வீடு எதிர் வீடு ஆகாது.

வீட்டுக்கு வீடு கண் அடுப்பே தவிரப் பொன் அடுப்பு இல்லை.

வீட்டுக்கு வீடு வாசற்படி ஒன்றுதான்

வீட்டுக்கு வீரன்; காட்டுக்குக் கள்ளன். 20530


வீட்டுக்குள் கஞ்சித் தண்ணீரைக் குடித்துவிட்டு மீசையில் வெண்ணெயைத் தடவிக் கொண்டு புறப்படுகிறது. 

வீட்டுக்குள் விடிந்தால்தான் வெளியிலும் விடியும்.

(யாழ்ப்பாண வழக்கு.)

வீட்டுக் கொடியை வெட்டினால் வீட்டுப் பெண் வேட்டகத்தில் தங்காது.

வீட்டுச் செல்வம் மாடு; தோட்டச் செல்வம் முருங்கை.

வீட்டுச் சோற்றைத் தின்று ஊருக்கு உதவினான். 20535


வீட்டுச் சோற்றைக் தின்று வீண் சண்டைக்குப் போவானேன்?

வீட்டுச் சோற்றைப் போட்டு வீண் பேச்சுக் கேட்பானேன்?

வீட்டுச் சோறும் வேண்டாம்; அடுப்பாண்டியும் வேண்டாம்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு. வீட்டுச் சாறும்.)

வீட்டுத் தெய்வத்தை விளக்குமாற்றால் அடித்துக் காட்டுத் தெய்வத்தைக் கை எடுத்தக் கும்பிட்டாளாம்.

வீட்டு நாய்ப் பாசம் ஒரு நாய்க்கு ஏது? 20540

(வேறு நாய்க்கு.)


வீட்டுப் பாம்பு காட்டுக்குப் போனால் அது காட்டுப் பாம்பு ஆகும்.

வீட்டுப் பிள்ளையும் வெளிப் பிள்ளையும் வித்தியாசம் அறியா.

வீட்டுப் புலி. வெளிப் பூனை.

வீட்டுப் பெண்சாதி வேம்பு; நாட்டுப் பெண்சாதி கரும்பு.

வீட்டு மூதேவியும் காட்டு மூதேவியும் கூடி உலாவுகின்றன. 20545


வீட்டு வேலை வெளி வேலை பார்த்துக் காட்டு வேலைக்குக் கட்டோடு போகலாம்.

வீட்டை எல்லாம் வெல்லத்துக்கு மாற்றினானாம்.

வீட்டை ஏன் இடித்தாய் மூட்டைப் பூச்சிக்குப் பயந்து.

வீட்டைக் கட்டி ஓட்டைப் போடு.

வீட்டைக் கட்டிக் குரங்கைக் குடி வைத்தது போல. 20550


வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைச் செய்து பார்.

வீட்டைக் கட்டு; அல்லது காட்டை அழி.

வீட்டைக் கட்டுமுன் கிணற்றைத் தோண்ட வேண்டும்.

வீட்டைக் காக்கம் நாயும் நாட்டைக் காக்கும் சேவகனும் ஒன்றாகி விடுவார்களா?

வீட்டைக் காத்த நாயும் காட்டைக் காத்த நாயும் வீண் போகா 20555


வீட்டைக் காத்து அருள்; பாட்டைப் பார்த்து அருள்.

வீட்டைக் கொளுத்தி வேடிக்கை பார்க்கிறதா?

வீட்டைப் பிடுங்கி விறகாய் எரித்தாலும்; வீணாதி வீணனுக்கு என்ன செய்வேன்?

வீட்டையும் கொள்ளை கொடுத்துப் பங்குக்கும் நிற்கிறது.

வீட்டையும் மெழுகி வைத்து வெறும் குழம்பையும் ஆக்கி வைத்துக் கல்லடிச் சோற்றுக்குக் காத்திருப்பார் சீரங்கத்தார். 20560


வீடு அசையாமல் தின்னும்; ஆனை அசைந்து தின்னும்.

வீடு அவரைப் பந்தல் போல் இருக்கிறது.

வீடு எரியக் கிணறு எடுக்க.

வீடு எல்லாம் குருடு; வாசல் எல்லாம் கிணறு.

(முற்றத்தில் எல்லாம் கிணறு.)

வீடு கட்டுகிறது அரிது; வீடு அழிக்கிறது எளிது. 20565


வீடு கட்டும் முன்னம் கிணறு வெட்ட வேண்டும்.

வீடு தருவோன் மேலும் தருவான்.

வீடு தோறும் வாசற்படி உன்டு.

வீடு நிறைந்த விளக்குமாறு.

வீடு பலக்கக் கட்டினால் புயலுக்கு ஈடு கொடுக்கும். 20570


வீடு பற்றிக்கொண்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்டானாம்.

வீடு பற்றி வேகும்போது கிணறு எடுப்பதா?

வீடு பற்றினதற்குக் கிணறு வெட்ட நாள் பார்த்த கதை.

வீடு போ போ என்கிறது; காடு வா வா என்கிறது.

வீடும் விளக்குமாய் இருந்தால் நாடும் நடப்பும் வேண்டாம்? 20575


வீடுவரை மனைவி; காடுவரை பிள்ளை.

வீடு விட்டு வெளிப்பட்ட நாய் விடுதி நாய்.

வீடு விழுந்தது விறகுக்கு ஆச்சு.

வீடு விளக்கும் விளக்குமாறு.

வீடு வீடாய் அலைகிறான். 20580


வீடு வீடாய் ஏறி இறங்குகிறான்.

வீடு வீடாய்ப் பதம் பார்க்கிறான்.

வீடு வெறும் வீடாய் இருந்தாலும் மணியம் ஏழு ஊர்.

வீடு வெறும் வீடு; மேல் வீடு அதிகாரம்.

வீடு வெறும் வீடு: வேலூர் அதிகாரம். 20585

வீண் ஆன வீணனுக்கு வாழ்நாளை மாய்ப்பானேன்.

(வீணாதி வீணனுக்கு.)

வீண் இழவாம், வெங்காயத் தோலாம்; பிடுங்கப் பிடுங்கப் பேரிழவாம்.

(வெங்காயத் தாளாம்.)

வீண் இழவுக்கு மார் அடிக்கிறதா?

வீண் இழவுக்கு வீட்டைக் கட்டிப் பார இழவுக்குப் பந்தல் போடு.

வீண் கட்டை என்றாலும் ஆண் கட்டை அல்லவோ? 20590

(யாழ்ப்பாண வழக்கு.)


வீண் பழி ஏன் ஏற்றுக் கொள்கிறாய்?

வீண் விபரீதத்தால் பேதையர் வீண் செலவு செய்ய உடன்படுவார்கள்

வீணருக்குச் செய்தது எல்லாம் வீண் ஆம்.

வீணருக்கும் கீர்த்திக்கும் மெத்தவும் தூரம்.

வீணன் கருமம் இழந்தான். 20595


வீணாய் உடைந்த சட்டி வேணதுண்டு என் தலையில்; இந்தப் பூணாராம் பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை.

வீணாய் வீணாய் என்பதை ராமா ராமா என்றேன்.

வீணாலே என் உழைக்கிறாய்?

வீணாரவாரம் இழவி திரண்டதும் பாட்டுக்கு வழி இல்லாமல் பிணங்கி அழுததும்.

வீணான சொல்லுக்கு வாயால் கெட்டேன். 20600


வீணுக்கு உழைக்கிறவன் வீணன்.

வீணுக்குக் தாலி கட்டி வேணுமென்று அறுத்தேனா?

(வீம்புக்கு அறுப்பதா?)

வீணை கோணினாலும் நாதம் கோணுமா?

(குறையுமா)

வீதிச் சண்டையை விலைக்கு வாங்குவது போல.

வீதியும் பெண்ணும் விலை போச்சது கை தப்பினால். 20605


வீம்புக்காரனுக்கு மேல் தெரியுமா?

வீம்புக்குப் புளியங்காய் தின்றாற் போல.

வீம்புக் குப்பையில் வீண் செடி.

வீம்புக்கு வேட்டை ஆடாதே.

வீம்புக்கு வேஷம் கொள்ளாதே. 20610

வீம்பு பேசுகிறவன் அழிவான்; வீரியம் பேசுகிறவன் விழுவான்

வீமனுக்கு வேலை கொடுத்தது போல.

வீர சூரன் ஆனாலும் முன்படை வேண்டும்.

வீரம் இல்லாத பேடியைப் போருக்கு அழைத்ததுபோல

வீரம் எல்லாம் வெளிச்சம் ஆயிற்று. 20615


வீரம் கெட்டவன் சேரன் ஆவானா?

வீரம் பேசிக்கொண்டு எழுந்த சேவகன் வெட்டுக்களம் கண்டு முதுகு இடலாமா?

வீராணத்து ஏரி விழுந்து விழுந்து விளைந்தாலும் பெருமாக் கூர் ரண்டுக்குப் பொரிமாவுக்குக் காணாது.

வீரியத்தை விடக் காரியம் பெரிது.

வீரியம் இல்லையேல் காரியம் இல்லை. 20620


வீரியம் பெரிதோ, காரியம் பெரிதோ?

(பிரதானமா?)

வெ

வெக்கைக்கு வேலி மறைப்பு.

வெகு ஜன வாக்யம் கர்த்தவ்யம்.

வெகு ஜன வாக்கியம் பொய் போகாது.

வெங்கண்ணை வாங்கு, உன் கண்ணைக் கொடுத்து. 20625


வெங்காயத்துக்கு எத்தனை வாசனை கூட்டினாலும் துர்க்கந்தத்தையே வீசும்.

(காட்டினாலும்)

வெங்காயத்துக்குத் தோல் உரித்தாற் போல்.

வெங்காயம் இட்ட கறிக்குச் சந்தேகம் இல்லை.

வெங்காயம் உரிக்க உரிக்கத் தோலாய் இருப்பது போல.

வெங்காயம் விற்பவனைச் சங்கீதம் பாடச் சொன்னாற் போல 20630


வெச்செனவுக்கு அன்றி வெண்ணெய் உருகுமா?

(வெச்ச அனலுக்கு அன்றி.)

வெட்கக்கேடும் சக்கிலியின் கூத்தும் போல.

வெட்கத்தால் ஒல்காதவன் குலஸ்திரிக்குப் போதாது.

வெட்கத்துக்கு அஞ்சினவன் கடனுக்கு அஞ்சுவான்.

வெட்கத்துக்கு அஞ்சினவன் சச்சரவு செய்வானா? 20635


வெட்கத்தை அக்குளிலே அடிக்கிக்கொண்டு பேசுகிறான்.

வெட்கத்தை விற்றுக் கட்கத்திலே கொண்டு போகிறான்.

(அக்குளிலே கொண்டான்.)

வெட்கத்தை விட்டு வெளியிலே செல்லலாமா?

வெட்கப்படுகிற வேசியும் வெட்கம் கெட்டசம்சாரியும் உதவுவார்கள்.

ஃகம் அற்ற பெண்பிள்ளை வீண். 20640


இல்லையா, கோழி வளர்த்துப் புழுங்கலைத் தின்ன?

டையான் கடன் வாங்கக் கை நீட்டான்.

       வேசியும் கெட்ட குலப் பெண்ணும் விளங்கார். 

வெட்கம் கெட்ட சுக்காங் கீரை, இரா அடுப்பிலே வெந்த கீரை. 20645


வெட்கம் கெட்டி நாய்க்கு வீறாப்பு ஜாஸ்தியாம்.

வெட்கம் கெட்ட நாய்க்கு வெண் பொங்கலாம்,

வெட்கம் கெட்ட மூளிக்கு முக்காடு எதற்கு?

வெட்கம் கெட்டவன் ஊருக்குப் பெரியவன்.

வெட்கம் கெட்டவனுக்கு மேனி எல்லாம் அழுக்குத்தான். 20650


வெட்கம் கெட்டால் கெடுகிறது; என் தொப்பை நிரம்பினால் போதும்.

வெட்கம் கெட்டாலும் கெடட்டும், தொப்பையில் இட்டால் போதும்.

(தொப்பை இட்டால்.)

வெட்கம் கெட்டு வெளிப்பட்ட முண்டைக்கு முக்காடு ஏதுக்கு?

வெட்கம் சிக்கு விட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஒரு கேடா?

வெட்கம் வாழைக்காய்க் கறி ஆகுமா 20655

(வாழைக்காய் அறியுமா?)


வெட்டப் பலம் இல்லை; வெட்டிக்குப் போக மனம் இல்லை.

(விட்டுப் போக.)

வெட்டரி வாளுக்குக் குளிரா, காய்ச்சலா?

வெட்ட வருகிற மாட்டுக்கு வேதம் ஓதினால் ஒக்குமா?

(போதுமா?)

வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.

வெட்ட வெளிச்சம் பட்டப்பகலாய்ப் போயிற்று. 20660


வெட்ட வெளியில் வையாளி விடுகிறதா?

வெட்ட வெளி வானத்தில் விட்டெறிந்த சந்திரன் போல்,

வெட்டி எல்லாம் தண்ணீர்; மண்கட்டி எல்லாம் புல் நாற்று.

வெட்டிக் களை எடுத்தால் கட்டு முக்காலம் காணும்.

வெட்டிக்கு இறைத்து விழலுக்குத் தண்ணீர் கட்டினது போல 20665


வெட்டிக்குப் பிறந்த பிள்ளை வேலியிலே.

(வெளியிலே.)

வெட்டிககுப் போனாலும் விருந்துக்குப் போகாதே.

வெட்டிக் கெட்டது தென்னை; வெட்டாமல் கெட்டது பனை.

வெட்டிக் கெட்டது வேம்பு: வெட்டாமல் கெட்டது பூவரசு.

வெட்டிக்குப் பெற்று வேலியில் எறிந்து விட்டார்கள்.

20670

(எறித்தார்களா?)

வெட்டிக் கொண்டு வரச் சொன்னால் கட்டிக் கொண்டு வருவான்.

வெட்டிக் கொண்டு வா என்றால் குத்திக் கொண்டு வருவான்.

வெட்டிப் போட்டுக் கட்டிக் கொண்டு அழுகிறது.

வெட்டியானும் பிணமும் கட்டிப் புரளட்டும்.

(கட்டிக்கொண்டழட்டும்.)

வெட்டியானும் பிணமும் பட்டதைப் படுகிறது. 20675


வெட்டி வா என்றால் வேருடன் பிடுங்கி வருகிறான்.

வெட்டி விதை, கட்டி விதை.

வெட்டி வெட்டிப் பார்த்தாலும் முட்டைக்கரிக் காசுதான் அகப்படும்.

வெட்டி வேரில் விசிறியும் விளாமிச்சை வேரில் தட்டியும் பண்.

வெட்டின இடத்தில் ஜலம் ஊறும்; வீடு கட்டின இடத்தில் நடை ஏறும். 20680


வெட்டின குளத்திலும் தண்ணீர் குடியாது; கட்டின வேலியும் தாண்ட மாட்டாது.

வெட்டினவனுக்கு ஒரு கேணி, வீணாதி வீணனுக்குப் பல கேணி.

வெட்டு ஒன்று துண்டு இரண்டு.

(கண்டம் இரண்டு.)

வெட்டுகிற கத்தியை வீசியா காட்ட வேணும்?

வெட்டுப் பட்டால் தட்டு விளையாது. 20685

(தட்டு-சோளத்தட்டு.)


வெட்டென உரையேல்; துட்டர்கள் அறைவர்.

வெட்டெனப் பேசேல்.

வெட வெட என்று தண்ணீர் குளிக்காதவளா உடன் கட்டை ஏறப்போகிறாள்?

வெடி ஓசை கேட்ட நாய் போல.

வெடித்து உழக்கரிசி அடித்தது கிழக்கடா, வயிறாறத் தின்று வழிமாண்டு போச்சு; பிள்ளை கையில் பிடிமானம் இலலாமல் கிண்ணியோடு சோறு புளித்துக கிடககிறது. 20690


வெடிபடச் சிரிப்பவர் வெள்ளறிவுடையோர்.

வெண்கலக் கடையில் ஆனை புகுந்தாற் போல.

வெண்கலக் குகையில் வைத்து வியாழன் முப்பதும் ஊதினால்

மற்ற நாள் வெள்ளி ஆமே.

வெண்கலத்துச் சூடும் வேட்டகத்து வார்த்தையும் ஆறா.

வெண்கலம் ஒலிக்கும்; பொற்கலம் ஒலிக்காது. 20695

வெண்கலம் சஞ்சலம்.

வெண்கலம் நடமாடக் குயவன் குடி போகிறான்.

வெண்கலம் என்றால் ஓட்டை ஓட்டை என்கிறான்.

வெண்டலைக் கருடன் சென்று இடமானால் எவரி கையிற் பொருளும் தன் கையிற் சேரும்.

(வந்து இடமானால்.)

வெண்ணீறு வினை அறுக்கும். 20700


வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்?

வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும்.

வெண்ணெய்க் கட்டியும் சீனியும் ஊட்டலாம்; விக்கிக் கொள்வதற்கு என் செய்யலாம்.

வெண்ணெய்க் கட்டியும் முப்பாலும் போடுவார்; விக்கிக் கொள்வதற்கு என் செய்வார்?

வெண்ணெய்க்குப் பல் முளைத்தாற் போல். 20705


வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்த மாதிரி.

(திரண்டு வரும் போது.)

வெண்ணெய் தின்றது ஒருவன்; விரல் சூப்பினது ஒருவன்.

(ஒருத்தி...ஒருத்தி)

வெண்ணெய்போல உழுதால் குன்று போல விளையும்.

வெண்ணெய் வெட்டி சிப்பாய்.

வெண்ணெய் வைத்துக் கொக்குப் பிடிப்பதா? 20710


வெண்ணெயும் சீனியும் விரசி ஊட்டலாம்; விக்கிக் கொள்வதற்கு என்ன செய்யலாம்?

வெண்ணைய் தின்று சாம்பலைப் பூசிக் கொள்வது போல்.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழலாமா?

வெண்தலைக் கருடன் வந்து இடமானால் எவர் கைப்பெருளும் தன் கைப்பொருள் ஆகும்.

வெதும்பின பயிருக்கு மேகம் பெய்தாற் போல. 20715

(மழை பெய்தாற் போல்.)


வெதுவெது என்று தண்ணீர் குடிக்காதவனா உடன்கட்டை ஏறப் போகிறான்?

வெந்த சோற்றைத் தின்று வாய்க்கு வந்தது எல்லாம் பிதற்றுகிறான்.

வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது.

வெந்தது போதும்; முந்தியிலே கட்டு.

வெந்ததைத் தின்று வந்ததை உளறுகிறது. 20720

வெந்ததைப் போடு, முன்றானையிலே.

வெந்த புண்ணில் வேல் நுழைந்தது போல.

(சொருகினது போல.)

வெந்த புண் வினை செய்யாது.

வெந்த முகத்தைக் காட்டாதே; வந்த விருந்தை ஓட்டாதே.

வெந்த மூஞ்சியை விளக்கில் காட்டினாளாம்; வந்த விருந்தெல்லாம் ஓடிப் போச்சாம். 20725


வெந்தயம் இட்டி கறிக்குச் சந்தேகம் இல்லை.

வெந்தயம் போடாத கறியும் கறி அல்ல; சந்தடி இல்லாத ஊரும் ஊர் அல்ல,

(சந்தை இல்லாத. ஆசாரி இல்லாத.)

வெந்தழல் மெழுகு போல.

வெந்தால் தெரியும் வெங்காய மணம்.

வெந்நீர் ஆனாலும் நெருப்பை அவிக்கும். 20780


வெந்நீர் இறைத்தால் வீடு வேகுமா?

வெந்நீர் என்றால் வாய் வெந்து விடுமா?

வெந்நீரில் குளிக்க அஞ்சுபவரா தீயிற்பாயப் புகுவார்?

வெந்நீரில் விழுந்த கோழி தானே எழுந்து போமா?

வெந்நீரில் விடு வேகுமா? 20735


வெம்பா பெய்தால் சம்பா விளையும்.

வெய்யில் விதைப்பும் சரி; வைப்பாட்டி பிள்ளையும் சரி.

வெய்யிலில் அகப்பட்ட புழுவைப் போல.

வெய்யிலில் நடந்தால் நிழலின் அருமை தெரியும்.

வெய்யிலில் போட்டாலும் காய மாட்டான்; தண்ணீரில் போட்டாலும் நனைய மாட்டான். 20740

(உலர மாட்டான்.)


வெய்யிலில் விடுகிறதும் இல்லை; மழையில் விடுகிறதும் இல்லை.

வெய்யிலின் முன்னே மின் மினி பிரகாசிக்குமா?

வெய்யோன் வெயில் முன் எரி தீபம் போல்.

வெல்லத்தால் பிள்ளையார் வைத்தால் நை வேத்தியத்துக்குக் கிள்ளி வைக்கலாமா?

வெல்லத்தைக் காட்டிப் பிள்ளையை அழைக்கிறதா? 20745


வெல்லப் படை இல்லை; தின்னப் படை உண்டு.

வெல்லப் பானையை எறும்பு மொய்த்தது போல.

வெல்லப் பிள்ளையாருக்கு வெல்லமே நைவேத்தியம்.

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அதற்கே நைவேத்தியம் செய்கிறது.

வெல்லப் பேச்சுச் சொல்லுக்கு அசையாது. 20750


வெல்லப் போனான் ஒரு செல்லப் பிள்ளை; மெல்லப் போகிறான் ஓர் அமுங்குத் தலைவன்.

வெல்லம் உள்ள வாயைச் சளுப்பென்று நக்குகிறான்.

வெல்லம் என்கிற வாய் தித்திக்குமா?

வெல்லம் சர்க்கரை சொல்லப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா.

வெல்லம் தின்கிறவன் ஒருவன் விரலைச் சூப்புகிறவன் வேறு ஒருவன். 20755


வெல்லம் பெருத்தது வேலூர்.

வெல்லமும் போச்சு; வெல்லம் கட்டிய துணியும் போச்சு.

வெல்ல வார்த்தையால் சொல்லுகிறதா?

வெல்லாது உங்கள் படை செல்லாது பாண்டியன் முன்.

வெள்ளத்து இடைப்பட்ட நரியினம் போல். 20760


வெள்ளத்தில் போனாலும் ஓடக்காரனுக்குக் காசு கொடேன் என்ற கதை.

வெள்ளத்தோடு போனாலும் ஓடக்காரனுக்கு அரைக்காசு கொடுக்க மாட்டான்.

வெள்ளம் கண்ட வானம் பெய்யும்.

வெள்ளம் பள்ளத்தை நாடும்; விதி புத்தியை நாடும்.

வெள்ளம் பாயும் கடலில் வாய்க்காலும் பாயும். 20765


வெள்ளம் வருகிறதற்கு முன்னே அணை போட வேண்டும்.

வெள்ளம் வரும்முன்னே அணை கோலிக் கொள்ள வேண்டும்.

வெள்ளம் வந்தபின் அணை போடலாமா?

வெள்ளமே போனாலும் பளளம் பார்த்துப் பயிர் இடு.

வெள்ளரிக் காய்க்கு விதை ருசி, கத்திரிக் காய்க்குக் காம்பு ருசி. 20770


வெள்ளரிக்காய்க் கூடை வெங்கூடை, பாகற்காய்க் கூடை பணக் கூடை.

வெள்ளரிக்காய் விற்ற பட்டணம்.

வெள்ளரித் தோட்டத்தில் புகுந்த குரங்கு போல.

வெள்ளரிப் பழத்துக்கு அள்ளுக் கட்டினாற் போல்.

வெள்ளரிப் பழத்துக்குப் பூண் பிடித்தது போல. 20775


வெள்ளரிப் பழம் விரிந்து விடுகிறது போல விரிந்து விடாதீர்.

வெள்ளாள் குட்டி வெடித்த குட்டி; சாணான் குட்டி சளைத்த குட்டி.

வெள்ளாட்டிக்குச் சன்னதம் வந்தால் விழுந்து விழுந்து கும்பிட வேண்டும்.

(விழுந்து விழுந்துதான்.)

வெள்ளாட்டி பெற்ற பிள்ளை விடியற் காலம் செத்துப் போயிற்று.

வெள்ளாட்டி பெற்று வேலியில் எறிந்தது. 20780


வெள்ளாட்டியும் பெண்டாட்டியும் சரியா?

வெள்ளாடு குழை தின்றது போல.

வெள்ளாடு தன்னோடே, செம்மறியாடு இனத்தோடே.

வெள்ளாடு நஞ்சிலும் நாலு வாய் கடிக்கும்.

வெள்ளாடு நனைகிறது என்று வேங்கைப் புலி விழுந்து விழுந்து அழுகிறதாம். 20785


வெள்ளாடு புகுந்த தோட்டமும் வெள்ளாளன் புகுந்த காரியமும் வெட்ட வெளி.

வெள்ளாளக் குடிக்கு ஒரு சள்ளாளர் குடி.

(வெள்ளாளர் குட்டிக்கு.)

வெள்ளாளர் செய்யாத வேளாண்மை ஒரு வேளாண்மை அல்ல.

வெள்ளாளன் கால் வைத்த இடமும் வெள்ளாடு கால் வைத்த இடமும் உருப்படா.

(திருநெல்வேலி வழக்கு.)

வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் வழ வழ, கொழ கொழ. 20790


வெள்ளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.

வெள்ளாளன் கெடுக்காவிட்டாலும் வெள்ளோலை கெடுக்கும்.

வெள்ளாளன் மரபே மரபு; கள்ளர் திருட்டே திருட்டு.

வெள்ளாளன் மினுக்கிப் பண்ணிக் கெட்டான்; வேசி தளுக்குப் பண்ணிக் கெட்டாள்.

வெள்ளி இருக்க வியாழன் குளித்தளாம். 20795


வெள்ளி எண்ணெய் கொள்ளிக்கு ஆகாது.

வெள்ளி எதிரில் போனாலும் போகலாம்; வெள்ளாளன் எதிரில் போகக் கூடாது.

வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது.

வெள்ளிக்குப் பல் முளைத்தால் போல.

வெள்ளிக்குப் போட்டதும் கொள்ளிக்குப் போட்டதும் சரி. 20800


வெள்ளி ஞாயிறு மேற்கே சூலம்.

வெள்ளிடை மலைபோல.

வெள்ளி போட்ட காலுக்கு வெறுங்கால் அடிமையா?

வெள்ளி மலையும் வேகவதி ஆறும்.

(வெள்ளிமலை-ஹவ்திகிரியாகிய காஞ்சி.)

வெள்ளி மோதிரம் ஓசை தரும்; பொன் மோதிரம் ஓசை தராது. 20805

(ஓசை பெறும்.)


வெள்ளியில் விதை முடி; சனியில் கதிர் முடி.

வெள்ளி வட்டிலும் வேண்டும்; விளிம்பிலே பொன்னும் வேண்டும்.

வெள்ளி வீசினால் வீசம் குறையும்.

வெள்ளுரான் புறமடை அடைத்தது போல.

வெள்ளெருக்குக்கும் வெள்ளாட்டுப் பாலுக்கும் கள்ளக் கருமேகம் காணாமற் போம். 20810


வெள்வெலும்பை நாய் கடித்தது போல.

வெள்ளை இட்டால் வினை போகும்.

வெள்ளை உடுத்து வீசி நடந்தாலும் வெள்ளாட்டி வெள்ளாட்டியே

வெள்ளை எல்லாம் பால்; வெளுத்தது எல்லாம் மோர்.

வெள்ளைக்காரன் காலத்திலே தலைத் தலைக்குப் பண்ணாட்டு. 20815


வெள்ளைக்காரனுக்கு ஆட்டுத் தோல் இடம் கொடுத்தார்கள்.

அது அறுத்து ஊர் முழுதும் அடித்து இது எனது என்றான்.

வெள்ளைக்கு அழுக்கும் வேண்டாத பேருக்கு வார்த்தையும் எப்படியும் வரும்.

(வெள்ளைத் துணிக்கு அழுக்கும்.)

வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.

(வெள்ளைக்குக் கள்ளம் இல்லை.)

வெள்ளை கொடுக்க வினை தீரும். 20820


வெள்ளை கொடுத்தால் வினை தீரும்; பச்சை கொடுத்தால் பாவம் தீரும்.

வெள்ளைப் பாவாடை விரித்தாற் போல.

வெள்ளைப் பூண்டு எத்தனை வாசனை காட்டினாலும் துர்க் கந்தத்தையே வீசும்.

வெள்ளையப்பன் இருந்தால் எல்லாம் செய்யலாம்.

(வெள்ளையப்பன்-பணம்.)

வெள்ளையாய்ச் சொல்லிவிட்டான். 20825


வெள்ளையும் சள்ளையுமாய் வந்தான்; வீட்டுக்குச் சோற்றுக்கு இல்லை.

(சொள்ளையுமாய் வீட்டிலே சோறு இல்லை.)

வெள்ளையும் சொள்ளையும்.

வெள்ளை வண்ணாத்திப் பூச்சி மிச்சமானால் வெள்ளம் ஜாஸ்தி.

வெள்ளை வேட்டி வீராசாமிக்கு வேலூரிலே பெண்ணாம்.

வெளிச்சம் இருள் ஆனால் இருள் என்ன ஆகும்?

வெளிச்சம் புகாத வீட்டில் வைத்தியன் புகுவான். 20830


வெளிச்சீர் உட்சீரைக் காட்டும் கண்ணாடி.

வெளிமழை விட்டாலும் செடிமழை விடாது.

வெளியில் ஒழுங்கு; உல்ளே ஓக்காளம்.

வெளியில் சொன்னால் வெட்கக் கேடு.

வெளியில் சொன்னால் வெட்கம்; சொல்லாவிட்டால் துக்கம். 20835


வெளியில் தளுக்கு; உள்ளே அழுக்கு.

வெளியில் பார்த்தால் டம்பம்; உள்ளே பார்த்தால் ஓக்காளம்.

வெளுத்தது எல்லாம் பால் ஆகுமா? கறுத்தது எல்லாம் தண்ணீர் ஆகுமா?

வெருத்த நாரை வலமானால் விற்பதற்கு இரட்டை விலை.

(இரட்டி)

வெளுத்து விட்டாலும் சரி; சும்மா விட்டாலும் சரி; 20840


வெளுப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்.

வெளு வெளு என்று வெளுத்து விட்டான்.

வெற்றி பெற்றவன் சுத்த வீரன்.

வெற்றியும் தோல்வியும் வீரனுக்குச் சமம்.

வெற்றிலைக்குத் தண்ணீரும் வேசிக்கு மஞ்சளும் போல. 20845


வெற்றிலைக் கொடி விசாகக் கார்ததிகையில் விசிறிப் போட்டாலும் செழிக்கும்.

வெற்றிலை தந்த விஜய லக்ஷ்மி.

வெற்றிலைப் பொதிக்காரனும் அழுகிறான்; உப்புப் பொதிக்காரனும் அழுகிறான்.

வெற்றிலை போடுவாள் பெண் பிள்ளை; அவளை வெற்றிலைக் கொடிக்காலுக்கு விடமாட்டான் ஆண்பிள்ளை.

வெற்றிலை போல் இருக்கும். மிகுந்த மரம் ஆகிவிடும்; புத்தி உள்ள பூமரத்துக்குப் பூ இரண்டு வக்கணையாம். 20850


வெற்றிலை விலையைக் குத்திரத்திலே எழுதாதே.

வெற்றிக்காரன் குடியை விடான் வீண் புத்திக்காரன் பாவத்துக்கு அஞ்சான்.

வெறிக்கு இட்டு அழியேல்.

வெறி கொண்ட ஆனை மதர்த்துத் திரிகிறது போல.

(மிதந்து.)

வெறி கொண்ட மனசுக்குக் குழி தோண்டும் குணம் தோன்றும். 20855


வெறி நாய் அழகு சொறிநாய்க்கு வருமா?

வெறி நாய்க்கு வெல்லக் கட்டி.

வெறி நாய் கடித்தால் உடனே மரணம்.

வெறி நாய் போல.

வெறி நாய் வேட்டி கட்டித் திருநாள் பார்க்கப் போகிறது. 20860


வெறிப் பிள்ளை கிழித்தது கோவணத்துக்கு ஆகும்.

வெறி பிடித்த நாய்க்கு வெந்நீர் ஸ்நானமாம்.

வெறி பிடித்த நாய்மாதிரி கண்ணும் மன்னும் தெரியவில்லை.

வெறி பிடித்த நாய் வேங்கைக்குச் சமம். வெறி பிடித்த நாய் வேடிக்கை ஆகாது. 20865


வெறியன் கிழித்தது கோவணத்துக்கு ஆயிற்று.

வெறுகு இட்டு அழியேல்.

வெறும் கஞ்சியைக் குடித்துவிட்டு மசையிலே நெய்யைத் தடவிக் கொள்கிறது.

(கொள்கிறதா?)

வெறும் கழுத்துக்கு அரைப்பணத்துத் தாலி சிலாக்கியம்.

(மேல.)

வெறும் கழுதைக்கு வீறாப்பு அதிகம். 20870


வெறும் காதுக்கு ஓலைக்காது மேல்.

வெறும் குண்டி அம்மணம்; போட்டுக்கொள் சம்மணம்.

வெறும் கைத் தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.

வெறும் கை முழம் போடுமா?

வெறும் சட்டி தாளிக்கிறாள். 20875


வெறும் சலுக்கன் வீறாப்புக்காரன். வீட்டிலே சோற்றுக்கு இல்லை.

வெறும் சிறுக்கி அகமுடையான் வீம்புக்குத் தாண்டி விழுந்தானாம்.

வெறும் சிறுக்கியாம், போலியாம், வெள்ளியினாலே பீலியாம்.

வெறும் தரையில் கிடந்த பாட்டிக்குக் குறுங்கட்டில் கிடைத்ததாம்.

வெறும் நாய் சந்தைக்குப் போய் வெள்ளிக் கோல் அடியும் பட்டதாம். 20880


வெறும் பானையில் பழையதும் வேப்பங்காய்த் துவையலும்.

வெறும் பானையில் புகுந்த ஈயைப் போல.

(எலியைப் போல.)

வெறும் பிலுக்கு வண்ணான் மாற்று.

வெறும் புயலுக்கு ஏற்ற வீறாப்பு.

வெறும் புளி தின்றால் பல் கூசும். 20885


வெறும் வாய்க்கு இலை கெட்டவன்.

(சீவக சிந்தாமணி. 1230)

வெறும் வாய்க்கு இலை கெட்ட மாப்பிள்ளை வருகிறான்; கடன் வாங்கித் திருவிளக்கு ஏற்று.

வெறும் வாய்க்கு இலை கெட்டவன் வருகிறான்; கடன் வாங்கியாவது விளக்கு ஏற்றி வை.

வெறும் வாய்க்கு இலை கெட்டவன் விறகுக்குப் போனால் விறகு கிடைத்தால் கொடி கிடைக்காது; கொடி கிடைத்தால் விறகு கிடைக்காது.

வெறும் வாயை மென்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்தது போல. 20890

(மென்றவளுக்கு.)


வெறும் வாயை மெல்லுகிற அம்மையாருக்கு நாழி அவல் அகப்பட்டது போல.

வெறும் வாயை மெல்லுகிற கிழவிக்கு ஒரு பிடி அவல் கிடைத்தது போல்.

(ஒரு வாய் அவல்.)

வெறும் வாயை மெல்லுகிறவளுக்கு அவல் கிடைத்தால் விடுவாளா?

(மெல்லுகிறவன் விடுவானா?)

வே

வேகத்தில் நாலு விதம் உண்டு.

(வேதத்தில்.)

வேக நேரம் இருந்தாலும் சாகநேரம் இல்லை. 20895

(போது.)


வேகப் பொறுத்தது ஆறப் பொறுக்கக் கூடாதா?

(பொறுக்க வில்லையா?)

வேகாத கல்லை எடுத்து நோகாமல் இடித்துக் கொள்.

வேகாத சோற்றுக்கு விருந்தாளி இரண்டு பேர்.

வேகாத சோற்றுக்கு வேண்டாத விருந்தாளி.

வேகாத வீட்டில் வேகும் கட்டை காமம். 20900


வெகிற வயிற்றுக்கு வெள்ளி என்ன செவ்வாய் என்ன?

(வேகிற உடலுக்கு.)

ளேகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

(ஆதாயம்.)

வேகிற வீட்டுக்குக் கணக்குப் பார்ப்பார் உண்டா?

வேகிற வீட்டுக்கு வெட்டுகிற கிணறு.

வேகிற வீட்டை அவிக்காமல் இருப்பார் உண்டோ? 20905


வேங்கைப் புலியை வெள்ளாடுகள் சூழ்ந்தாற் போல்.

வேசி அவல் ருசியை அறியாள்; வெள்ளாட்டி என் ருசியை அறியாள்.

வேசி ஆடினால் காசு; வெள்ளாட்டி ஆடினால் சவுக்கு.

வேசி உறவு காசிலே.

(காசிலும் பணத்திலுத்தான்.)

வேசி உறவும் வியாபாரி நேசமும் மாசி நிலவும் மதியாதாகர் முற்றமும். 20910


வேசி உறவும் வெள்ளாட்டி அடிமையும் காசு பணத்தளவே காணலாம்.

வேசிக்கு ஆசை பணத்து மேலே.

வேசிக்கு ஆணை இல்லை; வெள்ளாட்டிக்குச் சந்தோஷம் இல்லை.

வேசிக்குக் காசுமேல் ஆசை. விளையாட்டுப் பிள்ளைக்கு மண்மேல் ஆசை.

வேசிக்கு விழி நீர் அரிதோ? 20915


வேசி காசு பறிப்பாள்.

வேசி மேல் ஆசைப் படுகிறது. வெள்ளெலும்பை நாய் கவ்வினது போல.

வேசியரும் நாயும் விதி நூல் வைத்தியரும் பூசுரரும் ஒருவருக்கு ஒருவர் பொருந்தும்.

வேசியரும் நாயும் விதி நூல் வைத்தியரும் பாசம் அற்று நிற்பது காண்பர்.

(கண் பார்.)

வேசியைப் பெண்டாக வைத்துக் கொண்டால் வேறே வினை தேவை இல்லை? 20920

(பெண்டுக்கு.)


வேசியைப் பெண்டாக வைத்துக் கொண்டால் விளக்குத்தான் பிடிக்க வேண்டும்.

வேசைக் காய்ச்சல்.

வேசையர் ஆசை விடிந்தால் தெரியும்.

வேட்டகத்தில் உண்போன் கக்கித் தின்னும் நாயோடு ஒட்டான்.

வேட்டகத்துப் பருப்பு விளைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வது போல. 20925


வேட்டகத்து வார்த்தையும் வெள்ளிப் பாத்திரசூடும் ஆனா.

வேட்டால் மதனியை வேட்பேன்; இல்லாவிட்டால் பரதேசம் போவன் என்றானாம்.

வேட்டியை வண்ணானுக்குப் போட்டாயா? வாணியனுக்குப் போட்டாயா?

வேட்டை ஆடிச் சிங்கம் தின்னும்.

வேட்டைக்காரனுக்கும் ஆட்டக்காரனுக்கும் பசை; வேசிக்கும் தாசிக்கும் பகை. 20930

(வேடக்காரனுக்கும் ஆடல்காரனுக்கும்.)


வேட்டைக்கு ஆகாத நாய் வீரம் பேசியதைப் போல.

வேட்டைக்குச் சென்ற நாய் வீட்டுக்கு வந்தது போல.

வேட்டை கண்ட நாயும் சாட்டை கண்ட மாடும் சும்மா இருக்குமா?

வேட்டை நாய்க்கு விருந்து அளிப்பது போல்.

வேட்டை நாய்ப் பாய்ச்சல் மாதிரி. 20935

வேட்டை நாய் போல் விழுகிறான்.

வேட்டை நாய் வழக்கு அறியுமா?

வேட்டை நாயை ஏவி விட்டது போல.

வேட்டை நாயைக் கண்ட சொறி நாய் வாலை மடக்கினது போல.

வேட்டை பெரிது என்று பேய் நாயைக் கட்டி இழுக்கிறதா? 20940


வேட்டையில் பிரியமான வேட்டை சிக்காரி வேட்டை.

வேடக்காரா, வேடம் விட்டா: ஓடக்காரா, ஓடம் விடடா.

வேடத்தில் நாலு விதம் உண்டு.

வேடத்தினால் என்ன. வெண்ணீற்றினால் என்ன?

வேடம் அழிந்து போம். 20945


வேடம் கூடம் கொள்ளாது.

வேடம் மூன்று வகை.

வேடமோ தவ வேடம்; மனத்திலோ அவ வேடம்.

வேடர் இல்லா ஊரில் யாவும் குடி இருக்கும்.

வேடர்களில் மலை வேடர் விசேஷம். 20950


வேடர் கையில் அகப்பட்ட தேன் கூண்டு போல.

வேடருக்கு அருமையான வேட்டை முயல் வேட்டை.

வேடன் பிள்ளைக்கு இறைச்சி அரிதா?

வேடன் வலையில் அகப்பட்ட மான்போல்.

வேடனுக்குத் தேன் பஞ்சமா? மூடனுக்கு அடி பஞ்சமா? 20955


வேடிக்கைக்குப் பிள்ளை பெற்றேன்; வேண்டும் என்றால் பேர் இடு.

வேடிக்கைக்கு விலை இல்லை; கதைக்குக் கால் இல்லை.

வேடிக்கைக்கு விலை உண்டா?

வேண்ட வேண்டத் தாண்டவம் ஆடுகிறான்.

வேண்டாத நாளிலே வேப்பங்காய் ஆனேன். 20960


வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம்; கால் பட்டால் குற்றம்.

வேண்டாத பேருக்கு ஈந்து என்ன? வேலையில் ஆற்றுத்தண்ணீர் விழுந்து என்ன?

வேண்டாதவனுக்கு வலப் பக்கத்தில் ஊறுகாய்.

வேண்டாதவனுக்கு வெறும் வெற்றிலை.

(வேண்டாதவன் கையில்.)

வேண்டாதாரை நினைத்தாய் வேப்பங்காய். 20965

வேண்டா வெறுப்பாய் ஏண்டி கொடுப்பாய்?

வேண்டா வெறுப்பும் திருவாதிரையும்.

வேண்டியவன் காதலைப்பார்: வேண்டாதவன் தூதைப்பார்.

(காதல்-கூளப்ப நாயக்கன் காதல் தூது-விறலிவிடுதூது.)

வேண்டி வினை செயேல்.

வேண்டி வேண்டிக் கொடுத்தால் வேண்டாம் என்பதா? 20970


வேண்டி வேண்டிக் கொடுத்தாலும் வேண்டாம் என்றாற் போல.

வேண்டினால் வேலியிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் வேரிலும் காய்க்காது.

வேண்டும் அயிரை விட்டு வரால் வாங்குபவர்.

(பழமொழி நானூறு.)

வேண்டும் ஆனால் அவரை வேரிலும் காய்க்கும்.

வேண்டும் என்றால் எதுதான் செய்யக்கூடாது? 20975


வேண்டும் என்றால் விடு; வேண்டாம் என்றால் காடு.

வேண்டும் என்றால் வெண்ணெய்போல நூற்கலாம்.

(வெண்ணெய்க் கட்டி போல.)

வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது.

(செடியிலும் காய்க்காது.)

வேண்டும் என்று நூற்றால் வெண்ணெய் போல் நூற்கலாம்.

வேணும் கட்டைக்கு வேணும்; வெண்கலக் கட்டைக்கு வேணும். 20980


வேதத்தில் நாலு விதம் உன்டு.

வேதத்துக்கு உலகம் பகை; உலகத்துக்கு ஞானம் பகை.

வேதத்துக்கும் விக்கிரக பக்திக்கும் பகை.

வேதத்தை அறியாத கிழவன் வீண்.

வேதம் ஆய்ந்து ஓதல் போதகர் முறைமை. 20985


வேதம் ஏன், நியாயம் ஏன், வித்தாரக் கள்ளருக்கு?

வேதம் ஒத்த மித்திரன்.

வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.

வேதம் கெட்டிவரை வேதம் செட்டவர் என்பானேன்?

வேதம் பொய்த்தாலும் வியாழன் பொய்க்காது. 20990

(செய்யாது.)


வேதாரணியத்தில் பாம்பு கடிக்கிறதும் இல்லை; வேதாரணியத்தில் பாம்பு குறைகிறதும் இல்லை.

வேதாரணியத்தில் விளக்கு அழகு,

வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொண்டிது.

வேதியர்க்கு அழகு வேதம் ஓதுதல்.

வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும். 20995


வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.

(வேறு துணை இல்லை.)

வேந்தனும் பாம்பும் நெருப்பும் சரி.

வேப்பங்கனிக்குக் காகம் காத்திருக்கும்.

வேப்பங்காய்க் குழம்பும் வீழி இலைத் துவையலும் அகமுடையான் சமைத்தால் அமிர்தம் அமிர்தம் என்பானாம்.

வேப்பந் தோப்பும் நாய் மந்தையும் கான்பது அரிது. 21000


வேப்பம் பழம் சிவந்தாலும் விரும்புமா கிளி?

(கனிந்தாலும்.)

வேப்பிலைக் கட்டியும் விழுதலைக் குழம்பும் அகமுடையான் சமைத்தால் அமிர்தம்.

(வேப்பிலைக் கறியும்.)

வேப்பூர்த் திருடனை நம்பினாலும் கருப்பூர்ப் பார்ப்பானை நம்பக் கூடாது.

(வேப்பூர் விழுப்புரத்துக்கு அருகில் உள்ள ஊர்.)

வேப்பெண்ணெய் விருந்து எண்ணெய் அல்ல; மருந்து எண்ணெய்.

வேப்பெண்ணெய் விற்ற காசு கசக்குமா? 21005


வேப்பெண்ணெயும் ஆபத்துக்கு உதவும்.

வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா?

வேம்பின் புழு வேம்பு அன்றி உண்ணாது.

வேம்புக்குப் பல் அழகு பெறும்; வேலுக்குப் பல் இறுகும்.

வேம்பு வரும்பு ஆச்சே; வெற்றிலையும் நஞ்சு ஆச்சே. 21010

(விஷம்.)


வேம்பு செய்வதை வேறு எவரும் செய்யார்.

வேம்பு தின்பவனுக்கு வேம்பு ருசி; கரும்பு தின்பவனுக்குக் கரும்பு ருசி.

வேம்பும் சரி; பாம்பும் சரி.

வேம்பும் சரி; வேந்தனும் சரி.

வேம்பும் தித்திக்குது, வேளையோடே பொல்லாப்பு. 21015


வேம்பு வாடுகிற வெயில்.

வேம்பு வெட்டிக் கெட்டது; பூவரசு வெட்டாமல் கெட்டது.

வேம்பைத் தின்றார்க்கு வேம்பே மரணம்.

வேம்பை விரும்பக் கரும்பு ஆகும்.

வேர் அற்ற மரம் போல் சாய்ந்தான். 21020


வேர் இல்லாக் கொற்றான் போலே.

வேர் ஓடி விரைத்தி முளைத்தாலும் தாய் வழி தப்பாது.

(விலத்தி. யாழ்ப்பாண வழக்கு.)

வேர்க்க விளையாடினால் வியாதி நீங்கும்.

வேர் நின்றால் மரம் நிற்கும்; வியாபாரம் நின்றால் செட்டி நிற்பான்.

வேர் மூலிகை, மரம் மூலிகை, காய் மூலிகை. 21025


வேரில் விட்டால் கிளையில் தளிர்க்கும்.

வேரைக் கல்லி வெந்நீரை ஊற்றுகிறது.

(விடலாமா?)

வேரைக் களைந்த மரம் பிழைக்குமா

வேல் உண்டு; வினை இல்லை: மயில் உண்டு, பயம் இல்லை,

வேல் தொளைத்த புண்ணிலே கொள்ளிக் கட்டையைச் சொருகினது போல். 21030


வேல் வைத்துப் பயிர் ஆக்குவோ இல்லை.

வேலங்காட்டிலே போய் விளாங்காய் தேடினாற் போல.

(இருளர்.)

வேலம் பட்டை மேகத்தை நீக்கும்; ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.

வேலமரத்துக்கு நிழல் இல்லை; வெள்ளாளனுக்கு உறவு இல்லை.

வேல மரத்து முள்ளும் ஆல மரத்துக் கிளியும் ஆனேன். 21035


வேலனுக்கு ஆனை சாட்சி.

வேலி ஒன்றுக்கு ஈரிணை மாடும் இரண்டு ஆளும் வேண்டும்.

வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு சலம் விரைப்பாடு.

வேலிக்கு ஓணான் சாட்சி.

வேலிக்கு ஓணான் சாட்சி; வெந்ததுக்குச் சொக்கன் சாட்சி. 21040


வேலிக்கு ஓணான்சாட்சி, வேலனுக்கு ஆனை சாட்சி.

வேலிக்குப் போட்டி முள் காலுக்கு வினை ஆயிற்று.

வேலிக்கு முள் இடக் காலில்தைத்தது.

(முள் போட.)

வேலிசாடும் பசுவுக்கு என்றைக்கும் கோல் கொண்டுதான் மரணம்.

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

வேலி நிழல் ஆமோ? வேற்றுப் பேர் தாய் ஆமோ? 21045

வேலி நிழலும் நிழல் அல்ல; ஆண் உறவும் உதவு அல்ல.

வேலிப் புறத்தில் கண்ணும் மாமியார் தலையில் கையும்.

வேலியிலே சீலையைப் போட்டால் மெள்ளத்தான் எடுக்க வேணும்.

வேலியே மேய்ந்தால் விளைவது எப்படி?

(விளையுமாறு எப்படி.)

வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி? 21050


வேலியே வயலை அழித்தால் விளைகிறது எங்கே?

வேலிலும் நாலு பலன் உண்டு.

வேலி வைத்துக் காப்பாற்றாத கன்றும் ஆலை வைத்து ஆடாத வாணியனும் சரி அல்ல.

(வீண்.)

வேலுக்குப் பல் உறுதி, வேம்புக்குப் பல் ஒளி.

வேலும் வாளும் அடலுக்கு உறுதி. 21055


வேலை அதிகம், சம்பளம் கொஞ்சம்.

வேலை அற்ற அம்பட்டன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.

வேலை அற்ற அம்பட்டன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்

வேலை அற்ற அம்பட்டின் மகளைப் பிடித்துச் சிரைத்தானாம்.

வேலை அற்ற கோழி வெறுமனே முட்டை இட்டதாம். 21060


வேலை அற்ற தட்டான் ஊது குழலை உடைத்தானாம்.

வேலை அற்ற நாய்க்கு வேறு வேலை என்ன?

வேலை அற்ற மாமியார் கழுதையைப் போட்டுச் சிரைத்தாளாம்.

வேலை அற்ற மாமியார் மருமகளைப் போட்டுத் தாலாட்டினாள்.

வேலை அற்றவன் ஓலையை ஏற்று பிரிந்து கொட்டுண்டால் திருப்பி ஏற்று. 21065

(யாழ்ப்பாண வழக்கு.)


வேலை அற்றனன் வேளாளத் தெருவுக்குப் போ; அலுவல் அற்றவன் அக்கிரகாரத்துக்குப் போ.

வேலை இல்லா ஊருக்கு ராஜா ஏன்? பாம்பு இல்லா ஊருக்குக் கீரிப் பிள்ளை ஏன்?

வேலை இல்லாத் தலை வீண் எண்ணக் கலை.

வேலை இல்லாத அம்பட்டன் ஆட்டைச் சிரைத்தானாம்.

வேலை இல்லாதவன் சீலைப் பேன் குத்தினாற் போல். 21070


வேலை இல்லாதவன் வேளாளத் தெருவுக்குப் போனாற் போல.

வேலை இல்லாதவனுக்குச் சாப்பாடு எதற்கு? எச்சில் சோற்றுக்காரனுக்கு டம்பம் எதற்கு?

வேலை ஏன், பிள்ளை ஏன், வேலை இல்லாருக்குச் சாப்பாடு ஏன்?

வேலைக் கன்னிக்குப் பிள்ளைமேல் சாக்கு.

(வேலைக் குழப்பிக்கு.)

வேலைக் கன்னிக்குப் பிள்ளைமேல் சாக்கு; வெட்கம் கெட்ட நாரிக்கு அகமுடையான்மேல் சாக்கு. 21075


வேலைக் கன்னிக்கு வேளைக்குக் காற்படி; வீண் கட்டைக்கு வேளைக்கு அரைப்படி.

வேலைக்காரன் வந்தால் கூழைக் காய்ச்சி ஊற்று.

வேலைக்காரி என்று வேண்டிய பேர் கேட்டார்கள்; குடித்தனக்காரி என்று கொடுக்க மாட்டோம் என்றார்கள்.

வேலைக்காரி என்று வேலூரில் கேட்டார்களாம்.

வேலைக்காரியாய் வந்தவன் வீட்டுக்காரி ஆனால் அது அவள் அதிர்ஷ்டம். 21080


வேலைக்கு அடுத்த கூலி, வேசிக்கு அடுத்த கூலி.

வேலைக்கு இளைத்தவளுக்குப் பிள்ளை மீது சாக்கு.

வேலைக்கு ஏற்ற கூலி.

வேலைக்குத் தக்க கூலி. விருப்பத்துக்குத் தக்க கூர்மை.

வேலைக்குத் தக்க கூலி, வேசிக்கு வேண்டியது காசு. 21085


வேலைக்குத் தகுந்த வேஷம்.

வேலைக் குழப்பிக்குப் பிள்ளை மேல் ஆசை. விளையாட்டுப் பெண்ணுக்கு மண்மேல் ஆசை.

வேலைக் குழப்பிக்குப் பிள்ளைமேல் வாக்கு.

வேலைக்கோ சம்பளம் ஆளுக்கோ சம்பளம்?

வேலை செய்தால் கூலி, வேஷம் போட்டால் காசு. 21090


வேலை செய்யாத பிள்ளையைக் கையில்லை; வேலை செய்கிற பிள்ளையைக் காலில் வை.

வேலை பார்த்துப் பெண்ணைக் கொள்.

வேலை முகத்தில் நெருப்பும். சோற்று முகத்தில் சிரிப்பும்.

வேலை முத்தோ, பிள்ளை முத்தோ?

வேலை மெனக்கெட்ட அம்பட்டன் பூனைக் குட்டியைச் சிரைத்தானாம். 21095


வேலையில் நல்ல அடி அடிக்கிறான்.

வேலையைப் பார்த்துக் கூலியைக் கொடு.

வேலையைப் பார்த்துப் பெண்ணை எடு; சாலையைப் பார்த்து ஊருக்கு நட.

வேலையோ இன்னதென்று தெரியவில்லை; காரியம் இடுப்பு ஒடிகிறது; செலவுக்குப் பணம் இல்லை; செவலைக் காளையை விற்றுச் செலவுக்குப் பணம் அனுப்பு என்றானாம்.

வேழத்துக்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும். 21100


வேழத்தை ஒத்த வினை வந்தால் தீர்வது எப்படி?

(எப்போது?)

வேழம் முழங்கினாற்போல.

வேளாண்மை எல்லாம் வல்லாண்மையாலே,

வேளாளர் செய்யாத வேளாண்மை வேளாண்மை அல்ல.

வேளாளன் கல்யாணம் விடிந்தால் தீர்ந்தது. 21105


வேளாளன் கிரந்தமும் பார்ப்பான் தமிழும் விழல் விழலே.

வேளாளன் மரபே மரபு, கள்ளர் திருப்டே திருட்டு.

வேளாளன் வைத்துக் கெட்டான்; துலுக்கன் உடுத்துக் கெட்டான்.

வேளாளனைப் பாடிய வாயால் வேந்தனைப் பாடுவது இல்லை.

வேளை அறிந்து பேசு; நாளை அறிந்து பயணம் பண்ணு. 21110


வேளைக்காரன் படுத்துகிற பாட்டுக்கு மேளகாரன் என்ன செய்வாள்?

(செய்ததற்கு.)

வேளைக்கு அரைக்காசு ஆயிரம் பொன் ஆம்.

வேளைக்கு அரைப்படி வெங்காய ரசம் இருந்தால் சும்மா இருந்து சொகுசாகச் சாப்பிடுவாள்.

வேளைக்கு அரைப் பணம் ஆயிரம் பவுன்; வேளை தப்பினால் நாயுடை மயிர்.

வேளைக்கு உதவாத பிள்ளை தாழங்காய்க்குச் சரி. 21115


வேளைக்கு ஓர் உறவு; ஆளுக்கு ஒரு மரபு.

வேளைககுத் தக்க புத்தி.

வேளைககுத் தகுந்த வேஷம்.

வேளையும் நாழிகையும் வந்தால் வேண்டாம் என்றாலும் நிற்காது.

வேளையும் பொழுதும் வாய்க்க வேணும். 21120


வேளையும் விதியும் வந்தால் வேலியால் வரும் மாப்பிள்ளை.

(யாழ்ப்பாண வழக்கு)

வேளையோ அவவேளை, வீட்டிலோ அன்னம் இல்லை.

(அவல வேளை.)

வேற்றும் அரிசி விறகு கரி உண்டானால் சாற்றூருக்கு இல்லை சரி.

வேற்றூர் அரிசியும் விறகும் உண்டானால்

சாத்தூருக்கு ஒப்பு இல்வல.

வேறு வினை தேவை இல்லை; வினை தீர்த்தான் கோவிலுக்குப் போகவேண்டியதில்லை. 21125


வேணலுக்குக் கன மழை வரும்; வேந்தனுக்குக் கன ஜனம் சேரும்.

(வேனிலுக்கு.)

வேனில் காலத்துக்கு விசிறி; ஆன காலத்துக்கு ஆச்சாவும் தேக்கும் வை.

வேஷத்தினால் என்ன, வெண்ணீற்றினால் என்ன?

வை


வை என்ற எழுத்தே சொல்லும் செயலும் ஆகும்.

வை என்ற எழுத்தே பெயரும் விளையும் ஆகும். 21130


வைக்கத்துப்பட்டி, அரிப்பாட்டுக்குட்டி, அம்பலப் புழைக் காக்காய்.

(பட்டி-நாய். குட்டி-குழந்தை, இவை மிகுதியான இடங்கள்.)

வைக்கத் தெரியாமல் வைக்கோல் போரில் வைத்தானாம்.

(தெரியாதவன்.)

வைக்கத் தெரியாமல் வைத்துவிட்டு வந்தவரை எல்லாம் கேட்கலாமா?

வைக்கவும் தெரியாது; வைத்துப் படைக்கவும் தெரியாது.

வைக்கிறவன் வைத்தால் நடுப்பந்தியில் இருந்தால் என்ன, கடைப் பந்தியில் இருந்தால் என்ன? 21135


வைக்கோல் எடுத்த காசுக்கு வழக்காடி நிற்கையில் பரவச்சேரி மணியம் வாங்கித்தரச் சொன்னாளாம்.

வைக்கோல் எடுத்த வழியாய் இருக்கிறது.

வைக்கோல் கட்டுக்காரனாவது ஒதுங்கவேணும்; வழியே போகிறவனாவது ஒதுங்கவேணும்.

வைக்கோல் கட்டுக்காரனை ஒப்புக்குக் கட்டி அழுதாற் போல்.

வைக்கோல் கால் கொண்டு மாய்ந்து மாய்ந்து அடித்தாளாம். 21140


வைக்கோல் கூரையிலும் விழல்கூரை வெகுநாள் இருக்கும்.

வைக்கோல் கூளமும் ஒரு வேளைக்கு உதவும்.

வைக்கோல் தின்கிற குதிரைக்கு வேகம் அதிகமா?

வைக்கோல் தின்கிற மாட்டுக்குப் பால் கொஞ்சம்; மதுரம் அதிகம்.

(இனிப்பு அதிகம்.)

வைக்கோல் தின்னும் குதிரை வீட்டுக் கூரையையும் பிடுங்கும். 21145


வைக்கோல் பஞ்சமா? வறட்டுப் பசு பஞ்சமா?

வைக்கோல் பட்டையில் கட்டின நாய்.

வைக்கோல் படப்பின்மேல் நாய் படுத்தமாதிரி.

வைக்கோல் படப்புப் போல மெலிந்து போனாயே!

வைக்கோல் படப்பை நாய் காத்தாற் போல். 21150


வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல.

வைக்கோல் போரில் நின்று மேயும் காளைக்குப் பிடுங்கிப் போட்டால் கட்டுமா?

வைக்கோலில் விளைந்ததை வைக்கோலில் கட்ட வேண்டும்.

வைகறையில் எழுந்து வயலுக்குப் போ.

வைகறைத் துயில் எழு. 21155


வைகாசி எள்ளு வாயிலே.

வைகாசி எள்ளை வரப்பிலே கொட்டு.

வைகாசி மழை பெய்தால் புளியம்பூப் பொய்க்காது.

வைகாசி மழை வாழை பெருகும்.

வைகாசி மாதத்தில் வரகு விதைத்தால் கையாடல் கலம் காணும். 21160


வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.

வைகாசி மாதம் மதி குறைந்த நாலாம் நாள் பெய்யுமே யாகில் பெருமழையாம்; பெய்யாக்கல் மாரி மறுத்து மறி கடலும் நீர் வற்றி ஏரிக்குள் என் விதை.

வைகாசி மாதம் வறுத்துக் குத்த வேணும்.

வைகாசி மாதம் வாய்திறந்த கோடை.

(கொங்கு நாட்டு வழக்கு.)

வைகாசி மாதம் வாய் மடையில் ஏர் பூட்டப் பொய்யாமல் பூக்கும் புளி. 21165

(பொய்யாது.)


வைகாசி மாதம் வாழை பெருகும்.

வைகுண்டத்துக்குப் போகிறவனுக்கு வழிகாட்டிக் கொடுக்க வேணுமா?

வைகுண்டம் என்பது திருமா நகரம்.

(திருமால் நகரம்.)

வைகுண்டம் என்பது ஶ்ரீரங்கம்.

வைகை ஆற்றுத் தண்ணீர் வேகம் அதிகம், 21170

(வைகைக்கு வேகம் அதிகம்;)


வைகை ஆற்று வெள்ளத்தில் பாலம் நிலைக்கிறது இல்லை.

வைகை ஆறு தாமிரபர்ணிக்கு மத்திமம்.

வைகைக் கரைக்கு வசர்த்தையும் கங்கைக் கரைக்குக் கீர்த்தியும்.

வைசியர்களில் பூவைசியர் சிரேஷ்டம்.

(சிறந்தவர்.)

வைசியரும் சூத்திரரும் இருந்தல்லவோ பிராமணரும் க்ஷத்திரியர்களும் வருவார்கள்? 21175


வைசூரில் வந்தவர்கள் அம்மா என்று கூப்பிட வேண்டும்.

வைத்த உடைமையைக் கேட்க வயிறு எரிகிறது.

வைத்த கண் வாங்காத அழகு.

வைத்த கால் எடுக்கிறதற்குள் மாற்றுக் கால் செல் அரித்துப் போகிறதே!

வைத்தது உண்டானால் கெட்டதும் உண்டாகும். 21180


வைத்தது எல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பல்.

வைத்தது எல்லாம் மரம் ஆகுமா?

வைத்ததுக்குமேல் வழி இல்லை; பிச்சைக்குப் போகச் சுரைக்குடுக்கை இல்லை.

(கரைக் குடுவை.)

வைத்தது கண்டது சொல்லாதே.

வைத்தது வரிசை சிரைத்தது மொட்டை. 21185

(வைத்தது சட்டம்.)


வைத்த பணம் குறையக் கூடாது; மக்கள் தொப்பை வாடக் கூடாது.

வைத்த பாரம் சுமப்பான்.

வைத்த பிழைப்புக்கு வைப்பாட்டி இரண்டு பேர்.

வைத்த பிள்ளையைப் பாதுகாத்தால் பெற்ற பிள்ளைக்கு உதவும்.

(வைத்த பிள்ளை-தென்னம் பிள்ளை.)

வைத்த மரத்தில் இலை அறுக்காதே. 21190


வைத்த வரிசைககுப் பிச்சமமாவாசை.

வைத்தால் எடுக்க வேண்டும்; வழி அறிந்தவன் போக வேண்டும்.

(அறியாதவன்.)

வைததால் குடுமி, சிரைத்தால் மொட்டை.

வைத்தால் பிள்ளையார்; விட்டு எறிந்தால் சாணி.

(வழித்து எறிந்தால், வழித்து எடுத்தால். )

வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம். 21195


வைத்தியத்தில் ரண வைத்தியமும் வயசில் யௌவனமும் நல்லவை

(வயசில் இளமையும் நன்மை தரும்.)

வைத்தியம் கொஞ்சமாவது தெரியாத பேர் இல்லை.

வைத்தியம் செய்தவன் எல்லாம் வைத்தியன்.

வைத்தியம் பெரிதோ, மருந்து பெரிதோ?

வைத்தியம், ஜோசியம், சங்கீதம், மந்திரம் தெரியாதவர்கள் இல்லை. 21200


வைத்தியமோ, பைத்தியமோ?

வைத்தியன் உயிர் இருக்கும் வரையில் விட மாட்டான்; வைதிகன் உயிர் போன பிறகும் விடமாட்டான்.

வைத்தியன் காய்கறிக்குப் போனது போல.

வைத்தியன் கையைப் பார்த்து வாக்கு இட்டது போல.

வைத்தியன் கைவிட்டது போல, 21205


வைத்தியன் கொடுத்தால் மருந்து; இல்லாவிட்டால் மண்.

வைத்தியன் சொன்னது எல்லாம் மருந்து.

வைத்தியன் தகப்பனைப் போல.

வைத்தியன் தலைமாட்டில் இருந்து அழுதது போல.

வைத்தியன் பாராத நோய் தீருமா? 21210


வைத்தியன் பிள்ளைக்கு நோய் தீராது; வாத்தியார் பிள்ளைக்குப் படிப்பு வராது.

வைத்தியன் பிள்ளை சாகானோ? வாத்தியார் பெண் அறுக்காளோ?

வைத்தியன் பிள்ளை நோயாளி; வாத்தியார் பிள்ளை கோமாளி.

வைத்தியன் பிள்ளை நோயினால் சாகாது; மருத்தினால் சாகும்.

வைத்தியன் பிள்ளையும் வாத்தியார் பிள்ளையும் முட்டாள். 21215


வைத்தியன் பிள்ளை வைத்தியன்.

வைத்தியன் பெண்டாட்டி சாகிறது இல்லையா? வாத்தியார் பெண் அறுக்கிறது இல்லையா?

(வைத்தியன் பெண்.)

வைத்தியன் பெரிதோ? மருந்து பெரிதோ.?

வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.

வைத்தியன் மருந்திலும் கை மருந்தே நலம். 21220


வைத்தியன் வீட்டில் சாவும் ஜோஸியன் வீட்டில் அறுக்கிறதும் இல்லையா?

வைத்தியன் வீட்டு நாய் வாதநோய் அறியாதாம்.

வைத்தியனுக்கு ஊரார் யாவரும் சிநேகிதம்.

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.

வைத்தியனுக்குச் சொர்க்கம் இல்லை; வாத்தியாருக்கு நரகம் இல்லை. 21225


வைத்தியனுக்குத் தன் ஒளஷதம் பலிக்காதாம்.

(மருந்து.)

வைத்தியனுக்கும் அஞ்ச வேண்டும்; வம்பலுக்கும் அஞ்ச வேன்டும்.

வைத்தியனுக்கு மோட்சம் இல்லை; வாத்திக்கு மோட்ச வழி உண்டு.

வைத்தியனுக்கு வந்தது அவன் தலையோடே.

வைத்தியனும் கைவிட்டால் ஆண்டவனே கதி. 21230


வைத்தியனைப் பெரியவன் என்பார் சிலர்; வாத்தியே பெரியவன் என்பார் சிலர்

வைத்திருந்த சொத்துக்கு வட்டி வளருமா?

வைத்தீசுவரன் கோவிலுக்குப் போயும் வயிற்று வலி தீரவில்லை.

வைத்துப் பார்க்கிறது விற்றுப் பார்.

வைத்து வாழ்ந்தவனும் இல்லை; கொடுத்துக் கெட்டவனும் இல்லை. 21235


வைத்து வைத்தவன் போல எடுத்துக் கொண்டான்.

வைதவனுக்குத்தானே வாய் நோவும்?

வைதாரையும் வாழ்க என வாழ்த்து.

வைதாரையும் வாழவைக்கும்; வாழ்ந்தாசைத் தாழவைக்கும். 21240


வைதால் வட்டி போச்சு: அடித்தால் அசல் போச்சு.

வைதிகம் என்றால் தெய்வ சமயம்.

வைதிகம், லெளகிகம் இரண்டும் வேண்டும்.

வைதிகம் வாழ்ந்து அறி.

(ஆய்ந்து.)

வைப்பாரை வைக்கிற வரிசை தெரியவில்லை; விளக்குமாறு சாத்துகிற மூலை தெரியவில்லை.

வைப்பு வரப்புப் பார்க்க வேண்டும். 21245


வைப்பு வாக்குப் பார்த்துப் பேச வேண்டும்.

வையகக் கூத்தே வயிற்றில் அடிக்கம்.

வையகத்தார் மழைக்கு என்ன செய்ய முடியும்?

வையகத்தில் எல்லோரும் ஒரு போக்கு அல்ல.

வையகத்தில் பொய் சொல்லாதவன் இல்லை. 21250

வையகத்தில் உடம்பு இல்லாத பேர்க்கு உப்பு வேண்டாம்.

வையகத்தில் உடம்பு இல்லாவிட்டாலும் உடை வேண்டும்; பணம் இல்லாவிட்டாலும் கனம் வேண்டும்.

வையகத்தில் உப்புக்கு ஏமாறின பேர் உடம்புக்கும் ஏமாறுவார்கள்.

(உடலுக்கும்.)

வையகத்தில் உப்பும் வேண்டும்; உடலும் வேண்டும்.

வையகத்தில் உயர்ந்தோர் சிலர்; தாழ்ந்தோர் பலர். 21255


வையகத்தில் உயர்ந்தோர்க்கு இரை தாழ்ந்தோர்.

வையகத்தில் சைவனுக்குச் சைவம் மேல்.

(சைவனே.)

வையகத்தில் தந்தையிலும் தாய் விசேஷம்.

(சிறந்தவள்.)

வையகத்தில் தெவிட்டாத பொருள் அன்னமும் தண்ணீரும்.

வையகத்தில் நல்லோர் ஒருவரைக் கண்டதில்லை. 21260


வையகத்தில் நல்விளையால் ஆகாது தீவினையால் ஆகுமா?

வையகத்தில் நெல் அரிசி வேண்டாதாரும் புல் அரிசி சிக்காதாரும் உண்டு.

வையகத்தில் நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்குப் பாயும்.

வையகத்தில் மேலான பேர்க்குத் தாழ்மையான மனசு இருக்க வேண்டும்.

வையகத்துக்குத் துணை வரதன் கடல் இணை. 21265


வையகம் உற்றவன் மெய்யகம் உற்றவன்.

வையகம் ஒழியும்; வான் ஒழியும்; வல்லவர் வசனம் ஒழியாது.

வையகம் செழிக்க மெய்யகம் வேண்டும்.

வையத்து மனிதன் நாலு வகை.

வையத்துள் நீதி செய்யத் தக்கது. 21270


வையம் ஏற்றின் ஐயம் இல்லை.

(ஏற்பின்.)

வையம் ஒத்தால் ஐயம் இல்லை.

வையம் ஒழியும், வான் ஒழியும், வல்லவர் வசனம் ஒழியாது.

வையம் கெட்டால் ஐயம் இல்லை.

வையம் பகைக்கின் ஐயம் உண்டு. 21275


வையம் புகழ்ந்தால் ஐயம் இல்லை.

வையம் பெரிது; அதில் வருத்தமும் பெரிது.

வையம் பெரிது ஆனாலும் வளம் உள்ள இடம் கொஞ்சம்.

வைய வைய வைரக்கல்; திட்டத் திட்டத் திண்டுக்கல்.

வையார் ஊசியைக் குறச் சேரியில் விற்றாற் போல. 21280


வைரத்தில் ஊசி பாயுமா?

வைரத்தை வைரம் அறுக்கும்; அரத்தை அரம் கொல்லும்.

வைரத்தை வைரம் கொண்டே அறுக்க வேண்டும்.

வைரம் கொண்டவன் வைரப் பொடி தின்று சாகிறான்.

வைரம் மனசில் வையாதே. 21285


வைராக்கிய சதகம் சதகங்களில் விசேஷம்.

வைராக்கியத்துக்கு அம்பட்டன் கத்தியை விழுங்குகிறா?

வைராக்கியம் பகை முதலிய துர்க்குணங்களில் விசேஷம்.

வைராகி துறவிகளில் விசேஷம்.

வைரியைக் கண்ட கொக்குக் கூட்டத்தைப் போல. 21290


வைவார்க்கு இன்பம் இல்லை; பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை.

வைஷ்ணவனுக்கு வயிற்றிலே பல்.

வெள


வெளவால் அடிக்குப் பயப்படலாமா?

வெளவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?

வெளவால் அடித்துத் தின்னும்; அணில் கடித்துத் தின்னும். 21295


வெளவால் அடைகிற வீட்டில் குடியிருப்பது எப்படி?

வெளவால் கட்சி.

வெளவால் கூட்டம் கூட்டமாக இருக்கும்.

வெளவால் தலை நரித்தலை போல

வெளவால் தின்னாத பழம் இல்லை. 21300


வெளவால் போல தொங்குகிறான்

வெளவால் வீட்டில் வெளவால் போன கதை.

வெளவால் வீட்டுக்குப் போனால் தலை கீழாகத் தொங்கவேண்டும்.

வெளவால் வீட்டுக்கு வெளவால் போனால் நீயும் தொங்கு; நானும் தொங்கு.

(வந்தால்.)

வெளவாலாய்த் தொங்கினாலும் நடக்காத காரியம் நடக்காது 21305


வெளவாலார் தின்ற கனி வாயாலே வாயாலே.

(யாழ்ப்பாண வழக்கு.)

வெளவாலுக்கு இரவில் கண் தெரியும்.

வெளவாலுக்கு எது தூரம்?

வெளவாலுக்கு ஒரு கனிக்கு நூறு கனி நஷ்டம்.

வெளவாலுக்கு நீளவும் தெரியும்; குறுகவும் தெரியும் 21310


வெளவாலுக்கு மரமே கதி அதன் குஞ்சுக்கும் அதுவே கதி.

வெளவாலுக்கு யார் தாம்பூலம் வைத்தார்கள்?

வெளவாலைக் கொன்றாலும் பிடியை விடாது.

வெளவாலைத் தின்றாலும் அணிலைத் தின்னல் ஆகாது.

வெளவாலைப் பட்சி என்கிறதா, மிருகம் என்கிறதா? 21315


வெளவாலைப் போலத் தொங்குகிறான்.

வெளவாலோ சிறிது; அதன் அடியோ வலிது.

வெளவாலோடு அணில் பிள்ளை சேருமா?

வெளவி அணில் தொத்துகிறது போல.

வெளவிச் சேர்த்த பேர்க்குப் பொருள் உண்டு. 21320


வெளவிய கருமம் எண்ணித் துணி.

வெளவில் குடியிருக்கலாமா?

வெளவி வெளவிச் சேர்த்தாலும் மற்றவர்க்கு வைத்து ஒழிவான்.

வெளவின பேர்க்கு முடிவது சுருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_4/வீ&oldid=1161653" இலிருந்து மீள்விக்கப்பட்டது